pana ulagam

பண உலகம்

‘ரூபாய், நாணய’த் தொடர் பணம் குறித்த பயனுள்ள பல விவரங்களைக் குழந்தைகளுக்குத் தருகிறது. அதன்மூலம், மாறிக்கொண்டேவரும் இந்த உலகில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது பணத்தை விவேகத்தோடு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவிசெய்கிறது. நாணயங்கள் எவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்டன? மனிதர்கள் எவ்வாறு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள், சேமிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்? போதுமான அளவு பணம் கையில் இல்லாத நிலையிலும், ஒரு குடும்பம் தான் விரும்பிய குளிர்சாதனப் பெட்டியை உடனே வாங்கிவிட இயலுமா? இவற்றையும் இன்னும் பலவற்றையும் அறிந்துகொள்ள, ‘ரூபாய், நாணய’த் தொடரின் முதல் புத்தகமான ‘பண உலகம்’ உங்களுக்கு உதவும்.

- Sandhya Jaichandren

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மனித வாழ்க்கையில் பணம் முக்கியமானது. நாம் சாப்பிட, குடிக்கத் தேவையான பொருள்களை வாங்க நமக்குப் பணம் தேவை; நாம் வசிப்பதற்கான இடத்தைப் பெறவும், கல்வி கற்பதற்கும் பணம் தேவை. இந்தப் புத்தகத்தில் பணம் நமக்கு ஏன் முக்கியம், அதை எவ்வாறு சம்பாதிப்பது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ளப்போகிறீர்கள். அதேபோல், பணத்தை எவ்வாறு செலவு செய்ய வேண்டும், எவ்வாறு சேமித்துவைக்கவேண்டும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். வாழ்க்கையில் நல்ல நிலைமையிலும், மோசமான நிலைமையிலும் நம்மிடம் போதுமான அளவு பணம் இருக்கவேண்டியது இன்றியமையாதது.

பண்டமாற்று! கற்காலத்தில், தன்னைக் குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு குழந்தைக்கு மான்தோல் தேவைப்பட்டால், அந்தக் குழந்தை ஒரு கோடரியைப் பதிலுக்குத் தரவேண்டியிருந்தது!

உங்களுக்குத்

தெரியுமா?

பணம் மிகவும் முக்கியம்

முன்காலத்தில் ஒருவருக்குத் தேவைப்படும் பண்டம் கிடைக்க பண்டமாற்று முறை ஒன்றே வழி. தாமுவிடம் முட்டைக்கோஸ் இருந்தது. ஆனால், அவனுக்கு ரொட்டி வேண்டும். குஷாலிடம் ரொட்டி இருந்தது. எனவே, தாமு தன்னிடமிருந்த முட்டைக் கோஸை குஷாலுக்குத் தந்து குஷாலிடமிருந்து ரொட்டி வாங்கிக்கொள்ள முடிந்தது. சில சமூகங்களில் இன்னமும் பண்டமாற்று முறை தான் வியாபாரத்திற்கான ஒரே வழி. ஆனால், இன்று உலகின் பெருவாரியான பகுதிகளில், காகிதத்தாலான பணமே இத்தகைய கொடுக்கல்-வாங்கல்களில் பயன்படுத்தப்படுகிறது. உலகில் பணமானது பல விசித்திரமான வழிகளில் பயன்படுத்தப்படுகிறது, கைமாற்றப்படுகிறது, மதிப்பிடப்படுகிறது.

அம்மா, எனக்குப் புத்தாடை வேண்டும்!

1600களில் அமெரிக்க மக்கள் புகையிலையைப் பண்டமாற்றுக்குப் பயன்படுத்திவந்தார்கள். உங்கள் பள்ளிக்கட்டணத்தை செலுத்துவதற்காக மூட்டை மூட்டையாகப் புகையிலையைச் சுமந்துகொண்டு செல்லவேண்டியிருந்தால் எப்படியிருக்குமென்று கற்பனை செய்துபாருங்கள்! ஆனால், பணமாகப் பயன்படுத்தப்பட்டுவந்திருக்கும் வேறு சிலவற்றைக் காட்டிலும் இந்த இலைகள் எவ்வளவோ மேல்!

நான் பணக்காரன்

ஆகிவிட்டேன்!

