நீண்ட முகவுரை
அமரர் கல்கி
இருபத்திரண்டு வருஷங்களுக்கு முன்னால் ஈரோட்டு மாநகரின் வீதியில் ஒரு ஜட்கா வண்டியில் நமது முன்னுரை பின்நோக்கி ஆரம்பமாகிறது. இரவு சுமார் எட்டு மணி இருக்கும். வானத்தில் சந்திரனும் நட்சத்திரங்களும் கீழ் நோக்கிய வண்ணம் இருந்தன. வீதியில் ஜனங்கள் அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் நடமாடிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் அவர்களுடைய பார்வை நமது ஜட்கா வண்டியின் பேரிலும் விழுந்தது. அவ்விதம் எல்லாருடைய கவனத்தையும் கவர்ந்து இழுத்த ஜட்கா வண்டிக்குள்ளே அமர்ந்திருந்தது யார்? இயம்பவும் வேண்டுமோ? இந்த நூலின் ஆசிரியராகிய அடியேன் ராவன்னா கீனாதான். ஒரு பெட்டி, ஒரு படுக்கை சகிதமாக அந்த வண்டிக்குள் அமர்ந்திருந்தேன். எதற்காக அந்த நேரத்தில் அந்த ஜட்கா வண்டியில் நான் அமர்ந்திருந்தேன்? என் உள்ளத்தில் அச்சமயம் பொங்கித் ததும்பிய கவலைக் கடலுக்குக் காரணம் யாது? - என்று வாசகர்கள் கேட்கலாம். இதோ பதில் சொல்லுகிறேன்: