ஒரு சமயம் நான் பாபநாசத்துக்குச் சென்றிருந்தேன். எதற்காகப் போனேன் என்று கேட்டால் நீங்கள் ஒரு வேளை சிரிப்பீர்கள்; சிலர் அநுதாபப்படுவீர்கள். பி.ஏ. பரீட்சைக்கு மூன்று தடவை போய் மூன்று தடவையும் தவறிவிட்டேன். இதனால் வாழ்க்கை கசந்து போயிருந்தது. ஒரு மாதிரி பிராணத் தியாகம் செய்துவிடலாம் என்ற முடிவுக்கே வந்துவிட்டேன். திடீர் திடீர் என்று நமக்குத் தெரிந்தவர்கள் யார் யாரோ இறந்து போய்விட்டதாகக் கேள்விப்படுகிறோம். ஆனால் நாம் அவர்களைப் பின்பற்றலாம் என்றால், அதற்கு வழிவகை தெரிவதில்லை. யோசித்து யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். பாபநாசத்தில் கல்யாணி தீர்த்தம் என்பதாக ஓர் இடம் இருக்கிறதென்றும், அதிலேதான் ஆசிரியர் வ.வே.சு. ஐயர் விழுந்து உயிரை இழந்தார் என்றும் கேள்விப்பட்டிருந்தேன். அந்தப் பெரியாரைப் பின்பற்றலாம் என்று எண்ணிக்கொண்டுதான் பாபநாசம் போனேன்.
இரண்டு காரணங்களினால் நான் உத்தேசித்த காரியத்தை நிறைவேற்ற முடியவில்லை. முதலாவது, அந்தக் கல்யாணி தீர்த்தம் இருக்கிறதே, அது பார்க்க மிகப் பயங்கரமாயிருந்தது. தென்னைமர உயரத்திலிருந்து மூன்று தண்ணீர்த் தாரைகள் 'சோ' என்ற சத்தத்துடன் கீழேயுள்ள அகண்ட பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தில் தண்ணீர் நிறைந்து ததும்பி அலை மோதிக்கொண்டிருந்தது. சிறிய மரக்கிளை ஒன்று அத்தடாகத்தில் விழுந்து அங்குமிங்கும் சுழன்று அலைக்கப்படுவதைப் பார்த்தேன். இதிலே விழுந்தால் நம்முடைய தேகமும் இப்படித்தானே அலைக்கப்படும் என்று நினைத்தபோது என் தைரியம் குலைந்துவிட்டது. அன்னை பெற்றெடுத்த நாளிலிருந்து எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்த உடம்பு இது! இதற்கு எத்தனை எண்ணெய், எத்தனை சோப்பு! எத்தனை ஆடை அலங்காரம், எத்தனை வகை வகையான அன்னபானம்-அடடா! இதைப் புகைப்படம் பிடிப்பதற்காக மட்டும் எத்தனை செலவு! இவ்வாறெல்லாம் பேணி வளர்த்த உடம்பு அந்தப் பயங்கரமான தடாகத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பது என்னும் எண்ணத்தை என்னால் கொஞ்சங்கூடச் சகிக்கவே முடியவில்லை.
அங்கிருந்து இறங்கி வந்து கீழே பாபநாசம் கோவிலுக்குப் பக்கத்தில் பளிங்கு போன்று தெளிந்த நீரோடும் நதியின் கரையில் உட்கார்ந்து யோசித்தபோது, எதற்காக உயிரை விடவேண்டும் என்றே தோன்றிவிட்டது. நதியின் வெள்ளத்தில் மந்தை மந்தையாகத் தங்கநிற மீன்கள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தன. அவை மேலே வரும்போதும் புரண்டு விழும்போதும் என்னமாக ஜொலித்தன! இந்த மீன்கள் இவ்வளவு குதூகலமாக விளையாடிக் கொண்டு திரிகின்றனவே, பி.ஏ. பரீட்சையில் தேறாததனாலே இவற்றுக்கு என்ன குறைவு வந்துவிட்டது! இதோ இந்த மரங்களில் எத்தனை விதமான பட்சிகள் எவ்வளவு ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வாழ்கின்றன! இவை பி.ஏ. பரீட்சையில் தேறவில்லையே! இதோ இந்தக் குரங்குகளைத் தான் பார்க்கலாமே! பி.ஏ. பட்டம் பெறவில்லையே! என்று அவை கொஞ்சமாவது கவலைப்படுகின்றனவா? ஆணும் பெண்ணும் எவ்வளவு உல்லாசமாக மரங்களின் மீது ஏறியும் இறங்கியும் கிளைக்குக் கிளை பாய்ந்தும் வாழ்கின்றன! தாய்க்குரங்கு அந்தக் குட்டிக்குரங்கையும் சேர்ந்து அணைத்துக் கொண்டு மரத்துக்கு மரம் தாவுகிற அழகை என்னவென்று சொல்வது!
அறிவில்லாத பிராணிகளும் பட்சிகளும் இவ்வளவு உல்லாசமாக வாழ்க்கை நடத்தும்போது நாம் மட்டும் பி.ஏ. பரீட்சை தேறவில்லை என்பதற்காக ஏன் உயிரை விட முயல வேண்டும்?
இத்தகைய முடிவுக்கு வந்து திரும்பித் திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன். சென்னைக்கு இரண்டாம் வகுப்பு டிக்கட் எடுத்துக்கொண்டு ரயில் வண்டியில் ஏறினேன்.
ரயில் என்னமோ வேகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், என் மனம் அதைவிட வேகமாக எங்கெங்கேயோ சஞ்சரித்துக் கொண்டிருந்தது! ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது கஷ்டமாயிருந்தது. அன்றைக்குப் பாருங்கள், என்ன காரணத்தினாலோ அந்த வண்டியில் கூட்டமே இல்லை. உயர்ந்த வகுப்பு வண்டிகளை வழக்கத்தைவிட அதிகமாகவே கோத்திருந்தார்கள், போலிருக்கிறது. நான் ஏறி இருந்த இரண்டாம் வகுப்பு வண்டியில் நான் ஒருவனேதான். ஆகையால், உட்கார்ந்து உட்கார்ந்து அலுத்துப் போய் விட்டது. ரயில் நின்ற ஒவ்வொரு நிலையத்திலும் வண்டியிலிருந்து கீழே இறங்கிப் பிளாட்பாரத்தில் சிறிது நேரம் உலாவிவிட்டு ரயில் புறப்படும் சமயத்தில் மறுபடியும் ஏறிக் கொண்டேன். ரயில் நிலையங்களில் சாதாரணமாய் நடமாடும் பலதரப்பட்ட ஜனங்களைப் பார்ப்பதில் ஒருவித உற்சாகம் ஏற்பட்டது.
விருதுநகர் சந்திப்பில் அந்த உற்சாகம் சிகரத்தை அடைந்தது. ஆம்; முதலில் நான் பார்த்தது-என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்தது-ஓர் ஒற்றை ரோஜாப்பூ தான்! அந்த ஒற்றை ரோஜாப்பூ ஒரு பெண்மணியின் எடுத்துக் கட்டிய கூந்தல் மீது வீற்றிருந்தது. 'கொலு வீற்றிருந்தது' என்றும் சொல்லலாம். அவ்வளவு இலட்சணமாயிருந்தது. தலைநிறைய ஒரு சுமைப் பூவைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு அலையும் சென்னை நகர்ப் பெண்மணிகள் பலரை நான் பார்த்திருக்கிறேன். "என்ன அநாகரிகம்! தலையில் புல்லுக் கட்டைச் சுமப்பதுபோல் சுமக்கிறார்களே!" என்று எண்ணியிருக்கிறேன். அதற்கெல்லாம் மாறாக இவ்வளவு நாஸுக்காகவும் நாகரிகமாகவும் கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூ அணிந்திருக்கும் பெண்மணி யாரோ? என்று அறிய ஆவல் உண்டாயிற்று. ரயிலில் நான் இருந்த வண்டிக்கு இரண்டு வண்டிக்கு அப்பால் அவள் இருந்தாள். அவள் தலை வெளியில் நீட்டப்பட்டிருந்தது. ஆனால், முகம் எனக்கு நேர் எதிர்ப்புறமாகத் திரும்பியிருந்தது. அந்தப் பெண்மணியின் முகம் எப்படியிருக்குமோ, கூந்தலில் சூடிய ஒற்றை ரோஜாப்பூவினால் ஏற்பட்ட நல்ல அபிப்பிராயம் முகத்தைப் பார்த்ததும் மாறிவிடுமோ என்ற ஐயத்துடனேயே அந்தப் பக்கம் போனேன். ஏதோ ஒரு கதையில் படித்திருக்கிறேன். ஒருவன் ஒரு பெண்ணின் கரத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனான்! அவள் முகத்தைப் பார்த்ததும் பயங்கரமும் அருவருப்பும் அடைந்தான். இம்மாதிரி கதி எனக்கும் ஏற்பட்டுவிடுமோ?
அருகில் சென்றபோது சட்டென்று அவள் முகம் என் பக்கம் திரும்பியது. ஆகா! நான் பயந்தது என்ன முட்டாள்தனம்! பார்க்கிறவர்களின் கண்ணில் வந்து தாக்கி வேதனை உண்டாக்கும் சௌந்தரியமும் உண்டோ ! அத்தகைய அபூர்வ சௌந்தரியமுள்ள முகத்தை அவள் என் பக்கம் திருப்பினாள். ஒரு புன்னகையும் புரிந்தாள். நிலா வெளிச்சத்தில் முல்லை பளீரென்று மலர்ந்தது போலிருந்தது. நான் எப்போதும் சங்கோசமோ கூச்சமோ அதிகம் இல்லாதவன் தான். ஆயினும், அவளிடம் அப்போது நானாக ஒரு வார்த்தை பேச முயன்றிருந்தால் என் பிராணனே போயிருக்கும். பாபநாசத்தில் நடந்திருக்க வேண்டியது விருதுநகர் ரயில்வே நிலையத்தில் நடந்திருக்கும். அந்த மாதரசி அதற்கு இடம் வையாமல் என்னிடம் அவளாகவே பேசிவிட்டாள். "தயவு செய்து சிற்றுண்டிச் சாலைக்காரனை எனக்கு ஒரு கப் டீ கொண்டுவரும்படி சொல்ல முடியுமா?" என்றாள். "பேஷாகச் சொல்கிறேன்!" என்று சொல்லி விட்டு, வேகமாக நடந்து போய் ஸ்பென்ஸர் ஆள் ஒருவனைப் பிடித்து, பிஸ்கோத்தும் டீயும் கொண்டுபோய்க் கொடுக்கும்படி சொன்னேன். அப்புறம் ஏதோ சந்தேகம் தோன்றவே இந்தியச் சிற்றுண்டிச் சாலைக்கும் போய்ச் சிற்றுண்டி காப்பி கொண்டு போய்க் கொடுக்கும்படியும் சொன்னேன். பிறகு சற்றுத் தூரம் பிளாட்பாரத்தில் நடந்துவிட்டுத் திரும்பினேன். திரும்புகையில் அந்தப் பெண்ணின் வண்டிக்கருகில் நின்று, "டீ வந்ததா?" என்று கேட்டேன். அவள் திரும்பிப் பார்த்து முகமலர்ச்சியுடன், "ஓ! ஒன்றுக்கு இரண்டு மடங்காக வந்தது. நீங்கள் கூட வந்து சாப்பிடலாம்!" என்றாள்.
