panaththin payanam

பணத்தின் பயணம்

‘ரூபாய், நாணய’த் தொடர் பணம் குறித்த பயனுள்ள பல விவரங்களைக் குழந்தைகளுக்குத் தருகிறது. அதன்மூலம், மாறிக்கொண்டேவரும் இந்த உலகில் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது பணத்தை விவேகத்தோடு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவிசெய்கிறது. நாணயங்கள் எவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்டன? மனிதர்கள் எவ்வாறு பணத்தைச் சம்பாதிக்கிறார்கள், சேமிக்கிறார்கள், பயன்படுத்துகிறார்கள்? போதுமான அளவு பணம் கையில் இல்லாத நிலையிலும், ஒரு குடும்பம் தான் விரும்பிய குளிர்சாதனப் பெட்டியை உடனே வாங்கிவிட இயலுமா? இவற்றையும் இன்னும் பலவற்றையும் அறிந்துகொள்ள, ‘ரூபாய், நாணய’த் தொடரின் இரண்டாவது புத்தகமான ‘பணத்தின் பயணம்’ உங்களுக்கு உதவும்.

- Sandhya Jaichandren

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பணம் உலகைச் சுழல வைக்கிறது என்று சொல்வார்கள். உண்மையில், பணம்தான் உலகைச் சுற்றி எல்லா இடங்களுக்கும் செல்கிறது! நாம் பல வழிகளில் பணத்தைச் சம்பாதிக்கிறோம், சேமிக்கிறோம், பயன்படுத்துகிறோம்.

பணம் கை மாறிக்கொண்டேயிருக்கிறது. ஹீராவுக்கு அவளுடைய பாட்டி ஒரு பத்து ரூபாய்த் தாளைக் கொடுக்கிறார். ஹீரா அதைச் சந்துவின் கடைக்கு எடுத்துச்செல்கிறாள். சந்து அந்தப் பத்து ரூபாய்த் தாளை வாங்கிக்கொண்டு அவளுக்கு ஒரு பேனா தருகிறார். பின், அந்த ரூபாய் நோட்டைத் தன்னுடைய கல்லாப் பெட்டிக்குள் போடுகிறார். மாலையில் அவர் அதை வங்கிக்கு எடுத்துக்கொண்டு செல்கிறார். பணம் ஒவ்வொரு முறை கைமாறும் போதும், ஒரு பரிமாற்றம் நடைபெறுகிறது.

இவ்வாறு பணம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் பயணமாகும் பல வியப்பூட்டும் வழிகள் குறித்து நாம் இன்னும் நிறையத் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்!

பணம் எங்கே சென்றுவிட்டது?

ஹீராவின் பணத்திற்கு என்னவாயிற்று?

ஹீரா தன்னிடமிருந்த பத்து ரூபாய்த் தாளைச் சந்துவிடம் கொடுத்தபிறகு, அந்தப் பணம் எங்கே சென்றது? அந்தப் பணம் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போய்க்கொண்டேயிருந்தது. ஒரு நோக்கத்திற்காக அல்லது வேலைக்காகப் பணத்தைத் தருவது அல்லது பெறுவது பரிவர்த்தனை என்று கூறப்படுகிறது. ஹீரா தனக்கு ஒரு பேனா வாங்கிக்கொள்வதற்காகத் தன்னிடமுள்ள பணத்தை ஒரு கடைக்காரரிடம் தரும்பொழுது, அங்கு ஒரு பரிவர்த்தனை, கொடுக்கல்-வாங்கல், நடைபெறுகிறது. பணம் இடம்பெறும் பரிவர்த்தனை பணப் பரிவர்த்தனை. எளிமையாகச் சொல்வதென்றால், பணம் தரப்படுகிறது அல்லது பெறப்படுகிறது.

உள்ளே வருகிறது, வெளியே செல்கிறது

பரிவர்த்தனைகள் இருவகைப்படும். பெறுதல் மற்றும் செலுத்துதல். சில சமயங்களில் பணம் நம்மிடம் வந்து சேருகிறது. இந்தப் பரிவர்த்தனை ‘பெறுதல்’ ஆகும். சில சமயங்களில் பணம் நம்மிடமிருந்து வெளியே செல்கிறது. இது ‘செலுத்துதல்’ ஆகும். அனைத்துப் பணமுமே யாருக்கேனும் தரப்படுகிறது அல்லது யாரிடமிருந்தேனும் பெறப்படுகிறது.

