panaththai buddhisaalithanamaaga payanpaduththungal

பணத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்!

‘ரூபாய், நாணய’த் தொடர் பணம் குறித்த பயனுள்ள பல விவரங்களைக் குழந்தைகளுக்குத் தருகிறது. அதன்மூலம், மாறிக்கொண்டே வரும் இந்த உலகில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது பணத்தை விவேகத்தோடு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவிசெய்கிறது. நாணயங்கள் எவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்டன? மனிதர்கள் எவ்வாறு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள், சேமிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்? போதுமான அளவு பணம் கையில் இல்லாத நிலையிலும், ஒரு குடும்பம் தான் விரும்பிய குளிர்சாதனப் பெட்டியை உடனே வாங்கிவிட இயலுமா? இவற்றையும் இன்னும் பலவற்றையும் அறிந்துகொள்ள, ‘ரூபாய், நாணய’த் தொடரின் நான்காவது புத்தகமான ‘பணத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள்’ உங்களுக்கு உதவும்.

- Sandhya Jaichandren

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பணக்காரராகவேண்டும் என்று கனவு! ஒரு பால்காரரைப் பற்றிய கதையோடு பாடத்தை ஆரம்பிக்கலாம். ஒரு நாள், பால் விற்கப்போகும் வழியில், அவர் கனவு காண ஆரம்பித்தார்:

அந்த பணத்தில் சில கோழிகள் வாங்குவேன். அந்தக் கோழிகள் முட்டை போடும்.

இந்தக் குவளையிலுள்ள பாலை விற்றதும் எனக்குப் பணம் கிடைக்கும்.

அந்த முட்டைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் ஓர் ஆடு வாங்குவேன்.ஆட்டுப் பாலை விற்பேன்.

முட்டாளும் அவனிடமிருக்கும் பணமும் விரைவிலேயே பிரிந்துவிடுவார்கள் என்றொரு பழமொழி உண்டு. நாம் பணம் சம்பாதித்துவிட்டால் மட்டும் போதாது. அதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தவேண்டும். அதை வங்கியில் சேமித்து வைக்கலாம், அல்லது நல்ல தொழில் ஒன்றைத் தொடங்கி லாபம் ஈட்டி, வருவாயை மேலும் பெருக்கிக்கொள்ள அதைப் பயன்படுத்தலாம். அல்லது, நமக்கு வருமானம் தரக்கூடிய நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்யலாம். நம் வருவாய்க்குள் வாழ்க்கையை நடத்தி, அதே சமயம் நம் கனவுகளை நனவாக்கிக்கொள்ளும் புத்திசாலித்தனமும் வேண்டும். விவேகமுள்ள மனிதர்கள் சட்டத்தை மீறாமல் பணம் சம்பாதிக்க அறிவார்கள். அவ்வாறே நீங்களும் பணத்தைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளவேண்டும்.

எக்கச்சக்கமாகப் பணம் சம்பாதிப்பேன். அந்தப் பணத்தில் ஒரு மாடு வாங்குவேன்.

விரைவிலேயே என்னிடம் பணம் ஏராளமாய் சேர்ந்துவிடும்! அதற்குப் பிறகு என்ன நடக்குமென நினைக்கிறீர்கள்?

ஒவ்வொரு மனிதனுடைய தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான அளவு இந்தப் பூமி வழங்குகிறது. ஒவ்வொரு மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்ய அல்ல.

– மகாத்மா காந்தி

எனக்கு உண்மையாகவே இன்னொரு கிரிக்கெட் மட்டை தேவையா? மனிதர்கள் தங்களுடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்றிக்கொள்வதற்காக உழைத்துச் சம்பாதிக்கிறார்கள். தேவை, விருப்பம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன? உங்களுடைய ஊரில் சரியான பேருந்துப் போக்குவரத்து வசதி இல்லை என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் தினமும் பள்ளிக்குப் போய் வர சைக்கிள் தேவை. நீங்கள் புதிதாக ஒரு கிரிக்கெட் மட்டை வாங்க ஆசைப்படுகிறீர்கள். இது ஒரு விருப்பம், அவசியத்தேவை அல்ல. நாம் உயிர் வாழச் சத்துள்ள உணவு அவசியம். நாம் சத்தோடு ருசியாகவும், சூடாகவும், நறுமணம் வீசுவதாகவும் உள்ள உணவு வகைகளைத் தரமான சிற்றுண்டிச் சாலைகளில் சாப்பிட விரும்புகிறோம்.

எனக்கு ஐஸ்க்ரீம்தேவை

இல்லை,உனக்கு ஐஸ்க்ரீம் சாப்பிட விருப்பம்

எனக்கு 5 பென்சில், 2 பேனா தேவை

எனக்கு புதுச் செருப்பு தேவை

ஆமாம்,உனக்குப் புதுச் செருப்பு தேவை

இல்லை, உனக்கு ஒரு பென்சில்தான் தேவை. மற்றவை, வெறும் விருப்பம்

ஒரு குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபருடைய தேவைகளையும் பொறுத்துக் குடும்பங்கள் பணம் செலவழித்து வருகின்றன. அடிப்படையான உணவு, கல்வி, வீட்டுவசதி, பாதுகாப்பு, மற்றும், எதிர்காலத்திற்கென சேமித்துவைத்தல் ஆகியவை அவசியத் தேவைகள். இத்தகைய தேவைகளுக்காகச் செலவழித்தபிறகு போதுமான பணம் மிச்சமிருந்தால் தமது விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அந்தப் பணத்தைச் செலவழிப்பது குறித்துக் குடும்பங்கள் எண்ணிப்பார்க்கும். நீங்கள் ஏதேனும் பொருளை வாங்க விரும்பி உங்கள் அம்மா வேண்டாமென்று சொன்னால், அதற்கு இதுதான் காரணமா என்று அவரைக் கேளுங்கள். உங்களுக்குத் தர மறுத்த பணத்தைக் கொண்டு அவர் வேறு என்ன செய்தார் என்று கேளுங்கள்.

தேவைகள்

ஆசைகள்

வேலையின் விலைமதிப்பு:வேலை = பணம்? எல்லா வேலைகளுக்கும் மதிப்பீடாகப் பணம்தான் தரப்படுகிறது என்று சொல்ல இயலாது. எல்லா வேலைகளுக்குமே பணம் தரவேண்டிய அவசியமும் இல்லை. அத்தகைய சூழ்நிலைகள் யாவை? இதோ சில உதாரணங்கள்!