ஒரு கணம் அந்த வண்டியில் ஏறிக்கொள்ளலாமா என்ற பைத்தியக்கார எண்ணம் உண்டாயிற்று. நல்ல வேளையாக, வண்டியின் வெளிப்புறத்தில் 'பெண்களுக்கு மட்டும்' என்று போட்டிருப்பதை பார்த்திருந்தேன். ஆகையால், "இல்லை! நான் சாப்பிட்டாயிற்று!" என்று சொல்லிவிட்டு என் வண்டியில் போய் ஏறிக்கொள்வதற்கு நகர்ந்தேன். அந்தப் பெண் மறுபடியும், "இன்னும் ஓர் உதவி எனக்காகச் செய்யமுடியுமா? இந்த ரயிலில் காக்கி புஷ்கோட் அணிந்த மூன்று மனிதர்கள் எந்த வண்டியிலாவது இருக்கிறார்களா? அவர்களில் ஒருவர் கடற்படையைச் சேர்ந்தவர் மாதிரி தொப்பி அணிந்திருப்பார்! ஆனால்... ஒரு வேளை, வண்டி புறப்படும் சமயம் ஆகிவிட்டதோ, என்னவோ?" என்றாள்.
"வண்டி புறப்படப் போகிறது! அதனால் பாதகமில்லை. நீங்கள் சொல்வது போன்ற மூன்று ஆசாமிகள் இந்த வண்டியில் இருக்கிறார்கள். என்ஜினுக்குப் பக்கத்து வண்டியில் அவர்கள் இருப்பதைச் சற்று முன்னால் பார்த்தேன்!" என்றேன். நான் சொன்னது உண்மையேதான். அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் புருவங்கள் வெகு இலேசாக நெரிந்தன. "சரி, ரொம்ப வந்தனம்" என்றாள். நான் போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன்.
விருதுநகரிலிருந்து மதுரைக்கு ரயில்போனதே எனக்குத் தெரியவில்லை. அப்படியாக என் மனம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. என்ன சிந்தனை என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா? அந்தப் பெண் யார்? எங்கிருந்து எங்கே போகிறாள்? தனியாகப் பிரயாணம் செய்வதன் காரணம் என்ன? பார்த்தால் நாகரிகமான, படித்த பெண்ணாகத் தோன்றுகிறாளே! 'புஷ்கோட்' அணிந்த மூன்று மனிதர்களைப் பற்றி எதற்காக விசாரித்தாள்?-என்றெல்லாம் எனக்கு நானே கேள்விகளைப் போட்டுக் கொண்டேன். ஆனால் பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. எனினும், பொழுது மட்டும் சிறிதும் நில்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது.
மதுரைச் சந்திப்பு வந்தது. நாட்டில் எத்தனையோ ரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி உருவமும் இருக்கிறது. மதுரை நிலையம் ஒரு தனி ரகம். நிலையத்துக்குள் ரயில் வரும்போது ஜனங்கள் சுவர் வைத்த மாதிரி வரிசை வரிசையாக நின்று உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். என்னத்தைத்தான் பார்ப்பார்களோ தெரியாது. வந்த ரயிலில் ஏறுவோர் இறங்குவோர் அதிகம் உண்டா என்றால், அதுவும் இல்லை. மாலை நேரத்தில் பொழுது போகாமல் ரயில் நிலையத்துக்கு வந்து, வருகிற போகிற வண்டிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜனங்களைப் போலத் தோன்றும். சிறுபிள்ளைகள் சிலர் கையில் கையெழுத்து வாங்கும் சிறிய புத்தகங்களை வைத்துக் கொண்டு, ரயிலில் யாராவது பிரமுகர்கள் வருகிறார்களா என்று ஆவலுடன் பார்த்துக்கொண்டு போவார்கள். பத்திரிக்கை விற்பவர்கள், ஒரு நகரும் பெட்டியில் ஆபாசமான படங்கள் போட்ட மஞ்சள் இலக்கியங்களை வைத்துக்கொண்டு பிரயாணிகள் எதிரே நின்றுவிடுவார்கள். "பிச்சர் போஸ்டு வேண்டுமா?" "இல்லஸ்ட்ரேடட் வீக்லி வேண்டுமோ?" என்று கேட்டுக் கொண்டு நிற்பார்கள். வேண்டாம் என்று சொன்னாலும் போகமாட்டார்கள். பெட்டியிலுள்ள ஆபாச புத்தகங்களின் மேலட்டையைப் பிரயாணிகள் பார்ப்பதற்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஏதாவது ஒரு அட்டையில் மேல் அவர்களுக்கு ஆசை விழாதா என்ற நோக்கம்.
என் முன்னால் அப்படி ஒரு பெட்டி வந்து நின்றதும் "இதேதடா தொல்லை?" என்று நான் கீழே இறங்கினேன். கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் உலாவத் தொடங்கினேன். 'பெண்கள் வண்டி'யில் அந்தப் பெண்ணைக் காணவில்லை. சிறிது ஏமாற்றத்துடன் மேலே நடந்தேன். என்ஜினுக்கு அருகில் பிளாட்பாரத்தில் ஒரு சிறிய கும்பல் நின்றது. யாருக்கோ மாலை போட்டு வழியனுப்பிக் கொண்டிருந்தார்கள். 'ஹிப் ஹிப் ஹுரே!' என்ற கோஷமிட்டார்கள். அதில் என் கவனம் செல்லவில்லை. அந்தக் கும்பலுக்குச் சற்று அப்பால் நாலு பேர் நின்று பேசிக்கொண்டிருந்த இடத்தில் என் கவனம் சென்றது. அவர்களில் மூன்று பேர் காக்கி 'புஷ்கோட்' ஆசாமிகள். நாலாவது நபர், என்னையறியாமல் என் கண்கள் தேடிக்கொண்டிருந்த பெண். அப்போது அவள் என்பக்கம் பார்க்கவில்லை. தலையில் அணிந்த ஒற்றை ரோஜாவிலிருந்துதான் அவள் என்று தெரிந்துகொண்டேன். அவள் ஏதோ வேடிக்கையாகப் பேசியிருக்கவேண்டும். மற்ற மூன்று பேரும் நகைத்தார்கள். எனக்கு ஒரே எரிச்சலாயிருந்தது. அவர்களிடையே போவதற்கும் தைரியமில்லை. அங்கிருந்து நகருவதற்கும் மனம் வரவில்லை. அவர்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொள்ள ஆவல் உண்டாயிற்று. நிற்கலாமா நகரலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவள் திரும்பினாள். என்னைப் பார்த்துவிட்டாள். உடனே பழையபடி ஒரு முல்லைப்புன்னகை அவள் முகத்தில் பூத்தது. மறுபடி திரும்பி அவர்களுடன் பேசத் தொடங்கினாள். அங்கிருந்து அகல்வதே நலம் என்று தீர்மானித்தேன். திரும்பிப்போய் என் வண்டியில் ஏறிக்கொண்டேன். என்ஜின் இருந்த திக்கையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதற்காக என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா!
வண்டி புறப்படும் நேரம் ஆகிவிட்டது. இன்னும் அவள் ஏன் திரும்பி வரவில்லை? அந்த 'புஷ்கோட்' மனிதர்களுடன் அவர்களுடைய வண்டியில் ஏறி விட்டாளா என்ன?... இல்லை, அதோ அவள் வருகிறாள். வேகமாகவே நடந்து வருகிறாள். என்ன அழகான நடை! அவள் நடப்பதாகவே தோன்றவில்லை; மிதப்பதாகத் தோன்றியது. என் வண்டிக்கு அருகில் வந்ததும் என்னைப் பார்த்தாள். சற்றுத் தயங்கி நின்றாள். "வண்டி புறப்படப் போகிறதே!" என்றேன். என்னத்தைச் சொல்ல. அவள் சட்டென்று வண்டிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். வந்தவள் எனக்கு எதிரில் உட்கார்ந்து, என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.
என் நெஞ்சு அபார வேகமுள்ள விமான என்ஜினைப் போல் அடித்துக் கொண்டது.
"பாருங்கள்! இப்போதெல்லாம் ரயிலில் தனியாகப் பிரயாணம் செய்வது அபாயம் என்று சொல்கிறார்களே! பெண்கள் வண்டியில் இன்னும் யாராவது பெண்கள் ஏறுவார்கள் என்று பார்த்தேன். ஒருவரும் ஏறவில்லை. ரயிலில் கொலைகூட நடக்கிறது என்று சொல்லுகிறார்கள். நானும் இந்த வண்டிக்கே வந்துவிடலாமா என்று பார்க்கிறேன். நீங்கள் மதராசுக்குத் தானே போகிறீர்கள்!" என்று கேட்டாள்.
எல்லையில்லாத உற்சாகத்துடன் நான், "ஆமாம்; மதராஸுக்குத்தான் போகிறேன். நீங்கள் பேஷாக இந்த வண்டிக்கே வரலாம். சாமான்களை கொண்டுவரச் சொல்லட்டுமா? ஏ, போர்ட்டர்!" என்றேன்.
"இப்போது வேண்டாம்; அடுத்த ஸ்டேஷனில் பார்த்துக்கொள்ளலாம்!" என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் இறங்கிச் சென்றாள்.
