oru pandrikuttiyin payanam

ஒரு பன்றிக்குட்டியின் பயணம்

ஒருநாள் மினி சிங்கின் செல்லப் பன்றி லலிதா அவரது மட்பாண்டக் கூடத்தை விட்டுக் கிளம்பினாள்! சாகசங்கள் நிறைந்த பயணத்தில், கோபமான கழுதைகளையும், பெரிய எருமை மாடுகளையும், மூர்க்கமான நாய்களையும் சந்திக்க வேண்டிவந்தது. ஆனாலும் அவள் குதூகலமாக தொடர்ந்து சென்றாள். சாகசங்கள் என்றால் அப்படித்தானே இருக்கவேண்டும்?

- Vishal Raja

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மினி சிங் எனும் குயவரின் செல்லப் பன்றி லலிதா. மினி தன் பன்றியை மனதார நேசித்தார். எனவே, லலிதாவை தன் விருப்பப்படி இருக்க அனுமதித்தார். அவள்நடைபாதைகளில் குழி தோண்டுவாள், மினியின் உணவை காலி செய்துவிடுவாள், நாய்க்குட்டி கௌரியை மிரட்டுவாள்.

பாதாம் மரத்தில் மினி தொங்கவிட்டிருந்த வெள்ளரிக்காய்ப் பையைத் தட்டிவிட முயன்றாள் லலிதா. உம்ம்ம்ம்ம்க்க்க்க்க்க் ம்ம்ம்ம்க்க்க்க்க்! எம்பி நின்று மூக்கால் பையை இடித்தாள். அப்போது தன்னை ஒரு ஒட்டகச்சிவிங்கி போல் நினைத்துக் கொண்டாள்.

படபடபட கா கா! எங்கிருந்தோ பறந்து வந்த இரண்டு பெரிய  காகங்கள், தலையாட்டி அவளை மேலும் உற்சாகப்படுத்தின,

க்ளிங்க் க்ளிங்க் க்ளிங்க்! அப்போது, மண்பாண்ட தொழிற்கூடத்தின் கதவு மணிகள் ஒலித்தன.

ஹர்ர்ர்ரம்ப்-ஹர்ர்ர்ர்ரம்ப்-பர்ர்ர்ரம்ப்!லலிதா மகிழ்ச்சியில் உறுமினாள். தொழிற்கூடத்தின் கதவு அகலத் திறந்திருந்தது! அவள் வெள்ளரிக்காய்களை மறந்தாள். காகங்களை மறந்தாள். குயவர் மினியையும் நாய்க்குட்டி கௌரியையும் மறந்தாள்.

தடக், தடக் தட தட தடக்!

திறந்து கிடந்த கதவு வழியாகத் தாவி ஒரே ஓட்டமாக ஓடினாள் லலிதா.

புஸ்ஸ்ஸ்-புஸ்ஸ்ஸ்-ஸ்ஸ்ஸ்! லலிதா, முகவாயை உயர்த்தி மோப்பம் பிடித்தாள். பாதையின் நடுவில் நின்றிருக்கும் முடி நிறைந்தஇந்த விலங்கு யார்? அது அவளைவிட உயரமாக இருந்தது. முடிச்சு முடிச்சான கால்களும், சாம்பல் வெள்ளை முடியும் கொண்டிருந்தது. அதன்காதுகளும் வாலும் முகமும் நீட்ட நீட்டமாக இருந்தன.

ஹர்ர்ர்ர்ர்ரம்ப்! என்றாள் லலிதா. புதிய நண்பர்கள் என்றாலே அவளுக்கு மகிழ்ச்சிதான்.

ஆனால் ஜென்னி என்ற அந்தக் கழுதைக்கு பன்றிகளோடு நட்பு பாராட்ட எல்லாம் நேரம் இல்லை. ஜென்னி திரும்பி...

டிஷ்யூம்! லலிதாவை ஓங்கி உதைத்துவிட்டாள்!

ஊ ஊஊ ஊஊஊஊஊ! லலிதா அலறியபடி விழுந்தாள்.

லலிதா மென்மையாக முனகிக்கொண்டே தொடர்ந்து நடந்தாள். தடக், தடக், தடக், தட புட கட?

இவ்வளவு மெதுவாக நடந்து போகும் இந்தப் பெரிய கருப்பு உருவம் யார்? அதற்கு ஒரு பெரிய மூக்கும் இரண்டு பெரிய கொம்புகளும் இருந்தன. அகன்ற குளம்புகளும் விரிந்த முதுகும் பெரிய தலையும் இருந்தன. அது எங்கே போகிறது?

டொய்ங்-கொய்ங்-டொய்ங்! லலிதாவின் மூக்கு துடித்தது.

அந்த எருமைமாடு தண்ணீர் நிரம்பித் தளும்பிய குளத்துக்குப் போய்க்கொண்டிருந்தாள்.

அச்சம் மறந்து லலிதாவும் குளத்தை நோக்கித் தாவி ஓடினாள்.

ஆனால்…

எருமைமாடு நேராக குளத்தில் இறங்கிவிட்டாள்!

தொபுக், களக், புளக், தமால்!

புளுகுளுபுளுகுளு குபுகுபுகுபு! எருமை மாடு குளத்து நீரில் முங்கினாள். அப்போது வெளியே தெளித்த நீர் லலிதாவை நனைத்தது.குளமே எருமையால் நிரம்பிவிட்டது!

லலிதா ஏமாற்றத்துடன் திரும்பி நடந்தாள். தடக், தடக், தடக் த...

திடீரென்று எங்கிருந்தோ அழுக்கு நாயொன்று தோன்றியது. அது உறுமியபடி மெதுவாக லலிதாவை நோக்கி வந்தது. க்ர்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

நான்கு கால்களால் பலம்கொண்ட மட்டும் வேகமாக ஓடத் தொடங்கினாள் லலிதா. தடக், தடக், தடக், தடக் —

தடால்!

டிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்! அடர்த்தியாக வளர்ந்திருந்த புதர்களின் நடுவில் வந்து விழுந்தாள்.

உஸ்ஸ்ஸ்ப்-வூஊஊஷ் உஸ்ஸ்ஸ்ஸ்ப்-வூஊஊஊஷ்! லலிதாவுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. அவள் சோர்ந்து போயிருந்தாள். பசி வயிற்றைக் கிள்ளியது.

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்! கொய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்! கொசுவொன்று அவளைச் சுற்றி ரீங்காரமிட்டு தொல்லை கொடுத்தது.

தப தப தப-டப டப! லலிதா தலையை உலுக்கி, காதுகளைப் படபடவென்று அடித்துக்கொண்டாள். புதர் முழுவதும் குலுங்கியது.

மல்பெரிப் பழங்கள் அவள்மீது மழையாய் பொழிந்தன. மகிழ்ச்சியில் பழுத்தது, பழுக்காதது என எல்லா மல்பெரிகளையும் விழுங்கினாள்.

தொப்!

தொப்!

தொப்!

தொப்!

லலிதாவின் மூக்கும் நாக்கும் ஊதா நிறமாகிவிட்டன. களைத்துப்போன லலிதா புதருக்குள்ளே படுத்துக் கொண்டாள். சீக்கிரமே தூங்கியும் விட்டாள்!

அவள் கனவில் நீச்சலடிக்கும் கழுதைகளும் எட்டி உதைக்கும் வெள்ளரிக்காய்களும் வந்தன.

விடிந்தால் இன்னுமொரு புத்தம்புதிய நாள். அது என்ன ஆச்சரியத்தைக் கொண்டு வரும் என்று யாருக்குத் தெரியும்?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். லலிதாவின் சாகசங்களுக்கு இது வெறும் ஆரம்பம்தான்!