partheepan kanavu (muthal paagam)

பார்த்திபன் கனவு (முதல் பாகம்)

பார்த்திபன் கனவு, கல்கி கிருஷ்ணமூர்த்தி கல்கி இதழில் தொடராக எழுதிய புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் கனவு அவரின் புத்திரன் மூலம் எவ்வாறு நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்ம பல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

1. தோணித்துறை

காவேரி தீரம் அமைதி கொண்டு விளங்கிற்று. உதயசூரியனின் செம்பொற் கிரணங்களால் நதியின் செந்நீர்ப் பிரவாகம் பொன்னிறம் பெற்றுத் திகழ்ந்தது. அந்தப் புண்ணிய நதிக்குப் 'பொன்னி' என்னும் பெயர் அந்த வேளையில் மிகப் பொருத்தமாய்த் தோன்றியது. சுழிகள் - சுழல்களுடனே விரைந்து சென்றுகொண்டிருந்த அந்தப் பிரவாகத்தின் மீது காலை இளங்காற்று தவழ்ந்து விளையாடி இந்திர ஜால வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தது. சின்னஞ்சிறு அலைகள் ஒன்றோடொன்று லேசாக மோதிய போது சிதறி விழுந்த ஆயிரமாயிரம் நீர்த்துளிகள் ஜாஜ்வல்யமான ரத்தினங்களாகவும், கோமேதகங்களாகவும், வைரங்களாகவும், மரகதங்களாகவும் பிரகாசித்துக் காவேரி நதியை ஒரு மாயாபுரியாக ஆக்கிக் கொண்டிருந்தன.

ஆற்றங்கரையில் ஆலமரங்கள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் விழுதுகள் விட்டு விசாலமாய்ப் படர்ந்திருந்தன. மரங்களில் பழைய இலைகள் எல்லாம் உதிர்ந்து புதிதாய்த் தளிர்விட்டிருந்த காலம். அந்த இளந் தளிர்களின் மீது காலைக் கதிரவனின் பொற்கிரணங்கள் படிந்து அவற்றைத் தங்கத் தகடுகளாகச் செய்து கொண்டிருந்தன.

கண்ணுக்கெட்டிய தூரம் தண்ணீர் மயமாய்த் தோன்றிய அந்த நதியின் மத்தியில் வடகிழக்குத் திசையிலே ஒரு பசுமையான தீவு காணப்பட்டது. தீவின் நடுவில் பச்சை மரங்களுக்கு மேலே கம்பீரமாகத் தலை தூக்கி நின்ற மாளிகையின் தங்கக் கலசம் தகதகவென்று ஒளிமயமாய் விளங்கிற்று.

அந்த மனோகரமான காலை நேரத்தில் அங்கு எழுந்த பலவகைச் சத்தங்கள் நதி தீரத்தின் அமைதியை நன்று எடுத்துக்காட்டுவனவாயிருந்தன. விசாலமான ஆலமரங்களில் வாழ்ந்த பறவை இனங்கள் சூரியோதயத்தை வரவேற்றுப் பற்பல இசைகளில் கீதங்கள் பாடின. அந்த இயற்கைச் சங்கீதத்துக்கு நதிப் பிரவாகத்தின் 'ஹோ' என்ற ஓசை சுருதி கொடுத்துக் கொண்டிருந்தது. உணவு தேடும் பொருட்டு வெளியே கிளம்புவதற்கு ஆயத்தமான பறவைகள் தம் சிறகுகளை அடித்து ஆர்ப்பரித்தன. தாய்ப் பறவைகள் குஞ்சுகளிடம் கொஞ்சிக் கொஞ்சி விடைபெற்றுக் கொண்டிருந்தன.

ஆலமரங்களுக்கு நடுவே ஓங்கி வளர்ந்திருந்த அரச மரம் தன் இலைகளைச் சலசலவென்று ஓசைப்படுத்தி 'நானும் இருக்கிறேன்' என்று தெரியப்படுத்திற்று.

நதி ஓரத்தில் ஆலம் விழுதுகளில் கட்டிப் போட்டிருந்த தெப்பங்களைத் தண்ணீர்ப் பிரவாகம் அடித்துக் கொண்டு போவதற்கு எவ்வளவோ வீராவேசத்துடன் முயன்றது; அது முடியாமற் போகவே, 'இருக்கட்டும், இருக்கட்டும்' என்று கோபக் குரலில் இரைந்து கொண்டே சென்றது.

கரையில் சற்றுத் தூரத்தில் ஓர் ஆலமரத்தினடியில் குடிசை வீடு ஒன்று காணப்பட்டது. அதன் கூரை வழியாக அடுப்புப் புகை வந்து கொண்டிருந்தது. அடுப்பில் கம்பு அடை வேகும் வாசனையும் லேசாக வந்தது.

குடிசையின் பக்கத்தில் கறவை எருமை ஒன்று படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தது. அதன் கன்று அருகில் நின்று தாய் அசைபோடுவதை மிக்க ஆச்சரியத்துடனே உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

டக்டக், டக்டக், டக்டக்!

அந்த நதிதீரத்தின் ஆழ்ந்த அமைதியைக் கலைத்துக் கொண்டு குதிரைக் குளம்படியின் சத்தம் கேட்டது.

டக்டக், டக்டக், டக்டக்...!

வரவர அந்தச் சத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதோ வருகிறது, நாலு கால் பாய்ச்சலில் ஒரு கம்பீரமான குதிரை. அதன் மேல் ஆஜானுபாகுவான வீரன் ஒருவன் காணப்படுகிறான். வந்த வேகத்தில் குதிரையும் வீரனும் வியர்வையில் முழுகியிருக்கிறார்கள். தோணித்துறை வந்ததும் குதிரை நிற்கிறது. வீரன் அதன் மேலிருந்து குதித்து இறங்குகிறான்.

குடிசைக்குள்ளே இளம் பெண் ஒருத்தி அடுப்பில் அடை சுட்டுக் கொண்டிருந்தாள். அருகில் திடகாத்திரமான ஒரு வாலிபன் உட்கார்ந்து, தைத்த இளம் ஆலம் இலையிலே போட்டிருந்த கம்பு அடையைக் கீரைக் குழம்புடன் ருசி பார்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு தடவை அவன் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டு "அடி வள்ளி, இன்னும் எத்தனை நாளைக்கு உன் கையால் கம்பு அடையும் கீரைக் குழம்பும் சாப்பிட எனக்குக் கொடுத்து வைத்திருக்கிறதோ தெரியவில்லை!" என்றான்.

"தினம் போது விடிந்தால் நீ இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறாய். இன்னொரு தடவை சொன்னால் இதோ இந்த அடுப்பை வெட்டி காவேரியில் போட்டுவிடுவேன் பார்!" என்றாள் அந்தப் பெண்.

"நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, வள்ளி! மகாராஜாவும் மகாராணியும் நேற்றுப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டேன். யுத்தம் நிச்சயமாக வரப் போகிறது" என்றான் வாலிபன்.

"யுத்தம் வந்தால் உனக்கு என்ன என்றுதான் கேட்கிறேன். உன்னை யார் யுத்தத்துக்கு அழைக்கிறார்கள்? உன்பாட்டுக்குப் படகோட்டிக்கொண்டு இருக்க வேண்டியதுதானே?"

"அதுதான் இல்லை. நான் மகாராஜாவின் காலிலே விழுந்து கேட்டுக் கொள்ளப் போகிறன். என்னையும் யுத்தத்துக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்லி."

"நான் உன் காலிலே விழுந்து என்னையும் உன்னோடு அழைத்துக் கொண்டு போ என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன். அதற்கு உனக்கு இஷ்டமில்லாவிட்டால் - காவேரி ஆற்றோடு போனவளை எடுத்துக் காப்பாற்றினாயோ இல்லையோ - மறுபடியும் அந்தக் காவேரியிலே இழுத்து விட்டு விட்டுப் போய்விடு."

"அதுதான் சரி வள்ளி! சோழ தேசம் இப்போது அப்படித்தான் ஆகிவிட்டது. பெண்பிள்ளைகள் யுத்தத்துக்குப் போகவேண்டியது; ஆண் பிள்ளைகள் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டிருக்க வேண்டியது.... இரு, இரு குதிரை வருகிற சத்தம் போல் கேட்கிறதே."

ஆம்; அந்தச் சமயத்தில்தான் 'டக்டக், டக்டக்' என்ற குதிரைக் காலடியின் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தினால் அவ் வாலிபனின் உடம்பில் ஒரு துடிப்பு உண்டாயிற்று. அப்படியே எச்சிற் கையோடு எழுந்தான். வாசற்புறம் ஓடினான்.

அங்கே அப்போது தான் குதிரை மீதிருந்து இறங்கிய வீரன், "பொன்னா! மகாராஜாவுக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறேன். சீக்கிரம் தோணியை எடு" என்றான்.

பொன்னன் "இதோ வந்து விட்டேன்!" என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடினான். அச்சமயம் வள்ளி சட்டுவத்தில் இன்னொரு அடை தட்டுவதற்காக மாவை எடுத்துக் கொண்டிருந்தாள். "வள்ளி! உறையூரிலிருந்து செய்தி கொண்டு வந்திருக்கிறான். அவசரச் சேதியாம், நான் போய் வருகிறேன்" என்றான் பொன்னன்.

"நல்ல அவசரச் சேதி! அரை வயிறுகூட நிரம்பியிராதே? எனக்குப் பிடிக்கவே இல்லை" என்று வள்ளி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

"அதற்கென்ன செய்கிறது, வள்ளி! அரண்மனைச் சேவகம் என்றால் சும்மாவா?" என்று பொன்னன் சொல்லிக் கொண்டே அவளுடைய சமீபம் சென்றான். கோபம் கொண்ட அவளது முகத்தைத் தன் கைகளால் திருப்பினான். வள்ளி புன்னகையுடன் தன் முகத்தின் மேல் விழுந்திருந்த கூந்தலை இடது கையால் எடுத்துச் சொருக்குப் போட்டுக் கொண்டு, "சீக்கிரம் வந்துவிடுகிறாயா?" என்று சொல்லி விட்டுப் பொன்னனை அண்ணாந்து பார்த்தாள். பொன்னன் அவளுடைய முகத்தை நோக்கிக் குனிந்தான். அப்போது வெளியிலிருந்து "எத்தனை நேரம் பொன்னா?" என்று கூச்சல் கேட்கவே, பொன்னன் திடுக்கிட்டவனாய், "இதோ வந்து விட்டேன்!" என்று கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடினான்.

2. ராஜ குடும்பம்

பொன்னன் போன பிறகு, வள்ளி வீட்டுக் காரியங்களைப் பார்க்கத் தொடங்கினாள். குடிசையை மெழுகிச் சுத்தம் செய்தாள். மரத்தடியில் கட்டியிருந்த எருமை மாட்டைக் கறந்து கொண்டு வந்தாள். பிறகு காவேரியில் மரக் கிளைகள் தாழ்ந்திருந்த ஓரிடத்திலே இறங்கிக் குளித்து விட்டு வந்தாள். சேலை மாற்றிக் கொண்ட பிறகு மறுபடியும் அடுப்பு மூட்டிச் சமையல் செய்யத் தொடங்கினாள்.

ஆனால், அவளுடைய மனது என்னமோ பரபரவென்று அலைந்து கொண்டிருந்தது. அடிக்கடி குடிசை வாசலுக்கு வந்து தன்னுடைய கரிய பெரிய கண்களைச் சுழற்றி நாலாபுறமும் பார்த்துவிட்டு உள்ளே போனாள். ஏதோ விசேஷ சம்பவங்கள் நடக்கப் போகின்றன என்று ஆவலுடன் எதிர்பார்த்தவளாய்த் தோன்றினாள்.

அவள் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் உறையூர்ப் பக்கத்திலிருந்து பத்துப் பதினைந்து குதிரை வீரர்கள் வந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் அழகாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு வெள்ளைப் புரவிகளும் ஒரு தந்தப் பல்லக்கும் வந்தன. அந்த வெண் புரவிகளின் மேல் யாரும் வீற்றிருக்கவில்லை; பல்லக்கும் வெறுமையாகவே இருந்தது. திடகாத்திர தேகிகளான எட்டுப்பேர் பல்லக்கைச் சுமந்து கொண்டு வந்தார்கள்.

எல்லாரும் தோணித்துறைக்குச் சற்று தூரத்தில் வந்து நின்றார்கள்; பல்லக்குக் கீழே இறக்கப்பட்டது. குதிரை மீதிருந்தவர்களும் கீழே இறங்கிக் குதிரைகளை மரங்களில் கட்டினார்கள்.

இதையெல்லாம் குடிசை வாசலில் நின்று வள்ளி கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் அப்படி நிற்பதைப் பார்த்த வீரர்களில் ஒருவன், "அண்ணே! வள்ளியிடம் தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு வரலாம்" என்றான்.

"அடே, வேலப்பா! காவேரி நிறையத் தண்ணீர் போகிறது. வள்ளியிடம் என்னத்திற்காகத் தண்ணீர் கேட்கப் போகிறாய்?" என்றான் மற்றவன்.

"இருந்தாலும் வள்ளியின் கையால் தண்ணீர் குடிப்பது போல ஆகுமா, அண்ணே!"

இப்படி பேசிக் கொண்டு இருவரும் குடிசையருகில் வந்து சேர்ந்தார்கள்.

"வள்ளி! கொஞ்சம் தாகத்துக்குத் தண்ணீர் தருகிறாயா?" என்று வேலப்பன் கேட்டான்.

வள்ளி உள்ளே விரைவாகச் சென்று சட்டியில் மோர் எடுத்துக் கொண்டு வந்து இரண்டு பேருக்கும் கொடுத்தாள். அவர்கள் குடிக்கும்போதே "மகாராஜா இன்றைக்கு உறையூருக்குப் போகிறாராமே? ஏன் இவ்வளவு அவசரம்? இந்த மாதமெல்லாம் அவர் 'வசந்த மாளிகையில்' இருப்பது வழக்கமாயிற்றே?" என்று கேட்டாள்.

"எங்களை ஏன் கேட்கிறாய், வள்ளி? உன்னுடைய புருஷனைக் கேட்கிறதுதானே? படகோட்டி பொன்னனுக்குத் தெரியாத ராஜ ரகசியம் என்ன இருக்கிறது?" என்றான் வேலப்பன்.

"காலையில் சாப்பிட உட்கார்ந்தார்; அதற்குள் அவசரமாய் ஆள் வந்து, மகாராஜாவுக்குச் சேதி கொண்டு போக வேண்டுமென்று சொல்லவே, எழுந்து போய் விட்டார். சரியாகச் சாப்பிடக் கூட இல்லை!" என்றாள் வள்ளி.

"பாரப்பா, புருஷன் பேரில் உள்ள கரிசனத்தை! பெண்சாதி என்றால் இப்படியல்லவோ இருக்க வேணும்!" என்றான் வேலப்பன். வள்ளியின் கன்னங்கள் வெட்கத்தால் குழிந்தன. "சரிதான் போங்கள்! பரிகாசம் போதும்" என்றாள்.

"இல்லை வள்ளி! இந்த மாதிரி பரிகாசமெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்குச் செய்யப் போகிறோம்?" என்றான் வேலப்பன்.

"ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? என்ன சமாசாரம் என்றுதான் சொல்லுங்களேன்!" என்றாள் வள்ளி.

"பெரிய யுத்தம் வரப்போகிறதே, தெரியாதா உனக்கு?"

"ஆமாம்; யுத்தம் யுத்தம் என்றுதான் பேச்சு நடக்கிறது. ஆனால் என்னத்துக்காக யுத்தம் என்றுதான் தெரியவில்லை."

"நாலைந்து வருஷமாய் நமது மகாராஜா, காஞ்சி நரசிம்மவர்ம சக்கரவர்த்திக்குக் கப்பம் கட்டவில்லை. வடக்கே படையெடுத்துப் போயிருந்த சக்கரவர்த்தி திரும்பி வந்து விட்டாராம்; நமது மகாராஜா நாலு வருஷமாய்க் கப்பம் கட்டாததற்கு முகாந்திரம் கேட்பதற்காகத் தூதர்களை அனுப்பியிருக்கிறாராம். அவர்கள் இன்றைக்கு வந்து சேர்வார்களாம்" என்றான் வேலப்பன்.

"இதற்காக யுத்தம் ஏன் வரவேண்டும்? நாலு வருஷத்துக் கப்பத்தையும் சேர்த்துக் கொடுத்து விட்டால் போகிறது!" என்றாள் வள்ளி.

"அதுதான் நம்முடைய மகாராஜாவுக்கு இஷ்டமில்லை. முன் வைத்த காலைப் பின்வைக்க முடியாது என்கிறார்."

இப்படி இவர்கள் பேசிக்கொண்டேயிருக்கும் போது நடு ஆற்றில் படகு வருவது தெரிந்தது. வேலப்பனும் இன்னொருவனும் உடனே திரும்பிப் போய் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கெல்லாம் படகு துறையை அடைந்தது. இது பொன்னன் போகும்போது தள்ளிக்கொண்டு போன சாதாரணப் படகல்ல; அழகிய வேலைப்பாடுகளுடன் ஒரு பக்கம் விமானம் அமைத்துச் செய்திருந்த ராஜ படகு. படகின் விமானத்தில் மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்ததும் ராஜகுடும்பத்தினர் என்று தெரிந்து கொள்ளலாம். பார்த்திப சோழ மகாராஜாவும், அருள்மொழி மகாராணியும், இளவரசர் விக்கிரமனுந்தான் அவர்கள்.

அறையில் பூண்ட உடைவாளும், கையில் நெடிய வேலாயுதம் தரித்த ஆஜானுபாகுகளான இரண்டு மெய்க்காவலர்கள் படகின் இரு புறத்திலும் நின்று கொண்டிருந்தார்கள். பொன்னனும் இன்னொருவனும் படகு தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

படகு கரை சேர்ந்ததும், மெய்க்காவலர்கள் இருவரும் முதலில் இறங்கி, "ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜகம்பீர, சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா, பராக்!" என்று கூவினார்கள். கரையில் நின்ற வீரர்கள் அவ்வளவு பேரும் கும்பிட்ட கைகளுடன் "மகாராஜா வெல்க" என்று எதிரொலி செய்தார்கள்.

