நாவல் என்ற வார்த்தைக்குப் புதுமை என்றும் ஒரு பொருள் உண்டு. இந்த நாவல் ஒரு புதுமை. கதாபாத்திரங்களைக் கொண்டு அவற்றை உருவாக்குகிற கதாசிரியனும் சேர்ந்து அக்கதையை வளர்க்கும் இந்தப் புதுமுறையைக் காண்டேகருடைய ‘கருகிய மொட்டு’ என்ற நாவலில் பார்த்திருக்கிறோம். அந்த நாவலின் முன்னுரையில் காண்டேகர் எழுதும் போது இந்தப் புதுமுறையைத் தாம் வேறு ஆங்கில நாவலாசிரியரிடம் இருந்து மேற்கொண்டதாகச் சொல்லுகிறார். தமிழிலும் ஒன்றிரண்டு நாவல்கள் இதே ரீதியில் வெளிவந்திருக்கின்றன. ‘பட்டுப்பூச்சி’ இந்த வகையில் இன்னும் அதிகப் புதுமைகளைக் கொண்டது.
இருபதாம் நூற்றாண்டு, புதிய தலைமுறை எண்ணங்களும் பழைய தலைமுறை எண்ணங்களும் சந்திக்கின்ற யுக சந்தியாக இருப்பதால், கலை, இலக்கியம், சமயம், அரசியல் யாவற்றிலுமே இப்படிக் கருத்து மோதம் உண்டாவதனால் தான் பல புதிய பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
மேலே கூறிய புதுப் பிரச்னைகளில் மிக முக்கியமான பிரச்னை இந்த நாட்டுப் பெண்களின் சமுதாய வாழ்க்கை. அலுவலகங்களிலும், பணிமனைகளிலும், சமுதாய வளர்ச்சித் திட்டங்களிலும் உழைக்கும் பொறுப்பை ஏற்றிருக்கின்ற புதிய தலைமுறைப் பெண்மணிகள் பழைய தலைமுறை எண்ணங்களால் எதிர்க்கப்படும் போதும், பழி சுமத்தப்படும் போது தாங்கள் போய்க் கொண்டிருக்கும் வழிகளில் மேலே போகாமல் தயங்கி நின்று விடுகிறார்கள். அல்லது மேலே போகப் பயப்படுகிறார்கள். இரண்டு நிலைகளையும் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.
இந்தக் கதையில் கற்பனைக் கதாநாயகியான முதல் சுகுணாவும், ஒரு சமயம் இப்படிப் பயந்ததனால் விரைந்து தான் போய்க் கொண்டிருந்த இலட்சிய வழியிலிருந்து விலகி வெளியேறுகிறாள்.
‘புதிய தலைமுறையின் இலட்சியப் பெண்கள் பட்டுப்பூச்சியைப் போன்றவர்கள். பட்டுப்பூச்சி கூட்டுக்கு உள்ளே இருக்கும் வரையில் அது தன்னைச் சுற்றிக் கூடு கட்டிக் கொண்டே பட்டு உற்பத்தி செய்த வண்ணமிருக்கும். ஆனால், அது தன் பந்தத்தை அறுத்துக் கொண்டு கூட்டுக்குள்ளிருந்து ஒருமுறை வெளியே பறந்துவிட்டால் அதை மறுபடி திரும்பவும் கூட்டுக்குள் அடைக்கவே முடியாது.’
இந்தப் பட்டுப்பூச்சியின் இயல்புதான் தாமரைக் குளத்தில் போய் - அந்தக் கிராமம் என்கிற கூட்டுக்குள் மென்மையான நினைவுகளைச் செயலாக்க முயன்ற போது சுகுணாவுக்கும் இருந்தது. கிராமத்தின் சிறுமைகளைப் புரிந்து கொண்டு மனம் வெறுத்து அவள் அந்தக் கூட்டுக்குள்ளிருந்து வெளியேறிய போது, மறுபடி திரும்பி அதில் போய் அடைந்து விட முடியாத வெறுப்போடு வெளியேறியிருந்தாள். இப்படி வெளியேறும் வசதி கூட இந்தக் கதையின் முற்பகுதியில் வருகிற கற்பனைச் சுகுணாவுக்குத்தான் கிடைத்தது. கதையின் பிற்பகுதியில் வருகிற அல்லியூரணியின் கிராம சேவகியான இரண்டாவது சுகுணாவோ அந்தக் கூட்டிலிருந்து வெளியேற முடியாமலே தன் நினைவுகளும் தானுமாக அதனுள்ளேயே வாடி அழிந்து போய்விடுகிறாள்.
ஓர் ஆணை இழந்து அந்த ஆணுக்காகப் பெண் கைம்மை நோற்பது போல் பெண்ணை இழந்து அவளுக்காகக் கைம்மை நோற்க விரும்பும் இலட்சிய ஆண்பிள்ளை ஒருவனை இந்தக் கதையில் சந்திக்கிறோம். பாரதியார் சொன்ன புதிய கற்பு நிலைக்கு அவன் இங்கு விளக்கமாகிறான்.
வளையல்காரன் வளை அணிவிப்பது போல் வளையும் உடையாமல் அணியும் கைகளும் நோகாமல் இன்றைய நிலைக்கு ஏற்பச் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களைப் பக்குவமாக ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டும் என்பதை இந்தக் கதையின் கதாபாத்திரங்கள் குறிப்பாகச் சொல்ல வைக்கப்பட்டிருக்கிறார்கள். பென்சிலின் மருந்து போல அருமையாகவும், கிடைக்க முடியாத உயரமும் கொண்டு பயன்பட வேண்டியவர்களுக்கு எட்டி நிற்காமல், சுக்குப் போல எல்லா இடத்திலும் எப்போதும் எளிமையாகப் பயன்படுகிற மனம் சமூகத் தொண்டர்களுக்கு வேண்டும் என்று நினைத்து வருகிற எண்ணமும் கதையில் குறிப்பாக விளக்கப்பட்டிருக்கிறது.
இந்தக் கதையின் முடிவுரையில் ஒரு மாணவி இதை எழுதியவனைக் கேட்கிற கேள்வியையே வாசகர்களும் கேட்க முடியும். சமூக சேவையில் ஆர்வமும் வாழ்க்கையில் வேட்கையும் கொண்டுள்ள ஒரு பெண் அவற்றில் தோற்றுப் போவதாக எழுதுவது ஆக்கப்பூர்வமான முடிவாகுமா என்று சந்தேகம் தோன்றுவதை மறுக்க முடியாது. ஆனால், சந்தேகத்தையே மறுக்க முடியும். காரணம் என்ன தெரியுமா?
இப்படி வாழ்ந்து, இப்படிப் பழகி, நிராசையோடு அழிந்து போன சகோதரி ஒருத்தியை எனக்குத் தெரியும். என் நண்பர்களுக்கும் தெரியும். அவளுடைய மோகன வடிவம், இன்னும் கண்களில் சித்திரமாக நினைவிருக்கிற அவள் புன்னகை, ஆர்வத்தோடு அவள் பேசும் இலட்சியப் பேச்சுக்கள் எல்லாம் எங்களுக்குப் பசுமையாக நினைவிருக்கின்றன. அந்தத் துர்ப்பாக்கியவதியை மணந்து கொள்ள ஆசைப்பட்ட இளைஞரும் இன்று கூடப் பிடிவாதமாகக் கைம்மை நோற்றுக் கொண்டு எங்கோ ஒரு சிற்றூரில் ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆசிரியராய்ப் பணி புரிந்து கொண்டு வருகிறார்.
ஆனால், ஒன்று இந்தக் கதையோடு சம்பந்தப்பட்டவர்கள் எங்கே எப்படி இருக்கிறார்கள் என்று மட்டும் சொல்ல மாட்டேன். அது பரம இரகசியம். ஆனால், ஒரே ஒருவருக்கு மட்டும் அந்த இரகசியத்தைப் பற்றி நிறையச் சிந்திப்பதற்கும் எழுதுவதற்கும் உரிமை உண்டு. அந்த ஒருவரை இந்தக் கதையில் சம்பந்தப்பட்டிருப்பவர்கள் அதற்காக மன்னிப்பார்கள் என்பதிலும் சந்தேகமே இல்லை.
அந்த ஒருவர் யார் என்று சிந்திக்கத் தொடங்குகிறீர்களா?
வேறு யாருமில்லை!
இதை எழுதியவன் தான்.
அன்பன்,
நா.பார்த்தசாரதி
பல்கலைக் கழகத்திலிருந்து வந்த பட்டமளிப்பு விழா அழைப்பிதழைப் படித்து முடித்த போது சுகுணாவுக்குப் பழைய நினைவுகளை வரிசையாய் நினைக்கத் தோன்றியது. நேற்றுத் தான் பரீட்சை முடிந்தது போலிருக்கிறது! நாட்கள் தாம் எவ்வளவு வேகமாக ஓடியிருக்கின்றன. பரீட்சை மண்டபத்தின் ஆழ்ந்த அமைதிக்கு நடுவே படபட வென்று அடித்துக் கொள்ளும் மனநிலையோடு விடைகளையும், எதிர்காலத்தையும் சேர்த்து நினைத்துத் தவித்த நாட்கள் இப்போதுதான் கழிந்து போயின போல் தோன்றுகின்றன. குறுக்கும் நெடுக்கும் நடைபோட்டுக் கொண்டே மாணவர்களைக் கண்காணித்து புரொபஸர்களின் கூரிய விழிப்பார்வையும், விடையெழுதிய தாள்கள் புரட்டப்படுகிற ஒலியும், விடைகளை உரிய நேரத்துக்குள் எழுதித் திருப்பிக் கொடுக்க வேண்டுமே என்று பரபரப்புக் காட்டும் முகங்களும் இன்னும் பசுமை மாறாமல் கண்ணுக்குள் நிறைந்திருக்கின்றன. மனத்துக்குள் நினைவிருக்கின்றன.
படித்துக் கொண்டிருந்த போது பரீட்சையைப் பற்றிய கவலை, பரீட்சை எழுதிய போது ரிஸல்ட்டைப் பற்றிய கவலை, ரிஸல்ட் வந்த போது வாழ்க்கையைப் பற்றிய கவலை. இப்போது மீதமிருப்பது இந்த மூன்றாவது கவலை மட்டும்தான். முடிவாக நினைவுகளும் நினைவுகள் பிறந்த மனமும், ‘நான் ஒரு வேலை தேடிக் கொள்ள வேண்டும்’ - என்ற ஒற்றைக் கவலையில் வந்து மேலே வளராமல் நின்றன. சுகுணாவுக்குப் பெருமூச்சு வந்தது. தன்னுடைய தாய் தனக்காகப் படும் துன்பங்கள் நினைவில் உறுத்தின.
‘அம்மா இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இப்படி அப்பளமும், வடாமும் விற்று என்னையும், தன்னையும் காப்பாற்றிக் கொள்ள முடியும்?’
‘சுகுணா! அவர் என்னை இப்படிச் சீரழிய விட்டு அல்பாயுசாகப் போனதற்கு நீ மட்டும் பெண்ணாகப் பிறந்திருக்காமல் பிள்ளையாகப் பிறந்திருந்தால் எனக்கு எத்தனை ஆறுதலாயிருக்கும் தெரியுமா? சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளையல்லவா?’ என்று அம்மா அடிக்கடி சொல்லிக் குறைப்பட்டுக் கொள்ளும் வார்த்தைகளை நினைத்துக் கொண்டாள் அவள். அம்மா இப்படிச் சொல்லும் ஒவ்வொரு முறையும் சுகுணாவுக்கு என்னவோ போலிருக்கும். ஓரிரு வேளைகளில் இது அவளுள்ளத்தில் சுருக்கென்று தைத்ததுமுண்டு.
“இப்படி உன்னிடம் வார்த்தை கேட்பதற்கு நான் ஒரு பெண்ணாகப் பிறந்தேனே என்று எனக்கும் வருத்தமாகத்தானம்மா இருக்கிறது” என்று சில சமயங்களில் விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே அம்மாவுக்குப் பதிலும் சொல்லியிருக்கிறாள் அவள். அப்போதெல்லாம்,
“அதற்கில்லையடி பெண்ணே! ஒரு வார்த்தைக்குச் சொன்னேன். பெண் பிறந்ததோ கவலை பிறந்ததோ என்று பழைய வசனம் சொல்வார்கள்” - என்று அவளைச் சமாளித்துத் தழுவிக் கொள்வாள் அம்மா. சிற்சில வேளைகளில் விளையாட்டுப் போல அம்மாவை எதிர்த்துச் சொல்லி விடுவாளே தவிரச் சுகுணாவின் மனத்தில் அம்மாதான் தெய்வம். தன் அம்மா இல்லாவிட்டால் அவளுக்கு ஒன்றுமே இல்லை. இந்தத் தள்ளாத வயதில் வீடு வீடாக ஏறி இறங்கி ஏழ்மையும், இழப்பமும் பாராமல் அப்பளம், வடாம் விற்றுப் பெண்ணைக் கல்லூரிப் படிப்பு வரை படிக்க வைத்த தாயைத் தெய்வமென்று நினைக்காமல் வேறு எப்படி நினைப்பது? அவள் பிள்ளையாகப் பிறந்திருந்தால் அம்மா என்னென்ன செய்து மகிழ்ந்திருப்பாளோ அவ்வளவு சீரையும் பெண்ணாகப் பிறந்திருந்தும் கொண்டாடிப் பார்த்துவிட்டாள். அம்மாவுக்கு நிறைந்த மனம், குறைந்த வசதிகள், ஒற்றைக்கொரு குழந்தையாகப் பிறந்திருந்த சுகுணாவுக்கு என்னென்னவோ அலங்காரமெல்லாம் புனைந்து பார்க்க வேண்டுமென்று அம்மாவுக்கு ஆசைகள் உண்டு. கையில் ஓட்டமில்லை. அப்பளம் வடாம் விற்பதிலும், முறுக்கு சீடை செய்து கொடுப்பதிலும் குபேர சம்பத்தா குவிந்து விடும்? வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டிப் பெண்ணைப் படிக்க வைத்ததே பெரிய காரியம். அப்பா இறந்து போன போது சுகுணாவையும், கவலைகளையும், தவிர வேறு எந்த சௌகரியத்தையும் அம்மாவுக்கு வைத்து விட்டுப் போகவில்லை. தேசத் தொண்டு, சமூகச் சேவை என்று ஊர் ஊராக மேடை மேடையாக அலைந்து நிலத்தையும் கையிலிருந்த பணத்தையும் கட்சி, கூட்டம், மாநாடுகளுக்காகச் செலவழித்து விட்டு மிக இளமையிலேயே இறந்து போனவர் சுகுணாவின் தந்தை. கேவலம் பாராமல் உழைப்பில் இழப்பம் நினைக்காமல் எதையும் துணிந்து செய்யும் தன்னம்பிக்கை அம்மாவுக்கு இருந்தது. அந்த நம்பிக்கை மட்டும் இல்லாமல் போயிருந்தால் இரட்டைப் பிச்சைக்காரிகளாய் எங்காவது கோவில் வாசலில் நின்று கொண்டு வயிறு வளர்க்க நேர்ந்திருக்கும். கழுத்து அமங்கலமாப் போன பின்னும் மனம் மங்கலமாக இருந்தது அம்மாவுக்கு. அம்மாவின் அந்த நல்ல மனத்தினால் தான் இவ்வளவும் நடந்தது; நடக்கிறது; இன்னும் நடக்கும்.
சுகுணா எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறபோதே அவளுடைய படிப்பை நிறுத்தி விட முயன்றாள் அம்மா. அப்போதே சுகுணாவுக்கு நல்ல வளர்ச்சி. தங்கக் குத்துவிளக்கு மாதிரி வளர்ந்து நிற்கிற பெண்ணை மேலும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிக் கொண்டிருப்பது நன்றாயிருக்குமா என்று தயங்கினாள் அம்மா. ஆனால் சுகுணா பள்ளிக்கூடத்தை விடுவதற்குச் சம்மதிக்கவே இல்லை. கல்யாணம் என்று வந்தால் பெண் படித்திருக்கிறாள் என்கிற ஒரே ஒரு தகுதியாவது இருக்கட்டுமே என்ற அந்தரங்க நினைப்பினால் தான் தயக்கத்தோடு தயக்கமாகப் பெண்ணை பி.ஏ. வரை படிக்க வைத்துவிட்டாள் அம்மா. இல்லாவிட்டால் முன்பே நின்று போயிருக்க வேண்டிய படிப்பு அது.
ஒரு வழியாகப் படித்தாயிற்று. முதல் வகுப்பில் தேறிய பட்டமும் கிடைக்கப் போகிறது. நாளைக்குப் பட்டமளிப்பு விழா. இனிமேலாவது அம்மாவுக்கு விடிவு பிறக்க வேண்டும். ஏதாவது ஒரு வேலையைத் தேடி பிடித்துக் கொண்டு அப்பளக் குழவிகளின் பிடியிலிருந்து அம்மாவின் கைகளுக்கு விடுதலையளிக்க வேண்டும். சுகுணாவின் மனத்தில் இந்த முடிவு உறுதியாக ஏற்பட்டிருந்தது. வேலைக்குப் போகவிடுவதற்கு அம்மா தயங்கினாலும் விவரத்தை எடுத்துச் சொல்லிச் சம்மதிக்கச் செய்து விடலாமென நம்பிக் கொண்டிருந்தாள் அவள். ‘இனிமேல் அம்மாவை ஒரு வேலையும் செய்யவிடாமல் உட்கார வைத்துச் சாப்பாடு போடவேண்டும். வேலை கிடைத்தாலும் பத்து மணிக்குள் சமையல் வேலைகளை நானே முடித்து அம்மாவுக்குப் போட்டுவிட்டுப் புறப்பட்டுப் போக வேண்டும்’ - என்று நினைத்துக் கொண்டாள் சுகுணா. ‘நீ பிள்ளையாகப் பிறந்திருந்தால் எனக்கு எவ்வளவோ ஆறுதலாயிருக்கும்’ - என்று இனி நினைக்கவும் முடியாதபடி அம்மாவை உட்கார்த்தி வைத்து உபசரிக்க வேண்டும் என்று நினைத்துப் பார்க்கிற போதே சுகுணாவுக்குப் பெருமையாயிருந்தது. ரிஸல்ட் வந்தவுடனே பத்திரிகைகளில் பார்த்து இரண்டு மூன்று வேலைகளுக்கு விண்ணப்பமும் அனுப்பி வைத்திருந்தாள் அவள்.
வீட்டில் அம்மாவும் பெண்ணும் ஓய்வாகப் பேசிக் கொள்வதற்கு வாய்க்கிற நேரமே இரவு ஒன்பது மணிக்கு மேலேதான்.அதுவரை அம்மாவுக்கு ஏதாவது வேலைகள் இருக்கும். முடிந்த வேளைகளில் சுகுணாவும் அம்மாவுக்கு உதவியாக அப்பளமிட உட்கார்ந்து விடுவாள்.
“நீ உன் வேலையைப் பாரேன். இதற்கெல்லாம் வராதே” - என்று அம்மா பெண்ணைச் செல்லமாகக் கடிந்து கொள்வாள். சுகுணா அந்த வேலைகளை எல்லாம் செய்ய வருவது அம்மாவுக்குப் பிடிக்காது. சுவர்ண விக்கிரகம் போல் இருக்கிற தன் பெண்ணை அழுக்குப்படாமல் வளர்த்து அழகு பார்ப்பதில் அம்மாவுக்கு கொள்ளை ஆசை. சுகுணாவைப் போல் அழகும் படிப்பும் உள்ள பெண்ணுக்குத் தாயாக இருப்பதே பெருமைக்குரியதொரு பதவியாக அந்த அம்மாளுக்குத் தோன்றியது.
மறுநாள் சுகுணா மிகவும் உற்சாகமாயிருந்தாள். பட்டமளிப்பு விழாப் பிரசங்கம் கருத்துச் செறிவோடு அற்புதமாயிருந்தது. இலக்கியத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பேரறிஞர் ஒருவர் விழாப் பிரசங்கத்தை நடத்தினார். அவர் சமூக சீர்திருத்தத் துறையிலும் நிறையப் பணிபுரிந்தவர்.
“இரயில்வே நிலையத்தில் காசை உள்ளே போட்டதும் பிளாட்பாரம் டிக்கெட்டை வெளியே தள்ளுகிற எந்திரம் போல உங்களில் பலர் இந்தப் பட்டப்படிப்பை நினைக்கலாம். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. மெய்யான படிப்பு உங்களுக்குள்ளே இருக்கும் அகக்கண்களை நன்றாகத் திறக்க வேண்டும். நீங்கள் பல பேருடைய அகக்கண்களை திறந்து உதவுவதற்கும் பயன்படவேண்டும்” - என்பது போல் விழாவில் சொற்பொழிவாளர் கூறிய பல கருத்துக்கள் சுகுணாவின் மனத்தைக் கவர்ந்தன. அவளுக்கு அப்படி ஓர் இலட்சியப் பித்து உண்டு. தான் செய்யப் போகிற வேலை பல பேருடைய அகக்கண்களைத் திறக்கும் பணியாக இருக்க வேண்டுமென்று வன்மையால் எல்லோருடைய மனத்தையும் மிக உயரத்துக்கு வளரச் செய்து விட்டார். குமாஸ்தா வேலையையும், செய்துகொண்டு குழுமியிருந்த மாணவர்களிடையே தம் பேச்சின் மூலம் ஒரு புரட்சியையே உண்டாக்கி விட்டுவிட்டார் அவர்.
சுகுணாவும் அவளுடைய தோழிகள் சிலரும் விழா முடிந்ததும் பட்டமளிப்பு விழாக் கோலமாகிய கருப்பு அங்கி, குல்லாயைக் களையாமல் அப்படியே போய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சுகுணா வீடு திரும்பியதும் அம்மா அவளை உள்ளே நுழைய விடாமல் வாசலில் நிறுத்தித் திருஷ்டி சுற்றிக் கழித்தாள். பெண் மேல் கண்ணேறு பட்டு விடக் கூடாதே என்று அம்மாவுக்குக் கவலை.
சாப்பாடுக்குப் பின் ஓய்வாக உட்கார்ந்து அம்மாவும் பெண்ணுமாகப் பேசிக் கொண்டிருந்த போது, “மேலே என்ன செய்வதாக உத்தேசம்?” - என்று யாரோ மூன்றாம் வீட்டுப் பெண்ணை மூன்றாம் வீட்டு அம்மாள் விசாரிப்பது போல் தன் பெண்ணையே விசாரித்தாள் சுகுணாவின் அம்மா.
“நான் அமைதியும் அழகும் நிறைந்த ஏதாவதொரு கிராமத்துக்குப் போய்க் கிராம சேவகியாகப் பணிபுரியப் போகிறேன் அம்மா! பட்டினமும், பரபரப்பான ஆபீஸ் வேலைகளும் என் மனத்துக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. என்னுடைய படிப்பினால் சிலருடைய அகக்கண்களையாவது நான் திறந்து விட வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருக்கிறது” - என்று பெண்ணிடமிருந்து பதில் வந்த போது அம்மாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. சுகுணாவின் அப்பா இப்படித்தான் அடிக்கடி விளங்காதபடி ஏதாவது பேசுவார்.
“என்னடி அசடு மாதிரி உளறுகிறாய்? இத்தனை பெரிய பட்டினத்தில் இல்லாத வேலை கிராமத்திலா இருக்கப் போகிறது? உனக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?”
“இப்படிப்பட்ட பைத்தியம் இந்தத் தேசத்துப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெறுகிறவர்களில் நூற்றுக்குப் பத்துப் பேர் வீதம் பிடித்திருந்தாலும் நமது தேசம் என்னைக்கோ பொன் விளையும் பூமியாயிருக்கும் அம்மா!” - என்று சுகுணா சொற்பொழிவு போல் பதில் கூறிய போது அம்மா திகைத்தாள். பெண்ணின் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். அவளுக்குப் பயமாய் இருந்தது.
இலட்சியம், சமூகத் தொண்டு, சீர்த்திருத்தம், இந்த மாதிரி வார்த்தைகளை யாராவது பேச ஆரம்பித்துவிட்டாலே அம்மாவுக்குப் பயம் தான். இப்படிப் பேசிப்பேசித்தான் அவர் அல்பாயுசாய்ப் போயிருந்தார் என்பது அவளது ஆற்றாமை. இப்போது பெண்ணும் இதே வார்த்தைகளைப் பேசத் தொடங்கவே அவள் மனம் அஞ்சத் தொடங்கியது. எப்படியெப்படி ஆகுமோ என்று அம்மா பயந்தாள்.
“என்னவோ உனக்குத் தெரியாததில்லையம்மா! இவ்வளவு படித்த பெண்ணுக்கு நான் என்ன சொல்லப் போகிறேன்? இப்போதைக்கு ஒரு வேலை பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் தான். என்றைக்கும் அப்படியே வேலையும் நீயுமாகவே இருந்து விட முடியாது. நீ ஒரு பெண்! ஊர் உலகத்துக்கு ஒத்தாற்போல் உனக்கும் அதது ஆக வேண்டிய வயதில் அதது ஆக வேண்டும்.”
அம்மா கூறியதைக் கேட்டுச் சுகுணா சிரித்தாள். “எனக்கு ஆட்சேபணையே இல்லையம்மா! பி.ஏ. படித்திருக்கிறேன் என்பதற்காக எல்லாச் செலவும் தானே போட்டுக் கலியாணம் பண்ணி என்னை அழைத்துக் கொண்டு போகிற நல்ல மாப்பிள்ளை யாராவது உனக்கு கிடைப்பானா? என் கலியாணத்துக்காகச் செலவழிக்க நீ என்ன சேர்த்து வைத்துக் கொண்டு காத்திருக்கிறாய்? உன்னிடம் டின் நிறைய அப்பளமும், வடாமும் தான் இருக்கிறது. உன் கவலை எனக்குத் தெரியாதா அம்மா? எல்லாம் தானே நடக்கும்! இன்னும் என்னைப் பச்சைக் குழந்தையாகவே நினைத்துக் கொண்டு பேசாதே” என்று பெண் கூச்சமில்லாமல் தெளிவாகப் பதிலுக்குத் தன்னைக் கேட்ட போது அம்மா அயர்ந்து போனாள். சுகுணா கேட்டது நியாயம்தான் என்பது அம்மாவுக்கும் புரிந்தது. கையில் கால் காசு இல்லாமல் கலியாணத்தைப் பற்றிப் பேசினால் சிரிக்க மாட்டார்களா?
‘என்ன இருந்தாலும் என் பெண் புத்திசாலிதான். இனிமேல் நான் சொல்கிறபடி அவள் கேட்பதை விட, அவள் சொல்கிறபடி கேட்டுக் கொண்டு நான் பேசாமல் இருந்து விடுவதுதான் நல்லது’ - என்று மனத்துக்குள் தீர்மானம் செய்து கொண்டாள் அம்மா. ஒரு மாதக் காலம் அலைந்து திரிந்து செத்துப் போன அப்பா வாழ்ந்த காலத்தில் செய்திருந்த தேசத் தொண்டுகளையும், தியாகங்களையும், நினைவுப்படுத்தி ‘அந்த அப்பாவுக்குப் பெண் தான் நான்’ என்பதையும் எடுத்துக் கூறித் தேசீய வளர்ச்சித் திட்டத்தில் தனக்கு ஒரு வேலை பெற்றாள் சுகுணா.
‘தாமரைக் குளம்’ - என்ற கிராமத்தைச் சார்ந்துள்ள பகுதிகளுக்காகச் சர்க்கார் அமைத்திருந்த தேசீய வளர்ச்சி பிர்க்காவுக்குத் தலைவியாக அவளை நியமனம் செய்திருந்தார்கள். அப்பப்பா! அந்த நியமனம் கிடைப்பதற்கே அவள் மந்திரி வரை பார்த்து ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவளுடைய எடுப்பான தோற்றத்தையும் பி.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியையும் கண்டு, “உனக்கு எதற்கம்மா இந்த முரட்டு வேலையெல்லாம்? இதில் அலைச்சல் அதிகமாயிருக்குமே. பிர்க்காவைச் சேர்ந்த கிராமங்களுக்கு எல்லாம் சைக்கிளில் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டும்! கோழிப் பண்ணையிலிருந்து, முதியோர் கல்வி வரை அலைந்து கவனித்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் உன்னால் முடியுமா?” என்று மந்திரி புன்முறுவலோடு அவளைக் கேட்ட போது,
“இந்த வேலைக்கு நான் தகுதி இல்லை என்கிறீர்களா? இந்த வேலை எனக்குத் தகுதி இல்லை என்கிறீர்களா? பிழைப்புக்காக நான் இதைக் கேட்கவில்லை. பிழைப்புடன் எனக்குச் சமூக சேவையில் ஆர்வமும் இருக்கிறது. அதனால் தான் கேட்கிறேன். ‘சமூக சேவையில் சிறிதுமே ஆர்வமில்லாதவர்கள் தான் இந்த வேலைக்குச் சரியானவர்கள்’ என்று நீங்கள் ஆர்வமில்லாமையையே தகுதியாக நினைப்பதாயிருந்தால் இது எனக்கு வேண்டாம்” - என்று சிரித்துக் கொண்டே வெடிப்பாகப் பதில் சொன்னாள். இதைக் கேட்டு மந்திரிக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரித்துவிட்டார். சுகுணாவுக்கு அப்படி ஒரு தனித்தன்மை. அவள் யாரிடம் எடுத்தெறிந்து பேசினாலும் பதிலுக்கு அவர்கள் அவளை எடுத்தெறிந்து பேச மாட்டார்கள். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே அப்படிப் பேசவும் முடியாது. சிரித்துக் கொண்டே கேட்பார்கள். அவளுடைய தோற்றத்தின் கவர்ச்சியைக் கண்ட பின்பு எந்தக் கிராதகனாலும் அவளோடு இரைந்து பேசவோ, சினந்து பேசவோ முடியாது. கவர்ச்சியா, குளுமையா, அழகா அதை எந்த வார்த்தையால் சொன்னாலும் அது அவளுக்கு வாய்த்திருந்தது.
“வேலை கிடைத்து விட்டது! தாமரைக்குளம் என்ற ஊரில் போட்டிருக்கிறார்கள். நாம் புறப்பட வேண்டும்” - என்று சுகுணா வந்து சொன்னவுடன் அம்மா மறு பேச்சுப் பேசாமல் அதற்கு ஒப்புக் கொண்டு விட்டாள்.
“எனக்கு இரண்டு நாள் அவகாசம் கொடு! அப்பளம் போட்டிருக்கிற வீட்டிலெல்லாம் பாக்கி வசூல் பண்ணிக் கொண்டு இனிமேல் வேறு யாரிடமாவது வாங்கிக் கொள்ளச் சொல்லி விவரம் கூறிவிட்டு வந்து விடுகிறேன்” என்றாள் அம்மா. இருபது வருஷப் பழக்கத்தையும், பழகியவர்களையும் பிரிவதென்றால் இலேசா? ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொண்டாள் சுகுணா.
“உன் சுபாவத்திற்கு இந்த வேலை ஒத்துவருமடீ சுகுணா. நீதான் கல்லூரிக்கே கதர்ச் சேலை கட்டிக் கொண்டு வருவாயே” - என்று பாராட்டிய தோழிகள் சிலர்.
“எதற்காக இந்த வம்பில் போய் மாட்டிக் கொள்கிறாய்? அழகான பட்டணத்தை விட்டுப் பட்டிக்காட்டுக்கு, ஓ - என்ன குருக்ஷேத்திரமோ? நீ எப்போதுமே இப்படித்தான். ஏதாவது அசட்டுத் தனமாகச் செய்து வைப்பாய்” - என்று அவளை ஏளனம் செய்த தோழிகள் சிலர்.
“இந்த பட்டினமும் இதில் இருக்கிற நீங்களும் அழகாயிருப்பதாக நீங்களே தான் சொல்லிக் கொள்ள வேண்டும். வேறு யாரும் துணிந்து அதைச் சொல்ல மாட்டார்கள்” - என்று அவர்கள் முகத்திலறைந்தாற் போல் பதில் சொல்லிவிட்டு வந்தாள் சுகுணா. அவளுக்கு எப்போதும் இப்படி ஏற்ற சந்தர்ப்பங்களில் அழகும் ஆற்றலுமுள்ள நல்ல வாக்கியங்களைப் பதிலாகப் பேச வரும்.
“பெண்ணுக்கு வேலையாகியிருக்கிறது. வேறு ஊருக்குப் போகிறோம்” - என்று தன் வாடிக்கை வீடுகளில் எல்லாம் சொல்லி விடைபெற்றுக் கொண்டிருந்தாள் அம்மா.
தாமரைக் குளத்தில் இரயில்வே ஸ்டேஷன் உண்டு. ஆனால் அந்த ஸ்டேஷனுக்கு எக்ஸ்பிரஸ் வண்டிகள் நிற்கிற கௌரவம் மட்டும் கிடையாது. எல்லார் கையிலும் இரண்டிரண்டாக விழுகிற பஜனை மடத்துச் சுண்டல் போல எல்லா ஸ்டேஷன்களிலும் நிற்கிற சாதாரண வண்டிகளே தாமரைக் குளத்திலும் நிற்கும். ஒவ்வொரு நாளும் சாயங்காலம் அந்தி மயங்குகிற சந்தி வேளையில் தாமரைக்குளம் ஸ்டேஷன் பாஸ்ட் பாஸஞ்சர் வண்டி வந்து நிற்கிற போது ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட நாலு பேர் நிச்சயமாய் அங்கு நிற்பார்கள். யார் வந்தாலும் வராவிட்டாலும் தாமரைக் குளம் நியூஸ் ஏஜெண்டு றாமலிங்க மூக்கனார் கண்டிப்பாக வந்திருபபர். என்னடா ‘றாமலிங்க’ என்று எழுதியிருக்கிறதே எனத் திகைக்கிறீர்களா? ஒரு சமயம் எவனோ தமிழ் உணர்ச்சியுள்ள பத்திரிகைக்காரன் பார்சலில் ‘இராமலிங்க மூப்பனார்’ - என்று கை தவறிப் பேரைச் சரியாக எழுதிவிட்டு அவரிடம் பட்டபாடு ஊரெல்லாம் பிரசித்தம். நியூஸ் ஏஜெண்டுக்கு வருகிற எல்லாப் பத்திரிகைப் பார்சல்களும் அந்த மாலை இரயிலில் தான் வரும். அவரையும், ஸ்டேஷன் மாஸ்டரையும் தவிர, ஒரு பாயிண்ட்ஸ் மேன், இரயிலில் வருகிறவர்களுக்குத் தாகசாந்தி செய்து அனுப்பவும் ஒரு ‘வாட்டர்மேன்’ - ஆக மொத்தம் நாலு பேர் தான் தாமரைக் குளம் ஸ்டேஷன். அல்லது நாலுபேருக்காக என்றும் வைத்துக் கொள்ளலாம். தாமரைக்குளம் ஸ்டேஷனுக்கு ரயில் வந்து கொண்டிருக்கிற இரகசியம் இந்த நாலு பேருக்கும் ஒருவிதமாகத் தெரியும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால், அன்று மாலையென்னவோ தாமரைக் குளம் ஸ்டேஷன் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமான கலகலப்போடு இருந்தது. ஸ்டேஷனுக்கு வெளியே இரட்டைமாடு பூட்டிய வில் வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. இரயிலை எதிர்பார்த்து வழக்கமான நாலு பேரைத் தவிரப் பஞ்சாயத்து போர்டுத் தலைவர், கிராம முன்சீப், கோழிப்பண்ணை வடமலைப் பிள்ளை, கதர்க்கடை ராஜலிங்கம் ஆகியவர்களும் வந்து நின்று கொண்டிருந்தார்கள். அன்று பௌர்ணமியாதலால் கிழக்கே பூர்ணசந்திரன் பேருருவாக எழுந்து கொண்டிருந்தான். நிலாவின் கீழே ஸ்டேஷனும், ஊரும் மிக அழகாகத் தோன்றின. தென்னை, மாமரத் தோப்புகளும் சுற்றிச் சுற்றி ஓடும் பன்னீர் ஆற்றின் அழகும் சந்திரோதயத்தில் குளித்து மோகன மெருகு ஏறி எழில் மயமாய்த் தோன்றின. பன்னீர் மாதிரியிருக்கும் தண்ணீரையுடையதாக இருந்ததனாலோ என்னவோ அந்த ஊர் ஆற்றுக்கு இப்படிப் பெயர் தொன்று தொட்டு ஏற்பட்டிருந்தது.
அடக்கமாகவும் அழகாகவும் அமைந்திருக்கிற ஊரை ஒட்டினாற் போல மேற்குத் தொடர்ச்சி மலை, மலைச்சரிவில் பழத் தோட்டங்கள், கொடி முந்திரி, மாதுளை, மா, கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்குடி எல்லாம் அந்த மண்ணுக்கு மிக நன்றாக வளரும். நீலமலைத் தொடரும் பசுமையான தோட்டங்களும் ஊரும், ஏதோ பாற்கடலில் முழுகி எழுந்தாற் போலப் பூர்ண சந்திர ஒளியில் அற்புதமாக காட்சியளித்துக் கொண்டிருந்த அந்த அழகிய நேரத்தில் தான் சுகுணாவும், அவள் அம்மாவும் மூட்டை முடிச்சுக்களோடு தாமரைக் குளம் ஸ்டேஷனில் இறங்கினார்கள். இறங்கி நின்று சுற்றிலும் பார்த்த முதற் பார்வையிலேயே சுகுணாவுக்கு அந்த ஊர் பிடித்துவிட்டது. சுகுணாதேவி பி.ஏ. என்ற பெயரைப் பார்த்து விட்டு யாரோ ஐம்பது வயது அம்மா கிராம சேவாதளத்துக்குத் தலைவியாய் வரப் போகிறாளென்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பஞ்சாயத்து போர்டுத் தலைவரும், பிறரும் வெள்ளைக் கதருடையில் இரயிலிலிருந்து மின்னல் இறங்கி வந்து நிற்பது போல் எதிரே வந்து நின்று கைகூப்பிய சுகுணாவைப் பார்த்து ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். என்ன அழகு! என்ன அழகு! இந்தப் பெண்ணின் பாதங்கள் நடந்தால் தாமரைக் குளமே இன்னும் அழகாகி விடுமே என்று தான் எண்ணுவதற்குத் தோன்றியது அவர்களுக்கு.
“சரியான பட்டுப்பூச்சி ஐயா” - என்று முன்சீப்பின் காதில் மெல்ல முணுமுணுத்தார் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளை. கையோடு கொண்டு வந்திருந்த ரோஜாப்பூ மாலையைச் சுகுணாவின் அம்மாவின் கையிலேயே கொடுத்துச் சுகுணாவுக்குப் போடச் சொன்னார் பஞ்சாயத்து போர்டுத் தலைவர். பெண்ணுக்கு மாலை போடும்போது அவளைப் பெற்ற அம்மாவுக்கு மனம் பூரித்தது. உடன் வந்திருந்தவர்களையும் தம்மையும் அறிமுகம் செய்து கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர். அவர்களுக்குத் தன் தாயை அறிமுகம் செய்து வைத்தாள் சுகுணா.
சாமான்களை வில் வண்டியில் ஏற்றியதும், “நீங்கள் இருவரும் இதில் ஏறிக் கொள்ளுங்கள் அம்மா! நாங்கள் பின்னாலேயே நடந்து வந்துவிடுகிறோம்” - என்று பணிந்த குரலில் வேண்டிக் கொண்டார் கிராம முன்சீப்.
“ஏன்? எல்லாருமே சேர்ந்து நடந்து போகலாமே” என்றாள் சுகுணா.
“உங்களுக்கு அதிகமாக நடந்து பழக்கமிருக்காது. நாங்களெல்லாம் தினசரி கிராமத்தில் நடந்து நடந்து பழகி விட்டோம். அதனால் எங்களுக்கு இது சிரமமாக தோன்றாது.”
“இந்தச் சிரமங்களைப் பழகிக் கொள்ளத்தான் நான் வந்து இருக்கிறேன்” - என்று சொன்னாள் சுகுணா. அவர்கள் மேலும் விடாமல் வற்புறுத்தியதன் பேரில் அம்மாவை மட்டும் வண்டியில் ஏறிப் போகச் சொல்லிவிட்டுத் தான் அவர்களோடு நடந்தாள் சுகுணா. தனியாக நடந்து போனால் அந்த நாலு ஆண் பிள்ளைகளும் சிரித்துப் பேசிக் கொண்டு போவார்கள். அவள் உடன் வந்ததனால் அளவாகச் சுருக்கமாய் மட்டும் தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொண்டார்கள். அநாவசியமாகச் சிரிக்கவில்லை. சில பெண்களுக்கு அப்படி ஒரு சக்தி. தாங்கள் உடன் வருவதனால் தங்களோடு சேர்ந்து வருகிற மற்றவர்களையும் கௌரவமாக நடந்து கொள்ளச் செய்யும் புனித நிலை சிலருக்கு உண்டு. சுகுணாவுக்கும் அத்தகைய பண்பு வாய்ந்த அழகு அமைந்திருந்தது. அரசகுமாரியைச் சூழ வரும் ஊழியர்களைப் போல் அடக்க ஒடுக்கமாகச் சுகுணாவோடு நடந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
சிற்றூர்களுக்கான வளர்ச்சித் திட்டத்தின் கீழ்த் தாமரைக் குளத்தில் அமைக்கப்பட்டிருந்த கிராம சேவா தளத்தின் அலுவலகத்தில் ஒரு பகுதியைச் சுகுணாவுக்கு வீடாக ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். சுற்றிலும் பெரிய தோட்டத்தோடு கூடிய பழைய கட்டிடம் அது. சுகுணாவின் சேவாதளத்தில் அவளுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு வேலை செய்ய நான்கு பெண் ஊழியர்களும், இரண்டு இளைஞர்களும், கிராமத்துத் தொண்டர்களாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். எல்லாருக்கும் சுற்றிப் பார்த்து அலுவல் புரிய வசதியாக சைக்கிள் கொடுக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவருக்கும் நான்கு கிராமங்களாக வேலை பொறுப்புக்கள் பிரித்து விடப்பட்டிருந்தன. ஆனால் கிராமத் தொண்டர்களாக நியமிக்கப்பட்டிருந்த பெண்களும், ஆண்களும், சைக்கிளில் ஏறி மாந்தோப்புக்கும், தென்னந்தோப்புக்கும் உல்லாசப் பயணம் போவதுபோல் போய் இளநீரும், மாம்பழமும் சாப்பிட்டுவிட்டு ஊர் வம்பு பேசித் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களால் உருப்படியாக ஒரு வேலையும் நடைபெறவில்லை. முதியோர் கல்விப் பள்ளிக்கூடமென்று கட்டப்பட்டு இருந்த ஓட்டுக் கட்டிடங்களின் உட்பக்கம் மண் தரையில் எருக்கஞ்செடியும், எமப்பூண்டும் முளைத்திருந்தன. அரசாங்கத்திலிருந்து பண உதவிபெறும் கோழிப் பண்ணைகளில் கசாப்புக் கடைக்கு அனுப்புவதற்கான ஆடுகளை வளர்த்துக் கொண்டு கோழிகள் வளர்ப்பதாக ஏமாற்றி மான்யம் வாங்கிக் கொண்டிருந்தார் வடமலைப் பிள்ளை. இப்படி எத்தனையோ நடந்து கொண்டிருந்தது. தெரிந்தும் நடந்ததும், தெரியாமலும் நடந்தது.
தாமரைக்குளம் கிராமத்துக்கு வந்த ஒரு வாரத்துக்குள் நிலவரத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் சுகுணா. அவள் நினைத்துக் கொண்டு வந்தது போலவோ, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் அந்தப் பேரறிஞர் கூறியது போலவோ, கிராமத்தில் எவருடைய அகக்கண்களையும் அவ்வளவு விரைவாகத் திறந்து விட முடியாதென்று அவளுக்கு இப்போது நன்றாகத் தெரிந்தது. மற்றவர்களுடைய அகக்கண்கள் திறப்பதற்கு மாறாக அவளுடைய அகக்கண்கள் தாம் முன்பிருந்ததை விட இப்போது இன்னும் நன்றாகத் திறந்து கொண்டன.
“இந்த ஊர் நன்றாயிருக்கிறதடீ பெண்ணே! தயிரும், பாலும் வேண்டிய மட்டும் கிடைக்கிறது! காய்கறிகளுக்குப் பஞ்சமே இல்லை. ஆற்றில் படிகமாகத் தண்ணீர் ஓடுகிறது” - என்று சுகுணாவின் அம்மா தாமரைக்குளத்தைப் பற்றிப் பெருமையடித்துக் கொண்டாள்.
பாலும் தயிரும் கிடைத்தால் போதுமா? நல்ல மனிதர்கள் கிடைக்க வேண்டுமே? கோழிக்கும், ஆட்டுக்கும் பண்ணை வைத்து வளர்ப்பதற்கு முன்பு அங்கு மனிதர்களுக்காக பண்ணை வைத்து வளர்க்க வேண்டும் போலிருந்தது. கிராமத்து மக்கள் ஒரேயடியாக அப்பாவிகளாக இருந்தார்கள். பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் மட்டுமே மனிதர்களை மதிக்கத் தெரிந்து கொண்டிருந்தார்கள். குணத்துக்காகவும் மனிதத் தன்மைக்காகவும் மதிக்கப் பழகிக் கொள்ளவில்லை. சிலவற்றைத் தப்பாகக் கணிப்பதில் அளவுக்கு அதிகமான கூர்மையும் வேறு சிலவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள முடியாத மந்தமும் உடையவர்களாக இருந்தனர் கிராமத்து மக்கள்.
தனது அலுவலகத்தில் பணிபுரியும் மணமாகாத கிராம சேவகிகள் ஆண் தொண்டர்களுடன் கும்மாளமிட்டுச் சிரித்துப் பேசுவதும், ஏதோ ஊர்வலம் போவது போல் சைக்கிளில் சேர்ந்து போவதும், பண்புக் குறைவாக நடந்து கொள்வதும் சுகுணாவுக்கு ஆற்றிக் கொள்ள முடியாத வருத்தத்தை அளித்தன. கிராமத்தைச் சீர்திருத்த வந்தவர்கள் கிராமத்தார் கண் முன்பே சீர்கேடாக நடப்பதை அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு நாள் தன்னிடம் பணிபுரியும் நான்கு கிராம சேவகிகளையும் கூப்பிட்டுத் தன்மையாகவும், நயமாகவும், விவரமாகவும் உபதேசம் செய்தாள் அவள். அந்தச் சகோதரிகளும் நன்றாக வாழவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு தான் அவள் அந்த உபதேசத்தைச் செய்தாள்:
“பெண்ணுக்குத் தன் அழகே பகை. அதுவே நண்பன். பெண்ணின் அழகு கவர்ச்சியினால் மற்றவர்களை அழிக்கும் போது ஆயுதம். அடக்கத்தினால் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் போது அதுவே கவசம். ஊருக்கெல்லாம் எளிமையை உபதேசிக்கிற நீங்கள் இப்படி உடல் தெரிகிற மாதிரி வாயில் புடவையும் ஒற்றை மேலாக்குமாக எல்லாரும் காணும்படி அலைந்தால் நன்றாக இருக்கிறதா? எளிமையைக் கற்பிக்க அலைந்தால் நாமே ஆடம்பரத்தைக் கடைப்பிடிக்கலாமா? கிராமத்தை வளர்க்க முடியாவிட்டாலும் கெடுத்து விடாமல் இருக்க வேண்டாமா?” - என்று அவள் இதமான முறையில் சகோதரிகளிடம் பேசுகிறாற் போல் பேசியும் அந்தப் பெண்கள் அதை நல்ல முறையில் எடுத்துக் கொள்ள வில்லை. ‘இவள் யார் நமக்கு அறிவுரை கூறுவதற்கு?’ - என்ற முறையில் அலட்சியம் செய்தார்கள் அவர்கள்.
“உடம்பு தாங்க முடியாமல் படுதாவைக் கட்டிச் சுமப்பது போல் கெட்டிக் கதரைக் கட்டிச் சுமப்பதற்கு எங்கள் உடம்பில் சத்து இல்லையம்மா” - என்று சற்றுத் துணிச்சலான பெண்ணொருத்தி சுகுணாவை எதிர்த்தே பேசிவிட்டாள்.
அவள் துடுக்குத்தனமாக இப்படிப் பேசியதைக் கேட்டதும் முதலில் சுகுணாவுக்கு ஆத்திரம் பொங்கியது. சுகுணா நினைத்திருந்தால் அப்போதே மேலதிகாரிக்கு எழுதி அந்தப் பெண்ணைச் சீட்டுக் கிழித்து அனுப்பியிருக்க முடியும். ஆனால் அவளால் உடனே அப்படிச் செய்து விட முடியவில்லை. கெடுதல் செய்து அன்பை வளர்க்க முடியாதென்பதில் அவளுக்கு எப்போதும் அசைக்க முடியாத நம்பிக்கை. சிரித்த முகத்தோடும், எதையும் பொறுத்துக் கொள்ளும் நிதானமான மனத்தோடும் அவள் எல்லாவற்றையும் சமாளித்தாள்.
“இவள் வேறு வக்கு இல்லாமல் சாமியாரிச்சி மாதிரிச் சாயம் மங்கின கதர்ப் படுதாவைக் கட்டிக் கொண்டு திரிகிறாள் என்பதற்காக நாமும் அப்படிச் செய்யணுமோ?” என்று கிராமசேவகிகள் தனியே தன்னைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொள்வதும் அவள் காதுக்கு வந்தது. அப்போதும் சுகுணா பொறுமையிழக்கவில்லை. குமாரசம்பவத்தில் பரமசிவனுக்காகப் பரமசிவனையே நினைந்து உயர்ந்தோங்கிய பனிமலைக் கொடுமுடிகளிலே தவம் செய்த பார்வதியைப் போல் அந்த மலையடிவாரத்துக் கிராமத்தில் இலட்சிய தெய்வத்தின் வரத்துக்காகத் தவம் செய்தே தீருவது என்று உறுதியாக இருந்தாள் அவள். ஆரம்பத்திலேயே அவநம்பிக்கை அடைவது நோயை வலுவில் வரவழைத்துக் கொள்வது போல என்றெண்ணினாள் அவள். தாமரைக்குளம் வட்டாரத்தில் தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த எல்லாக் கிராமங்களுக்கும் தானே சைக்கிளில் சுற்றுப் பயணம் செய்து பார்த்து வரத் தீர்மானம் செய்து கொண்டாள் சுகுணா. மற்றவர்களைத் திருத்த முயன்று கொண்டே தான் தனது கடமைகளில் தவறிவிடவில்லை அவள். நினைவோடும், பொறுப்புடனும் தன் கடமைகளைச் செய்யத் தொடங்கினாள்.