நியூ கினியாவில் நாய்களின் பற்கள் பணமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. பஸிபிக் தீவுகளில் திமிங்கலத்தின் பற்களைப் பணமாகப் பயன்படுத்தினார்கள். எத்தியோப்பியாவில் உப்பைக் கொண்டு தயாரிக்கப்பட்ட நாணயங்களைப் பணமாகப் பயன்படுத்தினார்கள்!

நாங்கள் சேவைகளை விற்பனை செய்கிறோம்

பணம் என்பது நாம் விரும்பும், நமக்கு வேண்டும் ஒன்றைப் பெறுவதற்காக, அதற்கு ஈடாகத் தருவது. நீங்கள் பெற விரும்புவது ஒரு புத்தகம், உணவுப்பொருள், சட்டை, வீடு அல்லது சைக்கிள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தப் பொருள்களைப் பெற நீங்கள் ஒரு மனிதருக்குப் பணம் தருகிறீர்கள்.

பணம் என்பது என்ன?

நாங்கள் பொருள்களை விற்பனை செய்கிறோம்

சில சமயங்களில் பணத்திற்கு ஈடாக நமக்குக் கிடைப்பது பண்டமாக இல்லாமல் சேவையாக இருக்கலாம். ரயிலில் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குச் செல்ல நாம் பணம் கொடுத்து அனுமதிச்சீட்டு வாங்குகிறோம். ரயில்வேத் துறைக்குப் பணம் தருகிறோம். நமக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அதற்கான காரணம் அறியவும், நோயைக் குணப்படுத்தவும், சிகிச்சை பெறவும் நாம் மருத்துவர்களுக்குப் பணத்தைச் சேவைக்கட்டணமாகத் தருகிறோம். உங்களுக்கு சலூனில் ‘க்ராப்’ வெட்டிவிடுபவருக்கு, அல்லது பழுதடைந்த மின்விசிறியைச் சரிசெய்யும் எலெக்ட்ரீஷியனுக்கு அவர்களுடைய சேவைக்காகப் பணம் அளிக்கப்படுகிறது.

நாங்கள் உங்களுடைய பணத்தைப் பத்திரமாகப் பாதுகாக்கிறோம்

பணத்தை நாம் சேமித்துவைத்துப் பின்னர் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளவும் முடியும். வீட்டில் பாதுகாப்பான இடத்தில் பணத்தைப் பத்திரப்படுத்தி வைக்கலாம். அல்லது, யாரிடமேனும் கொடுத்துவைக்கலாம். நம் பணத்தை ஒரு வங்கியில் கூட சேமித்துவைக்க முடியும். (இது என்ன? பார்க்க: புத்தகம் 2 - பணத்தின் பயணம்) வங்கியில் நம்முடைய பணம் பத்திரமாக இருக்கும்; பெருகவும் செய்யும். பணத்தை பல்வேறு வடிவங்களில் பத்திரப்படுத்திவைக்க முடியும்: காகிதப் பணமாக, தங்க நாணயங்களாக, தங்க நகைகளாக...

ரூபாய் சின்னம்

நாம் பணம் என்பதை ஒரு பண்டமாக நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அது ஓர் ஒப்பந்தம். இந்தியாவில், குடிமக்கள், அரசின் வழிகாட்டலோடு, ரூபாயைப் பண்டம் அல்லது சேவைப் பரிமாற்றத்திற்கான ஒரு வழியாகப் பயன்படுத்திக்கொள்வோம் என்று ஒப்புக்கொண்டிருக்கிறோம்.

மக்கள் பணத்தை ஒரு வங்கியில் சேமிக்கிறார்கள். இந்த சேமிப்பிற்கு ஒரு பரிசுத்தொகையை வங்கிகள் வழங்குகின்றன. அதுவே ‘வட்டி’ எனப்படும். வங்கிகளில் சேமிப்பவர்களுக்கு அந்த வங்கிகள் இந்தச் சலுகையைத் தருகின்றன. தம்மிடம் சேமிக்கப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கிகள், கடன் வேண்டுவோருக்குத் தந்து உதவுகின்றன. வங்கிகளில் கடன் வாங்குவோர் அந்தக் கடனுக்கென ஒரு கட்டணத்தை வங்கிக்குச் செலுத்தவேண்டும். அதுவும் வட்டி என்றே குறிப்பிடப்படுகிறது. வங்கியானது தான் செலுத்தும் வட்டியைவிடக் கூடுதலான அளவு வட்டியைப் பெறுகிறது. தனது செலவுகளையெல்லாம் செய்துமுடித்தபிறகு, வங்கி ஒரு தொகையை லாபமாகப் பெறுகிறது. அதைப் பங்குதாரர்கள் எனப்படும் ‘உரிமையாளர்’களுக்குப் பகிர்ந்தளிக்கிறது.