படகைவிட்டு இறங்கியதும் மகாராஜா பொன்னனுடைய குடிசைப் பக்கம் நோக்கினார். குடிசை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் பேரில் அவருடைய பார்வை விழுந்தது. உடனே கையினால் சமிக்ஞை செய்து அழைத்தார். வள்ளி விரைவாக ஓடிவந்து தண்டனிட்டாள். மகாராஜா எழுந்திருக்கச் சொன்னவுடன் எழுந்து பொன்னனுக்குப் பின்னால் அடக்க ஒடுக்கத்துடன் நின்றாள். "வள்ளி! உன்னைப் பொன்னன் நன்றாகப் பார்த்துக் கொள்கிறானா?" என்று மகாராஜா கேட்டார். வள்ளி தலையைக் குனிந்து கொண்டு புன்னகை செய்தாள். பதில் சொல்ல அவளுக்கு நா எழவில்லை. அப்போது மகாராணி "அவளை அப்படி நீங்கள் கேட்டிருக்கக்கூடாது; பொன்னனை நீ நன்றாகப் பார்த்துக் கொள்கிறாயா?" என்று கேட்டால் பதில் சொல்லுவாள்" என்றாள்.

மகாராஜா சிரித்துவிட்டு "வள்ளி! மகாராணி சொன்னது காதில் விழுந்ததா? பொன்னனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள். அந்தண்டை இந்தண்டை போக விடாதே. உன்னை வெள்ளத்திலிருந்து கரை சேர்த்தது போல் இன்னும் யாரையாவது கொண்டு வந்து கரை சேர்த்து வைக்கப் போகிறான்!" என்றார்.

வள்ளிக்கு வெட்கம் ஒரு பக்கமும், சந்தோஷம் ஒரு பக்கமும் பிடுங்கித் தின்றன. தேகம் நூறு கோணலாக வளைந்தது.

ஆனால், பொன்னனோ இந்த ஹாஸ்யப் பேச்சைக் கவனித்ததாகவே தெரியவில்லை. அவன் இரு கரங்களையும் கூப்பி, "மகாராஜா! ஒரு வரங் கொடுக்க வேணும்! யுத்தத்துக்கு மகாராஜா போகும்போது அடிமையையும் அழைத்துப் போகவேணும்" என்றான்.

மகாராஜா சற்று நிதானித்தார். பிறகு சொன்னார்: "பொன்னா! உன்னுடைய மனது எனக்குத் தெரியும். ஆனாலும் நீ கேட்ட வரம் கொடுக்க முடியாது. நீ இங்கே தான் இருக்க வேண்டும். போர்க்களத்திலிருந்து நான் திரும்பி வராவிட்டால், இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன் தெரிகிறதா?" என்றார். இதைக் கேட்டதும் பொன்னன் வள்ளி இருவருடைய கண்களிலும் நீர் ததும்பிற்று. மகாராணி அருள்மொழித் தேவி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள். அவளுடைய உள்ளத்தில் என்னென்ன சிந்தனைகள் கொந்தளித்து எழுந்தனவோ, யார் கண்டது!

மகாராஜாவும் பரிவாரங்களும் வெகு தூரம் போன பிறகுதான் வள்ளி பழைய வள்ளியானாள். அப்போது பொன்னனைப் பார்த்து, "பார்த்தாயா! மகாராஜா என்ன சொன்னார்கள்! என்னைக் கேட்காமல் அந்தண்டை இந்தண்டை போகக்கூடாது தெரியுமா?" என்றாள்.

"அப்படியானால் இப்போதே கேட்டு விடுகிறேன். வள்ளி, இன்று மத்தியானம் நான் உறையூர் போகவேண்டும்" என்றான் பொன்னன்.

"உறையூரிலே என்ன?" என்று வள்ளி கேட்டாள்.

"இன்றைக்குப் பெரிய விசேஷமெல்லாம் நடக்கப் போகிறது. காஞ்சியிலிருந்து கப்பம் கேட்பதற்காகத் தூதர்கள் வரப்போகிறார்களாம். மகாராஜா 'முடியாது' என்று சொல்லப் போகிறாராம். நான் கட்டாயம் போக வேணும்" என்றான் பொன்னன்.

அப்போது வள்ளி இரு கரங்களையும் குவித்துக் கொண்டு குரலைப் பொன்னன் குரல்போல் மாற்றிக் கொண்டு, "மகாராஜா! எனக்கு ஒரு வரம் கொடுக்க வேணும்; மகாராஜா யுத்தத்துக்குப் போனால் அடிமையையும் அழைத்துப் போகவேணும்" என்றாள்.

"சே, போ! இப்படி நீ பரிகாசம் செய்வதாயிருந்தால் நான் போகவில்லை" என்றான் பொன்னன்.

இந்த உறுதியுடனேயே பொன்னன் சாவகாசமாகக் காவேரியாற்றில் இறங்கி நீந்திக் கொம்மாளம் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால், கொஞ்ச நேரத்துக்கெல்லாம் "டக்டக், டக்டக்" என்ற குதிரைகளின் குளம்புச் சத்தம் கேட்டதும் அவனுக்குச் சொல்ல முடியாத பரபரப்பு உண்டாயிற்று. கரையேறி ஓடி வந்து பார்த்தான். வள்ளியும் குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்தாள். சிறிது நேரத்துக்கெல்லாம் முதலில் ஒரு குதிரையும், பின்னால் நாலு குதிரைகளும் கிழக்குத் திசையிலிருந்து அதிவேகமாய் வந்தன. முதல் குதிரையின் மேல் இருந்தவன் கையில் சிங்க உருவம் வரைந்து கொடி பிடித்துக் கொண்டிருந்தான். குதிரைகள் உறையூரை நோக்கிப் பறந்தன.

"சிங்கக் கொடி போட்டுக் கொண்டு போகிறார்களே, இவர்கள் யார்?" என்று வள்ளி கேட்டாள்.

மெய்ம்மறந்து நின்ற பொன்னன், திடுக்கிட்டவனாய் "வள்ளி! இவர்கள்தான் பல்லவ தூதர்கள், நான் எப்படியும் இன்று உறையூர் போகவேணும், நீயும் வேணுமானால் வா! உன் பாட்டனையும் பார்த்ததுபோல இருக்கும்" என்றான்.

3. பல்லவ தூதர்கள்

பொன்னனும் வள்ளியும் தங்கள் குடிசையின் கதவைப் பூட்டிக் கொண்டு உறையூரை நோக்கிக் கிளம்பினார்கள். அவர்கள் வசித்த தோணித் துறையிலிருந்து உறையூர் மேற்கே ஒரு காத தூரத்தில் இருந்தது. அந்தக் காலத்தில் - அதாவது சுமார் ஆயிரத்தி முந்நூறு வருஷங்களுக்கு முன்பு - செந்தமிழ் நாட்டில் ரயில் பாதைகளும் ரயில் வண்டிகளும் இல்லை; மோட்டார் வண்டிகளும் தார் ரோடுகளும் இல்லை. (இவையெல்லாம் அந்த நாளில் உலகில் எந்த நாட்டிலுமே கிடையாது) அரசர்களும் பிரபுக்களும் குதிரைகள் மீதும் யானைகள் மீதும் ஆரோகணித்துச் சென்றனர். குதிரை பூட்டிய ரதங்களிலும் சென்றனர். மற்ற சாதாரண மக்கள் நாட்டு மாட்டு வண்டிகளில் பிரயாணம் செய்தார்கள். இந்த வாகனங்களெல்லாம் போவதற்காக விஸ்தாரமான சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. குளிர்ந்த நிழல் தரும் மரங்கள் இருபுறமும் அடர்ந்து வளர்ந்த அழகான சாலைகளுக்குச் சோழவள நாடு அந்தக் காலத்திலே பெயர் போனதாயிருந்தது. அந்தச் சாலைகளுக்குள்ளே காவேரி நதியின் தென்கரையோரமாகச் சென்ற, ராஜபாட்டை மிகப் பிரசித்தி பெற்றிருந்தது.

இந்த ராஜபாட்டை வழியாகத்தான் பொன்னனும் வள்ளியும் சோழ நாட்டின் தலைநகரமான உறையூருக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

சோழநாடு அந்த நாளில் தன்னுடைய புராதனப் பெருமையை இழந்து ஒரு சிற்றரசாகத்தான் இருந்தது. தெற்கே பாண்டியர்களும் வடக்கே புதிதாகப் பெருமையடைந்திருந்த பல்லவர்களும் சோழ நாட்டை நெருக்கி அதன் பெருமையைக் குன்றச் செய்திருந்தார்கள். ஆனால், சோழ நாட்டின் வளத்தையும் வண்மையையும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வளத்துக்குக் காரணமாயிருந்த காவேரி நதியையும் அவர்களால் கொள்ளை கொண்டு போக முடியவில்லை. உறையூர் ராஜபாட்டையின் இருபுறமும் பார்த்தால் சோழ நாட்டு நீர் வளத்தின் பெருமையை ஒருவாறு அறிந்து கொள்ளும் படியிருந்தது. ஒரு புறத்தில் கரையை முட்டி அலை மோதிக்கொண்டு கம்பீரமாய்ச் சென்ற காவேரியின் பிரவாகம்; ஆற்றுக்கு அக்கரையில் நீல வானத்தைத் தொட்டுக் கொண்டிருந்த அடர்த்தியான தென்னை மரத் தோப்புகளின் காட்சி; இந்தப் புறம் பார்த்தாலோ கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை, பசுமை, பசுமைதான். கழனிகளெல்லாம் பெரும்பாலும் நடவு ஆகியிருந்தன. இளம் நெற்பயிர்கள் மரகதப் பச்சை நிறம் மாறிக் கரும் பசுமை அடைந்து கொண்டிருந்த காலம். 'குளு குளு' சத்தத்துடன் ஜலம் பாய்ந்து கொண்டிருந்த மடைகளில் ஒற்றைக் காலால் தவம் செய்து கொண்டிருந்த வெள்ளை நாரைகள் இளம் பயிர்களின் பசுமை நிறத்தை இன்னும் நன்றாய் எடுத்துக்காட்டின. நெல் வயல்களுக்கு மத்தியில் ஆங்காங்கே சில வாழைத் தோட்டங்களும், தென்னந் தோப்புகளும் கரும்புக் கொல்லைகளும் காணப்பட்டன.

இத்தகைய வளங்கொழிக்கும் அழகிய நாட்டின் அமைதியைக் குலைப்பதற்கு யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தது. இதனால் சோழ நாட்டுக் குடிகளின் உள்ளம் எவ்வளவு தூரம் பரபரப்பு அடைந்திருந்ததென்பதைப் பொன்னனும் வள்ளியும் உறையூர்ப் பிரயாணத்தின் போது நன்கு கண்டார்கள். பக்கத்துக் கழனிகளில் வேலை செய்து கொண்டிருந்த உழவர்களும், பயிர்களுக்குக் களைபிடுங்கிக் கொண்டிருந்த ஸ்திரீகளும், பொன்னனையும் வள்ளியையும் கண்டதும் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடோ டியும் வந்தார்கள்.

"பொன்னா! என்ன சேதி?" என்று சிலர் ஆவலுடன் கேட்டார்கள். "சண்டை நிச்சயந்தானா?" என்று சிலர் விசாரித்தார்கள். "தூதர்கள் வந்த சமாசாரம் ஏதாவது தெரியுமா?" என்று வினவினார்கள். பொன்னன் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாய்ப் பதில் சொன்னான். "சண்டையைப் பற்றிச் சந்தேகம் என்ன, நமது மகாராஜா ஒரு நாளும் கப்பம் கட்டப் போவதில்லை. எல்லாரும் அவரவர்கள் வாளையும் வேலையும் தீட்டிக் கொண்டு வந்து சேருங்கள்" என்று சிலரிடம் சொன்னான். வேறு சிலரிடம் "எனக்கு என்ன தெரியும்? உங்களுக்குத் தெரிந்ததுதான் எனக்கும் தெரியும்?" என்றான். அவர்கள் நன்றாயிருக்கிறது, பொன்னா! உனக்குத் தெரியாமலிருக்குமா? சோழ நாட்டுக்கே இப்போது முக்கிய மந்திரி நீதானே? உனக்குத் தெரியாத ராஜ ரகசியம் ஏது?" என்றார்கள். அப்போது வள்ளி அடைந்த பெருமையைச் சொல்லி முடியாது.

ஆனால், வேறு சிலர் "பொன்னா! மகாராஜா யுத்தத்துக்குப் போனால் நீயும் போவாயோ, இல்லையோ?" என்று கேட்டபோது வள்ளிக்கு ரொம்ப எரிச்சலாயிருந்தது. அவர்களுக்கு "அது என் இஷ்டமா? மகாராஜாவின் இஷ்டம்!" என்றான் பொன்னன். அவர்கள் போன பிறகு வள்ளியிடம், "பார்த்தாயா வள்ளி! நான் யுத்தத்துக்குப் போகாமலிருந்தால் நன்றாயிருக்குமா? நாலு பேர் சிரிக்கமாட்டார்களா?" என்றான். அதற்கு வள்ளி "உன்னை யார் போக வேண்டாமென்று சொன்னார்கள்? மகாராஜா உத்தரவு கொடுத்தால் போ, என்னையும் அழைத்துக் கொண்டு போ என்று தானே சொல்லுகிறேன்" என்றாள்.

இப்படி வழியெல்லாம் பொன்னன் நின்று நின்று, கேட்டவர்களுக்கு மறுமொழி சொல்லிக்கொண்டு போக வேண்டியதாயிருந்தது. உறையூர்க் கோட்டை வாசலை அணுகியபோது, அஸ்தமிக்கும் நேரம் ஆகிவிட்டது. அவர்கள் வந்து சேர்ந்த அதே சமயத்தில் கோட்டை வாசல் திறந்தது, உள்ளிருந்து சில குதிரை வீரர்கள் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். முதலில் வந்த வீரன் கையில் சிங்கக் கொடியைப் பார்த்ததும், அவர்கள் தாம் மத்தியானம் உறையூருக்குச் சென்ற பல்லவ தூதர்கள் என்பது பொன்னனுக்குத் தெரிந்துவிட்டது. இருவரும் சிறிது ஒதுங்கி நின்றார்கள். கோட்டை வாசல் தாண்டியதும் குதிரைகள் காற்றிலும் கடிய வேகத்துடன் பறக்கத் தொடங்கின. அவற்றின் காற்குளம்பின் புழுதி மறையும் வரையில் அவை சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பொன்னனும் வள்ளியும் கோட்டை வாசல் வழியாகப் புகுந்து சென்று நகருக்குள் பிரவேசித்தார்கள்.

நகரின் வீதிகளில் ஆங்காங்கே கும்பல் கும்பலாக ஜனங்கள் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு கும்பலின் ஓரத்தில் பொன்னனும் வள்ளியும் போய் நின்றனர். பல்லவ தூதர்கள் வந்தபோது ராஜ சபையில் நடந்த சம்பவங்களை ஒருவன் வர்ணித்துக் கொண்டிருந்தான்: "ஆகா! அந்தக் காட்சியை நான் என்னவென்று சொல்லப் போகிறேன்! மகாராஜா சிங்காதனத்தில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார். இளவரசரும் மந்திரி, சேனாதிபதி எல்லாரும் அவரவர்களின் இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். எள் போட்டால் எள் விழுகிற சத்தம் கேட்கும்; அந்த மாதிரி நிசப்தம் சபையில் குடி கொண்டிருந்தது. "தூதர்களை அழைத்து வாருங்கள்!" என்று மகாராஜா சொன்னார். அவருடைய குரலில் எவ்வளவு வேகம் ததும்பிற்று இன்றைக்கு? தூதர்கள் வந்தார்கள், அவர்களுடைய தலைவன் முன்னால் வந்து நின்று மகாராஜாவுக்கு வந்தனம் செலுத்தினான்.

"தூதரே! என்ன சேதி?" என்று கேட்டார்.

"அந்தக் குரலின் கம்பீரத்திலேயே தூதன் நடுங்கிப் போய்விட்டான். அவனுக்குப் பேசவே முடியவில்லை. தட்டுத் தடுமாறிக் கொண்டே 'திரிலோக சக்கரவர்த்தி காஞ்சி மண்டலாதிபதி சத்ரு சம்ஹாரி நரசிம்மவர்ம பல்லவராயருடைய தூதர்கள் நாங்கள்...." என்று அவன் ஆரம்பிக்கும் போது நம்முடைய அரண்மனை விதூஷகன் குறுக்கிட்டான். "தூதரே! நிறுத்தும்! எந்தத் திரிலோகத்துக்குச் சக்கரவர்த்தி! அதல ஸுதல பாதாளமா? இந்திரலோக, சந்திரலோக, யமலோகமா?" என்றான். சபையில் எல்லோரும் 'கொல்லென்று' சிரித்தார்கள். தூதன் பாடு திண்டாட்டமாய்ப் போய்விட்டது. அவனுடைய உடம்பு நடுங்கிற்று; நாகுழறிற்று. மெதுவாகச் சமாளித்துக்கொண்டு 'தங்கள் பாட்டனார் காலம் முதல் ஆண்டுதோறும் கட்டிவந்த கப்பத்தைச் சென்ற ஆறு வருஷமாய் மகாராஜா கட்டவில்லையாம். அதற்கு முகாந்திரம் கேட்டு வரும்படி சக்கரவர்த்தியின் கட்டளை' என்றான். ஆகா! அப்போது நமது மகாராஜாவின் தோற்றத்தைப் பார்க்கவேணுமே? 'தூதரே! உங்கள் சக்கரவர்த்தி கேட்டிருக்கும் முகாந்திரத்தைப் போர் முனையிலே தெரிவிப்பதாகப் போய்ச் சொல்லும்' என்றார். எனக்கு அப்போது உடல் சிலிர்த்து விட்டது...."

இவ்விதம் வர்ணித்து வந்தவன் சற்றே நிறுத்தியதும் பல பேர் ஏக காலத்தில் "அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆவலுடன் கேட்டார்கள்.

"அந்தத் தூதன் சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு, "அப்படியானால், யுத்தத்துக்குச் சித்தமாகும்படி சக்கரவர்த்தி தெரிவிக்கச் சொன்னார்கள். இதற்குள்ளே பல்லவ சைன்யம் காஞ்சியிலிருந்து கிளம்பியிருக்கும். போர்க்களமும் யுத்த ஆரம்ப தினமும் நீங்களே குறிப்பிடலாமென்று தெரியப்படுத்தச் சொன்னார்கள் என்றான். அதற்கு நம் மகாராஜா, 'புரட்டாசிப் பௌர்ணமியில் வெண்ணாற்றங் கரையில் சந்திப்போம்' என்று விடையளித்தார். உடனே சபையோர் அனைவரும், "வெற்றிவேல்! வீரவேல்! என்று வீர கர்ஜனை புரிந்தார்கள்..."