நான் சமைக்கிறேன், வீட்டைச் சுத்தம் செய்கிறேன், கற்பிக்கிறேன், வரவு, செலவுகளை நிர்வகிக்கிறேன். இத்தனை வேலைகளுக்கும் ஈடாக எனக்கு எக்கச்சக்கமாக அன்பு கிடைக்கிறது!

அம்மா, நீங்கள் செய்யும் வேலைகளுக்கெல்லாம் பணம் தர வேண்டுமென்றால் நம் செலவுகள் மிக மிக அதிகமாகிவிடும்!

இந்தச் செல்லப் பிராணியைக் காப்பாற்றியதற்கு எனக்கு எத்தனை அற்புதமான விருது கிடைக்கிறது பார்த்தீர்களா?!

சூரிய ஒளியின் விலை என்ன? நமக்கு அது இலவசமாகக் கிடைக்கிறது!

நம் செலவுகளைக் கண்காணித்து வருதல் பெரும்பாலானோர் தங்களுக்காகவோ அல்லது மற்றவர்களுக்காகவோ உழைத்து அதன் மூலம் பணம் சம்பாதித்துக்கொள்கிறார்கள். ஒரு குடும்பத்தில் இவ்வாறு வருமானம் ஈட்டக்கூடிய ஒரு அல்லது பல உறுப்பினர்கள் இருக்கக்கூடும். குடும்பத்திற்குக் கிடைக்கும் வருவாய், அதன் தேவைகள் மற்றும் அது செய்தாகவேண்டிய செலவுகள் ஆகியவற்றைப் பொறுத்து ஒரு குடும்பம் செலவுசெய்கிறது; சேமிக்கிறது. வரவு, செலவுக் கணக்கு/ நிதி ஒதுக்கீடு என்பது இதற்கான செயல்திட்டமாகும்.

பின்வரும் காட்சிகளை நாம் பெரும்பாலான குடும்பங்களில் காண முடியும்:

வருமானம் = செலவுகள்

சேமிக்கவோ அல்லது மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுக்கவோ பணம் எதுவும் மிச்சமில்லை. எதிர்பாராமல் ஏற்படக்கூடிய செலவுகளைச் சமாளிப்பது இந்தக் குடும்பத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கிவிடும். ஏன்?

இந்த மாதம் நாம் செலுத்தவேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்தியாகிவிட்டது.

விலைகள் எதுவும் ஏறிவிடக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

செலவு

வரவு

செலவு

வரவு

செலவு

வரவு

வருமானம் செலவுகளைவிட அதிகம்.வீட்டிற்குத் தேவையான எல்லாச் செலவுகளையும் செய்துமுடித்தபிறகு எஞ்சியிருக்கும் கூடுதல் பணத்தைப் பல வழிகளில் நாம் பாதுகாப்பாகச் சேமித்துவைக்கலாம். அல்லது, நம் பணத்தைப் பெருக்கக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்தவிதமான சூழ்நிலையைதான் நாம் எல்லாருமே எதிர்பார்க்கிறோம். வருமானம் எத்தனைக்கெத்தனை அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு நம்மால் நம் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ளப் பணம் செலவழிக்கவும், எதிர்காலத்திற்காகப் பணம் சேமிக்கவும் இயலும்.

வருமானம் செலவுகளைவிடக் குறைவு இந்நிலைமை ஒரு குடும்பத்திற்கு நல்லதல்ல. இத்தகைய நிலைமை ஏற்பட்டால் ஒரு குடும்பம் செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்கவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தக் கடன்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியோடு திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். எனவே, ஒரு குடும்பம் தன் செலவுகளைப் பூர்த்தி செய்யும் அளவில் தனது வருமானம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம். அல்லது, வருமானத்துக்கேற்பச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது அவசியம். இல்லையென்றால் ஒரு நெருக்கடி ஏற்படும்போது, அவர்களுக்குக் கடன் கிடைக்கவில்லை என்றால் பணத்திற்காகத் தம்மிடமுள்ள பொருள் எதையாவது விற்கவேண்டிய நிலைமை ஏற்படும்.

மனிதநேயத்தோடு மற்றவர்களுக்கு உதவும் குணம் கருணை மனம், வள்ளன்மை எனப்படும். வசதி படைத்த, கருணை மனம் கொண்டோர் மக்கள் நலவாழ்வுக்காக பள்ளிகள், மருத்துவமனைகள், விளையாட்டுத் திடல்கள் கட்டவும், மக்கள் நலனுக்கு உழைக்கும் அமைப்புகளை நிறுவவும் உதவுகிறார்கள்.

இந்த மாதம் கொஞ்சம் பணம் கடனாக வாங்கியாக வேண்டும்போல் தோன்று கிறது.

நம்முடைய சேமிப்பின் உதவியோடு அடுத்த வருட விடுமுறையில் சுற்றுலாப் பயணம் போய்வரலாம்.

குடும்ப வரவு செலவுக் கணக்கும் நிதி ஒதுக்கீடும்

செலவுகள் பலதரப்பட்டவை. குறுகியகாலச் செலவினங்கள், நீண்டகாலச் செலவினங்கள். ஒரு குடும்பம் தனது தினசரி, மாதாந்திரச் செலவுகளுக்கான பணத்தை வைத்திருக்கவேண்டியது மிகவும் அவசியம். வருடாந்திரச் செலவுகளுக்குத் தேவையான பணமும் தனியாக வைக்கப்படவேண்டியது அவசியம். குடும்ப ‘பட்ஜெட்’ என்பது பணம் தொடர்பான, குடும்பத்தின் வரவு, செலவு தொடர்பான திட்டம்.

சொந்த வீடு கட்டுதல், சொந்த விளைநிலம் வாங்குதல், ஒரு தொழில் நிறுவனத்தை உருவாக்குதல் போன்ற நீண்டகால இலக்குகளுக்காகப் போதுமான பணத்தைச் சேமித்துவைக்கச் சிறந்த வழி குறுகியகாலச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளுதல். மாணவர்கள் நோட்டுப்புத்தகத் தாள்களை வீணாக்காமல் பயன்படுத்துவதன் மூலமும் தங்களுடைய உடைமைகளான பேனாக்கள், புத்தகங்கள், தண்ணீர் புட்டிகள், மூக்குக் கண்ணாடிகளைக் கவனமாகப் பாதுகாத்தல்மூலமும் தங்கள் குடும்பத்தின் குறுகியகாலச் செலவுகளைக் குறைக்க உதவலாம்.