பணம் முளைத்து வளருகிறதா?

பணம் (money) என்பதும் நாணயம் (currency) என்பதும் ஒன்றா?

நம்முடைய தினசரி வாழ்வில் தேவையானவற்றை வாங்குவதற்கு நமக்குப் பணம் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மனித நாகரிகமும் பணத்தை அளவிட வெவ்வேறு வழிமுறைகளைக் கையாள்கின்றன. அவ்வாறு பணத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ’கரன்ஸி’ என்று அழைக்கப்படுகின்றன. நாணயங்களும் காகிதப் பணமும் ’கரன்ஸி’ ஆகும். ஒவ்வொரு நாடும் கரன்ஸிக்கு வெவ்வேறு பெயரைக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் நம் கரன்ஸி ‘ரூபாய்’ என்று குறிப்பிடப்படுகிறது.

இலங்கை நாட்டின் ‘ரூபாய்’

நேபாள ரூபாய்

ஆஸ்திரேலிய டாலர்

இங்கிலாந்து நாட்டின் ‘பவுண்ட்’

பப்புவா நியூ கினியா நாட்டின் ‘கினா’

ஐஸ்லாந்து நாட்டின் ‘க்ரோனா’

மத்திய ஆப்பிரிக்க

CFA ப்ராங்க்

ரூபாய் நோட்டுகளும் நாணயங்களும் எங்கிருந்து வருகின்றன? இந்தியாவிலுள்ள நாணயத் தொழிற்சாலைகளிலேயே மிகவும் பெரியது நாசிக்கில் உள்ளது. உங்களுக்கு அதைப் பார்க்க விருப்பமாயிருக்கிறதா?

1950 ஆகஸ்ட் 15ந் தேதி இந்தியா ‘அணா’ என்ற நாணயத் தொடரை அறிமுகம் செய்தது. அவற்றின் ஒரு பக்கத்தில் அசோக மன்னனின் நான்கு சிங்கங்கள் கொண்ட உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மறுபக்கத்தில் வளர்ச்சி, மேம்பாட்டைக் குறிக்கும் சோளக்கதிர்களின் உருவங்கள் அமைந்திருந்தன. ஒரு ரூபாய் என்பது 16 அணாக்களைக் கொண்டது. 1957 ஏப்ரல் முதல், ஒரு ரூபாய் என்பது 100 பைசாக்களைக் கொண்டதாகப் பகுக்கப்பட்டுள்ளது.

நாம் நாணயத்தை எவ்வாறு கையாளவேண்டும்?

காகிதப்பணத்தின் மீது ‘ஸ்டேப்ளரை’ப் பயன்படுத்தக்கூடாது.

காகிதப்பணத்தின் மீது எதுவும் எழுதக்கூடாது

காகிதப்பணத்தின் மீது ரப்பர் ஸ்டாம்ப், வேறு எந்த முத்திரையையும் குத்தக்கூடாது.

காகிதப்பணம் எந்தவிதச் சேதமும் அடையாமலிருக்க அவற்றைப் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்திவைக்கவேண்டும்.

யாருக்கும் இந்தப் புதிய நாணயங்கள் பிடிக்கவில்லை. அவர்கள் ஆடுகள், பயிர்களைப் பண்டமாற்றம் செய்வதையே இன்னமும் விரும்புகிறார்கள்!

உங்களுக்குத்

தெரியுமா?

முதன்முதலில் நாணயங்களை விநியோகிக்கத் தொடங்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

கி.மு 6ஆம் நூற்றாண்டு சமயத்தில் இது நடந்தது.

