neeluvum adhisaya acchu iyanthiramum

நீலுவும் அதிசய அச்சு இயந்திரமும்

நீலு உயிரினங்களை நேசிப்பவன். கொல்கத்தா நகர வீதிகளில் காயமடைந்த குதிரை ஒன்றைப் பார்த்தபோது அதற்கு உதவ நினைக்கிறான். அதன்பின் விரும்பியவற்றை எல்லாம் அச்சிட உதவும் முப்பரிணாம அச்சிடுதலைப் பற்றி அறிகிறான் நீலு. தட்டுகள், கோப்பைகள், பென்சில்கள், ஏன் எதிர்காலத்தில் குதிரையின் குளம்புகளைக்கூட அச்சிட முடியும்! காயமடைந்த உயிரினங்கள் நல்லபடி வாழ தொழில்நுட்பத்தால் உதவமுடியுமா?

- Ramki J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மீரு மாஷி, நீலுவைப் பார்க்க கொல்கத்தா வந்திருந்தார்.

நீலுவுக்கு குதூகலமாக இருந்தது.

மீரு மாஷி நிறைய வினோதமான கதைகள் சொல்வார்.

முதலை அவரைக் கடிக்க வந்தது, ஒளிந்திருந்த பிரானா மீன்கள் கடித்து அவரது சுண்டு விரல் பறிபோனது பற்றியெல்லாம் சொல்வார்!

மீரு மாஷி, ஒரு வனஉயிர்ப் பாதுகாவலர். அமேசான் மழைக்காடுகளில் வாழக்கூடிய, இரண்டு கால்களில் மெல்ல நகரும் ஸ்லாத் என்னும் உயிரினத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்.

மறுநாள் மீரு மாஷி, நீலுவை அழைத்துக்கொண்டு ஊரைச் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார். அப்போது இருவரும் மைதானத்தில் வண்டியிழுக்கும் குதிரைகளைப் பார்த்தனர். அந்தக் குதிரைகள் ஒல்லியாகவும் சோர்வோடும் இருந்தன.

வண்டியை இழுக்க ரொம்பவும் சிரமப்பட்டுக்கொண்டு ஒரு குதிரை நொண்டுவதை நீலு கவனித்தான். “மீரு மாஷி, இந்தக் குதிரைகளுக்கு ஏதேனும் நோயா?” என்று கேட்டான்.

“இந்தக் குதிரைகள் நீண்ட நேரம் வண்டி இழுத்தாக வேண்டும். எல்லா நேரமும் போதுமான உணவோ நீரோ இவற்றுக்குக் கிடைப்பதில்லை. அதிகமான எடையை இழுப்பதன் காரணமாக, இவற்றின் கால்களில் காயம் ஏற்படும். நமக்கு கிடைப்பதுபோல் வாரயிறுதி விடுமுறை எல்லாம் இவற்றுக்குக் கிடையாது” என்றார் மீரு மாஷி.

“ஆனால், ரொம்ப மோசமாக காயமாகிவிட்டால் என்னவாகும்?” என்று கேட்டான் நீலு.

பெரும்பாலும் காயங்களால் நோய்த்தொற்று ஏற்படும். அதனால் கால்களை நிரந்தரமாக அகற்ற வேண்டிவரலாம் என்றார் மீரு மாஷி.

“அப்படி அகற்றிவிட்டால், குதிரை போன்ற பெரிய உயிரினங்களால் மூன்று கால்களில் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க முடியாது. ஆனால், செயற்கை உடலுறுப்புகளைப் பொருத்தி அவற்றுக்கு உதவ முடியும்” என்றார் மீரு மாஷி.

“செயற்கை உடலுறுப்புகள் என்றால் என்ன?” என்று கேட்டான் நீலு.

செயற்கை உடலுறுப்புகள் என்பவை செயற்கையாக வடிவமைக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்படும் உறுப்புகள் என்றார் மீரு மாஷி.

முப்பரிமாண அச்சிடுதல் மூலமாக உயிரினங்களுக்குச் செயற்கை உடல் பாகங்களை வடிவமைப்பது தற்போது எளிமையாகி வருகிறது. இந்தியாவில் இதுவரை இந்தத் தொழில்நுட்பம் மனிதர்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆச்சரியப்படுத்தும் வகைகளில் வேறுசில உயிரினங்களுக்கும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார் மீரு மாஷி.

