முதல் ‘கம்ப்யூட்டர்கள்’ இயந்திரங்கள் அல்ல, மனிதர்கள்தான். அதில் பெரும்பாலானோர் பெண்கள்.
அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் மின்னணு கணினி எனியாக்(ENIAC). இதற்கான மூல நிரல்களை ப்ரான்செஸ் ஸ்னைடர் ஹோல்பெர்ட்டன், ஜேன் ஜென்னிங்ஸ் பர்ட்டிக், கேத்லீன் மெக்நல்டி மௌச்லி ஆன்ட்டோநெல்லி, ருத் லிச்டெர்மன் டெய்ட்டெல்பௌம் மற்றும் ப்ரான்செஸ் பிலாஸ் ஸ்பென்ஸ் ஆகியோர் எழுதினர்.
இந்தக் கணினிக்கு நிரல்களை எழுதும் பொறுப்பு 1945இல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது அவர்கள் இந்தக் கணினியைப் பார்த்திருக்கக்கூட இல்லை.
உலக சாதனையாக 2015இல் 34 நாடுகளைச் சேர்ந்த 7,314 பெண்கள் கலந்துகொண்ட பெண்களுக்கான ஹேக்கத்தான் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டோரில் 80% இந்தியர்கள்.
பெண்கள் நிரல் எழுதுவதை ஊக்குவிக்க உலகம் முழுக்க Girls Who Code, Black Girls Code, Indian Girls Code போன்ற எண்ணற்ற முன்னெடுப்புகளும் நிறுவனங்களும் பெண்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன.
பத்மஸ்ரீ வாரியர் என்ற இந்தியப் பெண், தானாக ஓடும் கார்களை உருவாக்குவதில் முன்னோடியாக இருந்த ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக இருந்தார்.
வந்தனா வண்டி வர்மா
குறுகுறுப்பும் செயற்கை அறிவும்
இன்று, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவில் வர்மா தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி, ‘க்யூரியாசிட்டி ரோவர்’ எனும் ஒரு வண்டியை ஓட்டுகிறார், அதற்கான நிரல்களை எழுதுகிறார், வழிநடத்துகிறார். செயற்கை அறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ரோவர் புகைப்படங்களை எடுக்கிறது, மண்ணையும் பாறைகளையும் ஆராய்கிறது, செவ்வாய்க் கோளின் கடந்த காலத்தைப் பற்றி நாசா அறிவியலாளர்கள் புரிந்துகொள்ள உதவுகிறது. ரோவர் தன்னுடைய பணிகளைச் செய்வதற்கு வர்மா உதவுகிறார். ஆனாலும், ரோவர் தன்னுடைய முடிவுகளைத் தானே எடுக்கிறது.
வண்டியோட்டும் ஆர்வம்
வந்தனா ‘வண்டி’ வர்மா, தனக்கு 11 வயதிருக்கும் போது தனது தாத்தாவின் டிராக்டரில் ஏறி அதை ஓட்ட முயன்றார். ஒருநாள், தான் செவ்வாய் கிரகத்தில் இருக்கிற வாகனத்தை ஓட்டுவோம் என அப்போது அவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
வர்மா ரோபாட்களைப் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
ரோபாட் வர்மா, மனிதர்களுக்குப் பழக்கமில்லாத இடங்களை ஆராய்வதற்கு ரோபாட்கள் உதவும் என்று நம்புகிறார். அமெரிக்காவில் இருக்கும் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் பல ரோபாட்களை இவர் வடிவமைத்திருக்கிறார். எதிர்பாராத சூழ்நிலையில் ஒரு ரோபாட் செயல்பட்ட விதம் வர்மாவை மிகவும் கவர்ந்தது.
யாராவது இருக்கிறீர்களா?
செவ்வாய்க் கோளில் இதற்குமுன் சில உயிரினங்கள் இருந்திருக்கலாம் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் இப்போது, அங்கே எந்த உயிரினமும் தென்படவில்லை. அங்கு என்னதான் நடந்தது? இந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டறிய வர்மா விரும்புகிறார். அதற்காக, ஒரு ‘செவ்வாய் 2020’ திட்டத்துக்கான கணினி அமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
அனூக் விப்ப்ரெக்ட்
நவீன தொழில்நுட்ப ஆடைகள்
ஆடை வடிவமைப்புக் கலையை பொறியியல், அறிவியல், செயலெதிர்ச் செயலை அடிப்படையாகக் கொண்ட வடிவமைப்பு ஆகிய இவற்றுடன் கலந்து முப்பரிமாண அச்சிடுதலில் உருவாக்கினால் என்ன நடக்கும்? நெதர்லாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளர், புதுமைச் சிந்தனையாளர் அனூக் விப்ப்ரெக்ட் வடிவமைக்கும் ஆடைகள் கிடைக்கும்!