பண்டிகை நாட்களில் அல்லது பிறந்தநாளில் உங்களுக்கு அன்பளிப்பாகக் கிடைக்கக்கூடிய பணம் வரவு. மாதாமாதம் உங்களுடைய தாய் அல்லது தந்தை ஊதியமாகப் பெறும் பணம் வரவு. மனிதர்கள் எவ்வாறெல்லாம் பணத்தை வரவாகப் பெறுகிறார்கள் என்பதை இங்கே காணலாம்!

செங்கற்களைச்

சுமந்து நான் பணம் சம்பாதிக்கிறேன்.

பூட்சுகள் விற்பதில்

எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

அதனால் எனக்கு

வருமானம் கிடைக்கிறது.

என் கணிணியில் வேலை

செய்து நான்

பணம் சம்பாதிக்கிறேன்.

இனிப்பான வேலை இது!

பழங்கள் என் கூடையிலிருந்து

வெளியேறுகின்றன, அதனால்

பணம் உள்ளே வருகிறது!

ஆஹா! ஓட்டப்பந்தயத்தில்

எல்லாரையும்விட வேகமாக

ஓடியதற்காக எனக்குப் பரிசுப்

பணம் கிடைத்திருக்கிறது!

நீதிமன்றத்தில் மற்றவர்கள்

சார்பாக வாதம் புரிவதற்காக

எனக்குப் பணம் தரப்படுகிறது.

ஸ்கூட்டரைக் சுத்தமாக்க உதவி நீ பணம் சம்பாதித்துக்கொண்டாய்.

குளிர்பானப் புட்டிகள்

செய்தித்தாள்களை விட அதிக

பணத்தைப் பெற்றுத் தருமா?

நீங்கள் பள்ளிக்குக் கட்டணம் செலுத்துவது, பேருந்தில் பிரயாணம் செய்வதற்காக நடத்துநரிடம். நீங்கள் தரும் பணம் போன்றவை பண வழங்கீடு அல்லது பணம் செலுத்துதல் ஆகும்.

இவையெல்லாமே என்னுடைய பணமா?

அப்படியென்றால், எனக்குக் கிடைக்கும் அல்லது என்னிடமுள்ள பணம் எல்லாமே என்னுடைய பணமா? எப்பொழுதுமே அப்படிதான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை! உங்களுக்குக் கிடைக்கின்ற பணத்தில் உங்களுடையதல்லாததும் உண்டு!

பள்ளிக் கட்டணம்

பேருந்துக் கட்டணமாக வழங்கப்படும் பணம்

சாக்லெட்டுகள், விளையாட்டுப் பொருட்கள்

வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குதல்

வாடகை புத்தகங்கள்

அருண் மாதாமாதம் ரூ 15,000 சம்பாதிக்கிறார். ஜூன் மாதத்தில் தனது குழந்தைகளுக்குப் பாடப் புத்தகங்கள், பள்ளிப் பைகள், சீருடைகள் வாங்குவதற்காக அவருக்குக் கூடுதலாகப் பணம் தேவைப்படுகிறது. எனவே அவர் வட்டிக்குக் கடன் தருபவரிடம் ஒரு தொகையைக் கடனாகப் பெறுகிறார். அவருடைய சம்பளம், அவர் வாங்கியிருக்கும் கடன் இரண்டுமே வரவுதான். ஆனால், அவருடைய சம்பளம் அவருடையது. அதை அவர் விரும்பிய வழியில் பயன்படுத்தலாம். அது வருமானம் எனப்படும். அவர் வாங்கிய கடனும் வரவுதான், ஆனால், அந்தத் தொகையை வட்டியோடு சேர்த்துத் திருப்பித் தரவேண்டும். எனவே, கடனாக வாங்கிய தொகை ஒரு சுமை.

பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் வட்டி என்பது இன்னொருவர் பணத்தை இப்போது பயன்படுத்திக்கொண்டு பின்னர் திருப்பிச் செலுத்துவதற்காகத் தரப்படும் ஒரு தொகை. நீங்கள் பணத்தைக் கடனாகப் பெறும்போது அதை வட்டியோடு திருப்பிச்செலுத்த வேண்டியிருக்கிறது. நீங்கள் பணத்தைக் கடனாகத் தரும்போது, அந்தப் பணத்தை வட்டியோடு திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள். ஒருவர் கடன் வாங்கும்போது, அது பணம் பெறுதல் அல்லது வரவு எனக் கொள்ளப்படுகிறது. ஆனால், கடன் வாங்குபவர் அந்தத் தொகையைத் திருப்பித் தந்துவிடவேண்டும். எனவே, அது ஒரு சுமை அல்லது பொறுப்பு.