இதைக் கேட்டதும் அந்தக் கும்பலில் இருந்தவர்களும் "வெற்றிவேல்! வீரவேல்!" என்று முழங்கினார்கள். பொன்னனும் உரத்த குரலில் அம்மாதிரி வீர முழக்கம் செய்து விட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மேலே சென்றான்.

இதற்குள் இருட்டிவிட்டது. வெண் மேகங்களால் திரையிடப்பட்ட சந்திரன் மங்கலாய்ப் பிரகாசித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வீதி மூலையிலும் நாட்டியிருந்த கல்தூணின் மேல் பெரிய அகல் விளக்குகள் இருந்தன. அவை ஒவ்வொன்றாய்க் கொளுத்தப்பட்டதும் புகை விட்டுக் கொண்டு எரிய ஆரம்பித்தன.

திடீரென்று எங்கேயோ உயரமான இடத்திலிருந்து பேரிகை முழக்கம் கேட்கத் தொடங்கியது. 'தம்ம்ம்' 'தம்ம்ம்' என்ற அந்தக் கம்பீரமான சத்தம் வான வெளியில் எட்டுத் திக்கிலும் பரவி 'அதம்ம்ம்' 'அதம்ம்ம்' என்ற பிரதித் தொனியை உண்டாக்கிற்று. உறையூரின் மண்டபங்களும், மாடமாளிகைகளும், கோபுரங்களும் கோட்டை வாசல்களும் சேர்ந்து ஏககாலத்தில் 'அதம்ம்ம்' 'அதம்ம்ம்' என்று எதிரொலி செய்தன. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தச் சப்தம் 'யுத்தம்ம் யுத்தம்ம்' என்றே கேட்கத் தொடங்கியது.

இடி முழக்கம் போன்ற அந்தப் பேரிகை ஒலியைக் கேட்டதும் பொன்னனுடைய உடம்பில் மயிர்க் கூச்சம் உண்டாயிற்று. அவனுடைய ரத்தம் கொதித்தது. நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டன. வள்ளியோ நடுங்கிப் போனாள்.

"இது என்ன இது? இம்மாதிரி ஓசை இதுவரையில் நான் கேட்டதேயில்லை!" என்றாள்.

"யுத்த பேரிகை முழங்குகிறது" என்றான் பொன்னன். அவனுடைய குரலைக் கேட்டுத் திடுக்கிட்ட வள்ளி, "ஐயோ, உனக்கு என்ன?" என்று கேட்டாள்.

"ஒன்றுமில்லை, வள்ளி! எனக்கு ஒன்றுமில்லை" என்றான் பொன்னன். சற்றுப் பொறுத்து "வள்ளி! யுத்தத்துக்கு நான் கட்டாயம் போக வேண்டும்!" என்றான்.

4. பாட்டனும் பேத்தியும்

உறையூர்க் கம்மாளத் தெருவில் உள்ள ஒரு வீட்டு வாசலில் வந்து பொன்னனும் வள்ளியும் நின்றார்கள். கதவு சாத்தியிருந்தது. "தாத்தா!" என்று வள்ளி கூப்பிட்டாள். சற்று நேரத்துக்கெல்லாம் கதவு திறந்தது. திறந்தவன் ஒரு கிழவன் "வா வள்ளி! வாருங்கள் மாப்பிள்ளை!" என்று அவன் வந்தவர்களை வரவேற்றான். பிறகு வீட்டுக்குள்ளே நோக்கி, "கிழவி இங்கே வா! யார் வந்திருக்கிறது பார்" என்றான்.

மூன்று பேரும் வீட்டுக்குள் போனார்கள். "யார் வந்திருக்கிறது?" என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்த கிழவி வள்ளியையும் பொன்னனையும் பார்த்துப் பல்லில்லாத வாயினால் புன்னகை புரிந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தாள். வள்ளியைக் கட்டிக்கொண்டு "சுகமாயிருக்கயா, கண்ணு! அவர் சுகமாயிருக்காரா" என்று கேட்டாள்.

பொன்னன் "தாத்தா, உங்கள் பேத்தியைக் கொண்டு வந்து ஒப்புவித்து விட்டேன். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்" என்றான்.

"வந்ததும் வராததுமாய் எங்கே போகிறாய்?" என்று கிழவன் கேட்டான்.

"மகாராஜாவைப் பார்க்கப் போகிறேன்" என்றான் பொன்னன்.

"மகாராஜா இப்போது அரண்மனையில் இல்லை, மலைக்குப் போயிருக்கிறார். இங்கே வா காட்டுகிறேன்" என்று கிழவன் அவர்களை வீட்டு முற்றத்துக்கு அழைத்துப் போனான். முற்றத்திலிருந்து அவன் காட்டிய திக்கை எல்லோரும் பார்த்தார்கள். உச்சிப் பிள்ளையார் கோவில் தீபம் தெரிந்தது. அங்கிருந்து தீவர்த்திகளுடன் சிலர் இறங்கி வருவது தெரிந்தது. இறங்கி வந்த தீவர்த்திகள் வழியில் ஓரிடத்தில் சிறிது நின்றன.

"அங்கே நின்று என்ன பார்க்கிறார்கள்?" என்று வள்ளி கேட்டாள்.

"மகேந்திர சக்கரவர்த்தியின் சிலை அங்கே இருக்கிறது. மகாராஜா, இளவரசருக்கு அதைக் காட்டுகிறார் என்று தோன்றுகிறது" என்றான் கிழவன்.

"அவர்கள்தான் இறங்கி வருகிறார்களே, தாத்தா! நான் அரண்மனை வாசலுக்குப் போகிறேன். இன்று ராத்திரி மகாராஜாவை எப்படியும் நான் பார்த்துவிட வேண்டும்" என்று சொல்லிக் கொண்டே பொன்னன் வெளிக் கிளம்பினான். கிழவன் அவனோடு வாசல் வரை வந்து இரகசியம் பேசும் குரலில், "பொன்னா! ஒரு முக்கியமான சமாசாரம் மகாராஜாவிடம் தெரிவிக்க வேணும். மாரப்ப பூபதி விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. அதை அந்தரங்கமாக அவரிடம் சொல்லவேணும்!" என்றான்.

"மாரப்ப பூபதியைப் பற்றி என்ன?" என்று பொன்னன் கேட்டான்.

"அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன். மகாராஜாவின் காதில் எப்படியாவது இந்தச் சேதியைப் போட்டுவிடு" என்றான் கிழவன்.

கிழவி விருந்தாளிகளுக்குச் சமையல் செய்வதற்காக உள்ளே போனாள். பாட்டனும் பேத்தியும் முற்றத்தில் உட்கார்ந்தார்கள்.

திடீரென்று வள்ளி, "ஐயோ தாத்தா! இதெல்லாம் என்ன?" என்று கேட்டாள்.

முற்றத்தில் ஒரு பக்கத்தில் உலைக்களம் இருந்தது. அதன் அருகில் கத்திகளும் வாள்களும் வேல்களும் அடுக்கியிருந்தன. அவைகளைப் பார்த்து விட்டுத்தான் வள்ளி அவ்விதம் கூச்சல் போட்டாள்.

"என்னவா! வாளும் வேலும் சூலமுந்தான். நீ எங்கே பார்த்திருக்கப் போகிறாய்? முன்காலத்தில்...."

"இதெல்லாம் என்னத்திற்கு, தாத்தா?"

"என்னத்திற்காகவா? கோவிலில் வைத்து தூப தீபம் காட்டிக் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காகத்தான்! கேள்வியைப் பார் கேள்வியை! தேங்காய்க் குலை சாய்ப்பது போல் எதிராளிகளின் தலைகளை வெட்டிச் சாய்ப்பதற்கு வாள், பகைவர்களின் வயிற்றைக் கிழித்துக் குடலை எடுத்து மாலையாய்ப் போட்டுக் கொள்வதற்கு வேல், தெரிந்ததா!"

"ஐயையோ! பயமாயிருக்கிறதே!" என்று வள்ளி கூவினாள்.

"இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த நாட்டு ஆண்பிள்ளைகள்கூட உன்னைப் போலேதான் ஆகிவிடுவார்கள். வாளையும் வேலையும் கொண்டு என்ன செய்கிறது என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வள்ளி! இந்தக் கேள்வி என்னுடைய பாட்டன், முப்பாட்டன் காலங்களில் எல்லாம் எப்படித் தெரியுமா? அப்போது கொல்லுப் பட்டறையில் எல்லாம் வாளும் வேலும் சூலமும் செய்த வண்ணமாயிருப்பார்களாம். ஒவ்வொரு பட்டணத்திலும் கம்மாளத் தெரு தான் எப்போதும் 'ஜே ஜே' என்று இருக்குமாம். ராஜாக்களும் ராஜகுமாரர்களும் சேனாதிபதிகளும் கம்மாளனைத் தேடி வந்து கொண்டிருப்பார்களாம். என் அப்பன் காலத்திலேயே இதெல்லாம் போய்விட்டது. வாழைக்கொல்லை அரிவாள்களும் வண்டிக்குக் கடையாணிகளும், வண்டி மாட்டுக்குத் தார்குச்சிகளும் செய்து கம்மாளன் வயிறுவளர்க்கும்படி ஆகிவிட்டது. என் வயதில் இப்போது தான் நான் வாளையும் வேலையும் கண்ணால் பார்க்கிறேன்.... ஆகா! இந்தக் கைகளிலே மட்டும் முன்னைப் போல வலிவு இருந்தால்? இருபது வருஷத்துக்கு முன்னாலே இந்த யுத்தம் வந்திருக்கக் கூடாதா!"

"சரியாய்ப் போச்சு, தாத்தா! இவருக்கு நீ புத்தி சொல்லி திருப்புவாயாக்கும் என்றல்லவா பார்த்தேன்! யுத்தத்துக்குப் போகணும் என்று இவர் ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்...."

"பொன்னனா! அவன் எங்கே யுத்தத்துக்குப் போகப் போகிறான் வள்ளி? பொன்னனாவது உன்னை விட்டு விட்டுப் போகவாவது! துடுப்புப் பிடித்த கை, வாளைப் பிடிக்குமா? பெண் மோகம் கொண்டவன் சண்டைக்குப் போவானா?"

"அப்படி ஒன்றும் சொல்ல வேண்டாம் தாத்தா! இவர் போகணும் போகணும் என்றுதான் துடித்துக் கொண்டிருக்கிறார். மகாராஜாதான் வரக்கூடாது என்கிறார். இளவரசருக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க இவர் இருக்க வேணுமாம்."

"அடடா! உன்னுடைய அப்பனும் சித்தப்பன்மார்களும் மட்டும் இப்போது இருந்தால், ஒவ்வொருவன் கையிலும் ஒரு வாளையும் வேலையும் கொடுத்து நான் அனுப்ப மாட்டேனா? எல்லாரையும் ஒரே நாளில் காவேரியம்மன் பலி கொண்டுவிட வேண்டுமா?" என்று சொல்லிக் கொண்டே கிழவன் பெருமூச்சுவிட்டான்.

வள்ளிக்கு அந்தப் பயங்கரமான சம்பவம் ஞாபகம் வந்தது.

நாலு வருஷத்துக்கு முன்பு கிழவனையும் கிழவியையும் தவிர, குடும்பத்தார் அனைவரும் ஆற்றுக்கு அக்கரையில் நடந்த ஒரு கலியாணத்துக்குப் படகில் ஏறிப் போய்க் கொண்டிருந்தார்கள். நடு ஆற்றில் திடீரென்று ஒரு சூறாவளிக் காற்று அடித்தது. படகு கவிழ்ந்துவிட்டது. அச்சமயம் கரையில் இருந்த பொன்னன் உடனே நதியில் குதித்து நீந்திப் போய்த் தண்ணீரில் விழுந்தவர்களைக் காப்பாற்ற முயன்றான். தெய்வ பத்தனத்தினால் வள்ளியை மட்டுந்தான் அவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் எல்லாரும் நதிக்குப் பலியானார்கள்.

கிழவன் மேலும் சொன்னான். "என் குலத்தை விளங்க வைக்க நீ ஒருத்தி தான் இருக்கிறாய். உன் வயிற்றில் ஒரு குழந்தை பிறந்துவிட்டால், பொன்னனை நானே கழுத்தைப் பிடித்துத் தள்ளுவேன் யுத்தத்துக்குப் போ" என்று.

"யுத்தம் என்னத்திற்காக நடக்கிறது, தாத்தா! அதுதான் புரியவில்லை" என்றாள் வள்ளி.

"யுத்தம் என்னத்திற்காகவா - மானம் ஒன்று இருக்கிறதே, அதுக்காகத்தான்! எருதுக் கொடிக்குப் புலிக் கொடி தாழ்ந்து போகலாமா? தொண்டை நாட்டுக்குச் சோழ நாடு பணிந்து போகிறதா? இந்த அவமானத்தைப் போக்குவதற்காகத்தான்"

"எருதுக்கொடி யாருடையது?"

"இது தெரியாதா உனக்கு? எருதுக் கொடி காஞ்சி பல்லவ ராஜாவினுடையது."

"சிங்கக் கொடி என்று சொல்லு."

"இல்லை, எருதுக் கொடி தான்."

"நான் இன்றைக்குப் பார்த்தேன் தாத்தா! தூதர்களின் கொடியில் சிங்கந்தான் போட்டிருந்தது."

"ஆமாம்; எருதுக் கொடியைச் சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார்கள். ஆனால் எருது பன்றியை ஜயித்து விட்டதால் சிங்கமாகி விடுமா?" என்றான் கிழவன்.

"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. தாத்தா! விபரமாய்ச் சொல்லேன்" என்றாள் வள்ளி.

"சரி, அடியிலிருந்து சொல்கிறேன் கேள்!" என்று கிழவன் கதையை ஆரம்பித்தான்.

"நீ பிறந்த வருஷத்தில் இது நடந்தது. அப்போது காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய வீரபராக்கிரமங்களைப் பற்றி நாடெங்கும் பிரமாதமாய்ப் பேசிக்கொண்டிருந்த காலம். இந்த உறையூருக்கும் அவர் ஒருமுறை வந்திருந்தார். அவர் விஜயத்தின் ஞாபகார்த்தமாகத்தான் நமது மலையிலே கூட அவருடைய சிலையை அமைத்திருக்கிறது. இப்படி இருக்கும் சமயத்தில் வடக்கே இருந்து வாதாபியின் அரசன் புலிகேசி என்பவன் - பெரிய படை திரட்டிக் கொண்டு தென்னாட்டின் மேல் படையெடுத்து வந்தான். சமுத்திரம் பொங்கி வருவதுபோல் வந்த அந்தச் சைன்யத்துடன் யுத்தகளத்தில் நின்று போர் செய்ய மகேந்திர சக்கரவர்த்திக்குத் தைரியம் வரவில்லை. காஞ்சிக் கோட்டைக்குள் சைன்யத்துடன் பதுங்கிக் கொண்டார். கோட்டையைக் கொஞ்ச காலம் முற்றுகையிட்டுப் பார்த்தான் புலிகேசி. அதில் பயனில்லையென்று கண்டு தெற்குத் திக்கை நோக்கி வந்தான். நமது கொள்ளிடத்தின் அக்கறைக்கு வந்து விட்டான். அப்பப்பா! அப்போது இந்த உறையூர் பட்ட பாட்டை என்னவென்று சொல்லுவேன்! நமது பார்த்திப மகாராஜா அப்போது பட்டத்துக்கு வந்து கொஞ்ச நாள்தான் ஆகியிருந்தது. புலிகேசியை எதிர்க்கப் பலமான ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தார். இதற்குள் வடக்கே புலிகேசியின் ராஜ்யத்துக்கே ஏதோ ஆபத்து வந்துவிட்டது போலிருந்தது. புலிகேசி கொள்ளிடத்தைத் தாண்டவேயில்லை திரும்பிப் போய்விட்டான். போகும்போது அந்தக் கிராதகனும் அவனுடைய ராட்சத சைன்யங்களும் செய்த அட்டூழியங்களுக்கு அளவேயில்லையாம். ஊர்களையெல்லாம் சூறையாடிக் கொண்டும் தீ வைத்துக் கொண்டும் போனார்களாம். அதிலிருந்து மகேந்திர சக்கரவர்த்தியினுடைய புகழ் மங்கி விட்டது. 'சளுக்கரின் பன்றிக் கொடிக்குப் பல்லவரின் ரிஷபக் கொடி பயந்துவிட்டது' என்று ஜனங்கள் பேசத் தொடங்கினார்கள். இந்த அவமானத்துக்குப் பிறகு மகேந்திர சக்கரவர்த்தி அதிக நாள் உயிரோடிருக்கவில்லை. அவருக்குப் பிறகு நரசிம்மவர்ம சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்தார். இவர் பட்டத்திற்கு வந்ததிலிருந்து புலிகேசியைப் பழிக்குப் பழி வாங்கிப் பல்லவ குலத்துக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க வேணுமென்று ஆயத்தங்கள் செய்து வந்தார். கடைசியில் ஆறு வருஷங்களுக்கு முன்பு பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு வடக்கே போனார். புலிகேசியைப் போர்க்களத்தில் கொன்று வாதாபி நகரையும் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டுத் திரும்பி வந்தார். இந்தப் பெரிய வெற்றியின் ஞாபகார்த்தமாகப் பல்லவர்களின் ரிஷபக் கொடியை நரசிம்ம சக்கரவர்த்தி சிங்கக் கொடியாக மாற்றிவிட்டார். அவர் திரும்பி வந்து இப்போது ஒரு மாதந்தான் ஆகிறது. வள்ளி! அதற்குள்ளே...."

இத்தனை நேரமும் கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தவள், "அப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியுடன் நமது மகாராஜா எதற்காக யுத்தம் செய்யப் போகிறார் தாத்தா! அவருடன் சிநேகமாயிருந்தாலென்ன?" என்று கேட்டாள்.

"அடி பைத்தியக்காரி..." என்று கிழவன் மறுமொழி சொல்ல ஆரம்பித்தான்.

அப்போது வீதியில் குதிரை வரும் சத்தம் கேட்டது. அந்த வீட்டின் வாசலிலேதான் வந்து நின்றது.

