ஒரு நாள் ஒரு பழுத்த பச்சை மஞ்சள் இலை மரத்திலிருந்து கீழே விழுந்தது. துள்ளித் துள்ளி வந்த ஒரு அணில் அதன் மீது தாவிக் குதித்து ஓடியது.
ஒரு பறவை அந்த இலை மீது வந்து அமர்ந்தது. வந்த சில நொடிகளில் விர்ரென்று பறந்தது. காற்று வீசத் தொடங்க இலையும் பறக்கத் தொடங்கியது! சிறிது தூரம் சென்று இலை நின்றது.
காற்று நின்று மழை வந்ததும் சில மழைத்துளிகள் இலை மீது விழுந்தன. சிலிர்த்தது இலை! அப்போது அங்கே வந்தான் ஒரு சிறுவன். எடுத்தான் இலையை, துடைத்தான் அதனை. ஒட்டியிருந்த ஈர மண் எல்லாம் போனது.
அழகாய் மிளிர்ந்த அந்த இலை அவனைக் கவர்ந்தது. மிகுந்த கவனத்துடன் அவன் தனது புத்தகத்தின் பக்கங்களின் நடுவே அதைப் பத்திரமாய் வைத்தான்!