வட்டிக்குக் கடன் தருபவரிடமிருந்தோ அல்லது வங்கியிலிருந்தோ அல்லது நண்பரிடமிருந்தோ கடனாகப் பெறப்படும் பணம் எல்லாமே வரவுதான். ஏனென்றால் நீங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால், இந்தப் பணம் வட்டியோடு திருப்பித்தந்தாக வேண்டியது என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். வட்டியின் அளவு மாறக்கூடும். சில வங்கிகள் குறைந்த வட்டிவிகிதத்திற்குக் கடன் தருகின்றன. சில உறவினர்கள் அல்லது நண்பர்கள் மிகவும் குறைந்த வட்டியையே எடுத்துக்கொள்ளக் கூடும், அல்லது, வட்டியே கேட்காமலிருக்கவும் கூடும். வட்டிக்குக் கடன் தரும் சிலர் மிக அதிக வட்டியைக் கோருவார்கள். எனவே, கடன் பெறுவதற்குமுன்பு  வட்டி குறித்து நாம் தெளிவாக அறிந்துகொள்ளவேண்டியது அவசியமாகிறது.

நான் உன் தோழி. கடன் தருவது என் தொழில் அல்ல. எனவே, என்னிடம் வாங்கும் பணத்தை மட்டும் திருப்பித்தந்தால் போதும்!

நான் வட்டிக்குக் கடன் தருகிறேன். அப்படிக் கடனாகத் தரும் தொகைக்கு நீங்கள் எனக்கு மிக அதிக வட்டி தரவேண்டியிருக்கும்.

நான் ஒரு வங்கி மேலாளர். எங்கள் வங்கியும் கடனாகத் தரும் தொகைக்கு வட்டி எடுத்துக்கொள்கிறது. ஆனால், அது நியாயமான வட்டியாக இருக்கும்.

என்னுடைய பணம் கரைந்துபோய்விட்டது!

எனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட ஆசையாக இருந்தது. அதை வாங்க நான் ஐஸ்கிரீம் விற்பவருக்குப் பணம் தந்தேன். அந்த ஐஸ்கிரீமை நான் ஆனந்தமாக ருசித்துச் சாப்பிட்டேன். ஆனால், சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஐஸ்கிரீம் தீர்ந்துவிட்டது. என்னுடைய பணமும் என் வாய்க்குள் அப்படியே கரைந்துபோய்விட்டது!

பணம் செலுத்துதல் இருவகைப்படும். செலவுகளுக்காகச் செலுத்தப்படும் பணம், சொத்துகளுக்காகச் செலுத்தப்படும் பணம். குறுகிய காலமே நிலைத்திருக்கக்கூடிய பண்டங்களுக்காகச் செலுத்தப்படும் பணம் ’செலவு’ எனப்படும். உதாரணமாக, ஐஸ்கிரீம் வழங்குவதற்காகச் செலுத்தப்படும் பணம் செலவு. உங்களுடைய பெற்றோர் உங்களுக்குச் சைக்கிள் வாங்கித் தந்தால், அந்தச் சைக்கிளில் ஒரு சில நாட்களல்ல, பல வருடங்கள் சவாரி செய்து மகிழ்கிறீர்கள். இவ்வாறு உங்களுக்கு நீண்ட காலம், குறைந்தபட்சம் ஒரு வருடத்துக்குமேல் பயன்தரக்கூடிய ஒரு பண்டம் அல்லது சேவை சொத்து எனப்படுகிறது.

நீண்ட காலம் பயனளித்தபிறகு சொத்து செலவாகவும் மாறிவிடுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு சைக்கிள் பதினைந்து வருடங்களுக்கு உங்களுக்குப் பயன் தரலாம். ஆனால், பலமுறை அதைப் பழுதுபார்க்கவேண்டிய தேவையும் ஏற்படலாம்.

ஒரு சொத்துக்காகச் செலுத்தப்படும் பணம் எப்பொழுதுமே பயன் தரக்கூடியது. வீடு, கால்நடை, தங்கம் போன்றவை நமக்குப் பணம் தேவைப்படும்போது உதவியாக அமையும்.

பணம் ஒருவருடைய பெயரில் வங்கியிலும் சேமித்துவைக்கப்படலாம். அப்படி வங்கியில் நீங்கள் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகள் உங்கள் வங்கிக் கணக்கில் (இவை என்ன என்றறிய இப்புத்தகத்தைப் பார்க்கவும் : பண நிர்வாகிகள்) போட்டுவைக்கப்படும் பணம், அதிலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் பணம். முதலிய விவரங்கள் உங்களுடைய வங்கிக் கணக்கு என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு வங்கியில் நம் பணத்தைப் போட்டு வைத்துக்கொள்ளப் பரவலாகப் பயன்படுத்தும் வழிமுறை உங்கள் பெயரில் சேமிப்பு வங்கிக் கணக்கை வைத்துக்கொள்வது.

இப்படி வங்கியில் நம் சேமிப்பில் வரவு வைப்பதற்காகச் செலுத்தப்படும் பணமும் ஒரு சொத்துதான். அது உண்மையில் நம் பணம். வங்கியின் பாதுகாப்பில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது!

“நான் சற்றுநேரம் இங்கே ஓய்வாக அமர்ந்து கொள்கிறேன்” என்கிறது பணம்!

பணமானது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்குப் போய்க்கொண்டேயிருக்கிறது; ஒரு சட்டைப்பையிலிருந்து இன்னொரு சட்டைப்பைக்கு மாறிக்கொண்டேயிருக்கிறது. நல்லவேளையாக, அது ஓய்வெடுத்துக்கொள்ளவென்று சில இடங்கள் இருக்கின்றன.

வங்கி என்பது அலாவுதீன் குகையைப் போன்றதா? இல்லை. வங்கி என்பது அலாவுதீன் குகை மாதிரியானது அல்ல. ஆனால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடம். வங்கியானது உடனடிப் பயன்பாட்டிற்குத் தேவைப்படாத பணத்தை மக்கள் சேமித்துவைக்கின்ற பாதுகாப்பான இடம். வங்கி என்பது உங்கள் பணம் வளர்ந்து பெருகும் இடமாகவும் விளங்குகிறது. வாடிக்கையாளர்கள் வங்கியில் தமது பணத்தைச் சேமித்துவைக்கிறார்கள். வங்கிகளில் தரைக்குக் கீழே பிரமாண்டமான நிலவறை இருக்கிறதா? அங்குதான் வங்கியில் சேமிக்கப்படும் பணம் அத்தனையும் பாதுகாக்கப்படுகிறதா? அப்படி எதுவும் இல்லை.

ஆனால், வங்கிகளில் சிறிய, பாதுகாப்பான, உறுதியான அறைகள், பல்வேறு பூட்டுகளைக் கொண்டதாக இருக்கின்றன. இவை பாதுகாப்புப் பெட்டகங்கள் (Lockers) என்று குறிப்பிடப்படுகின்றன. வங்கிகள் பணத்தைச் சேமித்துவைப்பதோடு நின்றுவிடவில்லை. அவை பணப் பரிவர்த்தனையும் நடத்துகின்றன.

உங்களுடைய பணத்தை நீங்கள் வீட்டிலேயே வைத்திருந்தால் அது அப்படியே இருக்கிறது, பெருகுவதில்லை. ஆனால், வங்கியில் சேமித்துவைத்தால், அந்த வங்கியானது பணம் உடனடியாகத் தேவைப்படும் ஒருவரை, அந்தப் பணம் கிடைக்க வட்டி தரத் தயாராக உள்ள ஒருவரைக் கண்டறியும். இவ்வாறாக, வங்கியில் போட்டு வைக்கப்பட்டுள்ள பணத்தில் ஒரு பங்கு, பரிவர்த்தனை செய்யப்படுகிறது. அதாவது, கடனாக வழங்கப்படுகிறது. அப்படி வழங்கப்படும் கடன்தொகைக்கான வட்டியைப் பெறுவதன் மூலம் அந்த வங்கியானது நீங்கள் போட்டுவைக்கும் பணத்திற்கு வட்டியும் வழங்க முடிகிறது.

யாருக்கு பணம் தேவையாக இருக்கிறதோ அவர்கள் வங்கியிலிருந்து கடன் பெற்றுக்கொள்கிறார்கள். அந்தக் கடன் பள்ளி அல்லது கல்லூரிக் கட்டணம் செலுத்த உதவலாம்; தொழில் ஆரம்பிக்க உதவலாம்; உரங்கள் வாங்கப் பயன்படலாம்; வேறு பல பயனுள்ள நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள உதவலாம். இவ்விதமாக, ஒரு வங்கியானது சமூகத்தில் உள்ள மக்கள் தங்களுடைய பணத்தை அமைதியான, ஆதாயமான வழிகளில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் நோக்கத்துடன் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது.

அவருடைய ‘பணப்பெட்டி’ வீங்கிப் புடைத்திருக்கிறது!