"வீரபத்திர ஆச்சாரி!" என்று யாரோ அதிகாரக் குரலில் கூப்பிட்டார்கள். உடனே கிழவன், "அந்தச் சண்டாளன் மாரப்ப பூபதி வந்துவிட்டான். வள்ளி, நீ அவன் கண்ணில் படக்கூடாது, சமையற்கட்டுக்குள் போ, அவன் தொலைந்ததும் உன்னைக் கூப்பிடுகிறேன்" என்றான்.

5. மாரப்ப பூபதி

வாசலில் குதிரையில் வந்திறங்கியவன் திடகாத்திரமுள்ள யௌவன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும். ஆடை ஆபரணங்கள் உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசா பாசங்களிலும் மதமாச்சரியங்களிலும் அலைப்புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது.

"சேனாதிபதி வரவேணும்" என்று சொல்லிக் கிழவன் வந்தவனை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.

"இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதே! நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என் தகப்பனுக்குப் பிள்ளையே இல்லை!" என்று கோபமான குரலில் சொல்லிக் கொண்டு மாரப்ப பூபதி உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்ந்திருந்த பீடத்தில் அமர்ந்தான்.

"யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பது போல் தெரிகிறது!"

"யுவராஜாவா? யார் யுவராஜா? நானா? நேற்றுப் பிறந்த அந்தப் பரதைப் பயல் அல்லவா யுவராஜா? இளவரசர் விக்கிரம சிங்கர் வாழ்க! ஜய விஜயீபவ!" என்று பரிகசிக்கும் குரலில் கூறிவிட்டு மாரப்ப பூபதி 'இடி இடி' யென்று சிரித்தான்.

சற்றுப் பொறுத்து, "அது போகட்டும், ஆச்சாரி! உன் சோழி என்ன தெரிவிக்கிறது? அதைச் சொல்லு!" என்றான்.

வீரபத்திர ஆச்சாரி கொல்லு வேலை செய்ததுடன், சோதிட சாஸ்திரத்தில் வல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான். சோழிகளை வைத்துக் கொண்டு அவன் கணக்குப் போட்டு ஜோசியம் பார்ப்பது வழக்கம்.

"யுவராஜா! எதற்காக இந்தப் பிரமை உங்களுக்கு....?" என்று ஆரம்பித்தான் கிழவன்.

"அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா? வெறுமனே என்னை அலைக்கழிக்க உத்தேசமா?"

"பார்த்தேன் யுவராஜா! உங்களுக்கு என்ன வேணுமோ, கேட்டால் சொல்லுகிறேன்."

"முக்கியமான விஷயம் சண்டைதான். அதன் முடிவு என்ன ஆகும்? இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால் உன் ஜோசியத்தினால் என்ன பிரயோஜனம்? சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி ஆற்றில் எறிந்து விடுகிறேன்!" என்றான் மாரப்பன்.

"அப்படியே செய்துவிடுங்கள், யுவராஜா! எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள்! என்னுடைய சொந்த விஷயத்தில் இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தை தான் மிஞ்சியிருக்கிறது."

"வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி?" என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு விகாரம் காணப்பட்டது.

"ஏதோ இருக்கிறாள்" என்றான் கிழவன்.

"ஆமாம் பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால் வள்ளி என்ன செய்வாள்?"

"அதற்கென்ன, யுவராஜா! வள்ளியைக் காப்பாற்றக் கடவுள் இருக்கிறார்; இந்தக் கிழவனும் இருக்கிறேன்!" என்று அழுத்திச் சொன்னான் வீரபத்திர ஆச்சாரி.

"ஆமாம், நீ இருக்கும்போது அவளுக்கு என்ன வந்தது? இருக்கட்டும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சண்டையின் முடிவு என்ன ஆகும்? உன் சோழிக் கணக்கில் ஏதாவது தெரிகிறதாயிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு!"

"கடையை அப்போதே கட்டிவிட்டேன் யுவராஜா! உங்களுடைய தொந்தரவினால்தான் மறுபடியும் அதைத் திறந்தேன்!"

"திறந்ததில் என்ன தெரிந்தது?"

"கிரகங்களின் சேர்க்கை ரொம்ப பயங்கரமான முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை அடியோடு அழிந்து போகும். யுத்த களத்துக்குப் போனவர்களில் ஒருவராவது திரும்பி வர மாட்டார்கள். ஆனால் எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது."

"அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச் சேனை அழியும் என்று சொல்வதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும் வேண்டாம். திரும்பி வராமல் நிர் மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான். அந்தப் பெரும் புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக் கொள்ளப் போகிறார்!"

"யுவராஜா! நீங்களே இப்படிச் சொல்லலாமா? நமக்குள் எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் பகைவனுக்கு முன்னால்...."

"யார் பகைவன்? பல்லவ சக்கரவர்த்தியா? நமக்குப் பகைவன்? இல்லவே இல்லை! சோழநாட்டுக்கு இப்போது பெரிய பகைவன் பார்த்திபன்தான். இவன் கையிலே வாள் எடுத்து அறியமாட்டான். வேல் வீசி அறிய மாட்டான்! இப்பேர்ப்பட்ட வீராதிவீரன் பல்லவ சைன்யத்துடன் போர் செய்யக் கிளம்புகிறான். பல்லவ சைன்யம் என்றால் லேசா! சமுத்திரத்தின் மணலை எண்ணினாலும் எண்ணலாம். பல்லவ சைன்யத்திலுள்ள வீரர்களை எண்ண முடியாது. காவேரியிலிருந்து கோதாவரி வரையில் பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே? ஒரு கையகலமுள்ள சோழ நாடு எங்கே? நரசிம்ம சக்கரவர்த்தி தான் லேசுப்பட்டவரா? நூறு யோசனை தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில் வென்று, வாதாபியைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு வந்தவர், அவருடன் நாம் சண்டை போட முடியுமா? யானைக்கு முன்னால் கொசு!"

"யுவராஜா! இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள்? மகாராஜாவிடம் சொல்வதுதானே?"

"மகாராஜாவிடம் சொல்லவில்லையென்றா நினைத்துக் கொண்டாய் கிழவா? சொன்னதன் பலன் தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி போயிற்று. மகாராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்டு விட்டார். சைனியத்தை அவரே நடத்திக் கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம்! தாராளமாய்ப் போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதி பதவி இல்லையென்று யார் அழுதார்கள்?"

"அப்படியானால் யுவராஜா! நீங்கள் யுத்தத்துக்கே போகமாட்டீர்களோ?"

"நானா? நானா? என்னைக் கூப்பிட்டால் போவேன்; கூப்பிடாவிட்டால் போக மாட்டேன்; கிழவா! சண்டையின் முடிவைப் பற்றிச் சொன்னாயே, அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு!"

"ஆமாம், யுவராஜா! ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் யுத்த களத்தில் அழிந்து போவார்கள். ஒருவராவது உயிரோடு திரும்பி வரமாட்டார்கள்?"

"உயிரோடு திரும்பி வரமாட்டார்களா? பின் உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ? ஹா ஹா ஹா ஹா!" என்று மாரப்ப பூபதி உரக்கச் சிரித்தான். பிறகு, "ஆமாம் ஆமாம்; நான் யுத்தத்தில் செத்துப் போனால் நிச்சயமாய்ப் பிசாசாகத் திரும்பி வருவேன்; திரும்பி வந்து வள்ளியைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவேன்" என்று கூறி மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தான்.

சமையலறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி தன் இரண்டு கையையும் நெறித்து, "உன் கழுத்தை இந்த மாதிரி நெறித்துக் கொல்லுவேன்!" என்று முணுமுணுத்தாள். கொஞ்சம் காது மந்தமுள்ள கிழவி "என்ன சொல்லுகிற, வள்ளி?" என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப் பொத்தி, "சும்மா இரு!" என்றாள்.

"உள்ளே யார் பேசுகிறது?" என்று கேட்டான் மாரப்ப பூபதி.

"யார் பேசுவார்கள்? என்னைப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒரு கிழப் பிசாசு - அதுதான் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்" என்றான் கிழவன்.

"சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும். என் கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி! பொய் சொல்லி ஏமாற்றியிருந்தாயோ...!"

"தங்களை ஏமாற்றி எனக்கு என்ன ஆகவேணும் யுவராஜா!"

மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தான். முற்றத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களையும் வேல்களையும் கத்தி கேடயங்களையும் பார்த்துவிட்டுச் சிரித்தான். "ஆஹா! ரொம்ப முனைந்து வேலை செய்கிறாயாக்கும்! கத்தி! கேடயம்! வாள்! வேல்! இந்த வாழைப்பட்டைக் கத்திகளையும், புல் அரியும் அரிவாள்களையும் வைத்துக் கொண்டுதான் உங்கள் பார்த்திப மகாராஜா, பல்லவ சக்கரவர்த்தியை ஜயித்து விடப் போகிறார்? நல்ல வேடிக்கை! ஹா ஹா ஹா" என்று உரக்கச் சிரித்துக் கொண்டே ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அப்படியே வாசற் பக்கம் போனான்.

உலைக் களத்தில் கிளம்பும் அனற் பொறிகளைப் போல் கிழவன் கண்களிலே தீப்பொறி பறந்தது.

6. போர் முரசு

வீட்டு வாசலிலிருந்து குதிரை கிளம்பிப் போன சத்தம் கேட்டதும், வள்ளி முற்றத்துக்கு வந்தாள். மாரப்ப பூபதி உதைத்துத் தள்ளிய கத்திகளில் ஒன்றைக் கையில் எடுத்துக் கொண்டு "தாத்தா! இந்தக் கத்தி கேடயம் எல்லாம் நீ செய்து என்ன பிரயோஜனம்? நமது மகாராஜாவைப் பற்றி அப்படிக் கேவலமாய்ப் பேசியவனைச் சும்மா தானே விட்டு விட்டாய்?" என்று ஆத்திரத்துடன் கேட்டாள்.

"ஏன் வள்ளி உனக்கு இவ்வளவு கோபம்? நீ சொன்னதைத் தானே நமது பழைய சேனாதிபதியும் சொன்னார், சண்டை வேண்டாம் என்று?" என்றான் கிழவன்.

"சேச்சே! நான் சண்டை வேண்டாமென்று சொன்னேனா? சண்டை எதற்காக என்று தெரியாமல்தானே கேட்டேன்!" என்று வள்ளி சொன்ன போது அவள் கண்களில் நீர்ததும்பிற்று.

"ஆமாம், வள்ளி! அதை நான் சொல்ல ஆரம்பித்த போதுதான் இந்தப் பாவி வந்துவிட்டான். வாதாபிச் சக்கரவர்த்தி புலிகேசி, தென்தேசத்தின் மீது படையெடுத்து வந்து பல அட்டூழியங்கள் செய்து விட்டுத் திரும்பப் போனதைச் சொன்னேனல்லவா? அதற்குப் பழிக்குப்பழி வாங்குவதற்காக நரசிம்ம சக்கரவர்த்தி வெகுகாலம் ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். கடைசியில் ஆறு வருஷத்துக்கு முன்பு அவர் வாதாபியின் மேல் படையெடுத்துச் சென்றார். அப்போது நமது பார்த்திப மகாராஜாவையும் தமது படைகளுடன் வந்து சேர்ந்து கொள்ளும்படி ஓலை அனுப்பினார். அதற்குப் பார்த்திப ராஜா அப்படியே செய்வதாகவும், ஆனால் அதற்குப் பிரதியாக அன்று முதல் உறையூரிலிருந்து கப்பம் வாங்குவதை நிறுத்திவிட வேண்டுமென்றும், சோழநாட்டின் புலிக்கொடிக்குச் சமமரியாதை கொடுக்க வேண்டுமென்றும் செய்தி அனுப்பினார். இதை நரசிம்ம சக்கரவர்த்தி கவனிக்கவேயில்லை. மறு ஓலைகூட அனுப்பாமல் படை கிளம்பிப் போய்விட்டார். அன்று முதல் பார்த்திப மகாராஜாவும் காஞ்சிக்குக் கப்பம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். அது காரணமாகத்தான் யுத்தம் வந்திருக்கிறது வள்ளி! இப்போது நீயே சொல்லு. பார்த்திப மகாராஜா முன் வைத்த காலைப் பின்வைத்துச் சக்கரவர்த்தியிடம் சரணாகதி அடைந்து விடலாமா? நமது சிராப்பள்ளி மலையில் போட்ட புலிக்கொடியைத் தாழ்த்திப் பல்லவர்களின் எருதுக் கொடியை மறுபடியும் பறக்க விடலாமா? அந்த அவமானத்தைச் சகித்துக் கொண்டாவது இந்தச் சோழ தேசத்து மக்கள் எதற்காக உயிரை வைத்துக் கொண்டிருக்க வேண்டும்?"

"அந்த நியாயமெல்லாம் எனக்குத் தெரியாது தாத்தா! நமது பார்த்திப மகாராஜா என்ன செய்கிறாரோ, அதுதான் சரி. அவருக்கு விரோதமாய்ப் பேசுகிறவர்கள் எல்லாரும் பொல்லாத பாவிகள். அவர்கள் நரகத்துக்குத் தான் போவார்கள். இந்த மாரப்ப பூபதியை நீ சும்மா விட்டு விட்டாயே என்று எனக்கு இருக்கிறது தாத்தா! நமது மகாராஜா எவ்வளவு நல்லவர் தெரியுமா....?"

"ஆமாம்; நமது மகாராஜா ரொம்ப நல்லவர்தான். ஆகையினால்தான் இந்தக் குலங்கெட்ட மாரப்பனுக்கு இவ்வளவு இடங்கொடுத்துத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினார்!"

"என்ன சொல்லுகிறாய், தாத்தா?"

"சரியாகத்தான் சொல்லுகிறேன். இந்த மாரப்ப பூபதி நமது மகாராஜாவின் சொந்தச் சகோதரன் அல்ல. பழைய மகாராஜா ஐம்பது வயதுக்குமேல் சபலம் தட்டி யாரோ ஒரு மூதேவியைக் கல்யாணம் செய்து கொண்டார். ஊரில் யாருக்குமே அந்தக் கலியாணம் பிடிக்கவில்லை. அந்த மூதேவியின் பிள்ளைதான் இந்த மாரப்பன். பழைய மகாராஜா செத்துப் போகும்போது, பார்த்திபருக்குப் பிள்ளைக் குழந்தை இல்லாவிட்டால் இவனுக்குப் பட்டத்தைக் கொடுக்க வேணுமென்று சொல்லிவிட்டுப் போனாராம். விக்கிரம இளவரசர் பிறக்கும் வரையில் இவன்தான் 'யுவராஜா'வாக விளங்கினான். பார்த்திப மகாராஜா எவ்வளவோ இவனிடம் அன்பு காட்டிக் கௌரவம் அளித்துச் சேனாதிபதிப் பதவியும் கொடுத்திருந்தார். இவனோ நன்றி கெட்ட பாதகனாயிருக்கிறான். குலத்தின் குணம் எங்கே போகும்?"

"இவனோடு உனக்கு என்னத்திற்காகச் சகவாசம் தாத்தா? இவனுக்கு நீ ஜோசியம் சொல்வது என்ன வேண்டிக் கிடந்தது?"

"உன்னால் ஏற்பட்ட சகவாசந்தான் வள்ளி!" என்றான் கிழவன்.

வள்ளி திடுக்கிட்டு "என்னால் ஏற்பட்டதா? நன்றாயிருக்கிறதே கதை!" என்றாள்.

"உன்னால் ஏற்பட்டதுதான். இத்தனை நாளும் உன்னிடம் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்லப் போகிறேன். வள்ளி! காலம் ரொம்ப அபாயமான காலம். நமது மகாராஜாவுக்கு என்ன நேருமோ, ராஜ்யம் என்ன கதியடையுமோ தெரியாது. இந்த மாரப்ப பூபதி யுத்தத்துக்குப் போகமாட்டான் என்று மட்டும் எனக்கு நிச்சயமாய்த் தெரியும். நீ இவன் விஷயத்தில் ரொம்ப எச்சரிக்கையாயிருக்க வேண்டும்."

"என்ன தாத்தா, ரொம்பப் பயமுறுத்துகிறாய்? இந்தக் கரிமூஞ்சியிடம் எனக்கு என்ன பயம்?" என்று வள்ளி கேட்டாள்.

"நான் சொல்கிறதைக் கொஞ்சம் கேள், அம்மா! ஒரு காலத்தில் இந்த மாரப்ப பூபதி தன்னை உனக்குக் கட்டிக் கொடுக்க வேணுமென்று கேட்டுக் கொண்டிருந்தான்..."

"அவன் தலையிலே இடி விழ!" என்றாள் வள்ளி.

"அவன் தலையிலே இடி விழவில்லையே, அம்மா! என் தலையிலே அல்லவா விழுந்தது! கிரக சஞ்சார ரீதியாக அப்போது நம் குடும்பத்துக்கு ஏதோ பெரிய விபத்து வரப்போகிறதென்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த மாரப்ப பூபதி தன் ஆட்களை அழைத்துக் கொண்டு வந்து உன்னைத் தூக்கிக் கொண்டு போவதாக இருந்தான் இதுவும் எனக்குத் தெரிந்தது. நீயும் உன் தமையன்மார்களும் அப்போது வீட்டில் இருந்தால் ரத்தக்களரியாகுமென்று எண்ணித்தான் எல்லோரையும் அக்கரையில் உள்ள கலியாணத்துக்குப் போங்கள் என்று அனுப்பினேன். யமன் நடு ஆற்றில் சூறாவளிக் காற்றாக வந்தான். உன் அண்ணன்மார் எல்லாரும் செத்துப் போனார்கள். சுவாமி உன்னை மட்டும் எனக்குக் கொடுத்தார்...."

இப்படிச் சொல்லிவிட்டுக் கிழவன் பெருமூச்சு விட்டான். ஆகாயத்தைப் பார்த்து ஏதோ யோசனையில் ஆழ்ந்தான்.

வள்ளி, "இத்தனை நாளும் சொல்லவில்லையே தாத்தா? இவன்தானா என் அண்ணன்மார்களுக்கெல்லாம் யமனாக வந்தவன்? அப்புறம் என்ன நடந்தது?" என்று கேட்டாள்.

