arrow_back

பொய்ம் முகங்கள்

அத்தியாயம் - 31

மதிவாணனைப் பார்த்ததில் பழைய நாட்களின் நினைவுகள் மனத்தில் விரைந்து சுழன்றன. புலவர் கல்லூரி வாழ்க்கை, திருவையாறு காவேரியில் நீச்சலடித்தது, பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு, எல்லாம் முறையாகவும். தாறுமாறாகவும் ஞாபகம் வந்தன. ‘சோமசுந்தரம்’ என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

“என்ன செய்யிறீங்க மதிவாணன்? செளக்கியமா இருக்கீங்களா? எப்படி வாழ்க்கை நடக்குது?”

“இங்கேதான் மெட்ராஸ்லே ஒரு வாரப் பத்திரிகையிலே புரூப் ரீடரா இருக்கேன். செளக்கியத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே. ஆனா இப்ப நான் வாங்கற சம்பளத்தை நம்பி எந்தப் பொம்பிளையும் இப்ப எனக்குக் கழுத்தை நீட்ட முடியாது.”

“நீங்க சொல்றதைப் பார்த்தா ‘நமக்கு இன்னும் கலியாணமாகலியேன்னு’ - உங்களுக்கே உள்ளூற ஒரு தவிப்பு வந்தாச்சுன்னு தெரியுது.”

“நீங்க எப்பிடி அண்ணே? இன்னும் தனிக்கட்டை தானா?”

“தனி ஆள்னு திருத்திக்குங்க. நான் என்னிக்கும், எதிலேயும் கட்டையா இருந்ததில்லே. இனிமேயும் அப்பிடி இருக்கப் போறது கிடையாது. ஆனா அதுக்காக எனக்குள்ளாரப் பெரிய ஏக்கம் எதுவும் பிடிச்சு வாட்டறதில்லே. ஒரு விதத்திலே என்னோட எதிர்நீச்சல் சுபாவத்துக்கு இப்பிடித் தனி ஆளா இருக்கறதே நல்லதுன்னு கூடத் தோணுது...”

“‘இல்லறமல்லது நல்லறமில்லை’ - ‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’ன்னெல்லாம் நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்களே அண்ணே...”

“அவங்க காலத்துச் சமூக அமைப்பே வேறு. நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் கூறப்பட்ட அறிவுரைகள் அறவுரைகள் எல்லாமே இன்றைய புதிய சூழ்நிலையிலும், புதிய காலத்திலும் மறுபரிசீலனைக்குரியவை.”

“இன்னமும் அண்ணைக்கி இருந்த மாதிரியேதான் தர்க்கம் பண்றீங்கண்ணே! கொஞ்சங்கூட மாறலே... வாங்க... ஒரு காபி குடிச்சிட்டுப் ‘பீச்’லே போய் உட்கார்ந்து பேசுவோம்... ”

வாழ்வில் நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் ஒரு கல்லூரி தோழனை மறுத்துச் சொல்லி ஏமாற்ற விரும்பாத காரணத்தால் மதிவாணனோடு காப்பிக் குடிக்கச் சென்றான் சுதர்சனன். மாட்டேனென்று மறுப்பதோ அப்படி மறுப்பதன் மூலம் தன்னை உயரத்தில் தூக்கி நிறுத்திக் கொள்ளுவதோ நண்பனை அவமதிப்பதாக இருக்குமென்று அவன் நினைத்தான். தன்னை மதிப்பதோடு பிறரை அவமதிக்காமலிருப்பதும் சேர்த்துத்தான் சுயமரியாதை என்றெண்ணினான் அவன்.

காபி குடித்துக் கொண்டே மதிவாணனிடம் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையைப் பற்றி, விசாரித்தான் சுதர்சனன்.

“சேட் ஜம்னாதாஸ் கிஷன் சந்த்னு யாரோ ஒரு வடக்கத்தி ஆள் நடத்தற பத்திரிகைங்க, ஒரு சினிமா வீக்லி, ரெண்டு ஃபாஷன் ஜர்னல், மூணு டெய்லி தமிழ் தெலுங்கு மலையாளம்னு எல்லாத்திலியுமா இருக்கு. அதோட தமிழ்ல ஒரு வீக்லியும் புதுசா ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க! ‘தமிழ் மணி மாலை’ன்னு பேரு.”