"நினைவிருக்கட்டும். பாம்பிடமிருந்து தள்ளியே இரு. அவன் வேறு மாதிரி!" என்றும் சொன்னார் அம்மா.அம்மா அப்படிச் சொல்லியிருக்க வேண்டாம் என்று நினைத்தது சிட்டுக்குருவி. காரணம், பாம்பு அதன் சிறந்த நண்பன். ஆனால் அம்மாவுக்குப் பாம்பைப் பிடிக்காது."அவன் நம்மைச் சாப்பிடுபவர்களின் இனத்தைச் சேர்ந்தவன்! குருவியும் பாம்பும் நண்பர்களாக இருக்கவே முடியாது," அம்மா அடிக்கடி சொல்வது இது.
நகரத்தின் மறுபகுதியில், பாம்பின் தந்தை அதன் மதிய உணவுக்காகப் பறவை முட்டைகளை அடுக்கிக் கொண்டிருந்தார்."இன்றைக்கு சிறப்பு உணவு!" என்று பெருமிதமாகச் சொன்னார்."ஆனால், எனக்கு முட்டைகளே பிடிக்காது, அப்பா," என்று முணுமுணுத்தது பாம்பு.
தந்தை சற்றுக் கடுமையான குரலில், "நம் குடும்பத்தில் இதைத்தான் வழக்கமாகச் சாப்பிட்டு வருகிறோம்” என்றார். பிறகு, “சரி, நீ கிளம்பு. நினைவிருக்கட்டும். சிட்டுக்குருவியிடமிருந்து தள்ளியே இரு" என்றார்.
பாம்பு கோபத்துடன் அங்கிருந்து ஊர்ந்து சென்றது."குருவிகள் வேறுமாதிரி. உன் உணவோடு நீ நண்பனாக இருக்கமுடியாது" தந்தையின் குரல் அதைப் பின்தொடர்ந்தது.
பாம்பும் சிட்டுக்குருவியும் பள்ளியில் சந்தித்தன."உங்க அம்மா அதைச் சொன்னாங்களா?" என்று கேட்டது பாம்பு.தலையாட்டிக்கொண்டே, "உங்க அப்பாவும் அதைச் சொன்னாங்களா?" என்று சிட்டுக்குருவி கேட்க, பாம்பும் தலையசைத்தது."நம்ம பெற்றோர் சொல்வது தப்பு. நாமிருவரும் ஒரேமாதிரிதான்! வேறுமாதிரி இல்லை என்று அவர்களுக்கு உணர்த்துவோம்" என்றது பாம்பு.
"நல்ல யோசனை" என்று சொன்னது சிட்டுக்குருவி, "அப்படியே செய்வோம்."
பின்னர், குருவி ஒரு வெற்றுத்தாளை எடுத்தது, அதில் இப்படி இரண்டு வட்டங்களை வரைந்தது.
"இடப்பக்க வட்டத்தின் மஞ்சள் வண்ணப் பகுதியில், குருவிகளைப் பற்றிய விஷயங்களை எழுதுவோம். வலப்பக்க வட்டத்தின் நீல நிறப் பகுதியில் பாம்புகளைப் பற்றிய விஷயங்களை எழுதுவோம். இது பாம்புகளுக்கும் சிட்டுக்குருவிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமைகளைச் சொல்லும்!" என்றது சிட்டுக்குருவி."நாமிருவரும் எப்படி ஒரேமாதிரி என்பதைச் சொல்வதுதானே நம் எண்ணம்!" என்றது பாம்பு குழப்பத்துடன்.சிட்டுக்குருவி சிரித்துக்கொண்டே "அதற்குத்தான் நடுவில் உள்ள பச்சை வண்ணப் பகுதி" என்றது.
"முதலில், பார்க்க நாம் இருவரும் எப்படி இருக்கிறோம். ஒரேமாதிரியா? வேறுமாதிரியா?" குருவி கேட்டது."ரொம்ப வித்தியாசமாக இருக்கிறோம்” என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது பாம்பு, “நான் நீளமாக, முடியில்லாமல், மெலிந்து இருக்கிறேன். நீ சின்னதாக, உருண்டையாக, மெத்தென்று இருக்கிறாய்!""சரியாகச் சொன்னாய்" என்றது குருவி. "நான் ஒரு துணிப்பந்து" என்று சொல்லி மஞ்சள் வண்ணப் பகுதியில் ஒரு துணிப்பந்தை வரைந்தது. "நீயோ கரடுமுரடான கயிறு" என்று அதை நீல வண்ணப் பகுதியில் வரைந்தது.