“இது கிராமாந்தரம். ஒண்டி சண்டியாக நீ மலைக்காட்டு கிராமங்களிலும் மற்ற இடங்களிலும் துணையில்லாமல் தனியே சுற்றக் கூடாது பெண்ணே! பட்டினக்கரையைப் போல என்ன கெடுதல் செய்யலாம் என்று யோசித்து யோசித்து மனத்துக்குள்ளேயே மிகப் பெரிய கெடுதலாகத் தீர்மானித்துக் கொண்டு அப்புறம் கெடுதலைச் செய்கிற அளவு இங்கே மனிதர்கள் உணர்ச்சி மரத்துப் போயிருக்க மாட்டார்கள். ஓர் ஆளைத் தங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் முன் பின் யோசிக்காமல் அரிவாளைக் கையில் தூக்கி விடுவார்கள். பார்த்து நிதானமாக நடந்து கொள். யாரிடமும் ஆத்திரத்தில் முன் கோபப்படாதே” என்று சாது பெண்ணுக்கு அம்மாவாக வாய்த்த பரமசாது மேலும் அவளுக்கு அறிவுரை கூறியிருந்தாள். நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்ற கடமையுணர்வினால் வேலையேற்றுக் கொண்டு வந்ததும் வராததுமாகத் தன்னுடைய பெண் பலபேரைப் பகைத்துக் கொண்டிருக்கிறாள் என்பது அம்மாவுக்கும் தெரிந்திருந்தது. தன் பெண் நியாயமாக நடந்து கொள்கிறாளே என்பதில் அவளுக்குப் பெருமை. அதே சமயத்தில் வந்த இடத்திலே பலரைப் பகைத்துக் கொள்கிறாளே என்பதில் கவலையும் இருந்தது அவளுக்கு.
தாமரைக்குளத்துக்கு வந்து அப்படி இப்படி என்று மாதம் ஒன்று கழிந்து விட்டது. சுகுணாவுக்கு முதல் மாதச் சம்பளம் வந்த போது, “மூளிக் கைகளோடு இருக்கிறாயே; நாலு பவுனில் கைக்கு ரெண்டு தங்க வளையல்கள் பண்ணிக் கொள்ளேன். என்னிடமும் அப்பளம் வடாம் விற்றுச் சேர்த்து வைத்த பணம் கொஞ்சம் கையில் இருக்கிறது. இப்போது அதையும் தருகிறேன்” என்று கெஞ்சினாள் அம்மா. சுகுணாவா கேட்கிறவள்? கண்டிப்பாகத் தனக்கு வேண்டாமென்று மறுத்துச் சொல்லிவிட்டாள்.
“பெண்களின் நகை ஆசையால் இந்தத் தேசத்தின் பொருளாதாரமே கெட்டுக் கிடக்கிறது அம்மா! மகோன்னதமாக நாகரிகமடைந்த நாடுகளில் கூடப் பெண்கள் இப்படித் தங்கத்தையும் வெள்ளியையும் சுமந்து கொண்டு திரியவில்லை! இதோ பார்! இதுதான் எனக்கு நகை” என்று கூறிவிட்டுத் தன் அன்னைக்கு முன்னால் மலர்ந்த முகத்தோடு அழகாக வாய் நிறையச் சிரித்துக் காண்பித்தாள் சுகுணா.
“போடி அசடு” என்று சுகுணாவுக்கு அழகு காட்டினாள் அம்மா. அன்றுமாலை தாமரைக்குளத்தின் சேரிக்குப் போயிருந்தாள் சுகுணா. ஏழை அரிசனக் குழந்தைகள் பிறந்த மேனியாய் மாதக் கணக்கில் குளிக்காமல் புழுதி படிந்த உடம்போடு பன்றிக் குட்டிகள் போல் திரிவதைக் கண்ட போது அவள் நெஞ்சம் கொதித்தது. இந்த நாட்டுக்கு ஒரே ஒரு மகாத்மா மட்டும் போதாது. ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மகாத்மாக்கள் பிறக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு. எல்லா குழந்தைகளையும் ஒன்று சேர்த்துப் பன்னீர் ஆற்றுக்கு அழைத்துப் போய்த் தன் கைகளாலேயே சோப்புத் தேய்த்துக் குளிப்பாட்டி அழைத்துக் கொண்டு போய் சேரியில் விட்டு வந்தாள் அவள். மறுநாள் அதே வேலையைச் செய்யுமாறு தன் கீழ்ப்பணி புரியும் கோமளா என்ற கிராமசேவகிக்குச் சுகுணா உத்தரவிட்டபோது, அவள் முகத்தில் அறைந்தாற் போல் அதைச் செய்வதற்குத் தன்னால் முடியாது என்று மறுத்துச் சொல்லிவிட்டாள்.
“நீங்கள் வேண்டுமானால் செய்யுங்கள்! எங்களுக்கு மாடு குளிப்பாட்டி பழக்கமில்லை அம்மா!” என்று திமிராகச் சுகுணாவுக்குப் பதில் கூறினாள் கோமளா. இப்போதும் சுகுணா அரிய முயற்சி செய்து தன் மனம் ஆத்திரமடைந்து விடாதபடி பார்த்துக் கோண்டாள்.
“நான் உன்னை மாடு குளிப்பாட்டச் சொல்லவில்லை கோமளா! குழந்தைகளைத் தான் குளிப்பாட்டச் சொல்கிறேன்.”
“அவர்களைக் குளிப்பாட்டுவதும், மாடு குளிப்பாட்டுவதும் ஒன்றுதான்.”
“சரி! உனக்குச் சிரமம் வேண்டாம். அந்த மாடுகளை நானே தொடர்ந்து குளிப்பாட்டிக் கொள்கிறேன்” என்று நிதானமாகப் பதில் சொல்லிக் கோமளாவை அனுப்பிவிட்டாள் சுகுணா. கோமளாவும் ஏதோ ஒரு கல்லூரியில் இண்டர் வரை படித்த பெண் தான். ஆனால் படிப்பு அகங்காரத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அகங்காரத்தை வளர்க்கிறதற்கே பயன்படுகிறதென்பதற்கு நிதரிசனமாக இருந்தாள் அவள் அழுக்குப் படாமல் வேலை செய்து பணம் சேர்த்து விட ஆசைப்படுவதைத் தவிரப் படித்தவர்களில் பெரும்பாலோருக்கு இந்தக் காலத்தில் வேறு ஆசை ஒன்றுமில்லை என்பது சுகுணாவுக்குப் புரியலாயிற்று. அது புரிந்த போது நாகரிகயுகத்தின் முதன்மையான துக்கமொன்றைப் புரிந்து கொண்ட வேதனையை அவள் அடைந்தாள்.
தாமரைக் குளத்திலிருந்து தன்னுடைய பிர்க்காவைச் சேர்ந்த இருபத்து நாலு கிராமங்களையும் சுற்றிப் பார்த்து வருவதற்காக அன்றைக்கு சைக்கிளில் புறப்பட்ட போது அவள் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்வதையே அந்த ஊரில் ஒரு பெரிய அதிசயமாகப் பாவித்துத் தெருவின் இருபுறமும் பார்த்த கண்கள் எத்தனையென்று அளவிட முடியாது. அவ்வளவு அழகான பெண் சைக்கிள் ஏறிப் போவது கூட அங்கே அந்தக் கிராமத்தில் அதிசயம்தான்.
சுகுணா தனது சைக்கிள் சுற்றுப் பயணத்தை ஆரம்பித்த போது ஊர்ச் சாவடியில் உட்கார்ந்து வம்பு பேசிக் கொண்டிருந்த தாமரைக்குளம் கிராம முன்சீப்பும் கோழிப்பண்ணை வடமலைப்பிள்ளையும் தங்களுக்குள் கீழ்க்கண்டவாறு உரையாடினார்கள். அந்தச் சாவடி என்கிற பொதுமேடையில் பேசப்படுகிற பேச்சுக்கு எல்லா நாளிலும் மாறாத நிரந்தரமான தலைப்பு வம்பு ஒன்று தான்.
“என்னவோய், பட்டுப் பூச்சி சைக்கிளேறிப் பறக்கத் தொடங்கிவிட்டதே?” என்றார் வடமலைப் பிள்ளை. சுகுணா அப்போது அந்தச் சாவடி அமைந்திருந்த பிரதான வீதி வழியாகச் சைக்கிளில் ஏறிப் போய்க் கொண்டிருந்தாள்.
“பறக்கும்! பறக்கும்! சிறகு உதிர்கிற வரை பறந்துதானே ஆகணும்” என்று குத்தலாகப் பதில் கூறினார் தாமரைக் குளம் கிராம முன்சீப்.
“உமக்குத் தெரியுமா? என்னுடைய கோழிப் பண்ணையில் ஊழலும் ஏமாற்றும் நிறைந்திருப்பதால் எனக்குச் சர்க்காரிடமிருந்து வரும் உதவித் தொகை நிறுத்தப்பட வேண்டுமென்று ‘பட்டுப் பூச்சி’ ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறதாம் ஐயா!” என்று வயிற்றெரிச்சலோடு பேசினார் வடமலைப்பிள்ளை.
“அதுமட்டுமா? சேரிப்பக்கத்தில் தண்ணீர், விளக்கு வசதி சரியாகச் செய்து தரப்படவில்லை என்று பஞ்சாயத்து போர்டைப் பற்றிக் கூட மேலிடத்துக்கு எழுதியிருக்கிறாளாம் ஐயா!”
“சரி தான் பூச்சி பறப்பதோடு கொட்டவும் ஆரம்பித்திருக்கிறது.”
“இதை இப்படியே சுதந்திரமாகப் பறக்கவிடக் கூடாது! ஏதாவது செய்யணும்” என்று மீசையை முறுக்கினார் கிராம முன்சீப்.
தன்னுடைய பொறுப்பின் கீழ் விடப்பட்டிருந்த அந்தக் கிராமங்களின் வளர்ச்சி நிலையை அறிவதற்காகச் செய்த அந்தச் சுற்றுப்பயணத்தின் போது சுகுணாவுக்குப் பலப்பல புதிய அநுபவங்கள் ஏற்பட்டன. பல புதிய உண்மைகள் தெரிந்தன. தாமரைக் குளத்துக்கருகில் இருந்த மேற்குத் தொடர்ச்சி மலை மேல் பள்ளத்தாக்கில் சந்தனக்காடு என்று இயற்கை வளமிக்க ஒரு சிற்றூர் இருந்தது. மலைகளினிடையே உள்ள கணவாய்ப் பாதையாக அதற்குப் போவதற்குச் சமதரைச் சாலையும் உண்டு. அந்த ஊரில் காட்டு வாசிகளாகிய இருபது முப்பது மலைப்பளிஞர்களின் குடும்பங்கள் இருந்தன. சந்தனக்காடு கிராமத்தில் ஒரு முதியோர் கல்விக் கூடமும், ஒரு புதிய பிரசவ விடுதியும் பணி செய்து வருவதாக அவளுடைய ஆபீஸ் விவரப் புத்தகத்தில் இருந்தது. ஆனால் அங்கே விசாரித்துப் பார்த்த போது அப்படி ஒன்றும் இருப்பதாக யாருமே சொல்லவில்லை. இன்னும் கொஞ்சம் கூர்ந்து விசாரித்துப் பார்த்ததில் இந்தியா என்கிற உலகத் தொடர்பு இல்லாத அந்த மலைப்பளிஞர்களில் பலர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இதை அறிந்ததும் சுகுணாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஆடம்பர ஆணவ வெளிச்சம் போடுகிற நகரங்களிலும், பெரிய பெரிய ஊர்களிலும், பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் வைத்துவிட்டுத் தேசமெல்லாம் நிறைவான அறிவு வளர்ச்சி ஏற்பட்டு விட்டதாக நினைத்துக் கொண்டிருப்பது எத்தனை பேதமை என்பது அவள் உணர்ந்தாள். இந்த நாட்டில் இன்னும் சில இடங்களில் அறிவு வளரவில்லை. சில இடங்களில் பண்பு வளரவில்லை. இன்னும் சில இடங்களில் இரண்டுமே வளரவில்லை. இரண்டு வளர்ந்திருக்கிற இடத்தில் மூன்றாவதாக வறுமையும் வளர்ந்திருக்கிறது.
கல்லூரிகளையும் சர்வகலாசாலைகளையும் அழகிய கிராமங்களிலும் மலைநாட்டு இயற்கையழகுகளினிடையேயும் படிப்பதைத் தவிரக் கவனத்தை வேறுபுறம் திருப்ப முடியாத சின்னஞ் சிறு ஊர்களிலும் அமைத்தால் இந்த நிலை சிறிது மாறலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனம் வறண்ட மனிதர்களையும், இலட்சியம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கிறவர்களையும் பார்த்துப் பார்த்துச் சுற்றுப் பயணமே அலுத்துப் போயிருந்த சுகுணாவுக்குக் கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் மட்டும் ஓர் அதிசயம் காத்திருந்தது. தன்னைப் போலவே இலட்சியப் பைத்தியம் பிடித்த அபூர்வ மனிதர் ஒருவரை, அவள் அந்தக் கன்னிகாபுரத்தில் சந்தித்தாள். கள்ளிக்காட்டுக்குள்ளே ஒரே ஒரு கற்பக விருட்சத்தையும் அரிதாகப் பார்த்திட வாய்த்தது போல் அந்த மனிதரின் சந்திப்பு அவளுக்குக் கிடைத்தது. அந்தச் சந்திப்பிலேயே அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கிடைத்தன.
கன்னிகாபுரத்தில் தன்னுடைய சேவாதளத்து அலுவல்களை விசாரித்து முடித்துக் கொண்டு அவள் சைக்கிளில் ஏறித் தாமரைக் குளத்துக்குத் திரும்பிப் புறப்படுவதற்கிருந்த போது, “இங்கே ரகுராமன் என்றொரு கவி இருக்கிறார். அவர் சமூக சேவையில் ஆர்வமுள்ள இலட்சியவாதி. அவருக்கு ஒரு கால் ஊனம், நடந்து வர முடியாது. அவர் நீங்கள் இங்கே வந்திருப்பதைக் கேள்விப்பட்டு உங்களைப் பார்க்க விரும்புகிறார். தயவு செய்து நீங்கள் அவரைப் பார்க்க வரலாமோ?” - என்று அந்த ஊர்க் கர்ணம் வந்து கேட்டார். சுகுணா மகிழ்ச்சியோடு அவரைப் பார்ப்பதற்கு ஒப்புக் கொண்டு புறப்பட்டாள். இலட்சியவாதியைப் பார்க்கும் ஆசை மற்றொரு இலட்சியவாதிக்கு இருக்கும்தானே?
ரகுராமன் என்ற அந்தக் கவிஞரின் இருப்பிடமே அவளை அவரிடம் பக்தி கொள்ளச் செய்தது. ஊரிலிருந்து ஒதுஞ்கினாற் போல அமைந்திருந்தது அவர் இருப்பிடம். கடல் போல அலை வீசிக் கொண்டிருந்த ஒரு பெரிய ஏரிக்கு நடுவில் தென்னை மரங்கள் அடர்ந்த பசுமைத் திடல் ஒன்றில் ஆசிரமம் போல் கூரைக்குடில் வேய்ந்து கொண்டு வசித்து வந்தார் ரகுராமன். ஏரிக்கரையில் சைக்கிளிலிருந்து சுகுணாவை இறங்கச் செய்து பரிசலில் அவளைத் திடலுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள்.
‘ரகுராமன்’ மிகவும் முதியவராக இருப்பாரென்று நினைத்துக் கொண்டு போயிருந்தாள் சுகுணா. ஆனால், அவர் முப்பது முப்பத்தைந்து வயது இளைஞராகவே இருந்தார். அங்கே அவருடைய குடிலில் மரப் பீரோக்களில் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் குவிந்திருந்தன. அவள் உள்ளே நுழைந்த போதும் அவர் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டு தான் இருந்தார். அவருடைய முகமே உடனே படித்துவிடத் தக்க ஒரு நல்ல புத்தகமாகத் தோன்றியது சுகுணாவுக்கு. கௌரவமான சாயல் தெரியும் முகம் அது.
ரகுராமன் காண்பதற்கு ஒளி நிறைந்து தோன்றினார். அவருடைய கண்கள் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் அழகாயிருந்தன. அந்தக் கண்களில் எப்போதும் உயர்ந்த எண்ணங்களின் சாயல் தெரிந்தது.
“உங்கள் தகப்பனாரோடு அவருடைய கடைசிக் காலத்தில் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன் அம்மா! நானும அவரும் சுப்பிரமணிய பாரதியாருடைய தேசீயப் பாடல்களை எத்தனையோ மேடைகளில் சேர்ந்து பாடியிருக்கிறோம். சேர்ந்து அடி வாங்கியிருக்கிறோம். நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்று யாரோ சொன்னார்கள். பார்க்க ஆசையாயிருந்தது” - என்றார் ரகுராமன்.
“நீங்கள் மட்டும் இங்கே தனியாயிருக்கிறீர்களா” - என்று சுகுணா அவரைக் கேட்டாள். அவர் கையிலிருந்த புத்தகத்தில் அடையாளம் சொருகி மேஜையில் வைத்துவிட்டு அவளுக்கு பதில் கூறினார்.
“இல்லை! பார்ப்பதற்கு ஆசிரமம் போலிருக்கிறதே என்று நினைத்து அப்படிக் கேட்காதீர்கள். இந்த ஊரில் எங்கள் வீடே இதுதான். இந்தத் தீவும் இந்த ஏரியும் எங்கள் குடும்பச் சொத்து. நானும் என் அம்மாவும் இங்கேதான் வசிக்கிறோம். ஊருக்குள் நன்செய் நிலமும் கொஞ்சம் இருக்கிறது. நான் பழைய ஆகஸ்டு போராட்டத்தில் போலீஸாரிடம் அடி வாங்கிக் காலொடிந்து வீட்டோடு வந்து விழுந்தவன் தான். இன்று வரை இந்தப் புத்தகங்களும் சிந்தனையும் தான் கால்களும் இவைதான். மாதம் இருநூறு ரூபாய்க்காவது நான் புத்தகங்கள் வாங்குவேன். தாமரைக் குளத்துக்கும் கன்னிகாபுரத்துக்கும் அதிக தூரமில்லை. முடிந்தபோதெல்லாம் நீங்கள் இங்கே வந்தால் இலக்கிய விஷயங்கள் பேசிக் கொண்டிருக்கலாம்! எனக்கு இங்கே இந்தப் புத்தகங்களால் தான் பொழுது போகிறது. காலால் நடக்க முடியாத நான் இந்தப் புத்தகங்களைக் கொண்டு மனத்தினால் நடந்து கொள்ள முடிகிறது.”
“நீங்கள் கவியெழுதுவீர்கள் என்று என்னை அழைத்துக் கொண்டு வந்தவர்கள் என்னிடம் சொன்னார்களே?”
இதைக் கேட்டு ரகுராமன் மெல்ல நகைத்தார். பின்பு பதில் கூறினார்:
“எழுதுவேன்! அடைந்து கிடக்கிற மனத்தில் எப்போதாவது அந்த ஆவேசம் வரும். அப்போது ஏதாவது கிறுக்குவேன். பரிபூரணமான கவிதை என்று இதுவரை நான் என் மனத்துக்கு நிறைவு தருகிற எதையும் எழுதியதாக எனக்கு நினைவில்லை.”
இப்படி ரகுராமனும், சுகுணாவும் பேசிக் கொண்டிருந்த போது உள்ளேயிருந்து ஒரு வயதான் அம்மாள் இரண்டு டம்ளர்களில் மோர் கொண்டு வந்து வைத்தாள். திருமகள் விலாசம் ஒளிரும் மங்கலமான முகத் தோற்றத்தோடு விளங்கினாள் அந்த அம்மாள்.
“என் தாயார்” - என்று அந்த அம்மாள் பக்கம் கையைக் காட்டினார் ரகுராமன். சுகுணா அந்த அம்மாளை வணங்கினாள். “நன்றாக இரு அம்மா” - என்று வாழ்த்தி விட்டுச் சுகுணாவை அறிமுகம் செய்து ரகுராமன் கூறிய விவரங்களையும் கேட்டுக் கொண்டு சென்றாள் அந்த அம்மாள். மேலும் சில நாழிகைகள் இலக்கியச் சர்ச்சை செய்துவிட்டுச் சுகுணா ரகுராமனிடமும் அவருடைய தாயாரிடமும் விடைபெற்றுக் கொண்டு ஊருக்குப் புறப்பட்டாள். அந்த ஏரியும் தென்னை மரம் நிறைந்த திடலும், ரகுராமனின் அழகிய குடியிருப்பும் அவள் உள்ளத்தில் அழியா ஓவியங்களாகப் பதிந்து விட்டன. ‘காணி நிலம் வேண்டும்’ - என்று பாடிய மகாகவியின் சிறந்த பாட்டு அவளுக்கு நினைவு வந்தன. கன்னிகாபுரத்தில் கவிஞர் ரகுராமனுக்கு ஊர் மக்களிடம் நல்ல மதிப்பு இருந்தது. அவர் பேரைச் சொன்னாலே எதிரே நிற்பவர்கள் முகங்களில் அவரைக் கௌரவமானவராகக் கருதும் மதிப்பின் சாயல் படிந்தது. அந்தச் சுற்றுப் பயணத்திலேயே அவளுக்குக் கிடைத்த மறக்க முடியாத அனுபவமாக ரகுராமனின் சந்திப்பு இருந்தது. அவரிடம் நல்ல புத்தகங்கள் இருந்தன; அவ்வளவேன்? அவரே ஒரு நல்ல புத்தகமாகவும் இருந்தார்.
கடைசிநாள் சுற்றுப்பயணம் முடிந்தது. அவள் ஊர் திரும்பும் போது களைப்பாக இருந்தது. சைக்கிள் பெடலை வேகமாக மிதிக்க முடியவில்லை. ஊர் எல்லை வருமுன்பே சாயங்காலமாகி விட்டது. சுகுணா தாமரைக்குளத்துக்கு நாலைந்து மைல்கள் அப்பால் வந்து கொண்டிருக்கும் போதே பொழுது சாய்ந்து இருட்டியும் விட்டது. அவள் அப்போது சைக்கிளில் வந்து கொண்டிருந்த இடத்திலிருந்து ஊர் வரையுள்ல வழியில் இருபுறமும் ஒரே அடர்ந்த புளிமரக்காடு. அதற்குக் கூட்டுப் புளித்தோப்பு என்று அந்த ஊரில் பெயர். அந்தப் புளிமரங்கள் யாவும் கோழிப் பண்ணை வடமலைப் பிள்ளைக்குச் சொந்தம். காடாந்தகாரமாக இருண்ட புளியந்தோப்பின் நடுவே வளைந்து வளைந்து செல்லும் புழுதிச் சாலையாகிய வண்டிப் பாதையில் தன் சைக்கிளைக் கூடியவரை விரைவாகச் செலுத்த முயன்றவாறு வந்து கொண்ருந்தாள் சுகுணா. அந்தப் பகுதியை விரைவில் கடந்து அப்பாற் போய்விட வேண்டுமென்றே அவள் வேகத்தை வரவழைத்துக் கொண்டாள். ஓரிடத்தில் பாதைத் திருப்பத்தில் வழியை மறித்துக் கொண்டு யாரோ சில ஆட்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. புளியந்தோப்பு காவலுக்காக அங்கே யாராவது உட்கார்ந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு இரண்டு மூன்று முறை பாதையை விட்டு அவர்கள் எழுந்திருப்பதற்காக மணியை அடித்தாள் சுகுணா. ஆட்கள் எழுந்திருக்கவில்லை. மணி ஒலியைக் கேட்ட பின்னும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
“ஏ பொண்ணு! சைக்கிளை நிறுத்து” - என்று அதட்டுகிற குரல் கேட்டது. சுகுணாவுக்கு நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. தொண்டைக்குழி விரைவாக வறண்டது. அவள் எவ்வளவோ துணிச்சல்காரியாக இருந்தாலும் பயம் பயம்தான். தைரியத்தைக் கைவிடாமல் தன் சைக்கிளை நிறுத்தி ஸ்டாண்டு போட்டுவிட்டுத் தானும் நின்றாள். அந்த இருளிலும் பளபளவென்று மின்னுகிற வளைந்த வெட்டரிவாளோடு ஒரு முரட்டு ஆள் முதலில் எழுந்திருந்து அவளருகே வந்தான். சிறிது நேரத்தில் இன்னும் நாலைந்து ஆட்கள் அதே கோலத்தில் வந்து அவளை வளைத்துக் கொண்டார்கள். அவள் முற்றிலும் தைரியத்தை இழந்துவிட்டாள்.
“ஏம்மா நீ வடமலை எசமானோட கோழிப் பண்ணையெப் பத்திச் சர்க்காருக்கு ஏதோ ரிப்போர்ட் எழுதினியாமே? நெசந்தானா?” - முதலில் வந்தவன் அவளைக் கேட்டான். அந்தக் கேள்வியில் முரட்டு வலிமையின் துணிவு ஒன்று மட்டுமே ஒலித்தது.
“ஆமாம் எழுதினேன்” - என்று தெளிவாகப் பதில் சொன்னாள் சுகுணா. பயத்துக்காகப் பொய் சொல்லத் துணியவில்லை அவள்.
“அவுரு இந்த ஊருக்கு ராசா. அவரைப் பத்தி இப்படியெழுதினாத் தலை உருண்டிடும். உன்னிட்ட இப்பவே ஒரு வார்த்தை சொல்லி வைக்கலாம்னு தான் வந்தோம். போய் இனிமேலாவது ஜாக்கிரதையா நடந்துக்க” என்று மிரட்டியது முதலில் ஒலித்த பழைய குரல். அவள் பதில் பேசாமல் சைக்கிளில் ஏறிப் பெடலை மிதித்தாள். ஊர் எல்லையில் போய்த்தான் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளால். வீட்டுக்குப் போய் அம்மாவிடம் கூட இதை அவள் கூறவில்லை. கூறவேண்டுமென்றும் அவளுக்குத் தோன்றவில்லை.
தாமரைக் குளத்திலும் அக்கம் பக்கத்திலும் இருந்த, ஆறு, ஏழு கோழிப் பண்ணைகளை வடமலைப் பிள்ளைதான் பாதுகாத்துப் பராமரிப்பதாகப் பேர் செய்து சர்க்காரிடம் உதவிப் பணம் வாங்கிக் கொண்டிருந்தார். சுகுணா எழுதியிருந்த ரிப்போர்ட்டின் பயனாக இந்த ஏழு கோழிப் பண்ணைகளையும் உடனே நிறுத்தி விடுமாறும் இனிமேல் அரசாங்க உதவித் தொகையை இவற்றிற்கு அளிப்பதற்கில்லை என்றும் ஐந்தாரு நாளில் வடமலைப்பிள்ளைக்குப் பாதகமாக மேலேயிருந்து உத்தரவு வந்துவிட்டது. ஏற்கெனவே புகைந்து கொண்டிருந்த பிள்ளைவாள் இப்போது கனன்று சீறத் தொடங்கிவிட்டார். இறுதியில் வடமலைப்பிள்ளை எரிமலையானார். பஞ்சாயத்துத் தலைவரும், கிராம முன்சீப்பும் அந்த எரிமலைக்குச் சீற்ற மூட்டினார்கள். சுகுணாவுக்கு இப்போது விரோதிகள் அதிகமானார்கள். அலுவலகத்தின் உள்ளேயும் விரோதம், வெளியேயும் விரோதம்.
“இந்த பட்டுப்பூச்சியை எப்பாடு பட்டாவது இங்கிருந்து சிறகைப் பிய்த்துப் பறக்க விடாமல் திருப்பி அனுப்பிட வேண்டும்” என்று பிள்ளை, முன்சீப், பஞ்சாயத்துத் தலைவன் மூன்று பேரும் சேர்ந்து ஒரு கூட்டாக முயன்றார்கள். ஆனால் அது அவர்களுக்கு அவ்வளவு இலேசாக முடிகிற காரியமாகப் படவில்லை. சுகுணா தங்களிடம் வகையாக மாட்டிக் கொள்கிற சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் அவள் என்ன செய்கிறாள், எங்கே போகிறாள் என்று கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தார்கள். சுகுணா தவறியும் கூடத் தவறு செய்யாமல் கவனமாக இருக்கும் போது அவர்கள் எப்படி அவளை மாட்டி வைக்க முடியும்? பழி சுமத்த வேண்டும் என்று கங்கணம் கட்ட முயல்கிறவர்களுக்குப் பழியைப் படைக்கவா தெரியாது? அவர்கள் கிண்டலாகப் பேசியது போலன்றி நிஜமாகவே அவள் பட்டுப் பூச்சியாகத்தான் இருந்தாள். தன்னை யழித்துக் கொண்டே பிறருக்கு மேன்மையைக் கொடுக்கும் பட்டுப்புழுவைப் போல் சேரியிலும், தெருக்களிலும், மென்மையான நற்பணிகளைப் புரிந்து கொண்டே தன் சிரமங்களைப் பொருட்படுத்தாமல் அந்தக் கிராமத்தின் வருத்தங்களுக்கு இடையே அவற்றைப் பொறுத்துக் கொண்டு இருந்தாள் அவள். அவளுடைய கைகள் முனைந்து முயன்ற இடமெல்லாம் அந்தக் கிராமத்தில் நிறைய நல்ல காரியங்கள் நடந்தன. ஆனால், வடமலைப் பிள்ளையின் ஆக்ரோஷம் சிறிதும் தணியாமல் உள்ளேயே கனன்று கொண்டிருந்தது. அவர் அவளைக் காலை வாரிவிடச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.
கார்த்திகை மாதத்தின் நடுவிலே மழை பெய்து கொண்டிருந்த ஒருநாள் கன்னிகாபுரம் முதியோர் கல்வி நிலைய ஆண்டு விழாவுக்குப் போயிருந்த சுகுணா இரவில் அங்கேயே தங்கும்படி நேர்ந்து விட்டது. சாயங்காலம் சுமாராக இருந்த மழை, இரவில் பெருமழையாக ஓங்கி வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. எனவே ஊர் திரும்பும் எண்ணத்தைக் கைவிட்டு ரகுராமனுடைய ஏரித் திடலுக்குப் போய் அவருடைய தாயாரோடு தங்கி விட்டாள் அவள். திட்டத்தோடும் நேரக் கட்டுப்பாட்டுடனும் அந்த விழா முடிந்திருந்தால் மழைக்கு முன்னாலேயே அவள் வீடு திரும்பியிருக்க முடியும். முதியோர் கல்வி நிலைய விழா என்பதிலுள்ள முதுமையை விழாவுக்கே உரியதாக்கி விட்டாற் போல் மெல்ல மெல்ல ஏற்பாடுகள் தளர்ந்து நடந்தன. மாலை ஐந்து மணிக்கு விழா என்று அழைப்பிதழ் அச்சிட்டு விட்டு நேரிலும் போய்ச் சொல்லியும் வற்புறுத்தித் தலைவராக ஏற்பாடு செய்திருந்த பிரமுகரொருவர் ஆறரை மணிக்குத்தான் விழா நடக்கிற இடத்துக்கே வந்து சேர்ந்தார். பழைய வழியிலும் ஒட்டாமல் புதிய வழியிலும் அதிக ஆதரவின்றி இப்படிப்பட்ட சமூகப் பொது விழாக்களை ஓர் இந்திய நாட்டுக் கிராமத்தில் நடத்துவதைப் போலச் சிரமமான காரியம் வேறு எதுவுமே இருக்க முடியாது. புறக்கணிப்புகளையே இலட்சியம் செய்யாமல் துணிந்து புறக்கணிக்கிற தைரியசாலியால் அது எளிதாக முடியும்.
ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் நடந்து முடிந்திருக்க வேண்டிய அந்த விழா இரவு ஏழரை மணிக்குத் தான் தொடங்கியது. முடிவதற்கு ஒன்பதரை மணி ஆகிவிட்டது. மழையும் பிடித்துக் கொண்ட பின் அந்த அகாலத்தில் காட்டாறுகள் குறுக்கிடும் சாலை வழியே இருளில் எப்படிப் புறப்பட முடியும்? எனவே தான் தவிர்க்க முடியாதபடி கன்னிகாபுரத்தில் அன்று இராத்தங்கல் நேர்ந்தது சுகுணாவுக்கு. சமூக சேவை என்றால் இப்படி எத்தனையோ அசௌகரியங்கள் இருக்கும் என்பதை அவளும் அறிவாள். ஆனாலும் இரவில் வெளியூரில் தங்குவதை அவள் மனம் விரும்பவில்லை. அவள் விரும்பாத அந்தச் செயலை அன்று அவளே செய்யும்படி நேர்ந்துவிட்டது. எத்தனையோ முறை அங்கு வந்து ரகுராமனோடு பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்பியிருக்கிறாள் அவள். ஆனால் இரவில் தங்கியதில்லை. திரும்ப முடியாத தொலைவிலுள்ள ஊருக்குச் சுற்றுப் பயணமாகப் போனாலொழிய அநாவசியமாக வெளியூரில் இரவுத் தங்கல் வைத்துக் கொள்ள கூடாதென்று அம்மா உத்தரவு போட்டிருந்தாள் அவளுக்கு. அம்மாவின் உத்தரவை முடிந்த மட்டில் அவளும் கடைப்பிடித்து வந்தாள்.
அன்றும் கன்னிகாபுரத்தில் ஆண்டு விழா முடிந்ததும் இரவு எவ்வளவு நாழிகையானாலும் திரும்பி விடுவதென்று தான் அவள் போயிருந்தாள். கன்னிகாபுரத்துக்கும், தாமரைக் குளத்துக்கும் ஏழே மைல் தான். சைக்கிளில் வர ஒரு மணி நேரம் கூட ஆகாது. ஆனால், மழை பெய்து விட்டால் காட்டு ஓடைகள் எல்லாம் உடனே பெருக்கெடுத்து விடும். ஏழு மைலுக்குள் இருபது காட்டு ஓடைகளுக்கு குறைவில்லை. ஆகவே தான் அன்றிரவு அவள் ரகுராமன் வீட்டில் தங்கினாள். இருட்டிலும் மழையிலும் பயணம் செய்வதற்கு வேறு வழி எதுவும் அவளுக்குப் புலப்படவில்லை. மறுநாள் அதிகாலையில் அவள் கன்னிகாபுரத்திலிருந்து புறப்பட்டுத் தாமரைக் குளத்துக்கு வந்துவிட்டாள்.
திரும்பிய தினத்தன்று காலை பத்து மணிக்கு அவள் தனது சேவாதள வேலையாகப் பஞ்சாயத்துப் போர்டு ஆபீசுக்குப் போக வேண்டியிருந்தது. அவள் அங்கே போய்ச் சேர்ந்த போது பஞ்சாயத்து அலுவலகத்தில் வடமலைப் பிள்ளை, கிராம முன்சீப், பஞ்சாயத்துத் தலைவர் மூன்று பேருமே இருந்தார்கள். அவளைக் கண்டதும் ‘வாருங்கள்’ என்று கூட மரியாதைக்கு ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்கள். வடமலைப்பிள்ளை அவளைப் பார்த்து ஒரு தினுசாகச் சிரித்தார். மற்ற இரண்டு பேரும் அவளைப் பார்த்து “பட்டுப்பூச்சி வந்திருக்கிறது” - என்று அவள் காதிலும் கேட்கும்படி சில்லறையான வார்த்தைகளை விஷமமான குரலில் கூறினார்கள். சுகுணா சீற்றத்தோடு பதில் கூறலானாள்: - “ஐயா! தயவு செய்து நீங்கள் பிறரிடம் மரியாதையாகப் பேசுவதற்குப் பழகிக் கொள்ளுங்கள். மரியாதை தந்துதான் பிறரிடமிருந்து மரியாதை வாங்க வேண்டும்.”
பேசும் போது ஆத்திரத்தில் சுகுணாவின் உதடுகள் மேலும் சிவப்பேறித் துடித்தன.
“உனக்கு மரியாதை ஒரு கேடா? ஒவ்வொரு நாள் இரவில் ஒவ்வொரு ஊர்! கன்னிகாபுரத்தில் அந்த நொண்டிப்பயல் ரகுராமன் கொஞ்சம் பசையுள்ள ஆள். நீ அவனைப் பிடித்துக் கொண்டிருப்பது பிரயோஜனமான காரியம் தான். கிராம சேவையெல்லாம் இப்போது அந்த நொண்டியின் குடிலுக்குள் தான் நடக்கிறது போலிருக்கிறது” - என்று வடமலைப்பிள்ளை தொடங்கிய போது சுகுணாவுக்கு தன் தலையில் பேரிடி விழுந்தது போல் இருந்தது. உலகத்தில் இத்தனை விஷம் கக்குகிற மனிதர்களுமா இருக்கிறார்கள்? அவளுக்கிருந்த கோபத்தில் அந்த மூன்று பேரையும் பஞ்சாயத்து அலுவலகத்தோடு சேர்த்து நொறுக்கியிருப்பாள். ஆனால் செய்யவில்லை. தானே அவசரப்பட்டு நிதானமிழந்தால் தன் பக்கம் நியாயம் நலிந்து பலவீனமாகப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டு அவள் பேசாமல் வீடு திரும்பினாள். வீட்டுக்குள் நுழைந்த போது அழுதாற் போல் இருந்த அவள் முகத்தைப் பார்த்து தாய்க்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்னடீ? உடம்புக்கு என்ன? ஏன் என்னவோ போலிருக்கிறாய்” - என்று வரவேற்ற தன் அம்மாவின் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள் சுகுணா. எவ்வளவோ நெஞ்சழுத்தக் காரியான பெண் தனக்கு முன் முதல் முறையாகப் பொங்கிப் பொங்கி அழுததைப் பார்த்த போது அம்மாவுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. என்னவோ? எது நடந்ததோ? என்று பதறிப் போய்விட்டாள்.
“என்னடீ? என்ன நடந்ததென்று தான் சொல்லேன்? இப்படி அழுதால் நான் என்ன தெரிந்து கொள்ள முடியும்?”
பதில் ஒன்றும் சொல்லாமல் குமுறிக் குமுறி அழுதாள் சுகுணா. இது நடந்த நாளுக்கு மறுநாள் நண்பகல் கழிந்து சிறிது நேரத்துக்கெல்லாம் சுகுணாவின் வீட்டு வாசலில் ஒரு மாட்டு வண்டி வந்து நின்றது. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அந்த வண்டிக்குள்ளேயிருந்து கன்னிகாபுரம் ரகுராமனின் தாயார் கீழே இறங்கினாள். உள்ளே வராமல் வண்டியிலிருந்து கீழே இறங்கின வேகத்தில் வாயிற்படியில் நின்று கொண்டு, “அடி பெண்ணே! உனக்கு மானம் ரோஷம் இருந்தால் நீ அந்த ஊர்ப் பக்கம் வரப்படாது. ஊரெல்லாம் என் பிள்ளை தலை உருளுகிறது. நீ நல்லவளாவே இருக்கலாம். ஆனால், ஊர் வாயை மூட உலை மூடி இல்லை. உனக்குக் கோடி புண்ணியமாகப் போகிறது. இனிமேல் அந்தப்பக்கம் வராதே. ஊருக்கே தெய்வம் போலப் பேரும் புகழுமாக இருந்தான் என் பிள்ளை. கால் நொண்டியானாலும் எல்லாரும் மெச்சும்படி இருந்தான். நீ அதையும் நொண்டியாக்கிப் போட்டுட்டே” - என்று இரந்தாள் அந்த அம்மாள். சுகுணாவின் அம்மா அவளருகே சென்று, “உள்ளே வந்து விவரமாகச் சொல்லுங்களம்மா! என்ன நடந்தது?” - என்று நிதானமாகவே அந்த அம்மாளை அழைத்துக் கேட்டாள்.
“ஒண்ணும் நடக்கலை. உங்கள் பெண் மகாலட்சுமி மாதிரி இலட்சணமாக இருக்கிறாள். அவளுக்கு மனசும் நேர்மையாக இருக்கிறது. அதுவே ஊருக்கும் பொறாமை. உங்கள் பெண்ணுக்கு இந்த உத்தியோகம் வேண்டவே வேண்டாம். பேசாமல் இன்னும் பத்து வருஷம் அப்பளம் வடாம் இட்டுச் சேர்த்தாவது நல்ல இடமாகப் பார்த்துக் கலியாணம் பண்ணி வையுங்கள். மானமாக வாழ முடியாத உத்தியோகமெல்லாம் பெண்களுக்கு வேண்டாம்” - என்று சீற்ற வேகம் தணிந்த குரலில் சொல்லிக் கொண்டே, போகும் போது விடைபெறவும் செய்யாமல் வண்டியில் ஏறிவிட்டாள் கன்னிகாபுரத்து அம்மாள். வண்டி மறைந்ததும் சுகுணாவின் அம்மா உள்ளே வந்து சற்றே கடுமை மாறாத குரலில் சுகுணாவைக் கேட்டாள்.
“இதெல்லாம் என்ன நாடகமடீ பெண்ணே?”
“வாழ்க்கை நாடகம்” - என்று வெறுப்பாகப் பதில் வந்தது சுகுணாவிடமிருந்தது.
“எனக்கு அப்பவே தெரியுமடிம்மா! உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் பார்க்க வேண்டும். மனம் குறுகினவர்கள் இருக்கிற இடத்திலே ஒழுங்காக நடந்து கொண்டாலும் தப்புத் தான்! ஒழுங்காக நடக்காவிட்டாலும் குறைதான். ஒழுங்காகவும் கண்டிப்பாகவும் நடந்ததால் அப்படி நடப்பதும் குறைதான்.”
“நீ ஆயிரம் தடவை சொன்னாலும் இதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் அம்மா. நான் செய்தது தப்புத்தான். இங்கே மனம் விரிந்தவர்கள் இல்லை. நியாயமாக நடந்து கொள்வதை விடத் தவற்றை அநுசரித்துப் போகிறவர்கள் தான் இன்றைய மனிதர்களுக்குத் தேவையாயிருக்கிறது. இந்தத் தலைமுறையில் எல்லார் தப்புக்களையும் கண்டும் காணாத மாதிரி இருந்துவிட்டால் ‘நல்லவள்’ என்பார்கள். தப்பைத் துணிந்து தப்பென்று சொன்னால் அப்படிச் சொன்னவளைக் கெட்டவளாக்கிக் காட்டி விடுவார்கள். அப்பப்பா! பிறருக்கு அவதூறு உண்டாவதில் எத்தனை ஆசை இவர்களுக்கு?” - என்று மனம் நொந்து போய்த் தன் தாயிடம் அலுத்துக் கொண்டாள் சுகுணா.
இந்த மாதிரிச் சிறிய ஊர்களில் அவதூறுதான் பொழுது போக்கு! வம்புதான் இங்கெல்லாம் நாவுக்குச் சுவையான பலகாரம். வம்பு பேசுவதும் புறம் பேசுவதும் பாவம் என்று சொல்லிக் கொண்டே அவற்றை நாத்தழும்பேறப் பேசுவதன் மூலம் அந்தப் பாவத்தையே செய்து கொண்டிருப்பார்கள்.
அன்றைக்குத் தாமரைக் குளத்திலிருந்து வெளியேறிய மெயில் பையில் சுகுணாவின் ராஜிநாமாக் கடிதமும் இருந்தது. மேலதிகாரிக்குத் தனியே எழுதிய தபாலில் தன்னை எப்படியாவது ஒரு வாரத்துக்குள் அந்தப் பதவியிலிருந்து விலகல் பெறுமாறு ரிலீவ் செய்துவிட்டால் தனக்கு மிகவும் நல்லதென்று சுகுணா கேட்டிருந்தாள். ஆயிரம் பேர் இதே வேலைக்கு மனுப்போட்டு முந்திக் கொண்டு நிற்கும் போது மேலதிகாரிகள் ராஜிநாமாவை மறுக்கவா செய்வார்கள்?
சுகுணாவின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்ட இரண்டு மூன்று நாளில் புதிய சேவாதளத் தலைவி தாமரிஅக் குளத்துக்கு அனுப்பப்படுவாள் என்றும் அவளிடம் ‘சார்ஜ்’ கொடுத்துவிட்டுச் சுகுணா ரிலீவ் ஆகலாம் என்றும் சுகுணாவுக்கு மேலதிகாரியிடமிருந்து தபால் வந்திருந்தது. தாமரைக் குளத்துக்குப் பிரமுகர்கள் சிறகு ஒடித்து அனுப்புவதற்கு புதிய பட்டுப்பூச்சி ஒன்று பறந்து வருகிறதே என்று சுகுணா தன் மனதுக்குள் அநுதாபப்பட்டு வரப்போகிற துர்ப்பாக்கியவதிக்காக வருந்தினாள். பட்டினத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக கன்னிகாபுரம் போய் ரகுராமனை ஒரு முறை பார்த்துச் சொல்லிவிட்டு வரலாமா என்று சுகுணா அம்மாவைக் கேட்ட போது, “கண்டிப்பாகக் கூடாது பெண்ணே! மறுபடியும் வம்பு வளர்க்காதே?” - என்று அவளுடைய அம்மா அதற்கு மறுத்துவிட்டாள்.
ஒவ்வொரு நாளும் பட்டினம் போகிற பாசஞ்சர் வண்டி இரவு ஏழரை மணிக்குத் தாமரைக் குளத்துக்கு வருகிறது. சுகுணா அங்கு வந்து இறங்கிய நாளைப் போலவே அன்றும் பௌர்ணமி தான்! சரத்காலத்து வானத்தின் மங்கலில் சந்திரன் மென்மையழகோடு நளினமாகத் தோன்றினான். மஸ்லின் துணியினால் போர்த்திய முகம் போல அந்த மழை நிலவு அழகாக இருந்தது. தென்னை மரங்களும், நீலமலைத் தொடரும், தாமரைக் குளம் ஊரும் அன்று போலவே பாற்கடலில் முழுகியெழுந்தவை போல் கொள்ளையழகோடு தோற்றமளித்துக் கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் சொல்லிற் சொல்ல வராததாகிய ஏதோ ஒரு சோகம் இன்று மட்டும் வந்து தேங்கிக் கொண்டாற் போல் சுகுணாவுக்குத் தோன்றியது. தன்னை விட்டுப் பிரியப் போகிற பொருளைக் கடைசியாகப் பார்ப்பது போலச் சுகுணா ஸ்டேஷனிலிருந்து ஊரைப் பார்த்தாள். முதல் தடவை வந்திறங்கிய அன்றும் அதே பழைய நிலையில் மனத்துக்குள் கொண்டு வந்து கற்பனை செய்ய முயன்றாள்.
மாட்டு வண்டியிலிருந்து இறக்கிய மூட்டை முடிச்சு சாமான்களை இரயிலில் ஏற்றுவதற்கு வசதியான இடத்தில் வைக்கச் செய்து மேற்பார்த்துக் கொண்டிருந்தாள் அவளுடைய அம்மா. தாமரைக்குளச் சேரியைச் சேர்ந்த பத்துப் பன்னிரண்டு அரிசனச் சிறுவர்கள் சுகுணாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். ஊரிலிருந்து வேறூ யாரும் அவளை வழியனுப்புவதற்கு வரவில்லை. வாழ்க்கையே இப்படித்தான் போலிருக்கிறது. ஆரம்பத்தில் வரவேற்க வந்தவர்கள் கடைசியில் வழியனுப்புகிறவரை கூட வருவார்கள் என்பது என்ன நிச்சயம்?
அவளோடு வேலை பார்த்த கிராம சேவகிகள் கோமளாவோ, பரிமளாவோ ஒருத்தியும் ஸ்டேஷன் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லை. பட்டினத்திலிருந்து வந்த வண்டியில் பார்சல் எடுத்துக் கொண்டு புறப்பட்ட நியூஸ் ஏஜெண்டு ராமலிங்க மூப்பனார், ‘இந்த அம்மா ஊருக்குத் திரும்பிப் போறாங்க. நாளையிலிருந்து எல்லாப் பத்திரிகைகளும் ஓரோரு பிரதி விற்பனை குறைந்து விடுமே!’ - என்று மனத்துக்குள் சொந்த நஷ்டத்தை வியாபாரக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். சொந்த நஷ்டம் தான் ஒவ்வொருவருக்கும் கவலை. மற்றவர்களுடைய நஷ்டத்தைப் பற்றி யாராவது கவலைப்படுவார்களோ!
“மறுபடியும் எங்க ஊருக்குத் திரும்ப வருவீங்களா அக்கா?” - என்று அழுகை கலந்த குரலில் சுகுணாவைக் கேட்டாள் ஓர் அரிசனச் சிறுமி.
அந்தச் சிறுமிக்கு வருவேன் என்று பதில் சொல்வதா? வரமாட்டேன் என்று பதில் சொல்வதா? அல்லது இரண்டையுமே சொல்லாமல் சும்மா இருந்துவிடுவதா? - என்று சுகுணாவுக்குப் புரியவில்லை. அவள் ஒன்றுமே சொல்வதற்குத் தோன்றாமல் அந்தச் சிறுமியைப் பார்த்துக் கண்கலங்கி நின்றாள்.
ஸ்டேஷனில் புங்கமரத்துக் காற்றுச் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. பக்கத்திலிருந்த தந்திக் கம்பங்களிலிருந்து சோ என்ற ஓசை இடைவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தது.