நான் வாரம் 5 ரூபாய் சேமித்தால், ஒரு பள்ளிப் பையைச் சீக்கிரமே வாங்கிவிடுவேன்!

நோட்டுப்புத்தகத்தின் பயன்படுத்தப்படாத தாள்களைக்கொண்டு நான் ஒரு புதிய நோட்டுப்புத்தகத்தைத் தயாரித்துவிடுவேன்!

நிதி ஒதுக்கீடு என்பது குடும்பங்கள் தம் வருவாயைச் சிறந்த முறையில் பயன்படுத்த உதவும் வழிகாட்டியாக உருவாக்கப்படுகிறது. ஆனால், சில சமயம், எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. உதாரணமாக, திடீரென விலைவாசி உயர்கிறது; அல்லது, குடும்ப வருவாய் குறைந்துபோய்விடுகிறது. இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையிலும் மனிதர்கள் தங்களுடைய குடும்பநிதி ஒதுக்கீட்டுத் திட்டத்தின்படி தொடர்ந்து வாழ்ந்துவர உதவும் வழிகள் உண்டு. உதாரணமாக, பொருட்களை விலை கொடுத்து வாங்காமல் வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம், அல்லது, தவணை முறையில் வாங்கலாம், வருமானத்தில் முன்பணம் பெறலாம், அரசுச் சலுகைகள், மானியங்களை வாங்கலாம்...

இந்த அறைக்குப் புதிதாக ‘பெயிண்ட்’ பூசவேண்டும்.

அடுத்த வருடம் செய்துவிடலாம். அதற்காகத் திட்டமிட்டு பணத்தை சேமிப்போம்!

தவணை முறையில் பணம் செலுத்துவது எளிது

வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (அப்படியென்றால் என்ன என்று இந்தப் புத்தகத்தில் பார்க்கவும்: பண நிர்வாகிகள்) மக்களுக்குக் கடன் வழங்குவதன்மூலம் அவர்களுடைய நீண்டகாலக் கனவுகள் நனவாக உதவுகின்றன. மக்கள் முதலில் வேண்டியதை வாங்கிக்கொண்டு பிறகு அதற்குரிய விலையை செலுத்தவும் அவை உதவுகின்றன. உதாரணமாக, ஒருவர் கம்ப்யூட்டர் ஒன்றைச் சிறு தொகையை ஆரம்பத்தில் கட்டி வாங்கிக்கொள்ளலாம். மிச்சப் பணத்தை ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட, ஒரே அளவான தொகையாகச் செலுத்தலாம். இதற்குத் ‘தவணை’கள் என்று பெயர்.

விலை உயர்ந்துவிட்டால்?

என்னால் அந்த அளவுமாதா மாதம் சேமிக்க இயலவில்லையென்றால்?

எளிய மாதத் தவணைகள்

விலை குறையவும் கூடும்!

கம்ப்யூட்டர் நமக்கு மிகவும் பயனுள்ளது. 10 மாதங்கள் ஏன் காத்திருக்கவேண்டும்?

ரூ 20,000 மதிப்புள்ள கணிப்பொறி (கம்ப்யூட்டர்) ஒன்றை நீங்கள் வாங்க விரும்புகிறீர்கள். அதற்காக மாதம் ரூ 2000 சேமித்து பத்து மாதங்களுக்குப்பிறகு கம்ப்யூட்டரை வாங்குவது நல்லதா? அல்லது, இப்பொழுதே கம்ப்யூட்டரைத் தவணைமுறையில், சற்றே அதிக விலைக்கு வாங்குவது நல்லதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தமக்குத் தாமே உதவிக்கொள்வோருக்கு உதவுதல்

பல நாடுகளில், அரசாங்கமும், வேறு சமூக சேவை நிறுவனங்களும் தம்மை நிரூபித்துக்கொண்ட மனிதர்கள் முன்னேற நிதியுதவி செய்கின்றன. உதாரணமாக, ஒரு மாணவி தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சியடைந்திருக்கிறாள். ஆனால், கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுக் கட்டணம், மற்ற கட்டணங்களுக்குத் தேவையான பண வசதி அவளிடம் இல்லை. அப்படியானால் அவள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

சில சமயங்களில், மக்களுடைய வாழ்வாதாரத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க அரசு பகுதியளவு பணம் கொடுக்கிறது. ஆனால், முழுத் தொகையையும் கொடுத்து உதவ இயலாத நிலை. ஏழை விவசாயிகள் மிகக் கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், தங்களுடைய கடன்களை அடைக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படலாம். அல்லது, உரங்களை வாங்கப் பணமில்லாது போகலாம். அத்தகைய நிலைமைகளில் அவர்களுக்கு உதவும் பொருட்டு அரசு சந்தை விலையைவிடக் குறைந்த விலையில் உரங்களைத் தருகிறது. இது ‘மானியம்’ எனப்படுகிறது. இந்தியாவில் மண்ணெண்ணெய், வேளாண் கருவிகள், விதைகள், சமையல் எரிவாயு, தண்ணீர் மற்றும் பள்ளிகளில் இயங்கிவரும் சிற்றுண்டி சாலைகள் ஆகியவற்றிற்கு மானியம் அளிக்கப்படுகிறது.

இந்த மானியங்களை வழங்குவது யார்? மக்களாகிய நம்மிடமிருந்து பல்வேறு வரிகளாக வசூலிக்கப்படும் பணத்திலிருந்து அரசு தேவையானவர்களுக்கு, தகுதியானவர்களுக்கு மானியங்களை வழங்குகின்றது.

கைச்செலவுப் பணம்

சில குடும்பங்களில் தங்களுடைய குழந்தைகளுக்கு அவ்வப்போது ஒரு சிறு தொகையைத் தருவது வழக்கம். குழந்தைகள் தங்கள் விருப்பம்போல் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சில குழந்தைகள் பணம் தரப்பட்டவுடனேயே அதைச் செலவழித்துவிடுவார்கள். சிலர், அதைச் சிறிது சிறிதாகச் செலவழிப்பார்கள். இன்னும் சிலரோ, பல நாள் அந்தப் பணத்தைப் பத்திரமாகச் சேமித்துவைப்பார்கள். பண்டிகை, விடுமுறை நாள்களிலும் குழந்தைகளுக்கு உறவினர்கள் சிறிய தொகைகளை அன்பளிப்பாகத் தருவதுண்டு. அப்போதெல்லாம் குழந்தைகளின் கைச்செலவுப் பணப்பை கனமாகிவிடும்! உங்களுடைய கைச்செலவுக்குத் தரப்படும் பணத்தை உரிய முறையில் பயன்படுத்த நீங்கள் கற்றுக்கொண்டால், நீங்கள் பெரியவர்களான பிறகு உங்களுடைய பணத்தைச் சிறந்த முறையில் நிர்வகிக்கும் ஆற்றலை நீங்கள் பெறலாம்.

