neethaan marangothiyaa

நீதான் மரங்கொத்தியா?

அடடா! கிள்ளி, கிள்ளனின் வீடு இருந்த மரம் விழுந்துவிட்டது. மரத்தில் ஓட்டைபோட்டு தங்களுக்காக ஒரு வீடு செய்துகொடுக்கச் சொல்லிக் கேட்பதற்காக மரங்கொத்தியைத் தேடிச் சென்றனர். செல்லும் வழியில், விதவிதமான பறவை வீடுகளைப் பார்த்தார்கள். கிள்ளி, கிள்ளனுக்கு புது வீடு கிடைத்ததா?

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு ஊரில் கிள்ளி, கிள்ளன் என்ற இரு கிளிகள் இருந்தன. அவை உயரமான இலவம்பஞ்சு மரம் ஒன்றில், உயரமான கொம்பில் இருந்த ஒரு மரப்பொந்தில் வசித்துவந்தன.

ஒருநாள் புயல்காற்று வீசியதில் அவர்கள் வசித்துவந்த மரம் சாய்ந்துவிட்டது.

வீடு இல்லாமல் கிள்ளியும் கிள்ளனும் அழுது கண்ணீர் வடித்தனர். அவ்வழியாகச் சென்ற காகம், அப்பறவைகள் அழுவதைக் கேட்டு நின்றது. அவர்களிடம் துக்கத்துக்கான காரணத்தை விசாரித்தது.

“எங்கள் மரம் விழுந்துவிட்டது. எங்களுக்கு இனிமேல் வசிக்க வீடு இல்லை” என்றன.

“மரப்பொந்தை உருவாக்க, மரத்தைக் கொத்தி துளைபோடும் ஒரு பறவை தேவை. நீங்கள் மரங்கொத்தியிடம் போய் உங்களுக்கு வீடு அமைத்துத் தரச்சொல்லிக் கேட்கலாம்தானே?” என்றது காகம்.

எனவே, கிள்ளியும் கிள்ளனும் மரங்கொத்தியைத் தேடிப் புறப்பட்டனர்.

டியு டியு. கிள்ளியும் கிள்ளனும் கீழேயிருந்த புதர்களில் இருந்து சத்தம் வருவதைக் கேட்டனர்.

“நீங்கள்தான் மரங்கொத்தியா? எங்களுக்கு ஒரு மரப்பொந்து செய்து தருகிறீர்களா?” என்று கேட்டனர்.

“எனக்குத் தெரியாது. நான் தையல் குருவி. இலைகளை ஒன்று சேர்த்துத் தைத்து கூட்டை உருவாக்குவேன்.”

உங்களைச்-சந்தித்ததில்-மகிழ்ச்சி! கிள்ளியும் கிள்ளனும் மரத்தடியில் இருந்து புல்லாங்குழல் போன்ற ஓசை வருவதைக் கேட்டனர்.

“நீங்கள்தான் மரங்கொத்தியா? எங்களுக்கு ஒரு மரப்பொந்து செய்து தருகிறீர்களா?” என்று கேட்டனர்.

“எனக்குத் தெரியாது. நான் புல்புல். குச்சி, நார்களைக் கொண்டு கிண்ணம் போன்ற கூட்டை உருவாக்குவேன்.”

சிச்வீ சிச்வீ. கிள்ளியும் கிள்ளனும் ஒரு கீச்சொலியைக் கேட்டனர்.

“நீங்கள்தான் மரங்கொத்தியா? எங்களுக்கு ஒரு மரப்பொந்து செய்து தருகிறீர்களா?” என்று கேட்டனர்.

“இல்லை. நான் தூக்கணாங்குருவி. நான் புற்களை நெய்து என் தொங்கும் கூட்டைச் செய்வேன்.”

டிட்டீ- டூவிட்? கிள்ளியும் கிள்ளனும் கீழேயிருந்த புற்களைப் பார்த்தனர்.

“நீங்கள்தான் மரங்கொத்தியா? எங்களுக்கு ஒரு மரப்பொந்து செய்து தருகிறீர்களா?” என்று கேட்டனர்.

“இல்லை, நான் ஆட்காட்டிக் குருவி. நான் தரையில் கூடு கட்டுவேன்.”

“நமக்கு இனிமேல் வீடே இல்லையா” என்றது கிள்ளி. “நம்பிக்கையை இழக்காதே.

இன்னும் தேடிப்பார்க்கலாம்” என்றது கிள்ளன்.

டொக்டொக்-டொக்டொக்! கிள்ளியும் கிள்ளனும் ஒரு மரக்கிளையைக் கொத்திக் கொண்டிருந்த ஒரு பறவையைப் பார்த்தனர்.

“நீங்கள்தான் மரங்கொத்தியா? எங்களுக்கு ஒரு மரப்பொந்து செய்து தருகிறீர்களா?” என்று கேட்டனர்.

“ஆமாம், நான்தான் மரங்கொத்தி! ஆனால் நான் எனக்காக கூடு செய்துகொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு யாரிடமாவது கேட்டுப் பாருங்கள்“ என்றது அந்தப் பறவை.

இரண்டு கிளிகளும் வருத்ததுடன் ஒன்றையொன்று பார்த்துக்கொண்டன.

டுக்... டுக்... டுக்! அருகிலிருந்த மரத்தில் உருண்டையான ஒரு பச்சை நிறப் பறவை இருந்தது. “நான் உங்களுக்கு உதவுகிறேன்!” என்றது.

“நீங்கள் யார்?” என்று கிள்ளியும் கிள்ளனும் தேம்பியபடியே கேட்டனர்.

“நான்தான் குக்குறுப்பான். எனக்கு மரத்தைக் கொத்தத் தெரியும். எனக்காக, ஒரு நல்ல வட்டமான பொந்தை உருவாக்குவேன். உங்களுக்கும் ஒரு புது பொந்து செய்து தருகிறேன்” என்றது.

குக்குறுப்பான் தான் சொன்னபடியே கிள்ளி, கிள்ளனுக்கு ஒரு புது வீட்டை உருவாக்கித் தந்தது.