திடீரென்று இருந்தாற் போலிருந்து ஏதோ நினைத்துக் கொண்டவள் போல் ஸ்டேஷன் மாஸ்டரிடம் போய், ‘கம்ப்ளெயிண்ட்’ புத்தகம் கேட்டாள் சுகுணா.
அவர் தயங்கினாற் போல் அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, கம்ப்ளெயிண்ட் புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார். அவள் அந்தப் புத்தகத்தில் முத்து முத்தாகக் கீழே கண்டபடி எழுதலானாள்:
“தாமரைக்குளக் கிராமம் மிக அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இலட்சியம், நேர்மை, தொண்டு இது மாதிரி நினைவுகளோடு யாராவது இங்கு வந்தால் தயவு செய்து அடுத்த இரயிலிலேயே புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவிடுவது நல்லது. இந்தக் கிராமம் தங்கச் சுரங்கம். ஆனால் இதிலிருந்து தங்கத்தைத் தோண்டி எடுக்க முடியாமல் மனித ஆசாபாசங்கள் என்கிற கரி இதன் மேல் மூடியிருக்கிறது. தாமரைக்குளம் மட்டுமல்ல; பாரத நாட்டின் ஒவ்வொரு கிராமமும் கரி மூடிய தங்கச் சுரங்கமாகவே இருக்கிறது. கரியை நீக்கித் தங்கத்தை எடுக்க முயல்கிறவர்கள் தங்கள் கால்கள் ஒடியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.”
என்று எழுதி முடித்தாள் சுகுணா. - ‘இப்படிக்குக் கால்களை ஒடித்துக் கொண்ட ஓர் அபலை’ - என்று கீழே கையெழுத்தும் போட்டு ஸ்டேஷன் மாஸ்டரிடம் அதைத் திருப்பிக் கொடுத்தாள்.
இவர் அதைப் படித்துவிட்டுச் சிரித்தார்.
“என்ன இப்படி எழுதியிருக்கிறீர்கள்?”
“பின் வேறு எப்படி எழுதச் சொல்கிறீர்கள்?”
“இரயில்வே கம்ப்ளெயிண்ட் புஸ்தகத்தில் ஏதோ சம்பந்தமில்லாததை எழுதி...?”
“சம்பந்தமில்லை என்று யார் சொன்னது சார்! இந்த ஊர்க்குத் தொண்டு செய்யும் ஆசையோடு என்னைப் போல் பேதைகள் யாராவது வந்தால் இரயிலிலிருந்து இறங்கியதுமே நீங்கள் இதைக் காட்டிவிட்டு அடுத்த இரயிலுக்கு உடனே டிக்கெட்டும் கொடுத்து விடுங்கள்” என்று அவள் கூறியதைக் கேட்டு ஸ்டேஷன் மாஸ்டர் மறுபடியும் சிரித்தார்.
“நீங்களாவது இப்படி எழுதியிருக்கிறீர்கள். சில பேர் இந்த ஊருக்கு ஸ்டேஷன் இருப்பதையே பெரிய கம்ப்ளெயிண்டாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன்” என்று அந்தப் பட்டிக்காட்டு ஸ்டேஷன் மாஸ்டராகத் தாம் வந்து மாட்டிக் கொண்ட அவஸ்தையைச் சொல்லி ஆதங்கப்பட்டுக் கொண்டார் அவர்.
சுகுணா போக வேண்டிய இரயில் வந்தது! சாமான்களை ஏற்றிவிட்டு அம்மாவும் பெண்ணும் ஏறிக் கொண்டார்கள். கருப்பு நிறக் கிராதியின் அருகே அதன் நிறத்துக்கும் தங்கள் உடலுக்கும் அதிக வித்தியாசம் தெரியாதபடி சேரிக் குழந்தைகள் நின்று கொண்டு அவளை ஏக்கத்தோடு பார்த்தன.
கருப்புத் தகரக் கிராதியின் இடைவெளியில் ஒவ்வொரு குழந்தை முகமாகத் தெரிவதைச் சுகுணாவும் பார்த்தாள். சாரு, மீனு, குப்பன், கருப்பண்ணன் - ஒவ்வொரு குழந்தைகளின் பெயரும் அவளுக்கு நினைவு வந்தது.
“மறுபடி இங்கே திரும்ப வருவீங்களா அக்கா?” சாரு மறுபடியும் இரயிலில் சன்னலோரமாக உட்கார்ந்திருந்த சுகுணாவுக்குக் கேட்கும்படி கீழே கிராதியருகேயிருந்து கத்தினாள்.
இப்போதும் அவள் சும்மா இருந்தாள். அந்தச் சிறுமிக்கு வருவேன் என்று பதில் சொல்வதா? வரமாட்டேன் என்று பதில் சொல்வதா? என்ன சொல்வது? எப்படிச் சொல்வது?
இரயில் புறப்பட்டது. பெரிதாக இரயில் கரி ஒன்று வந்து விழியில் புகுந்து தாமரைக்குளத்தை அவள் பார்வையிலிருந்து மறைத்தது.
“ஜன்னலை மூடு! பனியடிக்கிறது” - என்றாள் அம்மா. சுகுணா ஜன்னலைப் போட்டாள்.
அந்த இரயில் சுகுணா என்னும் அழகிய பட்டுப்பூச்சியோடு தாமரைக்குளத்தைக் கடந்து பறந்தது. இரயிலில் எதிரே பேப்பர் வைத்துக் கொண்டிருந்தவரிடமிருந்து வாங்கி மேலோட்டமாகப் பார்க்கலானாள் சுகுணா.
அவளுடைய பட்டமளிப்பு விழாவில் பேசிய அதே பேரறிஞர் வேறு ஒரு பல்கலைக் கழக விழாவில் பேசியிருந்த பேச்சு அன்றைய பேப்பரில் வந்திருந்தது.
“படிப்புப் பலபேருடைய அகக்கண்களைத் திறந்து விடும் தூண்டுகோலாக அமைய வேண்டும்! கிராமங்களுக்குப் போய்ச் சமூக சேவை செய்ய வேண்டும்! கிராமங்களைப் பொன் கொழிக்கச் செய்ய வேண்டும்” - என்றெல்லாம் முன்பு போலவே அவர் பேசியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
முதலில் அவருடைய அகக்கண்ணை யாராவது திறந்து விட வேண்டுமென்று தோன்றியது சுகுணாவுக்கு. தங்களுடைய அகக்கண்களே சரியாகத் திறக்கப் பெறாதவர்கள் மற்றவர்களுடைய அகக்கண்களைத் திறக்க வருவதால் எவ்வளவு தொல்லைகள் ஏற்பட முடியும் என்பதை அவள் இப்போது அனுபவப் பூர்வமாக உணர்ந்துவிட்டாள். மேடை அறிவுரைகள் நடைமுறை வாழ்வைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக சீர்கேட்டைச் செய்து விடுவதும் இதனால் தானோ என்று சுகுணாவுக்குத் தோன்றியது.
அநுபவப்படாத மனத்துக்கு அனுபவப்படாத நாவிலிருந்து கிடைக்கும் உபதேசம் இரட்டைக் குருடர்கள் ஏதோ ஒன்றைக் காணத் தவித்தது போல ஆகிவிடுகிறது. இலட்சியங்கள் நினைக்கிறபடி நடப்பதில்லை. குறி வைத்து நடக்கும் போது பசுமையாய்த் தோன்றி அருகில் போனவுடன் பசுமையின்றித் தெரியும் சில மலைகளைப் போல வாழ்க்கையில் சில உயர்ந்த இலட்சியங்களும் எண்ணத்துக்கு வளமானதாகவும் நடைமுறைக்கு வறண்டதாகவும் மாறிவிடுகின்றன.
தாமரைக் குளத்தின் கடந்த கால அநுபவங்களில் இத்தகைய இலட்சிய முரண்பாடுதான் அவளுக்குத் தெரிந்தது. இரயில் போய்க் கொண்டிருக்கிற வேகம் அந்தப் பொய்ம்மை நோக்கத்திலிருந்து மெய்யுணர்வு நல்கித் தன்னைப் பிரித்துக் கொண்டு போகிற அநுபவத்தின் வேகமாக அவளுக்குத் தோன்றியது. தாமரைக்குளம் அவளுடைய வாழ்க்கையின் இளமை வேகத்துக்கு ஒரு பாடமாயிருக்கலாம். இவ்வளவு விரைவில் அந்தப் பாடம் கிடைத்து வாழ்க்கையின் இலட்சியத்தைப் பற்றிய தனது சுறுசுறுப்பை அடக்கி விட்டதில் அவளுக்கு வருத்தமும் உண்டு. ஆனால் அது மிகச் சிறிய வருத்தம் தான். சுதந்திரம் பெற்ற நாட்டின் சின்னஞ்சிறு கிராமங்களில் பிறருடைய எண்ணங்களுக்குக் கூடச் சுதந்திரம் தர விரும்பாத முரட்டு மனிதர்கள் இன்னும் இருப்பது தவிர்க்க முடியாதுதான். தோற்றத்தினால் நாகரிகமாக இருக்கப் பழகி விட்டாலும் முரட்டுத்தனம் என்பது மனத்தை பொறுத்து இருக்க முடியும். தடித்தனம் என்று ஒரு குணம் உண்டே; அது தோற்றத்தினால் தடியாயில்லாதவனிடமும் உண்டு.
தாமரைக்குளத்தில் சுகுணாவுக்கு அபவாதம் ஏற்படக் காரணமாயிருந்த தாமரைக் குளத்துப் பிரமுகர்கள் யாவரும் தோற்றத்தினால் நாகரிகமானவர்கள் தாம். ஆனால் மனத்தினால் நாகரிகம் அடையாதவர்கள்.
‘அடிமைப்பட்டிருந்த நாட்டு மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விடலாம். ஆனால் மனத்தைச் சுதந்திரமாகவும், தன் நினைவோடு சிந்திக்கப் பழகுவதற்கு அடிமைத்தனம் நீங்கிய பின்னும் எத்தனையோ பல ஆண்டுகள் போராட வேண்டியிருக்கும். சில பல தலைமுறைகள் கூட ஆகலாம். இலட்சியமும் நல்லெண்ணமும் கொண்டவர்கள் அதுவரை காத்திருக்க வேண்டும் போலத்தான் தெரிகிறது. என்று எண்ணி எண்ணி மனம் புழுங்கினாள் அவள்.
இந்த மாதிரி எத்தனை எத்தனையோ சிந்தனைகள் இரயிலோடு போட்டி போட்டுக் கொண்டு சுகுணாவின் மனத்தில் ஓடிக் கொண்டிருந்தன. அவளுடைய அம்மாவோ தன் பெண்ணின் மனத்தில் ஓடும் இத்தகைய சிந்தனை ஓட்டங்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தூங்கத் தொடங்கியிருந்தாள். இரயிலின் நெருக்கடிக்குள்ளே மேலே ஏறிப் படுத்திருந்தவர்கள், கீழே உட்கார்ந்திருந்தவர்கள், ஒண்டிக் கொண்டிருந்தவர்கள், சாய்ந்து கொண்டிருந்தவர்கள், தொத்திக் கொண்டிருந்தவர்கள் எல்லாருமே தூங்குவதற்குத் தான் முயன்று கொண்டிருந்தனர். ஆழமான சுக நித்திரை அந்தப் பாஸ்ட் பாஸஞ்சர் வண்டியில் கிடைக்காதென்று தெரிந்திருந்தும் கிடைத்ததை அனுபவிக்க எல்லாருக்கும் ஆசையிருப்பதைக் காட்டிக் கொள்வது போல இரயில் பெட்டியில் தூக்கம் வந்து கவிந்திருந்தது. கிடைத்ததை வைத்துக் கொண்டு சமாளிப்பது என்கிற வாழ்க்கையின் பொது நிலையை இந்தக் காட்சியிலிருந்து எண்ணினாள் சுகுணா.
எதையும் அடையும் வேகமும், போட்டி பொறமைகளும் நிறைந்த இன்றைய வாழ்க்கையில், எதையும் ஆழமாக அறிந்து நிறைவாக அடைவதற்குக் காத்துக் கொண்டிருக்க முடியாது போல் தெரிந்தது. இரயில் பயணம் போல நடுவழியில் கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டுக் கிடைத்த இடத்தில் தூங்கிக் கிடைத்த வசதிகளை மட்டும் ஏற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டும். தனி ஆசைகள், தனி இலட்சியங்கள், மிகவும் கூராகச் சிந்திக்கிற மனம். இவைகளோடு தான் தேடியது கிடைக்கிற வரை மெல் வருத்தம் பாராமல் பசி நோக்கம் இன்றித் தூக்கமும் இல்லாமல், எதிர்த்து வருகிற தீமைகளையும் இலட்சியம் செய்யாமல் வாழ்வதற்குள் பொறுமை இழந்துவிட நேரும் என்று தோன்றியது அவள் மனத்தில். சிறிது நேரத்தில் உட்கார்ந்த படியே அவளும் கண் அயர்ந்தாள்.
பொது வாழ்க்கையில் இலட்சிய வாதிகளும் “இனி என்ன செய்வது?” என்று இறுதியாக அயர்ந்து விடுகிற நிலை போல் இருந்தது அவளுடைய தூக்கம். தூங்கியும் தூங்காமலும் அவள் மனமும் உடம்பும் அரை குறையாகச் சோர்ந்திருந்த அந்த நிலையில் கனவுகள் போல் எவை எவையோ அவளுக்குத் தோன்றுகின்றன. அவை மெய்யும் இல்லை. பொய்யும் இல்லை - ஏதோ தோன்றுகின்றன.
‘படிப்பினால் பிறருடைய அகக்கண்களைத் திறக்கும் புனிதமான பணியை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன்’ - என்று கூறிய அறிஞர் மைக் முன் நின்று கம்பீரமாகப் பேசும் கோலத்தில் அவள் கண்களுக்குத் தெரிகிறார். அவரிடம் ஏதேதோ கேள்வி கேட்க வேண்டுமென்று அவளுடைய உதடுகள் துடிக்கின்றன. ஆனால், அப்படிக் கேட்கவும் வரவில்லை.
“உத்தியோகம் பார்த்தால் மனம் விரிந்த ஊரில் நினைவும் நம்பிக்கைகளும் நிறைந்து மலர்ந்தவர்களிடையே பார்க்க வேண்டுமடி பெண்ணே!” - என்று அம்மா வந்து நின்று சிரித்துக் கொண்டே சொல்கிறாள்.
இந்தச் சில மாதங்களில் பழகிய இடங்கள், பழகிய மனங்கள், எல்லாம் நினைவுக்கு வருகின்றன. இரயில் சக்கரங்கள் ஓடும் பழகிப் போன போக்கு தடக் தடக் என்று இருளில் ஒலித்தபடியே தொடர்கிற ஓசை அந்தத் தூக்கத்திலும் நாம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை விடாமல் நினைவூட்டிக் கொண்டுதான் இருக்கிறது. இரும்பின் மேல் இரும்பு சுழன்று ஓடும் அந்த ஓசை விகாரமாயிருக்கலாம். ஆனால், அது ஓடுகிறது என்பது தான் அதன் இலட்சணம். உலகத்தின் கலகலப்பில் வேகமாக வாழலாம். ஆனால் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நினைவிருக்கும்படியாக வாழ வேண்டும். இல்லாவிட்டால் மந்தமாக ஏதோ நடக்கிறதென்ற நினைப்புதான் இருக்கும். பலருக்கு நினைவூட்டும்படி வாழ்வது வேண்டுமானால் பெருவாழ்வாயிருக்கலாம். ஆனால் தனக்கே நினைவில்லாதபடியாகவும் வாழக் கூடாது.
பட்டினத்தில் படித்துப் பட்டம் பெற்ற இளமையின் இலட்சிய ஆசையோடு கிராமம் சென்ற சுகுணாவின் கதை அவள் தாமரைக்குளத்திலிருந்து இரயிலேறியதோடு முடிந்து விடவில்லை. இந்த முடிவின்மையை இரண்டு விதமாகப் பிரித்துச் சொல்லலாம். அவள் கதை முடியவில்லை. அவளோடு மட்டும் முடியவில்லை - என்று சொல்லிவிட்டால் இரண்டு வகையான அர்த்தமும் கிடைத்துவிடும்.
வெள்ளை மனமும், மிக விரைவிலேயே இலட்சியத்துக்கு ஆசைப்பட்டுத் தவிக்கிற உணர்ச்சி வசமான எண்ணங்களும் உள்ள எந்தப் பெண்ணும் மனம் விரிவடையாத மனிதர்களிடையில் இத்தகைய அனுபவங்களைத்தான் அடைய முடியும். பொருளாதாரச் சூழ்நிலைகளும், படிப்பும் உலகத்தின் வளர்ச்சியைப் பற்றிய தெளிவான ஞானமும் நமது நாட்டுக் கிராமங்களில் அவை பதிகிறவரை தாமரைக் குளத்தைப் போன்ற சிறிய ஊர்களுக்குச் சமூக சேவை செய்யும் நோக்கத்தோடு எந்தப் பெண் சென்றாலும் அவளுக்கு இந்த முடிவுதான் ஏற்படும். குறுகிய மனம் படைத்த கிராமத்து மக்கள் வௌவாலைப் போன்றவர்கள். வௌவால் பறவையினமா, விலங்கினமா என்று தெரிந்து கொள்ளவிடாமல் பறவைக்குரிய பறக்கும் செயலையும், விலங்குக்குரிய பிற செயல்களையும் மேற்கொண்டிருப்பது போலப் புதுமையைப் புறக்கணிக்கவும் மனம் இன்றிப் பழமையை விட்டுவிடவும் விரும்பாமல் புதுமையில் விரைந்து பறப்பதும், பழமையின் இருளிலே தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதுமாக வாழ்கிறவர்களைப் புதிய தலைமுறையோடு சேர்ப்பதா, பழைய தலைமுறையோடு சேர்ப்பதா?
இப்படி வாழ்வது இன்றைய பாரத நாட்டிலே இரண்டுங்கெட்டதில்லை. எதையும் செய்யத் துணிய முடியாத நிலை என்றும் இதைச் சொல்லலாம். இரயிலையும்,, தினப் பத்திரிகைகளையும், வானொலிப் பெட்டிகளையும், கிராமங்களுக்குள்ளே நுழைய வசதி செய்து கொடுத்து விட்டதனால் மட்டும் இந்த நாட்டு மக்களின் மனத்தில் சுதந்திரமான உணர்வுகளையும், புதிய அறிவுரைகளையும் பரப்பி விட்டதாக நாம் பெருமைப்பட முடியாது. இரயிலும், காரும், தினப்பத்திரிகைகளும், வானொலிப் பெட்டிகளும், சௌகரியமான வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு வேண்டிய வசதிகள் தாம். அவைகளால் சுகமான அநுபவங்களை அதிகமாக்க முடியலாம் என்பதை ஏற்க முடியும். ஆனால், அவைகளே பண்பாட்டையும், நேர்மையையும் வளர்க்க மனங்களை விரிவாக்கி விட முடியும் என்பதை முழுமையாக ஒப்புக் கொள்ள முடியாது.
உடம்பில் நல்ல இரத்தம் சேர்வதற்குச் சத்துள்ள தூய உணவு தேவைப்படுவது போலச் சத்துள்ள சிந்தனைகளைக் கிராமங்களுக்கு அனுப்ப வேண்டும். தினப்பத்திரிகைகளும், இரயிலும், காரும், வானொலிப்பெட்டியும் இந்தச் சிந்தனைகளை நிறையச் சுமந்து கொண்டு கிராமங்களுக்குப் போவதாகச் சொல்ல முடியாது. ஓரளவு கொண்டு போவதாகக் கூறுவதை மறுக்கவும் முடியாது.
எவளோ ஒரு கேடுகெட்ட நட்சத்திரத்திற்கு சுவிட்ஸர்லாந்தில் குழந்தை பிறந்த சேதியைத் தலைப்பில் போட்டு ஏந்திக் கொண்டு கிராமத்துக்குப் போகும் நாளிதழும், மாடி வீட்டு மரகதத்தைக் கோடிவீட்டுப் பையன் காதலித்த தொடர் கதையோடு கிராமத்துக்குப் போகும் வாரப் பத்திரிகைகளும், எந்த அறிவை வளர்த்து விட முடியும்?
தாய்மொழிக்கு நல்ல நிலையளிக்காத தாய்நாட்டு வானொலிப் பெட்டியும், தினம் கவிழ்ந்து கொண்டிருக்கிற நேர்மையற்ற இரயிலும், ஒருவகையில் வசதிகள் தாம். அவைகளே பண்பாடுகள் ஆவதில்லை. பண்பாடுகளை வளர்ப்பதும் இல்லை. வாழ்க்கையை வேண்டுமானால் வசதி நிறைந்ததாக ஆக்கலாம். புதுமைகள் நிறைந்ததாகவும் மாற்றலாம்.
தாமரைக்குளத்திலே சுகுணாவின் ஆர்வமும் தோற்றுப் போனதற்கு அன்று அவளுடைய பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசிய பேரறிஞர் மட்டும் காரணமில்லை. அவருடைய பேச்சும் காரணமில்லை. அவருடைய பேச்சைக் கேட்டு ஆவேசமும் துடிப்பும் அடைந்த சுகுணாவின் இளமை மனமும் காரணமில்லை. அந்தப் பேரறிஞருடைய மேடைப் பேச்சு அபினியைப் போல் மயக்க மூட்டுவதாயிருந்தது. பலரைக் கெடுத்துவிட்டதாகச் சுகுணா நினைத்தது தனக்கு ஏற்பட்ட மாறுபாடுள்ள அநுபவத்தினாலும் இப்போதுதான் அவர் மேற்கொண்ட ஆத்திரத்தினாலுமே ஆகும். அந்த அறிஞர் தாம் கூறிய இலட்சியங்ன்கள் நல்லவை என்று சொல்லியபோது அவை நடைமுறையில் அசாத்தியமானவை என்பதையும் சேர்த்துத்தான் கூறியிருந்தார். அவர் முதலில் கூறிய இலட்சியங்களை மட்டும் மனத்தில் பதித்துக் கொண்டு விட்ட சுகுணா அவற்றின் சாத்திய அசாத்தியங்களைப் பற்றியும் அவர் கூறியதை நினைக்கவே இல்லை. நம்பிக்கை மயமாக இருந்த அவள் மனம் அந்த இளமையில் சாத்தியம் என்பதைப் பற்றித்தான் அதிகமாக நினைத்தது. அசாத்தியங்களைப் பற்றிச் சிறிதளவும் நினைக்கவே இல்லை. பக்குவப்படாத இளம் மனங்களுக்கு எதைப் பற்றியும் நாலைந்து கோணத்தில் மாற்றி மாற்றிச் சிந்திக்கத் தோன்றாது. தனக்கு ஏற்றதும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதுமான ஒரே கோணத்தில் மட்டும் ஒன்றைப் பற்றிச் சிந்திப்பது மிகவும் பயங்கரமானது. ஒரு நாடு சிந்தனையினால் அடிமைப்படத் தொடங்கிவிட்டது என்பதற்கு முதல் அடையாளம் இப்படி ஒரே திசையில் சிந்திக்கப் பழகிக் கொள்வதுதான். சக்கரம் போல் எல்லாத் திசையிலும் சுழன்று சுழன்று அழுத்திப் பதிகிற சிந்தனையோட்டம் வேண்டும். மார்க்ஸில் இருந்து இங்கர்சால் வரையில் சிந்தனைச் சுதந்திரத்தைத்தான் உலகத்துக்கு வற்புறுத்தினார்கள். எடுத்துக்காட்டி விளக்கினார்கள்.
“நாம் சுய பலத்தோடும் சுய சிந்தனையோடும் தனித்து வாழ்கிறோம்” - என்று பெருமைப்படுவதற்குக் காரணமாக ஒரு செயல் வேண்டுமானால் சுதந்திரமான சிந்தனைகளை இந்த நாட்டில் வளர்க்க வேண்டும். பழமையில் அழுந்தி நின்ற இடத்திலேயே நின்று விடாமல் புதுமை வேகத்தில் தறிகெட்டு ஓடியும் விழாமல், சுதந்திரமாகவும், நிதானமாகவும் சிந்திக்கிற மனங்களை பயிற்றி வளர்க்க வேண்டும். அப்படி வளர்ப்பதில் ஓரளவாவது வெற்றி பெற்ற பின்புதான் சுகுணாவைப் போன்றவர்கள் இந்தப் பாரத நாட்டில் உயிர்த் துடிப்புள்ள கிராமங்களில் நிர்ப்பயமாகப் போய் இருந்து கொண்டு சமூகத் தொண்டு புரிய முடியும். அதுவரை வேறு தொண்டுகளை அவள் செய்ய முடியாதென்றாலும் இந்த நாட்டின் மங்கலப் பெண் குலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் செய்து வரும் புனிதமான காரியம் ஒன்றை அவளாலும் செய்ய முடியும்! அந்தப் புனிதமான காரியம் என்னவென்று கேட்கிறீர்களா? ‘குடும்ப வாழ்வு’ - என்று அதற்குப் பெயர். அவள் சமூகத்தை வாழ்விக்கப் புறப்படுவதற்கு இப்போதுள்ள சூழ்நிலை போதாது. ஆனால், இந்தச் சூழ்நிலையில் அவளே சமூகத்தில் ஒருத்தியாக வாழ முடியும். அதை இந்த நாட்டில் அவள் இனி வாழலாம்! எது வரையில் என்கிறீர்களா? கீழே கூறும் நிலை வருகிற வரையில் என்று வைத்துக் கொள்ளுங்களேன்:-
நம்முடைய பாரத நாட்டுக்குக் கிராமங்கள் எல்லாம் தங்கச் சுரங்கங்கள் மாதிரி. ஆனால் அவற்றை வளர்க்கிறோம் என்ற பேரில் நாம் அமைத்துள்ள பிரதேச வளர்ச்சி, சமூக நலத் திட்டம், முதியோர் கல்வி, பண்ணைகள் இவையெல்லாவற்றையும் எந்த நோக்கத்தோடு செய்யத் தொடங்கினோமோ, அந்த நோக்கத்தோடு அவைகள் சரியாகப் பயன்படும் காலம் இன்னும் வரவில்லை. காரணம் கிராமங்களாகிய அந்தத் தங்கச் சுரங்கங்களில் உள்ள தங்கம் தெரியாதபடி கரிகள் மூடியிருக்கின்றன. இதை விளங்கிக் கொண்டது தவிரத் தாமரைக் குளம் கிராமத்தில் சுகுணாவுக்கு வேறு எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை.
நாளைக் காலையிலிருந்து எனது கதாநாயகி கலகலப்பு நிறைந்த பட்டினப் பூச்சியாகிவிடுவாள். ஆனாலும் அவளுடைய அழகு என்றும் பட்டுப்பூச்சியாகவே இருக்க வேண்டும் என் ஆசை. தாமரைக் குளத்தில் வீணாக அவள் மேல் எழுந்த அபவாதம் நீங்கி அவளுக்கு நல்ல இடத்தில் திருமணமாக வேண்டும் என்பதும் என் ஆசை. ஒரு வரன், நல்லதாகப் பாருங்களேன்.
1961-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாந் தேதி மாலை நேரம். கோடை வெயிலின் கொடுமை சற்றே தளர்ந்து அந்திக் காற்று வீசத் தொடங்கியிருந்த போது அது வண்ண விதங்கள் படைத்து வான்வெளி மீது உமை கவிதை செய்கின்ற கோலம் மேற்கே பசுமலைக்கும் மேலே தோற்றமளித்துக் கொண்டிருந்தது. எதிரே சாலையில் கார்களும் குதிரை வண்டிகளுமாக திருப்பரங்குன்றத்துக்குப் போகும் கூட்டம் கலகலப்பாயிருந்தது.
மதுரையில் பசுமலையில் எங்கள் வீட்டு மாடியில் அமர்ந்து பட்டப்பகலில் பாவலர்க்குத் தோன்றும் நெட்டைக்கனவின் நிகழ்ச்சிகளில் மனம் செலுத்தி வீற்றிருந்தேன். வீட்டுக்குப் பின்புறம் இரயில் பாதை. அதில் குறுக்கு வழியாகச் சென்னை எழும்பூர் செல்லும் தூத்துக்குடி விரைவு வண்டி ஓடிய ஓசையில் நெட்டைக் கனவுகள் சில விநாடிகள் கலைந்து மீண்டன. தபால்காரர் வந்து கடிதங்களைக் கொடுத்து விட்டுச் சென்றார். அன்று பிற்பகல் தபாலில் சென்னையிலிருந்து ரீடைரெக்ட் செய்யப்பட்டு மதுரை வந்த நாலைந்து கடிதங்கள் மேசை மேல் கிடந்தன. அந்த வாரம் வெளிவந்திருந்த தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றின் புத்தாண்டு மலரின் பிரசுரமான ‘பட்டுப்பூச்சி’ என்னும் எனது குறுநாவலைப் பற்றிய கடிதங்கள் அவை. அந்தக் குறுநாவலின் முடிவில் நான் எழுதியிருந்த கருத்துக்கள் வாசகர்களின் மனங்களில் வெவ்வேறு விதமாக எதிரொலித்திருந்தன போலும். வாரப் பத்திரிகையின் தேவைக்காக, அந்தத் தருணத்தில் தோன்றிய ஒரு சமூகப் பிரச்சினையைக் கதையாக்கிப் பத்திரிகையின் தேவையினை நிறைவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்ட காரணத்தால் எழுதிய சிறு நாவல் ஒன்று இத்தனை எதிரொலிகளைப் பிறப்பிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை தான்.
கற்பனையின் குரலைக் கேட்டு உருகும் உள்ளங்களிலிருந்து உண்மைக் குரல் எழுந்தால் அதே குரல் முதலில் கற்பித்தவன் திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ‘சீதையை இராவணன் கொண்டு போனான்’ - என்று கதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே ‘நான் கேட்பது என்றோ நிகழ்ந்த கதை’ - என்பதையும் மறந்து இராவணனை எதிர்த்துப் படை திரட்டுவதற்காகக் குமுறி எழுந்த குலசேகரரைப் போலக் கதையில் வருகிறவர்களுக்கும் தீமை வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத உணர்ச்சி மிக்க வாசகர்கள் எந்தக் காலத்திலும் இருக்க முடியும் என்பதைத்தான் அன்று எனக்கு வந்த கடிதங்கள் நிரூபித்துக் கொண்டிருந்தன. என்னுடைய கதையாகிய பொய்க் கற்பனையிலிருந்து உண்மைகள் பிறந்திருந்தன.
“இந்தக் கதையில் வருகிற சுகுணாவை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலம் நீங்கள் உயரிய பணி புரிந்திருக்கிறீர்கள். அசட்டு இலட்சியங்களோடு கல்லூரி வாயிற்படிகளுக்குக் கீழே இறங்கி வரும் இளம் பெண்களுக்கு இதன் மூலம் எச்சரிக்கையும் விடுத்திருக்கிறீர்கள்.”
என் நோக்கத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாமலே இப்படி எழுதியிருந்தார் ஒரு வாசகர். இலட்சியங்கள் அசட்டுத்தனமானவை என்று விளக்கிவிட நினைத்து நான் சுகுணாவின் கதையை எழுதவில்லை என்பதை அந்த வாசகருக்கு விளக்க வேண்டுமானால் சுகுணாவின் கதையையே மேலும் வளர்க்க வேண்டும். நான் அந்தக் கதையை வளர்க்காமல் அப்படியே விட்டு விட்டாலோ இலட்சியங்கள் அசடுத்தனமானவை என்று நினைக்கிறவர்களுக்கு அதுவே உரமான காரணமாகிவிடும். அந்தக் கதையை பொன்முடி என்ற பெயரில் நான் எழுதியிருந்ததால் அதற்காக வந்திருந்த கடிதங்களும் அந்தப் பெயருக்கே வந்து சேர்ந்திருந்தன.
“உங்கள் மலரில் பொன்முடி எழுதியிருந்த பட்டுப்பூச்சி என்று குறுநாவலைக் கிராம மக்களின் தரத்தையும் வாழ்க்கையையும் உயர்த்தி விட்டதாகச் சொல்லிப் பறைசாற்றுகிறவர்கள் அவசியம் படிக்க வேண்டும். தற்காலத்தில் கிராமங்களிலே நடைபெறும் அலங்கோலங்களையும் அக்கிரமங்களையும் படம் வரைந்தது போலக் குறுநாவலில் சொல்லியிருக்கிறார்” - என்று எழுதியிருந்தார் வேறொரு வாசகர்.
மற்றொருவர் இதையெல்லாம் விட ஒருபடி அதிகமாகவே கற்பனை செய்யப் புறப்பட்டுக் குறுநாவலை எழுதிய நானே ஒரு பெண்ணாயிருக்க வேண்டுமென்று தாம் அநுமானம் செய்வதாகத் தம்முடைய கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார். இதோ அவருடைய கடிதம்:
“பொன்முடி என்ற பெயரில் பட்டுப்பூச்சி குறுநாவலை எழுதியிருப்பவர் ஒரு பெண்மணியாயிருந்து தாமே தமது சொந்த அநுபவத்திலே ஒரு கிராமத்துக்குப் போய்க் கிராம சேவகியாகச் சிறிது காலம் பணிபுரிந்து பெற்ற அநுபவங்களையே இக் குறுநாவலில் கூறுகிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. இலட்சியம் இலட்சியம் என்று பறந்து கொண்டு கிராமத்துக்குப் போய் உழைத்த சுகுணாவுக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்கள். இன்றைக்கு நூற்றிற்கு தொண்ணூற்றொன்பது கிராமங்களில் சுகுணா சந்தித்ததைப் போன்ற வடமலைப் பிள்ளைகளும், பிரமுகர்களும் தான் வாழ்ந்து கொண்டு திரிகின்றனர். அதிகாரத்திற்கு அடங்கித்தான் வாழ வேண்டியிருக்கிறது. நல்லவேளையாக இந்தக் கதையில் வருகிற சுகுணா தன் தூய்மையும் பண்பும் கெட்டு விடாமல் அங்கிருந்து தப்பினாள். ஏராளமான கிராமங்களில் தொண்டு செய்யும் நினைவோடு வருகிற அபலைகளின் தூய்மையே கெடும்படி இந்த ஓநாய்கள் கொடுமை புரிவதும் உண்டு. கடைசியாக ஒரு வார்த்தை. கதையில் வருகிற சுகுணாவுக்கு வரன் கேட்டிருக்கிறார்கள். ஆட்சேபணை இல்லை என்றால் நானே அவளை மணந்து கொள்ளத் தயார்” - என்று ஆசிரியருக்கு எழுதியிருந்தார் அவர்.
“நாவலின் அடிப்படைக் கருத்து இந்த நாட்டில் இனி வளர வேண்டிய ஒரு புதிய தலைமுறையின் சிந்தனையை வளர்க்கும் இயல்பினதாக வந்திருக்கிறது. இந்தக் கருத்து நாட்டு மக்களின் அகக் கண்களைத் திறக்கும். சமுதாயத்தில் உள்ள குறைகளை இந்த நாவலின் மூலம் விளக்கியுள்ள விதம் போற்றத்தக்கது” என்பதும் ஒரு கடிதத்தின் கருத்து.
“இந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகள் 1953-54ம் ஆண்டுகளில் நான் என்னுடைய சொந்த அநுபவத்தில் அடைந்தபடியே ஒத்து வருகின்றன. சமூக சேவையில் மெய்யான ஆசை கொண்ட பெண்கள் இப்படிப்பட்ட அநுபவங்களை அடைந்த பின் ஆசையையே இழந்து விடுகின்றனர்” - என்ரு சொந்த அனுபவத்தை எழுதியிருந்தார் தமிழறிந்த மலையாளத்து நேயர் ஒருவர்.
“பாரத நாட்டுக் கிராமங்கள் கரிமூடிய தங்கச் சுரங்கங்கள் என்றும் நீங்கள் கதையில் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. அந்தக் கரி கிராமத்துப் பெரிய மனிதர்கள் என்ற போர்வையில் பதுங்கிக் கிராம அலுவல்களைத் தங்களுக்குச் சாதகமாக நடத்திக் கொண்டு போகிற சுயநலவாதிகள் தாம் அத்தகையவர்கள் செய்யும் கொடுமைகளே இவை என எண்ணுகிறேன். இவர்களுடைய ஊழலை அம்பலப்படுத்தி உண்மை ஊழியர்கள் அவ்விடத்திற்கு வந்தால் தான் மென்மையும் தூய்மையும் கொண்ட கிராம மக்களின் மனம் என்கிற தங்கத்தை எடுத்து நமக்கு வேண்டிய முறையில் அணிகலன்களாகச் செய்து நாட்டிற்கு அளிக்கலாம்! இதோ நான் தங்களுடைய சுகுணாவை மீண்டும் தாமரைக்குளத்துக்கு அனுப்புவதற்கு முயல்கிறேன். அங்கு அவளுக்காகக் காத்துக் கிடக்கும் அலுவல்கள் ஏராளம்.” -
என்று உணர்ச்சிவசப்பட்டு எழுதியிருந்தார் ஒரு நேயர். இந்தக் கடிதங்களை எல்லாம் படித்து முடித்த போது அந்தக் குறுநாவலைப் பற்றி மேலும் பல புதிய சிந்தனைகள் என்னுடைய மனத்தில் கிளைத்து எழுந்தன. குறிப்பிட்ட கதை எந்த மலரில் வெளியானதோ அந்தக் காரியாலத்திலிருந்து எல்லாக் கடிதங்களையும் எனக்கு ரீடைரெக்ட் செய்திருந்தார்கள்.
முதல் வாசகர் எழுதியிருந்ததைப் போல் இலட்சியங்கள் அசட்டுத்தனமானவை என்று விலக்கி விடுவதற்காகவோ, கல்லூரிப் படிகளிலிருந்து படிப்பை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் பெண்கள், வாழ்க்கையின் நடைமுறைத் தொல்லைகளைப் புரிந்து கொள்ளாமல் தவறாக எடைபோட்டு வம்புகளில் போய் மாட்டிக் கொண்டு விடுகிறார்கள் என்று சொல்வதற்காகவோ இந்தக் குறுநாவலை நான் எழுதவில்லை. இன்று நிலவும் இந்த நாட்டு வாழ்க்கைச் சூழ்நிலையில் கிராம மக்கள் இப்படி இப்படி இருக்கிறார்கள் என்பதை உள்ளபடி படம் பிடித்துக் காட்டவே இதைச் செய்தேன்.
இப்போது இந்தக் கடிதங்களை எல்லாம் பார்க்கும் போது என்னுடைய பொறுப்பு அதிகமாயிருப்பதாக எனக்குத் தோன்றியது. சுகுணாவின் கதையை மேலும் வளர்த்து எழுதி நிறைவு செய்யாமல் அரைகுறையாக நானே விட்டு விடுகிற பட்சத்தில் அதைப் படித்தவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நினைத்துக் கொண்டு அந்தக் கதையைப் பற்றிச் சுயமாக எண்ணுவதற்கு இடமிருக்கிறது. ‘நாளைக் காலையிலிருந்து என்னுடைய கதாநாயகி கலகலப்பு நிறைந்த பட்டினப்பூச்சியாகி விடுகிறாள். அவள் எங்கிருந்தாலும் அவளுடைய அழகு பட்டுப்பூச்சியாகவே இருக்கவேண்டுமென்பது என்னுடைய ஆசை. தாமரைக்குளம் கிராமத்தில் அவளுக்கு ஏற்பட்ட அபவாதங்கள் நீங்கி நல்ல இடத்தில் என் ஆசை, உங்களால் முடிந்தால் நல்லதாக ஒரு வரன் பாருங்களேன்’-
என்று கதையின் முடிவில் நான் எழுதியிருந்த புதிரை நானே விடுவித்து விட வேண்டும். அவளுக்கு ஏற்பட்டதாக நான் எழுதியிருக்கும் அபவாதங்களையும் நானே போக்கிவிட வேண்டும் என்று எனக்குப் புது ஆர்வம் பிறந்தது. கடிதங்களை எடுத்து வைத்துவிட்டு வழக்கம் போல மாலையில் உலாவி வரப் புறப்பட்டேன். வீட்டுக்குப் பின்புறம் நீண்டு செல்லும் இருப்புப்பாதை ஓரமாக நடந்து திருப்பரங்குன்றம் வரை காற்றின் சுகத்தையும், மேற்கு மலைகளுக்குக் கதிரவன் மறைவினால் பிறக்கும் அழகிய செம்மை நிறத்தையும் அனுபவைத்தபடியே சென்று கொண்டிருந்தேன். காலையிலும், மாலையிலும், இந்தப் பாதையோரமாக வயல் வெளிகளையோ அவற்றின் நுனி முடிகிற இடத்தில் தொடு வானத்தையோ அல்லது ஏதாவது ஒரு கண்மாய்க் கரையையோ, பார்த்தபடி நடந்து போகும் போதுதான் நான் நிறையச் சிந்திப்பேன். இதைத்தான் சிந்திக்க வேண்டும் என்று எல்லை போட்டுக் கொள்ளாமல் சிந்திப்பேன். சுதந்திரமான சிந்தையாகவும் இருக்கும் அது.
ஆனால், இன்று மாலை என்னுடைய எல்லாச் சிந்தனைகளுக்கும் தானாகவே ஓர் எல்லை ஏற்பட்டிருந்தது. அது அன்று நான் உலாவப் புறப்படுவதற்கு முன்னால் எனக்குக் கிடைத்த கடிதங்களைப் பற்றிய சிந்தனையாக இருந்தது. பட்டுப்பூச்சி குறுநாவலின் கதாநாயகி சுகுணாவைப் பற்றிய சிந்தனையாக இருந்தது. அந்தச் சிந்தனைகளோடு உலாவி விட்டு நான் வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் எனக்காக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.
இருபது இருபத்தைந்து வயதுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ, மதிக்க முடியாத அழகிய பெண் ஒருத்தி சூட்கேசும் கையுமாக என் வீட்டுத் திண்ணையில் வந்து உட்கார்ந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் எழுந்து வணங்கினாள். அவள் முகம் மலர்ந்திருந்தது.
நான் கேட்டேன்: “நீங்கள்... யாரென்று சொல்லலாமோ!”
“வேறு யாருமில்லை! உங்களுடைய கதாநாயகி” - அவள் சிரித்துக் கொண்டே மறுமொழி கூறிய போது எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. சில விநாடிகள் வியப்பு வெள்ளத்தில் மூழ்கி ஒன்றும் பேச வராமல் திணறிப் போனேன்.
சொல்லை விட வேகமாக மனத்தில் உணர்ச்சிகள் ஓடும் போது சொல்லும் பொருளும் சக்தியற்றுப் போய் முடங்கி இருந்து விடுகின்றன. கொடி நிறைய தளிர்த்துப் பூத்தப் பசுமையும் வெண்மையுமாய் ஒசிந்து படரும் கார் காலத்து முல்லைக்கொடி எழுந்து நிற்பதைப் போல் அந்த அழகிய இளம் பெண் எழுந்திருந்து நின்று கொண்டு, ‘உங்களுடைய கதாநாயகி வந்திருக்கிறேன்’ - என்று சிரித்துக் கொண்டே கூறிய போது அவளிடம் என்ன பேசுவதென்று நான் என்னுள்ளேயே தீர்மானிக்க முயன்று நினைத்த சொற்களெல்லாம் நினைப்பில் தங்கும் விநாடி நேரத்துக்கு மட்டுமே சக்தியுள்ளவையாகத் தோன்றி அதன் பின் பேச்சாக வருவதற்கு முன்பே சக்தியற்றவையாகப் போய்விட்டன. அந்தப் பெண் எதிரேயிருந்து என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உள்ளே வந்து உட்காருங்கள். நான் இதோ வருகிறேன்” - என்று என்னுடைய அலுவலக அறையைக் காண்பித்து விட்டு உட்பக்கம் சென்றேன் நான். உள்ளே சமையலறையில் என் மனைவி முகத்தைத் தூக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். கற்பனையில் ஆயிரம் பெண்களைப் பற்றி எழுதலாம். அவர்களுடைய அழகுகளைப் பற்றியும் விதம்விதமாக வருணிக்கலாம். அதை எந்த இலக்கிய ஆசிரியனுடைய மனைவியும் எதிர்க்க மாட்டார்கள். நேரில் அப்படி ஒரு பெண் புறப்பட்டு வந்து ‘நான் தான் உங்களுடைய கதாநாயகி’ - என்று சொல்லிக் கொண்டு நின்றால் என்ன ஆகும்? என்ன ஆக வேண்டுமோ அது ஆகியிருந்தது என் வீட்டில்.
“யாரோ தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?” என்று என்னைத் தேடி வந்திருக்கும் அந்தப் பெண்ணின் மேல் எனக்கே அக்கறை இல்லாதது போல நான் என் மனைவியிடம் பேச்சைத் தொடங்கினேன். நான் சாதுரியமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு தொடங்கிய பேச்சுக்கு எதிராளியிடமிருந்து கிடைத்த பதில் என்னுடைய சாதுரியமின்மையையே எனக்குச் சொல்லியது. அவள் பதிலில் தான் அதிகமான சாதுரியம் இருப்பதாக எனக்குப் பட்டது. “என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்? உங்களை யார் யாரோ எது எதற்காகவோ தேடிக் கொண்டு வருகிறார்கள். அதையெல்லாம் நான் கவனித்துக் கொண்டிருக்க முடியுமோ?” - என்று என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறவள் மட்டுமில்லாமல் நானே அவளுடைய அக்கறையைப் பெற முடியாதவன் என்று பேசுவது போல் என்னிடம் பதில் சொன்னாள் என் மனைவி. அந்த ஒரு கணத்தில் இந்த உலகத்தில் ஆண் குலமே பேசத் தெரியாமல் ஊமையாகி நிற்பது போல ஒரு தாழ்வு மனப்பான்மையை உணர்ந்தேன் நான். எதைப் பற்றிப் பேசினாலும் பெண்களுக்குப் பேச்சிலே திறன் உண்டு. அவர்கள் அழகாக இருப்பதனால் அவர்களுடைய சொற்களுக்கும் அந்த அழகு உண்டாகிறது. அவர்கள் குரல் இனிமையாகவும் மென்மையாகவும் இருப்பதனால் அவர்கள் பேசுகிற சொற்களும் இனிமையையும், மென்மையையும் அடைகின்றன. ஆண்கள் பேசும்போது முரட்டுப் பேச்சாகத் தொனிக்கிற சொற்கள் கூடப் பெண்கள் பேசும்போது அடங்கிய சொற்களாக மாறி விடுகின்றனவோ என்று நினைக்கலானேன் நான்.
அந்தப் பெண்ணுக்குத் தேநீர் கலந்து கொண்டு வரும்படியாக என் மனைவியிடம் கூறிவிட்டு எனது அலுவலக அறைக்குத் திரும்பிச் சென்றேன் நான். அங்கு நாற்காலியில் உட்கார்ந்து எதையோ படித்துக் கொண்டிருந்த அந்தப் பெண் நான் உள்ளே நுழைவதைக் கண்டதும் மரியாதையாக எழுந்திருந்து நின்றாள். “பரவாயில்லை! உட்காருங்கள்” - என்றேன் நான். அவள் கையிலிருந்தது பட்டுப்பூச்சி குறுநாவல் வெளிவந்த பத்திரிகையின் மலர் என்று தெரிந்தது. அவள் அதன் அச்சிட்ட பகுதிகளில் ஏதேதோ மையினால் அடிக்கோடிட்டுப் பக்கங்களில் குறிப்புக்களும் எழுதி வைத்திருந்தாள்.
“என்ன படிக்கிறீர்கள்?” - என்று நான் கேட்டேன்.
“உங்கள் கதைதான்! படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைக் குறித்து வைத்திருக்கிறேன். இதில் வருகிற எல்லாச் சம்பவங்களும் ஏறக்குறைய என்னுடைய வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அதனால்தான் உங்களைச் சந்தித்தவுடன் பாதி வேடிக்கையாகவும் பாதி உண்மையாகவும், ‘நான் உங்களுடைய கதாநாயகி’ - என்று என்னை அறிமுகம் செய்து கொண்டேன். எனக்கு உங்கள் மேலும் உங்களுடைய இந்தக் கதையின் மேலும் ஏராளமான சந்தேகங்கள். என்னோடு ‘அல்லியூரணியில்’ கிராம சேவகிகளாக வேலை பார்த்தவர்களில் யாராவது உங்களைச் சந்தித்து உங்களிடம் என் கதையைச் சொல்லியிருப்பார்களோ என்று நான் நினைக்கிறேன். இல்லாவிட்டால் சுகுணா என்று என் பெயரைக் கூடச் சிறிதும் மாற்றாமல் எழுதுவதற்கு எப்படித் தோன்றியிருக்க முடியும் உங்களுக்கு?” என்று வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவது போன்ற வேகத்தோடு பேசினாள் சுகுணா. இந்த வேகமான பேச்சைக் கேட்ட பிறகு அவளுடைய முகத்தை இன்னும் நன்றாகப் பார்க்க வேண்டுமென்று விரும்பினேன் நான். அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு அவளிடமே மீண்டும் கேட்டேன்.
“நீங்கள் என்னுடைய கதாநாயகி என்று சொல்லிக் கொண்டு என் மேலேயே சீற்றம் அடைகிறீர்கள். எனக்கு எத்தனையோ கதாநாயகிகள் உண்டு. அவர்கள் எல்லோரும் சாதுப் பெண்கள். நான் எழுதிய கதைப் புத்தகங்களிலும், அவற்றைப் படித்த வாசகர் மனங்களிலும் மட்டும் தங்கிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார்கள் அந்த கதாநாயகிகள். நீங்கள் மட்டும் தான் படைத்தவனைத் தேடிக் கொண்டு என்னிடமே திரும்ப வந்திருக்கிறீர்கள்.”
“அப்படியானால் உங்களுடைய எல்லாக் கதாநாயகிகளையும் விட நான் தைரியசாலி என்பதை நீங்கள் உடனடியாக ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்.”
“தைரியத்தை எல்லாச் சமயங்களிலும் பாராட்டி விட முடியாது. அதுவும் உங்களைப் போன்ற பெண்கள் தைரியசாலிகளாக இருக்கக் கூடாத சமயங்களும் உண்டு. அந்தச் சமயங்களில் நீங்கள் தைரியமாக நடந்து கொண்டதை ஒரு திறமையாகக் கூறி மற்றவர்களுடைய பாராட்டுகளை எதிர்பார்ப்பதும் தவறு.”