ஒவ்வொரு குடும்பமும் தினசரிச் செலவுகளுக்குத் தேவைப்படும் பணத்தை வெவ்வேறு வழிகளில் பத்திரப்படுத்திவைக்கிறது. எல்லாருக்கும் பொதுவான அலமாரியில் ஒரு பிரத்யேகப் பெட்டியில் வைக்கலாம்; அல்லது ஒரு பணப்பையிலோ, மேசையறையிலோ வைக்கக்கூடும். சிலர் குடும்பத்தின் தினசரித் தேவைகளுக்கான பணத்தைச் சமையலறையிலுள்ள ஒரு சிறு பெட்டியில் போட்டுவைத்திருப்பார்கள். ஹீராவின் அம்மா பணத்தை ஒரு பழைய பர்ஸில்தான் போட்டுவைப்பார். “அந்தப் பர்ஸிலிருந்து பத்து ரூபாய் எடுத்துக்கொண்டு போய் சர்க்கரை வாங்கி வா” என்று சில சமயம் தன் மகன் சந்தரிடம் கூறுவார் அவர். சந்தர் சர்க்கரை வாங்கி வந்து, மீதிப் பணத்தை அதே பர்ஸில் போட்டுவிடுவான். விவசாயி பிரசாத் தான் வீட்டில் இல்லாதபோதும், வயலில் வேலை செய்துகொண்டிருக்கும் சமயத்திலும் தன் குடும்பம் பயன்படுத்துவதற்காகத் தன் அம்மாவின் கட்டிலுக்கருகே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் பணத்தைப் போட்டுவைப்பார்.

நான் என் பணத்தைச் சட்டைப் பையில் போட்டு வைப்பேன்.

நான் என் பணத்தைப் பாயின் அடியில் வைப்பது வழக்கம்.

சிலர் சட்டையின் பையைக்கூடத் தினசரித் தேவைக்கான பணத்தைப் பத்திரப்படுத்திவைக்கும் இடமாகப் பயன்படுத்திக்கொள்வார்கள். தாத்தா பணத்தைப் பாயின் அடியில் வைத்துவிட்டு அதை மறந்துவிடுகிறார். பிறகு, தனது படுக்கை சீராக இல்லாமல் வீங்கியிருப்பதால் தன்னால் தூங்க இயலவில்லை என்று புகார் சொல்வார்! இவ்வாறு ஒவ்வொரு குடும்பமும் பணத்தைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கு வெவ்வேறு வழிகளைக் கடைப்பிடித்து வருகின்றது.

எதனால் என் படுக்கை வீங்கிப் புடைத்திருக்கிறது? கண்டுபிடிக்க இயலாது.

இங்கே என் பணம் இருப்பதை யாராலும் கண்டுபிடிக்க இயலாது.

எதனால் என் படுக்கை வீங்கிப் புடைத்திருக்கிறது?

கல்லாப்பெட்டியில் உள்ள பணம்

ஒரு வங்கி அதிகாரி கல்லாப்பெட்டி ஒன்றைப் பராமரித்துவருகிறார். வாடிக்கையாளர்கள் பணத்தை அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும்போது, அந்த அதிகாரி அந்தப் பணத்தை கல்லாப்பெட்டிக்குள் போடுகிறார். வேறு வாடிக்கையாளர்களுக்கு வங்கியிலிருந்து பணம் தரவேண்டியிருக்கும்போது அந்த அதிகாரி அதே கல்லாப் பெட்டியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுக்கிறார். அந்த அதிகாரி வங்கிக் காசாளர் என்று அழைக்கப்படுகிறார். அவர் வரவு-செலவுக் கணக்குப் பதிவேடு ஒன்றில் பணம் பெற்ற, செலுத்திய விவரங்களைக் குறித்துவைக்கிறார். அல்லது, ஒரு கணிணியில் பதிவுசெய்துவைக்கிறார். தன்னிடம் பணம் கொடுத்தவர்கள், தன்னிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் எல்லாருடைய வங்கிக் கணக்கு விவரங்களையும் அவர் தவறாமல் பதிவுசெய்து வைக்கிறார். இவ்வாறு பெற்ற, செலுத்திய பணப்பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் பதிவுசெய்து வைக்கிறார்.

ஒரு கடை, அல்லது பள்ளி, அல்லது அலுவலகத்திலுள்ள காசாளரும் இதேவிதமாகதான் பணப்பரிவர்த்தனைகளைச் செய்துவருகிறார். அவரிடமும் ஒரு கல்லாப் பெட்டி அல்லது பணப் பெட்டி உண்டு. காசாளர் அந்தப் பணப் பெட்டியிலிருந்து அப்பால் விலகியிருக்கும்போது பணப்பரிவர்த்தனை ஏதேனும் நடக்க வழியுண்டா? கண்டிப்பாக முடியாது! எச்சரிக்கையான காசாளர் சில நிமிடங்களே வெளியே போய்வரவேண்டியிருப்பினும் கல்லாப் பெட்டியைத் தவறாமல் பூட்டிவிட்டுதான் செல்வார்!

