Poi Mugankal

பொய்ம் முகங்கள்

1975 முதல் 1979 செப்டம்பர் வரை சில ஆண்டுகள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரமான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக புத்தக வடிவில் வெளி வருகிறது.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

நூல் முகம்

1975 முதல் 1979 செப்டம்பர் வரை சில ஆண்டுகள் தீபத்தில் தொடர்ந்து பிரசுரமான இந்நாவல் இப்போது தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக புத்தக வடிவில் வெளி வருகிறது.

பாசாங்குகளும், போலித்தன்மைகளும் நிறைந்த மனிதர்கள் சமூக வாழ்வில் தென்படுகிற வரை அப்படி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பல முகங்கள் இருக்கும் - அவை நிஜத்துக்கு அப்பாற் பட்ட - நிஜத்தை விட அதிகமான பொய்ம் முகங்களாகவும் இருக்கும்.

அந்தப் பொய்ம் முகங்களைத் தேடி அடையாளம் காணவும் காட்டவும் முயல்வது ‘அதிகப் பிரசங்கித்தன’ என்று பழமைவாதிகள் நினைக்கலாம் - சொல்லலாம், அபிப்ராயப்படலாம்.

ஆனால் அப்படிப் பொய்ம் முகங்களை தேடி விலக்கி - மெய்யான தோற்றத்தைச் சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் காட்டும் அதிகப் பிரசங்கித்தனங்கள் இன்றைய இலக்கியத்துக்கும் நாளைய இலக்கியத்துக்கும் என்றைய இலக்கியத்துக்கும் அவசியம் தேவைப்படுகிறது.

இலக்கிய ஆசிரியனுடைய - முழுமையான கூரிய பார்வைக்கு எதுவும் தப்ப முடியாது - தப்பக் கூடாது. அந்தப் பார்வை கூர்மையாகவும் எந்த ஆழம் வரையானாலும் அந்த ஆழம் வரை பாய முடிந்ததாயும் இருப்பது தான் அதன் சிறப்பு.

அத்தனை கூரிய பார்வையில் எத்தனை பொய்ம் முகங்கள் கிழிபட முடிந்தாலும் நல்லதுதான். பாசாங்குகள், வேஷங்கள், ஆஷாடபூதித்தனமான நாசுக்குப் போர்வைகள் எல்லாம் கழன்றாலொழிய ஒன்றைப் பற்றிய அல்லது ஒருவரைப் பற்றிய சத்தியம் கண்ணில் படாது.

சத்திய தரிசனத்துக்கு யார் யாருடைய கண்கள் கூசுகின்றனவோ அவர்களுக்காக நாம் வருந்துவதையும் அநுதாப்படுவதையும் தவிர வேறெதையும் செய்வதற்கில்லை.

பூனைகள் கண்களை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லை. கண்களை மூடிக் கொள்ளாத தீரர்கள் தான் உலகை உணர்கிறார்கள். உணர்த்துகிறார்கள்.

இந்தக் கதையில் வருகிற சுதர்சனனைப் போன்ற இளைஞர்கள் இன்றைய இந்திய சமூகத்துக்கு அதிக அளவில் தேவை.

அவர்கள் தொகையும், எண்ணிக்கையும் பெருகுவதைப் பார்த்து யாரும் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டியதில்லை.

சுதர்சனனைப் போன்ற எதிர் நீச்சலிடும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதுதான் கவலைப்படுவதற்கும் பயப்படுவதற்கும் உரியது.

ஒரு சமுதாயத்தில் அப்படி இளைஞர்கள் இருப்பது சமுதாய லாபமாகக் கணக்கிட்டுப் பெருமைப்பட வேண்டியது ஆகும் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அப்படிப் புரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் உணர்ந்து இந்த நாவலைப் படிப்பார்களானால் அவர்களுக்கு நான், மிகவும் நன்றியுடையவனாவேன்.

நா. பார்த்தசாரதி தினமணிக்கதிர் 5-11-1980

அத்தியாயம் - 1

முந்திய நாளைப் போலவே தான் அன்றும் நடந்தது. சுதர்சனன் பள்ளி இறுதிப் படிப்பு ‘சி’ பிரிவு வகுப்புக்கான பிற்பகல் முதல் பாடவேளையை முடித்து விட்டு - ‘அடுத்த பீரியடு’ தனக்கு முழுக்க முழுக்க, ஓய்வு என்ற எண்ணத்தோடு ஏற்பட்ட நிம்மதியும் மகிழ்ச்சியுமாக ஆசிரியர்கள் ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுடைய அந்த நிம்மதி ஒரு விநாடி நேரம் கூட நீடிக்கவில்லை. பள்ளி ஊழியன் கையில் ஒரு சிறு துண்டுத் தாளுடன் சுதர்சனனை நோக்கி விரைவாகத் தேடி வந்தான்.

“என்னது? ஸப்டிடியூட் ஒர்க்கா?”

“எனக்கென்ன தெரியும்? படிச்சுப் பாருங்க சார்!”

துண்டுத் தாளைக் கையில் வாங்கிப் படித்ததும் சுதர்சனனுக்குத் தாங்க முடியாத ஆத்திரம் மூண்டது.

‘ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்கு என்னால் போக முடியவில்லை. எனக்குப் பதிலாக அங்கே போகவும்’ என்று எழுதிக் கையெழுத்திட்டிருந்தார் தலைமை ஆசிரியர். முந்திய நாளும் இதே போல் ஏதோ ஒரு வகுப்புக்குப் போகச் சொல்லி அவர் சுதர்சனனுக்கு மெமோ அனுப்பிக் கழுத்தறுத்திருந்தார். ஏதோ வேண்டும் என்றே திட்டமிட்டுச் செய்வதைப் போலத் தோன்றியது. ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு நாள் பிற்பகலில் தலைமையாசிரியர் திடீரென்று ஆசிரியர்கள் ஓய்வு அறையான ‘ஸ்டாஃப் ரூமு’க்கு வந்தபோது சுதர்சனன் தான் வழக்கமாக உட்காரும் வேப்பமரக் காற்று வருகிற ஜன்னலோரமாக அமர்ந்து கவிதை எழுதிக் கொண்டிருந்தான். அவர் உள்ளே நுழைந்ததைக் கூட அவன் கவனிக்கவில்லை. மற்ற ஆசிரியர்களில் யார் யார் அப்போது ஆசிரியர் ஓய்வு அறையில் இருந்தார்களோ அவர்கள் எல்லாரும் அவரைப் பார்த்ததும் மரியாதையாக எழுந்து நின்றிருக்க வேண்டும். எல்லாரையும் விட வயதில் இளையவனும் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த தமிழாசிரியனும் ஆகிய அவன் தம்முடைய வரவையே கவனிக்காதது போல் குனிந்து எழுதிக் கொண்டிருந்தது தலைமையாசிரியருக்கு ஆத்திரமூட்டியது. அவர் சரியாகத் தன் பின்னால் வந்து நின்று கொண்டு தான் எழுதிக் கொண்டிருப்பதைப் படிக்க முயன்ற போது கூட அவன் அவர் வந்து தன் பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை. “இதென்ன பள்ளிக்கூடமா சந்தை மடமா?”

அவர் திடீரென்று சத்தம் போட்டு இரைந்த பின்பு தான் அவனுடைய கவனம் திரும்பியது. பதறிப் போய் எழுந்து நின்றான் சுதர்சனன்.

“மிஸ்டர் சுதர்சனன்! ஸ்கூல்லே ஒவ்வொருத்தருக்கும் ‘லீஷர் பீரியட்’ எதுக்காகக் குடுக்கிறாங்க தெரியுமா?”

“...”

“பையன்களோட காம்போஸிஷன் நோட்டு, ஹோம் ஒர்க், எதையாவது ‘கரெக்ட்’ பண்றதுக்குத்தான் இந்த லீஷர். நீர் கவிதை எழுதறத்துக்காகவோ, கதை எழுதறத்துக்காகவோ இங்கே நாங்க சம்பளம் கொடுக்கலே! ஞாபகமிருக்கட்டும்.”

இப்படிக் கூப்பாடு போட்டு இரைந்து விட்டு அவன் பதிலை எதிர்பார்த்துக் காத்திராமலே விருட்டென்று திரும்பிப் போய்விட்டார் தலைமை ஆசிரியர்.

அந்தச் சம்பவம் தொடர்புள்ள கோபமும் ஆத்திரமும் இன்னும் அவர் மனதில் அப்படியே நீடிக்கிறது என்று தெரிந்தது. அதனால்தானோ என்னவோ தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அவனுடைய ஓய்வு வேளையில் அவன் ஓய்வு கொள்ள முடியாமல் எந்த வகுப்புக்காவது ‘ஸப்டிடியூட்’டாக அவனை அனுப்பிக் கொண்டிருந்தார் அவர்.

‘மெமோ’வில் தன் இன்ஷியலைப் போட்டு பியூனிடம் கொடுத்தனுப்பி விட்டுத் திரும்பி நின்று தற்செயலாக எதிர்ப்புறம் தெரிந்த விளையாட்டு மைதானத்தைப் பார்த்த சுதர்சனனுக்கு மேலும் அதிக ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவுக்கு ஆங்கிலப் பாடம் எடுக்கப் போக வேண்டிய தலைமையாசிரியர் விளையாட்டு மைதானத்தில் மாணவிகளோடு ‘ரிங்டென்னிஸ்’ விளையாடிக் கொண்டிருந்தார். அது ஒரு ‘கோ-எஜுகேஷன்’ பள்ளிக்கூடம். தலைமையாசிரியர் வாசுதேவனோ மனைவியை இழந்தவர். அது மிகவும் செழிப்பான மலையடிவாரத்து நாட்டுப்புற கிராமம். ஆகையினால் பெண்களுக்கு எல்லாம் ஆற்றோரத்துத் தாவரம் போலச் சிறுவயதிலேயே ஒரு மதமதப்பும் வளர்ச்சியும் வசீகரமும் வந்திருந்தன. ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை படிக்கும் மிகவும் சிறிய பிராயத்துப் பெண்களே இப்படி வளர்ச்சிக்கு விலக்கில்லை என்றால் ஒன்பதாவது வகுப்பு முதல் பதினோராவது வகுப்பு வரை படிக்கும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இந்த மேல் வகுப்புப் பெண்கள் மூன்று வகுப்புக்களுக்குமான எல்லா செக்‌ஷன்களிலும் சேர்ந்து இருபது முப்பது பேர் இருந்தார்கள். ‘பிஸிகல் எஜுகேஷன் டிரெயினிங்’ அல்லது டிரில் கிளாஸ் எனப்படும் உடற்பயிற்சி வகுப்பு இவர்களுக்கும் உண்டு. சட்டப்படி பயிற்சி பெற்ற பெண் உடற்பயிற்சி ஆசிரியை ஒருத்தியைத் தான் இந்த மாணவிகளைக் கவனித்துக் கொள்வதற்கு நியமிக்க வேண்டும். பெண் ஆசிரியை கிடைக்காததால் முப்பது மாணவிகளில் ஒருத்தியை மானிட்டராகத் தேர்ந்தெடுத்து அவள் டிரில் மாஸ்டர் அறையிலிருந்து தேவையான விளையாட்டுக் கருவிகளைக் கேட்டு வாங்கி வந்து விளையாட்டு வகுப்பை எப்படியாவது நடத்திக் கொள்ள வேண்டியது என்று விடப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு மூன்று ஆண்டுகளாகவே தலைமையாசிரியர் வாசுதேவன் எம்.ஏ.எல்.டி. இந்த மேல் வகுப்புப் பெண்களின் உடற்பயிற்சி வகுப்புக்களில் அதிக அக்கறை காட்டத் தொடங்கியிருந்தார். அதைக் கவனிக்கிற பிறர் அவரைக் கேலி செய்யக் கூடிய அளவு அவர் அதிக அக்கறை காட்டினார். மாணவிகளுக்கு - அவர்களில் சிலருடைய கைகளைப் பற்றியபடி ‘ரப்பர்ரிங்’கை எப்படிப் பிடித்துக் கொள்ளுவது, எப்படி வீசுவது என்றெல்லாம் கூடத் தலைமையாசிரியர் மகிச்சியோடு சொல்லிக் கொடுக்கத் தலைப்பட்டார். இந்த விஷயத்தில் மாணவிகள் கூச்சப்பட்டு விலகி ஓடினால் கூட இவர் அவர்களை விடத் தயாராயில்லை. தம் அறையில், அமர்ந்தும், வகுப்புக்களைச் சுற்றிப் பார்த்து ‘சூபர்வைஸ்’ செய்தும் ஒரு தலைமை ஆசிரியர் செய்ய வேண்டிய வேலைகள் வேறு எவ்வளவோ இருந்தும், பழக்கத்துக்கு அடிமையான ஒரு குடிகாரனைப் போல் மாணவிகள் மைதானத்துக்கு விளையாட வருகிற நேரத்தில் எந்த வேலை எங்கே இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு மாணவிகளோடு வந்து மைதானத்தில் சேர்ந்து பல்லிளித்துக் கொண்டு நிற்கிற பழக்கம் தலைமையாசிரியருக்கு வந்துவிட்டது. இது சம்பந்தமாக எழுந்த கேலி, கிண்டல் எல்லாம் கூட அவரை ஒன்றும் மாற்றிவிடவில்லை.

“ஹெட் மாஸ்டரையா தேடறீங்க? ரூம்லே இல்லேன்னா ‘ப்ளே கிரவுண்டிலே’ கேர்ள்ஸ் விளையாடற இடத்திலே போய்ப் பாருங்க. நிச்சயமா அங்கே இருப்பாரு” என்று சிரித்துக் கொண்டே மற்றவர்கள் அவரைப் பற்றிப் பதில் சொல்கிற எல்லைக்கு அவரது இந்தப் போக்குப் பிரசித்தமாயிருந்தும் அவர் பழையபடியேதான் இருந்தார். ‘அவுட்டோர் கேம்’ ஆகிய பூப்பந்து, ரிங் டென்னிஸ் ஆட்டங்களின் போது மட்டுமல்லாமல் ‘இண்டோர்கேம்’ ஆகிய ‘கேரம்’ போன்றவற்றை விளையாடிக் கொண்டிருந்தாலும் கூட மாணவிகளுக்கு நடுவே அவரும் போய் ஒட்டிக் கொண்டார். இதனால் அவரே போய் நடத்த வேண்டிய பல வகுப்புக்களுக்கு அவர் போக முடியாமல் அந்த நேரத்தில் ஓய்வாக இருக்கும் வேறு ஆசிரியர்கள் தலையில் அந்த வேலை கட்டப்பட்டது.

“அவரு முன்னாலே எல்லாம் இப்படி இல்லே. ஒழுங்கா ‘கிளாஸ்’ அட்டெண்ட் பண்ணுவாரு. ஸ்கூல் நிர்வாக வேலைகளையும் உடனுக்குடனே கவனிப்பாரு. சம்சாரம் தவறிப் போனதிலேருந்துதான், இந்த மாறுதல்” - என்று தலைமையாசிரியருடைய மாறுதலுக்கு ஒரு காரணமும் சொல்லப்பட்டது.

தலைமையாசிரியருக்கே ஒரு வயது வந்த பெண்ணும், பையனும் இருந்தார்கள். பையன் சேலத்துக்குப் பக்கத்தில் ஏற்காட்டில் படித்துக் கொண்டிருந்தான். பெண் திருச்சியில் தாய்வழி மாமன் வீட்டில் தங்கிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி அவர் நினைக்கவில்லை. ஆதர்சபுரத்தில் தலைமையாசிரியர் வாசுதேவன் மட்டும் தான் தனி ஆளாக ஒரு பெரிய வீட்டில் குடியிருந்தார். சமையலுக்கு ஆள் இருந்தான். ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூலுக்கு அவர் தலைமையாசிரியராக வந்து அதிக நாட்கள் ஒன்றும் ஆகிவிடவில்லை. எல்லாத் தலைமையாசிரியர்களுக்கும் இருப்பதைப் போல் வந்த புதிதில் அவரைப் பற்றியும் ஓர் அத்து இருந்தது. இனம் புரியாத ஒரு வகை மரியாதையும் இருந்தது. நாளாக நாளாக அவை எல்லாம் கரைந்து போய் அவரைப் பற்றியும் அவர் தொடர்பான சம்பவங்களைப் பற்றியும் வெறும் அரட்டைகளும் திண்ணைப் பேச்சுக்களுமே ஊரில் மீதமிருந்தன. அவர் இல்லாத இடங்களில் அவர் இல்லாத சமயங்களில் அவரைப் பற்றிப் பேச நிறையக் கேலியும் கிண்டலும் மீதமிருந்தன. அவர் எதிரே இருக்கும் போது ஒரு போலியான வழக்கமான வெற்று மரியாதை அவருக்குக் காட்டப்பட்டது. நாற்பத்தெட்டு வயது நிறைந்திருந்தும் அவர் தலையில் கொஞ்சங்கூட நரையில்லை. எடுப்பான முகமும் அளவான உயரமும் இருந்தாலும் மூக்கு மட்டும் கருடாழ்வார் மாதிரி அமைந்திருந்து முக லட்சணத்தை ஓரளவு கெடுத்து விட்டது. எலுமிச்சம் பழ நிற மேனியும் பருமனில்லாத உடம்புமாக வற்றிய வாசுதேவனுடைய தோற்றத்தில் இளமையும் தெரியாமல் முதுமையும் தெரியாமல் நடுத்தர வயது தான் தெரிந்தது. பருவப் பிரிவுகளில் எதிலும் அடங்காத ஒரு தோற்றம் என்று தான் அதைச் சொல்ல வேண்டும்.

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சனன் தலைமையாசிரியருக்கு நேர்மாறான குணமும் தோற்றமும் அமையப் பெற்றிருந்தான். ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியில் அவன் அந்த ஆண்டின் தொடக்கத்தில் தான் வேலைக்குச் சேர்ந்திருந்தான். திருவையாறு கல்லூரியிலே தமிழ் வித்துவான் படிக்கும் போதே முதலில் சுயமரியாதை இயக்கம், பின்பு தி.மு.க. என்று அரசியல் சார்புகள் கொண்டிருந்த சுதர்சனனிடம் கொஞ்சம் பருவமும் அறிவும் பக்குவப்படப் பக்குவப்படப் பொதுச் சிந்தனைகள் வளர்ந்து பழைய சார்புகள் எல்லாம் தவிர்ந்திருந்தன. சார்புகள் தானே தன் மேல் ஏற்றிருந்த தளைகள் என்று பின்னால் அவற்றைப் பற்றி அவனே உணர முடிந்திருந்தது. ஒவ்வொரு மனிதனும் பிறர் தனக்கு இடுகிற தளைகளையும், சிறைகளையும் பற்றி அதிகமாகக் கவலைப்படுகிறானே ஒழியத் தானே தன்னையறியாமல் தனக்கு இட்டுக் கொள்ளும் தளைகளையும் சிறைகளையும் பற்றி ஏனோ அதிகம் கவலைப்படுவதில்லை. உண்மையில் மிகவும் அபாயகரமானவையும், சிந்தனையையும் அறிவையும் மந்தப்படுத்தி விடுகிறவையுமான தளைகளும், சிறைகளும் ஒருவன் தனக்குத் தானே இட்டுக் கொள்பவை தான் என்பது சுதர்சனனுக்கு இப்போது புரிந்தது. கொள்கை என்ற பெயரிலும், இலட்சியம் என்ற பெயரிலும் தான் நின்ற இடத்திலிருந்தே தன்னைச் சுற்றி அல்லது தன்னை வளைத்து ஒரு வட்டத்தைப் போட்டுக் கொள்ளாமல் தப்ப முடிவதும் இயலாத காரியம் தான் என்றாலும் அப்படி வட்டம் போட்டுக் கொண்டு நின்று விடுவதன் மூலமே வட்டத்துக்கு வெளியே உள்ள எதுவும் தெரியாமலும், புரியாமலும் போய் விடுகின்றன என்பது சுதர்சனனுடைய அநுபவமாகவே இருந்தது. திருவையாறு நாட்களாக இருந்தால் வாசுதேவனை அவருடைய சாதியைச் சொல்லியே எதிர்த்திருப்பான் அவன். காய்ந்த வைக்கோற்போரில் போகிற போக்கில் வீசி எறியும் நெருப்பு மாதிரி அந்த சாதித் தாக்குதல் பிரயோகம் பற்றிக் கொள்ளூம் என்ற இரகசியமும் அவனுக்குத் தெரியும். “நல்லது செய்கிறவர்களும், தவறு செய்கிறவர்களும் எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். வசதியுள்ளவர்களும் ஏழைகளும், எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். இரக்கமுள்ளவர்களும், இரக்கமில்லாதவர்களும் எல்லாச் சாதிகளிலும் இருக்கிறார்கள். இன்றைய உலகில் பொருளாதார அடிப்படையும் ஏற்றத் தாழ்வுகளுமே புதிய சாதியைப் படைக்கின்றன” - என்ற பார்வையை அவனுக்குள்ளே வளர்த்த புது நண்பர்களுக்கு இப்போது அவன் நன்றி செலுத்தி மனப்பூர்வமாகப் பாராட்டிக் கொண்டிருந்தான்.

ஆசிரியர்களின் ஓய்வு அறையிலிருந்து தலைமையாசிரியருக்குப் பதிலாக அவர் பாடம் நடத்த வேண்டிய ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்குப் போவதற்காக நடந்து கொண்டே சுதர்சனன் இவ்வளவும் நினைத்தான்.

பாடவேளைகளுக்கு நடுவே கிடைக்கும் லீஷர் ‘பீரியடை’ எப்படி எதற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று தலைமையாசிரியர் வாசுதேவன் தனக்கு அறிவுரை கூறியதையும், எச்சரித்ததையும், நினைத்த போது சுதர்சனன் உள்ளூறச் சிரித்துக் கொண்டான்.

தாம் உருப்படியாகப் பாடம் நடத்த வேண்டிய நேரத்தையே வீணாக்கிவிட்டுப் பெண்பிள்ளைகள் குனிவது, நிமிர்வதையும், ஓடுவதையும் கைவீசுவதையும் பார்க்கிற நைப்பாசையில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறவர், அடுத்தவர்களுக்கு உபதேசிப்பதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

ஆறாவது ஃபாரம் ‘ஏ’ பிரிவு வகுப்புக்குள் அவன் நுழைந்ததும் மாணவர்கள் எழுந்து நின்றார்கள். அவர்களை உட்காரச் சொல்லிக் கையமர்த்திவிட்டுத் தானும் நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன்.

கோரஸ் போல எல்லாப் பையன்களும் ஒரே சமயத்தில் ஒரேவிதமான வேண்டுகோளை அவனிடம் விடுத்தனர்.

“ஏதாவது நல்ல கதையாச் சொல்லுங்க சார், கேட்கிறோம்.”

சாதாரணமாக மாரல் இன்ஸ்ட்ரக்‌ஷன், ஹாபி, இன்னொருவர் வராததை நிறைவு செய்வதற்குப் போகும் பாடவேளைகள், எல்லாவற்றிலும் பையன்களுடைய முதல் வேண்டுகோள் கதை சொல்லச் சொல்லித்தான் வருகிறது. இது ஏன் என்று தெரியவில்லை. பையன்களுக்கு எதனால் இவ்வளவு பெரிய கதைப் பைத்தியம் பிடித்திருக்கிறது? ஒரு வேளை முழுப் பாடத் திட்டமும் ஒரு மாணவனை அல்லது முழு மாணவ சமூகத்தையும் அலுப்படையச் செய்வதாகவோ, களைப்பூட்டுவதாகவோ, இருக்கிறதோ என்னவோ? அதிலிருந்து விடுபடுவதற்குத்தான் கதை கதை என்று கேட்கிறார்களோ?

“கதை இருக்கட்டும், உங்க ‘செலபஸ்’ எந்த அளவில் இருக்கு? பரீட்சைக்கு நடக்க வேண்டிய பாடமாவது முடிஞ்சிருக்கா, இல்லியா?”

“எப்படி சார் முடியும்? இங்கிலீஷ் கிளாஷ் எச்.எம். எடுத்தாலும் எடுத்தார்... முக்கால்வாசி நாள் அவராலே எங்க கிளாஸுக்கு வர முடியாமப் போகுது. உங்களை மாதிரி யாராவது ஸப்டிடியூட் தான் வராங்க...”

“நான் இங்கிலீஷ் நடத்தட்டுமா?”

“நீங்க எப்பிடி சார் நடத்த முடியும்? தமிழ்ப் பண்டிட் இங்கிலீஷ் நடத்தலாமா?”

“தமிழ்ப் பண்டிட் தமிழ் மட்டும்தான் நடத்தணுமாக்கும்?”

“நீங்க ஜாலியா எதினாச்சும் கதை சொல்லுங்க சார்...”

“தமிழ்ப் பண்டிட் கதை மட்டும் சொல்லலாமாக்கும்...?”

“நீங்க கதை எல்லாம் எழுதறவரு. அதனாலே நல்லாச் சொல்லுவீங்க சார்...”

“எழுதறது வேறே, சொல்றது வேறே. எழுதிட்டா நல்லாச் சொல்லிட முடியும்னு இல்லே தம்பிகளா...”

“நீங்க ஃபோர்த் ஃபாரம் ‘பி’ செக்‌ஷன் நான் டீடயில்ட் கிளாஸ்லே அருமையான கதையெல்லாம் சொல்வீங்கன்னு என் தம்பி சொல்லியிருக்கான் சார்.”

“இன்னிக்கு இங்கே நான் கதை கிதை சொல்ல மாட்டேன். நீங்க ஏதாவது சத்தம் போடாமப் படிச்சிட்டிருங்க. நான் என் வேலையைப் பார்க்கிறேன்...”

மறுபடியும் தலைமையாசிரியர் மேற்பார்வைக்காகச் சுற்றி வரும் போது அவரிடம் மாட்டிக் கொள்வோம் என்ற பயம் இப்போது சுதர்சனத்துக்கு ஒரு சிறிதும் இல்லை. மாணவர்களை அமைதியாக அவர்கள் பாடத்தைப் படிக்கச் சொல்லிவிட்டு அரைகுறையாக நிறுத்தி வைத்திருந்த தன் கவிதையை மேலும் தொடர்ந்து எழுதலானான் அவன். பெண்களின் ‘டிரில் பீரியடு’ முடிகிற வரை தலைமையாசிரியர் நிச்சயம் விளையாட்டு மைதானத்தில் தான் இருப்பார் என்பதில் அவன் மனம் முழு நம்பிக்கை வைத்திருந்தது.

பக்கத்து வகுப்பறையில் கணித ஆசிரியர் புலிக்குட்டி சீனிவாச ராவ் மாணவர்களுக்கு ஏதோ ஒரு கணக்கைக் கரும்பலகையில் எழுதிப் போட்டுவிட்டு அவர்கள், அதைச் செய்கிற நேரத்தில் உலாவுவதற்கு வராந்தாப் பக்கம் வந்தவர்.

“என்ன? சுதர்சனம் சாருக்கு ஓசிப் பீரியடா?” என்று சுதர்சனம் அமர்ந்திருந்த வகுப்பறை ஜன்னலருகே நின்று சிரித்தபடி கேட்டார். சுதர்சனனும் எழுதுவதை நிறுத்தி விட்டு எழுந்து ஜன்னலருகே சென்றான். ராவிடம் விவரம் தெரிவித்தான். அவர் சொன்னார்:

“கேர்ள்ஸுக்கு டிரில் பீரியடு இருந்தா ஹெச்.எம். கிளாஸுக்கு வரமாட்டார்ங்கிறது தெரிஞ்ச விஷயம் தானே?”

“அப்படீன்னா, டயம் டேபிளில் கேர்ள்ஸுக்கான டிரில் பீரியடை அவரே போட்டு எடுத்துக்கலாமே? ஏன் மத்தவங்க கழுத்தை அறுக்கிறாரு?”

“கோபப்படாதீங்க? இப்பத்தான் வேலையிலே சேர்ந்திருக்கீங்க?... கொஞ்சம் பொறுத்துப் போங்க...” என்று சுதர்சனனுக்கு அறிவுரை கூறினார் புலிக்குட்டி. சீனிவாச ராவுக்கு அந்தப் பள்ளிக்கூடத்திலே எப்படியோ புலிக்குட்டி என்ற பெயர் அவரது சொந்தப் பெயரே மறைகிற அளவு நிலைத்து விட்டது.

“டேய்! ஹோம் ஒர்க் போடாமே வராதே! புலிக்குட்டி கிளாஸ்லே நாற்பத்தஞ்சு நிமிஷமும் பெஞ்சு மேலே ஏறி நிற்க வேண்டியிருக்கும்” - என்று பையன்களே ஒருவருக்கொருவர் குறிப்பிட்டுப் பேசிக்கொள்ளும் அளவு கணித ஆசிரியர் புலிக்குட்டி சீனிவாச ராவ் போன்று பல ஆண்டுகள் அதே பள்ளிக்கூடத்தில் தொடர்ந்து இருப்பவர்கள் கூடத் தலைமை ஆசிரியர் வாசுதேவனுக்கு ஓரளவு அடங்கியும், பயந்தும், நடந்ததைப் பார்த்துச் சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. ஆனால் தான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் இதே புலிக்குட்டி தன்னிடம் உரையாடிய ஓர் உரையாடலை சுதர்சனன் இன்னும் மறந்து விடவில்லை. பள்ளிக்கூட அலுவலக அறையில் ரைட்டர் நரசிம்மலுநாயுடு, “இவர் தான் புது ஜூனியர் தமிழ்ப் பண்டிடி - “ என்று சீனிவாச ராவுக்குச் சுதர்சனனை அறிமுகப்படுத்தியிருந்தார். அதோடு சுதர்சனன் தமிழ் வித்வான் தேர்வில் மாகாணத்திலேயே முதலாவதாகத் தேறி ஆயிரம் ரூபாய்ப் பரிசு பெற்றிருப்பதையும் அவர் புலிக்குட்டியிடம் சொல்லியிருந்தும், “நீங்க நாயுடுவா மிஸ்டர் சுதர்சனன்? மனவாடு... அதான் நரசிம்மலு நாயுடு படுகுஷியா அறிமுகப்படுத்தறாரு...” என்று ராவ் பதில் கூறியிருந்தார். தான் நாயுடுதான் என்பதைச் சீனிவாச ராவ் கண்டுபிடித்துவிட்டதில் சுதர்சனனுக்கு வருத்தமோ வெட்கமோ ஒன்றுமில்லை என்றாலும் ராவ் முதல் சந்திப்பிலேயே தன்னிடம் மிகவும் கொச்சையாக நடந்து கொண்டு விட்டதாகத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் அதற்கு முந்திய ஆண்டுகளிலும் ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல் நிர்வாகிகளாக நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து இருந்து வந்ததால் தான் சீனிவாச ராவ் இப்படிச் சொல்லியிருந்தார் போலும். ஆனாலும் அவர் சொல்லிய விதம் ஒரு தினுசாயிருந்தது. நிர்வாகி எந்த சமூகத்தைச் சேர்ந்தவரோ அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே சலுகை அதிகம் என்று ஒரு வம்பு பேசப் பட்டாலும், உண்மையில் அப்படி எதுவுமில்லை. தலைமையாசிரியர் வாசுதேவன் வைஷ்ணவ ஐயங்கார் வகுப்பைச் சேர்ந்தவர். ராவ் - கன்னடக்காரர். வேறு சிலரும் இப்படிப் பலவிதமாக இருந்தார்கள். ஆனாலும் வம்பு என்னவோ பேசப்பட்டது. வம்புக்குக் காரணங்களும் கற்பிக்கப்பட்டன. தஞ்சை நம்மாழ்வார் நாயுடு குமாரர் ராமாநுஜலு நாயுடு என்பதாகத் தன் தந்தை காலத்தில் சாதி, ஊர், தகப்பன் பெயர்களைச் சேர்த்து எழுதுவதே மரியாதை என்று கருதப்பட்டு வந்தது போலன்றிப் பெயரைச் சுருக்கி ‘டி.ஆர்.சுதர்சனன்’ என்று மட்டுமே வைத்துக் கொண்டிருந்தும் ராவ் இப்படிக் கொச்சையாகத் தன்னை விசாரித்து விட்டாரே என்று எண்ணி சுதர்சனனின் மனம் சங்கடப் படத்தான் செய்தது.

சீனிவாச ராவுக்கு என்னவோ அந்தப் பள்ளிக்கூட நிர்வாகத்தைப் பற்றிப் புறம்பேசுவதில் அலாதியான ருசியே உண்டு. ஆனால் பள்ளி நிர்வாகியையோ, நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களையோ அவர் நேரில் பார்த்து விட்டால் அடக்கமும் மரியாதையும் உள்ளவர் போல் நடிக்கத் தவறமாட்டார். தலைமையாசிரியர் வாசுதேவனை நேரில் பார்த்தாலும் அப்படித்தான். ஆனால் ஸ்டாஃப் ரூமில் நாயுடுக்கள் அல்லாத பிற ஆசிரியர்கள் அடங்கிய குழுவின் அரட்டையில், “ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல் - பை தி நாயுடூஸ் - ஃபார் தி நாயுடூஸ்...” - என்பது போல் ராவ் கிண்டல் செய்து அடிக்கடி பேசுவது உண்டு என்பதைச் சுதர்சனன் நிறையக் கேள்விப்பட்டிருந்தான். சீனிவாச ராவ் யாரிடம் யாரைப் பற்றி எப்படி எப்போது புறம் பேசுவார் என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. தலைமையாசிரியர் இல்லாத போது தலைமையாசிரியரைப் பற்றி சுதர்சனனிடம் பேசுவார். சுதர்சனன் இல்லாத போது சுதர்சனனைப் பற்றித் தலைமையாசிரியரிடம் பேசுவார். யார் யார் எல்லாம் அப்போது அந்த விநாடி வரை பக்கத்தில் இல்லையோ அவர்களைப் பற்றி யார் யார் எல்லாம் பக்கத்தில் இருக்கிறார்களோ அவர்களிடம் பேசித் தீர்ப்பது புலிக்குட்டி சீனிவாச ராவின் பழக்கம். அங்கு வந்த சிறிது காலத்திலேயே சுதர்சனன் இதைப் புரிந்து கொண்டிருந்தான். அதனால் ராவ் ஜன்னலோரமாக நின்றே பத்து நிமிஷம் பேசிக் கொண்டிருந்தும் அவன் சும்மா கேட்டுக் கொண்டிருந்தானே ஒழியப் பதில் எதுவும் சொல்லவில்லை. ராவ் பேசுவதைக் கேட்கலாமே ஒழிய பதில் சொல்லக்கூடாது. ஏனென்றால் அந்தப் பதில்களைக் கொண்டே அதற்குரியவர்களைப் பற்றி வேறு யாரிடமாவது பேசவும் ராவ் தயங்கமாட்டார்.

அவர் தம்முடைய வகுப்பறைக்குத் திரும்பச் சென்ற பின், சுதர்சனன் மறுபடி தன்னுடைய நாற்காலியில் போய் அமர்ந்தான். கவிதை எழுத வரவில்லை. மனம் எது எதிலோ போய்ச் சிக்கியிருந்தது. வடக்குக் கோடியில் மீண்டும் இரண்டு பையன்கள் எழுந்து, “சார்! இண்ட்ரெஸ்டிங்கா ஒரு ஸ்டோரி சொல்லுங்க சார்...” என்றார்கள்.

“கதை கிடக்கட்டும். பாடத்தைப் படிங்க! பரீட்சை வருது.”

சிறிது கடுமையாக அதட்டி அவன் இதைச் சொல்லிய பின் கதை சொல்லுமாறு கேட்கும் துணிவு மாணவர்களில் யாருக்கும் வரவில்லை.

அத்தியாயம் - 2

அந்த வகுப்பு முடிவதற்கு இருபது நிமிஷமே இருக்கும் போது பள்ளிக்கூடத்துப் பியூன் நாதமுனி தபால்களைக் கொண்டு வந்தான். அந்த நேரம்தான் வழக்கமாகத் தபால்கள் வரும். சுதர்சனத்துக்கு இரண்டு கடிதங்கள் இருந்தன. அந்த ஜில்லாவின் தமிழ் ஆசிரியர் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தமிழாசிரியர்களின் உரிமைக்குப் போராடும் அமைப்பைப் பலப்படுத்துமாறு அதன் காரியதரிசி எழுதிய கார்டு ஒன்று. அரசாங்கத் தபால் தலை ஒட்டிய மஞ்சள் நிறக் கவர் மற்றொன்று. மஞ்சள் நிற உறையில் அனுப்புகிறவர் முகவரி இருக்க வேண்டிய இடத்தில் ஆல் இண்டியா ரேடியோ -திருச்சி - என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டிருந்தது. ஏற்கெனவே கவர் பிரித்துக் கிழிக்கப் பட்டிருந்தது. உடனே ஒரு பையனை அனுப்பி பியூனைக் கூப்பிட்டுச் சுதர்சனன் கேட்டான்.

“ஏம்ப்பா? இது இப்படிப் பிரிச்சே வந்திச்சா? இல்லே இங்கே யாராச்சும் பிரிச்சுப் படிச்சாங்களா?”

“ஹெச்.எம். தெரியாமப் பிரிச்சுட்டதா உங்க கிட்டச் சொல்லச் சொன்னாருங்க?”

“அதெப்படித் தெரியாமப் போகும்? மேலேதான் தெளிவா என் பேர் எழுதியிருக்கே...?”

“எனக்கென்ன சார் தெரியும்? அவரையே வேணாக் கேளுங்க. அவர் சொல்லியனுப்பிச்சதை நான் சொன்னேன். என்னை ஏன் கோபிக்கிறீங்க? நானா பிரிச்சேன்?”

பியூனைக் கோபிப்பதில் பயனில்லை என்றே சுதர்சனம் நினைத்தான். அன்றொரு நாள் முல்லை மலர்ப் பத்திரிகையிலிருந்து சன்மானமாக ‘செக்’ வந்த கவரைக் கூட இப்படித்தான் பிரித்துப் பார்த்துவிட்டு அனுப்பியிருந்தார் தலைமையாசிரியர். கேட்டதற்கு வேணும்னா பிரிச்சேன், ஏதோ ஸ்கூல் தபாலாக்கும்னு தெரியாமப் பிரிச்சுட்டேன். அதுக்காகத் தலையைச் சீவிடுவேளோ?” - என்று பதில் சொல்லியிருந்தார் அவர்.

இன்று ரேடியோ உறையையும் பிரித்திருப்பதிலிருந்து அவர் தன் கடிதங்கள் எல்லாவற்றையும் வேண்டுமென்றே பிரித்துவிட்டு அப்புறம் மன்னிப்புக் கேட்பதை வழக்கப்படுத்திக் கொண்டிருப்பதைச் சுதர்சனன் புரிந்து கொண் டான்.

பாடவேளை முடிவதற்கான மணி அடித்தது. சுதர்சனன் அந்த வகுப்பிலிருந்து வெளியேறி மறுபடியும் ஆசிரியர்களின் ஒய்வு அறைக்குச் சென்றான். அது இடை வேளை நேரமாதலால் ரீஸஸ் ஐந்து நிமிஷம் ஓய்விருந்தது.

சுதர்சனனின் அடுத்த பாடவேளை மாணவிகளும் சேர்ந்திருந்த ஒரு கூட்டு வகுப்பில் இருந்தது. ஆசிரியர்கள் அறையில் சீனியர் தமிழ்ப் பண்டிதர் பிச்சாண்டியா பிள்ளை எதிர்ப்பட்டார், அவர் அவனைக் கேட்டார்:

“என்ன சுதர்சனம் நீங்க ‘நோட்ஸ் ஆப் லெஸன்’ எழுதி வைக்கிறதில்லேன்னு ஹெச்.எம், புகார் பண்றாரே?”

“எழுத நேரம் இருந்தால்தானே சார்? ஒண்ணு ரெண்டு லீஷர் பீரியடையும் ஸப்டிடியூட் ஒர்க் போட்டு அனுப்பி வச்சிடறாரு. அந்த ஸ்ப்டிடியூட் ஒர்க் மெமோவையும் ஹெச்.எம். தானே போட்டு அனுப்பறாரு.”

“இப்ப ‘நோட்ஸ் ஆஃப் லெஸன்’ எழுதாட்டி என்ன குடிமுழுகிப் போகுது? என்னமோ மனுஷன் கருக்கட்றான்...” என்று அடுத்த நிமிஷமே பிச்சாண்டியா பிள்ளையும் அவனோடு சேர்ந்து கொண்டார்.

மணி அடிக்கவே அவன் மறுபடியும் வகுப்புக்குப் புறப்பட்டுப் போனான்.

முன் வரிசையில் பார்க்க லட்சணமாக நாலைந்து இளம் பெண்களையும், லட்சுமீகரமான சில முகங்களையும் பார்த்தவுடன் சிறிது உற்சாகம் மூண்டது. நளவெண்பாவில் நளன் தமயந்தி தூதுப் பரிமாற்றம் பற்றிய பாடம். பாடத்தைத் தொடங்கிய போதே சிறிது நகைச்சுவையாக ஏதோ அவன் சொல்லவே வகுப்பு முழுதும் கலீர் கலீரென்று சிரித்து ஓய்ந்தது. இப்படி இரண்டு மூன்று சிரிப்பலைகள் எழவும் வகுப்பின் வராந்தாவில் தலைமையாசிரியர் சூபர் விஷனுக்கு வரவும் சரியாக இருந்தது.

சுதர்சனனின் வகுப்பில் சிரிப்பலைகளைக் கேட்டுவிட்டு அவர் தயங்கி நின்றார். வகுப்பின் வாசற்படியில் தலைமை ஆசிரியர் வந்து தயங்கி நிற்கவே வகுப்புக்குள் மாணவர்களும் மாணவிகளும் அவருக்காகவே எழுந்து நின்றுவிட்டனர். சுதர்சனனும் எழுந்து நிற்க வேண்டியதாயிற்று. அவர் அவனைக் கைநீட்டிக் கூப்பிட்டார்.

“மிஸ்டர் சுதர்சனம்! ஒரு நிமிஷம் இப்படி வாங்கோ.”

அவன் போனான். நடுவே வந்து வகுப்பை அவர் தடுத்ததில் அவனுக்கு உள்ளூற எரிச்சல் மூண்டிருந்தது. வெளேரென்று வெளுத்திருந்த ஆதர்சபுரம் ஆற்றுச் சலவை உடையில் மின்னல் எழுந்து நடப்பதுபோல் தோன்றினான் சுதர்சனன். எதிரே போய் நின்றபோது தலைமையாசிரியர் அவனுடைய மார்பளவு உயரத்துக்கு மட்டுமே இருந்ததால் அவர் அவனை நிமிர்ந்துதான் பார்க்க முடிந்தது. அவர் குரலைத் தணித்துக் கொண்டு அவனிடம் மறுபடி கூறினார்:

“கொஞ்சம் இப்படி வராந்தாவுக்கு வாங்கோ! குழந், தைகள் காதிலே விழறாப்லே நான் உங்களைக் கண்டிச்சா அது நன்னா இருக்காது.”

அவன் அவரைப் பின்தொடர்ந்து வராந்தாவுக்குச் சென்றான். வகுப்பிற்குள் மாணவ மாணவிகள் இன்னும் நின்று கொண்டு தான் இருந்தனர். ஆனால் வகுப்பில் நாற்ப துக்கு மேற்பட்டவர்கள் நிற்கிற அரவமே இல்லை. அசாதா ரணமான அமைதி நிலவியது.

ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு தலைமையாசிரியர் ஆரம்பித்தார்.

“இது உமக்கு என்னிக்குமே ஞாபகம் இருக்கணும் பொண்குழந்தைகள் - இருக்கிற கிளாஸ்லே சிரிச்சுப் பேசி அரட்டை அடிக்கப்பிடாது. பார்க்கறவாளுக்குத் தப்பாப் படும். நீரும் வாலிப வயசுக்காரர். கிளாஸ்லே அஞ்சாறு வயசுவந்த பொண்கள்கூட இருக்கு.”

“...”

“உம்ம வயசுக்கு இப்பிடி எல்லாம் சிரிச்சுப் பேசணும்னு ஆசையாய்த்தான் இருக்கும்...”

“எனக்கு அப்படி ஒண்ணும் ஆசை கிடையாது சார்!”

“எதிர்த்துப் பேசவேண்டாம். நான் சொல்றதைக் கேட்டுண்டாப் போதும்...” சுதர்சனனுக்கு எதை எதையோ பதில் சொல்லி விட உதடுகள் துடித்தன. தலைமையாசிரியரோ பேசிக் கொண்டே அடுத்த வகுப்பை நோக்கி நடந்து விட்டார். அவனுடைய பதிலைக் கேட்டுக் கொள்ள அவர் தயாராயில்லை.

நாலு பேர் சேர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசுவதைக் கேட்கச் சகிக்காத அவருடைய மனப்பான்மை அவனுக்கு ஒருவாறு புரிந்தது. அடுத்தவர்களுக்கு வருகிற தபால்களைப் பிரிக்கிறவர், டிரில் கிளாஸில் பெண்களோடு ஓடிப் பிடித்து விளையாட ஆசைப்படுகிறவர், எப்படிப்பட்ட போக்குள்ளவராக இருக்கமுடியும் என்பதையும் அவன் ஊகித்துக் கொண்டான்.

மறுபடி அவன் வகுப்பில் நுழைந்து நாற்காலியில் அமர்ந்தான். எதிரே பார்வையைச் செலுத்தி உட்காரத் தொடங்கியிருந்த மாணவர்களை நோக்கிப் பாடத்தைத் தொடங்கிய போது வலது கோடியில் மாணவிகள் பத்மாவும் சரோஜாவும் தங்களுக்குள் தன் பக்கம் பார்த்து விரலைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

“சைலன்ஸ்! பத்மா, சரோஜா என்ன பேசறீங்க?”

இரண்டு பெண்களும் சிறிது மிரண்டு போய் எழுத்து நின்றார்கள்.

“என்ன பேசினீங்க? நிஜத்தைச் சொல்லணும்.”

“சரோஜாதான் சார் பேசினா. நான் இல்லே சார்.”

“என்ன பேசினா? சொல்லேன்.”

“வந்து சார்...வந்து”

“வந்தாவது போயாவது? விஷயத்தைச் சொல்லு...”

“நீங்க ‘ராஜேஷ் கன்னா’ மாதிரி இருக்கீங்கன்னு சரோஜா சொல்றா சார்.”

வகுப்பு முழுதும் மெல்லிய சிரிப்பலை பரவி ஓய்ந்தது.

“கிளாஸ்லே பாடத்தைக் கவனிப்பாங்களா யார் எந்த மாதிரி இருக்காங்கன்னு ஒருத்தருக்கொருத்தர் வர்ணிச்சுக் கிட்டிருப்பாங்களா?”

சரோஜா என்ற பெண்ணின் முகம் சிவந்து விட்டது. அவள் சுதர்சனனை நேருக்கு நேர் ஏறிட்டுப் பார்க்கவே கூசினாள்.

“சரி உட்காருங்க. கிளாஸ்லே இனிமே சினிமா விஷயமெல்லாம் பேசப்பிடாது. பாடத்தைக் கவனியுங்க...”

அவர்கள் உட்கார்ந்தனர். பாடத்தைக் கவனித்தனர். ஆனால் பாடம் நடத்த முற்பட்ட சுதர்சனனுக்குத்தான் பாடத்தில் கவனம் அழுந்தவில்லை. வகுப்பிலே அழகான பெண்கள் தன்னுடைய தோற்றத்துக்குக் கொடுத்த அழகிய நற்சான்றைப் பற்றி அவனுடைய அந்தரங்க மனம் களிப் படைந்து கொண்டிருந்தது. தலைமையாசிரியர் ஏன் சின்ன சின்ன விஷயங்களில் கூடத் தன்னிடம் அதிகமாக அலட்டிக் கொள்கிறார் என்பதன் காரணம் இப்போது அவனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கினாற் போலிருந்தது.

கிராமங்களையும் சிற்றூர்களையும் பற்றி நாவலாசிரியர்களும், இலட்சியவாதிகளும், நகரவாசிகளும் அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமைகள் இப்போது மெல்ல மெல்லக் கலையத் தொடங்கின. கள்ளங்கபடமில்லாத மக்கள் கிராமங்களிலும், சிற்றூர்களிலும்தான் இருக்கிறார்கள் என நினைப்பதே தவறான அநுமானம் என்று தோன்றியது. வஞ்சகமும், கள்ளமும் கபடமும், குறுகிய நோக்கங்களும், சாதி வெறியும் கிராமங்களில் தான் அதிகமாக இருப்பது தெரிந்தது. இரயில்களும், நெருக்கடியான பஸ்களும், பர பரப்பான பொதுவாழ்வும் நகரங்களில் ஓரளவு மக்களைச் சாதி வித்தியாசமின்றி நெருங்கிப் பழகச் செய்திருந்தாலும் கிராமங்களில் நிலைமை இன்னும் அப்படியே நீடிப்பது தெரிந்தது.

சுதர்சனன் ஆதர்சபுரத்திற்கு வந்து அதிககாலம் ஆவதற்குள்ளேயே அவனுக்கு இது புரிந்திருந்தது. ஆதர்சபுரத்தில் ஒவ்வொரு சாதியாருக்கும் தங்கள் தங்கள் சாதிகளில் அழுத்தமான பற்றுதலும், வேறு சாதிகளின் மேல் அழுத்தமான வெறுப்பும் இருந்தன. ஊரில் சாதி அடிப்படையிலேயே தெருக்களும், கோயில்களும், பழக்கவழக்கங்களும், ஏற்பாடுகளும் இருந்தன. சாதி உணர்வு மறைய வேண்டுமானால் கிராம அமைப்பே மாற வேண்டும் போலிருந்தது.

மொத்தம் எட்டுத் தெருக்களையுடைய ஆதர்சபுரத்தில் நான்கு கோவில்கள் இருந்தன. ஒரு சிவன் கோவில், ஒரு பெருமாள் கோயில், ஊரருகில் ஒதுங்கியிருந்த சேரியை ஒட்டி ஒரு சர்ச், முஸ்லீம் தெருவை ஒட்டி ஒரு மசூதி என்று அவை அங்கங்கே அமைந்திருந்தன. இவை தவிர ஊரைச் சுற்றிலும் பத்து மைல் வட்டத்திற்கு அமைந்திருந்த மரத்தடிக் கோவில்கள், காவல் தேவதைகளின் ஆலயங்கள், சிறு தெய்வங்கள் இவைகளைத் தனிக்கணக்கில் சேர்க்க வேண்டியதுதான்.

முன்னாளில் ஜமீனாக இருந்த கிராமம் என்பதால் ஊரில் பல பிரச்னைகள் இருந்தன. கட்சிகள், அரசியல், சண்டை, சச்சரவுகள், எல்லாமே எங்கு எப்படி ஆரம்பித்தாலும், கடைசியாகச் சாதியில் வந்து நிற்பதும் வழக்கமாகி இருந்தது. பள்ளிக்கூடமும் இதற்கு விதிவிலக்காக இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆசிரியர்கள் நியமனம் நிர்வாகம் என்றவற்றின் அளவில் இருந்த சாதிச் சண்டை இப்போதெல்லாம் படிக்கிற பிள்ளைகள் வரை வந்திருந்தது. அப்படி வருவதை யாராலும் தவிர்க்க முடியாது போயிருந்தது.

தான் அந்தப் பள்ளிகூடத்தில் தமிழாசிரியராக வேலை கேட்டு மனுச்செய்து இண்டர்வ்யூவுக்கு அழைக்கப்பட்ட போது தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் சுதர்சனன் இன்னும் மறத்துவிடவில்லை. நிர்வாகி, தலைமையாசிரியர், பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்களில், முக்கியமான ஒருவர் ஆகிய மூவர்தான் அந்த இண்டர்வ்யூவில் அமர்ந்திருந்தனர். இண்டர்வ்யூவுக்கு முன்பே இன்னின்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்று நம்பகமான வட்டாரத்திலிருந்து சுதர்சனனுக்குத் தகவல்கள் தெரிந்திருந்ததால் அவன் அந்தக் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராயிருந்தான். முதலில் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்...

“படிக்கிற காலத்திலேயே கலவரங்கள், அரசியல் போராட்டங்கள், இயக்கங்கள் எதிலாவது தொடர்பு உண்டா?”

“இல்லை...” என்று அவன் மனமறிந்து பொய் சொல் லித்தான் ஆக வேண்டியிருந்தது.

“இது ஒரு கோ-எஜுகேஷன் பள்ளிக்கூடம். நீங்களோ திருமணமாகாதவர். ஆகவே உம்முடைய நன்னடத்தைக்கு உத்தரவாதங் கூறி இரண்டு பிரமுகர்களிடமிருந்து சர்டிபிகேட் வாங்கித்தர முடியுமா?”

“முடியும்! வாங்கித்தருகிறேன்” - என்று இண்டர்வ்யூவின் போது ஒப்புக் கொண்டு அப்புறம் உள்ளூர் எம்.எல்.ஏ. ஒருவரிடமும் பஞ்சாயத்து ஒன்றியத் தலைவர் ஒருவரிடமும் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்திருந்தான் சுதர்சனன்.

சொல்லப் போனால் அவனுக்கு சர்டிபிகேட் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த அந்த இருவரையும் விட அவனுடைய நடத்தை மிகவும் சுத்தமானதாகவே இருந்தது. ஆனாலும் தேவைக்காக அவர்களிடம் உத்தரவாதம் வாங்கிக் கொடுக்க வேண்டியதாயிற்று. இவையெல்லாம் நினைவு வரவே தனக்குப் பல விதத்தில் தொல்லை கொடுக்கும் அந்தத் தலைமையாசிரியரை எதிர்க்கத் தொடங்கி அது எங்கே உள்ளுர் அரசியலில் போய்க் கலந்து விடுமோ என்ற தயக்கமும் முன்னெச்சரிக்கையும் சுதர்சனனின் மனத்தில் இருந்தன. அப்படி ஆகிவிட்டால் பள்ளி நிர்வாகியோ, தலைமை ஆசிரியரோ அதைக் காரணம் காட்டியே தன்மேல் நடவடிக்கை எடுக்கக்கூடும் என்பதையும் அவன் புரிந்து கொண்டிருந்தான்.

ஊர்க்காரர்களும், சக ஆசிரியர்களும் சுதர்சனனுக்கு, முன்பாக அதே பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியராக இருந்த ஒர் இளைஞரின் கசப்பான அனுபவங்களைப் பற்றிக் கதை, கதையாகச் சொல்லியிருந்தனர். எந்தச் சூழ்நிலையில் அந்த முந்திய தமிழாசிரியர் ஒரே சமயத்தில் வேலையை விட்டும் ஊரை விட்டும் துரத்தப்பட்டார் என்பது உட்பட எல்லா விவரங்களையும் நண்பர்கள் கதைகதையாக விவரித்திருந்தார்கள். ஓர் இந்திய கிராமம் என்பது நகரத்தைவிட மனப்பான்மையிலும் சிறியது, பரப்பிலும் சிறியது, வசதிகளிலும் சிறியது, நாவலாசிரியர்களும் நகரங்களில் வெறுப்புக் கொண்ட தீவிர லட்சியவாதிகளும் வர்ணிப்பதுபோல அது சொர்க்க பூமியில்லை. அங்கே சின்ன விஷயங்களுக்காகப் பெரிய சண்டைகள் நடக்கும். பெரிய விஷயங்களுக்குச் சின்ன எழுச்சிகள் கூட இராது. முஸ்லீம் தெரு வழியாகத் தை பூச ஊர்வலமும், மேளமும் போகலாமா கூடாதா, என்பது ஆதர்சபுரத்தில் கடந்த கால் நூற்றாண்டுக் காலமாக இன்னும் முடிவாகாத ஒரு சர்ச்சையாகவே இருந்து வருகிறது. பெருமாள் கோவில் யானைக்கு எந்த நாமம் போடுவது என்பதும் ஐம்பது ஆண்டுகளாக முடிவு பெறாத சர்ச்சையாக இருந்து வருகிறது. கிராமத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் ஒரு குணசித்திரம், ஒவ்வொருவருக்கும் சொந்த பலங்களும் பலவீனங்களும், வீம்புகளும், வீறாப்புகளும் உண்டு. விட்டுக் கொடுக்கும் சுபாவம் குறைவாகவும் முரண்டுகள் அதிகமாகவும் உள்ள மனிதர்கள் நிறைய இருப்பது இந்திய கிராமங்களைப் பொறுத்தவரை சகஜமான நிலை. ஆதர்சபுரமும் அதற்கு விதிவிலக்காக இல்லை என்பது அங்கு வந்த சில நாட்களிலேயே சுதர்சனனுக்குப் புரிந்திருந்தது.

இவ்வளவு ஆதர்சமில்லாத தன்மைகள் நிறைந்த ஓர் ஊருக்கு ஆதர்சபுரம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்று கூட அவன் அடிக்கடி நினைப்பதுண்டு. உண்மையில் அந்த ஊரின் பழைய பெயர் ‘மலையப்ப நாய்க்கம்பட்டி’ என்பது தான். ஜமீன் குடும்பத்தில் இங்கிலாந்துக்குப் போய்ப் பாரிஸ்டருக்குப் படிக்கும் எண்ணத்துடன் சில மாதங்கள் தங்கிவிட்டு அது இயலாமல் திரும்பிய பழைய இளம் ஜமீன்தார் ஒருவர் பத்தாம்பசலிக் கட்டிடமான அரண்மனை பிடிக்காமல் ஊரின் வடக்குப் பகுதியில் மலையடிவாரத்தில் மேல் நாட்டுப் பாணியிலான புது பங்களா ஒன்றும் சில குடியிருப்புகளும் கட்டி அப்பகுதிக்கு ஆதர்சபுரம் என்று பெயரிட்டார். அதன்பின் பள்ளிக்கூடம், பி.டபிள்யூ.டி. இன்ஸ்பெக்ஷன் பங்களா, ஃபாரஸ்ட் ரேஞ்சு அலுவலகம், பாங்கு, ஸ்ப் டிரெஷரி, எல்லாம் அந்த புதுப் பகுதியிலேயே வளரத் தொடங்கின. பழைய ஊரை விடப் புதுப்பகுதி பெரிதாகி அதன் புதிய பெயரான ஆதர்சபுரமே எல்லாப் பகுதிக்கும் வியாபித்து நிலைத்து விட்டது. ஆனாலும் ஊரின் குணநலன்களும், மனப்போக்கும் மந்த நிலைகளும் பழைய மலையப்ப நாய்க்கம்பட்டி - என்ற புராதனமான பெயருக்குப் பொருத்தமாகத்தான் இன்னும் இருக்கின்றன என்று சுதர்சனன் நினைத்தான்.

முந்திய தமிழாசிரியர் ஊரை விட்டுப் போக நேர்ந்த கதையே இதற்குப் போதுமான சான்றாக இருந்தது, அந்தக் கதையை இன்னொரு முறை நினைத்துப் பார்த்தான் சுதர்சனன். கிராமம் எவ்வளவு பொல்லாதது என்பதை மறுபடியும் அழுத்தமாய் ஞாபகப்படுத்தக் கூடியதாக இருந்தது அந்தக் கதை.

முந்திய தமிழாசிரியர் பாலசுந்தரம் தன் பெயரை ‘இளவழகன்’ என்று தமிழில் மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். பள்ளிக்கூடத்துக்கு வேலைக்கு வருவதற்கு முன்பே பத்திரிகைகளில் அவ்வப்போது அவர் எழுதியிருந்த கவிதைகளை ஒன்று திரட்டி ஒரு கவிதைத் தொகுதியாக வெளியிட்டிருந்தார். அந்தக் கவிதைத் தொகுதிக்குக் ‘கன்னியின் முத்தம்’ - என்று பெயர். இளவழகன் சூட்டியிருந்த பெயர் ‘கன்னிமைக் கனவுகள்’ என்பதுதான். ஆனால் பதிப்பாளர், “கவிதைப் புத்தகம் விற்பது சிரமம். பெயராவது கொஞ்சம் ‘செக்ஸி’யாக இருந்தால்தான் பரவாயில்லாமல் விற்கும். ‘கன்னியின் முத்தம்’னு போடுங்க” - என்று வற்புறுத்திப் பெயரில் ‘முத்தம்’ கொடுத்து அச்சிட்டுவிட்டார். தமிழாசிரியர் இளவழகன் ஆதர்சபுரத்தில் வேலைக்கு வந்தபோது தான் எழுதிய இந்தக் கன்னியின் முத்தம் கவிதைத் தொகுதியின் பிரதிகள் சிலவற்றைக் கையோடு கொண்டு வந்திருந்தார். வந்த புதிதில் அவர் கவிதை எழுதுவார் என்பது அந்த ஊருக்கு ஒரு புதுமையாக இருந்தது. ஆனால் நாளடைவில் அவர் கவிதை எழுதுவதை அந்த ஊரார் ஒரு குணமாகவும் நினைத்து அங்கீகரிக்காமல், குற்றமாகவும் நினைத்து வெறுக்காமல் மறந்துபோய் விட்டு விட்டார்கள்,

இருந்தாலும் படிக்கிற மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை ‘புதுத்தமிழ் வாத்தியார் இளவழகன் கவிதை எழுதுகிறார்’ - என்பது இன்னும் ஒரு கவர்ச்சியாகவே இருந்தது. அதை ஒட்டி மற்ற ஆசிரியர்கள் மேல் இருந்ததைவிட அதிக மதிப்பும், ஓர் இனிய மயக்கமும் இளவழகன் மேல் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக அந்தப் பள்ளியின் மேல் வகுப்புக்களில் படிக்கும் வயது வந்த மாணவிகளில் சிலருக்கு அவருடைய கவிதை எழுதும் திறமையிலே ஒரு மையலே ஏற்பட்டிருத்தது.

“நீங்க எழுதின கவிதைப் புஸ்தகத்தை எங்களுக்குக் காண்பிக்கக் கூடாதா சார்?” என்று மாணவர்கள் வற்புறுத் தியதற்குப் பின் ஒரு நாள் அந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்து எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பில் காண்பித்தார் இளவழகன். அவருடைய போதாத காலமோ என்னவோ இன்னொரு வினோதமான விருப்பமும் அந்தச் சமயத்தில் அவருக்கு உண்டாயிற்று. அந்த விருப்பத்தை அப்போது பகிரங்கமாகவே வகுப்பில் அறிவித்தார் அவர்:

“இப்போது இந்த வகுப்பில் ஒரே ஒரு கவிதைத் தொகுதியை மட்டும் யாராவது ஒருவருக்கு நான் அன்பளிப்பாகக் கொடுக்க விரும்புகிறேன். உங்களில் யார் அந்த அன்பளிப்பைப் பெற முடியும் என்பதற்காக ஒரு சிறிய பரீட்சை உண்டு. நான் கேட்கிற ஒரு கேள்விக்கு எடுத்த எடுப்பில் யார் சரியான பதிலைச் சொல்கிறீர்களோ அவர்களுக்கு என் கவிதைத் தொகுதியில் ஒன்றைத் தருவேன். நான் பத்து எண்ணி முடிப்பதற்குள் யார் பதில் சொல்கிறீர்களோ அவர்களுக்குப் பரிசு” என்று அறிவித்துவிட்டுத் “தமிழில் எட்டுத் தொகை நூல்களின் பெயர்கள் என்ன?” என்பதாக ஒரு கேள்வியையும் கேட்டார்.

அவர் கேள்வியைக் கேட்டு முடித்துவிட்டுப் பத்து எண்ணுவதற்காக ஒன்று, இரண்டு, மூன்று என்று தொடங்குவதற்குள்ளேயே,

“நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்துங்கலியே அகம்புறமென்
றித்திறத்த எட்டுத்தொகை.”

என்ற பாட்டை அப்படியே அடிபிறழாமல் ஒப்பித்து முடித்து விட்டாள் ஒரு மாணவி. அந்தப் பெண்ணை ஏற இறங்கப் பார்த்தார் தமிழாசிரியர் இளவழகன். அங்கிருந்த மாணவிகளிலேயே அவள்தான் பெரியவள். வளர்ந்தவள். அழகானவளும்கூட.

“சபாஷ்! உன் பெயர் என்ன?”

“நாச்சியார் சார்.”

“உங்கப்பா பேரு?”

“பலராம் நாயுடு.’’

“போன முழுப் பரீட்சையிலே தமிழிலே உனக்கு என்ன மார்க்?”

“நூற்றுக்குத் தொண்ணூத்திரண்டு சார்!”

‘தமிழறிவுள்ள நாச்சியாருக்கு அன்புடன்’ என்று எழுதித் தன் கையொப்பத்தை இட்டு அந்தக் கவிதைத் தொகுதியை அவளுக்குக் கொடுத்தார் இளவழகன். அவள் புத்தகத்தை வந்து வாங்கும்போது அவள் கையில் கொடுத்துவிட்டுத் தாமே கைகளைத் தட்டி வகுப்பு முழு வதையுமே அவளைப் பாராட்டிக் கரகோஷம் செய்யுமாறு தூண்டி ஜாடை காட்டினார் அவர். வகுப்பும் அவருடன் சேர்ந்து கொண்டு பரிசு பெற்ற மாணவியைப் பாராட்டி உற்சாகமாகக் கரகோஷம் செய்தது.

ஒரு வாரம் கழித்து ஒருநாள் பிற்பகலில் தமிழாசிரியர் இளவழகன் பகல் இடைவேளைக்குப் பின் பள்ளிக்கு வந்ததுமே தலைமையாசிரியர் அவசரமாகக் கூப்பிடுவதாகப் ப்யூன் வந்து தெரிவித்தான். இளவழகன் தலைமையாசிரியர் அறைக்கு விரைந்தார். அங்கே தலைமையாசிரியருடன் அந்நியமான வேறொருவரும் இருந்தார். பருத்த சரீரமும் குண்டு முகமும் பெரிய மீசையுமாக இருந்த அந்த மூன்றாம் மனிதரை, “இவர்தான் மிஸ்டர் பலராம்நாயுடு. நம்ம ஸ்கூல் நிர்வாக போர்டு மெம்பர்” என்று அறிமுகப் படுத்தினார் தலைமையாசிரியர். பலராம் நாயுடுவை நோக்கி முகமலர்ந்து கைகூப்பினார் இளவழகன். பலராம் நாயுடு பதிலுக்கு முகமலரவோ கைகூப்பவோ செய்யாமல் கடுமையாக இருந்தார்.

இன்னும் தலைமை ஆசிரியர் இளவழகனை உட்காரச் சொல்லவில்லை. நிற்க வைத்தே விசாரணை தொடர்ந்தது.

“நீங்க இவர் பெண்ணுக்கு ஏதாவது புஸ்தகம் கை கயெழுத்துப் போட்டுக் குடுத்தீங்களா?”

“இவர் பொண்ணுன்னா யாரு? பேர் சொன்னாத் தான் எனக்குத் தெரியும்?”

“பி. நாச்சியார்.”

“ஆமாம்! குடுத்தேன், வகுப்பிலே மாணவ மாணவி களின் திறமைக்கு ஒரு போட்டி வைத்து என் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லிய இவர் மகளுக்கு அந்தப் பரிசைக் குடுத்தேன்...”

“என்னன்னு எழுதிக் குடுத்தீர்?”

“இப்போ ஞாபகமில்லை.”

“அன்புள்ள நாச்சியாருக்குன்னு எழுதினீரா?”

“இருக்கலாம்! அப்படி எழுதியிருந்தா அதிலே என்ன தப்பு?”

“அடி செருப்பாலே! செய்யறதையும் செஞ்சிப்புட்டு என்ன தப்புன்னாடா கேட்கிறே. ஒரு சமைஞ்ச பொண்ணுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரு என்னடா பரிசு கொடுக்கிறது? ‘கன்னியின் முத்த’ மாடா ராஸ்கல்” என்று தலைமையாசிரியரை மீறிக்கொண்டு எழுந்து நின்று கையை ஓங்கியபடி கூப்பாடு போட்டார் பலராம் நாயுடு.

இளவழகன் இதை எதிர்பார்க்கவில்லை.

“நீங்க கொஞ்சம் பண்பா மரியாதையாப் பேசினா நல்லதுங்க.”

“உனக்கு மரியாதை என்னடா கேடு? அயோக்கியப் பயலே” என்று கூப்பாடு போட்டபடியே ‘கன்னியின் முத்தத்தை’ எடுத்து இளவழகனின் முகத்தில் வீசினார் பலராம் நாயுடு.

அதன் பிறகு சண்டை முற்றி அடிதடி ஆகாமல் தலைமையாசிரியர் புண்ணியத்தில் இளவழகன் தப்பினார். ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ என்று காரணம் காட்டி அப்பாவி இளவழகன் மறுநாளே தமிழாசிரியர் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார். அன்றிரவே தமிழாசிரியர் இளவழகன் வீட்டு வாசலில் அவர் வெளியே வரும் போது பலராம் நாயுடுவின் அடி ஆட்கள் சட்டி நிறைய மலஜலத்தை நிரப்பி இளவழகனின் தலையில் உடைத்தனர். இருளில் தெருவில் இழுத்துப் போட்டு அடித்தனர். இரவோடு இரவாக விடியுமுன் அங்கிருந்து அதிகாலை நாலுமணி பஸ்ஸில் இளவழகன் வெளியேறித் தப்ப வேண்டியிருந்தது.

இதுதான் ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூலில் முந்திய தமிழாசிரியரின் கதை. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கவிதை எழுதுகிற தமிழாசிரியர் என்றாலே ஆதர்ச புரத்தில் ஒரு மாதிரிப் பார்ப்பது வழக்கமாகி இருந்தது. சுதர்சனன் கவிதை எழுதுவதை இண்டர்வ்யூவின் போது சொல்லியிருந்தால் அவனுக்கு அங்கு வேலையே கிடைத்திருக்காது. நல்லவேளையாக அதை அவன் இண்டர்வியூவில் சொல்லவில்லை. ‘சொல்லக் கூடாது’ என்றே அவனை அப்பள்ளிக்குச் சிபாரிசு செய்தவர்கள் முன்கூட்டி எச்சரித் திருந்தார்கள்.

ஆனால் சில மாதங்களுக்குப்பின் இப்போது அவன் கவிதை எழுதுகிற தமிழாசிரியன் என்பது ஜாடைமாடையாகவும், நேராகவும், தலைமையாசிரியருக்குத் தெரிந்து விட்டபின் அவனை அவர் கண்காணிப்பது அதிகமாயிருந்தது. அவன் சம்பந்தமாக நிறைய முன்னெச்சரிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களிலேயே அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை அறிய சி.ஐ.டி.க்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அவனுக்கு வருகிற தபால்கள், புக் போஸ்டுகள் தலைமையாசிரியரால் சென்ஸார் செய்யப்பட்டன. இந்த விஷயங்கள் - சுதர்சனனைக் குமுறச் செய்வதற்குப் போதுமானவையாக இருந்தன.

அத்தியாயம் - 3

வாழ்க்கை முறைப்பட வேண்டும். அநாவசியமான வெறிகள் தணிய வேண்டும் என்றுதான் அவன் ஆசிரியர் தொழிலுக்கு வந்தான். தமிழ்க் கல்லூரியில் படித்தபோது இருந்த சுதர்சனன் வேறு. இப்போதுள்ள சுதர்சனன் வேறு என்று பிரித்து நினைக்கவும், பேசவும் ஏற்றபடி அவன் அவ்வளவு தூரம் மாறியிருந்தான்.

அவன் தமிழ்க் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் இந்தி அழிப்புப் போர், பிள்ளையார் சிலை உடைப்புப் போர் எல்லாமே நடந்தன. கல்லூரியில் ‘வெட்டிக் கொண்டுவா, என்றால் கட்டிக்கொண்டு வருகிற’ சாமர்த்தியமுள்ள மணி மணியான மாணவர்கள் பத்துப் பன்னிரண்டு பேர்கள் அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள்.

தமிழைக் காப்பாற்ற வேண்டுமானால் தமிழல்லாததை எல்லாம் அழித்து விடவேண்டும் என்ற முரட்டு வெறியும், பகுத்தறிவு வளர வேண்டுமானால் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டும் என்ற முரண்டும் அவனை உடும்புப் பிடியாகப் பிடித்திருந்த காலம் அது.

நாம் ஆதரிக்கும் எண்ணத்தை வளர்க்க வேண்டும் என்பதைவிட நாம் எதிர்க்கும் எண்ணங்களுக்குரியவர்களை அழித்து விடவேண்டும் என்ற எதிர்மறைப் பார்வையே வளர்ந்திருந்தது. பின்பு புலவர் வகுப்பு இறுதி ஆண்டில் அந்தக் கல்லூரியில் அவர்களோடு சேர்ந்து படித்த ஒரு மார்க்சிஸ்டு சுதர்சனனின் இந்தப் பார்வையை மெல்ல மாற்றி உலகளாவிய தத்துவ நோக்காக உருவாக்கினார்,.உழைக்கும் கூட்டம், உழைக்காத கூட்டம், உடமைக்குப் போட்டி போடும் சோம்பேறிகள், உழைத்து வாழும் தொழிலாளிகள் என்று பார்வையை பெரியதாக்கினார் அந்த நண்பர்.

அவன் அதற்கு முன்பு சார்ந்திருந்த இயக்கம் பெரிய நிலப்பிரபுக்களும், பணக்காரர்களும், பழைய ஜஸ்டிஸ்கட்சி ஆட்களும் நிரம்பியதாக இருக்கவே புதியமனப்பான்மையின் காரணமாக அதன் மேலுள்ள பிடிப்பு மெல்ல மெல்ல விடுபட்டு வெறுப்பாக மாறியது. தலைமையாசிரியர் வாசு தேவன் மேல் இன்றும் இதற்கு முன்பும் அவனுள் ஏற்பட்டிருந்த வெறுப்பு சாதி அடிப்படையில் அல்ல. ஆதர்ச புரத்தில், நிலப்பிரபுக்கள் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள். ஏழைகள், உழைப்பவர்கள், தொழிலாளிகளும் எல்லாச் சாதிகளிலும் இருந்தார்கள்.

அந்த ஆண்டின் பள்ளி நூல் நிலையத்திற்குப் புத்தகங்கள் வாங்குவதற்குப் பட்டியல் தயாரித்தபோதே தலைமையாசிரியருக்கும் அவனுக்கும் ஒரு சிறிய தகராறு மூண்டிருந்தது. சொல்லப்போனால் தலைமைத் தமிழாசிரிய ராகிய பிச்சாண்டியா பிள்ளைதான் நூல்களின் பட்டியலைத் தயாரித்திருக்க வேண்டும். அவர் பழையகாலத் தமிழ்ப் பண்டிதர், தற்கால நூல்கள் பற்றிய விவரங்கள் அதிகம் தெரியாதவர். சிவஞான முனிவரின் இராமாயண முதற் செய்யுட் ‘சங்கோத்தர விருத்தி’க்குப் பிறகு வந்த வெளியீடுகளைப் பற்றி அவருக்குத் தெரியாது. ஆகவே அவராகவே நூல்களின் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பைச் சுதர்சனனிடம் விட்டார். நூற்றைம்பது புத்தகங்களில் சுதர்சனன் ‘வாழ்க்கை வரலாறு’ என்ற பிரிவில் காந்தி, நேரு, சுபாஷ் போஸ் போன்றவர்களோடு கார்ல்மார்க்ஸ், வீரர் வி.ஐ.லெனின், என்ற இரு புத்தகங்களைச் சேர்த்திருந்தான். தலைமையாசிரியருக்குக் கோபம் மூண்டுவிட்டது. “கண்ட புஸ்தகங்களை எல்லாம் சேர்த்துப் பையன்களைக் கெடுக்கப் பார்க்கிறீரே...”

“எதைச் சொல்றீங்க?”

தமக்குப் பிடிக்காத அந்த இரு புத்தகங்களைச் சுட்டிக் காட்டினார் தலைமையாசிரியர் வாசுதேவன்.

அவன் வாதாடிப் பார்த்தான்.

“நான் உம்மகிட்டே இதையெல்லாம் பத்திப் பாடம் படிச்சுக்க வரலே” என்று சொல்லிப் புத்தகப் பட்டியலில் தமக்குப் பிடிக்காத பெயர்களை அடித்துவிட்டார் தலைமையாசிரியர்.

சுதர்சனன் மேல் அவருடைய கண்காணிப்பும் பயமும் வளர இவை எல்லாமே காரணங்களாக அமைந்து விட்டன.

நிர்வாகத் தரப்பிலும் அவன்மேல் சந்தேகப்பட வாய்ப்பு ஏற்படுத்தித்தரும் சம்பவங்கள் சில தற்செயலாகவே நடந்து விட்டன. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் சராசரி இந்திய அறிவாளிகளுக்கு எங்கும் எதனாலும் பாதிப்பு ஏற்படாது. கதர்சனன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் கலையில் ஒரு சிறிது அளவு கூடத் தேர்ச்சி பெறவில்லை. அதை விரும்பவும் இல்லை. ஆதர்சபுரத்தில் ராமபஜனை சமாஜம், திருக்குறள் மன்றம், சைவ சமய மன்றம் எல்லாம் வகைக்கு ஒன்றாக இருந்தன. அவன் அந்த ஊரில் வேலைக்கு வந்து சேர்ந்த புதிதில் திருக்குறள் மன்றத்தின் பதினாறாவது ஆண்டு நிறைவு விழாவோ என்னவோ வந்தது. புதுத் தமிழாசிரியர் என்ற முறையில் அவனையும் சொற்பொழிவு ஆற்றுவதற்கு அழைத்திருந்தார்கள்.