விப்ப்ரெக்ட், அர்டுய்னோ என்ற கட்டற்ற மென்பொருள், வன்பொருளைப் பயன்படுத்துகிறார். இதனைப் பயன்படுத்தி இயல்பான உலகின் தன்மைகளை உணரக்கூடிய டிஜிட்டல் சாதனங்களை வடிவமைக்கலாம்.
உணர்தலும் உணர்ச்சிகளும்
விப்ப்ரெக்ட் வடிவமைக்கும் ஆடைகளால் அணிந்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது சூழலை எப்படி உணர்கிறார் என்பதை உணரவும், வெளிப்படுத்தவும், அதற்கேற்ப செயல்படவும் முடியும். ஆடைகளிலும் அதை அணிந்திருப்பவரின் உடலிலும் பொருத்தப்பட்டிருக்கும் மைக்ரோகண்ட்ரோலர்கள் இதற்கு உதவுகின்றன. ப்ளாக் ஐட் பீஸ் குழுவின் பாடகர் ஃபெர்கி, பாப் நட்சத்திரம் ப்ரிட்னி ஸ்பியர்ஸ் போன்றோர் இவர் வடிவமைத்த ஆடைகளை அணிந்துள்ளார்கள்.
உடைகளில் புதுமை
ஃபேஷன் தொழில்நுட்பம் என்பது வடிவமைப்புத்துறையின் ஒரு புதிய பிரிவாகும். இது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓர் உடைக்கு அதை அணிந்திருப்பவருடைய உடல் மற்றும் சுற்றுச்சூழலோடு தொடர்பை உண்டாக்குகிறது. விப்ப்ரெக்ட் ஒரு ஃபேஷன் தொழில்நுட்ப வடிவமைப்பாளர். ஆடைகள், உடல் மற்றும் உளவியல் ரீதியிலான ஓர் உறவைக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் இவரை ஈர்க்கிறது.
சிலந்தி, சிலந்தி!
விப்ப்ரெக்ட் வடிவமைத்த சிலந்தி ஆடையின் கழுத்துப்பட்டைப் பகுதியில் தானியங்கி சிலந்திக் கால்கள் உள்ளன. அதில் உணரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஆடையை அணிந்திருப்பவருக்கு அருகில் யாராவது வந்தால் அந்தக் கால்கள் கிளர்ந்தெழுகின்றன. ஆபத்து விலகியபின், அவை பழைய நிலைக்குத் திரும்பி விடுகின்றன.
சங்கமித்ரா பண்டோபாத்யாய்
ஒழுங்கைப் பின்பற்று
பேராசிரியர் சங்கமித்ரா பண்டோபாத்யாய், கணினிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பின்பற்ற வேண்டிய அல்காரிதம் எனப்படும் நிரல் வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளில் பணியாற்றுகிறார். நிரல் வழிமுறைகள், மாதிரிகளை அடையாளப்படுத்த உதவுகின்றன.
பண்டோபாத்யாய் இந்தியாவின் மிகப்பெரிய அறிவியல் விருதுகள் அனைத்தையும் வென்றுள்ளார். 2010இல் பொறியியல் அறிவியலுக்கான ஷாந்தி ஸ்வரூப் பட்னாகர் பரிசு, 2017இல் இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளைப் பெற்றுள்ளார். கொல்கொத்தாவின் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் இயக்குநராகப் பதவியேற்ற முதல் பெண்ணும் இவர்தான்.
உயிரியல் அடிப்படைகள்
பண்டோபாத்யாய் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, இவருக்கு உயிரியல் பாடத்தில் பெரிய ஆர்வம் ஏதும் இருக்கவில்லை. இவருக்கு அறிவியல் பிடித்திருந்ததால், முதலில் இயற்பியல் படித்து பின்னர் கணினி அறிவியல் படிக்க முடிவு செய்தார் . அதன்பிறகுதான் உயிரியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கணினி அறிவியலின் துணையோடு உயிரியலை ஒழுங்குபடுத்துவதும் நன்றாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தார்.