"சரி! நாம் இருவரும் எப்படி நகர்கிறோம் என்று பார்ப்போம்" என்றது குருவி."அதிலும் பெரிய வித்தியாசம். நீ காற்றில் சிறகை அடித்துக்கொண்டு பறக்கிறாய். நானோ வளைந்து வளைந்து தரையில் ஊர்ந்து செல்கிறேன்" என்றது பாம்பு."இப்படியும் சொல்லலாம். நான் ஆகாயவிமானம் போலச் செல்கிறேன்! நீ ரயில் வண்டி போலச் செல்கிறாய்!" என்றது குருவி.
பாம்பு பெருமூச்சுவிட்டது.”கவலைப்படாதே! இப்பொழுது, நாம் என்ன சாப்பிடுகிறோம் என்று பார்ப்போமா?” என்று கேட்டது குருவி."அதிலும் பெரிய வித்தியாசம்! ஆனால் நான் பறவை முட்டைகளைச் சாப்பிடுவதே இல்லை", இதைச் சொல்லும்போதே பாம்புக்குக் கண்ணீர் வந்தது.
"அது எனக்குத் தெரியும்" என்று ஆறுதலாகச் சொன்னது குருவி. அதன் மனதிலும் இப்பொழுது சோகம்."விதைகள் மற்றும் புல் என் உணவு" என்று தனக்குள் சொல்லிக் கொண்டு அதை மஞ்சள் பகுதியில் வரைந்தது குருவி.பிறகு, "தவளைகள், எலிகள் உன் உணவு" என்று சொன்னபடி அதை நீலப் பகுதியில் வரைந்தது.
ஹூர்ரம்ப்ப்ப்...பாம்பும் குருவியும் சத்தம் கேட்டு அதிர்ந்து குதித்தன. அங்கே வந்தவர், தலைமையாசிரியர் யானை."ஏன் இருவரும் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?" பரிவாகக் கேட்டார் அவர்."ஐயா! என் அப்பாவும் குருவியின் அம்மாவும் நாங்களிருவரும் வேறுமாதிரி என்கிறார்கள், நாங்கள் நண்பர்களாக இருக்கவே முடியாது என்று சொல்கிறார்கள்" விசும்பிக்கொண்டே சொன்னது பாம்பு."நாங்கள் இருவரும் ஒரேமாதிரிதான். எங்களுக்குள் வித்தியாசம் இல்லை என்று அவர்களுக்கு உணர்த்த நினைத்தோம். அது முடியாது போலிருக்கிறது" என்றது குருவி.யானை, குருவி வரைந்திருந்த வட்டங்களை நெடுநேரம் உற்றுப் பார்த்தார் தலைமையாசிரியர். பிறகு, சிரிக்கத் தொடங்கினார்.’இதில் சிரிக்க என்ன இருக்கிறது?” என்று பாம்பும் குருவியும் அவரைப் பார்த்தன.அதிகம் சிரித்ததால் வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்ட தலைமையாசிரியர், "குழந்தைகளே, கவலை வேண்டாம், நான் உங்களுக்கு உதவுகிறேன்" என்றார்.
தலைமையாசிரியர் யானை ஓரிடத்தில் வசதியாக உட்கார்ந்துகொண்டார்.பிறகு, "உனக்கு எதைச் செய்யப் பிடிக்கும்?" என்று பாம்பிடம் கேட்டார்."விளையாடுவது, அரட்டை அடிப்பது பிடிக்கும், அதுவும் குருவியுடன்" என்றது பாம்பு.
"குருவி! உனக்கு?""விளையாடுவது, அரட்டை அடிப்பது பிடிக்கும். அதுவும் பாம்புடன்" என்றது குருவி.
"ஆக, உங்கள் இருவருக்கும் செய்யப்பிடித்தது ஒரே விஷயம்தான். சரிதானே?" என்றார் தலைமையாசிரியர். உடனே, பச்சை வண்ணப் பகுதியில் ஏதோ வரைந்தார்."அடுத்ததாக, எது உங்களை மிகவும் மகிழ்ச்சியாக்குகிறது குழந்தைகளே?" என்று கேட்டார் தலைமையாசிரியர்."என் நண்பன் பக்கத்தில் உட்கார ஆசிரியை என்னை அனுமதிக்கும்போது" என முகத்தில் புன்னகை மலரச் சொன்னது பாம்பு."எனக்கும் அதேதான்" என்று கையைத் தட்டியது குருவி.