ஊரில் ஒவ்வோர் அமைப்பில் ஒரு விதமான ஆதிக்கமும் ஆட்சிக் கட்டுப்பாடும் இருந்தன. ராமபஜனை சமாஜத்தில் வக்கீல்களின் ஆதிக்கம் என்றால், சைவ சமய மன்றத்தில் நிலச்சுவான்தார்களின் ஆதிக்கம். திருவள்ளுவர் மன்றமோ பக்கத்து மலைப்பகுதிகளில் உள்ள தேயிலை ஏலக்காய் எஸ்டேட் அதிபர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. திருவள்ளுவர் மன்றத்தின் நிரந்தரப் பாதுகாவலராக ஜமீன் குடும்பத்தின் இளைய வாரிசுகளில் மூத்தவரான ஜகந்நாத நாயுடு இருந்து வந்தார், பள்ளிக்கூட நிர்வாகக் குழுவின் தலைவரும் அவர்தான். ராஜாப்பட்டம், ஜபர்தஸ்துகள் எல்லாம் சட்டப்படி பறிக்கப்பட்டு விட்டாலும் ஊர் ஜனங்களில் பழைய தலைமுறை மனப்பான்மை உள்ள சிலர் இன்னும் இளையராஜா ஜகந்நாதபூபதி என்றே அவரை அழைத்து வந்தனர். அழைப்பிதழ்களிலும் அப்படியே அச்சிட்டனர். நேரில் பேசும் போதும் “இளையராஜா அப்படி நினைப்பதாயிருந்தால்” - என்பது போல் பேசினர். இளையராஜாவை நிரந்தரப் பாதுகாவலராகக் கொண்ட திருவள்ளுவர் மன்றத்தில் அந்த வருடத் தலைவராக ஃபாக்ஸ் ஹில்ஸ் டீ எஸ்டேட் அதிபர் அருள்நெறி ஆனந்த மூர்த்தி இருந்து வந்தார். ஆனந்தமூர்த்தி ரெட்டியாருக்கு அருள் நெறிப்பட்டம் அவருடைய அறுபதாண்டு விழாவின் போது சமயத் தலைவர் ஒருவரால் வழங்கப்பட்டது. அதிலிருந்து அவருடைய பெயரை அருள்நெறி ஆனந்த மூர்த்தி என்றே எல்லோரும் சொல்லவும் எழுதவும் தொடங்கி விட்டார்கள்.

அவருடைய எஸ்டேட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றின்போது அவர் வீட்டுக்கு எதிர்த்த வரிசைச் சுவரில் எழுதப்பட்ட, “இருள்நெறி ஈனமூர்த்தியே தொழி லாளிகளைப் பட்டினி போடாதே” - என்ற எழுத்துக்கள் இன்னும் அழிக்கப் படாமலிருக்கின்றன. அந்த ஆனந்த மூர்த்தியின் முன்னிலையில் இளையராஜா ஜகந்நாத பூபதி தலைமையில் பேச நேரிட்டபோது சுதர்சனன்,

‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்’ என்ற குறளுக்கு விளக்கம் தந்தான்.

“இரப்போரும் ஏற்போருமாக உள்ள சமுதாய அமைப்பு மாற வேண்டும் என்கிறார் வள்ளுவர். உலகம் சமதர்ம நெறியில் பொதுவுடமைப் பூங்காவாக மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை வள்ளுவரே புரிந்து கொண்ட வளமையை எப்படி வியப்பது?

'அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பாலவை’

என்ற குறள் மூலம் உழைக்கும் வர்க்கத்தை அழ வைத்து உண்டு கொழுக்கும் வர்க்கம் உருப்படாது என்கிறார்.

‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும்படை.’

என்ற குறள்மூலம் உழைப்போர் கண்ணீர் அன்னார் தம் இரத்தத்தை உறிஞ்சுவோரை அழித்தே தீரும் என்கிறார்” என்பதுபோல் மனம் குமுறிப் பேசிவிட்டான். பலர் முகத்தைச் சுளித்தனர். ஆதர்சபுரம் பெருமக்களில் பலர் எதிர் பாராத பேச்சு இது. இளைஞர்களும், தொழிலாளிகளும் பல காரணங்களால் திருவள்ளுவர் மன்றத்தின் பக்கம் அதிகமாக வருவதில்லை. திருவள்ளுவர் மன்றத்தின் பக்கம் அதிகமாக வருகிற வழக்கமுள்ள பலர் இப்படிப் பேச்சுக்களுக்குப் பழக்கப்படாதவர்கள். “112வது குறளிலே நாயனார் அருளிச் செய்திருக்கும் பேருண்மை என்னவென்றால்...” என்ற பாணியிலேயே திருக்குறளுக்குச் சுமுக விளக்கம் கேட்டுப் பழகிய இடத்தில் திருவள்ளுவரைப் புரட்சிக்காரராகச் சித்திரிக்க முயன்ற ஒரு புதிய இளைய தமிழாசிரியரின் குரல் பலரை மிரட்டியே விட்டது.

தலைவர் முடிவுரையில் ஜாடைமாடையாகச் சுதர்சனனின் பேச்சு மறுக்கப்பட்டது. கண்டிக்கப்பட்டது. கிண்டல் செய்யப்பட்டது.

“நீங்க டிரேட் யூனியன் லீடர் மாதிரியில்லே வள்ளுவரை அணுகறீங்க?” என்று விழா முடிந்து வரும் போது நெறி ஆனந்த மூர்த்தியே சுதர்சனனைக் கிண்டல் செய்தார்.

“நான் தப்பா ஒண்ணும் பேசிடலையே?” என்று சுதர்சனன் கேட்ட கேள்விக்கு,

“நீங்க சரியா என்ன பேசனீங்கன்னுதான் எனக்குத் தெரியலே?” - என்று முகத்தை முறித்தாற் போலவே எதிர்த்து வினாவினார் ஆனந்தமூர்த்தி. அப்போது ஜமீன் இளையராஜாவும் கூட இருந்தார். ஆனந்தமூர்த்தி கூறியதைக் கேட்டு அவரும் நகைத்தார். திருவள்ளுவரை வசதியுள்ளவர்களின் தத்துவப் பாதுகாவலராக நினைக்கும் மனப்பான்மை உள்ளவர்களே நிறைந்த அந்தக் கூட்டத்தில் தான் பேசியிருக்க வேண்டாமோ என்று எண்ணினான் சுதர்சனன். அதிலிருந்து அவன் திருவள்ளுவர் மன்றத்துப் பக்கம் போவது நின்று போயிற்று. வசதியுள்ளவர்களும், புளிச்சேப்பக்காரர்களும் எந்தப் பெயரில் மன்றம் நடத்தினாலும் அது ரெக்ரியேஷன் கிளப்பாகத்தான் இருக்கும் என்பது அன்று அவனுக்கப் புரிந்தது. ஆதர்சபுரத்தின் குறுகிய மனப்பான்மைகளுக்குச் சிறிதும் ஒத்துவராத, அவனது பரந்த மனப்பான்மையும் உலகளாவிய பார்வையும் அவனுக்கு இடையூறுகளாகப் பலரால் நினைக்கப்பட்டன. அவை அவனை விரைவிலேயே பிரச்னைக்குரிய சர்ச்சைக்குரிய மனிதனாக்கி விட்டன. அவன் தாங்கள் நினைத்தபடி இல்லை என்பதனால் பலருக்கு அவன் மேல் கடுமையான கோபதாபங்கள் ஏற்பட்டன. சிறிய ஊர்களில், பஜனை சமாஜமோ, வள்ளுவர் மன்றமோ, வாசக சாலையோ எதுவானாலும் அது வேண்டியவர் வேண்டாதவர் ஆள் சேர்க்கும் இயக்கம்தான். விருப்பு வெறுப்புக்கள், வேறு காரணங்களால் ஏற்பட்ட விரோதங்கள் நடப்புக்களை வைத்தே அங்கெல்லாம் ஆட்கள் ஒன்று சேருவார்கள் அல்லது விலகுவார்கள். ஆதர்சபுரமும் இதற்கு விதி விலக்கில்லை. கட்சி சேர்க்கும் மனப்பான்மை அங்கும் இருந்தது.

வள்ளுவர் மன்றத்தில் அருள்நெறி ஆனந்த மூர்த்தி. எல்லாமாக இருந்ததனால் அவரை ஒட்டிய அந்தஸ்திலேயே அதில் உறுப்பினர்களும் சேர்ந்திருந்தார்கள். ஊரிலுள்ள சங்கங்களிலேயே வள்ளுவர் மன்றம்தான் பணக்காரச் சங்கம். அப்படிப்பட்ட பணக்காரச் சங்கத்தில் போய் வள்ளுவரைப் புரட்சிக்காரராகச் சித்திரிக்கும் ஆவேசப் பேச்சைத் திட்டமிட்டுப் பேசியதுபோல் சுதர்சனன் பேசியிருந்ததால் விழா முடிவில் ஒரே கசமுசல். அருள்நெறி ஆனந்த மூர்த்திக்குச் சுதர்சனன் மேல் தாங்க முடியாத கோபம். அவனுடைய பேச்சு விழாவையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டதாக நினைத்தார் அவர்.

விழா முடிந்து காரில் திரும்பும்போது, இளையராஜா வேறு அந்தப் பேச்சைக் கண்டித்து, “இனிமே இப்படிப் பேசற ஆட்களை உள்ளே விட்டுட வேண்டாம்” என்று கோபமாகச் சொல்லிவிட்டார். அருள்நெறி ஆனந்த மூர்த்தி சரியான தளுக்குப் பேர்வழி. பக்தியையும், பணம் சேர்ப்பதையும் உள்ளங்கையையும், புறங்கையையும்போல் இணைத்து வளர்த்துக் கொண்டு வாழ்ந்த அவர், யாரையும் பகைத்துக் கொள்ளாமல் ஊரில் நல்ல பெயரெடுத்தவர். வேறு ஜில்லாவிலிருந்து வேலைக்கு வந்த ஒரு தமிழ் பண்டிட் வள்ளுவர் மன்றத்தின் நீண்ட கால நற்பெயருக்கே கெடுதல் வருகிற மாதிரி பேசிவிட்டதாக அவருக்குத் தோன்றியது. அடுத்த வருடம் எந்த மூஞ்சியோடு மிராசுதாரர்களிடமும் வியாபாரிகளிடமும், பணக்காரர்களிடமும் எப்படி நன்கொடைக்குப் போவது என்ற பயம் அவருக்கு இப்போதே வந்திருந்தது. தமிழாசிரியர் சுதர்சனனுக்கு எதிரான பிரச்சாரங்களை அங்கும் இங்குமாக முடிந்தவரை அவர் விரைந்து பரப்பத் தொடங்கியிருந்தார்.

இந்த அருள் நெறி ஆனந்தமூர்த்தியும், ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் வாசுதேவனும் சீட்டாட்ட நண்பர்கள். நகரமுமில்லாமல், கிராமமுமில்லாமல் இரண்டுங்கெட்டான் ஊர்களில் பொழுதுபோக்கு ஒரு பெரிய பிரச்னை. ஓரளவு வசதியுள்ளவர்கள் டென்னிஸ் விளையாட, சீட்டாட, அரட்டையடிக்க எல்லாமாகச் சேர்ந்து கிளப்புகள் என்று எப்படியாவது சில அமைப்புகள் ஏற்பட்டுவிடும். ஆதர்சபுரத்திலும் அப்படி ஒரு கிளப் இருந்தது. தலைமையாசிரியருடைய மனத்தில் தன்னை ஒரு பெரிய வில்லனாகச் சித்திரிப்பதற்கு அருள்நெறி ஆனந்தமூர்த்தி பாடுபட்டிருக்க வேண்டும் என்று சுதர்சனனால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையிலும் அதுதான் நடந்திருந்தது. ஆனந்தமூர்த்தி தலைமையாசிரியர் வாசுதேவனிடம் நன்றாகக் கோள் மூட்டியிருந்தார்.

வானொலி நிலையத்திலிருந்து தன் பெயருக்கு வந்திருந்த உறையைத் தெரிந்தே பிரித்துப் படித்து விட்டுத் தெரியாமல் பிரித்துவிட்டதாகச் சொல்லியனுப்பியிருந்த தலைமையாசிரியரின் அற்பத்தனத்தை நினைத்தபோது அந்த நினைப்பின் தொடர்பாகச் சுதர்சனனுக்கு இவ்வளவும் ஞாபகம் வந்தன.

எதிர்நீச்சலிடுவது சிரமமாகத்தான் இருக்கும் என்றாலும் அவன் அதைத் தவிர்க்க விரும்பவில்லை. எதிர்நீச்சலிடாமல் வாழத் தனக்குத் தெரியாது என்பது அவன் முடிவு.

மாலையில் பள்ளி முடிவதற்கான மணி அடித்தது. பள்ளி கலைந்ததும் அவன் நேரே தலைமையாசிரியருடைய அறைக்குச் சென்றான்.

உள்ளே யாரோ பேசிக் கொண்டிருப்பதாக வாசலிலேயே ரைட்டர் அவனைத் தடுத்தார்.

“பரவாயில்லை! உள்ளே பேசிக் கொண்டிருக்கிறவங்க வர்ர வரை நான் காத்திருக்க முடியும். எனக்கு எப்படியும் அவரைப் பார்த்தாகணும்” என்று பொறுமையாக வெளியே நின்று கொண்டான் சுதர்சனன்.

அவன் முக மாறுதலையும், ஓரளவு கோபமாக அவன் வந்திருப்பதையும் ரைட்டர் கவனித்திருந்தார். அதனால் தலைமையாசிரியருக்கும் அவனுக்கும் வார்த்தைகள் தடித்துப் பலர் முன்னிலையில் சண்டை வந்து இரசாபாசமாகி விடுமோ என்ற பயமும் தயக்கமும் ரைட்டருக்கு இருந்தன. ஒரு வேளை சுதர்சனன் அன்றைக்கு அந்த மாலை வேளைக்குள் தலைமை ஆசிரியரைச் சந்திக்க வழியின்றித் தட்டிக் கழித்து அவனை வீட்டுக்கு அனுப்பிவிட்டால் ஒரு சண்டையைத் தவிர்த்துவிடலாம் என்று அவர் எண்ணினார். காலையில் பள்ளி வரும்போது சுதர்சன னுக்கே கோபம் தணிந்து போய்விடலாம் அல்லது மறந்து போய்விடலாம், இப்படி ரைட்டர் எண்ணியதற்கு காரணம் முழுக்க முழுக்கத் தலைமையாசிரியரைப் பற்றிய அக்கறை மட்டுமில்லை. சுதர்சனன் மேலும் ரைட்டருக்கு ஓரளவு அபிமானம் இருந்தது. புதிதாக வேலைக்கு வந்திருக்கிற ஒளிவு மறைவில்லாத நேர்மையான ஓர் இளம் தமிழாசிரியர் என்று சுதர்சனனைப் பற்றி நினைத்தார் ரைட்டர். சுதர்சனன் பெயருக்கு வரும் கடிதங்கள், தபால்களைத் தலைமையாசிரியர் பிரித்துப் படித்தபின் அனுப்புவதோ, அதனால் கோபமுற்றுத் தான் அவன் தலைமையாசிரியரைப் பார்க்க வந்திருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது. இரண்டு பேருக்கும் ஏதோ தீவிரமான மனஸ்தாபம் இருக்கிறது என்றும் அந்த மனஸ்தாபம் முற்றித்தான் அவன் ஆத்திரமாக அங்கு வந்திருக்கிறான் என்பதும் மட்டுமே அவருக்குப் புரிந்திருந்தன.

“இப்ப என்ன அவசரம்? நாளைக்குத்தான் பாருங் களேன். ஹெச்.எம். காலையிலே சீக்கிரமே ஸ்கூலுக்கு வந்திடுவாரு. விடிகாலையிலே அத்தினி கூட்டமும் இருக்காது” என்றார் ரைட்டர்.

“பரவாயில்லே சார்! எவ்வளவு நேரமானாலும் நான் இன்னிக்கே இருந்து பார்த்துட்டுப் போயிடறேன்.”

“நிற்கிறீங்களே! இங்கே உட்கார வேற வழியும் இல்லே. நீங்க நிற்கிறதைப் பார்த்தா எனக்கு மனசு கேட்கலே...”

“பகல் பூரா உட்கார்ந்துதானே கிளாஸ் நடத்தறோம். இப்பக் கொஞ்ச நேரம் நிற்கத்தான் நிற்போமே! அதனாலே என்ன சார் குறைஞ்சிடப் போகுது?”

இதற்குள் ரைட்டரின் பேரைச் சொல்லி யாரோ தேடிக் கொண்டு வரவே அவர் தன்னைத் தேடி வந்தவரைக் கவனிக்கப் போய்விட்டார்.

தலைமையாசிரியர் அறைக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்தார்கள். வகுப்புக்களுக்கான மர பெஞ்சுகள், நாற்காலிகள் செய்வது விஷயமாக உள்ளூர் மரக் கடைக்காரர் ஒருவரும் அவருக்குச் சிபாரிசாக வந்த ஸ்கூல் போர்டைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதரும்தான் உள்ளே அதுவரை பேசிக் கொண்டிருந்தவர்கள் என்று அவர்கள் வெளியே வந்ததும் தெரிந்தது. அவர்கள் வெளியேறியதும் தலைமையாசிரியரே, “வெளியிலே வேற யாராவது காத்திருக்காங்களாப்பா?” என்று குரல் கொடுத்தார். தலைமையாசிரியர் அறை வாசலில் பள்ளிப் பெயர் பொறித்த பித்தளை வில்லையோடு கூடிய டவாலியுடன் நின்று கொண்டிருந்த பியூன் நாதமுனி, “புது தமிழ்ப் பண்டிட் உங்களைப் பார்க்கணும்னு நிற்கிறாரு சார்” - என்று பதிலுக்குக் குரல் கொடுத்தபடி உள்ளே சென்றான். பின்பு மறுபடியும் திரும்ப வெளியே வந்து, “வரச் சொல்றாருங்க” என்று சுதர்சனனை நோக்கிச் சொன்னான் ப்யூன் நாதமுனி.

சுதர்சனன் தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்து எதிரே இருந்த நாற்காலியில் அவர் “உட்காருங்கள்” என்று. சொல்கிற வரையோ சொல்ல வேண்டும் என்றோ காத்திராமல் தானே உட்கார்ந்துவிட்டான்.

“என்ன விஷயமா வந்தீங்களோ அதைச் சொல் லுங்கோ...”

“போஸ்ட்லே எனக்கு வர்ர லெட்டரை எல்லாம் நீங்க பிரிச்சுப் படிச்சப்புறம் அனுப்பறீங்க. அது முறையில்லே. நாகரிகமும் இல்லே.”

“வேணும்னு எந்த லெட்டரையும் நான் பிரிக்கிற தில்லே. அவசரத்திலே ஸ்கூல் லெட்டரோன்னு சிலதைப் பிரிச்சுடறது உண்டு. அவ்வளவுதான்.”

“மன்னிக்கணும்; முதல்ல நானும் அப்படித்தான் சார் நினைச்சேன். ஆனால் வர வர நீங்க வேணும்னே பிரிக்கறீங் களோங்கிற சந்தேகம் எனக்கு வருது.”

“அவ்வளவு சந்தேகம் இருந்தா ஸ்கூல் அட்ரஸுக்கு லெட்டரே போடச் சொல்லாதீங்கோ! இனிமே உங்க வீட்டு அட்ரஸுக்குப் போடச் சொல்லுங்கோ...” மிகவும் நிதானத்துடனும், ஆத்திரத்தில் உணர்ச்சி வசப்பட்டு விடாமலும், தன்னடக்கத்துடனேயே பேசிக் கொண்டிருந்த சுதர்சனன் இதைக் கேட்டுப் பொறுமை இழந்தான். ‘கடிதங்களைப் பிரித்துப் படித்து விட்டு அனுப்புகிறீர்களே, இப்படிச் செய்யலாமா?’ - என்று கேட்டால் இந்த விலாசத்துக்கு இனிமேல் கடிதங்களே எழுதச் சொல்லாதீர்கள் என்று அவர் பதில் கூறியது அவனுக்கு எரிச்சலூட்டியது.

“அப்போ நீங்க சொல்கிற மாதிரியே ஒரு சர்க்குலர் எழுதி அனுப்பிடுங்க சார்!... இனிமேலாவது தெரிஞ்சுக்கிறோம்...”

“நீங்க இத்தனை திமிராப் பேசப்படாது. யாரிட்டப் பேசறோம்கிறது உங்களுக்கு ஞாபகம் இருக்கணும் மிஸ்டர் சுதர்சனன்! யூ ஆர் டாக்கிங் வித் யுவர் ஹெட் மாஸ்டர்...”

“தெரியுது சார்! நான் ஒண்ணுந் தப்பாப் பேசிடலை. வேலை பார்க்கிற ஆசிரியர்களுக்கு லெட்டர் போடப் படாதுங்கிற மாதிரி எங்கேயும் நானோ எனக்குத் தெரிஞ்சவங்களோ இதுவரை கேள்விப்பட்டதில்லே. இப்பத்தான் முதல் முதலாகக் கேள்விப்படறேன். இவ்வளவு முக்கியமான விவரத்தைச் சர்க்குலரா அனுப்பினாத்தானே சார் எல்லோருக்கும் தெரியும்? அதான் சர்க்குலர் அனுப்பிடுங்கன்னு சொன்னேன்...”

“கிண்டலா பன்றீர்?”

“இதுலே கிண்டல் என்ன சார் இருக்கு? நீங்க வாய் வார்த்தையா ஒரு விஷயத்தைச் சொன்னீங்க. எழுத்து மூலமா அனுப்பி எல்லாரிட்டவும் கையெழுத்து வாங்கிட்டீங்கன்னா ‘ரெக்கார்டு’ ஆவும்னேன்...”

“எழுத்து மூலமாகத்தானே வேணும்? அதுக்கு வேற ஒண்ணு தயார்ப் பண்ணி உமக்கு அனுப்பறேன். நாளைக் காலையிலே உமக்கு ‘மெமோ’ ஒண்ணு வரும். ஸ்கூல்லே உம்ம நடத்தையைப்பத்தி...”

“என்னோட நடத்தைக்கென்ன சார் வந்திச்சு?”

“மெமோவைப் பார்த்தால் புரியும்...”

“அதுக்கென்ன? பார்த்துப் புரிஞ்சிக்கறேன். இப்போ நான் சொல்ல வந்த விஷயங்களை உடனே உங்கக்கிட்டச் சொல்லிட வேண்டியது என் கடமை. எனக்கு ஒரு லீஷர் பீரியடுகூடக் கிடைக்காமே எல்லாத்துக்கும் நீங்க ஸ்ப்டிடியூட் ஒர்க் போட்டு அனுப்பிடறீங்க! மாணவர்களுக்கு வகுப்பு நடத்திக்கிட்டிருக்கிறப்ப அங்கே வந்து என்னை வகுப்பிலேருந்து வெளியே கூப்பிட்டு ‘அப்படிப் பண்ணப் படாது, இப்பிடிப் பண்ணப்படாது’ன்னு அட்வைஸ் பண்றீங்க. அப்படியெல்லாம் செஞ்சீங்கன்னாப் படிக்கிற பையங்க அப்புறம் எங்களை மதிக்கமாட்டாங்க. இதை யெல்லாம் உங்ககிட்டச் சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். முக்கியமா ஸ்டாஃபுக்கு வர்ர எந்த லட்டரையும் நீங்க பிரிக்கப்படாது...”

“ஏன்? ‘லவ்’ லெட்டர்லாம் கூடத் தபால்லே வருமோ?”

“நிச்சயமா வந்தாலும் வரும் சார்! அதை நீங்க தட்டிக் கேட்க முடியாது.”

“எதை லவ் லெட்டரையா?”

“அநாவசியமான கேள்வி! ஒரு லெட்டர் அதை எழுத றவங்களுக்கும் பெறுகிறவர்களுக்குமுள்ள சம்பந்தம். அதிலே என்ன எழுதப்படணும்னு மூணாவது ஆள் நடுவில் தலையிட முடியாது.”

“ஒரு ஸ்கூல்லே முக்கியமான விஷயம் ‘காண்டக்ட்’. அதாவது நன்னடத்தை. உமக்குப் புரியலேன்னாத் தமிழ்லே இன்னும் பச்சையாச் சொல்றேன். நல்லொழுக்கம் முக்கியம். அதை எல்லாம் ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷன் தான் கவனிச்சுக்கணும்.”

சுதர்சனனுக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. சிரித் தால் அவருக்கு இன்னும் கோபம் வருமோ என்று சுதர்சனன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.

“நீங்க பேசுறது உங்களுக்கே நல்லாயிருக்கா சார்? ஸ்டாஃபுக்கு வர்ர லெட்டரைப் பிரிச்சுப் படிக்காதீங்கன்னா, உடனே ‘லவ் லெட்டர் கூட வரலாமோ’ங்கிறீங்க, கடைசியிலே ஏதோ லவ் லெட்டரே எனக்கு வந்து நீங்க அதைக் கண்டுபிடிச்சிட்ட மாதிரி ‘காண்டக்ட்’ அது. இதுன்னு பயமுறுத்தறிங்க...”

“என் கடமை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதைச் சொன்னேன்...”

“அதையேதான் நானும் திருப்பிச் சொல்ல வேண்டி யிருக்கு. என் கடமை நான் சொல்ல வேண்டியதை உங்க கிட்ட வந்து சொல்லியாச்சு...”

“இதென்ன மிரட்டலா? அல்லது எச்சரிக்கையா? ஒண்ணும் புரியலியே?”

“நீங்க எப்படி எடுத்துக்கறீங்களோ அப்பிடி வச்சுக் குங்கசார், நான் சொல்ல வேண்டியதை வந்து சொல்லிட்டேன்...”

“ஸ்கூல் நிர்வாகத்திலே பெர்மிஷன் வாங்காமே நீர் ரேடியோவில் எல்லாம் போய்ப் பேச முடியாது...”

“ரேடியோ என்கிற சாதனம் அப்படி ஒன்றும் கல்வி இலாகாவுக்கு விரோதமான விஷயமில்லே. ரேடியோவுக்குப் பேசப் போறப்ப நான் லீவு ‘அப்ளை’ பண்ணுவேன். லீவு லெட்டர்லியே எதுக்காக லிவு கேட்கிறேன்னும் எழுதுவேன். பொய்யா எதுவும் காரணம் எழுதமாட்டேன். கவலைப்படாதீங்க...”

“நான் உமக்கு லீவு சாங்ஷன் பண்ணாமல் போயிட்டா என்ன பண்ணுவீர்?”

“ரேடியோவில் கல்வி ஒலிபரப்பிலே ‘நடுத்தரப் பள்ளி மாணவர்களுக்கு’ - என்ற பிரிவிலே கல்வி சம்பந்தமாகப் பேசத்தான் அவங்க என்னைக் கூப்பிடறாங்க. அதுக்கே லீவு தரமாட்டேன்னு நீங்க எப்பிடி சார் மறுக்க முடியும்?”

“நான் மறுக்கக் கூடாதுன்னு சொல்ல நீர் யார்?”

“விதண்டாவாதம் பேசினால் அதுக்கு முடிவே இல்லே. வாதத்துக்குத்தான் முடிவு உண்டு.”

“என்னை விதாண்டாவாதக்காரன் என்கிறீரா?”

சுதர்சனன் அவருக்குப் பதில் சொல்வதை நிறுத்திக் கொண்டான். அவருடைய மனப்போக்கை அவனால் விளங்கிக் கொள்ளவும் முடிந்தது. அவர் தன்னை விரோதியாகவும். முரடனாகவும், புரட்சிக்காரனாகவும் நினைத்து வெறுக்கிறார் என்பது அவனுக்குப் புரிந்தது. ‘பழைய சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவன், கருப்புச் சட்டைக்காரன்’ என்று தன்னைப் பற்றி யாரிடமோ கேள்விப்பட்ட விவரங்களும், வள்ளுவர் மன்றத்தில் முன்பு தான் பேசிய பேச்சும் சேர்ந்து தலைமையாசிரியரை ‘ப்ரஜிடிஸ்’ செய்திருப்பதாகத் தோன்றியது. தன்னைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து அவர் என்ன புரிந்து கொண்டாரோ அதற்குப்பின் தன்னை நேரில் பார்த்துப் பழகிப் புரிந்து கொள்ள அவர் தயாராயில்லை என்றும் தெரிந்தது. தலைமையாசிரியருக்கு எதிராகச் சாதி ரீதியான எதையும் செய்ய அவன் விரும்பவில்லை. ஆனால் அவரோ அப்படித் தான் செய்வான் என்று எதிர்பார்ப்பதாகத் தோன்றியது. அவனைப் பற்றி அவர் ஒருதலைப்பட்சமாக முடிவு செய்திருந்தார். அவனுடைய இதயத்தை அவனுடைய தெளிவான கொள்கைகளை அவனுடைய வெளிப்படையான நல்லெண்ணங்களை எதையுமே தலைமையாசிரியர் லட்சியம் செய்யத் தயாராயில்லை. மென்மையான பண்புகள் உள்ள அவனை அவர் கொடிய முரடனாகக் கருதினார். அவரை அவன் மதித்தான். அவனை அவர் மதிக்கவில்லை. சுயமரியாதை என்ற வார்த்தையையே அவர் தவறாகவும் புரிந்து கொண்டிருந்தார். புலி கரடி சிங்கம்போல் அவனைக் கண்டு மிரண்ட அவர் போலியாக வெளிக்கு அவனை மிரட்டுவது போலவும் நடித்தார்.

ஒவ்வோர் அதிகாரத்திற்குப் பின்னாலும் ஒரு பெரிய அச்சம் இருக்கும். ஒவ்வோர் மிரட்டிலுக்குப் பின்னாலும் அதைச் செய்பவன் மிரண்டு போயிருப்பது புரியும். தலைமையாசிரியர் வாசுதேவன் எதனாலோ எதற்காகவோ தன்னிடம் மிரண்டு போயிருப்பதன் காரணமாகவே தன்னை மிரட்டுவது போல நடந்து கொள்கிறார் என்பதைச் சுதர்சனன் சுலபமாக உணர்ந்தான்.

அவருடைய ‘காம்ப்ளெக்ஸ்’ அவனுக்குப் புரிந்தது. ‘மிரட்டுகிறவர்கள் எல்லாம் உள்ளூற மிரண்டவர்கள். அதிகாரம் செய்கிறவர் எல்லாம் உள்ளூற அடிமைப்பட்டவர்கள். பயமுறுத்துகிறவர்கள் எல்லாம் உள்ளூறப் பயந்தவர்கள். பிறரை அடக்கியாள விரும்புகிறவர்கள் எல்லாம் உள்ளூற எதற்கோ அடங்கி ஒடுங்கிப் போனவர்கள்’ என்ற தத்துவம் வாசுதேவனுக்கு முற்றிலும் சரியாகவே இருக்கும் என்று தோன்றியது. பல அநுமானங்களையும் நிகழ்ச்சிகளையும் அளவுகோலாக வைத்துப் பார்த்தபோது வாசுதேவன் அந்த அளவுகோலில் அடங்குவார் என்பது நிதர்சனமாயிற்று. ஒருவிதமாகச் சுதர்சனன் அவரைக் கண்டுபிடித்து முடித்திருந்தான்.

அத்தியாயம் - 4

அந்த மெமோ வந்து சேர்ந்தபோது சுதர்சனன் நான்காவது படிவம் ‘டி’ பிரிவு வகுப்பில் தமிழ்ச் செய்யுள் நடத்திக் கொண்டிருந்தான். பியூன் நாதமுனி வகுப்பிற்குள் நுழைந்து இரண்டு நிமிஷங்கள் ஆனபின்பே தான் நடத்திக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு ‘மெமோ’ வைக் கையெழுத்திட்டு வாங்கினான் அவன். அதுவரை பியூன் நடுவகுப்பில் அவனுடைய மேஜையருகே நின்று காத்திருக்க வேண்டியதாகத்தான் ஆயிற்று. வாங்கிய பின்பும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்தி அவன் உடனே பிரித்துப் படித்து விடவில்லை. அலட்சியமாக மேஜைமேல் போட்டுவிட்டு மேலே தொடர்ந்து பாடத்தை நடத்தத் தொடங்கியிருந்தான். பியூன் கொண்டு வந்து கொடுத்தது எல்லா வகுப்புக்களுக்குமான சுற்றறிக்கை எதுவுமில்லை என்பது அவன் சுதர்சனனிடம் அதைக் கொடுத்த தோரணையிலிருந்தே விளங்கிவிட்டது. உறையிட்டு ஒட்டப்பட்டு மேலே தன் பெயரும் எழுதப்பட்டிருந்ததிலிருந்தே முந்திய தினம் தலைமையாசிரியர் தனக்கு அனுப்பப் போவதாக மிரட்டியிருந்த மெமோ தான் அது என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்திருந்தது.

அவன் இளமையில் சார்ந்திருந்த இயக்கங்கள் அஞ்சாமையையும், துணிவையும் அவனுடைய இயல்புகள் ஆக்கியிருந்தன. அந்த இயக்கங்களில் இருந்ததால் தான் நிரந்தர மாகப் பெற்ற லாபங்கள் என்று இன்றும் அவன் அவற்றைத் தான் கருதினான். அந்த இயக்கங்கள் கண்மூடித்தனமாகக் கற்பித்திருந்த ஆழமான விருப்பு வெறுப்புக்கள் இப்போது அவனுள் இல்லை. காரணகாரியச் சிந்தனையின் வளர்ச்சி குருட்டுத்தனமான விருப்பு வெறுப்புக்களைப் படிப்படியாக மாற்றி விட்டிருந்தது. குருட்டுத்தனமான கற்பிதங்களிலேயே திளைத்து நிற்பது அறிவு வளர்ச்சியை எவ்வளவு தூரம் தடுத்துவிடும் என்பதைக் கடந்தகால அநுபவங்களில் இருந்து அவன் புரிந்து கொண்டிருந்தான்.

அவனுடைய மார்க்சிஸ்ட் நண்பன் பயமே பாவங்களுக்கு எல்லாம் தந்தை - என்ற மகாகவி பாரதியின் வாக்கியத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். சுதர்சனனின் இதயத்திலும் அந்த வாக்கியம் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது. புலிக்குட்டி சீநிவாசராவுக்கு இருந்ததைப் போல் வேலை போய்விடுமோ என்ற பயம்கூட அவனுக்கு எப்போதுமே ஏற்பட்டதில்லை. அதனால் கூசாமல் ஒவ்வொரு விரோதத்திற்கும் காரணமாயிருந்த சிறுமையை முகத்துக்கு முகம் நேருக்கு நேர் அவன் நிமிர்ந்து பார்க்கக் தயாராயிருந்தான். ஆனால் அவனுடைய விரோதிகள் அப்படித் தயாராயில்லை. காரணம் அவர்களுக்கு ஒரு முகம் இல்லை, பல முகங்கள் இருந்தன. வகுப்பு முடிகிறவரை சுதர்சனன் தலைமையாசிரியரின் இந்த மெமோவைத் தொடக்கூட இல்லை.

வகுப்பு முடிந்து அவன் ஆசிரியர்கள் ஓய்வு அறைக்கு வந்த போது டிராயிங் மாஸ்டர் சிவராஜ் காபி வாங்கி வரப் பையனை அனுப்பிக் கொண்டிருந்தவர் சுதர்சனனுக்கும் சேர்த்து வாங்கி வரச் சொல்லி அவன் காது கேட்கவே கூறினார்.

“எனக்கு வேணாங்க...” என்று அவன் மறுத்தும் அவர் கேட்கவில்லை. சிவராஜும் சுதர்சனனைப் போலவே இளைஞர். வெளியூரிலிருந்து வேலைக்காக ஆதர்சபுரத்தை தேடி வந்தவர். சுதர்சனன் மேல் அபிமானமும் அன்பும் உள்ளவர். பள்ளிக்கு வந்தபின் காலை மாலை வேளைகளில் குறைந்த பட்சம் இரண்டு மூன்று தடவையாவது காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர். கூட இருக்கிறவரும் சேர்ந்து காபி சாப்பிட்டால்தான் அவருக்குத் திருப்தியாக இருக்கும். சினிமாவுக்கோ, காபி சாப்பிடவோ எங்கே போனாலும் கூட யாராவது வரவேண்டும் சிவராஜுக்கு. காபி வர வழைத்துச் சாப்பிட்டாலும் கூட இருக்கிற இன்னொருவருக்கும் வரவழைக்காமல் தனியே சாப்பிட அவரால் முடியாது. செலவுக்குக் கூசுகிற கை அவருடையதில்லை. சிவராஜ் ஒரு தனியான குணசித்திரமாக விளங்கினார். கஞ்சப்பிரபுக்களான பல ஆசிரியர்கள் சிவராஜுக்குச் சூட்டிய பட்டப்பெயர் அடைமொழி ‘கை ரொம்ப ஓட்டை’ என்பது ஆகும்.

அந்தக் காலை வேளையில் ஆசிரியர் ஓய்வறை ஏறக் குறையக் கூட்டமில்லாமல் இருந்தது. இரண்டாவது பீரியடு தொடங்கும் மணியடித்துப் பெரும்பாலான ஆசிரியர்கள் வகுப்புக்குப் போயிருந்தார்கள். ஓய்வறையில் டிராயிங் மாஸ்டர் சிவராஜைத் தவிர நெசவு ஆசிரியர் தனசேகரன், தமிழாசிரியர் சுதர்சனன், ஆகிய மூவரே இருந்தனர். சயின்ஸ் அளிஸ்டெண்டுகளில் இருவர் மூவர் லேபரேட்டரி ஹாலை ஒட்டி இருந்த அறையிலே இருந்து கொள்வார்கள். அவர்கள் ஸ்டாஃப் ரூமுக்குப் பெரும்பாலும் வரமாட்டார்கள். இன்னும் சில ஆசிரியர்கள் பள்ளி நூல்நிலைய ஹாலில் இருப்பதுண்டு. வீவிங் டீச்சராகிய தனசேகரன் கூட வீவிங் ஹாலில்தான் இருப்பது வழக்கம். ஆனால் காலையில் மட்டும் முதல் பீரியடு தொடங்கி இரண்டாம் பாடவேளை ஆரம்பமாகிற நேரத்துக்குள் சிறிது நேரம் தினசரிப் பேப்பர் படிப்பதற்காக ஆசிரியர்கள் ஓய்வறைக்கு அவர் வந்து போவார். தனசேகரன் காபி, டீ எதுவும் குடிக்காதவர். அதனால் சிவராஜுக்குக் காபி அருந்தும் துணையாகச் சிக்கியது சுதர்சனன்தான். காபிக்காகப் பையன் பிளாஸ்க்குடன் புறப்பட்டுச் சென்றபின்,

“காலங்கார்த்தாலே போரடிக்குது. ஒரு காபியாவது குடிச்சுப் பார்க்கலாம்னுதான் வாங்கியாரச் சொன்னேன்” என்றார் சிவராஜ்.

“போரடிக்காட்டித்தான் என்ன? நீர் காபிகுடிக்காமலா இருந்துடப்போறீரு? காபி குடிக்கலேன்னாலே உமக்குப் போரடிக்குமே?”

“கரெக்ட்! ஊர்லே இருந்தப்போ ஒரு நாளைக்கு ஏழு காபி சாப்பிடுவேன்! காபி இல்லாட்டா எனக்கு எதுவுமே ஓடாது சார்.”

சிவராஜின் காபி புராணத்தைக் காதில் வாங்கியபடி சிரித்துக் கொண்டே தலைமையாசிரியரின் ‘மெமோ’வைப் பிரித்தான் சுதர்சனன்.

பள்ளிக்கூடங்களுக்கே உரிய முறையில் அரைத்தாளில் ‘டைப்’ செய்து பழைய உபயோகப்படுத்தப்பட்ட உறை ஒன்றின் மேலே வேறு தாள் ஒட்டி அவனது பெரையும் உத்தியோகத்தையும் எழுதி விலாசமிட்டு அனுப்பப்பட்டிருந்தது அது. பள்ளி நிர்வாகத்தின் அனுமதி இன்றி அவன் பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதுவதையும், ரேடியோவில் பேசப் போவதையும் எச்சரித்து ‘எக்ஸ்பிளநேஷன்’ கேட்கப்பட்டிருந்தது, அந்த ‘மெமோ’ வில். உடனடியாக அவனுடைய விளக்கத்தை எதிர்பார்த்து ‘ஷோகாஸ் நோட்டீஸ்’ போல அதை அனுப்பியிருந்தார் தலைமையாசிரியர், ‘சரியான காரணம் காட்டாவிடில் உங்களை ஏன் உத்தியோகத்திலிருந்து சஸ்பெண்ட் செய்யக்கூடாது?’ என்பது போன்ற ஒரு கேள்வியுடன் எல்லா மெமோக்களும் முடிக்கப்படுவது போல்தான் இந்த மெமோவும் முடிந்திருந்தது. ஒன்றும் புதுமையில்லை.

சுதர்சனன் அப்படியே அதை மறுபடி உறையிலிட்டுக் கையிலிருந்த புத்தகத்துக்குள் சொருகி வைத்துக் கொண்டான். ஒரு பதற்றமும் அவனுக்கு ஏற்படவில்லை.

“என்னது லெட்டரா?” - என்றார் ஓவிய ஆசிரியர் சிவராஜ்.

சுதர்சனன் பதில் சொல்வதற்குள் காபிக்குப் போன பையன் பிளாஸ்கில் காபியுடன் திரும்பி வந்துவிடவே சிவராஜ் அதுபற்றி மேலே துளைத்தெடுக்கவில்லை. பையனே இரண்டு கண்ணாடி கிளாஸ்களை எடுத்துப் பிளாஸ்கிலிருந்த காபியை ஊற்றினான். அவர்கள் காபியை குடிப்பதற்கு முன் எதிர்பாராத விதமாகத் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியா பிள்ளை உள்ளே நுழைந்தார். சிவராஜ் இன்னொரு கிளாஸை எடுத்துக் காபியை மூன்று அரை கிளாஸ்களாகப் பங்கிட்டு ஒன்றைப் பிச்சாண்டியா பிள்ளையிடம் நீட்டினார். அவரும் ஒப்புக்குக்கூட மறுக்காமல் வாங்கிக் கொண்டார். காபியைக் குடித்து முடித்ததும், “சுதர்சனம்! வர ஞாயிற்றுக்கிழமை கும்மத்தம் பட்டியிலே ஒரு பட்டி மண்டபம், கண்ணகியின் கற்புச் சிறந்ததா, மாதவியின் கற்புச் சிறந்ததா. கோப்பெருந்தேவியின் கற்புச் சிறந்ததா? என்று தலைப்புக் கொடுத்திருக்கேன், நீர் ஏதாவது ஒரு கட்சிக்குத் தலைமை வகிக்கிறதா இருந்தா எழுதிக்கிறேன். என்ன சொல்றீர்?” என்று கேட்டார். பிச்சாண்டியா பிள்ளை அப்பகுதியில் பட்டி மண்டபப் புலி. பட்டி மண்டப ஏஜெண்ட்.

இதற்கு சுதர்சனன் உடனே பதில் சொல்லவில்லை. தமிழ்க்கல்லூரி நாட்களிலும் அதன் பின்பும் நிறைய பட்டி மன்றங்கள், கவியரங்கங்களில் கலந்து கொண்டிருந்த அவனுக்கு இப்போதெல்லாம் அவற்றின் மேல் எரிச்சலும் சலிப்பும் வந்திருந்தது.

கணித ஆசிரியர்கள், ஆங்கில ஆசிரியர்களுக்கு டியூஷன் எப்படி ஓர் உபதொழிலாகி இருந்ததோ அப்படித் தமிழாசிரியர்களுக்குப் பட்டிமன்றமும், கவியரங்கங்களும் மெல்ல மெல்ல உபதொழிலாகி விட்டிருந்தன. காப்பியங்களும், புராணங்களும் பட்டி மண்டபத்தில் விவாதிக்கவே எழுதப்பட்டாற் போன்ற பிரமையைப் பாமர மக்களிடம் பரப்ப இந்த விவாத மன்றங்கள் உதவின. நாயன கோஷ்டி, நாட்டியக் குழு, சங்கீத பார்ட்டி, நாடக யூனிட் போலப் பட்டிமண்டப யூனிட்டுகள் ஊரூராக ஏற்பட்டிருந்தன. புலவர் பிச்சாண்டியாபிள்ளை ஸெட், வித்வான் வீரராகவன் ஸெட் என்று பட்டிமண்டப ஸெட்கள் சேர்ந்திருந்தன. ஒரே விஷயங்களை வேறு வேறு இடங்களில் மாற்றி மாற்றி சத்தம் போட்டு மக்களைக் கூட்ட முடிந்தது. ‘கிளாஸிகல் ரிவைவலிஸம்’ போல் இதையும் ஒரு பெயரில் அழைத்துக் கிண்டல் செய்ய வேண்டும் போலிருந்தது சுதர்சனனுக்கு. பிச்சாண்டியா பிள்ளை விடவில்லை.

“என்ன யோசிக்கிறீர்? மூடிக் கச்சேரி இல்லை.”

“இந்தத் தடவை விட்டுடுங்க வேண்டாம். ஞாயிற் றுக்கிழமை எனக்கு வேறே வேலை இருக்கு.”

“பட்டிமன்றம் பிடிக்காட்டி விட்டுடுங்க. அங்கேயே கவியரங்கமும் இருக்கு, அதிலே கலந்துக்குங்க. கவியரங் கத்துக்குத் ‘தமிழ்ப் பணியாரங்கள்’னு தலைப்பு. அறிவு மணி தலைமையில் தோசையைப் பற்றிச் சிங்காரமும், இட்லியைப் பற்றி இன்ப வண்ணனும், இடியாப்பத்தைப் பற்றி எழில்நாதனும், பிட்டுப் பற்றிப் புலமைநாயகமும் பாடப் போறாங்க. பொங்கலைப் பற்றி நீர் பாடுமேன்.”

தலைவலி போய்த் திருகுவலி வந்த மாதிரி இருந்தது சுதர்சனனுக்கு. சமகாலப் பிரக்ஞையே இன்றி எந்தக் காதத்திலும் எந்த இடத்திலும் ஒரு நூறு ஆண்டுகள் காலம் கடந்து பின்தங்கி இறந்த காலத்தில் வாழும் இவர்களை எப்படி நிகழ்காலத்துக்கு மாற்றுவது என்று எண்ணியபோது சுதர்சனனுக்கு மலைப்பாயிருந்தது. இட்லியும் தோசையும் கிடைக்காமல் பட்டினியால் சிரமப்படும் பல்லாயிரம் மக்களுக்கிடையே அவற்றைப் பற்றிப் பொழுதுபோக்குக் கவிபாடி நிற்க வெட்கப்படாத இந்த மனிதர்களை நினைத்து அருவருப்பாகக் கூட இருந்தது அவனுக்கு. காண்டெம்பரரி மைண்ட்’ இல்லாத விஷயங்களைச் சகித்துக் கொள்ளக்கூட முடியாமல் சிரமப்பட்டான் அவன். பிச்சாண்டியா பிள்ளையோ தமிழ்ப் பணியாரங்கள், தமிழ்க் காய்கறிகள், தமிழ் நவதானியங்கள் என்று எல்லாவற்றோடும் தமிழைச் சேர்த்துக் கொண்டிருந்தார். பிழைப்பு நடத்த அது தேவையாயிருந்தது அவருக்கு. கடைசியாக, அவரிடமிருந்து தப்ப ஒரு வழி கிடைத்தது சுதர்சனனுக்கு.

‘கவியரங்கம், பட்டிமன்றம் இரண்டும் அருள்நெறி ஆனந்தமூர்த்தியின் முன்னிலையில் நடைபெறும் என்று அவரே கூறியவுடன்,

“ஆனந்தமூர்த்திக்கும், நமக்கும் ஒத்துவராது சார்! ஏற்கெனவே திருக்குறள் மன்ற ஆண்டு விழாவிலே நடந்த தகராறு உங்களுக்குத் தெரியுமில்லையா?” என்று சரியான காரணத்துடன் நழுவ முயன்றான் சுதர்சனன்.

“அப்படியானால் வேண்டாம்” என்று பிச்சாண்டியா பிள்ளையே பயந்து போய் உடன் ஒதுங்கிப் போய்விட்டார்.

“மாவட்டத் தமிழாசிரியர் கழக உறுப்பினர் பட்டியலைப் பார்த்தீங்கன்னா உங்களுக்கு நிறைய ஆள் கிடைப்பாங்களே? பட்டிமன்றத்துக்கும், கவியரங்கத்துக்கும் ஆளுக்கா பஞ்சம்” என்று சுதர்சனன் அவருக்கு அப்போது ஆறுதல் கூறினான்.

அவர் மறுபேச்சுப் பேசாமல் உடனே எழுந்திருந்து போய்விட்டார்.

“ஏன் சார் மாட்டேன்னுட்டீங்க?” என்று வினவினார் சிவராஜ். தான் ஏதோ வலிய வந்த சீதேவியைக் காலால் எட்டி உதைத்து அனுப்பிவிட்டது போன்ற தொனியில் சிவராஜ் கேட்பது சுதர்சனனுக்குப் புரிந்தது.

“நீங்க போறதானாச் சொல்லுங்க. உடனே உங்க பேரைச் சிபாரிசு பண்ணி அனுப்ப நான் தயார்.”

“நானா? நான் எப்படி சார் போக முடியும்? டிராயிங் மாஸ்டருக்கும் பட்டிமண்டபத்துக்கும் என்ன சம்பந்தம்?”

“யாருக்கும் எதுக்கும்தான் என்ன சம்பந்தம்? பட்டி மண்டப ஆசை யாரையும் விட்டு வைக்கலே. இப்ப எல்லாருமே அதுக்குப் போகணும். பேசணும், கைதட்டல் வாங்கணும்னு ஆசைப்படறாங்க. நம்ப ஜில்லா கலெக்டருக்குக் கூடக் கண்ணகியா மாதவியா, பரதனா, இலக்குவனா, ட்க்-அப் வாரில் ஒரு பக்கம் கயிறு இழுக்கணும்னு ஆசைங்கிறாங்க. கூப்பிட்டால் வந்துடுவாரு. கலெக்டராச்சேன்னு பயந்து இங்கே யாரும் அவரைக் கூப்பிடலை...”

“கலெக்டரா பட்டிமண்டபத்திலே பேச ஆசைப் படறாரு?”

“ஏன்? ஆசைப்படக் கூடாதா? பிச்சாண்டியா பிள்ளை தான் பட்டிமண்டபத்துக்கு ஸோல் ஏஜென்ஸியா இருக்கணுமா என்ன?”

“அதுக்கில்லே! ஒரு ஜில்லாவின் ஆட்சி அதிகாரி விளையாட்டுப் பிள்ளை போல் மேடையிலே ஏறி ‘என் கட்சி நண்பர்களே எதிர்க்கட்சி எதிரிகளே’ன்னு பேசிக்கிட்டிருக்கிறது நல்லா இருக்குமான்னுதான் யோசிச்சேன்...”

“நீங்க யோசிச்சு என்ன பிரயோசனம்? அதைக் கலெக்டரில்ல யோசிக்கணும்?”

“நீங்க சொல்றதும் சரிதான்! அவங்களே ஆசைப் பட்டுத் தவிக்கறப்ப வேறு யார் என்ன செய்ய முடியும்?”

“ஆசைக்கு எல்லை எங்கே நாகரிகமாக முடிகிறதோ அங்கே வெறி தொடங்குகிறது. பட்டிமண்டபங்களின் மேலிருந்த ஆசை முற்றி வெறியாக மாறியிருக்கிற காலம் இது. மனிதர்களுக்குப் பழக்கமான பரதனா இலக்குவனா, கண்ணகியா மாதவியா, தலைப்பெல்லாம், தீர்ந்துபோய், இரவா பகலா, மோர்க்குழம்பா புளிக்குழம்பா, என்பது போன்ற தலைப்புக்களெல்லாம் கூட விவாதத்துக்கு வந்து விட்டது சார்.”

“சொன்னாங்க! எங்கேயோ ஒரு ஊர்லே, ‘அமாவா சையா, பெளர்ணமியா’ன்னு கூடப் பட்டிமண்டபம் போட் டாங்களாமே?”

“ஏன் போடமாட்டாங்க? காரண காரியமுமில்லாமல் சகட்டு மேனிக்கு மந்தை மந்தையாகக் கூட்டம் கூடுகிற வரை இந்த நாட்டிலே எல்லாம் போடுவாங்க...”

“பட்டிமண்டபம்தான் கெட்டுக் குட்டிச் சுவராப் போயிடிச்சு கவிதைன்னா உங்களுக்குப் பிடிக்குமே? கவியரங்கத்துக்கு ஏன் போகமாட்டேங்கறீங்க...?”

“சாக்கடைக்குப் பக்கத்திலே ஓடற நல்ல தண்ணியும் கேட்டுப் போறாப்பிலே கவியரங்கமும் கெட்டுப் போச்சு. தலைவரையும், அவையோரையும் நூறு வரி பாடிப்பிட்டுத் தலைப்பை நாலு வரி பாடி ஏனோதானோன்னு முடிக்கிற கவியரங்கம் தானே இப்ப அதிகம்? இவ்வூரில் இந்நாளில் எனைப் பாட ‘வரும்படி’க்குச் சொன்னார்கள்னு பாடறப்போ ‘வரும்படி’ என்கிற வார்த்தையை இரண்டு தரம் அழுத்திச் சொன்னால் கூட்டத்திலே அந்தச் சிலேடைக்குக் கை தட்டுவாங்க. அப்படி ஒரு கவியரங்கத்திலே கைதட்டு வாங்கிட்டா அப்புறம் ஒவ்வொரு கவியரங்கத்திலேயும் அது மாதிரி நாலு சிலேடை போடறதுக்குத்தான் தோணும். இது மாமூலாகப் போன பின் இன்னார் பாடினாங்கன்னா சிலேடை வரும்னு ஜனங்களே எதிர்பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. ஜனங்கள் திட்டமிட்டு என்னென்ன எதிர்பார்க்கிறார்களோ அதில் அடங்கி நின்று அதை மட்டும் திருப்திப்படுத்தி விடுவதற்குப் பழகிக் கொள்கிற ஒரு கலைஞன் மெல்ல மெல்லப் பிறருடைய எதிர் பார்த்தல்களுக்கு இரையாகிவிடுகிறான். அவனையறியாமலே அபிப்பிராய அடிமைத்தனத்தில் நிரந்தரமாக அவன் சிக்கி விடுகிறான். பல கவியரங்கக் கவிஞர்கள் சீப் சிலேடை, வல்கர் வார்த்தையலங்காரம் இவைகளோடு நின்று விடுகிறார்கள். அதனால்தான் வரவர கவியரங்கம் என்றாலும் பயமாயிருக்கிறது. ‘கற்புக்குப் பிழைத்து வந்தாள் (கல்+புக்கு) கற்புக்குப் பங்கமானாள்’னு நம்ம பிச்சாண்டியாபிள்ளை அகலிகையைப் பத்தி ஒரு ஸ்டாக் சிலேடை வச்சிருக்காரில்ல. அதுமாதிரித்தான்.”

“நான்கூட நீங்க சொல்ற மாதிரிப் போன மாசம் நம்மூர்லியே இங்கே ஒரு கவியரங்கம் கேட்டேன். காதல் பித்தன்னு ஒருத்தர் பாடினாரு,

‘வாசமலர் மணத்தாள் வனிதை
வனிதை தரும் அம் மணத்தை
நேச விழியிரண்டால் பருகுதற்கு
நெஞ்சாரக் காத்திருந்தேன்
மணங்களிலே அம்மணமே அழகாகும்
எம்மணமும் அம்மணத்துக் கீடில்லை’ன்னு

திரும்பத் திரும்ப ‘அம்மணம்’ என்கிற வார்த்தையை அழுத்திப் பாடறாரு. கேட்கிறவங்க சிரிக்கிறாங்க, ‘ஒன்ஸ்மோர்’ போட்டு மறுபடி அதைக் கேட்கிறாங்க.”

“கவியரங்கம் ரெக்கார்ட் டான்ஸ் நிலைமைக்குத் தரங் கெட்டுப் போச்சு. பட்டிமண்டபம் லாவணி நிலைமைக்குக் கீழே போயிடிச்சு. இல்லாட்டி ‘அம்மணம் அம்மணம்’னு ஒருத்தன் பாட அதை ரசித்து ஒன்ஸ்மோர் கேட்பாங்களா?”

“கேட்பாங்களாவது? பொம்பைளங்களே தலையைக் குனிஞ்சாப்பில சிரிச்சிக்கிட்டு அங்கே வந்து உட்கார்ந்திருக்காங்கறேன்...”

“இப்போ ஜனங்களிலே அஞ்சு சதவிகித ஆட்கள் கூட ‘சிரியஸ்ஸா’ எதையும் கேட்கவோ, பார்க்கவோ, படிக்கவோ, யோசிக்கவோ தயாராயில்லை. இங்கே எல்லா விஷயங்களும் சமூகக் காமெடிகளாக ஆகிப் போச்சு. அது தான் காரணம்.”

சுதர்சனன் இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது தலைமையாசிரியர் ஸ்டாஃப் ருமை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பது தெரிந்தது. பியூனை அனுப்பாமல் அவரே எதற்குத் தேடி வருகிறார் என்பது புதிராயிருந்தது.

அத்தியாயம் - 5

“பியூனிட்டத்தான் சொல்லியனுப்பணும்னு நெனைச் சேன். அப்புறமா நானே இந்தப் பக்கமா சூபர்விஷனுக்கு வந்தேன். உம்மைத் தேடி அந்தச் சீர்திருத்த மன்றமோ சுய மரியாதை மன்றமோ, அதனோட காரியதரிசி பன்னீர்செல்வம் வந்திருக்கான். அவனை மாதிரி ஆளை எல்லாம் நான் இங்கே ஸ்கூல் காம்பவுண்டுக்கு உள்ளே விடற வழக்கமில்லே. கேட்கிட்ட நிறுத்தி வச்சிருக்கேன். நீர் வேணும்னாப் போய்ப் பார்த்துக்கலாம்” - என்றார் தலைமையாசிரியர். கூறிவிட்டு உடனே அங்கிருந்து போய்விட்டார் அவர்.

சுதர்சனனுக்கு அவர் சொல்லுவது என்ன, யாரிடம், யாரைப்பற்றி என்பதை எல்லாம் நிதானித்து விளங்கிக் கொள்ளவே சில விநாடிகள் பிடித்தன. மெமோ அனுப்பியதோடு தன்மேல் அவருக்கிருந்த ஆத்திரம் தீரவில்லை என்றும் தெரிந்தது. தன்னைத் தேடி வந்திருக்கிற ஓர் ஆளைப் பள்ளிக்கூட வாயிலருகேயே நிறுத்தி வைத்திருப்பதாகவும் வேண்டுமானால் தான் போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவனுக்கு அவர் கூறியது என்னவோ போலிருந்தது.

“ஏன்? அவரை உள்ளே விட்டுப்பிட்டா ஸ்கூலை கட்டித் தூக்கிக்கிட்டுப் போயிடுவாராக்கும்?” -என்று தலைமையாசிரியர் போன பின் சிவராஜ் எகத்தாளமாகக் கேள்வி கேட்டார்.

“இவர் விடாட்டி என்ன? நான் போய்க் கூட்டிக்கிட்டு வந்து இதே ஸ்டாஃப் ரூமிலே வச்சே அந்த ஆள்கிட்டப் பேசி அனுப்பறேனா இல்லியா பாருங்க” என்று சொல்லிக் கொண்டே எழுந்து பள்ளியின் முகப்பு வாயில் பக்கமாகச் சென்றான் சுதர்சனன்.

பள்ளிக்குச் சம்பந்தமில்லாத அந்நியர்களுக்கும் விரும் பத் தகாதவர்களுக்கும் உள்ளே அநுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வாயிலில் நிரந்தரமாக ஒரு போர்டு எழுதி வைக்கப் பட்டிருந்தாலும் அதைக் கடுமையாக யாரும் அமுல் நடத்துவதில்லை. கல்வி இலாகாவின் சார்பில் மாவட்டக் கல்வி அதிகாரியின் இன்ஸ்பெக்ஷன் நடக்கும் போது தான் அநாவசி யமானவர்கள் பள்ளிக்குள்ளே அனுமதியின்றி நுழைவது தடுக்கப்படுவதுண்டு. மாணவர்கள் உள்ளே நுழைந்து முதல் பாட வேளைக்கான மணி அடித்ததுமே பள்ளியின் வெளி கேட் பூட்டப்பட்டு விடும். அப்புறம் பகல் இடைவேளைக்காக மணி அடிக்கும்போதுதான் வெளிவாயில் திறக்கப்படும். மறுபடியும் இரண்டே கால் மணிக்குப் பிற்பகல் முதல் பாட வேளை மணி அடித்ததும் வெளி வாயிலை அடைத்தால் மாலை நாலரை மணிக்குக் கடைசி மணி அடித்ததும் தான் திறப்பார்கள். அந்தக் கடுமையான வரன்முறையை இன்ஸ்பெக்ஷன் நடக்காத சாதாரண நாளிலேயே தலைமையாசிரியர் தன்னைத் தேடிவந்த ஓர் ஆளின்மேல் பிரயோகித்ததை கண்டு சுதர்சனன் வியப்படைந்தான். பன்னீர்செல்வம் சுதர்சனனைப் பார்த்ததுமே சொல்லத் தொடங்கினான்:

“என்னண்ணே! உங்களைத் தேடி வந்தேன்னு சொன் னதுமே, உள்ளார விடமாட்டேன்னுட்டாரு! வார ஞாயித்திக்கிழமை அந்தத் தம்பி அன்புமணிக்குத் திருமணம் நீங்கள்தான் தலைமை வகிச்சு நடத்தித் தரணும். கலப்புக் கல்யாணம், பையன் வேளாளக்கவுண்டரு, பொண்ணு ஹரிஜன்.”

“சரி உள்ளே வா பன்னீர்செல்வம், உட்கார்ந்து பேசு வோமே... அவசரமா?”

“அதுதான் ஹெட்மாஸ்டரு உள்ளே வரப்பிடாதுங்க றாரே? எப்படி வர்ரது?”

“அவரு கெடக்கிறாரு! நீ பாட்டுலே வா! நான் பேசிக் கிறேன்.”

“வேணாங்க... என்னாலே உங்களுக்கு எதுக்குக் கெட்ட பேரு?”

“அட சர்த்தான் வான்னா வாய்யா! கெட்டபேராவது ஒண்ணாவது? பார்க்க வர்ரவன் தெருவிலியா நிற்பான்?”

“இதுலே எனக்கொண்ணும் வருத்தமில்லே அண்ணே! நீங்க எனக்காகச் சண்டை போட்டுக்காதீங்க. நான் வந்த காரியம் முடிஞ்சிதுன்னாச் சரிதான், தெருவிலே பார்க்கிறதுலே எனக்கொண்ணும் மரியாதை குறைஞ்சிடாது.”

“உனக்கு மரியாதை குறையுதோ இல்லியோ, என்னை தேடி வந்தவனைத் தெருவிலே நிறுத்தி வச்சா அது எனக்கு மரியாதைக் குறைவுதான் என்பதில் சந்தேகமில்லை. முதல்லே நீ உள்ளே வா.”

சுதர்சனன் இவ்வளவு வற்புறுத்திச் சொல்லிய பின் அவன் உள்ளே வந்தான். அவனையும் தன்னோடு ஆசிரியர் ஓய்வறைக்கே உடனழைத்துச் சென்று காபி வரவழைத்துப் பருகச் செய்து பேசிக் கொண்டிருந்து விட்டுப் பின் அனுப்பி வைத்தான் சுதர்சனன். அந்தப் பக்கமாகக் குறுக்கும் நெடுக்கும் போய்வந்து கொண்டிருந்த தலைமையாசிரியரும் அதைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் நல்லவேளையாக சுதர்சனனைப் பார்க்க வந்த ஆளை அவன் விடைகொடுத்து அனுப்புகிற வரை அவர் குறுக்கிடவில்லை. அப்புறம் வந்து கூப்பாடு போட்டார்.

“அந்த ஆளை நான் கேட்டிலேயே தடுத்து நிறுத்தினப்புறம் நீர் எப்படி உள்ளே விடலாம்?”

“வந்தவன் ஒண்ணும் சிங்கமோ புலியோ இல்லே. இங்கே யாரையும் அவன் அடிச்சித் தின்னுடலே.”

“பாலிடீஷியன்ஸ், ரெளடி எலிமெண்ட்ஸ் ஆண்டிசோஷியல் எலிமெண்ட்ஸை எல்லாம் ஸ்கூலுக்குள்ளே விடற வழக்கமில்லே...”

“உங்களுக்கு வேண்டியவர்களிலே இப்படி ஆட்கள் இருந்தால் சகித்துக் கொள்வதும் உங்களுக்கு வேண்டாதவர்களிலே யாராக இருந்தாலும் அவர்களை இப்படி ஆட்களாக நினைப்பதும்தான் இங்கே வழக்கமாக்கப்பட்டிருக்கிறது.”

“இந்த ஆள் ஜமீன்தாரோட நிலத்திலே அறுவடை நடக்க விடாமே கிஸான்களைத் தூண்டி விட்டிருக்கிறான்! இவனை உள்ளே விட்டால் ஜமீன்தாருக்கே கோபம் வரும்.”

“எங்கோ ஓரிடத்தில் நியாயம் கேட்டதற்காக ஒருவருக் குப் பிறிதோரிடத்தில் அநியாயம் இழைக்க வேண்டிய அவசியமில்லை.”

“சரி சரி! இதை உம்மிடம் பேசி முடிவு கட்ட இயலாது. எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்படி நான் நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்...” என்று காட்டமாகச் சொல்லிவிட்டுத் தலைமையாசிரியர் போய்விட்டார்.

பொதுவாகப் பழைய இயக்க நண்பர்கள், தோழர்களிடமிருந்து அவன் விலகி இருந்தான். திருமணத்துக்குத் தலைமை, புதுமனை புகுதலுக்குத் தலைமை, குழந்தைகள் காதணி விழா இதற்கெல்லாம் போவதைக் கூடக் குறைத்திருந்தான். பன்னீர் செல்வத்தைத் தலைமையாசிரியர் பள்ளி வாசலிலேயே தடுத்து நிறுத்தியதில் ஏற்பட்ட கோபம் பன்னீர்செல்வத்தின் மேல், அநுதாபமாக மாறி அவன் எந்த நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டானோ அதற்கு உடனே அவனை ஒப்புக் கொள்ளும்படி செய்திருந்தது.

பன்னீர்செல்வம் உடனே போய்ச் சீர்திருத்த மன்றத் தின் சார்பில் ‘புரட்சிகரமான கலப்புத் திருமணம் - புலவர் சுதர்சனனார் தலைமை ஏற்கிறார்’ என்று அழைப்பிதழ் அச்சிட்டு ஊரெல்லாம் அனுப்பிவிட்டான். சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் இவற்றில் எல்லாம் சுதர்சனனுக்கு இருந்த கடந்த கால ஈடுபாடு பெரியது. பின்னால் அவற்றைப் பற்றியும் ஒரு சுய விமர்சனம் ஏற் பட்டது. சீர்திருத்த நோக்கம் உண்மையாகவே இல்லாமல் விளம்பரத்துக்காகவும், புகழுக்காகவும் செய்யப்படுகிற சீர்திருத்தத் திருமணங்களே அதிகம் நடப்பதை அவன் கண்டு மனம் நொந்ததுண்டு. அதிகாலை ஐந்து மணி முதல் ஏழு மணிக்குள் நல்ல நேரம் பார்த்துப் புரோகிதர் சடங்குகள் எதுவும் குறையாமல் முறையாக எல்லாவற்றையும் இரகசியமாக நடத்திக்கொண்டு பத்துமணி முதல் ஒரு மணி வரை மறுபடி சுயமரியாதைத் திருமணம் ஒன்றையும் நடத்தும் இரட்டை வேடத்தைச் சிலரிடம் பார்த்து அவன் அதிசயித்திருந்தான். சமூகத்தை இயல்பாகத் திருந்தும்படி வாய்ப்புக்களை உண்டாக்கித் தரவேண்டுமே ஒழிய வலிந்து திருத்த முயன்றால் வேஷங்கள்தான் அதிகமாகும் என்பது இதன் பின் அவனுடைய முடிவாகியிருந்தது.

என்றாலும் மறுபடி இன்று அவன் ஒரு சீர்திருத்தத் திருமணத்திற்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டிருந் தான். பழைய இயக்கத் தோழன் பன்னீர்செல்வம் வந்து சென்ற மூன்றாவது நாளோ நாலாவது நாளோ தபாலில் அந்தத் திருமண அழைப்பிதழ் கிடைத்தது.

அழைப்பிதழில் மணமக்களை வாழ்த்தி இருபது முப்பது பேர் பேசுவார்கள் என்று போட்டிருந்தது. ஒரு புரோகித ரைத் தவிர்த்துவிட்டு இருபது முப்பது நவீன புரோகிதர்களிடம் மணமக்கள் சிக்கிக் கொள்வதுபோல் சுதர்சனனுக்குத் தோன்றியது. பழைய மூட்நம்பிக்கைகள் எங்கெங்கே ஒழிக்கப்பட வேண்டுமோ அங்கெல்லாம் புதிய மூட நம்பிக்கைகள் படிப்படியாக இடம்பெறுவதுபோல் நிலைமைகள் உருவாகிக் கொண்டிருந்தன. இளமையில் தீவிரமாக இருந்த அறிவு இயக்கங்களில் இப்போது அவன் சலிப்படைந்ததற்கு இந்தப் புதிய மூட நம்பிக்கைகளை மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருந்ததுதான் காரணம். மண மேடைக்குப் பதில் சொற்பொழிவு மேடை, புரோகிதருக்குப் பதில் பேச்சாளர்கள், அர்த்தம் புரியாத பழைய சடங்குகளுக்குப் பதில் புதிய அர்த்தம் புரியாத சடங்குகள் எல்லாம் வந்திருந்தன. - பழைய திருமணங்களை விடப் புதிய திருமணத்தில் ஆடம்பரம் அதிகமாகி இருந்தது. காதும் காதும் வைத்தாற்போல் சொற்பொழிவு, மேடை, எதுவுமின்றிப் பதிவு அலுவலகத்தில் போய்ப் பதிந்து திருமணம் செய்து கொள்வதே எல்லாவற்றையும்விட முற்போக்காக இருக்குமென்று அவனால் நினைக்க முடிந்தது.

நாலைந்து தினங்களுக்குப்பின் பன்னீர்செல்வம் பள்ளிக்குத் தேடி வந்தது, தலைமையாசிரியர் அவனை உள்ளே விட மறுத்தது. அவருடைய ஆட்சேபணையை மீறித் தான் அவனைப் பள்ளியினுள் அழைத்துச் சென்று பேசியது எல்லாவற்றையுமே சுதர்சனன் மறந்து போயிருந்தான். தலைமையாசிரியர் வாசுதேவனும் அவற்றையெல்லாம் மறந்திருக்கக்கூடும் என்றுதான் அவன் நினைத்தான்.

எதிரிகள் யாரும் எதையும் மறக்கவில்லை; தனக்குப் பாதகமான காரியங்களும், சதிவேலைகளும், இரகசியமாகவே நடைபெற்று வருகின்றன என்பது பின்புதான் மெல்ல மெல்லத் தெரியவந்தது அவனுக்கு.

‘என் மகனுக்குச் சரியாகப் புத்திஸ்வாதீனம் இல்லாததைப் பயன்படுத்தி அவனை ஏமாற்றிக் கடத்திக் கொண்டு போய் யாருக்கோ கல்யாணம் செய்து வைப்பதற்கு ஏற்பாடு நடக்கிறது. இந்தக் காரியத்துக்கு உடந்தையாக இருக்கிற அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று மணமகனின் தந்தை சீர்திருத்த மன்றச் செயலாளர் பன்னீர்செல்வத்திற்கு அனுப்பிய பதிவுத் தபாலின் நகல்களைச் சுதர்சனனுக்கும், தலைமையாசிரியர் வாசுதேவனுக்கும், திருமணத்தில் பேசுவதற்கிருந்த பிற பேச்சாளர்களுக்கும் அனுப்பியிருந்தார். அந்தப் பதிவுத் தபாலுடன் சீர்திருத்த, மன்றத்தின் சார்பிலே அடிச்சடிக்கப் பெற்றிருந்த அழைப்பிதழின் பிரதிகளை எப்படியோ தேடிப் பெற்று ஒவ்வொரு கடித நகலுடன் இணைத்து அனுப்பியிருந்தார் மணமகனின் தந்தை. அவர் பக்கத்து மலையடிவாரத்துக் கிராமம் ஒன்றில் பெரிய நிலச்சுவான்தார். ஆதர்சபுரம் ஜமீன் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர் என்று தெரியவந்தது.

தலைமை ஆசிரியர் வாசுதேவனுக்கு அனுப்பப்பட்டிருந்த பதிவுத் தபால் கடிதத்தோடும் சுதர்சனன் திருமணத்துக்குத் தலைமை வகிப்பதாக அச்சிட்டிருந்த அந்தப் பத்திரிகை, ஒன்று இணைக்கப்பட்டிருக்கவே சுதர்சனன் அதில் பெரிதும் சம்பந்தப்பட்டிருப்பது அவருக்குப் புரிந்தது. எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போலிருந்தது வாசுதேவனுக்கு.

“இந்த சுதர்சனன் பள்ளிக்கூடத்தின் பெயரையே கெடுத்து விடுவான் போலிருக்கிறதே?” என்று தபால்களைப் பிரித்து அடுக்கிக் கொண்டு வந்து காட்டிய கிளார்க்கிடம் இரைந்தார் அவர். ஆத்திரத்தை அவரால் அடக்கிக் கொள்ள முடியவில்லை.

“ஏன் சார்? என்ன ஆச்சு?” என்று கிளார்க் விசாரித்த போது அந்த விஷயத்தைப் பற்றிப் பள்ளிக் குமாஸ்தாவிடம் மேற்கொண்டு விவரிக்க விரும்பாதவர்போல் மெளனம் சாதித்தார் அவர். குமாஸ்தா மூலமாக அது முன்கூட்டியே சுதர்சனனுக்கோ வேறு ஆசிரியர்களுக்கோ தெரிந்து விடக் கூடாது என்று தமக்குத் தாமே உஷாராகி விட்டவர்போல அவர் மெளனம் சாதித்தார்.

அவரிடமிருந்து மேற்கொண்டு விஷயத்தை வரவழைப்பதற்குத் தூண்டில் போடுகிறவனைப்போல் குமாஸ்தா, “ஆமாம் சார்! புதுத் தமிழ்ப் பண்டிட் பெரிய வம்பு பிடிச்ச ஆளா இருப்பார் போலிருக்கு! எதை எடுத்தாலும் எடக்குப் பண்றார். விவகாரம் பண்றார். அவரோட ஒரே தொந்தரவு தான் சார்...” என்று ஆரம்பித்ததும் “சரி! சரி! போய் வேலையைப் பாருங்க! தபால் எல்லாம் படிச்சானதும் நோட் போட்டு உம்ம டேபிளுக்கு அனுப்பறேன்” என்று உடனே அவரை அங்கிருந்து கிளப்பினார் தலைமையாசிரியர்.

குமாஸ்தா தலைமையாசிரியரின் கபடமான தன்மையைத் தன் மனத்திற்குள் சபித்துக் கொண்டே போக மனமின்றி அங்கிருந்து தன் இருக்கைக்குப் போனான்.

உடனே மறுபடி அவனை இரைந்து கூப்பிட்டு, “இந்தா உன்னைத்தானே? அந்த சுதர்சனனுக்கு சர்வீஸ் ரிஜிஸ்தர் ஓப்பன் பண்ணியாச்சா, இல்லையா?” என்றார் தலைமையாசிரியர்.

“முன்னாலே எந்த ஸ்கூல்லேயாவது செர்விஸ்ல இருந்தா அங்கேருந்து இதுக்குள்ளே டிரான்ஸ்ஃபர் ஆகி வந்திருக்காது சார். இல்லாட்டி சர்வீஸ் ரிஜிஸ்டரே இன்னும் ஓப்பன் பண்ணலியோ என்னவோ?”

“அப்ளிகேஷன், அப்பாயிண்மெண்ட் ஆர்டரை எல்லாம் ஃபைல்லேருந்து எடுத்துப் பார்த்தால் தானே தெரியுது? ஒண்ணையுமே எடுத்துப் பார்க்காமே நீர் இப்பிடி மொட்டைத்தாதன் குட்டையிலே விழுந்தான்கிற மாதிரிப் பதில் சொன்னா எப்படி? எல்லாத்தையும் பார்த்துட்டுப் பதில் சொல்லுமேன் ஐயா!”