அவள் இறங்கிய உடனே, யாரோ ஒருவர் சடக்கென்று கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார். கையில் ஒரு பிரயாணப் பெட்டியும் வைத்துக்கொண்டிருந்தார். பெட்டியைப் பலகையில் வைத்து விட்டு என்னையும் போய் கொண்டிருந்த பெண்ணையும் இரண்டு மூன்று தடவை மாற்றி மாற்றிப் பார்த்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு "மன்னிக்க வேண்டும்! ஒரு வேளை இந்த வண்டி ரிஸர்வ் ஆகியிருக்கிறதோ?" என்றார்.
"ஆமாம்" என்று ஒரு பொய் சொல்லி அவரை இறங்கிப் போகச் சொல்லலாமா என்று என் மனத்தில் ஒரு கெட்ட எண்ணம் உதித்தது.
இதற்குள், கார்டு குழல் ஊதும் சத்தம் கேட்டது. ரயில் புறப்படுவதற்குள் அவள் வண்டியில் ஏறிவிடுகிறாளா என்று எட்டிப் பார்த்தேன். அந்த அழகிய ஒற்றை ரோஜாப்பூ கண்ணைக் கவர்ந்தது. அந்தப் பூவை அணிந்தவள் வண்டியில் ஏறியதும், ரயிலும் நகர்ந்தது.
என் வண்டியில் ஏறிய மனிதர் "அப்பா! பயங்கரம்!" என்றார். அவரை ஏறிட்டுப் பார்த்தேன். படித்த நாகரிக மனிதராகக் காணப்பட்டார். வயது நாற்பது இருக்கும். ஐரோப்பிய உடை தரித்திருந்தார். அவருடைய கண்கள் ரயிலின் அபாய அறிவிப்பு விளக்கைப் போல் சிவப்பாக ஜொலித்தன.
சட்டைப் பையிலிருந்து ஒரு புட்டியை எடுத்து அதிலிருந்த பானத்தைக் கடகடவென்று வாயில் விட்டுக் கொண்டு குடித்தார்.
"ஐயோ! என்ன வெப்பம்! மரண தாகம் எடுத்துவிட்டது!" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார்.
பிறகு, என்னை நோக்கி, "அந்த அற்புதத்தைப் பார்த்தீரா?" என்றார்.
"எந்த அற்புதத்தை?" என்று கேட்டேன்.
"இந்த ஒற்றை ரோஜாப் பூவைத்தான்!" என்றார்.
"அதில் அற்புதம் என்ன?" என்று சிறிது கோபமான குரலில் கேட்டேன்.
"அற்புதம் என்னவா! ஆம், உமக்குத் தெரியாது. தெரிகிறதற்கு நியாயம் இல்லை. அந்த ஒற்றை ரோஜாப் பூவிலேதான் என் உயிர் இருக்கிறது?" என்று சொல்லிவிட்டு, ஒரு விகாரமான புன்னகை புரிந்தார்.
அவர் ஏதோ அநுசிதமான பரிகாசம் செய்யப் போகிறார் என்று எண்ணினேன். ஆகையால் ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்தது.
"இன்னமும் எனக்குப் புரியவில்லை!" என்று கடுமையான குரலில் கூறினேன்.
"ஆமாம்; அந்த ஒற்றை ரோஜாப்பூவில்தான் என் உயிர் இருக்கிறது. ஆகையினாலே மூன்று நாளாகியும் அது வாடாமலிருக்கிறது!" என்றார்.
நான் சிறு பிள்ளையாக இருந்த போது, ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு தடவை எங்கேயோ பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தேன். வாத்தியார் பிரம்பினால் சுளீர் என்று முதுகில் அடித்தார். அச்சமயம் என் தலையிலிருந்து ஆயிரம் மின்னல்கள் கிளம்பி வெளியில் சென்றது போலத் தோன்றியது. அத்தகைய உணர்ச்சி இப்போதும் உண்டாயிற்று. அந்த ஒற்றை ரோஜாப்பூ சிறிதும் வாடாமலிருப்பதின் அதிசயத்தை அதுவரையில் நான் எண்ணிப் பார்க்கவில்லை. அது நிஜ ரோஜாப் பூவாயிருக்க முடியாது; நிஜ ரோஜாவைப் போல் அபூர்வ வேலைப்பாட்டுடன் செய்த செயற்கை ரோஜாப் பூவாகத்தான் இருக்க வேண்டும். அதனால் என்ன! நிஜ ரோஜாப் பூவுக்குப் பதில் செயற்கை ரோஜாப் பூவை வைத்துக் கொள்வதில் என்ன தவறு? உடனே அவளுடைய தந்த வர்ணக் கழுத்தில் அணிந்திருந்த இரட்டை வட முத்துமாலை என் கவனத்துக்கு வந்தது. அதுவும் செயற்கை முத்துமாலைதான். அதானால் என்ன? அவர்களுடைய கையில் அணிந்திருந்த இரண்டு அழகிய சங்கு வளையல்களும் என் நினைவுக்கு வந்தன. தங்கத்தினாலும் வைரத்தினாலும் மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்களினாலும் ஆபரணங்களைச் செய்து சில ஸ்திரீகள் போட்டுக் கொள்கிறார்கள். அதனால் அவர்களுடைய அழகு அதிகமாகி விடுகிறதா? அவலட்சணந்தான் அதிகமாகிறது!...
இம்மாதிரிச் சிந்தனையில் நான் ஆழ்ந்திருந்தபோது அந்த மனிதர் தொண்டையைக் கனைத்துக் கொண்டு, "இது இரண்டாம் வகுப்பு வண்டியா?" என்று கேட்டார்.
"ஆமாம்!" என்றேன்.
"அதுதானே பார்த்தேன்! என்னிடம் முதல் வகுப்பு டிக்கெட் இருக்கிறது. திண்டுக்கல்லில் முதல் வகுப்பு வண்டிக்குப் போய்விடுகின்றேன்" என்றார்.
உடனே எனக்கு ஒரு மகிழ்ச்சி உண்டாயிற்று. அதை அவரும் தெரிந்துகொண்டார். "அதற்குள் உமக்கு ஒரு எச்சரிக்கை செய்துவிட விரும்புகிறேன்."
"என்ன எச்சரிக்கை?" என்று கேட்டேன்.
"அந்த ஒற்றை ரோஜாப் பூக்காரிப் பற்றித்தான். அவளுடைய ஊர், பெயர் உமக்குத் தெரியுமா?" என்றார்.
"தெரியாது. தெரிந்துகொள்ள விரும்பவும் இல்லை!" என்றேன்.
ஆனாலும் அந்த மனிதர் விடவில்லை. "அவள் பெயர் மனோகரி; அவளுடைய ஊர் கொழும்பு!" என்றார்.
மனோகரி என்ற பெயரைக் கேட்டதும் என் உள்ளம் பூரித்தது. என்ன அழகான பெயர்! 'மனோகரி', 'மனோகரி' என்று இரண்டு மூன்று தடவை வாய்க்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டேன்.
கொழும்பு நகரைப் பற்றி நான் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், பார்த்ததில்லை. நவநாகரிகத்தில் சிறந்த அந்த நகரத்திலேதான் இத்தகைய பெண் பிறந்து வளர்ந்திருக்கக்கூடும். அதில் ஆச்சரியம் என்ன?
அந்த மனிதருடைய பேச்சைக் கேட்பதில் எனக்கு ஏற்பட்டிருந்த அருவருப்பு மாறிவிட்டது. திண்டுக்கள் ஸ்டேஷன் வருவதற்குள் அவரிடமிருந்து அந்தப் பெண்ணைப் பற்றிக் கூடிய வரையில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசையும் உண்டாகிவிட்டது.
அடடா! அந்த ஆசையின் விளைவு என்ன கோரபயங்கரம்! முதலில் நினைத்தபடியே அவருடன் நான் பேச்சுக் கொடுக்காமல் இருந்திருக்கக் கூடாதா?
"உங்களுக்கும் கொழும்புதான் போலிருக்கிறது. அந்தப் பெண் கொழும்பில் உங்கள் அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவளோ?" என்று கேட்டு விட்டேன்.
உடனே அவர் தம்முடைய கதையை ஆரம்பித்தார். பயங்கரமான விஷயங்களைப் படிக்க விருப்ப மில்லாத வாசகர்கள் இந்தப் பகுதியை இங்கேயே விட்டுவிட்டு, அடுத்த பகுதியிலிருந்து படிக்கத் தொடங்குவது நலம்.
அவர் கூறியதாவது:
"அவளும் நானும் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அல்ல. கொழும்பு நகரம் மிகப்பெரியது. அதில் நான் ஒரு பக்கத்திலும் அவள் ஒரு பக்கத்திலும் இருக்கிறோம். கண்டியிலிருந்து கொழும்புக்கு வரும் ரயிலில்தான் அவளை முதலில் சந்தித்தேன். அந்தப் பாதையில் வரும் போது இரு பக்கத்திலும் உள்ள அழகிய காட்சிகளைப் பற்றிப் பேசாவிட்டால் நெஞ்சு வெடித்துவிடும்! நீர் இலங்கைக்கு வந்ததில்லை. வந்திருந்தால், கண்டி-கொழும்புப் பாதையில் பிரயாணம் செய்திருந்தால், உமக்கு நான் சொல்வது விளங்கும். அவ்வளவு அழகான இயற்கைக் காட்சிகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது."
"நாங்கள் ஏறியிருந்த வண்டியில் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை. ஆகையால், அவளுடனே நான் பேச வேண்டியதாயிற்று. அவளும் உற்சாகமாகவே பேசிக்கொண்டு வந்தாள். கொழும்பு ஸ்டேஷன் சமீபத்ததும் ஒருவருடைய விலாசத்தை ஒருவர் கேட்டுத் தெரிந்துகொண்டோ ம். அவளுடைய வாசம் வெள்ளவத்தை என்று தெரிந்துகொண்டேன். மதராஸுக்கு மாம்பலம் எப்படியோ, அப்படி கொழும்புக்கு வெள்ளவத்தை. தன்னுடைய வீட்டுக்கு ஒரு நாள் வரும்படி கேட்டுக்கொண்டாள். 'அடுத்த ஞாயிற்றுக்கிழமை வருகிறேன்,' என்று ஒப்புக்கொண்டேன். அந்தப்படியே மறு ஞாயிற்றுக்கிழமை வெள்ளவத்தை சென்று, அவளுடைய வீட்டைத் தேடிக் கண்டு பிடித்தேன். நான் போனபோது அவள் வீட்டில் இல்லை. வேலைக்காரன் ஒருவன் இருந்தான். 'இப்போது வந்து விடுவார்கள்; உட்காருங்கள்!' என்றான். வீட்டுத் தாழ்வாரத்தில் போட்டிருந்த சாய்மான நாற்காலி ஒன்றில் அமர்ந்தேன். கடற்காற்று சுகமாக வந்து கொண்டிருந்தது. வீட்டு வாசலில் இருந்த சிறிய தோட்டத்தில் புஷ்பச் செடிகளும் அலங்கார குரோட்டன்ஸ் செடிகளும் கொழு கொழுவென்று வளர்ந்திருந்தன! அவற்றில் ஒரே ஒரு ரோஜாச் செடியும் இருந்தது. அந்தச் செடியில் ஒற்றை ரோஜா ஒன்று மலர்ந்தது. 'நான் தான் புஷ்பங்களின் ராஜா' என்று பறையறைந்து கொண்டிருந்தது."