"நீங்கள் எல்லோரும் படகேறிப் போன பிறகு நான் எதிர்பார்த்தபடியே இவன் தன் ஆட்களுடன் வந்தான். வீட்டில் நீ இல்லை என்று கண்டதும் தம், தம் என்று குதித்தான். அவனைச் சமாதானப்படுத்துவதற்காக நான் சோதிட சாஸ்திரத்தை உபயோகப்படுத்தினேன். 'நீ பெரிய சக்கரவர்த்தியின் மருமகன் ஆகப் போகிறாய், அப்பா! இந்த அற்ப ஆசையெல்லாம் விட்டுவிடு" என்று சொன்னேன். அது முதல் இவன் என்னவெல்லாமோ ஆகாசக் கோட்டைகள் கட்ட ஆரம்பித்து விட்டான். ஜோசியம் கேட்பதற்கு அடிக்கடி வந்து என் பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறான்."

"இப்போதுதான் அவன் என்னைப் பற்றிப் பேசியதன் அர்த்தம் புரிகிறது, தாத்தா! ஓடக்காரர் யுத்தத்துக்குப் போய் விட்டால் நான் என்ன செய்வேன்? நீதான் என்னைக் காப்பாற்றவேணும்?" என்று சொல்லிக் கிழவனுடைய கையை வள்ளி கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

கிழவன், "பைத்தியமே! ஏன் இப்படி நடுங்குகிறாய்? பொன்னன் சண்டைக்குப் போகமாட்டான். அவனை மகாராஜா அழைத்துக் கொண்டு போகமாட்டார். என் குடும்பத்துக்கு நேர்ந்த பெரிய விபத்து மகாராஜாவுக்குத் தெரியும். என் குலத்தை வளர்க்க நீ ஒருத்திதான் இருக்கிறாய் என்றும் தெரியும். ஆகையால்தான் பொன்னனைச் சண்டைக்கு வரவேண்டாம் என்றார். நிச்சயமாக அழைத்துப் போகமாட்டார்!" என்றான்.

அச்சமயம் வாசலில் முரசடிக்கும் ஓசை கேட்டது. பின்வருமாறு கூவும் குரலும் கேட்டது:- "வெற்றிவேல்! வீரவேல்! யுத்தம் வருகுது! யுத்தம் வருகுது! சோழ தேசத்தின் மானத்தைக் காக்க யுத்தம் வருகுது! படையில் சேர்வதற்கு மீசை முளைத்த ஆண் பிள்ளைகள் எல்லோரும் வரலாம். நொண்டி, குருடு, சப்பாணி, ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை தவிர மற்றவர்களெல்லாம் வரலாம். உடம்பிலே சுத்த ரத்தம் ஓடுகிறவர்கள் எல்லாரும் வரலாம். வெற்றிவேல்! வீரவேல்!" - இதைத் தொடர்ந்து முரசின் சத்தம் ஊர் அதிரும்படியாக எழுந்தது.

இந்தப் போர்முழக்கத்தைக் கேட்ட வள்ளியும் கிழவனும் தெருப் பக்கம் சென்றார்கள். முரச யானையும் அதைச் சுற்றிச் சில வீரர்களும் போய்க் கொண்டிருந்தார்கள். முரசும் முரசு அடித்தவனும் அறைகூவியவனும் யானை மேல் இருந்தனர். இந்த ஊர்வலம் தெருக் கோடி போகும்வரையில் பாட்டனும் பேத்தியும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.

ஊர்வலம் தெருக்கோடியில் திரும்பியதும் கிழவன் ஒரு பெருமூச்சு விட்டு விட்டுச் சொன்னான்:- "வள்ளி, உன்னைப் பொன்னனும் பகவானும் காப்பாற்றுவார்கள்! இந்த யுத்தத்தில் சேர்ந்து வீர சொர்க்கம் அடைய என் குடும்பத்திலே வேறு யாரும் இல்லை, நான்தான் போகப் போகிறேன்" என்றான்.

தெற்கு வானத்தில் திடீரென்று ஒரு நட்சத்திரம் நிலை பெயர்ந்தது; ஒரு வினாடி நேரம் அது பளீரென்று ஒளி வீசி வானவெளியில் அதி வேகமாய்ப் பிரயாணம் செய்தது; அடுத்த வினாடி மாயமாய் மறைந்தது.

இதை பார்த்த வள்ளிக்கு உடம்பு சிலிர்த்தது.

அதே சமயத்தில் அதே காட்சியைப் பொன்னனும் பார்த்து உடல் சிலிர்த்தான்.

அப்போது அவன் உறையூர் ராஜ வீதிகளின் வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.

பௌர்ணமிக்கு இன்னும் நாலு தினங்கள்தான் இருந்தன. சுக்கில பட்சத்துச் சந்திரன் வான வெளியில் ராஜ ஹம்சத்தைப் போல் சஞ்சரித்து வெள்ளி நிலவைப் பொழிந்து கொண்டிருந்தான். உறையூரின் மாடமாளிகைகளெல்லாம் அந்த வெண்ணிலவில் ஒளியும் மோகனமும் பெற்று சொப்பன லோகம்போல் காட்சியளித்தன.

"ஓடம் வண்டியில் ஏறும்; வண்டி ஓடத்தில் ஏறும்" என்று சொல்வதுண்டல்லவா? இந்தக் காலத்தில் திருச்சிராப்பள்ளி பெரிய நகரமாகவும் உறையூர் சிற்றூராயுமிருக்கிறது. அந்த நாளிலோ உறையூர் தான் தலைநகரம்; திருச்சிராப்பள்ளி சிற்றூர். இரண்டு ஊர்களுக்கும் நடுவில் இடைவெளியில்லாமல் கடை வீதிகளும், பலவகைத் தொழில் செய்யும் மக்கள் வாழ்ந்த தெருக்களும் இருந்தன. சிராப்பள்ளி மலையிலிருந்து மகாராஜா இறங்கி வந்து சேர்வதற்கு முன்னால் பொன்னன் அரண்மனை வாசலை அடைந்துவிட விரும்பினான்.

மகாராஜா, சுவாமி தரிசனம் செய்துவிட்டு மலை உச்சியிலிருந்து இறங்கி வரும்போது வழியில் நின்று இளவரசருக்கு என்னத்தைக் காட்டியிருப்பார் என்பது அவனுக்கு ஒருவாறு தெரிந்திருந்தது. அங்கே தான் சோழ வம்சத்தின் அவமானச் சின்னங்கள் இருந்தன. பார்த்திப மகாராஜாவின் தந்தை, மகேந்திரவர்ம சக்கரவர்த்தியின் முன்னால் வாளையும் வில்லையும் வைத்து அடிபணிந்து, விதவிதமான இரத்தினங்களையும் ஆபரணங்களையும் காணிக்கையாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளும் காட்சி அங்கே சித்தரிக்கப்பட்டிருந்தது. அதை நினைக்கும் போதே பொன்னனுக்கு இரத்தம் கொதித்தது. "சோழ நாடு இந்த அவமானத்தை எத்தனை நாளைக்குச் சகித்துக் கொண்டிருப்பது? யுத்த களத்தில் பல்லவர்களின் இரத்தத்தைப் பெருக்கி அந்த அவமானத்தைத் துடைத்துக் கொள்ள வேண்டாமா?" என்று எத்தனையோ முறை பொன்னன் சிந்தித்ததுண்டு. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் இப்போது ஏற்பட்டிருக்கும்போது தான் மட்டும் யுத்தத்துக்குப் போகாமல் வீட்டில் முக்காடிட்டுக் கொண்டிருப்பதா?- இவ்விதம் யோசித்துக் கொண்டே பொன்னன் விரைவாக நடந்து சென்றான்.

7. அருள்மொழித் தேவி

பொன்னனும் வள்ளியும் உறையூர்க் கோட்டை வாசலுக்கு வந்த அதே சமயத்தில், ராணி அருள்மொழித் தேவி அரண்மனை உத்தியான வனத்துக்குள் பிரவேசித்தாள். பல்லவ தூதருக்கு மகாராஜா கூறிய பதிலை ஏவலாளர்கள் உடனே வந்து மகாராணிக்குத் தெரிவித்தார்கள். மன்னர் வரும் வரையில் பொழுது போக்குவதற்காக ராணி உத்தியான வனத்துக்குள் சென்றாள். அவ்வனத்தில் சண்பக மலர்கள் அடர்ந்து வளர்ந்திருந்த ஒரு மூலைக்குப் போய் அங்கே அமைதியாக பளிங்குக்கல் மேடையில் உட்கார்ந்து கொண்டாள்.

அங்கிருந்து பார்த்தபோது மேற்குத் திக்கில் சூரியன் அஸ்தமனமாய்க் கொண்டிருந்த காட்சி அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல் வானம் முழுவதும் பத்தரை மாற்றுத் தங்க விதானத்தைப் போல் தகதகவென்று பிரகாசித்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே தங்கநிறத்தின் சோபை மங்கிக் கொண்டு வந்தது; அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் மேல் வானம் முழுவதும் ஒரே ரத்தச் சிவப்பாய் மாறிற்று. இந்தக் காட்சி அருள்மொழித் தேவிக்கு ரண களத்தையும் அங்கே இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடுவதையும் ஞாபகப்படுத்திற்று. தேவி நடு நடுங்கிக் கண்களை மூடிக் கொண்டாள்.

மறுபடி அவள் கண்ணைத் திறந்து பார்த்தபோது, வெள்ளி நிலவின் இன்பக் கிரணங்கள் மரக் கிளைகளின் வழியாக எட்டிப் பார்க்கத் தொடங்கியிருந்தன. ராணி உள்ளத்தில் பழைய ஞாபகங்கள், குமுறிக் கொண்டிருந்தன. பன்னிரண்டு வருஷத்துக்கு முன்னால் பார்த்திப மன்னனுக்கு மாலையிட்டு இந்த அரண்மனைக்கு அவள் வந்தாள். அந்த நாளிலிருந்து இம்மாதிரி வெண்ணிலவு பிரகாசித்த எத்தனையோ இரவுகளில் அவளும் பார்த்திபனும் இந்த உத்தியான வனத்தில் கைகோத்துக்கொண்டு உலாவியதுண்டு. இந்தப் பளிங்குக்கல் மேடைமீது உட்கார்ந்து இருவரும் நேரம் போவதே தெரியாமல் இருந்ததுண்டு. அந்த நாளில் பார்த்திபன் சில சமயம் புல்லாங்குழல் கொண்டு வந்து இசைப்பான். அருள்மொழி மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள். கண்ண பெருமானே பார்த்திபனாக உருக்கொண்டு வந்து மணம் புரிந்ததாக எண்ணிப் பூரிப்படைவாள். இப்படி சில காலம் வாழ்க்கையே ஓர் இன்பக் கனவாகச் சென்று கொண்டிருந்தது.

பிறகு விக்கிரமன் பிறந்த போது இன்ப வாழ்க்கையின் சிகரத்தை அவர்கள் அடைந்தார்கள். அதே உத்தியான வனத்தில் அதே பளிங்குக் கல்லின்மீது குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சியதெல்லாம் அருள்மொழிக்கு நினைவு வந்தது. ஆஹா! அந்த ஆனந்தமான நாட்கள் அப்படியே நீடித்திருக்கக் கூடாதா?

ஆனால் எப்படியிருக்க முடியும்? பார்த்திபனுடைய இருதயத்தின் அடிவாரத்திலே சொல்லமுடியாத வேதனையொன்று பதுங்கிக் கிடந்து அவனுடைய நெஞ்சை அரித்துக் கொண்டிருக்கையில், அவர்களுடைய ஆனந்த வாழ்க்கை எப்படி நீடித்திருக்க முடியும்? பார்த்திபனுடைய இந்த அந்தரங்க வேதனையை வெகுகாலம் கழித்தே அருள்மொழி அறிந்தாள். அறிந்தது முதல் அந்த வேதனையில் அவளும் பங்கு கொண்டாள். அதற்குத் தானே காரணமோ என்று எண்ணி எண்ணி மனம் நொந்தாள்.

ஆமாம்; அவர்களுடைய கலியாணத்தின்போதே அந்தக் காரணமும் ஏற்பட்டு விட்டது. அருள்மொழி, சேர வம்சத்தைச் சேர்ந்த ஒரு சிற்றரசன் மகள். அந்த நாளில் அவளைப் போல் சௌந்தரியவதியான ராஜகுமாரி இல்லையென்று தென்னாடெங்கும் பிரசித்தியாகியிருந்தது. அவளைப் பார்த்திபனுக்கு மணம் செய்விக்க ஏற்பாடுகள் நடந்த பிறகு, காஞ்சி மகேந்திரவர்ம சக்கரவர்த்தியிடமிருந்து சேர மன்னனுக்குத் தூதர்கள் வந்தார்கள். பட்டத்து இளவரசர் நரசிம்மவர்மருக்கு அருள்மொழியைத் திருமணம் முடிக்க விரும்புவதாகச் சக்கரவர்த்தி செய்தி அனுப்பியிருந்தார். அருள்மொழியின் உற்றார் உறவினருக்கெல்லாம் இது பெரிதும் சம்மதமாயிருந்தது. ஆனால் அருள்மொழி அதற்கு இணங்கவில்லை; பார்த்திப சோழரையே பதியாகத் தம் மனத்தில் வரித்து விட்டதாகவும், வேறொருவரை மணக்க இசையேனென்றும் கண்டிப்பாய்ச் சொன்னாள். மகேந்திர சக்கரவர்த்தி மிகவும் பெருந்தன்மையுள்ளவராதலால் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை. இளவரசர் நரசிம்மவர்மருக்குப் பாண்டியன் மகளை மணம் முடித்து வைத்தார்.

பார்த்திபனுக்கும் அருள்மொழிக்கும் மணம் நடந்த பிறகுதான் பார்த்திபனுக்கு மேற்கூறிய சம்பவம் தெரிய வந்தது. அவர் சில சமயம், "நீ சாம்ராஜ்ய சக்கரவர்த்தினியாய் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருக்க வேண்டியவள்; அதற்கு மாறாக, இந்த உள்ளங்கை அகல சோழ ராஜ்யத்திற்கு ராணியாயிருக்கிறாய்" என்று சொல்வதுண்டு. முதலில் இதை ஒரு விளையாட்டுப் பேச்சாகவே அருள்மொழி எண்ணியிருந்தாள். நாளாக ஆக, தன் பதியினுடைய மனத்தில் இந்த எண்ணம் மிக்க வேதனையை அளித்து வந்தது என்று தெரிந்து கொண்டாள். அதைப் போக்குவதற்காக அவள் எவ்வளவோ பிரயத்தனம் செய்தும் முடியவில்லை. விக்கிரமன் பிறந்ததிலிருந்து மகாராஜாவின் அந்தரங்க வேதனை அதிகமாகியே வந்ததாகத் தெரிந்தது. ஒரு சமயம் அவர் "உன் வயிற்றில் பிறந்த பிள்ளை ஒரு பெரிய சாம்ராஜ்யத்திற்குச் சக்கரவர்த்தியாயிருக்க வேண்டியவன். என்னாலல்லவா இன்னொருவருக்குக் கப்பம் கட்டும் சிற்றரசு அவனுக்கு லபிக்கிறது!" என்பார். இன்னொரு சமயம், "அருள்மொழி! உன் பிள்ளைக்கு என்னால் சாம்ராஜ்யப் பட்டாபிஷேகம் செய்து வைக்க முடியாது. ஆனால் வீரத்தந்தையின் புதல்வன் என்ற பட்டத்தை நிச்சயம் அளிப்பேன்!" என்றார்.

அவருடைய வாக்கை நிறைவேற்றும் சமயம் இப்போது வந்துவிட்டது. பழைய காலத்து வீர பத்தினிகளைப் போல் அவருடன் தானும் உயிர் விடுகிறதாயிருந்தால் பாதகமில்லை. அந்தப் பாக்கியத்தையும் தனக்கு அளிக்க மறுக்கிறாரே? தான் வீரத்தாயாக இருந்து விக்கிரமனை வீர மகனாக வளர்க்க வேணுமாமே? ஐயோ, அவரைப் பிரிந்த பிறகு உயிரைத்தான் தாங்க முடியுமா?

இப்படி எண்ணியபோது அருள்மொழிக்கு நெஞ்சு பிளந்து விடும் போலிருந்தது. திடீரென்று அழுகை பீறிக் கொண்டு வந்தது. "ஓ!" வென்று கதறிவிட்டாள்.

"அருள்மொழி! உன்னை வீர பத்தினி என்றல்லவா நினைத்தேன்? இவ்வளவு கோழையா நீ?" என்று கடினமான குரலில் கூறிய வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். பார்த்திப மகாராஜா அங்கு நின்றார். உடனே அவளுடைய அழுகை நின்றது. கண்ணீரும் வறண்டு விட்டது.

"வா! அரண்மனைக்குப் போகலாம்! அழுவதற்கும் சமாதானப்படுத்துவதற்கும் இப்போது நேரமில்லை" என்றார் மகாராஜா.

இருவரும் கைகோத்துக் கொண்டு வாய் பேசாமல் அரண்மனைக்குள் போனார்கள்.

பார்த்திபனும், அருள்மொழியும் அரண்மனைக்குள் பிரவேசித்து, பூஜாக்கிரஹத்துக்கு வந்தபோது தீபாராதனை நடக்கும் சமயமாயிருந்தது. பூஜாக்கிரகத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இடது பக்கத்தில் பார்வதி தேவியின் அற்புதச் சிலை ஒன்று இருந்தது. தேவியின் இருபுறத்திலும் விநாயகரும் முருகக் கடவுளும் வீற்றிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதரான மகாவிஷ்ணு தரிசனம் தந்தார். எல்லா விக்கிரகங்களும் சண்பகம், பன்னீர், பாரிஜாதம் முதலிய மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

தெய்வ சந்நிதியில் இளவரசர் விக்கிரமன், கைகூப்பிய வண்ணம் நின்று ஆராதனையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அர்ச்சகர் தீபாராதனை செய்து மூவருக்கும் பிரஸாதம் கொடுத்துவிட்டு வெளியே சென்றார். விக்கிரமன் மகாராஜாவைப் பார்த்து, "அப்பா! சித்திர மண்டபத்துக்குப் போகலாம் என்றீர்களே?" என்று கேட்டான். "இதோ நான் வருகிறேன்; விக்கிரமா! நீ முன்னால் போ!" என்றார் மகாராஜா.