நீ ஏன் உன்னுடைய சாக்லெட்டைச் சாப்பிடவில்லை?

நான் பின்னர் சாப்பிடுவதற்காகச் சேமித்துவைத்திருக்கிறேன்!

டாக்டர் சலீம் அலி, ‘இந்தியாவின் பறவை மனிதன்’ என அன்பாக அழைக்கப்படுபவர். அவர் தன்னுடைய புகழ்பெற்ற ‘ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ என்ற நூலில், சிறுவனாயிருக்கும்போது ‘கைச்செலவு’க்காகத் தனக்குத் தரப்பட்ட பணத்தை என்ன செய்தார் என்பது பற்றி எழுதியிருக்கிறார். மாதாமாதம் கைச்செலவுக்கென்று தரப்படும் 2 ரூபாயைக் கொண்டு அவர் ஒரு ஜோடிப் பறவைகள் வாங்குவது வழக்கம். பின்னாளில் அவர் உலகின் மிகச்சிறந்த பறவையியல் ஆய்வாளர்களில் ஒருவரானார்!

உங்களுடைய ‘கைச்செலவு’ப் பணத்தின் உதவியோடு நீங்கள் என்னென்ன செய்யலாம்?

செலவழிக்கலாம்!

பின்னர் செலவழிக்கச் சேமித்துவைக்கலாம்!

அதைக்கொண்டு ஒரு சிறிய வியாபாரம் தொடங்கலாம்!

முதலீடு செய்யலாம்!

வேறு?

மதிய உணவு இடைவேளை 1-4 மணிவரை

மாதாமாதம் கைச்செலவுக்குத் தரப்படும் 15 ரூபாயை வைத்து என்னால் கம்ப்யூட்டர் மையம் சென்று இணையத்தை நன்கு பயன்படுத்த இயலாது.

எனக்கு ஓர் எண்ணம்!

உணவு இடைவேளையின்போது நான் கம்ப்யூட்டர் மையத்தைக் கவனித்துக்கொள்கிறேன். பதிலுக்கு, இணையத்தை நான் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாமா?

இதுதான் என் முதல் வெற்றிகரமான வர்த்தக ஒப்பந்தம்!

சுஹாஸ் கோபிநாத் 14 வயது கூட நிரம்பாத சிறுவனாக இருந்தபோது ஓர் இணையத் தளம் தொடங்கினார். 15 வயது நிரம்பும்போது அவர் பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் மிக இளைய வயது உரிமையாளர் ஆனார்! எப்படி?

பணத்தின் விலைமதிப்பு மாறுகிறதா? ஆமாம்.

டாக்டர் சலீம் அலி (1896-1987) சிறுவராக இருந்தபோது அவருக்குக் கைச்செலவுப் பணமாக மாதம் ரூ 2 தரப்பட்டது. அதாவது, வருடத்திற்கு ரூ 24. அப்போது அவர் அந்தப் பணத்தை சேமிக்கத் தீர்மானித்திருந்தால், ரூ 24ஐ ஒரு வங்கியில் நிலையான வைப்புநிதியாகப் போட்டுவைத்திருந் தால், அவரது வாழ்நாளில் அந்தப் பணம் ரூ 14,000க்கு மேல் உயர்ந்திருக்கும். ஆனால், அப்படிச் சேமித்திருந்தால் அவர் தலைசிறந்த பறவையியல் ஆய்வாளராக உருவாகியிருப்பாரா?

இதை முயன்று பாருங்கள்: உங்களுக்கு 12 வயதானதும் மாதம் ரூ 10 சேமிக்கத் தொடங்குங்கள். உங்களுக்கு 18 வயதாகும்போது உங்கள் சேமிப்பில் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும் என்று ஒரு வங்கி அதிகாரியைக் கேட்டுப்பாருங்கள்.

நீங்கள் சேமிக்கத் தொடங்க இதுவே சிறந்த நேரம். அப்படிச் சேமிக்கப்பட்ட பணம் வெறுமனே எங்காவது புதைத்துவைக்கப்பட்டால் அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. பணம் பயனுள்ள வகையில் செலவழிக்கப்பட வேண்டும். ஏனெனில், பணத்தின் மதிப்பு மாறிக்கொண்டேயிருக்கிறது.

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு பெருந்தொகையை பானைக்குள் போட்டு அந்த மரத்தின் கீழே புதைத்துவைத்தேன்.

நான் சிறுவனாக இருந்தபோது, ரூ 5 பெரிய புதையல்! என் தோழன் சலீம் செய்ததுபோல் நான் அதைச் செலவழித்திருக்கவேண்டும்.

இந்த அணாக்களுக்கு என்ன மதிப்பு?

ஐந்து ரூபாய்தானா?

இதோ சாணக்யா குழு நமக்கு உதவிசெய்ய வருகிறது! சேமித்த பணத்தைக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? சாணக்யா குழுவில் (இதைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இப்புத்தகத்தைப் பார்க்கவும்: பண நிர்வாகிகள்) வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், நிதி நிர்வாக நிறுவனங்கள் ஆகியவை உள்ளன. இவை நம் பணத்தைச் சிறந்த, பயனுள்ளவகையில் பயன்படுத்த நமக்கு வழிகாட்டுகின்றன; மேலும் தொழில்கள் தொடங்கவும், அவற்றைச் சீரிய முறையில் நிர்வகிக்கவும் நமக்கு உதவுகின்றன. இதன்மூலம் நீங்கள் ஒரு வர்த்தகராகவும் தொழில் முனைவோராகவும் இயங்கலாம்.

ஹீராவும் அவளுடைய தம்பியும் தேர்வில் நல்ல முறையில் தேர்ச்சிபெற்றதற்காக அவர்களுடைய தாத்தா ரூ 20 அன்பளிப்பு கொடுத்தார். “ஒரே வெய்யில்! நம்முடைய நண்பர்களுக்குக் குடிக்க எலுமிச்சைச் சாறு கிடைத்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள்!” என்றாள் ஹீரா. “என்னால் இப்போது செய்ய முடியாது” வீட்டு வேலைகளையெல்லாம் செய்துமுடித்த களைப்போடு கூறினார் அவளுடைய தாய்.

ஹீராவுக்கும் மோத்திக்கும் ஒரு யோசனை. எலுமிச்சைச் சாறு விற்கும் சிறிய கடை ஒன்றை ஆரம்பிக்க எண்ணினார்கள். அதற்காகச் சந்தைக்குச் சென்றார்கள். வழியில் அவர்கள் ஜவஹரைப் பார்த்துத் தங்களுடைய திட்டம்பற்றிக் கூறினார்கள். ஜவஹருக்கும் அதில் ஆர்வம் ஏற்பட்டது. “இதோ, என் பணத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்” என்று தன்னிடமிருந்த 10 ரூபாயைக் கொடுத்தான். அவர்கள் மூவரும் சந்தைக்குச் சென்று அடுத்த பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் பொருட்களை வாங்கினார்கள்:

இவற்றை வைத்து அவர்கள் நிறைய எலுமிச்சைச் சாறு தயாரித்து ஏறத்தாழ 100 கோப்பைகளை நிரப்பினார்கள். மொத்தப் பணம் ரூ 50ல் ஹீரா ரூ 20 தந்திருந்ததால் அவள் ஜெம் பழச்சாறுக் கடை யின் 40 ‘பங்கு’களுக்கு உரிமையாளர். அதேபோல், மோத்திக்கும் 40 ‘பங்கு’கள் சொந்தம். ஜவஹருக்கு 20 ‘பங்கு’கள். பிறகு, அவர்கள் ஓர் அறிவிப்பைத் தொங்கவிட்டார்கள்: புத்தம்புது எலுமிச்சைச் சாறு: வெறும் ரூ 1.25க்கு!

எலுமிச்சம்பழம்: ரூ 20

சர்க்கரை: ரூ 10

கோப்பைகள்: ரூ 10

ஐஸ் துண்டுகள்: ரூ 10 தண்ணீர்: இலவசம்

20

----

50

40

-----

100

=

100 கோப்பைகள் விற்கப்பட்டன

ஒரு கோப்பை ரூ 1.25

வரவு = ரூ 125

செலவு = ரூ

50 லாபம் = ரூ 75

ஒரு கோப்பை சாறு விற்றதில் கிடைத்த லாபம் ரூ 0.75

ஹீராவின் லாபம் ரூ 30, மோட்டியின் லாபம் ரூ 30, ஜவஹருடையது ரூ 15

அற்புதம்! தொழில் செய்யக் கற்றுக்கொண்டோம். லாபம் கூடப் பெற்றுவிட்டோம்!

75 கோப்பைகள் விற்கப்பட்டன

ஒரு கோப்பை ரூ 1.25

வரவு = ரூ 93.75

செலவு = ரூ 50

லாபம் = ரூ 43.75

ஒரு கோப்பை சாறு விற்றதில் கிடைத்த லாபம் ரூ 0.75

ரூ 17.25, ரூ 17.25, ரூ 8.50

கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கிறது. 25 கோப்பைகள் எலுமிச்சம் பழச் சாறும் குடிக்கக் கிடைத்தது!

100 கோப்பைகள் விற்கப்பட்டன

ஒரு கோப்பை ரூ 0.50

வரவு = ரூ 50

செலவு = ரூ 50

லாபம் = ரூ 0

ஒரு கோப்பை சாறு விற்றதில் கிடைத்த லாபம் ரூ 0.00

ரூ 0, ரூ 0 , ரூ 0

அவர்கள் லாபம் ஈட்டினார்கள். அதேசமயம் அவர்களுக்கு அது மகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது.

100 கோப்பைகள் விற்கப்பட்டன

வருவாய் ரூ 25

வரவு = ரூ 25

செலவு = ரூ 50

நஷ்டம் = ரூ 25

ஒரு கோப்பை சாறு விற்றதில் கிடைத்தநஷ்டம் ரூ 0.25

நஷ்டம் ரூ 10, ரூ 10, ரூ 5

பணம் போய்விட்டதே என்று வருந்தினார்கள். ஆனால், அவர்கள் நிறைய பேருக்கு மகிழ்ச்சியளித்தார்கள். நிறைய

கற்றுக் கொண்டார்கள்.

தொழில்துறையில் இயங்கிவருவோர் புதிய நிறுவனங்களைத் தொடங்கும்போது, அவர்கள் பணத்தை முதலீடு செய்கிறார்கள். அந்த நிறுவனத்தைத் தொடங்கத் தன்னோடு இணைந்து முதலீடு செய்யும்படி மற்றவர்களையும் அழைக்கிறார்கள்.

‘பங்குகள்’ எனப்படும் இது, பணத்தை முதலீடு செய்யும் வழிகளில் ஒன்று. ஒரு தொழில் நிறுவனம் பொதுமக்களைத் தன்னுடைய தொழிலில் கூட்டாளிகளாக்கிக்கொள்வதன் மூலம் அவர்களைத் தனது வளர்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கிறது. எப்படி? தொழில் நிறுவனத்தில் தன் உரிமையைப் ‘பங்குகள்’ எனப்படும் அலகுகளாகப் பிரித்துத் தருவதன் மூலம்! உதாரணமாக, ஜெம் பழச்சாறு நிறுவனம் 100 பங்குகளைக் கொண்டிருந்தது. அவை ஒவ்வொன்றும் ரூ 0.50 மதிப்பு கொண்டவை. அதில் முதலீடு செய்த ஹீரா, மோட்டி, ஜவஹருக்கு அவர்கள் கொடுத்த பணத்துக்கு ஏற்ற எண்ணிக்கையில் பங்குகள் கிடைத்தன.