பீகார் மாநிலம் வைசாலி அருங்காட்சியகத்தில்

அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான உலோகக் காசுகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் காசுகள் தங்கம், வெள்ளி, தாமிரம் மற்றும் விலங்குத் தோலினால்கூட தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்

‘பணம் மரத்தில் காய்ப்பதில்லை’ என்று உங்களுடைய பெற்றோர்களோ அல்லது ஆசிரியர்களோ சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். பெரும்பாலான மனிதர்கள் ‘சம்பாதி’ப்பதன் மூலமே பணத்தைப் பெறுகிறார்கள். அதாவது, நீங்கள் ஏதேனும் வேலை செய்தால், அதற்கு ஈடாகப் பணம் பெறுகிறீர்கள். சம்பளமாகப் பணத்தைப் பெறுவது என்றால், நீங்கள் செய்த வேலைக்குரிய பணத்தைப் பெறுதல் என்று அர்த்தம். ஒரு மருத்துவர் நோயாளிகளைக் குணப்படுத்துவதற்காக உழைத்து ஊதியம் பெறுகிறார். ஒரு வழக்கறிஞர், நாட்டில் நிலவும் சட்டத்தை யார் பின்பற்றி வருகிறார்கள், யார் பின்பற்றி நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக உழைத்து ஊதியம் பெறுகிறார். ஒரு பாடகர் இசைநிகழ்ச்சியில் பாடி பணம் சம்பாதிக்கிறார். அதிர்ஷ்டக்காரர்களான சிலர் விளையாடி ஊதியம் பெறுகிறார்கள்!

சச்சின் டெண்டுல்கர், சாய்னா நேய்வால், பாய்ச்சுங் பாட்டியா போன்றோருக்கு தங்களுக்குப் பிடித்த விளையாட்டே பணத்தைச் சம்பாதிக்கும் தொழிலாகவும் அமைந்திருக்கிறது!

ஒருவரிடமிருந்து அன்பளிப்பாகப் பணத்தைப் பெறுதல் சம்பாதித்தல் அல்ல.

ஏடிஎம் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்தல் சம்பாதித்தல் அல்ல.

தரையில் பணம் விழுந்துகிடப்பதை எடுத்தல் சம்பாதித்தல் அல்ல.

வேறொருவரின் பென்சில் பெட்டியிலிருந்து அவருக்குத் தெரியாமல் பணத்தை எடுத்தல் சம்பாதித்தல் அல்ல.

பணம் சம்பாதிக்கும் வழிகள் பல உண்டு. சிலர் நிரந்தரமான பணி ஒன்றில் சேர்ந்து தங்கள் உழைப்பைத் தருகிறார்கள்.

தினமும் குறிப்பிட்ட மணி நேரங்கள், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாள்கள் வேலை செய்துவர முதலாளி தொழிலாளிக்குப் பணம் தருகிறார்.

இவ்வாறு வேலை செய்து அதன்மூலம் கிடைக்கும் வருமானம் சம்பளம் எனப்படும். சிலர் வேறு யாரிடமும் பணிபுரியாமல் சுயதொழிலில் ஈடுபடுகிறார்கள்.

நான் ஒரு ஆசிரியர். எனக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது.

நான் ஒரு வியாபாரி. பொருள்களை விற்பனை செய்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறேன்.

நான் ஒரு மருத்துவர். நீங்கள் நலமா? இல்லாவிட்டால், என்னை வந்து பாருங்கள்!

நான் ஒரு வாடகைக்கார் ஓட்டுநர். அதிக தூரம் நான் சவாரி சென்றால் நான் அதிகம் சம்பாதிப்பேன்.

நான் ஒரு தரகர். வாங்குவோர், விற்போரை ஒன்றிணைத்து நான் வருவாய் பெறுகிறேன்.

இப்படிதான் நான் பணம் சம்பாதிக்கிறேன்!

இப்படிதான் நான் உன் வருமானத்தைத் தடுத்துநிறுத்துகிறேன்!

நான் ஓர் ஓவியன். என் ஓவியங்களுக்குரிய விலையை நானே நிர்ணயிக்கிறேன்.

பல ஓவியக் கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், படைப்பாளிகள் சுயமாகப் பணியாற்றிவருகிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தாங்களே முதலாளி.

