paravaigal en thalai vaaruvathillai

பறவைகள் ஏன் தலை வாருவதில்லை?

சில பறவைகளுக்கு முடி வேடிக்கையாக நீட்டிக்கொண்டிருக்கும். உங்களுக்கு அப்படி முடி இருந்தால் என்ன செய்வீர்கள்? மனதைக் கவரும் முடியுடைய பறவைகள் சிலவற்றை இந்தப் புத்தகத்தில் சந்திக்கலாம், வாருங்கள்.

- Malarkody

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கொண்டைக்குருவிகள் ஏன் தலை வாருவது இல்லை? அவற்றின் முடி சிறு அலையைப் போல் இருக்கிறது.

எனக்கு கொண்டைக்குருவிகளைப் போல்முடி இருந்தால் கிளிப் போட்டுக்கொள்வேன்.

கொண்டலாத்திகள் ஏன் தலை சீவுவது இல்லை? அவற்றின் முடி மடிப்பு விசிறியைப் போல் உள்ளது.

எனக்கு கொண்டலாத்தியைப் போல் முடி இருந்தால் பின்னுக்குத் தள்ளி ஹேர்பேண்ட் அணிந்துகொள்வேன்.

எனக்கு கரண்டிவாயனைப் போல் முடி இருந்தால் நன்கு இழுத்துப் பின்னிக்கொள்வேன்.

கரண்டிவாயன்கள் ஏன் கூந்தலை வாருவதில்லை? அவற்றின் முடி பழைய தூரிகையைப் போல் தோன்றுகிறது.

சிங்காரக்கோழிகள் தலை வாருவதில்லையே, ஏன்? அவற்றின் முடி துடைப்பம் போல் உள்ளது.

எனக்கு சிங்காரக்கோழியைப் போல் முடி இருந்தால் ரிப்பனால் நன்கு கட்டிக்கொள்வேன்.

பூமன் ஆந்தைகள் ஏன் முடியை வாருவதில்லை? அவற்றின் முடி இரண்டு புசுபுசு புழுக்களைப் போலிருக்கிறது.

எனக்கு பூமன் ஆந்தைகளைப் போல் முடி இருந்தால் இரட்டை குதிரைவால் சடை போட்டுக்கொள்வேன்.

கொண்டை கரிச்சான்கள் ஏன் தலை சீவுவது இல்லை? அவற்றின் முடி கலைத்துப்போட்ட துடைப்பானைப் போல் உள்ளது.

எனக்கு கொண்டை கரிச்சான்களைப் போல் முடி இருந்தால் நன்றாக எண்ணெய் தேய்த்து படிய சீவிக்கொள்வேன்.

இருவாச்சிக்கு தலைவார முடியில்லையே ஏன்? அது தலைக்கவசம் அணிந்திருப்பதுபோல் இருக்கிறது.

எனக்கு இருவாச்சியைப் போல் முடி இருந்தால் நாள் முழுவதும் மோட்டார் சைக்கிளில் சுற்றி வருவேன்.

பாறு கழுகுகளுக்கு முடியே இல்லை ஏன்? அவை மொட்டையாக இருக்கின்றன.

எனக்கு பாறு கழுகைப் போல் தலை இருந்தால் தலை சீவ வேண்டிய வேலையே இருக்காது.

வேடிக்கையான முடியுடைய பறவைகளைச் சந்தியுங்கள்:

கொண்டலாத்தி(Common Hoopoe)

கருங்கழுத்து பாறு கழுகு(Indian Vulture)

இமாலய சிங்காரக்கோழி (Himalayan Monal)

கரண்டிவாயன்(Eurasian Spoonbill)

செம்மீசை கொண்டைக்குருவி(Red-whiskered Bulbul)

பூமன் ஆந்தை(Brown Fish Owl)

கொண்டை கரிச்சான்(Racket-tailed Drongo)

இருவாச்சி(Great Indian Hornbill)

கொண்டைகள் பல பயன்களைக் கொண்டவை. அவை பறவைகளுக்கு அழகூட்டுகின்றன. சில பறவைகள் கொண்டையை விரித்தும் மடித்தும் மற்ற பறவைகளுக்கு சமிக்ஞை கொடுக்கின்றன. சில பறவைகள், கொண்டையை விரித்து மற்ற பறவைகளையும் உயிரினங்களையும் பயமுறுத்தி விரட்டுகின்றன.

சில பறவைகள் பார்ப்பதற்கு தலையில் முடியுடன் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால், அவற்றின் முடி நம்முடையதை போன்றது அல்ல. ஒவ்வொரு முடியும் மென்மையான இறகுதான். அவற்றை கொண்டை எனலாம்.

பறவைகளுக்கு உண்மையிலேயே முடி உண்டா?

இருவாச்சியின் தலைக்கவசம், கொம்பலகு அல்லது கேஸ்க்(casque) எனப்படும். காதுத்தூவிகளையும் கொண்டைகளையும் போலவே, கொம்பலகு இருவாச்சிக்கு நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது. அவை இணைதேடவும் உதவுகிறது. இருவாச்சிகளின் கொம்பலகு அதன் அலகை வலுவாக்குகிறது. வலுவான அலகால் அவை பழங்களை எளிதாகக் கொத்தித் தின்ன முடிகிறது.

இந்த ஆந்தைகளின் தலையிலுள்ள புசுபுசு புழுவைப் போன்ற முடிக்கு காதுத்தூவிகள் என்று பெயர். அவை உண்மையான காதுகள் அல்ல, இறகுகளால் மூடப்பட்ட தோல்தான். மரத்தோடு மரமாக ஆந்தைகள் ஒன்றி, மறைந்து வாழ்வதற்கு இவை உதவுகின்றன. ஆந்தைகளின் இந்த காதுத்தூவிகள், சக ஆந்தைகளுக்கு அழகாகவும் மற்ற பறவைகளுக்கும் உயிரினங்களுக்கும் பயத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன.