arrow_back

நெஞ்சக்கனல்

நெஞ்சக்கனல்

நா. பார்த்தசாரதி


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

என் நாவல்களில், காந்திய இலட்சியங்களும், கவியின் நளினமுள்ள ஓர் இளைஞனைக் குறிஞ்சி மலரிலும், சத்திய வேட்கையோடு கூடிய ஒரு கல்லூரித் தமிழ் விரிவுரையாளனைப் பொன்விலங்கிலும், நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்கிற நக்கீர தைரியமுள்ள ஓர் உழைக்கும் பத்திரிக்கையாளனை 'நெற்றிக்கண்'ணிலும் படைத்தேன். இந்த நாவலிலோ சந்தர்ப்பவசத்தால் அரசியல்வாதியாக நேரிடும் 'பெரிய' குடும்பத்து மனிதர் ஒருவரைப் படைக்கிறேன். அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்றும் சொந்த நாட்டின் சில பிற்போக்கான மனிதர்களிடமிருந்தும் பிரச்சனைகளிடமிருந்தும் தார்மீக விடுதலைப் பெற போராடிக் கொண்டிருக்கிற ஒரு தேசத்தில், உணவு, மொழி, தொழில், சமதர்மம், எல்லோருக்கும் நல்வாழ்வு ஆகிய சகல துறைகளிலும் நலன் நாடும் ஒரு தேசிய நற்போக்கு நிலையில் இந்த நாவல் பிறக்கிறது.