piranthanaa kondaattam

பிறந்தநாள் கொண்டாட்டம்

ஆசாத், ஹனியா, சாருலதா, பியூஷ் நால்வருக்கு தங்கள் தெருவில் விளையாடப் பிடிக்கும். ஆனால் அந்தத் தெருக்கடைசியில் இருந்த எரிச்சல்மிகுந்த பாட்டியை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிடுவார்கள். ஒருநாள், அவரது பிறந்தநாள் என்று தெரிந்ததும், நண்பர்கள் நால்வரும் அவருக்காக ஒரு கேக் செய்தனர். தங்கள் பிறந்தநாள் அன்று யாருமே தனியாக இருக்கக்கூடாதுதானே! சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் பற்றிய ஒரு நெகிழ்வூட்டும் கதை.

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அந்தத் தெருக்கடைசியில் ஒரு பழைய வீடு இருந்தது. மஞ்சள் சுவர்களும் கிறீச்சிடும் கதவும் ஓட்டுக் கூரையும் கொண்ட அந்த வீட்டில் ஒரு வயதான பெண்மணி தனியாக வசித்து வந்தார்.

ஆசாத், ஹனியா, சாருலதா, பியூஷ் நால்வரும் எப்போதும் தெருவில் விளையாடுவதும், கத்துவதும், கூச்சலிடுவதுமாக இருப்பார்கள்.

“கூச்சல் போடாதீர்கள்!” என்று அவர்களின் பெற்றோர்கள் எவ்வளவு சொன்னாலும், அந்த நான்கு குழந்தைகளும் ஒருபோதும் அவர்கள் பேச்சை கேட்பதில்லை. அவர்கள் கத்திக் கூச்சலிட்டுக் கொண்டுதான் விளையாடுவார்கள்.

ஒருமுறை, அவர்கள் அடித்த கிரிக்கெட் பந்து, அந்த வயதான பெண்மணியின் தோட்டத்திற்குள் விழுந்து விட்டது. அவர் பந்தை திருப்பித் தருவார் என காத்திருந்தார்கள்.

ஆனால் அவர் திருப்பித்தரவே இல்லை.இப்படியே பல முறை நடந்து விட்டது. குழந்தைகளால் தங்கள் பந்துகளைத் திரும்பப் பெறவே முடியவில்லை.

ஒருநாள் மாலை, நான்கு பேரும், சுவரைத் தாண்டி குதித்தனர். பந்துகளை எப்படியாவது எடுத்துவிடலாம் என்று நினைத்தனர். உள்ளே குதித்ததும் தோட்டத்தின் சுவரில் நீண்ட நிழல் விழுந்ததைப் பார்த்தனர்.

அவர்கள் நிமிர்ந்த போது, வாசலில் இருந்த பெண்மணியைப் பார்த்தார்கள்.

“அவரைப் பார்க்கவே பயமாக இருக்கிறது!” என்று பியூஷ் கிசுகிசுத்தான்.

“முட்டாள்!” என்று ஹனியாவும் கிசுகிசுப்பாகச் சொன்னாள். அவர்கள் பயத்துடன் திரும்பி ஓட்டமெடுத்தார்கள்.

அன்றிலிருந்து அவர்கள் தெருக்கடைசியில் விளையாடுவதையே நிறுத்திக் கொண்டனர்.

ஒரு நாள், அந்த வயதான பெண்மணியின் வீட்டிற்கு தபால்காரர் சைக்கிளில் போவதைப் பார்த்தார்கள். அவரிடமிருந்து தபால் உறையை பெற்றுக்கொண்டு முகத்தில் அறைவதைப் போல் கதவைச் சாத்திவிட்டு உள்ளே சென்றார் அந்தப் பெண்மணி.

தபால்காரர் தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பும் போது, ஹனியா அவரை நிறுத்தினாள். “நீங்கள் அவருக்கு என்ன கொடுத்தீர்கள்?” என்று கேட்டாள். தபால்காரர் சிரித்துக் கொண்டே, “அவரது காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வந்த பிறந்தநாள் அட்டை” என்றார்.

“அவர்கள் இவருடைய நண்பர்களா?” என்று சாரு கேட்டாள். தபால்காரர் இல்லையென தலையை ஆட்டினார்.

“வயதானவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பக்கூடிய நண்பர்களே கிடையாதா?” என்று ஹனியா ஆச்சரியப்பட்டாள். “வயதானவர்களுக்கும் நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் அந்த கிழவியுடன் நட்புடன் இருக்க யாருக்கும் பிடிக்காது” என்று பியூஷ் சொன்னான். பியூஷ்தான் எல்லோரையும் விட சிறியவன். பயந்தாங்கொள்ளியும் அவன்தான். “அவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லக் கூட ஒருவரும் இல்லை என்பதை நினைத்துப் பாருங்கள்!” என்றாள் சாரு.. “அவருக்கு குறைந்தது நூறு வயதாவது இருக்க வேண்டும்! வாழ்த்து சொல்ல அவருடைய சம வயதில் யாரும் இருக்கமாட்டர்கள்!” என்றான் பியூஷ்.