காசாளர் இல்லாத மாயாஜால கல்லாப்பெட்டி!

பணம் எண்ணித் தரும் தானியங்கி இயந்திரம், பரவலாக ஏடிஎம் என்று அறியப்படும் இந்தத் தானியங்கி இயந்திரம் பணப் பரிவர்த்தனையை எளிதாக்க உதவும் ஒரு நவீன இயந்திரமாகும். இதை எந்த மனிதக் காசாளரும் நிர்வகிப்பதில்லை. இது கணிணிமயமாக்கப்பட்ட இயந்திரம். இந்த ஏடிஎம் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள் அதற்கென்று ஒரு சிறப்பு அட்டையும் வங்கிக்கணக்கும் வைத்திருக்க வேண்டும். அந்த அட்டையை இயந்திரத்திற்குள் நுழைத்ததும், அதிலுள்ள கணிணி செயல்பட்டு வாடிக்கையாளர் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது.

அய்யா, இங்கே எங்கேனும் ஏடிஎம்  இருக்கிறதா?

ATM

பணம் மேற்கொள்ளும் சிறப்புப் பயணங்கள்!

நாம் ஒவ்வொரு முறை பணம் செலுத்தும்போதும் அதற்குப் பிரதியாக வேறு ஒன்றை உடனடியாகப் பெற்றுக்கொள்கிறோம். ஒரு துணிக்கடையில் நீங்கள் ஒரு சட்டையோ அல்லது புடைவையோ பெற்றுக்கொள்ளலாம். விளையாட்டுப் பூங்கா வில் ராட்டினத்தில் ஒரு சுற்று சவாரி செய்துவிட்டு வரலாம் பூங்கா ஒன்றில் நீங்கள் ருசியான பானிபூரி அல்லது பஞ்சுமிட்டாயைப் பெறலாம். ஆனால், சிலவகை பணம் செலுத்துதல்கள் சற்றே வித்தியாசமானவை.

தினசரி, வாராந்தர அல்லது மாதாந்தரச் சவாரிகள்

ஆட்டோ ஓட்டுநர் தாஸ் தினமும் தன்னுடைய ஆட்டோ ரிக்சாவின் உரிமையாளருக்கு ஒரு தொகையைக் கட்டணமாகச் செலுத்துகிறார். பின், நகரில் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு மக்களை ஏற்றிச் செல்கிறார். தினமும் ரூ 150, அல்லது ரூ 300 அல்லது ரூ 500 கூட அவர் சம்பாதிக்கக்கூடும். ஆனால், தினமும் ஆட்டோ உரிமையாளருக்கு அவருடைய ஆட்டோ வண்டியை ஓட்டிச்செல்ல அனுமதிப்பதற்கான கட்டணமாக ரூ 100 தந்துவிடுகிறார் தாஸ்.

வீட்டு வாடகை, முன்பணமாக வீட்டு உரிமையாளரிடம் செலுத்தப்படுகிறது: மாத வாடகை ரூ 3000 எனில், நாம் தினமும் ரூ.100 என்று அவரிடம் செலுத்திவரலாம். ஆனால், இது மிகவும் சிரமம். இதற்குப் பதிலாக, நாம் மாதத்தின் 30 நாட்களுக்கும் சேர்த்து வாடகையை முன்கூட்டியே தந்து விடுகிறோம். மின்கட்டணம் மற்றும் தண்ணீருக்கான கட்டணம் நாம் அவற்றைப் பயன்படுத்தி முடித்தபிறகே செலுத்தப்படுகிறது. இந்த வகையில், அதாவது பணம் தருவதும் அதற்குப் பதிலாக ஒரு பொருள் அல்லது சேவையைப் பெறுவதும் ஒரே சமயத்தில் நிகழாத வேறு பணப் பரிவர்த்தனைகள் யாவை?

உடனடிச் செலவு

மாதாந்திரச் செலவு

வருடாந்தரச் செலவு

- பேருந்துக் கட்டணம்

- சிற்றுண்டிசாலையில் உணவு

- பேனா, பென்சில், பிஸ்கெட் முதலியன

- காய்கறிகள்

- குழாயைப் பழுதுபார்த்தல்

- பேருந்து பாஸ்

- காண்டீன்

- செய்தித்தாள்,

- தண்ணீர்க் கட்டணம், பள்ளிக்கட்டணம்

- பால் கூப்பன்கள்

- நீண்டகாலப் பயன்பாட்டிற்கான பொருள்களை வாங்கியதற்கான மாதத் தவணைகள்.