குறியீடுகள் மற்றும் செல்கள்
எவ்வாறான மாதிரிகளை பண்டோபாத்யாய் அடையாளம் காண்கிறார்? இவரும் இவருடைய குழுவினரும் புற்றுநோய் போன்ற நோய்களை உருவாக்கும் மூலக்கூறுகள், செல்களை ஆராய்கிறார்கள். உயிரியல் பரிசோதனைகளிலிருந்து பெறப்பட்ட மலையளவு விவரங்களை பண்டோபாத்யாய் ஆராய்கிறார். இந்த விவரங்களை ஒழுங்குபடுத்தி மாதிரிகளைக் கண்டுபிடிக்க கணினிகளில் ஏற்றுகிறார். தான் உருவாக்கியுள்ள நிரல் வழிமுறைகளை எந்தத் துறையிலும் பயன்படுத்தலாம் என்கிறார் இவர்.
ஃப்ரெஷ்டெ ஃபாரோ
இந்தக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த 20 மாணவர்கள், ‘ஓபியத்துக்கு எதிரான போர்’ என்ற விளையாட்டொன்றை உருவாக்கியுள்ளார்கள். இந்த விளையாட்டில் வரும் ஆஃப்கானிஸ்தான் போர்வீரர் ஓபியம் செய்யப் பயன்படும் கசகசா வயல்களை அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவார். இதை விளையாடுவோருக்கு, போதை மருந்துகள் மற்றும் தாலிபனுக்கு எதிராகப் போர்புரியும் ராணுவத்தினர் சந்திக்கும் சவால்கள் புரியும்.
இலக்கியத்திலிருந்து தர்க்கத்துக்கு
ஃப்ரெஷ்டெ ஃபாரோவுக்குக் கணிதம் என்றாலே பிடிக்காது. ஆஃப்கானிஸ்தானில் வாழ்ந்து வந்த அவரது பெற்றோர்கள் தாலிபன் ஆட்சியிலிருந்து தப்பித்து ஈரான் சென்றார்கள். அங்கு ஃப்ரெஷ்டெ ஃபாரோ இலக்கியம் படித்தார். அவர்கள் மீண்டும் ஆஃப்கானிஸ்தான் திரும்பியபோது, ஹெராட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படிக்கச் சேர்ந்தார் ஃபாரோ. இது அவருக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. கல்லூரிக்குச் சென்ற முதல் நாளே, எங்கு பார்த்தாலும் எண்கள். இது ஃபாரோவுக்கு வெறுப்பைதான் உண்டாக்கியது. அடுத்த நாள், நிரல் வழிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொண்டார். அது அவருக்குப் பிடித்திருந்தது.
ஊக்கம் தரும் குறியீடுகள்
கணினி அறிவியல் படித்தபிறகு, பெண்கள் பொருளாதாரச் சுதந்தரம் பெறுவதற்கும், அதிகத் தன்னம்பிக்கையோடு செயல்படுவதற்கும் உதவக்கூடிய எதையாவது செய்ய வேண்டும் என்று ஃபாரோ நினைத்தார். இதற்காக அவர் தன்னுடைய வீட்டிலேயே, ஆஃப்கானிஸ்தானில் முதன்முதலாக குறியீடுகளைக் கற்றுக் கொடுக்கும் ‘Code to Inspire’ என்ற பள்ளியைத் தொடங்கினார். இங்கு படிக்கும் பல பெண்கள் அதற்கு முன்னால் கணினிகளைப் பயன்படுத்தியதேயில்லை.
புதியவற்றை உருவாக்குங்கள்
ஃபாரோவைப் பொறுத்தவரை, நிரல் எழுதுவது என்பது ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வதைப்போல. அதைக்கொண்டு நீங்கள் விரும்பியதை உருவாக்கும் ஆற்றலைப் பெறலாம், அந்த ஆற்றலைப் பிறருக்கும் வழங்கலாம்.
