ஒரு கோட்டுக்கு வெளியே
சு. சமுத்திரம்
இதுவரை நான் எழுதிய எட்டு நாவல்களில், “ஒரு கோட்டுக்கு வெளியே” என்ற எனது படைப்பு பிரபல திறனாய்வாளர்களான வல்லிக்கண்ணன், “செம்மலர்” ஆசிரியர் திரு.கே.எம். முத்தையா, பேராசிரியர் பாக்கியமுத்து, பேராசிரியை சரோஜினி பாக்கியமுத்து, சிட்டி - சிவபாத சுந்தரம், செந்தில்நாதன், எஸ்.ஏ. பெருமாள், கதிரேசன் ஆகியோராலும், பல்வேறு வாசகர்களாலும் சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது. இதனால் ஒரு வேளை இந்த படைப்பிலிருந்து நான் முன்னேற முடியவில்லையோ என்று எனக்குள்ளே ஒரு சந்தேகம் எழுவதுண்டு. என்றாலும், இந்த நாவல்தான் எனக்கும் பிடித்த நாவல். “சோற்றுப்பட்டாளம்” முதலில் அச்சில் வெளிவந்தாலும், என் எழுத்தில் முதலாவது வந்த நாவல் இதுதான். அனுபவப்பட்ட எழுத்தாளன் ஆனபிறகு, உருவாகிய படைப்புகளை விட, இந்த நாவல் எப்படி மக்களைக் கவர்ந்தது என்பதை நினைத்துப் பார்க்கிறேன். எனக்கே காரணங்கள் புரியவில்லை. ஒருவேளை, உத்தி, உள்ளடக்கம், உருவம், உதாரணங்கள் போன்ற இலக்கியத் தொல்லைகளைப் பற்றிக் கவலைப்படாமல் எனக்குத் தோன்றியதை உள்ளது உள்ளபடியே எழுதியதே இதன் வெற்றிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். இதனாலேயே இந்த நாவலை இந்தக் கட்டுரைக்காக மீண்டும் படித்தபோது என்னை நானே ஒரளவு பூட்டி வைத்திருக்கும் இலக்கியச் சிறையிலிருந்து மீள வேண்டும் என்பது போன்ற ஒரு எண்ணம் ஏற்படுகிறது. இந்த நாவல் பிறந்த கதையைப் பார்ப்போம்.