“நீங்கள் எழுத்தாளர், இலக்கிய ஆசிரியர், உங்களுக்கு முன்னால் வந்து நான் தைரியமாகப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, என்னவோ? ஆனால் நான் தைரியமாகப் பேசுவதனால் உங்கள் மேல் என்னுடைய மனத்தில் மதிப்பு வைக்கவில்லை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. நவபாரதத்தின் புது யுகப்பெண் தைரியமும் தன்னம்பிக்கையும் இல்லாத கோழையாகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்களே கருதினால் நான் அப்படி இருப்பதற்குச் சம்மதிக்கிறேன்.”
“அடடா! எதையோ சொன்னால் எப்படியோ தப்பாகப் புரிந்து கொள்கிறீர்களே? மகாகவி பாரதியிலிருந்து இன்றைய மறுமலர்ச்சி எழுத்தாளன் வரை யாரும் பெண் கோழையாக இருக்க வேண்டுமென்று சொல்லமாட்டான். ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ - என்று குரல் எழுப்பியவர்கள் நாங்கள். எங்களையே நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்ய முடியும்? ‘பட்டுப்பூச்சி’ நாவலில் வருகிற சுகுணாவைக் கோழை என்றோ, தன்னம்பிக்கை இல்லாதவள் என்றோ எந்த இடத்திலும் நான் குறிப்பிட்டதாக எனக்கு நினைவில்லை. அழகும் நல்ல எண்ணங்களும் நிறைந்த பெண் ஒருத்தி சூழ்நிலைகளில் நீந்தி வெளியேறித் தன்னுடைய இலட்சியங்களைப் பதிய வைப்பதற்கு முடியாமல் திரும்பி விட்டாள் என்ற அளவில் தான் இந்தக் குறுநாவலை முடித்திருக்கிறேன். அந்தக் குறுநாவலில் எழுப்பப்பட்ட பிரச்சனை இன்னும் முடியவில்லை. மலரில் அந்தக் கதை முடிந்த மாதிரி அச்சிடப்பட்டிருந்தாலும் அதன் பிரச்னைக்கு இன்னும் முடிவில்லை. ஒவ்வொரு காவிய ஆசிரியனும் நமக்குப் பல தலைமுறைகளுக்கு முன்பே ஒவ்வொரு பிரச்னையை மையமாக வைத்துக் கொண்டு காவியம் எழுதியிருக்கிறான். அதே பிரச்னைகளை வைத்து இன்னும் நாம் கதை, நாவல், எல்லாம் எழுதுகிறோமா, இல்லையா? உலகத்தில் இலக்கியம், கவிதை, காவியம் என்ற பெயர்களில் இந்த விநாடி வரை அழகாகவோ, ஆழமாகவோ, எழுப்பப்பட்டிருக்கிற எந்த ஒரு பிரச்னையும் அடுத்த விநாடி தன்னைப் பற்றி எழவிருக்கும் முடிவையும் எதிர்பார்த்துக் கொண்டே நிற்கிறது என்பதை நீங்கள் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். என்னுடைய அநுமானம் சரியாயிருக்குமானால் பட்டுப்பூச்சியின் கதாநாயகியைப் போல நீங்களும் பட்டதாரிப் பெண்மணியாகவே இருக்கலாம். நீங்கள் பல்கலைக்கழகப் பட்டதாரியாயிருந்தும் உங்களால் இந்தச் செய்தியைப் புரிந்த கொள்ள முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியது.”
“மன்னிக்க வேண்டும். அபிப்பிராய சுதந்திரத்துக்கு ஆசைப்படுகிறவர்கள் எல்லாரிடமும் நான் ஒரு குறையைக் காணுகிறேன். தங்களுக்கு அபிப்ராய சுதந்திரம் வேண்டுமென்று ஆசைப்படுகிற ஒவ்வொருவரும் இந்த நாட்டில் மற்றவர்களுக்கு அது இருக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுடைய அபிப்பிராயங்களை நான் ஒப்புக் கொள்கிறேன். என்னுடைய அபிப்பிராயத்தை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமென்று நான் உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால், என் அபிப்பிராயங்களைக் கேட்பதற்காகவாது நீங்கள் பொறுமையுள்ளவராக இருக்க வேண்டுமென்று நான் ஆசைப்படுகிறேன்.”
“நல்லது! உங்களுடைய அபிப்பிராயங்களைச் சொல்லுங்கள். மிக்க மகிழ்ச்சியோடு அவற்றை நான் கேட்பதற்குக் காத்துக் கொண்டிருக்கிறேன். பிறருடைய அபிப்ராயங்களால் தான் நாங்கள் வளர்கிறோம். பிறருடைய அபிப்ராயங்களைக் கண்டெடுக்கிற தங்கக் காசுகள் போல் முயற்சியின்றியே அதிர்ஷ்டத்தினால் கிடைத்த செல்வமாக நாங்கள் நினைக்கிறோம். அவை எங்களுடைய செலவில்லாத இலாபக் கணக்கிலே வரவு வைக்கப்படுகின்றன. பிறருடைய அபிப்பிராயங்கள் எங்களைச் சீர்திருத்தவும் செய்யலாம். உலகத்திலேயே பிறருடைய அபிப்பிராயத்தைத் தெளிவாக எதிர்பார்த்துத் துணிவாகச் செய்கிற படைப்பு ஒன்றுதான். இலக்கியத்துக்கு இரண்டு முனைகள் உண்டு. ஒன்று படைக்கிறவனுடைய ஆத்மதிருப்தி. இரண்டாவது அநுபவிக்கிறவனுடைய அபிப்பிராயம். முதல் முனை ஆரம்பம் தான். இரண்டாவது முனை தான் இலக்கியத்தினுடைய சரியான முடிவு. இரண்டாவது முனையிலிருந்துதான் அந்தப் படைப்பின் இலாப நஷ்டமே தெரிகிறது. என்னுடைய இலாப நஷ்டத்தை அறிந்து கொள்வதற்கு நான் ஆசைப்படாமல் இருப்பேனா? தாராளமாகச் சொல்லுங்கள்” - என்று கூறிக் கொண்டே நான் அந்தப் பெண்களின் அழகிய கண்களை நோக்கினேன். அப்போது அவளுடைய இதழ்களும் கண்களும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தன.
“உங்களுக்குக் கோபம் உண்டாக்கி விட்டு விட்டால் அழகாகப் பேச வருகிறது. உங்களிடமிருந்து எதையாவது தெரிந்து கொள்ள வேண்டுமானால் முதலில் உங்களுக்குக் கோப மூட்டிவிட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது” - என்று அவள் கூறிய போது எனக்குச் சற்றே கூச்சமாக இருந்தது. அவள் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னோடு பேசத் தொடங்கியதிலிருந்து ஒரு விஷயத்தை நான் நன்றாகக் கவனித்துக் கொண்டு வந்தேன். அவளுடைய சொற்கள் முழுமையாக அழகாகக் கனிந்து ஒலித்தன. சிலரைப் போல் சொற்களின் உருவத்தைச் சிதைப்பதோடு அதை ஒலிக்கும் அழகையும் சிதைத்துக் கொண்டு அவள் பேசவில்லை. விதையில்லாத திராட்சைப் பழங்களைப் போல அவளுடைய சொற்கள் கனிந்து சுவை நிறைந்து முழுமை பெற்று அழகுற ஒலித்தன.
“நீங்கள் நன்றாகவும் அழகாகவும் பேசுகிறீர்கள்! இதைச் சொல்வதற்குஎ நக்கு அபிப்பிராய சுதந்திரம் உண்டு அல்லவா?” - என்று கேட்டுக் கொண்டே நான் அவளை நோக்கி முறுவல் பூத்த போது முதல் முறையாக அவளிடம் வெட்கத்தைக் கண்டேன். தேநீர்க் கோப்பையுடன் என் மனைவி அறைக்குள் வந்தாள். சுகுணாவுக்கு அவளை அறிமுகம் செய்தேன். சுகுணா எழுந்து நின்று என் மனைவியை வணங்கினாள்.
“நீயும் உட்கார்ந்து கொள், உங்கள் பெண் இனத்தைப் பற்றிய பிரச்னை ஒன்றிற்கு இப்போது உடனே முடிவு கண்டு பிடித்தாக வேண்டும். நீயும் கூட இருந்தால் என் கட்சிக்குப் பலம் அதிகம்” - என்று நான் என் மனைவியை வேண்டிக் கொண்டேன். அவள் சிரித்துக் கொண்டே போய்விட்டாள்.
அழகும் துறுதுறுப்பும் இளமையும் நிறைந்தவளாய் என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் அந்தப் பெண்ணிடம் வம்பு பேசியாவது விளையாட்டாக அவள் கோபத்தை வளர்த்துப் பார்க்க வேண்டுமென்று ஆசையாயிருந்தது எனக்கு. சில அழகான குழந்தைகளைக் கிள்ளிவிட்டு அழச் செய்து வேடிக்கை பார்க்கும் ஆசை எப்போதாவது சில சமயங்களில் நமக்கு உண்டாகவில்லையா? அது போல கிள்ளி விடுவதை ஒத்த கேள்விகளால் அவளை அழ வைத்துப் பின்பு சிரிக்கச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன் நான். அதற்கான முயற்சிகள் என் பேச்சிலும் நிகழ்ந்தன.
“அழகும் இளமையும் நிறைந்த பேதைப் பெண்கள் எல்லாரும் காளிதாசன் காலத்திலிருந்து ஏமாந்து வருவதைத் தான் காவியங்கள் சொல்லுகின்றன. சகுந்தலை காதலில் ஏமாந்தாள். நீ இன்று உன்னுடைய இலட்சியத்தில் ஏமாறிப் போய்விட்டாய். ஒவ்வொரு தலைமுறையிலும் இந்த நாட்டுப் பெண்கள் ஏதாவது ஒரு துறையில் ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தான் இது காட்டுகிறது. பிறரை ஏதாவது ஒரு துறையிலேனும் ஏமாற்றுகிற அளவுக்கு இந்த நாட்டுப் பெண்கள் வளருவார்களா என்பதைக் கூட இனி வரப்போகிற தலைமுறைகள் தாம் தீர்மானம் செய்ய வேண்டும்.”
அவளிடம் இதைச் சொல்லும் போது எனக்குச் சிரிப்பு வந்து விட்டது. நான் கூறிய இந்தச் சொற்களைக் கேட்டுச் சுகுணாவின் சிவந்த உதடுகள் காற்றில் அசையும் மாதுளை மொட்டுக்களைப் போல் துடித்தன. நீண்டு அகன்று குறுகுறுவென்று சுழலும் கருவண்டுகளைப் போலத் திகழ்ந்த அவளுடைய கண்கள் செவிகளைத் தொடுவதுபோல், மேலும் நீண்டன. புதிய கண்ணாடியில் தெரியும் குளித்த முகத்தைப் போல் பளீரென்று கோபம் தெரிந்தது அவள் முகத்தில். அவள் சினம் துடிக்கும் உதடுகளோடு என்னை ஏறிட்டுப் பார்த்தாள்.
“உங்களைப் போல் படித்துப் பண்பட்ட இலக்கிய அறிஞர்களிடமிருந்து இப்படிப்பட்ட பக்குவமில்லாத கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. அழுகி ஊசிப்போன கருத்து இது. புதிய சமுதாயத்துக்கு நீங்கள் சொல்லித் தர வேண்டிய கருத்துக்கள் சத்தும் சாரமும் உள்ளவையாக இருக்க வேண்டுமென்று என்னைப் போன்ற பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். சகுந்தலை துஷ்யந்தனிடம் ஏமாந்து போனதற்கு அந்தக் காவியம் விதியின் சாபத்தைத் தான் காரணமாகக் கூறுகிறது. மேலும் துஷ்யந்தன் என்னும் ஆண் மகனின் மறதியைக் காரணமாகக் கூறாமல் சகுந்தலையின் ஏமாற்றத்தைக் குறை கூறிப் பேசுகிறீர்கள் நீங்கள். பெண்ணினத்தின் மேல் ஏதாவது குற்றம் சொல்ல வேண்டுமென்று உங்களுக்கே ஆசையாயிருக்கும் போய் தோன்றுகிறது.”
“எனக்கு மட்டும் அல்ல! அருணகிரிநாதரில் இருந்து பட்டினத்தார் வரையில் பலருக்கு இருந்த ஆசைதான் இது! பெண்களைக் குற்றம் சொல்லிவிட வேண்டுமென்ற ஆசை உலகத்துக்குப் புதியதில்லை. ஆனால், நான் பேசியது அப்படிப்பட்ட நோக்கத்தோடு அல்ல. உங்களோடு வம்பு பேச வேண்டுமென்று தான் வேடிக்கையாகப் பேசினேன்.”
“பேசுவதில் மட்டும் இல்லை, எழுத்திலும் நீங்கள் வம்பைத்தான் எழுதுகிறீர்கள். இல்லாவிட்டால் நான் அல்லியூரணி கிராமத்தில் பெற்ற அநுபவங்களை யாரிடமிருந்தோ கேள்விப்பட்டு இப்படிப் பட்டுப்பூச்சி என்ற பெயரில் குறுநாவலாக எழுத உங்களால் துணிந்திருக்க முடியுமா?”
“ஏன் முடியாது? இந்தச் சமுதாயத்துக்கு எங்கள் பேனாவிலிருந்து துணிவைக் கொடுப்பவர்கள் நாங்கள். நான் எழுத நினைத்ததோ, அல்லது என்னுடைய கற்பனையில் உருவாகியதோ, எங்காவது ஒரு மூலையில் நடந்ததாகவோ, நடக்கிறதாகவோ, நடக்கப் போவதாகவோ இருந்தால் அதுவே என் எழுத்துக்கு வலுவைத் தருகிற அம்சமாக இருக்குமென்று நான் ஏன் கொள்ள முடியாது?”
“தாராளமாகக் கொள்ளலாம். ஆனால், அப்படி நீங்கள் கற்பனை செய்கிற வாழ்வின் சாயலாக நடைமுறை உலகில் எங்கோ, ஒரு மூலையில் மெய்யாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களே அவர்கள் தாம் அதனால் வருகிற வேதனைகளை எல்லாம் பட வேண்டியிருக்கிறதென்பதை நீங்கள் மறந்தே போய் விடுகிறீர்கள். பட்டுப்பூச்சியை எழுதியதனால் சமூக சேவகிகளுக்கும் அவர்களைச் சரியானபடி புரிந்து கொள்ள முடியாமல் கெடுதல் புரியும் முரட்டு மனிதர்களுக்கும் பாடம் கற்பித்து விட்டதாக நீங்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால், உண்மையில் அத்தகைய பெருமைக்குரிய விளைவுகள் ஏற்படுவதில்லை.”
“உண்மையில் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைப் பற்றி நீங்கள் தான் சொல்லுங்களேன்! நான் தெரிந்து கொள்கிறேன்.”
நான் இப்படிப் பதிலுக்கு மடக்கிக் கொண்டு கேள்வி கேட்பேன் என்று அவள் எதிர்பார்க்கவில்லையோ என்னவோ? அவளால் உடனே எனக்குப் பதில் சொல்லுவதற்கு முடியவில்லை. பத்திரமாக வைத்திருக்கும்படி நாம் யாரிடமாவது கொடுத்திருந்த பணத்தை ‘நாம் உடனே திருப்பிக் கேட்க மாட்டோம்’ - என்று எண்ணி அவர்கள் சொந்தமாகச் செலவழித்திருந்த சமயத்தில், நாமே அவசரமாகப் போய் அந்தப் பணத்தைத் திரும்பக் கேட்டால் எப்படி விழிக்க நேரிடுமோ அப்படி விழித்தாள் சுகுணா. அவளிடம் எனக்குப் பதில் கொடுப்பதற்கு உரிய வார்த்தைகள் இல்லை போலத் திகைத்தாள் அவள். எனக்கு அப்போது அவள் இருந்த நிலையைக் கண்டு சிரிப்புத்தான் வந்தது. சிரித்துவிட்டால் மறுபடியும் அவள் தப்பாக நினைத்துக் கொண்டு கோபப்பட நேர்ந்து விடுமோ என்றெண்ணி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டுவிட்டேன். நான் முயன்று மறைத்தும் பயனில்லை. அவள் என்னுடைய சிரிப்பைப் பார்த்து விட்டாள்.
“எங்களுக்கு எது வாழ்க்கையா யிருக்கிறதோ அதுவே உங்களுக்குச் சிரிப்புக்குரியதாக இருக்கிறது. சிரியுங்கள். சிரியுங்கள். உங்களுக்குச் சிரிப்பு வரும்போதெல்லாம் மறைக்காமல் வெளிப்படையாகச் சிரியுங்கள். சிரிப்பும் கவலையும் தான் மனித உடம்பு என்ற கண்ணாடியில் மறைக்க முடியாமல் தெரியும் பிரதிபிம்பங்கள். அவற்றையும் கூட வலுவில் மறைப்பதற்குப் பழக்கிக் கொள்ளாதீர்கள்” - என்று என்னை நோக்கிக் குத்தலாகப் பதில் பேசினாள் சுகுணா.
“நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன். கடவுள் மனித உடம்பைப் படைத்திருக்கிற விதமே சத்தியத்தைப் புறக்கணித்து விட முடியாதபடி அமைந்திருக்கிறது. உண்மையும் பொய்யுமாகிய உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் முடியாதபடி முகம், கண்கள், நெற்றி, வாய், உதடுகள் எல்லாமாக ஒன்று சேர்ந்து மனிதனைக் காட்டிக் கொடுத்து விடுகிறவையாகவே, மீறிக்கொண்டு எதிரே இருப்பவர்களை நாம் ஏமாற்ற முயல்கிற சமயங்கள் உண்டு. இப்போது அந்த ஏமாற்று வேலையைச் செய்து கொண்டிருப்பது நான் அல்ல! உண்மையில் நீங்கள் தான் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும்” - என்றேன் நான். இதைக் கேட்டு அவள் திடுக்கிட்டுப் போனாள்.
“அது எப்படி?”
“என்னுடைய கதையில் நான் எழுதியிருந்த நிகழ்ச்சிகளினால் ஏதோ ஒரு வகையில் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால், நீங்கள் தான் அதைப் பற்றி வெளிப்படையாகத் தெரிவித்துக் கொள்ளத் தயங்கி மறைக்கிறீர்கள். ஏமாற்றவும் செய்கிறீர்கள். உங்களுக்கு ஏற்பட்ட சொந்தத் துன்பத்தை ஏதோ ஒரு சமூகத்துக்கே ஏற்பட்ட பெருந்துன்பம் போலச் சுட்டிக் காட்டிப் பெரிது பண்ணுகிறீர்கள். ஒரு சிறிய துன்பத்தைத் தங்கள் மேடையாற்றல் மூலம் பெரிதாக்கிப் பரவச் செய்து அதற்காக நாட்டின் மேலேயே குற்றம் சுமத்துவது அரசியல் கட்சிகளும் செய்தித்தாள்களும், கையாளுகிற சுலபமான எதிர்ப்பு முறை. அதே வழியை இப்போது நீங்களும் கடைபிடிக்கிறீர்கள் போலிருக்கிறது.”
நான் இப்படிக் கூறிக் கோண்டே வந்த போது சுகுணாவுக்குக் கண் கலங்கி விட்டது. அந்த பளிக்கு முகத்தில் கலக்கத்தைப் பார்த்த போது அவ்வளவு ஆத்திரத்தோடு அவளிடம் நேருக்கு நேர் நான் கோபத்தைக் காட்டிப் பேசியிருக்க வேண்டாம் என்று எனக்குத் தோன்றியது. பூவை வாடச் செய்து விட்டது போல நான், அவளைக் கலங்கச் செய்து விட்டதை எண்ணி வருந்தினேன். சில விநாடிகள் எங்களுக்கிடையே மௌனம் நிலவியது.
மிகவும் முக்கியமாகப் பேச வேண்டியதை எல்லாம் இனி மேல் தான் பேசப்போகிறோம் என்பது போல இருவருமே எதையோ பெரிய மீதமாக ஒதுக்கி வைத்துவிட்டுச் சாதாரணமானவற்றைப் பேசிக் கொண்டே நேரத்தைக் கழித்து விட்டது போல உணர்ந்தோம். “என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிற அந்தப் பெண்ணுக்கும் இரவுச் சாப்பாடு நம் வீட்டில் தானா?” - என்று என்னிடம் விசாரிக்கப் போகிற குறிப்போடு அறை வாசலில் வந்து நின்று கொண்டு என்னைத் தனியே அழைத்தாள் என் மனைவி. கதவுக்கு வெளியே இருந்து தலையை நீட்டி, ‘இப்படி கொஞ்சம் வந்துவிட்டுப் போங்களேன்’ - என்று பெண்கள் அழைக்கிற அழைப்புக்கெல்லாம் இதே போன்றதொரு வழக்கமான அர்த்தம் தான் இருக்க முடியும். ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய இல்லற வாழ்க்கையின் போது தினசரி நடைமுறை வழக்கத்திலே பழகிப் போகிற அர்த்தங்கள் இப்படி எத்தனையோ உண்டு.
“வீடு தேடிக் கொண்டு வந்திருக்கிறவர்களைச் சாப்பிடுகிற நேரம் வரை இருப்பாயோ, புறப்பட்டுப் போய்விடுவாயோ, என்று எப்படிக் கேட்க முடியும்? அவளும் இங்கே சாப்பிடப் போகிறாள் என்ற திட்டத்துடனேயே சமையல் ஏற்பாடுகளைச் செய். மற்றவற்றை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்” என்று மனைவியின் அந்தரங்க அழைப்புக்கு இணங்கி அவளோடு எழுந்து சென்ற போது தனியே அவளுக்குப் பதில் சொல்லி அனுப்பினேன்.
“ஏதோ பேசினோம், முடித்தோம் என்று பேர் பண்ணிவிட்டு எழுந்திருந்து வாருங்கள். இப்படித் தேடி வருகிறவர்களிடம் எல்லாம் இரவு பகல் பாராமல் வழவழவென்று பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை...”
- என்று இன்றைக்கு மட்டும் என்னுடைய நேரம் பயனுள்ளவற்றில் தான் கழிய வேணுமென்பதில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டவளாக எனக்கு அறிவுரை சொல்லிவிட்டுப் போயிருந்தாள் என் இல்லக் கிழத்தி. அப்பப்பா! பெண்களின் உடம்பையும் மனத்தையும் சந்தேகத்தினாலேயே செய்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு நிதரிசனமான உண்மை. என் மனைவியின் பரபரப்பிலும் வார்த்தைகளை அவள் பேசிய உள்ளர்த்தத்திலும் என்னைத் தேடி வந்திருக்கிறவள் ஓர் அழகிய பெண் என்பதை எனக்கு நினைவூட்டும் அம்சங்கள் அதிகமாயிருந்தன.
என் மனைவியைச் சமையலறைக்கு அனுப்பிவிட்டு நான் மறுபடி அலுவலக அறைக்குள் நுழைந்த போது கண்டிப்பான எண்ணத்துடன் தான் நுழைந்தேன். ‘இன்னும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் இந்தப் பெண்ணிடம் பேச்சை முடித்துக் கொண்டு விட வேண்டும்’ - என்று என் மனத்தில் உறுதி ஏற்பட்டிருந்தது. எனவே அந்தப் பெண்ணின் முறையீடு எதுவோ அதையே நேரடியாகக் கூறும்படி அவளைத் தூண்டுகிற விதத்தில் அவளிடம் என் கேள்வியைப் பிறப்பித்தேன்.
“அல்லியூரணி கிராமத்தில் உங்களுக்கு ஏதேதோ துன்பங்கள் ஏற்பட்டதாகக் கூறினீர்களே, அவற்றை எல்லாம் மீண்டும் ஒருமுறை என்னிடம் விவரமாகக் கூறுங்கள். அவற்றிற்கு என் கதையும் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்ததாகவும் கூறினீர்களே! அதையும் விளக்கமாகச் சொல்லுங்கள். உங்களுடைய குற்றச்சாட்டுக்கு நான் ஏதேனும் மறுமொழியோ, சமாதானமோ கூறுவதற்கு இடமிருந்தால் கூறிவிடுகிறேன். மற்றவற்றை அப்புறம் பேசிக் கொள்வோம்.”
என் குரலில் இருந்த கண்டிப்பு அவளுக்குப் புரிந்திருக்க வேண்டும் என்று அவள் முகபாவத்திலிருந்து எனக்குத் தெரிந்தது.
“பொதுவாகக் கூற முடிந்த விவரங்களை மட்டும் இப்போது உங்களிடம் கூறுகிறேன். மற்றவற்றை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் நீங்களே ஒரு முறை என்னோடு அல்லியூரணி கிராமத்துக்கு வரவேண்டும். இப்படி நான் அழைப்பதை அதிகாரமாகவோ, கட்டளையாகவோ நீங்கள் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒரு கதாசிரியருக்குச் சமுதாய நலனில் நிரம்ப அக்கறை உண்டு, என்று சற்று முன்பு நீங்களே கூறினீர்கள் அல்லவா? சமுதாயத்தில் சுகுணா என்கிற பெயருடன் உலவும் நானும் ஒருத்திதான். என்னுடைய வாழ்விலும் உங்களுக்கு அக்கறை இருக்க வேண்டும் என்று நான் கருதினால் அது தவறான உரிமை ஆகாதென்றே நான் நினைக்கிறேன். சகுந்தலை காலத்திலிருந்து இந்தத் தலைமுறை வரை பெண்கள் காதலிலோ, இலட்சியத்திலோ, ஏதாவதொன்றில் ஏமாறிக் கொண்டு தான் வருகிறார்கள் என்று நீங்கள் கூறினீர்கள். அந்த ஏமாற்றத்தை நானும் அடைந்து விடாமலிருக்க சமூகத்தின் மனத்துக்கு டாக்டராகிய நீங்கள் என்ன மருந்து சொல்கிறீர்கள்? அந்த மருந்தை ஏற்றுக் கொள்ள நான் இந்தக் கணமே தயாராயிருக்கிறேன்” - என்று கூறிவிட்டு என்னை நோக்கி கைகூப்பினாள் சுகுணா என்னும் அந்த யுவதி.
சுகுணா அவ்வளவு மனம் விட்டுப் பேசிய பின் அவள் மேல் கோபம் உண்டாவதற்குப் பதிலாக நிறைந்த அநுதாபம் தான் எனக்கு உண்டாயிற்று. எனக்குத் தபாலில் வந்திருந்த கடிதங்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து அவளை படிக்கச் சொன்னேன். அவள் அந்தக் கடிதங்களை ஆர்வத்தோடு படிக்கலானாள். இரண்டாவது கடிதத்திலோ, மூன்றாவது கடிதத்திலோ,
‘இலட்சியம், இலட்சியம் என்று பறந்த சுகுணாவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இன்று நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது கிராமங்களில் சுகுணா சந்தித்ததைப் போன்ற வடமலைப் பிள்ளைகளும் பிரமுகர்களும் தான் அவல வாழ்வு வாழ்ந்து கொண்டு திரிகின்றனர்’ -
என்று அந்த வாக்கியங்களை மட்டும் எனக்கும் கேட்கும்படி இரைந்து படித்துவிட்டு என் முகத்தைப் பார்த்தாள் அவள். நான் அமைதியாயிருந்து அவளுடைய அந்தப் பார்வையைத் தாங்கிக் கொண்டேன்.
“கதை எழுதுகிறவர்களும் அதைப் பற்றி அபிப்பிராயம் தெரிவித்துக் கடிதம் எழுதுகிறவர்களும், இப்படி உண்மையின் ஒரு பகுதியை மறைத்தோ மாற்றியோ தங்களுக்குத் தோன்றியபடி எழுதிக் கொண்டிருந்தால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? கிராமத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருப்பதையே மறைத்து அல்லது மறந்து எழுதுவதை என்னவென்று சொல்வது?” என்று அந்தக் கடிதத்தை மேலே படிக்காமல் கையில் வைத்துக் கொண்டே என்னைக் கேட்டாள் அவள். நான் சிரித்துக் கொண்டே அவளுக்கு மறுமொழி கூறலானேன்:-
“கதையில் நல்லவர்கள் இல்லையென்று நீங்கள் எப்படிச் சொல்லிவிட முடியும்? பட்டுப்பூச்சி கதையின் தலைவியே பலருடைய அநுதாபத்தைத் தேடிக் கொள்கிறவள் தான். அதற்கு அப்புறம் ரகுராமனைப் போன்ற இலட்சிய மனிதர்களும் இதே கதையில்தானே வருகிறார்கள்? இந்தக் கடிதங்கள் எல்லாம் கதையில் வந்த நல்ல மனிதர்களைப் பாராட்டி வந்தவைகள் என்று தான் கொள்ள வேண்டும். அவர்களுடைய தோல்விக்காகவும் துயரத்துக்காகவும் வருந்தி அனுதாப்படுகிற கடிதங்கள் என்று இவற்றைப் படிக்கும் போதே நீங்கள் உணர்ந்து கொள்ள முடியுமே?”
“முடியும் என்றே வைத்துக் கொண்டாலும் என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கதையின் தலைவியாக நானே வாய்த்திருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பதனால் தான் தயங்க வேண்டியிருக்கிறது. சில சோகமயமானக் கதைகளை படிக்கும் போது அந்தக் கதையில் சோகத்தை நிறைய அநுபவிக்கிறவர்கள் யாரோ, அவர்களாகவே என்னையே பாவித்துக் கொண்டு நான் படிப்பேன். இது என் வழக்கம். சரத்சந்திரருடைய கிரகதாகம், கு.ப.ரா.வினுடைய ஸ்டூடியோக் கதை இவைகளில் வருகிற அசலாவாகவும் நடிகை சீதாவாகவும், நான் என்னையே பாவித்துக் கொண்டு படித்திருக்கிறேன். நீங்கள் முன்பு எப்போதோ எழுதிய இரண்டு சிறு கதைகளைத் திரும்பத் திரும்பப் படித்து அப்படி தாழிட்டுக் கொண்டு தனிமையில் குமுறிக் குமுறி அழுதிருக்கிறேன் நான். உங்களுடைய அந்த இரண்டு கதைகளில் வருகிற பெண்களின் மனத்துன்பங்களை என்னுடைஅய் சொந்த துன்பங்களாகவே எண்ணி எண்ணி இன்னும் அவற்றை அநுபவித்துக் கொண்டு வருகிறேன் நான்.”
“உங்களை அழச் செய்த அந்தக் கதைகளின் பெயர்களை நான் அறிந்து கொள்ளலாம் அல்லவா? எழுத்தில் உருவாகிற கற்பனை மனிதர்களுடைய துயரங்களைத் தங்களுடைய சொந்தத் துயரமாகவே எண்ணுகிற உண்மை மனிதர்களின் தொகை அதிகமானால் அது அந்த எழுத்தை உருவாக்கியவனுக்கு வெற்றி தான். இதிலிருந்து இன்னொரு விவரமும் எனக்குத் தெரிகிறது. இந்த வருடப் புத்தாண்டு மலரில் வந்த பட்டுப்பூச்சி என்கிற கதைக்கு முன்னாலும் என்னுடைய கதைகளிலிருந்து உங்களுடைய சொந்தப் பிரச்சனைகளை நினைவு கூர்ந்து தவிக்கும் இணையான துன்ப உணர்வுகள் உங்களுக்குக் கிடைத்து வந்திருப்பதாகத் தெரிகிறது. டாக்டர்களால் தீர்க்க முடியாத நோய்கள் நம்முடைய சமுதாயத்தில் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை எழுத்தில் யாராவது எடுத்துச் சொல்லி விளக்கும் போது, “நம்மைப் போலவே இந்த நோய்களைச் சமுதாயத்திலிருந்து நீக்க இவர்களும் முயல்கிறார்கள்” - என்று அந்த எழுத்துக்கும் அதில் பாத்திரமானவர்களுக்கும் அநுதாப்படும் முனைப்பு வாசகர்களில் பலருக்கு ஏற்படுவது நியாயம் தான். சமுதாய நோய்களுக்கு மருந்து காண முடிகிறதோ, இல்லையோ, அந்த நோய்கள் இருப்பதை மறைத்து நடிப்புப் புகழ்ச்சி செய்து விடாமல் அவை இருக்கின்றன என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறோம் நாங்கள். இந்த நாட்டின் இன்றைய வாழ்க்கையில் பழமை காரணமாக வந்த நோய்களும் புதுமை காரணமாக வந்த நோய்களும் - என்று சமுதாய நோய்கள் பல விதத்தில் வளர்ந்து பெருகியுள்ளன. இதில் அல்லியூரணி கிராமத்தில் உங்களைப் பற்றிய நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்று கூற என்னால் முடியவில்லை. நீங்களே கூச்சப்படாமல் உங்கள் அனுபவங்களைக் கூறிவிட்டால் எனக்கு வசதியாயிருக்கும்...”
“என் அனுபவங்கள் இப்போது நீங்கள் என்னைச் சந்திப்பதற்கு முன்பே உங்களுடைய கதைகள் பலவற்றில் ஏற்கெனவே உங்களால் இயல்பாக எழுதப்பட்டு வந்திருக்கின்றன. அவை வந்த பின்பு அவற்றோடு என் அனுபவங்களை பெரிய நகரம் ஒன்றில் தனியார் நிர்வாகத்திலிருந்து உயர் நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணி புரிந்து வந்த காலத்தில் உங்களுடைய ‘தெருவோடு போனவன்’ - என்ற சிறுகதையைப் படித்தேன். படிக்கும் போதே அழுது கொண்டே படித்தேன் என்பதையும் மறைக்காமல் சொல்லிவிடுவது தவறில்லை. அப்போது நான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கையும், ஏறக்குறைய அந்தக் கதையில் வரும் நிகழ்ச்சிகளை ஒத்திருந்தது. ஆசைகள் பெருகுகிற மனத்தோடு ஆசைகளையே குற்றங்களாகக் கருதுகிற சமுதாயச் சூழ்நிலையில் நான் வாழ்ந்தேன். அந்தக் கதையில் நான் மனம் ஈடுபட்டு தோய்ந்ததற்கு அது ஒரு காரணம்.
“அடுத்தபடியாக நீங்கள் எழுதிய ‘முத்துச் சாவடி’ என்ற சிறுகதையில் என் மனம் தவித்தது. அந்தக் கதையில் வருகிற கனகம் என்கிற பெண் பாம்பன் பாலத்தில் மேல் இந்தோசிலோன் எக்ஸ்பிரஸ் போய்க் கொண்டிருந்த போது இரயில் கதவைத் திறந்து கொண்டு கடலில் குதித்து விட்டதாகக் கதையை முடித்திருந்தீர்கள். அதே காரியத்தை அதே இரயிலில் போகும் போது அதே இடத்தில் செய்து என் வாழ்க்கையையும் முடித்துக் கொண்டு விட வேண்டுமென்று நான் துணிந்து ஒரு சமயம் திட்டமிட்டதும் உண்டு. ஆனால், அப்படி நடக்கவில்லை. இதில் ஒரு வேறுபாடும் உண்டு. முத்துச் சாவடி என்ற உங்களுடைய கதையில் வருகிற பெண்ணைப் போல் பைத்தியம் பிடித்து சுயபுத்தி இல்லாத நிலையில் நான் பாம்பன் கடலில் குதிக்க திட்டமிடவில்லை. சுயபுத்தியோடுதான் அதைச் செய்ய நினைத்தேன். எனக்கு அப்போது பிடித்திருந்த ஒரே பைத்தியம் உடனடியாகச் சாக வேண்டும் என்ற ஆசைதான். முறை தவறிய ஆசையைக் கூட உலக வழக்கில் பைத்தியம் என்று தான் சொல்லுகிறார்கள். அப்படி உலக வழக்கில் சொல்லுவது சரியானால் அன்று எனக்குப் பிடித்திருந்ததும் ஒரு வகையான பைத்தியம் என்பதை நான் இப்போது மறுக்காமல் ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
“உங்களுடைய ‘தெருவோடு போனவன்’ கதையில் வருகிற அந்த வாத்தியாரம்மாவுக்கு ஏற்பட்ட ஆசையைப் போலச் சமூகமே கேலி செய்யத்தக்க விநோத ஆசையும் எனக்குச் சில சமயங்களிலே அந்தரங்கமாக ஏற்பட்டிருக்கிறது. ‘முத்துச் சாவடி’யில் வந்த கனகத்தைப் போல் கடலில் குதித்துச் சாக வேண்டும் என்ற ஆசையும் ஏற்பட்டிருக்கிறது. ‘குறிஞ்சி மலரி’ல் வந்த பூரணியைப் போலப் புனிதமான எண்ணங்களில் வாழ வேண்டுமென்ற ஆசையும் கோடைமழை போல் எப்போதாவது சில சமயங்களில் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அதே கதையில் வரும் மங்களேசுவரி அம்மாளின் மூத்த பெண் வசந்தாவைப் போல் சினிமாவில் சேர்ந்து என்னுடைய அழகை உலகத்துக்கு விளம்பரப்படுத்த வேண்டுமென்றும் நான் சில போதுகளில் ஆசைப்பட்டிருக்கிறேன். ‘மலைச்சிகரம்’ கதையில் வருகிற நளினியைப் போல் யாராவது ஓர் அழகிய இலட்சிய எழுத்தாளனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு புதுமை நிறைந்த வாழ்க்கையை அநுபவிக்க வேண்டுமென்றும் ஆசைப்பட்டிருக்கிறேன். கடைசியாக எனக்கு ஏற்பட்ட அநுபவங்களும் பட்டுப்பூச்சியின் கதாநாயகிக்கு ஏற்பட்ட அநுபவங்கள் தான்.”
எதிரே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருந்த சுகுணா இப்படி ஆர்வத்தோடு பேசிக் கொண்டே இருந்தாள். அவளை அழ வைத்ததாகவும் அவளைச் சாகத் தூண்டியதாகவும் அவளே குறிப்பிட்ட என்னுடைய கதைகளை நானே எழுதிய காலத்துச் சூழ்நிலையை எண்ண முயன்றேன் நான். என்னுடைய கதாநாயகிகள் ஒவ்வொருத்தியும் தனித்தனித் துன்பங்களாகவோ, தனித்தனி அனுபவங்களாகவோ, அடைந்திருக்கிற வாழ்க்கையை இதோ இப்போது என் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிற சுகுணா தான் ஒருத்தியாகவே தனித்தனிக் காலங்களில் அடைந்திருக்கிறாள். இப்படி வேறுபாடும் மாறுபாடும் உள்ள பலவிதமான அநுபவங்களை அடைந்திருக்கிற வாழ்க்கை சுவாரஸ்யம் நிறைந்தது என்பதில் சந்தேகம் இருக்க முடியாது என்று எண்ணினேன் நான். அந்தச் சமயத்தில் என் மனைவி வந்து எங்கள் இருவரையும் சாப்பிட அழைத்தாள். இருவரும் சாப்பிடுவதற்காக உள்ளே எழுந்து போனோம். சாப்பிடும் போதே அவளை அழ வைத்த கதையையும் அவளைச் சாகத் தூண்டிய கதையையும் முன்பு நான் படைத்தபடியே மறுபடி நினைத்துப் பார்க்கலானேன். நான் அந்தக் கதைகளில் எழுப்பியிருந்த பிரச்னைகள் சமூக நோய்களைப் பற்றியவை.
கையில் மணிக்கட்டின் மேல் கடிகாரம் ஓடிக் கொண்டு இருந்தது. அப்படித்தான் வாழ்க்கையும் தெருவில் யாரோ சாவி கொடுத்து முடுக்கி விட்ட மாதிரி ஓடிக் கொண்டிருந்தது. நவராத்திரிக் கொலுவுக்கு வீட்டுக்கு வீடு போகும் பெண்கள், பட்டுப்பூச்சி மாதிரித் தெருவில் அங்கும் இங்கும் போய் வந்து கொண்டிருந்தனர். பூக்காரப் பையன்கள், ரிக்ஷா வண்டிகள், கார்கள், பாதசாரிகள், தெரு அதிர ஓடும் லாரிகள் எல்லாம் என் கண்களுக்கு முன் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.
“டீச்சர்! டீச்சர்! கதவைத் திறங்க டீச்சர்” அப்போதுதான் செடியிலிருந்து கொய்து கொண்டு வந்த ரோஜா மலர் போல, ஆறு வயதுச் சிறுமி ஒருத்தி கையில் குங்கும்ச் சிமிழோடு என் வீட்டுக் கதவைத் தட்டினாள்.
என் தோளிலிருந்து நழுவிய வெள்ளைப் புடவையை நேர் செய்து கொண்டு, ஜன்னலோரத்திலிருந்து எழுந்து போய் வாசற் கதவைத் திறந்தேன்.
“குங்குமம் எடுத்துக்குங்க டீச்சர்! எங்க வீட்டிலே கொலு... நான் கிருஷ்ணர் வேஷம் போட்டுக் கொண்டு டான்ஸ் ஆடப் போகிறேன்... நீங்க அவசியம் அதைப் பார்க்க வரணும்...”
என்னைக் குங்குமம் எடுத்துக் கொள்ளச் சொல்லி அந்தக் குழந்தை கூறியதும் எனக்குச் சுரீரென்று இதயம் அடி வாங்கியது போல வலித்தது. கண்ணோரங்களில் ஈரமும் கசிந்து விட்டது.
“நான் குங்குமம் வைத்துக் கொள்ளக்கூடாது குழந்தே! உன் டான்ஸைப் பார்க்கிறதுக்குக் கட்டாயம் வரேன். நீ சமர்த்தோ இல்லியோ! அடுத்த வீட்டிலே போய்க் குங்குமம் கொடு!... எனக்கு வேண்டாம்...”
“ஐயய்யோ! இதென்ன டீச்சர்! எங்க அம்மா ஒங்க மாதிரித் தானே இருக்காங்க! அம்மா ரெண்டு மூணு தரம் முகத்தைச் சோப்புப் போட்டு அலம்பி விட்டு குங்குமப் பொட்டி வச்சுக்கறாங்களே? நீங்க மட்டும் ஏன் வச்சுக்கப் படாது?”
“நான் அதுக்குக் கொடுத்து வைக்கலியே அம்மா! என்ன செய்யறது?”
“குங்குமப் பொட்டு வச்சிக்கிட்டா உங்க முகத்துக்கு எவ்வளவு நல்லாயிருக்கும் தெரியுமா? கொஞ்சம் உக்காருங்க டீச்சர்! நானே வச்சு விட்டுடறேன்...”
துறுதுறு வென்று இருந்த அந்தக் குழந்தையின் மலர்ந்த விழிகள், அகன்று விரிந்து ஆவலோடு என் முகத்தைக் கெஞ்சுகிற பாவனையில் ஊடுருவி நோக்கின. அதன் ஆசைக்கு இணங்காமல் ஏமாற்றுவது பெரிய பாவம் போலத் தோன்றியது எனக்கு.
நான் பூவையும், மஞ்சளையும், குங்குமத்தையும் இழந்தவள். அந்தக் குழந்தை அவற்றின் நிறைவான, மங்கலமயமான பவித்திரம் செறிந்த வாழ்வை நோக்கி மெல்ல வளர்ந்து கொண்டிருப்பவள். என் பயங்கரத்தை - என் சோகத்தை - என் அமங்கலத்தை அதற்குப் புரிய வைக்க முயற்சி செய்வதை விட, அதன் கெஞ்சுதலுக்குத்தான் தாற்காலிகமாக நான் பணிந்து விட்டால் என்ன? குழந்தையையும் தெய்வத்தையும் ஏமாற்றக் கூடாது. அப்படி ஏமாற்றும் போது நாம் நம்மையே நமக்குத் தெரியாமல் ஏமாற்றிக் கொள்கிறோம் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன்.
பாவமோ புண்ணியமோ, ஆகுமோ ஆகாதோ? அவற்றை யெல்லாம் பற்றி எனக்குக் கவலை இல்லை. அந்தக் குழந்தை ஏமாந்து போய் நிராசையோடு திரும்பக் கூடாது. அதுதான் எனக்கு முக்கியம். நான் அதன் விருப்பத்துக்கு இணங்கத் தீர்மானித்து விட்டேன்.
கீழே குனிந்து உட்கார்ந்தேன். என் நெற்றி அந்தப் புன்னகை நிறைந்த குழந்தையின் முகத்தை நோக்கி அண்ணாந்தது. தளதளவென்றிருந்த அந்தப் பிஞ்சுக் கையின் விரல்கள் ஆவலோடு குங்குமச் சிமிழில் நுழைந்தன. என் நெற்றி சிலிர்த்தது. பயங்கரமும் புளக்கமும் சமமாக விரவிய ஓர் உணர்வின் சலனம், என் உடல் முழுவதும் பரவியது. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன! அந்த இளம் உள்ளத்தின் திருப்திக்காகவே முதிர்ந்து மரத்துப் போன என் மனத்தின் வேதனைகளை அடக்கிக் கொண்டு நான் அப்போது சிரிக்க முயன்றேன்.
தினம் தினம் நான் பணிபுரியும் பள்ளிக்கூடத்தில் படிக்க வரும் எண்ணற்ற குழந்தைகளைப் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது காண்கிறேன். அப்போதெல்லாம் என்னுடைய மனத்தில் சாதாரணமாக வெறும் சாந்தி மட்டும் தான் நிலவுகிறது. ஆனால்...? இந்தக் குழந்தை!... இது தெய்வலோகத்தில் படைப்பின் திறன் எல்லாம் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஓர் அற்புதமான மலர். இதயத்தின் நிராசைகளையெல்லாம் அழித்து நெஞ்ச விளிம்பில் பொங்கும் ஆசைக் குமுறலை வளர்க்கும் நிர்மாலியம் இது!
மாதுளை அரும்பு போன்ற அந்தப் பிஞ்சு விரல்கள், என் சூனிய நெற்றியை நெருடின. குங்குமம் என்னுடைய புருவங்களில் சிதறி விழுந்தது.
“எப்படி டீச்சர்? கண்ணாடியிலே போய்ப் பாருங்க... நல்லாப் பொட்டு வச்சிருக்கேன்.”
“ஆகட்டும்! கட்டாயம் நான் கண்ணாடியிலே பார்க்கிறேன். நீ... போயிட்டு வரியா?”
“நீங்க கட்டாயம் கொலுவுக்கு வரணும்! மறந்துடப்படாது.”
“அவசியம் வரேன். வந்து உன் டான்சைப் பார்க்க வேண்டாமா?”
பூமியில் உருள்கிற சண்பகப் பூப்பந்து போல அந்தச் சிறுமி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே குங்குமச் சிமிழோடு படியிறங்கி அடுத்த வீட்டிற்குள் போனாள். வாசல் கதவைச் சாத்திவிட்டு, மறுபடியும் ஜன்னலோரத்து நாற்காலியில் போய்ச் சாய்ந்தேன். எதிரே நாற்காலி நிறையப் பள்ளிக்கூடத்துக் ‘காம்போஸிஷன்’ நோட்டுக்கள். அருகே சிவப்பு மை நிறைந்த மைக்கூடு! கட்டைப் பேனா! கைக்கடிகாரத்தில் ஏழு மணி ஆகியிருந்தது. வழக்கமாக ‘டியூஷனுக்கு’ வருகிற பெண்களை, இன்று இன்னும் காணவில்லை.
இந்த உலகத்தில் எனக்கென்று வாழ எதுவும் இல்லை. வெள்ளை வாயில் புடவையைப் புரளப் புரளக் கட்டிக் கொண்டு கால் செருப்புத் தேயப் பள்ளிக்கூடத்துக்குப் போய்விட்டு வரும் இந்த உத்தியோகந்தான், என்னுடைய ஆசையின் ஒரே சாதனம். வாழ்வு அழிந்து விட்டது; வருடங்கள் பல கழிந்து விட்டன; ஆனால், ஆசை அழியவில்லை. உள்ளத்தால் விதவையாக, உடம்பால் வாத்தியாரம்மாவாகக் காலம் போய்க் கொண்டிருக்கிறது. காலத்தோடு காலமாக நானும் போய்க் கொண்டிருக்கிறேன். ஏதோ சிறையிலிருப்பது போன்ற வாழ்வு. ஒருத்தி மட்டும் வசிக்கத் தேவையில்லாத பெரிய வீடு. ஒடுங்கிப் போன வாழ்வின் சிறிய பிம்பம் தான் நான். உயிரோடு பிணமாக உலாவி வருகிறேன். மனத்தின் சாந்தியை மங்காமல் காப்பாற்றும் இந்த உத்தியோகமும் இல்லை என்றால், என்றைக்கோ, தூக்குக் கயிறோ, கொல்லைக் கிணறோ, இந்த ஏழையின் உயிரினைப் பலி கொண்டு போயிருக்கலாம்.
இதில் வியப்பென்ன? பயங்கரமென்ன? வாழ முடியாதவர்களுக்கு, எல்லைக்கு அப்பால் பிடித்துத் தள்ளப்பட்டவர்களுக்குச் சாவு ஒரு சஞ்சீவி அல்லவா?
வாசலில் மறுபடியும் யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
“டீச்சர்! டீச்சர்!... கதவைத் திறங்க டீச்சர்.”
எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தேன். என் மாணவிகள் குஞ்சுவும் ராஜமும் தான் வந்திருந்தார்கள்.
“என்னடீ இது? நீங்க டியூஷன் படிக்கப் புஸ்தகம் கொண்டு வரலியா?”
“இல்லே டீச்சர்.”
“இப்ப என்ன காரியமா வந்தீங்க ரெண்டு பேரும்?”
ராஜமும் குஞ்சுவும் பதில் சொல்லாமல் என் முகத்தையே வெறித்து வெறித்துப் பார்த்தனர். பின்பு தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“என்னடீ? என் முகத்திலே ஏதாவது எழுதி ஒட்டியிருக்கா? கேட்டதுக்குப் பதில் சொல்லாமே ரெண்டு பேரும் இப்படிப் பார்க்கிறீங்க...?”
