ondru ondraai

ஒன்று ஒன்றாய்

ஆறாம் வகுப்பு மாணவர்கள் கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்ல விரும்புகிறார்கள். ஆனால், அதற்குத் தேவையான பணத்தை அவர்களால் திரட்ட முடியுமா?

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டிரிங் டிரிங் டிரிங்ங்ங்ங்!

அன்றுதான் பள்ளி கடைசி நாள். மதிய சாப்பாட்டு நேரம். ஆறாம் வகுப்பு மாணவர்கள் எல்லோரும் அக்காவின் மேசையைச் சுற்றிக் கூடினார்கள். மதிய உணவைப் பகிர்ந்து சாப்பிடத் தொடங்கினார்கள். ஒவ்வொருவரும் மற்றவரின் டப்பாவில் கைவிட்டு எடுத்துக்கொண்டனர். பள்ளியின் செல்ல நாய் குண்டுவுக்கு ஒரு ரொட்டியை ஊட்டினான் அஜய்.

“கோடை விடுமுறைக்கு எங்கே செல்கிறீர்கள்?” என்று கேட்டார் அக்கா.

“நான் கால்பந்தாட்டப் பயிற்சி செய்யப்போகிறேன், மெஸ்ஸி மாதிரி!” என்றாள் அனிதா.

“நான் நிறைய பொம்மைகள் செய்யப்போகிறேன்!” என்றான் ரஃபீக்.

“நான் தினமும் வடா பாவும், சமோசாவும், கச்சோரியும் சாப்பிடப்போகிறேன்!” என்றான் விவேக்.

“நான் லோனாவாலா கேளிக்கைப் பூங்காவுக்குப் போகப்போகிறேன்” என்றாள் பிரகதி.

“அங்கே பலவிதமான விளையாட்டுகள் இருக்கின்றன. நீர்ச்சறுக்கு, மேலும் கீழும் ஓடும் ரயில், எல்லாம்! பிரகதி எல்லா சவாரிகளிலும் போவாள்” என்றான் தாமஸ்.

“ஆனால், நுழைவுச் சீட்டின் விலையே அறுபது ரூபாய். பிரகதி பெரிய பணக்காரிதான்!” என்றாள் ஃபைஜா.

“அப்படியெல்லாம் இல்லை! நான் சேமித்த பணத்தைத்தான் செலவு செய்யப்போகிறேன்” என்று பதிலளித்தாள் பிரகதி.

“பிரகதியைப் போல சேமித்தால் நீங்களும்கூட கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்லலாம்” என்று சிரித்தபடி சொன்னார் அக்கா.

“ஆமாம், தினமும் ஒரு ரூபாய் சேமித்தால் போதும். அதுவே ஒரு பெரிய தொகையாக வளரும்” என்று பிரகதி ஆமோதித்தாள்.

“தினமும் ஒரு ரூபாய் சேமிப்பது எளிதுதான். நாமும் முயற்சி செய்யலாமா? எல்லாருமே கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்லலாம்” என்றாள் சீமா.

அனைவரும் இதை ஏற்றுக்கொண்டார்கள். விடுமுறை முடிந்ததும் கேளிக்கைப் பூங்காவுக்குச் செல்வதாகத் தீர்மானித்தார்கள்.

கோடை விடுமுறை நாட்கள் கொண்டாட்டமாகக் கழிந்தன.

அக்கம்பக்கத்தில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்து பொம்மைகள் செய்தான் ரஃபீக். அவற்றில் சிலவற்றைத் தன் உறவினர்களிடம் விற்று தினமும் ஒரு ரூபாய் சேர்த்தான்.

பிரசாத் தன்னுடைய தம்பிக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தான். அதற்காக தன் அப்பா கொடுத்த பணத்திலிருந்து நாள்தோறும் ஒரு ரூபாய் சேமித்தான்.

தன் மாமி ஐஸ்கிரீம் வாங்க கொடுத்த  காசிலிருந்து தினமும் ஒரு ரூபாய் சேமித்தாள் தேவி.