- காப்பீட்டுத்திட்டம்

- ஒரு வருடத்திற்கான  அரிசி

- வீட்டுவரி

- பள்ளிச்சீருடை,   பாடபுத்தகங்கள்

- குடும்பத்திற்கு மிகவும்

முக்கியமான பண்டிகைக்

கொண்டாட்டசெலவு

நிறைய சாப்பிடுங்கள், நிறைய சேமியுங்கள்!

பணத்தைச் சேமிப்பதற்கான சில வழிகள், உண்டியலில் போட்டுவைப்பது அல்லது வங்கியில் கட்டுவது. பணத்தைச் சேமிக்க வேறு பல வழிகளும் இருக்கின்றன.

சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள், சாப்பிட்டுக்கொண்டேயிருங்கள்!

எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் பழங்களையும் காய்கறிகளையும் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுப்பொருள்களையும் சாப்பிடுங்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் காய்கறிகளை வளர்க்க, வாங்க அல்லது சமைக்க உதவுங்கள். நீங்கள் எத்தனைக்கெத்தனை ஆரோக்கியமாக உள்ளீர்களோ அத்தனைக்கத்தனை குறைவாக உங்கள் குடும்பத்திற்கு மருந்து மாத்திரைகளுக்கான செலவுகள் ஏற்படும்.

சூரிய வெளிச்சத்தில் விளையாடுங்கள்! முடிந்தபோதெல்லாம் வெளியே திறந்த வெளியில் விளையாடுங்கள். அறையில் சூரிய ஒளி படும் இடம் இருக்குமானால், அந்த இடத்தை உங்கள் வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். மின்விளக்கின் உதவியோடு ஓர் இருட்டான பகுதியில் வேலை செய்வதை விட அது மேல்.

மின்சாரத்தைச் சேமியுங்கள்.

யாரும் பயன்படுத்தாதபோது மின்விளக்குகளை, தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிடுங்கள்.

ஓடுங்கள்!

முடியுமானால் பள்ளிக்கு நடந்து செல்லுங்கள். தேவைப்பட்டால் பள்ளிக்கு ஓடிச் செல்லுங்கள். பேருந்துக் கட்டணத்திற்குச் செலவழிப்பதை மிச்சப்படுத்திச் சேமியுங்கள்.

மாதத்தின் முடிவில் கட்டவேண்டிய தொகைகள் ஏராளமாக!

தள்ளுபடிகளும் வரிகளும்

பண்டிகைத் தள்ளுபடிகள் மிகவும் நன்றாக இருக்கின்றன!

சில பணப்பரிவர்த்தனைகள் மிகவும் சிறப்பானவை; முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனெனில், அவை நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகின்றன! நமக்கு விலையில் தள்ளுபடி கிடைக்கும்போது நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தள்ளுபடி என்றால் என்ன? பன்னாலால் உணவு விடுதியில் ஒரு சாப்பாட்டுக்கு ரூ 15 விலை. ஒருவர் அங்கே மாதம்முழுக்க தினமும் சாப்பிட்டால் அவர் பன்னாலாலுக்கு ரூ 450 செலுத்தவேண்டும். வழக்கமாகத் தன் உணவு விடுதியில் சாப்பிட்டுவரும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயித்த விலையைவிடக் குறைவாக வசூலிக்கிறார் அவர். அதாவது, 15 ரூபாய்க்குப் பதிலாக 14 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொள்கிறார். இவ்வாறு தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மாதம் 30 ரூபாய் தள்ளுபடி தருகிறார் பன்னாலால்.

பண்டிகைகளின்போது கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தள்ளுபடி தருவது வழக்கம். அவர்கள் 15% தள்ளுபடி தரக்கூடும். அதாவது, வாங்கும் பொருட்களின் விலையில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் அவர்கள் 15 ரூபாய் குறைவாகப் பெற்றுக்கொள்வார்கள். ஒரு சட்டையில் ரூ 300 என்று விலையிடப்பட்டிருந்தால், அவர்கள் அதை ரூ 45 தள்ளுபடி செய்து விற்பார்கள்.

தள்ளுபடி 50%

இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம்!

பழசைக்கொடுத்து புதுசை வாங்க

வரி நம்முடைய சாலைகளுக்கு நல்லது ஒரு குடும்பத்தின் வருமானம் அந்தக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கிறது. இந்த வருமானத்தின் ஒரு சிறிய பகுதி அரசுக்கு வரியாகத் தரப்படுகிறது. இவ்வாறு அரசால் பெறப்படும் பணம் சாலைகள், பூங்காக்கள், பேருந்து நிறுத்தங்கள், பாலங்கள், மற்றும் பொது மக்கள் அனைவரும் பயன்படுத்திவருகின்ற பிற பொதுவெளிகளைக் கட்டமைக்கவும், சீரமைக்கவும், பழுதுபார்க்கவும் பயன்படுத்தப்படுகிறது.