“சரி சார்! பார்க்கிறேன்.”

அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே ஸ்கூல் காம்பவுண்டிற்குள் ஒரு புத்தம் புது அம்பாஸிடர் கார் வந்து நின்றது. கட்டை குட்டையாக ஓர் இரட்டை நாடி சரீரமுள்ள முதியவர் காரிலிருந்து இறங்கினார். உடனே குமாஸ்தா அவசர அவசரமாகத் தலைமையாசிரியர் முன்னால் ஓடிவந்து, “கவுண்டரே வந்துட்டாருங்க” என்றான்.

“வாங்க கவுண்டர் சார்! நீங்க ஸ்கூல் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு இல்லியா?” என்று முகம் மலர வரவேற்றார். தலைமையாசிரியரின் நெற்றி சுருங்கி அதிலிருந்த நடு நாமச் செந்நிறக் கீற்று அழகாக மடிந்தது. சுருங்கி விரிந்தது.

“அதான் இப்ப வர்ர மாதிரிப் பண்ணிட்டீங்களே? ஆமாம், இங்கே ஸ்கூல்லே பாடம் சொல்லிக் குடுக்கறதுக்காகத் தமிழ் வாத்தியாரை வேலைக்குப் போடறீங்களா? அல்லது ஊர்ல இருக்கிற சூனாமானாக் கல்யாணங்களுக்கெல்லாம் தலைமை தாங்கறதுக்காகப் போட்டிருக்கீங்களா?”

“அவரு எங்களைக் கேட்காம ஒத்துக்கிட்டிருக்காரு. நீங்க ஜமீன்தாரோட ஃபிரண்டுன்னு நான் கூட அவர் கிட்டச் சொல்லியாச்சு. இப்போ உங்க ரிஜஸ்டர் லெட்டரும் கிடைச்சிது. அதை பேஸ் பண்ணித் தமிழ்ப் பண்டிட் கிட்ட எக்ஸ்பிளேனேஷன் கால்ஃபார் பண்ணலாம்னு இப்பத்தான் கிளார்க்கைக் கூப்பிட்டுச் சொல்லிக்கிட்டிருந்தேன். கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி நீங்களே வந்துட்டீங்க...”

“எக்ஸ்பிளேனேஷன் என்ன ஐயா எக்ஸ்பிளேனேஷன்? இப்பவே கூப்பிடுங்க. என் கால்லே இருக்கிறதைக் கழட்டி அவனை நாலு போடு போடறேன். அப்பவாவது அவனுக்குப் புத்தி வருதா பார்க்கலாம்...”

“...”

“யாரோ என் மகனை ஏமாத்திச் சொத்துக்கு ஆசைப் பட்டு பிளாக் மெயில் பண்ணிப் பத்திரிகை அடிச்சுக் கல்யாணம்னு போட்டான்னா அதுக்கு இவன் போய்த் தலைமை வகிக்கிறானாமில்லே, தலைமை?”

“கோபப்படாதீங்கோ சார்! உள்ள வந்து உட் காருங்கோ. நான் பார்த்துக்கறேன்.”

“போன வருசம் இந்த ஸ்கூல் லேபரேட்டரிக்குப் பத்தாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதுக்கு முந்தின வருசம் லைப்ரரிக்கு ஐயாயிரம் அழுதேன். இந்த ஸ்கூல்லேருந்தே நமக்கு எதிரி புறப்படறான்னா அதை என்ன சொல்றது? ஜமீன்தாரும் நானும் அண்ணன் தம்பி மாதிரிப் பழகறோம். நம்பகிட்டவே வாலாட்டறானுவளே? அவன் யாருன்னு ஒரு கை பார்த்துடறேன்; வரச்சொல்லுங்க.”

தலைமையாசிரியருக்குச் சுதர்சனன் மேல் கவுண்டர் கோபப்பட்டுச் சீறுவதைப் பார்த்து உள்ளூற மகிழ்ச்சியாயிருந்தாலும் அவர் தன் முன்னிலையில் அப்படிக் காட்டுத்தனமாகக் கத்திக் கூப்பாடு போடுவதை இரசிக்க முடியாமல் இருந்தது. தொலைவில் இருந்து கவுண்டர் கத்துவதைக் கேட்பவர்கள் யாராவது அவர் தன்னைத் தான் திட்டிக் கொண்டு நிற்கிறாரோ என்பதாகப் புரிந்து கொண்டு விடக் கூடாதே என்று அப்போது தலைமையாசிரியர் வாசுதேவன் உள்ளூறக் கவலைப்பட்டார். கவுண்டரின் குரல் நிமிஷத்துக்கு நிமிஷம் உயர்ந்து கொண்டே போயிற்று. அதை நிதானப்படுத்த தம்மால் இயன்றவரையில் முயன்றார் வாசுதேவன்.

“உள்ளே வாங்கோ! காபி வாங்கிண்டு வரச் சொல்றேன். காபி சாப்பிடறேளா? அல்லது கூல்டிரிங்க்ஸ் எதாவது?”

“எதுவும் வேணாம். முதல்ல அந்த ஆளைக் கூப்பிடுங்க சொல்றேன்.”

மிகவும் சிரமப்பட்டுக் கவுண்டரை உள்ளே தமது அறைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார் தலைமையாசிரியர்.

உள்ளே சென்று அமர்ந்த பின்னரும் கவுண்டர் ஓயவில்லை.

“அந்தப் பன்னீர்ச்செல்வம் ராஸ்கல் என் பையனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் ஏதோ தொடர்புன்னு கதை கட்டி விட்டு அவளை என் பையனோட தலையில் கட்டப் பார்க்கிறான். காலைக் கையை ஒடிச்சாத்தான் அந்தப் பயலுக்குப் புத்தி வரும். யார்னு நெனைச்சானுக கவுண்டரை? நான் ஒண்ணும் இளிச்சவாயன் இல்லே.”

“கவுண்டர் சார் ஏன் பதர்ரீங்க? உங்களுக்கு வர்ரதை, நாங்கள்ளாம் பார்த்திண்டிருப்போமா? நீங்க பேசாம இருங்கோ. ஆக வேண்டியதை நாங்க பார்த்துக்கறோம்.”

“இனிமே எப்ப சாமீ நீங்க பார்க்கப் போறீங்க? அவன் ‘சீர்திருத்தத் திருமணம் - புலவர் சுதர்சனனார் தலைமையில் நடைபெறும்’னு பத்திரிகையே அடிச்சுக் கொண்டாந்துட்டான். இதுவரை இவ்வளவு தூரம் எப்படிப் போக விட்டீங்க?”

கவுண்டர் ‘சாமீ’ போட்டுப் பேசியது வேறு வாசுதேவனுக்குப் பிடிக்கவில்லை. சுதர்சனனைக் கவுண்டரின் எதிரில் தம் அறைக்குக் கூப்பிட்டு விசாரிக்கத் தலைமையாசிரியர் விரும்பவில்லை. ஒருவேளை சுதர்சனன் கவுண்டர் முன்னிலையிலேயே தம்மையும் கன்னாபின்னா என்று பேசினால் நன்றாயிருக்காதே என்று பயந்தார் தலைமை யாசிரியர். கவுண்டர் இப்போது பேசிக்கொண்டிருக்கிற பாணியிலேயே சுதர்சனனிடமும் காட்டமாகப் பேசுவாரானால் அவன் அவரைப் பதிலுக்கு எடுத்தெறிந்து பேசவும் தயங்கமாட்டான் என்று தலைமையாசிரியர் எண்ணினார். தமக்கு எதிரிலே தாம் அறையில் இருக்கும்போதே அங்கு ஒரு கைகலப்போ, கூப்பாடோ, குழப்பமோ, இரசாபாசமாக நடக்கவிடக் கூடாது என்று அவர் ஜாக்கிரதையாக இருந்தார்.

ஆனால் கவுண்டரைச் சமாதானப்படுத்த அவரால் முடியவில்லை.

“நம்ப ஸ்கூல்லியே நம்பளை எதிர்த்து ஒருத்தன் புறப் பட்டிருக்கான்னா அவன் யாருன்னு ஒரு கை பார்த்துடணுங்க. முளையிலேயே கிள்ளிடறதுதான் நல்லது. யாரவன் சுதர்சனம் வரச் சொல்லுங்க.”

“வரச் சொல்றேன்! இந்தாங்கோ முதல்லே காப்பி சாப்பிடுங்கோ. அப்புறம் பேசிக்கலாம்” என்று கவுண்டர் மறுத்தும் கேட்காமல் சொல்லி அனுப்பி வரவழைத்திருந்த காபியைத் தாமே பிளாஸ்கிலிருந்து தம்ளரில் ஊற்றி ஆற்றி அவரிடம் நீட்டினார் தலைமையாசிரியர்.

கவுண்டர் காபியை வாங்கிப் பருகலானார். தலைமை யாசிரியர் அதுதான் ஏற்ற சமயமென்று படுக்கை அறையில் மனைவி போல் நிதானமான குரலில் இதமாக அவரிடம் சொல்லலானார்:

“இந்தத் தமிழ் வாத்தியார் ஒரு மாதிரி ஆள்! நான் எப்பிடிக் கவனிக்கணுமோ அப்படிக் கவனிச்சுக்கறேன். நீங்க எங்கிட்டச் சொல்லிட்டீங்கள்ளே? அது போதும்.”

“அதெப்படி? நேரே கண்டு கேட்டுப் போடணும்னு தானே காரைப் போட்டுக்கிட்டு வேலை மெனக்கெட்டு இங்கே ஓடியாந்தேன் நான்.”

“நீங்க எப்படிக் கேட்பீங்களோ அப்பிடியே கடுமையா உங்க சார்பிலே நான் கேட்டுடறேன் கவுண்டர் சார்! அவர் ஏதாவது கிளாஸ்லே இருப்பாரு. கிளாஸ் நடத்திக் கொண்டிருக்கிறபோது ஒரு வாத்தியாரை நான் இங்கே கூப்பிட் டனுப்பறது. நன்னா இருக்காது பாருங்கோ.”

கவுண்டர் சிறிது சமாதானம் அடைந்தவராகக் காணப் பட்டார். அவரை விரைந்து விடை கொடுத்து அனுப்பி விட முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர். அந்த நேரத்தில் ரைட்டர் ரூமிலிருந்து சாக்பீஸ் கட்டி எடுத்துக் கொள்வதற்காகச் சுதர்சனனே அங்கே தற்செயலாக வந்து சேர்ந்தான். ஒரு கணம் தலைமையாசிரியர் அவனைப் பார்த்துப் பதற்றமடைந்தார்.

அத்தியாயம் - 6

தலைமையாசிரியர் பதற்றமடைந்ததுபோல் எதுவும் அப்போது அங்கு நடந்து விடவில்லை. காரணம் கவுண்டர் தமிழாசிரியர் சுதர்சனனை அதற்குமுன் பார்த்ததில்லை. அவர் அப்போதிருந்த ஆத்திர மனநிலையில், “இவர்தான் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் புதுத் தமிழ் வாத்தியார் சுதர்சனன்” - என்று அவருக்குச் சுதர்சனனை அறிமுகப் படுத்துகிற துணிவும் அங்கிருந்த யாருக்கும் கிடையாது.

இந்தச் சூழ்நிலை தலைமையாசிரியர் வாசுதேவனுக்கு வசதியாகப் போயிற்று. எதுவுமே நடக்காதது போல், “வாங்க போகலாம்” - என்று கவுண்டரை அவரது கார் வரை அழைத்துச் சென்று கதவை கூடத் தன் கையாலேயே திறந்துவிட்டு உள்ளே ஏறிக்கொள்ளச் செய்தபின் திரும்பத் திரும்ப நாலைந்து கூழைக் கும்பிடுகள் போட்டுவிட்டு வந்தார் தலைமையாசிரியர். கவுண்டரின் கார் புறப்பட்டுப் போன பின்புதான் தலைமையாசிரியக்கு நிம்மதியாக மூச்சுவிட வந்தது.

அப்போது சுதர்சனனுக்கும் அங்கு நடந்து கொண்டிருந்தது எதுவும் தெரியாத காரணத்தால் ரைட்டர் மேஜை மேல் இருந்த சாக்பீஸ் பெட்டியிலிருந்து ஒரு முழு நீள சாக்பீஸை எடுத்துக் கொண்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பி வகுப்புக்குப் போய் விட்டான். அங்கு அப்போது எல்லாரும் ஏன் தன்னையே வெறித்து வெறித்துப் பார்க்கிறார்கள் என்பது மட்டும்தான் அவனுக்குப் புரியாமல் இருந்தது. ரைட்டர், வராந்தாவில் நின்ற தலைமையாசிரியர், காரில் வந்திருந்த புதிய மீசைக்காரர் எல்லாருமே சாக்பீஸ் எடுக்கப்போன தன்னைப் பார்த்து ஏன் அப்படி முறைத்தார்கள் என்பது புரியாமல் சுதர்சனன் நெடுநேரம் குழம்பினான். சுதர்சனன் நாத்திகனாயிருந்தவன். ஆனால் நேர்மையான, சுயமரியாதைக்காரனாக அவன் என்றும் இருந்திருக்கிறான். பொய் சொன்னதில்லை. குடித்ததில்லை. புகை பிடித்ததில்லை. யாரையும் ஏமாற்றியதில்லை. பேராசைப்பட்டதில்லை. தன்னளவு நேர்மையானவர்கள் மிகச் சிலரைத்தான் அவன் அந்த இயக்கத்தில் கண்டிருந்தான். அந்தச் சிலருடைய எண்ணிக்கை கூடப் பின்னால் வர வர மிகவும் குறைந்து போயிற்று.

நாத்திகனாயிருந்து கபடமும், வஞ்சகமும் அற்றவனாக இருந்த அவனுக்கு ஆத்திகர்களாயிருந்தும் வஞ்சகம், கபடம், சூது, பொய், பேராசை இவற்றால் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு விதமாக முகம் காட்டும் பலரைப் பார்த்து வருத்தமாயிருந்தது. சமூகத்தில் படித்தவர்களும், மேல் மட்டத்தாரும் தங்கள் சுயரூபம் பிறருக்குத் தெரியவிடாமல் வேஷம் போட்டுக் கொண்டு நிற்கிற பல சந்தர்ப்பங்களை அவன் கண்கூடாகக் கண்டிருக்கிறான்.

தலைமையாசிரியர் வாசுதேவன், அருள்நெறி ஆனந்த மூர்த்தி, ஆதர்சபுரம் இளைய ஜமீன்தார் எல்லாருக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட பல முகங்கள் இருப்பதை அவன் கண்டிருந்தான்.

ஆனால் அவன் அப்படி இருக்க முடியவில்லை. நினைத்ததைப் பேசினான். பேசியதை ஒளிவு மறைவோடு பேச ஒரு போதும் முயன்றதில்லை. சொல்லுக்கும் செயலுக்கும் இடை வெளிவிட அவன் அனுமதித்ததில்லை. நேர்மையான நாத்தி கனையும் அயோக்கியனான ஆத்திகனையும் ஒப்பிட்டுப் பார்த்தால்கூட அயோக்கியனான ஓர் ஆத்திகனுக்கே மதிப்பு தருகிற வகையில்தான் இன்றைய சமூக அமைப்பு இருந்தது. தலைமையாசிரியர் தன்னை விடாப்பிடியாகத் துன்புறுத்துவதற்கு அருள் நெறி ஆனந்தமூர்த்தியின் தூண்டுதலும் காரணமாக இருக்குமோ என்று சுதர்சனன் சந்தேகப்பட்டான். தலைமையாசிரியரே தன்னைப் பற்றிப் பிறரிடம் தான் இல்லாத வேளைகளில் எப்படித் துஷ்பிராசாரங்கள் செய்து வருகிறார் என்பது பற்றி அவன் பலரிடம் கேள்விப் பட்டிருந்தான். ஆனால் அவற்றை முழுமையாக நம்பவில்லை.

“அவன் திருவையாற்றிலே படிக்கறச்சேயே கருப்புச் சட்டையை மாட்டிண்டு பிள்ளையார் சிலையை உடைச்சவன் காணும்” என்று ஊரில் அவனைப் பற்றிக் கொச்சையாக ஒரு பிரச்சாரமே செய்திருந்தார் அவர். அவனைப் பற்றி இந்த விதமாக முன்கூட்டியே எதிர்மறையாக ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கி அவன் பெயரைக் கெடுத்து விடுவதற்கு முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர்.

அவர் தன்னிடம் கொடுத்திருந்த மெமோவுக்கு, மேலாக நிதானமாகவும் தொனியில் அழுத்தமாகவும் பதில் எழுதிக் கொண்டிருந்தான் சுதர்சனன்.

மறுபடி அவனைக் கூப்பிட்டனுப்பிப் பன்னீர்செல்வம் போன்ற அரசியல் பேர்வழிகளை உள்ளே வரவழைத்துப் பேசுவது பற்றிக் கண்டித்துவிட்டுக் கவுண்டர் வீட்டுத் திருமண விவகாரம் பற்றிப் பிரஸ்தாபித்தார் தலைமையாசிரியர்.

“பள்ளிக்கூடத்துக் காம்பவுண்டுக்கு வெளியே நீங்க என்னென்ன செய்றீங்கன்னு நான் பார்க்க மாட்டேன். நான் என்னென்ன செய்யிறேன்னு நீங்களும் பார்க்கக் கூடாது.”

“இந்த விஷயத்திலே அப்படி நான் விட்டுவிட முடியாது மிஸ்டர் சுதர்சனன். கவுண்டர் வந்து கன்னா பின்னான்னு இரைஞ்சிட்டுப் போறாரு. நம்ம ஸ்கூல் மேனேஜ்மெண்டிலேயும் கவுண்டருக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர் குடும்ப விஷயத்திலே அநாவசியமாத் தலையிடறது உங்களுக்கும் நல்லதில்லே.”

“ஒரு திருமணத்துக்குத் தலைமை வகிச்சா அது எப்படிக் குடும்ப விஷயமாயிடும்?”

“கவுண்டர் சொத்துக்காரர், அவருக்கு ஒரே மகன். சொத்தை அபகரிக்க யாரோ சீர்திருத்தக் கல்யாணம்னு ஸ்டண்ட் பண்றாங்க.”

“பன்னீர்செல்வம் பொய் சொல்ல மாட்டான். கவுண்டர் மகன் அந்த ஹரிஜன பொண்ணுகிட்ட ரொம்ப நாளாப் பழகிட்டிருக்கான்னும் அதை முறைப்படுத்தத்தான் இந்தத் திருமணம்னும் அவன் சொன்னது பொய்யாயிருக்காது.”

“அப்படியே அந்தப் பொண்ணுகிட்டக் கவுண்டர் மகன் பழகிண்டிருந்தாலும் அதை எப்படிக் காதும் காதும் வைத்தாப்போலக் கமுக்கமா ஸெட்டில் பண்ணணும்னு கவுண்டருக்குத் தெரியும்.”

“ஒரு பெண்ணை ஏமாத்திக் கெடுத்துப் போட்டு பணக் கொழுப்பிலே ஸெட்டில் பண்ணிடலாம்னு நெனைக்கிறது. இந்தக் காலத்துலே பலிக்காது சார்!”

“எல்லாரோட நியாயத்துக்கும் நீங்கதான் மொத்தமாக் குத்தகை எடுத்திருக்கேளா என்ன?”

“நீங்க இப்பிடிக் கேட்டீங்கன்னா எல்லாரோட தவறு களுக்கும் வக்காலத்து வாங்க நீங்க குத்தகை எடுத்திருக்கீங்களோன்னு நான் பதிலுக்குக் கேட்க வேண்டியதுதான்.”

தலைமையாசிரியர் கோபத்தோடு அவனை உற்றுப் பார்த்தார், அவன் அசையவில்லை.

ஓர் ஐந்து நிமிஷம் இருவருக்கு இடையே விரும்பத் தகாததொரு மெளனம் நீடித்தது.

“இது ஆஸ்திகாள் நிறைஞ்ச ஊர்! உங்களை மாதிரி சு.ம. ஆட்களை எல்லாம் கட்டி மேய்க்கிறது என்னாலே முடியாத காரியம்...”

“நீங்கள் கட்டி மேய்ப்பதற்கு நான் ஒன்றும் ஆடு மாடு இல்லை சார்...”

“கவுண்டர் விஷயத்திலே ஜாக்கிரதையா நடந்துக்குங்கோ. இல்லாட்டா ரொம்பக் கேவலமாப் போயிடும். நீங்க இந்த ஸ்கூல்லே வேலை பார்க்கிறதனாலே உங்களை நான் எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கேன்.”

“ரொம்ப நன்றி சார்...” என்று எழுந்து வெளியேறி னான் சுதர்சனன்.

உண்மையில் பார்க்கப் போனால் தனக்கு அறிமுகமில்லாத ஒரு நபர் சம்பந்தப்பட்ட அந்தத் திருமணத்திற்குத் தலைமை வகிப்பதில் சுதர்சனனுக்கு அப்படி ஒன்றும் பிரமாத ஈடுபாடு இல்லை. ஆனால் தலைமையாசிரியர் அதைப் பெரிதுபடுத்தியதன் காரணமாகவே அவனுக்கு அதில் இப்போது அக்கறையும், ஈடுபாடும் உண்டாகியிருந்தன.

அவர் பன்னீர்செல்வத்தை ஏதோ நாலாந்தரமான சமூக விரோதி என்பது போல் பேசிய ஏளனப் பேச்சே அவன் மேல் சுதர்சனன் அக்கறை காட்டக் காரணமாயிருந்தது.

தான் எப்போது எப்படி நடந்து கொள்ள வேண்டு மென்று பிறர் அதிகாரம் செய்யத் தொடங்கினால் அப்போது தான் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்ற உணர்வு ஒவ்வொரு சுயமரியாதை உள்ள மனிதனுக்கும் உண்டாகிறது. தான் மட்டும் சட்டங்களுக்குள் அடைக்கப்படுவதை யாரும் விரும்புவதில்லை.

சுதர்சனன் எந்த மூலையிலிருந்து வாழ்வைத் தொடங் கினானோ அதை நினைவூட்டுவதன் மூலமே அவனை மறுபடி அங்கே தள்ளி விட்டுவிட முயன்று கொண்டிருந்தார் தலைமையாசிரியர் வாசுதேவன்.

பிச்சாண்டியா பிள்ளை வயது மூத்த தலைமைத் தமிழாசிரியராக இருந்தும் தம்மிடம் காட்டுகிற பணிவையும் விநயத்தையும் முந்தாநாள் வேலைக்கு வந்த புதிய இளம் வயதுத் தமிழாசிரியனான சுதர்சனன் காட்ட வில்லையே என்பது தான் தலைமையாசிரியரின் எரிச்சலுக்கு எல்லாம் காரணமாக இருந்தது.

பிச்சாண்டியா பிள்ளை முந்திய தலைமுறைத் தமிழா சிரியர்களுக்கும், சுதர்சனன் அதிகத் தன்மான உணர்வுள்ள இந்தத் தலைமுறைத் தமிழாசிரியர்களுக்கும் பிரதிநிதித்துவம் வகித்தார்கள். வாசுதேவன் தோற்றம், மனப்பான்மை, பழக்க வழக்கங்கள் எல்லாவற்றினாலும் முந்திய தலைமுறை மனிதர். அவருக்கு இந்தத் தலைமுறையின் சுய உணர்வுகள், சுதந்திர மனப்பான்மைகள், கட்டுப்படாமை, ஆணவம் எல்லாமே புரியவில்லை. புரிந்து கொள்ளவும் அவர் தயாராயில்லை. தமக்குப் புரிந்தபடி புரிந்தவிதத்தில் மனிதர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார் அவர். அப்ப்டி இல்லாதவர்கள் யார் யாரோ அவர்களை எல்லாம் தம் எதிரிகளாகவே பாவிக்கத் தொடங்கிவிட்டார். சுதர்சனனின் மேலும் இப்படி ஒரு ‘ப்ரஜிடீஸ்’ அவர் மனத்தில் உள்ளூற ஏற்பட்டு மெல்ல மெல்ல வளரத் தொடங்கி விட்டது.

இப்படி ஒரு வெறுப்புக் கால் கொண்டதன் விளைவுகளையும் அங்கங்கே அவர் காண்பித்துக் கொண்டிருந் தார். திருக்குறள் மன்ற ஆண்டு விழா முடிந்த சூட்டோடு ஒருநாள் மாலை அருள்நெறி ஆனந்தமூர்த்தி தலைமையாசிரியர் வாசுதேவனைத் தம்முடைய பங்களாவிற்குக் கூப்பிட்டனுப்பியிருந்தார்.

வாசுதேவனுக்கும் பெரிய மனிதர்கள், பணக்காரர்கள், பிரமுகர்களைப் போய்ச் சந்திப்பதிலும் அவர்களை முகஸ்துதி செய்வதிலும் ஆசை அதிகம், ஆனந்தமூர்த்தி கூப்பிட்டனுப்பிய தினத்தன்றும் வாசுதேவன் அவருடைய பங்களாவுக்குப் போயிருந்தார்.

“என்ன ஐயங்கார் சுவாமிகளே! அந்தப் புதுப் பையன் -தமிழ்ப் பண்டிட்தானே அவன்; இப்பிடி எல்லாம் தாறுமாறா மேடையிலே பேசறானே? ஏற்கெனவே இது அக்ரிகல்சுரல் சென்டர். நிலத்திலே எஸ்டேட்டுகளிலே வேலை செய்யற ஆட்களுக்கும் மிராசுதார்களுக்கும், எஸ்டேட்டு ஓனர்களுக்கும் ஏகப்பட்ட தகராறு இருக்கு. இவன் வேற வந்து புதுசு புதுசா எதை எதையோ கிளப்பிடுவான் போல இருக்கே? இப்படி ஆளுக்கெல்லாம் ஸ்கூல்லே அப்பாயிண்ட் மெண்ட் கொடுத்தால் ஊரே கெட்டுப் போகுமே?”

“நானாகவா அப்பாயிண்ட் பண்ணிட முடியும்? நான் வெறும் எக்ஸ்-அபீஷியோ மட்டும் தானே? எல்லாரும் சேர்ந்து சரீன்னு சொன்னா நானும் சரீன்னுட்டுப் போறேன்...”

“பூனையை மடியிலே கட்டிகிட்டுச் சகுனம் பார்த்தாப்பிலே இப்பிடி ஆளை எல்லாம் உள்ளே விட்டுட்டா ஊர் உருப்பட்டாப்லதான்.”

“வந்திருக்கிறவன் சரியான சுயமரியாதைக் கட்சிக்காரன். திருவையாற்றிலே படிக்கறப்போ கருப்புச் சட்டை போட்டுண்டுதான் கிளாசுக்கே வருவானாம். பிள்ளையார் சிலை உடைப்பு, இந்தி அழிப்பு எல்லாத்திலியும் கலந்துண்டிருக்கான். அவன் வர்ரதும் போறதும் பேசறதும் கொள்றதும் ஒண்ணும் எனக்குக் கட்டோட பிடிக்கலே... அடக்க ஒடுக்கமே கிடையாது, விறைச்சது விறைச்சாப்லே வந்து நின்னு பேசறான். விநயமே கிடையாது. பணிவும் இல்லே, ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷனுக்கு மரியாதை, கிடையாது...”

“இவ்வளவு சொல்றீரே. அந்த ஆளை ஏன் இன்னும் வச்சுக்கிட்டிருக்கீரு? டிஸ்மிஸ் பண்ணி அனுப்பறதுதானே?”

“அப்படி எல்லாம் உடனே பண்ணிட முடியுமா? அதுக் குன்னு ரூல்ஸ் எல்லாம் இருக்கே?”

“நான் வேணும்னா ஜமீன்தாரிட்ட சொல்றேன். நம்பிக்கையில்லாதவன், புரட்சிக்காரன்லாம் நம்மூருக்கு வேண்டாம். ஊர் கெட்டுப் போகும்., படிக்கிற பசங்க உருப்படாமப் போயிடுவாங்க. ஜமீன்தாருக்கும் இதெல்லாம் பிடிக்காது. ஏற்கெனவே அவன் அன்னிக்கித் திருக்குறள் மன்றத்திலே பேசினப்பவே ஜமீன்தாருக்குப் பிடிக்கலே...”

“நானும் அவனுக்கு ஒரு மெமோ கொடுத்திருக்கேன். இன்னும் என்னவாவது செய்ய முடியுமான்னும் யோசிச்சுப் பார்த்துண்டிருக்கேன்...”

“என்ன சுவாமிகளே! எத்தனையோ தெய்வ பக்தியுள்ள நல்ல மனுஷாள்ளாம் இருக்கறப்ப போயும் போயும் ஒரு சூனாமானாதானா உமக்குக் கிடைச்சான்?”

“நான் என்ன பண்றது? ‘அப்பாயிண்ட்மெண்ட்’ கமிட்டி யாருக்கு ஆர்டர் கொடுக்கிறதோ அவனை உள்ளே வேலைக்குச் சேர்த்துக்கறது என் கடமை. அவ்வளவு தான்...”

“பிச்சாண்டியா பிள்ளை மாதிரி நல்ல விதமா யாராவது கிடைச்சால் போட்டிருக்கலாமே?”

“அதெல்லாம் இந்தக் காலத்திலே அப்படி ஆள் கிடைக்கிறதே கஷ்டம். ஹெட்மாஸ்டருக்குத் தலைவலியா வந்து சேர்ர தமிழ்ப் பண்டிட்ஸ்தான் இப்போ அதிகம்...”

இதற்கப்புறம் வேறு ஊர் விவகாரங்களைப் பேசிக் கொண்டிருந்து விட்டுத் தலைமையாசிரியர் வாசுதேவன் ஆனந்தமூர்த்தியிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

திரும்பி வருகிற வழியில் சுதர்சனன் குடியிருக்க வாடகை வீடு விட்டிருந்த கன்னையாப் பத்தர் எதிர்ப்படவே அவரிடமும் சுதர்சனனைப் பற்றித் தன் மனத்துக்குத் திருப்தி ஏற்படுகிற வரை கோள் சொன்னார் வாசுதேவன்.

“எனக்கு இதெல்லாம் ஒண்ணுமே தெரியாது ஹெட் மாஸ்டர் வாள்! ஸ்கூல்லே வேலைக்கு வந்திருக்கிற மனுஷாள்னு சொன்னதுமே வாடகை மாசம் தவறாமே ஒழுங்காக் கிடைக்கும்னு வீட்டுச் சாவியை எடுத்துக்குடுத்து இருக்கச் சொல்லிட்டேன்.”

“என்னமோ ஜாக்கிரதையாய் பார்த்துக்கணும்! ஆள் ஒரு மாதிரி. ரொம்பத் திமிர் பிடிச்சவன், ஸ்கூல்லேயே இந்த ஆளை வச்சு வேலை வாங்கறதுக்கு நான் படாத பாடு பட வேண்டியிருக்கு. கடவுள் நம்பிக்கை இல்லே. நல்லது கெட்டது மேலே நம்பிக்கை இல்லே. பெரியவங்க மேலே மரியாதை கிடையாது.”

“இதெல்லாம் முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா நான் என் விட்டிலே இந்த ஆளை வாடகைக்கு வச்சிருக்க மாட்டேன் சாமி!”

“ஏதோ தெரியாத்தனமா வச்சிட்டீங்க. உடனே என்ன பண்ண முடியும்? முள்ளுமேலே விழுந்த வேஷ்டியை மெல்ல மெல்லத்தானே எடுக்கணும்?”

தலைமையாசிரியர் சுதர்சனனை எதிர்த்து ஒரு ‘காம்பெய்ன்’ தொடங்கி நடத்திக் கொண்டிருந்தார். இரகசியமாக அது சகலமுனைகளிலும் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் சுதர்சனனின் தரப்பில் இப்படி எதுவும் நடக்க வில்லை. தலைமையாசிரியரை எதிர்த்து அவருடைய சாதி, குலம், கோத்திரத்தைச் சொல்லித் திட்டிய சிலரிடம் கூடச் சுதர்சனன் அந்தப் பேச்சை ஊக்கப்படுத்திப் பதில் சொல்லவில்லை. “உலகத்திலே பிறந்திருக்கிற எல்லாருக்கும், ஏதாச்சும் ஒரு சாதி குலம் கோத்திரம் இருக்கும். அது அவங்க தப்பு இல்லே, அவங்க முன்னோர்கள் தப்பு. மனுஷன் நல்லவனா கெட்டவனா, யோக்கியவனா - அயோக்கியனான்னு பாருங்க. ஒழுக்கமுள்ளவனா இல்லையான்னு பாருங்க. சாதியைச் சொல்லி யாரையும் திட்டாதீங்க. நானே ஒரு காலத்திலே அப்படியெல்லாம் திட்டியிருக்கேன். இப்போ அது தப்புன்னு தெரியுது. நீங்களும் அந்தத் தப்பைச் செய்துடாதீங்க” என்று சுதர்சனன் தன்னிடம் தலைமையாசிரியரைப் பற்றிப் பேசியவர்களிடம் கண்டித்து அனுப்பியிருந்தான். ஒரு நாத்திகன் ஆத்திகனை விட நேரானவனாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான் சுதர்சனன். ஆனால் தலைமையாசிரியரோ அதற்கு நேர்மாறாக இயங்கி அவனைப் பற்றியே துஷ்பிரசாரம் செய்து கொண்டிருந்தார். முதலில் இது சுதர்சனனுக்குத் தெரியாது என்றாலும் நாளடைவில் கணித ஆசிரியர் புலிக்குட்டி சீநிவாசராவ் மூலம் சில விஷயங்கள் அவனுக்குத் தெரியத் தொடங்கின.

ஒருநாள் ஸ்டாஃப் ரூமில் புலிக்குட்டி சீநிவாசராவுக்கும் சுதர்சனனுக்கும் சேர்ந்தாற் போல் ஓய்வு நேரம் வந்தபோது அவர்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்க நேர்ந்தது. அப்போது புலிக்குட்டி மெதுவாக ஆரம்பித்தார்.

“நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும் பண்டிட் சார்! ஹெச்.எம். உமக்குக் குழி பறிக்க ஆரம்பிச்சாச்சு...”

“நான் ஒண்ணும் தப்பா நடந்துக்கலையே, ஸ்கூலுக்கு லேட்டா வர்ரது கிடையாது. பாடங்களில் எதையும் குறை வைக்கலே....”

“என்னமோ நீர் வந்த நாளிலே இருந்து உம்மைக் கண்டால் அவருக்கு ஆகலே.”

“நமக்குக் காரணம் புரியாமலும் தெரியாமலும் நம்ம மேலே ஒருத்தருக்கு ஏற்படற வெறுப்புக்கு நாம் என்ன செய்ய முடியும் சார்?”

“ஆனாலும் உம்மை ஹெச். எம். ஒண்ணும் பண்ணிட முடியாது. உமக்கு உம்ம ‘கம்யூனிட்டி பேக்கிங்’ இருக்கிற வரை யாரும் எதுவும் அசைக்க முடியாது....”

“அப்படி ஒண்ணு இருக்குங்கறதே எனக்குத் தெரியாது சார்! நான் ஒழுங்கா நடந்துக்கலேன்னாத்தான் அதெல்லாம் எனக்குத் தேவை. நான் ஒழுங்கா இருக்கறப்போ ‘கம்யூனிட்டி பேக்கிங்’ - என்கிற லேபிள் எனக்கு எதுக்கு?”

“நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சமயா சமயங்களிலே அது எங்களுக்குக் கிடைக்கத்தான் செய்யும்.”

“இன்றைய சமூக அமைப்பில் ஜாதிகளினால், வருகிற நன்மை தீமைகளை லாப - நஷ்டங்களை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் ஒவ்வொரு மனிதனும் அவற்றை அடைந்து தான் தீர வேண்டும் போலிருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவரை இனி வருகிற சமூக அமைப்பில் ஏழை - பணக்காரன், உழைக்கிறவன் - உழைக்காதவன் என்று இந்த விதமாகத்தான் ஜாதிகள் கணக்கிடப்படும். இனி ஜாதிகளுக்குப் பதில் வர்க்கங்கள் இருக்கும்...”

“பார்த்தீங்களா? பார்த்தீங்களா? ஹெச்.எம். உம்மைப் பார்த்துப் பயப்படறத்துக்கே நீர் அடிக்கடி இப்படி எல்லாம் பேசறது தான் காரணம். ஒரு தீவிர கம்யூனிஸ்ட் மாதிரிப் பேசறீரு.”

“நியாயம் பேசினால் உடனே அதுக்கு ஏதாவது பேர் சூட்டிப்பிடறீங்க. எதையும் பேசாமல் ஊமையாகவா இருக்க முடியும்?”

“சமயா சமயங்களிலே அப்படி இருந்தால்தான் இந்தக் காலத்திலே பிழைக்கலாம் போலிருக்கு...”

“என்னாலே அப்படிப் பிழைக்க முடியாது சார்! அப்படித்தான் பிழைக்கணும்னு நிர்ப்பந்தம் வந்தால் நான் வேலையை விட்டுவிடுவேன்.”

தலைமையாசிரியரின் தொடர்ந்த உபத்திரவங்களைக் கண்டு இதை மீண்டும் நினைவு கூர்ந்தான் சுதர்சனன். அதனால் அவன் முரண்டுகளும் அதிகமாயின. சிரமங்களும் அதிகமாயின. கவுண்டர் மகனுக்குக் கலப்புத் திருமண ஏற்பாடு செய்திருந்த தினத்தன்று மகனை வீட்டில் ஓர் அறையில் அடைத்துப் பூட்டிவிட்டார் கவுண்டர். திருமண நேரம் நெருங்கவே பன்னீர்செல்வமும், சுதர்சனமும் மணமகனைத் தேடிக் கவுண்டர் வீட்டுக்குச் சென்றார்கள். கவுண்டர் வக்கில், போலீஸ் இன்ஸ்பெக்டர் எல்லாரையும் கலந்து பேசி ஏற்கெனவே திட்டமிட்டு வைத்திருந்தபடி தம் விட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்த பன்னிர்செல்வத்தையும், சுதர்சனனையும் ‘டிரஸ் பாஸ்’ என்ற குற்றத்தைச் சாட்டிக் கைது செய்யும்படி பண்ணி விட்டார். சுதர்சனனோ பன்னீர்செல்வமோ இதை எதிர்பார்க்கவில்லை. பணமும் செல்வாக்கும் எதை எதை எல்லாம் சாதிக்க முடியும், எப்படி எப்படி எல்லாம் தங்கள் எதிரிகளை அலைக்கழிக்க முடியும் என்பது அன்று சுதர்சனனுக்குப் புரிந்தது. மாலைக்குள் இயக்கப் பெரிய மனிதர்கள் சிலர் வந்து ஜாமீனில் சுதர்சனனையும் பன்னீர்செல்வத்தையும் விடுவித்து விட்டார்கள் என்றாலும் நடத்தவிருந்த கலப்புத் திருமணத்தை நடத்துவதற்கு முடியாமல் அது நின்று போய் விட்டது.

அத்தியாயம் - 7

கிராமங்களில் இன்னும் நிலச்சுவான்களுக்கும், பணக் காரர்களுக்குமே செல்வாக்கு இருப்பதைச் சுதர்சனன் நிதர் சனமாகப் புரிந்து கொண்டான். அவனையும், பன்னீர்செல்வத்தையும் சிலமணி நேரம் போலிஸ் லாக்-அப்பில் தள்ளுகிற அளவு அந்தச் செல்வாக்கு அன்று பயன்பட்டு விட்டது. அந்த வட்டாரத்தில் செல்வாக்கும் வசதியும் பெற்றிருந்த சிலர் பன்னீர்செல்வத்தின் இயக்கத்திற்கு ஆதரவாகவும் இருந்தனர். அவர்கள் முன்வந்து ஜாமீன் கொடுத்துத் தலையிட்டுக் காரியங்களைப் பார்த்திருக்க வில்லையானால் சுதர்சனனும் பன்னீர்செல்வமும் விடுதலையாகி வெளியே வந்திருப்பதே சிரமமாகப் போயிருக்கும்.

திங்கள்கிழமை பள்ளிக்கூடம் திறந்ததுமே தலைமையாசிரியர் அவனுக்கு மற்றொரு மெமோ கொடுத்தனுப்பினார். அதன் வாககங்கள் முன்னை விட மிகவும் சூடாகவும் தீவிரமாகவும் இருந்தன.

தலைமையாசிரியரின் முந்திய மெமோக்களுக்கு அவன் கொடுத்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததாலும், பள்ளியின் நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் சில வெளி விவகாரங்களில் அவன் தலையிட்டிருப்பதைத் தலைமை யாசிரியர் கவனத்துக்குக் கொண்டு வந்ததின் பேரில் நிர்வாகக் கமிட்டி அன்று மாலையே கூடி அவனை நேரில் விசாரிக்க விரும்புவதாகவும் அன்று மாலை ஆறுமணிக்கு இளைய ஜமீன்தார் பங்களாவில் அவன் தலைமையாசிரியரோடு ஆஜராக வேண்டும் என்றும் மெமோவில் குறித்திருந்தது. சுதர்சனனுக்கு முதலில் கோபம் வந்தது. அப்புறம் சக ஆசிரியர்கள் சிலரை விசாரித்த போது பள்ளி நிர்வாகக் கமிட்டி அவ்வாறு கூடி நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுப்பது என்பது அந்தப் பள்ளியைப் பொறுத்தவரை நீண்டநாள் வழக்கம்தான் என்று எல்லாரும் தெரிவித்தார்கள். அவர்கள் அப்படித் தெரிவிக்கிறவரை அந்த விசாரணைக்குத் தான் போவதில்லை என்று எண்ணியிருந்த சுதர்சனன் இப்போது போவது என்று முடிவு செய்து கொண்டான்.

“ஜமீன்தார் வீட்டிலே எக்ஸிகியூட்டிவ் போர்டு கூடி விசாரிக்கிற நிலைமைக்குப் போயாச்சுன்னா இனிமே வேலை தேறாதுன்னு அர்த்தம்” - என்று புலிக்குட்டி சீநிவாசராவோ யாரோ சொன்னபோது,

“நான் அதைப்பத்தி ரொம்பக் கவலைப்படலெ! சுய மரியாதைக்கு இழுக்கு வர்ர இடத்திலே எப்படியாவது ஒட்டிக்கிட்டு வேலை பார்க்கணும்னு எனக்கு ஒண்ணும் மொடை இல்லை” - என்று முகத்திலடித்தாற் போல் பதில் சொல்லி விட்டான் சுதர்சனன்.

இந்த விவகாரம் இப்படி இருக்கும் போது அன்று பகலில் மாவட்டத் தமிழாசிரியர் கழகத் தலைவரும், செயலாளரும், பள்ளிக்கூடத்துக்குத் தேடி வந்திருந்தார்கள். வருடாந்தர மகாநாட்டை நடத்துவதற்கு யோசனை கேட்டும் நிதி வசூல் தேடியும் அவர்கள் புறப்பட்டு வந்திருந்தார்கள். சுதர்சனன் தன்னால் முடிந்ததைக் கொடுத்தான். பிச்சாண்டியா பிள்ளையும் ஏதோ பின்னால் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். “வருஷாந்தர மாநாட்டிலே மறந்துடாமல் பட்டிமண்டபம் ஒண்ணு போடணும்னு குறிச்சுக்குங்க” என்று அரிய யோசனை ஒன்றையும் இலவசமாக வழங்கினார் பிச்சாண்டியா பிள்ளை.

“பருப்பில்லாமல் கலியாணமா? பட்டிமண்டபம் நிச்சயம் உண்டுங்க. ஆனா என்ன தலைப்பிலே போடற துன்னுதான் யோசிச்சிக்கிட்டிருக்கோம்.”

“தமிழாசிரியன் முன்னேற உட்பகை அதிகமா, வெளிப்பகை அதிகமான்னு போடுங்களேன்” என்றார் பிச்சாண்டியாபிள்ளை!

“இந்த மாதிரித் தலைப்பைவிட நமக்கு வேறே அவமானமே வேண்டியதில்லே” - என்று சுதர்சனனும் மறைக் காமல் தன் கருத்தைச் சொல்லி வைத்தான்.

“நீங்க சும்மா போடுங்க! சுதர்சனத்துக்குப் பட்டி மண்டபம்னாலே, பிடிக்காது. அதுதான் அப்படிச் சொல்றாரு” என்றார் பிச்சாண்டியா பிள்ளை.

“நீங்க சொல்றபடியே எல்லாம் செய்யலாம் ஐயா! உங்களாலே ஒரு காரியம் ஆகணும். ரெண்டு நாள் இம்மாநாட்டுக்கு நாலு வேளைச் சிற்றுண்டி, நாலு வேளைச் சாப்பாடு ஆகுது. இது தவிரப் பந்தல், போஸ்டர், அழைப்பிதழ் அச்சிடப் பிரஸ் செலவுகள் எல்லாம் வேற இருக்கு. நிறைய டொனேஷன்ஸ் எதிர்பார்க்கறோம். நீங்ககூட வந்தீங்கன்னா அருள்நெறி ஐயா, இளைய ஜமீன்தார் எல்லாரையும் ஒரு ரவுண்டு பார்க்கலாம்னு நினைக்கிறோம்” - என்றார்கள் வந்தவர்கள், பிள்ளைதான் அதற்குச் சரியான ஆள் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சுதர்சனனை அவர்கள் கூப்பிடவில்லை.

உடனே பிச்சாண்டியா பிள்ளையும் அதற்கு ஏற்பாடு செய்து தருவதாக ஒப்புக் கொண்டார். வசதியுள்ளவர்களைப் பார்த்துக் கும்பிடுவதிலும், தன்னைகட்டிக் கொள்வதிலும், அவர்களிடம் பணம் வசூல் செய்வதிலும் தமிழாசிரியர்களுக்கு இருக்கும் அக்கறையைச் சுதர்சனன் கவனித்தான். இன்னும் சங்ககாலத்துப் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளாகவே அவர்கள் இருப்பதையும் சுதர்சனன் கவனித்தான். ஒரு நிதி வசூல் நோட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஊரில் வசதியுள்ளவர்கள் யார் யாரென்று தேடியலைந்து அவர்களை முகஸ்துதி செய்து பணம் கறந்து இரண்டு நாள் மகாநாடு நடத்துவதை விட யாருடைய உரிமைகளுக்காகப் போராடுகிறார்களோ அந்தத் தமிழாசிரியர்களிடமே ஒன்றும் அரையுமாக வசூல் செய்து தன்மானத்துடனே மகாநாடு நடத்த லாமே என்று தோன்றியது. 45 வயதுக்கு மேற்பட்ட பல தமிழாசிரியர்கள், பெரிய மனிதர்களையும், பணக்காரர்களையும் அளவு கடந்து முகஸ்துதி செய்வதைப் பார்த்துச் சுதர்சனன் அருவருப்பே அடைந்தது உண்டு. முகஸ்துதியும் பண்டிதர்களும் கூடப்பிறந்த விஷயங்களோ என்று கூட அவன் சந்தேகப்பட்டிருக்கிறான்.

‘வையையாற்று மணலினும் பலநாள் வாழய பேரியாற்று மணலை எண்ணினாலும் நின்வாழ் நாளின் பெருக் கத்தை எண்ண முடியாது’ - என்பது போல் எல்லாம் வாழ்த்திப் பாடியிருக்கும் பல பழம் புலவர்களின் அதே பழைய இரத்தம்தான் இந்தத் தலைமுறைத் தமிழாசிரியர்களின் உடலிலும் ஓடுகிறதோ என்று கூட அவன் நினைத்தது உண்டு.

இளமை முறுக்கேறிய இரத்த ஓட்டத்தோடும், சுயமரியாதை இயக்கம் கற்பித்துக் கொடுத்திருந்த துணிவோடும், கூழைக் கும்பிடுகளும், கூன் விழுந்த முதுகுகளும் இல்லாத தமிழாசிரியர்களைத் தேடினான் அவன். அப்படிப்பட்டவர்கள் மிக மிக அருமையாகவே கிடைத்தார்கள். ஒவ்வொரு தமிழாசிரியனுக்கும் முப்பது வயதுக்குள்ளேயே மனம் கிழடு தட்டி மூத்துப் போவதைக் கண்டு வேறு அவன் எரிச்சலடைந்தான்.

பிச்சாண்டியா பிள்ளையிடம் மாவட்டத் தமிழாசிரியர் கழகத் தலைவரும், செயலாளரும் அந்த வட்டாரத்துப் பணக்காரர்களின் பட்டியலை விசாரித்து எழுதிக் கொண்டிருந்ததைப் பார்த்துச் சுதர்சனன் இதைத்தான் நினைத் தான்.

மாலை நாலரை மணியானதும் அவன் தலைமையாசிரியருக்கு ஒரு துண்டுத்தாளில், “நான் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் இருக்கிறேன். எப்போது புறப்பட வேண்டுமோ அப்போது சொல்லி அனுப்பவும்” - என்று எழுதிக் கொடுத்தனுப்பினான். அப்புறம் நாற்காலியை எடுத்து வேப்பப் மரத்தடியில் போட்டு உட்கார்ந்து ஏதோ ஒரு வாரப் பத்திரிகையை எடுத்துப் புரட்டலானான். ஆசிரியர்கள் ஒவ்வொருவராக வீட்டுக்குப் புறப்பட்டுப் போயினர். ஐந்தரை மணிக்குப் ப்யூன் வந்து சுதர்சனனைத் தலைமையாசிரியர் கூப்பிடுவதாகக் கூப்பிட்டான்.

சுதர்சனன் தலைமையாசிரியர் அறைக்கு விரைந்தான். தலைமையாசிரியருடைய மேஜையில் மேலாக ஒரு டேபிள் வெயிட் கண்ணாடிக் குண்டுக்குக் கீழே அவன் சற்று முன் அவருக்கு எழுதியனுப்பிய துண்டுத்தாள் இருந்தது.

அவனைப் பார்த்ததும் அவர் கூப்பாடு போட்டு இரையத் தொடங்கினார்.

“நீர் உம்மைப் பத்தி என்ன நினைச்சிண்டிருக்கிறீர்னே எனக்குத் தெரியலே. நான் ஹெட் ஆஃப் தி இன்ஸ்டிடியூஷன்கிற முறையிலே உமக்கு மெமோ எழுதியனுப்பறது, சர்க்குலர் விடறது, உம்மைக் கூப்பிடறது எல்லாம் செய்ய முடியும். நீர் எப்படி இதுமாதிரி எல்லாம் எனக்கு எழுதி அனுப்பலாம்? இதை எல்லாம் செய்யறதுக்கு உமக்கு என்ன அதிகாரம் இருக்கு? எந்தக் ‘கப்பாஸிட்டியிலே’ நீர் இதையெல்லாம் செய்யறீர்? இங்கே நான் ஹெச்.எம்மா? இல்லே நீரே ஹெச்.எம்னு உமக்கு நினைப்பா? தெரியா மத்தான் கேட்கிறேன்.”

இதற்கு சுதர்சனன் பதில் சொல்லவில்லை. ஏதோ ஆத்திரத்தில் அவர் கத்துவதாக அவனுக்குத் தோன்றியது.

“ஏன் பதில் சொல்லாம நிற்கிறீர்?”

“வெளியூர்லேருந்து உங்க பேருக்கு நான் ஒரு லெட்டர் எழுதறது எப்படித் தப்பில்லையோ அப்பிடியே இதை எழுதினதும் தப்பில்லே. தப்பா நினைக்க ஆரம்பிச்சிட்டா எல்லாமே தப்புத்தான் சார்.”

“இந்த நியாயம்லாம் எனக்கு தேவை இல்லே மிஸ்டர் சுதர்சனம்! ஸ்கூல் பிரெமிஸஸ்லேருந்து எனக்கு அட்ரஸ் பண்ணி இனிமே எதையும் நீர் ஆள் மூலமா எழுதி அனுப்பப்படாது. அப்படி அனுப்பிச்சா அதைப் பத்தி நான் ரொம்ப ஸீரியஸ்ஸா வியூ பண்ண வேண்டியிருக்கும்.”

“சரி சார் அனுப்பலே...” என்று ஒரே வரியில் அதை முடித்துவிட்டான் அவன்.

“நான் சைக்கிளிலே போகப் போறேன். நீர் நடந்து வந்துடும். கமிட்டி ஜமீன்தார்வாள் வீட்டிலே கூடறது.”

சுதர்சனன் தலையை அசைத்தான். தலைமையாசிரியர் வாசுதேவன் டர்பன், கோட்டு, டை எல்லாம் தரித்து பிரிட்டீஷ் இம்பீரியலிஸத்தின் சின்னமான பழைய இந்திய உடையில் ஜமீன்தார் வீட்டுக்குப் புறப்பட்டார். சுதர்சனன் வழக்கம்போல நாலு முழம் வேட்டி, அரைக்கைச் சட்டை, ஒரு கைத்தறித் துண்டு சகிதம் நடந்தே ஜமீன்தார் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.

அங்கே ஜமீன்தாரோடு கவுண்டர், அருள்நெறி ஆனந்த மூர்த்தி, வேறு சில ஆட்கள் எல்லாம் இருந்தனர். அவ்வளவு பேரும் ஸ்கூல் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் இல்லை என்பது சுதர்சனனுக்கே தெரிந்தது. மெமோவில் எழுதியிருந்ததற்கும் அங்கு நடப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. கமிட்டி முன்பு மட்டுமே விசாரிக்கப் படவேண்டிய ஒரு விஷயத்தை ஊரார் முன்பெல்லாம் விசாரிப்பது சுதர்சனனுக்குப் பிடிக்காததோடு பாதிக்கப்பட்ட மற்றொரு நபரும் தன்னை விரும்பாதவருமாகிய கவுண்டரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே தன்னை எப்படி நியாயமாக விசாரிக்க முடியும் என்ற எண்ணமும் ஏற்பட்டது. விசாரணைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் சுதர்சனனைத் தவிர ஏனைய அனைவரும் உட்கார நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

சுதர்சனன் நடுவாக நிற்க வேண்டியதாயிற்று. அங்கிருந்தவர்களில் யாரும் அவனை ‘வா’ என்று சொல்லும் சாதாரண முகமன் வார்த்தைக்கும் கூடத் தயாராயில்லை.

“லெட் அஸ் புரொஸீட்...” என்று தலைமையாசிரியர் ஃபைல் கட்டைப் பிரித்துத் தொடங்கியதுமே,

“நீங்க தொடங்கறத்துக்கு முன்னாடி எனக்கு ஒரு சின்னச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திடுங்க. உங்க மெமோவிலே ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக்கு முன்னாடி நான் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லணும்னுதான் குறிப்பிட்டிருந்ததா ஞாபகம்! இப்போ இங்கே கமிட்டி மெம்பர்ஸ் மட்டும் இல்லே, யார் யாரோ இருக்காங்க. இதை முதல்லே எனக்குத் தெளிவுப்படுத்துங்க” என்று சுதர்சனன் அவர்களைக் கேட்டான்.

அத்தியாயம் - 8

சுதர்சனனின் கேள்வி ஜமீன்தாருக்கு எரிச்சலுட்டியது. வேலைக்கு வந்து சிறிது காலம் கூட ஆகாத ஒரு புதிய தமிழ் ஆசிரியர் பள்ளிக்கூட நிர்வாகக் குழுவைப் பற்றியே எதிர்த்துக் கேட்கிற துணிச்சல்காரனாக இருந்ததை ஜமீன்தாரால் மட்டுமில்லை மற்ற முக்கியஸ்தர்களாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. தலைமையாசிரியருக்கோ ஜமீன்தார் தன் மேல் எரிந்து விழுந்து ஆத்திரப்படப் போகிறாரோ என்று பயமாகக் கூட இருந்தது. பள்ளிக்கூடம் விட்டதும் அங்கிருந்து சுதர்சனனைத் தன்னோடு அழைத்து வராமல் தான் தனியே சைக்கிளில் வந்தது நல்லதாகப் போயிற்று என்று தோன்றியது அவருக்கு. எத்தனையோ முரண்டுபிடித்த ஆசிரியர்களை எல்லாம் அவர் பார்த்திருந்தார். ஆனால் அந்த முரண்டும் பிடிவாதமும் எல்லாமே ‘வேலை பறி போய்விடுமோ?’ - என்ற எல்லை வந்ததும் தானாகத் தளர்ந்து போய் வழிக்கு வந்து தங்கக் கம்பியாய் இழுத்த இழுப்புக்கு இழுபட்டுச் சொன்னபடி கேட்பார்கள். ஆனால் சுதர்சனனோ ‘வேலை பறி போய் விடுமோ?’ - என்ற பயம் அறவே இல்லாதவனாயிருந்தான். நிமிர்ந்து நடந்தான்.

ஊரில் அந்தஸ்துள்ளவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் பெரிய மனிதர்களுக்கும் அவன் ஒரு சிறிதும் பயப்படவில்லை. யார் முன்னிலையிலும் எந்தச் சூழ்நிலையிலும் தனக்கு நியாயம் பட்டதை அஞ்சாமல் பேசினான் அவன். இப்படி மனிதர்களை ஆசிரியர் தொழிலில் தம் கண்காணத் தலைமையாசிரியர் இந்த பூமியில் எதிர் கொள்ள நேர்ந்ததே கிடையாது. வேலை போய்விடும் என்றால் நடுங்கிச் சாகிற ஆட்களையே அதிகமாக அவர் கண்டிருந்தார்.

தமிழாசிரியர் சுதர்சனன், ‘நிர்வாகக் குழுவைச் சேர்ந்தவங்க மட்டும் இங்கே இல்லே. மத்தவங்களும் இருக்காங்க’ - என்றதுமே, “அப்போ நாங்க வீட்டுக்குப் புறப்படறோம் ஜமீன்தார்வாள்! நீங்க மீட்டிங்கைக் கவனியுங்க” - என்று கூறியபடியே அருள்நெறி ஆனந்தமூர்த்தியும், வேறு இரண்டொருவரும் தங்கள் தங்கள் இருக்கைகளிலிருந்து மெல்ல எழுந்திருக்கத் தலைப்பட்டார்கள். தாங்கள் அப்படி எழுந்திருந்து போக முயன்றால் ஜமீன்தார் தங்களைத் தடுப்பார் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் இருக்கைகளை விட்டு எழுந்திருந்தனர். அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. “யாரோ சொன்னான்கிறதுக்காக நீங்க ஏன் எழுந்திருக்கிறீங்க? உட்காருங்க, இது என் வீடு. நான் எழுந்திருந்து போகச் சொன்னால்தான் நீங்க போகணுமே ஒழிய யாரோ சொன்னான்னா நீங்க ஏன் எழுந்திருக்கணும்?” - என்று ஜமீன்தார் நண்பர்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டு மறுபடி அவரவர்கள் இருந்த இடத்திலேயே அப்படி அப்படியே உட்கார வைத்து விட்டார். அவர்களும் அவர் அப்படிச் சொல்வதற்காகவே காத்திருந்தாற்போல உடனே உட்கார்ந்து கொண்டு, ‘இனிமே நீ என்ன செய்வே!’ என்று அவனுக்கு அழகு காட்டுவது போல் சுதர்சனனை முறைத்துப் பார்த்தார்கள்.

சுதர்சனன் இதை எல்லாம் கண்டு ஒரு சிறிதும் அயர்ந்து விடவில்லை. “அப்போ ஒண்ணு செய்யுங்க சார்! நீங்கள்ளாம் பேச வேண்டியதைப் பேசிட்டு என் சம்பந்தப்பட்ட விசாரணை எப்பவோ அப்ப சொல்லி அனுப்புங்க. அது வரை நான் வெளியிலே இருக்கேன். ஆனா ஒண்ணு மட்டும் உறுதி என்னை நீங்க விசாரிக்கிறப்ப நீங்களே எனக்கு அனுப்பியிருக்கிற மெமோவிலே இருக்கிற மாதிரி இங்கே ஸ்கூல் நிர்வாகக் கமிட்டி மெம்பர்ஸ் மட்டும்தான் இருக்கணும்கிறது. நிச்சயம்” - என்று கூறி விட்டுக் கிளம்புவதற்குத் தயாரானான். உடனே ஜமீன்தார் உணர்ச்சி வசத்தில் ஆத்திரப்பட்டு “இந்தாப்பா பேசறதைக் கொஞ்சம் நிறுத்து. ஏதோ உனக்குத்தான் பேசத் தெரியும்கிற மாதிரி மேலே மேலே பேசிக்கிட்டே போறியே? யாருக்கு முன்னாலே நின்னு என்ன பேசிக்கிட்டிருக்கோம்கிறதாவது உனக்கு ஞாபகமிருக்கா?”

“...”

“உன்னையெத்தான்ப்பா கேக்கிறேன். வாயிலே என்ன கொழுக்கட்டையா அடைச்சிருக்கு? பதில் சொல்லேன்.”

சுதர்சனன் ஜமீன்தாரை நேருக்கு நேர் ஏறிட்டு நோக்கிப் புன்முறுவல் பூத்தான். பதறவில்லை. பயப்படவில்லை. தயங்கவில்லை.

“என்னப்பா சிரிக்கிறே? நான் கேட்டதுக்குப் பதில் சொல்லேன்...”

“நீங்க கொஞ்சமாவது மரியாதையாகக் கேட்டிருந்தால் எனக்கு புதில் சொல்லணும்னு தோணும் சார். நீங்க என்னடான்னா ஆட்டுக்காரன் மாட்டுக்காரனைப் பேசற மாதிரி மிரட்டிப் பேசறீங்க. சாதாரணமா மரியாதை உள்ள எந்த மனுஷனுக்குமே இப்படிப் பேசினாக் கோபம் வரும்.”

“நீ சுயமரியாதைக்காரனா இருக்கிறதாலே உனக்கு இன்னும் அதிகமாக் கோபம் வருதாக்கும்?”

“அப்படித்தான்னு வச்சுக்குங்களேன்.”

“நீ பேசறதை எல்லரம் பார்த்தா ரொம்பத் திமிர் பிடிச்சிவனா இருப்பே போலிருக்கே? இத்தனை நாள் உன்னை ஏன் வேலையை விட்டுப் போகச் சொல்லலேன்னு எனக்கு இப்போ ஹெட்மாஸ்டர் மேலேதான் கோபம் வருது. கொஞ்சமாவது மேலே இருக்கிற மனுஷாளுங்க கிட்ட பணிவு, விநயம், எதுவுமே இல்லாமே நீ என்னப்பா ஆளு?”

“பணிவு விநயம் எல்லாம் வேணும்னு ஆசைப்படற வங்க யாரோ அவங்களுக்கும் அதெல்லாம் கொஞ்சமாவது இருக்கணும் சார்! எல்லாமே ஒன்வே டிராஃபிக்கா இருந்தால் எப்படி?”

“சரி சரி இனிமே உங்கிட்டக் கேக்கிறத்துக்கு ஒண்ணுமில்லே! நீ போகலாம்” -என்று கோபமாகச் சொன்ன ஜமீன்தார் பக்கத்திலே இருந்த இன்னொரு கமிட்டி உறுப் பினரிடம், “சுத்த எருமைமாடாவில்லே இருக்கான்?” என்று தெலுங்கில் இரைந்தார். அது வெளியேறிக் கொண்டிருந்த சுதர்சனன் காதிலும் விழுந்து விட்டது.

“எனக்குத் தெலுங்கு நல்லாத் தெரியும் சார்! சும்மாத் தமிழிலேயே திட்டுங்க, பரவாயில்லே” - என்று சுதர்சனன் பாதிவழி போனவன் திரும்பி வந்து சொல்லவே ஜமீன்தார் முகத்தில் விளக்கெண்ணெய் வடிந்தது. அதற்குள் சுதர்சனன் வெளியேறி விட்டான்.

அதுவரை தலைமையாசிரியர் வாசுதேவன் வாயையே திறக்கவில்லை. குறுக்கே பேசினால் ஜமீன்தாருக்குக் கோபம் வருமோ என்று பயந்து பேசாமல் இருந்தார்.

“இந்த ஆள் நம்ப ஜமீன்தார்வாள் கிட்டவே மரியாதை இல்லாமே எடுத்தெறிஞ்சு பேசிட்டுப் போறானே? இவன் உருப்படப் போறதில்லை” - என்று அதுதான் சரியான சமயமென்று அருள்நெறி ஆனந்தமூர்த்தி எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்ப்பதுபோல் கோள்மூட்டினார்.

“பின்னென்ன? விசாரணையாவது ஒண்ணாவது? உடனே டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பி வையுங்க. விசாரணை என்ன கேடு? ஆளைச் சீட்டுக் கிழிச்சிட்டு மறு வேலை பாருங்க” - என்றார் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஜமீன்தாரின் வலது கரம் போன்ற வேறு ஒரு நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்.

“என்ன ஹெச்.எம். ஒண்ணுமே பேசமாட்டேங்கறாரு?” - என்று தலைமையாசிரியர் பக்கமாகத் திரும்பினார் ஜமீன்தார்.

அப்போதுதான் கல்வி இலாகா விதிகள் அடங்கிய ‘மெட்ராஸ் எஜுகேஷனல் ரூல்ஸ்’ என்னும் முழுப்பெயரின் சுருக்கமான எம்.இ.ஆர். விதிகளைப் புரட்டத்தொடங்கியிருந்தார் தலைமையாசிரியர்.

அந்த நேரம் பார்த்துத் தலைமையாசிரியர் நின்று நிதானித்து விதிகள் எல்லாம் படித்துக் கொண்டிருந்தது ஜமீன்தார் உட்பட அங்கிருந்த பெரிய மனிதர்களுக்குப் பொறுமையைச் சோதித்திருக்க வேண்டும்.

“என்னய்யா பெரிய எம்.இ.ஆர். நாம ஸ்கூல் நடத்தறோம். நமக்கு ஒத்துவராத ஆளை வெளியிலே அனுப்பறோம். நாம நடத்தற ஸ்கூல்லே நமக்கு இந்த உரிமைகூட இல்லியா?” - என்றார் நாட்டுப்புறத்து மனப்பான்மையுள்ள ஒரு கமிட்டி உறுப்பினர். கமிட்டியிலுள்ள இப்படிப்பட்ட உறுப்பினர்களோடு தலைமையாசிரியர் எப்போதும் சிரமப்பட்டிருக்கிறார். அவர்களுக்கு விதிமுறைகளைப் புரியவைப்பது பெரும்பாடாயிருக்கும். எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் முரட்டடியாக விஷயங்களைப் பேசும் பிரமுகர்களும் நிர்வாகக்குழு உறுப்பினர்களும் ஆதர்சபுரத்தில் அதிகம்.

“மிஞ்சிப்போனால் என்னய்யா பண்ணிடப் போறான்? இப்போ நம்ம கொல்லுக்காரன்புத்துார் சுப்பா நாயுடுவின் மகன் கோபாலகிருஷ்ணன்தானே ஐயா டி.பி.ஐ.? அவங்கிட்டப் போய் மேலே ஆகவேண்டியதைப் பார்த்துக்கலாம்” என்று இப்படிச் சண்டி வழக்குப் பேசுகிறவர்களைக் கட்டிக் கொண்டு கல்வி இலாகா விதிகளையும் சட்டதிட்டங்களையும் அநுசரிப்பதற்கு முடியாமல் திண்டாடும் சந்தர்ப்பங்கள் தலைமை ஆசிரியர் வாசுதேவனுக்குப் பலமுறை ஏற்பட்டிருக்கின்றன.

அப்போது எஜூகேஷனல் ரூல்ஸைப் புரட்டிப் பார்த்து விட்டு “முதல்லே எக்ஸ்பிளநேஷன் கேட்கணும். அது திருப்தியா இல்லாட்டா சஸ்பெண்ட் பண்ணலாம். ரொம்பப் பெரிய ‘ஸீரியஸ் மிஸ்காண்டக்ட்’ ஏதாவது இருந்தாலொழிய டிபார்ட்மெண்டைக் கன்ஸல்ட் பண்ணாமே டிஸ்மிஸ் பண்றது நல்லா இருக்காது” -என்றார் தலைமையாசிரியர் வாசுதேவன்.

“அவன் ஜமீன்தாரையே முறைக்கிறான். அவரையே முகத்துக்கு முகம் நிமிர்ந்து பார்த்துப் பதில் சொன்னான். அவர் வீட்டுக்குள்ளே வந்தே இவன் மத்தவங்களை வெளியே துரத்திப்பிடணும்கிறான். யாருக்கும் எதுக்குமே பயப்படற ஆளாத் தெரியலே. துணிஞ்ச கட்டையா இருக்கான். இப்படி ஆளை வச்சுக் குப்பைக் கொட்டறது முடியாத காரியம்.”

“எனக்குந்தான் பிடிக்கலை! ஆனா வெளியிலே அனுப்பறத்துக்கும் ஒரு முறையின்னு இருக்கே? என்ன பண்றது?” என்று கேட்டார் தலைமையாசிரியர்.

“ஓய் வாசுதேவன். நீர் முறை சம்பிரதாயமெல்லாம். பார்த்துக்கிட்டிருந்தீர்னா இவன் இங்கே ஊரைக் குட்டிச் சுவராக்கிப்பிடுவான். லேபர் பிராப்ளம், ஊரிலே கிஸான் ப்ராப்ளம் எல்லாமே பெரிசாயிடும். திருவள்ளுவரையும் லெனினையும் ஒப்பிட்டுப் பேசணும்னா அவன் எப்பிடிப்பட்ட மோசமான ஆளா இருக்கணும்னு பார்த்துக்குங்க” என்றார் அருள்நெறி ஆனந்தமூர்த்தி.

“வேலைக்கு வந்து பிழைப்பு நடக்கிற இடத்திலே பெரிய மனுஷன் வீட்டிலெல்லாம் புகுந்து கலப்புக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன். அது இதுன்னு கலாட்டாப் பண்ணி ஜெயிலுக்கு வேற போயிட்டு வந்திருக்கான். இப்பிடி ஆளுங்களைத் தொடர்ந்து வேலைக்கு வச்சுக்கிட்டா ஸ்கூல் பேரு ரிப்பேராயிடுங்க. அவ்வளவுதான் நான் சொல்வேன்” என்று ஆனந்தமூர்த்தியோடு ஒத்துப் பாடினார் பக்கத்திலிருந்த உள்ளூர்ப் பிரமுகர் ஒருவர்.

ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் என்று போட்டுக் கொண்டு ஐமீன்தார் தன்னோடு சீட்டாட வந்தவர்களையும் தன்னைப் பார்க்க வந்தவர்களையும் தன்னோடு பேசிக் கொண்டிருப்பவர்களையும் வைத்து கொண்டே கூத்தடிப்பது தலைமையாசிரியர் வாசுதேவனுக்கே பிடிப்பதில்லை. பலதடவை இதனால் வாசுதேவனே கஷ்டப்பட்டிருக்கிறார். ஸ்கூல் நிர்வாகக் கமிட்டிக் கூட்டம் என்றால் ஜமீன்தாருக்கு கிள்ளுக்கீரை மாதிரி. சுண்டைக்காய்க் ‘கிரிக்கெட் கிளப்’, ‘பாட்மிண்டன் கிளப்’ - மீட்டிங் என்றால்கூட அதை முறையாகவும் பங்க்சுவலாகவும், கட்டுப்பாடாகவும் நடத்துகிற ஜமீன்தார் பள்ளி நிர்வாகக்குழு மீட்டிங்கை மட்டும் கண்டபடி தாறுமாறாக நடத்துவதை வாசுதேவனே வெறுத்திருக்கிறார். சுதர்சனனைப் பல காரணங்களால் வாசுதேவனுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் பள்ளி நிர்வாகக் குழுக் கூட்டத்தை ஜமீன்தார் நடத்துகிற விதத்தைக் கண்டித்துவிட்டு அவன் வெளியேறிய கம்பீரத்தை அந்தரங்கமாகப் பாராட்டினார் அவர். நீண்ட காலமாகத் தான் பழி வாங்காமல் தயங்கி அட்ஜஸ்ட் செய்து கொண்டுபோன ஒரு விஷயத்துக்குச் சுதர்சனன் பழிவாங்கி ஜமீன்தாருக்குப் புத்தி புகட்டி விட்டதாகத் தோன்றியது வாசுதேவனுக்கு. பள்ளி நிர்வாகக் குழுக் கூட்டத்துக்கென்று ‘அஜெண்டா’ டைப் செய்து கொண்டு போய்க் கொடுத்திருந்தும் மறந்து போய்க் கூட்ட நேரத்துக்கு வேறெங்காவது வெளியே புறப்பட்டுப் போயிருப்பார் ஜமீன்தார். தலைமையாசிரியருக்கு வீண் அலைச்சல்தான் மிச்சமாயிருக்கும். பிற வேலைகளும் கெடும்.

ஜமீன்தாரின் அந்த அகந்தைக்கும் பணத்திமிருக்கும் சுதர்சனன் சரியான அடி கொடுத்திருப்பதாகத் தோன்றியது தலைமையாசிரியருக்கு. அவனுடைய நாத்திக மனப்பான்மை அவருக்குப் பிடிக்காவிட்டாலும், அவனுடைய தீவிர சுயமரியாதை அவருக்குப் பிடிக்காவிட்டாலும் அத்தனை பெரிய பிரமுகர்களையும் ஜமீன்தாரையும் பார்த்து, “நான் கூட்டத்துக்கு வர்ரதுக்கு முன்னாடி மீட்டிங்கை ஒழுங்கா நடத்துய்யா, அதுக்கப்புறம் நான் வரேன்” என்று துணிச்சலாக எழுந்திருந்து சொல்லி விட்டு சுதர்சனன் வாக்-அவுட் செய்த துணிவை அவர் இன்னும் உள்ளூர வியந்து கொண்டிருந்தார். அவனைப் பிடிக்கவில்லை என்றாலும் அவன் கம்பீரம் அவருக்குப் பிடித்தது.

மெல்ல மெல்லச் சிறிது நேரத்தில் ஜமீன்தார் வந்திருந்தவர்களோடு சீட்டாடத் தொடங்கிவிடவே சுதர்சனன் விஷயமாக எந்த முடிவும் எடுக்கப்படாமலும் நிர்வாகக் குழுக் கூட்ட மினிட்ஸில் எந்தக் குறிப்புக்களும் எழுதி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கப்படாமலுமே கூட்டம் கலைந்து விட்டது. தலைமையாசிரியர் சிறிது நேரம் வீணே உட்கார்ந்து காத்திருந்து பார்த்துவிட்டு, “அப்போ நான் புறப்படறேன் சார்” - என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டதைக் கூட ஜமீன்தாரோ, மற்றவர்களோ கவனித்து லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. அந்த அலட்சியம், அந்த உதாசீனம், அந்தப் பணச்செருக்கு எல்லாமே தலைமையாசிரியருக்கும் நெஞ்சில் உறுத்தியது. ஆனால் அதை எதிர்க்க, அதனோடு மோதி உராய அவரால் முடியவில்லை. திரும்பிப்போகும்போது காபி ஹோட்டல் வாசலில் ஆதர்சபுரம் பஸ்-ஸ்டாண்ட் அருகே சுதர்சனனைப் பார்த்தார் தலைமையாசிரியர்.

சுதர்சனனும் அவரைப் பார்த்ததும் அருகே வந்தான். அவரும் பிரேக்கை அமுக்கிப் சைக்கிளை நிறுத்திக் கொண்டு கீழே இறங்கினார். இருவருக்குமே பரஸ்பரம் என்ன பேசிக் கொள்வதென்று ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. “என்னையே விட்டுடுங்க. இன்னிக்கு நான் இந்த ஸ்கூல்லே வேலை பார்க்கிறேன். நாளைக்கி இல்லேன்னு வச்சுக்கலாம். நீங்கள்ளாம் எப்பிடி சார் இந்த மாதிரி அநாகரிகத்தைப் பொறுத்துக்கிறீங்க? ஜமீன்தார் அவரோட சிட்டாடறத்துக்கும் குடிச்சுக் கும்மாளம் போடறதுக்கும் வந்த ஆளுங்களை எல்லாம் கூட வச்சுக்கிட்டே ஸ்கூல் - கமிட்டி மீட்டிங்கையும் நடத்திவிடுவாரு. அவங்கள்ளாம் உட்கார்ந்திருப்பாங்க. என்னைப்போல ஸ்கூல் வாத்தியாரை மட்டும் ஏதோ கொலைக்குத்தம் பண்ணினவன் மாதிரி நிறுத்தி வச்சுப் பேசுவாங்க. அதை நான் சகிச்சுக்கணுமாக்கும். படிச்சவங்களா இருக்கிற உங்களை மாதிரி ஆட்களே எப்படி சார் இதை எல்லாம் ஏத்துக்கறீங்க?” -என்று தலைமை ஆசிரியரை நோக்கிக் கேட்டான் சுதர்சனன்.