அஜய்யின் அப்பா, அருகிலிருந்த நகராட்சித் தோட்டங்களின் தலைமைத் தோட்டக்காரராக இருந்தார். அங்கு மரக்கன்றுகள் நட அஜய் உதவினான். அவனுடைய அப்பா ஒவ்வொரு மரக்கன்றுக்கும் ஒரு ரூபாய் கொடுத்தார்.

விடுமுறை முடிந்து பள்ளி திறந்தது. மாணவர்கள் எல்லோரும் தாங்கள் சேமித்த பணத்தை அக்காவின் உதவியுடன் எண்ணினார்கள்.

ஒவ்வொருவரும் கேளிக்கைப் பூங்காவுக்கு நுழைவுச்சீட்டு வாங்கும் அளவு சேமித்திருந்தார்கள். வகுப்பே கொண்டாட்டமானது.

ஆனால், அஜய் மட்டும் வருத்தமாக இருந்தான். “என்ன ஆயிற்று அஜய்? நீ சேமித்த பணம் போதாதா?” என்று கேட்டாள் அஞ்சலி.

“என்னிடம் சேமிப்புப் பணமே இல்லை” என்று பதிலளித்தான் அஜய். “போன வாரம் குண்டுவுக்கு உடம்பு சரியில்லை. அதனால், என்னுடைய சேமிப்பில் அவனுக்கு மருந்து வாங்கிவிட்டேன். இப்போது என்னிடம் கேளிக்கைப் பூங்காவுக்கு வர பணம் இல்லை.”

நிசப்தத்தைக் கலைத்து நிம்பாராம் பேசினான். “கவலைப்படாதே, அஜய். எல்லோரும் சேர்ந்து இன்னும் கொஞ்சம் சேமிப்போம். உனக்கும் நுழைவுச்சீட்டு வாங்கிவிடலாம்.”

நிம்பாராம் சொன்னது உண்மைதான். ஆறாம் வகுப்பினர் ஒரே வாரத்தில், அஜய்க்கு நுழைவுச்சீட்டு வாங்க பணத்தைச் சேமித்துவிட்டார்கள்!

இப்படியாக, ஆறாம் வகுப்பு கேளிக்கைப் பூங்காவுக்குள் நுழைந்தது.

“ஆஆஆஆஆஆஆ!” பெரிய ரங்கராட்டினத்திலிருந்து ரஃபீக்கும் பிரசாத்தும் கிரீச்சிட்டார்கள்.

வூஷ்! ஃபைஜா நீர்ச்சறுக்கில் சறுக்கியபடி வந்தாள்.

ஸ்ஸ்ஸூப்! அஜய்யும் அனிதாவும் தண்ணீர் கோஸ்டரில் விரைந்தனர்.

ஆறாம் வகுப்பில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அதற்கு ஒரே காரணம், அவர்கள் நாள்தோறும் ஒரு ரூபாய் சேமித்ததுதான்!

சேமிக்கத் தொடங்குவது எப்படி?

1. ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் உங்களால் எவ்வளவு பணத்தைச் சேமிக்க இயலும் என்பதைத் தீர்மானியுங்கள். அது எவ்வளவு சிறிய அல்லது பெரிய தொகை என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்.

2. ஒரு சிறிய பெட்டி அல்லது பழைய டப்பாவை வைத்து ஓர் உண்டியல் செய்யுங்கள். நீங்கள் சேமிக்கும் பணத்தை அதில் பாதுகாப்பாகப் போட்டுவையுங்கள்.

3. அதிலிருந்து பணத்தை எடுத்து செலவுசெய்யத் தோன்றினால், அந்த சபலத்தை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்!

4. நீங்கள் உங்களுடைய பணத்தை எப்படிச் செலவழிக்கிறீர்கள் என்பதைக் குறித்துவையுங்கள். இதனால், செலவைக் குறைப்பது எப்படி, சேமிப்பைக் கூட்டுவது எப்படி என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.