arrow_back

பொய்ம் முகங்கள்

அத்தியாயம் - 17

படிப்பு - அறிவு - இவை விசாலமடைய விசால மடையத்தான் சிறுமை, லஞ்சம், ஊழல் இவையெல்லாம் ஒழியும் என்பார்கள். படிப்பிலேயே சிறுமை, ஊழல் லஞ்சம் எல்லாம் வந்து சேர்ந்து விட்டால் என்ன செய்வது? கங்கையே சாக்கடையாகி விட்டால் அப்புறம் என்ன வழி? கங்கையையே சாக்கடையாக்கி விட்ட தன் பெருமையைத் தான் சிதம்பரநாதன் அப்போது சுதர்சனனிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்ற புறநானூற்றுப் பாண்டியனின் கல்வி பற்றிய பாடலுக்கு இப்போது குறும்பாகவும் வக்கிரமாகவும் புதுப் பொருள் கொள்ள வேண்டும் போல் தோன்றியது சுதர்சனனுக்கு. ‘உறுபொருள்’ கொடுக்கும் இடமாக ‘சிண்டிகேட் சிதம்பரநாதன்’ காட்சியளித்தார். உற்றுழி உதவுகிற பணியையும் செய்து கொண்டிருந்தார்.

‘உற்றுழி’ என்பதற்கு மார்க் குறையும்போது என்று அர்த்தம் போலும்.

“என்னமோ ஏதோன்னு நினைக்காதீங்க. ஏதுடா இப்படிச் சிவப்புத் தலைப்பாகையைக் கட்டிக்கிட்டு வந்து கிறுக்கன் மாதிரிப் பேசறானேன்னு உங்களுக்குத் தோணலாம். இன்னிக்கு ஐ.ஏ.எஸ்.ஸா வேலை பார்க்கிற பல பேரு நம்ம தயவிலே யூனிவர்ஸிடி பரீட்சை பாஸ் பண்ணிப் போனவங்க. நம்ம மேலே விசுவாசம் உள்ளவங்க. நாம சொல்லியனுப்பிச்சோம்னா எதையும் தட்டாமச் செய்து கொடுக்கிறவங்க.”

சுதர்சனன் தலையை ஆட்டினான். அவனுக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தெரிந்த உண்மைகள் பல பொய்களின் முக விலாசங்களைத் தெரிவிக்கக் கூடியவனவாக இருந்தன. ‘உண்மைகளைப் புரட்டிப் பார். அவற்றின் மறுபுறத்தில் பொய்களின் முகங்கள் தெரியும்’ என்பது போன்ற பல உண்மைகளை விவரித்துக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சித்ம்பரநாதன்.

“போர்ட் ஆஃப் ஸ்டடீஸ், செனட், சிண்டிகேட், அகடமிக் கவுன்ஸில் எல்லாத்திலியுமே நமக்குச் செல்வாக்கு உண்டுங்க. ஒரு புஸ்தகத்தைப் பாடமா வச்சு இருபத்தையாயிரம், முப்பதாயிரம் பிரதிகள் நிச்சயமா உடனே விற்கலாம்கிற வசதி இதிலே மட்டும்தான் உண்டுங்கிறதாலே பல பேரு தங்கள் புஸ்தகம் பாடமா வரணும்னு ஆசைப்படறாங்க. போர்டுலே எதையும் டிஸைட் பண்ற ‘முதலை’ங்க நாலே நாலு இருக்கு. தலைக்கு ஐநூறுக்குக் குறையாமே காதும் காதும் வச்சாப்பிலே கவர்லே வச்சுத் தள்ளிட்டா அப்புறம் நீங்க சொல்ற புஸ்தகத்தைப் பாடமா வச்சுக்கலாம். இதுனோட உள் விவகாரமெல்லாம் நமக்குத் தலைகீழ்ப் பாடம். சிண்டிகேட்லே ரொம்ப காலம் இருந்திருக்கேன் பாருங்க! எல்லாரையும் எல்லாத்தையும் நல்லாத் தெரியும். போன வருஷம் நம்ம பலவேசம் பிள்ளை எழுதிய ‘பாண்டிய நாட்டுப் பலகாரங்கள்’ங்கிற புஸ்தகத்தை பி.ஏ. பட்டப் படிப்புக்கு வைக்கணும்னு யார் யார் மூலமோ தலைகீழா நின்னு செலவழிச்சு முயற்சி பண்ணினாங்க. நடக்கலே. பலவேசமும் அவர் பப்ளிஷரும் எங்கெங்கேயோ போனாங்க. யார் யாரையோ பார்த்தாங்க. ஊஹும், நடக்குமா? நடக்கலே. கடைசியிலே ‘சிதம்பரநாதா! நீயே கதி’ன்னு நம்ப கால்லே வந்து விழுந்தாங்க. அடுத்த நாளே போர்ட் மீட்டிங்கிலே காரியம் ஸக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சி போச்சு.”