"நேரமாக ஆக என் மனத்தில் ஒரு பதை பதைப்பு ஏற்பட்டது. 'இது யார் வீடோ , என்னவோ? அந்தப் பெண்ணுக்குச் சொந்தக்காரர்கள் எப்படிப் பட்டவர்களோ? அவள் அழைத்தாள் என்று நாம் வந்துவிட்டோ மே! இது சரியான காரியமா?' என்ற எண்ணங்கள் தோன்றி என் உள்ளத்தைக் குழப்பின."
"சிறிது நேரத்துக்கெல்லாம் மனோகரி வந்தாள்! என்னைப் பார்த்ததும் அவள் "வாருங்கள்! வாருங்கள், நீங்கள் வருவதாகச் சொன்னதை மறந்து விட்டேன்" என்றாள். பிறகு, அவளுடன் வந்தவருக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தாள். பிறகு, என்னை உள்ளே அழைத்துப்போய், விருந்தினரை வரவேற்பதற்குரிய விசாலமான முன் அறையில் உட்கார வைத்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் அவளும் வந்து எதிரில் உட்கார்ந்து கொண்டாள். வேலைக்காரன் டீ கொண்டு வந்து கொடுத்தான். நான் டீ சாப்பிட்டுக் கொண்டேயிருக்கையில் என் பின்னால் வந்து யாரோ நிற்பதை உணர்ந்தேன். உடனே என் மண்டையில் 'படீர்' என்று ஒரு அடி விழுந்தது. அவ்வளவுதான்; செத்து விழுந்துவிட்டேன்.... ஆமாம், ஐயா, ஆமாம்! செத்துதான் விழுந்தேன். உமக்கு நம்பிக்கைப்படாதுதான். கதையைப் பூராவும் கேட்டுவிடும். செத்து விழுந்த என்பேரில் ஒரு கம்பளத்தைப் போட்டு மூடினார்கள். நான் செத்துப் போய்விட்டேன் என்று எனக்கு நன்றாகத் தெரிந்தது. ஆனால், என் உயிர் மட்டும் அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தது. என் உடம்பை இவர்கள் என்ன தான் செய்யப்போகிறார்கள் என்று அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் தான் அங்கேயே வட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அன்று நள்ளிரவில் இந்தப் பெண்ணும் அவளோடு வந்த ஆடவனும் என் உடலைத் தூக்கிக் கொண்டு போனார்கள். தோட்டத்தில் ஒரு பெரிய குழி வெட்டப்பட்டிருந்தது. அதில் என் உடம்பைப் போட்டுப் புதைத்தார்கள். எல்லாம் முடிந்ததும் மனோகரி ஒரு பெரு மூச்சு விட்டு "ஐயோ! பாவம்!" என்றாள்; அவள் கண்களில் கண்ணீர் துளிகளும் வந்தன. எனக்கு என்னவோ பரமதிருப்தி ஆகிவிட்டது. பிறகு, அவர்கள் கொஞ்ச தூரத்தில் பூச்சட்டியில் இருந்த ஒரு ரோஜாச் செடியைப் பெயர்த்து எடுத்து, என்னைப் புதைத்த இடத்தின் மேல் அதை நட்டுவிட்டார்கள். மனோகரி ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து ஊற்றினாள். அந்தத் தண்ணீரோடு அவளுடைய கண்ணீர் துளிகளும் கலந்ததாக எனக்குத் தோன்றியது."
"என் உயிருக்கு இன்னமும் அவ்விடத்தை விட்டுப் போக மனமில்லை. அந்தக் குழியையும் அதன் மேலிருந்த செடியையும் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தது. கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த ரோஜா செடியில் ஒரு மொட்டு விட்டது. அந்த மொட்டுக்குள் போய் என் உயிர் புகுந்து கொண்டது. மொட்டு மலர்ந்து பூவாயிற்று. நானும் அதிலேயே காத்திருந்தேன். மனோகரி அந்த ரோஜாவைப் பறித்துத் தன் கூந்தலில் சூடிக்கொள்வாள் என்ற ஆசையோடு காத்திருந்தேன். அம்மம்மா! அப்படி காத்திருக்கும்போது ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாக இருந்தது. கடைசியில், அவள் வந்து, தன் தங்கக் கரத்தினால் அந்த ரோஜாவைப் பறித்துத் தன் தலையிலே சூடிக்கொண்டாள். அப்புறந்தான் என் ஆத்மா சாந்தி அடைந்தது."
"தம்பி! உன்னைப் பார்த்தால் நல்ல அறிவாளியாகத் தோன்றுகிறது. ஆகையால், நீயே ஒருவேளை ஊகித்துக் கொண்டிருப்பாய். அவர்கள் வீட்டுத் தாழ்வாரத்தில், சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டு சிறிது நேரம் தூங்கிவிட்டேன். அப்போது நான் கண்ட கனவையே இத்தனை நேரம் சொன்னேன். மனோகரி திரும்பி வந்த பிறகு அப்படியெல்லாம் என்னை ஒன்றும் செய்துவிடவில்லை. மரியாதையாகப் பேசித் திருப்பி அனுப்பினாள். அதன் பிறகு அடிக்கடி நாங்கள் சந்திப்பதுண்டு. இருந்தபோதிலும், அவளுடைய கூந்தலில் ஒற்றை ரோஜாப்பூவைக் கண்டால் மாத்திரம் எனக்கு ஒரு திகில் உண்டாகி விடுகிறது. அன்று கண்ட கனவு நினைவுக்கு வந்துவிடுகிறது..."
அம்மனிதர் பாதிக் கதை சொல்லிக் கொண்டு வந்த போது, அவர் பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலிருந்து தப்பி வந்தவராயிருக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். அவரிடம் இவ்வண்டியில் தனியாக மாட்டிக் கொண்டோ மே என்று கொஞ்சம் கவலையாகவும் இருந்தது. அவ்வளவும் கனவு என்று அவர் கதையை முடித்தபோது என்னையறியாமலே பெருமூச்சு விட்டேன். இவர் ஒரு விளையாட்டு மனிதர் என்று முடிவு செய்து கொண்டேன். ஆயினும், இப்படியெல்லாம் பயங்கரமாக ஏன் கற்பனை செய்ய வேண்டும்? அவருடைய மூளையில் ஏதேனும் கொஞ்சம் கோளாறு இருந்தாலும் இருக்கலாம்.
ரயில் வண்டி தண்டவாளம் மாறும் கடபுட சத்தம் கேட்கலாயிற்று. திண்டுக்கல் ஸ்டேஷனுக்குள் வண்டி போய்க் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்.
"இதோ பாரும்! நான் திண்டுக்கல்லில் இறங்கி, முதல் வகுப்பு வண்டி ஏதாவது காலியிருக்கிறதா என்று பார்த்து வருகிறேன். அது வரையில் இந்தப் பெட்டி இங்கேயே இருக்கட்டும். ஒரு விஷயம்; அந்தப் பெண் உம்முடன் பேச மறுபடியும் வருவாள் என்று தோன்றுகிறது. அவள் கூந்தலில் உள்ள ஒற்றை ரோஜாப் பூவை எப்படியாவது நீர் எடுத்து வைத்திருந்து என்னிடம் ஒப்பித்தால், ஆயிரம் ரூபாய் உமக்குக் கொடுக்கிறேன். இல்லை; ஆயிரம் ரொம்பக் குறைவு, இரண்டாயிரம் ரூபாய் தருகிறேன். சரிதானே! ஆனால் அவளுக்கு மட்டும் தெரியக் கூடாது. தெரிந்தால் உயிருக்கே ஆபத்து தெரிந்ததா?"
இந்த மனிதருக்கு மூளைக் கோளாறு தான்! சந்தேகமில்லை, பெட்டியையும் எடுத்துக் கொண்டு தொலைந்து போகக் கூடாதோ! மறுபடியும் இவர் இங்கேயே வருவதாயிருந்தால் நாம் இறங்கி வேறு வண்டி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்று தீர்மானித்தேன்.
திண்டுக்கல் ஸ்டேஷனில் வண்டி நின்றது. "சிறுமலை வாழைப்பழம்", "சாம்பார் சாதம்" "பிரியாணி" என்னும் கூக்குரல்கள் காதைத் துளைத்தன. அந்த மனிதர் இறங்கி அவசரமாகப் போனார். பெட்டியை வைத்து தொலைத்து விட்டுதான் போனார். அந்தப் பெண் ஒரு வேளை இந்த வண்டியில் ஏறிக் கொள்ளலாம் என்று வந்தால், இந்தப் பெட்டி ஒரு தடையாயிருக்கலாமல்லாவா? அவர் கூறியவற்றில் ஏதேனும் கொஞ்சமாவது உண்மையிருக்குமா? அந்தப் பெண்ணின் ஊர் கொழும்பு, அவள் பெயர் மனோகரி என்பவையேனும் நிஜமாயிருக்குமோ?
அதிக நேரம் நான் யோசிக்க முடியவில்லை. அவளே வந்து விட்டாள். என் வண்டியின் அருகில் வந்து நின்றாள். நானும் மரியாதைக்காகக் கீழே இறங்கினேன்.
"இங்கே ரயில் எத்தனை நேரம் நிற்கும்?" என்று கேட்டாள்.
"ஐந்து நிமிஷந்தான் நிற்கும்."
"அப்படியானால் என் சாமான்கள் இங்கே ஏற்ற முடியாது. திருச்சினாப்பள்ளியில் தான் மாற்ற வேண்டும். இந்த வண்டியில் வந்து ஒருவர் ஏறினாரே, அவர் இறங்கிப்போவதைப் பார்த்தேன். அவர் என்னைப் பற்றி ஏதாவது சொன்னாரா?" என்றாள்.
"ஆம் ஏதேதோ சொன்னார். அதையெல்லாம் நான் பொருட்படுத்தவில்லை."