ஆனால் தலைமையாசிரியர் இதற்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் “நீங்க என்ன சார், கமுக்கமாகக் காதும் காதும் வச்சாப்பில முடிய வேண்டியதை மேலும் சிக்கலானதா ஆக்கிட்டீங்க. ‘ஏதோ நடந்தது நடந்து போச்சு, மறத்துடுங்க - மன்னிச்சிடுங்க’ன்னு எடுத்த எடுப்பில ரெண்டு வார்த்தை பணிவாச் சொல்லியிருந்திங்கன்னா ஜமீன்தார், ‘சரி! இனிமே இப்படி எதுவும் நான் கேள்விப் படாமே ஒழுங்கா இருங்கன்னு’ - மன்னிச்சு அனுப்பிச்சிருப்பாரு, நீங்க என்ன டான்னா ஜமீன்தாரிட்டவே நேரடியாக் கடுமையா மோதிட்டீங்க!”

“நான் ஒழுங்கா இருக்கணுமுன்னு எனக்கு உபதேசம் பண்றதுக்கு வாயைத் திறக்கிற யோக்கியதை அவருக்கு இருக்கணும்னா அந்த அளவுக்காவது முதல்லே அவருதான் ஒழுக்கமுள்ளவரா இருக்கணும் இல்லியா?” என்று சூடாகத் தலைமை ஆசிரியரிடம் எதிர்த்துக் கேட்டான் சுதர்சனம்.

அத்தியாயம் - 9

சுதர்சனனின் பேச்சு ஆதர்சபுரம் ஜமீன்தாரைப் பற்றியதாக இருக்கவே தலைமையாசிரியர் கொஞ்சம் பின் வாங்கினார். நடுத்தெருவில் ஒரு பொது இடத்தில் தனக்குச் சரி என்று படாத ஒரு பெரிய மனிதனைப் பற்றிப் பயப்படாமல் விமர்சிக்கிற தைரியம் சுதர்சனனுக்கு இருந்தது. அதைக் கேட்கிற தைரியம் தலைமையாசிரியர் வாசுதேவனுக்குத்தான் இல்லை. மெல்ல சைக்கிளில் ஏறிக் கொண்டு “சரி! அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து நழுவினார். ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்ள அல்லது ஒரு முரண்பாட்டைச் சந்திப்பதற்கு அவ்வளவு பயம் அவருக்கு. சுதர்சனனின் தைரியத்தையும், தன்மானத்தையும் பார்த்து வியந்து புகழத் தயாரானதுடன், அதை வெளிப்படையாகச் செய்யத் தயங்கிய மனத்தோடு அவனிடம் நின்று பேசிய தலைமையாசிரியர் அவனோடு தான் பேசிக் கொண்டிருப்பதை ஜமீன்தாருக்கோ, அருள்நெறி ஆனந்த மூர்த்திக்கோ கவுண்டருக்கோ யாராவது பார்த்துக் கொண்டு போய்ச் சொல்லி விடுவார்களோ என்று பயந்துவிட்டார்.

அவர் பயந்து கொண்டுதான் போகிறார் என்பது சுதர்சனனுக்கும் புரிந்தது. தலைமையாசிரியர் போன சிறிது நேரத்திற்கெல்லாம் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியா பிள்ளை எதிர்ப்பட்டார். அவர் கையில் ஏதோ நோட்டுப் புத்தகம், ரசீதுப் புத்தகம் எல்லாம் இருந்தன. தமிழாசிரியர் மாநாட்டுக்காக அவர் தீவிரமாக வசூலில் இறங்கியிருக்கிறார் என்று தோன்றியது. சுதர்சனனைப் பார்த்ததுமே அவர் ஆரம்பித்தார்:

“என்ன? தகராறு எந்த மட்டிலே இருக்கு? எல்லாம். சரியாச்சா இல்லியா?”

“எந்தத் தகராறு?” என்று ஒன்றும் தெரியாதது போல் அவரைப் பதிலுக்குக் கேட்டு வைத்தான் சுதர்சனன்.

“அதான் ஸ்கூல் தகராறு...”

“நான் தகராறு ஒண்ணும் பண்ணலியே? அவங்கதான் மெமோ, எக்ஸ்பிளநேஷன்னு இழுத்தடிச்சிக்கிட்டிருக்காங்க. ஒண்ணுமில்லாத விஷயத்துக்காக எக்ஸிக்யூடிவ் போர்டுக்கு முன்னாடி நான் பதில் சொல்லணும்கிறாங்க. ஜமீன்தார் ஸ்கூல்லே வேலை பார்க்கிற வாத்தியாருங்கள்ளாம் தனக்கு அடிமைங்கன்னு நினைக்கிறாரு...”

“அப்ப நான் வரட்டுமா? வசூல் வேலையா அலைஞ்சுக்கிட்டிருக்கேன். இன்னும் நெறைய எடத்துக்குப் போகணும்.”

தான் சொல்லிய விஷயத்தில் பட்டுக்கொள்ளாமல் பிச்சாண்டியா பிள்ளை நழுவியதிலிருந்து அவரும் சர்ச்சைக்குப் பயப்படுகிறார் என்று புரிந்தது.

சுதர்சனம் ஊர்ச்சாவடிக்கு அருகே இருந்த பொது நூல்நிலையத்தில் போய்ச் சிறிது நேரம் படித்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் வீட்டுக்குத் திரும்பினான். அவன் வீடு திரும்பியபோது இருட்டிவிட்டது. தெருவிளக்கடியில் வீட்டு வாசலில் அவனுக்குக் குடியிருக்க வீடு வாடகைக்கு விட்டிருந்த கன்னையாப் பத்தர் நின்று கொண்டிருந்தார். அவர் தன்னை எதிர்பார்த்துத் தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சுதர்சனன் அவரைப் பார்த்ததுமே புரிந்து கொண்டான். கதவைத் திறந்து விளக்கைப் போட்டுவிட்டு, “உள்ளே வாங்க சார்! பாவம் ரொம்ப நாழியாக் காத்துக் கிட்டிருக்கீங்க போலிருக்கு...” என்று அவரை மிகவும் மரியாதையாக உள்ளே வரவேற்று உட்காரச் சொன்னான் சுதர்சனன்.

பத்தர் தயங்கித் தயங்கி உள்ளே வந்து உட்கார்ந்தார். சுவர்களை உற்றுப் பார்த்தார். எந்தச் சுவரிலும் பிள்ளையார் படமோ, முருகன் படமோ, வெங்கடாசலபதி படமோ எதுவும் தென்படவில்லை. சுவரின் ஒரு பகுதியில் மட்டும் இரண்டு மூன்று தாடிக்கார மனிதர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. கார்ல் மார்க்ஸ், லெனின், பெரியார், ஈ.வெ.ரா படங்கள்தாம் அவை. அதில் பெரியார் படத்தை மட்டும்தான் பத்தருக்குப் புரிந்திருந்தது. மற்றப்படங்களை அவர் உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டு சுதர்சனன் தானாக அவற்றைப் பற்றி விவரித்துச் சொல்லலானான்.

அவன் சொல்லி முடித்த பின் சில விநாடிகள் இடை வெளி விட்டதும் பத்தர் மெதுவாக ஆரம்பித்தார்.

“நீங்க தனிக் கட்டையாத்தானே இருக்கிங்க? உங்களுக்கு எதுக்கு இத்தினி பெரிய வீடு? பஜார்லே எங்கேயாவது ஒரு ரூம் எடுத்துக்கிட்டாப் போதாதா?’’

“ஏன் திடீர்னு இப்படிக் கேட்கிறிங்க?”

“ஒண்ணுமில்லே... குடும்பஸ்தரா யாராவது வந்தால் அவங்களுக்கு விடலாமேன்னு பார்த்தேன்...”

“முதல் முதலா நான் உங்களைத் தேடிவந்தப்பவே நீங்க இதைச் சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக் கும்...”

“இப்பவும் நான் உங்களைக் கட்டாயப்படுத்தவோ, வற்புறுத்தவோ செய்யலே. ஏதோ தோணிச்சு. சொன்னேன்...”

“உங்களுக்காகத் தோணிச்சா? இல்லே யாராவது சொன்னாங்களா?”

பத்தர் பதில் சொல்வதற்குச் சிறிது யோசிப்பதாகப் பட்டது. சுதர்சனன் விடவில்லை.

“நான் குடிவர்ரப்பவே எல்லா விவரமும் கேட்டுக்கிட்டுச் சம்மதிச்ச பிறகு தானே ரெண்டு மாசம் அட்வான்ஸ் வேணும்னு கேட்டு வாங்கிக்கிட்டீங்க?”

“அதெல்லாம் சரிதான்!...” என்று சொல்ல வந்ததை முடிக்காமலே இழுத்தார் பத்தர். புத்திசாலியான சுதர்சனனுக்குப் பத்தரின் மனத்தில் ஓடும் எண்ணங்களைச் சுலபமாகவே அனுமானம் செய்துவிட முடிந்தது. அவர் தேடி வந்ததையும், சுவர்களை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்து விட்டுக் கேட்டதையும், சுற்றி வளைத்துப் பேசிய பேச்சுக்களையும் வைத்தே அவரைக் கண்டு பிடித்துவிட்டான் அவன். ஆனால் பத்தர் என்னவோ தமது அசல் முகத்தை அவன் கண்டு பிடித்துவிட முடியாதபடி வேறு வேறு முகங்களை மாற்றி மாற்றி அவனுக்குக் காண்பித்து அவனை ஏமாற்றிக் கொண்டிருந்தார்.

“மனசிலே எதாச்சும் இருந்தா நேருக்கு நேராச் சொல்லிடுங்க பத்தரே! சுத்தி வளைக்காதீங்க...” என்று சுதர்சனனே அவரை நேரே கேட்டுவிட்டான். அவர் மென்று விழுங்கினாரே ஒழிய அவனுக்குப் பிடி கொடுக்கவில்லை. அவனுக்கு அவர் மேல் பரிதாபமாக இருந்தது. பேச்சை மாற்றி வேறு எதை எதையோ சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் போய்ச் சேர்ந்தார் பத்தர்.

போய்ச் சேருவதற்கு முன் சம்பந்தமில்லாமல் திடீ ரென்று இருந்தாற் போலிருந்து, “ஸ்கூல் மேனேஜ்மெண்டுக்கும் உங்களுக்கும் ஏதாவது மனஸ்தாபமா சார்? ஜனங்க என்னென்னமோ பேசிக்கிறாங்களே?” என்று கேட்ட பத்தரிடம் ஒரு சிறிதும் தயங்காமல் ஒளிக்காமல், மறைக்காமல் என்ன மனஸ்தாபம் என்பதைச் சுதர்சனன் விவரித்துச் சொன்னான். தலைமையாசிரியரையும், பிச்சாண்டியா பிள்ளையையும் போல் ஜமீன்தாரைப் பற்றிய தன் விமர்சனத்தைக் கேட்க அஞ்சிப் பத்தரும் மெல்ல நழுவுவதைச் சுதர்சனன் உணர்ந்தான். செல்வாக்குள்ளவர்களின் தவறுகளையோ, குறைகளையோ கேட்கவே அஞ்சும் மனப்பான்மை சமூகத்தில் சராரிசயான பல மனிதர்களுக்கு இருப்பதைச் சுதர்சனன் அடுத்தடுத்துக் கண்டான். அதைரியவான்களாகவும், பிழைகளைப் பொறுத்துக் கொண்டு சலாம் போடுகிறவர்களாகவும் இருக்கும் ஆஸ்திகர்களை விட அவற்றை எதிர்க்கும் நாஸ்திகனான தான் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நின்று பெருமைப்படலாம் போல் தோன்றியது அவனுக்கு.

ஆனால் அந்த ஊர்ப் பெரிய மனிதர்கள் அவனை அப்படிக் கர்வப்பட விடுவதற்குத் தயாராயில்லை. மறுநாள் விடிந்ததிலிருந்து அவனைத் துரத்துவதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன. தன்னை எதிர்த்துப் பேசி விட்ட ஓர் ஆசிரியன் என்பதனால் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த ஜமீன்தார் அவனை எப்படியும் பழி வாங்குவது என்று முடிவு செய்துவிட்டார். தலைமையாசிரியரைக் கூப்பிட்டுச் சுதர்சனனை எப்படியும் டிஸ்மிஸ் செய்தே ஆகவேண்டும் என்றார் அவர்.

“எம்.இ.ஆர். படி ஸீரியஸ் மிஸ் கண்டக்ட் ஏதாவது காண்பித்துத் தான் டிஸ்மிஸ் செய்ய முடியும்” என்றார் தலைமையாசிரியர்.

“ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்னா என்னென்ன செய்யணுமோ அதை எல்லாம் அவன் இங்கே செஞ்சாச்சுன்னு சொன்னால் அதுக்குச் சாட்சியமா வேணும்னு கேட்கப் போறாங்க? செஞ்சுட்டான்னு சொல்லியே நடவடிக்கை எடுங்க. என் ஃபிரண்ட்ஸ் முன்னாடி என்னையே இன்ஸ்ல்ட் பண்ணிப் பேசற ஒருத்தனை நான் என் ஸ்கூல்லே நீடிக்க விட்டு வேடிக்கை பார்க்க முடியாது” என்றார் ஜமீன்தார். உடனே அவர் தலைமையாசிரியரை விட்டுவிட்டுப் பள்ளிக் கூட ரைட்டரையும், குமாஸ்தாவையும் வரவழைத்து எம்.இ.ஆர். படி ஓர் ஆசிரியர் விஷயத்தில் ஸீரியஸ் மிஸ் காண்டக்ட் என்றால் என்னவென்று விசாரித்தார்.

“சக ஆசிரியைகளிடமோ படிக்கிற வயது வந்த மாணவிகளிடமோ தப்பா நடந்துக்கிட்டார்னு சார்ஜ் ஃபிரேம் பண்ணி டெர்மினேஷன் ஆர்டர் அனுப்பிச்சுடலாமுங்க”" என்றார்கள் அவர்கள்.

“இதுதானா பிரமாதம்? படிக்கிற பொண் ஒருத்திக்குப் பொஸ்தகத்திலே லவ் லெட்டர் எழுதி வச்சுக் குடுத்துட் டான்னு போட்டு டிஸ்மிஸ் பண்ணுங்க...”

“சும்மா எப்பிடிங்க போடறது? ஒண்ணு அப்பிடிக் குடுக்கறப்ப யாராச்சும் பார்த்திருக்கணும்! அல்லது அவரு யாருக்கு லெட்டர் எழுதினாரோ அந்தப் பொண்ணே வந்து ஹெச்.எம். கிட்டக் கம்ப்ளெயிண்ட் குடுக்கணும்.”

“ஒரு பொண்ணு என்ன? ரெண்டு மூணு பொண்ணுங்க வந்து கம்ப்ளெயிண்ட் குடுத்ததாகவே சொல்லுங்க. கிளாஸ்லே அடிக்கடி கையைப் பிடிச்சு இழுக்கிறான்னு கூடப் புகார் வந்ததா எழுதிக்குங்க. அதெல்லாம் இல்லேன்னு அவன் எப்பிடி ஆட்சேபிக்க முடியும்?”

“உண்மையிலே கிளாஸ்லே பிள்ளைங்ககிட்ட அவரு ரொம்ப அன்பாகவும் அளவாகவும் பழகறாருங்க. அவர் மேலே இப்படி ஒரு குற்றத்தைச் சுமத்தி வெளியே அனுப்பிச்சோம்னா யாரும் அவரு இப்படிச் செஞ்சார்னு நம்பக்கூட மாட்டாங்க...”

“நம்பறாங்களோ நம்பலியோ, நான் சொல்றதை நீங்க செய்யுங்க. அவனை எப்பிடியும் உடனே நம்ம ஸ்கூலை விட்டுத் தொலைச்சாகணும்.”

அப்போது ஜமீன்தாரின் வெறிகொண்ட நிலையை எதிர்த்து வாதம் புரிய முடியாமல் பள்ளி ரைட்டரும், குமாஸ்தாவும் அவர் ‘டிக்டேட்’ செய்தபடியே ஒரு டெர்மினேஷன் ஆர்டரை எழுதிக் கொண்டு வந்தனர். ஆனால் உள்ளூற அவர்கள் அநுதாபம் என்னவோ சுதர்சனன் மேல்தான் இருந்தது.

மறுநாள் காலையிலிருந்து பள்ளியில் சூழ்நிலை மிகவும் இறுக்கமாக இருப்பதைச் சுதர்சனன் உணர்ந்தான். அவனைச் சந்தித்தவர்களில் தலைமையாசிரியர், ரைட்டர், குமாஸ்தா யாருமே அவனோடு பேசுவதற்குப் பயப்பட்டார்கள். மாலையில் பள்ளி இலக்கிய மன்ற விழா வேறு இருந்தது. அதில் உரையாற்றுவதற்கு மன்றக்குடி மகபதி அடிகளார் வருவதாக நோட்டீஸ் போர்டில் அச்சிட்டு ஒட்டியிருந்தது. வகுப்புக்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது. மாலையில் கடைசி இரண்டு பீரியடுகள் கிடையாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

சுதர்சனனுக்கு அந்த அடிகளாரை ஓரளவு நன்றாகவே தெரியும். சாமியாராகத் தீட்சை பெற்று மடத்துத் தலைமையை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் வெறும் புலவர் மகபதியாக அங்கங்கே திருக்குறள் அஷ்டாவதானம் செய்து கொண்டிருந்தவர் அவர். சுயமரியாதை இயக்கத்தில் ஒரளவு ஈடுபாடும் ஐயாவிடத்தில் மதிப்பும் உள்ளவர். சாமியாராக வந்த பிற்கு இதன் காரணமாகவே மகபதி அடிகளார் பலத்த விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் அடிக்கடி ஆளானார். ஆனால் சுதர்சனனிடம் மட்டும் அவர் எப்போதும் போல் பிரியமாகப் பழகி வந்தார். அன்றிருந்த சூழ்நிலையில் மகபதி அடிகளாரைத் தானோ தன்னை அவரோ சந்திக்க முடியுமா என்பது சுதர்சனனுக்குத் தெரியவில்லை. மகபதி அடிகளாருக்கும் பொது வாழ்வில் பல சங்கடங்கள் இருந்தன. மான்தோல் ஆசனம், விபூதிச் சம்புடம், காவி உடைகள், கழுத்து நிறையத் தங்கப் பூண் பிடித்த உருத்திராட்ச மாலைகள் விழுந்து கும்பிட்டுத் திருநீறு வாங்கிப் பூசிக் கொள்ளுகிற பக்தர்கள், இவ்வளவுக்கும் மேல் மேடையில் ஏறி நின்று “பேரறிஞன் இங்கர்சால் கூறுவது என்னவென்றால்...” என்பதாகத் தொடங்கி அடிகளார் பேசுவதைப் பொதுமக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருந்தது. மகபதி அடிகளாருக்கோ மடத்துச் சொத்து, கார், வசதிகள் எல்லாம் வேண்டியிருந்தது. மேடையில் பேசும் சீர்திருத்தச் சாமியார் என்ற புகழும் வேண்டியிருந்தது. சாமியாரானப்புறம் அவரைப் பார்க்க ஒரு முறை மன்றக்குடிக்குப் போயிருந்தான் சுதர்சனன். பழைய நண்பன் என்ற முறையில் அவரே அவனை வரச் சொல்லிக் கூப்பிட்டிருந்தார்.

“சாமீ! எப்போ மடத்துப் பொறுப்பிலே இருக்கீங்களோ அப்போ நீங்க தெளிவா ஒரு வழியிலே ஒரு முகத்தோடு நடந்து போகணும். மேடையிலே ஒரு முகம், பூஜை அறையிலே ஒரு முகம், பக்தர்களுக்கு முன்னாடி ஒரு முகம், பக்தர்கள் அல்லாதாருக்கு முன்னாடி வேறொரு முகம்னு, பல முகங்களைக் காட்டப்படாது. பணத்துக்காக நமக்குப் பிடிக்காததைச் சகிச்சிக்கிறது. நிஜமான சுயமரியாதைக் காரன் செய்ய முடியாத காரியம். என்னைக் கேட்டா ஃப்ராங்காச் சொல்றேன். உங்க இயல்புக்கு நீங்க ருத்திராட்சமாலையைப் போட்டுக்கிட்டு மடத்துக்குள்ளார நுழைஞ்சிருக்கிறதே எனக்குப் பிடிக்கலே. பதவிக்காக பவிஷுக்காக நமக்குப் பிடிக்காததையும், நாம நம்பாததையும் செய்யலாம்னா எப்படி? நான் முகத்துக்கு நேரேயே இப்பிடி எதிர்த்துக் கேட்கிறேனேன்னு நினைச்சுக்காதீங்க. எனக்கு உங்க மேலே சாமி கீமின்னு பயம் பக்தி எதுவுமில்லே. அதனாலே வேண்டிய நண்பர்ங்கிற முறையிலே பயப்படாமே இதைக் கேட்கிறேன். பதில் சொல்லுங்க” என்று சுதர்சனன் அப்போது அவரைக் கேட்டிருந்தான். அதிலிருந்து அவருக்கும் சுதர்சனனுக்கும் சரியாகப் பேச்சு வார்த்தை இல்லாமல் போய்விட்டது.

இப்போது இன்று அந்த அடிகளார் ஆதர்சபுரத்தில் அருள் நெறி ஆனந்தமூர்த்தியின் பங்களாவில் வந்து தங்கப் போவதாகச் சுதர்சனன் கேள்விப்பட்டிருந்தான். சாமியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் எதிலும் எல்லா வேளைகளிலும் எந்த ஊரிலும் ஒத்துப்போவதைச் சுதர்சனன் கவனித்திருந்தான். அருள் நெறி ஆனந்தமூர்த்தியைப் பக்கா சமூக விரோதியாகவும், பிற்போக்குவாதியாகவும் ஃபாஸிஸ்ட் ஆகவும் கருதி வெறுத்துக் கொண்டிருந்தான் சுதர்சனன். ஒரு பக்கம் இங்கர்சாலிலிருந்தும் கார்ல் மார்க்ஸிலிருந்தும் மேற்கோள்களை மேடையில் எடுத்துச் சொல்லி விட்டு மறுபுறம் நிலப்பிரபுக்களோடும், ஜமீன்தார்களோடும் சுமுகமாகிப் பழகி அவர்களுக்கு வள்ளல் பட்டம் கட்டிக் கொண்டிருக்கிற சாமியாரை ‘ரஸ்புடின் சாமியார்’ - என்று கருதாமல் வேறு எப்படிக் கருதுவதென்று சுதர்சனனுக்குப் புரியவில்லை.

பிற்பகல் இரண்டரை மணிக்கு மன்றக்குடி மகபதி அடிகளாரின் கார் டிரைவர் - காரோடு ஸ்கூலுக்குத் தேடி வந்து, “சாமி உங்களைக் கையோட கூட்டியாரச் சொல்லிச்சுங்க! இங்கேதான் அருள்நெறி ஆனந்தமூர்த்தி வீட்டிலே தங்கியிருக்கு. உடனே உங்களைப் பார்க்கணும்னுச்சு” என்றான்.

“நான் அங்கெல்லாம் வர்ரத்துக்கில்லேப்பா. அவரு இங்கே ஸ்கூலுக்குப் பேச வர்ரப்பேர் இங்கேயே பார்த்துப் பேசிக்கிறேன்னு போய்ச் சொல்லிடு” - என்று டிரைவரையும் காரையும் திருப்பி அனுப்பிவிட்டான் சுதர்சனன்.

அத்தியாயம் - 10

தமிழாசிரியரான சுதர்சனனுக்கு நேரடியாகவே டெர்மினேஷன் ஆர்டரை அனுப்புவதற்குத் தலைமையாசிரியர் வாசுதேவன் கூடத் தயங்கினார். மறுபடியும் ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அதற்குப் பதில் வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கலாம் என்றார். ‘டெர்மினேஷன் ஆர்டர்’ - டைப் செய்த பின்னும் அதை நிறுத்தி வைத்துக் கொண்டு ஜமீன்தாரைப் போய்ப் பார்த்து விட்டு வந்தார் தலைமையாசிரியர். ஜமீன்தாரோ ஒரே பிடிவாதமாக இருந்தார்.

“சாயங்காலம் மன்றக்குடி மகபதி அடிகளாரோடு ஸ்கூல் இலக்கிய மன்றக் கூட்டத்திற்கு நான் வருவேன். அப்படி வர்ரப்பவே அந்தத் திமிர் பிடிச்ச தமிழ் வாத்தியான் என் கண்ணிலே படக்கூடாது. அதுக்குள்ளாரவே அவனை வீட்டுக்கு அனுப்பிடணும்” - என்றார் ஜமீன்தார். அவ்வளவு பெரிய மனிதரை எதிர்த்து வாதிடும் நெஞ்சுரமும் துணிவும் தலைமையாசிரியருக்கு இல்லை.

வேலை நீக்க உத்தரவைச் சுதர்சனனிடம் நேரில் கொடுப்பதா, தபாலில் அனுப்புவதா என்பது பற்றி ரைட்டருக்கும் தலைமையாசிரியருக்கும் சிறிது நேரம் ஒரு சர்ச்சை நிகழ்ந்தது. டெலிவரி நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு நேரிலேயே கொடுத்து விடுவது என்று முடிவு செய்யப்பட்ட பின் தலைமையாசிரியர் அறைக்குச் சுதர்சனனை வரச் சொல்லிக் கொடுப்பதா அல்லது பியூனிடம் கொடுத்தனுப்புவதா என்று ஒரு தயக்கம் ஏற்பட்டது. அவர்களுடைய தயக்கங்களும், பயங்களும் அவர்கள் செய்து கொண்டிருக்கிற காரியத்தின் நியாயமின்மையையே நிரூபித்துக் கொண்டிருந்தன. மனச்சாட்சிக்கு விரோதமாகவே அதை அவர்கள் செய்தார்கள்.

பள்ளி வகுப்பில் படிக்கிற பெண்களுக்கு அவர்களுடைய தமிழ்ப் பாடப்புத்தகங்களிலும், கட்டுரை நோட்டுக்களிலும் ஆபாசமான முறையில் காதல் கடிதங்களை எழுதி வைத்துக் கொடுத்ததாகச் சுதர்சனன் மேல் சார்ஜ் ஃப்ரேம் செய்யப்பட்டிருந்தது. இப்படிக் குற்றம் சாட்டினாலொழிய எம்.இ.ஆர்ச்படி ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ என்று காரணம் காட்டி சுதர்சனனை உடனே டிஸ்மிஸ் செய்ய முடியாமல் போய்விடும். ஆகவே இப்படி ஒரு ஜோடனை செய்ய வேண்டியிருந்தது. சாதாரணமாகப் பள்ளிக்கூட சம்பந்தப்பட்ட விழாக்கள் எதற்கும் ஆதர்சபுரம் ஜமீன்தார் வர மாட்டார். கலெக்டர், மந்திரிகள், பெரிய பிரமுகர்கள் யாராவது வந்து கலந்து கொள்கிறார்கள் என்றால் தான் ஜமீன்தார் அபூர்வமாக வருவார். ஜமீன்தார் வந்தால் போட்டோ கிராபஃபருக்கு ஏற்பாடு செய்யவேண்டும். இல்லாவிட்டால் விழா முடிந்த பின்பு தலைமையாசிரியர் ஒரு வசைமாரியைத் தாங்கிக் கொள்வது தவிர்க்க முடியாமல் போய்விடும்.

அன்று பள்ளிக் கூடத்திற்கு மன்றக்குடி மகபதி அடிகளார் வர இருப்பதனால் அவரோடு அருள் நெறி ஆனந்த மூர்த்தியும் வருவதாயிருந்தார். ஆனந்த மூர்த்தியைப் போன்ற ஓர் எஸ்டேட் உரிமையாளரும் மகபதி அடிகளும் வரும்போது தான் போகாவிட்டால் நன்றாக இராதென்று ஜமீன்தாரும் வர முடிவு செய்திருந்தார். இதில் பெரிய தர்ம சங்கடம் என்னவென்றால் அடிகளார் காரில் வந்து இறங்கி ஆனந்த மூர்த்தியின் பங்களா வில் படியேறி நுழைவதற்குள்ளே இரண்டு மூன்று முறை சுதர்சனன் பெயரைச் சொல்லி அவனைப் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டார். ஜமீன்தாரும் ஆனந்தமூர்த்தியுமோ முதல் நாளிரவு சீட்டாட்டத்தின் போதே சுதர்சனனுக்குச் சீட்டுக் கிழித்து அனுப்பி விடுவது என்று முடிவு செய்து கொண்டு விட்டிருந்தார்கள். அடிகளாரும் சுதர்சனனும் பள்ளிக்கூடத்திலே, எங்காவது சந்தித்துக் கொண்டு விட நேர்ந்தால் அடிகளாரின் நிர்ப்பந்தத்திற்காவது சுதர்சனனை மறுபடி வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி ஆகிவிடுமோ என்று பயந்தார் ஜமீன்தார். ஆனந்த மூர்த்தியும் முன்ஜாக்கிரதையாக அதைத் தவிர்த்துவிட விரும்பினார். ஆகவே தன் வீட்டுப் படியேறியதுமே அடிகளார் சுதர்சனனைப் பற்றி விசாரிப்பதை உடனே ஜமீன்தாருக்கு ஃபோன் மூலம் தெரிவித்து விட்டார் ஆனந்தமூர்த்தி. ஜமீன்தாரும் அதைக் கேட்டு உஷாராகி விட்டார். மாலைக்குள்ளே சுதர்சனனிடம் வேலை நீக்க உத்தரவை கொடுத்து அவனை உடன் வெளியே அனுப்பி விடவேண்டும் என்று ஜமீன்தார் தலைமையாசிரியரை விரட்டினார். அருள்நெறி ஆனந்தமூர்த்தியிடம் இரண்டு மூன்றுமுறை, “சுதர்சனன் இருந்தால் வரச் சொல்லிக் கூப்பிட்டனுப்புங்க” - என்று அடிகளார் கேட்டும் ஆனந்த மூர்த்தி அதை மெல்லத் தட்டிக் கழித்து விட்டார். இரண்டு மூன்று முறை சொன்னதற்கு மேல் பொறுமை இழந்துவிட்ட அடிகளார் தன்னுடைய கார் டிரைவரையே கூப்பிட்டுப் பள்ளிக்கூடத்திற்குச் சொல்லி அனுப்பினார்.

டிரைவர் திரும்பி வந்து தனிமையில் இருந்த அடிகளாரிடம் “இந்த பங்களாவுக்கு அவரு வரமாட்டாருங்களாம் சாமி! ஸ்கூலுக்குப் பேச வர்ரப்போ சாமியை அங்கே பார்க்கறேன்னாரு” - என்று பதிலையும் தெரிவித்து விட்டான். ஆனந்த மூர்த்தியிடம் சுதர்சனனுக்கு ஏதாவது கடுமையான மனஸ்தாபம் இருக்க வேண்டும் என்று அடிகளாருக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. சுதர்சனனைப் பற்றி வந்ததும் வராததுமாகத் தான் இரண்டு மூன்று தடவை விசாரித்த போதுகளில் ஆனந்தமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்ததையும் பேச்சை மாற்றியதையும், மழுப்பியதையும் அடிகளார் நினைத்துக் கொண்டார். சுதர்சனனைப் போன்ற ஓர் உண்மையான சுயமரியாதைக்காரனை அடிகளார் நேசித்தார். அவனுடைய நேர்மையும், நாணயமும், ஒழுக்கமும், தன்மானமும், அச்சமின்மையும், ஏராளமான மற்ற சுயமரியாதைக்காரர்களிடம் அவர் பார்த்திராதவை. தன்னிடமே சுதர்சனன், மனத்தில் ஒளிவு மறைவின்றிப் பேசியிருக்கும் நிர்ப்பயமான பேச்சுக்கள் பசுமரத்தாணி போல் அவருள் பதிந்திருந்தன.

‘சரி பள்ளிக்கூட விழாவுக்குப் போகும்போது அங்கே அவனைப் பார்த்துக் கொள்ளலாம். எங்கே ஒடிப் போகப் போகிறான்?’-என்று நினைத்துக் கொண்டார் அடிகளார். அடிகளாரைச் சந்திப்பதற்கு யார் யாரையோ பெரிய மனிதர்களை அழைத்து வந்தார் ஆனந்தமூர்த்தி. எல்லாருமே வசதி படைத்தவர்களும், பணக்காரர்களும், நிலப்பிரபுக்களுமாக இருந்தார்கள். அடிகளாரின் அருளால் தங்கள் செல்வமும், புகழும், வசதிகளும் மேலும் மேலும் பெருகும் என்ற சுயநல நம்பிக்கையோடு விழுந்து கும்பிட்டு விபூதி வாங்கிப் பூசிக் கொண்டார்கள். கை கட்டி வாய் பொத்தி விலகி நின்று பயபக்தியோடு அவரிடம் மரியாதையாகப் பழகினார்கள். சுதர்சனன் இப்படியெல்லாம் தன்னிடம் செயற்கையாகப் பழக மாட்டான் என்பது அடிகளாருக்கு நினைவு வந்தது. சுதர்சனன் விழுந்து கும்பிட மாட்டான். விபூதி வாங்கிப் பூசமாட்டான் என்றாலும் அன்பாக மரியாதையாக, மனத்திலிருப்பதை ஒளிக்காமல், மறைக்காமல் பழகுவான். அவனுக்கு ஏமாற்றத் தெரியாது. நடிக்கத் தெரியாது. வந்தவர்களுக்காக அவரால் மகிழ முடியவில்லை. வராமலிருந்த சுதர்சனனுக்குத்தான் அவர் மனம் ஏங்கிக் கொண்டிருந்தது.

“ஏன் சாமீ. இந்தத் தமிழ் வாத்தியாருங்க எல்லாருமே திமிர் புடிச்சவங்களா இருக்காங்களே? இவங்களுக்கு நீங்க ஏதாச்சும் அறிவுரை சொன்னால் தேவலை சாமி!” என்று இருந்தாற் போலிருந்து அருள் நெறி ஆனந்தமூர்த்தி ஏதோ பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தபோது, “ஆமாங்க! ரொம்ப மோசம்! அவங்களுக்குச் சாமி, பூதத்துல நம்பிக்கை இல்லே. பணிவு கிடையாது. எடுத்தெறிஞ்சு பேசறாங்க” என்றார் உடனிருந்த கவுண்டர். தன் மகனுக்குச் சுதர்சனன் தான் கலப்பு மண ஏற்பாடு செய்தான் என்கிற பழைய கோபத்தில் இன்னும் இருந்தார் கவுண்டர். அவரால் சுதர்சனன் மேலுள்ள ஆத்திரத்தைத் தணித்துக் கொள்ளவே முடியவில்லை.

“இந்த ஊரிலே ஏற்கெனவே ‘அக்ரேரியன் ப்ராப்ளம்’ நிறைய இருக்கு. இங்கே வந்து சூழ்நிலையைக் கெடுக்கிறாப்லே பிரசங்கம்லாம் பண்றாங்க. நம்ம உப்பையே தின்னுட்டு நமக்கே வேட்டு வைக்கிறாங்க. விசுவாசம்கிறதே நாட்டிலேருந்து போயிடிச்சு. பெரிய மனுஷனுக்குச் சாதாரண மரியாதை கூடத் தர மாட்டேங்கிறாங்க ஊரே நல்லா இல்லே” - என்று அழுகுனி வேதாந்தம் போலப் பேசத் தொடங்கினார் அருள்நெறி ஆனந்தமூர்த்தி. இதற்கு அடிகளார் எதுவும் பதில் சொல்லவில்லை.

“சாமி இதையெல்லாம் கண்டிச்சுப் பிரசங்கத்துலே ரெண்டு வார்த்தை ஸ்ட்ராங்காச் சொல்லனும்.”

இதற்கும் அடிகளார் பதில் சொல்லவில்லை. நிலப் பிரபுக்களும், உடைமையாளர்களும், வசதியுள்ளவர்களும், உலகம் தங்களுக்காகவே என்று நினைக்கவும் அதற்கு மாறான சூழ்நிலையை எதிரே சந்திக்க நேர்ந்தால், “எல்லாமே கெட்டுவிட்டது” - என்று பேசவுமாக இருப்பார்கள் என்பதற்கு நிதரிசனமாக இருந்தார்கள் அங்கே கூடியிருந்த ஊர்ப்பிரமுகர்கள். அவர்களுக்குக் கோடிக்கணக்கான அடித்தளத்து மக்களின் சிரமங்களைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லாதிருந்தது அப்போது.”

சரியாகப் பிற்பகல் 3 1/2 மணிக்குப் பள்ளிக்கூடத்துப் ப்யூன் நாதமுனி ஒட்டிய உறையைச் சுதர்சனனிடம் கொண்டு வந்து கொடுத்து டெலிவரி நோட்டுப் புத்தகத்தில் ஞாபகமாகக் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு போனான். தன்னிடம் நாதமுனி அதைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுப் போன புத்து நிமிஷத்துக்குப் பின்புதான் சுதர்சனன் அதைப் பிரித்தான். படித்துப் பார்த்தான். ஆனால் பரபரப்போ பதற்றமோ சிறிதும் அடையவில்லை. சிறிது நேரத்தில் பள்ளி வகுப்புக்கள் முடிவதற்கான மணி அடித்தது. இலக்கிய மன்றவிழா இருந்ததனால் இரு பீரியடுகள் முந்தியதாக இருக்கும்போதே வகுப்புக்கள் கலைவதற்கான நிறைவு மணி அடிக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் மைதானத்தில் கூடத் தொடங்கியிருந்தனர்.

சுதர்சனன் சகஜமாகச் சிரித்துப் பேசியபடியே ஆசிரியர்கள் ஓய்வறையில் அமர்ந்திருந்தான். மற்ற ஆசிரியர்கள் எல்லாம் மன்றக்குடி மகபதி அடிகளாரின் இலக்கிய மன்றக் கூட்டத்திற்காகப் புறப்பட்டபோது சுதர்சனன் மட்டும் போகாமல் விலகி வீடு திரும்பி விட்டான்.

அவர்களுடைய வேலை நீக்கத்திற்கான உத்தரவு பற்றி அவன் கவலைப்படவில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அவனுக்கு இல்லை. ஆனால் அவர்கள் அதைச் செய்த விதமும் அதற்காகக் காட்டிய காரணமும் அவனுக்குச் சரியாகப் படவில்லை. ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்’ - என்று தன்னை நீக்குவதற்காக அவர்கள் போட்டிருந்த காரணம் அவனுக்கு எரிச்சலூட்டியது. தான் செய்யாத குற்றத்தை அவர்கள் தன்மேல் சுமத்தி அனுப்பப் பார்ப்பதை அவன் சகித்துக் கொள்ளத் தயாராயில்லை. நம்பிக்கையான வக்கீல் ஒருவரைக் கலந்து பேசினான். ஆனால் அவருக்குக் கல்வி இலாகா விதிகள் தெரிந்திருக்கவில்லை. ஆதர்சபுரத்திலேயே இருந்த வேறு ஒரு தொண்டு கிழமான ரிடயர்டு எல்.டி.ஹெட்மாஸ்டரை வக்கிலும், சுதர்சனனுமாகப் போய்ப் பார்த்தார்கள். அவரிடமிருந்து கல்வி இலாகா விதிகள் விவரமாகத் தெரிந்தன. அந்த விதிகளின்படி சுதர்சனன் எந்தத் தவறான காரியத்தையும் செய்திருக்கவில்லை என்று தெரியவே வக்கீல் பள்ளி நிர்வாகிக்கும் தலைமையாசிரியருக்கும் நோட்டிஸ் அனுப்பலாம் என்றார். அதைச் சொல்லிவிட்டு, “இதெல்லாம் பண்ணனுமா, அவசியமாங்கிறதை நீங்க ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா யோசியுங்க. உங்களாலே இந்தப் பணக்காரங்களையும் திமிங்கலங்களையும் எதிர்த்து நிற்க முடியும்னா இந்த வம்புலே இறங்குங்க. இல்லாட்டி மூச்சுவிடாமே வேறே எங்கேயாவது வேலை பார்த்துக்கிட்டுப் புறப்பட்டுப் போயிடுங்க” - என்று சுதர்சனனுக்கு ஒர் இலவச அறிவுரையும் கூறினார்.

“எனக்கு இவங்ககிட்டே வேலை பார்த்து ஆகணும்கிறது இல்லே. ஆனால் ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்டினாலே’ தான் நான் வெளியேற்றப்பட்டேன்னு அவங்க புளுகியிருக்கிற புளுகை மட்டும் நான் அப்படியே ஒத்துக்கிட்டுப் போகத் தயாராயில்லே சார்” - என்றான் சுதர்சனன்.

அத்தியாயம் - 11

மன்றக்குடி மகபதி அடிகளார் - பள்ளியின் இலக்கிய மன்றக் கூட்டத்தில் - முதல் வரிசையில் மேடைக்கு எதிராக அமர்ந்திருக்கும் ஆசிரியர்களிடையே தன்னைத் தேடக் கூடும் என்று தோன்றியது சுதர்சனனுக்கு. பழகிய தன் முகத்தை ஒவ்வொரு கணமும் அவருடைய கண்கள் அந்தக் கூட்டத்தின் இடையே துழாவிக் கொண்டிருக்கும் என்பது வக்கீல் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த வேளையிலும் அவனுக்குக் குறிப்பாக ஞாபகம் இருந்தது.

வக்கீல் ராமாநுஜாச்சாரி ஒரு விஷயத்தை மிகவும் கொச்சையாக விசாரித்தார். அடிகளின் சொற்பொழிவு பற்றிய அவன் சிந்தனை அவரது விசாரணையால் கலைந்து விட்டது.

“நீரும் நாயுடு! ஸ்கூல் நடத்தறவாளும் நாயுடு. அப்படியிருந்தும் உங்களுக்குள்ளே எப்பிடி இந்தத் தகராறெல்லாம் வந்தது?”

“தகராறு வர்ரதுக்குக் காரணமான எந்தத் தப்பையும் நான் பண்ணலே சார்! இது அதிகார ஆணவத்துக்கும், ஒரு தனிமனிதனின் சுயமரியாதைக்கும் நடக்கிற யுத்தம். இதிலே என்னை அறவே நசுக்கப் பார்க்கிறாங்க.”

“இதுக்குப் போயி அதிகார ஆணவம் - சுயமரியாதை அது இதுன்னு என்னென்னமோ பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றேளே?”

அந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு வக்கீல் மிரளுவது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதாரணமாக எல்லாரும் கேட்கிற - பேசுகிற வழக்கமான நூறு இருநூறு வார்த்தைகளை அசட்டுச் சிரிப்போடு உபயோகிக்கிற வரை ஒருவனைப் பற்றிப் பேசாமல் விட்டு விடுவதும், அசாதாரணமான வார்த்தைகளை உபயோகிக்கிறவனிடம் பயமும் சந்தேகமும் கொள்வதும் இந்திய மத்தியதர வர்க்கத்தில் இயல்பாக இருந்து வருகிறது என்பது அவனுக்குப் புரிந்த விஷயம்தான். ராமாநுஜாச்சாரி ஒரு மத்தியதரவர்க்கத்து வக்கீல். நல்லது, கெட்டது என்று முன்னோர்கள் நியமித்தவற்றை அப்படியே தொடர்ந்து நல்லது, கெட்டதாக ஏற்றுக் கொள்வதும், விதி, அதிர்ஷ்டம், கடவுள், தெய்வா தினம் எல்லாவற்றையும் கண்ணைமூடிக் கொண்டு நம்புவ துமாக உள்ள ஒரு மனிதர் அவர் என்ப்து சுதர்சனனுக்குப் புரிந்தது. காரண காரியங்களோடு சிந்தித்து நியாயங்களை முடிவு செய்வதை விட ஏற்கெனவே நியமிக்கப்பட்டு விட்ட நியாயங்களை அப்படியே ஏற்கிறவராக ராமாநுஜாச்சாரி இருந்தார். அவருடைய அலுவலக அறையில் தடிமன் தடிமனான சட்டப்புத்தகங்கள், லா ஜர்னல் பைண்டிங்குகள், சுவரை மறைக்கும் புத்தக அலமாரிகள் தவிர வேங்கடாசலபதி படம் சாயிபாபா படம், நன்றிமலை நாகானந்த சுவாமிகள் படம், என்று நிறையச் சாமியார்கள் படங்கள் வேறு இருந்தன.

“தெய்வாநுக்கிரஹம் இருந்தாலொழிய, இந்தக் கேஸிலே நீர் ஜெயிக்க முடியாது. நமக்கு நல்ல வேளை லபிச்சிருந்தா எல்லாம் நன்னா முடியும்! எல்லாம் உம்ம ராசியைப் பொறுத்த விஷயம்.”

சுதர்சனன் உள்ளூறச் சிசித்துக் கொண்டான். தன்னம்பிக்கையிலும், உழைப்பிலும், முயற்சியிலும் அறவே பற்று இல்லாமல் வேளை, ராசி, தெய்வாநுக்ரஹம் என்று அடிக்கடி சொல்லும் படித்த வக்கீல் ஆயிரம் வருஷம் பின் தங்கி வாழ்வதாக அவனுக்குத் தோன்றியது. படித்தவர்கள் எல்லாம் வெறும் பாடப்புத்தகங்களை மட்டும் நெட்டுருச் செய்தவர்களாக இருப்பதுதான் நாட்டின் அபாய நிலை என்று எண்ணினான் அவன். அப்போது அவன் முகத்தில் மெல்லிய சிரிப்பு இழையோடுவதைப் பார்த்து விட்ட வக்கீல் ராமாநுஜாச்சாரி,

“என்ன சிரிக்கிறேள்? மனசிலே படறதைச் சொல்லுங்கோ. நான் சொன்னது சரிதானே? கேஸ் ஜெயிக்கிறதும் ஜெயிக்காததும் உங்க அதிர்ஷ்டத்தைப் பொறுத்த விஷயம்தான்” -என்று மறுபடியும் சொன்னார்.

“அதெப்படி சார்? கேஸ்லே உங்க நியாயம், நீங்க அதைக் கோர்ட்லே எடுத்துச் சொல்லி விவாதிக்கிற முறை, இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு கேஸை ஜெயிக்கவோ தோற்கவோ பண்ணும். அதை விட்டுட்டு என்னென்னமோ சொல்றீங்களே நீங்க?” - அவர் சுதர்சனனின் முகத்தைச் சந்தேகத்தோடு ஏறிட்டுப் பார்த்தார். சுதர்சனனோ மெல்ல மெல்லப் பொறுமை இழந்து கொண்டிருந்தான். அறிவீனத்தோடு சேர்ந்து நிற்கும் அறிவையும், அவ நம்பிக்கையோடு சேர்ந்து நிற்கும் நம்பிக்கையையும், ஒழுங்கின்மையோடு சேர்ந்து தெரியும் ஒழுங்கையும், சோம்பலோடு சேர்ந்து தெரியும் சுறுசுறுப்பையும், தளர்ச்சியோடு சேர்ந்து தெரியும் உழைப்பையுமே எங்கும் பார்க்க முடிந்தது. எவனும் எதையும் தன்னம்பிக்கையோடு செய்யவில்லை. அநுக்ரகத்தையும், விதியையும் மட்டுமே நம்பிக் கொண்டிருக்கிற தேசத்தில் விஞ்ஞானமும், உழைப்பும் எப்படி எப்போது வளரப் போகின்றன என்று மலைப்பாக இருந்தது அவனுக்கு. ஐம்பது கோடி மக்களில் நாற்பத்தொன்பது கோடியும் எஞ்சிய பெரும் பகுதியினரும் வெறும் திண்ணை வேதாந்திகளாகவே வளர்க்கப்பட்டு வருவது ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு எரிச்சலூட்டியது. தலைமையாசிரியர் வாசுதேவன், வக்கீல் ராமாநுஜாச்சாரி. தமிழ்ப்புலவர் பிச்சாண்டியாபிள்ளை எல்லாருமே அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களையுமே திண்னை வேதாந்தமாக மாற்றியிருந்தார்கள். ஏப்பம் விடுவதிலிருந்து வியர்ப்பது வரை இயல்பான நிகழ்ச்சிகளுக்குக் கூடத் தெய்வசங்கல்பத்தைக் காரணம் கற்பித்துப் பேசினார்கள். விஞ்ஞானமும் அறிவுவாதமும், தலைதுாக்காத தேசத்தில் இப்படி ஆஷாடபூதித்தனமும், அறியாமையும் காடாகப் புதர் மண்டி வளர்வதைத் தடுக்க முடியாது போலும் என்று தோன்றியது அவனுக்கு. திடீரென்று வக்கீல் “எதுவுமே இல்லாமே உங்க கேஸ் ஜெயிக்கணும்னா அதுக்கும் ஒருவழி இருக்கு! உங்களுக்கு மணவை மலரெழிலனைத் தெரியுமா?” - என்று கேட்டார்.

“யாருங்க? தெரியாதே?”

“ஆதர்சபுரம் வட்டச் செயலாளரைத் தெரியாமலா இங்கே இத்தனை நாளா இருக்கேள்?”

“என்ன செய்யிறது? தெரிஞ்சுக்காமலே இத்தினிநாள் இருந்துட்டேனுங்களே...”

“அதனாலே பரவாயில்லே, இனிமேலாவது தெரிஞ்சுக் குங்கோ! அவர் பெரிய உபகாரி. பார்த்துப் பண்ணிக்குடுப்பார். லாஸ்ட் இயர் இப்பிடித்தான் என் டாட்டருக்கு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரொம்ப சிரமப்பட்டுது. மலரெழிலன் சார் இல்லேன்னா அது நடந்தே இருக்காது.”

“இப்போ நான் வந்திருக்கிற காரியத்துக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? கல்வி இலாகா சட்டம் கோர்ட் முறைகள் எல்லாம் தெரிந்த ஒருத்தர் கிட்டத்தான் இதைப் பற்றி நான் விசாரிக்க முடியும். எனக்கு வேறே இடத்திலே வேலை கிடைக்காதுங்கிறது இல்லே. இந்த ஊர்லே இந்தப் பள்ளிக்கூடத்திலேருந்து வேலையை விட்டிட்டுப் போறதுக்காக நான் கவலைப்படவும் இல்லே. அநாவசியமா என் பேரைக் கெடுக்கணும்கிற நோக்கத்திலே, ஏதோ ‘ஸீரியஸ் மிஸ் காண்டக்ட்டினாலே’ என்னை இந்த ஸ்கூலை விட்டுத் துரத்தறதாச் சொல்றாங்க. அதைத்தான் நான் ஆட்சேபிக்கிறேன். ‘காண்டக்ட்’னாலே என்னன்னு தெரியாதவங்க தான் என்மேலே இந்தக் குற்றத்தைச் சுமத்தறாங்க.”

“அதைத்தான் நீங்க இங்கே வந்ததிலேருந்து திரும்பத் திரும்பச் சொல்றேளே! எனக்குப் புரியாம இல்லே - நன்னாப் புரியறது, மலரெழிலன் மனசு வச்சார்னா எல்லாத்தையும் கமுக்கமா செட்ரைட் பண்ணிடுவார். அவரை இப்பவே இங்கே வரச் சொல்லட்டுமா? மூணாவது வீட்டிலேதான் குடியிருக்கார்.”

“நீங்க சொல்றதே எனக்கொண்ணும் புரியலே. ஆனா நான் யாரிட்டவும் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்க விரும்பலே.”

“நீங்க ஒண்ணும் பண்ணிக்க வேண்டாம். எல்லாம் தானே சரியாகும். மலரெழிலன்தான் எஜுகேஷன் டிபார்ட் மெண்ட்லே ஆல் இன் ஆல்! இதோ நானே அவரைக் கூப்பிட்டனுப்பறேனே?”

வக்கீல் ராமாநுஜாச்சாரி உடனே யாரிடமோ சொல்லி அனுப்பினார். பரமபக்தரான வக்கீல் ராமாநுஜாச்சாரிக்கும் பகுத்தறிவுவாதியான வட்டச் செயலாளர் மணவை மலரெழிலனுக்கும் எப்படி எதனால் நட்பு இருக்கமுடியும் என்பதைச் சுதர்சனனால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. கொள்கைகளுக்கும் நட்புக்கும் தொடர்பு வைத்து விருப்பு வெறுப்புக் காட்டாத நாகரிக நட்பாகவும் அது தெரியவில்லை. பக்தியின் பெயராலும் பரமார்த்திக் நிலைகளின் பெயராலும் உருவான பழைய வர்க்கங்களும், பேதங்களும் மறைவதற்குப் பதிலாகப் போலியான - கொள்கை பலமில்லாத ஓர் அசட்டுப் பகுத்தறிவு மாயையினால் புதிய வர்க்க பேதங்கள் கிளைத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. புதிய பேதங்களிலும் பண ஆதிக்கமும் செல்வாக்கு ஆதிக்கமுமே பின்னணியாக நின்றன. பத்து நிமிஷத்தில் மணவை மலரெழிலன் வந்து சேர்ந்தார். செண்ட் வாசனை அவரை முந்திக் கொண்டு வந்தது. டெரி காட்டனில் ஒரு முழுக்கைச் சட்டையும் அதற்குமேல் கைத்தறியில் இருவண்ணக் கரையிட்ட துண்டுமாக அவர் தோன்றினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த பத்துப் பன்னிரண்டு பேரடங்கிய ஒரு கூட்டம் வக்கீல் வீட்டுத் திண்ணையிலேயே உட்கார்ந்து விட்டது. இப்படி அரசியல்வாதிகளுக்கு ஒரு வசதி. அவசர அவசரமாக ஒரு கூட்டம் நடத்தவேண்டும் என்றால் கூட உடனிருக்கும் இந்தப் பத்துப் பன்னிரண்டு பேரையே உட்கார வைத்து அவர்களையே கை, தட்டச் சொல்லி விடலாம். கையோடு ஹாண்டியாக ஒரு செட் ஆடியன்ஸையே கூட வைத்துக் கொள்ளும் வசதி திறமை எல்லாம் மணவை மலரெழிலன் போன்ற பேர்வழிகளுக்கு இருந்தது. மிட்டா, மிராசுகள், ஜமீன்தார், நிலச்சுவான்தார்கள் எல்லாம் கொள்கை அளவில் மேலோட்டமாக ஒழிக்கப்பட்டு விட்டது போல் தோன்றினாலும், புதிய பெயர்களில் புதிய நடை உடைகளில் அவர்கள் நாட்டில் தோன்றி உலாவிக் கொண்டிருப்பது எதிரில் கண்கூடாகத் தெரிந்தது.

“வாங்கோ! வாங்கோ!” - என்று வாயெல்லாம் பல்லாக மலர்ந்து எழுந்து நின்று மலரெழிலனை வரவேற்றார் ராமாநுஜாச்சாரியார். சுதர்சனனையும் அறிமுகப்படுத்தி வைத்தார். ஆனால் அவனை பேசவிடவில்லை. அவரே முந்திக்கொண்டு, “சாருக்கு ஒரு ப்ராப்ளம்! உங்களைத் தவிர வேறு யாராலேயும் அதைத் தீர்த்து வைக்க முடியாது. நீங்கதான் இதை முடிச்சுத் தரணும்” - என்று ஆரம்பித்து விட்டார். மலரெழிலன் மேலே கடைசி இரண்டு பித்தான்கள் போடாமலிருந்த தன் நெஞ்சைத் தானே பார்த்துக் கொண்டு முகம் மலர்ந்தார். “என்னன்னு சொல்லுங்க! பார்த்து முடிச்சுப் போடுவோம். நாமே செய்ய முடியாட்டி வேறே யாரு இதெல்லாம் செய்யப் போறாங்க? செய்யறதுக்கு முன்னாடி ‘என்னென்ன விவரம்னு’ எல்லாம் இந்த சார் கிட்டச் சொல்லிட்டீங்கள்ளே? அப்புறம் பின்னாடி வீண் தகராறு கூடாது. முதல்லியே கறாராப் பேசிக்கிட்டா வம்பில்லாம இருக்கும் என்ன? நான் சொல்றது சரிதானே?” - என்றார் மணவை மலரெழிலன்.

இந்த வார்த்தைகளின் மூலம் ஏதோ பேரம் பேசப் படுகிறது என்பது சுதர்சனனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது.

அத்தியாயம் - 12

இந்தக் குதிரையின் மேல் பணம் கட்டினால் ஜெயிக்கும் என்று கூறுகிறவர்களைப்போல் மணவை மலரெழிலன் போன்றவர்கள் அரசாங்கத்தையே ஒரு குதிரைப் பந்தயமாக நடத்தி ஜெயிக்கிற குதிரைகளின் மேல் பணம் கட்ட ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். ஏழைகள் - மேட்டுக்குடி மக்கள் என்று பிரித்துப் பிரித்துப் பேசியே தன்னளவில் தானும் ஒரு புதிய மேட்டுக் குடி ஆகிவிட முயலும் ஒரு சம காலத்து நவீன வர்க்கம் சுதர்சனனுக்குத் தெரிந்தது. அவன் அந்த வக்கீல் இராமநுஜாச்சாரியிடமிருந்தும், மணவை மலரெழிலனிடமிருந்தும் தப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. அவன் முன்பு ஐயாவிடமே ஒருமுறைக்கு நேருக்கு நேர் வாதாடியிருந்தான்.

“ஐயா தயாரித்தனுப்பிய சீர்திருத்தவாதிகளில் பலர் சாமியை நம்பமாட்டேன்னிட்டு அதே சமயத்திலே பணத்தையே சாமியாக நம்பிக் கும்பிடறாங்க. சாதி கிடையாதுன்னிட்டு ஊரூராய் பணம் படைச்ச பெரிய மனுஷனைத் தனிச் சாதியா உயர்த்தி மதிச்சிக் கும்பிட்டு மரியாதை பண்றாங்க. சாமியைக் கும்பிடறதில்லே. அதே சமயத்திலே வசதியுள்ளவனைக் கண்டு பயந்து மதிக்கறாங்க. இதெல் லாம் என்னாலே ஏத்துக்க முடியலே”

“என்ன செய்யிறது தம்பி! நம்பளவங்கள்ளேயே பலர் சுயமரியாதை இயக்கத்தைச் சரியாப் புரிஞ்சுக்கலே. பழைய ஜஸ்டிஸ் பார்ட்டி ஆளுங்க பல பேரு அப்படியே இதுக்கு உள்ளாரவும் வந்துட்டாங்க. அவசரப் பட்டா ஒண்ணும் ஆகாது. கொஞ்சம் பொறுத்துக்குங்க. நிதானமா எல்லாம் படிப்படியா மாத்திடலாம்” என்றார் அவர். அவர் மேல் மதிப்பிருந்தும் சுதர்சனன் அவருடைய வாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மறுத்தான்.

“‘சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்’னு சொன்ன பாரதியார் உங்களுக்கு முன்னாடியே நீங்க சொன்னதை நல்லாச் சொல்லியிருக்காரு. ‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே. வெள்ளைப் பறங்கியைத் துரையென்ற காலமும் போச்சே’ன்னு சொன்ன பாரதி பழைய மேல் வர்க்கத்தையும் காலணி ஆதிக்கம் என்ற வைதிக மனப்பான்மையால் உலகைச் சுரண்டிய புதிய பார்ப்பனர்களாய் உலகில் உருவெடுத்த வெள்ளைக்கார வர்க்கத்தையும் இணைத்தே சாடியிருக்கிறான். இன்னும் கூடப் பொருளாதார அடிப்படையில் வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்க மறுக்கிறீர்கள். உங்களுக்கு வசதியான - நீங்கள் சுரண்டுவதற்கு ஏற்ற ஒரு கோணத்திலேயே கால் நூற்றாண்டாக வர்க்க பேதத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். விமர்சிக்கிறீர்கள். பூணூல் அணிந்தவர்கள் பிறப்பால் தான் பார்ப்பனர்கள். பூணூல் அணியாதவர்கள் பலரிலும் பார்ப்பனீயம் உண்டு. பூணூல் அணிந்தவர்களிலும் பார்ப்பனியம் இல்லாதவர்கள் உண்டு. சாதிகள் வர்க்கங்கள் அனைத்தும் ஒழிய வேண்டுமே ஒழிய ஒரு சாதி மட்டும் ஒழிந்து மற்றச் சாதிகள் வர்க்கங்கள் நீடிக்கக்கூடாது.”

ஐயா ‘அவனுடைய வாதம் இயக்கத்தைப் பலப்படுத்தப் பயன்படாது’ என்றார். அன்று முதல் மெல்ல ஐயாவிடமிருந்து வழி விலகிப் பரந்த சமத்துவத்தையும் மிக விசாலமான அபேத வாதத்தையும் நாடி வருவதற்கு இந்த வாதம் சுதர்சனனுக்குப் பயன்பட்டது. அவனுடைய மனத்தில் உலகளாவிய சுய மரியாதையும் உலகளாவிய அபேதவாதமும் பதிந்தன. ஐயாவிடம் தயாரானவர்கள் பொறுப்புக்கு வந்து வாரிசுகளாக நிர்வாகம் செய்யத் தொடங்கிய போது லஞ்சம், ஊழல், சுரண்டல் எல்லாமே முன்னெப்போதும் இல்லாத வகையில் தாண்டவமாடத் தொடங்கியதனாலே அவர்கள் மெய்யான சுயமரியாதைவாதிகள் இல்லை என்று அவன் உணரத் தொடங்கினான். மணவை மலரெழிலனைச் சந்தித்தபோது மறுபடி இந்தப் பழைய விஷயங்கள் எல்லாம் சுதர்சனனுக்கு இன்று நினைவு வரத் தொடங்கின. ‘ஒப்பில்லாத சமுதாயம் - உலகத்துக் கொரு புதுமை’- என்று பாரதி பாடிய புதுமைச் சமுதாயம் - பொதுமைச் சமுதாயம் வரவேண்டும் என்று ஆசைப்பட்டான் சுதர்சனன்.

ஆதர்சபுரம் வந்திருந்த மன்றக்குடி மகபதி அடிகளார் அன்றிரவு எப்படியும் தன்னைக் கண்டு பேச முயல்வார் என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. பள்ளியிலிருந்து தான் விலக்கப்பட்டு விட்ட செய்தியை நிர்வாகிகளோ, தலைமை ஆசிரியரோ அடிகளாரிடம் சொல்லியிருப்பார்களா அல்லது பூசி மெழுகியிருப்பார்களா என்பதை அவனால் இன்னும் அநுமானம் செய்ய முடியாமல் இருந்தது. தான் விலக்கப் பட்டுவிட்டதை அவரிடம் சொன்னால் அவரே அந்தப் பிரச்னையில் தலையிட்டு ஏதாவது சிபாரிசுக்கு வரக்கூடும் என்ற பயத்தில் அல்லது முன்னெச்சரிக்கையில் அவர்கள் அதை அவரிடம் கூறியிருக்க மாட்டார்கள் என்று தான் முடிவில் தோன்றியது. அதுதான் சத்தியம் என்றும் தோன்றியது. இலக்கிய மன்றத்தில் பேச அடிகளார் வந்தபோது பள்ளியில் என்னென்ன நடந்திருக்கக்கூடும் என்று சிந்தித் தான் அவன். தலைமையாசிரியர் தம்முடைய வழக்கப்படி பூர்ணகும்ப மரியாதையோடும் மேளதாளத்தோடும் அடிகளாரைப் பள்ளிக்குள் வரவேற்றிருப்பார். மாணவர்கள் முன்னிலையில் அடிகளார் ஒன்றரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தமிழ் மொழியின் தனிச்சிறப்பு, திருக்குறளின் உயர்வு எல்லாவற்றையும் பற்றி முழங்கியிருப்பார். கூட்ட முடிவில் தலைமைத் தமிழாசிரியர் பிச்சாண்டியாபிள்ளை - அடிகளாரைச் சந்தித்து “இன்னிக்கி உங்க பேச்சு ரொம்பப் பிரமாதங்க! எல்லாக் கருத்தையும் கோவையா அழகாச் சொல்லிட்டீங்க” என்று புகழ்ந்து விட்டு அப்புறம், “அடுத்த மாதம் ஆலம்பட்டியிலே ஒரு பட்டி மன்றம் ஏற்பாடாகியிருக்கு. அதுக்கு சாமிதான் தலைமை தாங்கணும்னு அந்த ஊர்க்காரங்க ஆசைப்படறாங்க. நீங்க கண்டிப்பா ஒத்துக்கணும்” - என்று வேண்டியிருப்பார்.

பட்டிமன்றத்துக்குத் தலைமை தாங்குவதைப் பொறுத்து அடிகளாருக்கு ஒரு கிராக்கி இருந்தது. எல்லாப் பட்டிமன்றங்களிலும் பாங்க் பாலன்ஸ் ஷீட் போல ஐந்தொகை போட்டுச் சமத்காரமாகத் தீர்ப்புச் சொல்வதில் வல்லவர் அவர். அவ்வப்போது ஜனங்களுக்குச் சில இனிய அதிர்ச்சிகளையும் அளிக்கவல்ல திறமை அவருக்கு இருந்தது.

‘மக்களுக்கு நலம் தருவது இல்லறமா துறவறமா?’ என்று தலைப்பு இருந்தால் அடிகளார் ‘நலம் தருவது இல்லறமே’ - என்று தீர்ப்பளிப்பார். ‘வாழ்வுக்கு இன்பம் தருவது காதலா, தியாகமா?’ - என்றிருந்தால் அடிகளார் ‘காதலே’ - என்று தீர்ப்பளிப்பார். கேட்கின்ற பொது மக்களுக்கு அவர் நிர்தாட்சண்யமாகத் தீர்ப்புச் சொல்கிறார். என்பது போல, ஒரு வியப்பை இது உண்டாக்கும். “காதல் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு அரணாக மூன்று கருத்தைச் சொன்னார்கள். தியாகம் தரப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் கட்சிக்கு அரணாக இரண்டு கருத்துக்களை மட்டுமே சொன்னார்கள். மூன்றிலிருந்து இரண்டைக் கழித்தால் ஒன்று மீதப்படுகிறது. இரண்டு கட்சிகளின் வாதங்களிலும் இருந்த பலங்களையும், பலவீனங்களையும் கழித்து விட்டுப் பார்க்கும்போது காதல் கட்சியே வலிமையாகத் தோன்றுகிறது. ஆகவே காதல் வெற்றி பெறுகிறது. காதலுக்குத் தியாகம் விட்டுக் கொடுக்கிறது” என்று அடிகளார் நாசூக்காகத் தீர்ப்புச் சொல்லி முடித்ததும் கை தட்டல் ஓய்வதற்குப் பத்து நிமிஷம் பிடிக்கும். ‘கண்ணகியின் கற்புச் சிறந்ததா? மாதவியின் கற்புச் சிறந்ததா?’ என்று தலைப்பு இருந்தாலும் எப்படியாவது சுற்றி வளைத்து வாதங்களைக் கற்பித்து நியாயங்களைத் தேடி ‘மாதவியின் கற்பே சிறந்தது’ என்று அடிகளார் முடிவு கூறுவார். மக்களைத் தேடிச் சென்று அவர்கள் குறை நிறைகளைத் தாம் கவனித்து உதவினார் என்பதைவிட மக்கள் தம்மைத் தேடி வந்து தமக்கு உதவும்படியும் தம்மைப் புகழும்படியும் செய்து கொண்டிருந்தார் அடிகளார். அவர் ஒவ்வொரு வகையான மக்களுக்கும் தக்க விதமாகக் காண்பித்து மலருவதற்கு ஒவ்வொரு முகம் வீதம் பல முகங்கள், பல சிரிப்புக்கள், பல பாணிகள் வைத்திருந்தார். ஒரு சாமியார் இவ்வளவு ‘வெறைட்டி’யோடு இருக்கிறாரே என்று மக்களும் மூக்கில் விரலை வைத்து வியந்தார்கள். மக்கள் வியக்கவும், பிரமிக்கவும் தொடங்கவே சாமியாரும் அதே வகை வியப்பையும், பிரமிப்பையும் புகழாக மாற்றிக் கேஷ் பண்ணத் தொடங்கியிருந்தார். வரவு பிரமாதமாக இருந்தது. நிறைய நிகர லாபமும் கிடைத்தது.

முதலில் தானும் சிறிது காலம் ஐயாவிடமும், வேறு சிலரிடமும் வியப்புக் கொண்டதைப் போல் இந்த மகபதி அடிகளாரிடமும் வியப்புக் கொண்டிருந்தது சுதர்சனனுக்கு நினைவு வந்தது. பின்னால் நிலப்பிரபுக்களின் நண்பராகவும் முதலாளிகளின் விசுவாசியாகவும் பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்கு மட்டுமே முற்போக்கு, சீர்திருத்தம், என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறவராகவும் இந்த அடிகளார் இருப்பதைச் சுதர்சனன் கண்டு பிடித்திருந்தான்.

அவன் எதிர்பார்த்தது போல் அன்றிரவு பதினொரு மணிக்குமேல் ஊரடங்கியதும் மகபதி அடிகளாரின் கார் இரகசியமாகச் சுதர்சனனின் வீட்டைத் தேடி வந்தது.

அத்தியாயம் - 13

தேடி வந்திருந்த அடிகளாரின் கார் டிரைவர் சிரித்தபடியே சுதர்சனனை நோக்கிக் கூறலானான்:

“இப்போ நீங்க வர்ரீங்களா இல்லாட்டிச் சாமியே இங்கே உங்களைத் தேடிக்கிட்டு வரட்டுமான்னு கேட்டிச்சு. என்ன சொல்றீங்க?” என்று அதே காரில் வந்திருந்த அடிகளாரின் காரியஸ்தன் கேட்டபோது சுதர்சனனுக்கு உடனே என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை. தான் போகாமலிருந்து விட்டால் சொன்னபடியே அவர் வந்தாலும் வந்து விடுவார் என்பது நிச்சயம், அந்த அகால வேளையில் அக்கம்பக்கத்தார் வந்து நெருங்கிக் கூட்டம் போடும்படி தன் வீட்டுக்கு அவரை வர விடுவது அநாவசியம் என்று அவனுக்குத் தோன்றியது. ஒன்று ஆதர்சபுரம் ஜமீன்தார் உயர்நிலைப் பள்ளியிலிருந்து தன்னை நீக்கி விட்ட விவரம் தெரிந்து அடிகள் கூப்பிட்டனுப்பியிருக்க வேண்டும். அல்லது தான் அன்று பள்ளிக்குப் போயிருந்தும் அவருடைய இலக்கிய மன்றப் பேச்சுக்குத் தங்கி இராமல் வீட்டுக்குத் திரும்பி புறப்பட்டுப் போய்விட்டதை உணர்ந்து அது பற்றிக் கேட்பதற்குக் கூப்பிட்டனுப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. தயக்கத்தோடு சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு காரில் புறப்பட்டுச் சென்றான் அவன். அருள்நெறி ஆனந்தர் மூர்த்தியின் வீட்டில் அடிகளார் தங்கியிருந்ததால் வேண்டா வெறுப்பாக அந்த மாளிகைக்குள் சுதர்சனன் நுழைய வேண்டியிருந்தது. தன்னைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிற அடிகளார் மேல் அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது, அந்தக் கோபத்தை யார் மேலும் வெளிப்படையாகக் காட்டவும் முடியவில்லை.

“வாங்க சார்! அடிகளார் மாடியிலே இருக்காரு. போய்ப் பாருங்க. ரொம்ப நேரமா உங்களைப் பற்றித் தான் விசாரிச்சுக்கிட்டிருக்காரு” என்று எந்த விரோதமும் இல்லாத ஒருவர் வரவேற்பதுபோல் அவனை அங்கே வரவேற்றார் ஆனந்தமூர்த்தி, பணக்காரர்களின் நாசூக்கும் வளைந்து கொடுக்கும் ரப்பர்த் தன்மையும் அவர்களுக்கு எப்படி எப்படி எல்லாம் பிறரை ஏமாற்றுவதற்கும் பயன்படுகின்றன என்பதைச் சுதர்சனனால் அப்போது நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

“ரொம்பப் பெரிய புரட்சியவாதியா ஆயிட்டீங்க போலிருக்கு! இனிமே என்னையெல்லாம் பார்க்கத் தோணாதுதான். என் பேச்சு எல்லாம் பிடிக்காதுதான்” என ஆதங்கத்தோடுதான் அவனை வரவேற்றார் மகபதி அடிகள்.

“எதைச் சொல்றீங்க? ஸ்கூல் ஃபங்ஷ்னைச் சொல்றீங்களா? நான் எப்பிடி அதுக்கு வர முடியும்? இன்னிக்குப் பிற்பகல்லேருந்து நான் ஆதர்சபுரம் ஸ்கூல்லே வேலை பார்க்கலிங்களே; என்னை டிஸ்மிஸ் பண்ணினப்புறம் நான் எப்பிடி அங்கே வரமுடியும்?” சொல்லிவிட்டுச் சுதர்சனன் அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். சுதர்சனன் இப்படி மறுமொழி கூறியதும் அடிகளார் பரக்கப் பரக்க விழித்தார். அவன் சொன்ன விவரத்தை அவர் அதற்குமுன் அறிந்திருக்கவில்லை என்று தோன்றியது. ஜமீன்தாரும், தலைமையாசிரியரும், ஆனந்தமூர்த்தியும் தனது வேலை நீக்கத்தைப் பற்றித் தந்திரமாக அவரிடம் சொல்லாமல் மறைத்திருந்தார்கள் என்றும் சுதர்சனனுக்குத் தோன்றியது.

“அடப்பாவமே! இதை என்னிடம் யாருமே சொல்லலியே? நான் திரும்பத் திரும்ப விசாரிச்சப்போவாவது அவங்க இதைச் சொல்லியிருக்க வேணாமோ?”

“சொல்லியிருக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். வீணா நான் உங்களைப் பார்க்கிறது மூலம் நீங்க மறுபடி என்னை வேலைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்லி அவர்களை வற்புறுத்துவீங்களோங்கிற - பயத்தையும் தர்ம சங்கடத்தையும் அவங்களுக்கு உண்டாக்கக் கூடாதுன்னு தான் நானும் உங்க முன்னாலே தட்டுப்படலே?”

“கவலை வேண்டாம்! இப்பவே அதைச் சரிக்கட்டிடலாம். நான் நம்ப ஆனந்தமூர்த்திகிட்டவும் முடிஞ்சா ஜமீன்தாரிட்டவும் இப்பவே பேசறேன்! வேலை மறுபடி கிடைச்சிடும்.”

சரிக்கட்டறதெல்லாம் எனக்குப் பிடிக்காது. சரிக்கட்டற முயற்சிக்காகவும் நான் இங்கே வரலே. நான் வராட்டி நீங்க அங்கே என்னைத் தேடிக்கிட்டு வந்துடுவீங்கன்னாங்க. அகாலத்திலே உங்களைச் சங்கடப்படுத்தக் கூடாதுன்னுதான் இங்கே வந்தேன்!”

“அதெல்லாம் சும்மா முரண்டு பிடிக்கப் படாது சுதர்சனம் நான் என் செல்வாக்கைப் பயன்படுத்தி இதே வேலையைத் திரும்ப வாங்கித் தரேன். நான் சுமுகமாக எடுத்துச் சொல்லி அவங்களை எல்லாம் சரிப்படுத்தினப்புறம் நீ மாட்டேன்னு உதறி என் முகத்திலே கரியைப் பூசிடக் கூடாது.”

“நீங்க இப்பிடிப் பயப்படறதாலேதான் நான் உங்களை எனக்காக எதுவும் பண்ண வேணாம்னு சொல்றேன்.”

“நாளைக்கு நீதான் கஷ்டப்படுவே. இதிலே எனக் கொண்ணும் இல்லே...”

“கஷ்டப்படக் கூடாதுங்கிறத்துக்காக மான நஷ்டப்பட நான் தயாராயில்லே.”

“தமிழனுக்குத் தமிழன் மான நஷ்டப் படறதிலே தப்பில்லே...”

“என்ன சொல்றீங்கன்னு புரியலேயே? இனவுணர்ச்சி, மொழி உணர்ச்சி, சாதி உணர்ச்சி இதையெல்லாம் துறவியா இருக்கிற நீங்களே அடிக்கடி தூண்டினா எப்பிடி? உலகத்திலே ரெண்டே இனம்தான். உண்டு. நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன். உழைக்கிறவன், சுரண்டுகிறவன்னுதான் இனிமே இனங்களைப் பிரிக்கணும்.”

“தமிழனுக்குத் தமிழன் விட்டுக் கொடுக்கப்பிடாது.”

“இன்னும் நீங்க ஜஸ்டிஸ் கட்சிக் காலத்திலேயே இருக் கிங்க...”

“சும்மாக் குதர்க்கம் பேசிப் பிரயோசனமில்லே. இந்த வேலை திரும்பவும் வேணுமா இல்லியா? அதுக்குப் பதில் சொல்லணும்.”

“வேலை வேணுமா, வேணாமான்னு பட்டி மன்றத் தலைப்பு மாதிரிச் சுலபமாக் கேட்கிறீங்க? இந்த கேள்விக்கு அத்தனை சுலபமாத் தீர்ப்புச் சொல்ல முடியாதுங்க.”

