arrow_back

பொய்ம் முகங்கள்

அத்தியாயம் - 2

அந்த வகுப்பு முடிவதற்கு இருபது நிமிஷமே இருக்கும் போது பள்ளிக்கூடத்துப் பியூன் நாதமுனி தபால்களைக் கொண்டு வந்தான். அந்த நேரம்தான் வழக்கமாகத் தபால்கள் வரும். சுதர்சனத்துக்கு இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த ஜில்லாவின் தமிழ் ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தமிழாசிரியர்களின் உரிமைக்குப் போராடும் அமைப்பைப் பலப்படுத்துமாறு அதன் காரியதரிசி எழுதிய கார்டு ஒன்று. அரசாங்கத் தபால் தலை ஒட்டிய மஞ்சள் நிறக் கவர் மற்றொன்று. மஞ்சள் நிற உறையில் அனுப்புகிறவர் முகவரி இருக்க வேண்டிய இடத்தில் ஆல் இண்டியா ரேடியோ -திருச்சி - என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டிருந்தது. ஏற்கெனவே கவர் பிரித்துக் கிழிக்கப் பட்டிருந்தது. உடனே ஒரு பையனை அனுப்பி பியூனைக் கூப்பிட்டுச் சுதர்சனன் கேட்டான்.

“ஏம்ப்பா? இது இப்படிப் பிரிச்சே வந்திச்சா? இல்லே இங்கே யாராச்சும் பிரிச்சுப் படிச்சாங்களா?”

“ஹெச்.எம். தெரியாமப் பிரிச்சுட்டதா உங்க கிட்டச் சொல்லச் சொன்னாருங்க?”

“அதெப்படித் தெரியாமப் போகும்? மேலேதான் தெளிவா என் பேர் எழுதியிருக்கே...?”

“எனக்கென்ன சார் தெரியும்? அவரையே வேணாக் கேளுங்க. அவர் சொல்லியனுப்பிச்சதை நான் சொன்னேன். என்னை ஏன் கோபிக்கிறீங்க? நானா பிரிச்சேன்?”

பியூனைக் கோபிப்பதில் பயனில்லை என்றே சுதர்சனம் நினைத்தான். அன்றொரு நாள் முல்லை மலர்ப் பத்திரிகையிலிருந்து சன்மானமாக ‘செக்’ வந்த கவரைக் கூட இப்படித்தான் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந்தார் தலைமையாசிரியர். கேட்டதற்கு வேணும்னா பிரிச்சேன், ஏதோ ஸ்கூல் தபாலாக்கும்னு தெரியாமப் பிரிச்சுட்டேன். அதுக்காகத் தலையைச் சீவிடுவேளோ?” - என்று பதில் சொல்லியிருந்தார் அவர்.

இன்று ரேடியோ உறையையும் பிரித்திருப்பதிலிருந்து அவர் தன் கடிதங்கள் எல்லாவற்றையும் வேண்டுமென்றே பிரித்துவிட்டு அப்புறம் மன்னிப்புக் கேட்பதை வழக்கப்படுத்திக் கொண்டிருப்பதைச் சுதர்சனன் புரிந்து கொண் டான்.

பாடவேளை முடிவதற்கான மணி அடித்தது. சுதர்சனன் அந்த வகுப்பிலிருந்து வெளியேறி மறுபடியும் ஆசிரியர்களின் ஒய்வு அறைக்குச் சென்றான். அது இடை வேளை நேரமாதலால் ரீஸஸ் ஐந்து நிமிஷம் ஓய்விருந்தது.

சுதர்சனனின் அடுத்த பாடவேளை மாணவிகளும் சேர்ந்திருந்த ஒரு கூட்டு வகுப்பில் இருந்தது. ஆசிரியர்கள் அறையில் சீனியர் தமிழ்ப் பண்டிதர் பிச்சாண்டியா பிள்ளை எதிர்ப்பட்டார், அவர் அவனைக் கேட்டார்:

“என்ன சுதர்சனம் நீங்க ‘நோட்ஸ் ஆப் லெஸன்’ எழுதி வைக்கிறதில்லேன்னு ஹெச்.எம், புகார் பண்றாரே?”

“எழுத நேரம் இருந்தால்தானே சார்? ஒண்ணு ரெண்டு லீஷர் பீரியடையும் ஸப்டிடியூட் ஒர்க் போட்டு அனுப்பி வச்சிடறாரு. அந்த ஸ்ப்டிடியூட் ஒர்க் மெமோவையும் ஹெச்.எம். தானே போட்டு அனுப்பறாரு.”

“இப்ப ‘நோட்ஸ் ஆஃப் லெஸன்’ எழுதாட்டி என்ன குடிமுழுகிப் போகுது? என்னமோ மனுஷன் கருக்கட்றான்...” என்று அடுத்த நிமிஷமே பிச்சாண்டியா பிள்ளையும் அவனோடு சேர்ந்து கொண்டார்.