"அவர் என்னதான் சொன்னார்?" என்று கேட்டாள்.
"உங்கள் ஊர் கொழும்பு என்றும், பெயர் மனோகரி என்றும் சொன்னார். உங்களை அவருக்குப் பழக்கம் உண்டு என்றும் கூறினார்."
"அவ்வளவு வரை அவர் கூறியவை உண்மைதான். வேறு ஒன்றும் சொல்லவில்லையா?"
"இன்னும் ஏதோ உளறினார்! அதையெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்?"
"ஆம், என்னைப் பற்றி ஏதாவது அவதூறு சொல்லியிருப்பார். அதையெல்லாம் நீங்கள் நம்பாததற்கு ரொம்ப வந்தனம்! நான் பயந்தது உண்மை ஆயிற்று. அங்கே புஷ்கோட் மனிதர்கள் மூன்று பேர்; இங்கே ஸுட் போட்ட ஒருவர். ஆக, நாலு பேர் என்னைத் தொடர்ந்து இந்த வண்டியில் வருகிறார்கள். நீங்கள் தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்!"
"எதற்காக உங்களைத் தொடர்ந்து வருகிறார்கள்? எதற்காக நீங்கள் பயப்பட வேண்டும்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! உண்மையில் அபாயம் ஏற்படுவதாயிருந்தால், சும்மா இருந்து என்ன பயன்? ரயில்வே போலீஸாரிடம் சொல்லலாமே!" என்றேன்.
"வேண்டாம், வேண்டாம்! போலீஸாரிடம் மட்டும் சொல்ல வேண்டாம். அதைக் காட்டிலும்..."
இவ்விதம் கூறிய மனோகரி, பேச்சை நடுவில் நிறுத்தி, என் வண்டிக்குள் எட்டிப் பார்த்தாள். அங்கே வைத்திருந்த பெட்டி அவளுடைய கவனத்தை அடியோடு கவர்ந்துவிட்டதாகத் தெரிந்தது. அதை உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றாள். அப்போது அந்த அழகிய பால் வடியும் முகத்தில் பீதியின் சாயை பரவியதைப் பார்த்தேன். எனக்கு அவளிடம் பரிதாபமும் உண்டாயிற்று; ஒரு வித வியப்பும் உண்டாயிற்று.
"ஆமாம்; அது அந்த மனிதருடைய பெட்டிதான். பிற்பாடு வந்து எடுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்!" என்றேன்.
"திருச்சியில் உங்கள் வண்டியில் வந்து ஏறிக் கொள்ளலாம் என்று எண்ணியிருந்தேன். அதுவும் முடியாது போலிருக்கிறது!" என்றாள்.
"ஏன் முடியாது? அந்த ஆசாமி மறுபடி வந்தால் அவரை விரட்டியடித்து விடுகிறேன். அல்லது இரண்டு பேரும் வேறொரு வண்டியைப் பார்த்து ஏறுவோம். மூன்றாம் வகுப்பில் வேண்டுமானாலும் ஏறிக்கொண்டு போவோம். நீங்கள் கொஞ்சங்கூட பயப்பட வேண்டாம். நான் இருக்கும்போது உங்களுக்கு ஒருவித அபாயமும் வருவதற்கு விடமாட்டேன்!" என்றேன்.
"சரி, எல்லாவற்றுக்கும் திருச்சி ஜங்ஷனில் யோசித்துக் கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு, மனோகரி திரும்பி அவள் வண்டிக்குப் போனாள்.
அவள் தலையிலிருந்த ஒற்றை ரோஜாப்பூ மீண்டும் என் கண்ணில் பட்டது. இந்தத் தடவை அது ஏதோ மர்மம் நிறைந்த பொருளாக எனக்குத் தோன்றியது.
பெட்டியை எடுத்துக்கொண்டு போக அந்த மனிதர் வரவேயில்லை. ரயில் புறப்பட்டுவிட்டது. கொந்தளிக்கும் கடலில் அலைகள் எழுந்து விழுவது போல், என் மனத்தில் எண்ண அலைகள் வந்து மோதின.
மனோகரியும் அவளைத் தொடர்ந்து அதே ரயிலில் வருவதாக அவள் கூறிய நான்குபேரும் அந்த அலைகளில் புரண்டு புரண்டு எழுந்தார்கள்.
ஏதோ ஒரு மர்மச் சுழலில் நான் சிக்கிக் கொண்டு விட்டதாகத் தோன்றியது. அது என்னவாயிருக்குமென்று எவ்வளவோ யோசித்தும் தலைகால் ஒன்றும் புரியவில்லை.
அந்தப் பெண் ஏதோ ஒரு சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் நிச்சயம். எது எப்படியிருந்தாலும் அவளுக்கு ஆதரவாக நின்று, உதவி செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அந்த முயற்சியில் உயிரையே கொடுக்க வேண்டியிருந்தாலும் சரிதான். பாபநாசம் அருவியில் விழுந்து உயிர் துறந்து அநாதைப் பிணமாவதைக் காட்டிலும் இப்படிப்பட்ட ஒரு நிராதரவான பெண்ணுக்கு உதவி செய்து உயிரை விடுவது மேல் அல்லவா? ஒரு வேளை, அதற்காகவே தான் கடவுள் பாபநாசத்தில் நம்முடைய புத்தியை மாற்றி அருளினாரோ என்னவோ? ஆனால் மனோகரி கொஞ்சம் நம்மிடம் அதிக நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விவரமாகச் சொன்னால், நம்முடைய அறிவைப் பூரணமாகப் பயன்படுத்தி அவளுக்கு உதவி செய்யப் பார்க்கலாம். எல்லாவற்றுக்கும் திருச்சினாப்பள்ளி வரட்டும்; பார்ப்போம். கேட்டால் சொல்லாமலா போகிறாள்? இப்படியெல்லாம் நான் எண்ணிக்கொண்டிருக்கையில் அந்த ஒற்றை ரோஜாப்பூ மட்டும் என் மனக்கண் முன்னால் இடைவிடாமல் தோன்றிக் கொண்டே இருந்தது.
திருச்சி ஜங்ஷன் வந்தது. ஐந்தாம் நம்பர் பிளாட்பாரத்தில் இன்ன வண்டி வந்திருக்கிறது என்றும், ஆறாம் நம்பர் பிளாட்பாரத்திலிருந்து இன்ன வண்டி புறப்படப்போகிறது என்றும் ஒலிப்பெருக்கி அலறிக்கொண்டிருந்தது.
வண்டியிலிருந்து இறங்கி நின்றேன். என் கண்கள் இரண்டு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தன. பெட்டிக்கு உடைய மனிதர் வருகிறாரோ என்று ஒரு பக்கம் பார்த்தன; ஒற்றை ரோஜாப் பூவை இன்னொரு பக்கம் ஆவலுடன் எதிர் பார்த்தன.
முதல் வகுப்புப் பெண்கள் வண்டியிலிருந்து அவளுடைய முகம் எட்டிப் பார்த்தது.
பிறகு அவள் வண்டியிலிருந்து இறங்கினாள். பிளாட்பாரத்தில் அதிக வெளிச்சமில்லாதிருந்த ஓர் இடத்துக்குப் போய் நின்றாள். அப்படியும் இப்படியும் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
சற்று நேரம் நான் பொறுத்துப் பார்த்துவிட்டு இறங்கிப் போனேன். அவளருகில் சென்று "என்ன தீர்மானம் செய்தீர்கள்?" என்று கேட்டேன்.
"இன்னமும் யோசித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை."
"எனக்கு என்னவோ, நீங்கள் அநாவசியமாகப் பயப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது."
"அப்படித்தான் எனக்கும் ஒரு சமயம் தோன்றுகிறது. இன்னொரு சமயம்,... அந்த மூன்று புஷ்கோட் ஆசாமிகளை நினைத்தால் பயமாயிருக்கிறது."
"எதுவாயிருந்தாலும் இருக்கட்டும். உங்களுக்கு அப்படிப் பயமாயிருந்தால் என் வண்டியில் வந்து ஏறிக் கொள்ளுங்கள்..."
"வந்துவிடலாம். ஆனால், அந்தப் பெட்டிக்காரர் வந்து, பெட்டியை எடுத்துக்கொண்டு போய் விட்டாரா?"
"இன்னுமில்லை!"
"அதனால்தான் யோசிக்கிறேன். வண்டி புறப்படும் சமயத்தில் அவர் திடீரென்று வந்து ஏறிக் கொண்டால்?"
"ஏறிக்கொண்டால் என்ன, நான் இருக்கும்போது?"
"அதைவிடப் பெண்கள் வண்டியில் நான் தனியாக இருப்பதே நல்லது."
"உங்களுக்கு என்னதான் தோன்றுகிறது? எதற்காக இவர்கள் எல்லோரும் உங்களைத் தொடர்கிறார்கள்? ஒரு காரணமும் ஊகிக்க முடியவில்லையா?"
"மதுரை ஜங்ஷனில் அவர்களுடைய பேச்சில் இரண்டொரு வார்த்தை என்காதில் விழுந்தது."
"ஆ! அதிலிருந்து ஏதாவது ஊகிக்க முடிந்ததா?"
"ஏதோ விலை உயர்ந்த வைரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள். அவர்கள் சுங்க இலாகா அதிகாரிகள் என்று தோன்றுகிறது. நான் ஏதோ வைரங்களை ஒளித்து எடுத்துப் போகிறேன் என்று அவர்கள் சந்தேகிக்கிறார்கள் போலிருக்கிறது" என்றாள் மனோகரி.
இதைக் கேட்டு நான் சிரித்து விட்டேன்.
மனோகரியும் சிரித்தாள்; அவள் சிரித்த அந்தச் சிரிப்பு என் காதில் கிண்கிணி நாதமாக ஒலித்தது.
"என்ன முட்டாள் தனம்! நீங்கள் தான் அது விஷயத்தில் மிகப் பரிசுத்தமாக இருக்கிறீர்களே! ஒரு குன்றிமணி எடை தங்கமோ ஒரு சிறிய மூக்குத் திருகு வைரமோ உங்கள் உடம்பில் இல்லையே! அதனாலேயே உங்களை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. மதராஸில் சில பணக்கார வீட்டு ஸ்திரீகள் உடம்பெல்லாம் வைரமாக வருகிறார்கள். அந்த அவலட்சணத்தைப் பார்த்துக்கூசிய என் கண்களுக்கு உங்களைப் பார்த்தால்...சேச்சே! என்னமோ சொல்லிக் கொண்டு போகிறேனே!"