விக்கிரமன் வெளியே சென்றதும், மகாவிஷ்ணுவின் பாதத்தினடியில் வைத்திருந்த நீள வாட்டான மரப்பெட்டியை மகாராஜா சுட்டிக் காட்டிச் சொன்னார்:-"தேவி! அந்தப் பெட்டிக்குள்ளே என்ன இருக்கிறது என்று என்னை நீ பல தடவை கேட்டிருக்கிறாய். நானும் 'காலம் வரும் போது சொல்லுகிறேன்!' என்று சொல்லி வந்திருக்கிறேன். சொல்ல வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. சோழ வம்சத்தின் புராதன பொக்கிஷம் இந்தப் பெட்டிக்குள்ளே இருக்கிறது. இதோ திறந்து காட்டுகிறேன் பார்!"

இவ்விதம் சொல்லிக் கொண்டே மகாராஜா அந்த மரப்பெட்டியைத் திறந்தார். பெட்டிக்குள்ளே பளபளவென்று ஜொலித்த ஓர் உடைவாளும் ஓர் ஓலைச்சுவடியும் காணப்பட்டன. உடைவாளின் பிடி தங்கத்தினாலானது, இரத்தினங்கள் இழைத்தது. வாளும் எண்ணெய் பூசிக் கூர்மையாய்த் தீட்டி வைத்திருந்தது. ஆகவே பிடியும் வாளும் ஒன்றோடொன்று போட்டியிட்டு ஒளி வீசின. இதற்கு மாறாக, ஓலைச்சுவடியோ மிகப் பழமையானதாய்க் கருநிறமாயிருந்தது.

பார்த்திபன் சொன்னான்:- "தேவி! இந்த உடைவாள் சோழ வம்சத்திலே முற்காலத்திலே பிரசித்தி பெற்றிருந்த சக்கரவர்த்திகள் காலத்திலிருந்து வந்தது. கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் இந்த உடைவாளைத் தரித்து உலகத்தை ஆண்டார்கள். ஓலைச் சுவடியில் உள்ளது நமது தமிழகத்தின் தெய்வப் புலவர் அருளிய திருக்குறள். இந்த உடைவாளும், குறள்நூலும்தான் சோழர் குலத்தின் புராதன பொக்கிஷங்கள். இவற்றை நீ வைத்துக் காப்பாற்றி விக்கிரமனுக்கு வயது வரும்போது அவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அருள்மொழி! இந்தப் புராதன உடைவாளை என் தகப்பனார் அணிந்திருந்தார்; ஆனால் நான் அணியவில்லை. கப்பங் கட்டும் சிற்றரசனாயிருந்து கொண்டு கரிகால் வளவனும் நெடுமுடிக் கிள்ளியும் அணிந்த உடைவாளை அணிய நான் விரும்பவில்லை. விக்கிரமனிடம் நீ இதையும் சொல்ல வேண்டும். எப்போது அவன் ஒரு சின்னஞ்சிறு பிரதேசத்துக்காவது சுதந்தர மன்னனாகிறானோ அப்போது தான் இந்த உடைவாளைத் தரிக்கலாமென்று கூற வேண்டும். அக்காலத்தில் இந்த உடைவாளைத் தரித்து, இந்தத் தெய்வத் திருக்குறளில் சொல்லியிருக்கும் வண்ணம் இராஜ்ய பாரம் செய்யும் படியும் கூற வேண்டும். இந்தப் பொறுப்பை உன்னிடம் ஒப்புவிக்கிறேன். அருள்மொழி! அதை நிறைவேற்றுவதாகத் தெய்வ சன்னிதானத்தில் எனக்கு வாக்குறுதி அளிக்க வேண்டும். விக்கிரமனை வீரமகனாக நீ வளர்க்க வேண்டும்."

இதைக் கேட்ட அருள்மொழித் தேவி கண்களில் நீர் ததும்ப, விம்முகின்ற குரலில், "அப்படியே செய்கிறேன்; மகாராஜா!" என்றாள். பார்த்திபன் அப்போது "இறைவன் அதற்கு வேண்டிய தைரியத்தை உனக்கு அளிக்கட்டும்!" என்று சொல்லி அருள்மொழியைத் தழுவிக் கொண்டு அவளுடைய கண்களில் பெருகிய கண்ணீரைத் தம்முடைய மேலாடையால் துடைத்தார்.

8. சித்திர மண்டபம்

உறையூர்த் தெற்கு ராஜவீதியிலிருந்த சித்திர மண்டபம் அந்தக் காலத்தில் தென்னாடெங்கும் புகழ் வாய்ந்திருந்தது. காஞ்சியிலுள்ள மகேந்திர சக்கரவர்த்தியின் பேர் பெற்ற சித்திர மண்டபம் கூட உறையூர்ச் சித்திர மண்டபத்துக்கு நிகராகாது என்று ஜனங்கள் பேசுவது சகஜமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவும் இளவரசர் விக்கிரமனும் வெண் புரவிகளின் மீதேறி இந்தச் சித்திர மண்டபத்தின் வாசலை அடைந்த அதே சமயத்தில், அங்கே படகோட்டி பொன்னனும் வந்து சேர்ந்தான். இந்த அகாலவேளையில் மகாராஜாவைப் பார்க்க முடியுமோ என்னவோ என்ற கவலையுடன் வந்த பொன்னன் திடீரென்று மகாராஜாவைப் பார்த்ததும் இன்னது சொல்வதென்று தெரியாமல் திகைத்தான். "மகாராஜா..." என்னும்போதே அவனுக்கு நாக்குழறியது. அந்தக் குழறிய குரலைக் கேட்டு மகாராஜாவும் இளவரசரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள். "பொன்னா! நீ எங்கே வந்தாய்?" என்றார் மகாராஜா. பொன்னனின் மௌனத்தைக் கண்டு ஒருவாறு அவன் வந்த காரணத்தை ஊகித்தவராய், குதிரை மீதிருந்து கீழிறங்கினார். இளவரசர் விக்கிரமனும் லாவகமாய்க் குதிரை மீதிருந்து குதித்தார். "பொன்னா! இந்தத் தீவர்த்தியை வாங்கிக் கொள்!" என்றார் மகாராஜா. அருகே தீவர்த்தி வைத்துக் கொண்டு நின்ற ஏவலாளனிடமிருந்து பொன்னன் தீவர்த்தியை வாங்கிக் கொண்டான். அந்த வேளையில் மகாராஜா எதற்காக சித்திர மண்டபத்துக்கு வந்திருக்கிறார் எதற்காகத் தன்னை தீவர்த்தியுடன் பின் தொடரச் சொல்லுகிறார் என்பதொன்றும் அவனுக்குப் புரியாவிட்டாலும், மகாராஜா தன்னைத் திரும்பிப் போகச் சொல்லாமல் தம்முடன் வரும்படி சொன்னதில் அளவிலாத குதூகலமுண்டாயிற்று. மகாராஜாவும் இளவரசரும் முன் செல்ல; பொன்னன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு சித்திர மண்டபத்துக்குள் புகுந்தான்.

அந்த சித்திர மண்டபத்துக்குள் முதல் முதலாகப் பிரவேசிக்கிறவர்களுக்கு "நமக்குள்ள இரண்டு கண் போதாது; இரண்டாயிரம் கண் இருந்தால் இங்கேயுள்ள சித்திரங்களை ஒருவாறு பார்த்துத் திருப்தியடையலாம்" என்று தோன்றும். அந்த விஸ்தாரமான மண்டபத்தின் விசாலமான சுவர்களில் விதவிதமான வர்ணங்களில் பலவகைச் சித்திரங்கள் தீட்டப் பெற்றிருந்தன. அந்த மண்டபத்தைத் தாங்கிய சிற்ப வேலைப்பாடுள்ள தூண்களிலும் சித்திரங்கள் காணப்பட்டன. மேல் விமானத்தின் உட்புறங்களையும் சித்திரங்கள் அலங்கரித்தன. ஒரு சுவரில் ததீசி முனிவரிடம் இந்திரன் வச்சிராயுதத்தைப் பெறுவது, இந்திரன் விருத்திராசுரனைச் சம்ஹரிப்பது, பிறகு இந்திரலோகம் வருவது, தேவர்களும் தேவமாதர்களும் இந்திரனை எதிர்கொண்டு வரவேற்பது. இந்திரனுடைய சபையில் தேவ மாதர்கள் நடனம் புரிவது முதலிய காட்சியைச் சித்திரித்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில், திருப்பாற்கடலில் மந்திரகிரியை மத்தாகவும் வாஸுகியைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் ஒருபக்கமும் அசுரர்கள் ஒரு பக்கமும் நின்று கடையும் பிரம்மாண்டமான காட்சியைச் சித்திரித்திருந்தது. அடுத்தாற்போல, பரமசிவனுடைய தவத்தைக் கலைப்பதற்குக் காமதேவன் மலர்க்கணை தொடுப்பது முதல் குமரப் பெருமான் ஜனனம் வரையிலும் உள்ள காட்சிகள் காணப்பட்டன. இந்த உருவங்கள் எல்லாம் கேவலம் உயிரற்ற சித்திரங்களாகத் தோன்றவில்லை. கால், கை, முகம் இவற்றின் சரியான அளவு எடுத்துச் சாமுத்திரிகா லட்சணத்துக்கு இணங்க எழுதப்பட்டிருக்கவுமில்லை. ஆனாலும், அந்த உருவங்களின் ஒவ்வொரு அவயத்திலும், காணப்பட்ட நெளிவும் முகத்தில் பொலிந்த பாவமும், தத்ரூபமாய் அந்தத் தேவர்களின் முன்னால் நாம் நிற்கிறோமென்னும் மயக்கத்தை உண்டாக்கின.

பிரதி மாதம் மூன்று தினங்கள் இந்தச் சித்திர மண்டபம் பிரஜைகள் எல்லோரும் பார்ப்பதற்கென்று திறந்து வைக்கப்படுவதுண்டு. அவ்வாறு திறந்திருந்த நாட்களில் பொன்னன் இரண்டு மூன்று தடவை இந்தச் சித்திரங்களைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறான். இப்போதும் அந்தச் சித்திரங்கள் அவனுடைய கண்ணையும் கருத்தையும் கவரத்தான் செய்தன. ஆனாலும் இன்று அவற்றை நின்று பார்க்க முடியாதபடி மகாராஜாவும் இளவரசரும் முன்னால் விரைந்து போய்க் கொண்டிருந்தபடியால், பொன்னனும் அவர்களைப் பின்தொடர்ந்து விரைந்து சென்றான்.

சித்திர மண்டபத்தின் இரண்டு மூன்று கட்டுக்களையும் தாண்டிச் சென்று கடைசியாக, பூட்டிய கதவையுடைய ஒரு வாசற்படியண்டை மகாராஜா நின்றார். முன்னொரு தடவை பொன்னன் இதே இடத்தில் நின்று இந்த வாசற்படிக்கு உட்புறத்தில் என்ன இருக்குமோ என்று யோசித்திருக்கிறான். இந்தக் கதவைத் திறக்கக் கூடாதென்பது மகாராஜாவின் கட்டளை என்று காவலாளர்கள் அப்போது தெரிவித்ததுண்டு. மகாராஜா இப்போது அந்தக் கதவண்டை வந்து நின்று, தம் கையிலிருந்த சாவியினால் பூட்டைத் திறக்கத் தொடங்கியதும் பொன்னனுடைய ஆவல் அளவு கடந்ததாயிற்று. "இதனுள்ளே ஏதோ பெரிய அதிசயம் இருக்கிறது. அதை நாம் இப்போது பார்க்கப் போகிறோம்" என்று எண்ணியபோது அவனுடைய நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

கதவு திறந்ததும், "பொன்னா! நீ முதலில் உள்ளே போ! தீவர்த்தியை நன்றாய்த் தூக்கிப் பிடி! சுவருக்கு ரொம்பச் சமீபமாய்க் கொண்டு போகாதே! தீவர்த்தி புகையினால் சித்திரங்கள் கெட்டுப் போகும்" என்றார் மகாராஜா.

பொன்னன் உள்ளே போய் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான். அங்கிருந்த சுவர்களிலும் சித்திரங்கள்தான் தீட்டியிருந்தன. ஆனால் அவை என்ன சித்திரங்கள், எதைக் குறிப்பிடுகின்றன என்பது அவனுக்குத் தெரியவில்லை.

பொன்னனுக்குப் பின்னால், விக்கிரமனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு பார்த்திப மகாராஜா அந்த இருள் சூழ்ந்த மண்டபத்துக்குள்ளே புகுந்தார்.

"குழந்தாய்! பூட்டி வைத்திருக்கும் இந்த மண்டபத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பல தடவை என்னைக் கேட்டிருக்கிறாயே! உனக்கு இன்னும் கொஞ்ச வயதான பிறகு இந்தச் சித்திரங்களைக் காட்ட வேணுமென்றிருந்தேன். ஆனால் இப்போதே காட்ட வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. விக்கிரமா! இந்த மண்டபத்தை நான் வேணுமென்றே இருளடைந்ததாய் வைத்திருந்தேன். இதற்குள்ளே என்னைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை. யாரும் இந்தச் சுவரிலுள்ள சித்திரங்களைப் பார்த்ததில்லை! பொன்னா தீவர்த்தியைத் தூக்கிப்பிடி!" என்றார் மகாராஜா.

அவருடைய பேச்சில் கவனமாயிருந்த பொன்னன் சட்டென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தான்.

"அதோ, அந்த முதல் சித்திரத்தைப் பார்! குழந்தாய் அதில் என்ன தெரிகிறது?" என்று மகாராஜா கேட்டார்.

"யுத்தத்துக்கு படை கிளம்புகிறது. ஆஹா எவ்வளவு பெரிய சைன்யம்! எவ்வளவு யானைகள், எவ்வளவு தேர்கள்; குதிரைகள்; எவ்வளவு காலாட் படைகள்" என்று விக்கிரமன் வியப்புடன் கூறினான்.

பிறகு, சட்டென்று திரும்பித் தந்தையின் முகத்தைப் பார்த்து, "அப்பா..." என்று தயங்கினான்.

"என்ன விக்கிரமா! கேள்?" என்றார் மகாராஜா.

"ஒன்றுமில்லை, அப்பா! இந்தச் சித்திரங்கள் யார் எழுதியவையென்று யோசித்தேன்" என்றான் விக்கிரமன்.

"நீ நினைத்தது சரிதான் குழந்தாய்! என் கையினால், நானே எழுதிய சித்திரங்கள்தாம் இவை. இந்தப் பன்னிரண்டு வருஷ காலமாய் இரவிலும், பகலிலும் தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் நான் கண்டு வந்த கனவுகளைத் தான் இங்கே எழுதியிருக்கிறேன். குழந்தாய்! நன்றாய்ப் பார்! யாருடைய சைன்யங்கள் இவை, தெரிகிறதா?"

"ஆஹா! தெரிகிறது. முன்னால் புலிக்கொடி போகிறதல்லவா? சோழ ராஜ்யத்தின் படைகள்தான் இவை. ஆனால் அப்பா!..." என்று மறுபடியும் தயங்கினான் விக்கிரமன்.

"என்ன கேட்க வேணுமோ, கேள் விக்கிரமா?"

"அவ்வளவு கம்பீரமாக நடந்துபோகும் அந்தப் பட்டத்து யானையின் மேல், யானைப்பாகன் மட்டுந் தானே இருக்கிறான் அம்பாரியில் யாரும் இல்லையே, அப்பா!"

"நல்ல கேள்வி கேட்டாய்! வேண்டுமென்றேதான் அப்படி யானையின் மேல் யாரும் இல்லாமல் விட்டிருக்கிறேன். இந்தச் சோழ வம்சத்திலே எந்தத் தீரன் இம்மாதிரி பெரிய சைன்யத்தைத் திரட்டிக் கொண்டு திக்விஜயம் செய்வதற்காகக் கிளம்பிப் போகிறானோ, அவனுடைய உருவத்தை அந்த யானையின் மேல் எழுதவேணும், குழந்தாய்! தற்சமயம் இந்தச் சோழராஜ்யம் ஒரு கையலகமுள்ள சிற்றரசாக இருக்கிறது. வடக்கே பல்லவர்களும், தெற்கே பாண்டியர்களும் மேற்கே சேரர்களும் இந்தச் சோழ நாட்டை நெருக்கிச் சிறைப்பிடித்திருக்கிறார்கள். ஆனால் இந்த நாடு எப்போதும் இப்படியிருந்ததில்லை. ஒரு காலத்தில் நம்முடைய வம்சம் மிக்க புகழ் வாய்ந்திருந்தது. விக்கிரமா! உன்னுடைய மூதாதைகளிலே கரிகால் வளவன் நெடுமுடிக் கிள்ளி முதலிய மாவீரர்கள் இருந்திருக்கிறார்கள். சோழர் என்ற பெயரைக் கேட்டதும் மாற்றரசர்கள் நடுங்கும்படியாக அவர்கள் வீரச் செயல்கள் புரிந்திருக்கிறார்கள். அப்போது பல்லவர் என்ற பெயரே இந்தத் தென்னாட்டில் இருந்ததில்லை. சோழ சாம்ராஜ்யம் வடக்கே வெகுதூரம் பரவியிருந்தது. அந்நாளில் பாண்டியர்களும் சேரர்களும் சோழ மன்னர்களுக்குத் திறை செலுத்திக் கொண்டிருந்தார்கள். கடல்களுக்கு அப்பால் எத்தனையோ தூரத்திலுள்ள அரசர்களெல்லாம் சோழ சக்கரவர்த்திகளுக்குக் காணிக்கைகளுடன் தூதர்களை அனுப்பி வந்தார்கள். இப்போது கடல்மல்லைத் துறைமுகம் பிரசித்தி பெற்றிருப்பது போல அந்நாளில் காவேரிப்பட்டினம் பெரிய துறைமுகமாயிருந்தது. காவேரிப்பட்டினத்திலிருந்து பெரிய கப்பல்கள் கிளம்பித் தூர தூர தேசங்களுக்கெல்லாம் சென்று பொன்னும் மணியும் கொண்டுவந்து, சோழ மன்னர்களின் பொக்கிஷத்தை நிரப்பி வந்தன. குழந்தாய்! மறுபடியும் இந்தச் சோழநாடு அம்மாதிரி மகோன்னத நிலை அடையவேண்டுமென்பது என் உள்ளத்தில் பொங்கும் ஆசை; நான் இரவிலும் பகலிலும் காணும் கனவு! அதோ, அந்தச் சித்திரத்தைப் பார்!"