அடிகளார் அவனை உறுத்துப் பார்த்தார். அவன் பட்டி மன்றத் தலைப்பு மாதிரி என்று ஒப்பிட்டதன் மூலம் தன்னைக் குத்திக் காட்டுவதாக அவர் புரிந்து கொண்டு விட்டார். பல பட்டி மன்றங்களுக்குத் தானே கைப்படக் கடிதம் எழுதிச் சிபாரிசு செய்தும் அவன் அவற்றுக்கு ஒப்புக் கொள்ளாமல் மறுத்திருப்பது அவருக்கு நினைவு வந்தது. சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் அவர். அவனும் மெளனமாக எதிரே உட்கார்ந்திருந்தான். அருள் நெறி ஆனந்தமூர்த்தி வீட்டுச் சமையற்காரன் ஒரு தட்டு நிறைய ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம் எல்லாவற்றையும், இன்னொரு பெரிய வெள்ளிக் கூஜா நிறையக் குங்குமப்பூ, பாதாம் பருப்புப் போட்டுக் காய்ச்சி வாசனை கமகமக்கும் பாலும் கொண்டு வந்து அடிகளுக்குப் பக்கத்தில் வைத்தான்.

“என்ன சுதர்சனன்? சாப்பிட்டாச்சா இல்லியா? ஏதாவது கொண்டு வரச் சொல்லட்டுமா? ஒண்ணும் கூச்சப்படத் தேவையில்லை...”

“வீட்டிலேயே நான் சாப்பிட்டாச்சுங்க ஒண்ணும் வேணாம்” இந்தப் பதிலைச் சுதர்சனன் விரைந்து முந்திக் கொண்டும் அவசரமாகவும் கூறினான். தான் பரிவோடும் பாசத்தோடும் வினாவிய ஒரு வினாவை - அவன் விரைந்து தன் பதில் மூலமாகக் கத்தரித்த விதம் அவருக்கு என்னவோ போலிருந்தது. ஆனந்தமூர்த்தி போன்றவர்களின் வீட்டில் உண்ண உட்கார விரும்பாத அவனுடைய ஜாக்கிரதை உணர்வு அவருக்கு அதில் தெளிவாகத் தெரிவது போலிருந்தது.

‘இப்படிப்பட்ட சுரண்டல் பேர்வழிகளின் வீட்டில் தங்குவதும், சாப்பிடுவதும் உங்களுக்கு வேண்டியதுதான். எனக்கு ஒன்றும் அவசியமில்லை’ என்று சுதர்சனன் தன்னையே குத்திக் காட்டுவது போலவும் அடிகளாருக்குத் தோன்றியது. இனம், மொழி என்பது போன்ற குறுகிய வட்டங்களில் இனிமேல் யாரும் அவனை வலைவீசிப் பிடிக்க முடியாது என்பதும் புரிந்தது. திடீரென்று அவனுக்கு முன்னால் தான் மிகவும் சிறிய பொருளாகி விட்டாற்போல் ஒரு தாழ்வு மனப்பான்மையும் அவருக்கு ஏற்பட்டது. பண வசதி, ஆள் பலம், புகழ், அந்தஸ்து எதுவுமே இல்லாத சுதர்சனன் மிக மிக உயரத்தில் இருப்பது போலவும், அவையெல்லாம் இருந்தும் தன்னிடம் எதுவுமே இல்லாதது போலவும் அவர் அப்போது தமக்குத்தாமே உணர்ந்தார். அவர் அவனைக் கேட்டார்:

“சரி! இதெல்லாமாவது போகட்டும். ‘ஆதீனப் புலவர்’னு ஒரு வேலை போட்டு ஒரு முந்நூறு ரூபாய் மாசா மாசம் நானே சன்மானம் குடுத்திடறேன். எங்கூட வந்திட லாமில்லியா? இங்கே தமிழ் பண்டிட்டா இருந்து வாங்கின அதே சம்பளத்தை நான் தந்துட்டாச் சரிதானே?”

“நீங்க சொல்றீங்க. ஆனால் அதெப்படிங்க சாத்தியம்? நான் சமய நம்பிக்கை, கடவுள் நம்பிக்கை இல்லாதவன். நீங்கள் இரண்டுங் கலந்தவர். அதனால் ஆதீனத் தலைவர்ங்கிற முறையிலே சைவசித்தாந்தம் - சிவஞான சித்தியார் - பரபக்கம், சுபக்கம், கைவல்ய நவநீதம் அது இதுன்னும் பேசுவீங்க. சமய சமயங்களிலே, இங்கர்சால், கார்ல்மார்க்ஸ், லெனின்னும் பேசுவீங்க. என்னாலே அப்படி ரெண்டு முகத்தோட இருக்க முடியாது. ஒரு பொருள்முதல்வாதிக்கு ஆதீனச் செலவிலே நீங்க சம்பளம் கொடுக்கிறதோ நான் வாங்கறதோ நல்லா யிருக்காது...”

“அதை முடிவு செய்ய வேண்டியவன் நான்தான் சுதர்சனம். என்னை யாரும் மடத்திலே தட்டிக் கேட்கப் போறதில்லே...”

“இருக்கலாம். ஆனா ஆத்திகனுடைய - ஆத்திக ஸ்தாபனத்தினுடைய செலவிலே நான் நாத்திகப் பிரச்சாரம் செய்யமாட்டேன்.”

“இதுக்கு என்னா அர்த்தம் சுதர்சனம்? நான் இப்போ அப்படிச் செய்துகிட்டிருக்கேன்னு அர்த்தமா?”

“அதை விவாதிக்க நான் இங்கே வரலிங்க! நீங்க கூப்பிட்டனுப்பிச்சிங்க. வந்தேன். இலக்கிய மன்றக் கூட்டத்துக்கு ஏன் நான் வரலேன்னு காரணம் கேட்டீங்க. சொல்லிட்டேன்? நான் வரேன்” என்று கூறிவிட்டுச் சரேலென்று எழுந்து அவர் விடை கொடுப்பதற்குக் கூடக் காத்திராமல் சுதர்சனன் அங்கிருந்து வெளியேறிவிட்டான். அதன் பிறகு அங்கு என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. மறுநாள் காலை விடிந்ததும் விடியாததுமாகத் தலைமையாசிரியர், அவனைத் தேடி வந்தார். பெரிய கும்பிடாகப் போட்டார்.

“நடந்த அசம்பாவிதங்களுக்காக எங்களை ரொம்ப மன்னிக்கணும். அடிகளார், ஆனந்தமூர்த்தி எல்லோருமாகச் சேர்ந்து ஜமீன்தார்வாள்கிட்டச் சொல்லி ஜமீன்தார்வாளும் உடனே என்னைக் கூப்பிட்டு உங்களை மறுபடி ஸ்கூல்லே ‘ரீ இன்ஸ்டேட்’ பண்ணச் சொல்லிட்டா. டெர்மினேஷன் ஆர்டரை உடனே கேன்சல் பண்ணிடறேன். உடனே நீங்க எப்பவும்போல இன்னிக்கே மறுபடி ஸ்கூலுக்கு வரணும்.”

“அதெப்படி? நீங்க டிஸ்மிஸல் ஆர்டர் கொடுத்தீங்க. இமறுபடி ரீ இன்ஸ்டேட் பண்ணி ஆர்டர் கொடுங்க. சும்மா கொடுத்தா மட்டும் போதாது, ஸீரியஸ் மிஸ் காண்டக்ட் அது இதுன்னு சார்ஜ் ப்ரேம் பண்ணினீங்களே, அதை எல்லாம் வாபஸ் வாங்கிட்டு ஆர்டர் தரணும்...”

“எல்லாம் டைப் ஆயிண்டிருக்கு. உடனே அனுப்பறேன். நீங்க ஆர்டரை வாங்கிண்டு இன்னிக்கே கண்டிப்பா ஸ்கூலுக்கு வாங்கோ, போறும்.”

சுதர்சனன் ‘சரி’ என்பதற்கு அடையாளமாகத் தலையை அசைத்தான். அவர் போய்ச் சேர்ந்தார். அவர் போன் ஒருமணி நேரத்துக்கெல்லாம் பள்ளி ப்யூன் நாதமுனி ஆர்டரோடு வந்து சேர்ந்தான். சுதர்சனன் நிபந்தனை போட்டப்படியே ஆர்டர்கள் இருந்தன. கையெழுத் திட்டு ஆர்டரை வாங்கிக் கொண்டான். பத்து மணிக்கு ஸ்கூலுக்கும் போனான். அட்டெண்டன்ஸில் கையெழுத்துப் போட்டுவிட்டு அரை நாள் வேலை செய்தான். பிற்பகல் இரண்டு மணிக்கு யாரும் எதிர்பாராதவிதமாக இராஜிநாமாக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறினான். பகல் சாப்பாட்டை முடித்துக்கொண்டு வீட்டைக் காலி செய்து கொண்டு புறப்படும் நோக்குடன், பண்டங்களை ஒழிக்கத் தொடங்கினான். தகவல் தெரிந்து சுயமரியாதை மன்ற உள்ளூர்ச் செயலாளர் பன்னீர்செல்வம் வந்தான். வரும்போதே கோபத்துடன் தான் வந்தான் அவன்.

“என்னண்னே! ஏதோ கேள்விப்பட்டேன். நெஜந்தானா? கூட்டம் போட்டு ஹெட்மாஸ்டர் குலப் புத்தியைக் காமிச்சிட்டாருன்னு பேசட்டுமா?”

“சே! சே! நீ பேசற பாணியே எனக்குப் பிடிக்கலே! உனக்கு வேண்டாத ஒரு சாதிக்காரனே எல்லாத் தப்புக்கும் காரணம்னு பேசிப் பேசியே நீ பழகியாச்சு. முதல்லே அதை மாத்திக்க நீ பழகணும். தப்புப்பண்றவன் எல்லாச் சாதிலியும் இருக்கான். ஹெட்மாஸ்டரு அப்பாவி. முந்தா தாள் ஜமீன்தாரு என்னைப் போகச் சொன்னாரு மறுபடி அடிகளார் தலையிட்டு இன்னிக்கிக் காலையிலே புது ஆர்டர் கொடுத்தாங்க. மதியம் நானே இராஜிநாமாப் பண்ணிட்டேன்.”

“விடுதலைலே போடச்சொல்லி நியூஸ் அனுப்பட்டுமா? ‘ஹெட்மாஸ்டரின் இனவெறி’ன்னு முதல் பக்கத்திலே வரும்...”

“திரும்பத் திரும்ப உளறாதே பன்னீர்செல்வம்! இந்த ஹெட்மாஸ்டரு வாயில்லாப் பூச்சி. போடறதானா ‘ஜமீன்தாரின் தர்பார்’-னு போடு, போட முடியுமா? நீயும் உங்க தோழர்களும் முப்பது வருஷமா ஒரே சாதிக்காரனைத் திட்டித் திட்டி மட்டுமே பழகிட்டீங்க. ஜமீன்தார் அந்த ஜாதி இல்லே. அதனாலே நியூஸ் வராது. தீங்கு செய்யறது ஒரே ஜாதியாத்தான் இருக்கணும்னு தீர்மானமா வச்சிருக்கீங்க” என்று சொல்லியபடியே சுவர்ப்படங்களைக் கழற்றிக்கொண்டிருந்த சுதர்சனம், “இந்தா! பக்கத்து ஊர்ப் பகுத்தறிவாளர் மன்றத்திலே வைக்க ஐயா படம் வேணும்னியே? இந்தப் படத்தை என் அன்பளிப்பா வச்சுக்க” என்று பன்னீர்செல்வத்திடம் கொடுத்தான். “ஏன் உங்களுக்கு வேணாமா அண்ணே?” - என்று வினவினான் பன்னிர்செல்வம்.

“எனக்கு இது ரெண்டும் போதும்” என்று கையிலிருந்த கார்ல் மார்க்ஸ் படத்தையும், லெனின் படத்தையும் காட்டினான் சுதர்சனன். பன்னீர்செல்வம் தயக்கத்தோடும் சம்சயத்தோடும் சுதர்சனனிடமிருந்து ஐயா படத்தைத் தன் கையில் வாங்கிக் கொண்டான்.

“எங்கண்ணே போகப் போறீங்க?”

“மெட்ராஸ் போறேன். அங்கே என் நண்பர் ஒருத்தரு டூட்டோரியல் காலேஜ் வச்சிருக்காரு. அதுலே இவ்வளவு சிரமம் இருக்காது. நெறைய சுதந்திரம் இருக்கும். முன்னாடியே நண்பர் கூப்பிட்டாரு. படிச்சுப் பாஸ் பண்ணின உடனேயே டூட்டோரியல்லே நுழைய வாண்டாம்னு பார்த்தேன். இப்போ அதுவே தேவலாம் போலத் தோணுது...”

“என்னை எல்லாம் மறந்துடாதீங்க. மெட்ராஸ் வந்தாப் பார்க்கிறேன், முகவரி கொடுத்திங்கன்னா நல்லது. ஒரு பிரிவுபசாரம் நடத்தலாம். நம்ம கழகத் தோழர்களுக்குத் தகவல் சொல்லக்கூட அவகாசம் இல்லாமல் அவசரமாப் புறப்படறீங்க நீங்க...”

“அதெல்லாம் வேண்டாம். இந்தா என் நண்பனோட முகவரி. இது மாறி வேற இடத்திலே தங்கினா உனக்கு மறுபடி எழுதறேன்.”

ஒரு மணி நேரத்தில் பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்துப் பிரயாணத்துக்குத் தயாராகி விட்டான் சுதர்சனன்.

அத்தியாயம் - 14

ஆதர்சபுரத்திலிருந்து பக்கத்து நகரத்திற்குப் பஸ் பிரயாணம் செய்து அன்றைய மாலை இரயிலையே பிடிப்பது சற்றுச் சிரமமாகத் தான் இருந்தது. ஆனாலும் இரயிலைப் பிடித்து இடமும் கிடைத்து விட்டது.

சுதர்சனன் மறுநாள் காலை சென்னை எழும்பூரில் இறங்கியபோது நன்றாக விடியக்கூட இல்லை. சட்டைப் பையிலிருந்து நண்பனுடைய டூட்டோரியல் கல்லூரி விலாசத்தை எடுத்துப் பார்த்தபோது பெல்ஸ் ரோடு - திருவல்லிக்கேணி என்று இருந்தது.

போர்ட்டர் வைத்துக் கொள்ளாததனால் கையில் பெட்டி படுக்கையோடு மியூஸிகல் சேர் விளையாட்டுக்கு ஓடுகிற மாதிரி இங்கும் அங்கும் ஓடி ஓர் ஆட்டோ ரிக்ஷா பிடித்தபின் அவன் சுதர்சனனிடம் மீட்டருக்கு மேல் இரண்டு ரூபாய் கூடக் கொடுத்தால்தான் திருவல்லிக்கேணிக்கு வரமுடியுமென்று நிபந்தனை போட்டான். நம்பிக்கையோடு பெட்டி படுக்கையை ஆட்டோவுக்குள் வைத்திருந்த சுதர்சனனுக்கு இந்த நிபந்தனை எரிச்சலூட்டியது. மறுபடியும் பெட்டி படுக்கையோடு தெருவில் நின்று வாகனம் தேட முடியாததால் சுதர்சனனே ஆட்டோ டிரைவரின் நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டாக வேண்டியிருந்தது. கையாலாகாத நிலைமையோடு இணைந்த கோபத்துடன் சுதர்சனன் பெட்டி படுக்கையுடன் ஆட்டோவில் அமர்ந்தான். டிரைவரோ பிரயாணியின் மெளனமே சம்மதத்திற்கு அறிகுறி என்று எடுத்துக் கொண்டு விடவில்லை, அதிகப்படியாக 2 ரூபாய் போட்டுத் தரச் சம்மதம் என்று பிரயாணியே ஒப்புதல் வாக்குமூலம் தந்தாலொழிய அவன் விடமாட்டான் போலிருந்தது.

“என்னா சார் ரெண்டு ரூபா மேலே போட்டுக் குடுப்பியா? சொல்லு?” - என்று அவன் கேட்ட கேள்விக்குச் சம் மதம் என்பதுபோலத் தலையை ஆட்டிய பின்பு தான் காது பொறுக்க முடியாத கர்ணகடூரமான இரைச்சலோடு ஆட்டோ எழும்பூர் ஸ்டேஷன் முகப்பிலிருந்து ஸ்டார்ட் ஆகிக் கிளம்பியது.

பெல்ஸ் ரோடில் தன் நண்பனுடைய டூட்டோரியல் காலேஜ் வாசலில் போய் இறங்கினபோது நண்பனும் இன்னும் சுதர்சனனுக்குப் பெயர் தெரியாத புதியவர்கள் இரண்டு மூன்று பேருமாகக் கையில் பெரிய பெரிய ரோஜாப்பூ மாலைகளோடு எங்கோ வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நண்பன் ரகுராஜன் சுதர்சனனை முகமலர்ந்து வரவேற்றான். “என்னப்பா ரகு! விடிஞ்சதும் விடியாததுமா மாலையும் கையுமா எங்கேயோ கிளம்பிக்கிட்டிருக் கியே? என்ன விசேஷம்?”

“பேசிக்கிட்டு நிற்க நேரமில்லை. பெட்டி படுக்கையை உள்ளாரப் போட்டுட்டு உடனே நீயும் புறப்படு! இன்னிக்கி தம்ம தலைவர் கலம்பகச் செல்வருக்குப் பிறந்தநாள்...”

“நீ போயிட்டுவா போதும்! நான் வரலே, ரயில் பிரயாணம் ஆளை அசத்திவிட்டது. ஒரே களைப்பா இருக்கு! உடம்பை அடிச்சிப் போட்ட மாதிரி வலி.”

“அதெல்லாம் முடியாது! நீயும் கண்டிப்பா வந்தாகணும், போற வழியிலே ஜாம்பஜார் முனையிலே நீயும் ஒரு மாலையை வாங்கிக்கலாம். தலைவரை இப்பவே பார்க்கிறது உன் ஃப்யூச்சருக்கு நல்லது.”

நண்பன் இவ்வளவு வற்புறுத்தியபின் சுதர்சனனால் மறுக்க முடியவில்லை. ‘கலம்பகம் டூட்டோரியல் காலேஜ்’ என்ற பெரிய விளம்பரப் பலகையோடு கூடிய அந்த மாடிக் கட்டிடத்தின் கீழ்ப்பகுதி மூன்று நான்கு வகுப்பறைகளாகத் தடுக்கப்பட்டிருந்தது. மாடியில் கல்லூரி பிரின்ஸிபால் ரகுராஜனின் குடியிருப்புப் பகுதி இருந்தது, ஆட்டோவை டிஸ்போஸ் செய்துவிட்டுப் பெட்டி படுக்கையை மாடியில் போட்டுக் கதவை அடைத்துக் கொண்டு சுதர்சனனும் அவர்களோடு புறப்பட்டான். முகம் கழுவி உடைமாற்றிக் கொள்ளக் கூட நண்பன் ரகு அவகாசமளிக்கவில்லை. அவசரப்படுத்தினான். “இன்னிக்கு நீ வந்ததிலே ரொம்பச் சந்தோஷம், சும்மா வாப்பா! நம் தலைவரே ஏழை எளியவர்களோட பிரதிநிதிதான். தளுக்கு மினுக்கெல்லாம் அவருக்கே பிடிக்காது. போற போக்கிலேயே ரத்னா கேஃப்லே ஒரு காப்பியைக் குடிச்சிட்டுப் போயிடலாம்...”

“தலைவர் கேக் வெட்டறத்துக்குள்ளாரப் போய்ச் சேரணும். தலைவர் கையாலே முதல் கேக் துண்டு நம்ம ரகுராஜனுக்குத்தான்னு நேத்தே சொல்லிப் போட்டாரு. நாம லேட்டாப் போய்ச் சேர்ந்தா அது நம்ம குத்தம் தான்...” என்று உடனிருந்த மற்றொருவர் துரிதப்படுத்தினார்.

“இவர் சிந்தாதரிப்பேட்டைச் செயல்வீரர் பொன் மணி. அவர் புதுப்பேட்டை சொன்ராஜு. அந்தத் தோழர் கூடுவாஞ்சேரி மணி. எல்லாம் ஐயாவோட் பரம சிஷ்யங்க” - என்பதாக அவர்களைச் சுதர்சனனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரகுராஜன். அவர்கள் வணங்கியதால் சுதர்சனனும் அவர்களைப் பார்த்துப் பதிலுக்குக் கைகூப்பினான்.

“கேக் வெட்டறது தமிழ்ப் பண்பாடு இல்லியே? ஆங்கிலப் பண்பாட்டைப் போயி நம்ம தண்டத்தமிழ் தலைவர் கடைப்பிடிக்கலாமா?” சுதர்சனனின் இந்தக் கேள்விக்கு முதலில் அவர்கள் யாருமே மறுமொழி சொல்லவில்லை.

சிறிது நேர இடைவெளிக்குப் பின் ரகுராஜனே சுதர்சனனைப் பதிலுக்குக் கேட்டான்.

“பின்னென்ன? கேக் வெட்டாமே கடா வெட்டிப் பொங்கல் வச்சுக் கறிசோறு போடச் சொல்றியா? அதெல்லாம் நாகரீகமா இருக்காதுப்பா! தலைவரோட சிஷ்யன் - ஒருத்தன் அமானுல்லான்னு இங்கே ரொட்டிக் கடை வச்சிருக்கான். கேக் அவனோட இலவசத் தயாரிப்பு. வெட்டறது தலைவரோட வேலை.

இதைக் கேட்டுச் சுதர்சனன் புன்முறுவல் பூத்தான். ‘வெட்டறது தலைவரோட வேலை’ - என்ற நண்பனின் இறுதி வாக்கியம்தான் அவனைச் சிரிக்க வைத்திருந்தது. அது இரட்டுற மொழிதலாயிருந்தது.

தெருவில் இரட்டை நாடி உடலமைப்போடு இன்னொருவர் கையில் இதேபோல் மாலையுடன் எதிர்பட்டார். பார்ப்பதற்குச் சிற்றானைக்குட்டி ஒன்று ஆடி அசைந்து வருவது போல் தோற்றமளித்தார் அந்த ஆள்.

“சார் தான் கெளவை கஜராஜன். சென்னை நகரக் கசாப்பு - மீன்கடை உரிமையாளர் சங்கத் தலைவர். அதோட வள்ளலார் விழாக்குழுச் செயலாளர். வள்ளுவர் மன்றப் புரவலர். அஹிம்சா ஃபோரம் செயற்குழு உறுப்பினர்...”

“இந்தாங்க ரகுராஜன்... எல்லாத்தையும் ஒண்ணாச் சேர்த்துச் சொல்லாதீங்கன்னு உங்களுக்கு எத்தினிவாட்டி சொல்றது? பெரிய வம்புக்கார ஆளா இருப்பீர் போலிருக்கே?...” என்று கஜராஜன் குறுக்கிட்டுக் கடிந்து கொள்கிற தொணியில் ரகுவைக் கோபித்தார்.

“எங்கே? ஐயா பொறந்த நாளைக்கி மாலை போடத்தானே போறீங்க! நானும் அங்கேதான் போயிட்டிருக்கேன். வாங்க சேர்ந்து போகலாம்...”

“அது சரி? சார் யாருன்னு இன்னும் சொல்லவே இல்லியே?”

“சார் சுதர்சனம். தமிழ்ப்புலவர். நம்ப நண்பர் இன்னிக்கித்தான் மெட்ராஸ் வந்திருக்காரு. ரயில்லேருந்து இறங்கி வந்தவரை அப்படியே நீங்களும் கூட வாங்கன்னு கூட்டிக்கிட்டு வந்து ட்டேன்.”

“ரொம்ப நல்ல நாளாப் பார்த்துத்தான் வந்திருக்காரு. ஐயா பெர்த்டே நாளாச்சே?” என்று சிரித்தார் கெளவை கஜராஜன். அவரால் உடலின் ஊளைச்சதை குலுங்காமல் சிரிக்க முடியவில்லை என்பதைச் சுதர்சனன் கவனித்தான். எல்லாருமாக ரத்னா கேஃபில் காபிக்கு நுழைந்தார்கள். காபிக்குக் காத்திருந்த நேரத்தில் ரகுராஜன் வெளியே போய் இன்னொரு பெரிய ரோஜரப்பூ மாலை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான். சுதர்சனன் ரகுவைப் பார்த்துக் கேட்டான்.

“இன்னொரு மாலை யாருக்கு?”

“யாருக்கா? அதென்ன கேள்வி ஒண்ணுமே தெரியாதது போலே? உனக்குத் தான்ம்ப்பா - நீ தலைவருக்கு மாலை போடலியா? பின்னே நீ எதுக்கா எங்க கூட வர்ரியாம்?”

“நீ கூப்பிட்டே, வரேன். நான் ஒண்ணும் மாலை போடப் போறதில்லே... அவருக்கும் எனக்கும் அறிமுகம் கூடக் கிடையாது. நான், யாருன்னே அவருக்குத் தெரிஞ்சிருக்க நியாயமில்லே.”

“அவருக்கு உன்னைத் தெரிஞ்சிருக்கணும்னு அவசிய மில்லே. உனக்கு அவரைத் தெரிஞ்சிருந்தாலே போதும். பக்தனுக்குத்தான் சாமியைக் கும்பிடத் தெரியணும். சாமிக்குப் பக்தனை யாருன்னே தெரிஞ்சிருக்க வேண்டிய அவசியமில்லே.”

“அதான் நான் சாமியே கும்பிடறதே இல்லை.”

“சாமியைக் கும்பிடாட்டிப் பரவாயில்லே, தலைவரைக் கும்பிட்டு ஒரு மாலையைக் கழுத்திலே போட்டுவை. பின்னாலே பிரயோஜனப்படும். வீண் போயிடாது. மாலையை நான் வாங்கிட்டேன். உனக்குச் செலவில்லே. சும்மா கழுத்திலே போடறதுக்குக் கூடவா சோம்பல்?”

“சோம்பல்னு நான் எப்போ சொன்னேன்? அப்படி நான் சொல்லவே இல்லையே? சம்மதமில்லேன்னுதான் சொன்னேனே ஒழியச் சோம்பல்னு சொல்லலியே? சோம்பல்னா - நம்ம மனசிலே விருப்பமிருந்தும் செய்யாமத் தள்ளிப் போடறது. சம்மதமில்லேங்கறது நம்ப மனசிலேயே விருப்பமில்லைங்கறதைத்தான் குறிக்கும். எனக்கு, மாலை போடச் சம்மதமில்லேன்னு தான் நான் சொன்னேன். நீயா என்னையும் வற்புறுத்திக் கூடக் கூட்டியாந்திருக்கே. அவ்வளவுதான்.”

“அட சர்த்தான் பெரிசா ‘பிலாஸபி’ - பேசாதேப்பா வான்னாக் கூட வா. நீ மாலை போடாட்டி உன் பேரைச் சொல்லி, ‘ஆதர்சபுரம் தமிழாசிரியர் புலவர் சுதர்சனனார் சார்பில் தலைவர் கலம்பகச் செல்வருக்கு மாலை அணிவிக்கப்படுகிறது’ன்னு நாங்களே மாலையைத் தலைவர் கழுத்திலே போட்டிட்டுப் போறோம், மாலை எண்ணிக்கைக் கூடனும்கிறதுதான் எங்க கணக்கு” என்றான் ரகு.

அந்த டேபிளுக்குக் காபி கொண்டு வந்த சர்வர் கெளவை கஜராஜனைப் பார்த்து, “சார்! போன வாரம் நம்ப பேட்டையிலே பட்டிமன்றத்துக்கு வந்திருந்தீங்களே. நாங்கூடக் கேட்டேன் சார். ‘ஜீவகாருண்யமே சாலச் சிறந்தது’ங்கிற கட்சியிலே சிரிக்கச் சிரிக்கப் பேசினீங்க சார்” என்றான்.

கஜராஜன், “நீ வந்திருந்தியா அங்கே?” என்று செர்வரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டே காபியை எடுத்துக் குடிக்கத் தொடங்கினார்.

“ஏன் சார் கஜராஜன்! இப்பவெல்லாம் தலைமை வகிக்கிறதைத் தவிர வேறெதுக்கும் போறதில்லேன்னு எங்கிட்ட பிரமாதமாப் பெருமையடிச்சுக்கிட்டீங்க. இவங்க பேட்டையிலே பட்டிமன்றத்திலே போயி ஒரு கட்சியிலே நின்று பேசியிருக்கீங்களே?” என்று ரகுராஜன் கேட்டார்.

“இல்லியே? யார் சொன்னது? அதிலேயும் நான் பேசின கட்சிக்குத் தலைவரா இருந்து தானே பேசினேன்?” என்று கஜராஜனிடமிருந்து பதில் வந்தது.

காபி குடித்துவிட்டு எல்லோரும் புறப்பட்டார்கள்.

“நான் வேணா வீட்டுக்குத் திரும்பிடறேனே? நீங்க போயிட்டு வாங்க போதும். நான் எதுக்கு?” என்று மீண்டும் கத்தரித்துக் கொண்டு திரும்பி விட முயன்றான் சுதர்சனன்.

அத்தியாயம் - 15

ஆனால் ரகு சுதர்சனனை விட்டுவிடத் தயாராக இல்லை. வற்புறுத்தினான். “முடியாது! நீயும் தலைவருக்கு மாலை போடக் கண்டிப்பாக வந்தாகணும்” என்று அவன் பிடிவாதமாக இருக்கவே சுதர்சனனும் கூடவே போக வேண்டியதாயிற்று.

தலைவர் கலம்பகச்செல்வர் வீட்டு வாசலில் சிறிய பந்தல் போட்டு வாழைமரம், தோரணம், கட்சிக்கொடிகள் எல்லாம் கட்டியிருந்தன. தொண்டர்கள் நாலைந்து பேர் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சட்டைகளில் நெஞ்சுப் பகுதியில் கொடிப் பின்னணியோடு தலைவரின் உருவப் படம் ஒட்டப்பட்ட பாட்ஜ் அட்டைகளைக் குண்டுசியால் குத்திக் கொண்டிருந்தார்கள். பள்ளிச் சிறுவர்கள் கூட்டம் ஒன்று காச்மூச்சென்று இரைந்து கொண் டிருந்தது.

தலைவரின் வீட்டுக்கு எதிரே சுவர்களில் பெரிய பெரிய தலைவர் படங்களோடு கூடிய சுவரொட்டிகள் அவரைப் பல்லாண்டு வாழ்த்தின. தலைவரின் கண்களில் வீட்டுக்குள் வரும்போதும், வீட்டிலிருந்து அவர் வெளியே போகும் போதும் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகவே அவற்றைத் தொண்டர்கள் அங்கு ஒட்டியிருப்பதாகத் தோன்றியது.

“தலைவர் கையாலே ஏழை எளியவர்களுக்குச் சர்க்கரைப் பொங்கல் வழங்கறதுன்னு இந்த வருஷம் புதுசா ஒண்ணைச் சேர்த்தேன். அதான் வாசல்லே இத்தினி பசங்க கூட்டம்” என்றான் ரகு. கூட்டம் சேர்க்கவே அந்த ஏற்பாட்டைச் செய்தது போல அவன் சொன்னதைச் சுதர்சனனும் கவனித்தான். அவர்களின் நடுவே தண்ணிரிலிருந்து கரையில் எடுத்துப் போட்ட மீன் மாதிரித் தவித்தான் சுதர்சனன். ரயிலிலிருந்து இறங்கியதும் இறங்காததுமாக இதில் ஏன் வந்து சிக்கிக் கொண்டோம் என்று தோன்றியது அவனுக்கு. சென்னை நகரம் முழுவதும் சிலர் வேறு வேலையே இல்லாமல் மாலை போட்டுச் சுவரொட்டி அடித்து விளம்பரப்படுத்தி எப்போதும் யாரையாவது காரணத்தோடோ காரணமின்றியோ எதற்காகவாவது கொண்டாடிக் கொண்டே இருப்பதுபோல் தோன்றியது அவனுக்கு. இவர்களுக்கு இதைத் தவிர உழைக்க வேறு வேலையே கிடையாதோ என்றும் எரிச்சலாயிருந்தது.

‘இனவழிப் பிரிந்து மொழிவழிக் கூடிக் கொள்கைவழி இணைந்து தனிப்பெரும் தலைவர் காட்டும் புது வழியில் நடப்போம்’ என்று மொத்தை மொத்தையாக அர்த்தம் புரியாமல் ஏதேதோ சுவர்களில் அச்சிட்டு ஒட்டியிருந்தார்கள். கார்ல் மார்க்ஸின் கேபிட்டலையும், லெனினையும் தெளிவாக உருப்போட்டு உணர்ந்திருந்த அவனுக்கு இனம், மொழி என்ற குறுகிய வட்டங்கள் என்னவோ போலிருந்தன. உழைக்கும் இனம் - உழைக்காத இனம் என்ற இரண்டு இனம்தான் உலகில் அவனுக்குத் தெரிந்திருந்தது.

புத்தாடை - புதுச் சட்டை அணிந்து மலர்ந்த முகத்தோடு தலைவர் கலம்பகச்செல்வர் வீட்டு முன்கூடத்தில் வந்து அமர்ந்தார்.

எல்லோரும் “தலைவர் கலம்பகச் செல்வர் வாழ்க!” என்று பெரிதாகக் குரல் கொடுத்து வாழ்த்தினார்கள். வாழ்த்து ஒலிகள் மூன்று முறை முழக்கப்பட்டன. தலைவர் எல்லாரையும் நோக்கிக் கையமர்த்தி அமைதியாக இருக்கும்படி வேண்டினார்.

எல்லோரும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டது போல் அமைதியடைந்தனர். தலைவர் வேண்டிய அமைதி வந்ததும் அவரே பேசப் போகிறார் என்பதுபோல் தெரிந்தது.

“நாங்க மாலையைப் போட்டு வணங்கிடலாம்னு பார்க்கிறோம். அப்புறமா ஐயா பேசலாமே?” என்று ரகு மெல்லக் குறுக்கிட்டான்.

“சரி போட்டுடுங்க.”

ஒவ்வொருவராக மாலையைத் தலைவர் கழுத்திலணி வித்துவிட்டுச் சாஷ்டாங்கமாக அவர் காலடியில் விழுந்து கும்பிட்டார்கள். சுதர்சனன் தன் கையிலிருந்த மாலையை யாரும் கவனிக்காத சமயம் பார்த்து ஒரு ஜன்னலோரமாக வைத்து விட்டுக் கூட்டத்தில் எவரும் கவனிக்காதபடி பின் பக்கமாக மெல்ல நழுவி வெளியேறி விட முயன்றான்.

அதற்குள் ரகு சுதர்சனனைப் பார்த்துவிடவே. “வா சுதர்சனம் உன் மாலை எங்கே? கொண்டாந்ததைக் காணோமா?” என்று கூப்பிட்டு விட்டான்.

“அவரு தமிழ்ப் புலவர் சுதர்சனம். இன்னிக்குத்தான் ஊர்லேருந்து வந்தாரு” என்று அறிமுகப்படுத்தினான். சுதர்சனன் அப்படியே நின்று அந்தத் தலைவரைக் கை கூப்பினான். மாலையை எடுத்துப் போடவோ மற்றவர்களைப் போல அவரது காலில் விழுந்து கும்பிடவோ முயலவில்லை.

தலைவர் அந்தப் புதிய மனிதனின் இணங்கி வராத் தன் மையை மெல்ல உய்த்துணர்ந்ததாகத் தெரிந்தது.

“இருபது ஆண்டுகளாகத் தமிழாசிரியர்களுக்குக் கேடயமாக இருந்து பாதுகாக்கும் இயக்கம் நம்முடையது. என்னுடைய அறுபத்தி இரண்டாவது பிறந்த நாளைக்கு, நம்ம இயக்கத்தைச் சேர்ந்த தமிழாசிரியருங்கள்ளாம் சேர்ந்து ‘அறுபத்தி மூணு சவரன்’ எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்துக் கொண்டாடினாங்க.”

“கேக் வந்தாச்சு... அறுபத்தி நாலு மெழுகுவர்த்தி சொருகி அலங்கரிச்சுத் தயாரிக்க இத்தினி நேரமாச்சுன்னு அமானுல்லா வருத்தப்பட்டாருங்க” என்று ஒரு தொண்டர் கேக் பின் தொடர உள்ளே நுழைந்தார். கேக்கைப் பெரிய தட்டில் வைத்துச் சுமந்து வந்த அமானுல்லா அதைத் தலைவருக்கு முன்னால் இருந்த சிறிய மேஜைமேல் வைத்து விட்டு ஒதுங்கி நின்று கையோடு கொண்டு வந்திருந்த மாலையைப் பிரித்துத் தலைவருக்கு அணிவித்தார்.

“ஆமா ஐயாவோட அறுபத்து நாலாவது பிறந்த நாளன்னிக்கு எடைக்கு எடை வெள்ளிக் கட்டி நிறுத்துத் தரப் போறோம்னு வேலூர்ப் பொதுக்குழுவிலே ஒரு தீர்மானம் நிறைவேற்றினீங்களே, அது என்னாச்சு?” என்று தலைவரே சிரித்தபடி கேட்டார். சுற்றி நின்ற தொண்டர்களும், இயக்கத் தோழர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு தொண்டர் துணிந்து அதற்குப் பதில் சொன்னார்:

“அந்தப் பொறுப்பைப் பொதுச் செயலாளர் கிட்ட விட்டிருக்கோம் ஐயா!”

“பொதுச் செயலாளர் எங்கே?”

“ஐயா பிறந்தநாளை ஒட்டித் திருத்தணியிலே விசேஷ அர்ச்சனை அபிஷேகம்லாம் பண்ணிட்டு வரலாம்னு பொதுச் செயலாளரும் பொருளாளரும் போயிருக்காங்க. பகலுக்குள்ளே எப்பிடியும் திரும்பிடுவாங்க.”

“அதுக்கில்லே. பொதுக்குழுத் தீர்மானத்தை நான் இதுக்குள்ளே மறந்து போயிருப்பேனோன்னு நீங்க நினைக்கக்கூடாது பாருங்க. அதுக்காகத்தான் நினைவூட்டினேன்...”

“அதெப்படீங்க ஐயா மறக்கும்? ஐயாவையும், ஐயாவுக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மறந்தா நாங்க நல்லா இருப்போமா?”

ஒரே குரலில் கோரஸ் பாடுவதுபோல் அவரைச் சுற்றி யிருந்தவர்கள் இதைச் சொன்னதைச் சுதர்சனன் கவனித்தான் அந்தக் கூட்டத்திலேயே ஒதுங்கியும் தனித்தும் நின்றது சுதர்சனன் ஒருவன்தான். மற்ற எல்லாரும் தெய்வத்தின் முன் நிற்கும் பக்தர்களைப் போலக் கைகட்டி வாய் பொத்திப் பயத்தோடும் பக்தியோடும் நின்று கொண்டிருத்தார்கள்.

சுதர்சனனை நோக்கித் தலைவர் அன்போடு கேட்டார்: “குமாரமுத்துப் புலவர் எழுதிய கூடற் கலம்பகத்தை உலக இலக்கியமாகப் பிரகடனம் செய்து நான் எழுதிய கருத்துக் கலம்பகக் கதிரொளி என்கிற நூலைப் படிச்சிருக்கிங்களா?”

“இல்லீங்க. இன்னும் படிக்கல்லே. ஆனால் கூடற் கலம்பகத்தைப் படிச்சிருக்கேன். அது ஒரு நல்ல பிரபந்தம். பல நயங்கள் நிறைந்தது. உலக இலக்கியம் அதுதான்னு சொன்னால் நாம் அதைத் தவிர உலகத்திலே வேறு ஒண்ணையும் படிக்காமச் சொல்றோம்னுதான் நினைப்பாங்க...” என்று சிறிதும் தயவு தாட்சண்யமில்லாமல் அவருக்குப் பதில் சொன்னான் சுதர்சனன்.

“அப்போ நீங்க என்னோட இதிலே கருத்து வேறுபாடு கொள்றீங்கன்னு சொல்லுங்க.”

“இதிலே நீங்க சொல்றதையே நான் ஏத்துக்க முடியாமே இருக்குங்க, ‘உலக இலக்கியம்’கிறது ரொம்பப் பெரிய வார்த்தை.”

“என்னோட கருத்து வேறுபாடு கொள்ற ஒரு தமிழ்ப் புலவரையே நான் இப்போதான் முதல் முதலாப் பார்க்கிறேன்...”

“ஒரே கருத்தை வீரவணக்கம் செய்யிறது அறிவு வளர்ச்சிக்கு நல்லதுன்னு நான் நினைக்கலிங்க.”

“சரி! அப்புறம் பார்க்கலாம். உங்ககிட்ட நிறையப் பேச வேண்டியிருக்கும் போல்லே தோணுது” என்று சுதர்சனனை அந்தக் கும்பலிலிருந்து நாசூக்காக ஆனால் நிச்சயமாக விலக்க முயன்றார் தலைவர்.

சுதர்சனன் தனியே ஒரு நிமிஷம் தன்னோடு கூட வருமாறு ரகுவை வெளியே கூப்பிட்டான். ரகு தனியே வராமல் கெளவை கஜராஜன் தொடர வெளியே வந்தான். கெளவை உடனே சுதர்சனனைக் கேட்டார்:

“என்னங்க இது ‘ஐயா’வோடவே நேருக்கு நேரா மோதத் தொடங்கிட்டீங்க?”

“ஆமாம்? அதிலே என்ன தப்பு? ஒரு விஷயத்தை அறிவுபூர்வமாக விவாதிப்பதற்கு யார் முன்னும் எதற்காகவும் தயங்க வேண்டியதில்லையே?

“ஆனா, ஐயா முன்னே பேசறத்துக்கே ரொம்பப் புலவருங்க பயப்படுவாங்க... நீங்க என்னடான்னா...?”

“அறியாமையின் அடையாளங்களில் மிகவும் முதன்மை'யானது பயம்.”

“சரி சரி! சண்டை போட்டது போதும். இந்தா, என் ரூம் சாவி. நீ வீட்டிலே போயி என் ரூமிலே இரு. நான் ஒரு மணி நேரத்திலே வந்துடறேன்” என்று அறைச் சாவியைச் சுதர்சனனிடம் நீட்டினான் ரகு.

சுதர்சனன் சாவியை வாங்கிக்கொண்டு “மன்னிச்சுடுப்பா! நீ சொன்னபடி மாலையைத் தலைவருக்கு நான் போடலே. அறிமுகமில்லாதவங்களுக்குத் திடீர்னு மாலை போடறது நாகரிகமில்லேன்னு எனக்குத் தோணிச்சு” என்றான்.

“பெரிய வம்புக்காரன் நீ... தலைவருக்கு முன்னாடி என்னைத் தலைகுனிய வச்சிட்டே” என்று சுதர்சனனைப் பார்த்து ரகு அலுத்துக் கொண்டான். சுதர்சனன் சாவியோடு வெளியேறித் தெருவுக்கு வந்து சேர்ந்தான். ரகுவைப் போல் விவரந்தெரிந்தவனே இப்படிச் சிறுபிள்ளை விளையாட்டுகிகளில் ஈடுபட்டிருப்பதைக் கண்டு சுதர்சனன் ஆச்சரியப்பட்டான், தன்னைச் சுற்றி சத்தம் போடத் தெரிந்த ஒரு சிறு ஆள்கட்டுள்ள கும்பலைச் சேர்த்து வைத்துக் கொள்ள முடிந்த யாரும் இங்கே தலைவராகி விட முடிந்த நிலைமை சுதர்சனனுக்குப் புரிந்தது. பிறருடைய சிந்தனையை ஏற்காமல் தான் கூறியதையே அனைவரும் ஏற்க வேண்டும் என்று எண்ணும் அடாவடித்தனத்தை அரசியலின் பேராலோ, இலக்கியத்தின் பேராலோ சுதர்சனன் ஏற்றுக் கொள்ளத் தயாராயில்லை.

தலைவராயிருப்பது என்பதையே ஒரு தொழிலாகப் பண்ணிக்கொண்டு உழைக்காமல் வளரும் ஒரு தந்தக் கோபுரவாசிகளின் கூட்டம் பெருகக் கூடாது என்று சுதர்சனன் கருதினான். ஆனால் கண் முன்னால் அப்படித் தலைமைத் தொழிலின் நிரந்தர அதிபர்களாகவே அடுத்தடுத்துத் தென்பட்டார்களே ஒழிய உழைப்பு, நாணயம், ஒழுக்கம், பண்பாடு இவை உள்ள உண்மைத் தலைவர்கள். எங்குமே தென்படக் காணோம். ஒவ்வொன்றும் ஒரு பிரைவேட் லிமிடெட் ஆக இருந்ததே ஒழியப் பரந்த மனிதகுலத்தைப் பற்றி எந்தத் தலைவரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தலைவரிடமும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே காட்ட வெவ்வேறு முகங்கள் இருந்தன. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு தனி முகங்காட்ட வேண்டிய சாமர்த்தியத்திலும் தந்திரத்திலும் அவர்கள் நன்றாகத் தேர்ந்திருந்தார்கள்.

பழைய சமஸ்தானாதிபதிகளைப் போல ஒவ்வொரு குட்டித் தலைவருக்கும் ஒரு கட்சி, ஒரு கொடி, ஒரு பட்டாளம், ஜெயகோஷம் போடப் பத்துப் பதினைந்து பேர் - எல்லாம் இருந்தார்கள். சாதி பேதமின்றி, மொழி பேதமின்றி விருப்பு வெறுப்புக்களற்ற முறையில் மனித குலத்துக்காகப் பாடுபட முன்வரும் ஒரு எதிர்காலத் தலைவனைத் தேடிச் சுதர்சனன் கவலைப்பட்டான்.

அறுபத்து நாலாவது பிறந்த தினத்துக்கு 64 சவரன்களைத் தேடும் தலைவர்களும், 50-வது பிறந்த தினத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி திரட்டும் தலைவர்களுமாகத் தென்பட்டார்களே தவிர மக்களுக்கு ஏதாவது தங்களிடமிருந்து தரக்கூடிய தலைவர்கள் எங்குமே தென்படவில்லை. தட்சிணைக்கு மன்றாடும் பூசாரிகளைவிட மோசமான தலைவர்கள் தமிழ்நாட்டின் நகரங்களில் மலிந்திருந்தார்கள்.

அத்தியாயம் - 16

சுதர்சனன் மறுபடி நடந்தே பெல்ஸ் ரோடுக்குத் திரும்பச் சென்று ரகுவின் மாடியறையைத் திறந்து நீராடி உடைமாற்றிக் கொண்டு தயாராவதற்குச் சுமார் ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. தலைவரின் பிறந்த நாளை வாழ்த்தச் சென்ற ரகுராஜனோ மற்றவர்களோ விரைவில் வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை சுதர்சனனுக்கு இல்லை.

அப்போது காலை பத்தரை மணிக்கு மேல் ஆகியிருந்தது. கலம்பகம் டூட்டோரியல் காலேஜுக்கு அன்று விடுமுறை என்பதாகவும் விரும்புகிற மாணவ மாணவிகள் தலைவர் இல்லத்துக்கு மாலை சூட்ட வரலாம் என்பதாகவும் முகப்பில் ஒரு போர்டு எழுதி வைக்கப்பட்டிருந்தது. தலைவர் மேலுள்ள பற்றின் சாயல் ‘கலம்பகம் டூட்டோரியல்ஸ்’ என்ற பெயரிலும் போர்டில் எழுதி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பிலும் இருந்து தெளிவாகத் தெரிந்தது.

அப்போது மாடியில் தனியாகச் சுதர்சனன் மட்டுமே இருந்தான். கீழ்ப் பகுதியில் டூட்டோரியல் காலேஜின் அட்டெண்டர் என்ற பெயரில் வேலை பார்த்த ஓர் ஊழியன் முகப்பில் காவலுக்கு உட்கார்ந்திருந்தான். இரயிலில் சரியாக உறங்காத அலுப்பிருந்தும் இப்போது சுதர்சனனுக்கு உறக்கமும் வரவில்லை. விழித்திருப்பதும் சிரமமாக இருந்தது. அறையில் இரண்டு மூன்று காலைத் தினசரிகள் வந்து விழுந்து கிடந்தன. அவற்றை எடுத்துப் படிக்கத் தொடங்கியதும் கண்களில் தூக்கம் சொருகிக் கொண்டு வந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே கண்கள் தாமாக மூடின. தினசரி கையிலிருந்து இயல்பாகக் கீழே நழுவியது.

யாரோ திறந்திருந்த கதவிலேயே தான் வந்திருப்பதை அறிவிக்கும் நோக்குடன் விரல்களால் மெதுவாகத் தட்டும் ஓசை கேட்டது. தட்டும் ஓசையை விட நளினமாகக் கையின் வளையொலி முந்திக் கொண்டு ஒலிக்கவே சுதர்சனன் கண் விழித்து எதிரே ஒரு பெண் நிற்பதைப் பார்த்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தான். சிவந்த அழகிய நெற்றியில் செங்கோடாக இழுத்த திலகம் விளங்கச் சிரித்தவாறே ஒரு பெண் வாயிற்படி அருகே நின்று கொண்டிருந்தாள்.

“ரகுமாமா இல்லியா? நான் மெஸ்ஸிலே இருந்து வரேன். அவர் காலையிலே டிஃபனுக்கும் வரலே. மத்தியானம் பகல் சாப்பாட்டுக்காவது வருவாரான்னு தெரியணும்.”

இதற்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியாமல் சுதர்சனன் ஓரிரு கணங்கள் தயங்கினான்.

அதற்குள் அவளே மேலும் பேசினாள்:

“ஓகோ நீங்க மாமாவோட சிநேகிதராக்கும்; ஊர்லேருந்து இப்பத்தான் வந்திருக்கீங்க போலேருக்கு...”

“ஆமாம் ரகு வெளியிலே போயிருக்கார். எப்ப வருவார்னு தெரியலெ...”

“சரி. எதுக்கும் ரெண்டு சாப்பாடு வைக்கச் சொல்லி அம்மாகிட்டத் தகவல் குடுத்திடறேன்” என்று தனக்குத் தானேயும் அவனுக்காகவும் சேர்த்துப் பதில் சொன்னது போல் சொல்லிவிட்டு அந்தப் பெண் படியிறங்கிச் சென்றாள். மாடி முகப்பு வரை நடந்து சென்று சுதர்சனன் தெருவைப் பார்த்தான். அந்தப் பெண் பக்கத்து வீட்டிற்குள் நுழைவது தெரிந்தது. அந்த வீட்டுக்காரர்கள் ஒரு மெஸ் நடத்துகிறார்கள் என்றும் புரிந்தது. மாடி வராந்தாவின் முகப்பிலிருந்து திரும்பி அவன் அறை வாசலுக்கு வந்து சேருவதற்குள் வேறு யாரோ படியேறி வருகிற காலடிச் சத்தம் கேட்டது. சுதர்சனன் திரும்பி அறை முகப்புக்கு வந்தான்.

நல்ல சிவப்புக் காவி நிறத் துணியில் தலைப்பாகையும் அந்தத் தலைப்பாகையில் சிறிதாக பாட்ஜ் போல் பொன் வண்ணச் சந்திரப் பிறை வளையமும் அணிந்த ஒரு நடுத்தர வயது மனிதர் தென்பட்டார். வலது கையில் குடையும். இடது கையில் தடிமனான ஒரு தோல் பையுமாக அவர் வந்திருந்தார். மூக்கின் மேலிருந்து கீழே சரியும் மூக்குக் கண்ணாடியை அடிக்கடி சரிசெய்து கொண்டார்.

“ரகு இருக்கானா?”

“இல்லே, வெளியிலே போயிருக்காரு. நீங்க யாருன்னு சொல்லுங்க. அவர் திரும்பி வந்தப்புறம் தகவல் சொல்றேன்...”

“நீங்க யாருன்னு தெரியலியே புதுசா இருக்கே?... இதுக்கு முன்னே உங்களை இங்கே நான் பார்த்ததில்லே. கலம்பகம் டூட்டோரியல்ஸ்லே வேலைக்குச் சேர்ந்திருக்கீங்களா?”

“இல்லே. ரகுவோட சிநேகிதன், இன்னிக்குக் காலையிலேதான் ஊரிலேருந்து வந்தேன்...”

அவன் உட்காரச் சொல்ல வேண்டுமென்று எதிர்பாராமலே அறைக்குள் நுழைந்து ஒரு நாற்காலியில் தாமாகவே உட்கார்ந்து கொண்டார் அவர்.

“இப்போ நான் யாருன்னு நீங்க தெரிஞ்சுக்கணும் இல்லியா? சொல்றேன் கேட்டுக்குங்க. ‘சிண்டிகேட் சிதம்பரநாதன்’னு சொன்னா இங்கே எல்லாருக்கும் தெரியும். ரகுவோட பெஸ்ட் ஃபிரண்ட். ரகுவுக்கு மட்டுமில்லே, எல்லாக் கல்லூரி நிர்வாகிகளுக்கும் உபகாரம் பண்றவன்.” - என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டபடியே ஒரு விஸிடிங் கார்டை எடுத்துச் சுதர்சனனிடம் நீட்டினார் வந்தவர்.

வி. சிதம்பரநாதன் முன்னாள் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினர் என்று தொடங்கியது அந்த அட்டை. அப்புறமும் பல அச்சிட்ட வரிகள் தொடர்ந்தன.

“சிவப்புத் தலைப்பாகை கட்டியிருக்கீங்களே? அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“இதுவா, மெய்வழிச் சாலையிலே ரொம்ப காலமாக ஈடுபாடு உண்டு. அதான்.”

“அப்பிடிங்களா? இந்த மாதிரித் தலைப்பாகையோட ரொம்பப் பேருங்களைப் பல இடங்களிலே பார்த்திருக்கேன். ஆனா இது என்னன்னு மட்டும் புரிஞ்சதில்லை. இப்பத்தான் புரிஞ்சுது.”

“நம்ம ரகு கிட்ட எனக்குத் தனிப்பிரியம். எப்பவும் என்னாலே முடிஞ்ச உபகாரத்தை அவனுக்கு உடனே செய்துடுவேன். யூனிவர்ஸிடியிலே எனக்குத் தெரியாதவர்கள் யாரும் கிடையாது. சிண்டிகேட் சிதம்பரநாதன் வரார்னா - வி.ஸி - அறைக் கதவைத் திறந்து வெளியிலே வந்து வாங்கன்னு வரவேற்பார். ரெஜிஸ்திரார் எனக்கு முன்னே உட்கார்ந்து பேசமாட்டான். நீங்க நாலு நம்பர் எங்கிட்டக் குறிச்சுக் குடுத்தீங்கன்னா, நாலும் பாஸ் தான். பிலோ ஆவரேஜ் ஸ்டூடன்ஸுக்கு ‘டிஸ்ட்டிங்ஷன்’ வாங்கித் தர்ரதும் உண்டு. அக்டோபர் பரீட்சைக்குக் கலம்பகம் டூட்டோரியல்ஸ்லேயிருந்து ஐம்பது பேர் போனாங்க. காலேஜுக்கு ஒரு ‘குட்வில்’ வரணும், ஐம்பது பேருமே பாஸ் பண்ணினாத்தான் நல்லதுன்னு ரகு ஆசைப்பட்டான். ஐம்பது பேரையும் பாஸ் பண்ண வச்சேன், எந்தப் பேப்பரை யார் செட் பண்றாங்க, யார் திருத்தறாங்கங்கிறது எனக்கு அத்துபடி. யூனிவர்ஸிடி என்கிற சமுத்திரத்திலே ‘செவன்த் ஃப்ளீட்’ மாதிரி நான் ஒரு சக்தி வாய்ந்த கடற்படைன்னு வச்சுக்குங்களேன்.”

“அப்படிங்களா? நீங்க சொல்றதை எல்லாம் பார்த்தாச் சொந்தமாகவே தனி யூனிவர்ஸிடி ஒண்ணு நடத்தற அளவு அத்தனை திறமை உங்ககிட்ட இருக்கும் போலத் தெரியுதே?”

“ஒண்ணென்ன? பத்து யூனிவர்ஸிடி நடித்த முடியும்னேன். ஆனா இந்த ‘சோஷல் ஸெர்வீஸ்’லே இருக்கிற சந்தோஷம் அதிலே எல்லாம் கிடைக்காதே!”

“ரகுவை உங்களுக்கு எத்தனை வருஷமாப் பழக்கமோ?”

“வருஷம் என்ன வேண்டிக்கெடக்கு அவன் டூட்டோரியல் காலேஜ் ஆரம்பிச்ச அன்னிக்கிலேருந்து எங்களுக்குள்ளே பழக்கம்தான். இப்போ நீங்கதான் இருக்கீங்க. நாளைக்கே நாலு நம்பரைக் குறிச்சிக் குடுத்துக் ‘கவனிச்சுக்குங்க’-ன்னு எங்கிட்டச் சொன்னா அப்புறம் ஆட்ட மேட்டிக்கா நீங்க நம்ம கஸ்டமர் ஆயிடறீங்க. ஏமாத்தறது - ஒத்திப் போடறது - எல்லாம் நம்மகிட்டக் கிடையாது. உங்ககிட்ட ஒரு நபருக்கு ஐநூறு ரூபாய் கைநீட்டி வாங்கினாப் பேப்பர் திருத்தறவங்களுக்குப் போகவேண்டிய ஷேர் ஒரு நயா பைசாக் கூடக் குறையாமக் கரெக்டாப் போய்ச் சேர்ந்துவிடும். ‘சிண்டிகேட் சிதம்பர நாதன் சார் குறிச்சிக் கொடுத்த நம்பரா? கவலையில்லாமச் செய்துடலாம். வரவேண்டியது ஒழுங்காகக் கவர்லே வச்சு வந்திடும்’னு யூனிவர்ஸிடி எக்ஸாமினர்ஸே தங்களுக்குள்ளே என்னைப் பத்திச் சிலாகிச்சுப் பேசிப்பாங்கன்னாப் பார்த்துக்குங்களேன்...”

அத்தியாயம் - 17

படிப்பு - அறிவு - இவை விசாலமடைய விசால மடையத்தான் சிறுமை, லஞ்சம், ஊழல் இவையெல்லாம் ஒழியும் என்பார்கள். படிப்பிலேயே சிறுமை, ஊழல் லஞ்சம் எல்லாம் வந்து சேர்ந்து விட்டால் என்ன செய்வது? கங்கையே சாக்கடையாகி விட்டால் அப்புறம் என்ன வழி? கங்கையையே சாக்கடையாக்கி விட்ட தன் பெருமையைத் தான் சிதம்பரநாதன் அப்போது சுதர்சனனிடம் விவரித்துக் கொண்டிருந்தார்.

“உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே”

என்ற புறநானூற்றுப் பாண்டியனின் கல்வி பற்றிய பாடலுக்கு இப்போது குறும்பாகவும் வக்கிரமாகவும் புதுப் பொருள் கொள்ள வேண்டும் போல் தோன்றியது சுதர்சனனுக்கு. ‘உறுபொருள்’ கொடுக்கும் இடமாக ‘சிண்டிகேட் சிதம்பரநாதன்’ காட்சியளித்தார். உற்றுழி உதவுகிற பணியையும் செய்து கொண்டிருந்தார்.

‘உற்றுழி’ என்பதற்கு மார்க் குறையும்போது என்று அர்த்தம் போலும்.

“என்னமோ ஏதோன்னு நினைக்காதீங்க. ஏதுடா இப்படிச் சிவப்புத் தலைப்பாகையைக் கட்டிக்கிட்டு வந்து கிறுக்கன் மாதிரிப் பேசறானேன்னு உங்களுக்குத் தோணலாம். இன்னிக்கு ஐ.ஏ.எஸ்.ஸா வேலை பார்க்கிற பல பேரு நம்ம தயவிலே யூனிவர்ஸிடி பரீட்சை பாஸ் பண்ணிப் போனவங்க. நம்ம மேலே விசுவாசம் உள்ளவங்க. நாம சொல்லியனுப்பிச்சோம்னா எதையும் தட்டாமச் செய்து கொடுக்கிறவங்க.”

சுதர்சனன் தலையை ஆட்டினான். அவனுக்கு அவரிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. தெரிந்த உண்மைகள் பல பொய்களின் முக விலாசங்களைத் தெரிவிக்கக் கூடியவனவாக இருந்தன. ‘உண்மைகளைப் புரட்டிப் பார். அவற்றின் மறுபுறத்தில் பொய்களின் முகங்கள் தெரியும்’ என்பது போன்ற பல உண்மைகளை விவரித்துக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சித்ம்பரநாதன்.

“போர்ட் ஆஃப் ஸ்டடீஸ், செனட், சிண்டிகேட், அகடமிக் கவுன்ஸில் எல்லாத்திலியுமே நமக்குச் செல்வாக்கு உண்டுங்க. ஒரு புஸ்தகத்தைப் பாடமா வச்சு இருபத்தையாயிரம், முப்பதாயிரம் பிரதிகள் நிச்சயமா உடனே விற்கலாம்கிற வசதி இதிலே மட்டும்தான் உண்டுங்கிறதாலே பல பேரு தங்கள் புஸ்தகம் பாடமா வரணும்னு ஆசைப்படறாங்க. போர்டுலே எதையும் டிஸைட் பண்ற ‘முதலை’ங்க நாலே நாலு இருக்கு. தலைக்கு ஐநூறுக்குக் குறையாமே காதும் காதும் வச்சாப்பிலே கவர்லே வச்சுத் தள்ளிட்டா அப்புறம் நீங்க சொல்ற புஸ்தகத்தைப் பாடமா வச்சுக்கலாம். இதுனோட உள் விவகாரமெல்லாம் நமக்குத் தலைகீழ்ப் பாடம். சிண்டிகேட்லே ரொம்ப காலம் இருந்திருக்கேன் பாருங்க! எல்லாரையும் எல்லாத்தையும் நல்லாத் தெரியும். போன வருஷம் நம்ம பலவேசம் பிள்ளை எழுதிய ‘பாண்டிய நாட்டுப் பலகாரங்கள்’ங்கிற புஸ்தகத்தை பி.ஏ. பட்டப் படிப்புக்கு வைக்கணும்னு யார் யார் மூலமோ தலைகீழா நின்னு செலவழிச்சு முயற்சி பண்ணினாங்க. நடக்கலே. பலவேசமும் அவர் பப்ளிஷரும் எங்கெங்கேயோ போனாங்க. யார் யாரையோ பார்த்தாங்க. ஊஹும், நடக்குமா? நடக்கலே. கடைசியிலே ‘சிதம்பரநாதா! நீயே கதி’ன்னு நம்ப கால்லே வந்து விழுந்தாங்க. அடுத்த நாளே போர்ட் மீட்டிங்கிலே காரியம் ஸக்ஸஸ்ஃபுல்லா முடிஞ்சி போச்சு.”

“யூனிவர்ஸிடி சம்பந்தப்பட்ட சகல காரியங்களுக்கும் நீங்க ஒரு பெரிய ‘லயஸான்’ ஆக இருக்கீங்கன்னு சொல்லுங்க.”

“கரெக்டாச் சொன்னிங்க. நல்லவங்களுக்கு உபகாரம் பண்றதே ஒரு சந்தோஷம்... அதைத்தான் கடந்த கால் நூற் றாண்டாகப் பண்ணிக்கிட்டிருக்கேன்.”

“நீங்க சொல்றதெல்லாம் கேட்டா ரொம்ப சுவா ரஸ்யமா இருக்குங்க...”

“ரகுவும் நானும் உயிர்ச் சிநேகிதம். எப்ப நான் படியேறி வந்தாலும் கீழே டிக்கடைக்குச் சொல்லியனுப்பி ‘சிண்டிகேட் சார் வந்திருக்காரு. ஸ்ட்ராங்கா ஒரு டீ கொண்டு வா’ன்னுடுவான். என் மேலே ரகுவுக்குக் கொள்ளைப் பிரியம். ரகு மட்டுமில்லே. காலேஜ் கரெஸ் பாண்டெண்டுகள், பிரின்ஸிபால்கள், எல்லாருமே சிண்டிகேட் சிதம்பரநாதன்னா உயிரை விட்டுடுவாங்க...”

“டீக்குச் சொல்லி அனுப்பட்டுங்களா? நான் புதிசு. எனக்கு இங்கே டீக்கடைக்காரங்க யாரையும் தெரியாது! நாம போயே குடிச்சுட்டு வந்துடலாமா?” என்று பர்ஸை எடுத்துக் கொண்டு கிளம்பத் தயாராகிய சுதர்சனனைத் தடுத்து, “நீங்க உட்காருங்க நானே டீக்கடைப் பையனைக் கூப்பிடறேன். ரகுவோட அக்கவுண்ட்லேயே அவன் டீ கொண்டு வருவான்” என்று கூறி விட்டு மாடி முகப்புக்கு எழுந்திருந்து போய்த் தாமே டீக்கடைப் பையனுக்குக் குரல் கொடுத்தார் சிதம்பரநாதன்.

சுதர்சனனுக்குத் திகைப்பாயிருந்தது. கல்வியும் - உயர் தர ஞானமும் கூடத் தரகுப் பொருள்கள் ஆக்கப்பட்டிருப்பது வேதனையை அளித்தது. மன வளர்ச்சி - பக்குவம் - பண்பாடு எல்லாவற்றையும் அளிக்க வேண்டிய கல்வித் துறை வெறும் ‘மார்க் - மார்க்கெட்’ ஆகியிருப்பது தெரிந்தது. கல்வியைப் பற்றிய எல்லா ஏற்பாடுகளுடனும் யாரும் திட்டமிட்டு ஏற்பாடு செய்யாமலே வஞ்சமும் ஊழலும் திருட்டும் பொய்யும் சூதுவாதும் ஜாதியும் களை யாக முளைத்துப் பயிரே மறையுமளவு மறைத்துக்கொண்டு மண்டியிருப்பது தெளிவாக எதிரே தெரிந்தது.

“என்ன பெரிசா யோசனையிலே மூழ்கிட்டீங்க? உங்க ஃப்ரண்ட்ஸ் யாராச்சும் பி.எச்.டிக்கு தீஸிஸ் சப்மிட் பண்றவங்க இருக்காங்களா? இருந்தாச் சொல்லுங்க. அவங்க சிரமப் படவே வேணாம். ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிற தலைப்பை மட்டும் நம்பகிட்டச் சொன்னாப் போதும்...”

“நீங்க சொல்றது ஒண்ணும் புரியலீங்களே...”

“நான் என்ன ஃப்ரஞ்சிலியோ ஜெர்மன்லியோவா பேசறேன்? நல்லாப் புரியும்படியாத் தமிழ்லதானே சொல்லிக்கிட்டிருக்கேன்? உங்களுக்கு ஒரு சிரமமும் வைக்காமே ‘தீஸிஸை’த் தானே நீட்டா எழுதி ஆறு காப்பி டைப் பண்ணிக் கொடுக்கிறதுக்கு நம்மகிட்ட எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் இருக்காங்க. தமிழ் தீஸிஸ்னா ரெண்டாயிரம் ரூபாய். இங்கிலீஷ் தீஸிஸ்னா மூவாயிரம் ரூபாய். நீங்க விரலைக்கூட அசைக்க வேணாம். பி.எச்.டி. உங்களைத் தேடித் தானா வந்து சேரும்... கொஞ்சம் தாராளமாச் செலவழிக்க மட்டும் தயாராயிருக்கணும்.”

“இது மாதிரிக்கூட ஒரு ‘லெண்டிங் சர்வீஸ்’ இருக்குங்களா?”

பாதி இயல்பாகவும் பாதிக் குத்தலாகவும் தான் அவரை இப்படிக் கேட்டிருந்தான் சுதர்சனன்.

“இருக்காவது ஒண்ணாவது? இருக்கும்படியா இந்தச் சிண்டிகேட் சிதம்பரநாதன் ஏற்பாடு பண்ணி வச்சிருக்கான்னு நெனைச்சுப் பெருமைப்படுங்க! டாக்டர் நாகேசுவரனார், டாக்டர் இருதயசாமீன்னு இப்பப் பேருக்கு முன்னே ஜம்னு டாக்டர்ப் பட்டம் போட்டுக்கிறவங்கள்ளாம் யார் தயவுலே அதை வாங்கினாங்கன்னு அவுங்களையே போய்க் கேட்டுப் பாருங்க. அப்பத்தான் தெரியும் நம்ப பெருமை...”

டீக்கடையிலிருந்து பையன் வாங்கிக் கொண்டு வந்து வைத்த தேநீரைக் குடிக்கக் கூட நேரமின்றிப் பேசிக் கொண்டிருந்தார் சிண்டிகேட் சிதம்பரநாதன்.

“டீயை முதல்லே குடியுங்க. ஆறிடப் போவுது” என்று அவருக்கு நினைவூட்டினான் சுதர்சனன்.

அவர் தேநீரை எடுத்துப் பருகினார். சுதர்சனனும் பருகினான். தேநீர் குடித்து முடித்ததும் ஏதோ மறுபடி நினைத்துக் கொண்டவர் போல், “ஆமாம்! உங்க பேரென்ன சொன்னீங்க? மறந்து போச்சே...?” என்று இரண்டாவது தடவையாகவும் அவனைக் கேட்டார் சிதம்பரநாதன்.

“சுதர்சனம்.”

“சுதர்சனம்னா?...”

“டி. ஆர். சுதர்சனம்”

“அதாவது - வந்து...?”

எல்லாப் படித்தவர்களையும் போல் தனது சாதியைப் பற்றி விசாரிக்கும் ஆசையில் சிதம்பரநாதன் தடுமாறிக் கொண்டிருக்கிறார் என்பது சுதர்சனனுக்குப் புரிந்தது. சாதிகளை ஒழித்து விட விரும்பும் இந்த நவீன காலத்தில் தான் ஒவ்வொரு படித்த மனிதனுக்கும் அடுத்தவனுடைய சாதியை அறிந்து கொள்ள விரும்பும் முனைப்பு நிறைய இருக்கிறது என்பதைச் சுதர்சனன் புரிந்து கொண் டிருந்தான். படித்தவர்கள் இதை விசாரித்தறிவதற்குப் பல உத்திகள், தொழில் முறைகள், அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதைக் கூட அவன் அறிந்து வைத்திருந்தான். விசாரிக்கிறவர் தனக்கு நன்றாக ஊர், பேர் குலம், கோத்திரம் எல்லாம் தெரிந்த ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு, “அவருக்கு நீங்க ரிலேஷனுங்களா?” என்று கேட்பது ஒரு முறை. “இல்லை” என்று பதில் கிடைத்தாலும் “ஆமாம்” என்று பதில் கிடைத்தாலும் ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிந்துவிடக் கூடும். ‘இல்லை’ என்று பதில் கிடைத்தால் ‘அவர் எந்தச் சாதி இல்லை’ என்ற விவரமாவது புரியும். ‘ஆமாம்’ என்று பதில் கிடைத் தாலோ எந்தச் சாதி என்பதே நேரடியாகத் தெரிந்துவிடும். இப்படி மாற்றி மாற்றி இரண்டு மூன்று தெரிந்த பெயர்களைச் சொல்லி அவருக்கு உறவா? இவருக்கு உறவா? என்று கேட்டாலே சாதி தெரிந்துவிடும். அதிலும் முடியா விட்டால், “உங்க ஃபாதர்...?” என்று கேட்டு நிறுத்தினால் நாராயணப்பிள்ளை அல்லது குப்புசாமி முதலியார் அல்லது கிருஷ்ணையர் என்று பதில் வந்து சாதியைக் காட்டிக் கொடுத்துவிடும். முந்திய தலைமுறை மனிதர்கள் பெயர் சாதியோடுதான் வரும் என்ற நம்பிக்கை அல்லது பெரியவர்கள் பெயரை மரியாதை இல்லாமல் நாராயணன், குப்புசாமி, கிருஷ்ணன் என்று மொட்டையாகச் சொல்லத் துணிய மாட்டார்கள் என்ற நம்பிக்கை காரணமாக இருக்கலாம். படித்தவர்களிடம் மறைந்துள்ள காட்டுமிராண்டித் தனங்களில் இதுவும் ஒன்று என்பதைப் புரிந்து கொண்டிருந்த சுதர்சனம் அப்போது சிண்டிகேட் சிதம்பரநாதனை நிமிர்ந்து பார்த்து,

“உங்களுக்கு என்ன தெரியணும்? நான் என்ன சாதின்னு, தானே தெரியணும்? தைரியமாத்தான் கேளுங்களேன். ஏன் பூசி மெழுகறீங்க? எங்கப்பா நாயுடு; எனக்குச் சாதியிலே நம்பிக்கை கிடையாது” என்றான்.

“இல்லே... நான் விசாரிக்க வந்தது என்னன்னா...?” எதையோ மழுப்பினாற் போல இழுத்தார் சிதம்பரநாதன். தனது முயற்சியை - அதன் இரகசியமான உத்தியைச் சுதர்சனன் கண்டுபிடித்து விட்டானே என்று கூச்சமாக இருந்திருக்க வேண்டும் அவருக்கு. மூஞ்சியில் அடித்தது போல் அவன் அந்தப் பதிலைக் கூறிய பின்னர் அவனிடம் மேற்கொண்டு பேசுவதற்கு அவர் தயங்க வேண்டி வந்தது. ‘இவனிடம் உஷாராக இருக்க வேண்டும்’ என்ற உணர்வும் அவருள்ளே மெல்லத் தோன்றியது.

அத்தியாயம் - 18

பகல் ஒரு மணி சுமாருக்கு சிண்டிகேட் சிதம்பரநாதன் சுதர்சனனிடம் சொல்லிக் கொண்டு விடைபெற்றுப் போய்ச் சேர்ந்தார். சுதர்சனனுக்குப் பசி எடுத்தது. ரகு வருவானா அல்லது தானே தனியாகப் பகலுணவுக்குச் செல்வதா என்று தயங்கினான் சுதர்சனன். மெஸ்ஸுக்குப் போவதானால் புதியவனாகிய தான் மட்டும் தனியே போவது சரியாயிராது என்று பட்டது அவனுக்கு.

ரகுவுக்காகக் கால் மணி நேரம் காத்துப் பார்த்த பின் அவன் வந்தால் அவனோடு மெஸ்ஸுக்குப் போவது, இல்லையென்றால் எங்காவது சாப்பாட்டு ஹோட்டலில் போய் உண்பது என்று முடிவு செய்து கொண்டு காத்திருந்தான். ஆதர்சபுரம் நண்பர்கள் இரண்டொருவருக்குக் கடிதம் எழுதினான்.

நல்லவேளையாக அவன் சாப்பாட்டுக்குப் புறப்படுவதற்குள் ரகுவே வந்துவிட்டான்.

“தலைவர் உன்னைப் பத்தி ரொம்ப வருத்தப்பட்டார். அவரோட அருமை பெருமைகளைப் பத்தி இப்போ நீ உதாசீனப்படுத்தலாம். ஆனால் நீயே போகப் போகத் தெரிஞ்சுக்க முடியும்னு நினைக்கிறேன்” என்ற வார்த்தைகளைச் சுதர்சனனிடம் சொல்லிக் கொண்டே நுழைந்தான் ரகு. சுதர்சனன் ரகுவை உணவுக்குச் செல்லத் துரிதப் படுத்தினான்:

“அதைப் பத்தி இப்போ என்ன? முடிஞ்சு போன விஷயத்தை விட்டுடு. எனக்குச் சாப்பிடப் போகணும். பசிக்குது. உனக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்...”

“இருந்து நிதானமா எல்லோரும் இங்கேயே சாப்பிட்டு விட்டுப் போகணும்னு எங்களைத் தலைவர் கெஞ்சினாரு, நாங்க தான் அவருக்கு வீண் சிரமம் எதுக்குன்னு புறப்பட்டு வந்துட்டோம்.”

“நீ வர்ரத்துக்குக் கொஞ்சநேரம் முன்னாடி வரை சிண்டிகேட் சிதம்பரநாதன் உன்னைத் தேடி வந்து காத்துக் கிட்டிருந்தாரு. இப்பத்தான் சொல்லிட்டுப் புறப்பட்டுப் போனாரு. ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம்...”

“அப்படியா? அவரை நேரே அப்படியே தலைவர் வீட்டுக்குப் புறப்பட்டு வரச் சொல்லக் கூடாதோ? இன்னிக்குத் தலைவர் பிறந்தநாள்னு நீ சொல்லியிருந்தா அவரே அங்கே கிளம்பி வந்திருப்பாரே அப்பா?”

ரகுவின் தலைவரைப் பற்றிய புலம்பல் ஓயவே ஓயாது. போலிருந்தது. அது ஒருவிதமான பைத்தியமாகவே அவனைப் பிடித்திருப்பது போலத் தோன்றியது. மூச்சுக்கு முந்நூறு தரம் தலைவர் தலைவர் என்றே அனற்றிக் கொண்டிருந்தான் அவன். சமணரைக் கழுவேற்றியது, திருநாவுக்கரசரைக் கல் தூணில் பூட்டிக் கடலில் தள்ளியது போன்ற மதவெறிகளை விட மோசமான மதவெறிகளின் வரிசையில் காரணமில்லாத இக்காலத்து வீரவணக்கத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. எதிலும் வீரவணக்கம் புரிகிறவர்கள் மூளை வளர்ச்சி குன்றிப் போய்க் குருட்டுத்தனமாக மாறி விடுகிறார்கள் என்பதற்கு நிறைய உதாரணங்களைச் சுதர்சனனால் காணமுடிந்தது. சுதர்சனனே அப்படி இளமையில் சில விர வணக்க மனப் பான்மைகளிலே அழுத்தமாகச் சிக்கியிருந்தவன் தான். அந்த வீர வணக்கக் காலங்களில் தான் எப்படித் தன் கருத்துக்குச் சாதகமில்லாத கோணத்திலிருந்து ஒன்றைப் பார்ப்பதைத் தவிர்த்திருக்கிறோம் அல்லது ஒதுக்கியிருக் கிறோம் என்பது இப்போது அவனுக்கே நினைவு வந்தது.