ஆட்ரெ டங்
புத்தகப்புழு இல்லை டங் தன்னுடைய முதல் விளையாட்டு நிரலை எழுதியபோது அவருக்கு வயது எட்டு. அவருடைய தம்பிக்கு பின்னங்களைச் சொல்லித் தருவதற்காக இந்த விளையாட்டை உருவாக்கினார். 15 வயதில், தன்னுடைய ஆசிரியர்களிடம் ‘இந்தப் பாடப்புத்தகங்களெல்லாம் பழையனவாகிவிட்டன, நான் கணினி நிரல் எழுதக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்’ என்று சொல்லி பள்ளியிலிருந்து விலகினார், இணையக் குழுக்கள், ஹேக்கத்தான்கள், இணையத்தில் நிகழும் சொற்பொழிவுகள், பாடங்கள் போன்றவற்றின் வழியாக கணினி நிரலெழுதக் கற்றுக்கொண்டார் டங்.
டிஜிட்டல் அமைச்சர்
ஆட்ரெ டங், தைவானின் டிஜிட்டல் அமைச்சர். அந்நாட்டின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள முதல் திருநர் இவர்தான்.
திறந்த உலகம்
டங், அமெரிக்காவில் உள்ள ஒரு சிறு நிறுவனத்தில் பணியாற்றிய பின்னர் தைவான் திரும்பினார். ஆகஸ்ட் 2015இல், தைவான் அரசாங்கத்தில் இணைந்தார். அந்நாட்டு அரசின் நிர்வாகத்தில் ஒரு டிஜிட்டல் புரட்சியைக் கொண்டு வருவதற்காகவும், காகிதங்களின் பயன்பாட்டைத் தவிர்க்கவும் முயன்றுவருகிறார். இலவச மென்பொருள், சமூகத் தொழில்முனைதல் ஆகியவற்றில் அவருக்கு நம்பிக்கை இருக்கிறது. தைவானில் சமூகப் புதுமைச்சிந்தனை ஆய்வகங்களை அமைக்க உதவியுள்ளார்.
அரசாங்கத்தில் சேர்வதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவுவதற்காகத் தன்னுடைய சிலிக்கான் பள்ளத்தாக்கு வேலையைத் துறந்தார் டங்.
மார்கரெட் ஹாமில்டன் & கேதரின் ஜான்சன்
முதன்முதலாக...
மனிதனை நிலவுக்கு அழைத்துச் சென்ற நாசாவின் ‘அப்போலோ 11’ திட்டத்தின் நிரலாக்கப் பிரிவுத் தலைவரானார் ஹாமில்டன். உலகில் முதன்முறையாக, எங்கும் எடுத்துச்செல்லக்கூடிய கணினிகள் உருவாக்கப்பட்டு விண்கலத்தில் பொருத்தப்பட்டன. அவற்றை இயக்கும் மென்பொருள்களை ஹாமில்டனுடைய குழுதான் உருவாக்கியது. கணினிமயமான வழிகாணல் அமைப்பின் ஆரம்பகால வடிவம் அது. ஹாமில்டன் நிரல் பிழையை சரிசெய்து திட்டம் நிறைவேற உதவினார்.
வலுவான அடிப்படை
மார்கரெட் ஹாமில்டனுடைய பள்ளியில் கணினி நிரலெழுதுதல் சொல்லித்தரப்படவில்லை. ஏனெனில், மென்பொருள் பொறியியல் என்கிற துறையே அப்போது உருவாகியிருக்கவில்லை. கணிதத்தை முதன்மைப் பாடமாகப் படித்த ஹாமில்டன் அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்(MIT) இணைந்தார். அங்கே அவர் இணைந்த குழுதான் கணினி நிரலாக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கண்டறிந்தது.
ஜூலை 20, 1969இல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதரானார். மார்கரெட் ஹாமில்டன் மற்றும் காதரின் ஜான்சனுடைய உதவி இல்லாமல், நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவுக்கு சென்றிருக்க முடியாது.
யாரும் நடக்காத வழி
கணிதத்துறை நிபுணரான காதரின் ஜான்சனும் அந்தக் குழுவில் இருந்தார். அப்போலோ 11 மற்றும் அப்போலோ 13 திட்டங்களில் விண்கலம் நிலவைச் சென்றடைவதற்கான பயணப்பாதையை துல்லியமாகக் கணக்கிட்டார். இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஹிடன் ஃபிகர்ஸ் என்னும் திரைப்படம், இவரைப் பெருமைப்படுத்துகிறது.
