arrow_back

பொய்ம் முகங்கள்

அத்தியாயம் - 12

இந்தக் குதிரையின் மேல் பணம் கட்டினால் ஜெயிக்கும் என்று கூறுகிறவர்களைப்போல் மணவை மலரெழிலன் போன்றவர்கள் அரசாங்கத்தையே ஒரு குதிரைப் பந்தயமாக நடத்தி ஜெயிக்கிற குதிரைகளின் மேல் பணம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஏழைகள் - மேட்டுக்குடி மக்கள் என்று பிரித்துப் பிரித்துப் பேசியே தன்னளவில் தானும் ஒரு புதிய மேட்டுக் குடி ஆகிவிட முயலும் ஒரு சம காலத்து நவீன வர்க்கம் சுதர்சனனுக்குத் தெரிந்தது. அவன் அந்த வக்கீல் இராமநுஜாச்சாரியிடமிருந்தும், மணவை மலரெழிலனிடமிருந்தும் தப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவன் முன்பு ஐயாவிடமே ஒருமுறைக்கு நேருக்கு நேர் வாதாடியிருந்தான்.

“ஐயா தயாரித்தனுப்பிய சீர்திருத்தவாதிகளில் பலர் சாமியை நம்பமாட்டேன்னிட்டு அதே சமயத்திலே பணத்தையே சாமியாக நம்பிக் கும்பிடறாங்க. சாதி கிடையாதுன்னிட்டு ஊரூராய் பணம் படைச்ச பெரிய மனுஷனைத் தனிச் சாதியா உயர்த்தி மதிச்சிக் கும்பிட்டு மரியாதை பண்றாங்க. சாமியைக் கும்பிடறதில்லே. அதே சமயத்திலே வசதியுள்ளவனைக் கண்டு பயந்து மதிக்கறாங்க. இதெல் லாம் என்னாலே ஏத்துக்க முடியலே”

“என்ன செய்யிறது தம்பி! நம்பளவங்கள்ளேயே பலர் சுயமரியாதை இயக்கத்தைச் சரியாப் புரிஞ்சுக்கலே. பழைய ஜஸ்டிஸ் பார்ட்டி ஆளுங்க பல பேரு அப்படியே இதுக்கு உள்ளாரவும் வந்துட்டாங்க. அவசரப் பட்டா ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் பொறுத்துக்குங்க. நிதானமா எல்லாம் படிப்படியா மாத்திடலாம்” என்றார் அவர். அவர் மேல் மதிப்பிருந்தும் சுதர்சனன் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுத்தான்.

“‘சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்’னு சொன்ன பாரதியார் உங்களுக்கு முன்னாடியே நீங்க சொன்னதை நல்லாச் சொல்லியிருக்காரு. ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே. வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ன்னு சொன்ன பாரதி பழைய மேல் வர்க்கத்தையும் காலணி ஆதிக்கம் என்ற வைதிக மனப்பான்மையால் உலகைச் சுரண்டிய புதிய பார்ப்பனர்களாய் உலகில் உருவெடுத்த வெள்ளைக்கார வர்க்கத்தையும் இணைத்தே சாடியிருக்கிறான். இன்னும் கூடப் பொருளாதார அடிப்படையில் வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு வசதியான - நீங்கள் சுரண்டுவதற்கு ஏற்ற ஒரு கோணத்திலேயே கால் நூற்றாண்டாக வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். விமர்சிக்கிறீர்கள். பூணூல் அணிந்தவர்கள் பிறப்பால் தான் பார்ப்பனர்கள். பூணூல் அணியாதவர்கள் பலரிலும் பார்ப்பனீயம் உண்டு. பூணூல் அணிந்தவர்களிலும் பார்ப்பனியம் இல்லாதவர்கள் உண்டு. சாதிகள் வர்க்கங்கள் அனைத்தும் ஒழிய வேண்டுமே ஒழிய ஒரு சாதி மட்டும் ஒழிந்து மற்றச் சாதிகள் வர்க்கங்கள் நீடிக்கக்கூடாது.”

ஐயா ‘அவனுடைய வாதம் இயக்கத்தைப் பலப்படுத்தப் பயன்படாது’ என்றார். அன்று முதல் மெல்ல ஐயாவிடமிருந்து வழி விலகிப் பரந்த சமத்துவத்தையும் மிக விசாலமான அபேத வாதத்தையும் நாடி வருவதற்கு இந்த வாதம் சுதர்சனனுக்குப் பயன்பட்டது. அவனுடைய மனத்தில் உலகளாவிய சுய மரியாதையும் உலகளாவிய அபேதவாதமும் பதிந்தன. ஐயாவிடம் தயாரானவர்கள் பொறுப்புக்கு வந்து வாரிசுகளாக நிர்வாகம் செய்யத் தொடங்கிய போது லஞ்சம், ஊழல், சுரண்டல் எல்லாமே முன்னெப்போதும் இல்லாத வகையில் தாண்டவமாடத் தொடங்கியதனாலே அவர்கள் மெய்யான சுயமரியாதைவாதிகள் இல்லை என்று அவன் உணரத் தொடங்கினான். மணவை மலரெழிலனைச் சந்தித்தபோது மறுபடி இந்தப் பழைய விஷயங்கள் எல்லாம் சுதர்சனனுக்கு இன்று நினைவு வரத் தொடங்கின. ‘ஒப்பில்லாத சமுதாயம் - உலகத்துக் கொரு புதுமை’- என்று பாரதி பாடிய புதுமைச் சமுதாயம் - பொதுமைச் சமுதாயம் வரவேண்டும் என்று ஆசைப்பட்டான் சுதர்சனன்.