“மெஸ்ஸிலேருந்து அந்தப் பொண்ணு வந்து சாப்பிடக் கூப்பிட்டிச்சுப்பா! அங்கேயே சாப்பிடப் போகலாமா? வேறெங்கேயாவது...?” என்று சுதர்சனன் ரகுவின் கவனத்தைத் தலைவர் புராணத்திலிருந்து மீண்டும் திசை திருப்ப முயன்றான்.

ஆனால் சுதர்சனனின் முயற்சி அவ்வளவு சுலபமாகப் பலிக்கவில்லை. சாயிபாபா பக்தர்கள் எப்படி எல்லா நேரமும் சாயிபாபாவின் விநோத அதியற்புதச் செயல்களைப் பற்றிய சம்பவங்களையே எடுத்துச் சொல்லியும் விவரித்தும் விளக்கியும் மகிழ்கிறார்களோ அதே போலத் ‘தலைவர்கள்’ என்ற நவீன இந்திய மேல் தட்டு வர்க்கத்தின் தொண்டர்களும் சதாகாலமும் தலைவர் தம் பெருமையைச் சொல்லி மகிழ்கிறவர்களாகவே இருந்தார்கள்.

“நம்ம மெஸ் இட்லின்னாத் தலைவருக்கு உயிர்ப்பா! எத்தனையோ நாள் என்னை வாங்கியாரச் சொல்லிச் சாப்பிட்டிருக்காரு” - என்று மெஸ் பற்றிய நினைவிலும் தலைவரையே ஞாபகப்படுத்திக் கொண்டு ஆரம்பித்து விட்டான் ரகு, சுதர்சனனுக்கு ஒரே சலிப்பாயிருந்தது. தேசத்தில் இன்று தலைவர் பக்தி - சாயிபாபா பக்தி எல்லாம் ஒரே மாதிரித்தான் இருந்தது. சுதர்சனனால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. மறுபடியும் ரகுவிடம் தனக்குப் பசியாயிருப்பதையும், மெஸ்ஸுக்குப் போகலாமா என்பதையும் நினைவூட்டினான் சுதர்சனன்.

“கொஞ்சம் பொறுத்துக்க! தலைவர் வீட்டிலிருந்து நண்பர்கள் ரெண்டு பேர் வருவாங்க. அவங்க வந்தப்பறம் அவங்களையும் கூட்டிக்கிட்டுப் போகலாம்” என்றான் ரகு.

பத்து நிமிஷத்தில் அந்த நண்பர்களும் வந்து சேர்ந்தார்கள். நான்கு பேருமாக மெஸ்ஸில் போய்ப் பகலுணவை முடித்துக் கொண்டு திரும்பும்போது பகல் மணி இரண்டரை ஆகியிருந்தது. சுதர்சனனுக்கு ஒரே அசதியாயிருந்தது.

அறைக்குத் திரும்பியதுமே சுதர்சனன் அயர்ந்து தூங்கி விட்டான். ரகுவும் அவனுடைய நண்பர்களும் தலைவர் பற்றியும் கட்சி பற்றியும் தங்களுக்குள் இடைவிடாமல் சளசளவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் தான் அந்தப் பேச்சு சுதர்சனனின் தூக்கத்துக்கு இடையூறாக இருந்தது. அப்புறம் தூக்கம் ஆழ்ந்ததாக அமையவே அவனுக்குத் தன்னைச் சுற்றிலும் நடந்து கொண்டிருந்த எதுவுமே நினைவுமில்லை, தெரியவுமில்லை. தூங்கிவிட்டான்.

மறுபடி அவன் தன் உறக்கம் கலைந்தபோது தானிருப்பது ஆதர்சபுரமா சென்னையா என்ற சுதாரிப்பு வருவதற்கே சில விநாடிகள் ஆயின. அவ்வளவு அயர்ந்து தூங்கியிருந்தான்.

“என்னப்பா நல்ல தூக்கம் போலிருக்கே?... காபி குடித்துவிட்டுக் கடற்கரைப் பக்கம் போகலாமா?” என்றான் ரகு. எழுந்து முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு அவனோடு புறப்பட்டான் சுதர்சனன். போகிற வழியில் காபி குடித்துவிட்டுக் கடற்கரைக்குச் சென்றார்கள் அவர்கள்.

மணலில் காற்றாடச் சிறிது நேரம் அமர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்து விட்டுத் திரும்புவதற்குத் தான் ரகு தன்னைக் கடற்கரைக்குக் கூப்பிட்டதாகச் சுதர்சனன் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் கடற்கரை போனதும் தான் அங்கே தலைவர் கலம்பகச் செல்வரின் பிறந்தநாள் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. ரகுவும் நண்பர்களும் பொதுக்கூட்ட மேடைக்குப் போனார்கள். சுதர்சனன் தனியே ஒரு மூலையில் மணலில் போய் அமர்ந்தான். ரகுவும் நண்பர்களும் எவ்வளவோ வற்புறுத்தியும் அவன் மேடைக்கு வர மறுத்து விட்டான்.

தனியே மணவில் உட்கார்ந்து அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது “வணக்கங்க! எப்போ வந்தீங்க...?” என்று பழகிய குரல் ஒன்று கேட்டு அவன் நிமிர்ந்து பார்த்தான்.

பழைய இயக்கத் தோழரும் குடந்தை நகரில் செயலாளராக இருந்தவருமான ‘பொன்னழகு’ நின்று கொண்டிருந் தார்.

“அடடே வாங்கண்ணே உட்காருங்க!” என்று அவரை வரவேற்றான் சுதர்சனன். பொன்னழகு உயரமும் பருமனுமாக வாட்ட சாட்டமாயிருந்தார்.

“ஆமாம்! நீங்க தெற்கே எங்கேயோ - அதென்ன பேரு? ஆரவாரபுரமா ஆதர்சபுரமா? அங்கே தமிழ்ப் பண்டிட்டா இருக்கறதாவில்லே கேள்விப்பட்டேன்?” என்று கேட்டுக் கொண்டே மணலில் உட்கார்ந்தார் பொன்னழகு. சுதர்சனன் ஆதர்சபுரத்தில் வேலையை விட்டுவிட்டுத் தான் சென்னைக்கு வந்து சேர்ந்த விவரங்களை அவருக்குத் தெரிவித்தான். அவர் தன்னைப் பற்றிய விவரங்களைக் கேட்காமலே அவனிடம் மேலும் தெரிவித்தார்.

“நம்ம ஊர்க்காரரு இங்கே மினிஸ்டர் ஆனாலும் ஆனாரு. அதுவும் இதுவுமா வந்து குவியுற பணத்தை என்ன பண்றதுன்னு அவருக்கே புரியிலே. புதுசா இங்கே மெட்ராஸ்லே ஒரு ஃபைவ் ஸ்டார் ஓட்டல் கட்டித் திறந்திருக்காரு. அதிலே இப்போ நான் ஒரு டைரக்டர். பினாமிதான்...”

சுதர்சனன் பொன்னழகை நிமிர்ந்து பார்த்தான். சுயமரியாதை இயக்கத்தின் நேர்மைப் பிடிவாதமும் முரண்டுகளும் இளகிப் போய் அவர் முகத்தில் இப்போது அசடு வழிய ஒரு புது மினுமினுப்பு வந்திருப்பது தெரிந்தது.

“ஊரு வீடு வாசல் இயக்கத்தை எல்லாம் விட்டிட்டு இதுக்கு எப்படி நீங்க வந்தீங்க?”

“இதிலே என்ன தப்பு? ஐயாவே, ‘நம்பளவங்க ராஜ்யம் பண்றாங்க. அவங்க நல்லது பண்ணினாலும் தப்பு பண்ணினாலும் நாம அவங்களை ஆதரிக்கணும்’னு சொல்லிட்டாரே? லஞ்சமோ ஊழலோ - எது பண்ணினா என்னங்க? நம்மளவனுகளும் நாலுபேர் பணக்காரனா வந்தால் நல்லது தானே?” இப்படி அவர் கேட்டார்.

“தப்புப் பண்றவங்க நமக்கு வேண்டியவங்களா இருந்தால் அனுமதித்து ஆசி கூறி விட்டுடறதும் நமக்கு வேண்டாதவங்களா இருந்தால் எதிர்த்துத் தாக்கிப் போராடறதும் தான் இந்த நாட்டிலே கட்சி அரசியல்னு ஆனப்புறம் இதைப் பத்தி ஒண்ணும் பேசறத்துக்கு யோக்கியதை இல்லே அண்ணே...”

“நீங்க என்ன சொல்றீங்க சுதர்சனம்?”

“தெளிவாச் சொல்லணும்னா இந்த விஷயத்திலே ஐயாவையோ உங்களையோ நான் ஆதரிக்க மாட்டேன். முதல்லே ஒரு சுயமரியாதைக்காரன் என்றும் எதற்கும் மடங்காத நேர்மையாளனாக இருக்கணும். அந்த நேர்மை என்னிக்குப் போச்சோ அன்னிக்கே சுயமரியாதை இயக்கமும் போச்சு.”

“அதெப்படி? இப்பத்தான் நம்ம இயக்கத்துக்கு ஒவ் வொண்ணா வெற்றிமேலே வெற்றியே கிடைச்சிட்டிருக்கு, நம்மளவங்களே இப்போ நாட்டை ஆளுறாங்க. நமக்கு வேண்டியவங்களுக்குச் சலுகை, காண்ட்ராக்ட் எல்லாம் நிறையக் கிடைக்குது. இதைப் போயி குறை சொல்றீங்களே அண்ணே! இதோ பாருங்க... நீங்களோ ஆதர்சபுரத்திலே வேலையை விட்டுட்டேங்கிறீங்க. பேசாமல் இப்பவே எங்கூட வாங்க... நம்ப மந்திரி அண்ணன் கிட்டக் கூட்டிக் கிட்டு போயிக் கழக முன்னணிப் பேச்சாளர்னு உங்களைப் பற்றி ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கச் சொல்லி மாசத்துக்கு ஏழு எட்டுக் கூட்டம் ஏற்பாடு பண்ணி ஒரு கூட்டத்துக்கு முந்நூறு ரூவா தரச் சொல்றேன். சுலபமா மாசம் ஒண்ணுக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய் உங்களுக்குக் கிடைச்சிடும். அதுக்கப்புறம் ‘தோழர் சுதர்சனனார் கார் வழங்குநிதி’ன்னு அறிக்கைவிட்டு வசூல் பண்ணுவோம். ஆறு மாசத்திலே ஒரு புதுக்காரையும் நீங்க வாங்கிக்கலாம். இனிமே ஒருத்தன் கிட்டக் கைகட்டிச் சேவகம் பண்ண வேணாம் நீங்க!... என்ன சொல்றீங்க? தயாரா?...உம்...னு ஒரு வார்த்தை சொல்லுங்க. இப்பவே இட்டுக்கிட்டுப் போயி அண்ணன்கிட்டச் சொல்லிடலாம்...”

“சுயமரியாதை இயக்கத்திலே நான் வந்து சேர்ந்தப்போ அரசியல் - சமூக சேவை எல்லாமே பொதுத் தொண்டுகளாகப் பிரதிபலன் கருதாத சேவைகளாக இருந்திச்சு அண்ணே, இப்போ அதுவும் ஒரு தொழிலாகிச் சம்பாதிக்க முடியுதுன்னு நீங்களே சொல்றீங்க. கேட்க அசிங்கமா இருக்கு. நான் அதுக்கு ஆளில்லே! நாளாக நாளாகப் பொது ஜன சேவைக்குன்னு தொடங்கின எல்லா நல்ல இயக்கமும் பிள்ளையார் பிடிக்கக் குரங்கானாற் போல ஆயிடிச்சு. எல்லாப் பொதுநல இயக்கத்திலேயும் - வேறே வேலையே இல்லாத சோம்பேறிகள், ரெளடிகள், வேறு எதற்கும் கையாலாகாதவர்கள், இடைத்தரகர்கள், லாயக்கில்லாதவர்களெல்லாம் வந்து நிரம்பிட்டாங்கங்கிறது தான் என் அபிப்பிராயம். இதோ எதிரே மேடைக்கு மேலே நடக்குதே ஒரு விழா - அதுவே இதுக்குச் சரியான உதாரணம். சாதனைகளை மறந்து விட்டு மனிதர்களை முகஸ்துதி செய்து மாலை போட்டுத் தமுக்கடித்தே நாம் காலங்கடத்திக் கொண்டிருக்கிறோமே தவிர உழைப்பிலும் உண்மையிலும் நமக்கு நம்பிக்கை போயிடிச்சு...?”

“நீங்க ரொம்ப விரக்தியா இருக்கீங்க... பிழைக்க வழி சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்க...?” என்றார் பொன்னழகு.

அத்தியாயம் - 19

‘நியாயவாதியாயிருப்பதே விரக்திக்கு அடையாளம் என்று அவசரமாகத் தீர்ப்புச் சொல்லிவிடும் அளவுக்குச் சமூகமும் மனிதர்களும் இன்று மரத்துப் போயிருக்கிறார்கள் என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. தவறுகளைச் செய்தோ, பிழைகளைப் புரிந்தோ எப்படியாவது முண்டியடித்துக் கொண்டு முன்னுக்கு வந்து பணம் சம்பாதிப்பது தான் விரக்தியற்ற நிலை என்று பொன்னழகு கருதுவது போல் அவன் பேச்சு இருந்தது. ஏழையின் வேதாந்தம் எங்கும் எடுபடுவதில்லை. வேதாந்தம் பேசவும் கார், பங்களா, பணம், பதவி எல்லாம் செளகரியமாக இருந்தால் தான் அதைக் கேட்கவும், நம்பவும், மதிக்கவும் ஆட்கள் இருப்பார்கள். திருவோடு ஏந்தும் சாமியாரைச் சந்நியாஸியாக ஏற்றுக் கொள்வதைவிட இம்பாலா காரில் காவி உடையோடு வந்து இறங்கி, “பிரின்ஸிபில்ஸ் ஆஃப் யோகா” என்று தலைப்பிட்டுக் கொண்டு பேசுகிற லக்சூரியஸ் யோகிக்குத்தான் இன்று மதிப்பு என்று தெரிந்தது. தன்னுடைய நியாயவாதம் எடுபடாதது ஏன் என்று சுதர்சனனுக்கே புரிந்தது. இருந்த வேலையையும் விட்டுவிட்டுப் புதிய வேலையைத் தேடிப் பட்டினத்துக்கு வந்த இடத்திலே தன்னை யார் எப்படி மதிப்பார்கள்?

சுதர்சனன் பொன்னழகை நோக்கி வினவினான்:

“நிஜத்தைப் பேசினாலே அதை விரக்தின்னு சொல்றீங்க பொன்னழகண்ணே! ‘பிழைக்க வழி’ங்கிற தமிழ் வார்த்தைக்குப் பிழை செய்வதற்கு வழின்னும் அர்த்தம். தவறு செய்வதற்கு வழின்னும் அதுக்கே இன்னொரு விதமாகவும் அர்த்தம் சொல்லலாம். எதிர்காலத்திலே ஒரே காரியத்துக்கு இந்த இரண்டு அர்த்தமுமே வரும் என்று நினைத்தோ என்னவோ இப்படி ஒரு சிலேடைப் பொருளே இதுலே தற்செயலா அமைஞ்சிருக்கு அண்ணே!”

“சரி நான் வரேன்... எதுக்கும் தேவைப்பட்டா வாங்க. இந்தாங்க என் விஸிட்டிங் கார்டு” என்று ஒரு விஸிட்டிங் கார்டை எடுத்து நீட்டி விட்டு நகர்ந்தார் பொன்னழகு. சுதர்சனன் அதை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொண்டான். சிறுமைகளையும் கயமைகளையும் கண்டு துடிதுடித்துக் குமுறும் ஓர் இளம் நேர்மையாளனுக்கு ஏற்படுகிற குமட்டல் அப்போது சுதர்சனனுக்கும் ஏற்பட்டது.

அவன் இளமையில் நம்பிய தலைவர்கள் எல்லாம் முதலில் பஞ்சகல்யாணிக் குதிரைகளாகத் தோன்றிப் பின்பு மெல்ல மெல்லக் கழுதைகளாகத் தேய்ந்து போயிருந்தனர். அவனுக்குச் சுயமரியாதையைப் பால பாடம் சொல்லிக் கொடுத்த பெரியவர்களே பணத்துக்காகப் பலரிடம் அவ மரியாதைப்படக் கூடத் தயாராயிருப்பதை அவன் கண்ணெதிரே பட்டவர்த்தனமாகக் கண்டிருந்தான். ஏழைகளுக்காகக் கண்ணிர் சிந்தியே அதன் மூலம் பணக்காரர்களாகி விட்ட பல தலைவர்களுக்குப் பல முகங்கள் இருந்ததை அவன் அறிவான். ஏழைக்கு முன் கண்ணிர் விட ஒரு முகம், வசதியுள்ளவனுக்கு முன் சிரித்து மலர ஒரு முகம், மேடைகளிலே மட்டும் சீர்திருத்தம் பேச ஒரு முகம் என்று பொய்யான பல முகங்களை வைத்திருக்கும் சமூக விரோதக் கூட்டம் ஒன்று அரசியலின் பெயராலும் பொது வாழ்வின் பெயராலும் பெருகி வருவதை அவன் கூர்ந்து, கவனித்து மனம் கசந்து கொண்டிருந்தான். காரித் துப்பலாம் போன்ற குணக் கேட்டையும், பல நிலைக்கேற்ற பல்வேறு முகங்களையும் உடைய சில மனிதர்களே எல்லா இடங்களிலும் மாலைகளுக்காகத் தங்கள் கழுத்தை நீட்டிக் கொண்டிருக்கிற சமூகத்துக்கு எப்போது யாரால் விடிவு வரப்போகிறதோ என்று குமுறியது சுதர்சனனின் உள்ளம்.

மேடையில் தலைவருக்குத் தொண்டர்கள் ஒவ்வொரு வார்டின் சார்பிலும் மாலை அணிவித்துக் கொண்டிருந்தார்கள். மொத்தம் பத்தே மாலைகளை வைத்துக் கொண்டு நூறு பேர் மாற்றி மாற்றித் தலைவருக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள். முதல் நபர் அணிவித்த மாலையைத் தலைவர் கழற்றி மேஜை மேல் வைத்ததும் பின்புறமிருந்து இரண்டு கைகள் நீண்டு அந்த மாலையை எடுத்தன. அடுத்த மாலைக்கும் இதே கதி. இந்த ரகசியத்தின் கீழ்ப் பத்தே மாலைகளைப் பத்துத் தடவை மாற்றி மாற்றிப் போட்டால் நூறு பேர் மாலை போட்ட பெருமை வந்துவிடும். ஆனால் முடிவில் மாலைகளை எண்ணிப் பார்த்தால் மட்டும் பத்து மாலைகள்தான் இருக்கும். தலைவருக்கு இது தெரியாமல் இருக்க நியாயமில்லை. கழுத்தில் விழுந்த மாலை ஒவ்வொன்றையும் தாம் கழற்றி வைக்கக் கழற்றி வைக்க அவை வைத்த சுவடு தெரியாமல் மாயமாய் மறைந்து மறுபடி புது மலையாய்த் தம் கழுத்துக்கே திரும்ப வருவதும் அவர் அறிந்த உண்மையே. பல ஆண்டுகளுக்கு முன் கட்சியின் சிறப்புக் கூட்டங்களில் மாலை சம்பந்தமான இந்தச் சிக்கன நடவடிக்கையைத் தொண்டர்களுக்கு அவரே கற்றுக் கொடுத்ததாகச் சொல்லுவார்கள்.

அங்கே மேடையில் தலைவருக்கு மாலை போட வருகிற ஒவ்வொருவனுக்கும் மாலை போட வேண்டும் என்கிற நோக்கத்தை விடத் தான் ஓர் ஐந்து அல்லது பத்து நிமிஷம் எப்படியாவது தட்டுத் தடுமாறி பேசி விட வேண்டும் என்று முயல்வதே துருத்திக் கொண்டு தெரிந்தது. சிலர் வாய்ப் பதற்றத்தில் பல சொற்களை நீட்டி முழக்கிப் பேசி முடிவில் தலைவருக்கு இம்மலர் மாலையை மாணிக்க மாலையாகப் பாவித்து அணிவிக்கிறேன் என்று கூற நினைத்து, ‘இம்மாலைக்குத் தலைவரை மாணிக்கமாகப் பாவித்து அணிவிக்கிறேன்’ என்று உளறிக் கொட்டினார்கள். உண்மையில் பார்த்தாலும் அந்த வார்த்தைகளே சரியாயிருந்தன. அவர்கள் தலைவருக்கு மாலையணிவிக்கவில்லை. மாலைகளுக்குத் தான் தலைவரை அணிவித்துக் கொண்டிருந்தார்கள். போகிற வேகத்தைப் பார்த்தால் தலைவரின் அடுத்த பிறந்த தினத்திற்குள் பத்து மாலைகளுக்குப் பதில் ஒரே மாலையையே நூறு பேர் எப்படி மாற்றி மாற்றிப் போடுவது என்ற உத்தியைக் கண்டுபிடித்து விடுவார்கள் போலிருந்தது.

திடீரென்று ஓர் ஆள் ஒரு வெள்ளாட்டுக் குட்டியும் கையுமாக மேடையில் ஏறி மைக் முன் வந்தான். ஆட்டுக் குட்டி மேடையலங்கார வெளிச்சங்களில் மிரண்டு ‘அம்மே’ என்று கத்தியது. “தலைவருக்குப் பதினேழாவது வட்டத்தின் சார்பில் இந்த ஆட்டுக் குட்டியை அளிக்கிறேன்” என்றான். தலைவர் அதை அணைத்தாற்போல் வாங்கிப் பக்கத்திலிருந்த ஆளிடம், “பத்திரமா வீட்டுக்கு அனுப்பி வை” என்று சொல்லிக் கொடுத்தார். அது மைக்கில் எல்லோருக்குமே தெளிவாகக் கேட்டது.

அடுத்து மற்றொருவன் தலைவரிடம் இரண்டு முயல் குட்டிகளை அளித்தான். இந்த விவகாரங்கள் முடியவே இரவு எட்டு மணி வரை ஆகிவிட்டது.

ஒரு சர்க்கஸ் காட்சியைப் பார்ப்பதுபோல் சுதர்சனன் மணலில் அம்ர்ந்து இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். கிராமத்துக் காவல் தேவதைகளுக்கு ஆடு, மாடு, கோழி என்று நேர்ந்து கொண்டு பலி கொடுக்கும் வழக்கம் ஏனோ அவனுக்கு அப்போது நினைவு வந்தது.

தலைவரின் பிறந்த தினப் பாராட்டு விழாப் பொதுக் கூட்டம் இரவு பத்தரை மணிக்கு முடிந்தது. ரகுவும் நண்பர்களும் மேடையிலிருந்து கீழே இறங்கி வர பதினொரு மணி ஆகிவிட்டது. சுதர்சனன் அதுவரை காத்துக் கொண்டிருந்தான்.

ரகு மேடையிலிருந்து வந்தபோது அவனோடு ஒரு பட்டாளமே வந்தது. தன்னுடன் வந்தவர்களில் புதியவர்களுக்குச் சுதர்சனனை ரகு அறிமுகம் செய்து வைத்த போது,

“அடடே! அப்பிடிங்களா? அண்ணன் தமிழ்ப் புலவர்ங்கிறீங்க. தெரிஞ்சிருந்தா ஐயாவைப் பத்தி இவரையும் ரெண்டு வார்த்தை பேசச் சொல்லி மேடையில் ஏற்றியிருக்கலாமே?” என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொல்லியதைக் கேட்டபோது உலகம் முழுவதுமே மேடையில் ஏறிப் பேசுவதற்கு ஏங்கிக் கொண்டு தவிப்பது போல அவர்களுக்குள் ஒரு பாவனை இருக்கிறது என்பதை உணர முடிந்தது. சுதர்சனனும் அப்படி ஏங்கியிருக்க வேண்டும் என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டார்களோ என்னவோ?

திரும்புகிற வழியில் ஏதோ விளம்பர போர்டில்லாத மெஸ் போன்ற ஓர் இட்டிலிக் கடையில் கூட்டமாக அத்தனை பேரும் நுழைந்து இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். ரகுவுக்குக் குறைந்தது இருபத்தைந்து ரூபாயாவது அன்று கையிலிருந்து செலவழிந்திருக்க வேண்டும் என்று சுதர்சனன் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டின் அரசியல் முக்கியஸ்தன் செலவாளியாக இருந்தே தீர வேண்டிய அவசியமும் அரசியல் மிகவும் ‘காஸ்ட்லி’யாக இருப்பதும் புரிந்தது.

அறைக்குத் திரும்பிச் சிறிது நேரமானதும் தூங்குவதற்கு முன் ரகு தற்செயலாக “ஏனப்பா சுதர்சனம்? நீ இங்கேயே நம்ம ட்யூட்டோரியில்லே இருந்துக்கிறியா? அல்லது ரெகுலர் சர்வீஸா ஏதாவது ஸ்கூல்லே போய் வேலை பார்க்க ஆசையா?” என்று அவனுடைய வேலையைப் பற்றி அப்போதுதான் ஞாபகம் வந்தவனைப் போல் வினவினான். திடீரென்று அவன் இதை வினவியிருந்ததால், சுதர்சனனுக்கு உடனே இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

நண்பனுக்கு அப்போது தலைவர் - விழா எல்லாம் மறந்து போய்த் திடீரென்று தன்னுடைய வேலை விஷயம் எப்படி ஞாபகம் வந்ததென்று நினைத்துச் சுதர்சனன் வியந்தான். ஒருவேளை தன்னை விரைவாகத் தட்டிக் கழிக்க முயலும் முயற்சியின் ஆரம்பமாகத்தான் அந்த வினாவே வெளிவந்ததோ என்றுகூட அவனுக்கு நண்பனின் மேல் சந்தேகமாக இருந்தது.

“நிதானமா யோசிச்சு முடிவு பண்ணலாம். இப்போ நடுராத்திரியிலே பேசி முடிவு பண்ண வேண்டிய அத்தனை அவசரமான விஷயமில்லை அது” என்றான் சுதர்சனன்.

“அதுக்கில்லே! எனக்கு ஒரு புது ஐடியா தோணிச்சு. ஏற்கெனவே சிண்டிகேட் சிதம்பரநாதன் என்னை விடாமத் தூண்டிக்கிட்டிருக்காரு. வெறும் பட்டப்படிப்போட போகாமே ஒரியண்டல் டைட்டில்ஸ் இருக்கே - அதாவது வித்வான் பட்டம், அதுக்கும் இங்கேயே கிளாஸ் நடத்தலாம். டுயூஷன் ஏற்பாடு பண்ணலாம். பிரைவேட்டா வித்வான் எழுதறவங்க எல்லாம் நிறையப்பேர் வந்து சேருவாங்க. அதை அப்படியே உன் பொறுப்பிலே விட்டுடலாம்னு நினைக்கிறேன். வித்வான், புலவர் பட்டங்களுக்கு இப்ப நிறையபேர் படிக்கத் தேடி வர்ராங்க.”

“யோசிக்கலாம். எனக்கு ஒண்னும் ஆட்சேபணை இல்லே! எத்தனை பேர் சேருவாங்கன்னு பார்ப்போம். தினப்பத்திரிகையிலே உன் டூட்டோரியல்ஸ் பேரிலே ஒரு விளம்பரம் போட்டால் தானே தெரிந்துவிடும். ‘புதிதாக வித்வான் வகுப்புக்களுக்கும் பாடம் நடத்துகிறோம். சேர விரும்புகிறவர்கள் உடன் விண்ணப்பிக்கவும்’ என்று விளம்பரம் கொடுத்தால் சரியாயிருக்கும்.”

“சரி! நாளைக்கே அந்த விளம்பரத்தைக் கொடுத்துப் பார்த்தால் போச்சு! சிண்டிகேட் சார் மட்டும் தயவுபண்ணினார்னா நம்மகிட்ட வந்து சேர்ர ஒவ்வொரு ஸ்டூடண்டையும் ஜெயிக்க வைக்கலாம். அப்படி ஜெயிக்க வச்சு ஒரு வருஷம் நல்ல ரிஸ்ல்ட் காமிச்சிட்டோம்னா அடுத்தவருஷம் தானா நிறைய ஸ்டூடண்ட்ஸ் வந்து சேருவாங்க.”

“ஏன்? சிண்டிகேட் சார் தயவு இல்லாமல் - ஸ்டூடண்ட்ஸுக்கு நல்லாக் கோச் - அப் பண்ணியே நாம ஜெயிக்க வைக்கலாம். எனக்கு அந்த நம்பிக்கை உண்டு. நாம் பட்டம் பெறுவதற்குக் கல்வியின் ஏஜெண்டுகளாகச் செயல்படக் கூடாது. கல்வியை அறிமுகப்படுத்தும் போதகர்களாகச் செயல்பட வேண்டும் ரகு!”

“இப்படி எல்லாம் லட்சியம் பேசிக்கிட்டிருந்தோம்னா டூட்டோரியல் காலேஜ் நடத்த முடியாது. ஏதாச்சும் ஆசிரமம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.”

“அதாவது ஒழுங்காக இருந்தால் கெடுதல் என்கிறாய். ஒழுங்கின்மையை வேகமாகக் கற்றுக் கொண்டும் கற்பித்தும். வாழ்ந்தால்தான் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறாய்...”

சுதர்சனன் இப்படிக் கோபமாகக் கேட்டபோது ரகு சிரித்துக் கொண்டே,

“நான் அப்படிச் சொல்லவில்லை அப்பா! உலக அனுபவம் அப்படிச் சொல்லுகிறது. இலட்சியத்துக்கும் அனுபவ நடைமுறைக்கும் நடுவே இருக்கும் இடைவெளி பெரியது தான்! அதற்கு நாம் என்ன செய்வது?”

அத்தியாயம் - 20

வெளியே தெரியாமல் உள்ளுற ‘ரகு’வுக்குள் இருக்கும் வியாபார மனப்பான்மை சுதர்சனனுக்குத் தெளிவாகவே புரிந்தது. கல்வியையும் ரேட் பேசி விற்கவும், வாடகைக்கு விடவும், தவணை முறையில் செலவாணி செய்யவும் தான் ரகு தயாராக இருந்தானே ஒழியக் கற்பித்தலை முக்கியமானதாகவும் இதர அம்சங்களை இரண்டாம் பட்சமாகவும் கொண்ட ஒரு நல்ல எண்ணம் ரகுவிடமே இல்லை.

பிறருடைய அறிவை வளர்ப்பதுதான் கல்வி என்பதை விட அறியாமையைச் சுரண்டுவதுதான் கல்வி என்று எல்லாரும் எல்லாமும் சேர்ந்து பழக்கப்படுத்தி இருந்தார்கள். இப்படிப் பிறருடைய அறியாமையைச் சுரண்டும் திட்டமிட்ட நோக்குடனேயே கல்லூரிகள், கலாசாலைகள், பல்கலைக் கழகங்கள் எல்லாமே தாராளமாக இயங்கி வருவதாகத் தெரிந்தது.

மனம் மலருகிற இயல்பான கல்விக்கும் இந்த ஏற்பாடு களுக்கும் சம்பந்தமே இல்லையென்று தோன்றியது. ரகுவோ தன்னுடைய சகலத்தையும் ஒரு வியாபாரத் தன்மையோடு நடத்தி வந்தான். அதைப் பற்றி அவனே அப்படித்தான் விவரித்தான்.

“ஒதுங்கி இருந்து இந்த மெட்ராஸ்லே ஒண்ணுமே பண்ண முடியாது சுதர்சனம்! நான் இப்போ கலம்பகச் செல்வர் ஐயாகிட்டே இருக்கேன்னா அதுனாலே பல காரியங்களைச் சாதிச்சுக்க முடியுது. தமிழ்நாடு முழுவதும் எங்க இயக்கத்தைச் சேர்ந்த குடும்பங்களிலே எந்தப் பையன் எங்கேயிருந்து டூட்டோரியல் காலேஜ்ல சேரணும்னாலும் நேரே இங்கே புறப்பட்டு வந்துடறாங்க. என்னோட இந்த டூட்டோரியல் காலேஜோட பெயர் அவங்களுக்குத் தூக்கத்திலே எழுப்பிக் கேட்டாக் கூட ஞாபகம் இருக்காப்பிலே மனப்பாடம் ஆகியிருக்கு. சிண்டிகேட் சாரோடு சிநேகிதம் இருக்கிறதாலே யூனிவர்ஸிடி விஷயங்கள்ளாம் சுலபமா நடந்துடுது. இப்பிடி ஒண்ணை வச்சுத் தான் இன்னொண்ணு நடக்க வேண்டியிருக்கு. வேறே வழி இல்லே. வேற காலேஜ்ல வேலை பார்க்கலாம்னா நம்மாலே அதுவும் முடியாது. அரசியல் இயக்கம், தலைவர், மாநாடு அது இதுன்னெல்லாம் நமக்குன்னு சிலதைச் சொந்தமா வச்சுக்கிட்டு இனிமே ஒருத்தனுக்குக் கீழே கைகட்டிச் சேவகம் செய்யறதுங்கிறது. ரொம்பக் கஷ்டம்.”

“ஏன்? பல பேரு கவர்மெண்ட் காலேஜ்லே வேலை பார்த்துக்கிட்டே கூட அதை எல்லாம் துணிஞ்சு செய்யிறாங்களே? எப்போ எப்போ எந்தெந்தக் கவர்மெண்ட் இருக்கோ அதுக்குத் தகுந்த மாதிரி நிறத்தை மாத்திக்கிறாங்க. அறிவாளின்னு சொல்லிக்கிற கூட்டத்தைச் சேர்ந்த பல பேரு ஒரு தாசிமாதிரி அல்லது வைப்பாட்டி மாதரித் தன்னைப் போஷிக்கிற ஆளுக்கு விசுவாசத்தைச் சில்லறை சில்லறையாக் கொஞ்சம் கொஞ்சமா விற்பனை செய்யிறாங்களே?”

“இப்படியெல்லாம் நீ பேசறதைப் பார்த்தாலே எனக்குப் பயமா இருக்கு சுதர்சனம்! ஏற்கெனவே ஒரு பள்ளிக்கூடத்திலே மேனேஜ்மெண்டைப் பகைச்சுக்கிட்டு நீ வெளியேறி வந்தாச்சு. இனிமேலாவது நமக்குக் கொஞ்சம் ஜாக்கிரதை உண்ர்ச்சி தேவை. வாழ்நாள் பூராவும் போராடிக்கிட்டே இருக்க முடியாது. அது சலிச்சுப் போகும்.”

“இல்லே சுயமரியாதை உள்ளவனுக்கு அது சலிக்காது. அதுதான் உண்மை வாழ்க்கையாக இருக்கும் ரகு!”

“சரி! இப்ப அதெல்லாம் எதுக்கு? வீண் விவாதங்களால் ஒரு நயா பைசாவுக்குப் பிரயோசனம் கிடையாது. ஆக வேண்டிய காரியத்தைக் கவனிக்கலாம், இங்கே மெட்ராஸுக்குள்ளே எந்த கவர்மெண்ட் காலேஜிலேயும் ஹைஸ்கூல்லேயும் உன்னை மாதிரி ஆளுக்கு வேலை கிடைக்காது. கிடைச்சாலும் உனக்கு அது ஒத்து வராது.”

“நான் ஒத்து வரும்னு சொல்லியிருந்தால் தானே நீ மறுக்கணும்? நானே உங்கிட்ட அப்படிச் சொல்லலியே ரகு!”

“அப்போ இங்கே நம்ம டூட்டோரியல்லே இருக்கிற பி.ஏ.-பி.யூ.ஸீ. கிளாஸோட புலவர் வகுப்புப் பயிற்சிகளையும் உன்னை வச்சுத் தொடங்கிட வேண்டியது தான்.”

“நல்லாச் செய்யலாம். ஆனால் ஒரு கண்டிஷன். இந்த டூட்டோரியல் காலேஜிலே உனக்குக் கீழே வேலை பார்க்க வந்திருக்கேன் என்கிறதை வச்சு உன் கட்சி தலைவர், மாநாடு இதை எல்லாம் நீ என்னோடும் சப்பந்தப்படுத்தக் கூடாது ரகு. அங்கே மாலை போட வா. இங்கே பேசவான்னெல்லாம் தொந்தரவு செய்யக் கூடாது. அதில் நான் என்னுடைய தனித்தன்மையை ஒருபோதும் இழக்க மாட்டேன் என்பதை இப்போதே உனக்கு சொல்லிவிடு கிறேன்.”

“அதுதான் நீ வந்ததிலிருந்து நீ எப்படி நடந்துகொண்டாய் என்பதைப் பார்த்து நானே புரிந்து கொண்டு விட்டேனே? இன்னும் அதை நீ சொல்லித்தானா தெரிய வேண்டும்?”

“எப்பவும் வெளிப்படையாகச் சொல்லிடறதுதான் நல்லதுப்பா! நீ என்னடான்னா உன்னோட படிப்பு நீ நடத்தற காலேஜ் முதலிய சகலத்தையும் நீ தலைவர்னு நினைக்கிற யாரோ ஒருத்தருக்குச் சமர்ப்பணம் பண்ணிப் போட்ட மாதிரிப் பேசுறே? நான் அதுக்கெல்லாம் ஆளில்லேப்பா. முதல்லேயே அதைச் சொல்லிடணும்கிறத்துக்காகத் தான் இதைப் பேசறேன்.”

“உன் இஷ்டம் எப்படியோ அப்பிடி நீ நடந்துக்கலாம். தலைவரோட பழக்கம் உன்னை வளர்க்குமே ஒழிய, அழித்து விடாது. உன் நன்மைக்காகத்தான் நான் உன்னை அவருக்கு மாலை போடச் சொன்னேனே ஒழிய என் நன்மைக்காக அல்ல. வேண்டாம்னா விட்டுடேன்! அதிலென்ன வந்தது?”

“ஏத்துக்கிட்டாத்தானே அப்பா விட்டுடறதைப் பத்தின பிரச்னை. நான்தான் அதை ஏத்துக்கவே இல்லியே?”

மறுநாள் காலையே சுதர்சனனுக்கு முறையாக ஒரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை டைப் செய்து கையில் கொடுத்து விட்டான் ரகு. அதில் சுதர்சனனின் மாதச் சம்பளம் ரூபாய் ஐநூறு என்று தெளிவாகக் குறித்திருந்தான். அதை வாங்கிப் படித்த உடனே சுதர்சனன்,

“சும்மா ஒரு வீம்புக்காக ஐநூறு அறுநூறுன்னு சொல்லிப் போட்டு அப்புறம் நீ சங்கடப்படக் கூடாது? எனக்கு அவ்வளவு கொடுத்தாகணும்னு அவசியம் இருக்கா, அவ்வளவு கொடுக்க உனக்குக் கட்டுபடி ஆகுமான்னு பார்த்துச் செய். அவசரப்படாதே. எனக்குப் பெரிசாச் சம்பாதிக்கணும்னு ஒண்ணும் அரிப்பு இல்லை. முடையும் இல்லை.”

“சும்மா இருக்கட்டும் சுதர்சனம்! ஐநூறுக்குக் குறைஞ்சு கொடுத்தா அது சம்பளமே இல்லை. ஐநூறு ரூபாயாவது கொடுக்க வேணாமா உனக்கு?”

“முடிஞ்சாக் கொடு. ஜம்பத்துக்காகக் கொடுத்துவிட்டு அப்புறம் நஷ்டப்படாதே ரகு!”

“இல்லே இருக்கட்டும். உனக்குத் தரக்கூடியது எதுவும் வீண் போயிடாது அப்பா...”

மறுபடியும் மறுபடியும் நண்பன் ரகு சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருந்தானே ஒழிய வெட்டு ஒன்று துண்டு இரண்டாகப் பேசுவதற்கு அவனால் முடியவில்லை என்பது சுதர்சனனுக்கே புரிந்தது.

அந்த டூட்டோரியல் காலேஜில் மொத்தம் எட்டுப் பேர் வேலை பார்த்து வந்தனர். ரகுதான் பிரின்ஸிபால் அண்ட் டைரக்டர். ஒரு கிளார்க், ஒரு அகௌண்டெண்ட் மற்ற ஐந்து பேரும் பார்ட்-டைம் விரிவுரையாளர்கள்.

மாணவர்களுக்குத் தொகை - டியூஷன் ஃபீஸ் என்ற பெயரில் மொத்தமாக ஒரு பரீட்சைக்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்தத் தொகைக்கு ஈடாக சைக்ளோஸ்ட் செய்த நோட்ஸும் குறிப்புக்களும் ஒவ்வொரு மாணவனுக்கும் தனித் தனியே தரப்பட்டன. பரீட்சைகளில் எந்த விதத்திலேனும் மாணவர்களை வெற்றி பெற வைக்கும் உத்தரவாதமும் முன்கூட்டியே அளிக்கப்பட்டது. இந்த உத்தரவாதமும் ரகுவின் செல்வாக்கும் அங்கே சேரும் மாணவர்களைப் பெரிதும் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை.

ரகு நடத்தி வந்த பயிற்சிக் கல்லூரியின் வெற்றி இரகசியமே இதில்தான் அடங்கி இருந்தது. ரகுவின் அரசியல் தொடர்புகளுக்கும் அவனுடைய தொழில் வெற்றிக்கும் சம்பந்தம் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

சுதர்சனன் அந்தப் பயிற்சிக் கல்லூரியில் வேலை பார்க்கச் சம்மதித்தான். ஆனால் ரகு குறிப்பிட்டிருந்த சம்பளத் தொகையை அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி காட்டவோ, குறைவாகக் கிடைக்குமானால் அதற்காக வருத்தப்படவோ அவன் தயாராயில்லை. அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள ஒரு வருமானமும் சுதந்திரமான போக்கிற்குப் பங்கமில்லாத ஒரு நிலைமையையும்தான் அவன் விரும்பினான். இந்த எண்ணத்தோடுதான் ரகுவிடம் வேலை பார்க்க அவன் ஒப்புக்கொண்டும் இருந்தான்.

முறையான கல்லூரி, பள்ளிக்கூடங்களுக்கும் இப்படிப் பயிற்சிக் கல்லூரிக்கும் கற்பிக்கும் முறைகளில் நிறைய வித்தி யாசம் இருக்குமென்று தோன்றியது. இங்கே சொல்லிக் கொடுப்பதைவிட அதிகமாகப் பரீட்சைக்குத் தயாரிக்க வேண்டியிருக்கும் என்று தோன்றியது. கற்பிப்பதை விட மாணவர்களுக்கு அதிகமாக நோட்ஸ் தயாரித்து எழுதிப் போட வேண்டும் என்றும் தோன்றியது.

அத்தியாயம் - 21

சுதர்சனன் தன்னுடைய தனிப் பயிற்சிக் கல்லூரியிலேயே வேலை பார்க்க இசைந்தது ரகுவுக்கு ஒரளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். தனிப் பயிற்சிக் கல்லூரிக்கு முக்கியம் மாணவர்களைக் கவரும் சிகப்புத் தன்மை வாய்ந்த ஆசிரியர்களே. அப்படித் தனித்தன்மை சுதர்சனனுக்கு இருப்பதாக நினைத்தான் ரகு.

ஏனோதானோ என்று வகுப்பு நடத்துவது சொற்களை முழுகிப் பூசி மெழுகுவது, இவையெல்லாம் சொல்லிக் கொடுத்தாலும் சுதர்சனனுக்கு வராது. செய்வதை முழு நம்பிக்கையோடும் பூர்ண திருப்தியோடும் செய்யும் திருந்திய தன்மை அவனுக்கு உண்டு என்பதை ரகு அறிவான். சுதர்சனன் தன்னுடைய நண்பனின் கல்லூரியில் முறையாக வேலைக்குச் சேர்ந்த மறுநாளே புலவர் பட்டத்துக்கும் தனிப் பயிற்சி வகுப்புக்கள் நடத்தப் போவதாகப் பத்திரிகைகளில் தடபுடலாக விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன.

“வாருங்கள், மாணவ மணிகளே! வாருங்கள்! வந்து சேருங்கள்! தன்மான இயக்கத்தின் தனிப்பெரும் புலவர், அடலேறு அறிஞர் பெருந்தகை சுதர்சனனார் வகுப்புக்களை நடத்து கிறார்” என்பதுபோல் அந்த விளம்பரத்தில் சிறுபிள்ளைத் தனமாகத் தன்னைப் புகழ்ந்து அடை மொழிகள் கொடுக்கப் பட்டிருப்பதை மட்டும் சுதர்சனன் ரகுவிடம் கண்டித்துச் சொன்னான்.

“புகழுக்கும் கிண்டலுக்கும் நடுவிலுள்ள எல்லைக் கோடு மிக மிகச் சிறியது. புகழ் ஓர் இழை பிசகினாலும், அதுவே கேலிக் கூத்தாகி விடும். இந்த விளம்பரத்தில் அப்படிக் கேலிக் கூத்துத்தான் தெரிகிறது. மலிவான வியாபாரத்துக்கு விளம்பரப்படுத்துவது போல் அறிவு பூர்வமானவற்றின் நயத்தைக் கொச்சையாக எடுத்துச் சொல்லி விளம்பரப் படுத்தக் கூடாது. அது எனக்கு ஒரு போதும் பிடிப்பதில்லை” - என்று அவன் இதைப் பற்றி ரகுவிடம்கூட வாதாடினான்.

“அப்படி எல்லாம் விளம்பரம் போட்டால்தான் நாலு ஆட்கள் சேரும்” என்றான் ரகு.

காலை ஏழு மணி முதல் ஒன்பதரை வரையும் மாலை ஆறு மணி முதல் எட்டரை வரையும் அங்கே வகுப்பு நேரங்களாக இருந்தன.

பத்து நாட்களில் தபால் மூலமும் நேரிலுமாகப் பதினைந்து பேர் புலவர் வகுப்புக்களில் படிப்பதற்கு மனுச் செய்திருந்தார்கள். அதில் பதினோரு பேர் ஆண்கள். நாலு பேர் பெண்கள். எல்லாரும் அநேகமாக ஆரம்பப் பள்ளி, நடுத்தரப் பள்ளிகளில் ஆசிரியப் பணி புரிபவர்களாக இருந்தார்கள். ஏழு பேர் ஏற்கெனவே வித்வான் முதல் நிலைத் தேர்வு தேறி இறுதி நிலைத் தேர்வுக்காகவும், எட்டுப் பேர் முதல் நிலைத் தேர்வுக்காகவும் சேர்ந்திருந்தார்கள். முதல் நிலைத் தேர்வுக்கு எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து ஆண்டு முழுவதற்குமாக ரூபாய் நானூறும், இறுதி நிலைக்கு ரூபாய் ஐநூறும் சேரும்போதே முன் பணமாகக் கட்டிவிட வேண்டும் என்று ரகு நிபந்தனை விதித்திருந்தான். புலவர் வகுப்புக்கு மட்டுமே வகுப்புக்கள் தொடங்குவதற்கு முன்பே ஆறாயிரம் ரூபாய்க்கு மேல் முன் பணமாகக் கையில் வந்து சேர்ந்துவிட்டது. வேறு பிரிவுகளான, எஸ்.எஸ்.எல்.சி. பி.யூ.சி., பி.ஏ., எம்.ஏ.வகுப்புகளுக்குச் சேர்ந்த மாணவர்கள் வகையில் முப்பதிலிருந்து முப்பத்தையாயிரம் வரை கிடைக்கும் என்றும் தெரிந்தது.

பெரிய நகரங்களில் கல்வியும் ஒரு புதிய வியாபாரம் ஆகியிருப்பது புலப்பட்டது. படிப்பதற்கு ரேட், பாஸ் பண்ணுவதற்கு ரேட், கிளாஸ் வாங்குவதற்கு ரேட் என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் எல்லாவற்றிற்கும் ரேட்டுகள் ஏற்பட்டிருந்தன.

“சும்மா வகுப்புக்கு வகுப்பு முடிஞ்சதை முடிஞ்சவறை நடத்தினால் போதும். கடைசியா எல்லாம் சிண்டிகேட் சிதம்பரநாதன் பார்த்தும்பாரு” என்று சக ஆசிரியரான ஒருவர் சுதர்சனனிடம் சிரித்துக்கொண்டே சொல்லியிருந்தார்.

“அதுதான் என்னால் முடியாது சார்! எதையும் அரை குறையாகச் செய்ய நான் இன்னும் பழகலே. என்னிக்குமே அதைப் பழகிக் கொள்ளும் விருப்பமும் இல்லை. எதைச் செஞ்சாலும் நம்பிக்கையோடு முழுமையாகவும் உண்மையாகவும் செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிறவன் நான். இந்தப் பிடிவாதத்தால் வாழ்க்கையிலே அவ்வப்போது நிறைய இடைஞ்சல்களையும் பார்த்தாச்சு...”

“உங்க பிடிவாதம் உயர்ந்த லட்சியமா இருக்கலாம். ஆனால் இது மாதிரி டூடோரியல் காலேஜிலே அதுபோல இலட்சியங்களுக்கு எந்த அவசியமும் கிடையாது. இங்கே வர்ரவங்களுக்கும் படிக்கிற ஆசை இல்லே. எப்படியாவது பாஸ் பண்ற ஆசை மட்டும்தான் உண்டு. சொல்லிக் கொடுக்கிறவங்களுக்கும் படிக்கிறவங்களைப் பாஸ் பண்ணி வைக்கிற ஆசை மட்டுமே இருந்தால் போதுமானது.”

“இது ரொம்பப் பரிதாபகரமான விஷயம்” என்றான் சுதர்சனன்.

மேற்கூறிய விதத்தில் சக ஆசிரியர் தன்னிடம் பேசியது எவ்வளவு தூரம் சரியானது என்பது புலவர் முதனிலை வகுப்புக்குச் சேர்ந்திருப்பவர்களுக்கு முதல் நாள் பாடம் எடுத்தபோது சுதர்சனனுக்கே அநுபவ பூர்வமாகத் தெரிந்தது.

சேர்ந்திருந்த எல்லாரும் எப்படியாவது பாஸ் பண்ணிப் பட்டத்தை வாங்கிக் கொள்ளும் அவசரத்தில்தான் சேர்ந்திருந்தார்கள். சில பேருக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, சார்பெழுத்துப் பற்றிக்கூட ஒரு விவரமும் தெரிந்திருக்கவில்லை. ‘தமில் வால்க’ என்று எழுத மட்டும் தெரிந்த அறிவுக் கலப்பற்ற உணர்ச்சிப் பெருக்கான காலத்தில் இப்படிப்பட்ட தமிழ்ப் புலவர்கள்தான் உருவாக முடியுமோ என்று கூடச் சந்தேகமாக இருந்தது. அரசன் சண்முகனாரும், கதிரேசன் செட்டியாரும், தமிழ்த் தாத்தா சாமிநாத ஐயரும், சோமசுந்தர பாரதியாரும் தமிழ்ப் பயிற்றிய காலத்தில் வெறும் உணர்ச்சிப் பெருக்கு அடங்கியும், தமிழ் அறிவு ஓங்கியும் இருந்தது. இன்றோ உணர்ச்சிப் பெருக்கே அறிவின்மையை மறைக்கும் போர்வையாக அமைந்து பல வெற்றுணர்ச்சியாளர்களைப் பாதுகாத்து விடுகிறது. இந்தப் பாதுகாப்புத்தான் இன்று பலரைக் காக்கும் கவசமாகவும் இருக்கிறது என்பதைச் சுதர்சனன் நன்கு உணர்ந்திருந்தான்.

“பாஸ் மார்க் எவ்வளவு சார்? முதல் வகுப்பில் தேற எவ்வளவு மார்க் வாங்கணும்? அநேகமா எங்களைப்போல் பிரைவேட்டா எழுதறவங்களுக்கு கிளாஸ் கிடைக்கிறது கஷ்டம்ங்கிறாங்களே? தமிழ்க் கல்லூரிகளிலே படிக்கிறவங்களுக்குத்தான் கிளாஸ் கிடைக்குமாமே?” என்றெல்லாம் மாணவர்கள் முதல் வகுப்பிலேயே சுதர்சனனைக் கேள்விகளால் துளைத்தெடுத்தனர். கல்வி, படிப்பு, ஞானம், அறிவு எல்லாம் வெறும் மார்க், வேட்டை ஆகிவிட்ட காலத்தில் வாழ்கிறோம் என்பதை வேண்டா வெறுப்பாகவும், அருவருப்போடும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருந்தான் சுதர்சனன். கற்பிப்பதற்கு ஞானவான்கள் தேவையில்லை; மார்க் தரகர்களே போதும் என்று நிரூபணமாகிவிட்ட காலத்தில் கற்பிப்பதற்கும் ஞானவான்கள் கிடைக்கமாட்டார்கள் என்றும் புரிந்தது. இன்றைய கல்விக்கும் ஞானத்திற்கும் சம்பந்தமில்லைதான். இன்றைய கல்வி என்பது ஓர் ஏற்பாடு மட்டுமே. குடிதண்ணீர்த் திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம் போல் கல்வி வசதியும் ஒரு திட்டமாக இருக்கிறது. அதில் போய் ஞானம், உள்ளுணர்வு, அறிவுக்கூர்மை இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. யாருக்கும் அதற்கு நேரமும் அவகாசமும் அவசியமும் இல்லை.

கத்தை கத்தையாக நோட்ஸ், கேள்வி பதில் தயாரித்து ‘சைக்ளோஸ்டலை’ செய்து வாரா வாரம் மாணவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும் என்று ரகு வற்புறுத்தினான். அவன் சொல்லியபடி செய்வதாக இருந்தால் பாடங்ககளை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. நோட்ஸ் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். ‘டூட்டோரியல் காலேஜ்’ என்பதற்குக் கீழே ‘இவ்விடம் மொத்தமாகவும் சில்லறையாகவும் கல்வி விற்கப்படும்’ என்றும் சேர்த்து விளம்பரம் செய்து விடலாம் போல் இருந்தது. அந்த வகையில் தான் எல்லாக் காரியங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆனால் சுதர்சனன் தன்னளவில் அந்த நடைமுறையைப் பின்பற்றவில்லை. மாணவர்களை அறிவுத் தாகமுள்ளவர்களாக மாற்ற முயன்றான். தொடக்கத்தில் அம்முயற்சி கசாப்புக் கடை முகப்பில் அமர்ந்து கொண்டு ஜீவகாருண்ய உபதேசம் செய்வதுபோல் டூட்டோரியலுக்குப் பொருந்தாததாக இருந்தது, என்றாலும் நாளடைவில் பயனளிக்கத் தொடங்கியது.

மாணவர்கள் அவனுடைய திறமைகளைச் சுலபமாகத் தவிர்த்துவிட முடியவில்லை. அவனுடைய நேர்மையும் துணிவும் அவர்களுக்குப் பிடித்திருந்தன, பொய் சொல்லவோ பூசி மெழுகவோ அவன் ஒரு போதும் முயலவில்லை. ஒரு நாள் வகுப்பில் தன் பழைய பேராசிரியர் ஒருவர் பெயரைச் சொல்லி “சங்க காலத்தில் சாதிப் பாகுபாடே கிடையாது என்று அவர் எங்களுக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். நீங்க சாதிப் பாகுபாடு இருந்தது என்கிறீர்களே! எப்பிடி சார் அது பொருந்தும்!” என்று மாணவன் ஒரு கேள்வி கேட்டான்.

“ஆராய்ச்சிக்கும் உண்மை காண்பதற்கும் அடிப்படை நாணயமும் சத்திய வேட்கையும் மிகமிக முக்கியமாக வேண்டும் தம்பீ! இன்றைய சூழ்நிலையின் செளகரியங்களுக்குச் சங்க காலத்தையும், சங்க காலப் புலவர்களையும் வளைக்கக்கூடாது தம்பீ! இன்று நாம் சாதி வேறுபாடுகள் கூடாது என்று நினைக்கிறோம். முடியரசு ஆட்சி கூடாது என்று நினைக்கிறோம். அதனால் சங்ககாலத்திலே சாதி வேறுபாடு இல்லை. முடியரசு ஆட்சி இல்லை என்றெல்லாம் கூறிச் சங்ககாலம் என்பதை நம் விருப்பத்துக்கு வளைக்கக் கூடாது. கிடைக்கிற சான்றுகளையும் வரலாறுகளையும் புறக்கணித்துவிட்டு எந்த ஆராய்ச்சியிலும் முடிவு காணக் கூடாது. ஆனால் பலர் இன்று அப்படிக் காண்கிறவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இன்றைய சீர்த்தித்தவாதிகளை விடத் தீவிரமான சீர்திருத்தவாதிகளாகச் சங்க காலத்துப் புலவர்களைக் காண்பித்து விட வேண்டும் என்கிற பேராசையினால் தான் இந்த விதமான முடிவுகளைச் சொல்ல முடிகிறது. உண்மை கசப்பானதாக இருந்தாலும் உண்மையைச் சொல்வதுதான் சிறப்பான செயல். ‘அறு வகைப்பட்ட பார்ப்பனப் பாக்கமும்’ என்று தொல்காப்பியர் பார்ப்பனர், அரசர், வேளாளர், வணிகர் என்பதாகப் பிரிவுகளைக் கூறியிருந்ததால் தொல்காப்பியரை இன்றைய சர்ச்சையிலிருந்து காப்பாற்றும் ஆசை நமக்கு வந்து, ‘அவர் சாதிகளையே கூறவில்லை’ என்று நாம் அவருக்குப் புது நற்சான்றிதழ் கொடுக்கவேண்டும் என்பதில்லை. அறிவுபூர்வமான ஆராய்ச்சி வேண்டுமே ஒழிய உணர்வு பூர்வமான ஆராய்ச்சியால் பயனில்லை. ஒவ்வொரு கடந்த காலத்தையும் நமது நிகழ்கால நிலைகளுக்கு ஏற்ப வளைப்பது ஆராய்ச்சியாகாது. இப்படி ஆராய்ச்சி நிலை நம்மவர்களிடம் மட்டும்தான் இருக்கிறது. என்னை எடுத்துக் கொள்ளுங்கள், நான் சுயமரியாதைக்காரன். எனக்குக் கடவுள் நம்பிக்கைக் கிடையாது. அதனால் எனக்கு மிகவும் பிடித்தல் ஆசிரியரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவருமாகிய திருவள்ளுவருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது என்று நான் சொல்ல முயலக் கூடாது. என் நண்பர்களுக்கு என் காலத்துக்கு முந்தியவர்களைப் பற்றி விளக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்களோ அப்படியே மாறாமல் மாற்றாமல் விளக்கும் திராணி எனக்கு இருக்கவேண்டும். அந்தத் திராணி எனக்கு இல்லையானால் நான் பகுத்தறிவுவாதி இல்லை. பொய்களிலும் பூசி மெழுகுதலிலும், சுகம் காணும் மனப்பாங்குள்ளவன் ஆராய்ச்சியாளனாக இருக்க முடியாது. இருக்கக் கூடாது” - என்று சற்று விரிவாகவே கேள்வி கேட்ட மாணவனுக்கு அதை விளக்கினான் சுதர்சனன்.

இன்றுள்ள எல்லாமே சங்க காலத்திலும் உண்டு என்பது போலவே பலர் புத்தகங்கள் எழுதியும் பேசியும் ஒரு போலியான சுகத்தை உருவாக்கி வைத்திருந்தார்கள். அதைக் கலைத்து அல்லது மறுத்து உண்மையைப் பேச முற்படுகிறவர்களை எல்லாம் தமிழ்த் துரோகி என்று கூசாமல் வசை பாடத் தொடங்கினார்கள். சுதர்சனன் இதற்கு அஞ்சியதில்லை. வர்ணாசிரம தருமத்தையும், சாதி முறைகளையும் அகற்ற வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டு அவை இந் நாட்டில் இருந்ததே இல்லை என்றும் சொல்லுகிற ஆராய்ச்சிக்கு இரட்டை முகங்கள் உண்டு. “நம்மிடமும் தவறுகள் இருந்திருக்கின்றன. இனியாவது அவற்றை அகற்றப் பாடுபடுவோம்” என்ற விதத்தில் அணுகுவதைச் கதர்சனன் ஒப்புக்கொள்ளத் தயங்குவதே இல்லை. “நம்மிடம் தவறுகளே இருந்ததில்லை. அவை அனைத்தும் இடைக்காலத்தில் பிறரால் புகுந்தவை” என்பது போல் விளக்கங்களைச் சுதர்சனன் ஏற்பதில்லை. ‘தவறும் செய் திருக்கிறோம்’ என்பதை எவன் மறுக்கிறானோ அவன் திருந்தவே முடியாதவன் என்பது சுதர்சனனின் அழுத்தமான கருத்தாக இருந்து வந்தது. தன் புண்ணைத் தானே சொரிந்து கொண்டு சுகம் காணுவது போன்ற ஆராய்ச்சிகளில் அவனுக்கு நம்பிக்கை இருந்ததில்லை. இப்படிச் சுகம் காணுகிறவர்களை வகுப்பு நாட்களிலும் மேடைகளிலும் அவன் நிறைய எதிர்த்திருக்கிறான். பொய்யான சுகங்கள் ஒரு போதும் அவனுக்கு விருப்பமாயிருந்ததுமில்லை. திருப்தியளித்ததும் இல்லை.

அத்தியாயம் - 22

தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த பத்தாவது நாளோ பதினைந்தாவது நாளோ ரகுவின் நண்பராகிய கதாசிரியர் ஒருவர் தமது புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைப்புக் கொடுப்பதற்கு வந்திருந்தார். வந்திருந்தவரைச் சுதர்சனனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரகு.

“இவர்தான் குமாரி. சுகுணவல்லி. நியூவேவ் கதாசிரியர்” - என்று அவரது பெயரை ரகு சுதர்சனனுக்குச் சொல்லியவுடன்,

“மீசை முளைச்ச ஆம்பிளையைக் காட்டிக் குமாரி சுகுணவல்லீன்னு சொல்றியேப்பா? இதென்னப்பா புதுமை” - என்று சுதர்சனன் கேட்டான்.

“பேர் மட்டுமென்ன? எல்லாமே புதுமைதான்? இந்த மாதிரிப் பெண் பேருக்கு ஒரு தனிக் கவர்ச்சி இருக்குப்பா. பேருக்கு முன்னாலே குமாரின்னு போடறதாலே அந்தக் கவர்ச்சி இன்னும் அதிகமாகுது” என்று விளக்கத் தொடங்கிய ரகுவை முந்திக்கொண்டு அந்தக் கதாசிரியரே தன்னைப் பற்றிச் சொல்லி அளக்கத் தொடங்கினார்.

“ஆம்பளை கொஞ்சம் ‘லவ் மேட்டர்’ எழுதினாலே விழுந்து விழுந்து படிப்பாங்க சார்! பொம்பளை - அதுவும் கலியாணமாகாத பொம்பளை இதெல்லாம் இப்பிடி எழுதறான்னா - ஹாட்கேக்ஸ் மாதிரி விற்பனை ஆகும்.”

“இதெல்லாம்னா எதெல்லாம்?”

“அதான்சார் ‘லவ் மேட்டர்’”

“லவ் மேட்டர்னா அப்படி என்னதான் சார் எழுதுவீங்க? தமிழிலேயே விளக்குங்களேன்... தெரிஞ்சுக்கலாம்...”

“சில விஷயங்களுக்கு இங்கிலீஷ் ஒரு போர்வை மாதிரி சார். நடுக்கம் இல்லாமே... குளிர் இல்லாமே அப்படியே கூசாமச் சொல்ல முடியும். செக்ஸ், லவ், அது இதுன்னு இங்கிலீஷ்லேயே சொல்றது அதுக்காகத்தான். தமிழிலே காதல், காமம்னு சொன்னா ஒரு ‘கிக்’ இருக்காது.”

“ஓகோ! அதுவும் அப்படியா?” - என்று கேட்டுவிட்டு அழைப்பிதழைப் பிரித்துப் பார்ப்பதில் முனைந்தான் சுதர்சனன்.

“படுக்கை அறைப் பாவை, கட்டிலில் கட்டழகி, தொட்டால் துவளும் சுந்தரி முதலிய சுவையான தமிழ்க் கதைகளின் ஆசிரியையாகிய குமாரி. சுகுணவல்லியின் புதிய கதை ‘தலையணை நாயகியின் தனியறை லீலைகள்’ என்று அழைப்பிதழ் தொடங்கியது. சுதர்சனன் கேட்டான்:

“படுக்கை அறை, கட்டில், இந்த இடங்களைத் தவிர வேறே எங்கேயும் நம்ம பெண்களுக்கு வேலையே இல்லையா? உங்க கதைத் தலைப்புக்களைப் பார்த்தா நம்ம பெண்கள் இருபத்து நாலு மணி நேரமும் கட்டில், படுக்கை அறை, தலையணைகளிலேயே வாழ்க்கையைக் கழிக்கிற மாதிரியில்லே தோணுது?”

“ஸேல்ஸ் நல்லா ஆகணும்னா அப்படி எல்லாம்தான் தலைப்பு போட்டாகணும் சார்! அப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டா?” - என்று மெதுவாகச் சொல்லிக் கொண்டே பாதியில் நழுவினார் அந்தக் கதாசிரியர்.

“இந்த மாதிரித் தலைப்புப் போட்டுப் புத்தகம் விற்கிறதைவிட உன் நண்பர் இன்னும் சில நாட்களில் பெண்களையே நேரடியாக விற்கிற காரியம் அதிக லாபமானதுன்னு அதைத் தொடங்கினாலும் தொடங்கலாம் ரகு!” என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சுதர்சனன்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாதப்பா ! இந்த எழுத்தாளர் சோமையா ஆரம்ப காலத்திலே நம்ம ஐயாவோட இயக்கத்திலே இருந்தவர். கொள்கை வழிப் பிரிந்து கூட்ட வழி இணைந்த தத்துவத்தை ஒப்புக் கொண்டவர். பின்னாலே இப்போ பிழைப்புக்காக இதெல்லாம் எழுதறாரு, ஆனாலும் எங்களுக்குள்ளே பழைய பாசம் இன்னும் விடலே?”

“பழைய பாசத்தாலேதான் உங்க ஐயா இதுக்குத் தலைமை தாங்கி வெளியிட ஒப்புக் கொண்டிருக்கிறாராக்கும்? இந்த மாதிரிப் புத்தகத்தை எல்லாம் படிச்சுப் பார்க்க உங்க ஐயாவுக்கு நேரமிருக்கா?”

“படிக்கணும்னு என்ன அவசியம்? தலைப்பு முன்னுரை இதுகளை வச்சே ஐயா ஒருமணி நேரம் பேசிச் சமாளிச்சிடுவாரு.”

இதைக் கேட்டுச் சுதர்சனனுக்கு சிரிப்பு வந்தது. ஆபாசமாகப் பேசவும் எழுதவும் சிலருக்கு அந்நியமொழி ஒரு போர்வை. தவறு செய்பவரை ஆதரிக்க அவர் தமக்கு வேண்டியவர் என்றொரு போர்வை, விபசாரத்தை எழுத்தாக்குவதற்கு விற்பனைக் கவர்ச்சி என்றொரு போர்வை - இப்படி ஆயிரம் போர்வைகளும், பொய்ம் முகங்களும் தேவைப்படுகிற சமூகத்தில் நீதி நியாயம் நேர்மை உழைப்புக்களுக்கு எப்படி மதிப்பும் மரியாதையும் கிடைக்க முடியும் என்று அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. கோபமாகவும் இருந்தது.

அங்கே என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்காகவும், தன் பெயரிட்டு எழுதிக் கொடுக்கப் பெற்ற அழைப்பிதழைக் கெளரவப் படுத்துவதற்காகவும் அந்த வெளியீட்டு விழாவுக்கு ரகுவுடன் சுதர்சனனும் போயிருந்தான். விழா நடக்கும் கூடத்தின் முகப்பிலேயே கல்கண்டு, சந்தனம், ரோஜாப்பூவோடு வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சினிமா எக்ஸ்ட்ராக்கள்போல் பளிச்சென்று விட்டுத் தெரியும் அடக்கமற்ற அழகுடன் கூடிய நாலைந்து பெண்கள்தான் வரவேற்புப் பொறுப்பில் இருந்தார்கள். இரண்டு புத்தகங்களைத் தயாரிப்பதற்கு ஆகிற செலவு அந்த ஒரு வெளியீட்டு விழாவுக்காகவே செலவிடப்பட்டிருக்கும் என்று தோன்றியது.

“படுக்கையறைப் பாவை ஒரு லட்சம் பிரதிகள் வரை விற்றன. கட்டிலில் கட்டழகி ஒன்றரை லட்சத்தை எட்டியது. நம் ஐயாவின் இராசியுள்ள கையால் வெளியிடப் படுகிற இந்தத் ‘தலையணை நாயகியின் தனியறை லீலைகள்’ - இரண்டு லட்சம் பிரதியை எட்டிவிடும் என்பதில் எங்களுக்கு ஒரு சிறிதும் ஐயமில்லை” என்பதாக வரவேற்பறையில் மன்மதன் பதிப்பக அதிபர் மதனகோபால் கூறினார். ஒரு விளம்பரக் கவர்ச்சி கருதியோ என்னவோ கதாசிரியர் குமாரி. சுகுணவல்லி - அசல் பெண்ணாகவே அன்று அங்கே மேக்-அப் போட்டுக் கொண்டு வந்திருந்தார்.

ஐயா தலைமையுரை வழங்க எழுந்திருந்தார். “தலையணை என்பது அழகிய தூய தனித் தமிழ்த் தொடர். இத்தலைப்பில் நாயகி என்ற சொல்லையும் பாமரர்களைக் கருத்திற்கொண்டு பயன்படுத்தியிருக்கிறார். எனினும், இரண்டு சொற்களும் பக்தி மார்க்கத்திலும் வருகின்றன. நாயகன், நாயகி பாவத்தைப்பற்றி ஆழ்வார்கள் நிறையப் பாடியிருக்கிறார்கள். கிருஷ்ணலீலா, ராமலீலா என்றெல்லாம் தொடர்கள் பக்தி மார்க்கத்தில் உண்டு. இதன் ஆசிரியர் நமது இயக்கத்தில் எனது தலைமையின் கீழே தொண்டராக இருந்தபோது இலக்கியம் கற்றவர். அதனால்தான் நாயகி - லீலை போன்ற சொற்களை இடமறிந்து பயன்படுத்தியுள்ளார். வாசகர்களை இவர் எப்படி வசியம் செய்கிறாரோ, தெரியவில்லை. இவரது நூல்கள் இலட்சக்கணக்கில் விற்பதாகப் பதிப்பாளர் மன்மதன் சொல்கிறார். பதிப்பாளரோ மன்மதன். ஆசிரியரோ குமாரி சுகுணவல்லி. இருவரும் இணைந்தால் புது நூல் ஒன்று பிறக்கிறது. நல்ல வேளையாக வேறு எதுவும் பிறக்கவில்லை- (சிரிப்பு, கைதட்டல்) ஆசிரியர் ‘குடும்பக்கட்டுப்பாடு’ தெரிந்தவர்.” (பெரும் சிரிப்பு-பெரும் கைதட்டல்)

இந்த நகைச்சுவை சுதர்சனனுக்கு மிக மிக மட்டமாகவும் அபத்தமானதாகவும் இருந்தது. சிரிப்பு வரவில்லை. எரிச்சல்தான் வந்தது. முக்கால்வாசித் தமிழ்ச் சொற்பொழிவுகளில் பேச்சாளர்களின் தரம் குறைந்து அவர் தடுமாறுகிற இடம் நகைச்சுவையாகப் பேசியாக வேண்டுமென்று அவரே முனைந்து வலிந்து முயலுகிற இடம் தான்.

இந்த இடங்களில் ரகுவோ உற்சாகமாகக் கைதட்டி அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டிருந்தான். சுதர்சனனுக்கு அந்த அறியாமையைக் கண்டு பச்சாத்தாபமாக இருந்தது.

“ஐயா பிரமாதமாப் பேசறாரு, அவரைத் தவிர வேற யாரு தலைமை வகிச்சிருந்தாலும் இவ்வளவு கூட்டம் இங்கே வராது” என்று சுதர்சனனின் காதருகே முணுமுணுத்தான் ரகு.

சுதர்சனன் அதற்குப் பதில் சொல்லவில்லை. வெளியீட்டு விழா என்கிற இரசக் குறைவான ஆபாச நாடகத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் அவன். அப்புறம் புத்தகத்துக்குப் பாராட்டுரை வழங்க வந்த எல்லாரும் புத்தகத்தை மறந்தாற்போலத் தலைமை வகித்த ஐயாவையும், அவருடைய உரையின் சிறப்பையும் பற்றியே பேசி முடித்தனர்.

விழா இறுதியில் பெண் வேடமணிந்த கதாசிரியர் பெண்ணைப் போலவே நாணிக் கோணி நடந்து மைக்குக்கு முன் வந்தபோது கூட்டம் அசட்டுச் சிரிப்பலையால் அதிர்ந்தது.

அந்தக் கூட்டம் முழுவதுமே அலிகளைப் பார்த்து இரசிக்கும் சாரமற்ற நபும்சகக் கும்பலோ என்று பொறுக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் ஆத்திரமாயிருந்தது சுதர்சனனுக்கு.

அத்தியாயம் - 23

தனிப் பயிற்சிக் கல்லூரி வகுப்புக்கள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன. வகுப்புக்களைத் தவிரச் சென்னை நகரமும் அநுபவங்களும் பல கசப்பான உண்மைகளைச் சுதர்சனன் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பளித்தன. ‘குமாரி சுகுணவல்லியின்’- கதைப் புத்தக வெளியீட்டு விழா முடிந்த நாலைந்து நாட்களுக்குப்பின் ஒரு காலை வேளையில் ரகுவைத் தேடி இராமநாதபுரத்திலிருந்து ஒரு கல்லூரிப் பேராசிரியரும் அவருடைய மனைவியும் வந்திருந்தார்கள். கணவன், மனைவி இருவருமே அரசாங்கக் கல்லூரிப் பேராசிரியர்கள். கணவன் ஆங்கிலப் பேராசிரியர், மனைவி தாவர இயல் பேராசிரியை. அவர்கள் திருமணம் செய்து கொண்டு மிகச் சில மாதங்களே ஆகியிருந்தன. திடீரென்று கணவரைக் கன்னியாகுமரிக்கும் மனைவியைத் திண்டுக்கல்லுக்கும் அவசரம் அவசரமாக மாற்றிவிட்டார்கள். இந்த மாறுதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் கல்லூரி ஆசிரியர்களை ஈவு இரக்கமற்ற முறையில் கண்டபடி ஊர் மாற்றுவதைக் கண்டித்து ஒரு மகாநாட்டில் கல்வி மந்திரியே பேசியிருந்தார். அந்தப் பேச்சு எல்லாத் தினசரிகளிலும் முதல் பக்கத்தில் வெளியாகித் தடபுடல் பட்டது. கல்வி அமைச்சரின் அந்த அரிய கருத்தை வரவேற்றுப் பாராட்டிப் பத்திரிகைகள் எல்லாம் தலையங்கங்கள் எழுதியிருந்தன. ஆனாலும் திடீர் மாறுதல்களால் ஆசிரியர்கள் இன்னும் அவதிப் பட்டுக்கொண்டு தான் இருந்தார்கள். ஆசிரியர்களைப் பந்தாடுவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருந்தது. மந்திரிகள் அல்லது உயர் அதிகாரிகளின் சிபாரிசுகளோடு யார் முயன்றாலும் அவர்கள் முயலும் இடங்களுக்கு உடனே மாறுதல்கள் கிடைத்தன. யாருடைய சிபாரிசும், இல்லாதவர்கள் நினைத்த இடங்களுக்கு நினைத்த சமயத்தில் சுலபமாகப் பந்தாடப்பட்டார்கள். நடு ஆண்டில் ஒர் ஊரிலிருந்து இன்னோர் ஊரில் தங்கள் குழந்தைகளின் படிப்பை மாற்றுவது முதல் எல்லா வகையிலும் மாறுதலுக்கு ஆளானவர்கள் சிரமப்பட்டார்கள். சுதர்சனன் வந்தவர்கள் ரகுவிடம் பேசிக் கொண்டிருந்ததைச் சும்மா உடனிருந்து கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

“நீ என்ன பண்ணி எப்படிச் சாதிச்சுக் கொடுப்பியோ தெரியாது ரகு! இந்தக் காரியத்தை எங்களுக்காக நீ தான் சாதிச்சுக் கொடுக்கணும். இந்த டிரான்ஸ்ஃபரை மட்டும் - நானோ என் மனைவியோ ஒப்புக் கொண்டால் எங்க குடும்ப வாழ்வே சிதறிப் போகும்ப்பா.”