“இல்லே டீச்சர்... நீங்க ஒரு நாளும் நெத்தியிலே குங்குமம் வச்சுக்க மாட்டீங்களே?... இன்னிக்கு மட்டும் வச்சிக்கிட்டிருக்கீங்களே...?”
என் தவறு எனக்கு அப்போதுதான் புரிந்தது. அந்தக் குழந்தை போனதும் அதை நான் அழித்திருக்க வேண்டும். எனக்கு மறந்து போய்விட்டது. என்ன மறதி? - எனக்கு வெட்கமாயிருந்தது.
“ஓ! இதைச் சொல்றீங்களா?... இது வந்து... இதை ஒரு குழந்தை விளையாட்டுக்காக வற்புறுத்தி இட்டுட்டுப் போச்சு...”
என்று சொல்லிக் கொண்டே அவசர அவசரமாக நான் அதை அழித்தேன்.
“ஏன் டீச்சர் அழிச்சிட்டீங்க? உங்க நெத்திக்கு அழகா இருந்ததே?”
“அது சரி, நீங்க வந்த காரியத்தைச் சொல்லுங்க.”
“நவராத்திரி முடிகிற வரைக்கும் வீட்டில் கொலுவுக்கு இருக்கணுமாம். ‘டியூஷன்’ வேண்டாம்னு எங்க அம்மா சொல்லச் சொன்னாங்க...”
“சரி! போயிட்டு வாங்க... அப்போ இன்னும் ஏழெட்டு நாளைக்கு ‘டியூஷனுக்கு’ வர மாட்டீங்க இல்லையா?”
“ஆமாம்! டீச்சர்...”
தலைநிறைய மல்லிகைப்பூ கொத்துக் கொத்தாக அசைய சடைக் குஞ்சலங்கள் ஆட ராஜமும் குஞ்சுவும் தெருத் திரும்பி நடந்து மறைந்தார்கள்.
என் நெற்றிப் பொட்டை நான் அழித்து விட்டேன். மீண்டும் ஒரு பிரமை! அந்தக் குழந்தையின் பட்டுக் கையிலுள்ள பிஞ்சு விரல்கள், என் நெற்றியில் அழுத்தி அழுத்திக் குங்குமத்தைத் தேய்ப்பது போல ஓர் உணர்வு. சுருட்டை சுருட்டையாக மயிர் புரளும் முன் நெற்றிக்கும் அடர்ந்த புருவங்களுக்கும் இடையே அந்த உணர்வின் விளைவாக ஒரு கிளுகிளுப்பு ஊடுருவிக் கொண்டிருந்தது. எண்ணங்களின் அடக்க முடியாத வேகம். சிறைப்பட்ட தண்ணீர் உடைத்துக் கொண்டு பெருகுவது போல, இதய வெளியில் பெருகிப் பாய்ந்து கொண்டிருந்தது.
ஒரு பெண் கல்யாணமாகாமல் அனாதையாக வாழ்ந்து விடலாம். கல்யாணம் ஆன பின் கணவனுக்கு முந்திக் கொண்டும் இறந்து விடலாம். ஆனால் வாழ வேண்டிய பருவத்தில், வாழ்கிறவர்களுக்கு நடுவே, வாழாதவளாக ‘விதவை’ - என்ற பேரில் உயிரோடிருப்பதைப் போலச் சித்திரவதை வேறில்லை. கதாசிரியர்கள் கதைகளில் எழுதுவதையும் விட நிஜமான அதிகத் துயரம் ஒரு விதவையின் வாழ்க்கை அனுபவத்தில் இருக்கிறது. பூக்குவியல்களுக்கு நடுவே கிடந்து புரளும் சுகம் போல், யௌவன மலர்களாகிய பெண்களின் பள்ளிக்கூடத்தில் படிப்பும் பாட்டும் சொல்லிக் கொடுக்கும் வேலையை ஏற்றுக் கொண்டேனோ இல்லையோ, நான் அதனால் தான் பிழைத்தேன்! மனம் வழி தவறிய ஆசைகளின் ஒழுங்கற்ற மார்க்கங்களிலோ ஆசைகளின் கொட்டத்துக்கும் முடிவு கட்டும் சாவிலோ சொல்லாமல், வாழப் பொறுத்துக் கொண்டு செல்வதற்குக் காரணம் இந்தக் குழந்தைகளின் முகம் தான்.
எனக்கு இன்னும் பத்துப் பன்னிரண்டு நாட்களுக்குப் பள்ளிக்கூடம் கிடையாது. தசரா விடுமுறை. ராஜமும் குஞ்சுவும் கூட ‘டியூஷனுக்கு வருவதற்கில்லை’ என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்கள்.
தனிமை! தனிமை!! இந்தப் பெரிய வீட்டில், என் சிறிய உள்ளம் அலை மோதும் ஏக்கத்தினிடையே எப்படித்தான் தத்தளிக்கப் போகிறதோ? எண்ணங்களை எண்ணிப் பார்ப்பதற்கே நேரமில்லாமல், மனத்தை மற்றவர்களுக்கு நடுவே அவர்களுடைய கோலாகலத்தில் மூழ்கச் செய்து விட்டால், நம் வாழ்வின் அமங்கலமான பயங்கரம், தனிமையின் ஏக்கம் எல்லாம் மறைந்து விடும்; போர்வையால் உடலை மூடிக் கொண்டதும், அதுவரை வெடவெடக்கச் செய்து கொண்டிருந்த குளிர் மறைந்து விடுகிற மாதிரி!
கண்களைச் சொருகிக் கொண்டு வந்தது. தூக்கம் இமை வழியே கனமாக இறங்கிக் கொண்டிருந்தது. மணி ஒன்பது கூட ஆகவில்லை. வழக்கமாகத் தூங்குகின்ற நேரமும் இல்லை அது! ஆனால் என்னவோ தெரியவில்லை! காரணத்தைச் சொல்லிக் கொண்டா வருகிறது தூக்கம்? அப்படியே நாற்காலியில் தலைமைச் சாய்த்தேன்.
சாப்பாடு?... இன்று அதைப் பற்றிய ஞாபகமே எனக்கு உண்டாகவில்லை. ஜன்னல் வழியே புகுந்த தெருவோரத்துப் பன்னீர் மரத்தின் குளுமையான வாசனை நிறைந்த காற்று, முகத்தில் ஜிலுஜிலுவென்று விளையாடியது. இந்தக் காற்றின் ஸ்பரிச சுகத்திற்கு வேறு உவமை சொல்ல வேண்டுமானால் அந்தக் குழந்தையின் பிஞ்சு விரல்கள் என் நெற்றியில் அழுத்திக் குங்குமப் பொட்டு இட்டனவே; அந்த ஸ்பரிச சுகத்தைத் தான் சொல்ல வேண்டும்! ஏதேதோ நினைத்தபடியே இறுதியில் நினைவுகளும் சேர்ந்து நன்றாகத் தூக்கி விடுகிறேன் நான். தூக்கத்தில் எனக்கு ஒரு கனவு.
நெற்றியில் பளபளவென்று கருமை மின்னும் சாந்துப் பொட்டு வைத்துக் கொள்கிறேன். நாசித் துவாரங்களைக் கவர்ந்து தெய்வலோகத்திற்கே இழுத்துச் செல்லும் மணம் மிக்க குடை மல்லிகைச் சரத்தைப் பந்து பந்தாகச் சுருட்டித் தலையில் வைத்துக் கொள்கிறேன். ரோஜா நிற ஜார்ஜெட் புடவை என் உடலில் பட்டும் படாதது போல மென்மையாக ஒட்டிக் கொண்டிருந்தது. கையில் தேங்காய் பழக்கூடையை எடுத்துக் கொண்டு, கோயிலுக்குப் போய் அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறேன்.
கோவில் வாசலில் யாரோ ஒரு சிறுமி இரைந்து கத்தி என்னைக் கூப்பிடுகிறாள். திரும்பிப் பார்க்கிறேன். கையில் எண்ணெய்க் கிண்ணத்துடன் அந்தச் சிறுமி சிரித்துக் கொண்டு நிற்கிறாள்.
“டீச்சர்! டீச்சர்! இப்ப நீங்க எவ்வளவு அழகா இருக்கீங்க தெரியுமா? எங்க அம்மா கூட இவ்வளவு நல்ல அழகு இல்லே.”
என்னுடைய அழகின் அளவுக்கு வரம்பு கட்டி விடுகிறவளைப் போல, அந்தச் சிறுமி இரண்டு கையையும் நீட்டி விரித்து உதடுகளைக் குவிய வைத்துக் கொண்டு தன் மழலைச் சொற்களில் கூறும் அழகுக்கு நடிப்பே போல மலர மலரக் கண்களை விழிக்கிறாள்.
குழந்தை அப்படிக் கையை விரித்த போது, வலது கையிலிருந்த எண்ணெய்க் கிண்ணம் கீழே விழுந்து எண்ணெய் கொட்டி விடுகிறது.
“ஐயையோ! எண்ணெய் கொட்டிடுச்சே டீச்சர்! எங்கம்மா கோவில் விளக்கிலே விட்டுட்டு வரச்சொன்னாளே... இன்னிக்கு நான் வீட்டுக்குப் போய் அடிதான் வாங்கப் போறேன்.”
“வெளக்குலே விட்டுட்டேன்னு உங்க அம்மா கிட்டப் போய்ப் பொய் சொல்லிடேன்!”
“பொய் சொல்லப்படாது டீச்சர்! அம்பாள் பொய் சொன்னாக் கண்ணை அவிச்சுப்பிடுவா! அப்புறம் பாவம்...”
சிறுமியின் கண்களில் உலகெங்கும் தேடினாலும் காணக் கிடைக்காத பயபக்தியின் சாயல் மின்னுகிறது. சத்தியம் தெரிகிறது.
“அழாதே! வாசலிலே எண்ணெய்க் கடை இருக்கு இந்தா; இந்தக் காசைக் கொண்டு போய்க் கொடுத்து கிண்ணத்திலே எண்ணெய் வாங்கிக் கொண்டு வா... அது வரை உனக்காக நான் இங்கேயே நிற்கிறேன்.”
ஒரு முழு ஓரணா நாணயத்தை அந்தக் குழந்தையின் கையில் எடுத்து வைக்கிறேன்.
தங்கக் குத்துவிளக்கு ஒன்று, கையும் காலும் பெற்று ஓடுகிற மாதிரி ‘குடுகுடு’ வென்று கிண்ணத்தோடு கோயில் வாசலிலிருந்து கடையை நோக்கி ஓடுகிறாள் அந்தச் சிறுமி.
அவள் கிண்ணத்தில் எண்ணெயை வாங்கிக் கொண்டு திரும்பி ஓடி வருகிறாள். சிறுமியின் கையைப் பிடித்துக் கொண்டு அம்மன் சந்நிதிக்குள் நுழைகிறேன். கோவில் மணி பாவத்தின் மேல் விழும் சவுக்கடியைப் போலக் கணீர் கணீரென்று முழங்குகிறது. இவ்வளவில் அந்தக் கனவும் கலைந்து விடுகிறது.
தூக்கம் கலைந்து நான் விழித்துக் கொண்டு விட்டேன். தொலைவிலிருந்த மாதாகோவில் கால அறிவிப்பு மணி, பன்னிரண்டு முறை அடித்து ஒலி அலைகள் சுழன்று சுழன்று ஒடுங்கி ஓய்ந்து கொண்டிருந்தன. மணியடித்து ஓய்ந்த பின்பும், ஒலியின் அலைகள் சிறிது நேரம் ஓயாமல் ‘செவித்துளைகளில் கிணு கிணு’த்துக் கொண்டிருந்தன. என் கனவு கலைந்து விட்டது. கனவைப் பற்றிய இனிய நினைவுகள் மட்டும் மனத்திலிருந்து இன்னும் கலையவேயில்லை! ஓசை ஓய்ந்து விட்டது. ஆசை ஓயவில்லை! மனம் மரத்தும் போய்விட்டது. நினைவுகள் மரத்துப் போகவில்லை விந்தைதான்!... நான் மயக்கமான மனநிலையோடு இருந்தேன்.
விளக்குகளை அணைத்து விட்டுப் படுக்கையை விரித்துப் படுத்தேன். சுற்றிலும் நித்திரைக்கு நடை பாவாடை விரித்து வைத்தது போல ஒரே இருட்டு. ஜன்னலுக்கு வெளியே தெரு விளக்குகள் உறங்காமல் ஒடுங்காமல் கடமை வீரர்களைப் போல, எரிந்து கொண்டிருந்தன. என்னைச் சுற்றிலும் இருட்டு. இருட்டைச் சுற்றிலும் நான்! இருளில் உறங்கும் இருளைப் போல வராத உறக்கத்தை வரவழைக்க முயன்று வலியக் கண்களை மூடிக் கொண்டு தூங்கி விடப் பார்த்தேன். கவலைக்கும் உறக்கத்திற்கும் என்ன பகைமையோ, தெரியவில்லை! உறக்கம் வருவதற்கு மறுத்தது.
மறுநாள் காலை பொழுது விடிந்தது. விடிந்த வேகத்தில் வளர்ந்தது. காலை நண்பகலாகி, நண்பகள் பிற்பகலாகி, பிற்பகல் மாலை என்று பெருங்கிடங்கில் வந்து தேங்கியது.
“டீச்சர்!... டீச்சர்!... கதவைத் திறங்க டீச்சர்!”
வரத்தை நாடி ஓடும் பக்தனைப் போல நான் ஓடிப் போய்க் கதவைத் திறந்தேன். அந்தத் தெய்வீக குழந்தை கையில் குங்குமச் சிமிழோடு எனக்கு எதிரே வந்து நின்று கொண்டிருந்தாள்.
நான் நேற்றுப் போலவே மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டேன். சிறுமி சிரித்துக் கொண்டே என் புருவங்களுக்கிடையே குங்குமம் தோய்ந்த தன் பிஞ்சு விரல்களை வைத்து அழுத்தினாள். என் நெற்றி நரம்புகளுக்குள் ‘குபுகுபு’வென்று மின்சாரத்தை அள்ளிப் பாய்ச்சியது அந்த ஸ்பரிசம். அவளுக்குச் சந்தோஷம் நிலை தாங்கவில்லை. பிஞ்சு உதடுகளில் சிரிப்பு மலர்ந்தது. அவளோடு சேர்ந்து கொண்டு நானும் சிரித்தேன். மீண்டும் என்னைக் கொலுவுக்கு வரச் சொல்லி வற்புறுத்தி விட்டுப் போய் சேர்ந்தாள் அந்தச் சிறுமி.
திறந்த கதவை அடைந்தேன்! இதயத்தையும் நினைத்த போதெல்லாம் இப்படி அடைத்து விட முடியுமானால், எவ்வளவு நன்றாக இருக்கும்? ஜன்னலோரத்து நாற்காலிக்கு என் உடம்பை அடைக்கலமாகக் கொடுத்தேன்.
தெருவோரத்துக் காட்சிகளை என் கண்கள் காண்பதற்குப் பிடித்துக் கொண்டன.
சாரிசாரியாக நகைகளும் புதுப் புடவைகளும் மின்ன, நெற்றி நிறையத் திலகமும், தலைநிறையப் பூவுமாகக் கொலு வீடுகளுக்குப் போய் விட்டு வரும் பெண்கள், தெருவை நிறைத்துச் சென்று கொண்டிருந்தனர். தெரு நிறையப் பட்டுப்பூச்சிகள் பறப்பது போல, ராஜமும் குஞ்சுவும் வந்து கதவைத் தட்டினார்கள். ஏதோ கல்யாணப் பெண்கள் மாதிரி உடலெல்லாம் மினுமினுக்க, அலங்காரம் செய்து கொண்டு தலைநிறையப் பூவோடு வந்து நின்றார்கள் அந்த மாணவிகள்.
தங்கள் வீட்டில் கொலுவுக்குச் செய்தது என்று ஏதோ தின்பண்டங்களைக் கொண்டு வந்து உள்ளே வைத்துவிட்டு அவர்கள் விடை பெற்றுக் கொண்டு போனார்கள். தெருவில் பூ விற்றுக் கொண்டு வருகிறவனின் குரல் ஒலித்தது.
“மல்லிகைப்பூ! மல்லிகைப்பூ! முழம் அரையணாத்தான்...”
என் இதயத்தில் அந்தரங்கமான மூலை யொன்றில் வெட்கத்தை மறந்து விட்ட தனிமையின் துணிவில் ஒரு சிறு ஆசை துளிர்ந்தது.
“ஏய், பூ! இங்கே கொண்டா...”
எனக்கு எங்கிருந்துதான் அவ்வளவு துணிச்சல் வந்ததோ எனக்கே தெரியவில்லை! அவனைத் தைரியமாகக் கூப்பிட்டு விட்டேன்.
“யாரும்மா? நீங்களா கூப்பிட்டீங்க?”
“ஆமாம், வா...”
பூக்காரன் என்னை ஒரு தினுசாகப் பார்த்துக் கொண்டே கூடையை என் வீட்டு வாசலில் கொண்டு வந்து இறக்கினான்.
“நாலு முழம் நல்ல மல்லிகைப் பூவாப் பார்த்துக் கொடு...”
அவன் பூவைக் கொடுத்தான். நான் காசைக் கொடுத்தேன். வியாபாரம் முடிந்த மாதிரித்தான். ஆனால், முடியவில்லை. அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.
“ஏம்மா! உங்க வீட்டுக்கு வேறே யாராச்சும் வந்திருக்காங்களா?”
“ஏன்? எதற்காக இப்படிக் கேட்கிறே நீ...?”
“இல்லே! என்னைக்கு மில்லாத வழக்கமா, இன்னைக்கி நீங்க பூ வாங்கினீங்களே, அதனாலே தான் கேட்டேன். நீங்க தான் பூ வச்சுக்க மாட்டீங்களேம்மா?” - இதைக் கேட்டு விட்டு அவன் போய்விட்டான்!
பூவோடு ஓர் அர்த்தம் நிறைந்த கேள்விகளையும் என்னிடம் தொடுத்துக் கொடுத்து விட்டுப் போய்விட்டான். என் இதயத்தின் அடி விளிம்பில் ஜிலுஜிலுவென்று ஆடிக் கொண்டிருந்த ஆசையின் இளந்தளிர், வெடவெடவென்று நடங்கியது. அவன் கொடுத்த இந்தப் பூவை வைத்துக் கொள்ள இடமுண்டு. தலையிருக்கிறது! அதுவும் இல்லாவிட்டால் தரை இருக்கவே இருக்கிறது. அவன் கேட்டானே அந்தக் கேள்வி?... அதை வைத்துக் கொள்ள என்னிடம் இடம் ஏது? எங்கே வைத்துக் கொள்வேன்? இதயத்தில் வைத்துக் கொண்டால் அந்தக் கேள்வியின் சூட்டிலே இதயம் வெந்து போய்விடுமே! சிறிது நேரம் இப்படி என்னுள் மனப் போராட்டம் ஒன்று நிகழ்ந்தது.
முடிவில் என் ஆசைக்குத்தான் வெற்றி! தொலை தூரத்தில் ஒலி மங்கிப் போய்க் கொண்டிருந்த, ‘மல்லிகைப்பூ, மல்லிகைப்பூ...’ என்னும் அவனுடைய குரலில் ஒடுங்கிய தொனியைப் போலவே, அவன் என்னைக் கேட்டிருந்த அந்தக் கேள்வியும் ஒடுங்கிப் போய் அழிந்து விட்டது.
என் வீட்டுக் கதவை உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டேன். உள்ளே போய் அலமாரியைத் திறந்தேன். மழைக் காலத்து அருவியின் பிரவாகத்தைப் போலக் கள்ளத்தனமான அந்த ஆசை என்னுடைய உள்ளத்தைச் சிறியதாக்கி விட்டுத் தான் மட்டும் அடங்காப்பிடாரித் தனமாகப் பெரிதாகிக் கொண்டிருந்தது. நானோ, என்னுடைய மனமோ முயன்றாலும் அடக்க முடியாதபடி பெரிதாகிக் கொண்டிருந்தது அந்த ஆசை. எனக்கு எதிரே இருந்த பெரிய நிலைக் கண்ணாடி, வஞ்சகமில்லாமல் என்னுடைய இருபத்தெட்டு வயது வாலிபத்தின் பெண்மை அழகை அப்படியே எனக்குக் காட்டியது. என்றோ நடந்து, என்றோ பாழாகவும் போன எனது கல்யாண கூறைப் புடைவையை, நடுங்கும் கைகளால் பிரித்துக் கட்டிக் கொண்டேன். அலமாரிக்குள் கைப்பெட்டி நிறைய அடைபட்டுக் கிடந்த எல்லாப் பொன் நகைகளும் என் உடலில் தத்தமக்குரிய பதவிகளை அடைந்தன. என் காதுகளில் வைரத்தோடுகள் மின்னின. கழுத்தில் ‘நெக்லெஸ்’ இரட்டை வடம் சங்கிலி, காசுமாலை, கை நிறைப் பொன் வளையல்கள், மூக்கில் சுடர் தெறிக்கும் மூக்குத்தி, நெற்றியில் அந்தக் குழந்தை கீறி விட்டுப் போன மெல்லிய குங்குமக் கீறல், தலையை வட்டமாக முடிந்து கட்டிப் பிச்சோடப் போட்டு, நாலு முழம் மல்லிகைப் பூவையும் சந்திர பிறை போல் அழகுறச் சூட்டிக் கொண்டேன். நான் சுமங்கலியாக மாறி நிற்கிற என் உருவத்தைக் கண்ணாடி எனக்கே பிரதிபலித்தது.
பூச்சூட்டிக் கொள்ளும் போது மட்டும் கைகள் கொஞ்சம் நடுங்கின! பூக்காரன் கேட்டு விட்டுப் போன அந்தக் கேள்வி...? சாட்டையைச் சொடுக்கி உதறியது போல அது மனத்தில் ஒரு மின்வெட்டாகப் பாய்ந்து வெட்டியது!
இந்த நிலைக்கண்ணாடி வாழ்க! வெள்ளைப் புடவையும் மூளிக் காதுகளுமாக இதுவரை பாலைவனம் போலிருந்த என்னைப் பத்தே நிமிஷங்களில் யௌவனம் ததும்பி வழியும் பருவ அழகு நிரம்பிய சுமங்கலியாகக் காட்டி விட்டதே? இப்படியே தெருவில் இறங்கி நடந்தால் நான் விதவை என்று சத்தியம் செய்தால் கூட அதை யாரும் நம்ப மாட்டார்களே? கனமான பட்டுப் புடவை, வழுக்கலும் மொட மொடப்புமாக என் உடம்பை யாரோ மென்மையாய்க் கட்டித் தழுவுகிற மாதிரி எவ்வளவு இதமாக இருக்கிறது! என்னை யறியாமலே என் வாய், தானாக ஒரு புன்னகையை மலரச் செய்து இதழ்களின் ஓரங்களிடையே நளினமாய் நழுவ விட்டது! கண்ணாடியில் பார்க்கிற போது, அந்தப் புன்னகை அதைப் படைத்துக் கொண்டவளாகிய என்னையே ஒரு மயக்கு மயக்கிக் கிறங்க வைத்தது.
அலமாரியைச் சாத்திவிட்டுக் கண்ணாடிக்கு முன்பிருந்து கூடத்துப் பக்கம் வந்தேன்! கையில் லேடீஸ் வாட்ச்சின் - சிறிய மணி எண்கள் தெரியவில்லை. விளக்கைப் போட்டு மணிக்கட்டை உயர்த்திக் கைக்கடிகாரத்தில் மணி பார்த்தேன். ஏழரை மணி ஆகியிருந்தது.
சில நிமிஷங்களுக்குள் வாழ்க்கையின் ஓரத்தில் ஒதுங்கியிருந்த அல்லது ஒதுக்கப்பட்டிருந்த என்னுடைய எல்லா அமங்கலங்களும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டதாக ஒரு பிரமை எனக்கு ஏற்பட்டது. அதற்குப் பதிலாக இதுவரை எனக்குக் கிடைக்காமல் இருந்த அல்லது கிடைக்க விடாமல் தடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சகல சௌபாக்கியங்களும் பூரணமாகக் கிடைத்து நான் சுமங்கலியாக வாழ்வின் பசுமையான மலையுச்சியில் நிற்பதாக ஒரு எண்ண மிதப்பில் நீந்திக் கொண்டிருந்தேன். உடல் முழுவதும் - உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இன்னதென்று இனம் கூறும் வரம்பில் அடங்காத - அடக்கவும் முடியாத ஒரு பூரிப்புக் கிளுகிளுத்துக் கொண்டிருந்தது. நானோ முயன்று விரும்பி ஏற்படுத்திக் கொண்ட சௌபாக்கியங்களோடு நின்றேன் நான்.
என் கைகளில் வளைகள் குலுங்கின. காதுத் தோடுகளின் ஒளிச் சிதறல் சுனைநீரில் சூரிய ஒளிபோல் டாலடித்தது. நடந்து போய் அப்படியே ஜன்னலருகே நாற்காலியில் பொத்தென்று உட்கார்ந்தேன். வீடு நிறைய எல்லா மின்சார விளக்குகளும் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தன. தெருவைப் பார்த்து இருந்த பெரிய ஜன்னல், முழுமையாகத் திறந்து கிடந்தது. அந்த ஒளி வெள்ளத்தின் இடையே மங்கலமயமான எண்ணத் தோணியின் மிதப்பில், எங்கோ கண் காணாத வாழ்வின் பூரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக, ஒரு சொப்பன - அவஸ்தையில் நினைவுள்ள போதே அமுங்கி ஆழ்ந்து கீழே, கீழே கீழுக்கும் கீழே சௌபாக்கியத்தின் அதலபாதாளத்தை நோக்கி இறங்கிப் போய்க் கொண்டிருந்தேன் நான்.
நெஞ்சின் ஆழத்தில், எங்கோ ஒரு கோடியைத் தவிர, மற்றெல்லா இடங்களிலும் ‘நான் சௌபாக்கியவதி’, ‘நான் சௌபாக்கியவதி’ - என்று மௌனத்தின் ஓசையில்லாத குரலில், பாஷையில்லாத சொற்களில், அர்த்தமில்லாத குறிப்பு ஒன்று கிளர்ந்து கொண்டிருந்தது. பாதத்தின் அடிப்புறம் முள் தைத்து வீங்கினால், செங்கலைச் சுட வைத்து ஒத்தடம் கொடுக்கும் போது அந்தச் சூடு உள் காலுக்கு வெது வெதுப்பாய் இதமாக இருக்குமல்லவா? அது மாதிரித்தான் இந்த சௌபாக்கிய சொப்பனாவஸ்தையில், என் உடம்பு புளகித்துக் கொண்டிருந்தது. நான் மகிழ்ச்சியின் எல்லையில் போய் அதற்கப்பால் போக இடமின்றி நின்று கொண்டிருந்தேன்.
தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் விழிப்புமில்லாமல் சொப்பனமுமில்லாமல் மதுவுண்ட வண்டு போலத் தெருவைப் பார்த்தும் பார்க்காமலும் நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்தேன்... ஜன்னலோரமாகத் தெருவில் தன் போக்கில் நடந்து வந்து கொண்டிருந்த இருவர் எதைப் பற்றியோ தங்களுக்குள்ளே இரைந்து பேசிக் கொண்டு போனார்கள்.
“அட! நீ ஒண்ணு... அவ அறுத்த முண்டையா லட்சணமாவா வீட்டிலே அடைஞ்சு கிடக்கிறா?... பூவும் பொட்டும், புடவையுமாகக் குலுக்கி மினுக்கிக்கிட்டுல்ல திரியுறா!”
யாரைப் பற்றியோ, கூட வந்தவனிடம் கத்திக் கொண்டு போனான் அவன்.
என் நெஞ்சு ஒரு குலுக்குக் குலுக்கி ஓய்ந்தது. தலை நிறைய நெருப்பை வாரி வைத்த மாதிரி ஒரு வலி. நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்தேன். குபீரென்று பாய்ந்து, மின் தொடர்பான மெயின் சுவிட்சை அமுக்கினேன்! வீடு இருண்டது. என் கழுத்தில் காசு மாலை பாம்பு மாதிரி நெளிந்தது. பட்டுப்புடவை உடம்பில் ஒட்டவே இல்லை. ‘சுளீர் சுளீர்’ என்று சவுக்கடிகள் விழுகின்ற மாதிரி, உடம்பில் ஒரு வேதனை. எனது தற்காலிகமான சௌபாக்கியம் என்ற சொப்பனாவஸ்தை படகு, சில்லுச் சில்லாக உடைந்தது. உள்ளத்தில் அமங்கலி, உடலாலே மட்டும் சுமங்கலியாகி விட முடியுமா? புடவையை அவிழ்த்து எறிந்தேன். நகைகள் மூலைக்கு ஒன்றாகச் சிதறின. இருண்ட வீட்டின் ஒடுங்கிய மூலையில் ஆசைப்பட்டுத் தேடிய எனது தாற்காலிக சௌபாக்கியத்தைக் கலைத்த அவன் யார்? யாரோ தெருவோடு போனவன்!
இந்தக் கதையைப் படித்த சுகுணா அழுதிருக்கிறாள். ‘முத்துச் சாவடி’ என்ற என்னுடைய இன்னொரு கதையோ அவளைத் தற்கொலை செய்து கொள்ளவே தூண்டியிருக்கிறது. அவள் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளத் தூண்டிய அந்தக் கதையை இனிமேல் பார்க்கலாம்.
‘முத்துச் சாவடி’ கதையினால் தான் ஒரு சமயம் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகச் சுகுணா கூறினாளே, அந்தக் கதையை இப்போது படியுங்கள்.
டாக்டர் வேண்டுகோளுக்காகச் சில வருடங்கட்கு முன்னால் நான் ஒரு முறை மதுரையை விட்டு வெளியூருக்குச் சென்று வசிக்க நேர்ந்தது.
“இரவும் பகலுமாகக் கண்விழித்து எழுதி, எழுதி உடம்பைத் துரும்பாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். தேக நலனை உடனடியாக கவனிக்க வேண்டும்; நீங்கள் எங்கேயாவது கடற்கரை ஓரத்து ஊர் ஒன்றில் போய்ச் சிறிது காலம் நல்ல காற்றும், சுக வாழ்வும் பெற்று வாருங்கள்” என்றார் உடலைப் பரிசோதித்த டாக்டர்.
சித்திரை மாதத்து வெயிலின் கொடுமையில் மதுரை நகரம் புழுங்கிக் கொண்டிருந்த போது, துன்பம் வந்த சமயத்தில் நட்பைப் புறக்கணித்து விட்டு ஓடும் போலி நண்பனைப் போல் நான் மதுரை நகரைப் புறக்கணித்து விட்டுக் கடற்காற்றுக்காக இராமேசுவரம் கிளம்பினேன்.
கடற்கரைக்கு மிக அருகே கோவிலுக்கு அண்மையில் எல்லா வகையிலும் வசதியான வீடு ஒன்று வாடகைக்குக் கிடைத்தது. வீட்டு மாடியில் பால்கனிக்குப் பக்கத்தில் சாய்வு நாற்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தால் கடற் காற்று பஞ்சமில்லாமல் வீசும். இன்னொரு சிறப்பும் எனக்குக் கிடைத்த வீட்டில் சமீபத்தில் வாய்த்திருந்தது. முத்து, கிளிஞ்சல், சோழி, சங்கு, கடற்பாசி, முதலிய கடல்பாடு பொருள்களை விற்கும் வரிசை வரிசையாக கடைகளைக் கொண்ட தெரு ஒன்று அருகில் இருந்தது. கடலோரமாக இருந்த அந்த அழகிய தெருவுக்கு ‘முத்துச் சாவடி’ என்று பெயர்.
மாலை நேரமாகி விட்டால் பால்கனியில் அமர்ந்து கடல் காற்று, கடல், முத்துச் சாவடியின் ஆரவாரம் மல்கும் கோலாகலக் காட்சிகள் ஆகிய இந்த மூன்றையும் பார்த்துக் கொண்டு மனத்தில் எழும் கற்பனைச் சுகத்தையும் அனுபவிப்பது எனக்கு ஒரு சுவையான பொழுதுபோக்கு.
கடற்கரையருகிலுள்ள ஊர்களில் பொழுது வேகமாக ஓடும்; வேகமாக இருட்டிவிடும். நான் தங்கியிருந்த வீடு கடலுக்குச் சமீபத்தில் ஒதுக்குப்புறமாக இருப்பதால் சீக்கிரமே கோவிலுக்கருகிலுள்ள ஹோட்டலில் போய் உணவை முடித்துக் கொண்டு திரும்பி விடுவது என் வழக்கம். இரவு ஒன்பது - ஒன்பதரை மணி வரை ஏதாவது படித்துக் கொண்டிருந்து விட்டுத் தூங்கி விடுவேன்.
வழக்கத்தை விடச் சீக்கிரமாகவே அன்று உணவை முடித்துக் கொண்டு திரும்பி விட்டேன். வானம் கருத்து மேகங்கள் மூடியிருந்ததால் மழை பிடித்துக் கொண்டு விடுமோ என்று ஒரு பயம் இருந்தது. மழையில் அகப்பட்டுக் கொண்டால் தொல்லை என்றெண்ணித்தான் முன் யோசனையோடு வீடு திரும்பியிருந்தேன்.
மணி ஏழே முக்கால்! இந்தோ - சிலோன் எக்ஸ்பிரசுக்குத் தொடர்பாக இராமேசுவரம் வருகிற ரயில் வந்து அரை மணி நேரம் கழிந்திருக்கும் அங்கொன்று இங்கொன்றுமாக மழைத்துளி விழுந்து ஆடையை நனைத்திருந்தது.
வீட்டை நெருங்கி விட்டேன். வாயிற்படியில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் மங்கலாகத் தெரிந்தது. நான் படியேறிக் கதவைத் திறக்கச் சென்றதும் கையில் டிரங்குப் பெட்டியோடு வளை குலுங்கும் ஒலி எழ, ஓர் இளம் பெண் வாயிற்படியிலிருந்து எழுந்து நின்றாள்.
எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. கதவைத் திறப்பதற்காக எடுத்த சாவி விரல்களுக்கிடையே நடுங்கிற்று. “யார் நீங்கள்?” - என்று சற்றே இரைந்த குரலில் கேட்டுக் கொண்டே வாயிற்புறத்து விளக்கின் ஸ்விட்சை அமுக்கினேன். “சார்! வணக்கம்... நீங்கள் தானே எழுத்தாளர்?”
அந்தப் பெண் அப்போதுதான் இரயிலிருந்து இறங்கி வந்தவள் போல் காட்சியளித்தாள். நான் அவளுக்குப் பதில் வணக்கம் செலுத்திவிட்டு, “நான் இங்கே வந்து தங்கியிருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டேன்.
கேட்டுவிட்டுக் கதாசிரியனுக்கே உரிய பார்வையில் அவள் தோற்றத்தை அளந்து பார்த்தேன். நல்ல அழகி, கவர்ச்சிகரமான தோற்றம். ‘குறுகுறு’வென்ற விழிகளும், சிரிக்கும் இதழ்களும், ஆசை அம்புகளைத் தொடுத்து நெஞ்சப் புறாக்களை எய்யும் நீள் புருவமும், பலாச்சுளை போன்ற நிறமுமாக அந்த யுவதி கையில் பெட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
“என்ன உங்களுக்குத் தெரியும். கொடைக்கானலிலிருந்து உங்கள் கதைகளைப் பாராட்டி அடிக்கடி ஒரு பெண் கடிதம் எழுதுவாளே; அது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள் கூட அவளுக்குப் பதில் கடிதங்கள் எழுதியிருக்கிறீர்களே?”
“ஓ! நினைவிருக்கிறது. உங்கள் பெயர் ‘கனகம்’ இல்லையா?”
“அந்தப் பெண் முல்லையரும்புகளை உதிர்த்து நெருக்கி வைத்துச் சரம் தொடுத்தாற் போல் சிரித்தாள்.”
“ஆமாம். நேற்றுக் காலையில் மதுரையில் உங்களைச் சந்தித்து விடுவது என்ற ஆவலுடன் பயணத்தை உறுதி செய்து கொண்டு வந்தேன். உங்கள் வீட்டில் விசாரித்ததில் நீங்கள் காற்று மாறுவதற்காக இங்கே வந்து தங்கியிருப்பதாகத் தெரிந்தது. உடனே உங்களைத் தேடிக் கொண்டு இங்கேயே வந்துவிட்டேன்.”
“தனியாகவா புறப்பட்டு வந்தீர்கள்?”
“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்?”
அந்த அழகி கண்களை அகல விரித்து என்னை நிமிர்ந்து பார்த்தாள். எனக்குப் பயமும் வியப்பும் மாறி மாறி உண்டாயிற்று.
கதவைத் திறந்தேன். ஊர் தேடி, வீடு தேடி வந்த பெண்ணைத் திரும்பப் போய்விடும்படி உடனே துரத்தவா முடியும்?
“கதை எழுதுகிறவருக்குப் பொருத்தமான வீடுதான் இது! கடற்கரை, அமைதி, நல்ல காற்று, நீங்கள் கொடுத்து வைத்தவர்.”
அவள் கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டே பெட்டியுடன் என்னைப் பின்பற்றி வீட்டுக்கு உள்ளே வந்து நின்றாள்.
நான் இருதலைக் கொள்ளி எறும்பு போல் தவித்தேன். ஒரு பெண் - வயதுப் பெண், எங்கோ ஒன்றிக் கட்டையாகத் தனியே வந்து தங்கியிருக்கும் இளம் வயதுக் கதாசிரியனை சந்திக்க வருவதாகக் கதையில் கூடக் கற்பனை செய்ய முடியாதே! உண்மையில் நான் கனவு கண்டு கொண்டிருக்கிறேனோ? இல்லையாயின், எனக்கு முன்னால் நீலவாயில் சிற்றாடை நெளிய, முன் கைகளில் குலுங்கும் வளைகளோடு நிற்கும் இந்தக் குமரிப் பெண் தான் என்னைக் கனவு காணச் செய்கிறாளா? இவளிடம் என்ன சொல்வது? இவளை எப்படி வரவேற்பது?
எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
“ஏன் நிற்கிறீர்கள்? பெட்டியை அந்த மூலையில் வைத்து விட்டு நாற்காலியில் உட்காருங்கள்” என்று வேறு வழி இல்லாததால் தைரியமாக அவளை நோக்கிக் கூறினேன்.
“இந்த வீட்டில் நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்கிறீர்கள் போலிருக்கிறது?” இப்படிக் கேட்டுக் கொண்டே அந்தப் பெண் பெட்டியைக் கீழே வைத்துத் திறந்தாள். ஒரு சீப்பு மலைப் பழத்தையும், நாலைந்து சாத்துக்குடிப் பழங்களையும் எடுத்து என் முன்னாலிருந்த மேஜை மேல் வைத்து விட்டு “எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள் சிரித்துக் கொண்டே.
“இதெல்லாம் என்ன? நீங்கள் என்னை உங்களுடைய அன்பால் வேதனைப் படுத்துகிறீர்கள்?” என்று நான் அவளைக் கேட்டேன். பேசுவதற்காக அவள் முகத்தை ஏறிட்டுப் பார்க்கப் போனால் அப்படிப் பார்ப்பதனாலே என் இதழ்களும் தாமாகவே நெகிழ்ந்து சிரிக்க ஆரம்பித்து விடுகின்றன. அப்படி என்னதான் அந்த மதிமுகத்தின் வட்ட - நிலாப்பரப்பில் வசிய சக்தி இருந்ததோ? அது சிரித்தது. அதைப் பார்க்கிறவர்களையும், சிரிக்கச் செய்தது. அவள் எனக்கெதிரே நாற்காலியில் உட்கார்ந்தாள்.
“கனகம்! நீங்கள் சாப்பிட வேண்டாமா? இங்கே பக்கத்தில் ஹோட்டல் கிடையாது. கோவிலுக்குப் பக்கத்தில் ஹோட்டல் கிடையாது. கோவிலுக்குப் பக்கத்தில் கடைவீதிக்குப் போய்தான் ஹோட்டலில் சாப்பாட்டை முடித்துக் கொண்டு வர வேண்டும்.”
“பரவாயில்லை. நான் வரும் போதே சாப்பாட்டை முடித்துக் கொண்டு வந்துவிட்டேன்.”
“இங்கே நான் தனியாக இருக்கிறேன். நீங்கள் தங்குவதற்குக் கிழக்குக் கோபுரவாசலில் ‘முகுந்தராயர் சத்திரம்’ என்று வசதியான சத்திரம் ஒன்று இருக்கிறது. வாருங்கள்! உங்களை அங்கே அழைத்துப் போய்த் தங்குவதற்கு இடம் வாங்கித் தருகிறேன். நாளைக் காலையில் வந்து நீங்கள் சந்தித்துப் பேசலாம்.”
அவள் அந்த நேரத்தில் அங்கே உட்கார்ந்து என்னோடு தனியாகப் பேசிக் கொண்டிருப்பதை என் மனம் விரும்பவில்லை. உலகம் பொல்லாதது. மிகவும் பொல்லாதது! பனை மரத்தின் கீழ் நின்று பாலைக் குடித்தாலும் அதன் கண்களுக்கு அது வித்தியாசமாகத்தான் தோன்றும்.
“ஏதேது? நான் போகாவிட்டால் நீங்கள் என்னைப் பிடித்துத் தள்ளி விடுவீர்கள் போலிருக்கிறதே. நான் வேறெங்கும் போய்த் தங்கப் போவதில்லை. இங்கேயே உங்களோடுதான் தங்கப் போகிறேன்.” கலகலப்பாகச் சிரித்துக் கொண்டே உறுதியான குரலில் அவள் இப்படிச் சொன்ன போது, ‘இந்தப் பெண் புத்தி சுவாதீனமில்லாத பைத்தியமோ?’ என்று சந்தேகம் தோன்றியது எனக்கு.
“கனகம்! என்னைப் போல ஓர் ஆண்பிள்ளை தனியாகத் தங்கியிருக்கிற வீட்டில் நீங்களும் இரவு நேரத்தில் தங்குவது பொருத்தமில்லை. உலகத்தில் யாருக்கு எப்போது எந்தப் பழி ஏற்படுமென்று சொல்ல முடியாது.”
“ஏன் பூசி மொழுகி ஏதோப் போல பேசுகிறீர்கள்? நான் உங்களைப் பார்க்க வேண்டுமென்ற ஆசையோடு இங்கே இப்போது தேடி வந்ததே உங்களுக்குப் பிடிக்கவில்லை. அப்படித்தானே?”
கனகம் கோபம் வந்தவளைப் போலச் சிணுங்கினாள். புருவங்கள் வளைய, இதழ்கள் துடிக்க அந்த அழகு முகத்தில் சினம் கூட ஏதோ ஒரு புது அழகின் சாயையைத்தான் பரப்பியது.
“கதைகளில் தான் அன்பைக் கொட்டி எழுதுகிறீர்கள். காதலும், பாசமும், அன்பும், கருணையும் நிரம்பிய ஒரு கதாசிரியர் நேரில் இவ்வளவு கடுமையான ஆளாக இருப்பாரென்று நான் எதிர்பார்க்கவில்லை.”
விநோதமான அந்தப் பெண்ணின் பேச்சையும், சந்திக்க வந்த சிறிது நேரத்திற்குள்ளேயே உரிமைக் கொண்டாடிக் கோபித்துக் கொள்ளும் விதத்தையும் பார்த்த போது வேதனைப்படுவதா, சிரிப்பதா, வியப்புறுவதா? - என்று ஒரு குறிப்பிட்ட உணர்வின் எல்லையில் அகப்படாமல் திணறினேன்.
“நீங்கள் வயது வந்த பெண்... நன்றாகப் படித்திருப்பீர்களென்றே தெரிகிறது. நான் சொல்லுவதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமல் ஆத்திரப்படுகிறீர்கள்?”
“என்ன ‘நீங்கள்’ வேண்டிக் கிடக்கிறது? என்னை ‘நீ’ என்றே கூப்பிடலாம். நான் பாட்டியோ, கிழவியோ இல்லை! உங்களை விட இரண்டு மூன்று வயது சிறியவள்தான்.”
இதைச் சொல்லும் போது அவள் கன்னங்களில் குங்கும வண்ணம் படர்ந்ததை நான் கண்டேன்.
வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. மணியும் ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த இருட்டில் அவளை எங்கே தங்கச் செய்வதென்று எனக்கே விளங்கவில்லை. நான் சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக உட்கார்ந்திருந்தேன். மழையும் வலுத்தது.
எனக்கு முன்னால் மேஜை மேல் அவள் எடுத்து வைத்திருந்த பழங்கள் அப்படியே இருந்தன. மேஜையின் மறுபுறம் மற்றொரு நாற்காலியில் உயிர் பெற்று நடமாடும் இளமைக் காவியம் கனகம் என்ற பெயருடன் வீற்றிருந்தது.
“அது சரி! நீங்கள்... இல்லை... நீ இப்படியெல்லாம் புறப்பட்டுத் தனியே வந்திருக்கிறாயே? உன் அப்பா, அம்மா உன்னைக் கண்டிக்க மாட்டார்களா? ஏதோ பத்திரிகைகளில் நான் எழுதிய நாலைந்து நல்ல கதைகளைப் படித்து விட்டு என்னைப் பார்க்க ஆசைப்பட்டு ஓடி வந்திருக்கிறாய்! நேரில் வந்து பார்த்தால் தான் பாராட்டு என்பதில்லை. உன் கடிதங்களைப் படிக்கும் ஒவ்வொரு தடவையும் நூறு நல்ல கதைகளை எழுதும் ஊக்கம் எனக்குக் கிடைக்கும். உன் பாராட்டுக் கடிதங்கள் தாம் அழகாக இருக்கின்றன என்று நான் எண்ணி மயங்கிக் கொண்டிருந்தேன். நேரில் இப்போது பார்த்தால் கடிதங்களை எழுதியவள் அழகின் இருப்பிடமாகவே என் முன் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.”
“இப்போது தான் உங்கள் பேச்சு ஒரு கதாசிரியருடைய பேச்சாக இருக்கிறது. எங்கள் வீட்டில் முழு மனத்தோடு சம்மதித்துத்தான் என்னை அனுப்பினார்கள். என் பெற்றோர் முற்போக்கான எண்ணம் உடையவர்கள். உங்களைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டுத் தான் புறப்பட்டு வந்தேன். என் தீர்மானத்தில் ஒரே ஒரு மாற்றம். நீங்கள் மதுரையிலேயே இருப்பீர்கள்; சந்தித்துவிட்டு அடுத்த பஸ்ஸில் கோடைக்கானலுக்குத் திரும்பி விடலாம் என்றெண்ணிக் கொண்டு வந்தேன். உங்களைச் சந்திக்க இராமேசுவரம் வரை வர வேண்டுமென்று அப்போது நான் நினைக்கவில்லை.”
“நீ துணிச்சல்காரி. இந்த வயதில் இப்படிக் கதைப் பைத்தியமாக இருப்பது ஆச்சரியம்தான்.”
“படிக்கிறவர்கள் தான் எழுத்தாளனைப் பாராட்ட வேண்டும். எழுத்தாளன் தனக்குத் தயவு சம்பாதிப்பதற்காகப் படிக்கிறவர்களைப் பாராட்டக் கூடாது. நீங்கள் என்னை புகழாதீர்கள்.”
“ஏதேது கனகம்! பிரமாதமாகப் பேசத் தெரிந்து கொண்டிருக்கிறாயே? உம்! நான் எழுதிய கதைகளில் எந்தக் கதை உனக்கு மிகவும் பிடித்தது? எங்கே சொல் பார்க்கலாம். உன்னுடைய விமர்சனத் திறமைக்கு ஒரு சிறிய பரீட்சை வைக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டேன். கனகம் இமையாமல் என்னை உற்றுப் பார்த்தாள். எதையோ என் கண்களிலிருந்து தேடிக் கண்டுபிடித்து விட்டவள் போலச் சிரித்தாள்.
தெள்ளத் தெளிந்த நீரோடையில் பிறப்பிக்க வேண்டிய இரண்டு கயல்மீன்களைப் பிடித்து இந்தப் பெண்ணின் கண்களாகப் பொருத்தி வைத்து விட்டான் படைப்புக் கடவுள். முப்பத்திரண்டு சிப்பிகளில் விளைய வேண்டிய எண்ணான்கு நல்முத்துக்களைச் சரம் தொடுத்து இவள் செம்பவழச் சிறு வாய்க்குள் பற்களாக ஒளித்து வைத்து விட்டான் என்று கற்பனை செய்தேன் நான்.
“சொல்கிறேன்! இந்தப் பழங்களை நீங்களாகச் சாப்பிடமாட்டீர்கள்? நான் வேண்டுமானால் உரித்துத் தரட்டுமா?”
அவள் ஒரு சாத்துக்குடிப் பழத்தை எடுத்து உரிக்கத் தொடங்கி விட்டாள்.
“இதோ பார் கனகம்! இந்த மாதிரி அசட்டுக் காரியமெல்லாம் எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்காது.”
“எது அசட்டுக் காரியம்? சபரி இராமனை உபசரிக்கவில்லையா?”
“சபாஷ்! மேற்கோள்களெல்லாம் கூடக் காட்டுகிறாய்! சபரியைப் போல் உனக்கு வயதாகி, முதுமை வந்துவிட்டதா என்ன?”
இதைக் கேட்டு அவள் தலையைக் குனிந்து கொண்டாள். சண்பக மொட்டுக்களைப் போன்ற அவள் கை விரல்கள் உரித்த பழத்தின் சுளைகளைப் பிரித்து என் முன் வைத்தன.
“சாப்பிடுங்கள்!”
“நீ...”
“நானும் எடுத்துக் கொள்கிறேன்.”
என் வேண்டுகோளை மறுக்க முடியாமல் பெயருக்கு ஒரு சுளையைக் கையில் எடுத்துக் கொண்டாள் அவள். ஆனால் அதைச் சாப்பிடவில்லை. கையில் வைத்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தாள்.