“நாம் அவருக்கு வாழ்த்து சொன்னால் என்ன?” என்றான் ஆசாத். “ஆமாம், எனக்கு 100 வயதானாலும் எல்லோரும் என்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டுமென்றே விரும்புவேன்" என்றாள் சாரு..

“அதற்காக? நீ போய் அவருக்கு வாழ்த்து சொல்லப் போகிறாயா? அவர் உன்னைப் பிடித்து முழுங்கிவிடுவார்!” என்றான் பியூஷ்.. “ஏன், நாம் எல்லாரும் …” என்று ஹனியா மென்று முழுங்கினாள். “நாம் எல்லோரும் ... என்னது?" என்று ஆசாத் கேட்டான்.

“நாம் எல்லோரும் அவருக்காக ஒரு கேக் செய்து கொடுப்போமா?” என்றாள் ஹனியா.

பைத்தியம் பிடித்து விட்டதோ என்பதைப் போல் எல்லோரும் அவளைப் பார்த்தார்கள். ஆனால், கேக் என்றால்! அதை அவர்கள் வேண்டாம் என்று எப்படிச் சொல்வார்கள்?

“ஒரு கிரிக்கெட் பந்து வடிவில் கேக் செய்ய முடியுமா?” என்று பியூஷ் கேட்டான். “அதனால் அவர் நம் எண்ணத்தை புரிந்து கொள்வார்.”

“முடியாது” என்றாள் சாரு கண்களை உருட்டிக் கொண்டு.

எல்லோரும் உற்சாகமானார்கள். சாருவின் வீட்டில் கேக் சுட முடிவு செய்தனர். சமையலறையை அலங்கோலமாக்கினாலும் அவளுடைய அம்மா ஒன்றும் சொல்லமாட்டார். ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் பணத்தை கேக் செய்யும் மூலப் பொருட்களுக்காகப் பகிர வேண்டியிருந்தது.

“நாம் இதை செய்யத்தான் வேண்டுமா?” என்று அனைவரிடமும் சேமிப்புக் காசுகளை சேகரித்த ஆசாத் முணுமுணுத்தான். அவன்தான் கேக் செய்யத் தேவையான பொருட்களை வாங்கிவர கடைக்குச் செல்ல வேண்டியிருந்தது.

“உன் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்றால் எப்படியிருக்கும், யோசி!” என்றாள் ஹனிய.

பொருட்களை வாங்கிய பின், ஒரு புத்தகத்திலிருந்து கேக் செய்ய எளிய செய்முறை ஒன்றைத் தேர்ந்தெடுத்தார்கள்.

சமையலறை அலங்கோலமானது, எங்கும் மாவும் உடைந்த முட்டை ஓடுகளும் இறைந்தி்ருந்தன. எல்லோரும் சிரித்து கும்மாளமிட்டனர்.

“கேக்கில் மேலாக கொஞ்சம் வெட்டி ருசி பார்ப்போமா? கேக் குறைந்தாலும் அவருக்கு தெரியாதுதானே!” என்று பியூஷ் கேட்டான். ஆசாத் இல்லையென தலையாட்டினான். “இல்லை, நீ அதோடு மட்டும் நிறுத்தமாட்டாய்!” என்றாள் சாரு. “மேலே இருக்கும் க்ரீமையாவது ருசி பார்க்கலாமா?” என்று அவன் கேட்டான். “எல்லாம் முடிந்த பின் நீ கிண்ணத்தை நக்கிக் கொள்ளலாம்,” என்றாள் ஹனியா.

குழந்தைகள் தங்களால் முடிந்தவரை கேக்கை கெட்டியாக்கினர். அது கொஞ்சம் நெகிழ்வாக இருந்தது. “நாம் இதை கண்டிப்பாக அவருக்குக் கொடுக்க வேண்டுமா?” என்று எல்லாம் முடித்ததும் ஆசாத் கேட்டான். “பரவாயில்லை, கேக் செய்வது எப்படி என்று நமக்கு இப்போது தெரிந்துவிட்டது. நாம் பிறகு நமக்காக இன்னொன்று செய்துகொள்ளலாம். இன்று அவருடைய பிறந்த நாள்” என்று ஹனியா அவர்களுக்கு நினைவூட்டினாள்.

சாருவின் அம்மா கேக்கை ஒரு தட்டில் வைக்க அவர்களுக்கு உதவினார். அதை எடுத்துக் கொண்டு சாலையில் நடந்தார்கள்.

எல்லோரும் பதற்றத்தில் இருந்தனர். அவர் கேக்கைத் தூக்கி எறிந்துவிட்டால் என்ன செய்வது? அந்த வயதான பெண்மணி தனது வீட்டிற்கு வெளியே வருவதற்காக அவர்கள் காத்திருந்தார்கள்.

அவர் வாசலுக்கு வந்தார், கண்களைச் சுருக்கி அவர்களைப் பார்த்தார்.

“என்ன அது?” என்று கேட்டார்.