“எனக்கு யாரையும் அதிகமாகத் தெரியாது. சிண்டிகேட் சிதம்பரநாதன் மூலமா ஏதேனும் முயற்சி பண்ணிப் பார்க்கலாம். கல்லை எறிஞ்சு பார்க்கிறது, மாங்கா விழுந்தா விழட்டுமே” - என்றான் ரகு.

“விளக்கடியிலே தேங்குகிற இருட்டுப் போல மற்றவர்களுக்கு அறிவு அளிக்கிற கல்வித் துறையிலேதான் எல்லா அறியாமைகளும் மண்டிக் கிடக்கின்றன. பொறாமை, காழ்ப்பு, சின்ன விரோதங்கள், சீறி எதிர்த்துப் பழி வாங்குதல், அடுத்தவனைக் கண்டு வயிற்றெரிச்சல், இவை எல்லாம் கல்வித் துறைக்குள்ளேயே இருந்தால் எப்படி?” என்று வினவினான் சுதர்சனன்.

“இந்தப் பேதங்கள், வேறுபாடுகளை எல்லாம் போக்குவதற்குத்தான் கல்வி வளர்ச்சித் திட்டங்கள் என்று தலைவர்களும், பெரியோர்களும் அடிக்கடி பேசுகிறார்கள். உபதேசிக்கிறார்கள். ஆனால் இக்குறைகள் கல்வி சம்பந்தப்பட்ட இடங்களில் புதர் மண்டிக் களை சேர்த்திருக்கிற மாதிரி வேறெதிலும் புதர் மண்டிக் களை சேரவில்லை சார்” - என்றார் வந்தவர்.

“பிரமோஷன், டிரான்ஸ்ஃபர் எல்லாவற்றுக்கும் லஞ்சம் வேறு தரவேண்டியிருக்கிறது” என்றாள் வந்தவரின் மனைவி.

அதிகார வர்க்கத்தினரிடையே நேர்மையையும், நாணயத்தையும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் , வளர்க்காத வரை இந்த நாட்டில் எதையுமே திருத்த முடியாதென்று சுதர்சனன் நினைத்தான்.

ஒவ்வொரு நாளும் சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் வந்து அதிகாலையில் இறங்கும் ஒவ்வொரு பிரயாணியும் ஒரு குறையுடன் அல்லது மனத்தாங்கலுடன் தான் சர்க்கார் அதிகாரிகளையோ, அலுவலகங்களையோ முற்றுகையிட வந்து இறங்குகிறார்கள். லஞ்சம், சிபாரிசு, அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கான எல்லா ஏற்பாடுகளும் தலைநகரில் சகல வசதிகளோடும் இயங்குகின்றன. சுதந்திர இந்தியாவின் எல்லா மாநிலத் தலைநகரங்களும் இப்படித்தான் இருக்கின்றன. இது ஆரோக்கியமான நிலைமை அன்று. கல்வி இலாகாவிலிருந்து ஆசிரியருக்குத் தொல்லைகள், மேலதிகாரியிடமிருந்து கீழதிகாரிக்குத் தொல்லைகள், என்று தொல்லைகள் பிரதான நீரோட்டம், கிளை நீரோட்டம் துணை நீரோட்டம் எனப் பிரிந்து பல உப நதிகளாகக் கால்வாய்களாக - வாய்க்கால்களாகப் பாய்ந்து எங்கும் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தன. தொல்லைகள், தொந்தரவுகளிலிருந்து யாருக்கும் விடுதலையோ சுதந்திரமோ கிடைக்கவில்லை. பதவி, செல்வாக்கு, வசதி, பணமுள்ளவர்களுக்குத்தான் அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் பயப்படுகிறார்கள். மரியாதை செய்கிறார்கள். ஏழையை, நல்லவனை சொல்லிலும் ஒரே மாதிரி எளிமையாயிருப்பவனை யாரும் எங்கும் மதிப்பதில்லை. நிஜம் முகத்தைக் காட்டுகிறவனை விடப் பொய்ம் முகங்களைக் காட்டுகிறவனுக்குத்தான் மதிப்பு அதிகம் இருந்தது. எந்தச் சமயத்தில் எந்த முகத்தை எப்படிக் காட்டினால் காரியம், நடக்கும் என்று எவன் தெரிந்து வைத்திருந்தானோ அவன் எதிலும் வெற்றி பெற முடிந்தது. தெரியாதவன் ஒரு சிறு அங்குலம் கூட முன்னேற முடியாமல் இருந்த இடத்திலிருந்தே மூச்சுத் திணறினான்.

“பாண்டியன் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ் மாதிரித் தமிழ்நாட்டின் தெற்குக் கோடியிலிருந்து சென்னைக்கு ஒரு புதிய ரயில் விட வேண்டும். சிபாரிசு எக்ஸ்பிரஸ் அல்லது மனத்தாங்கல் எக்ஸ்பிரஸ் என்று அதற்குப் பொருத்தமாகப் பெயரிட வேண்டும். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் ‘அட்மிஷன் எக்ஸ்பிரஸ்’ என்று கூட ஒரு புது ரயில் விடலாம்!” - என்றான் சுதர்சனன்.

இப்படி அவன் கூறியது மேலோட்டமாகக் கேலி தொனிக்க இருந்தாலும் உள்ளூர வேதனை உந்தியதால் தான் இதை அவன் பேசியிருந்தான்.

“ஒவ்வொரு மாநிலத் தலைநகரிலும் ‘ஹோட்டல் கிரிவன்ஸ்’ - ‘ஹோட்டல் ரெகமண்டேஷன்’ - என்றெல்லாம் பெயரில் அப்படி வருகிறவர்கள் தங்குவதற்குப் புது ஓட்டல்களும் கட்டலாம்” - என்று சிரித்தபடியே கூறினார் வந்தவர். “எனக்குத் தெரிந்த ஒரு டிரான்ஸ்ஃபர், விஷயத்தில் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு இம்போர்ட்டட் விஸ்கி ஸ்காட்ச் - ஒரு பாட்டில் கொண்டு போய்க் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் என்றார்கள். பாவம், டிரான்ஸ்ஃபருக்காகத் தவித்துப் போய் வந்திருந்த ஏழை அடிஷனல் புரொஃபஸருக்கு ‘ஸ்காட்ச்’ - என்றால் என்ன என்றே புரிய வில்லை. அப்புறம் விளக்க வேண்டியிருந்தது” - என்றான் ரகு.

இரத்தக் கண்ணீர் சிந்தாத குறையாக மனம் வெந்து அழுதபடியே ‘பிளாக்’கில் ‘ஸ்காட்ச்’ வாங்கி வரப் பணத்தை எண்ணி வைத்த பின்பு தான் காரியம் நடக்கும் போலிருந்தது.

“லஞ்சமும், வேண்டியவர், வேண்டாதவர் - விருப்பு வெறுப்புகளும் ஒழிகிற வரை நம் நாடு உருப்படாது. நாடு உருப்படாமல் இருந்தாலும் பரவாயில்லை. தாங்கள் உருப்படுவதற்கு லஞ்சமும், சிபாரிசும், அதிகார துஷ்பிரயோகமும் இங்கு நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளில் பலர் நினைக்கிறார்கள். தலைவர்கள் மேடைகளில் பல மக்கள் முன்னிலையில் ஒரு முகத்தைக் காட்டுகிறார்கள். அந்த முகம் நியாய வேட்கை உள்ளது போல் அந்த விநாடியில் தெரிகிறது. ஆனால் உண்மையில்லை. அது ஒரு தற்காலிக முகமூடிதான். உண்மை முகம் என்னவோ அந்த முகமூடிக்குப் பின்னால்தான் இருக்கிறது.”

“இந்தியப் பொது வாழ்வில் ஸ்ப்ளிட் பெர்ஸனாலிட்டி, இரட்டை வேஷம் இவை சர்வசாதாரணமான அம்சங்கள் ஆகும்.

“கல்வித் துறையில்தான் இவை மிகமிக அதிகம் சார்! அளவு கடந்த தாழ்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர். அளவு கடந்த உயர்வு மனப்பான்மையால் பிறருக்குக் கெடுதல் புரிவோர், போட்டியில் கெடுதல் புரிவோர், பொறாமையால் கெடுதல் புரிவோர், வயிற்றெரிச்சல் படுவோர், நேரே புகழ்ந்து பின்னே தூற்றுவோர் எல்லாரும் இந்தத் துறையில் தான் உண்டு. தன் வளர்ச்சிக்கு இடையூறு என்றால் பெரிய பொதுவளர்ச்சியைத் தடுக்கும் முயற்சியை மேற்கொள்பவர்கள் கூட இங்கு உண்டு. சென்ற வருஷம் சர்வகலாசாலையில் ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சித் துறையில் புதிய ஆராய்ச்சிகளை நடத்த என்று யூனிவர்ஸிடி கிராண்ட்ஸ் கமிஷன் ஆறு லட்சம் ரூபாய் ‘கிராண்ட்’ சாங்ஷன் செய்தது. ஆனால் அந்தத் துறையின் தலைவர் புதிய ஆராய்ச்சிகளுக்கான ‘ஸ்கீமை’ இது வரை போட்டுக் கொடுக்காமல் இழுத்தடித்துத் தட்டிக்கழித்து வருகிறார். காரணம் துறைக்குள் புதிதாக யாரும் வேலைக்கு வருவதையோ, நியமனம் பெறுவதையோ இப்போதிருக்கும் துறையின் தலைவர் விரும்பவில்லை. அவர்கள் எல்லாரும் வந்து துறை பெரிதாக வளர்ந்தால் தம் முக்கியத்துவம் போய் விடுமோ என்று பயப்படுகிறார். பயந்த அறிவாளிகள் தாம் அறிவுத்துறையின் இன்றைய புற்று நோய் போல் இருக்கிறார்கள். வளர்ச்சியைக் கண்டு பயம். தன்னை விடத் திறமைசாலிகளைக் கண்டு பயம். பயப்படுகிறவன் உண்மையான கல்விமானாக இருக்க முடியுமா?”

“இந்தியர்களுக்கு வெள்ளைக்காரனிடமிருந்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்தாயிற்று. இனிமேல் பயத்திலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். பொறாமையிலிருந்து சுதந்திரம் வாங்கித்தர வேண்டும். இரட்டை வேஷத்திலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். ஏமாற்றுக்களிலிருந்து சுதந்திரம் வாங்கித் தர வேண்டும். அந்தச் சுதந்திரங்கள் எல்லாம் கிடைக்கிற வரை நானும் என் மனைவியும் இங்கேயிருந்து விலகி ஆஸ்திரேலியாவுக்கோ அமெரிக்காவுக்கோ ஏதாவது ஒரு யூனிவர்ஸிடிக்கு வேலைக்குப் போய் விடலாமென்று நினைக்கிறோம்.”

“நீங்கள் நினைப்பது போல் முன்பே நினைத்த பல டாக்டர்கள், என்ஜீனியர்கள், பேராசிரியர்கள் ஏற்கெனவே அங்கெல்லாம் போய் அங்கேயே தங்கிவிட்டார்கள். இங்கே மூளை வரட்சி - ‘பிரெய்ன் டிரெய்ன்’ வந்ததற்கு அதுவும் காரணம்” என்றான் சுதர்சனன்.

“இராமநாதபுரத்தில் வேலை பார்க்கிற தெருப் பெருக்கும் தொழிலாளியைத் திடீரென்று கன்யாகுமரிக்கு மாற்ற முடியாது. ஆனால் ஒரு பேராசிரியரை உடனே மாற்றி விட முடியும். இங்கே முக்கால்வாசி அதிகாரிகள் ஸாடிஸ்ட்டுகள். அதாவது பிறரைத் துன்புறுத்தி மகிழ்கின்றவர்கள் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது” சுதர்சனன் மனக் கொதிப்போடுதான் இந்த வார்த்தைகளைச் சொன்னான்.

தனியார் நிர்வாகமோ, அரசாங்க நிர்வாகமோ கல்விக் கூடங்களில் பணிபுரிகிறவர்களில் பலர் பலர் வெறும் சிபாரிசுகளில் மட்டுமே வேலைக்கு வருவதால் தரம் சுமாராகிறது. தரம் உள்ளவர்களுக்கு மரியாதை இல்லை. அதனால் நிர்வாகத்தையும் ஆசிரியர்களையும் மாணவர்கள் மதிப்பதில்லை. எங்கும் குழப்பம் அமைதியின்மை எல்லாம் உண்டாகின்றன. குழப்பத்தின் கண்ணுக்குத் தெரிகிற முனையில் இளைஞர்கள் இருந்தாலும் கண்ணுக்குத் தெரி யாமல் எங்கோ இருக்கும் அதன் மறுமுனையில் முதியவர்களும், அதிகாரிகளும், நிர்வாகமும் அதன் ஓராயிரம் முறைகேடுகளும் ஊழல்களும் தான் இருந்தன. இருக்கின்றன. ஆணிவேராக இருக்கும் அந்த அடிமட்டத்து ஊழல்களை அறுத்து விட்டாலே மறுமுனையில் தானாக வாட்டம் ஏற்பட்டு விடும். அடிமட்டத்து ஊழல்கள்தான் மறுமுனையில் தளிர்க்கும் இளைய ஊழல்களுக்கு ஊட்டம் தருகின்றன, என்று சுதர்சனன் கருதினான். கல்வித்துறை ஒரு கொச்சையான மீன் வியாபாரம் போல ஆகிவிட்டதால் அங்கே, கெளரவம், மரியாதை, பண்பாடு எல்லாம் ஒருங்கே தொலைந்து போய் விட்டதாகத் தோன்றியது.

“அநியாயமான டிரான்ஸ்ஃபரில் சிக்கி மனம் குழம்புகிற ஓர் ஆசிரியன் எப்படி மலர்ந்த முகத்தோடு மாணவர்களை அணுக முடியும்? ஒரு பேராசிரியனுக்கு நிர்வாகமும், கல்வித் துறை அதிகாரிகளும் ஆயிரம் தொல்லைகளைக் கொடுத்து விட்டு அவன் தொல்லைகளுக்கு அப்பாற்பட்ட அறிவாளியாக விளங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?” என்று கேட்டார் வந்தவர்.

“எல்லாம் சமாளித்துக் கொள்ளத் தெரியணும்” என்றான் ரகு.

“சமாளித்துக் கொள்வது என்பது ஒரு முறை இருமுறை தான் சாத்தியம். ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் சமாளித்துக் கொண்டே வாழ்ந்து விட முடியாது. ஒரு சுதந்திர நாட்டில், அப்படி வாழவும் கூடாது” - என்று சுதர்சனன் அதை உடனே குறுக்கிட்டு மறுத்தான்.

“என்ன செய்யிறது? நடைமுறையை அநுசரித்துத் தானே போகணும்?”

“இந்த வறட்டு நியாயம் எனக்குப் பிடிக்கவில்லை ரகு? நடைமுறைகளை எல்லாம் கீழ்த்தரமாகவும் மட்டமாகவும் செய்துவிட்டு அப்புறம் அவற்றை அநுசரித்துத்தான் வாழ வேண்டுமென்றும் சொல்லிக் கொள்வதனால் என்ன பிரயோசனம் நடைமுறைகளை முதலில் மாற்றுங்கள். செருப்புக்குத் தகுந்த கால்களைத் தேடித் திணிக்காதீர்கள். காலுக்குத் தகுந்த செருப்பை அணிய வாய்ப்பளியுங்கள். நிர்ப்பந்தமாக நடைமுறைகளை ஊழலாக்கிவிட்டு அப்புறம் அந்த ஊழல்களுக்குத் தகுந்தாற் போலத் தான் சமாளித்துக் கொண்டு அநுசரித்துப் போகவேணும் என்று கையாலாகாத வேதாந்தம் பேசுவதே ஒரு சீலைப்பேன் வழக்கமாகப் போய் விட்டது” - என்று சுதர்சனன் சீறியதும் ரகு ஏதும் மேற்கொண்டு எதிர்த்துப் பேசாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் விட்டான்.

அத்தியாயம் - 24

காரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் வந்திருந்த பேராசிரியரையும் அவருடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு சிண்டிகேட் சிதம்பரநாதனைப் பார்க்கப் போனான் ரகு.

“இந்த மாறுதல் விஷயமாக் கவனிக்க வேண்டியது ‘டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன்ஸ்’ - ஆபீஸ் தான். சிண்டிகேட்டோ, யூனிவர்ஸிடியோ இதிலே எதுவும் பண்ண முடியாது” - என்று புறப்படும்போதே தயங்கினாற் போலச் சொன்னார் வந்தவர்.

“நம்ம சிண்டிகேட் சாரைச் சாதாரணமா நெனைக்காதீங்க. அவராலே முடியாததுன்னு எதுவுமே இல்லை. டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன் ஆபீஸ்லியும் அவர் யாரையாவது பிடிச்சு வச்சிருப்பாரு. எதுக்கும் அவரை முதல்லேயே பார்த்துட்டோம்னா நல்லது” என்று ரகு கூறியதும் வந்தவரும் அவர் மனைவியும் தட்டிச் சொல்லாமல் அவனோடு உடன் புறப்பட்டார்கள்.

“இன்னிக்குக் காமர்ஸ் சுப்பையன் வர மாட்டாரு! லீவு. அதனாலே பி.காம். ஸ்டூடண்ட்ஸ் வந்தா வேற எங்கேயாச்சும் உட்கார்ந்துக்கச் சொல்லுங்க. இல்லாட்டி வீட்டுக்குப் போகச் சொல்லிடுங்க...” என்று போகிற போக்கில் ரகு சொல்லியதைக் கேட்டுச் சரி என்பது போல் தலையை ஆட்டினான் சுதர்சனன்.

காமர்ஸ் ஆசிரியர் சுப்பையனுக்குச் சொந்தமாக வண்ணாரப் பேட்டையில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் இருந்தது. அதையும் நடத்திக் கொண்டேதான் ரகுவின் டூட்டோரியல் காலேஜிலும் வேலை பார்த்தார். அவர். இன்ஸ்டிடியூட்டில் பண வசூல் -சம்பளம் - வசூலிக்கும் நாட்களில் இங்கு அவர் வரமாட்டார். வருகிற நாட்களில் மாணவர்களுக்குக் கத்தை கத்தையாக ‘சைக்ளோஸ்ட்’ செய்த நோட்ஸ்களைக் கொடுத்து விடுவார். சுப்பையனுக்குப் பயங்கரமான பணத்தாசை. சென்னை நகரின் ஒவ்வொரு பேட்டையிலும் ஒரு கமர்ஷியல் இன்ஸ்டிட்யூட்டைத் திறந்து நடத்தி ஏராளமாகப் பணம் பண்ண வேண்டும் என்ற பேராசை அவருக்கு உண்டு! “பணம் பண்ணத் தெரியணும் சார்! பணம் பண்ணத் தெரியாட்டி இந்த ஊர்லே ஒருத்தன் உங்களை மதிக்க மாட்டான். பல சரக்கு வியாபாரி எப்பிடிப் பேட்டைக்குப் பேட்டை புதுப் புது பிராஞ்ச் திறந்து வியாபாரம் பண்றானோ அப்பிடியே படிப்பையும் அங்கங்கே விற்கத் தெரியணும்” என்பது தான் சுப்பையன் அடிக்கடி பிறரிடம் உதிர்க்கும் பொன்மொழி.

சுப்பையனுடைய படிப்பு விற்பனைத் தத்துவத்தை, நினைத்துவிட்டு இரண்டு நாட்களுக்கு முன் பல்கலைக் கழக ஆடிட்டோரியத்தில் தான் கேட்ட ஒரு நயமான உரத்த சிந்தனைக்குரிய சொற்பொழிவையும் ஒப்பிட்டு எண்ணிப் பார்த்தான் சுதர்சனன்.

“இந்தியாவில் விளைய வேண்டிய முன்னேற்றங்களும், வளர்ச்சிகளும் விளையாமல் இருக்கத் தடைகளாயிருப்பவர்கள் வெளியே வேறெங்கும் இல்லை. அவர்கள் இந்தியாவுக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். குடிசைகளும் சேரிகளும், இருக்கிறவரைதான் அவற்றைச் சரி செய்வதாக ஒவ்வொரு தேர்தலிலும் மக்களிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்கவும் உறுதியளிக்கவும் வாய்ப்பு உண்டு என்று எல்லாத் தரப்பு அரசியல்வாதிகளும் அவற்றை அதாவது குடிசைகளையும் சேரிகளையும் அப்படியே இன்னும் பேணி காக்க விரும்புகிறார்கள். அறியாமை அறவே ஒழிந்து விட்டால் பின்பு தங்களுடைய தனித்துவமும் சிறப்பும் போய் விடுமோ என்று கருதி அறிவாளிகள் ஒரளவு ‘அறியாமை’ எக்காலத்திலும் நாடு முழுவதும் ‘ஸ்டாக்’ இருக்கும்படி ஒரு சீராகக் கவனித்துக் கொள்கிறார்கள். தாங்கள் செழிப்பை உண்டாக்குவதாகப் பிரச்சாரம் செய்யப் போதுமான ‘வறுமை’ நாட்டில் எப்போதும் ‘ஸ்டாக்’ இருக்கும்படி வறுமையை ஒழிக்கப் பாடுபடவென்றே அவதாரம் செய்திருப்பவர்கள் நினைக்கிறார்கள். சாதி வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகளை ஒழிப்பவர்களின் கதையும் இதுதான். ஒரு சில மாதங்களிலோ, வருடங்களிலோ சாதிகளும், ஏற்றத் தாழ்வுகளும் போய்விட்டால் அப்புறம் தாங்கள் எதை ஒழிக்கப் போவதாகச் சவால் விடுவது என்று தயங்கியே அவற்றை முழுமையாக ஒழித்து விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் போட்டி போட்டுக் கொண்டு நாட்டில் அறியாமையையும் சாதி பேதங்களையும் வளர்க்கின்றன. நான் வெற்றி வாகை சூடுவதற்காகவே பிறர் தோற்கும் வாய்ப்புக்கள் நேரவேண்டும் என்று ஒவ்வொரு வெற்றி ஆசைக்காரனும் நினைக்கிற நாடு இந்தியா. வறுமை, சாதி வேறுபாடு, ஏற்றத்தாழ்வு. கல்வியறிவின்மை, குழப்பங்கள், இவை எல்லாம் ஒவ்வொரு தேர்த விலும் ஜெயிக்க விரும்புகிறவர்களுக்குத் தேவைப்படுகின்றன. ஆகவே வறுமை, சாதி வேறுபாடு, அறியாமை இவை நூற்றுக்கு நூறு சதவிகிதம் நாட்டிலிருந்து ஒழிந்து விடாமல் அவர்கள் இங்கே முனைந்து கவனித்துக் கொள்கிறார்கள். பலர் அறியாதவர்களாக இருந்தால்தான் ஒருவனை அறிவுமேதையாக நம்புவார்கள் என்று கருதும் நாடு இது. மற்றவர்களுக்கு முழு வளர்ச்சி வந்து விட்டால் தங்களை அப்புறம் மதிக்க மாட்டார்களோ என்று தயங்கித் தயங்கிச் செயல்படுகிற ஐந்தாம்படை அறிவாளிகள் நிறைந்திருப்பதும் இங்கேதான். பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டு விடாது. ஆனால் உலகமே இருண்டு விட வேண்டும் என்று கருதித் திட்டமிட்டுத் தவம் போலக் கண்ணை மூடிக் கொள்ளும் பூனைகள் இங்கே அதிகம். இரட்டை வேடமும் வெளிப்பூச்சான போலித் தியாகமும், உள்ளார்ந்த சுயநலமும், ஒளி வருவதை எதிர்த்துக் கூசும் இருண்ட மனநிலையும் உள்ள வரை இந்தியா உருப்படாது” - என்று அந்தச் சொற்பொழிவாளர் பேசியிருந்தார். வடக்கே ஒரு பல்கலைக் கழகத்தில் சோஷியாலஜிப் பேராசிரியராக இருப்பதாக அந்தச் சொற்பொழிவாளரைப்பற்றி விசாரித்து அறிந்து கொண்டான் சுதர்சனன். அவர் கூறிய கருத்துக்கள் அவன் சிந்தனையைத் தூண்டின.

பகல் ஒன்றரை மணிக்குச் சுதர்சனன் அலுவலக அறையில் இருந்தபோது ரகுவும், பேராசிரியரும், அவர் மனைவியும் சிண்டிகேட் சிதம்பரநாதனும் ஒரு டாக்சியில் வந்து இறங்கினார்கள். டாக்சிக்கு வெளியூரிலிருந்து வந்திருந்த அந்தப் பேராசிரியர்தான் பணம் கொடுத்துக் கணக்குத் தீர்த்தார். அவர்கள் அனைவரும் தனிப் பயிற்சிக் கல்லூரியின் அலுவலக அறைக்குத்தான் வந்திருந்தார்கள். அறைக்குள் நுழைந்ததும் சிதம்பரநாதன் சுதர்சனனுக்குப் பெரிய கும்பிடாக ஒன்றைப் போட்டுவிட்டுச் “செளக் கியமா இருக்கீங்களா?” என்று வினவினார். சுதர்சனன் தலையை ஆட்டினான். ரகு உள்ளே நுழைந்ததும் அடுத்தடுத்து இரண்டு டெலிஃபோன்கள் செய்தான் - ஒரு ஃபோன் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு. மற்றொன்று கோட்டையில் செகரெட்டேரியட்டுக்கு.

“டைரக்டர் ஆபீசுக்கோ, கோட்டைக்கோ புறப்படறத்துக்கு முந்தி இரண்டு பத்து ரூபாய் நோட்டுக்குச் சில்லறை மாத்தி வச்சுக்குங்க. தேவைப்படலாம்” என்றார் சிண்டிகேட் சிதம்பரநாதன்.

“முன்னாடியே மாத்தி வச்சிருக்கேன்! கவலைப்படாதிங்க” - என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் டிரான்ஸ்ஃபர் தொல்லைக்கு ஆளாகி வந்திருந்த பேராசிரியர். சிதம்பரநாதனே மேலும் விளக்கினார்:

“சில்லறைத் தேவதைகளுக்குச் சில்லறையாகக் காணிக்கை செலுத்தினாலொழிய மூலஸ்தானத்தில் போய்த் தரிசனம் பண்ண முடியாது சார்.”

“புரிகிறது! இது கூடப் புரியாதா என்ன?” என்றார் வந்தவர். சுதர்சனன் குறுக்கிட்டுக் கேட்டான்:

“சுதந்திரம் வந்து முப்பது வருசமான பின்னாலும் இந்த ‘சம்திங்’ போகலியே? ‘சம்திங்’ இனாம், இலஞ்சம் எல்லாம் ஒரு மரபாகவே ஆகிவிட்டனவே!”

“இனாம் வேறே; லஞ்சம் வேறே. ஏதோ உள்ளே விடறதுக்காக வாட்ச்மேன், பியூனுக்கு ஒண்ணு ரெண்டு கொடுக்கிறது லஞ்சமாயிடாது.”

“கொஞ்சமாச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக்கிறது லஞ்சமாயிடாது.”

“கொஞ்சமாச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக்கிறது இனாம் அல்லது ‘சம்திங்’. அதிகச் சம்பளம் வாங்கறவனுக்குக் கொடுக்கிறது லஞ்சம். ஊரறிய மேடையிலேயே சொல்லி ‘ஓதியிடறது’ போலப் பண்டமாக் கொடுத்துடறது அன்பளிப்பு இல்லியா சிண்டிகேட் சார்?”

“அட சும்மா இரும் ஐயா! நீர் ஒரு வம்புக்கார ஆளாயிருப்பீர் போல இருக்கே” - என்று பாதி வேடிக்கையும், பாதி கண்டிப்பும் கலந்த குரலில் சுதர்சனனை நோக்கிச் சொல்லியபடி அவன் முதுகில் சற்று அழுத்தமாகவே தட்டினார் சிண்டிகேட் சிதம்பரநாதன்.

அத்தியாயம் - 25

சிண்டிகேட் சிதம்பரநாதனின் அந்தக் கை தன் முதுகில் பட்டதற்காக அருவருப்பு அடைந்தவன்போல் சற்றே விலகி நின்றான் சுதர்சனன். சிண்டிகேட் சிரித்தபடியே சொன்னார்:

“சார்! ரொம்ப உணர்ச்சி வசப்படறாரு. உலக அநுபவம் பத்தாது... நாளாக நாளாகச் சரியாயிடுவாரு”என்றார் சிண்டிகேட்.

“அதாவது தப்பு - ஊழல் - லஞ்சம், ஏமாற்றுதல், பணம் பண்ணுதல், இதையெல்லாம் எதிர்த்தால் உலக அநுபவம் இல்லாதவன்னு அர்த்தம். இதை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமா ஏத்துக்கிற அளவுக்கு மரத்துப் போயிட்டா அவனுக்கு உலக அனுபவம் வந்து விட்டதுன்னு அர்த்தம்.”

சுதர்சனின் குரலிலிருந்த தார்மீகக் கோபமும் சத்திய ஆவேசமும் சிதம்பரநாதனை ஒரிரு கணங்கள் பதில் பேச விடாமல் தடுத்துத் தயங்க வைத்தன. அதற்குள் டிரான்ஸ்ஃபர் தொல்லைக்கு ஆளாகி வந்திருந்த பேராசிரியர் குறுக்கிட்டுப் பேசினார்.

“யதார்த்த நிலைமையும் அப்பிடித்தானே இருக்கு? அதைத்தானே சார் நமக்குச் சொல்றார்? யூனிவர்ஸிடியிலே வியாபாரம் பண்ணாதவன் யார்? எக்ஸாமினேஷன் போர்டு மெம்பர்ஸ் ஒவ்வொருத்தனும், சீஃப் எக்ஸாமினரும், போர்டு மெம்பர் அல்லது சீஃப் எக்ஸாமினர்னு லெட்டர் ஹெட்டிலேயே பிரிண்ட் பண்ணி வச்சிக்கிட்டிருக்காங்க. இது இதுக்கு இன்ன இன்ன ரேட்னு அட்வர்ட்டிஸ்மெண்ட் டாரீஃப் போடற மாதிரி - ஏஜென்ஸி, சப் ஏஜென்ஸி, டீலர், ஸ்ப்-டீலர் எல்லாம் போட்டு வேலை நடக்குது. ஒருத்தன் முணு வருசம் எக்ஸாமினராக இருந்தா வீடு கட்டிடறான். சிஃப் எக்ஸாமினரா இருந்தாலோ காபி எஸ்டேட் வாங்கிடறான். என்னைப் போல ஒரு பேராசிரியருக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேர மூளை வேலைக்கு மாதச் சம்பளம் ஆயிரம், இரண்டாயிரம்னு சுளைகளையாகக் கிடைச்சாலும் பேராசை போக மாட்டேங்குது. ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் கடின உடலுழைப்பில் ஈடுபடுகிற தொழிலாளி ஒருத்தன் மாதம் முன்னூறு நானூறு ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடியாத இதே நாட்டில்தான் நாங்க சிலமணி நேர மூளை உழைப்புக்காக ஆயிரமாயிரமாகச் சம்பாதிக்கிறோம்.”

“ஏதேது? நீங்களே எதிர்ப்புப் பிரச்சாரம் பண்ணுவீங்க போல இருக்கே...?”

“பிரச்சாரம் ஒண்ணுமில்லே. உள்ளதைத்தான் சொன்னேன்.”

“எல்லா ஊழலும் எல்லா அறியாமையும் கல்வியாலே தான் போகணும்னு சொல்லுவாங்க. ஆனால் கல்வித் துறையிலேயே இத்தனை ஊழலையும் ஓட்டைகளையும் வைத்துக் கொண்டு அப்புறம் இந்த நாட்டில் வேற எதைத் தான் சீர்திருத்த முடியும்?” சுதர்சனன் இப்படிக் கேட்டதற்குச் சிண்டிகேட் சிதம்பர நாதனிடமிருந்து உடனே பதில் வந்தது.

“எதுக்காகச் சீர்திருத்தணும்னேன்? சீர்திருத்தணும்னு வரிந்து கட்டிக்கொண்டு புறப்படறதுதான் பைத்தியக்காரத்தனம். எவனாலேயும் எதையும் முழுக்கச் சீர்திருத்திட முடியாது இந்த நாட்டிலே. பிரிட்டிஷ்காரன்தான் போயிட்டானே ஒழியக் கல்வி இலாகாவிலே இன்னும் அதே மனப்பான்மையுள்ளவங்கதான் இருக்காங்க. எதையும் நீங்க மாத்திப்பிட முடியாதுன்னேன்.”

“இன்னும் பத்து வருசத்துக்குப் பள்ளிக் கூடங்களையும் கல்லூரிகளையும் இழுத்து மூடிவிட்டு உடலுழைப்பைக் கட்டாயமாக்க வேண்டும். மனிதத் தன்மையையும், யோக்கியதையையும், நாணயத்தையும், ஒழுக்கத்தையும் சுய கெளரவத்தையும் உழைப்பை மையமாக வைத்துக் கற்றுக் கொடுக்கவேண்டும். இல்லாட்டி இந்த தேசம் ஒன்றுக்கும் உதவாத சோம்பேறிக் கூட்டமாகப் போய்விடும்.”

“சுதர்சனன் சார் இப்பல்லாம் வர வர இந்த மாதிரிப் புரட்சியாவே பேச ஆரம்பிச்சிருக்கிறதைப் பார்த்தாப் பயமாயிருக்கு.”

“பயமே பாவங்களுக்கெல்லாம் தந்தை என்று மகாகவி பாரதியார் சொல்லியிருக்காரு, தெரியுமா?”

“இங்கே ஒரு பாவமா ரெண்டு பாவமா? கல்வி இலாகா முழுவதுமே பாவங்களின் முட்டையா இருக்கு. சாதி வெறி, குரூப்பிஸம், பணப் பேராசை, பழிவாங்குதல், அறியாமை, முரண்டு, கொண்டது விடாமை, கொள்கையின்மை, இதெல்லாத்தையும் ஒண்ணு சேர்த்தால் அதுதான் நம்ம கல்வி இலாகா. யூனிவர்ஸிடி போர்டு ஆஃப் ஸ்டடீஸ்லே பாடப் புத்தகம் தேர்ந்தெடுக்கறப்போ படிக்கிற மாணவர்களை நினைச்சுத் தேர்ந்தெடுக்கறதில்லே. எக்ஸாமினேஷன் போர்டிலே இருக்கிறவர் தயவு இந்தப் போர்டிலே இருக்கிறவருக்கு வேணும்னு அவர் புத்தகத்தை இவர் பாடமா வச்சுடலாம். ‘அந்தப் புலவர் பொன்னம்பலனார் அஞ்சாறு பொண்ணைப் பெத்துப்பிட்டாரு. ஒண்ணொண்ணுக்கும் கட்டிக் குடுக்க ஐயாயிரம் பத்தாயிரம் செலவாகும். பாவம் அவர் சம்பாதிச்சிக்கட்டும்னுதான் போனவருஷம் எஸ்.எஸ்.எல்.சிக்கு நான் டீடயிலாக இருந்த ‘மண்ணும் விண்ணும் மதிக்கும் வள்ளுவர் மாண்பு’ - என்னும் கட்டுரைத் தொகுதியை இந்த வருசம் பி.யூ.சிக்கு நான் டீடயிலாகப் போட்டிருக்தோம்’னு காரணம் சொல்லுவாங்க. டீடயில்டு ஸ்டடிக்கு வைப்பதைவிட லைட்ரீடிங்காக நான் டீடயில்டு ஸ்டடிக்கு வைக்கணும்னு பேரு. ஆனா இங்கே டீடயில்டு ஸ்டடியை விடக் கடினமான வியாசங்களை நான் டீடயில்டு ஸ்டடிக்கு வைப்பாங்க. காரணம் யாராவது ஒருத்தர் பொண்ணுக்குக் கலியாணத்துக்குச் செலவழிக்கப் பணம் சேர்த்தாகணும். பையன் ஆறாவது வகுப்பிலும் ‘மண்ணும் விண்ணும் மதிக்கும் வள்ளுவர் தம் மாண்பை’ப் படிக்கணும், பி.யூ.சியிலும் அதையே படிக்கணும். பி.ஏ.யிலும் அதையே படிக்கணும். போஸ்ட் கிராஜுவேட் வகுப்பிலும், அதையே படிச்சுத் தீரணும். பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறுகிறவரை அவன் தன் புத்தியை ஒரே விஷயத்துக்கு அடகு வைக்கிற நிர்ப்பந்தம் இங்கே இருக்கும்.”

“வள்ளுவரை மட்டும் தனியே படிச்சால் கூடத் தப்பில்லை. ஒரே குறளுக்கு ஒவ்வொரு நிலையிலும் படிக்கிற போது புதிய புதிய பொருள் நயங்கள் விரிவுபட்டுத் தோன்ற வழி இருக்கிறது. புலவர் பொன்னம்பலனார் போன்றவர்களின் அரைத்த மாவை அரைக்கும் விளக்கங்கள் மூளையைக் காயடித்து விடும்.. அதை யார் தட்டிக் கேட்கப் போறாங்க? யூனிவர்ஸிடிகள் சம்பந்தப்பட்ட எல்லாமே அப்பிடித்தான் இருக்கு, மூணு வருஷம் ஒருத்தர் எக்ஸாமினரா இருக்கார்னா மூணு வருஷத்திலே எவ்வளவு சேர்த்துக் கொள்ள வழி உண்டுன்னு தான் பார்க்கிறாங்க. இந்த நாட்டிலே படிச்சவங்களுக்கு இருக்கிற பணத்தாசை படிக்காத ஏழைப் பாமர மக்களுக்குக் கூட இல்லை. இளம் பெண்களானால் அழகையும், கற்பையும் இலஞ்சமாக வாங்கிக் கொண்டு மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இரண்டு பாட்டில் விஸ்கி கொண்டு போய்க் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். காஞ்சீபுரம் பட்டுப் புடைவை - பெரிதாகப் பளபள வென்று ஜரிகை போட்டதாக ஒண்ணோ ரெண்டோ வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். நெல்லூர் அரிசி மூட்டை ரெண்டு அனுப்பி வைத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள். இருநூறு ரூபாயோடு பெங்களுருக்கு ப்ளேன் டிக்கெட் வாங்கிக் கொடுத்தால் மார்க் போடுகிறவர்கள் இருக்கிறார்கள், அப்புறம் எதுக்குப் பரீட்சை - பாஸ்- ஃபெயில், ஃபர்ஸ்ட் கிளாஸ், ஸெகண்ட் கிளாஸ், கிரேடிங் சிஸ்டம் எல்லாம் என்ன இழவுக்காகன்னுதான் புரியிலே?”

“எல்லாத் தொழில்லேயும் சம்பளம் கிம்பளம் இரண்டு வகை வந்தாச்சு. அதுதான் சங்க காலத்திலேயே “உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் கற்றல் நன்றே” என்று பாடி வச்சிருக்கான். சில புலவர்களே இப்பல்லாம் இந்தக் கொட்டேஷனைப் புது அர்த்தத்திலே விளக்கிச் சொல்றாங்க. உற்றுழி உதவுதலாவது பெங்களூருக்கு ப்ளேன் டிக்கட்டும் ரொக்கமும் கொடுத்தல் முதலிய இன்னோரன்னபிற. உறுபொருள் கொடுத்தலாவது நிறைய ரொக்கமும் பிறவும் கொடுத்தல். கற்றல் நன்றாவது - நல்ல கிரேடு வாங்குதல். சங்கப் புலவரின் தீர்க்க தரிசனத்தை என்னென்று கூறுவது? உற்றுழி உதவுதலும் உறுபொருள் கொடுத்தலும் வழி வழி வந்தவை எனப் பொருள்படுமாறு கூறிய பெருமைதான் என்னே! என்னே!!”

“உடலுழைப்புக்காரர்களுக்கு இல்லாத இன்னொரு வசதியும் சில அறிவுத்துறைப் பேராசிரியர்களுக்கு உண்டு. முக்கால்வாசி நாள் பட்டிமன்றம், கவியரங்கம், சொற்பொழிவுன்னு ஊரெல்லாம் காடு மேய்ந்து விட்டு மீதி நாட்களில் முடிந்தபோது வகுப்புக்கு வந்தால் போதும்! பாடங்களை முன்பே சரிபார்த்துக் குறிப்புக்கள் தயாரித்துக் கொண்டு வரவேண்டும் என்பதில்லை. அவ்வப்போது தோன்றியபடி எதையாவது பூசிமெழுகிச் சொல்லியே சமாளித்துக் கொள்ளலாம்.”

“எல்லாருக்கும் இது பொருந்தாது. நல்ல பேராசிரியர்களும், நாணயமான அறிவு உழைப்பாளிகளும் கணிசமான அளவில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். காடு மேய்கிறவர்கள் எல்லாத் துறையிலும்தான் இருக்கிறார்கள். நாட்டில் சுய கட்டுப்பாடும் பொது ஒழுக்கமும் இல்லாதது தான் மொத்தத்தில் காரணம்.”

“இன் தீஸ் டேய்ஸ் நோ ஒன் இஸ் வில்லிங் டூ லேர்ன்!”

“அதிலே தப்பென்ன? படிக்காமலே பாஸ் பண்ண - கிரேடு வாங்க எல்லாம் வழி இருக்கறப்ப எதுக்கு வீணாப் படிக்கணும்?”

“ரொம்ப நல்ல கேள்விதான். ஆனால் இதற்குப் பதில் சொல்லும் அல்லது விடை காணும் பொறுப்பு யாரிடம் இருக்கிறதுன்னு தான் புரியலை. இந்த நாட்டில் இன்றுள்ள மிகப் பெரிய துரதிர்ஷ்டம் பல பிரச்னைகளுக்கு விடை சொல்ல வேண்டியவர்களும், அந்தப் பிரச்னைகளை உருவாக்கிய குற்றவாளிகளுமே விடை சொல்வதற்குப் பதிலாக மேலும் சில வினாக்களைத் தொடுத்துவிட்டு நைஸாகத் தப்பித்துக் கொள்ளுகிறார்கள். குற்றவாளிகள் நீதி போதனை செய்வதும், நீதி போதனை செய்ய வேண்டியவர்கள் குற்றவாளிகளைப் போல் ஒடுங்கி இருப்பதும் ஒரு நாட்டில் எவ்வளவு அபாயகரமான நிலைமை என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.”

“அதையெல்லாம் சிந்திச்சுக்கிட்டிருந்தா இப்போ நம்ம காரியம் நடக்காது. வாங்க புறப்படலாம். முதல்லே. நீங்க மெட்ராஸுக்கு வந்தது உங்க டிரான்ஸ்ஃபர் விஷயமாங்கிறதை மறந்துடாதீங்க...” என்று விவாதங்களைத் தவிர்க்க முடியாத மையத்தில் கொண்டுவந்து தடுத்து நிறுத்தினார் சிண்டிகேட் சிதம்பரநாதன்.

ரகுவும் அதையே சொன்னான். “நமக்கு எதுக்குப்பா ஊர் வம்பெல்லாம்? நம்ம காரியத்தை முடிச்சிக்கிட்டுப் போகலாம். கிளம்பு! தேசத்திலே கடவுளைத் தவிர லஞ்சம் வாங்காதவன் யார்?”

“கடவுள் வாங்கறதில்லே. சில இடங்களிலே கடவுளுக்கும் சேர்த்துப் பூசாரி லஞ்சம் வாங்கறானே? எல்லோரும் இப்பிடியே அப்பப்ப அவங்க அவங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை முடிச்சிக்கிட்டுப் பேசாமப் போயிட்டிருந்தா அப்புறம் சாதுவான யாரும் சகஜமாக இந்த நாட்டைத் திருத்த முடியாது. வேற மாதிரித் தான் திருத்த வேண்டியிருக்கும். காட்டிலே தீப்பிடிக்கறப்ப உதிய மரம் மட்டும் வேகாது, சந்தன மரமும் சேர்ந்துதான் வேக நேரிடும். தீ பரவும்போது தீயதுடன் சில நல்லதும் உடனிகழ்ச்சியாக அழியத்தான் அழியும். ஞாபகமிருக்கட்டும்” என்றான் சுதர்சனன். மற்றவர்கள் இதற்குப் பதிலேதும் சொல்லவில்லை.

அத்தியாயம் - 26

சுதர்சனன் நினைத்தது போல உயர்வான நிலையில் ரகுவோ, ரகுவின் தனிப்பயிற்சிக் கல்லூரியோ இல்லை. ரகு அவனுடைய அரசியல் தலைவருக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தான். அவனுடைய அரசியல் தலைவரோ பதவிக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தார். மாணவர்களுக்கு அறிவூட்டுவதை விட அவர்களைப் பாஸ் பண்ணி விடும் ஏற்பாடுகளைத் தான் தனிப் பயிற்சிக் கல்லூரிகள் செய்து கொண்டிருந்தன. அதற்காகப் பல்கலைக் கழகங்களுக்கும் தனிப் பயிற்சிக் கல்லூரிகளுக்கும் நடுவே இடைத் தரகு வேலை செய்து மருத்துவச்சி உத்தியோகம் பார்த்துப் பெற்றுக் கொடுப்பதற்குச் சிண்டிகேட் சிதம்பரநாதன் போன்றவர்கள் இருந்தார்கள். சென்னைக்கு வந்த பின் கல்வித்துறை, பள்ளிகள், சர்வகலாசாலைகள் மேல் மரியாதை குறைந்து அருவருப்பு ஏற்பட்டது சுதர்சனனுக்கு. இயல்பான ஞான வளர்ச்சிக்கும், விவேகத்துக்கும் நமது கல்விக்கூடங்களுக்கும் சம்பந்தமில்லை என்று சுதர்சனனுக்குத் தோன்றியது. கல்விக்கூடங்களும் சர்வகலா சாலைகளும் நாடு முழுதும் வருடந் தவறாமல் டயம்டேபிள் போட்டுக் கொண்டு திட்டமிட்டுத் துவேஷத்தையும், ஜாதி வெறியையும், போட்டி பொறாமைகளையும் முடிவாக இணையற்ற விதத்தில் அஞ்ஞானத்தையும், அவித்தையும், மந்தபுத்தியையும் வளர்த்து வருவதாகப்பட்டது.

ஒரு சமயம் எம். ஏ. பட்டதாரி ஒருவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு ரகுவைத் தேடி வந்து ஏதாவது உத்தியோகம் கிடைக்க வழி செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். வழக்கம்போல் ரகு சிண்டிகேட் சிதம்பரநாதனுக்கு ஃபோன் பண்ணினான்.

அப்போது உடனிருந்த சுதர்சனன் வேலை தேடி வந்தவரிடம் சொன்னான்:

“தெரியாத்தனமா நீங்க எம்.ஏ. முதல் வகுப்பிலே முதல் வரிசையிலே பாஸ் பண்ணித் தொலைச்சிட்டீங்க. அதனாலே உங்களுக்கு ஒண்ணும் பண்றத்துக்கில்லே மூன்றாம் வகுப்பிலே பாஸ் பண்ணியிருந்தாலாவது உங்களை எந்த யூனிவர்ஸிடிக்காவது வைஸ் சான்ஸ்லராப் போடச் சொல்லலாம். எஸ்.எஸ்.எல்.ஸி. பெயிலாயிருந்திங்கன்னா எலெக்ஷனுக்கு நின்னு கல்வி மந்திரியா வரலாம். மூன்றாவது ஃபாரம் பெயிலாகியிருந்திங்கன்னா ஒரு கட்சித் தலைவரா வந்து கல்வி மந்திரி மாதிரிப் பல மந்திரிங்களையே ஆட்டிப் படைக்கலாம். நீங்க பாவம்... விவரம் தெரியாம எம்.ஏ. ஃபர்ஸ்ட் ராங்க்லே பாஸ் பண்ணி வச்சிருக்கீங்க. இப்பல்லாம் காலேஜ்லே லெக்சரா வரணும்னாக் கூட பி.எச்.டி. வேணும்னு கேட்கிறாங்க. ஆனா அதே சமயத்திலே பி.ஏ.பி.டி. படிச்சவங்களை யூனிவர்ஸிடி வைஸ்-சான்ஸ்லராவே போட்டுடறாங்க.”

“சுதர்சனன்! போதும்ப்பா... நிறுத்து. நீ தயவு செய்து இங்கே உட்கார்ந்து இப்பிடி எல்லாம் பேசதே. யாராவது என்னைப் பத்தித் தப்பா நினைக்கப் போறாங்க...” என்றான் ரகு. அவன் குரலில் பயமும் பதற்றமும் தெரிந்தது.

“கவலைப்படாதே? இதுனாலே உனக்கு ஒரு கெடுதலும் வராது ரகு! யாராவது கேட்டாங்கன்னா, ‘என் ஃப்ரண்டு ஒரு லூஸ்... ஃப்ரஸ்ட்ரேடட் ஃபெல்லோ... ஏதாச்சும் இப்படித்தான் அர்த்தமில்லாம உளறிக்கிட்டிருப்பான்’னு சொல்லிச் சமாளிச்சுக்கோ” என்று சிரித்துக் கொண்டே ரகுவுக்குப் பதில் சொன்னான் சுதர்சனன்.

ஆனால் வேலை தேடி வந்து கஷ்டப்பட்ட பட்டதாரிக்குச் சுதர்சனன் பேச்சும் அதிலிருந்த கசப்பான நியாயமும் பிடித்திருந்தது.

“நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு சரிங்க... இப்பல்லாம் ஒரு லெக்சராக வேலைக்கு அப்ளை பண்ணினாலே உனக்குப் பி.எச்.டி. இருக்கான்னு தூண்டித் தூண்டிக் கேட்கிறாங்க. அதே சமயத்திலே வெறும் பி.ஏ.பி.டி.யை யூனிவர்ஸிடி வைஸ்சான்ஸ்லராவே போட்டுடறாங்க.”

“சின்ன வேலைக்குத்தான் தகுதி - திறமை - தரம் இதெல்லாம் கேட்டுத் தட்டிக் கழிப்பாங்க. மூவாயிரம் நாலாயிரம் மாதச் சம்பளம் வாங்கற பெரிய வேலையாப் பார்த்துத் தேடினீங்கன்னா அந்தத் தகுதி - திறமை - தரம் எல்லாம் யாரும் பார்க்கமாட்டாங்க. உத்தியோகத்துக்குத்தான் தகுதி. பதவிக்கு அதெல்லாம் இல்லே.”

“வேலைதான் கிடைக்கலே. வேலையைத் தேடிப் போனா முதல்லே பி.எச்.டி.யைத் தேடிக்கிட்டு அப்புறம் வேலைக்கு வாங்கறாங்க. பி.எச்.டி.க்கு ரிஜிஸ்தர் பண்ணப் போனாலோ அங்கே ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்குங்க. ஏற்கனவே பி.எச்.டி. வாங்கினவங்க சில பேருதான் ‘கய்டு’ ஆக முடியும். புதுசா யாரும் பி.எச்.டிக்குப் பதிவு பண்ணிக்கிறதோ, தீஸிஸ் எழுதறதோ. பி.எச்.டி. வாங்கறதோ ‘கய்டு’ங்களுக்கே பிடிக்கறதில்லை...”

“அப்புறம் அவங்க எப்படி ரிஸர்ச் ஸ்டூடண்ட்ஸுக்கு வழிகாட்ட முடியும்?”

“சார்! நீங்க ரொம்ப ஃப்ராங்காப் பேசறதைப் பார்த்ததுமே எனக்கு உங்களைப் பிடிச்சுப் போச்சு. ஒரு சீனியர் புரொபசர் - நான் அவரு பேரைச் சொல்ல விரும்பவில்லை - ஒரு பொண்ணுக்கு ரிஸர்ச் கய்டாக இருந்தாரு, ஆராய்ச்சித் தலைப்பு கலிங்கத்துப்பரணியில் கடை திறப்புக் காட்சி என்று கொடுத்திருந்தாங்க. அதிலே ரிஸர்ச்சுக்கோ, தீஸிஸுக்கோ பிரமாதமா ஸ்கோப் ஒண்னும் இல்லே. ஆனாலும் வழிகாட்டியாக வாய்த்த புரொபலருக்கு என்னமோ அந்தத் தலைப்புத்தான் பிடிச்சிருக்கு. வழிகாட்டறப்பவே நடுநடுவே அவரு பிரமாதமான யோசனைகளெல்லாம் சொல்லிக் குடுத்திருக்காரு. “படுக்கையறைக் காட்சிகளெல்லாம் தத்ரூபமா வரலே. உங்களுக்கு அநுபவம் பத்தாது”ன்னிருக்காரு அந்தப் பெண்ணைப் பார்த்து. அது கலியாணமாகாத பெண்ணு. முதல்லே ஒண்ணும் புரியாம முழிச்சிருக்கு, அப்புறம் இந்தப் புரொபசரே அதுக்கும் ‘கய்ட்’ பண்ணியிருக்காரு. தீஸிஸ், முடிஞ்சு எவல்யூடர்ஸுக்குப் போயி அவங்க அபிப்பிராயமும் சொல்லி முதன்மையாகத் தீர்ப்புக் கூற வேண்டிய சீனியர் ஆய்வாளர் ‘வைவாவோஸி’க்கு (நேர்முகத் தேர்வு) அழைத்திருக்கிறார். அவரும் அதே பழைய கேள்வியைக் கேட்டிருக்கிறார். “என்னம்மா காதல் காட்சிகளை உணர்ந்து எழுதலேயே நீ? ரீ ஸ்ப்மிஷனுக்குச் சிபாரிசு பண்ணி எழுதட்டுமா”ன்னு வார்த்தைகளை இழுத்திருக்காரு. உடனே அந்தப் பொண்ணு பயந்து பதறிப் போய் “சார் தயவுசெய்து இழுத்தடிக்காதீங்க சார்! ‘உணர்ந்து எழுதறது’ன்னா புரியலே... நீங்கதான் வழிகாட்டணும்”னு சொல்லி இருக்கு. அப்புறம் அவரும் அவருடைய புரொபஸர் பண்ணினமாதிரியே ‘கய்ட்’ பண்ணிட்டு பி.எச்.டி அவார்ட் பண்ணலாம்னு சிபாரிசு பண்ணியிருக்காரு. இப்பிடி ரெண்டு தடவை ரெண்டு படுக்கையறைக்குள்ளே போனப்புறம் தான் அந்த விஷயத்திலேயே வெற்றி யடைய முடிஞ்சிருக்கு, பொம்பிளையானால் இப்பிடி. ஆம்பளையானால் பணம் லஞ்சம் அரசியல் செல்வாக்கு அல்லது அரசியல்வாதியின் பிரஷர்னு ஏதாச்சும் இருக்கணும்.”

“இந்த நாட்டிலே முக்கால்வாசிப் படிப்பாளிகள் அயோக்கியத்தனத்தையே ஒரு ‘ஆர்ட்டா’ டெவலப் பண்ணிக்கிட்டிருக்காங்க. எல்லா விதமான கீபொஸிஷன்ஸிலேயும் இப்பிடி யாராவது இருக்காங்க.”

“ஏற்கெனவே பி.எச்.டி. வாங்கின சில பெரிய ஆட்களோட ‘தீஸிஸ்’ இதுவரை அச்சிலேயே வெளிவரலே. காரணம் என்ன தெரியுமா? அதெல்லாம் அச்சிலே வந்தாக்கா இன்னிக்கு அதைப் படிக்கிற சாதாரண ஸ்டுடண்ட்ஸ் கூடச் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க. அத்தனை ‘எலிமெண்ட்ரி’ யான விஷயங்களை சிறுபிள்ளைத்தனமா எழுதி எப்பிடியோ பி.எச்.டி. வாங்கியிருக்காங்க. அதே சமயத்திலே புதுசா யார் பி.எச்.டி.க்கு ரிஜிஸ்டர் பண்ண வந்தாலும் வயித்தெரிச்சல் படறாங்க. சில பேருக்குத் தீஸிஸ் எழுதித் தர வாடகைக்கு நல்ல ஆளுங்க கூடக் கிடைக்கிறாங்க.”

“உங்களை மாதிரி நாலு இளைஞர்கள் பயந்து போய் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறீங்க. அதுனாலே அவங்க எல்லாருமே தங்களுக்குப் பயந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்னு நெனைச்சுக் குதிரை ஏற ஆசைப்படறாங்க. பயத்தை ஒழிக்கணும். முதல்லே ஒரு அறிவாளி நிர்ப்பயமானவனாகவும் சுயமரியாதை உள்ளவனாகவும் இருக்கக் கத்துக்கணும். அந்த ரெண்டையும் கத்துக்காமே மத்த ஆயிரம் விஷயத்தைக் கத்துக்கிட்டிருந்தாலும் அவனை அறிவாளியா மதிச்சு லட்சியம் பண்ணக் கூடாது. கோழைத்தனத்தையும் அறிவையும் கலக்கிறது மயிரையும் கீரையையும் கலந்து வைக்கிற மாதிரி.”

“வயித்துக் கவலை வந்து நடுத்தெருவிலே அனாதையா நின்னுடுவோமோன்னு பயம் வர்ரப்ப மத்தப் பயமும் தானா வந்துடுதுங்களே?”

“நியாயமான அறிவாளியா இருந்து துணிச்சலையும் சுயமரியாதையையும் காப்பாத்திக்க முடியலேன்னா அப்புறம் தெருவிலே கைவண்டி இழுத்தாவது - மூட்டை தூக்கியாவது நியாயத்தையும் சுயமரியாதையும் காப்பாத்திக் கொள்ள வேண்டியதுதான். நம்மிலே பல பேர் சோறா? தன்மானமா? என்கிற கேள்வி வருகிற போது நமக்கு இப்போது சோறு போதும் தன்மானம் வயிற்றை நிரப்பாது. சோறுதான் வயிற்றை நிரப்பும் என்பது நம்முடைய கணிப்பாக இருந்துவிடுகிறது.”

“பிழைக்கத் தெரியாதவன்னு நாலுபேர் கேலி பண்ணு வாங்களே சார்?”

“நாலு பேர் சொல்றதுக்கெல்லாம் தயங்கினா அப்புறம் தயங்கிக்கிட்டே இருக்க வேண்டியது தான். கட்டுத்தறியிலே கட்டப்பட்டிருந்த கட்டை அவிழ்த்து விட்ட பிறகும் முன்பு கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டி தான் இன்னும் கட்டப் பட்டிருப்பதாகவே நினைத்து நின்றுகொண்டு இருப்பது போல நாமும் தயங்கி நின்று கொண்டிருக்கக் கூடாது. அர்த்தமில்லாத கூச்சமும், நாணமும், தயக்கமும் உள்ள சமூகத்தில் எந்த நல்ல மாறுதலும் உடனே நிகழாது.”

அத்தியாயம் - 27

சுதர்சனன் அப்போது திடீரென்று ஆவேசம் வந்தவனைப் போலப் பேசலானான்.

“புரட்சி என்கிற கூரான - ஆழமான வார்த்தையைக் கூட மேடைகளிலே பேசிப் பேசிக் காயடிச்சு முனை மழுங்கப் பண்ணிட்டோம் இங்கே. எல்லாமே நாளடைவில் வெறும் சடங்காக முனை மழுங்கிப் போய் விடுகிற நாட்டிலே எந்தப் புரட்சியும் விளையாது.”

“உங்க பேச்சைக் கேட்டால் ஏதோ டானிக் சாப்பிட்ட மாதிரித் தெம்பா இருக்கு. ஆனா அதே சமயத்திலே வாழ்க்கைக் கவலையும் - பொழைப்பைப் பத்தின நினைவும் வருது சார்” என்றார் வேலை தேடி வந்த இளைஞர்.

“வாழ்வதற்குப் பொழைக்க வேண்டியது தான். ஆனால் சுயமரியாதையோட பிழைக்கணும்கிற உறுதி வேணும். சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்பாங்க. சேரிட்டி மட்டுமில்லே, மொராலிட்டி, கிரடிபிலிட்டி, சின்ஸியாரிட்டி முதலியதும் நம்மகிட்ட இருந்துதான் தொடங்கணும்.”

“நீங்க சொல்றதிலே ஒரு வார்த்தைகூடத் தப்பு இல்லே. அப்பிடியே ஒப்புக்கொள்கிறேன். எந்த ஒரு வாசலாவது திறந்திருக்கும்னு போனாலும் ஏமாற்றம்தான் மீதமாயிருக்கு. எல்லா வாசலும் எல்லா வழியும் அடைச்சிருக்கு. ஏலவாக்கம் குலாப்தாஸ் மோகன்தாஸ் காலேஜிலே ஒரு வேகன்ஸி இருக்குன்னு தெரிஞ்சு தேடிப் போனேன். காலேஜ் நிர்வாக போர்டிலே ஒருத்தர் மனசு வச்சா நிச்சயம் வேலை கிடைக்கும். அவரைத் தனியே போய்ப் பாருங்கன்னாங்க. போய்ப் பார்த்தேன். முதல்லே ஆர்டர் போடறத்துக்கு முந்தி ஐயாயிரமும் அப்புறம் நிரந்தரமாகும் போது இன்னொரு மூவாயிரமும் ரொக்கமாக் கேட்கிறாரு. ஒரு வருஷம் பூராச் சம்பாதிச்சாக் கூட அவ்வளவு பணம் வராது. தொழிலதிபர்களும், பெரும் பணக்காரர்களும் அவங்க தொடங்கற ஸ்கூல்களையும், காலேஜுங்களையும் கூட லாபம் தரக்கூடிய ஒரு புது இண்டஸ்டிரி மாதிரித்தான் தொடங்கறாங்க. அந்தக் காலேஜையோ ஸ்கூலையோ தொடங்கறபோது செலவழிக்கிற கொஞ்சப் பணத்தைக் கூட. ஒரு இன்வெஸ்ட்மென்ட் ஆக எண்ணித்தான் செலவழிக்கிறாங்க, அட்மிஷனுக்குப் பணம், வேலைக்குப் பணம், பில்டிங், லைப்ரரி, லாபரேடரி, எல்லாத்துலயும் பணம்னு மழை பெய்யறதுபோல ஒரு காலேஜ்லேருந்தோ ஹைஸ்கூல்லேருந்தோ வருமானம் வெள்ளமாக் கொட்டுது! அதைப் பார்த்து ஒவ்வொருத்தரும் புதுசு புதுசாக் காலேஜ், ஸ்கூல்னு தொடங்கிக்கிட்டே இருக்காங்க. இந்த மாதிரி ‘எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டு’ங்களாலே விற்கிறவங்களுக்குத்தான் கொள்ளை லாபம். வாங்கறவங்களுக்கு ஒரே நஷ்டம்.”

“நம்ம கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நாணயமில்லாத பேராசை பிடித்த வியாபாரிகளால் நடத்தப்படுகிற வெறும் எஜுகேஷன் ஷாப்புகளாகவும், எஜுகேஷன் சூப்பர் மார்க்கெட்டுகளாகவும் ஆகி ரொம்ப நாளாச்சு. ரேஷன் கார்டுக்கு இருக்கிற மரியாதை கூட யூனிவர்ஸிடி டிகிரிக்கு இல்லே. ரேஷன் கார்டை அடமானமா வச்சுக் கிட்டு பத்து ரூபாய் கடன் தர்ரதுக்கு மார்வாரிங்க தயாராயிருக்காங்க. டிகிரியை நம்பி அஞ்சு பைசாக் கூடத் தர்ரத்துக்கு எவனும் எங்கேயும் தயாராயில்லே.”

“புதுசு புதுசாக் காலேஜு, புதுசு புதுசா யூனிவர்ஸிடி எல்லாம் தொடங்கிக்கிட்டே இருக்காங்க. ஏற்கெனவே படிச்சு வெளியிலே வந்தவனுக்கே வேலை இல்லே. கல்வியினோட பிரயோஜனம் சுருங்கிப் போச்சு. மெட்ராஸ்லே படிக்கிறவன் பம்பாயிலே போய் வேலை தேடலாம்னா முடியிலே. பம்பாயிலே படிச்சவன் இங்கே வந்து வேலை தேடலாம்னா ஒத்துக்கல்லே. இங்கே படிக்கிறவனுக்கு இந்தி கிடையாது. இங்கிலீஷும் சுமார். அங்கே படிக்கிறவனுக்கு தென்னிந்திய மொழிகளிலே பற்றாக்குறை. உலகளாவிய சர்வதேச குணமாக இருக்க வேண்டிய கல்வி, ஞானம். இதையெல்லாம்கூடப் புரொவின்ஷியலாகவும், ரீஜனலாக வும் ஆக்கிக் கெடுத்துட முடிஞ்ச எக்ஸ்பர்ட்டுங்க இந்தியா விலேதான் இருக்காங்கன்னு தெரியுது.”

“இந்தியாவிலே அது ஒண்ணுலே மட்டும் தானா எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க? அத்தனை கெட்ட காரியங்களுக்கும் போதுமான எக்ஸ்பர்ட்டுங்க நம்மகிட்ட இருக்காங்க. சாதியை ஒழிக்கிறேன் பேர்வழியேன்னு வந்து சாதிகளை வளர்க்கிறதிலே எக்ஸ்பர்ட்டுங்க இருக்காங்க. வேற்றுமைகளையும், ஏற்ற தாழ்வுகளையும் போக்கிச் சமதர்மத்தை நிலைநாட்டப் போறேன்னு வந்து நிமிஷத்துக்கொரு வேற்றுமையையும், ஏற்றத் தாழ்வையும் பயிரிட்டு வளர்த்துக்கிட்டிருக்கிற எக்ஸ்பர்ட்டுங்களும் இருக்காங்க. தேசத்தைவிடத் தங்களைப் பெரிதாக நினைத்துக் கொள்ளும் முரண்டு பிடித்த தனி மனிதர்கள் நிறைந்த நாடு இது. இங்கே இந்த நிலைமையிலே வேறென்ன எதிர்பார்க்க முடியும்? சீரழிய ஆரம்பித்திருக்கிற தேசத்தைத் திருத்தலாம், சீரழிந்து முடிந்துவிட்ட தேசத்தையும் திருத்தலாம். தொடர்ந்து இடைவிடாமல் சீரழிந்துகொண்டே இருக்கிற தேசத்தை யாராலேயும் திருத்த முடியாது. ஒன்றை ஒழுங்கு செய்ய ஆரம்பிப்பதற்குள் நூறு விஷயம் கெட்டுப்போய் விடுகிற தேசத்தில் எதையுமே ஒழுங்கு செய்ய முடியாது.”

“இங்கே அநாவசியமாக அரசியல் பேச வேண்டாம். வீண் வம்பு வரும். கொஞ்ச நேரத்திலே சிண்டிகேட் சிதம்பரநாதன் இங்கே வரப் போறாரு, அவரு காதிலே விழறாப்ல யூனிவர்ஸிடியைக் கிரிடிசைஸ் பண்ணிப் பேசறது நல்லா இருக்காது. ‘தயவு செய்து இங்கே யாரும் அரசியல் பேச வேண்டாம்’னு ஒரு பெரிய போர்டு எழுதச் சொல்லிப் பக்கத்துப் ‘பெயிண்ட்’டுக் கடையிலே குடுத்திருக்கேன். போர்டு வந்ததும் மாட்டப் போறேன்” என்று திடீரென்று ரகு கடுமையான குரலில் குறுக்கிட்டுக் கண்டித்தான்.

“ரொம்ப வேடிக்கைதாம்ப்பா! நீயே ஒரு கட்சியிலே இருக்கே. ஒரு தலைவரை வழிபடறே, அரசியல்லே அவர் சொல்றதை எல்லாம் அது சரியானாலும், தப்பானாலும் அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டுக் கடைப்பிடிக்கிறே. மத்தவங்க அரசியல் பேசறபோது மட்டும் ருத்திராட்சப் பூனை மாதிரி கண்ணை மூடிக்கிறதிலே என்ன பிரயோசனம்? விபசாரம் பண்றவங்க அதைப் பத்திப் பேசறத்துக்கோ கேட்கிறத்துக்கோ பயப்பட்டுக் கூசுவாங்கனு கேள்விப்பட்டிருக்கேன். அதுமாதிரித்தான் இருக்கு இதுவும். பார்பர் ஷாப்பிலும், ஹோட்டலிலும், வெற்றிலை பாக்குக் கடையிலும், லைப்ரரிகளிலும், ‘இங்கே அரசியல் பேசவேண்டாம்’னு போர்டு மாட்டி வைக்கிற அளவுக்கு நம்ம நாட்டு அரசியல் அநாரோக்கியமா இருக்குன்னு தெரியுது. அரசியலைப் பற்றிச் சராசரி இந்தியங்க ரெண்டு பேர் பேசிக்க ஆரம்பிச்சா அது அடிதடியிலேதான் முடியும்னு தெரியுது. பயப்படாதே. எனக்கும் இவருக்கும் அடிதடி வராது. உன்னோட நாற்காலி, மேஜைகளை நாங்க உடைச்சிட மாட்டோம்” - என்றான் சுதர்சனன். ரகுவின் முகத்தில் சிடுசிடுப்பு அதிகமாகி எள்ளும் கொள்ளும் வெடித்தது. சுதர்சனன் தன்னுடைய பேச்சுப் போக்கில் சொல்லியிருந்த ஓர் உதாரணம் ரகுவைக் கோபம் கொள்ளச் செய்திருந்தது. நட்பு, பழக்கம், மரியாதை எல்லாம் மறந்து போய்ச் சுதர்சனனைப் பொறுத்துக் கொள்ள முடியாத எல்லைக்கு ரகுவின் ஆத்திரம் முற்றியிருந்தது.

‘பண்றது எல்லாம் விபச்சாரம் - ஆனால் அதைப் பத்திப் பேசறத்துக்கோ, கேட்கிறத்துக்கோ மட்டும் பயம், கூச்சம்’-என்று அரசியல் பேசுவதற்கும் கேட்பதற்கும் கூசும் சராசரி இந்திய மத்தியதர வர்க்கத்தின் ருத்திராட்சப் பூனை மனப்பான்மையைச் சுதர்சனன் கிண்டல் செய்ததைத் தனக்கு மட்டுமென்று எடுத்துக் கொண்டு விட்டான் ரகு, தான் ஓர் அரசியல் கட்சியில் இருப்பதையும், ஒரு தலைவரைக் கடைப்பிடித்து நடப்பதையும் படுகேவலமான முறையில் கிண்டல் செய்யவே சுதர்சனன் அந்தக் கடுமையான விமர்சன வாக்கியங்களைக் கூறியிருப்பதாக எண்ணிக்க கொண்ட ரகு, திடீரென்று வெடித்துச் சீறினான்.

“நமக்குப் பிடிச்சா ஒரு இடத்திலே இருக்கணும், இல்லாட்டி மரியாதையா வெளியேறிப் போயிடணும். பிடிக்காத இடத்திலே முளையடிச்சாப்பில உட்கார்ந்துக் கிட்டு வேலை குடுத்தவங்களைத் திட்டிப் பேசிக்கிட்டி ருக்கிறது ஒழுங்கும் இல்லை. நியாயமும் இல்லை.”

சுதர்சனனை நேரே அம்புகள் போல் வந்து தாக்கினஇந்தச் சொற்கள். முதலில் தேடி வந்து பேசிக் கொண்டிருந்த இளைஞருக்குச் சொல்லி விடை கொடுத்து அனுப்பிவிட்டு அப்புறம் ரகுவின் பக்கமாகத் திரும்பினான் அவன்.

“நாட்டிலே எல்லாரும் எல்லா முனையிலும் எல்லா நிமிஷத்திலும் அரசியல் பண்ணிக்கிட்டு, அரசியலால் பாதிக்கப்பட்டு, அரசியலாக இருந்துக்கிட்டே ஏதோ அதைப் பத்திப் பேசறதும், கேக்கறதும் மட்டுமே பாவம்னு அடிக்கடி சொல்லிக்கிறாங்களே அதைக் கிண்டல் பண்ணித் தான் நான் பேசினேன், அவுசாரித்தனம்னு வந்தப்புறம் எதையோ முடிக்கிட்டு அவுசாரித்தனம் பண்றதும்பாங்களே அது மாதிரியில்ல இது இருக்குது?”

“இந்த வார்த்தைங்கள்ளாமே எனக்குப் பிடிக்கலே சுதர்சனன். உனக்கும் நமக்கும் ஒத்துவராது போல இருக்கு. நானும் பொறுத்துப் பொறுத்து பார்த்தேன். முடியலே. நாம மரியாதையா ஒருத்தரை ஒருத்தர் விட்டுப் பிரிஞ்சுடறதுதான் ரெண்டு பேருக்குமே நல்லதுன்னு படறது.”

‘சரிதான் வெளியே போடா’ என்று சொல்ல வேண்டியதைக் கொஞ்சம் மரியாதையாக ரகு சொல்லிக் கொண்டிருப்பதாகச் சுதர்சனனுக்குத் தோன்றியது. மேலும் விவாதம் நீடிக்கும் பட்சத்தில் இந்த ரகுவுக்கே இன்னும் ஆத்திரம் அதிகமாகி ‘வெளியே போடா நாயே’ என்று கூடச் சீறிவிழலாம். அது நேருவதற்குள் தான் நாகரிகமாக முந்திக் கொண்டு ஒதுங்கி விடுவது நல்லதென்று சுதர்சனனுக்குத் தோன்றவே அவன் பெட்டி படுக்கைகளை எடுத்து மூட்டைக் கட்டத் தொடங்கினான்.

“இந்தா உனக்குச் சேர வேண்டிய பாக்கிப் பணம்” என்று ரகு நீட்டிய ரூபாய் நோட்டுக்களை எண்ணிப் பார்க்காமலே வாங்கிக் கொண்டான் சுதர்சனன். நடந்தவற்றால் ஒரு சிறிதும் கழிவிரக்கமோ வருத்தமோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ அவன் மனத்தில் இல்லை. ஒன்றுமே நடந்து விடாததுபோல் சகஜமாகத் தெருவில் இறங்கிப் பெட்டிப் படுக்கையை ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் வைத்தான் சுதர்சனன்.

அத்தியாயம் - 28

சுதர்சனன் ஏறிக்கொண்ட சைக்கிள் ரிக்ஷா பைகிராப்ட்ஸ் சாலையில் திரும்பி ஓடிப் பெரிய தெரு என்ற குறுகலான சிறிய தெருவுக்குள் நிழைந்தபோது அந்தத் தெருவில் வெள்ளம் போல் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. காய்கறி, பழவண்டிகளின் நெரிசலுக்கும் குறைவில்லை. சுதர்சனன் ‘அழகு லாட்ஜ் - ரூம்கள் மாத வாடகைக்கு விடப்படும்’ - என்ற புது போர்டைப் பார்த்து ரிக்ஷாவை நிறுத்தச் சொன்னான். புதிதாக ஒரு வீட்டை வாங்கி இடித்து மூன்று மாடிக் கட்டிடமாகக் கட்டி லாட்ஜ் ஆக்கியிருந்தார்கள். பொதுவாகத் திருவல்லிக்கேணியில் பெல்ஸ் ரோடு, பெரிய தெரு முதலிய சுறுசுறுப்பான பகுதிகளில் இப்படி ஒரு போர்டைக் காண முடிவதே அபூர்வம்தான். ஓர் அறையோ, அல்லது அறையில் ஒரு படுக்கையோ காலியாக இருந்தால்கூட உடனே யாராவது தேடி வந்துவிடுவார்கள். ஒரு வீடு காலியாகிறது அல்லது அறையிலிருப்பவர் ஒழித்துக்கொண்டு போகிறார் என்று தகவல் தெரிந்தவுடனேயே பத்துப் பேர் அட்வான்ஸோடு தயாராக வந்து காத்துக்கொண்டிருக்கிற பகுதி அது. அங்கே இடம் கிடைப்பது அவ்வளவு சிரமம்.

முதலில் உள்ளே போய் விசாரித்துக் கொண்டு அப்புறம் அவசியமானால் வந்து பெட்டி படுக்கையை எடுத்துக் கொள்ளலாம் என்று உள்ளே போய் விசாரித்த சுதர்சனனிடம் பதிலுக்கு ஒரு டஜன் கேள்விகளைக் கேட்டார் லாட்ஜ்காரர். ஒரு டஜன் கேள்விகளுக்கும் பொறுமையாக மறுமொழி கூறிய பின் மூன்றாவது மாடியில் ஓர் அறையில் ஒரு படுக்கை காலி இருப்பதாகவும் - மாத வாடகை ரூ. ஐம்பது என்றும் - மூன்று மாத வாடகை அட்வான்ஸாக தந்துவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திருவல்லிக்கேணியின் வசதிகள் நகரின் பிற பகுதிகளில் இல்லை என்பதைச் சுதர்சனன் நன்றாக உணர்ந்திருந்தான். கடற்கரை நடந்து போய்த் திரும்புகிற தொலைவில் அருகே இருந்தது. தனிக் கட்டைகளான திருமணமாகாதவர்கள் சாப்பிடுவதற்கு வசதியான ‘மெஸ்’கள் திருவல்லிக்கேணியில் நிரம்ப இருந்தன. நகரின் எல்லாப் பகுதிக்கும் போய்வர பஸ் வசதிகள் அருகருகே இருந்தன.