இவ்விதம் மகாராஜா ஆவேசம் கொண்டவர்போல் பேசிக் கொண்டு மேலும் மேலும் சித்திரங்களைக் காட்டிக் கொண்டே போனார். அடுத்த சித்திரத்தில், சோழ சைன்யம் ஒரு பெரிய நதியைக் கடக்கும் காட்சி காணப்பட்டது. பிறகு அப்படைகள் பெரியதோர் மலையில் ஏறிச் சென்றன. அப்பால் ஒரு பெரிய யுத்தக் காட்சி காணப்பட்டது. அதிலே சோழர் சைன்யம் வெற்றியடைந்த பிறகு மாற்றரசர்கள் காணிக்கைகளுடன் வந்து சரணாகதி செய்கிறார்கள்.

இம்மாதிரி பல நதிகளைக் தாண்டியும் பல மலைகளைக் கடந்தும் பல மன்னர்களை வென்றும் கடைசியில் சோழ சைனியம் இமய மலையை அடைகிறது. பர்வத ராஜாவான இமயத்தின் உச்சியில் சோழர்களின் புலிக்கொடி நாட்டப்படுகிறது. இதற்குப் பிறகு சோழ நாட்டின் தலைநகருக்குச் சைன்யம் திரும்பி வருவதும் நகர மாந்தர் அந்த வீரப்படையை எதிர் கொண்டழைப்பதுமான கோலாகலக் காட்சிகள்.

இன்னொரு பக்கத்தில் புலிக்கொடி பறக்கும் பெரிய பெரிய கப்பல்கள் துறைமுகங்களிலிருந்து கிளம்பும் காட்சியை அற்புதமாகச் சித்திரித்திருந்தது. அந்தக் கப்பல்கள் தூர தூர தேசங்களுக்குப் போய்ச் சேருகின்றன. அந்தந்தத் தேசங்களின் மன்னர்கள் பரிவாரங்களுடன் எதிர்கொண்டு வந்து சோழநாட்டின் தூதர்களை உபசரிக்கிறார்கள். கடல் சூழ்ந்த அந்நாடுகளில் சோழர்களின் புலிக்கொடி கம்பீரமாய்ப் பறக்கிறது; புலிக்கொடி பறக்கும் தேசங்களிலெல்லாம் பெரிய பெரிய கோயில்களும் கோபுரங்களும் வானை அளாவி எழுகின்றன. இத்தகைய அற்புதமான சித்திரங்களே அந்த மண்டபம் முழுவதும் நிறைந்திருந்தன.

9. விக்கிரமன் சபதம்

சித்திரங்கள் எல்லாம் பார்த்து முடித்ததும் விக்கிரமன் தயங்கிய குரலில் "அப்பா!" என்றான். மகாராஜா அவனை அன்பு கனியப் பார்த்து "என்ன கேட்க வேண்டுமோ கேள், குழந்தாய்! சொல்ல வேண்டியதையெல்லாம் தயங்காமல் சொல்லிவிடு; இனிமேல் சந்தர்ப்பம் கிடைப்பது அரிது" என்றார்.

"ஒன்றுமில்லை அப்பா! இந்தச் சித்திரங்கள் எல்லாம் எவ்வளவு நன்றாயிருக்கின்றன என்று சொல்ல ஆரம்பித்தேன். இவ்வளவு அற்புதமாய்ச் சித்திரம் எழுத எப்போது கற்றுக் கொண்டீர்கள்? நமது சித்திர மண்டபத்தில்கூட இவ்வளவு அழகான சித்திரங்கள் இல்லையே!" என்றான் விக்கிரமன்.

மகாராஜா மைந்தனைக் கட்டி அணைத்துக் கொண்டார். "என் கண்ணே! என்னுடைய சித்திரத் திறமையை நீ ஒருவன் வியந்து பாராட்டியதே எனக்குப் போதும். வேறு யாரும் பார்த்துப் பாராட்ட வேண்டியதில்லை. என் மனத்திலிருந்த ஏக்கம் இன்று தீர்ந்தது" என்றார்.

"ஆனால் அப்பா! எதற்காக உங்கள் வித்தையை நீங்கள் இவ்விதம் ஒளித்து வைத்திருக்க வேண்டும்? இந்த ஆச்சரியமான சித்திரங்களைப் பற்றி நீங்கள் வெட்கப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆகா! இந்த உருவங்கள் எல்லாம் எவ்வளவு தத்ரூபமாக, உணர்ச்சி பெற்று விளங்குகின்றன? முகங்களிலே தான் எத்தனை ஜீவகளை! இவ்வளவு ஆச்சரியமான சித்திரங்களை வேறு யார் எழுத முடியும்? ஏன் இந்தத் திருட்டு மண்டபத்தில் இவற்றைப் பூட்டி வைத்திருக்க வேண்டும்? எல்லாரும் பார்த்து சந்தோஷப்பட்டாலென்ன?" என்று விக்கிரமன் ஆத்திரமாய்ப் பேசினான்.

அப்போது பார்த்திப மகாராஜா சொல்லுகிறார்:- "கேள், விக்கிரமா! இந்த உலகத்தில் எவன் அதிகாரமும் சக்தியும் பெற்றிருக்கிறானோ, அவனிடம் உள்ள வித்தையைத்தான் உலகம் ஒப்புக் கொண்டு பாராட்டும். காஞ்சியில் மகேந்திர சக்கரவர்த்தி இருந்தாரல்லவா? ஒரு தடவை பெரிய வித்வசபைகூடி அவருக்குச் 'சித்திரக்காரப் புலி' என்ற பட்டம் அளித்தார்கள். மகேந்திரவர்மருடைய சித்திரங்கள் மிகவும் சாமானியமானவை; ஆனாலும் அவற்றைப் புகழாதவர் கிடையாது. இப்போதுள்ள நரசிம்ம சக்கரவர்த்திக்கு இது மாதிரி எத்தனையோ பட்டப் பெயர்கள் உண்டு. சித்திரக் கலையில் சிங்கம்! கான வித்தையில் நாரதர்! சிற்பத்தில் விசுவகர்மா! - உலகம் இப்படியெல்லாம் அவரைப் போற்றுகிறது. ஏன்? அவரிடம் பெரிய சைன்யம் இருப்பதினால்தான். குழந்தாய்! தெய்வத்துக்கு ஏழை, செல்வன் என்ற வித்தியாசம் இல்லை. இறைவனுக்குச் சக்கரவர்த்தியும் ஒன்றுதான்! செருப்பு தைக்கும் சக்கிலியனும் ஒன்றுதான். ஆனாலும் இந்த உலகத்தில் தெய்வத்தின் பிரதிநிதிகளாயிருப்பவர்கள் கூட, பெரிய படை பலம் உள்ளவன் பக்கமே தெய்வமும் இருப்பதாய்க் கருதுகிறார்கள். மகேந்திரன் வெகுகாலம் ஜைன மதத்தில் இருந்தான்! சிவனடியார்களை எவ்வளவோ துன்பங்களுக்கு உள்ளாக்கினான். பிறகு அவனுக்குத் திடீரென்று ஞானோதயம் உண்டாயிற்று. சிவபக்தன் என்று வேஷம் போட்டு நடித்தான் விக்கிரமா! மகேந்திரனும் சரி, அவன் மகன் நரசிம்மனும் சரி, நடிப்புக் கலையில் தேர்ந்தவர்கள்; விதவிதமான வேஷங்கள் போட்டுக் கொள்வார்கள்; நம்பினவர்களை ஏமாற்றுவார்கள். இவர்களுடைய சிவபக்தி நடிப்பு உலகத்தை ஏமாற்றிவிட்டது. புராதன காலத்திலிருந்து சோழ வம்சத்தினர்தான் சைவத்தையும், வைஷ்ணவத்தையும் வளர்த்து வந்தார்கள். சிராப்பள்ளிப் பெருமானையும், ஸ்ரீரங்கநாதனையும், குல தெய்வங்களாகப் போற்றி வந்தார்கள். ஆனால் இன்றைய தினம் சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் யாருடைய சபா மண்டபத்திற்குப் போகிறார்கள்? திரிலோகாதிபதியான காஞ்சி நரசிம்ம சக்கரவர்த்தியின் ஆஸ்தான மண்டபத்துக்குத் தான்! என்னுடைய சித்திரங்களைப் பிறர் பார்ப்பதை நான் ஏன் விரும்பவில்லை என்று இப்போது தெரிகிறதா? சோழ நாடு சிற்றரசாயிருக்கும் வரையில் 'பார்த்திபன் சித்திரம் வேறு எழுத ஆரம்பித்து விட்டானா' என்று உலகம் பரிகசிக்கும். விக்கிரமா! இன்னொரு விஷயம் நீ மறந்து விட்டாய்..." என்று நிறுத்தினார் மகாராஜா.

"என்ன அப்பா?" என்று விக்கிரமன் கேட்டான்.

"இவை கேவலம் சித்திரத் திறமையைக் காட்டுவதற்காக மட்டும் எழுதிய சித்திரங்கள் அல்லவே, குழந்தாய்! என்னுடைய மனோரதங்களை என் இருதய அந்தரங்கத்தில் பொங்கிக் கொண்டிருக்கும் ஆசைகளையல்லவா இப்படிச் சித்திரித்திருக்கிறேன்? இந்தச் சித்திரங்களை இப்போது பார்க்கிறவர்கள் சிரிக்கமாட்டார்களா? 'வீணாசை கொண்டவன்' 'எட்டாத பழத்துக்கு கொட்டாவி விடுகிறவன்' என்றெல்லாம் பரிகசிக்க மாட்டார்களா? ஆகையினாலேயே, இந்த மண்டபத்தை இப்படி இருள் சூழ்ந்ததாய் இப்போது வைத்திருக்கிறேன். இந்தச் சித்திரக் காட்சிகள் எப்போது உண்மைச் சம்பவங்களாகத் தொடங்குமோ, அப்போதுதான் மண்டபத்தில் வெளிச்சம் வரச் செய்ய வேண்டும். அப்போதுதான் எல்லா ஜனங்களும் வந்து பார்க்கும்படி மண்டபத்தைத் திறந்துவிடவேண்டும். அந்தப் பாக்கியம், விக்கிரமா என் காலத்தில் எனக்குக் கிடைக்கப் போவதில்லை. உன்னுடைய காலத்திலாவது நிறைவேற வேண்டுமென்பது என் ஆசை. என்னுடன் நீயும் போர்க்களத்துக்கு வருவதாகச் சொல்வதை நான் ஏன் மறுக்கிறேன் என்று இப்போது தெரிகிறதல்லவா?"

"தெரிகிறது அப்பா!"

"என் கனவை நிறைவேற்றுவதற்காக நீ உயிர்வாழ வேண்டும். சோழ நாட்டின் உன்னதமே உன் வாழ்க்கையின் நோக்கமாயிருக்க வேண்டும். சோழர் குலம் பெருமையடைவதே அல்லும் பகலும் உன்னுடைய நினைவாயிருக்க வேண்டும். சோழரின் புலிக்கொடி வேறு எந்த நாட்டின் கொடிக்கும் தாழாமல் வானளாவிப் பறக்கவேண்டுமென்று சதா காலமும் நீ சிந்திக்க வேண்டும். நாளை மறுதினம் நான் போருக்குக் கிளம்புகிறேன். யுத்த களத்திலிருந்து திரும்பி வருவேனென்பது நிச்சயமில்லை. விக்கிரமா! போர்க்களத்தில் மடிகிறவர்கள் வீர சொர்க்கம் அடைகிறார்களென்று புராணங்கள் சொல்லுகின்றன. ஆனால், நான் வீர சொர்க்கம் போகமாட்டேன். திரும்பி இந்தச் சோழ நாட்டுக்குத்தான் வருவேன். காவேரி நதி பாயும் இந்தச் சோழ வளநாடுதான் எனக்குச் சொர்க்கம். நான் இறந்த பிற்பாடு என்னுடைய ஆன்மா இந்தச் சோழ நாட்டு வயல் வெளிகளிலும், கோயில் குளங்களிலும், நதிகரைகளிலும், தென்னந் தோப்புகளிலும்தான் உலாவிக் கொண்டிருக்கும். அப்போது 'பார்த்திபன் மகனால் சோழர் குலம் பெருமையடைந்தது' என்று ஜனங்கள் பேசும் வார்த்தை என் காதில் விழுமானால், அதைவிட எனக்கு ஆனந்தமளிப்பது வேறொன்றுமிராது. எனக்கு நீ செய்ய வேண்டிய ஈமக்கடன் இதுதான். செய்வாயா, விக்கிரமா?"

இளவரசன் விக்கிரமன், "செய்வேன், அப்பா! சத்தியமாய்ச் செய்வேன்!" என்று தழுதழுத்த குரலில் சொன்னான். அவன் கண்களில் நீர்துளித்து முத்து முத்தாகக் கீழே சிந்திற்று.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த பொன்னனுடைய கண்களிலிருந்தும் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

மகாராஜா அவனைப் பார்த்து, "பொன்னா! எல்லாம் கேட்டுக் கொண்டிருந்தாயல்லவா? இளவரசரிடம் உண்மையான அன்புள்ள சிலராவது அவருக்குத் துணையாக இருக்கச் சொல்லுகிறேன். என்னுடன் நீ யுத்தத்துக்கு வருவதைக் காட்டிலும் இளவரசருக்குத் துணையாக இருந்தாயானால், அதுதான் எனக்குத் திருப்தியளிக்கும் இருக்கிறாயல்லவா?" என்று கேட்டார்.

பொன்னன் விம்மலுடன் "இருக்கிறேன், மகாராஜா!" என்றான்.

10. படை கிளம்பல்

உறையூரில் அன்று அதிகாலையிலிருந்து அல்லோலகல்லோலமாயிருந்தது. பார்த்திப மகாராஜாவின் பட்டாபிஷேகத்தின் போதும் மகேந்திர வர்ம சக்கரவர்த்தியின் விஜயத்தின் போதும்கூட, உறையூர் வீதிகள் இவ்வளவு அழகாக அலங்கரிக்கப்படவில்லையென்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். வீட்டுக்கு வீடு தென்னங்குருத்துக்களினாலும் மாவிலைகளினாலும் செய்த தோரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. வீடுகளின் திண்ணைப் புறங்களிலெல்லாம், புதிய சுண்ணாம்பும் சிவப்புக் காவியும் மாறிமாறி அடித்திருந்தது. ஸ்திரீகள் அதிகாலையிலேயே எழுந்திருந்து, தெருவாசலைச் சுத்தம் செய்து, அழகான கோலங்கள் போட்டு, வாசலில் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்கள். பிறகு, ஆடை ஆபரணங்களினால் நன்கு அலங்கரித்துக் கொண்டு, போருக்குப் படை கிளம்பும் வேடிக்கை பார்ப்பதற்காக வாசல் திண்ணைகளிலோ மேல் மாடிகளின் சாளரங்களின் அருகிலோ வந்து நின்று கொண்டார்கள்.

விடிய ஒரு சாமம் இருக்கும்போதே, அரண்மனையிலுள்ள பெரிய ரண பேரிகை முழங்கத் தொடங்கியது. அதனுடன் வேறு சில சத்தங்களும் கலந்து கேட்கத் தொடங்கின. குதிரைகள் கனைக்கும் சத்தம், யுத்த வீரர்கள் ஒருவரையொருவர் கூவி அழைக்கும் குரல், அவர்கள் இடையிடையே எழுப்பிய வீர முழக்கங்களின் ஒலி, வேல்களும் வாள்களும் ஒன்றோடொன்று உராயும் போது உண்டான கண கண ஒலி, போருக்குப் புறப்படும் வீரர்களை அவர்களுடைய தாய்மார்கள் வாழ்த்தி அனுப்பும் குரல், காதலிகள் காதலர்களுக்கு விடை கொடுக்கும் குரல் - இவ்வளவுடன், வழக்கத்துக்கு முன்னதாகவே துயில் நீங்கி எழுந்த பறவைகளின் கல கல சத்தமும் சேர்ந்து ஒலித்தது.

சூரிய உதயத்துக்கு முன்னாலிருந்தே அரண்மனை வாசலில் போர் வீரர்கள் வந்து குவியத் தொடங்கினார்கள். படைத் தலைவர்கள் அவர்களை அணிவகுத்து நிற்கச் செய்தார்கள். வரிசை வரிசையாகக் குதிரைப் படைகளும், யானைப் படைகளும், காலாட் படைகளும் அணிவகுத்து நிறுத்தப்பட்டன. எல்லாப் படைகளுக்கும் முன்னால் சோழர்களின் புலிக்கொடி வானளாவிப் பறந்தது. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்களை முழக்குகிறவர்கள் படைகளுக்கு இடையிடையே நிறுத்தப்பட்டார்கள். பெரிய பேரிகைகளைச் சுமந்த ரிஷபங்களும் ஆங்காங்கு நின்றன. பட்டத்துப் போர் யானை அழகாக அலங்கரிக்கப்பட்டு அரண்மனை வாசலில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

இந்த மாதிரி அணிவகுப்பு நடந்து கொண்டிருக்கையில் அடிக்கடி போர் வீரர்கள் "வீரவேல்" "வெற்றிவேல்" என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் அரண்மனை முன் வாசலில் கலகலப்பு ஏற்பட்டது. "மகாராஜா வருகிறார்!" "மகாராஜா வருகிறார்!" என்று ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அரண்மனைக்குள்ளேயிருந்து கட்டியக்காரர்கள் இருவர், "சோழ மண்டலாதிபதி பார்த்திப மகாராஜா வருகிறார்! பராக் பராக்!" என்று கூவிக் கொண்டு வெளியே வந்தார்கள். வீதியில் கூடியிருந்த அந்தணர்களும் முதியோர்களும் "ஜய விஜயீபவா!" என்று கோஷித்தார்கள்.

மகாராஜா அரையில் மஞ்சள் ஆடையும் மார்பில் போர்க்கவசமும், இடையில் உடைவாளும் தரித்தவராய் வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து ராணியும் இளவரசரும் வந்தார்கள். அரண்மனை வாசலில் மகாராணி தன் கையில் ஏந்தி வந்த ஆத்திமாலையை அவர் கழுத்தில் சூட்டினாள். அருகில் சேடி ஏந்திக் கொண்டு நின்ற மஞ்சள் நீரும் தீபமும் உள்ள தட்டை வாங்கி மகாராஜாவுக்கு முன்னால் மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு, கையில் ஒரு துளி மஞ்சள் நீர் எடுத்து மகாராஜாவின் நெற்றியில் திலகமிட்டாள். அப்போது மீண்டும் மீண்டும் "ஜய விஜயீ பவ" "வெற்றி வேல்" வீர வேல்" என்னும் முழக்கங்கள் ஆகாயத்தை அளாவி எழுந்து கொண்டிருந்தன. சங்கு, கொம்பு, தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்கள் காது செவிடுபடும்படி அதிர்ந்தன.