“உங்கள் கதைகளில் எனக்குப் பிடித்தது ‘சந்திப்பு’. அந்தக் கதையை நீங்கள் கோடைக்கானல் சூழ்நிலையில் உருவாக்கியிருக்கிறீர்கள். கோடைக்கானலிலேயே பிறந்து கோடைக்கானலிலேயே வசிக்கும் எனக்கு அது நன்றாக மனத்தில் பதிந்து விட்டது!”
பேச்சு சுவாரஸ்யத்தினிடையே எனக்கு வேறு ஒரு காரியமும் ஞாபகம் வந்தது. ‘கனகம்! கொஞ்சம் இரு; பால் வாங்கி வைத்திருக்கிறேன். வழக்கமாகக் காய்ச்ச வேண்டிய நேரம் மறந்தே போய்விட்டது. இதோ ‘ஸ்டவை’ப் பற்ற வைத்துக் காய்ச்சிக் கொண்டு வந்துவிடுகிறேன். இரண்டு பேருமாகச் சாப்பிடலாம்” - என்று சொல்லிக் கொண்டே பேச்சைப் பாதியில் நிறுத்துவிட்டு எழுந்தேன்.
“நீங்கள் பேசாமல் உட்காருங்கள். நான் காய்ச்சிக் கொண்டு வருகிறேன். ‘ஸ்டவ்’ எங்கே இருக்கிறது? பால் எங்கே இருக்கிறது?”
அவள் கூறிக் கொண்டே நாற்காலியிலிருந்து எழுந்து விட்டாள். எனக்கு வியப்பு ஒரு பக்கம்; பயம் ஒரு பக்கம். இந்தப் பெண்ணால் எப்படி இவ்வளவு உரிமையோடு ஒட்டி ஒட்டிப் பழக முடிகிறது. கொஞ்சமாவது கூச்சம், வெட்கம், ஒன்றும் இல்லையே! என்று எண்ணி மலைத்துப் போனேன். அவளுக்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.
“நீ அதெல்லாம் செய்ய வேண்டாம். அதோ அலமாரி நிறையப் புத்தகங்கள், பத்திரிகைகள் இருக்கின்றன. வேண்டுமானால் ஏதாவது எடுத்துப் படித்துக் கொண்டிரு. இதோ ஒரு நொடியில் நானே காய்ச்சிக் கொண்டு வந்து விடுகிறேன்.”
“ஊஹும்! முடியாது! நான் தான் காய்ச்சிக் கொடுப்பேன்.”
என்னால் மறுக்க முடியவில்லை. நான் நாற்காலியில் உட்கார்ந்து அவள் தங்கக் கைகளால் உரித்து வைத்துவிட்டுப் போயிருந்த சுளைகளை ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன்.
‘இந்தப் பெண்ணுக்குத்தான் கனகம் என்று பெயர் எவ்வளவு பொருத்தமாக வாய்த்திருக்கிறது? ‘கனகம்’ என்றால் தமிழில் ‘தங்கம்’ என்று பொருள். இந்தப் பெண்ணின் உடல் நிறம் முழுதுமா தங்கம்? குணமும் தங்கமானது; செயலும் தங்கமானது.”
“சார்! உள்ளே இருக்கிறீர்களா? தூக்கமா? விழிப்பா? இப்படிப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தேன்!”
இருட்டில் வாயிற்புறத்திலிருந்து சுந்தரமூர்த்தி ஓதுவாரின் குரல் கேட்டது. நான் பதறிப் போனேன். உடனே வாயிற்புறம் எழுந்து சென்றேன்.
ஓதுவார் எங்கள் குடும்ப நண்பர். முன்பு சில வருடங்கள் மதுரை மீனாட்சி கோவிலில் ஓதுவாராக இருந்த போது எங்கள் குடும்பத்தோடு நெருங்கிப் பழகியவர். அவருடைய உதவியால் தான் இராமேசுவரத்தில் அவ்வளவு வசதியான வீடு எனக்குக் கிடைத்தது.
வாயில் திண்ணையில் அவரை உட்கார்த்தி அப்படியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத் திருப்பியனுப்பி விட நினைத்தேன்.
“உள்ளே வாருங்கள் சார்! திண்ணையிலிருந்து அனுப்பி விடப் பார்க்காதீர்கள். உங்களிடமிருந்து எனக்குக் கொஞ்சம் புத்தகங்களும், பத்திரிகைகளும் வேண்டும். வீட்டில் படிப்பதற்குக் கேட்டார்கள்” என்று சொல்லியபடியே என்னையும் முந்திக் கொண்டு ஓதுவார் உள்ளே சென்று விட்டார். நான் திகைத்தேன்.
ஓதுவாரைப் பின் தொடர்ந்து நானும் உள்ளே சென்றேன். ‘ஓதுவார் கனகத்தை அந்த நேரத்தில் அங்கே என்னோடு தனியாக அந்த வீட்டில் பார்த்து விட்டால் எப்படியெப்படி விபரீதமாக எண்ணிக் கொள்ள நேரிடும்?’ என்பதை நினைக்கும் போது தான் எனக்குப் பயமாக இருந்தது. உடல் நடுங்கியது; வியர்த்துக் கொட்டியது.
நல்லவேளை; கனகம் உள்பக்கத்துக்கு அறைக்குள்ளே தானே பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறாள்? புத்தக அலமாரியோடு ஓதுவாரைத் திருப்பி அனுப்பி விடுவோம் - என்றெண்ணி ஒருவாறு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டேன்.
“வாருங்கள்! உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை இங்கிருந்து எடுத்துக் கொண்டு போகலாம்” - என்று அலமாரியருகே அவரைக் கூட்டிக் கொண்டு போனேன்.
“அதென்ன? உள்ளே மண்ணெண்ணெய் புகைகிற வாசனை?” - ஓதுவார் கேட்டார்.
“ஒன்றுமில்லை! உள்ளே ஸ்டவ்வில் பால் காய்கிறது.”
அவர் புத்தகங்களை வாங்கிக் கொண்டு திரும்பினார். மூலையில் திறந்து வைத்திருந்த கனகத்தின் டிரங்குப் பெட்டி அவர் பார்வையில் தென்பட்டது. அடுக்கடுக்காக வாயில் சேலைகள், ரவிக்கைகள், வெல்வெட் சோளிகள், எல்லாம் பெட்டியில் மேலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“வேறு யாராவது இங்கே வந்து தங்கியிருக்கிறார்களா சார்” - என்று ஓதுவார் பெட்டியைப் பார்த்துக் கொண்டே என்னைக் கேட்டார். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ‘திருதிரு’வென்று விழித்தேன் நான். அதே சமயத்தில் காய்ச்சிய பாலும் கையுமாகக் கனகமே அங்கு வந்து நின்றாள். ஓதுவார் அவளையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் கண்களில் விஷமம் தெரிந்தது.
வேற்று மனிதரைக் கண்ட பதற்றத்தில் அவளும் விழித்தாள். ஓதுவார் தமக்குத் தாமாகவே சிரித்துக் கொண்டார். எங்களை அவர் தவறாகத்தான் புரிந்து கொண்டாரென்று அந்தச் சிரிப்பே அத்தாட்சி கூறியது.
“ஓதுவார் ஐயா!... இந்தப் பெண் வந்து... என்னைப் பார்ப்பதற்காக...” என்று தொடங்கிய நான் ஏதோ உளறிக் குழறினேன்.
“ஓகோ! நான் வந்த சமயம் சரியில்லை... அப்புறம் வருகிறேன். உங்கள் தகப்பனார் உங்களை இராமேசுவரத்திற்கு அனுப்பியது எதற்காக என்று புரிகிறது. ஊம்! உங்களை எவ்வளவோ கண்ணியமான பையன் என்றல்லவா இதுவரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்?”
ஓதுவார் இப்படிக் கூறிவிட்டு ‘விறுவிறு’வென்று படியிறங்கிக் குடையை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
எனக்குத் தலையில் நெருப்பு மழை பொழிவது போலிருந்தது. ‘ஐயா! நாளைக்கே அவர் என்னைப் பற்றித் தாறுமாறாக அப்பாவுக்குக் கடிதம் எழுதுவார்!’ என் உள்ளத்தில் அந்த நிகழ்ச்சியின் விளைவாக ஏற்பட இருக்கும் சில பயங்கரக் கற்பனைகள் எழுந்தன.
“இந்தாருங்கள்! பாலை எடுத்துக் குடியுங்கள்.”
என்னுடைய ஆத்திரம், கோபம், எரிச்சல் எல்லாம் அந்தப் பெண்ணின் மேல் திரும்பின.
“அது ஒன்றுதான் குறை! காய்ச்சிக் கொண்டு வந்து விட்டாய் அல்லவா? உன் தலையில் கொட்டிக் கொள்.”
அந்தப் பெண் என் ஆத்திரத்தைக் கண்டு பயந்து போய் விட்டாள். மெல்ல நடந்து என்னருகே வந்து நின்று கொண்டாள்.
“என் மேல் கோபமா உங்களுக்கு? அந்தப் பெரியவர் கண்களில் எதுவுமே நல்லதாகத் தெரியாது போலிருக்கிறது. ஒரு இளைஞனையும், யுவதியையும், இரவில் ஒரு வீட்டில் தனித்துப் பார்த்தால் அவர்கள் கோளாறான வழியில் பழகுகிறவர்களாகத் தான் இருக்க வேண்டுமென்று உலகம் எண்ணுகிறது. மனத்தில் களங்கமில்லாத நீங்களும், நானும் அதை எண்ணி ஏன் நடுங்க வேண்டும்?” கொஞ்சுகிற பாவனையில் நிதானமான குரலில் பேசினாள் அவள்.
“உன் சமாதானம் எனக்குத் தேவையில்லை! இப்போது நான் சொல்லுகிறபடி நீ கேட்கவில்லையானால் உன்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவதற்குத் தயங்க மாட்டேன். பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விடு; இந்தா; இந்தப் பழங்கள் மீதமிருக்கின்றன. இவற்றையும் எடுத்துக் கொள். எங்காவது சத்திரத்தில் போய்த் தங்கிவிட்டு காலையில் எழுந்திருந்து ஊருக்குப் போய்ச் சேர்.” நான் இரைந்து கத்தினேன். அவள் முகம் வெளிறியது. பரிதாபம் நிறைந்த கண்களால் அவள் என்னைப் பார்த்தாள். தயங்கி நின்றாள். பாலை மேஜை மேல் வைத்தாள். மௌனமாக பெட்டியருகே சென்றாள். என் குரலில் எங்கிருந்து அவ்வளவு கடுமை வந்ததோ, கத்தினேன்.
அந்தப் பெண் பெட்டியை மூடிப் பூட்டினாள். கையில் எடுத்துக் கொண்டாள். ஒரே ஒரு கணம், நேரே குறி வைத்து பாயும் இரண்டு அம்புகளைப் போல் அவள் இணை விழிகளின் பார்வை என் மேல் நிலைத்தது. மறுகணம் வேகமாக நடந்து வாசற்படிக்கு அப்பால் மணலில் இறங்கி நடந்தாள். வெளியே மைக்குழம்பாக அப்பிக் கிடந்த இருளில் மழையும், இடியும், மின்னலுமாக இயற்கை ஊழிக் கூத்தாடிக் கொண்டிருந்தது. கடல் பொங்கி ஊருக்குள்ளேயே புகுந்துவிட்டது போல அலைகளின் ஓசை மிக மிக அருகில் பயங்கரமாகக் குமுறி ஒலித்தது. நான் வீட்டுக் கதவைத் தாழிட்டுக் கொண்டு நிம்மதியாக உள்ளே போய் படுத்தேன். உறங்கியும் விட்டேன்.
மறுநாள் காலையில் ஐந்து, ஐந்தரை மணிக்கு வாயிற் கதவு தட்டப்பட்டது. பால்காரி பால் கொண்டு வந்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டு போய்க் கதவைத் திறந்தேன். அங்கே எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஒரு வயதான மனிதர் கையில் பையோடு நின்று கொண்டிருந்தார். “சார் நீங்கள் தானே எழுத்தாளர்...” நான் தலையை அசைத்தேன். “நான் கோடைக்கானலிலிருந்து வருகிறேன். என் பெண் ஒருத்தி புத்தி சுவாதீனமில்லாதவள். ‘கனகம்’ என்று பெயர். கதை, கதாசிரியர் என்றால் அவளுக்கு ஒரே பைத்தியம். இரண்டு நாளைக்கு முன்னால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் கிளம்பி விட்டாள். மதுரைக்குத் தான் சென்றிருப்பாளென்று அங்கு உங்கள் வீட்டில் சென்று விசாரித்தேன். நீங்கள் இங்கே இருப்பதாகத் தெரிந்தது. உங்கள் வீட்டில் கனகம் வந்து தேடினதாகவும் அவளுக்கு உங்களுடைய இராமேசுவரத்தின் விலாசத்தைக் கொடுத்தனுப்பியதாகவும் சொன்னார்கள். அவள் இங்கே வந்தாளா சார்?” என்று அவர் என்னைக் கேட்டார். பரபரப்பும் பதற்றமும் கலந்து வெளிவந்தன அவருடைய சொற்கள். நான் நடந்ததைச் சொல்லிவிடலாமா? என்று எண்ணினேன். ஆனால் அப்போது என் வாயில் வெளிவந்ததென்னவோ முழுப் பொய். “அப்படி எந்தப் பெண்ணும் என்னைத் தேடிக் கொண்டு இங்கே வரவில்லையே...” என்றேன் திடமாக.
“பைத்தியக்காரப் பெண்! அடிக்கடி இப்படி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள். உங்களைக் காலை வேளையில் சிரமப்படுத்தினதற்காக மன்னியுங்கள். நான் போய் வருகிறேன்” என்று கூறிவிட்டுக் கிளம்பினார் அந்த மனிதர். என்னால் நம்பவே முடியவில்லை. அந்தப் பெண் புத்தி சுவாதீனமில்லாதவள் என்று அவர் எதற்காகவோ வேண்டுமென்றே புளுகுவதாகத்தான் எனக்குத் தோன்றியது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் முத்துச்சாவடித் தெருவில் ஒரு நண்பரின் கிளிஞ்சல் கடையில் உட்கார்ந்து தினப்பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு செய்தியைப் படித்த போது என் நெஞ்சில் இலட்சோபலட்சம் முட்கள் ‘சுரீர் சுரீ’ரென்று குத்திப் பாய்ந்தன. இந்தோ - சிலோன் எக்ஸ்பிரஸ் பாம்பன் பாலத்தில் சென்று கொண்டிருக்கும் போது ஓர் இளம் பெண் இரவில் கதவைத் திறந்து கொண்டு சமுத்திரத்தில் குதித்து விட்டாளாம். அன்று சமுத்திரத்தில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்ததனால் அவளை மீட்க முடியவில்லையாம். வண்டிக்குள் இருந்த அவளுடைய பெட்டியை உடைத்துப் பரிசோதித்தட்தில் அவள் பெயர் கனகம் என்றும், கோடைக்கானலைச் சேர்ந்தவள் என்றும் போலீஸாருக்குத் தெரிய வந்தனவாம்.
இந்தச் செய்தியைப் படித்து முடித்த போது நான் உட்கார்ந்து கொண்டிருந்த முத்துச்சாவடித் தெருவில், எத்தனை முத்துக் கடைகள் இருந்தனவோ அத்தனை கடைகளிலுமுள்ள எல்லா முத்துக்களும் விதியின் பற்களாக மாறி என்னைப் பார்த்துக் கோரமாகச் சிரிப்பது போலிருந்தது.
‘கனகம்! உன் தகப்பனார் பொய்யாக உனக்குப் பைத்தியமென்றார். நீயா பைத்தியம்? உன் இதயத்தில் பரிபூரணமான நன்ரியை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அதை இந்த ஏழைக் கதாசிரியனுக்குச் சமர்ப்பிப்பதற்காக நீ ஓடி வந்தாய். உன் நன்றியை ஏற்றுக் கொள்ளும் திராணி எனக்கு இல்லை. ஆம்! இல்லவே இல்லை. நன்றியோடு உன்னையும் சேர்த்துக் கொன்று விட்டேன். நான் பாவி. பெரும் பாவி!
பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் இதை எழுதும் துணிவே எனக்கு உண்டாகிறது. ‘எழுதியாவது மனப்புண்ணை ஆற்ற முயலுகிறீர்கள் அல்லவா?’ என்று நீ சிரிப்பாய்!
ஆனால், அவ்வளவு விரைவில் ஆறி விடக்கூடிய புண்ணா இது?’
நான் சிந்தனையில் மூழ்கியவனாக என்ன செய்கிறோம் என்ற நினைப்பே இன்றி இலையிலிருப்பதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். என் மனத்தில் சுகுணா நினைவூட்டிய பழைய சிறுகதைகளும், அவற்றை நான் எழுதியிருந்த காலத்துச் சூழ்நிலைகளும், அவற்றின் சம்பவங்களுமே எங்கும் நிறைந்த திரைப்படம் போல ஓடிக் கொண்டிருந்தன. பழகிப் போன கை இலையிலிருந்து தனக்கு வேண்டியதை எடுத்துச் சாப்பிட்டும் வேண்டாததை மறுத்தும், வயிற்றை நிரபும் வேலையைக் குறைவின்றிச் செய்து கொண்டிருந்தது. சுகுணாவும் என் எதிர்ப்புறத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். சாப்பிடும் போது அவளும் என்னிடம் குறுக்கிட்டுப் பேசவில்லை. என் மனைவி மௌனமாக இருவருக்கும் வேண்டியவற்றைப் பரிமாறிக் கொண்டிருந்தாள்.
சாப்பாட்டை விடச் சுவாரஸ்யமான அநுபவங்களை மனம் நினைவு கூர்ந்து சுவைத்துக் கொண்டிருக்கும் போது சாப்பாடு எவ்வளவு தான் சுவை நிரம்பியதாக இருந்தாலும் அதன் அறுசுவையைப் பற்றிய நினைவே இல்லாமல் ‘ஏதோ இதையும் செய்தாக வேண்டும்’ - என்று நிர்பந்தமாக செய்தாக வேண்டிய காரியத்தைச் செய்வது போலச் செய்கிறோம். பல சந்தர்ப்பங்களில் எனக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. மனம் துக்கத்தினால் நிரம்பியிருக்கும் போதும் சரி, களிப்பினால் நிரம்பியிருக்கும் போதும் சரி, பல சமயங்களில் நான் இந்த அநுபவத்தைக் அடைந்திருக்கிறேன். சாப்பிடும்போது சாப்பிடுகிறோம் என்ற நினைவு இல்லாமலும் சாப்பிட்டு விட்ட பின்பு சாப்பிட்டு முடித்துவிட்டோம் என்ற ஞாபகம் இல்லாமலும் வேறு ஏதோ முக்கியமான நினைவில் நானும் என் உணர்வுகளும் ஒடுங்கிப் போயிருந்தாற் போன்ற அநுபவம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது எனக்கு.
கடைசியில் நான் இலையிலிருந்து எழுந்து கை கழுவப் புறப்படுவதற்கே என் மனைவியும் சுகுணாவும் என்னை நினைவு படுத்த வேண்டியிருந்தது.
“முக்கால்வாசி நாட்கள் இலையில் உட்கார்ந்து சாப்பிடும் போது இவர் இப்படித்தான் எங்கோ நினைப்பாக இருந்து விடுகிறார். சாப்பிடும் போது கூட வாழ்க்கையை மறந்து இது என்ன கதை போல கற்பனையோ?”
சாப்பாட்டு அறையிலிருந்து நான் கை கழுவிக் கொண்டு முன்பக்கம் வந்துவிட்ட பின்பு சமையலறைக்குள் என் மனைவி மேற்கண்டவாறு சுகுணாவிடம் என்னைப் பற்றிக் குறைப்பட்டுக் கொண்டிருந்தாள். உட்பக்கத்திலிருந்து சுகுணா திரும்பி வருவதற்குத் தாமதமாகவே அவள் என் மனைவியை இலையில் உட்காரச் செய்து பரிமாறிக் கொண்டிருக்கிறாள் என்று அநுமானம் செய்து கொண்டேன் நான். தொடர்ந்து என் மனைவியும் சுகுணாவும் தங்களுக்குள் உரையாடிக் கொள்கிற குரலும் எனக்குக் கேட்டது. விடைபெற்றுக் கொண்டு சென்றவள் பெண்ணாயிருந்தால் அவளுக்கு விடை கொடுத்து அனுப்பிய ஆண்களே அவளைப் பற்றிய பேச்சுக்கும் விடை கொடுத்து அனுப்பாமல் தங்களுக்குள் அவளைப் பற்றிய அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொள்வதும், விடை கொடுத்தவர்கள் பெண்களாகவும், விடை பெற்ற ஆணைப் பற்றிய அபிப்பிராயங்களைத் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வதும் வழக்கம் தான். இதில் புதியது ஒன்றும் இல்லை. அப்போது அவர்களுடைய பேச்சைத் தொடர்ந்து மேலும் கேட்க வேண்டும் என்ற ஆவல் எனக்குச் சிறிதும் கிடையாது.
முன்புறத்து அறைக்குள் நான் வேறு சிந்தனையில் மூழ்கினேன். ‘தெருவோடு போனவன்’ என்ற என்னுடைய சிறுகதையைப் படித்து விட்டு அவள் அறைக் கதவைத் தாழிட்டுக் கொண்டு தனியே குமுறி குமுறி அழுததாகக் கூறினாளே, அதைத்தான் என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பால்ய விதவை ஒருத்திக்குக் குங்குமம் வைத்துக் கொண்டு சுமங்கலி கோலத்தில் தன்னை நிலைக்கண்ணாடியில் பார்த்துக் கொள்ள ஆசை ஏற்படுவதைப் பற்றிய சிறுகதை அது. அதைப் படித்துவிட்டு ஒருத்தி அழ வேண்டுமானால் அவளும் ஏறக்குறைய அதே துயர நிலையை அனுபவிக்கிறவளாக இருக்க வேண்டும். பதினெட்டு வயதிலிருந்து முப்பது முப்பத்திரண்டு வயதுக்குள் வாழும் எந்த இளம் விதவையும் அந்தக் கதையைப் படித்தால் கண்கலங்காமல் தப்பி விட முடியாதுதான். எழுதும் போது அந்தக் கதையைப் பற்றி நான் இப்படி எண்ணியிருந்ததும் உண்டு. ‘அந்தக் கதையைப் படித்து விட்டு இவள் அழுததாகச் சொல்லுகிறாளே; அதற்கு என்னதான் அர்த்தம். சுகுணா என்னும் இந்தப் பெண்ணும் அப்படிப் பிஞ்சிலேயே வாடி உதிர்ந்தவளா? ஆசைகள் நிறைந்த மனமும் அந்த ஆசைகளில் ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத சூழ்நிலையுமாக வாழ்கிறவளா? பாம்பன் பாலத்திலிருந்து கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ளும் ஆசையும் ஒரு முறை தனக்கு ஏற்பட்டிருப்பதாக வேறு இவள் சொல்கிறாள். இந்த மெருகு அழியாத இளமையிலேயே இவளுடைய வாழ்க்கையில் இத்தனை அநுபவங்கள் இவளுக்குக் கிடைத்திருப்பது ஆச்சரியந்தான். வாழ்க்கையில் விதவிதமான அநுபவங்களை அடைகிறவர்களிடம் எனக்கு எப்போதும் தனி மதிப்பு உண்டு. ‘அநுபவங்களை அடைகிறவர்கள் உயிருள்ள வாழ்வைக் கற்கிறவர்கள். அவர்களுக்கு அந்த அநுபவங்களே செல்வம்’ என்று எண்ணுகிறவன் நான். சுகுணாவுக்கு இத்தகைய அநுபவங்கள் மிக இளமையிலேயே தான் ஏற்பட்டிருந்தன. ஆயினும் அவளுடைய வாழ்வில் ஆச்சரியங்கள் நிறைந்திருப்பதை நான் மதிக்கத்தான் வேண்டும்! முப்பது வயதுக்குள்ளேயே தன்னுடைய சொந்த வாழ்வில் வாழவும் சாகவும் மாறி மாறி ஆசைப்பட்டிருக்கிற பெண் ஒருத்தியின் அநுபவங்களில் நிறைந்த துன்பங்கள் இருக்க வேண்டுமென்று எனக்குத் தோன்றியது. இதற்கெல்லாம் ஒரே காரணத்தைத்தான் சொல்ல முடியும்.
நீண்ட காலமாக இந்த தேசத்துப் பெண்கள் ஒரே விதமான பாதையில் சிந்திக்கும்படி பழக்கப் படுத்தப் பட்டிருக்கிறார்கள். வண்டியிழுப்பதற்குப் பழக்கப் படுத்தப்பட்ட குதிரைகளுக்குக் கண்களை நிரந்தரமாக மூடி மறைத்து விடுகிறார் போல, நான்கு பக்கமும் நோக்கிச் சுதந்திரமாகவும் புதுமையாகவும் சிந்திக்கவே இடமில்லாதபடி பெண்களின் கண்களை மறைத்து வந்த காலமும் உண்டு. வேறுபாடுகளையும் மாறுபாடுகளையும் சிந்திக்க இந்த நாட்டின் பழைய தலைமுறைப் பெண்களின் மனங்கள் அநுமதிக்கப் படவில்லைதான். இந்த நூற்றாண்டு ஒரு விநோதமான சூழ்நிலையை நம்மிடையே படைத்து விட்டது. பழைய தலைமுறையும் புதிய தலைமுறையும் சந்திக்கின்ற நூற்றாண்டில் இரண்டு தலைமுறையின் எண்ணங்களுமே மோதுகின்றன. முற்போக்கு எண்ணமும் வெள்ளை மனமும் கொண்ட தூய பெண்களுக்கு இது ஒரு சோதனைக் காலமாக இருக்கிறது. அவர்களுடைய நல்ல எண்ணங்களும் கூடத் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. சில சமயங்களில் அவர்களே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விடுகிறார்கள். பட்டுப்பூச்சி என்னும் குறுநாவலில் நான் விளக்க முயன்றதும் இதைத்தான். அழுகிப் போன எண்ணங்களோடு மாறவும் மாற்றவும் முடியாமல் நாறிக் கொண்டிருக்கிற ஒரு தலைமுறைக்கும், புதிய எண்ணங்கள் மலரும் ஒரு தலைமுறைக்கும் உள்ள போராட்டம் தான் இந்த பிரச்சனைகள்.
இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் போதே என் மனைவிக்கு உணவு பரிமாறி முடித்து விட்டுச் சுகுணாவும் முன் பக்கத்து அறைக்கு வந்திருந்தால். அவள் பதறாமலும், விடை பெற்றுக் கொண்டு போவதற்கு அவசரப்படாமலும் நிதானமாக இருந்ததைப் பார்த்தால் அன்றிரவு என் வீட்டிலேயே தங்கி விடுகிற நோக்கத்தோடுதான் வந்திருக்கிறாள் என்று எனக்கும் புரிந்தது. எனக்கும் அவளிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறைய இருந்தன. வியப்புக்குரிய பெண்ணாகவே எனக்குத் தோன்றினாள் அவள்.
‘நல்ல படிப்பும் மறுமலர்ச்சி நோக்கமும் கொண்ட ஆண் பிள்ளைகளிடம் கூட இன்று இந்த நாட்டில் புதிய சிந்தனைகளையும் முற்போக்கான எண்ணங்களையும் பார்ப்பது அரிதாயிருக்கிற போது ஒரு பெண் அத்தகைய சிந்தனைகளோடும் அத்தகைய எண்ணங்களோடும் வந்து நிற்பதை வியக்காமல் வேறு என்ன செய்வது? என்னைப் போன்ற இலக்கிய ஆசிரியர்கள் இன்று இந்தத் தேசத்தில் முழு அநுதாபத்தையும் செலுத்தத் தகுதி வாய்ந்தவர்கள் இத்தகைய பெண்கள் தான் என்று நான் எண்ணினேன். என்னைப் போன்றவர்கள் எழுதுகின்ற எழுத்துக்களில் இருந்து தூண்டுதல் பெற்றுத்தான் இப்படி ஓரிரு பெண்கள் சமூக சேவையில் ஆசையும் புதிய எண்ணங்களில் பற்றும் கொள்கிறார்கள். இவர்களுடைய புதிய நம்பிக்கைகள் என் போன்றவர்களே அங்கீகரிக்க வில்லையானால் என்ன பயன்?’ என்று எண்ணும் போது சுகுணாவின் மேல் எனக்கு அநுதாபம் அதிகமாயிற்று.
“தெருவோடு போனவன் என்ற கதையில் வருகிற வாத்தியாரம்மாவுக்கு இருந்த எல்லா குறைகளும் உங்களுக்கும் உண்டு என்று தான் நினைக்கிறேன் சுகுணா! இந்தக் கேள்வியை உங்களிடம் நான் இதை விட நாசூக்காக கேட்டிருக்கலாம் என்று இப்போது உங்களுக்குத் தோன்றினால் அதற்காக என்னை மன்னியுங்கள். இதைக் காட்டிலும் தெளிவாக உங்களிடம் என் சந்தேகத்தைக் கேட்பது அநாகரிகம் என்று தோன்றியதால் தான் நானே இப்படிக் கேட்டேன். இதில் தெரிந்து கொள்ள முடியாமல் சந்தேகப்படுவது எது என்ற குறிப்பை நீங்களாகவே தெரிந்து கொண்டு மறுமொழி சொல்லிவிட்டால் நாம் இருவரும் மேலே பேசிக் கொள்வதற்கு வசதியாக இருக்கும்.” -
என்று அவளைக் கேட்டேன். என்னுடைய கேள்வியில் நான் அவளிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது மிக நுணுக்கமாக வினாவப்பட்டிருந்தது.
“அந்தக் கதையில் வருகிற வாத்தியாரம்மாவுக்கும் எனக்கும் எல்லா வகையிலும் ஒற்றுமை தான். நான் அந்த வாத்தியாரம்மாவின் நிலையில் தான் இப்போதும் இருக்கிறேன். அவளுக்கு ஏற்பட்ட ஆசை எனக்கும் ஒரு நாள் ஏற்பட்டதுண்டு. விளையாட்டாக ஏற்பட்டதுதான். ஆனால் விளையாட்டு ஆசையாலே நான் வேதனைப்படவும் நேர்ந்தது” என்று சுகுணா அப்போது எனக்குக் கூறிய பதிலில் தான் கூர்மையான புத்திசாலி என்பதை அழகாக நிரூபித்து விட்டாள். நான் எவ்வளவு குறிப்பாக அந்தக் கேள்வியைக் கேட்க விரும்பினேனோ அவ்வளவு குறிப்பாகவே அவளும் அதற்குப் பதில் சொல்லியிருந்தாள்.
எனக்கு இப்போது சுகுணா ஒரு பால்ய விதவைதான் என்பது தீர்மானமாகத் தெரிந்து விட்டது. பட்டுப்பூச்சியின் கற்பனைக் கதாநாயகியான சுகுணாவுக்கு நல்ல இடத்தில் திருமணமாக வேண்டுமென்று ஆசைப்பட்டு வரன் பார்க்கும்படி நான் வாசகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். உண்மைக் கதாநாயகியோ வரன்பார்த்து வாழப் பார்த்து மங்கலம் மடிந்து இந்தத் தேசத்தின் பழைய தலைமுறையின் நினைப்பில் அழிந்தவளாகவும், புதிய தலைமுறையின் நினைவில் மலர்ந்து நிற்பவளாகவும் வியப்புக்குரிய பெண்ணாய் என் எதிரே வந்து வீற்றிருந்தாள்.
“அது போகட்டும்! ‘முத்துச்சாவடி’யில் வருகிற கனகத்தைப் போல் பாம்பன் பாலத்தில் இரயில் ஓடிக் கொண்டிருந்த போது கடலில் குதித்துத் தற்கொலை செய்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டதாகக் கூறினீர்களே, அது என்ன? முத்துச்சாவடி என்ற கதைக்கும் உங்களுடைய வாழ்க்கைக்குமே ஒற்றுமை இருக்கிறதா? அல்லது குறிப்பிட்ட தற்கொலை நிகழ்ச்சிக்கு மட்டும் அந்தப் பகுதி உங்களுக்குத் தூண்டுதல் தருவதாக அமைந்ததா?” -
என்று மேலும் அவளைக் கேட்டேன் நான். அவள் இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லிவிடவில்லை. எதையோ உடனே பதில் சொல்ல வருவது போல் பேச்சைத் தொடங்கி அதைச் சொல்லக் கூடாது என்று தனக்குத் தானே முடிவு செய்து கொண்டவள் போல் உதட்டைக் கடித்துக் கொண்டு மழுப்பி விட்டாள். நான் விடவில்லை. அவளை மேலும் தூண்டிக் கேட்டேன்.
“என்ன எதையோ சொல்ல வந்தாற் போலிருந்தது. ஒன்றும் சொல்லாமல் அடக்கிக் கொண்டு விட்டீர்களே? என் மந்த்தைப் புண்படுத்துகிற கருத்தாக இருந்தாலும் என்னிடம் நேருக்கு நேர் கூசாமல் சொல்லுகிற சுதந்திரத்தையும் உரிமையையும் உங்களுக்கு நான் அளிக்கிறேன்.”
“ஐயையோ! அப்படியெல்லாம் பயப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. உங்கள் மனத்தைப் புண்படுத்துவதற்கு இதில் ஒன்றுமே கிடையாது. ஆனால், எந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்களோ, அதை இரண்டாவது முறை நினைப்பதனாலேயே என் மனத்தை நானே புண்படுத்திக் கொள்ள நேருமோ என்று தான் பயப்படுகிறேன். தற்கொலை செய்து கொள்ள ஆசைப்படுவதற்கு முன்பே எண்ணங்களால் பல முறை செத்தும் பிழைத்தும் என்னை நானே சாக அடித்துக் கொண்டிருக்கிறேன். நம்முடைய ஆசைகளையும் எண்ணங்களையும், மனமறிந்து நாமே கொன்று கொள்வதையும் தற்கொலை என்று தானே சொல்ல வேண்டும். அப்படிச் சொல்வது பிழையில்லையானால் முன்பே நான் பலமுறை செத்துப் போய் இருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்.”
“அது சரி! நீங்கள் இரயிலிலிருந்து பாம்பன் கடலில் குதிக்கத் துணிந்த காரணத்தை மட்டும் தான் நான் இப்போது கேட்கிறேன்” என்று மறுபடி நான் வற்புறுத்திக் கேட்ட போது தான் அவளிடமிருந்து எனக்கு உண்மையான பதில் கிடைத்தது.
என்னுடைய இரண்டாவது கேள்விக்குச் சுகுணா கூறுவதற்கு இருக்கும் பதிலில் முக்கியமான சம்பவங்கள் இருப்பதாக நான் யூகம் புரிந்தது சிறிதும் வீண் போகவில்லை. தன் மனம் முழு அளவில் நம்பிக்கை கொண்ட ஒருவனோடு இணைந்து புது வாழ்வு பெற முயன்றிருக்கிறாள் அவள். அந்த முயற்சி தோற்றுப் போன போது தான் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமென்ற ஆசையே அவளுக்கு உண்டாகியிருக்கிறது. அந்த விவரங்களை அவளுடைய வார்த்தைகளிலேயே கேட்கலாம்.
“நான் சமூக நலத்திட்டத்திலும் கிராமங்களின் வளர்ச்சித் திட்டத்திலும் சேர்ந்து கிராம சேவகியாகத் தொண்டு செய்ய ஆரம்பிக்கும் முன் தனியார் நிர்வாகத்திலுள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் வேலை பார்த்ததாக உங்களிடம் கூறினேன் அல்லவா? அந்தக் காலத்தில் இது நடந்தது. கிழக் குரங்குகளும் படிக்க வரும் ஏழை பையன்களை டியூஷன் வைத்துக் கொள்ளுவது என்ற பேரில் பணம் பண்ணும் யந்திரங்களாக மாற்றும் கவந்தர்களும் ஆசிரியர்களாக அடைந்து கிடந்த அந்தப் பள்ளிக்கூடத்தில் நான் ஆசிரியையாகச் சேர்ந்த ஆண்டில் இலட்சிய ஆர்வமும் சீர்திருத்த வேகமும் உள்ள இளைஞர் ஒருவரும் சேர்ந்திருந்தார். எவர் பார்த்தாலும், ‘இவரிடம் கொஞ்சம் பேசிவிட்டு போக வேண்டும்’ - என்று பார்த்தவரை ஆசைப்பட வைக்கிற கம்பீரத் தோற்றமும் சுந்தரமுகமும் வாய்ந்தவர் அந்த இளைஞர். முருகன் என்று பெயர் அவருக்கு. முருகனைப் போலவே அழகாக இருந்தார் அவர். திருநெல்வேலிப் பக்கத்துக்காரர் என்று பள்ளிக்கூடத்தில் பேசிக் கொண்டார்கள். அவருக்கும் எனக்கும் பேச்சு ஏற்பட்ட முதல் சம்பவத்தை இன்னும் நான் நன்றாக நினைவு வைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு நாள் பள்ளிக்கூடத்து நூல் நிலையத்தில் பலத்த வாக்குவாதத்தோடு நாங்கள் சந்தித்தோம். பிரிந்தபோதோ இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பலத்த நம்பிக்கை கொண்டு பிரிந்தோம்.
பள்ளிக்கூடத்து லைப்ரரியில் உள்ள ஒரு புத்தகத்தின் ஒரே பிரதிக்கு ஒரே சமயத்தில் போட்டி போட்டுக் கொண்டு இரண்டு பேர் போய்ச் சேர்ந்தால் சண்டை வராமல் என்ன செய்யும்? கார்க்கியின் ‘அன்னை’ என்ற நாவல் உடனே எனக்கு வேண்டும் என்ற கோரிக்கையுடன் நான் லைப்ரேரியனிடம் மன்றாடிக் கொண்டிருந்த போது அவர் உரிமையோடு மேஜை மேல் கிடந்த லைப்ரரியின் சாவியை எடுத்துக் கொண்டு போய்ப் புத்தக அலமாரியையே திறந்து கார்க்கியின் அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய்விட்டார். எனக்கு முகத்தில் அறைந்தாற் போல் இருந்தது. மறுநாள் அவர் பள்ளிக்கூடம் வந்த போது அவரிடம் சண்டைக்குப் போனேன் நான். அவர் மிகவும் பண்பாக என்னிடம் நடந்து கொண்டார்.
“இந்த நாவலைப் படிப்பதிலே என்னோடு போட்டி போடுவதற்கும் ஒருவர் இங்கே இருக்கிறார் என்று அறியும் போது எனக்குப் பெருமையாயிருக்கிறது. கனவு காண வைக்கும் சொப்பனாவஸ்தை இலக்கியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு உலகத்தில் உழைக்கும் இனத்தின் பெருமையைத் துணிந்து உணர்த்திய முதல் இலக்கியம் இது. உயிர்த்துடிப்புள்ள இந்த இலக்கியத்தை இப்போது நான் ஏழாவது தடவையாகப் படிக்கிறேன். நீங்கள் படிக்க விரும்புவதாக இருந்தால் இப்போதே இதை என்னிடமிருந்து கொண்டு போகலாம். நான் அப்புறம் படித்துக் கொள்கிறேன்...” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்தப் புத்தகத்தை எடுத்து என்னிடம் கொடுத்து விட்டார். முருகன். அவர் கொடுத்த புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பே அவரைப் படித்துக் கொண்டு விட்டேன் நான். என் மனத்தின் இலட்சிய வீரராக அவர் அந்தக் கணமே உருவாகிக் கோயில் கொண்டார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் நான் முருகனுடன் நிறையப் பழகினேன். நிறையப் பேசினேன். இரண்டு பேருக்கும் வகுப்புக்கள் இல்லாமல் ஓய்வாக இருக்கும் வேளைகளிலே பள்ளிக்கூடத்து நூல் நிலையத்தில் போய் அமர்ந்து உலக இலக்கியங்களைப் பற்றி உரையாடிக் கொண்டிருப்போம். சில நாட்களில் ஓய்வு வேளை முடிந்து அடுத்த பாடத்துக்கான மணி அடித்ததைக் கூடக் கவனிக்காமல் பேசிக் கொண்டிருந்து விடுவோம். எங்கள் நட்பு இலக்கிய நட்பாக வளர்ந்து கொண்டிருந்தது. நாளடைவில் முருகனிடம் இருந்து நான் நிறைந்த நம்பிக்கைகளைப் பெற்றேன். வாழ்க்கையிலேயே ‘இனி நான் பெற முடியாது’ - என்று எனக்குள் நானே இழக்கத் தொடங்கிவிட்ட நம்பிக்கைகளைக் கூடப் பெற முடியும் போல என்னுடன் பழகினார் முருகன். என் நம்பிக்கைகள் அவருடைய நட்பாகிய தென்றல் காற்றுப்பட்டு மொட்டவிழ்ந்து மலர்ந்தன. இந்த உலகத்தில் எனக்கு ஒரே பாதுகாப்பாக இருந்த என் தாய் கூட இப்படி நான் முருகனோடு பேசுவதையும் பழகுவதையும் விரும்பவில்லை.
“உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறதடி பெண்ணே! நீ எந்த விதத்திலும் கெட்டுப் போய்விட மாட்டாயென்று நான் நாற்பதாயிரம் கோயிலில் வேண்டுமானாலும் சத்தியம் செய்வேன். ஆனால் இந்த உலகத்தின் கண்களில் தலைமுறை தலைமுறையாகச் சந்தேகமும் அவநம்பிக்கையும் தழும்பேறியிருக்கின்றன. முருகனைப் போல் இலட்சணமாகவும் இளமையாகவும் இருக்கிற ஓர் வாலிபனோடு சிரித்துப் பேசுவதும் தெருவில் சேர்ந்து நடந்து வருவதுமே இந்த உலகம் சந்தேகப்படுவதற்குப் போதுமான காரியங்கள் தாம்! நான் ஒருத்தி இருக்கிற வரையில் ‘இன்னாருக்கு அம்மாவாம் இவள்’ என்று நாலு பேர் தெருவில் மூக்கில் விரல் வைத்து ஏசாமல் மானமாக வாழ வழி செய்து கொடு பெண்ணே” என்று நயமாகவும் பயமாகவும் என்னை எச்சரித்தாள் என் தாய். எனக்கு முருகனிடமிருந்து நம்பிக்கைகள் பிறந்த அதே சமயத்தில் என் தாய்க்கு என் மேலிருந்த நம்பிக்கைகள் அழியத் தொடங்கியிருப்பதை நான் உணர்ந்தேன். உலகத்துக்குச் சந்தேகமும் அவநம்பிக்கையும் ஏற்படுவதற்கு முன்னால் என் தாயின் மனத்தில் அவை முதலில் கால் கொண்டிருப்பதை நான் புரிந்து கொள்ளத்தான் வேண்டியிருந்தது. முருகன் எனக்குப் பல உறுதிமொழிகளை அளித்திருந்தார்.
‘சிறிது காலம் பொறுத்துக் கொள் சுகுணா! துணிவாக எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருக்கிறது. பிரமுகர்களும் பணக்காரக் குடும்பங்களிலிருந்து ஃபேஷனுக்காகச் சீர்திருத்தம் பேச வருகிறவர்களும் தான் - இம்மாதிரிப் புதிய செயல்களுக்குத் துணியலாம் என்று இந்தச் சமூகம் நம்புகிறது. என்னைப் போல் நூற்று இருபது ரூபாய்ச் சம்பளம் வாங்குகிற பள்ளிக்கூடத்து ஆசிரியனுக்குச் சீர்திருத்த நோக்கமோ, சமூகத்தில் அக்கறையோ இருந்தால் ‘நான் ஓர் அயோக்கியனாக இருப்பேனோ’ - என்று இந்தச் சமூகத்துக்கு என் மேல் சந்தேகமே வந்துவிடுகிறது. ஆசிரியர்கள் எல்லாரும் செக்கு மாடுகள் போலத் தேய்ந்த பாதைகளில் சுற்றிச் சுற்றி வர வேண்டுமென்றுதான் சமூகம் நினைக்கிறது.
ஆனால் நான் அப்படிச் செக்குமாடாக இருக்கப் போவதில்லை. ஏதாவது புதிய சிந்தனையை இளம் சமூகத்தில் வளர்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது.’ என்று முருகன் பலமுறை என்னிடம் கூறியிருந்தார். எனக்கு வலிமையளித்திருந்தன அவருடைய இந்தச் சொற்கள்.
என்ன கூறி என்ன பயன்? எல்லாம் வீணாகப் போய்விட்டது. அந்த வருட முடிவில் அவரைப் பள்ளிக்கூட வேலையிலிருந்தே விலக்கி விட்டார்கள். அவருடைய புதுமையான கருத்துக்களையும் இரண்டு மூன்று பொதுக்கூட்டங்களில் அவர் பேசிய புரட்சிகரமான பேச்சுக்களையும் கேட்டு தலைமையாசிரியர் நிர்வாகத்தினருக்குப் புகார் செய்து விட்டார். நிர்வாகத்தார் முருகனை அரசியல்வாதி என்று சந்தேகப்பட்டு வெளியே அனுப்பி விட்டார்கள். முருகன் என்னிடம் கண்கலங்க விடை பெற்றார்.
“சுகுணா! புதிய சிந்தனைகளைச் சிந்திப்பதே சட்ட விரோதம் என்று நினைக்கிற நாட்டில் சீர்திருத்தமாவது ஒன்றாவது! சீர்திருத்தம் ஆசைப்படுகிறவனுக்கு இதுதான் கதி! முடிந்தால் கோடை விடுமுறை முடிவதற்கு முன் எங்கள் கிராமத்துக்கு வா. இப்போது எனக்கு விடைகொடு” - என்று எதிரே வந்து நின்ற அவரைப் பார்க்கும் போது எனக்குக் கண்களில் நீர் பனித்துவிட்டது. அதற்குப் பின் ஓர் ஆண்டுக் காலம் திருநெல்வேலியிலேயே ஒரு வேலையும் கிடைக்காமல் சும்மா இருந்ததாக அவர் கடிதங்கள் எனக்குக் கூறின. அதற்குப் பின் அவரிடமிருந்து கடிதங்களும் வரவில்லை. என்னாலும் அவரை மறக்க முடியவில்லை. அவரைத் தேடிக் கொண்டு திருநெல்வேலி பக்கம் பயணம் போவதற்கு என் அம்மா ஒப்பவில்லை.
எப்படியோ விளையாட்டுப் போல இரண்டு மூன்று வருடங்களும் கழிந்து விட்டன. முருகன் எங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. கடைசியில் அவர் இராமேசுவரம் போர்டு உயர்நிலைப் பள்ளியில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். அந்தச் செய்தியில் எனக்கு நம்பிக்கை இல்லையானாலும் என்னுடைய ஆர்வம் அதில் வலிய நம்பிக்கை உண்டாக்கிக் கொண்டு விட்டது. ஒரு சனிக்கிழமை பிற்பகல் பள்ளிக்கூடத்துப் பையன்களை உல்லாசப் பயணம் அழைத்துக் கொண்டு போவதாய் என் அம்மாவிடம் பொய் சொல்லி விட்டு இராமேசுவரம் புறப்பட்டுப் போனேன் நான். அங்கே முருகன் இருந்தார். ஆனால் நான் எதிர்பார்த்த முருகனாக இல்லை. அவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை இருந்தது. குடும்பத்தோடு இராமேசுவரத்தில் வேலையேற்றுக் கொண்டு குடியேறி இருந்தார். அவருடைய முகத்திலும் பழைய ஒளி இல்லை. கவலைகளும் பொறுப்புக்களும் இளமையில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய இலட்சியங்கள் அழிந்த வேதனையுமே தெரிந்தன. என்னை அவர் வரவேற்ற முறையும் கலகலப்பாக இல்லை.
‘இனிமேல் நீ என்னைத் தேடிக் கொண்டு வருவதற்கு என்ன இருக்கிறது,’ என்று கேட்பது போலிருந்தது அவருடைய பேச்சு. ‘சீர்திருத்தம் பேசுவதால் பணக்காரர்களுக்கு இலாபம் உண்டு. ஏழைக்கு நஷ்டம் தான் உண்டு’ என்று ஒரு காலத்தில் அவர் சொல்லியிருந்தது நினைவு வந்தது எனக்கு. முருகன் எனக்கு வாழ்வளிக்க முன்வருவார் என்று நான் நம்பியிருந்தது வீணாயிற்று. மார்க்ஸையும் இங்கர்ஸாலையும் பற்றிப் பேசிய பழைய முருகன் செத்துப் போயிருந்தார். ஆம்! என் வரையில் அவர் செத்துத்தான் போயிருந்தார். இப்போது அவர் வயிற்றுப் பிழைப்பையும் புதிய குடும்பப் பொறுப்பினால் தனக்கு ஏற்பட்டிருந்த கஷ்டங்களையும் பற்றித் தான் பேசினார். இராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடி போய் அங்கிருந்து மறுநாள் நான் திரும்பிய போது ஏறக்குறைய என் உணர்வுகளும் செத்துத்தான் போயிருந்தன. இரயில் பாம்பன் பாலத்தின் மேல் தடதடவென்று ஓடியபோது கதவைத் திறந்து கொண்டு கடலில் குதித்து விட வேண்டும் போல ஆசையாயிருந்தது.
வாழும் ஆசை தீர்ந்த பின் சாகும் ஆசை ஏற்படத்தானே செய்யும்? - உங்கள் முத்துச்சாவடியை வேறு படித்திருந்ததனால் அந்த எண்ணத்துக்கு உங்கள் கதையும் அப்போது தூண்டுதலாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இல்லையென்றால் பாம்பன் பாலம் வந்ததும் அந்த இடத்தில் சாகலாம் என்று சொல்லி வைத்தாற் போல சாகும் நினைவு வந்திராது எனக்கு. தனுஷ்கோடியிலேயே அந்த எண்ணம் வந்து அங்கே பொங்கிக் குமுறுகிற ஆண் கடலில் நான் வீழ்ந்திருப்பேன். இரயிலில் உடனிருந்தவர்கள் விழித்துக் கொண்டிருந்த காரணத்தால் அன்று பாம்பனில் என்னுடைய தற்கொலை எண்ணம் பலிக்காமல் போய்விட்டது.