ஒரு நிறுவனத்தின் உரிமையாளர் ‘மேம்பாட்டாளர்’ என்று அழைக்கப்படுகிறார். பொதுவாக, நிறுவனப் பங்குகளில் அதிகபட்சம் அவருடைய கைகளில் இருக்கும். 1000 பங்குகளைக் கொண்ட ஒரு நிறுவனத்தில் நான் 10 பங்குகளை வாங்கினால் நான் அந்நிறுவனத்தின் பங்குதாரர் ஆகிறேன். அதாவது, அந்நிறுவனத்தில் 10/1000 எனக்குச் சொந்தம். அந்நிறுவனம் லாபம் சம்பாதித்தால் அதன் பங்குகளின் விலை உயருகிறது, நஷ்டமடைந்தால் பங்குகளின் விலை வீழ்ச்சியடைகிறது. ஹீராவைப் போலவே மோட்டி, ஜவஹரும் அந்தப் பழச்சாறு நிறுவனத்தைத் தொடங்கப் பணம் முதலீடு செய்தார்கள். லாப, நஷ்டங்களை அவர்களுடைய முதலீடுகளுக்கு ஏற்பப் பகிர்ந்துகொண்டார்கள். அதேபோல் ஒவ்வொரு குடிமகனும் போதுமான பணமிருந்தால் தொழில் நிறுவனங்களின் பங்குகளை வாங்கலாம். பங்கு நிர்வாகிகள் லாபம் ஈட்டிவரும் நல்ல நிலையிலுள்ள நிறுவனங்கள்குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். இவ்வாறு பங்குகளை வாங்கப் பணத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நம் பணம் அதிகரிக்க நாம் வழிவகுக்கிறோம். அதேசமயம், அந்நிறுவனம் நஷ்டமடைந்தால், அதன் பங்குகளை வாங்கியவர்களும் பணத்தை இழக்க வேண்டிவரும்.

நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கு ஒன்றை வாங்கும்போது அந்த நிறுவனத்தின் ஒரு சிறு பகுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறீர்கள்.

இந்தியத் தொழிற்துறையின் தந்தை ஜே.என். டாட்டா

கோயில் அர்ச்சகர் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனின் கதை இது. தன் தாத்தா, மற்ற குடும்பத்தினர்போல் குருக்கள் ஆகாமல் இந்தியாவின் தன்னிகரற்ற, பெருமதிப்புக்குரிய தொழிலதிபராக மாறினார் அவர். ‘இந்தியத் தொழிற்துறையின் தந்தை’ என்ற பெயரைப் பெற்றார். அவருடைய கனவுகள், நேர்மை, பணத்தைப் பக்குவமாக, புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திய விதம், தன் நாட்டின்மீதும், நாட்டுமக்கள்மீதும் வைத்திருந்த அன்பு, பாசம் எல்லாம் சேர்ந்து அவரை ஏராளமான தொழில் நிறுவனங்களை உருவாக்கச் செய்தன. இன்று அவை ’டாட்டா குழும’த் தொழில் நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஜாம்ஷெட்ஜி டாட்டா 1839 மார்ச் 3ம் தேதி குஜராத்தில் உள்ள சிறு நகரமான நவசாரியில் பிறந்தார். ஜாம்ஷெட்ஜியின் தந்தை நஸ்ஸெர்வஞ்சி பார்ஸி குருக்கள் அடங்கிய குடும்பத்தின் முதல் தொழிலதிபர். அவர் மும்பையில் ஒரு தொழிலைத் தொடங்கினார். 14 வயதில் ஜாம்ஷெட்ஜி அவரோடு அந்தத் தொழிலில் ஈடுபட்டார். ஜே. என். டாட்டா மிகச் சிறந்த மாணவராக விளங்கியதால் அவர் படித்த கல்லூரி அவர் கட்டிய கல்விக் கட்டணத்தைத் திருப்பித் தந்துவிட்டது.

அனைவருக்கும் பணமும் நல்வாழ்வும்

தனது 29வது வயதில் அவர் தன் சொந்த வர்த்தக நிறுவனத்தைத் தொடங்கினார். பணம் சம்பாதித்து நாட்டுக்கும் மக்களுக்கும் உதவக்கூடிய சமூக நலத் திட்டங்களில் தனது வருவாயைப் பயன்படுத்த அவர் விரும்பினார். அவ்வாறு தொழில் நிறுவனங்களை உருவாக்கும்போது அவருக்குப் பல இன்னல்கள், இடையூறுகள் ஏற்பட்டன. ஆனாலும், தன் தொழிலாளிகளுக்கு ஆரோக்கியமான பணியிடம் கிடைக்கவேண்டும், அவர்களுடைய குடும்பங்கள் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், வழிபாட்டுத் தலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைந்திருக்கும்படியான வசதியான வீடுகளில் வாழவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். அத்தகைய குடியிருப்பு வசதிகளை, ஆரோக்கியமான பணியிடச் சூழல்களைத் தன் தொழிலாளர்களுக்குக் கிடைக்கச்செய்தார். ஜே.என். டாட்டாவால் தொடங்கப்பட்ட அல்லது திட்டமிடப்பட்ட நிறுவனங்களில் இவையும் அடங்கும், இந்தியாவின் முதல் ஸ்டீல் நிறுவனமான டாடா ஸ்டீல், முதல் பெரிய இந்திய நீர் மின் நிறுவனமான டாட்டா ஹைட்ரோ-எலெக்ட்ரிக் பவர் மற்றும் முதல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் பெங்களூரில் உள்ள டாட்டா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ்.

அவர் தன் தொழில் நிறுவனங்கள் மூலம் பெற்ற வருவாயைச் சிறந்த முறையில் கல்வி பயிலும் மாணவர்கள், கடின உழைப்பாளிகளின் நல வாழ்வுக்குப் பயன்படுத்தினார். நம் நாட்டில் ஒரு நகரத்திற்கு இந்தத் தலைசிறந்த இந்தியரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது: ஜாம்ஷெட்பூர்.

என்னுடைய பணத்திற்கு என்ன பாதுகாப்பு?