"எல்லாம் சரியாகத்தான் சொல்கிறீர்கள். பாக்கியையும் சொல்லி முடியுங்கள்? ஆ! அதோ!-"
திரும்பிப் பார்த்தேன். என் வண்டிக்குப் பக்கத்தில் இருவர் வந்து நின்றார்கள். ஒருவர் பெட்டியை வைத்துவிட்டுப் போனவர். இன்னொருவர், புது மனிதர்.
பெட்டிக்குரியவர் இன்னொருவரிடம் ஏதோ சொன்னார்.
இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள்! பிறகு அங்கிருந்து அகன்றார்கள்.
பெட்டி, வண்டிக்குள்ளேயே இருந்தது.
ஆர்வத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மனோகரி, "நான்கு பேருடன் இன்னொருவரும் சேர்ந்தாயிற்று!" என்றாள்.
அவளுடைய, அழகியமுகத்தில் பீதி ததும்ப அங்குமிங்கும் அவள் மிரண்டு பார்த்தபோது நான்கு புறமும் வேடுவர்களால் சூழப்பட்ட மானின் மருண்ட பார்வை என் நினைவுக்கு வந்தது. சுற்றிலும் வலைகள் நெருங்கி வருவதை உணர்ந்த மீன் துவண்டு துடிப்பதைப் போல் அவளுடைய நயனங்கள் துடித்துக் கொண்டிருந்தன.
எனக்கும் சிறிது கலக்கமாகத் தானிருந்தது. ஆயினும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. அவளுக்குத் தைரியம் கூறவும், கூடுமான உதவி செய்யவும் விரும்பினேன்.
"ரயில்வே ஜங்ஷனில் எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள், எல்லாரும் உங்களைத் தேடுவதாக ஏன் எண்ணிக்கொள்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"காரணமில்லாமல் பயப்படும்படியான அவ்வளவு பெரிய அசடு என்று என்னைப் பார்த்தால் தோன்றுகிறதாக்கும்."
"மன்னிக்க வேண்டும். அப்படி நான் சொல்லவில்லை. அவர்கள் - தங்களைத் தேடி வருகிறவர்கள் - மூடர்களாக இருக்கலாம் அல்லவா?"
"அவர்கள் எல்லாரையுமே மூடர்கள் என்று நான் ஒத்துக் கொள்ள முடியாது."
"ஏன்?"
"அவர்களில் ஒருவர் என் தகப்பனார்!"
"என்ன! என்ன!"
"ஆமாம் கடைசியாக வந்தவர் என் தகப்பனார். அவர் பெயர் எழுதிய பெட்டிதான் தங்கள் வண்டியில் இருந்தது. திண்டுக்கல்லில் இறங்கியவர் என் தகப்பனாரின் உதவிக்கு வந்தவராயிருக்க வேண்டும்."
"எனக்கு ஒன்றும் புரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டிலே விட்டது போலிருக்கிறது. தங்கள் தகப்பனார் தங்களை எதற்காகத் தேடி வரவேண்டும்?" என்றேன்.
"மகளிடம் தகப்பனாருக்கு இருக்கக்கூடிய வாஞ்சையினால்தான். 'நான் என் காதலனுடன் இந்தியாவுக்குப் போகிறேன். கவலைப்பட வேண்டாம்' என்று அப்பாவுக்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு வந்தேன். உடனே புறப்பட்டு ஓடி வந்திருக்கிறார். இவ்வளவு சீக்கிரம் வந்துவிடுவார் என்று நான் நினைக்கவில்லை. ஆகாய விமானம் ஒன்று இருக்கிறது என்பதையே மறந்துவிட்டேன்."
ஆகாயம் இடிந்து என் தலையில் விழுந்தது போலிருந்தது. ஆனாலும் அதில் என்ன வியப்பு? இப்படிப்பட்ட அழகிக்கு ஒரு காதலன் இருப்பதில் வியப்பில்லைதான்! கொம்புத் தேனுக்கு முடவன் ஆசைப்பட்டு ஆவதென்ன?
"அப்படியானால், நான் விடைபெற்றுக் கொள்ளட்டுமா?" என்றேன். அப்பொழுது என்னை அறியாமலே என் குரலில் ஒருவித ஏக்கம் தொனித்தது.
"நீங்கள் உதவி செய்வீர்கள் என்று நினைத்தேன். என்னைக் கைவிட்டுவிடப் போகிறீர்களா?"
"நான் என்ன உதவி செய்ய முடியும், உங்கள் தந்தையே வந்திருக்கும் போது?"
"ஓர் உதவி உங்களால் செய்ய முடியும்."
"முடிந்தால் அவசியம் செய்கிறேன்."
"சிறிது நேரத்துக்கு என் காதலனாக நடிக்க வேண்டும். அதாவது, என் தந்தையின் முன்னிலையில்..."
இதெல்லாம் நிஜமாக நடக்கிறதா, அல்லது ஆங்கில நாவல் ஆசிரியர் வோட் ஹவுஸின் கதை படித்துக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது.
"முன் பின் காதலனாக நடித்து எனக்குப் பழக்கம் இல்லை. முயன்று பார்க்கிறேன். ஆனால், இதெல்லாம் எதற்காக? உங்கள் அசல் காதலன் எங்கே?"
"அசல் காதலனுமில்லை; அப்பீல் காதலனுமில்லை. அப்பாவுக்காக அப்படி வெறுமனே எழுதி வைத்துவிட்டு வந்தேன். இப்போது அதை உண்மைப்படுத்த வேண்டியிருக்கிறது. தங்களைத்தான் நம்பியிருக்கிறேன்."
"நம்பினவர்களை நான் கைவிடுவதில்லை. என்னாலியன்ற உதவி செய்கிறேன், பரிசு என்ன தருவீர்கள்?"
"பரிசா? என்னிடம் என்ன இருக்கிறது கொடுப்பதற்கு?" என்றாள் மனோகரி.
"தங்கள் தலையில் சூடியிருக்கும் ரோஜாப்பூவைக் கொடுத்தால் போதும். இன்றைய சம்பவத்தின் ஞாபகார்த்தமாக வைத்துக் கொள்வேன்..."
மனோகரியின் பால்வடியும் முகத்தில் அப்போது ஒரு இலேசான நிழல் சாயை படர்ந்ததைக் கவனித்தேன். அப்போது என் உள்ள நிறைவிலும் ஒரு கள்ளம் புகுந்தது. இவள் உண்மையாக அபாயத்தில் சிக்கிக்கொண்டிருப்பவள்தானா? அல்லது எல்லாம் வெறும் நடிப்பா? ஒரு பெரிய கபட நாடகத்தின் அங்கமா?...
மனோகரி அந்த ஒற்றை ரோஜாவைத் தன் கூந்தலிலிருந்து எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு, "இது வெறும் வர்ணக் காகிதம். தங்களுடைய உதவிக்கு இதையா பரிசாகக் கொடுப்பது? தயவு செய்து மன்னியுங்கள். நான் மட்டும் பத்திரமாகச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தால் புத்தம் புதிய மணமுள்ள ரோஜா மலர்களை வாங்கி மாலையாகத் தொடுத்துத் தருகிறேன்!" என்றாள்.
எனக்கு மெய் சிலிர்த்தது. அவள் தன் தங்கள் கையினால் என் கழுத்தில் ரோஜாமாலை சூட்டுவதாகவே கற்பனை செய்துகொண்டு மகிழ்ந்தேன். உண்மையாகச் செய்யட்டும், செய்யாமற் போகட்டும். இவ்வளவு ரசனையுடன் பேசும் பெண்ணுக்காக என்னதான் செய்யக்கூடாது?
"தங்களைப் பத்திரமாகச் சென்னை கொண்டு போய்ச் சேர்ப்பது என் பொறுப்பு. சிறிதும் அதைப் பற்றிக் கவலை வேண்டாம்" என்றேன்.
இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஏழெடுப் பேர் எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்படி வருபவர்களில் இரண்டு பேர் போலீஸ்காரர்கள் என்பதும் தெரிந்தது.
எனக்குத் திக், திக் என்று அடித்துக் கொண்டது. ஆயினும் பக்கத்தில் மனோகரியிருப்பதை முன்னிட்டு மனத்தைத் தைரியப்படுத்திக் கொண்டேன்.
அவர்கள் எங்கள் அருகில் வருவதைப் பார்த்ததும் மனோகரி அவர்களை எதிர்கொள்பவளைப் போல் முன் நோக்கி நடந்தாள். நானும் சென்றேன். இருவரும் தூண் ஓரத்து நிழலிலிருந்து நல்ல வெளிச்சத்துக்கு வந்து விட்டோம்.
கைப்பெட்டிக்காரர் என்னைப் போலீஸ்காரர்களுக்குச் சுட்டிக் காட்டினார். "இந்த ஆள்தான்; இவனைக் கைது செய்யுங்கள்!" என்றார்.
"எதற்காக?" என்று மனோகரி, பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக முன்னால் நின்று கேட்டாள்.
"உன்னை உன் தகப்பனாருக்குத் தெரியாமல் ஏமாற்றி அழைத்து வந்ததற்காகத்தான்!"
"அது பொய்! நான் என் இஷ்டத்தினால் வந்தேன்!"
இப்படி அவர்கள் வாதமிட்டுக் கொண்டிருக்கும் போதே போலீஸார் இருவரும் என் இருபக்கத்திலும் வந்து நின்று, "மரியாதையாக வந்துவிடு!" என்றார்கள்.
நானும் மரியாதையாக அவர்களுடன் நடந்தேன். போலீஸ் விவகாரங்களில் சிக்கி வழக்கமில்லாதவனாதலால், ஒரு பக்கம் திகிலாயிருந்தது. மற்றொரு பக்கத்தில், மனோகரிக்காக இதைச் செய்கிறோம் என்ற திருப்தியும் ஏற்பட்டது. சீக்கிரத்தில் இந்தக் குழப்பம் நீங்கிவிடும்; நம்மைப் போலீஸார் ஒன்றும் செய்துவிட முடியாது என்று திடப்படுத்திக் கொண்டு நடந்தேன்.
ரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு என்னைக் கொண்டு போனார்கள். என்னுடைய பெட்டி படுக்கையும் கொண்டுவரப்பட்டன. 'புஷ்கோட்' மனிதர்கள் மூவரும் வந்து பெட்டி, படுக்கைகளைச் சோதனைப் போட்டார்கள். என்னையும் சோதித்தார்கள். துணிகளைக் கிழித்து மட்டும் பார்க்கவில்லை. மற்றபடி சாங்கோபாங்கமாகத் தேடினார்கள். என்னிடமிருந்து ஒன்றும் அகப்படவில்லை! அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகத் தெரிந்தது.