சுகுணாவின் வாழ்க்கை அநுபவங்களைக் கேட்ட பொது என்னுடைய குறுநாவலுக்கு நான் பட்டுப்பூச்சி என்று பெயர் வைத்தது எவ்வளவு பொருத்தம் என்பது எனக்கு விளங்கிற்று. சமூகத்துக்கு மென்மை அளிக்க வேண்டுமென்று புறப்பட்டுத் தொண்டு செய்ய வந்து தன்னையழித்துக் கொண்டு நிற்கிறாள் அவள். பட்டுப்புழுக்களைத் துன்புறுத்தி நூலெடுத்துப் பட்டுச் செய்து மினுக்குவது போல இந்தச் சமூகத்தில் சுகுணாவைப் போல் இன்னம் எத்தனை பேர் பலியாவதற்கு இருக்கிறார்களோ என்று எண்ணி எண்ணி நொந்தேன் நான். அன்று இரவு நான் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நேரம் வரை அவள் தன்னுடைய கதையை என்னிடம் ஒளிவு மறைவில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் எல்லாவற்றையும் சொல்லி முடித்த போது பன்னிரண்டரை மணியோ, ஒரு மணியோ ஆகியிருந்தது. என் மனைவியை அழைத்து, “நீயும் இந்தப் பெண் சுகுணாவும் கீழே படுத்துக் கொள்ளுங்கள், நான் மாடிக்குப் போகிறேன்” என்று என்னைத் தேடி வந்த பட்டுப்பூச்சியிடம் ஒப்படைத்துவிட்டு மாடிக்குச் சென்றேன் நான். என் சிந்தனையின் அந்த நேரத்து உணர்வுகளுக்கு மதிப்பும் மௌனமும் தருவது போல் அந்த இரவில் உலகம் நிசப்தமாயிருந்தது. படுக்கையில் போய்ப் படுத்துக் கொண்ட பின்பும் நீண்ட நேரம் வரை தூக்கம் என்னை அணுகவில்லை. சுகுணாவும் அவள் கூறிய வாழ்க்கை அநுபவங்களும், அல்லியூரணி கிராமத்தில் சமூக சேவகியாகப் பணிபுரியத் தொடங்கிய காலத்தில் அவளுக்கு ஏற்பட்ட தொல்லைகளாக அவள் கூறிய நிகழ்ச்சிகளும் நினைவில் அலை அலையாகப் புரண்டன. அந்தச் சிந்தனைகள் என்னை வேதனை கொள்ளச் செய்தன.
‘வண்ணக் கவர்ச்சியும் வனப்பும் கொண்டு எண்ணத்தில் மோகம் நிறைக்கும் கோலத்தில் பறந்து திரியும் பட்டுப்பூச்சிகளைப் போன்றவர்கள் இந்த நாட்டுப் பெண்கள். பறந்து திரியும் போது யார் பிடித்து விளையாட்டுக்காகத் தீப்பெட்டியில் அடைப்பது போல அடைப்பார்கள் என்று உறுதி சொல்ல முடியாது. எந்தக் குறும்புக்காரன் சிறகுகளைப் பிய்த்து விடுவான் என்று தெரியாது. அழகும் கவர்ச்சியும் உள்ள பொருளை அழிக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இந்தத் தேசத்தில் பிரமுகர்களாகவும், வசதியுள்ளவர்களாகவும், முரடர்களாகவும், காமுகர்களாகவும், உள்ள கொடியவர்கள் பரவிக் கிடக்கிறவரை குரூபமும், அவலட்சணமும் நிறைந்த பெண்களாக தேடிப் பிடித்துத் தான் இத்தகைய பொதுத்துறை வேலைகளுக்கு நியமிக்க முடியும் போலிருக்கிறது. பெண் அழகாயிருந்தால் அவளுக்கு ஒரு நிமிடம் கூட நிம்மதியாக வாழ முடியாத சூழ்நிலையை உண்டாக்கும் கொடியவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது எனக்கு. நிறைய அழகும் நிறைய அணிகளும் பூண்டு நடு இரவில் ஒரு பெண் நிம்மதியாகத் தெருவில் தனியே நடந்துபோகும் நிர்ப்பயமான சூழ்நிலை வந்தால் தான் இந்த நாட்டுக்கு உண்மையாகவே சுதந்திரம் வந்ததாக ஒப்புக் கொள்ள முடியும்’ - என்பது போல அடிகள் கூறியிருந்த ஓர் அறிவுரையை நினைத்துக் கொண்டேன். இன்னும் ஏதேதோ நினைத்தபடியே சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன்.
மறுநாள் காலை விடிந்ததும் நான் காபி குடிப்பதற்காகக் கீழே இறங்கி வந்த போது சுகுணா பயணத்துக்குத் தயாரான கோலத்தில் நின்றாள்.
“நான் இன்று போக வேண்டும். எங்கள் சமூக நலத்துறையில் சேவைகள் கிராமத்தை எப்படி எப்படி வளர்த்திருக்கின்றன என்று பார்த்துப் போக அரசாங்கத்திலிருந்து வழக்கமாக கண்காணிப்புக்கு வரும் மேலதிகாரி நாளைக்கு வரவேண்டியதாக கெடு. இன்றே போனால் தான் லெட்ஜர்களையும் நிகழ்ச்சிகளைக் குறித்து வைக்கும் ‘மினிட்ஸ்’ குறிப்புக்களையும் நான் தயார் செய்து வைக்க முடியும். என்னுடைய வேண்டுகோளை நீங்கள் மறுக்கக் கூடாது. நான் போய்க் கடிதம் எழுதுவேன். இரண்டு மூன்று இடங்களில் சொற்பொழிவுக்கும் ஏற்பாடு செய்கிறேன். சுதந்திர தினத்தை ஒட்டி நீங்கள் ஒரு தடவை அல்லியூரணிக்கு வந்து போக வேண்டும். உங்கள் மனைவியையும் அழைத்து வாருங்கள். அல்லியூரணிக்கு அருகில் உள்ள மலைத்தொடர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளமாயிருக்கின்றன. ஒரு பத்து நாள் இந்த நகரத்து வாழ்க்கையை மூட்டைக் கட்டி வீட்டில் அடைத்துப் போட்டுவிட்டுக் கிராமத்துக்கு வந்துதான் பாருங்களேன்” - என்று சொல்லிவிட்டு என் மனைவி அளித்த காபியை குடித்த பின் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் சுகுணா. உலகத்திலேயே இவ்வளவு நளினமான அழகி இல்லை என்று எல்லாரும் ஏகமனதாகப் புகழத்தக்க பெண்ணொருத்தியைத் தன் தங்கையாகப் பெற்ற தமையனுக்கு ஏற்படுமே, அத்தகைய சகோதர பாசத்தோடு கூடிய பெருமிதம் சுகுணாவின் மேல் எனக்கு ஏற்பட்டது. அவளுடைய தனி அழகை மட்டும் கண்டு நான் பெருமிதப்படவில்லை. அவள் குறுகிய எண்ணங்கள் அற்றவளாக இருந்தாள். அந்த நேரத்தில் நான் அடைந்த இனிய பெருமிதத்துக்கு இவை எல்லாம் சேர்ந்துதான் காரணமாயிருந்தனவே ஒழியத் தனியாக ஒரு காரணம் மட்டும் இல்லை.
என்னுடைய வாழ்வில் பிரச்னைகளை ஏற்படுத்திய பெரிய மனிதர்களை எல்லாம் உங்களுக்குக் காண்பிக்கிறேன். அல்லியூரணிக்குப் புறப்பட்டு வாருங்கள் - என்று மட்டும் அவள் என்னிடம் வேண்டுகோள் விடுத்திருந்தாள் அதை அவளுடைய சுயநலம் கருதிய வேண்டுகோளாக நான் நினைத்திருப்பேன். ஆனால், அவள் அப்படிப்பட்ட குறுகிய நோக்கத்தோடு என்னைத் தன் கிராமத்துக்கு அழைக்கவில்லை. எனக்கும் ஏதாவது ஒரு கிராமத்தில் போய்ப் பத்து பன்னிரண்டு நாள் சுற்றிப் பார்த்து விட்டு வரவேண்டுமென்று ஆசையாகத்தான் இருந்தது. ஏதாவது உயிர்த் துடிப்புள்ளதொரு பசுமையான வாழ்க்கையைக் காண வேண்டும் என்று தவிப்பாகவும் இருந்தது.
நகரத்தின் வளர்ச்சியைப் பார்த்துச் சில சமயங்களில் நான் பயமும் மலைப்பும் அடைந்ததுண்டு. ஒவ்வொரு நகரத்திலும் குடியிருக்கிற தெருக்களைக் கூடக் கடை வீதியாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள். குடியிருக்கும் வீடுகளை எல்லாம் இடித்துக் கடை கட்டிவிட்டால் குடியிருப்பவர்கள் கதி என்ன ஆவது? பெரிய வீடாயிருந்தால் அறை குறையாகத் தடுத்து ‘போர்டிங்’ ‘லாட்ஜிங்’ என்று போர்டு மாட்டி விடுகிறார்கள். நகரங்களின் வேகத்துக்கும் போட்டிக்கும் மிதமிஞ்சிய வியாபார வளர்ச்சிக்கும் ஏராளமான கடைகள் தேவைதான்! சத்தியத்தைத் தவிர மற்ற எல்லாப் பொருள்களும் விலை போக இன்றைய நகரங்களில் வசதி உண்டு. குடியிருக்கும் வீடுகளை எல்லாம் கடைகளாகவும், போர்டிங் லாட்ஜிங்குகளாகவும் கட்டி வியாபாரக் களமாய் ஆக்கி விட்டால் மத்தியதரக் குடும்பத்து மனிதர்கள் வசிக்க எங்கே போவார்கள் என்பது சிந்தித்துச் சிந்தித்து அந்த சிந்தனையினாலேயே நகரங்களின் மேல் வெறுப்பை ஏற்படுத்திக் கொண்டவன் நான். வடக்கே இரண்டு பர்லாங், தெற்கே இரண்டு பர்லாங் கடைகளோ, வியாபாரக் கூச்சல்களோ இல்லாத தனி வீடாகப் பார்த்துக் கொண்டு பசுமலை அடிவாரத்தில் நான் குடி இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்தான்.
கிராமசேவகி சுகுணா அல்லியூரணி கிராமத்துக்கு வரும்படியாக என்னை அழைத்த தேதியை நான் டைரியில் குறித்துக் கொண்டேன். அந்தத் தேதிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதாலும் அதை ஒட்டி ஒரு வாரமோ, பத்து நாளோ, முழுமையாக ஓய்வு இருக்கிறாற் போல் எழுத்து வேலைகளை எல்லாம் முடித்துக் கொள்ளத் திட்டமிட்டேன். முதலை நாள் மாலையிலிருந்து ‘பட்டுப்பூச்சி’ கதையைப் பற்றிச் சுகுணா என்னிடம் எழுப்பிய கேள்விகளை எல்லாம் மீண்டும் நான் வரிசையாக நினைத்துப் பார்த்தேன். அந்தச் சகோதரி என்னைத் தேடிவந்து விட்டுப் போனதை நினைப்பதே எனக்குப் பெருமையாக இருந்தது. வேலைக்குப் போகச் சிபாரிசுக் கடிதங்கள் கேட்டோ, பத்திரிகைகளின் ஆசிரியர்களுக்கு அறிமுக ஓலை கேட்டு மன்றாடியோ, புத்தகங்களுக்கு முன்னுரை கேட்டோ தினம் பல பேர் வருகிறார்கள். அவர்களை எல்லாம் நினைவு வைத்துக் கொள்வதே சிரமமாயிருக்கிறது. இந்தப் பெண்ணையோ மறப்பதுதான் சிரமமாயிருக்கிறது. இவளை நினைவு வைத்துக் கொள்வதில் எனக்குச் சிரமமே இல்லை.
இதன் பின்பு ஒரு வாரம் பத்து நாள் கழித்துச் சுகுணா விடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அல்லியூரணியில் தன்னைப் பற்றித் துஷ்பிரசாரம் செய்யும் கௌரவமான எதிரிகள் அதிகமாகி வருவதாக அவள் எழுதியிருந்தாள். கதைகளை எழுதுவதற்காக உருவாக்கிக் கொண்டிருந்த கற்பனைப் பாத்திரங்களின் வாழ்வை எப்படி எப்படி நன்றாக மாற்றி அமைக்கலாம் என்று கவலைப்படுவது தவிர அல்லியூரணி கிராமத்திலிருக்கும் என்னுடைய இந்த உண்மைக் கதாபாத்திரத்தை வழி நடத்திச் செல்லும் பொறுப்பும் இப்போது எனக்கு ஏற்பட்டிருந்தது. மேதின விழாவுக்காகத் தொழிலாளிகள் கூட்டம் ஒன்றில் பேசுவதற்குக் கோயமுத்தூர் வருவதாக ஒப்புக் கொண்டிருந்ததனால் அவளுடைய கடிதம் என் கைக்குக் கிடைத்த அன்று நான் கோயம்புத்தூருக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அதனால் நான், அன்று அவளுக்கு உடனே மறுமொழி எழுத முடியவில்லை. மறுநாள் பகலில் கோயம்புத்தூரில் சிறிது ஓய்வு இருந்தது. கூட்டம் மாலை ஆறு மணிக்குத்தான். நான் ஐந்து மணிக்குத் தயாரானால் போதும். எனவே கிடைத்த ஓய்வு நேரத்தை வீணாக்காமல் சுகுணாவுக்குப் பதில் எழுதினேன். அந்தக் கடிதத்தை நான் உற்சாகமான மனநிலையில் எழுதினேன்.
“இதற்கு எல்லாம் நீங்கள் அதைரியமடையக் கூடாது சுகுணா! பெரிய கைகளானாலும் அவற்றில் தான் அணிவிக்கும் வளையல்களும் உடையாமல், கைகளும் நோகாமல் வளையல்காரன் வளை அணிவிக்கிற மாதிரி இந்தச் சமூகத்தில் புதிய கருத்துக்களை மிகவும் சாமர்த்தியமாக நுழைக்க வேண்டும். அவசரப்பட்டு முரட்டுத்தனமாக நுழைத்தால் அணிவிக்கும் வளையல்களே உடைந்து விடுவது போல் நம்முடைய கருத்துக்களே சிதறிப் போகும். நம்முடைய கருத்துக்களும் சிதறக்கூடாது. இந்தத் தலைமுறையில் சமூகத்தைத் திருத்துவதற்கு என்று செய்யும் எல்லா முயற்சிகளும் இப்படி வளையல்காரன் வளையல் அணிவிப்பது போல் பக்குவமான நல்ல முறையில் முயலும் முயற்சிகளாக இருக்க வேண்டும். உங்களுடைய அழகு உங்கள் பணிக்கு இடையூறாக இருப்பதாக நீங்களே எழுதியிருக்கிறீர்கள். அழகாயிருப்பதைக் குறைபாடு என்று எப்படி நினைக்க முடியும்? காலமும் மனிதர்களின் மனமும் மாறிவிட்டால் எல்லாம் சரியாய்ப் போகும். சுதந்திர தினத்தின் போது நானும் என் மனைவியும் அல்லியூரணிக்கு வருகிறோம். உண்மையில் உங்கள் மனம் அளவற்றுத் துயரப்படுகிற போதெல்லாம் எனக்குக் கடிதம் எழுதுங்கள், நான் பதில் எழுதுகிறேன்” - என்று அன்று அவளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். நான் கோவை முகாமிலிருந்து எழுதிய இந்தக் கடிதம் அவளுக்குப் பெரிதும் ஆறுதல் அளித்திருக்கும் என்று நம்பினேன். அவ்வளவு அழகாக அந்தக் கடிதம் வாய்த்திருந்தது. கோவையில் மேதினக் கூட்டத்தில் பேசும் போது ஒரு மணி நேரம் என்னை மறந்த ஆவேசத்தில் மிதந்து விட்டேன் நான். சமூக சேவை, உழைப்பின் பெருமை, பழைய ஆஷாபூதிகள் இந்தத் தேசத்தின் புதிய தலைமுறை எண்ணங்களை பாழாக்கி நல்ல உழைப்பை உறிஞ்சிக் கொண்டு வரும் கொடுமை, எல்லாவற்றையும் எடுத்துக் கூறினேன்.
“சமூகத் தொண்டர்கள் சுக்கு போல எல்லா இடத்திலும் கிடைக்கிற எளிய மருந்தாக இருந்து சமுதாய நோய்களைத் தீர்க்க உதவி புரிய வேண்டும். பென்சிலின் மருந்து போலக் கிடைப்பதற்கு அருமையான உயரத்தில் இருக்கும் கௌரவமான சமூகத் தொண்டு இந்த நாட்டுக்குப் பயன்படாது. மாதர் சங்கத் தலைமை, சமூகத் தொண்டு ஆகியவற்றை எல்லாம் சோப்பு, சீப்பு, உடைகள் போலப் புதிய ஃபாஷன்களாகக் கருதுகிற பணக்காரர்கள் தயவு செய்து இந்தத் தொண்டு வழிகளில் ஆசைப்படக் கூடாது. அவர்களால் தொண்டு வளர்வதற்குப் பதில் ஊழல்கள் தான் வளரும்” என்று கொதிப்போடு பேசினேன். என் பேச்சில் அப்போது நான் முழுமையாகத் தோய்ந்து பேசியதற்குக் காரணம் அன்று பகலில் சுகுணாவுக்கு எழுதிய கடிதம்தான். அந்தக் கடிதத்தில் சுருக்கமாக எழுதியிருந்த பல கருத்துக்களையே கூட்டத்தில் விரிவாகப் பேசினேன். என்னுடைய கருத்துக்கள் பல கல்லூரி இளைஞர்களிடையே உணர்வு மூட்டியிருப்பதைக் கூட்டம் முடிந்ததும் என்னைத் தனியே சந்திக்க வந்தவர்களில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அந்தச் சந்திப்பின் போது சிறந்து இலட்சியவாதியான அழகி இளைஞன் ஒருவனையும் நான் என்னுடைய இரசிகனாகச் சந்தித்தேன்.
பொதுக்கூட்டம் முடிந்து நான் மேடையிலிருந்து கீழே இறங்கியதும் ‘ஆட்டோகிராபில்’ கையெழுத்து வாங்குவதற்காக ஒரு கூட்டம் சூழ்ந்தது. அந்தக் கூட்டத்தைத் திருப்தி செய்து அனுப்பிவிட்டு நான் நிமிர்ந்த போது, “என் பெயர் விவேகானந்த மூர்த்தி! நான் இந்த ஊர்க் கலைக் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ‘குறிஞ்சி மலரி’ல் எனக்கு நிறைந்த ஈடுபாடு உண்டு. நான் இப்போது என்னுடைய ஆட்டோகிராபில் கையெழுத்து வாங்குவதற்காக மட்டும் வரவில்லை. எனக்கு உங்களோடு சிறிது நேரம் பேச வேண்டும்” - என்று சொல்லிக் கொண்டே ஆட்டோகிராபை நீட்டினார் அந்த இளைஞர். என்னுடைய முதற் பார்வையிலேயே சுறுசுறுப்பும் ஆர்வமும் நிறைந்தவராகத் தோன்றினார் அந்த இளைஞர்; சின்னஞ்சிறு கையெழுத்து நோட்டுப் புத்தகத்தில் நான் கையெழுத்துப் போடவேண்டுமென்று அவர் காண்பித்த இடத்துக்கு மேலே ஏதோ எழுதியிருக்கவே அதில் எழுதியிருப்பது என்ன என்று தெரிந்து கொண்டு அப்புறம் கையெழுத்துப் போடக் கருதினேன். ‘குறிஞ்சி மலரைப் படித்த கைமலர்’ - என்று எழுதியிருந்ததைப் படித்ததும் அந்த மிகைப்படுத்திய புகழ்ச்சிக்கு நாணி மெல்லச் சிரித்துக் கொண்டே கையெழுத்திட்டேன் நான்.
“நீங்கள் பேச வேண்டியதையும் இங்கேயே பேசலாமே?” - என்றேன். அதற்கு அந்த இளைஞன் இணங்கவில்லை.
“இல்லை! தனியாகப் பேச வேண்டும். நிறையவும் பேச வேண்டும்.”
“அப்படியானால் என்னோடு நான் தங்கியிருக்கும் ஓட்டல் அறைக்கு வாருங்கள். வேண்டிய மட்டும் பேசலாம். நாளை இரவு இரயிலுக்குத் தான் மறுபடியும் நான் மதுரை திரும்ப எண்ணியிருக்கிறேன்.”
அந்த இளைஞர் என்னோடு நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வரச் சம்மதித்துப் புறப்பட்டார். கூட்டத்துக்கு ஒழுங்கு செய்து என்னைக் கோவைக்கு அழைத்திருந்தவர்கள் எனக்கு ஏற்பாடு செய்திருந்த காரில் நானும் அந்த மாணவரும் ஓட்டலுக்குச் சென்றோம்.
அறையைத் திறந்து மின்விசிறியைச் சுழலச் செய்த பின் அந்த மாணவரை உட்காரச் சொல்லிவிட்டு நானும் உட்கார்ந்து கொண்டேன்.
“உங்களுடைய ‘குறிஞ்சி மலர்’ நாவலின் முடிவில் அரவிந்தன் இறந்து விட்டதாகவும் பூரணி தன்னை அவனுடைய விதவையாகத் தனக்குத் தானே பாவித்துக் கொண்டு திலகவதியாரைப் போன்று வாழ்வதாகவும் எழுதியிருக்கிறீர்கள். இந்த முடிவில் ஆழ்ந்த சோகத்தின் தொனி கேட்கிறது. இந்த முடிவில் உள்ள உயர்தரமான காவிய அழகை நான் பெரிதும் பாராட்டுகிறேன். ஆனால் உங்கள் முடிவைச் சிறிது மாற்றி வைத்து நான் ஒரு கேள்வி கேட்க என்னை நீங்கள் அனுமதிப்பீர்களா?”
“தாராளமாக அனுமதிப்பேன். உங்களுடைய கேள்வியில் நியாயமும் ஆக்கப்பூர்வமான நோக்கமும் இருந்தால் எனக்கு மறுப்பில்லை.”
“பூரணி இறந்து போனதாகக் கதையை முடித்திருந்தீர்களானால் அரவிந்தன் திருமணம் செய்து கொள்ளாமலே சமூக சேவை செய்வதாக எழுதியிருப்பீர்களோ, அல்லது வேறு விதமாக எழுதியிருப்பீர்களோ? என்னுடைய கேள்வி போகாத ஊருக்கு வழியைக் கேட்கிற கேள்வியாக இருக்கிறதே என்று நீங்கள் நினைத்து விடக் கூடாது. நான் இப்படிக் கேட்பதன் உள்ளர்த்தத்தை உங்களிடம் தெளிவாகவே சொல்லி விடுகிறேன். காதலுக்கும் தூய்மையான அன்புக்கும் ஒரு பெண்ணின் மனம் எவ்வளவு மரியாதையும் பக்தியும் செலுத்திப் பிடிவாதமாக இருக்க முடியுமோ அவ்வளவு பிடிவாதமாக ஆண்பிள்ளையால் இருக்க முடியுமோ? இந்த உலகத்தில் அன்புக்காகப் பிடிவாதமாயிருக்கிறவர்கள் பெண்கள் மட்டும் தான் என்று நான் நம்புகிறேன். வாழ்க்கையின் வேகமயமான போட்டிகளினாலும், வயிற்றுக் கவலையினாலும் ஆண் பிள்ளைகள் நாளாக நாளாக அன்பு செலுத்துவதற்குக் கூட இயலாத சோம்பேறிகளாய்ப் போய்விடுகிறார்கள் என்று எனக்குத் தோன்றுகிறது. பெண்ணின் மனத்தை முழுமையாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஆட்டுவது போலக் காதல் என்ற இங்கிதமான உணர்வு ஆண்பிள்ளையைப் பற்றிக் கொண்டு ஆட்ட முடியுமா?”
“உங்களுடைய இந்தக் கேள்வியையே நீங்கள் வந்து என்னிடம் கேட்பதற்குப் பதில் ஒரு பெண் பிள்ளை வந்து கேட்டிருந்தால் நான் இன்னும் கோபத்துடன் பதில் சொல்லியிருக்க முடியும் மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! ‘லைலா’வுக்காகக் காதல் பிடிவாதம் பிடித்து அலைந்து ‘மஜ்னுவாகிய கயஸ்’, சோழன் மகளுக்காக அன்புப் பிடிவாதம் செய்த அம்பிகாபதி, இவர்களையெல்லாம் நினைவிருக்கிறதா உங்களுக்கு?”
“நன்றாக நினைவிருக்கிறது! ஆனால் நீங்கள் சொல்கிற இந்தக் கதைகள் எல்லாம் சினிமாவுக்கும், பழைய புத்தகங்களில் பெரிய எழுத்திலே அச்சிடுவதற்கும் பயன்பட்டுச் செத்துப் போன தலைமுறையைச் சேர்ந்த விவகாரங்கள். நான் உங்களிடம் கேட்பது இந்த நூற்றாண்டின் வாழ்வுக்குரிய ஆண் பெண்களைப் பற்றித்தான்.”
“அந்தக் கதைகள் செத்துப்போன தலைமுறைகளைச் சேர்ந்தவையாக இருக்கலாம். ஆனால் அவற்றில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் சாகாதவை என்பதை நீங்கள் மறுக்க முடியாது. உலகத்தில் எந்த தலைமுறை விஷயமும் அந்தத் தலைமுறையோடு அழிவதில்லை.”
“இருக்கலாம். ஆனால் நான் கேட்பது உங்கள் கதையைப் பற்றித் தான். பூரணியின் சாவுக்குப் பின் உங்கள் அரவிந்தன் உயிரோடிருந்தால் நீங்கள் அவனைப் பூரணிக்குக் கணவனாக முன்பே மனத்தில் மட்டும் வாழ்ந்து விட்டதாக முடித்திருப்பீர்களா, அல்லது வேறு ஒரு பெண்ணை மணந்து கொண்டு புதிதாக வாழச் செய்திருப்பீர்களா?”
“ஒருவிதமாகப் படைத்து முடித்து நிறைந்து நிற்கிற கதையை இன்னொரு விதமாக மாற்றிக் கற்பித்துக் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது?”
“உங்களுக்கு வருத்தமாக இருந்தால் என்னுடைய கேள்வியை உங்கள் கதையைப் பொறுத்த பிரச்னையாக மட்டும் வைத்துக் கொள்ளாமல் ஒரு பொதுப் பிரச்னையாக எடுத்துக் கொண்டு எனக்குப் பதில் சொல்லுங்கள்.”
“பொதுப் பிரச்னையாக மாற்றி வைத்துக் கொண்டு பார்த்தாலும் இதற்கு நல்ல பதில் ஒன்றும் என்னிடம் இல்லை. மனைவியை குழந்தை பெறுகிற எந்திரமாகவும், பெறாத காலங்களில் வீட்டுக்காரியங்களையும் சமையல் வேலைகளையும் மொத்தமாகக் கவனித்துக் கொள்ளும் வேலைக்காரியாகவும் கருதுகிற கணவன்மார்கள் அப்படிப்பட்ட மனைவி இறந்து விட்டால் வேலைக்காரியாகவும், முதலில் சொன்ன காரியத்தைச் செய்வதற்கான எந்திரமாகவும் இன்னொரு பெண்ணைத் தேடிப் பிடித்து வாழ்க்கைத் தொழுவில் பூட்டுவதற்கு அடையாளமாகத் தாலியையும் கட்டி மனைவியாக்கிக் கொண்டு விடுவார்கள்.”
“ஒரு பெண்ணைப் பற்றி நான் என்னுடைய மனத்தில் நினைத்து, ‘இவளைத் தான் திருமணம் செய்து கொள்வது’ - என்று உறுதிப் படுத்திக் கொண்ட பின் அவள் இறந்து போய் விட்டாலோ, வேறொருவனுக்கு மனைவியாகி விட்டாலோ - அப்புறம் இன்னொரு பெண்ணுக்கு நான் கணவனாவதில்லை என்ற வைராக்கியத்துடன் ஆண் பிள்ளையாக இருந்தே பெண்ணுக்காகக் கைம்மை நோன்பு நோற்பது போலாகி நான் வாழ முடியுமோ என்பதைத் தான் உங்களிடம் இப்போது கேட்கிறேன். பெண் ஒருத்தியால் அப்படி வாழ முடியும் என்பதை உங்களுடைய ‘குறிஞ்சி மலர்’ சொல்கிறது! ஆண் பிள்ளையால் முடியுமா என்று நான் இப்போது உங்களை வினாவுகிறேன். நிலைமை இதுதான்! இதைத் தெளிவு செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு” - என்றார் அந்த மாணவ இளைஞர்.
“நீங்கள் யாரையாவது காதலித்து அவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதோ விவேகானந்த மூர்த்தி” - என்று நான் அந்த இளைஞரை நோக்கி சிரித்துக் கொண்டே, சிறிது குறும்பும் கலந்து கேட்டேன்.
“அப்படி எல்லாம் என் மேல் ஒரு பழியும் போடாதீர்கள் சார்! என் சிந்தனையில் நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையைச் சேர்ந்ததாக உறுத்திக் கொண்டிருந்த கேள்வி இது. உங்களுடைய ‘குறிஞ்சி மல’ரைப் படித்த நாளிலிருந்து இந்தக் கேள்வி என் மனத்தில் வந்து பதிந்து விட்டது. தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலோடு மட்டும் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேனே தவிரச் சொந்தமாக இதைப் போன்ற எந்த அனுபவமும் எனக்குக் கிடையாது.”
புத்திக் கூர்மை மிக்க விவேகானந்த மூர்த்தியின் இந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லி விடாமல் சிறிது தயங்கினேன் நான்.
‘ஒரு நல்ல பெண் வைராக்கியமான உள்ளத்தோடு அப்படி வாழ முடியும் என்று ‘குறிஞ்சி மல’ரில் நிரூபித்தாயிற்று. ஓர் ஆண் வாழ முடியுமா என்று சிந்திப்பதற்கு இன்னொரு நாவலை நான் எழுதுவதா? அல்லது வெறும் சிந்தனையாக மட்டும் இதை நிறுத்திக் கொண்டு விடுவதா?’ - என்று எனக்குள் எண்ணியபடியே மௌனமாக இருந்தேன்.
“என் கேள்விக்கு இப்போது நீங்கள் உடனடியாகப் பதில் சொல்லாவிட்டால் எப்போதாவது இதை நடு மையமான பிரச்னையாக வைத்து நீங்கள் ஒரு கதை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ எழுத வேண்டும் என்பது என் விருப்பம்” - என்று விவேகானந்த மூர்த்தி மீண்டும் குறுக்கிட்டுச் சொல்லவே அந்தக் கேள்விக்கு அப்போதே பதில் சொல்லும்படி நான் வற்புறுத்தப் படவில்லை என்று புரிந்து கொண்டேன்; ஆனாலும் ஏதாவதொரு பதில் சொல்ல வேண்டும் என்று எனக்கே விருப்பமாக இருந்தது. ஆகவே நான் பதில் சொன்னேன்.
“மனைவிக்காக கைம்மை நோன்பு நோக்கும் இளம் பருவத்துக் கணவன் ஒருவன் என் பார்வையில் தென்படுவானாயின் ‘கற்பு நிலை என்றால் அதை இரு கட்சிக்கும் பொதுவாய் வைப்போம்’ - என்று புதுமைக் கவி பாரதி பாடிய இலட்சியம் மெய்யாகிவிட்டது என்பதை இன்று நான் புரிந்து கொள்வேன். புதுமையான கற்புக்கு வழிவகுக்கும் அந்த இலட்சியவாதியை வணங்கவும் செய்வேன்.”
“உண்மை வாழ்வில் காண முடிகிறதோ இல்லையோ, நீங்கள் எழுதப் போகிற இலட்சிய நாவல்களில் ஏதாவது ஒன்றிலாவது இப்படிப்பட்ட புதிய கற்புக்கு முன்மாதிரியாகிய ஆண் மகன் ஒருவனைப் படைத்துக் காட்டுங்கள் சார்” - என்று எனக்கு வேண்டுகோள் விடுத்தார் அந்த இளைஞர்.
“மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் புதிய விதமான இலட்சியக் கதாபாத்திரங்களை உருவாக்குவதனால் நடைமுறையில் எவ்வளவோ தொல்லைகள் ஏற்படுகின்றன. கதையில் அந்தக் கதாபாத்திரங்களும் தொல்லைப் படுகிறார்கள். அவர்களை உருவாக்கி அளித்த கதாசிரியனையும் சேர்த்துத் தொல்லைப் படுத்துகிறார்கள். இந்த வருடம் பட்டுப்பூச்சி என்ற பெயரில் ஒரு குறுநாவல் எழுதி இருந்தேன் அல்லவா? அதில் வருகிற இலட்சியக் கதாபாத்திரமாகிய சுகுணாவுக்கு ஏற்பட்டதைப் போல் அல்லியூரணி என்ற கிராமத்தில் சமூக சேவகியாக உண்மையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கும் சுகுணா என்னும் அதே பெயரை உடைய வேறு ஒரு பெண்ணுக்குத் துன்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. கதையில் வருகிற சுகுணாவை விட இந்த உண்மைச் சுகுணா பரிதாபமானவள். இவள் பால்ய விதவை. சமூக சேவகியாக வேலைக்கு வருவதற்கு முன் பயிற்சி பெற்ற பி.டி. ஆசிரியையாகப் பள்ளிக்கூடத்தில் வாத்தியாரம்மா வேலையும் பார்த்திருக்கிறாள் இவள். என்னுடைய கதையான பட்டுப்பூச்சி வெளிவந்ததோ இல்லையோ, அந்தக் கதையால் இவளுடைய வாழ்வில் அனுதாபங்கள் அதிகமாகி யிருக்கின்றனவாம். மதுரைக்குப் புறப்பட்டு என் வீடு தேடி வந்து என்னிடம் வருத்தப்பட்டு விட்டுப் போனாள். நேற்று மாலை இங்கே கோவைக்குப் புறப்பட்டு வருவதற்கு முன்னால் கூட இவளிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்கும் இங்கிருந்து இன்று பகலில் தான் மறுமொழி எழுதினேன். பட்டுப்பூச்சி என்கிற கதையை எழுதியதனால் இப்படி விளைவுகள் ஏற்பட்டிருப்பதை அறிந்த பின் எனக்கு நிம்மதியே இல்லை. இந்தச் சமயம் பார்த்து நீங்கள் பிரச்னைக்கு உரிய மற்றொரு கதையை எழுதச் சொல்கிறீர்களே?” - என்று விவேகானந்த மூர்த்தியிடம் கேள்வி கேட்டேன் நான்.
“சார்! நீங்கள் இவ்வளவும் மனம் திறந்து சொல்லிய பின் நானும் உங்களிடம் மனம் விட்டுப் பேசலாம் என்றே நினைக்கிறேன். பட்டுப்பூச்சி என்ற கதையை நானும் படித்தேன். அதை எழுதியவர் நீங்கள் என்பது இன்று தான் எனக்குத் தெரிகிறது. அந்தக் கதையின் முடிவில் உங்கள் கதாநாயகிக்கு மணம் செய்து வைப்பதற்காக நீங்களே வரன் கேட்டிருந்தீர்களே; அதைப் படித்து விட்டு அந்தக் கதையை எழுதியவருக்கு உடனே கடிதம் எழுதத் தவித்தவர்களில் நானும் ஒருவன். உங்கள் கதைகளில் வருகிற சில அழகிய பெண்கள் இளம் வாசக வாலிபர்களை எல்லாம் தங்களைக் காதலிக்கும்படி செய்து கொண்டு விடுகிறார்கள். உங்களுடைய மலைச்சிகரத்தில் வருகிற நளினி, கோபுர தீபத்தில் வருகிற சுசீலா போன்ற பெண்களைப் பற்றிப் படிக்கும் போது பதினெட்டில் இருந்து முப்பது வயதுக்குள் உள்ள எந்த இளைஞனும் அவர்களை மனைவியாக்கிக் கொள்ளும் நினைப்பைக் குறைந்த பட்சம் ஒரே ஒரு முறையாவது நினைக்காமல் தப்பி விட முடியாது. உங்கள் பட்டுப்பூச்சியின் கதாநாயகியை மணந்து கொள்ள ஆசைப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்பதை இப்போது உங்களிடம் சொல்வதற்கு அதிகமாக வெட்கப்பட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படவில்லை” - என்று விவேகானந்த மூர்த்தி கூறிய போது எனக்கு ஏற்பட்ட ஆச்சரியத்துக்கு ஓர் அளவே இல்லை. அந்த ஆச்சரியத்தை அடக்கிக் கொண்டு மிகவும் தந்திரமாக அவரிடம் வேறு ஒரு கேள்வி கேட்டேன்.
“இப்போது நீங்கள் கூறியதைப் போலவே ஆசைப்பட்டு எனக்கும் சில கடிதங்கள் வந்தன. இந்தக் கடிதம் எழுதியவர்கள் எல்லாம் கற்பனைச் சுகுணாவின் மேல் காதல் கொண்டிருக்கிறார்கள். அல்லியூரணியிலிருக்கும் உண்மைச் சுகுணாவை மணக்குமாறு இவர்களை நான் வேண்டினால் என்ன பதில் சொல்வார்களோ?”
என்னுடைய கேள்வி அந்த இளைஞருடைய முகத்தில் அப்போது ஏற்படுத்தும் உணர்ச்சிகளைக் கவனிப்பது அவசியமென்று கருதினேன் நான். அதனால் கவனிக்க வேண்டியதைக் கூர்ந்து கவனித்தேன் அப்போது. அந்த இளைஞர் மிக உறுதியான குரலில் எனக்கு மறுமொழி கூறினார்.
“என்னைப் பொறுத்தவரை உங்களுடைய எந்த அறிவுரையையும் நான் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தயாராயிருக்கிறேன் சார். இதை நான் வெறும் சம்பிரதாயத்துக்காக மட்டும் சொல்லவில்லை. உண்மையாகவே சொல்லுகிறேன். உங்களுடைய கற்பனையில் உதயமான சுகுணாவின் அழகை மட்டும் நான் காதலிக்கவில்லை. உண்மை உலகத்தில் நீங்கள் ஒரு சுகுணாவைக் காண்பித்து ‘இவளுடைய கணவனாகத் தான் நீ இருக்க வேண்டும்’ என்று எனக்குக் கட்டளையிட்டால் அந்தக் கட்டளைக்கு நான் ஆட்படுவேன். அவ்வளவு துணிவும் தன்னம்பிக்கையும் எனக்கு உண்டு.”
“இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் சத்தியமும் உறுதியும் உள்ளவைதாம் என்று நான் நம்புகிற மாதிரி நீங்கள் ஏதாவது செய்து நிரூபித்துக் காண்பிக்க முடியுமா மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி?”
“கட்டாயம் செய்து காண்பிப்போம் சார்! ‘என்னால் செய்ய முடியுமோ?’ என்று நீங்கள் திகைத்து மலைப்படைகிற காரியத்தைக் கூட நான் உங்களுக்காகச் செய்யத் தயார். உங்கள் எழுத்து என்னை அப்படி ஆக்கி வைத்திருக்கிறதே!”
“நன்றாகச் சிந்தித்து பதில் சொல்லுங்கள். நான் உங்களை மிரட்டுவதற்காகவோ, வெறும் விளையாட்டுப் பேச்சுக்காகவோ வேலை மெனக்கெட்டு இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. என் மனதில் உருவாகிவிட்ட தீர்மானம் ஒன்றை அடித்தளமாக வைத்துக் கொண்டு தான் இவற்றைக் கேட்கிறேன்!”
“அப்படி ஒரு தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளத் துணிந்து தான் நானும் இப்படி ஒப்புதல் தருகிறேன்.”
“நல்லது இவ்வளவு உறுதியாக நீங்கள் பேசும் போது உங்களிடம் நேரடியாகவே இனி நான் கூற வேண்டியதைக் கூறலாம். சற்று முன் நான் கூறினேன்; பட்டுப்பூச்சியின் உண்மைக் கதாநாயகி அல்லியூரணியில் கிராம சேவகியாக இருக்கிறாள். கற்பனைச் சுகுணாவைக் காட்டிலும் இந்த உண்மைச் சுகுணாவின் அழகு அதிகம். கற்பனைச் சுகுணாவை விட இலட்சியப் பைத்தியமும் அதிகம். கற்பனைச் சுகுணாவை விட அதிகமான துன்பங்களை இவள் வாழ்வில் இதுவரை அனுபவித்திருக்கிறாள். எட்டு வயதிலோ, ஏழு வயதிலோ பொம்மைக் கலியாணம் போல நடந்த நிஜக் கலியாணத்தில் தாலி கட்டின கணவனை இழந்த பிள்ளைப் பருவத்துக் கொள்ளைப் பேரிடியைத் தாங்கி நிற்கிறாள். கிராம சேவகியாக வேலை ஏற்றுக் கொண்டு வாழும் இவள் இப்படியே கட்டுக் காவலில்லாத புனித மலராக வாழ்ந்து கைம்மையைக் கடைபிடிக்கும்படி அநுமதிக்கவும் இன்றைய சமூகத்தில் காமுகர்களாக மறைந்து உலாவும் பிரமுகர்களும், பெரிய மனிதர்களும் விடமாட்டார்கள். அபவாதமும், பழிகளும் புனைவதையும் நிறுத்த மாட்டார்கள். தைரியமும் தன்னம்பிக்கையும், இலட்சியங்களில் பற்றுக் கொண்டு உங்களைப் போல் முற்போக்கான நினைவுள்ள ஒருவர் இவளுக்கு வாழ்வளிக்க முன் வந்தால் அந்தக் காரியத்துக்கு முன்னின்று முயன்ற நாட்கள் என் வாழ்விலேயே பயன்மிக்கனவாயிருக்கும். எனக்கு இ ப்படி ஒரு சகோதரி இருந்து அவளுக்கு இப்படிப்பட்ட துன்பங்களும் வாய்த்து விட்டால் நான் என்னைத் தேடி இலட்சியமும் சீர்திருத்தமும் பேசிக்கொண்டு வருகிற ஒவ்வொரு இளைஞனிடமும் இதே வேண்டுகோளைத் தான் விடுப்பேன். இந்தத் தாய்த்திருநாட்டில் இப்படி நிராதரவாகவும், பாதுகாப்பில்லாமலும் வாழ்கிற ஒவ்வொரு பெண்ணையும் என் உடன் பிறவாத சகோதரிகளாக எண்ணி நான் உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த ஆசையின் முதல் வெற்றிக்கு நீங்கள் உதவி செய்ய இடமிருந்தால் நாளைக்குக் காலையில் உங்களுடைய புகைப்படத்தோடு என்னைப் பார்க்க வாருங்கள்.”
அந்த நேரத்தில் என்னுடைய பேச்சில் அவ்வளவு கண்டிப்பு எப்படி வந்து இணைந்ததென்று நான் பேசி முடித்த பின்பு எனக்கே வியப்பாக இருந்தது.
“நான் உங்கள் பேச்சுக்கு ஆட்படுகிறேன். நாளைக் காலையில் மறுபடி சந்திக்கலாம்” - என்று என் வலது கையில் சத்தியம் செய்வது போல் தம் வலது கையை வைத்து அழுத்திக் குலுக்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அந்த இளைஞர். வேலியற்ற தோட்டமாக இருக்கும் சுகுணாவுக்கு நல்ல கணவன் கிடைக்கப் போகிறான் என்று நம்பிக்கை கொண்டு அன்றிரவு நான் நிம்மதியாக உறங்கினேன்.
சொல்லியபடியே மறுநாள் காலை அந்த இளைஞர் விவேகானந்த மூர்த்தி புகைப்படத்தோடு என்னைத் தேடி வந்து விட்டார். என்னை இரயிலேற்றி ஊருக்கு வழியனுப்புகிறவரை என்னுடனேயே இருக்க வேண்டும் என்ற விருப்பத்தால் அன்று கல்லூரிக்கு லீவு வேறு சொல்லிவிட்டு வந்திருந்தார் அவர்.
“உங்கள் புகைப்படத்தைச் சுகுணாவுக்கு அனுப்பி விவரமும் எழுதுகிறேன். நான் கிழித்த கோட்டைத் தாண்டத் துணிய மாட்டாள் அந்தப் பெண். அவள் புகைப்படத்தை மறுதபாலில் உங்களுக்கு வாங்கி அனுப்புகிறேன். நீங்களும் அதைப் பார்த்து விட்டு உங்கள் அபிப்ராயத்தை எனக்கு எழுதுங்கள்” - என்று இரயில் நிலையத்தில் விடை பெற்றுக் கொள்ளும் போது நான் விவேகானந்த மூர்த்தியிடம் கூறினேன்.
“நான் அந்தப் பெண்ணின் படத்தைப் பார்க்க வேண்டுமென்ற அவசியமே இல்லை சார்! நீங்கள் அவளை உங்கள் பட்டுப்பூச்சியின் உண்மைக் கதாநாயகியாக வர்ணிக்கிறீர்கள். அந்த ஒரு தகுதி போதும் எனக்கு. ஏனென்றால் பட்டுப்பூச்சியின் கதாநாயகியான சுகுணாவை எழுத்தில் படித்தே நான் காதலித்திருக்கிறேன். கனவு கண்டிருக்கிறேன். என் தந்தை ஓர் ஓய்வு பெற்ற ஆங்கில புரொபஸர். தாய் காலமாகி இரண்டு மூன்று ஆண்டுகள் கழிந்துவிட்டன. சகோதரிகள் எல்லாம் திருமணமாகிக் கணவர் வீடுகளில் சுகமாக வாழ்கிறார்கள். அப்பாவுக்கு நான் செல்லப்பிள்ளை போலத்தான். அவரே தம்முடைய கல்லூரி நாட்களில் இப்படிச் சீர்திருத்தத் திருமணங்களை ஆதரித்து நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறார். சில திருமணங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியும் இருக்கிறார். ஆகவே என் விருப்பத்துக்குத் தடைகளே இல்லை. சந்தேகம் சிறிதும் இன்றி நீங்கள் முயற்சி செய்யலாம். மார்ச் இறுதியில் எனக்கு எல்லாப் பரிட்சைகளும் முடிந்து விடுகின்றன. ஏப்ரலில் எனக்கு விடுமுறை தொடங்குகிறது. திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது நீங்களே என் தந்தையைச் சந்தித்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போதும்” -
என்று தைரியம் கூறி என்னை வழியனுப்பினான் அந்தத் தீரன். விநோதமான அந்த வாசகன் என்னிடமிருந்து அன்று வரை படித்துக் கொண்டது. அதிகமா அல்லது அந்தச் சில மணி நேரங்களில் நான் அவனிடமிருந்து படித்துத் தெரிந்து கொண்டு திரும்புவது அதிகமா என்று மருண்டது என் மனம்.
நான் ஊருக்குப் போனதும் முதல் வேலையாக அந்தப் படத்தோடு விவரமான கடிதம் ஒன்று எழுதிச் சுகுணாவுக்கு அனுப்பி வைத்தேன். ‘கிராமசேவகி உத்தியோகத்தில் உங்களுக்குக் கிடைக்கிற அபவாதங்களும், பழிகளும் உங்கள் உடம்பை நினைத்து வட்டமிடுகிற மனிதக் கழுகுகளும், விலகி ஓடும்படிக்கு ஒரு காவலனை கண்டுபிடித்திருக்கிறேன். என் சொற்களை மீறாமல் நீங்கள் இந்தப் படத்தில் புன்னகை பூத்துக் கொண்டிருக்கும் இலட்சியவாதியை மணந்து கொள்ள வேண்டும். இல்லா விட்டால் வேலையை விட்டு விட வேண்டும். இந்த இளமையில் அழகையும், இலட்சியங்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு உங்களைப் போல் ஒரு பெண் தனிக்கட்டையாக எந்தக் காரியம் செய்யப் புகுந்தாலும் அங்கே ஏதாவதொரு விதத்தில் பழிகள் தான் காத்துக் கிடக்கும். உங்களுக்குத் திருமணமானால் நீங்கள் மறுமணம் செய்து கொண்டதை எதிர்த்துச் சிறிது காலம் கசுமுசுவென்று பேசிக் கொள்வார்கள். ஆனால் வேறு பழிகள் குறையும் போது நாளடைவில் இந்த மறுமணமும் அங்கீகாரம் பெற்ற நியாயமாக மாறிவிடும். உங்களைக் கைப்பற்றி மணக்க ஆசைப்படும் ஒரு சீர்திருத்தவாதிக்குக் கைகொடுக்கத் தயங்காதீர்கள்’ - என்று கடிதத்தில் வற்புறுத்தி எழுதியிருந்தேன். அவளுடைய புகைப்படத்தை அனுப்பும்படியும் கேட்டிருந்தேன். விவேகானந்த மூர்த்தியின் புகைப்படத்தையும் என் கடிதத்தையும் சுகுணாவுக்கு அனுப்பி வைத்த அன்று இரவில் என் மனைவியிடம் அவள் பதற்றமோ ஆத்திரமோ அடைந்து விடாதபடி பக்குவமாகவும், நிதானமாகவும், என்னுடைய இந்த முயற்சிகளைப் பற்றிக் கூறினேன். அவள் இவற்றை வரவேற்காததுடன் அடியோடு வெறுத்தாள்.
“உங்களைப் போன்றவர்களுக்குப் பைத்தியந்தான் பிடித்திருக்கிறது. சீர்திருத்தம் சீர்திருத்தம் என்று சொல்லிப் பேரைக் கொடுத்துக் கொண்டு வீணா பழி சுமக்கத் தான் போகிறீர்கள். கோயம்புத்தூரில் அந்தப் பையனின் தந்தை உங்களைத் திட்டப் போகிறார். அல்லியூரணியில் இந்தப் பெண் சுகுணாவின் வயதான தாய் உங்களைத் தூற்றப் போகிறாள். நடுவில் ஊர் உலகத்து பழிகள் வேறு தெருவில் முகம் காட்ட முடியாதபடி காதில் விழும்” - என்று என் முயற்சிக்கு இரங்கற்பாப் பாடினாள்.