சாணக்யா குழுவில் ஒரு முக்கிய உறுப்பினர்: காப்பீட்டு நிறுவனங்கள். முதலில் காப்பீடு என்றால் என்ன? நாம் கையில் ஒரு குடையை எடுத்துக்கொண்டுபோகிறோமே, எதற்கு? நம்மை வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் குடை பாதுகாக்கும். அதே போல், காப்பீடு நம்மை நல்ல நேரங்களிலும் இக்கட்டான நேரங்களிலும் பத்திரமாகப் பாதுகாக்கிறது. காப்பீடு (இன்ஷூரன்ஸ்) என்பது நமக்குப் பெரிய, எதிர்பாராத செலவு ஏற்படும்போது அதைச் சமாளிக்கும் பொருட்டு நாம் செலுத்திவரும் சிறிய, தொடர்ச்சியான தொகை. இவ்வாறு தொடர்ந்து நாம் கட்டிவரும் தொகை ’ப்ரீமியம்’ எனப்படும். மேற்குறிப்பிட்ட பெரிய, எதிர்பாராத நிகழ்வு ‘ரிஸ்க்’ (அபாய நிலை) என்று குறிப்பிடப்படுகிறது. ஒருவர் தன் கிராமத்தில் கணிப்பொறி மையம் ஒன்றைத் தொடங்குகிறார். அதை அவர் காப்பீடு செய்கிறார். அந்தக் ‘காப்பீடு பாலிஸி’ அவர் என்ன தொகையைத் தொடர்ந்து செலுத்தவேண்டும், எத்தனை காலத்திற்குச் செலுத்தவேண்டும், ஒரு வேளை இடையில் விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடாக அவருக்கு என்ன தொகை கிடைக்கும் என்றெல்லாம் சொல்கிறது. ஒருவேளை அந்தக் கணிப்பொறி மையத்தில் திருட்டுப் போய்விட்டால் அல்லது ஏதேனும் விபத்து நேர்ந்துவிட்டால், அதன் உரிமையாளர் தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புகுறித்துக் காப்பீட்டு நிறுவனத்துக்கு விவரம் தெரிவிக்கிறார். இழப்பீட்டுக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கிறார். காப்பீட்டு நிறுவனம் அவர் தந்துள்ள விவரங்களைப் பரிசீலித்து, மதிப்பாய்வு செய்து அதன் அடிப்படையில் இழப்பீடாக ஒரு தொகையை அவருக்கு வழங்குகிறது.

‘ப்ரீமியம்’ என்பது நம் வாழ்வில் நேரக்கூடிய எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து அச்சப்படவேண்டியிராத அளவு நம் தொழில் அல்லது நம் சேமிப்புகளை அக்கறையோடு பராமரித்துவர முடிவதற்காகக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நாம் செலுத்தும் கட்டணமாகும். அப்படி நாம் செலுத்தும் கட்டணத் தொகையை வைத்துதான் காப்பீட்டு நிறுவனங்கள் நிதியுதவி தேவைப்படும் பிறருக்கு உதவி செய்கின்றன.

காப்பீட்டு நிறுவனங்கள் உடல் நலன், வாழ்க்கை, திருட்டு மற்றும் இயற்கைச் சீற்றங்கள் தொடர்பாக ஏற்படக்கூடிய பாதிப்புகள், அபாயங்களிலிருந்து நமக்குப் பாதுகாப்பு அளிக்கின்றன. விவசாயிகள், எதிர்பாராத தட்ப வெப்பநிலை மாற்றங்கள், பாதிப்புகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் பல்வேறு ‘ப்ரீமியங்கள்’ கட்டிவருகிறார்கள். உதாரணமாக, சில சமயங்களில் பயிர்கள், காய்கறிகள் அல்லது பழங்கள் பாழாகிவிடும்.அத்தகைய நேரங்களில் தன் இழப்பைச் சமாளிக்க விவசாயி தன் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பணம் பெற்றுக்கொள்கிறார்.

உங்கள் அருகே இருப்பதை நான் வெறுக்கிறேன்.

நீ சொல்வது எனக்குக் கேட்கவில்லை

என் பத்து தலைகளையும் காப்புறுதி செய்ய இயலுமா?

உங்கள் முகம் மிகவும் பழக்கப்பட்ட முகமாகத் தெரிகிறது.

அதே சமயம், நாம் காப்பீடு செய்துவிட்டோம் என்பதால் நாம் அக்கறையற்று, அலட்சியமாக நடந்துகொள்ளலாம் என்று அர்த்தமல்ல. உதாரணமாக, ஷ்யாம் வாகன விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துகொண்டிருக்கிறார் என்பதற்காக அவர் வேகமாக வரும் ஒரு பேருந்தின் குறுக்காகச் சாலையில் ஓட முடியாது. அப்படிச் செய்தால் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு கிடைப்பதற்கு முன்பாக, அவர் காயமடைந்து வலியை அனுபவிப்பார்.

நான் என் மீசையைக் காப்பீடு செய்துகொண்டுவிட்டேன்!

நான் என்னையும் என் நாயையும் காப்பீடு செய்துகொண்டுவிட்டேன்!

நான் என் தங்கப் பற்களைக் காப்பீடு செய்துகொண்டுவிட்டேன்!

நான் என் கால்களைக் காப்பீடு செய்துகொண்டுவிட்டேன்!

பேராசையா? புத்திசாலித்தனமா?

ஒரு குழந்தைக்கு லட்டு பிடிக்குமென்றால், ஆசையாகச் சாப்பிடுவதற்காக அவன் ஒரு லட்டு வாங்கினால், அது ஒரு தேவை. நாள்முழுக்கச் சாப்பிடலாமே என்று 5 லட்டுகள் வாங்கினால், அது பேராசை. அவனது அம்மா 50 லட்டுகள் செய்வதற்கான மாவு, சமையல் எண்ணெய், சர்க்கரை வாங்கி அவற்றை வெவ்வேறு சமயங்களில் பயன்படுத்தினால், அவர் புத்திசாலி, பேராசைக்காரர் அல்லர். ஏன்? பேராசை என்பது ‘எனக்கு எல்லாமே, இப்பொழுதே வேண்டும்’ என்ற நினைப்பு. இந்தக் குணம் நல்லதல்ல. வீட்டின் வரவு, செலவு நிதி ஒதுக்கீட்டிற்குள்ளாகப் பணத்தை எப்படிக் கையாள்வது என்று கவனமாக சிந்தித்துச் செயல்படுவதும் தற்போதைய செலவுகளுக்கும் எதிர்காலத் தேவைகளுக்கும் சம முக்கியத்துவம் அளிப்பதும் புத்திசாலித்தனமாகும். பணம், தங்கம், வேறு விலையுயர்ந்த பொருள்களை எதிர்காலத்திற்காகச் சேமித்துவைப்பது பேராசையல்ல. அது வாழ்வில் நேரக்கூடிய நன்மை, தீமைகளுக்கு மனப் பக்குவத்தோடு நம்மைத் தயார் செய்துகொள்ளும் சிறந்த வழியாகும்.

முதலீடு செய்து பணம் அதிகரிக்க வழிசெய்யலாம்.