அன்றிரவு நான் தூங்கவில்லையென்று சொல்லவும் வேண்டுமா? என் எண்ணமெல்லாம் மனோகரியின் பேரிலேயே இருந்தது. அந்த ஒற்றை ரோஜாப்பூவின் ஞாபகமும் அடிக்கடி வந்தது.
காலை மூன்று மணி சுமாருக்கு என்னை விடுதலை செய்துவிட்டார்கள். பெரிய போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து, "தவறுதல் நடந்துவிட்டது. உம்மைப் பிடித்து வைப்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. அந்த முட்டாள்கள் உம்மைப் பிடித்து அடைத்தார்கள். அதற்காக ரொம்பவும் வருந்துகிறேன்!" என்றார்.
"அதனால் பாதகமில்லை; இது எனக்கு ஒரு நல்ல அநுபவம்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். காலை நாலு மணிக்கு திருச்சியிலிருந்து புறப்படும் பாஸஞ்சர் வண்டியில் ஏறிச் செல்லத் தீர்மானித்தேன். மறுபடியும் அதே பிளாட்பாரத்துக்குப் போனேன். மனோகரியும் நானும் நின்று பேசிக்கொண்டிருந்த அதே தூண் மறைவுக்கு மறுபடியும் சென்றேன். நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தூண் ஓரத்தில் அந்த ஒற்றை ரோஜாப்பூ - காகிதப்பூ - கிடந்தது. மனோகரி அதைக் கையில் எடுத்து எனக்கு காட்டிவிட்டு மறுபடியும் தலையில் வைத்துக் கொண்டாள் அல்லவா? சரியாக வைத்துக்கொள்ளவில்லை. ஆகையால், அது கீழே விழுந்து விட்டது. விழுந்ததை அவள் கவனிக்கவில்லை! ஆனால் நான் கவனித்தேன். இதற்குள் போலீஸார் நெருங்கிவிட்டபடியால் நாங்கள் இருவரும் முன்னோக்கிச் சென்றுவிட்டோம்....
அந்த ஒற்றை ரோஜாப் பூவை இப்போது ஆவலுடன் எடுத்து, என் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிக்கொண்டேன். சிறிது நேரத்துக்கெல்லாம் ரயிலும் வந்தது. அதில் ஏறிக்கொண்டேன். மனோகரி முதலியவர்கள் என்ன ஆனார்கள் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆவல் இல்லாமற்போகவில்லை. அது எப்படியும் பின்னால் தெரியும் என்று நிச்சயப்படுத்திக் கொண்டேன்.
ரயில் புறப்படும் சமயத்தில் அந்தக் கைப்பெட்டிக்காரர் பிளாட்பாரத்திற்கு ஓடி வந்து, அங்குமிங்கும் அலைந்தார். நான் அவரைக் கையைத் தட்டி அழைத்தேன். அவர் என்னைப் பார்த்ததும் ஆர்வத்துடன் அருகில் வந்தார். "பெரிய பிசகு நேர்ந்து விட்டது. மன்னிக்க வேணும். சென்னையில் தங்கள் விலாசம் என்ன? அங்கே வந்து எல்லாம் விவரமாகச் சொல்கிறேன்!" என்றார். என் விலாசத்தை அவருக்குத் தெரிவித்துவிட்டு, "எனக்குக் கொஞ்சங்கூட வருத்தம் இல்லையென்று மனோகரியிடம் சொல்லுங்கள்!" என்றேன்.
சென்னைக்குத் திரும்பி வந்து இரண்டு நாள் வரையில் என் அறையை விட்டு வெளிக் கிளம்பவில்லை. பத்திரிக்கைகளை மட்டும் ஆவலுடன் பார்த்தேன். ஒரு பிரபல சுதேச சமஸ்தான மகாராஜாவின் பிரசித்திப் பெற்ற-விலை உயர்ந்த வைரம் காணாமற் போய் விட்ட தென்றும், இலங்கைப் போலீஸார், சுங்க அதிகாரிகள் முதலியோர் அதைத்தேடி வருகிறார்கள் என்றும் பத்திரிக்கையின் ஒரு மூலையில் சிறிய செய்தி ஒன்று காணப்பட்டது.
அன்றிரவு என் அறைக் கதவை இறுகத் தாளிட்டுக் கொண்டு அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுத்தேன். அதைக் கோத்திருந்த நூலைப் பிரித்து விட்டுக் கையினால் தட்டினேன், மேஜை மீது டணார் என்று விழுந்தது.
'கண்ணைப் பறித்தது' என்று ஆசிரியர்கள் எழுதுவார்களே, என் வாழ்க்கையில் அன்றைக்குத்தான் அது உண்மையாயிற்று. அந்த மாதிரி விடிவெள்ளி, அவ்வளவு பெரிய வைரத்தை, கண்ணைப் பறிக்கும்படி ஒளி வீசிய வைரத்தை, நான் அன்று வரை பார்த்ததேயில்லை. அந்த வைரத்திலிருந்து வெளியான விதவிதமான வர்ண கிரணங்களைத்தான் என்னவென்று வர்ணிப்பது! பாபநாசத்தில் அருவி விழும் இடத்தில் நான் பார்த்த வான வில்லின் அதிசய வர்ண ஜாலங்களெல்லாம் இந்த அற்புத வைரத்தின் முன்னால் மண்டி போட்டு ஒளிப் பிச்சை கேட்க வேண்டியதுதான் என்று தோன்றியது.
வெகு நேரம் அந்த வைரத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மறுபடியும் முன்போல் அந்தக் காகித ரோஜாப் பூவுக்குள்ளேயே வைத்துத் தைத்தேன். பெட்டிக்குள் பத்திரப் படுத்தினேன்.
மறுநாள் நான் எதிர்பார்த்திருந்த மனிதர் வந்தார். தவறு நேர்ந்ததன் காரணங்களை விளக்கினார். அந்தப் பெண், "நான் என் காதலனோடு இந்தியாவுக்குப் போகிறேன்; என்னைத் தேட வேண்டாம்" என்று தகப்பனாருக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு அவருக்குத் தெரியாமல் வந்து விட்டாளாம். தகப்பனார் வைர வியாபாரியாம். "ஒரே ஒரு வைரம் மட்டும் எடுத்துப் போகிறேன். அது எனக்கு உங்கள் ஸ்ரீதனமாக இருக்கட்டும்" என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தாளாம். அந்த வைரம் ஒரு மகாராஜாவுக்குச் சொந்தமான விலையுயர்ந்த வைரம் என்றும், ஒன்றரை லட்சம் பெறுமானமானது என்றும் கூறினார். தகப்பனார் பெண்ணையும் வைரத்தையும் தேடிக் கொண்டு புறப்பட்டார். அவள் ரயிலில் பிரயாணம் செய்கிறாள் என்று அறிந்து முன்னதாக விமானத்தில் திருச்சிக்கு வந்து விட்டாராம். இந்த மனிதரையும் தன்னுடைய ஒத்தாசைக்கு அழைத்து வந்தாராம். இதெல்லாம் சுங்க அதிகாரிகள் காதில் அரைகுறையாக விழுந்ததில், அவர்கள் வைரத்தைச் சுங்க வரி கொடுக்காமல் கொண்டு போவதைத் தடுக்க முயற்சி எடுத்தார்களாம். மனோகரி தன் கடிதத்தில் குறிப்பிட்ட காதலன் நானாகத்தான் இருக்க வேண்டும் என்று தவறாக எண்ணி, என்னைக் கைது செய்ய இவர் ஏற்பாடு பண்ணினாராம்.
என்னுடைய வாயைப் பிடுங்கி, அந்த ஒற்றை ரோஜாப்பூவில் வைரம் இருக்கிற விஷயம் எனக்குத் தெரியுமா என்று அறிந்து கொள்வதற்காக அம்மாதிரி பயங்கர கதையை அவர் கற்பனை செய்து கூறினாராம்.
என்னை விட அவள் பெரிய கற்பனைக்காரி. ஒரு காதலனையே சிருஷ்டி செய்துவிட்டாள் என்பது எனக்கு என்னமாய்த் தெரியும்? ஆனால், சில சமயம் கற்பனையைக் காட்டிலும் உண்மையில் நடப்பது அதிசயமாயிருக்கிறது. "உன்னை நினைத்து நினைத்து அந்தப் பெண் உருகிக் கொண்டிருக்கிறாள். ஸர்தார் பவன் ஹோட்டலில் தகப்பனும் மகளும் தங்கியிருக்கிறார்கள். அவர்களைப் போய்ப் பார்!" என்றார் அந்த மனிதர்.
மறுநாள் ஸர்தார்பவன் ஹோட்டலுக்குப் போனேன். மனோகரி மட்டும் அறையில் தனியாக இருந்தாள். அவள் தகப்பனார் என்னைப் பார்ப்பதற்காகத்தான் போயிருப்பதாகச் சொன்னாள். அன்றிரவு தன்னால் எனக்கு நேர்ந்த கஷ்டத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்தாள்.
"இது என்ன பிரமாதம்? சில நிமிஷ நேரம் உன் காதலனாக நடிக்கும் பேறு பெற்றேன் அல்லவா? அதற்கும் சில மணி நேரச் சிறை வாசத்துக்கும் சரியாய்ப் போயிற்று" என்றேன்.
பிறகு அந்த ஒற்றை ரோஜாப் பூவை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அவள் அளவிலா அதிசயத்துடன் அதை வாங்கிக் கொண்டாள். தன் அழகிய கர மலரில் அந்தச் செயற்கை மலரை வைத்துக்கொண்டு அதை உற்றுப் பார்த்தாள்.
"உள்ளே வைரம் பத்திரமாயிருக்கிறது!" என்றேன்.
"வைரம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்று மேலும் வியப்புடன் கேட்டாள்.
"பிரித்துப் பார்த்தேன்; தெரிந்தது?" என்றேன்.
"எப்படி இது உங்கள் கைக்கு வந்தது?"
"தூண் நிழலில் நின்று 'இந்தக் காகிதப்பூ எதற்கு? நிஜ ரோஜாப் பூ மாலை வாங்கித் தருகிறேன்' என்றாயே, அந்த இடத்திலேயே கிடந்தது. இதைக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னது நியாயந்தான், ஒன்றரை லட்ச ரூபாய் வைரத்தை யார்தான், ஒரு அந்நியனுக்குக் கொடுப்பார்கள்?"