அவர்கள் ஓவியங்களை அல்லது புத்தகங்களைப் படைத்துமுடித்த பிறகு,

அவற்றை மற்றவர்களிடம் ஒரு குறிப்பிட்ட விலைக்கு விற்பனை செய்கிறார்கள்.

பணத்தை செலவு செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்

பணத்தை சம்பாதிப்பதைக் காட்டிலும் செலவுசெய்வது சுலபம். பணம் சம்பாதிக்கக் கற்றுக்கொள்வது எத்தனை முக்கியமோ அதேபோல் பணத்தை நல்லமுறையில் செலவுசெய்யக் கற்றுக்கொள்வதும் முக்கியம். நாம் எத்தனை செலவுசெய்கிறோம் என்பது மூன்று அடிப்படை விஷயங்களைப் பொறுத்து அமைகிறது: இருப்பு, தேவை, வாங்குதிறன்.

ஸ்கூட்டருக்குப் பெட்ரோல்

பள்ளிக் கட்டணம்

கோதுமை, அரிசி, சர்க்கரை

பால், காய்கறிகள், பழங்கள், பிஸ்கெட், ரொட்டி

வாடகை

மின்சாரம்

தண்ணீர்

சமையல் எரிவாயு

இரண்டு பேருக்கு பேருந்து ‘பாஸ்’

பெற்றோர் பராமரிப்பு

குடும்பங்களுக்கு மாதாமாதம் இருக்கும் வழக்கமான செலவுகள் போக, வேறு செலவுகளும் உள்ளன. சில எதிர்பார்த்தவை; சில எதிர்பாராதவை. சில நாட்களில், ரோஹனுடைய அம்மா அவனுக்குச் சாப்பாடு கட்டித் தர முடியாத நிலையில், பள்ளி உணவு விடுதியில் சாப்பிடுவதற்காக ரோஹனுக்கு பணம் தருவார். ரோஹனுடைய குடும்பம் எப்போதாவது ஒன்றாக ஒரு வாடகைக் காரில் எங்கேனும் மகிழ்ச்சியாகச் சென்றுவருவார்கள். சில சமயம் திரைப்படம் பார்த்துவருவார்கள். ஸ்கூட்டர் பழுதாகிவிட்டால் அதைச் சரிசெய்யவும் பணம் தேவை. எனவே, பணத்தை எந்த வடிவத்திலாவது சேமிப்பது இன்றியமையாததாகிறது. மனிதர்கள் குடும்பப் பணத்தை தரைவிரிப்புகளின் கீழ், அலமாரிகளில் அல்லது இழுவறைகளில், அல்லது தங்களுடைய பணப்பைகளில் பத்திரமாக வைத்திருப்பது வழக்கம். குழந்தைகள் பொம்மை உண்டியலில் பணம் சேமிக்கிறார்கள்.

பெரிய பொருள் எதையேனும் வாங்கவேண்டியிருக்கும்போது, அல்லது செலவுசெய்யவேண்டியிருக்கும்போது அந்தத் தொகையைப் பெறுவதற்காக மனிதர்கள் மாதக்கணக்காகச் சேமித்துவருகிறார்கள். அல்லது, கடன் வாங்கி அந்தச் செலவைச் சமாளிக்கிறார்கள். ஏதேனும் ஒரு பொருளை வாங்கும் பொருட்டு ஒருவர் பணத்தை சேமித்துவரலாம். உதாரணமாக, மொபைல் ஃபோன் வாங்க; ஒரு பயணம் மேற்கொள்ள; மேற்படிப்புக்காக; வீட்டுக்கு வெள்ளையடிப்பதற்காக; குளிர்சாதனப் பெட்டி வாங்குவதற்காக. ரோஹனுடைய அம்மா மாதம் 600 ரூபாயைப் பத்திரப்படுத்திவைக்கிறார். வருடமுடிவில், ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதென்று திட்டமிட்டிருக்கிறார் அவர்.