“இந்த விஷயத்தை உன்னிடம் நான் சொல்லியிருக்கக் கூடாது. தயவு செய்து இதைப் பற்றி நீ ஒன்றும் பேசாதே” என்று அவளை அடக்கி விட்டு எனக்குள் நானே என் ஏற்பாடுகளின் விளைவுகளைச் சிந்திக்கலானேன். இடையூறுகளை எதிர்பார்க்க வேண்டியது தான். ஆனால் நான் பயப்படவில்லை. துணிவோடு கொள்கையில் திடமாக நின்றேன்.
அதற்கு ஒரு வாரம் வரை சுகுணாவிடமிருந்து என் கடிதங்களுக்குப் பதிலே இல்லை. நான் கோவையிலிருந்து எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. மதுரை திரும்பி அவளுடைய மறுமணத்தைப் பற்றிக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்துக்கும் பதில் இல்லை. நான் மிகவும் அவசரப்பட்டு விட்டேனோ என்று எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் அந்தச் சந்தேகத்துக்குச் சிறிதும் அவசியமில்லை என்பது போல் சரியாகப் பத்தாவது நாள் காலை சுகுணாவிடமிருந்து எனக்குச் சாதகமான பதிலும், புகைப்படமும் வந்து சேர்ந்து விட்டன. கடிதத்தில், “வளையல்காரன் வளையல்களை அணிவிப்பது போல் பொருளும் அழிந்து விடாமல் இடமும் நோகாமல் சீர்திருத்தங்கள் நிதானமாகச் செய்ய வேண்டுமென்று நீங்களே எனக்கு அறிவுரை கூறிவிட்டு என் சொந்த வாழ்க்கையில் நான் அடைய வேண்டிய சீர்திருத்தத்தை மிகவும் வற்புறுத்தி அவசரப் படுத்தியிருக்கிறீர்கள். ஆனாலும் உங்கள் ஏற்பாட்டுக்கு நான் இணங்குகிறேன். உண்மையில் என் மனநிலையையும் புரிந்து கொண்டு தான் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். என்னால் இப்படியே வாழ்ந்து என்னை நானே காத்துக் கொண்டு போக முடியும் என நம்ப முடியவில்லை. சூழ்நிலையையும் சிந்தித்து எனக்கு நல்லதைத்தான் நீங்கள் சொல்லுகிறீர்கள். என் படம் அனுப்பியுள்ளேன். உங்கள் சகோதரி சுகுணா நீங்கள் சுட்டிக் காட்டுகிற வழியில் வாழ்வதற்குக் காத்திருக்கிறாள். நீங்கள் சுதந்திர தின விழாவுக்காக இங்கே வரும் போது என் அம்மாவிடம் விவரமாக எடுத்துக் கூறி சம்மதிக்கச் செய்ய முயலுங்கள். முடிந்தால் நீங்களும், உங்கள் மனைவியும் இங்கு வரும் போது கோவையிலிருந்து அவரையும் வரவழைத்து இங்கே கூட்டி வாருங்கள். இதற்கு மேல் நான் என்ன எழுதுவதென்று எனக்குத் தெரியவில்லை” -
என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள் அவள். அதைப் படித்ததும் நான் ஒரு காரியம் செய்தேன். அந்தக் கடிதத்தையும் அதனோடு இருந்த அவள் புகைப்படத்தையும் சேர்த்து உடனே விவேகானந்த மூர்த்திக்கு அனுப்பி வைத்தேன். அவள் எனக்கு எழுதிய கடிதத்தையும் படித்தால் அவனுக்கு உற்சாகமாயிருக்கும் என்று தோன்றியதால் தான் நான் அப்படிச் செய்தேன். என் செயல் நல்ல விளைவை அளித்தது. நான்காவது நாளே விவேகானந்த மூர்த்தி கோவையிலிருந்து எனக்கு மிக ஆர்வமாகக் கடிதம் எழுதியிருந்தார். தன்னுடைய சீர்திருத்தத் திருமண நோக்கத்தை எல்லாம் விவரமாக ஒரு கடிதம் போல எழுதித் தந்தையின் மேஜையில் வைத்ததாகவும் அவர் அதை முழுவதும் படித்து விட்டுச் ‘செய்து கொள்’ - என்று இரண்டே வார்த்தையில் சம்மதம் கொடுத்து விட்டதாகவும் எல்லா விவரமும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. ஆகஸ்டு மூன்றாம் தேதியே தானும் மதுரை வந்து விடுவதாகவும் அதன் பின் எல்லாரும் சேர்ந்து சுகுணாவைப் பார்ப்பதற்கு அல்லியூரணி கிராமத்துக்குப் போகலாம் என்றும் அந்த இளைஞர் எழுதியிருந்தார். என் எண்ணங்கள் அநுகூலமான வழியில் பயன் தருவதைக் கண்டு எனக்கு ஆயிரம் யானைப்பலம் வந்து விட்டாற் போலிருந்தது. என் மனைவியைத் திணறச் செய்ய வேண்டுமென்ற ஆசையினால் விவேகானந்த மூர்த்தியின் கடிதத்தை அவளிடம் கொண்டு போய்க் காண்பித்தேன். அவளை அந்தக் கடிதம் திணறச் செய்வதற்கு பதில் அவள் தான் என்னைத் திணறச் செய்தாள்.
“உங்களுக்கு என்று இப்படி விநோதமான வாசகர்கள் எல்லாம் வந்து வாய்க்கிறார்களே? தங்களையும் கெடுத்துக் கொண்டு உங்களையும் கெடுப்பதற்கென்றே இந்த வாசகர்கள் இதற்கெல்லாம் சம்மதிக்கிறார்கள் போலிருக்கிறது. இதெல்லாம் நல்லபடி முடியும் என்று நான் ஒருகாலும் நம்ப மாட்டேன்” - என்று கொடுமையாகத் துணிந்து பதில் கூறி என் உற்சாகத்தையே தவிடு பொடியாக்கினாள் என் மனைவி.
“என் வாசகர்கள் விநோதமானவர்கள் இல்லை! நீதான் விநோதமானவள். உன் நம்பிக்கைகளும் விநோதமானவை. நீ என்னோடு பேசுவதே எனக்குப் பிடிக்கவில்லை. பேச்சை விட்டு விட்டு” என்று அவளைக் கோபித்துக் கொண்டேன் நான்.
1942-ம் ஆண்டிலேயே சீர்திருத்த மாநாட்டின் வரவேற்புக் குழுவுக்குக் காரியதரிசியாக இருந்தவனை 1961-ல் முட்டாளாக்கி விடுவதற்கு முயல்கிற மனைவியைப் பார்த்துக் கோபப்படாமல் வேறு என்ன செய்வது? பத்துப் பன்னிரண்டு நாட்கள் மனைவியோடு பேசுவதையே நான் நிறுத்தியிருந்தேன். சொந்த வீட்டிலேயே நம்முடைய சிந்தனைகளின் முற்போக்கு எதிர்ப்பை வைத்துக் கொண்டு உலகத்துக்குச் சிந்திக்க விஷயங்கள் தருவது துர்ப்பாக்கியமான நிலைதான். அதைப் பற்றிக் கூட அப்போது நான் சிறிதும் கவலைப்படவில்லை. என் முயற்சிகளில் நான் மிகவும் ஊக்கமாயிருந்தேன். அந்தப் புதுமையான மறுமலர்ச்சித் திருமணத்தை எப்படியும் நடத்தியே தீருவதென்ற உறுதியில் இரண்டு மாதக் காலமாக எனது வேறு வேலைகள் கூடத் தடைபட்டு நின்றன.
இதற்கு நடுவே ஜூலையில் தொழிற்சங்கக் காரியமாக மறுபடி கோவைக்குப் போக நேர்ந்தது. அப்போதும் விவேகானந்த மூர்த்தியைச் சந்தித்தேன். அவர் தன் தந்தையைக் காண்பதற்கு என்னை அழைத்துக் கொண்டு சென்றார். அந்த இளைஞருடைய தந்தை என்னை விடத் தீவிரமான முற்போக்குவாதியாக இருந்தார் என்பது அவரோடு பேசிய போதுதான் எனக்குத் தெரிந்தது.
“இதைச் செய்யுங்கள்! நன்றாக நடக்கட்டும். எங்கள் காலத்தில் இளமையில் இப்படி நினைப்பதே பாவமென்று வெறுக்கப்பட்டது. நான் கல்லூரி ஆசிரியனாகிய பின் புதிய துணிவுகள் நாட்டிலும் வந்த காலத்தில் இத்தகைய முயற்சிகள் சிலவற்றுக்கு நானே தலைமை தாங்கியிருக்கிறேன். நன்றி. என் மகன் சிறந்த சீர்திருத்தவாதியாக வரவேண்டுமென்று எனக்கு ஆசை. என் ஆசையால் வளராத அவனுடைய மனம் உங்கள் எழுத்தால் வளர்ந்திருப்பதை நான் காண்கிறேன். அவனை உங்களிடம் ஒப்படைத்து விட்டேன். விருப்பம் போல வழி நடத்துங்கள்” - என்று ஆசி கூறிவிட்டார், அந்தக் கிழவர். இந்த வயதில் அவருடைய வேகத்தைப் பார்த்தால் இளமையில் கலப்பு மணத்தினாலோ, சீர்திருத்த மணத்தினாலோ, அவரும் தம் வாழ்விலேயே வேதனைப்பட்டு இருப்பார் போலத் தோன்றியது எனக்கு. அதை அவரிடமே தூண்டிக் கேட்காவிட்டாலும் நான் என் மனத்தில் நினைத்துக் கொண்டேன்.
ஆகஸ்டு பதின்மூன்றாந்தேதி காலையே மதுரைக்கு வந்து சேர்ந்து விட வேண்டும் என்று விவேகானந்த மூர்த்தியிடம் கூறிவிட்டு நான் ஊர் திரும்பினேன். பரீட்சைகள் முடிந்ததும் சித்திரையில் சுகுணா விவேகானந்த மூர்த்தி திருமணம் என்பது உறுதியான திட்டமாக்கப்பட்டு விட்டது.
“உன்னுடைய வருங்காலக் கணவனோடு ஆகஸ்டு 15-ந் தேதி அதிகாலையில் அல்லியூரணிக்கு வந்து சேருகிற முதல் பஸ்ஸில் நான் வந்து விடுவேன். இங்கே என் மனைவி திடீரென்று கோபித்துக் கொண்டு விட்டதால் அவள் என் உடன் வருவது சந்தேகம். நானும் விவேகானந்த மூர்த்தியும் கட்டாயம் வருகிறோம்” - என்று சுகுணாவுக்கும் தபால் எழுதி விட்டேன். அந்தப் பெண்ணின் மேல் எனக்கு இருந்த உரிமை அதிகமாக அதிகமாக ‘நீங்கள்’ ‘உங்களை’ என்பன போன்ற மரியாதைகளை எல்லாம் குறைத்து, ‘நீ’, ‘உன்னை’ என்று மாற்றிக் கொண்டேன். மரியாதையை அதிகமாகச் செலுத்திவிட்டுக் குறைவான பாசத்தைச் செலுத்துவதை விடத் தேவையற்ற மரியாதையை குறைத்துவிட்டுத் தேவையான ஆதரவுகளையும் பாசத்தையும் அதிகமாக அளிப்பது எவ்வளவோ சிறந்ததென்று தோன்றியது எனக்கு. அதையே செயலாக்கியிருந்தேன். அவ்வளவுதான்.
“கண்டிப்பாகச் சுதந்திர தினத்தன்று வந்து விடுங்கள். பருப்பு வடை பாயாசத்தோடு பண்டிகைச் சாப்பாடு போலத் தேசீயப் பண்டிகையான சுதந்திர தின விருந்து உங்களுக்கு இங்கே காத்திருக்கும்” - என்று சுகுணாவிடமிருந்தும் எங்கள் வரவை அமோகமாக அங்கீகரித்துப் பதில் கடிதம் வந்து விட்டது. அல்லியூரணிக்குப் போனால் அங்கே சுகுணாவோடு இருக்கும் அவளுடைய கர்நாடகமான அம்மாவிடம் இந்த விஷயங்களை எப்படி எப்படி எடுத்துச் சொல்லி வழிக்குக் கொணரலாம் என்பதைப் பற்றியும் நான் சிந்திக்கத் தொடங்கினேன். என் மனைவியும் என்னோடு ஒத்த கருத்து கொண்டவளாக இருந்து அல்லியூரணிக்கு உடன் வந்து சுகுணாவின் தாயை மனம் மாற்றி அறிவுறுத்தும் பணியில் ஈடுபட்டால் என் வேலை எவ்வளவோ சுலபமாயிருக்கும். pஎண்களைச் சீர்திருத்தி மனம் மாற்றப் பெண்களின் பேச்சு முறையே மிகவும் சரியானது. அதை ஆண்கள் ‘இமிடேட்’ செய்வது கடினமான செயல்தான்? செய்து தான் பார்க்கலாமே? ஆனால் பெண்கள் செய்வதைப் போலக் கலை நுணுக்கம்பட அதை நான் செய்ய முடியாது. வேறு வழியும் இல்லை. என் மனைவி இதில் என்னோடு வந்து நிச்சயமாக ஒத்துழைக்க மாட்டாள் என்று எனக்குத் தெரிந்து விட்டது. இனிமேல் நான் அவளை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை. நானே முயன்று பேசித்தான் சுகுணாவின் தாயை மனம் மாறும்படி செய்ய வேண்டும் என்று எண்ணும்படி பொறுப்பு முழுவதும் என் தலையில் விழுந்து விட்டது. பதின்மூன்றாந் தேதி காலையே கோயம்புத்தூரிலிருந்து விவேகானந்த மூர்த்தி மதுரை வந்து சேர்ந்துவிட்டார். நான் அவருடைய முன் கடிதப்படி அவரை இரயில் நிலையத்தில் போய் அழைத்துக் கொண்டு வந்திருந்தேன். உஷ்ணமானியில் உச்சநிலைக்கு வந்திருக்கும் டெம்ப்ரேசரைப் போல என் மனைவி அப்போது என் மேல் தாங்கிக் கொள்ள முடியாத கோபத்தைக் கொண்டிருந்தாள். பதினான்காம் தேதி முழுவதும் நான் கோயம்புத்தூர் இளைஞருக்கு மதுரையைச் சுற்றிக் காண்பித்தேன். பதினைந்தாம் தேதி காலை நாலரை மணிக்கு அல்லியூரணி செல்லும் முதல் பஸ்ஸில் இரண்டு டிக்கெட்டுக்கும் சொல்லி வைத்தாயிற்று.
பதினாலாந்தேதி இரவு பன்னிரண்டு மணிக்கு என் மனைவி என்னை எழுப்பித் ‘தந்தி வந்திருக்கிறது’ - என்று எதையோ நீட்டினாள். தூக்கக் கலக்கத்தில் ஒன்றும் புரியாமல் சிறிது நேரம் தடுமாறிய பின் நான் அவள் கொடுத்த தந்தியைப் பிரித்துப் படித்தேன். அந்தத் தந்தியை நான் படிக்கும் போது மறுநாள் பயணத்துக்காக என்னோடு வந்து தங்கியிருந்த இளைஞர் விவேகானந்த மூர்த்தி என் அறைக்குள் ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டிருந்தார். தந்தியின் வாசகம் என்னைத் திகைக்க வைத்ததோடு அமையாமல் கோபப்படவும் வைத்தது. அல்லியூரணியில் மாலை ஏழு மணிக்குக் கொடுக்கப்பட்டிருந்த அந்தத் தந்தியில், ‘நாளைக்கு நீங்கள் இங்கே வரவேண்டாம். அப்புறம் என்றைக்குமே வர வேண்டிய அவசியமில்லை.’ - சுகுணா.
என்று பொருள்படும்படியான தந்திக்குரிய ஆங்கில வாசகம் அமைந்திருந்ததைக் கண்டதும் எனக்கு ஏற்பட்ட கோபத்துக்கு எல்லையே இல்லை.
‘என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தப் பெண்? இவள் நினைத்தபடி எல்லாம் என்னை ஆட்டி வைக்கலாம் என்று பார்த்தாளா?’
‘சமூகத்தின் மனத்துக்கும் எண்ணங்களுக்கும் வருகிற நோய்களை நீங்கள் தான் போக்க வேண்டும். நான் ஏமாறிவிடாமலும் தவறி விடாமலும் வாழ நீங்கள் என்ன மருந்து சொல்கிறீர்களோ அதை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். என்னுடைய வாழ்க்கையாகிய நோய்க்கு நிலையான நிம்மதியளிக்க சமூகத்தின் டாக்டராகிய நீங்கள் மருந்து சொல்லித்தான் ஆக வேண்டும்’ - என்று முதல் முதலாக இவள் என்னைச் சந்தித்த போது சொன்ன வார்த்தைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு விட்டாளா?’
‘எண்ணங்களிலும், துன்பங்களிலும் நெருக்குண்டு பல முறை மாறி மாறி நினைப்பிலேயே தற்கொலை செய்து கொண்டு செத்துப் போயிருக்கிறேன் நான். இனியும் அப்படிச் சாக நேராமல் நான் வாழ்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள்’ -
என்று இவள் என்னிடம் மன்றாடிக் கதறியது எல்லாம் இப்போது என்ன ஆயிற்று? ‘பெண் புத்தி பின் புத்தி’ - என்று பழமொழி சொல்லியவன் முன் புத்தியோடு தான் சொல்லியிருக்க வேண்டும். ‘நான் ஏன் வேலையற்றுப் போய் இவளுக்காக அங்கும் இங்கும் அலைந்து நல்ல கணவனின் கைகளில் இவளை ஒப்படைக்கப் பாடுபட்டேன்?’ - என்று என் மேலேயே கோபமாயிருந்தது எனக்கு. தந்தி அல்லியூரணியிலிருந்து வந்திருக்கிறது என்று தெரிந்ததுமே அதில் இருக்கும் சேதி என்ன என்று கூடத் தெரிந்து கொள்ளவும் ஆவல் காண்பிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்ப் படுத்து விட்டாள் என் மனைவி. எனக்குத் தூக்கம் வரவில்லை. என் எழுத்தறைக்குப் போய் மேஜை விளக்கைப் போட்டுக் கொண்டு சுகுணாவுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். கோபத்தோடு எழுதியதனால் கடிதம் காரசாரமாக வந்திருந்தது.
‘உன் தந்திக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை. உடனே புறப்பட்டு வா. அல்லத் விவரமாக பதில் எழுது. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாக ஆகிவிட்டது. இங்கே நேற்று காலையிலேயே என் வீட்டில் வந்து தங்கியிருக்கும் விவேகானந்த மூர்த்திக்கு நான் இப்போது என்ன பதில் சொல்வது?’ என்று என் கடிதத்தின் கடைசி வாக்கியங்கள் அமைந்திருந்தன.
அடக்க முடியாத பெரிய ஆத்திரத்தோடு தொடங்கிச் சுகுணாவுக்கு எழுதிய கடிதத்தை முடித்து உறையிலிட்டுத் தபாலில் போடுவதற்குத் தயாராக வைத்தபோது விடியற்காலம் மூன்றரை மணி ஆகியிருந்தது. ‘அல்லியூரணி பஸ் புறப்படும் நேரத்துக்கு ஒரு மணி முன்னதாகவே விழித்து எழுந்திருக்க வேண்டும்’ - என்று கருதி நான் முதல் நாள் இரவு வைத்திருந்த கடிகாரத்தின் அலாரமணி ஒலிக்கத் தொடங்கியது. அலாரத்தின் மணியொலியைக் கேட்டுத் தூங்கிக் கொண்டிருந்த விவேகானந்த மூர்த்தி எழுந்திருந்தார்.
“பஸ்ஸுக்குப் புறப்பட நேரமாகிவிட்டது போலிருக்கிறதே. நாம் போகலாமா?” - என்று அவர் என்னை கேட்ட போது நான் ‘இன்று பயணம் இல்லை’ - என்று மட்டும் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டுச் சிறிது நேரம் கழித்து அவருக்கு சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக, “மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! சுகுணாவுக்கு ஏதோ அசௌகரியம் போலிருக்கிறது. ‘இன்றைக்கு வர வேண்டாம்’ என்று அவள் நேற்றிரவு தந்தி கொடுத்திருக்கிறாள். தந்தி மிகவும் தாமதமாகி வந்தது” - என்றும் கூறினேன். அந்த இளைஞர் நான் கூறியதைக் கேட்டுவிட்டுப் பதறாமல் அமைதியாக என் எதிரே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.
“அதற்கென்ன? இன்னும் ஒரு வாரம் மதுரையில் உங்களோடு தங்கியிருக்கிறேன். அதற்குள் அல்லியூரணியிலிருந்து கடிதம் வந்தால் அதற்கு ஏற்ப நம்முடைய பயணத்தை மாற்றி அமைத்து கொள்ளலாம்” - என்று விவேகானந்த மூர்த்தி புன்னகையோடு என்னிடம் கூறினார். விடிந்ததும் முதல் வேலையாக அந்தக் கடிதத்தைச் சுகுணாவுக்குத் தபாலில் அனுப்பின பின்பே என் ஆத்திரம் தணிந்தது. நான் அல்லியூரணிக்குப் போகவில்லை என்று தெரிந்ததுமே என் மனைவிக்கு நிம்மதி ஏற்பட்டிருக்க வேண்டும் என்று அவள் முகத்திலிருந்தே எனக்குத் தெரிந்தது.
சுகுணாவின் தந்தியால் முதல் நாள் இரவு நல்ல உறக்கத்தைப் பாதியில் இழந்திருந்தேன். மறுநாள் காலை என் உடல்நலம் கெட்டிருந்தது. ஆனால் நான் அதை விவேகானந்த மூர்த்தியிடம் சொல்லவில்லை.
“நீங்கள் அழகர் கோவிலுக்குப் போய்ச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே விவேகானந்த மூர்த்தி? இன்று காலையில் தல்லாகுளத்திலிருந்து என் நண்பர் ஒருவரைக் காரோடு வரவழைக்கிறேன். அவர் உங்களை அழைத்துக் கொண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பிப்பார். நீங்கள் மாலையில் திரும்பி வருவதற்குள் நான் என்னுடைய எழுத்து வேலையைக் கொஞ்சம் கவனிக்கிறேன்” - என்று வேண்டுகோள் விடுத்தேன். அவர் என்னுடைய மனக்குறிப்பைப் புரிந்து கொண்டவராக அதற்கு இணங்கினார். உடனே மதுரை நகரத்துச் செல்வர் சீமான்களின் ஐசுவரியபுரக் கோட்டையாகிய தல்லாக்குளத்துக்கு டெலிபோன் செய்து என் நண்பர் மணியைக் காரோடு பசுமலைக்கு வரவழைத்தேன். மணி விவேகானந்த மூர்த்தியை அழைத்துக் கொண்டு ஊர் சுற்றிக் காண்பிக்கப் புறப்பட்டார். அயர்ச்சி தாங்க முடியாமல் நான் ஈஸிசேரில் சாய்ந்து கொண்டே தூங்கிப் போனேன். அப்புறம் எனக்குச் சுயநினைவே இல்லை. தூக்கம் கலையப் பெற்று மறுபடி நான் கண் விழித்த போது, “வாசலில் தபால்காரன் வந்து நிற்கிறான். ஏதோ பார்சல் வந்திருக்கிறதாம் உங்கள் பேருக்கு. போய்க் கையெழுத்துப் போட்டு வாங்கிக் கொண்டு வாருங்கள்” என்று ‘யாருக்கு வந்த இழவோ’ என்பது போல் அசிரத்தையாக வந்து என்னிடம் சொல்லிவிட்டுப் போனாள் என் மனைவி. அந்தப் பாழாய்ப் போன பார்சலில் இழவுதான் வந்திருந்தது. எவ்வளவு பெரிய இடி அது? அன்று எனக்கு நல்ல பொழுதாக விடியவில்லை. எனக்கு மட்டுமென்ன? உலகத்துக்கே நல்ல பொழுதாக விடியவில்லை போலிருக்கிறது. படிப்பும், சிந்தனையும், அநுபவங்களும் என்னை மரத்துப் போகும்படி செய்திராவிட்டால் அப்போது நான் கோவென்று கதறி அழுதிருப்பேன். ஆனால் அழுகை வரவில்லை. என்னென்னவோ எண்ணிக் குமுறினேன். கொதித்தேன். இப்படிப்பட்ட சமுதாயக் கொடுமையிலிருந்து அபலைகளுக்கும், அநாதை மனிதர்களுக்கும் நிஜமான சுதந்திரம் கிடைக்கிற வரை பாரத நாட்டின் ஒவ்வொரு சுதந்திர தினமும் ஒரு துக்க தினம் தான்’ - என்று எண்ணி எண்ணித் தவித்தேன். அந்தப் பார்சலில் இருந்த சுகுணாவின் கடிதங்களும் பத்திரிகைப் பிரதிகளும் என் முன் பயங்கரமாகச் சுழன்றன.
அந்தப் பார்சலையும் அதற்குள் இருந்த கடிதத்தையும் கூடச் சுகுணாதான் அல்லியூரணியிலிருந்து அனுப்பியிருந்தாள். முதல் நாள் மாலை அந்தத் தந்தி கொடுக்கப்படுவதற்கு நாலைந்து மணி நேரத்துக்கு முன்னதாக இந்தப் பார்சல் அவளால் அல்லியூரணித் தபாலாபீசில் பதிவு செய்யப்பட்டிருந்தது. என் உடம்பை பாதாதிகேச பரியந்தம் நடுங்கச் செய்த அந்தக் கடிதத்தையும் அதனோடிருந்த பிறவற்றையும் இரண்டாவது முறையாகவும் படித்தேன். என் நெஞ்சில் உணர்வுகள் எல்லாம் துடிதுடித்தன. அவள் எழுதியிருந்தாள்:
“மதிப்புக்குரிய சமுதாயத்தின் டாக்டராகிய எழுத்தாளர் அவர்களுக்கு, அபலை சுகுணாவின் கடைசி வணக்கம். இந்தக் கடிதத்தின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்புக்கு உரிமை உங்களுக்கு மட்டும் தான்; சமூகத்துக்கு இல்லவே இல்லை. இந்த மானங்கெட்ட சமூகத்துக்கு மதிப்பு ஒரு கேடா? என்னுடைய வாழ்க்கையில் துன்பங்களால் வாடிவாடி நினைப்பளவிலேயே நான் தற்கொலை செய்து கொண்டு பலமுறை செத்திருப்பதாக உங்களிடம் அன்று சொன்னேன்.
இன்று இந்த விநாடியில் உண்மையாகவே நான் தற்கொலை செய்து கொள்ள உறுதி செய்து கொண்டிருக்கிறேன். நாளைக்குப் பகலில் உங்களுக்கு இந்தக் கடிதமும் இதனோடு இருக்கும் நாற்றம் எடுத்த மஞ்சள் பத்திரிகைப் பிரதிகளும் கிடைக்கிற போது இந்த அல்லியூரணியின் பழமையான லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் வடக்கு மூலையில் தூசி படிந்து கவனிப்பார் அற்று கிடக்கும் ‘போஸ்மார்ட்டம் அறையில்’ என் உடம்பைப் போஸ்மார்ட்டம் செய்து கொண்டிருப்பார்கள்.
இரண்டு பொட்டலம் மூட்டைப்பூச்சி மருந்தைச் சாப்பிட்டு விட்டுச் சாவதற்கு இது போதும் என்று நிம்மதியாகப் படுத்துத் தூங்கிவிட்டுக் காலையில் மறுபடி இந்த நாசகார உலகத்தைக் கண் விழித்துப் பார்க்க அவசியமிராது என்ற நம்பிக்கையோடு சாகிறவளுக்குக் கவலை ஏது? நான் வாழ்வதற்கு ஆசைப்பட்டது கனவு ஆகிவிட்டது. இப்போது சாவதற்கு முடிவு செய்து விட்டேன். பொழுது புலர்ந்து அல்லியூரணியின் தெருக்களில், ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ - இசைத் தட்டுக்கள் முழங்க, வண்ணக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கும் நாளைக் காலையில் என் உயிர் தான் நிஜமான ஆனந்த சுதந்திரத்தை அடைந்திருக்கும். சமூகப் பிரச்சனைகளுக்குச் சுமூகமான முடிவு காண வக்கில்லாத வரை இந்தச் சுதந்திர தினத்தை இப்படிச் சாகும் தினமாகக் கொண்டாடுவதைத் தவிர வேறு வழி இல்லையென்றே எனக்குத் தோன்றுகிறது.
நான் சாவதற்குக் காரணம் தெரிய வேண்டுமானால் இதனுடன் இருக்கும் மஞ்சள் பத்திரிகைகளைப் படித்துப் பாருங்கள். படித்துப் பட்டம் பெற்றுத் தங்கள் கிராமத்தைத் தேடி உழைக்க வந்த ஒரு பெண்ணுக்கு இங்குள்ள பழம் பெருச்சாளிகள் அளித்த பரிசுகள் தாம் இந்தப் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும் துஷ்பிரசாரமான செய்திகள். இவற்றைத் தெரிந்து கொண்ட பின் எனக்கு மானம் போகிறது. வெளியே தலையைக் காட்ட முடியவில்லை. சிறு கிராமமாதலால் இரண்டு பேர் சந்திக்கிற இடங்களில் எல்லாம் இந்த மஞ்சள் பத்திரிகைச் செய்திகளைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். ஒரு பாவமும் அறியாத என் தாயிடம் பக்கத்து வீட்டு வாயாடி அம்மாள் ஒருத்தி இவற்றைக் கொண்டு வந்து படித்துக் காட்டி விட்டு, “இப்படி மாடு வளர்ப்பது போல் பெண்ணை வளர்க்காதீர்கள். கண்டித்து அடக்கி வையுங்கள்” - என்று முறையிட்டிருக்கிறாள். அதை நம்பி என் தாயே என்னை, ‘மானங்கெட்டவளாக’ - நினைக்கிறாள், பேசுகிறாள்.
உங்கள் பட்டுப்பூச்சியின் கதாநாயகியான கற்ப்னைச் சுகுணா பாக்கியசாலி! இப்படிச் சீரழைந்து தற்கொலை செய்து கொள்ளத் துணியும் வரை அவள் கிராமத்தில் தங்கவில்லை. விரைவில் கிராமத்தைப் புரிந்து கொண்டு வெளியேறி விட்டாள். நான் இந்த அசூயை இருளிலிருந்து வெளியேற முடியாமல் இங்கேயே செத்துவிட்டேன். உங்கள் கற்பனைக்கும் என் வாழ்வுக்கும் இதுதான் வேறுபாடு. ‘நான் பெரிய தைரியசாலி’ என்று எனக்குள்ளேயே நேற்று வரை நம்பிக் கொண்டிருந்தேன். இன்று தெருவில் போகிறவர்கள் எல்லாம் என்னைச் சுட்டிக் காட்டுவதையும் பேசுவதையும், மெல்ல மெல்லச் சிரித்துக் கொள்ளுவதையும், கண்டு என் உடம்பு கிடுகிடுவென்று நடுங்குகிறது. எதிரே தென்படுகிறவர்கள் எல்லாம் நரமாமிசம் தின்னும் பேய்களாக மாறி நின்று என்னைப் பயமுறுத்துகிறார்கள்.
நான் கொல்லப்படுகிறேன். சாகடிக்கப்படுகிறேன். ‘விதவையா விபசாரியா?’ - என்று தலைப்புப் போட்டு என்னுடைய ஊர், பெயர், நான் பார்க்கும் வேலை எல்லாவற்றையும் குறிப்பிட்டு என் மேல் அபாண்டம் சுமத்துகிறது ஒரு பத்திரிகை. ‘சமூக சேவையா தாசி வேலையா?’ - என்று தொடங்கி அல்லியூரணி கிராமத்தில் பல இளைஞர்களைக் கெடுக்க நான் வலைவிரிப்பதாக எழுதியிருக்கிறது இன்னொரு மஞ்சள் பத்திரிகை. எனக்கு எதிரிகளாகி விட்ட இந்த ஊர்ப் பிரமுகர்களின் வேலை தான் இவை எல்லாம் என்று எனக்கே தெரிகிறது. என்னிடம் வந்து பல்லை இளித்த ஆஷாடபூதிகளையும் வஞ்சகர்களையும், நான் அநுகூலமான முறையில் சமாளித்திருந்தால் என்னுடைய மானம் போயிருந்தாலும் இப்படி எல்லாம் என்னைப் பற்றித் துஷ்பிரசாரம் செய்ய எதிரிகள் உருவாகியிருக்க மாட்டார்கள். நான் கடுமையாக நியாயத்தைக் கடைப்பிடித்ததால் வந்த வினை தான் இது! இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மையிலேயே இப்படி மானக்கேடாக வாழ்கிற சமூக சேவகிகளைப் பற்றிப் பேனாவில் மையை ஊற்றிக் கொண்டு எழுத்தில் விபசாரம் செய்ய புறப்படுகிற இந்தப் புழுத்துப் போன பத்திரிகைப் புல்லுருவிகள் ஒன்றுமே எழுதுவதில்லை. என்னைப் போன்ற அப்பாவிகளைக் கெடுதலடையும்படி செய்வதே இவற்றின் தொழிலாக இருக்கிறது. இந்தக் கடிதம் கிடைக்கு முன்பே நான் கொடுத்திருக்கிற தந்தி உங்களுக்குக் கிடைத்துவிடும். தயவு செய்து நீங்களும், உங்கள் நண்பரும் கண்டிப்பாக இங்கு வரவேண்டாம். என் மேல் படர்ந்து விட்ட அபாண்டப் பழிகள் உங்களையும் பாதிக்கலாம். இவ்வளவும் நடந்து விட்ட பிறகு உங்கள் நண்பர் விவேகானந்த மூர்த்தி என்னை நம்பி மணக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. யாருக்கு வாழ்க்கைப் படுவதென்று தெரியாமல் பயந்து கடைசியில் நான் சாவுக்கு வாழ்க்கைப் படுகிறேன். வேறு உயிருள்ள மானிடருக்கு மனைவியாக வாழ எனக்குத் தைரியமில்லை. என்னை விட்டு விடுங்கள். செத்துப் போன பின்னும் இந்தக் கிராமத்தின் எல்லையில் பேயாக உலாவித் திரிந்து கொண்டிருப்பேன். எதற்காகத் தெரியுமோ? புதிய சமூக சேவகிகளாக என்னைப் போன்ற அபலைப் பெண்கள் யாராவது இந்தக் கிராமத்துக்கு வந்தால் அவர்களை இங்கே நுழையவிடாமல் பயமுறுத்தித் தடுத்து திரும்பி அனுப்பி விடுவேன். உங்களுக்குக் கொடுத்த வாழ்க்கை நான் மீறியதற்காக என்னை மன்னியுங்கள். இன்னொரு பிறவியில் மறுபடி நான் பெண்ணாகப் பிறந்தால் நீங்கள் எனக்காகப் பார்க்கிற இளைஞரைக் கணவராக ஏற்றுக் கொண்டு உங்களுக்கு நான் நன்றி செலுத்துவேன். என்னை மணந்து எனக்கு வாழ்வளிக்க முன் வந்திருக்கும் உங்கள் நண்பரிடம் இந்தக் கடிதத்தை நீங்கள் காண்பிக்க வேண்டாமென்று வேண்டிக் கொள்கிறேன். காண்பித்தாலும் கெடுதல் இல்லை. சாகப் போகிறவர்களைப் பற்றி மற்றவர்கள் எவ்வளவு கேவலமாக நினைத்தாலும் இனிமேல் சாவை விட அதிகமான கேவலத்தைச் செய்து விட முடியாதுதான். நானோ சாகப் போகிறேன். இனிமேல் உங்கள் நண்பர் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் அதனால் எனக்கு கவலை இல்லை. உங்கள் மனைவிக்கு என் அன்பையும் வணக்கத்தையும் சொல்லுங்கள். எப்போதாவது வாய்ப்பு நேர்ந்தால் நான் சாவுக்கு வாழ்க்கைப்பட்ட கதையை எழுத்தில் எழுதுங்கள். சமூகத்துக்கு நன்றாக உறைக்கும்படி சுடச்சுட எழுதுங்கள்.”
இப்படிக்கு துர்பாக்கியவதியான
உங்கள் சகோதரி
சுகுணா.
இத்துடன் கடிதம் முடிந்திருந்தது.
சமூகநேசன், நியாயவாதி, ஒழுக்க முர்சு என்ற பேரை வைத்துக் கொண்டு கேட்கும் போது பணம் தராதவர்களைப் பற்றி அபாண்டமாக எழுதுவதற்கு என்றே நடத்தப்படும் அந்த மஞ்சள் பத்திரிகைகளில் சுகுணாவைப் பற்றி எழுதியிருந்தவற்றைப் படிக்கும் போது எனக்கு அருவருப்பாயிருந்தது. அதில் கண்டவற்றை நம்பி அவற்றில் நினைவு ஒன்றிவிடாமல் மலம் நிறைந்த தெருவில் கீழே கவனித்து நடப்பதைப் போல என் மனத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள நான் முயல வேண்டியிருந்தது. கேட்ட போது பணம் கொடுக்கிறவர்கள், ‘இன்னாரைப் பற்றி ஆபாசமாக எழுதி அவர்கள் பேரைக் கெடு’ என்று குறிப்பிட்டு ஏவுகிறவர்களையும் கேவலப்படுத்துவது தான் இந்தக் காகித மலங்களின் மானங்கெட்ட பிழைப்பு முறை. சுகுணாவின் கடிதத்தை மட்டும் என்னிடம் வைத்துக் கொண்டு உடனிருந்த இந்தக் குப்பைகளுக்கு நெருப்பிட்டுக் கொளுத்தினேன்.
மதுரையில் அந்த நடுப்பகல் வேளையிலே வெளியூருக்குச் சவாரி வருகிற வாடகைக்காரைத் தேடுவதென்பது முடியாத காரியம். அல்லியூரணி மதுரையிலிருந்து இருநூறு மைல் தொலைவு இருந்தது. போய்ச் சேரும் போது, மணிக்கு அறுபது மைல் போகிற பெரிய காரில் போனாலும் மூன்றரை மணி நேரம் ஆகிவிடும். கார் அவசரமாக வேண்டுமென்று திரைப்பட விநியோக உரிமையோர் ஒருவருக்கு சொல்லி அனுப்பினேன். அவர் என் நிலையையும் அவசரத்தையும் புரிந்து கொண்டு இரவு ஒன்பது மணிக்குள் திரும்பிவிட வேண்டுமென்ற நிபந்தனையோடு காரை அனுப்பினார். பரபரப்போடு புறப்பட்டேன்.
நான் புறப்பட்டுச் சென்ற கார் அல்லியூரணியை அடையும் போது பிற்பகல் நாலேகால் மணி. ஆனால் அதற்குள் அந்தப் பாவிப் பெண் சுகுணா தான் எழுதியிருந்தபடியே செய்து விட்டாள். காரியம் கைமீறி விட்டது.
லோகல் பண்டு ஆஸ்பத்திரி வாசலில் கூட்டம் திரண்டு நின்று கொண்டிருந்தது. ‘வடக்கு மூலையில் கவனிப்பாரற்றுத் தூசி படிந்த போஸ்மார்ட்டம் அறையில்...’ என்று கடிதத்தில் அவள் எழுதியிருந்த பதில் எனக்கு நினைவு வந்தது. நான் கண் கலங்க நின்றேன். முதல் முதலாக அவள் என்னைத் தேடி வந்த சாயங்கால வேளையும், ஆயிரம் முறை நினைத்தாலும் அலுக்காத அந்தச் சகோதரியின் எழில் கொஞ்சும் முகமும் இப்போதும் என் மனக்கண்ணில் சோக நாடகமாய்த் தெரிந்தன. ‘சுகுணா’ என்ற பெயருக்கு ‘மங்கலமான குணங்களை உடையவள்’ என்று அர்த்தம்.
உலகத்தில் அந்த அழகான வார்த்தைக்கு இனிமேல் அர்த்தமே இருக்க முடியாது. வார்த்தைகளாகிய பெண்களுக்கு அர்த்தம் தாம் நாயகன். அர்த்தத்தை இழந்த வார்த்தையும் விதவையைப் போன்றதுதான். சுகுணா என்ற பெயருக்குரியவள் விதவையாயிருந்த வசந்தகாலம் முடிந்து விட்டது. அதனால் இன்று முதல் இனிமேல் அந்தப் பெயரே அர்த்தமிழந்த விதவையாகப் போய்விட்டது என்று எண்ணிக் குமுறினேன் நான். அங்கே எனக்கு யாரையும் தெரியாத போது நான் யாரிடம் போய் அவள் சாவுக்குத் துக்கம் கேட்பேன்? எல்லா ஊரிலும் எல்லாருக்கும் தெரிந்த ஒரே ஒரு பொருளாகிய தெய்வத்திடம் மட்டும் துக்கம் கேட்டுவிட்டுத் திரும்பினேன்.
லோகல் பண்டு ஆஸ்பத்திரி வாசலில் கூடியிருந்த கூட்டத்தில் இருந்து என்னென்னவோ விதமான அநுதாபப் பேச்சுக்களும் என் காதில் விழுந்தன.
“இந்தப் பாழாய்ப் போன மூட்டைபூச்சி மருந்தாலே சாவு தான் பெருகுது” - என்று ஒரு பல்போன கிழப்பிரகிருதி மற்றொரு கிழப்பிரகிருதியிடம் முறையிட்டுக் கொண்டிருந்தது.
‘சமூகத்திலுள்ள கொடியவர்களின் எண்ணங்களே நல்லவர்களைக் கொல்லும் விஷமருந்தாக இருக்கும் போது மூட்டைப்பூச்சி மருந்தின் மேல் மட்டும் வருத்தப்பட்டுப் பயன் இல்லை’ - என்று நினைத்துக் கொண்டேன் நான். அந்தக் கிராமம் முழுவதும் அன்று சுகுணாவைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தது. சுகுணாவைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தது. அவள் சாவு ஊரைக் கலக்கியிருந்தது. வாழ்வால் முடியாது போயிருந்த காரியம் அல்லவா அது?
கிராமத்துத் தெருவெல்லாம் சுதந்திரத்தின் அலங்காரம் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது. ‘பாரத நாட்டுக் கிராமங்கள் கரி மூடிய தங்கச் சுரங்கம்’ என்று பட்டுப்பூச்சி முடிவுரையில் முன்பு நான் எழுதிய வாக்கியத்தை நினைத்துக் கொண்டேன். ‘இன்று அந்தக் கரிக்கு அடியில் மெய்யாகவே சுகுணா என்னும் இந்தத் தங்கத்தை வைத்து மூடிவிட்டார்களே’ - என்று என் வாய் முணுமுணுத்துக் கொண்டது. மறுபடி கார் மதுரை திரும்பிய போது இரவு ஒன்பதரை மணி ஆகியிருந்தது. தல்லாகுளம் நண்பர் விவேகானந்த மூர்த்திக்கு ஊர் சுற்றிக் காண்பித்த பின் அவரை வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டுச் சென்றிருந்தார். அவரைக் கட்டிக் கொண்டு பெண்கள் துக்கம் கொண்டு அழுவது போல் வீடதிரக் கதறிக் கதறி அழ வேண்டும் போலிருந்தது அப்போது. ஆனால் செய்ய முடியவில்லை.
“நாம் கொடுத்து வைக்கவில்லை. நல்லபடியாக நினைத்து ஏதோ செய்தோம்; அது எப்படியோ முடிந்துவிட்டது. இந்தக் கடிதத்தைப் பாருங்கள்” - என்று சுகுணாவின் கடிதத்தை விவேகானந்த மூர்த்தியிடம் கொடுத்தேன்.
கடிதத்தை அவர் படிக்கலானார். மாலை மாலையாக அவருடைய கண்களிலிருந்து நீர் சரிந்தது. அவர் ஏறக்குறைய அழுது கொண்டே தான் அந்தக் கடிதத்தின் கடைசிப் பகுதியைப் படிக்க முடிந்தது. சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து வாயைப் பொத்திக் கொண்டு மெல்ல விசும்பி அழுதார் அந்த இளைஞர்.
நான் ஒடுங்கிய குரலில் அவருடைய காதருகே சென்று சொன்னேன். துக்கம் என் குரலையும் அடைத்தது.
“மிஸ்டர் விவேகானந்த மூர்த்தி! பெண்ணை இழந்து ஆண் மகன் அவள் இழப்புக்காகக் கைம்மை நோற்கத் துணிவது போன்ற புதிய கற்பு நெறியைப் பேசும் கதாநாயகனை புதுமையானதொரு நாவல் புனைய வேண்டும் என்று அன்று கோயம்புத்தூரில் நம்முடைய சந்திப்பின் போது நீங்கள் என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தீர்களே அது இப்போது நினைவுக்கு வருகிறது எனக்கு. அப்படி ஒரு கதையை எழுதுவதற்கு வேண்டிய நிகழ்ச்சியினைத்தான் இப்போது என் முன்னால் நான் காண்கிறேன்.”
“எழுதலாம் சார்? ஆனால் அந்தக் கதைக்குக் கதாநாயகி வாழத் தொடங்குவதற்கு முன்பே கொன்று விடுவீர்கள் அல்லவா?” - என்று சொல்லி புலம்பினார் அந்த இளைஞர். அப்போது அவரைப் பார்க்கப் பரிதாபமாயிருந்தது எனக்கு.
“நண்பரே இரத்தமும் சீழும் வடிகிற கோரமான நாற்றப் புண்களை மேனியெல்லாம் கொண்டிருக்கிற இந்தச் சமூகத்தின் மாமிச உடம்பை மூடி மறைத்துப் போர்த்துவதற்குப் பட்டுப் போர்வைகளை நெய்வதற்காகத்தான் இப்படி அழகு அழகான வண்ணப்பட்டுப் பூச்சிகள் பலவற்றை வாட்டி வெதும்பச் செய்து சமூகத்தில் அழிக்கிறார்கள் போலிருக்கிறது” - என்று கூறிவிட்டு விரக்தியோடு நகைத்தேன் நான்.
சமூகத்தின் மனத்துக்கு டாக்டராகிய நான் அன்று என்னுடைய மனத்தில் ஏற்பட்ட துக்கத்துக்கு எந்த மருந்தும் தெரியாமல் கலங்கினேன். எதிரே வந்து என் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நிற்கும் அந்த இளைஞருடைய துக்கத்துக்கும் நான் மருந்தைத் தர முடியவில்லை. இரண்டு பேருமே மருந்தில்லாத நோய்களாக மாறி நின்றோம். வேறு என்ன செய்வது? துக்கத்துக்கு மருந்து ஏது? காலம் தான் மருந்தாக முடியும் என்று நம்பினோம்.
கற்பனைக் கதையில் தொடங்கி நிஜவாழ்வில் முடிந்த இத்தனை துயர நிகழ்ச்சிகளுக்கும் அப்பால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் காந்தி ஜெயந்தியின் போது கிராம சேவகிகளைப் பயிற்றி அனுப்பும் சமூக நலக்கல்லூரி ஒன்றில் சொற்பொழிவுக்காகப் போயிருந்தேன். சொற்பொழிவு முடிந்ததும் துடுக்கான பெண் ஒருத்தி என்னிடம் மேடையருகே வந்து ஒரு கேள்வி கேட்டாள்.
“பத்திரிகைக் காரியாலத்துக்கு எழுதிக் கேட்டதில் சமூக சேவகிகளின் தோல்வியைக் கூறும் ‘பட்டுப்பூச்சி’ என்ற கதையைப் புனைபெயரில் எழுதியவர் நீங்கள் தான் என்று தெரிந்தது. எங்களைப் போல் இதற்காக பாடுபடுகிறவர்களுக்கும், தன்னம்பிக்கை பெறுகிறவர்களுக்கும் உங்கள் கதையினால் பயம் உள்ளதே தவிரப் புதிய நம்பிக்கை எதுவும் கிடைக்காதே. மேலும் புதிய தன்னம்பிக்கைகளை அழிக்கும் கதையை எழுதுவதனால் தங்களுக்கு என்ன பயன்?”
- அவள் கேள்வியில் குறும்புதான் அதிகம் இருந்தது.
அவநம்பிக்கையை விளக்குவதன் மூலம் தன்னம்பிக்கையை பெறுவதுதான் பயன்! ஒரு காரியத்தைத் திறனாய்வு செய்து அதில் அவர்கள் தோற்றார்கள் என்று எடுத்துச் சொன்னால் அதன் மூலம் படிக்கிறவர்களுக்கு அதில் வருகிற திறமையின்மையால் ஏற்பட்ட தோல்வியே எச்சரிக்கும் புதுத் தூண்டுதலாகி வெற்றிக்கான புதிய துணிவுகளை அளிக்கும்! உங்களால் முடியுமானால் நீங்கள் வெற்றிக்கு முயலுங்கள்” - என்றேன் நான்.
“சுகுணா மறுபடி கிராம சேவகியாகப் பணிபுரிந்து வெற்றிகளைப் பெறுவதாக மாற்றி எழுதுங்களேன்” - என்று மறுபடியும் வெடுக்கென்று கேட்டாள் அந்தப் பெண். நான் அதற்குப் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
‘உண்மைச் சுகுணாவின் கதையே இப்படி முடிந்து விட்ட போது கற்பனைச் சுகுணாவைப் பற்றி எழுத இன்னும் என்ன இருக்கிறது?’ - என்று எண்ணிக் கொண்டே மேடையிலிருந்து சோர்வுடனே கீழே இறங்கினேன்.
பட்டுப்பூச்சி கூட்டுக்குள்ளே இருக்கும்வரை அது தன்னைச் சுற்றி மென்மையான இழைகளைப் பின்னிப் பட்டு உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறது. ஆனால் அது தன்னுடைய பந்தத்தை அறுத்துக் கொண்டு ஒரு முறை வெளியே பறந்து விட்டால் அதைத் திருப்பி கூட்டுக்குள் அடைக்கவே முடியாது.
மெய்தான்! என்னுடைய கதையின் கற்பனைக் கதாநாயகி சுகுணாவோ கிராமத்தை விட்டே பறந்து போய்விட்டாள். நிஜநாயகி சுகுணாவோ வாழ்க்கையை விட்டே பறந்து போய் விட்டாள்.