கிரேஸ் ஹாப்பர்
கணினியில் இருக்கும் பிரச்சினைகளை ‘Bug’ என்று முதன்முதலாக அழைத்தவர் ஹாப்பர்தான். 1934ஆம் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் இவரே.
பீரங்கிகளும் கணினிகளும்
கணிதப் பேராசிரியரான கிரேஸ் ஹாப்பர், தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, WAVES என்று அறியப்படும் அமெரிக்கக் கடற்படையில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போரின்போது அவர் ‘லெப்டினென்ட்’ ஆனார். போர் முடிவதற்கு ஒரு வருடம் முன்பிருந்தே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் மார்க் I கணினிக்கான நிரல்களில் பணியாற்றத் தொடங்கியிருந்தார் ஹாப்பர். பின்னர், உலகின் முதல் பெரிய அளவு எலக்ட்ரானிக் கணினியான யூனிவாக் I(UNIVAC I)ஐ இயக்கும் நிரல்களை எழுதும் குழுவில் சேர்ந்தார். அவர் தன் பணிக்காலத்தில் ரியர் அட்மைரல் தகுதிக்கு உயர்ந்தார்.
மொழி ஒரு தடையில்லை
அப்போதெல்லாம் கணினிக்கான செயல்பாட்டுக் குறிப்புகளை கட்டளைகளாகத் தரவேண்டும். இந்தக் கட்டளைகள் எண்கள் அல்லது கணினிக் குறியீடுகளைக்கொண்டு எழுதப்பட்டன. ஹாப்பர் ஒரு தொடக்கநிலை தொகுப்பியைக்(Compiler) கண்டறிந்தார். தொகுப்பி என்பதும் ஒரு நிரல்தான். இது மனித மொழியைக் கணினிக்குப் புரியக்கூடிய இயந்திர மொழியாக மொழிபெயர்க்கும்.
நவம்பர் 22, 2016இல், ஹாப்பரின் மரணத்துக்குப் பிறகு அவருக்கு சுதந்திரத்துக்கான அதிபர் பதக்கம் வழங்கப்பட்டது. இதனை அப்போதைய அதிபர் பராக் ஒபாமா வழங்கினார்.
அடா லவ்லேஸ்
காலத்தை மிஞ்சிய சாதனையாளர்
முதல் தனிப் பயன்பாட்டுக் கணினியான ‘பாம்ப்(Bombe)’ உருவாக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டு முன்பாகவே உலகின் முதல் கணினி நிரலை எழுதிவிட்டார் அடா லவ்லேஸ்!
லண்டனைச் சேர்ந்த கணிதப் பேராசிரியரான அகஸ்டஸ் டி மோர்கனுடன் கடிதவழி உரையாடியே பல்கலைக்கழக நிலை கணித நுட்பங்களில் தேர்ந்தார் லவ்லேஸ்.
உருவாக்கப்படாத ஓர் இயந்திரம்
லவ்லேஸின் நண்பரான, கண்டுபிடிப்பாளர் சார்லஸ் பாபேஜ் ‘ஆராய்ச்சிப் பொறி’ என்ற இயந்திரத்தை வடிவமைத்தார். ஒருவேளை அந்த இயந்திரம் உருவாக்கப்பட்டிருந்தால், அது உலகின் மிகப் பழைமையான பொது நோக்கக் கணினியாகியிருக்கும். ‘பஞ்ச்ட் கார்ட்ஸ்’ எனப்படும் துளை அட்டைகளைக் கொண்டு அதற்கு நிரல்களை எழுதியிருக்கலாம். உண்மையில் அந்த இயந்திரம் உருவாக்கப்படவே இல்லை. ஆனாலும், அந்த இயந்திரம் குறித்த கட்டுரை ஒன்றை இத்தாலிய மொழியிலிருந்து மொழிபெயர்த்த்தோடு, அதற்கு நிரல் எழுதும் வழிமுறையையும் விவரித்தார் லவ்லேஸ். இதுவே உலகின் முதல் கணிணி நிரல் ஆனது.