சாலைப் பராமரிப்பு உங்களுடைய வரிகள் இங்கே வேலைசெய்கின்றன!

போராட்டங்கள், வேலைநிறுத்தங்களின்போது மக்கள் தெருவிளக்குகளின்மீது, பேருந்துகளின்மீது கல்லெறியும்போது அவர்கள் உண்மையில் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவற்றைச் சேதப்படுத்துகிறார்கள். அனைத்துக் குடிமக்களும் செலுத்தும் வரிப்பணத்தில் வாங்கியதைச் சேதப்படுத்துகிறார்கள். ஆக, வரிகள் எனப்படுபவை குடிமக்களுக்கும் அரசுக்கும் இடையே நடைபெறும் பணப்பரிவர்த்தனை ஆகும்.

என் குடும்பம் தந்த வரிகள் இந்தச் சாலை, இந்தப் பூங்கா, இந்தப் பேருந்து நிறுத்தம், என் பள்ளி எல்லாம் கட்ட உதவியது!

பணமே, அங்கே செல்லும்படி உனக்கு நான் உத்தரவிடுகிறேன்!

உங்களுக்குத் தெரியுமா, பணத்தை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நம்மால் அனுப்ப முடியும்.

அக்கா!

நான் என் சகோதரிக்குப் பண அஞ்சல் அனுப்பவேண்டும்.

அண்ணா!

நாரியல்வாடி தபால் அலுவலகம்

இந்தியாவில், ஒருவருக்குப் பணம் அனுப்பிவைக்கச் சிறந்த வழியாக விளங்குவது இந்தியத் தபால் சேவை. ரக்சாபந்தன் பண்டிகையின்போது உங்களுடைய தந்தை இன்னொரு நகரில் வசித்துவரும் தனது சகோதரிக்குப் பணம் அனுப்ப விரும்பினால் அவர் அருகிலுள்ள தபால் அலுவலகத்திற்குச் செல்வார். ஒரு பண அஞ்சல் விண்ணப்பத்தாளை உரிய வகையில் பூர்த்தி செய்து கையொப்பமிட்டுப் பணத்தை அங்கேயுள்ள அலுவலரிடம் தருவார். இந்தப் பணப்பரிவர்த்தனை உங்கள் அத்தை வசித்துவரும் நகரில் உள்ள தபால் அலுவலகத்திற்குத் தெரிவிக்கப்படுகிறது. அந்தத் தபால் அலுவலகம் அதேயளவு தொகையை ஒரு தபால்காரர்மூலம் உங்களுடைய அத்தையிடம் அனுப்பிவைக்கிறது.

இன்று வேறு பல நவீன வழிகளிலும் பணம் பயணப்படுகிறது. அவற்றில் ஒன்று கம்பிப் பரிமாற்றம். இதில் இரண்டு இடங்களுக்கிடையே பரிமாற்றம் நடைபெறுகிறது. அவை இருவேறு கண்டங்களிலுள்ள இடங்களாகவும் இருக்கலாம்! கணிணிபோன்ற நவீன தொழில்நுட்பங்கள் இந்தப் பரிவர்த்தனைகளை விரைவாகவும் துல்லியமாகவும் சுலபமாகவும் செய்துதருகின்றன.

பணம் பயணப்படப் பணம் செலுத்துதல்

ஒரு நபரோ அல்லது நிறுவனமோ பணப்பரிவர்த்தனை நடைபெற உதவும்போது அதற்காக நாம் அவர்களுக்கு ஒரு பரிமாற்றக் கட்டணம் செலுத்துகிறோம். பரிமாற்றத்தின் நோக்கம், அளவு போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் இந்தக் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

வகுத்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் கீழ்தான் இந்தப் பரிமாற்றங்கள் செய்யப்படுகின்றன என்பதை உறுதிசெய்பவர் யார்? இதுபற்றி அறிய ‘பணத்தை நிர்வகிப்பவர்கள்’ புத்தகத்தை வாசிக்கவும்.

ஒரு நாணயம் அல்லது ஒரு பத்து ரூபாய்த் தாளைப் பற்றி எண்ணிப்பாருங்கள். இந்த நாணயம் எங்கெல்லாம் பயணப்பட்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் அளவில் ஒரு கதையைப் படம் வரைந்து காட்டுங்கள்.