மகாராஜா வீதியில் நின்ற கூட்டத்தை ஒரு தடவை தம் கண்களால் அளந்தார். அப்போது ஒரு ஏவலாளன் விரைந்து வந்து, மகாராஜாவின் காலில் விழுந்து எழுந்து கைகட்டி வாய் பொத்தி நின்றான். "என்ன சேதி?" என்று மகாராஜா கேட்கவும் "மாரப்ப பூபதி இன்று காலை கிளம்பும்போது, குதிரை மீதிருந்து தவறிக் கீழே விழுந்து மூர்ச்சையானார். மாளிகைக்குள்ளே கொண்டு போய்ப் படுக்க வைத்தோம். இன்னும் மூர்ச்சை தெளியவில்லை" என்றான்.

இதைக் கேட்ட மகாராஜாவின் முகத்தில் லேசாகப் புன்னகை பரவிற்று. அந்த ஏவலாளனைப் பார்த்து, "நல்லது, நீ திரும்பிப் போ! பூபதிக்கு மூர்ச்சை தெளிந்ததும், உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளச் சொன்னேன் என்று தெரிவி!" என்றார்.

மேற்கண்ட சம்பாஷணை மகாராஜாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலருடைய காதிலேதான் விழுந்தது. ஆனாலும் வெகு சீக்கிரத்தில் "மாரப்ப பூபதிக்கு ஏதோ விபத்தாம்! அவர் போருக்கு வரவில்லையாம்" என்ற செய்தி பரவிவிட்டது.

பிறகு, மகாராஜா அருகில் நின்ற விக்கிரமனை வாரி எடுத்து மார்போடணைத்துக் கொண்டு உச்சி மோந்தார். "குழந்தாய், நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறதா? மறவாமலிருப்பாயா?" என்றார். "நினைவில் இருக்கிறது. அப்பா! ஒரு நாளும் மறக்க மாட்டேன்" என்றான் விக்கிரமன். பிறகு மகாராஜா மைந்தனின் கையைப் பிடித்து அருள்மொழியினிடம் கொடுத்து, "தேவி! நீ தைரியமாயிருக்க வேண்டும். சோழர் குலச் செல்வத்தையும் புகழையும் உன்னிடம் ஒப்புவிக்கிறேன். வீர பத்தினியாயிருந்து என் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். முகமலர்ச்சியுடன் இப்போது விடை கொடுக்க வேண்டும்" என்றார்.

அருள்மொழி, கண்களில் நீர் பெருக, நெஞ்சை அடைக்க, "இறைவனுடைய அருளால் தங்கள் மனோரதம் நிறைவேறும்; போய் வாருங்கள்" என்றார்.

மகாராஜா போர் யானைமீது ஏறிக் கொண்டார். மறுபடியும் போர் முரசுகளும், தாரை தப்பட்டை எக்காளங்களும் ஏககாலத்தில் காது செவிடுபடும்படி முழங்கின - உடனே அந்தச் சோழநாட்டு வீரர்களின் படை அங்கிருந்து பிரயாணம் தொடங்கிற்று.

புரட்டாசி மாதத்துப் பௌர்ணமி இரவில் வெண்ணாற்றங்கரை மிகவும் கோரமான காட்சியை அளித்தது. வானத்தில் வெண்ணிலவைப் பொழிந்த வண்ணம் பவனி வந்து கொண்டிருந்த பூரணச் சந்திரனும், அந்தக் கொடுங் காட்சியைக் காணச் சகியாதவன் போல், அடிக்கடி வெள்ளி மேகத் திரையிட்டுத் தன்னை மறைத்துக் கொண்டான்.

பகலெல்லாம் அந்த நதிக்கரையில் நடந்த பயங்கரமான யுத்தத்தில் மடிந்தவர்களின் இரத்தம் வெள்ளத்துடன் கலந்தபடியால், ஆற்றில் அன்றிரவு இரத்த வெள்ளம் ஓடுவதாகவே தோன்றியது. அந்த வெள்ளத்தில் பிரதிபலித்த பூரணச் சந்திரனின் பிம்பமும் செக்கச் செவேலென்ற இரத்த நிறமடைந்து காணப்பட்டது.

நதியின் மேற்குக் கரையில் கண்ணுக்கெட்டிய தூரம், கொடும்போர் நடந்த ரணகளத்தின் கோரமான காட்சி தான். வீர சொர்க்கம் அடைந்த ஆயிரக்கணக்கான போர்வீரர்களின் உடல்கள் அந்த ரணகளமெங்கும் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் அவை கும்பல் கும்பலாகக் கிடந்தன. கால் வேறு, கை வேறாகச் சிதைவுண்டு கிடந்த உடல்கள் எத்தனையோ! மனிதர்களைப் போலவே போரில் மடிந்த குதிரைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. வெகுதூரத்தில் குன்றுகளைப் போல் சில கறுத்த உருவங்கள் விழுந்து கிடந்தன. அவை போர் யானைகளாகத் தான் இருக்க வேண்டும்.

அந்த ரணகளத்தில் விருந்துண்ண ஆசைகொண்ட நூற்றுக்கணக்கான கழுகுகளும், பருந்துகளும் நாலா பக்கங்களிலிருந்தும் பறந்து வந்து வட்டமிட்டுக் கொண்டிருந்தன. அவற்றின் விரிந்த சிறகுகளின் நிழல் பெரிதாகவும் சிறிதாகவும் ரணகளத்தின் மேல் ஆங்காங்கு விழுந்து, அதன் பயங்கரத்தை மிகுதிப்படுத்திக் கொண்டிருந்தன.

நதியின் இனிய 'மர்மர' சத்தத்தைப் பருந்துகள், கழுகுகளின் கர்ண கடூரமான குரல்கள் அடிக்கடி குலைத்துக் கொண்டிருந்தன.

அந்தக் கோரமான ரணகளத்தில், மெல்லிய மேகத் திரைகளினாலும் வட்டமிட்ட பருந்துகளின் நிழலினாலும் மங்கிய நிலவொளியில், ஒரு மனித உருவம் மெல்ல மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தது. அது சுற்றுமுற்றும் உற்றுப் பார்த்துக் கொண்டே போயிற்று.

சற்று நெருங்கிப் பார்த்தால், அது ஒரு சிவனடியாரின் உருவம் என்பது தெரியவரும்.

தலையில் சடை முடியும், நெற்றி நிறையத் திருநீறும், அப்போதுதான் நரை தோன்றிய நீண்ட தாடியும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும், அரையில் காவி வஸ்திரமும், மார்பில் புலித்தோலுமாக அந்தச் சிவனடியார் விளங்கினார். அவர் கையில் கமண்டலம் இருந்தது. அவருடைய முகத்தில் அபூர்வமான தேஜஸ் திகழ்ந்தது. விசாலமான கண்களில் அறிவொளி வீசிற்று. தோற்றமோ வெகு கம்பீரமாயிருந்தது. நடையிலும் ஒரு பெருமிதம் காணப்பட்டது. இந்த மகான் சிவனடியார் தானோ, அல்லது சிவபெருமானே இத்தகைய உருவம் பூண்டு வந்தாரோ என்று திகைக்கும்படியிருந்தது.

இந்தப் பயங்கர ரணகளத்தில் இந்தப் பெரியாருக்கு என்ன வேலை? யாரைத் தேடி அல்லது என்னத்தை தேடி இவர் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு போகிறார்?

சிவனடியார் எந்தத் திசையை நோக்கிப் போனாரோ, அதற்கு எதிர்த் திசையில் கொஞ்ச தூரத்தில் கருங்குன்று ஒன்று நகர்ந்து வருவது போல் ஒரு பிரம்மாண்டமான உருவம் அசைந்து வருவது தெரிந்தது. அது சோழ மன்னர்களின் பட்டத்துப் போர் யானைதான்.

அதைக் கண்டதும் சிவனடியார் சிறிது தயங்கித் தாம் நின்ற இடத்திலேயே நின்றார்.

யானையின் தேகத்தில் பல இடங்களில் காயம் பட்டு இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நடக்க முடியாமல் அது தள்ளாடி நடந்தது என்பது நன்றாய் தெரிந்தது. கீழே கிடந்த போர் வீரர்களின் உயிரற்ற உடல்களை மிதிக்கக் கூடாதென்று அது ஜாக்கிரதையாக அடி எடுத்து வைத்து நடந்தது. துதிக்கையை அப்படியும் இப்படியும் நீட்டி அங்கே கிடந்த உடல்களைத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்ததைப் பார்த்தால், அந்த யானை எதையோ தேடி வருவதுபோல் தோன்றியது.

சற்று நேரத்துக்கெல்லாம், அந்தப் பட்டத்து யானையானது, உயிரற்ற குவியலாக உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் கிடந்த ஓர் இடத்துக்கு வந்து நின்றது. அந்த உடல்களை ஒவ்வொன்றாக எடுத்து அப்பால் மெதுவாக வைக்கத் தொடங்கியது.

இதைக் கண்டதும் சிவனடியார் இன்னும் சற்று நெருங்கிச் சென்றார். சமீபத்தில் தனித்து நின்ற ஒரு கருவேல மரத்தின் மறைவில் நின்று யானையின் செய்கையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

யானை, அந்த உயிரற்ற உடல்களை ஒவ்வொன்றாய் எடுத்து அப்புறப்படுத்திற்று. எல்லாவற்றுக்கும் அடியில் இருந்த உடலை உற்று நோக்கிற்று. அதைத் துதிக்கையினால் மூன்று தடவை மெதுவாகத் தடவிக் கொடுத்தது.

பிறகு அங்கிருந்து நகர்ந்து, சற்றுத் தூரத்தில் வெறுமையாயிருந்த இடத்துக்குச் சென்றது. துதிக்கையை வானத்தை நோக்கி உயர்த்திற்று.

சொல்ல முடியாத சோகமும் தீனமும் உடைய ஒரு பெரிய பிரலாபக் குரல் அப்போது அந்த யானையின் தொண்டையிலிருந்து கிளம்பி, ரணகளத்தைத் தாண்டி, நதியின் வெள்ளத்தைத் தாண்டி, நெல் வயல்களையெல்லாம் தாண்டி, வான முகடு வரையில் சென்று, எதிரொலி செய்து மறைந்தது.

அவ்விதம் பிரலாபித்து விட்டு அந்த யானை குன்று சாய்ந்தது போல் கீழே விழுந்தது. சில வினாடிக்கெல்லாம் பூகம்பத்தின்போது மலை அதிர்வதுபோல் அதன் பேருடல் இரண்டு தடவை அதிர்ந்தது. அப்புறம் ஒன்றுமில்லை! எல்லையற்ற அமைதிதான்.

சிவனடியார் கருவேல மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்து, யானை தேடிக் கண்டுபிடித்த உடல் கிடந்த இடத்தை நோக்கி வந்தார். அதன் அருகில் வந்து சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். பார்த்திப மகாராஜாவின் உடல் தான் அது என்பதைக் கண்டார்.

உடனே அவ்விடத்தில் உட்கார்ந்து அவ்வுடலின் நெற்றியையும் மார்பையும் தொட்டுப் பார்த்தார். பிறகு, தலையை எடுத்து தம் மடிமீது வைத்துக் கொண்டார். கமண்டலத்திலிருந்து கொஞ்சம் ஜலம் எடுத்து முகத்தில் தெளித்தார்.

உயிரற்றுத் தோன்றிய அந்த முகத்தில் சிறிது நேரத்துக்கெல்லாம் ஜீவகளை தளிர்த்தது. மெதுவாகக் கண்கள் திறந்தன. பாதி திறந்த கண்களால் பார்த்திபன் சிவனடியாரை உற்றுப் பார்த்தான்.

"சுவாமி....தாங்கள் யார்?" என்ற தீனமான வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வந்தன.

"அம்பலத்தாடும் பெருமானின் அடியார்க்கு அடியவன் நான் அப்பா! இன்று நடந்த யுத்தத்தில் உன்னுடைய ஆச்சரியமான வீரச் செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அப்பேர்ப்பட்ட மகாவீரனைத் தரிசிக்க வேண்டுமென்று வந்தேன். பார்த்திபா! உன்னுடைய மாசற்ற சுத்த வீரத்தின் புகழ் என்றென்றும் இவ்வுலகிலிருந்து மறையாது!" என்றார் அப்பெரியார்.

"யுத்தம் - என்னவாய் முடிந்தது, சுவாமி!" என்று பார்த்திபன் ஈனஸ்வரத்தில் கேட்டான். அவனுடைய ஒளி மங்கிய கண்களில் அப்போது அளவிலாத ஆவல் காணப்பட்டது.

"அதைப்பற்றிச் சந்தேகம் உனக்கு இருக்கிறதா, பார்த்திபா? அதோ கேள், பல்லவ சைன்யத்தின் ஜய கோலாகலத்தை!"

பார்த்திபன் முகம் சிணுங்கிற்று. "அதை நான் கேட்கவில்லை. சுவாமி! சோழ சைன்யத்திலே யாராவது..." என்று மேலே சொல்லத் தயங்கினான்.

"இல்லை, இல்லை. சோழ சைன்யத்தில் ஒருவன் கூடத் திரும்பிப் போகவில்லை அப்பா! ஒருவனாவது எதிரியிடம் சரணாகதி அடையவும் இல்லை. அவ்வளவு பேரும் போர்க்களத்திலே மடிந்து வீர சொர்க்கம் அடைந்தார்கள்!" என்றார் சிவனடியார். பார்த்திபனுடைய கண்கள் மகிழ்ச்சியினால் மலர்ந்தன.

"ஆகா! சோழ நாட்டுக்கு நற்காலம் பிறந்துவிட்டது. சுவாமி! இவ்வளவு சந்தோஷமான செய்தியைச் சொன்னீர்களே? - உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?" என்றான்.

"எனக்கு ஒரு கைம்மாறும் வேண்டாம். பார்த்திபா! உன்னைப் போன்ற சுத்த வீரர்களுக்குத் தொண்டு செய்வதையே தர்மமாகக் கொண்டவன் நான். உன் மனத்தில் ஏதாவது குறை இருந்தால் சொல்லு; பூர்த்தியாகாத மனோரதம் ஏதாவது இருந்தால் தெரிவி; நான் நிறைவேற்றி வைக்கிறேன்" என்றார் சிவனடியார்.

"மெய்யாகவா? ஆகா என் அதிர்ஷ்டமே அதிர்ஷ்டம். சுவாமி! உண்மைதான். என் மனத்தில் ஒரு குறை இருக்கிறது. சோழநாடு தன் புராதனப் பெருமையை இழந்து இப்படிப் பராதீனமடைந்திருக்கிறதே என்பதுதான் அந்தக் குறை. சோழநாடு முன்னைப்போல் சுதந்திர நாடாக வேண்டும் - மகோன்னதமடைய வேண்டும். தூர தூர தேசங்களில் எல்லாம் புலிக்கொடி பறக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்தேன்; என்னுடைய வாழ்க்கையில் அது கனவாகவே முடிந்தது. என்னுடைய மகன் காலத்திலாவது அது நனவாக வேண்டுமென்பதுதான் என் மனோரதம். விக்கிரமன் வீரமகனாய் வளர வேண்டும். சோழ நாட்டின் மேன்மையே அவன் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டும். உயிர் பெரிதல்ல - சுகம் பெரிதல்ல - மானமும் வீரமுமே பெரியவை என்று அவனுக்குப் போதிக்க வேண்டும். அன்னியருக்குப் பணிந்து வாழும் வாழ்க்கையை அவன் வெறுக்க வேண்டும். சுவாமி! இந்த வரந்தான் தங்களிடம் கேட்கிறேன். "தருவீர்களா?" என்றான் பார்த்திபன்.

சக்தியற்ற அவனது உடம்பில் இவ்வளவு ஆவேசமாக பேசும் வலிமை அப்போது எப்படித்தான் வந்ததோ, தெரியாது. சிவனடியார் சாந்தமான குரலில் "பார்த்திபா! உன்னுடைய மனோரதத்தை நிறைவேற்றுவேன் - நான் உயிரோடிருந்தால்" என்றார்.

பார்த்திபன் "என் பாக்கியமே பாக்கியம்! இனி எனக்கு ஒரு மனக்குறையுமில்லை. ஆனால், ஆனால் - தாங்கள் யார், சுவாமி? நான் அல்லும் பகலும் வழிபட்ட சிவபெருமான் தானோ? ஆகா! தங்கள் முகத்தில் அபூர்வ தேஜஸ் ஜொலிக்கிறதே! எங்கள் குல தெய்வமான ஸ்ரீரங்கநாதனே தான் ஒருவேளை இந்த உருவெடுத்து..." என்பதற்குள், சிவனடியார், "இல்லை, பார்த்திபா! இல்லை, அப்படியெல்லாம் தெய்வ நிந்தனை செய்யாதே!" என்று அவனை நிறுத்தினார். பிறகு அவர் "நானும் உன்னைப் போல் அற்ப ஆயுளையுடைய மனிதன்தான். நான் யாரென்று உனக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இதோ பார்!" என்று சொல்லி தம் தலை மீதிருந்த ஜடாமுடியையும் முகத்தை மறைத்த தாடி மீசையையும் லேசாகக் கையிலெடுத்தார்.

கண் கூசும்படியான தேஜஸுடன் விளங்கிய அவருடைய திவ்ய முகத்தைப் பார்த்திபன் கண் கொட்டாமல் பார்த்தான்.

"ஆகா தாங்களா?" என்ற மொழிகள் அவன் வாயிலிருந்து குமுறிக் கொண்டு வந்தன.

அளவுக்கடங்காத, ஆழங்காண முடியாத ஆச்சரியத்தினால் அவனுடைய ஒளியிழந்த கண்கள் விரிந்தன.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் கண்கள் மூடிவிட்டன; பார்த்திபனுடைய ஆன்மா அந்தப் பூத உடலாகிய சிறையிலிருந்து விடுதலையடைந்து சென்றது.