ஆனால், ரோஹனுடைய அத்தை இன்னொரு திட்டம் வைத்திருக்கிறார். இப்பொழுது குளிர்சாதனப்பெட்டி வாங்குவதற்குத் தேவையான பணம் அவரிடம் இல்லாத நிலையிலும் அவர் ஏற்கனவே ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கியாகிவிட்டது! அதைக் கடனுக்கு வாங்கியிருக்கிறார் அவர். அதற்கான தொகையை அவர் மாதாமாதம் சிறிய தவணைகளில் செலுத்திவருகிறார். ஆனால், அப்படி மாதம் ஒரு தொகையைச் செலுத்தப் போதுமான அளவு பணம் தனக்கு ஊதியமாக வருமாறு அவர் பார்த்துக்கொள்ளவேண்டியது அவசியம். இல்லையென்றால் கடனுக்குப் பொருள் கொடுத்த கடை உரிமையாளர் குளிர்சாதனப் பெட்டியை எடுத்துச்சென்றுவிடுவார். ரோஹனுடைய தாத்தா விவசாயி. அறுவடையின்போது பணத்தைச் செலவு செய்வார். விளைபொருள்கள் விற்பனையானதும் அவருக்கு நல்ல தொகை கிடைக்கும். எனவே, ஒரு வருடத்திற்குத் தனக்குத் தேவைப்படும் செலவுகளுக்குப் போதுமான அளவு பணத்தை அவர் சேமித்து வைத்துக்கொள்கிறார். குடும்பத்தினருக்குத் தேவையான புத்தாடைகள், பேரக் குழந்தைகளுக்குப் பரிசுப்பொருள்கள் ஆகியவற்றை அவர் இந்தச் சமயத்தில் வாங்குகிறார்.

பொருள் இப்பவே! பணம் அப்புறம்!

பணத்தை வீட்டில் சேமித்துவைப்பதற்குப் பதிலாக, ஒருவர் அதை வங்கியிலும் சேமித்துவைக்கலாம். அப்படிச் சேமிப்பதற்குப் பரிசாக, வங்கி தன்னிடம் சேமித்துவைக்கப்படும் பணத்திற்கு வட்டியையும் தருகிறது! ‘வரவு எட்டணா, செலவு பத்தணா’ என்ற திரைப்படப் பாடல் மிகவும் பிரபலம். நாம் முடிந்தவரை, நம்முடைய வரவுக்குள்ளாகவே செலவுகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். வங்கி என்பது பணம் வைக்கும் இடம்மட்டுமல்ல. சமூகத்தில் பயனுள்ள பணிகளுக்காக மற்றவர்களுக்குக் கடனுதவி அளிக்கப்படும் இடமும் அதுவே!

வங்கி என்பது வெறுமே நீங்கள் பணம் வைக்கும் இடம் மட்டுமல்ல. ஒரு சமூகத்தில் பயனுள்ள காரியங்களுக்காக மற்றவர்களுக்குக் கடனுதவியாக பணம் அளிக்கப்படும் இடமும் வங்கியாகும்!

இன்றே வாங்குங்கள்

நம் வாழ்க்கையில் எத்தனையோ எதிர்பாராத நிகழ்வுகள். உங்களுடைய பேனா எழுதாமல் போய்விடும்போது நீங்கள் நண்பரின் பேனாவைக் கடன் வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், அவரிடம் கூடுதலாக இன்னொரு பேனா இல்லையென்றால்? நம்மிடம் பள்ளிக்கட்டணம் செலுத்தப் போதுமான பணம் இல்லையென்றாலோ, அல்லது அத்தியாவசியமான பொருள் ஒன்றை வாங்கத் தேவையான தொகை இல்லையென்றாலோ நாம் என்ன செய்வோம்? நமக்குத் தேவையான பணத்தை நண்பர்களிடமிருந்தோ, உறவினர்களிடமிருந்தோ, வங்கியிலிருந்தோ அல்லது வட்டிக்குக் கடன் தருபவரிடமிருந்தோ கடனாகப் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெறும் பணத்தைத் திருப்பித்தரும்போது வட்டித் தொகையையும் சேர்த்துத் தரவேண்டும். ஒருவரிடம் சேமிப்பு இருந்தால், கடன் வாங்காமல் அதிலிருந்து தனக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

உன் பென்சிலை எனக்குக் கடனாகத் தருவாயா?

நீ இதை நாளைக்குத் திருப்பித்தரவேண்டும்.

கடன் தருவோர் பணத்திற்கு ஈடாக விலையுயர்ந்த பண்டங்களை மக்கள் வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். விவசாய சமூகங்களில் மக்கள் கோழிகள், ஆடுகள், மாடுகள், பன்றிகள் போன்ற கால்நடைகளை வளர்த்துவருகிறார்கள். அவர்களுக்குப் பணம் தேவைப்படும்போது தங்களிடமுள்ள வீட்டு விலங்குகளை விற்கிறார்கள். குடும்பத்தில் வழக்கத்தைவிடக் கூடுதலான பணம் இருக்குமெனில் சிலர் அதைக்கொண்டு தங்கம், வெள்ளி அல்லது நிலத்தை வாங்குகிறார்கள். இக்கட்டான நேரங்களில் அவற்றைப் பயன்படுத்தி நிலைமையைச் சமாளிக்கிறார்கள். இவை சொத்துகள் எனப்படும். (இது என்ன என்று இந்தப் புத்தகத்தில் பார்க்கவும் : பணத்தின் பயணம்)

உங்களிடம் ஏதேனும் சொத்துகள் உண்டா?

உண்டே! இதோ இவை என் மகளின் மேற்படிப்புக்காக வாங்கியவை. அவை எனக்கு ஸ்கூட்டர் வாங்குவதற்காக!

சொத்து என்பது சர்க்கஸில் அந்தரத்தில் சாகசம் செய்யும் கலைஞர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு வலை போன்றது. பெரும்பாலான நேரங்களில் அந்த வலை பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. ஆனால், அந்தரத்தில் சாகசம் செய்யும் யாரேனும் விழ நேரிட்டால் அப்போது அது அவரைப் பாதுகாக்கிறது. அதேபோல், ஒரு சொத்து நீண்ட காலம் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. ஆனால், திடுமென பணத்திற்கு ஏதேனும் தேவையேற்படும் போது அல்லது ஏதாவது நெருக்கடிநிலை ஏற்படும்போது (பள்ளிக் கட்டண உயர்வு, மருத்துவச் செலவு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் போன்றவை) கையிலுள்ள சொத்து பெரிதும் துணைசெய்கிறது; சொத்தின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

பணப் பற்றாக்குறை இருப்பின் நீங்கள் செய்ய வேண்டியவை:

1. வங்கி அல்லது சுயஉதவிக் குழு அல்லது பிறரிடமிருந்து கடன் வாங்குங்கள். ஆனால், ஒப்புக்கொண்ட தேதிக்குள் திருப்பித் தந்துவிடுங்கள்.

2. குறைவாகச் செலவு செய்யுங்கள்.

3. எதிர்காலத்திற்கென சேமிக்க மறந்துவிடாதீர்கள்.

நல்ல நிலைமை, மோசமான நிலைமை இரண்டையும் எதிர்கொள்ள உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

குடும்பத்தில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டால், யாருக்கேனும் விபத்து ஏற்பட்டால், யாரேனும் இறந்துபோக நேர்ந்தால், எதிர்பாராத செலவுகள் நிறையவே ஏற்படுகின்றன; நிறைய பணம் தேவைப்படுகிறது. அதைப்போலவே, வீட்டில் களவுபோய்விட்டால், வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டுவிட்டால், முக்கியமான வீட்டு உபகரணங்கள் பழுதாகிவிட்டால், வீட்டுச் சுவர் இடிந்துபோய் விட்டால்... இவ்வாறு எதிர்பாராதவிதமாக ஏதேனும் இக்கட்டு ஏற்படும்போது அதைச் சரிசெய்யவும் பணம் அவசரமாகத் தேவைப்படுகிறது. சில சமயம் மழை வருவதில்லை. அல்லது, வறட்சி, பஞ்சம், வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது, பயிர்கள் விளைவதில்லை, தானியங்கள் பாழாகிவிடுகின்றன. எனவே, மீண்டும் புதிதாக விதைகள் வாங்க விவசாயிகளுக்குப் பணம் தேவைப்படுகிறது. அத்தகைய நேரங்களில் உடனடியாகப் பணம் கிடைப்பது மிகவும் சிரமம். புத்திசாலி மனிதர்கள் அத்தகைய நேரங்களுக்காக முன்கூட்டியே ஏதேனும் ஒரு காப்பீட்டுத் திட்டத்தில் தங்கள் பணத்தை முதலீடு செய்துவைக்கிறார்கள். (அப்படியென்றால் என்ன என்று இந்தப் புத்தகத்தில் பார்க்கவும் - பக்குவமாகப் பணத்தைக் கையாளுங்கள்) காப்பீட்டுத் திட்டம் என்பது அதற்குரிய நிதி நிறுவனமொன்றில் நம் பணத்தைப் போட்டுவைப்பது, பின்னர் நெருக்கடியான நேரங்களில் திடீர் செலவுகளை ஈடுகட்ட உதவியாக அந்த நிறுவனத்திலிருந்து நிதியுதவி பெறுவது.