கணித மந்திரவாதி
பெர்னௌலி எண்கள் எனும் ஒரு சிக்கலான எண் தொடரை சரியான சூத்திரத்தைக் கொண்டு இந்த இயந்திரத்தின் உதவியால் கணக்கிடுவது எப்படி என்று லவ்லேஸின் நிரல்களில் ஒன்று விளக்கியது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி வெறுமனே கணக்குகளை மட்டும் போடவேண்டியதில்லை என்பதை முதன்முறையாகக் குறிப்பிட்டவரும் லவ்லேஸ்தான். எடுத்துக்காட்டாக, இந்த இயந்திரம் கலை மற்றும் இசையை உருவாக்கவும் பயன்படக்கூடும் என்றார் அவர்.
நிரல் எழுதுதலுக்கு 100 வயது
கிரெடெ ஹெர்மன்:
1901-1984
இவர் ஜெர்மனியைச் சேர்ந்த கணிதத்துறை நிபுணர். இவருடைய பணிதான் கணினி இயற்கணிதத்தின் அடித்தளமாகக் கருதப்படுகிறது. ஜான் வான் நியூமனின் ஒளிந்திருக்கும்-மாறி-இல்லை தேற்றத்தை விமர்சித்து எழுதினார் ஹெர்மன். அது 1966இல் ஜான் ஸ்டீவர்ட் பெல் என்பவரால் தன்னிச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டு பிரசுரிக்கப்படும் வரை கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு அலட்சியப்படுத்தப்பட்டது.
ரோசா பீட்டர் (ரோசா பொலிட்செர்):
1905-1977
இந்தக் கணினித்துறை நிபுணர், சுழல்நிலைத் தேற்றத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். இந்தத் தேற்றம், கணிதம் சார்ந்த தர்க்கம் மற்றும் கணினி அறிவியலின் ஒரு கிளையாகும். 1952இல், கணிதத்துறையில் கல்வியியல் முனைவரான முதல் ஹங்கேரியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார் இவர்.
ப்ளெட்ச்லே பூங்கா பெண்கள்:
1937-1945
இரண்டாம் உலகப்போரின்போது, ப்ளெட்ச்லே பூங்காவில் சில பெண்கள், குறியீடுகளை உடைப்பவர்களாக ரகசியமாகப் பணியாற்றினார்கள்.
ராடியா பெர்ல்மன்:
1951-இன்றுவரை
அமெரிக்காவைச் சேர்ந்த இந்தக் கணினி நிரலாளர், ஸ்பானிங் ட்ரீ ப்ரொட்டோகால்(STP) என்ற நெறிமுறைக்காக ஒரு சிறந்த வழிமுறையை எழுதிப் புகழ்பெற்றார். அவர் எழுதிய வழிமுறை, வலைப்பின்னல்கள், தரவுகள் ஒழுங்குபடுத்தப்படும் முறையைப் பெருமளவு பாதித்துள்ளது.
டேம் ஸ்டீஃபனி ‘ஸ்டீவ்’ ஷெர்லெ: 1933-இன்றுவரை
இரண்டாம் உலகப்போரின்போது யூத அகதியாக இங்கிலாந்துக்கு வந்தார் டேம் ஸ்டீவ் ஷெர்லெ. அப்போது அவருக்கு வயது ஐந்து. 1950களில், கணினிகளை அடிப்படையிலிருந்து உருவாக்கவும் நிரல் எழுதவும் பழகிக்கொண்டார். 1962இல், ஆறு பவுண்ட் முதலீட்டில் ‘ஃப்ரீலான்ஸ் ப்ரொக்ராமர்ஸ்’ என்ற மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார் ஷெர்லெ. பின்னர் அது க்சான்ஸா(Xansa) எனப் பெயர் மாறியது. 1975ஆம் ஆண்டில், இந்நிறுவனத்தில் 300 நிரலாளர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் 297 பேர் பெண்கள்.
அபிசோய் அஜாயி-அகின்ஃபொலாரின்
அபிசோய், 2015இல் நைஜீரியாவில் Girl Coding என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு, பின்தங்கிய சமூகப் பெண்கள் நிரலாளர்களாக உதவியது. 2020ஆம் ஆண்டுக்குள் நைஜீரியத் தொழில்நுட்பச் சூழமைப்பில் 20,000 பெண் நிரலாளர்களை சேர்க்கும் நோக்கத்துடன் இயங்கிவருகிறார் இவர்.