இப்பொழுதே செலவழித்துவிடலாம்

பாதியைச் செலவழித்து மீதியைச் சேமித்துவைக்கலாம்.

நீங்கள் என்ன செய்வீர்கள்?

துணிந்து செயல்படுங்கள்; பரிசை வெல்லுங்கள்! நாம் படிக்கும் வீர சாகசக் கதைகளில் இளவரசன் ஒருவன் மலைகளில் ஏறி பூதங்களோடு சண்டையிட்டு ஒரு சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றுவான். அபாயங்கள் நிறைந்தது என்று தெரிந்தும் அந்த இளவரசன் தைரியமாகச் சவாலை ஏற்கிறான். துணிச்சலோடு ‘ஒரு கை பார்த்துவிடுவோம்’ என்று அவன் வீர பராக்கிரமச் செயல்களில் இறங்கக் காரணம், வெற்றி பெற்றால் தனக்குச் சாம்ராஜ்யமே கிடைக்கும் என்ற நம்பிக்கைதான். வர்த்தகத் துறை மனிதர்கள் பணத்தை முதலீடு செய்யும்போது பல நேரங்களில் இக்கட்டான முடிவுகளை மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. உங்களுடைய குடும்பம் ஒரு நிலம் வாங்குகிறது. ஆனால், எதிர்பார்த்தபடி அதன் விலை ஏறாமல் குறைந்துவிடுகிறது. அந்தமாதிரி சமயங்களில் நிலத்தை விற்பது நஷ்டத்தை உண்டாக்கும். ஒரு செயலில் எவ்வளவு அதிக இக்கட்டுகள் உள்ளதோ அந்த அளவுக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்க வழியுண்டு. இதற்கு நேர்மாறாகவும் நடக்கும். லாபம் எவ்வளவு அதிகம் உண்டோ, அவ்வளவு அதிகமாக அபாயங்களும் இருக்கும். எனவே, பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தீர ஆலோசித்த பிறகு தீர்மானிப்பதே புத்திசாலித்தனமாகும்.

பலூன்கள் தயாரிக்க நான் அவருக்கு ரூ 100 தருகிறேன். அவர் அவற்றை விற்று என்னிடம் ரூ 200 திருப்பித் தருகிறார். நல்ல லாபம்!

ஆமாம், ஆனால் இதில் அபாயங்களும் உண்டே...

பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் துணிச்சலாகச் சவால்களை எதிர்கொள்வது சட்டத்திற்குப் புறம்பானதல்ல. ஆனால், நாட்டின் சட்டங்களை மீறிப் பணம் சம்பாதிப்பது தண்டனைக்குரிய குற்றம். ஒரு பொருளில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கு மேல் ஒரு கடைக்காரர் விற்றால், அவர் சட்டத்திற்குப் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கிறார். பிஸ்கெட்கள், சோப்புகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மீது அதிகபட்ச சில்லறை விலை (MRP) என்று எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதிகபட்சச் சில்லறை விலை ரூ 20 என்றால் கடைக்காரர் அந்தப் பொருளை உங்களுக்கு விற்கும்போது உங்களிடமிருந்து ரூ 20தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.

தபால் அலுவலகத்தில் ரூ 5 என்று குறிக்கப்பட்டுள்ள தபால்தலை, ரூ 5க்குத் தான் விற்கப்பட வேண்டும். ரூ 5.25க்கு விற்கப்படலாகாது. ஒரு பஸ் கண்டக்டர் கட்டணச்சீட்டில் குறிக்கப்பட்டுள்ள தொகைக்குக் குறைவாக உங்களிடமிருந்து பெற்றுக்கொண்டு ஏற்கனவே வேறொருவர் பணம் செலுத்தி வாங்கியிருந்த கட்டணச்சீட்டை மீண்டும் உங்களிடம் தருகிறாரென்றால் அவர் சட்டத்துக்குப் புறம்பான வழியில் பணம் சம்பாதிக்கிறார். ஒரு சில்லறை வியாபாரி உங்கள் குடும்பத்திற்கு ஒரு மின்விசிறி, ப்ரெஷர் குக்கர், அல்லது மொபைல் ஃபோன் ஆகியவற்றை அவற்றின் MRP விலைக்கு மிகவும் குறைவாக விற்கிறார், ஆனால், அதற்கான ரசீது தருவதில்லை என்றால் அவர் சட்டத்திற்குப் புறம்பான வழியில் சம்பாதிக்கிறார் என்று அர்த்தம்.

நான் அபராதம் போடட்டுமா? அல்லது நீங்கள் எனக்கு ரூ 100 தருகிறீர்களா?

பணக் குறிப்பேடு

உங்களுக்குக் கிடைக்கும் பணம் (வருவாய்), நீங்கள் செய்யும் செலவுகள் (பணம் கொடுத்தல்), நீங்கள் என்ன சேமிக்கிறீர்கள் (அது சொத்துதானா?), திரும்பக் கிடைக்கும் என்ற அளவில் மற்றவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறீர்கள் (கடன்கள்), அன்பளிப்புகள் என்னென்ன போன்ற விவரங்களை ஒரு குறிப்பேட்டில் தினமும் எழுதிவைத்துக்கொள்வது நல்ல பழக்கமாகும். இவ்வாறு தினமும், அல்லது, குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையேனும் செய்துவருவது உங்களுடைய பணத்தை நல்ல முறையில் நிர்வகிக்க உதவும். தங்களுடைய பண விவரங்களைப் பதிவுசெய்துவைத்துக்கொள்பவர்கள் எதிர்கால நிதித் தேவைகளைச் சமாளிக்கும் பொருட்டு தங்கள் வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கிவைக்க முயற்சி செய்கிறார்கள் என்று வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நீங்கள் பணம்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டிருப்பதால், இதோ, உங்கள் சிந்தனைக்கு ஒன்று: ஒரு குடும்பம் தன்னால் என்னென்ன வழிகளில் பணம் சம்பாதிக்க, சேமிக்க, முதலீடு செய்ய இயலும் என்அதைத் திட்டமிடச் சிறிது நேரம் ஒதுக்கினால், அந்தக் குடும்பம் பாதுகாப்பாக இருக்க இயலும்!

பணத்தைப் புரிந்துகொள்ள நீங்கள் அதிக நேரம் ஒதுக்கினால், உங்களிடம் கூடுதலான பணம் சேரும்!