நம்பர் 888
அமரர் கல்கி
இங்கு மூன்று சித்தாந்தங்களை ஸ்தாபிக்க உத்தேசித்திருக்கிறேன். அவை யாவன:- (1) ஆசை ஒரு காலும் வீண் போகாது; (2) சோதிடம் கட்டாயம் பலிக்கும். (3) கலியுகத்தில் - மற்ற யுகங்களைப் பற்றி எனக்குத் தெரியாது - நல்லவன் நன்மை அடைவதும் கெட்டவன் தீமையடைவதும் நிச்சயமில்லை. இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் நிச்சயமில்லை. இந்த மூன்று சித்தாந்தங்களுக்கும் ஒன்றுக்கொன்று சம்பந்தமென்ன வென்று கேட்டீர்களானால் - நல்லது நான் ஒரு கேள்வி கேட்கிறேன்; முத்தலை நகரின் மத்திய சிறைச்சாலையில் 9-வது பிளாக்கில் 12-வது அறையில் இருந்த நம்பர் 888-ஐப்பற்றி நீங்கள் கேள்விப் பட்டதுண்டா?