"விலை மதிப்பை முன்னிட்டுக் கொடுக்க மறுக்கவில்லை. அவ்வளவு பெறுமானமுள்ளது என்பது அப்போது எனக்குத் தெரியவே தெரியாது. இதற்கு ஒரு உபயோகம் இருந்தது; அதனால் தான் கொடுக்க மாட்டேன் என்றேன். அந்த உபயோகம் இனி இல்லாமற் போய்விட்டது!"
"எனக்கு விளங்கவில்லை. உபயோகமில்லாமல் ஏன் போக வேண்டும்? இதில் உள்ள வைரம் உன் கழுத்தில் அழகாகத்தான் ஜொலிக்கும். ஆனால், சுங்க வரி மட்டும் கட்டிவிடவேண்டும்!" என்றேன்.
அவள் என்னை ஏறிட்டுப் பார்த்து, "எதற்காகச் சுங்க வரி கொடுக்கவேண்டும்? எனக்கும் கொஞ்சம் சட்டம் தெரியும். பெண்கள் அணிந்திருக்கும் நகைக்குச் சுங்க வரி கிடையாது!" என்றாள்.
"அப்படியானால், ஏன் அதை ஒளித்துக் கொண்டு வரவேண்டும்?" என்று முணுமுணுத்தேன்.
"என் தந்தை வைர வியாபாரி. என்னை வைர நகை போட்டுக்கொள்ளும்படி எத்தனையோ தடவை நிர்ப்பந்தித்திருக்கிறார். நான் மறுத்துவிட்டேன். இந்த ஒற்றை வைரத்தை மட்டும் எடுத்து வந்தேன். இவ்வளவு பெறுமானமுள்ளது என்று தெரியாது. நூறு ரூபாய் வைரமே என் காரியத்துக்குப் போதுமானதாயிருந்திருக்கும்!"
"அது என்ன அபூர்வமான காரியம்? இன்னும் அந்த மர்மம் எனக்கு விளங்கவில்லையே!" என்று கேட்டேன்.
அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாமல் மனோகரி என்னுடைய நிலைமையைப் பற்றி விசாரிக்கலானாள்.
"நான் கதாநாயகனாகத் தகுதியுள்ளவன் அல்ல; பி.ஏ. பரீட்சையில் 'கோட்' அடித்தவன்!" என்றேன்.
"நிஜமாகவா? நீங்கள் பி.ஏ. பரீட்சை எழுதித் தோல்வி அடைந்தீர்களா?" என்று கேட்டாள்.
"ஒரு தடவை மட்டுமல்ல; மூன்று தடவை பரீட்சைக்குப் போய்த் தோல்வியடைந்தவன்."
"மூன்று தடவையா தோல்வியடைந்தீர்கள்?" என்று கேட்டுவிட்டு, மனோகரி விழுந்து விழுந்து சிரித்தாள். அதில் என்ன அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் என்பது எனக்கு விளங்கவில்லை.
"சரி! சரி! நீ சிரித்து முடி. இன்னொரு நாள் வந்து பார்க்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.
அவள், போகவேண்டாம் என்று தடுத்தும் நான் நிற்கவில்லை. ஆண்பிள்ளை அல்லவா ரோசமாயிராதா? திரும்பிக்கூடப் பார்க்காமல் போய்விட்டேன்.
என் ஜாகைக்குத் திரும்பியபோது அங்கே மனோகரியின் தகப்பனார் காத்திருந்தார். அவரும் ஒரு அத்தியாயம் தெரிவித்தார்.
பேச்சின் நடுவில் "என் மகளுக்கு நீங்கள் மிகவும் ஒத்தாசையாயிருந்தீர்களாம். டீ வாங்கிக் கொடுத்தீர்களாம். அவள் எனக்கு ஒரே பெண். அதனால்தான், ஒன்றரை லட்சம் ரூபாய் வைரம் போனாலும் போகிறது. பெண் உயிரோடு பிழைத்தாளே, அதுவே போதும் என்று திருப்தி அடைந்திருக்கிறேன்!" என்றார்.
"அவள் உயிருக்கு என்ன ஆபத்து வந்தது?" என்று கவலையுடன் கேட்டேன்.
"தெரியாதா? இதோ பாருங்கள்!" என்று சொல்லி ஒரு கடிதத்தை நீட்டினார். அது மனோகரி அவளுடைய தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதம். மனோகரி இலங்கையில் ஏதோ ஒரு பரீட்சைக்குப் போனதாகவும், அதில் அவள் தேறவில்லையென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"பரீட்சை தேறாத அவமானத்தை என்னால் சகிக்க முடியாது. உயிரை விட்டுவிடத் துணிந்து விட்டேன். இங்கேயே இருந்து அப்பாவுக்குத் துயரம் கொடுக்க விரும்பவில்லை. வைரத்தைப் பொடி பண்ணிச் சாப்பிட்டால் உடனே உயிர் போய்விடும் என்று சொல்கிறார்கள் அல்லவா? அப்பாவின் வைரம் ஒன்றை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குப் போய் உயிரை விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். என் உண்மையான சிநேகிதி நீ ஒருத்திதான். ஆகையால் உனக்கு மட்டும்...."
கடிதத்தை இதற்குமேல் நான் படிக்கவில்லை.
"ஐயையோ! என்ன காரியம் செய்துவிட்டேன்!" என்று பதறி எழுந்தேன்.
"என்ன? என்ன?" என்று மனோகரியின் தந்தையும் பதறிக்கொண்டு எழுந்தார்.
"வைரம் என்னிடந்தான் இருந்தது. இப்போதுதான் தங்கள் மகளிடம் போய்க் கொடுத்துவிட்டுத் திரும்பி வந்தேன்" என்றேன்.
"அடப்பாவி! என்ன காரியம் செய்தாய்! என் குடியைக் கெடுத்துவிட்டாயே!" என்றார் அந்தப் பெரியவர்.
அவர்கொண்டு வந்திருந்த 'டாக்ஸி'யில் ஏறிக் கொண்டு இருவரும் பறந்து சென்றோம்.
என் நெஞ்சு அந்தச் சில நிமிஷங்களில் எப்படித் துடித்தது என்று சொல்லவே முடியாது.
அந்த அழகிய பொன் மேனியைப் பிணமாகத் தான் காணப்போகிறோம் என்று எண்ணிப் பதை பதைத்தேன்.
ஆனால் என்ன சந்தோஷமான ஏமாற்றம்! ஓட்டலில் அவர்கள் தங்கியிருந்த அறைக்குச் சமீபமாகச் சென்றபோது, அறைக்குள்ளிருந்து குதூகலமாகப் பாடும் குரல் கேட்டது.
உள்ளே நாங்கள் இருவரும் சென்று விழுந்தோம். எங்களுக்குத்தான் உயிர் போய்விடும் போலிருந்தது.
"வைரம் எங்கே?" என்று இருவரும் ஒரே காலத்தில் கேட்டோம்.
மேஜையை அவள் சுட்டிக் காட்டினாள். அங்கே அது வானத்தில் ஒளிரும் நட்சத்திரத்தைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.
"எதற்காக இந்தப் பரபரப்பு" என்று கேட்டாள்.
"எங்கே இந்தக் கடிதத்தில் எழுதியிருப்பது போல் செய்துவிடுவாயோ என்றுதான்."
"அதற்கு இனி அவசியம் இல்லையென்று தான் இவரிடம் சொன்னேனே! இந்த மனிதர் மூன்று தடவை பி.ஏ. பரீட்சையில் தோல்வி அடைந்துவிட்டு இவ்வளவு உற்சாகமாக இருக்கிறார். ஒரு தடவை தோற்றதற்காக நான் ஏன் உயிரை விடவேண்டும்?" என்றாள் மனோகரி.
ஆரம்ப அதிர்ச்சி, மகிழ்ச்சி எல்லாம் ஒருவாறு அடங்கிய பிறகு மனோகரியின் தகப்பனார், "இந்தப் பெண்ணைச் சமாளிக்க இனி என்னால் முடியாது; நீர்தான் இவள் உயிரைக் காப்பாற்றினீர். இனியும் இவளை நிர்வகிக்கும் பொறுப்பை நீர் தான் ஏற்க வேண்டும்?" என்றார்.
"கடவுளே! என்னால் எப்படி அது முடியும்? இந்நாளில் பசிக்கு அரிசி கிடைப்பதே துர்லபமாயிருக்கிறது. நானோ ஏழை. இவளுடைய பசிக்கு வைரம் எப்படி வாங்கிக் கொடுப்பேன்! அதுவும் ஐம்பது ரூபாய், நூறு ரூபாய் வைரமா? ஒன்றரை லட்சம் ரூபாய் வைரங்களுக்கு நான் எங்கே போவேன்?" என்றேன்.
மனோகரியின் தகப்பனார் இப்போது தான் முதல் தடவையாகக் கடகடவென்று சிரித்தார். "நான் கூட வைர வியாபாரத்தை விட்டுவிடப் போகிறேன். இந்தப் பெண் இருக்குமிடத்திலேயே வைரம் வைத்திருக்கப்படாது!" என்றார்.
எங்கள் திருமணத்தின்போது மனோகரி தன் வாக்குறுதியை நிறைவேற்றினாள். மணமுள்ள புது ரோஜா மலர்களால் கட்டிய மாலையை என் கழுத்தில் சூட்டினாள்.
மனோகரி வைர நகை மட்டும் அணிவதில்லை. எங்கள் வீட்டிலேயே வைரம் வைத்துக்கொள்வதில்லை. எதற்காக அத்தகைய விஷப்பரீட்சை பார்க்க வேண்டும்?
என்ன கேட்கிறீர்கள்? "பி.ஏ. பரீட்சை என்ன ஆயிற்று?" என்று கேட்கிறீர்களா? - எங்கள் திருமணம் நடந்தவுடனே முதற்காரியமாக பாபநாசத்துக்கு மறுபடியும் போனோம். அங்குள்ள இனிய நதி வெள்ளத்தில் இருவரும் கைகோத்துக் கொண்டு இறங்கி எல்லாப் பரீட்சைகளுக்கும் சேர்த்து முழுக்கும் போட்டோம்.
நதிக்கரை மரங்களில் வாழ்ந்த பட்சிகள் எங்கள் செயலை ஆமோதித்து மங்கள கீதம் பாடின.