இந்தத் தொழில்நுட்பம் குறித்து இணையத்தில் நீலு ஏற்கெனவே நிறைய படித்திருக்கிறான். முப்பரிமாண அச்சிடும் இயந்திரம் எப்படி வேலை செய்யுமென நேரில் பார்க்க விரும்பினான். எனவே முப்பரிணாம அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தும் வடிவமைப்பாளர்களான அர்சூ மற்றும் சலீலை சந்திக்க அழைத்துச் சென்றார் மீரு மாஷி.

“முப்பரிணாம அச்சு இயந்திரம், காகிதத்தில் எதையும் அச்சிடுவதில்லை. வெவ்வேறு மூலப்பொருட்களைப் பயன்படுத்தி பல்வேறு பொருட்களை உருவாக்குகிறது” என்றார் அர்சூ. “ஏதாவது ஒரு பொருளைச் சொல். அதை எங்களால்  அச்சிட முடியும்” என்றார் சலீல்.

கணிணித் திரையிலிருந்த ஒரு சிறிய மஞ்சள் நிறக் கோப்பையைச் சுட்டிக்காட்டினார் அர்சூ.

“இதை நீ காகிதத்தில் அச்சிட்டால், கோப்பையின் உருவம் மட்டுமே கிடைக்கும். தட்டையாக இருக்கும் அந்தப் படத்தில், அதன் நீளம், அகலம் என்ற இரண்டு பரிமாணங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால், முப்பரிணாம அச்சிடுதல் மூலம் நீளம், அகலத்தோடு அதன் பருமனையும் நம்மால் சேர்க்க முடியும்”

என்றார் அர்சூ.

அச்சு இயந்திரத்தின் உள்பகுதியை நீலு கவனித்தான். இழைகளைப் போல் தோன்றிய கண்டுகளைப் பார்த்தான்.

“இது பயோப்ளாஸ்டிக். ஆனால் நாம் வேறு மூலப் பொருட்களையும் பயன்படுத்தலாம். உலோகம், மரம், நைலான், உணவுப் பொருட்கள், மனித உயிர்ச் செல்களைக் கூடப் பயன்படுத்தலாம். அந்த மூலப்பொருள் உருகும் தன்மையுடையதாக இருக்க வேண்டும். அப்போதுதானே நமக்கு விருப்பமான வடிவத்தில் அதை வடிக்க முடியும்” என்றார் அர்சூ.

“பறவையின் அலகு, டால்பினின் வால்…. என முப்பரிணாம அச்சிடுதல் மூலமாக எதையும் உருவாக்க முடியும்” என்றார் மீரு மாஷி.

“குதிரையின் கால்?” என்று கேட்டான் நீலு.

“நிச்சயமாக! ஒரு குட்டிக் குதிரைக்கான காலை ஒருநாள் உருவாக்க முடியலாம்” என்றபடியே சிரித்தார் அர்சூ.

விளையாட்டு மைதானத்தில் பார்த்த குதிரைகள், மூன்று கால்களோடு திரியும் தெருநாய்கள் ஆகியவற்றைப் பற்றி நீலுவின் யோசனை சென்றது. முப்பரிணாம அச்சிடுதலால் காயமடைந்த உயிரினங்களுக்கு உதவுவது எப்படி என்பதைப் பற்றி நிறைய கேள்விகள் அவனிடம் இருந்தன.

முப்பரிணாம அச்சிடுதல் மூலமாக உயிரினங்களுக்கான செயற்கை உறுப்புகளை உருவாக்குவதுதான் அடுத்த மிகப்பெரிய முன்னேற்றமாக இருக்கும் என்று அர்சூ நீலுவிடம் கூறினார்.

“முப்பரிணாம முறையில் அச்சிட்ட செயற்கை உறுப்புகளுடன், இன்று பல உயிரினங்கள் சிறப்பாக வாழ்ந்து வருகின்றன.”

முன்னங்கால்களை இழந்த ஒரு நாய்க்கு, முப்பரிணாம அச்சிடுதலால் புதிய பாதங்கள் உருவாக்கப்பட்டு இயல்பாக ஓட உதவியது எப்படி என்பது பற்றி அர்சூ விளக்கினார்.