"ஆஹா! இருவருக்கும் மகிழ்ச்சி தருவது ஒரே விஷயம்தான். இதைப் பச்சைப் பகுதியில் போடுகிறேன்" என்றார் தலைமையாசிரியர்."அடுத்து, உங்களுக்குத் துக்கம் தருவது என்ன விஷயம்?"பாம்பு வருத்தத்துடன் சொன்னது, "குருவியிடம் சேரக்கூடாது என்று என் அப்பா சொல்வதுதான்."குருவி வருத்தத்துடன் சொன்னது, "பாம்பிடம் சேரக்கூ்டாது என்று என் அம்மா சொல்வதுதான்."தலைமையாசிரியர் நெற்றியைச் சுருக்கிக்கொண்டு, "ஆக, உங்கள் இருவருக்கும் துக்கம் தருவதும் ஒரே விஷயம்தான், உங்கள் பெற்றோர்கள் நண்பரைத் தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிப்பதில்லை. இதுவும் பச்சைப் பகுதிதான்" என்றார்.
"சரி! ஒரு நல்ல நண்பர் எப்படி இருக்கவேண்டும்?" என்று கேட்டார் தலைமையாசிரியர் யானை."அவர் நம்மை நேசிக்க வேண்டும்..." என்று சொல்லத் தொடங்கியது பாம்பு."... ஒருவேளை நாமும் அவரும் வித்தியாசமாக இருந்தாலும்கூட, அவர் நம்மை நேசிக்க வேண்டும்!" என்று முடித்தது குருவி.
"ஆக, நீங்கள் எப்படிப்பட்டவராக இருந்தாலும் ஒரு நல்ல நண்பர் உங்களை நேசிக்கிறார் என்பதை நீங்கள் இருவரும் ஒப்புக் கொள்கிறீர்கள். இதையும் சேர்த்தால் நான்கு விஷயங்களில் நீங்கள் ஒரேமாதிரிதான்” என்றார் தலைமையாசிரியர், “மூன்று விஷயங்களில்தான் நீங்கள் வேறுமாதிரி. ஆக, ஒரேமாதிரிக்குத்தான் வெற்றி."
"ஹூர்ரே!" என்று குருவியும் பாம்பும் கூச்சலிட்டன. "நன்றி, தலைமையாசிரியர் யானை அவர்களே!""ஹூர்ரம்ப்!" என்றார் தலைமையாசிரியர் யானை, “நிறைவாக ஒரு விஷயம்...”
"சொல்லுங்கள் ஐயா!""நாளை காலை முதல் வேலையாக, உங்கள் பெற்றோர்களை அலுவலகத்துக்கு வந்து என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள்!“ என்ற தலைமையாசிரியர் யானை, மிகுந்த கோபம் கொண்டவராக நடந்துசென்றார்.
பகுத்திடுங்கள் தொகுத்திடுங்கள்!
கணிதத்தில் பகுப்பதும் தொகுப்பதும் முக்கியத் திறமைகளாகும். பொருட்களைப் பகுப்பதற்குத் தர்க்கரீதியான கேள்விகளைக் கேட்கவேண்டும். இதோ, இப்படி:1. எந்தப் பொருட்கள் ஒரேமாதிரி உள்ளன? எவை வித்தியாசமாக உள்ளன?2. ஒரேமாதிரியான பொருட்கள் எப்படி ஒரேமாதிரி உள்ளன? வித்தியாசமான பொருட்கள் எப்படி வித்தியாசமாக உள்ளன?3. ஒரேமாதிரியான பொருட்களைப் பலவிதமாகப் பகுத்துத் தொகுக்கமுடியுமா?
இந்த விலங்கு பொம்மைகளை எத்தனை விதங்களில் பகுத்துத் தொகுக்கமுடியும் என்று யோசியுங்கள். இப்படிச் செய்யலாமா? - நிறங்களின் அடிப்படையில்: நீல பொம்மைகள் ஒரு வட்டத்தில், பச்சை பொம்மைகள் மற்றொரு வட்டத்தில் - அளவுகளின் அடிப்படையில்: சிறிய பொம்மைகள் ஒரு வட்டத்தில், பெரிய பொம்மைகள் மற்றொரு வட்டத்தில். - அவை எப்படி நகர்கின்றன என்பதன் அடிப்படையில்: நடக்கும் மிருகங்கள், பறக்கும் மிருகங்கள்.இந்தக் குழுக்கள் மேலே சொன்ன ஒவ்வொரு முறையிலும் வெவ்வேறுவிதமாக இருக்குமா? பிரித்துதான் பாருங்களேன்.