“பிறந்தநாள் வாழ்த்துக்கள், பாட்டி!” அவர்கள் அனைவரும் ஒன்றாகச் சொன்னார்கள்.

நீண்ட நேரத்திற்கு, அவர் எதுவும் பேசவில்லை. பின்னர், அவர் வாயிலைத் திறந்து உள்ளே அழைத்தார். பியூஷ் கடைசியாக சாருவுடன் ஒட்டிக்கொண்டு உள்ளே வந்தான். அவர்கள் தோட்டத்தைச் சுற்றிலும் பார்த்தார்கள். ஒரு மூலையில், கிரிக்கெட் பந்துகள் அனைத்தும் குவிந்து கிடப்பதைக் கண்டார்கள். யாரும் எதுவும் சொல்லவில்லை.

“வாருங்கள்” என்று சொல்லி அந்தப் பாட்டி தன் வீட்டின் கதவைத் திறந்தார். வீட்டின் உள்ளே, குழந்தைகள் சோபாவின் நுனியில் அமர்ந்தனர். கேக் தட்டை அறை நடுவில் இருந்த மேசையின் மேல் வைத்தார்கள்.

“உட்காருங்கள். நான் போய் கத்தி எடுத்து வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போனார் பாட்டி. “கத்தியா? எதற்கு? ” என்று பயந்தபடி பியூஷ் கேட்டான். “கேக் வெட்டத்தான், பயந்தாங்கொள்ளி!” என்று சாரு கடிந்துகொண்டாள்..

அவர்கள் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். கிட்டத்தட்ட எல்லாமே தூசி படிந்து கவனிக்கப்படாமல் இருந்தது.

“அங்கே பார்! அது இந்தப் பாட்டிதான்” என்று அலமாரியில் இருந்த புகைப்படங்களைக் காட்டி ஹனியா கூறினாள்.

புகைப்படங்களில், அவர் இளமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார். “பாருங்கள், அவர் பிறக்கும்போதே பாட்டியாகப் பிறக்கவில்லை!” என்று சாரு பியூஷுக்கு சுட்டிக்காட்டினாள்.

அந்தப் பாட்டி திரும்பி உள்ளே வந்தார். குழந்தைகள் அவசரமாக சோபாவுக்கு திரும்பினர். அவர் கையில், கத்தியுடன் தட்டுகளும் இருந்தன. அவர் கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்தார்.

“இதனால் நீங்கள் மீண்டும் வெளியே விளையாடுவதற்காக கிரிக்கெட் பந்துகளை திருப்பித் தந்துவிடுவேன் என்று நினைத்துவிடாதீர்கள்” என்று சொன்னார். ஆனால், அவரது குரலில் கடுமை இருக்கவில்லை. குழந்தைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு. அமைதியாக சாப்பிட்டனர்.

பின்னர் ஆசாத் தொண்டையைத் செறுமிக்கொண்டு. “நீங்களும் கேக் சாப்பிடுங்கள், பாட்டி. நாங்களே செய்தோம், நன்றாக இருக்கிறது” என்றான்.

அந்தப் பாட்டி தலையசைத்துவிட்டு கொஞ்சம் கேக்கை சாப்பிட்டார்.

குழந்தைகள் விடைபெற எழுந்ததும், “உங்கள் பந்துகளை எடுத்துக்கொண்டு போங்கள்” என்றார்.

சில நாட்களுக்குப் பிறகு, மீண்டும் ஒரு பந்து அந்தப் பாட்டியின்யின் தோட்டத்தில் விழுந்தது. முதலில், அவர் எரிச்சல் பட்டதைப் போல் தெரிந்தது.

பின்னர் புன்னகைத்தபடி, பந்தை எடுத்து குழந்தைகளிடம் வீசினார்.

உங்களைச் சுற்றிப் பாருங்கள், நாம் ஒவ்வொருவரும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நீங்கள் காண்பீர்கள். நாம் பேசும் விதம், நாம் சிந்திக்கும் விதம் அல்லது நாம் பார்க்கும் விதம் எதுவாக இருந்தாலும், எதுவும் ஒருவரைப் போல் மற்றொருவருக்கு இருப்பதில்லை.

சகோதரத்துவம் என்பது நாம் வேறுபாடுகளுடன் இருந்தாலும், ​​நாம் அனைவரும் சமஅளவு முக்கியமானவர்கள் என்ற கருத்தைக் கொண்டது. நாம் ஒருவருக்கொருவர் உதவும் மனநிலையை வலியுறுத்துகிறது. நம் அனைவருக்கும் உணர்வுகள், கனவுகள் மற்றும் நம்பிக்கைகள் இருக்கின்றன.

நாம் அனைவரும் வலி, மகிழ்ச்சி, கோபம் மற்றும் அன்பை உணர்கிறோம். இந்தியக் குடிமக்கள் இடையே சகோதரத்துவத்தை வளர்ப்பது நமது அரசியலமைப்பின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாகும். நாம் எவ்விதத்தில் வெவ்வேறாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று கூடலாம், ஒன்றாக இருக்கலாம்.

சகோதரத்துவம்