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் ஒரு எலிக்கு முப்பரிணாம அச்சிடுதலால் சினைப்பையை செய்து பொருத்தியபின் குட்டி எலிகள் பிறந்தது குறித்து சலீல் குறிப்பிட்டார்.

மீரு மாஷி புறப்படும் நேரம் வந்துவிட்டது. உயிரினங்கள் மற்றும் அவற்றைப் பாதுகாப்பது குறித்து அவரிடமிருந்து நீலு நிறைய கற்றுக்கொண்டான். நீலு, ஒருநாள் தான் கால்நடை மருத்துவராகி காயப்பட்ட உயிரினங்களுக்கு முப்பரிமாண அச்சிடுதலால் செயற்கை உடலுறுப்புகளை உருவாக்கப் போவதாக மீரு மாஷியிடம் சொன்னான். அதுவரை, உள்ளூரில் உள்ள காப்பகத்துக்கு அவ்வப்போது சென்று, அங்குள்ள உயிரினங்களுடன் குறிப்பாக குதிரைகளுடன் நிறைய நேரம் செலவிட்டு மகிழ்வான் நீலு!

மாயக் கால்கள்

ஹாலி என்னும் குதிரை, ஆஸ்திரேலியா

அழற்சி நோயால் மூன்று ஆண்டுகள் அவதிப்பட்ட ஹாலிக்கு நடக்க இயலாமல் போக இருந்தது. முப்பரிணாம அச்சிடுதலால் செய்யப்பட்ட டைட்டானியம் லாடங்களால் அவள் பாதுகாக்கப்பட்டாள்.

ஃபிரெட் என்னும் செங்கால் ஆமை, பிரேசில்ஃபிரெட் காட்டுத்தீயால் தன்னுடைய மேலோட்டின் பெரும்பகுதியை இழந்துவிட்டாள். அத்துடன் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு, 45 நாட்களுக்கு எதுவும் சாப்பிடவில்லை. ஃபிரெட்டை கால்நடை மருத்துவர்களும் பல் மருத்துவர் ஒருவரும் சேர்ந்த குழு மீட்டு, அவளுக்கு முப்பரிணாம அச்சிடுதலால் உருவாக்கப்பட்ட மேலோட்டைப் பொருத்தினார்கள்.

கிரேசியா என்னும் தூக்கான் பறவை, கோஸ்டா ரிகா சிறுவர்கள் சிலர் தாக்கியதில் கிரேசியாவின் அலகின் மேற்பகுதி உடைந்துவிட்டது. அவனால் அதன்பின் இரை தேடவோ, வேட்டையாடும் உயிரினங்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவோ, பாடவோ முடியவில்லை! தற்போது கிரேசியாவுக்கு முப்பரிணாம அச்சிடுதலால் செய்யப்பட்ட அலகு உள்ளது.

டிஜிட்டல் கோப்பில் உள்ள பொருட்களுக்கு முப்பரிணாம உருவம் கொடுப்பதுதான் முப்பரிணாம அச்சிடுதலின் அடிப்படை. முதலில் ஒரு படத்தைத் தனித்தனியாக வெட்டியெடுத்து அச்சு இயந்திரத்துக்கு அனுப்ப வேண்டும். முப்பரிமாண அச்சிடுதலுக்கு எந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தினாலும், அவை அச்சு இயந்திரத்திலுள்ள ஒரு குழாய் வழியாக அதிகபட்ச வெப்பநிலையில் செலுத்தப்படும். பின்னர், மறுபக்க முனை வழியாக மெல்லிய இழையாக உருக்கப்பட்டு வெளிவரும்.

அச்சு இயந்திரத்தின் தட்டின் மீது அடுத்தடுத்து இழைகள் சேர்க்கப்படும். அனைத்து இழைகளும் அச்சிடப்பட்டதும் முப்பரிணாம வடிவம் நமக்குக் கிடைத்துவிடும். எதிர்காலத்தில் குப்பைகளைத் தவிர்க்கவும் சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கவும் காயங்களுக்கு சிகிச்சையளிக்கவும் முப்பரிணாம அச்சிடுதல் தொழில்நுட்பம் உதவும்.

முப்பரிணாமத்தில் அச்சிடுவோம்!