விலைகளெல்லாம் ஏறிவிட்டன அம்மா

அரேபியாவில் எண்ணெய் விலை அதிகரித்தால் நம் காய்கறி விலை ஏன் உயரவேண்டும்?

விலைகளெல்லாம் ஏறிவிட்டன அம்மா விலைகள் ஏறி இறங்கிக்கொண்டேயிருக்கின்றன. கோடைக் காலத்தில் காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாகிவிடும். எண்ணெய் ஏற்றுமதி நாடு ஒன்றில் போர் ஏற்படுமெனில், அதன் விளைவாக நம் நாட்டில் காய்கறி விலைகள் அதிகரித்துவிடுகின்றன.

திருமணம், பண்டிகை போன்ற கொண்டாட்டங்களால் செலவுகள் நிறைய. அத்தகைய நேரங்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரு குழுவாக இணைந்துகொண்டு பணம் திரட்டி செலவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். ஒரு சமூகத்தில், சில பேர் மற்ற எல்லாரிடமிருந்தும் நிதி திரட்டி, அவ்வாறு திரட்டிய பணத்தைக்கொண்டு மக்கள் எல்லாரும் பங்குபெறக்கூடிய விழாவை ஏற்பாடு செய்து நடத்தப் பயன்படுத்துவார்கள். பண்டிகைகளின்போது இம்மாதிரி நடப்பது வழக்கம். எவரேனும் தொலைக்காட்சிப் போட்டியில் பெரிய பரிசைப் பெறுகிறார் என்றால் அந்த வெற்றியாளர் தனியாக அல்லது தன் குடும்பத்தாரோடு அந்த வெற்றியைக் கொண்டாடலாம். அல்லது, தான் சார்ந்த சமூகத்தோடு கொண்டாடி மகிழலாம். அத்தகைய பிரமாண்டமான பரிசை வென்றவர் அதற்கென ஒரு வரியை அரசுக்குச் செலுத்தவேண்டியிருக்கும். (இது என்ன என்று இந்தப் புத்தகத்தில் பார்க்கவும்: பணத்தை நிர்வகிப்பவர்கள்). வெற்றி பெற்றவர்கள் சமூகப்பணியில் ஈடுபட்டிருக்கும் சேவை நிறுவனங்களுக்குப் பணத்தை நன்கொடையாகத் தரவும் முடியும். குடும்பங்கள் தங்களுக்குப் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய, வளர்ந்துவரும் தங்களுடைய பிள்ளைகளுக்கு செலுத்தவேண்டிய கல்லூரிக் கட்டணம், பயணச் செலவு, வீடு கட்டத் தேவைப்படும் பணம் போன்ற செலவுகளுக்காகவும் பணத்தைச் சேமிக்கிறார்கள்.

உங்கள் பணத்தை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்!

பணத்தை நாம் ஒவ்வொருவரும் பத்திரமாகப் பாதுகாக்கவேண்டும். ஏனென்றால், ரூபாய் நோட்டுகள் தொலைந்துவிடலாம், நாணயங்கள் நம் சட்டைப் பைகள், கால்சட்டைப் பைகள், தோள் பைகளிலிருந்து கீழே விழுந்துவிடக்கூடும். காசோலைகள் களவாடப்பட்டுவிடலாம். நம் பணத்தை மேலான முறையில் கையாள, நிர்வகிக்க எத்தனையோ நவீன வழிமுறைகள் இன்று உள்ளன. வங்கிகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற ஸ்மார்ட் கார்டுகள், இணையத் தள வங்கிச் சேவை போன்றவை. பணத்தைப்பற்றிய விவரங்களை அறிந்துகொள்வது வியக்கவைப்பது; விவேகமானது!