அதிதி பிரசாத் & தீப்தி ராவ்
இந்தச் சகோதரிகள் இருவரும் 2013ல் Indian Girls Code என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். இந்த முயற்சியின்கீழ், பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு நிரலெழுதக் கற்றுத்தரப்படுகிறது. ரோபாடிக்ஸ் பற்றியும், நிஜ வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய
நிஜ வாழ்க்கை நிரல்களை உருவாக்குவது எப்படி என்பது பற்றியும் சொல்லித்தரப்படுகிறது.
அருஞ்சொற்பொருள்
அல்காரிதம்:
ஒரு பிரச்சினையைக் கணினி எப்படித் தீர்க்கும் என்பதை விளக்குகிற, எளிய மொழியில் எழுதப்பட்ட படிநிலைகளின் தொகுப்பு.
செயற்கை அறிவு:
ஒரு கணினி தானே சிந்திக்கவும், தானே கற்றுக்கொள்ளவும் பயிற்சி தருவதைத்தான் செயற்கை அறிவு என்கிறோம். நாம் செயற்கை அறிவைக் கொண்டு, கணினிகள் நம்மைப்போலவே சிந்திக்கும்படியும் செயல்படும்படியும் நிரல்களை எழுத முயல்கிறோம்.
நிரலாக்கம்:
கணினியானது ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காகத் தர்க்கரீதியிலான வரிசையான கட்டளைகளை உருவாக்கும் செயல்முறையைத்தான் கணினி நிரலாக்கம் அல்லது குறியீட்டாக்கம் என்கிறோம். கணினி புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளில் இந்த நிரல்கள் எழுதப்படுகின்றன. இவற்றை எழுதுபவரை மென்பொருள் பொறியாளர் என்கிறோம்.
மென்பொருள்:
செயலிகள் மற்றும் கணினியைச் செயல்படவைக்கும் இயக்க அமைப்புகளை மென்பொருள்கள் என்கிறோம். இவை பல்வேறு கணினி மொழிகளில் எழுதப்பட்ட கட்டளைகளின் தொகுப்புகளைக் கொண்டுள்ளன.
ரோபாடிக்ஸ்:
ரோபாட்களை வடிவமைக்கிற, உருவாக்குகிற, இயக்குகிற பொறியியல் பிரிவுதான் ரோபாடிக்ஸ். பல்வேறு தொழில்துறைப் பணிகளை ரோபாடிக்ஸ் ஏற்கெனவே தானியங்கி ஆக்கிவிட்டது. வருங்காலத்தில் இது பயனாளர்களின் வாழ்க்கையில் தொடர்ந்து பல மாற்றங்களைக் கொண்டுவரும்.
ஹேக்கத்தான்:
நிரலாளர்கள், வடிவமைப்பாளர்கள், பிற தொழில் நிபுணர்கள், தொடக்கநிலையில் உள்ளோர் எல்லோரும் ஒன்றுகூடி, குழுக்களாகச் சேர்ந்து ஒரு மென்பொருள் அல்லது வன்பொருள் தயாரிப்பை உருவாக்கும் நிகழ்வைத்தான் ஹேக்கத்தான் என்கிறோம். இது பொதுவாக 48 மணிநேரம் நடைபெறும்.
ஆதாரங்கள்
http://www.anoukwipprecht.nl/#intro-1
https://www.gadgette.com/2016/03/15/women-in-tech-history-margaret-hamilton/
https://www.gadgette.com/2016/03/23/women-in-tech-history-grace-hopper-admiral-programmer-and-rebel/
https://www.npr.org/sections/alltechconsidered/2014/10/06/345799830/the-forgotten-female-programmers-who-created-modern-tech
http://www.sciencemag.org/careers/2015/07/space-roboticist
https://www.natureasia.com/en/nindia/article/10.1038/nindia.2010.131
https://iq.intel.com/wearables-designer-anouk-wipprecht-curiosity-is-the-mother-of-invention/
https://www.wired.com/2015/10/margaret-hamilton-nasa-apollo/
குறிப்பு: இந்தக் கதை பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது - புத்தகங்கள், இணையப் பக்கங்கள், தரவுப் பெட்டகங்கள். இயன்றவரை அவற்றை ஆதாரங்களாகப் பட்டியலிட்டிருக்கிறோம்.