நல்லவேளையாக அவனிடம் அப்போது நூற்றைம்பது ரூபாய் பணம் கைவசம் இருந்தது. மறுபேச்சுப் பேசாமல் நூற்றைம்பது ரூபாயை எடுத்து லாட்ஜ்காரரிடம் நீட்டினான் அவன்.

“எதுக்கும் உங்களுக்குப் பிடிக்கறதா இல்லியான்னு அறையைப் போய்ப் பார்த்துட்டு வந்துடுங்களேன்.”

“அவசியமில்லை. நீங்க சொன்னாச் சரிதான்.”

திரும்பத் தெருவுக்கு வந்து ரிக்ஷாக்காரனுக்குப் பணம் கொடுத்து அனுப்பிவிட்டுப் பெட்டி படுக்கையோடு அழகு லாட்ஜுக்குள் நுழைந்தான் சுதர்சனன். அழகு லாட்ஜில், லிஃப்ட் கிடையாது. மூன்றாவது மாடிக்குப் படி ஏறி நடந்துதான் போக வேண்டியிருந்தது. அறையின் பொதுவான பூட்டுக்கு மொத்தம் மூன்று சாவிகள் உண்டு என்றும், மற்ற இரண்டு சாவிகள் மற்றவர்களிடம் இருக்கின்றன என்றும் சொல்லி மூன்றாவது சாவியை அவனிடம் கொடுத்திருந்தார் லாட்ஜ் உரிமையாளர். பெட்டி படுக்கையோடு மூச்சு இரைக்க இரைக்கப் படியேறினான் அவன். அறை திறந்தே இருந்தது. ஒரு படுக்கையில் தடிமன் தடிமனான புத்தகங்களுக்கு இடையே அரும்பு மீசை இளைஞர் ஒருவர் உட்கார்ந்திருந்தார். மற்றொரு படுக்கையில் ஒரே மருந்துப் புட்டிகள், அட்டை டப்பாக்கள், லேபிள்கள், அச்சடித்த, பாம்ப்லெட்டுகள் மயமாக இருந்தன. மூன்றாவது படுக்கை காலியாயிருந்தது. சுதர்சனன் அறையிலிருந்த இளைஞருக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, மூன்றாவது அறைவாசியாக வந்திருப்பதாய்த் தெரிவித்தவுடன் காலியாயிருந்த படுக்கையைச் சுட்டிக் காட்டினார் இளைஞர். சுதர்சனன் விசாரித்தான்: “நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க? என்ன செய்யிறீங்க? நான் தெரிஞ்சுக்கலாமா? நான் என்னைப்பத்தி உங்களுக்குச் சொல்லி யாச்சு, இப்போ நீங்க தான் உங்களைப்பத்தி எனக்குச் சொல்லணும்.”

“யான் ஆராய்ச்சி மாணவன். தமிழ் முதுகலை முதல் வகுப்பில் தேறியபின் இப்போழ்துப் பண்டாரகர்பட்டம் பெறுவான் வேண்டிப் பல்கலைக் கழகத்தில் பதிவு செய்துள்ளேன். பெயர் ஆறை அண்ணாதாசன். ஊர் ஆற்றூர்.”

எதிரே தெரிந்த கண், முகம், மூக்கு, வாய், காது. முதலிய மனித உறுப்புக்கள் எல்லாமே கரைந்துபோய், ஒரு புத்தகம் பெரிய உருப்பெற்றுத் திடீரென்று எதிரே வந்து நின்று வாய் திறந்து பேசினாற் போலிருந்தது. அவர் ஒரு தனித் தமிழ்வாதியாயிருக்க வேண்டும் என்று சுதர்சனனுக்குப் புரிந்தது.

“இந்தப் படுக்கையிலே இருக்கறது யாருங்க?”

“அவர் ஒரு மருந்தாற்றுப் படுத்துநர்...”

“அப்படீன்னா? என்னது? புரியலீங்களே?”

“ஆங்கிலத்தில் ‘மெடிகல் ரெப்ரஸெண்டிடிவ்’ என்பார்கள். நீங்கள் ஒரு தமிழாசிரியர் என்று உங்களை அறிமுகப்படுத்திக் கொண்டீர்கள். இருந்தும் இவை எல்லாம் உங்களுக்குப் புரியாதது வியப்புக்குரியது.”

“நான் படிச்ச தமிழிலே இதெல்லாம் இல்லியே...? புதுசாப் பலபேர் பலவிதமா இப்பல்லாம் அவிச்சுக் கொட்ற வார்த்தைங்க ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமா இருக்குதே?”

“எல்லாம் தமிழிலேயே இயலவேண்டும்.”

“நல்லதுங்க... உங்க பேர்லே தாசன்னு எப்பிடி வரவிட் டீங்க?”

“ஏன்? அதிலென்ன பிழை?”

“அது தமிழ் வார்த்தை இல்லியே? தெரியாதா உங்க ளுக்கு?”

“யார் சொன்னார்கள்? அது சாலவும் தமிழ் வார்த் தையே” - சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. எம்.ஏ. முதல் வகுப்பில் தேறிவிட்டு பி.எச்.டி-க்கு ஆராய்ச்சி செய்யும் ஒருத்தருக்கு, எது தமிழ் வார்த்தை, எது தமிழ் வார்த்தையில்லை என்பது கூடச் சரியாகத் தெரியவில்லையே என்பது வேடிக்கையாயிருந்ததுடன் தாங்க முடியாத வேதனையையும் அளித்தது.

“ஒரு மொழி தமிழா, தமிழில்லையான்னு கண்டு பிடிக்கத் தமிழ் மட்டுமாவது நல்லாத் தெரிஞ்சிருக்கணும். அல்லது வேறே சில மொழிகளும் கொஞ்சமாவது கூடத் தெரிஞ்சிருக்கணும். இரண்டுமே சரியாத் தெரியாமே...?”

சுதர்சனன் கூறியது ஆறை அண்ணாதாசனுக்கு எரிச்சல் ஊட்டியது போலும். அவனே, பேச்சை உடனே முடித்து விட்டான்; “நீங்கள் இப்போதுதான் வந்திருக்கிறீர்கள். முதலில் உங்கள் பொருள்களை நிரல்பட வைத்துக் கொண்டு அறையில் அமைக. பின்பு நாம் ஓய்வாக உரையாடலாம்” - என்று அவனிடமிருந்து சுதர்சனனுக்குப் பதில் வந்தது.

“நம்ம ரூம் மேட் - அதான் இந்த மெடிகல் ரெப்ரஸண்டிடிவ் ஊர்லே இல்லீங்களா?”

“மருந்தாற்றுப்படுத்துநர் வெளியூர் சென்றுள்ளார். இனி மறுபடியும் அவரைக் காணப் பத்து நாட்கள் வரை ஆகலாம்.”

“மெடிகல் ‘ரெப்ரெலெண்டிடிவ்’ங்கிறத்துக்கு ‘மருந்தாற்றுப்படுத்துநர்’ங்கிறது அவ்வளவு சரியான மொழி பெயர்ப்பாப் படலீங்களே...?”

“யானறிந்த வரையில் அதுவே பொருத்தமான தமிழாக்கம். எம் வழிகாட்டி பண்டாரகர் படுமலையூர்க் கடுமழைக் கண்ணனாரே ஒப்புக் கொண்ட மொழிபெயர்ப்பு அது.”

“இப்பிடி நீங்க ஒரே மொழிபெயர்ப்பாப் பண்ணிக் கிட்டிருந்தீங்கன்னா அப்புறம் மொழி இருக்காது. மொழி பெயர்ப்பு மட்டுந்தான் மீதமிருக்கும்.”

“தமிழுக்காக உயிரையும் விடுவேன்.”

“உயிர் வாழ்ந்தால் தானே தமிழைப் படிக்கலாம். போற்றலாம், பாதுகாக்கலாம். உயிரை விட்டுப்போட்டா அப்புறம் இதெல்லாம் யார் செய்யிறது?”

“சூளுரையைக் குறை கூறாதீர்...”

“சும்மா எடுத்ததுக் கெல்லாம் சூளுரை கூறிக்கிட்டிருந்தா அப்புறம் சூளுரைக்கு மரியாதை எதுவும் இருக்காது. என்னையே எடுத்துக்குங்க தம்பி படிக்கிற வயசிலே, மரியாதை இயக்கத்திலே தீவிரமா இருந்தவன் நான். நாளாக நாளாகத்தான். ‘விஷயங்களை உணர்ச்சி பூர்வமா அணுகியே நமக்குள்ளார முதுகு சொரிஞ்சிக்கிறதிலே பிரயோசனமில்லே. எதையும் அறிவு பூர்வமா - விஞ்ஞான ரீதியா அணுகணும்’னு எனக்குப் புரிஞ்சுது. ரொம்ப அதிகமான கிணத்துத் தவளை மனப்பான்மை நம்மை வளர்க்கவே வளர்க்காது.”

“விஞ்ஞானம் என்று கூறாதீர். ‘மெய்யறிவு’ எனக் கூறுக.”

“என்னத்துக்காகத் தம்பி? இங்கே திரியிற சாமியாருங்களும் தங்களுதை மெய்யறிவுங்கறாங்க. விஞ்ஞானிகளும் மெய்யறிவுங்கிறாங்க. எல்லாத்தையும் ‘மெய்யறிவுன்னே’ சொன்னா வீண் குழப்பம் தான் மிஞ்சும். விஞ்ஞானம் வேறே, மெய்யறிவு வேறே.”

“பண்டாரகர் படுமலையூர்க் கடுமழைக் கண்ணனாரின் ‘தனித் தமிழாற்றுப்படைக் கையேடு’ துணையிருந்தால் எக்குழப்பமும் யாண்டும் எஞ்ஞான்றும் வாராது ஐயா.”

தீப்பெட்டிப் படம் சேர்க்கும் சிறுவனைப் போல், சும்மா வெறும் வார்த்தைகளைக் காமுறும் ஆரம்ப நிலையிலிருந்துகூட விடுபடாத இவனைப் போன்றவர்கள் எம்.ஏ. முதல் வகுப்பில் தேறியிருக்கிறார்கள் என்று எண்ணும் போது தமிழ் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றியே சுதர்சனனுக்குக் கவலையாயிருந்தது.

“உங்க பி.எச்.டி. தீஸிஸுக்கு என்ன ஸ்ப்ஜெட் எடுத்துக்கிட்டிருக்கீங்க தம்பீ...”

“தமிழ் இலக்கியத்தில் காக்கை.”

“வெறும் காக்கைதானா அல்லது ‘காக்கைபிடித்தல்' கூட உண்டா”

சுதர்சனனின் குத்தல் கூட அண்ணாதாசனுக்கு உடனே புரிந்து உறைக்கவில்லை. ரோஷம் வரவில்லை.

“உலகில் எந்த மொழியும் எந்த இலக்கியமும், எந்த இலக்கிய ஆசிரியனும் காணாத அளவு காக்கையைக் கண்டு போற்றியது தமிழ் இலக்கியமே.”

“உலகத்திலே எத்தினி மொழியை நீங்க படிச்சிருக்கீங்க? எத்தினி இலக்கியத்தை நீங்க பார்த்திருக்கீங்க? எத்தினி இலக்கிய ஆசிரியனை நீங்க புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க?”

“என்ன இது? நீங்கள் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராயிருந்தும் இனவுணர்ச்சி கூட இல்லாது என்னுடன் இப்படிக் கருத்து வேறுபாடு கொள்கிறீர்களே?” என்று உடனே தன்னுடைய பேச்சை வேறுவிதமாகத் திருப்பினான் ஆறை அண்ணாதாசன்.

அத்தியாயம் - 29

தன்னுடைய வாழ்வின் முதிராப் பருவத்து இளமையில் தான் எப்போதோ கொண்டிருந்த ஒரு சார்பை வைத்து தன்னை நிரந்தரமாக இப்படித்தான் இருக்க வேண்டும், இருக்க முடியும் என்று முடிவு செய்துவிட்ட அந்த இளைஞனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது சுதர்சனனுக்கு. மாறுதலைப் பற்றியே அவனுக்குப் புரியாது போல இருந்தது.

வளர்ச்சியும் - மாறுதலும் எவனுடைய வாழ்வில் தென் பட்டாலும் அதை ஒப்புக் கொள்ளவோ புரிந்து கொள்ளவோ முடியாதவனாகத் தோன்றினான் ஆறை அண்ணா தாசன்.

“இனவுணர்ச்சிங்கிறதை நீங்க எப்பிடிப் புரிஞ்சுக்கிட்டி ருக்கிங்கன்னு எனக்குத் தெரியாது தம்பீ! இப்பல்லாம் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அந்த வார்த்தையைப் புரிஞ்சுக்கிறாங்க! வேறே சிலபேருங்க ‘நம்ம இயக்கத்தைச் சேர்ந்த அத்தினிபேரும் அதை ஒரேவிதமாகத்தான் புரிஞ்சுக்க முடியும்’-னு நம்பறாங்க. திருக்குறளில் ஒரு குறள், பொருட்பால்லே, ‘அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’னு தொடங்குது. அதிலே ‘தங்கணத்தார்’னு ஒரு வார்த்தை வருது. அதுக்குத் ‘தன் இனம்’னு பொருள் கொண்டால் என்ன அர்த்தமோ அந்த அர்த்தம்தான் சரியான இனவுணர்ச்சிக்கு இலக்கணம்னு சொல்லுவேன் நான்.”

இதைக் கேட்டு ஆறை அண்ணாதாசன் சந்தேகக் கண்களோடு சுதர்சனனை ஏறிட்டுப் பார்த்தான். தன் அநுமானத்திற்கு மேம்பட்டும் தன் கணிப்பிற்கு விலகியும் உள்ள மனிதர்களைப் பற்றி அவ்வப்போது இப்படிச் சந்தேகப்படுவதுதான் அவன் வழக்கம்.

மூன்று பேரும் மூன்று வேறு துருவங்களாக இருக்கும் நிலையில் ஒரே அறையில் சேர்ந்து வசிப்பது எப்படி என்று மலைத்தான் ஆறை அண்ணாதாசன். அதே சமயத்தில் சுதர்சனன் வேறு விதமாக நினைத்தான். மாறுபாடும் வேறுபாடும் உள்ளவர்களுக்கு நடுவே கலகலப்பாக உயிரோட்டத்தோடு வாழ முடியுமென்று சுதர்சனனுக்குத் தோன்றியது.

அந்த மெடிகல் ரெப்ரஸண்டிடிவ்வின் படுக்கைக்கு மேல் சிறிதாக முருகர், விநாயகர், லட்சுமி, சரஸ்வதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றில் சூட்டப்பட்டிருந்த பூச்சரங்கள் வாடிச் சருகாகி இருந்தன. படங்களில் குங்குமமும் சந்தனமும் குழம்பிய பொட்டுக்கள் இடப்பட்டு ஊதுபத்தி சொருகிச் சொருகிக் கருகிய கரிக்கோடுகளும், புகை மங்கலும் படிந்திருந்தன.

ஆறை அண்ணாதாசனின் படுக்கைக்கு மேலே அவன் யாருக்குத் தாசனோ அவர் படமும், அதேபோல் தலைவர்கள் வேறு சிலருடைய படமும் மாட்டப்பட்டு அவற்றிலும் சூட்டப்பட்டிருந்த பூச்சரங்கள் வாடியிருந்தன.

“என்ன? பார்க்கிறீர்கள்? உங்கள் கட்டிலுக்கு மேலே நீங்கள் விரும்பும் படத்தை மாட்டிக் கொள்ளலாம். அதற்கு இடம் இருக்கிறது.”

“அவசியமில்லை. தீப்பெட்டிப் படம் சேர்க்கும் குழந்தை வயசிலேருந்து மாறி வளர்ந்து நான் வெகு தூரம் நடந்து வந்து முதிர்ந்து விட்டேன். இனிமேல் நான் படங்கள் வாங்கிச் சுவரில் மாட்டி மாலை போட்டு மகிழறதுங்கிறது முடியாத காரியம்.”

“அப்படியானால் நான் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறேன் என்கிறீர்களா? இதற்கு என்னதான் பொருள்?”

“நான் யாரையும் எதுவும் சொல்லலே! என்னிடம் மாட்டுவதற்குப் படங்கள் எதுவும் இல்லைன்னுதான் சொன்னேன்.”

ஆறை அண்ணாதாசன் மறுபடியும் சுதர்சனனைச் சந்தேகக் கண்களோடு தான் பார்த்தான். சுதர்சனனுக்கோ உள்ளூறச் சிரிப்பாயிருந்தது. பரம ஆஸ்தீகன் செய்யக்கூடிய அதே பூஜை புனஸ்காரம் வழிபாடுகளை வேறு விதமான முறையில் வேறுவிதமான படங்களுக்குச் செய்து வழிபட்டுக் கொண்டே தன்னை ஆஸ்திகனிலிருந்து வேறுபட்டவனாக நினைத்துக் கொள்ளும் இரண்டுங்கெட்டான் நாஸ்திகர்களை நினைத்தால் அவனுக்கு வேடிக்கையாயிருந்தது. முழுமையான ஆஸ்திகர்களுமில்லாமல் முழுமையான நாஸ்திகர்களும் இல்லாமல் தேசம் முழுவதுமே அரைகுறைகளாகவோ, இரண்டுங்கெட்டான்களாகவோ எல்லா வகையிலும், நிரம்பியிருப்பதாகவே நினைக்கத் தோன்றியது. அவன் செய்வது தப்பு என்று உரத்தக் குரலில் கூப்பாடு போட்டு விமர்சித்துக் கொண்டே தான் செய்யும் தப்புக்களைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் தப்புச் செய்து கொண்டிருக்கிறவர்கள்தான் தேசத்தில் அதிகமோ என்று கவலையாயிருந்தது அவனுக்கு.

“காபி, சிற்றுண்டி அறைக்கு வாங்கிக் கொண்டு வந்து தர வேண்டுமானால் பையன்களுக்கு கமிஷன் அதாவது கழிவுத் தொகை கொடுக்க வேண்டும்” என்று வேறு ஒரு விவரத்தைத் தொடங்கினான் ஆறை அண்ணாதாசன்.

“சொல்லித்தான் தெரியணுமா இது? மெட்ராஸ் ஊரே மொத்தத்திலே ஒரு கமிஷன் மண்டி மாதிரின்னுதான் நான் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். கமிஷன் தராமே இங்கே யாருக்கும் எதுவும் நடக்காதுன்னு, எனக்கு நல்லாத் தெரியும் தம்பீ! பொதுவா எனக்கு ‘ரூம் செர்விஸே’ தேவைப்படாது. நானே கீழே இறங்கிப் போயி எல்லாம் பார்த்துக்குவேன். தன் கையே தனக்கு உதவிங்கிறதிலே எனக்கு ரொம்ப நம்பிக்கை உண்டு.

“நீங்கள் பையன்களுக்குச் சில்லறை கொடுக்காவிட்டால் அவசர ஆத்திர நேரங்களில் கூட உங்களுக்கு உதவ முன் வரமாட்டார்கள். ஏனென்று கேட்காமல் கைவிட்டு விடுவார்கள்.”

“பரவாயில்லை தம்பீ! நான் சமாளித்துக் கொள்வேன். எனக்கு எடுபிடி ஆள் யாரும் அவசியமில்லை.”

“தெருக்கோடியில் முனியாண்டி உணவு விடுதி உள்ளது. -இப்பால் உடுப்பி உணவகமும் உண்டு. கடற்கரை செல்லும் வழியில் முரளி உணவகமும் இருக்கிறது. திருவல்லிக்கேணியில் உணவகங்களுக்கு ஒன்றும் குறை வில்லை...”

“இங்கே எனக்கு எல்லா இடமும் நல்லாத் தெரியும். நானே பக்கத்திலே பெல்ஸ் ரோடிலேதான் இதுவரை இருந்தேன். ஊருக்குப் புதுசு இல்லே! என்னைப்பத்தி நீங்க அதிகம் கவலைப்பட வேண்டாம். திருவல்லிக்கேணி எனக்குப் பழகின எடம்தான்.”

“அவ்வாறாயின் நன்று! நீங்களே யாவும் நன்கு அறி. வீர்கள்.”

இப்படிப் புத்தகம் வாய் திறந்து பேசுவது போல் தொடர்ந்து உயிரோட்டமில்லாமல் அவனால் எவ்வாறு முனை முறியாமல் பேச முடிகிறதென்று சுதர்சனனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பிரிண்டிங் மிஷின் அச்சடிப்பதை மறந்து தானே திடீரென்று தன்மேல் சார்த்தப்பட்டிருப்பதை எல்லாம் அப்படியே வாய் திறந்து கக்கிவிட்டுப் பேசினால், எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அவன் பேச்சு. சிறிது நேரத்தில் ஆறை அண்ணாதாசன் அவனைத் தேடிவந்த யாரோ ஒர் இளைஞனுடன் புறப்பட்டு வெளியே போய் விட்டான். எதிர் அறையிலிருந்து பாகவதர் மாதிரித் தலையலங்காரத்துடன் ஒருவர் வந்து எட்டிப் பார்த்தார்.

“யாரு? என்ன வேணும்?”

“ஒண்ணுமில்லே! நீங்க இந்த ரூமுக்குப் புதுசா வந்திருக்கீங்க போல்ருக்கு. என் பேர் மதன்குமார். தொழில் நாடகக்கலை. நாடகம், ஸ்டேஜ் டைரக்ஷன் இதிலே எல்லாம்தான் போது போகுது. சினிமா டைரக்டர் ஆகலாம்கிற ஆசையிலே மெட்ராஸ் வந்து பதினேழு வருஷம் ஆகுது. இன்னும் அந்த ஆசை ஈடேறலே... நாடகத்திலே தான் காலந்தள்ள வேண்டியிருக்கு...”

“குடும்பம்...?”

“நான் பேச்சலர்... குடும்பம்னு எதுவுமில்லே. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை எல்லாம் நாமக்கல்லே இருக்காங்க... அதான் சொந்த ஊர். நிலையான வருமானமில்லாத இந்தத் தொழிலை நம்பி நான் ஒருத்தி கழுத்திலே தாலி கட்ட முடியும்னு தோணலை. சாட்சாத் சரஸ்வதி கழுத்திலே கட்டிவிட்ட தாலிக்கே இத்தனை சிரமப்பட வேண்டியிருக்கே?”

“யாரு? சரஸ்வதியா?...நீங்களா?”

இதைக் கேட்டு மதன் குமாரே சிரித்துவிட்டான்.

“சாருக்கு என்ன பிஸினஸோ?”

“இப்போதைக்கு வேற வேலை தேடறதுதான் பிஸினஸ், முன்னாடி இருந்தது. தமிழ் வாத்தியார் வேலை. அப்புறம் இங்கேதான் ஒரு டூட்டோரியல் காலேஜிலே தமிழ் சொல்லிக் குடுத்துக்கிட்டிருந்தேன். அதை நடத்திக்கிட்டிருக்கிறவருக்கும் எனக்கும் ஒத்து வரலே. வெளியேறிட்டேன்.”

“அப்டீன்னா நம்ப மதன் ஆர்ட்ஸ் அகாடெமிக்கு ஒரு நல்ல ஹிஸ்டாரிகல் டிராமா எழுதுங்களேன். உடனே அரங்கேற்றி ஜமாய்ச்சுடலாம்...”

“உங்க ஊரு நாமக்கல்ங்கிறீங்க...பேரைப் பார்த்தா யாரோ யூ.பி. - பஞ்சாப்காரன் பேரு மாதிரியில்லே இருக்கு...”

“அதனாலே என்ன? இந்தக் கலை உலகம் இருக்கே இதுக்குக் ‘குமார்’னு முடியிற மாதிரிப் பேரு ரொம்ப ராசின்னு சொல்லுவாங்க.

“அப்படிப் பேர் வச்சுக்கிட்டும் கூட உங்களுக்கு ஒண்ணுமே ராசியா ஆகலேன்னு தோணுதே?”

“நானே இந்தப் பேரை வச்சுக்கிட்டு இப்போ மூணு மாசம்தானே ஆகுது?”

“அதுக்கு முன்னாடி?”

“‘கூற்றுவன்’னு வச்சுகிட்டிருந்தேன். ஒரு பத்திரிகைக்காரன் என் நாடகத்துக்கு விமர்சனம் எழுதறப்ப, டைரக்டர் பேர் கூற்றுவன் என்று இருப்பதாலோ என்னவோ நாடகத்திலே எல்லாமே கூண்டோடு மாண்டுபோய் விட்டது. துணிந்து நாடகமே செத்துப் போய்விட்டது என்று தான் கூறவேண்டும். கொல்வதுதானே கூற்றுவனின் தொழில்’னு எழுதிட்டான். அதுக்குப் பின்னாடி தான் ‘மதன் குமார்’னு மாத்தி வெச்சுக் கிட்டேன்.”

சுதர்சனன் சிரித்து ஓயச் சில விநாடிகள் பிடித்தன. மதன் குமாரும் சேர்ந்து சிரித்தான். அந்த அழகு லாட்ஜ் முழுவதுமே ஒரு சிறிய உலகமாக இருக்கும் போலிருந்தது. விதம் விதமான மனிதர்கள், விதம் விதமான வாழ்க்கை லட்சியங்கள், விதம் விதமான போக்குகள், எல்லாம் அதற்குள்ளேயே இருந்தன. சினிமா டைரக்டராகும் - லட்சியத்தில் பாதி வழிவரை ஓடி வந்து மேலே ஓட வழியின்றி நாடக டைரக்டராகவே இருக்கும் மதன் குமார், படங்களை மாட்டி சிரத்தையாக பூஜை செய்யும் மெடிகல் ரெப்ரஸெண்டிடிவ், தனித் தமிழிலேயே பேசிச் சிரமப்படும் ஆறை அண்ணாதாசன், இன்னும் பல என்.ஜி.ஒக்கள், கம்பெனி கிளார்க்குகள், ஆசிரியர்கள் எல்லாரும் அந்த லாட்ஜின் அறைகள் என்ற சின்னஞ்சிறு கூண்டுகளில் இருப்பதாகப் பட்டது. புறாக் கூண்டிலாவது ஒரு கூண்டுக்குள் ஒரே ஒரு புறா இருக்கிற சுதந்திரமும், சுகமும், எப்போதாவது கிடைத்து விடலாம். ஆனால் இந்தத் திருவல்லிக்கேணி லாட்ஜுகள் என்ற சிமெண்டுப் புறாக் கூண்டிகளில் ஒரே அறையில் எத்தனை பேர் அடைந்து கிடக்க வேண்டியிருக்கிறது? கலியாணமாகிக் குடும்பம் மனைவி என்று வந்தால்தான் இந்தப் புறாக் கூண்டிலிருந்து விடுதலையாகிக் கொஞ்சம் பெரிய புறாக் கூண்டுக்குப் போகமுடியும். ஒண்டுக் குடித்தன வாசமும் ஒரு புறாக்கூண்டு தானே? வெகு சிலர் இந்த முதற் புறாக் கூண்டிலேயே வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிற அளவு இங்கேயே விரக்தியடைந்து விடுவதும் தேங்கி விடுவதும் உண்டென்று நிதரிசனமாகத் தெரிந்தது.

எதிலும் நிலைக்கமுடியாமல் யாரோடும் ஒட்டிக் கொள்ள முடியாமல் தானே விரக்தியடைந்து விட்டோமோ என்று கூட அவனுக்கு ஒரு கணம் தோன்றியது. எதிர்நீச்சல் போடுகிறவனுக்கு வாழ்க்கை ஒரு போதும் அலுப்பதில்லை. ஆற்றோடு போகிறவனுக்குத் தான் சொந்தக் கை கால்களை அசைக்கவும் அவசியமில்லாமல் நீர்ப் போக்கின் சக்தியே இழுத்துச் சென்று விடுகிறது. எதிர்நீச்சல்காரன் அப்படி இல்லை. ஒவ்வொரு விநாடியும் எதிர்த்து ஊடறுத்துக் கவனமாக முன்னேற வேண்டிய அவசியம் அவனுக்கு உண்டு. ஒரு சில வேளைகளில் யார் எதிர்நீச்சலிடுகிறானோ அவனுக்கே தான் செய்வது சரியானதுதானா என்று தோன்றலாம். ஆனால் அடுத்த கணமே அந்த அலுப்பு மறைந்துவிடும். பள்ளிக்கூட வேலையை விட்டு விட்டுச் சென்னைக்குப் புறப்பட்டு வந்தது, ரகுவின் தனிப் பயிற்சிக் கல்லூரியில் வேலைக்கு அண்டியது, அதிலும் ஒட்டாமல் வெளியேறியது எல்லாம் எதிர்நீச்சலாகவே தோன்றின.

“என்ன சார்? பேசிக்கிட்டிருக்கறப்பவே கபால்னு நீங்களா உங்களுக்குள்ளாரவே சிந்தனையிலே மூழ்கிட்டீங்க...” மதன்குமார் கேட்டான்.

“ஒண்ணுமில்லே! நாடகம் எழுதணும்னீங்களே! அதைப் பத்தித்தான் யோசிச்சேன். உங்களுக்கு நாடகம் எழுதறதுக்கு என்னையும் விடப் பொருத்தமான ஆள் இங்கேயே இருக்காருங்கறதை நீங்க மறந்துட்டாப்பல இருக்கே?...”

“யாரு அது? எனக்கொண்னும் புரியலியே நீங்க சொல்றது?”

“இங்கே என் ரூம்லியே ஆறை அண்ணாதாசன்னு ஒரு யூனிவர்ஸிடி ரிஸர்ச் ஸ்டூடண்ட் இருக்காரு. அவரு சாதாரணமாப் பேசறப்பவே ஹிஸ்டாரிகல் டிராமாவிலே ஒரு கேரக்டர் டயலாக் பேசற மாதிரியே பேசறாரு. அவரு சாதாரணமாப் பேசறதெல்லாம். ஆயிரம் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தின மனுசன் பேசற டயலாக் மாதிரி யிருக்குன்னாப் பார்த்துக்குங்களேன். அத்தினி சுத்தம். சும்மா தமிழ் கொஞ்சுது போங்க...”

“ஐயையோ வேண்டாம் சார்! அது மாதிரி நாடகத்தைப் பார்க்கறத்துக்கு இந்தக் காலத்து ஜனம் ஒண்ணு கூட வராது. பயந்து ஓடிப்பூடும். டிக்கட் வாங்கிக்கிட்டு வந்து நாடகம் பார்க்கவும் ரெண்டாயிரம் மூவாயிரம் வருசத்துக்கு முந்தின ஜனங்களைத்தான் தேடிப் போய்க் கூட்டியாறனும்.”

சுதர்சனனுக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு அடக்க முடியாமல் பொங்கிக் கொண்டு வந்து விட்டது.

அத்தியாயம் - 30

சில நாட்களில் ‘அழகு லாட்ஜ்’ வாழ்க்கை சுதர்சனனுக்குப் பழகிவிட்டது. அதன் நடைமுறைகள், மனிதர்கள் மனப்போக்குக்கள் எல்லாமே சுதர்சனனுக்கு ஒரு வாறு பிடிபட்டு விட்டன.

அந்த லாட்ஜ் உரிமையாளர் ஓர் அரசியல் கட்சியின் முக்கியப்புள்ளி. அப்பகுதியின் கார்ப்போரேஷன் கவுன்சிலர். அவருக்கு லாட்ஜ் தவிர ஒரு பலசரக்குக் கடை, ஒரு எண்ணெய் மண்டி, நிறைய வாடகை வரக்கூடிய இரண்டு பெரிய ஒண்டுக் குடித்தன ஸ்டோர்கள் ஆகியவையும் உடைமையாக இருந்தன.

அதனால் அவர் ஊரறிந்த பிரமுகராயிருந்தார். சுதர் சனனுக்கு எங்கே உத்தியோகம், என்ன மாத வருமானம் என்று கூட இரண்டொரு தடவை ஜாடை மாடையாகக் கேட்டுச் சரியான பதில் கிடைக்காமல் ஏமாந்து போனார் அவர்.

சரியான வேலையில்லாதவர்களையும், இனிமேல்தான் வேலை தேடவேண்டும் என்ற நிலையிலுள்ளவர்களையும் அவர் பெரும்பாலும் அறைகளில் வாடகைக்கு இருக்க அனுமதிப்பதில்லை. அப்படிப்பட்டவர்களை இருக்க அநுமதிப்பது நஷ்ட வியாபாரம் என்பது அவர் கருத்து. தான் ஒரு வேலை தேடிக் கொண்டிருப்பதாகச் சுதர்சனன் அவருக்குத் திட்டவட்டமாகப் பதில் கூறிவிட்டான். உண்மையும் அதுதான். தன்மானத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு வராத வேலை ஒன்றைத் தேடியாக வேண்டிய அவசியம் அப்போது அவனுக்கும் இருந்தது. அறையில் மருந்துக் கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதிக்காக நாள் தவறாமல் காலையில் இந்துப் பேப்பர் வந்து விழுந்து கொண்டிருந்தது. டூரிலிருந்து திரும்பியதும் ஒரு நாள் பேப்பர் கூட விடாமல் மொத்தமாக உட்கார்ந்து படிப்பது அவர் வழக்கமாம். ஆறை அண்ணாதாசன் ஆங்கில நாளேடுகளைத் தன் கைகளாலும் தொடுவதில்லை. பிற மொழிகள் மேல் அத்தனை வெறுப்பு.

காலை வேளைகளில் சுதர்சனன் அறையில் இந்து வந்து விழுந்ததும் எடுத்துப் பார்ப்பதுண்டு. ஒருநாள் அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோது எஜூகேஷனல் பகுதியில் ‘வாண்டட்’ காலத்தில் சென்னை நகரின் வடக்குப்பகுதி உயர் நிலைப்பள்ளி ஒன்றிற்குத் தமிழ்ப் பண்டிதர் தேவை என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அவசரமோ என்னவோ தெரியவில்லை. உடனே விண்ணப்பிக்கவும் அல்லது முடிந்தால் நேரில் வரவும் என்கிற பாணியில் அந்த விளம்பரம் இருந்தது. ஏறக்குறையத் திருவொற்றியூருக்குப் பக்கமாக இருந்த அந்தப் பள்ளிக்கூடத்திற்குத் தினசரி திருவல்லிக்கேணியிலிருந்து போய் வருவதற்கே மாதம் ஐம்பது அறுபது ரூபாய்க்குக் குறையாமல் ஆகிவிடும் என்று தோன்றினாலும் முயன்று பார்க்கலாம் என எண்ணினான் அவன்.

தபாலில் விண்ணப்பத்தை அனுப்புவதைவிட நேரில் போயே பார்த்து விடுவது நல்லதென்று தோன்றியது. விண்ணப்பத்தை எழுதி எடுத்துக் கொண்டு தன்னுடைய சான்றிதழ்கள், பட்டம், சர்வீஸ் ரிஜிஸ்தர் எல்லாவற்றோடும் புறப்பட்டான் சுதர்சனன்.

பஸ்ஸில் அந்த இடத்திற்குப் போய்ச் சேருவதற்கே ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. காலை பத்து மணிக்கு மேல் அவன் புறப்பட்டிருந்ததனால் சரியாகப் பகல் உணவிற்கான மதிய இடைவேளை நேரத்தில் அவன் அங்கே போய்ச் சேர்ந்திருந்தான், ஆசிரியர்கள் ஒய்வு அறையில் விசாரித்ததில் தலைமையாசிரியரை இரண்டு மணிக்குமேல் தான் பார்க்க முடியுமென்று தெரிந்தது. அப்பள்ளியின் தலைமையாசிரியர் அறையும் ஆசிரியர்கள் ஓய்வறைக்குப் பக்கத்திலேயேதான் இருந்தது.

டேவிட்கந்தையா என்று ஒரு டிராயிங் மாஸ்டர் தாமாகவே சுதர்சனனுக்கு அறிமுகமானார். சுதர்சனனிடம் பேச்சுக் கொடுத்து அவன் வந்திருக்கும் காரியத்தை அறிந்து கொண்டார். அவரே முன்வந்து சொன்னார்:

“இந்தப் பள்ளிக்கூடம் செங்குந்தர் மேனேஜ்மெண்ட்லே இருக்குது. பெரும்பாலும் அவுங்க காஸ்ட் பீப்பிளைத்தான் ப்ரெஃபர் பண்ணுவாங்க. டிராயிங் மாஸ்டருக்கு இதுவரை அவுங்க காஸ்ட் கேண்டிடேட் யாரும் அப்ளை பண்ணாததாலே தான் நானே காலந்தள்ள முடியுது. அவுங்க காஸ்ட் டிராயிங் மாஸ்டர் கிடைச்சிட்டா என்னையே தள்ளிவுட்டுடுவாங்க சார்.”

சாதி மதபேதமற்ற சமூகத்தைப் படைக்கணும்னு எல்லா அரசாங்கங்களும் மாத்தி மாத்தி அறிக்கை விடற லட்சணம் இதுதானா? இதுக்கு அவனவன் அவனோட ஜாதியை ஆதரிக்கலாம்னு ஒரு சட்டம பண்ணி வச்சுக்கலாமே?”

“ஒரு கோடி மகாத்மாக்களும், சீர்திருத்தவாதிகளும் ஒரே சமயத்திலே பிறந்து முயற்சி பண்ணினாக்கூட இந்தியாவைத் திருத்த முடியாது சார்! இங்கே ஒவ்வொரு ஜாதிக்காரனுக்கும் அவனுக்கு வேணும்னு வசதியாயிருக்கறப்ப ஜாதி வேணும். அவனுக்கு வேணாம்கிறப்பவோ அசெளகரியமாயிருக்கறப்பவோ ஜாதி மதம்லாம் வேண்டாம்.”

“இந்த ஜாதி மத விவகாரங்களிலே ரொம்பச் சீரழிஞ்சு போய் ஊழலாயிருக்கிறது கல்வித்துறைதான். கல்வித்துறையிலே இருக்கிற மாதிரி ஜாதிமத வெறி வேறெந்தத் துறையிலேயும் இப்பிடி நாத்தம் எடுத்துக் குமட்டற அளவுக்கு இல்லேன்னே சொல்லலாம்.”

“ஜாதி வேணாம், மதம் வேணாம், ஏற்றத்தாழ்வு வேணாம்னு எல்லோரும் மேலுக்குச் சொல்விலிக்கிட்டு உள்ளூற நம்மை நாமே ஏமாத்திக்கிறோம். ஜாதியாலே நமக்கு வர்ர கெடுதலையும் கஷ்டத்தையும் சந்திக்கிறப்போ ஜாதி வேணாம்கிறோம். ஜாதியாலே நமக்கு வர்ர நன்மையையும், வசதிகளையும் புரிஞ்சுக்கறப்போ ஜாதி வேணும்னு உள்ளுற ஏத்துக்கிட்டு வரவேற்கிறோம். இதுதான் நம்ம தேசம். வித்தியாசங்களை ஒழிக்கிறதுங்கறது இன்னும் இங்கே தொலை துாரத்து லட்சியம் தானே ஒழிய நடை முறையாகி விடவில்லை. வரவர ரெட்டை வேஷம் போடறங்கறதே நம்ம தேசிய கலாசாரங்கள்ளே ஒண்ணாயிடிச்சு.”

சுதர்சனன் இதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. அவரே மேலும் தொடர்ந்தார்:

“செங்குந்தர் இல்லேன்னு உங்களை ஒதுக்காமே உங் களுக்கு இப்போ வேலை கெடைச்சிட்டாலும் வேற ஒரு சங்கடம் இருக்கு. நான் சொன்னேன்னு யார் கிட்டேயும் காமிச்சுக்காதீங்க. நானூறு ரூபாய்க்குக் கையெழுத்துப் போட்டீங்கன்னா முந்நூறு ரூபாய்தான் கையிலே கெடைக்கும். ‘அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்’ கையிலே கெடைக்கெறதுக்கு முன்னாடியும் ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் செலவழிச்சாக வேண்டியிருக்கும்.”

“நீங்க எல்லாருமே அந்த மாதிரித்தான் வேலைக்குச் சேர்ந்தீங்களா? ஒருத்தருக்காவது லஞ்சம் குடுக்கறது தப்புன்னு படலியா?”

“என்ன செய்யிறது? ஜனநாயக சோஷலிஸ சமூகத்தை அமைக்கிற ஜாதி மதச் சார்பற்ற நாட்டிலே இத்தனை லஞ்சமும் கொடுத்தப்புறம் தான் வேலை கெடைக்குது. வெறும் நேர்மையையும் தகுதியையும் ஒழுக்கத்தையும் எவன் மதிக்கிறேங்கறான்?”

“லஞ்சம் கேட்கிறவனையும், குடுக்கிறவனையும் நடுத்தெருவிலே நிறுத்தி வச்சுச் சுட்டுடணும்.”

“அப்பிடி உடனே சுடறத்துக்குக்கூட எதினாச்சும் ‘ஸம்திங்’ குடுத்தாத்தான் முடியும்.”

“இதைக் கேக்கறப்ப உங்க மேலே கோபமா இருந்தாலும் நீங்க சொல்றதென்னவோ நிஜந்தான்.”

“லஞ்சம் வாங்கறவன் குடுக்கறவனை எல்லாம் சுடறதுன்னு வந்தா அப்புறம் இந்தத் தேசத்துலே ஒருத்தன் மீத மிருக்க மாட்டான். இதை ரெண்டையும் செய்யாத ஆள் கெடைக்கறதே கஷ்டம். வாங்கிப் பழகின கையை விட லஞ்சம் குடுத்துப் பழகின கைதான் இங்கே அதிகம்.”

“சாகறதுக்கு ஒண்ணுக்கு மட்டும்தான் இங்கே லஞ்சம் கிடையாதுன்னு நெனைக்கிறேன்.”

“யார் சொன்னாங்க? அதுக்கும் கூட உண்டு, கிருஷ்ணாம் பேட்டை, கண்ணம்மா பேட்டை, ஓட்டேரி எல்லா மயானத்திலும் பொணம் உள்ளே நல்ல எடமாப் பிடிக்கக் கார்ப்பொரேஷன் சார்பில் வேலை பார்க்கிற சுடுகாட்டுப் பிரதிநிதிக்கும் ‘ஸம்திங்’ உண்டு. லஞ்சமில்லாத விஷயம் எதுவும் இங்கே கிடையாது.”

ஹெட்மாஸ்டர் வந்துவிட்டதாக யாரோ வந்து தெரி வித்தார்கள். சுதர்சனன் டேவிட் கந்தையாவிடம் விடை பெற்றுக் கொண்டு தலைமையாசிரியரைப் பார்ப்பதற்குச் சென்றான்.

அங்கே தலைமையாசிரியர் அறை முகப்பில் ‘ஸ்ரீ சென்னிமலை முருகன் துணை’ என்று பெரிதாகப் பிளாஸ்டிக் எழுத்துக்களில் எழுதிப் போட்டிருந்தது. உள்ளே நுழைந்தால் தலைமையாசிரியரின் தலைக்கு மேலும் அப்படியே எழுதியிருந்தது.

நடுத்தர வயதுத் தலைமையாசிரியர் கண்ணாடியைச் சரி செய்து கொண்டு நிமிர்ந்து சுதர்சனனை ஏறிட்டுப் பார்த்தார்.

“என்ன வேணும்? சொல்லுங்க...”

“உங்க விளம்பரம் ‘ஹிண்டு’விலே பார்த்தேன்.”

“என்ன விளம்பரம்? சட்னு புரியும்படியாத்தான் சொல்லுங்களேன்.”

“அதான் அந்தத் தமிழ்ப் பண்டிட் தேவைங்கிற விளம்பரம்.”

“ஒ அதுவா? நீங்களும் அதுக்கு அப்ளை பண்றீங்களா?”

“ஆமாம்! அப்ளிகேஷனை நேரிலேயே குடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்.”

“சரி குடுங்க... வாங்கிக்கறேன். அவர் அவனை உட்காரச் சொல்லி வேண்டவுமில்லை. அவன் உட்கார விரும்பவுமில்லை. கொடுத்து விட்டுப் போனால் போதும் என்ற அவசரத்தில் தான் அவனும் இருந்தான். உட்கார விரும்பி யிருந்தால் அவர் சொல்லித்தான் ஆகவேண்டும் என்ற உபசாரத்துக்காகக் காத்திராமல் அவனே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பான்.

அவன் விண்ணப்பத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்துவிட்டு ஒரு விநாடி தயங்கி நின்றான்.

“இண்டர்வ்யூ லெட்டர் வரும், வந்தாப் புறப்பட்டு வாங்க, இந்த சர்டிபிகேட்ஸ் ஒரிஜனல் எல்லாம் இப்ப எங்களுக்குத் தேவை இல்லை. நீங்களே கொண்டு போகலாம். அவசியமானால் இன்டர்வ்யூவுக்குப் புறப்பட்டு வர்ரப்பக் கொண்டு வாங்க போதும்”என்று சர்டிபிகேட்டுகளை தனியே பிரித்து அவனிடமே திருப்பி நீட்டினார் தலைமையாசிரியர். அநேகமாக அந்தக் கட்டிடத்தைப் பொறுத்தவரை ஸ்ரீ சென்னிமலை முருகன் துணை வெளியாருக்குக் கிடைக்காது போலிருந்தது. சுதர்சனன் வெளியேறியபோது மறுபடி டேவிட் கந்தையா வேறொரு நரைத்த மீசைக்காரருடன் எதிர் கொண்டார்.

“இவர் தாங்க இங்கே சீனியர் தமிழ்ப் பண்டிட். புலவர் பூங்காவனம்.”

“வணக்கம். டேவிட் இப்பத்தான் நீங்க வந்திருக்கிறதைப் பத்திச் சொன்னாருங்க. ரொம்ப மகிழ்ச்சி...”

“மகிழ்ச்சிப் படறாப்ல இன்னும் எதுவும் நடந்துடலே. சும்மா அப்ளிகேஷனைக் குடுத்திருக்கேன் அவ்வளவுதான். சென்னிமலை முருகன் நமக்கும் துணையா இல்லையாங்கிறது இனிமேல்தான் தெரியணும்” என்று சிரித்துக் கொண்டே புலவருக்கு மறுமொழி கூறினான் சுதர்சனன்.

“இதுக்கு முன்னாடி எங்கே இருந்தீங்க? சர்வீசுக்கே புதுசா அல்லது எங்கேயாவது ஏற்கெனவே தமிழாசிரியரா இருந்திருக்கீங்களா?”

“ஆதர்சபுரம் ஜமீன்தார் ஹைஸ்கூல்லே தமிழாசிரியரா இருந்தேன். அப்புறம் இங்கேயே ஒரு டூட்டோரியல் காலேஜ்ல கொஞ்ச நாள் இருந்தேன்.”

“டூட்டோரியல் காலேஜ் சர்வீஸை எல்லாம் இங்கே கவுண்ட் பண்ண மாட்டாங்க... ஜமீன்தார் ஹைஸ்கூல்லே எத்தினி வருசம் இருந்தீங்களோ?”

“வருஷக் கணக்கெல்லாம் சொல்றாப்ல ஒண்ணுமில்லே! ஏதோ கொஞ்ச காலம் இருந்தேன். அதாவது அவங்களுக்கு என்னையும் எனக்கு அவங்களையும் பிடிக்கிற வரை இருந்தேன்னு வச்சுக்குங்களேன்.”

“ஆமாமா, ஒரே எடத்திலே மொளையடிச்சாப்பில இருக்கணும்னு அவசியமா என்ன? ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’னு தானே நம்ப தமிழ்ப் புலவனே பாடி வச்சிருக்கான்?”

“அதுனாலேதான் சர்க்கார் ஸ்கூல் காலேஜ்களிலே எல்லாம் அடிக்கடி எந்த ஊருக்காவது டிரான்ஸ்ஃபர் பண்றாங்கன்னு தோணுது. ‘யாதும் ஊரே’ பாடினவனே, ‘டிரான்ஸ்பரை’ நினைச்சுத்தான் அப்படிப் பாடியிருக்கணும்.”

“ரொம்ப தமாஷாப் பேசறீங்க. நீங்க நம்ப ஸ்கூலுக் வந்தாப் போதும். நல்லாப் போது போவும்.”

“ஆனா வெறும் தமாஷுக்காகவே யாரும் வேலை தர மாட்டாங்களே?” என்று அவருக்கு உடனே பதில் சொல்லிச் சிரித்தான் சுதர்சனன்.

“செங்குந்தர் திலகம் தொரப்பாக்கம் முருகேச முதலியாரைத் தெரியுங்களா உங்களுக்கு?”

“ஏன்? எனக்கு யாரையும் தெரியாது.”

“இல்லே! அவரு ஒரு லெட்டர் குடுத்தார்னா இந்த வேலை உங்களுக்குக் கிடைச்ச மாதிரின்னு வச்சுக்குங்களேன்.”

“அவரு எங்கே இருக்காரோ?”

“பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியுமுங்களே! டி.எம்.எம். எக்ஸ்போர்ட்டர்ஸ்னு கொடவுன் ஸ்ட்ரீட்லியே அவுங்கதான் பெரிய கார்ப்பெட் எக்ஸ்போர்ட்டர்ஸ்.”

“எனக்குத் தெரியாதுங்க! ஒரு வேளை நான் இன்னும் பச்சைக் குழந்தையாகவே இருந்தால் தெரிஞ்சிருக்குமோ என்னவோ? யார் கண்டாங்க?”

“ரொம்பத் தமாஷாப் பேசறீங்க.”

சுதர்சனன் டேவிட் கந்தையாவிடமும் புலவர் பூங்காவனத்திடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டபோது பகல் இரண்டரை மணிக்குமேல் ஆகிவிட்டது. மறுபடி பஸ் பிடித்துத் திருவல்லிக்கேணி வந்து சேர்ந்தபோது மாலை ஆகிவிட்டது.

பஸ் ஸ்டாப்பில் இறங்கி அறைக்குச் செல்வதற்காகப் பைகிராப்ட்ஸ் சாலையின் ஜனவெள்ளம் கடற்கரையை நோக்கிப் பொங்குவதை எதிர்த்து மேற்குத் திசையில் அவன் எதிர் நீச்சலிட்டபோது பின்னாலிருந்து, “அண்ணே! சுகந்தானா?” என்று ஒரு பழகிய குரல் அவனை விளித்தது. திரும்பிப் பார்த்தால் திருவையாறு கல்லூரியில் புலவர் வகுப்பில் உடன் பயின்ற மதிவாணன் நின்றுகொண்டிருந்தார். அவரை நோக்கிச் சுதர்சனனின் முகம் மலர்ச்சி காட்டியது.

அத்தியாயம் - 31

மதிவாணனைப் பார்த்ததில் பழைய நாட்களின் நினைவுகள் மனத்தில் விரைந்து சுழன்றன. புலவர் கல்லூரி வாழ்க்கை, திருவையாறு காவேரியில் நீச்சலடித்தது, பிள்ளையார் உடைப்புப் போராட்டம், இந்தி எதிர்ப்பு, எல்லாம் முறையாகவும். தாறுமாறாகவும் ஞாபகம் வந்தன. ‘சோமசுந்தரம்’ என்ற பெயரை மதிவாணன் என்று மாற்றி வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

“என்ன செய்யிறீங்க மதிவாணன்? செளக்கியமா இருக்கீங்களா? எப்படி வாழ்க்கை நடக்குது?”

“இங்கேதான் மெட்ராஸ்லே ஒரு வாரப் பத்திரிகையிலே புரூப் ரீடரா இருக்கேன். செளக்கியத்துக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்லே. ஆனா இப்ப நான் வாங்கற சம்பளத்தை நம்பி எந்தப் பொம்பிளையும் இப்ப எனக்குக் கழுத்தை நீட்ட முடியாது.”

“நீங்க சொல்றதைப் பார்த்தா ‘நமக்கு இன்னும் கலியாணமாகலியேன்னு’ - உங்களுக்கே உள்ளூற ஒரு தவிப்பு வந்தாச்சுன்னு தெரியுது.”

“நீங்க எப்பிடி அண்ணே? இன்னும் தனிக்கட்டை தானா?”

“தனி ஆள்னு திருத்திக்குங்க. நான் என்னிக்கும், எதிலேயும் கட்டையா இருந்ததில்லே. இனிமேயும் அப்பிடி இருக்கப் போறது கிடையாது. ஆனா அதுக்காக எனக்குள்ளாரப் பெரிய ஏக்கம் எதுவும் பிடிச்சு வாட்டறதில்லே. ஒரு விதத்திலே என்னோட எதிர்நீச்சல் சுபாவத்துக்கு இப்பிடித் தனி ஆளா இருக்கறதே நல்லதுன்னு கூடத் தோணுது...”

“‘இல்லறமல்லது நல்லறமில்லை’ - ‘அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை’ன்னெல்லாம் நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்களே அண்ணே...”

“அவங்க காலத்துச் சமூக அமைப்பே வேறு. நிலப் பிரபுத்துவ சமூக அமைப்பில் கூறப்பட்ட அறிவுரைகள் அறவுரைகள் எல்லாமே இன்றைய புதிய சூழ்நிலையிலும், புதிய காலத்திலும் மறுபரிசீலனைக்குரியவை.”

“இன்னமும் அண்ணைக்கி இருந்த மாதிரியேதான் தர்க்கம் பண்றீங்கண்ணே! கொஞ்சங்கூட மாறலே... வாங்க... ஒரு காபி குடிச்சிட்டுப் ‘பீச்’லே போய் உட்கார்ந்து பேசுவோம்... ”

வாழ்வில் நீண்ட நாள் கழித்துச் சந்திக்கும் ஒரு கல்லூரி தோழனை மறுத்துச் சொல்லி ஏமாற்ற விரும்பாத காரணத்தால் மதிவாணனோடு காப்பிக் குடிக்கச் சென்றான் சுதர்சனன். மாட்டேனென்று மறுப்பதோ அப்படி மறுப்பதன் மூலம் தன்னை உயரத்தில் தூக்கி நிறுத்திக் கொள்ளுவதோ நண்பனை அவமதிப்பதாக இருக்குமென்று அவன் நினைத்தான். தன்னை மதிப்பதோடு பிறரை அவமதிக்காமலிருப்பதும் சேர்த்துத்தான் சுயமரியாதை என்றெண்ணினான் அவன்.

காபி குடித்துக் கொண்டே மதிவாணனிடம் அவன் வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையைப் பற்றி, விசாரித்தான் சுதர்சனன்.

“சேட் ஜம்னாதாஸ் கிஷன் சந்த்னு யாரோ ஒரு வடக்கத்தி ஆள் நடத்தற பத்திரிகைங்க, ஒரு சினிமா வீக்லி, ரெண்டு ஃபாஷன் ஜர்னல், மூணு டெய்லி தமிழ் தெலுங்கு மலையாளம்னு எல்லாத்திலியுமா இருக்கு. அதோட தமிழ்ல ஒரு வீக்லியும் புதுசா ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க! ‘தமிழ் மணி மாலை’ன்னு பேரு.”

“அதுக்கு ஆசிரியர் யாரு?”

“காவி-அதான் கா. விஜயராகவன்கிறவரு.”

“அதென்ன காவி கமண்டலம்னு என்னென்னவோ மாதிரிச் சாமியாருங்க விவகாரமாய்ப் பேரெல்லாம் வருது?”

“அது காவன்னா விஜயராகவன்கிற முழுப் பேரோட சுருக்கம். சட்னு ஜனங்க ஞாபகத்திலே இருக்கிற மாதிரி வரணும் பாருங்க... அதான்...”

“நீங்க எப்பிடி இதிலே போய்ப் புகுந்தீங்க?... எங்கேயாவது ஹைஸ்கூல்லே தமிழ்ப் பண்டிட்டா இருப்பீங்கன்னில்லே நினைச்சேன்?... சாய்ஞ்சாச் சாயிற பக்கமே சாயிற மாடுங்க மாதிரிப் புலவர், வித்துவான், பண்டிதர்களை மாதிரித் தமிழ்ப் பட்டதாரிகளை எல்லாம் தமிழ் வாத்தியார் வேலைக்குத் தவிர வேறெதுக்கும் நுழைய விடாம வச்சிருக்கிற நாட்டிலே தான் நாம வசிக்கிறோம். ஆனா அடிக்கடி நாட்டை ஆளர கட்சிக்காரங்க யாருன்னாலும் ‘தமிழாசிரியர் பணியைப் போலப் புனிதமானது ஒண்ணும் இல்லே’ன்னு மேடையிலே, பெருமையாப் பேசுவாங்க...”

“அதுக்கில்லேண்ணே! ஸ்கூல்லே இருந்தால் காம்போஸிஷன் நோட்புக்ஸ் திருத்தப் போறோம்... இங்கே புரூஃப் திருத்தறோம். பெரிசா இதுலே வித்தியாசம் ஒண்ணுமில்லே...”

“ஆசிரியருன்னீங்களே, யாரோ காவியோ கமண்டலமோ, அவரு நல்லாப் படிச்சவரா? நல்லது கெட்டது சிந்திக்கத் தெரிஞ்சவரா? மதிப்பு மரியாதை தெரிஞ்சவரா?”

“ஆந்திராவிலிருந்து கோடம்பாக்கத்துக்கு எக்ஸ்ட்ரா சப்ளை பண்ணிக்கிட்டிருந்தாரு... அதே வகையிலே தான் எங்க முதலாளிங்களுக்கும் கொஞ்சம் பழக்கம்... இவங்களுக்கு அவரைப் பிடிச்சுப்போச்சு, எடிட்டராப் போட்டுட்டாங்க...”

“எக்ஸ்ட்ரா சப்ளைன்னா? என்னன்னு புரியும்படியாச் சொல்லுங்க.”

“புரியும் படியாச் சொன்னா ‘அசிங்கம்’னு தான் இப்படி சொன்னேன் அண்ணே! இப்போ நீங்களே வற்புறுத்திக் கேட்கிறீங்க...! அதாவது அழகான இளம் பெண்களைச் சினிமாவிலே நடிக்கிறதுக்குன்னு ஆசை காட்டிக் கொண்டாந்து இந்த ‘லயன்’லே விடறது...”

“ஒகோ... அந்த மாதிரி செர்வீஸா?”

“இங்கிலீஷ் படிச்சவங்க- ‘கோ பிட்வின்’னு சொல்லுவாங்க... இந்தப் பட்டணம்கிற கலாசாரச் சீரழிவுக்கேந்திரத்திலே மரியாதையும் மானமும் உள்ள நல்ல உத்யோகம்லாம் இன்னிக்கு இந்த மாதிரிக் ‘கோ பிட்வீனு’ங்க கையிலே போய்ச் சிக்கிடிச்சு...”

“ஒரு பெரிய புரட்சிக்கான சூழ்நிலை வர்ரப்ப இப்பிடிக், கசடுகள்லாம் மொத்தமா அடிச்சுட்டுப் போயிடும். கவலைப்படாதே. இப்படி நசிவு சக்திகள் தென்பட்டு அங்கங்கே பொது வெறுப்பும் ஆத்திரமும் உருவான பின்புதான் புரட்சியே வரும். அதுதான் உலக வரலாறு. அடிச்சிக்கிட்டு போய் ஒழியறத்துக்கு முன்னாடிக் கொஞ்சநேரம் எல்லாருக்கும் நெறையத் தெரியற மாதிரி இதெல்லாம் மேலாக மிதக்கும். அது போலத்தான் இதுவும் இப்ப மேலாகத் தெரியுது.”

“காவிக்கு மாசம் நாலாயிரம் ரூபாய் சம்பளம். ஆபிஸ் கார் ஒண்ணு குடுத்திருக்காங்க. இன்னிக்கி அமெரிக்கா நாளைக்கி ஜப்பான் நாளன்னிக்கி ஆஸ்திரேலியான்னு பறந்துக் கிட்டிருக்காரு.”

“பூர்ஷ்வா சமூக அமைப்பில் ‘பிம்ப்’களும் இடைத் தரகர்களும் லாப வேட்டைக்காரர்களும் தான் தற்காலிகமான பல வசதிகளோடு செழிப்பாக இருப்பார்கள். அது தவிர்க்க முடியாதது.”

“எங்க பத்திரிகை முதலாளிக்குத் தமிழ் படிக்கத் தெரியாது. சர்க்குலேஷன் நிறைய இருந்தால் போதும். ஒவ்வொரு பத்தாயிரம் பிரதி ஏறினதும் திருப்பதிக்குப் போயி நூறு ரூபாய் உண்டியல்லே போட்டுச் சாமி கும்பிட்டிட்டு வந்துடுவாரு!”

“லாபத்துலே சாமிக்கு லஞ்சமா?”

“ஆசிரியர் காவியும் கூடப் போய்ச் சாமி கும்பிட்டுட்டு வருவாரு. அவருக்கும் சாமி பக்தி நிறைய உண்டு.”

“அதுலே எது அதிகம்? சாமி பக்தியா? பொம்பளை பக்தியா? இந்த ஊர்லே சில பேரு ரெண்டையுமே ஒரே மாதிரித்தான் பண்றாங்க. பொம்பளைக்கும் நிறையச் செலவழிக்கிறாங்க. எது மேலே அவங்களுக்கும் ஆசை அதிகம்னு தான் தெரியலே?”

“அது சரி! நீங்க எண்ணண்ணே செய்றிங்க? உங்களைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே...” மதிவாணன் பேச்சை மாற்ற முயன்றதுபோல் தெரிந்தது.

“நானா? நான் ஏதோ ஒரு வேலைக்காகத் தேடி அலைஞ்சிட்டிருக்கேன். இன்னும் எதுவும் சரியாகக் கெடைக்கலே...”

“எங்கண்ணே தங்கியிருக்கிங்க...”

“இங்கேதான் திருவல்லிக்கேணியிலே... நீங்க...?”

“அட! அதிசயமாவில்லே இருக்கு. நானும் இங்கேதான் தங்கியிருக்கேன், நீங்களும் இங்கேயே இருந்துமா இத்தினி நாள் ஒருத்தர்கொருத்தர் பார்த்துக்காம இருக்கோம்?”

“அது இந்த மாதிரி ஊர்லே ரொம்ப சகஜம். அடுத்த வீட்டுக்காரனைத் தெரிஞ்சுக்கவே ஆறுமாசம் ஆகிற மாதிரி வறட்டு ஜம்பமும் அசட்டு நாகரிகமும் பிடிச்ச ஊரு இது...”

“உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா எங்க ஆபீஸிலேயே எதினாச்சும் புரூஃப் ரீடர் அது இதுன்னு காலி இருக்காங்கிறதை விசாரிக்கலாம். தமிழ்ப் பத்திரிகை நடத்தறதுக்குக் கொஞ்சம் தமிழ் தெரிஞ்சவங்களோட உதவியும் தேவைன்னு இப்பல்லாம் நெனைக்க ஆரம்பிச்சிருக்காங்க.”

“அதாவது தமிழிலே விஷய ஞானமுள்ளவன் ஒருத்தன் தமிழ்ப் பத்திரிகை ஆபீஸிலே இருந்தா அதுனாலேபெரிய, எடைஞ்சல் எதுவும் இல்லேன்னு நினைக்கிற அளவு தாராள மனசு வந்திருக்கு... இல்லியா? மாமனார் மாமியார் சீர்வரிசை, தலை தீபாவளி, பட்டாஸ், மைத்துனன் ஜோக், நாத்தனார்க் கொடுமை இதுக்கு மேலே சமூகப் பிரச்சனைகளே இல்லேன்னு பண்ணி வச்சிருந்தானுவ...”

“இப்ப நிலைமை கொஞ்சம் மாறியிருக்கு அண்ணோ இல்லாட்டி நான் வேலை பார்க்க முடியுமா?”

“நீங்க என்ன பெரிய குபேரன் வேலையா பார்க்கிறீங்க? சும்மாக் கன்னாச் சன்னாத் திருத்திக்கிட்டிருக்கீங்க, அவ்வளவு தானே?”

“ஏதோ அதாச்சும் குடுத்திருக்காங்களே?”

“சின்ன விஷயங்களிலேயே திருப்தியடைஞ்சு வாழ்வில் மேற்கொண்டு எதுவும் முயலாமல் பிரயத்தனத் தற்கொலை பண்ணிக்கிறவங்களுக்கு அதுசரிதான்! என்னாலே அது முடியாது. கடைசி விநாடி வரை அடுத்த மேல் படியிலே ஏறியாகணும்கிற போராடும் குணமுள்ள வாழ்க்கையைத் தேடி முயன்று வாழ விரும்பறவன் நான். தமிழ் தெரியாதவன் முதல் போட்டுத் தரம் தெரியாதவன் அதிகாரம் பண்ணி நடத்தற பத்திரிகையிலே என்னை மாதிரி ஆளாலே காலந்தள்ள முடியாது. அப்படி வேலை எனக்கு ஒருநாளும் ஒத்து வரவும் வராது.”

“எனக்கே தட்டிச் சொல்ல முடியாத சிபாரிசு இருந்ததாலே தான் இந்த வேலை கிடைச்சது. இல்லாட்டி ‘காவி’ அவருக்கு வேண்டிய யாரையாவது நியமிச்சு அதிலேயும் ஏதாவது கமிஷன் அடிச்சிருப்பாரு.”

“அதென்ன கமிஷன் அடிக்கிறது?”

“முன்னாடி எண்ணெய், மொளகாய், உப்புப் புளி பருப்புக்குத்தான் கமிஷன் மண்டிங்க இருந்திச்சு. இப்போ பத்திரிகை ஆபீஸுங்களும் கமிஷன் மண்டி மாதிரி ஆயிடுச்சாக்கும்?”

“அதுக்கு ஆரம்ப முகாம் உங்க ஆபீஸ்தானா? இனிமே தான் மத்ததுக்கும் அது மெல்ல மெல்லப் பரவும்” என்று கூறிவிட்டுச் சுதர்சனனே மேலும் சொல்லலானான்:

“நான் தான் அப்பவே சொன்னேனே, பூர்ஷ்வா சமூக அமைப்பிலே எல்லா விவகாரங்களிலும் இடைத்தரகர்களும் கமிஷன் ஏஜண்டுகளும் உழைக்காதவர்களுமே அதிக லாபம் சம்பாதிப்பவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததுன்னு.”

பேசியபடியே சுதர்சனனும் மதிவாணனும் கடற்கரையை நோக்கி நடந்தார்கள். கடற்கரையிலிருந்து நகரை நோக்கிக் குளிர்ந்த காற்றுப் பிரவாகித்துக் கொண்டிருந்தது. நகரும் கடற்கரையும் சங்கமமாகிற அந்த முகத்துவாரத்தில் காற்று மிகவும் சுத்தமாகவும் சுகமாகவும் இருந்தது.

சுதர்சனன் சொன்னான்: “இந்தக் காத்து ஒண்ணு தான் மெட்ராஸ்லே சுத்தமா இருக்கு. இதுவும் இந்த இடத் திலேதான் இப்பிடிக் சுத்தமா இருக்க முடியுது - ஊருக்குள்ளார நுழைஞ்சிட்டாக் கலப்படமாயிப் போகுது.”

“கலப்படமே இங்கே ஒரு புதுக்கலாசாரமாவே ஆயிப் போச்சு அண்ணே!”

“புலவர் கல்லுரரியிலே படிக்கறப்ப இருந்த தன்மானம், துணிவு, தீமையான, தவறான விஷயங்களைப் பற்றிய ஆத்திரத்தோடு கூடின அலட்சியம் இதெல்லாம் போயி நீங்க இப்பிடிச் சீத்தலைச் சாத்தனார் வேலை - அதான் புரூஃப் ரீடிங்லே சிக்கினது எனக்குப் பெரிய ஆச்சரியமாகத் தான் இருக்கு?”

“ஆமாண்ணே! சித்தலைச் சாத்தனார் மாதிரி எழுத்தாணியாலே தலையிலே குத்திக்காத குறைதான்.”

“தலைப்புக்காகத் தலையிலே குத்திக்கிட்டுச் செத்தாலும் கூட இப்போ இங்கே யாரும் அதெப்பத்திக் கவலைப் படமாட்டானுவ.”

அத்தியாயம் - 32

மதிவாணனைச் சந்தித்த மறுநாள் டேவிட் கந்தையாவைத் தற்செயலாகத் திருவல்லிக்கேணியில் பார்த்தபோது, செங்குந்தர் உயர்நிலைப் பள்ளியில் வேறு யாரையோ தமிழாசிரியராக நியமித்து விட்டதாக அவர் கூறினார். பள்ளிக் கமிட்டியில் இருந்த பல்கலைக்கழகப் பேராசிரியர் சிசு பாலனார் அதற்கு அவனை நியமிக்கக்கூடாது என்று கூறி விட்டாராம்.

ஆகவே அந்த வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையும் போய்விட்டது. நாட்களும் கையிலிருந்த காசும் கரையத் தொடங்கின. லஞ்ச ஊழலுக்காகச் சிசுபாலனாரை அவன் முன்பே ஒரு கூட்டத்தில் கடுமையாகச் சாடிப் பேசியிருந்தான்.

அழகு லாட்ஜ் இருந்த அதே தெருவிலுள்ள ஓர் அச்சகத்தில் நிரந்தரமில்லாத அவ்வப்போது திருத்துகிற புரூஃப்களுக்கு உதிரியாகப் பணம் கிடைக்கிற மாதிரி ஒரு வேலை அகப்பட்டது. சுதர்சனன் அந்த அச்சகத்துக்குப் போயும் திருத்தலாம், அவனது அறையைத் தேடியும் புரூஃப்கள் வரும்.

அவனையோ, அவனது சுதந்திரத்தையோ, எதிர்நீச்சலிடும் குணத்தையோ ஒரு வகையிலும் பாதிக்காத வேலையாயிருந்தது. அது மாதம் இருநூறு ரூபாய்க்குக் குறையாமல் கிடைத்தது. புரூஃப் கொஞ்சம் அதிகம் வந்த மாதங்களில் இருநூற்றைம்பது கூடக் கிடைத்தது. வேலை அவனை எந்த விதத்திலும் அடக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. அவன் அந்த அச்சகத்தில் மாதச் சம்பளத்துக்குச் சேர்ந்திருந்தால் ஒருவேளை அப்படிக் கட்டுப்பாடு வந்துவிட்டிருக்கக் கூடும்.

பிழை திருத்துவதை விட அதிக முனைப்போடு சமூகத்தைத் திருத்தி விடவும் ஆசைப்பட்டான் சுதர்சனன். அச்சுப் பிழை திருத்துவதைப் போல் சமூகம் அவ்வளவு எளிதாகத் திருந்தி விடத் தயாராவில்லை.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் எங்கே எந்த மூலையில் திரும்பினாலும் ஊழலும், ஒழுங்கின்மையும் தெரிந்தன. மனிதர்கள் ஏமாறினார்கள் அல்லது ஏமாற்றினார்கள்.

ஊழல்காரரையும் ஒழுங்கின்மையின் உற்பத்தி ஸ்தானத்தையும் கண்டு மக்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் அஞ்சினார்கள். மடங்கினார்கள். ஒடுங்கினார்கள். ஒளிந்தார்கள். நெளிந்து மெல்ல நழுவினார்கள்.

அவர்களையும் அவைகளையும் பார்த்துச் சிறிதும் முனை மழுங்கி விடாத கூர்மையோடு போராடவும், எதிர் நீச்சலிடவும் சுதர்சனன் தயாராகக் காத்திருந்தான்.

முன்பு தான் பேசிய ஒரு கூட்டத்தில் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியர் சிசுபாலனார் லஞ்சமாகப் பணம் வாங்கிக் கொண்டு மார்க் போடுவது பற்றியும் பி.எச்.டிக்கு ரேட் வாங்கிப் பங்கீடு செய்து தருவது பற்றியும் சாடியதால் தான் சுதர்சனன் தன் வேலை வாய்ப்பை இழந்திருந்தான்.

அதிலிருந்து அவனைத் ‘தமிழ்த்துரோகி’ என்று ‘பிராண்ட்’ செய்து பிறரிடம் துஷ்பிரசாரம் செய்யலானார் அவர். டாக்டர் சிசுபாலனார் தமிழறிந்தது கொஞ்சம். அதிகம் அறிந்தது காக்கை பிடிப்பது. காக்கை பிடித்தே வாழ்வில் முன்னுக்கு வந்தவர் அவர். அறிவுக்கும் அவருக்கும் ஒரு காத தூரம்.

‘எந்தத் தமிழன் காக்கை பிடித்தாலும் அவன் சுய மரியாதையற்றவன்’ - என்பது சுதர்சனனின் கொள்கை. அதை அவன் உரத்துக் கூறிச் சிசுபாலனாரைக் கண்டித்தான்.

அவனுக்கு எங்கும் எதிலும் தமிழ் தொடர்பான உத்தியோகம் எதுவும் கிடைத்து விடாமல் இருக்கும்படி சிசுபாலனார் அரும்பாடுபட்டுக் கவனித்துக் கொண்டார்.

சிசுபாலனாரின் எதிர்ப்பைத் துச்சமாக நினைத்தான் சுதர்சனன். அவரைவிடப் பெரிய பதவிகளிலுள்ள தீயவர்களையே எதிர்த்துக் கொள்ளவும் அவன் தயாராயிருந்தான். யாருக்கும் எதற்கும் அவன் அஞ்சவில்லை. கூர் மழுங்கவில்லை.

நன்றாகத் தீட்டிய கத்தியின் நுனியைப்போல் அவன் அறிவு கூராயிருந்தது. நேர்மை வளையாமல் இருந்தது, நிமிர்வு மடங்காமல் இருந்தது.

‘கொடுத்தும் கொளல் வேண்டுமன்ற
அடுத்திருந்து மாணாத செய்வான் பகை’

என்ற குறள் கூறுவது போல் சமூக விரோதிகளின் பகையை விலை கொடுத்தாவது வாங்கி எதிர்க்க ஆசைப்பட்டான் அவன்.

காலம் ஓடியது. தனது போர்க்குணம் மழுங்காமல், அவன் சென்னையில் வாழ்ந்தான். சென்னையின் கலப்படச் சூழ்நிலை கூட இவனைக் கட்டுக் குலைக்க முடியவில்லை. மிக அதிகப் பணமும், பெரிய உத்தியோகமும், நிறைய வசதிகளும் தனது எதிர்நீச்சலிடும் குணத்தை மாற்றித் தன்னைக் கூர் மழுங்கப் பண்ணி விடுமோ என்று தயங்கி அவற்றை ஏற்காமலே ஒரு சீர்திருத்தத் துறவியாக நோன்பு நோற்று விரதமிருந்து வாழ்ந்தான் அவன். சமூகம் நலம் பெறப் பத்தியமிருப்பவனைப் போல இருந்தான். குழந்தை நலம் பெறக் கசப்பான மருந்தையும் உண்ணும் தாய்போல தான் சிரமப் பட்டான்.

அவனைப் பலர் பிழைக்கத் தெரியாதவன் என்றார்கள். வேறு சிலர் கிறுக்கு என்றார்கள். வேறு சிலர் கடவுள் நம்பிக்கையற்றவன் என்றார்கள். ஒத்துப்போகத் தெரியாத முரடு என்றார்கள். என்னென்னவோ சொன்னார்கள். எப்படி எப்டியோ சொன்னார்கள். அவற்றுக்காக அவன் கவலைப்பட வில்லை. தன்னைப் பற்றிய பயம் இல்லாததால் பிறருக்கு அவன் அஞ்சவில்லை, குற்றமுள்ள பிறரை அஞ்ச வைத்தான்.

கோடி ரூபாய் வருமானமுள்ள ஒரு கோழையாயிருப்பதைவிட அன்றாடம் உழைத்துக் கூலிக்காசு வாங்கும் தன் மானமுள்ள தீரனாயிருக்கவே அவன் விரும்பினான். அது அவன் கூர்மைக்குப் பாதுகாப்பு அளித்தது.

எவ்வளவு காலமானாலும் தீட்டிய அம்புபோல் கூராகப் பாயத் தயாராயிருக்க வேண்டுமென்பது வாழ்வைப் பற்றிய அவனது கணிப்பு. வாழ்நாள் முழுவதும் அப்படி இருந்துவிட அவனால் முடியும். முடிகிறது. முடிந்தது.

ஒருவேளை அவன் வாழ்வே முடிந்தாலும் கூட இந்தக் கூர்மை முடியாது. இது ஒரு தொடர்கின்ற தத்துவமாக அடுத்த தலைமுறை இளம் இலட்சியவாதிகளுக்கு இதே அளவு முனை மழுங்காமல் அளிக்கப்படும். தொடர்ந்து தரப்படும்.

ஏதோ ஒரு மூல விளக்கிலிருந்து பல அடுப்புக்களை மூட்டிச் சமைக்க முடிவதுபோல் சுதர்சனன் என்ற இந்த ‘மூலக்கனல்’ பட்டினத்தின் எந்த மூலையிலாவது எப்படியாவது அவியாமல் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறவரை சமூகப் புரட்சிக்கான கருத்துக்களும் , துணிவும் சமைக்கப் படும் இடத்துக்கெல்லாம் எரிபொருளைக் கொடுத்து இயக்க இது நிச்சயமாகப் பயன்படும்.

அதுவரை அவனது கூர்மையும் அழியாது. கதையும் அழியாது என்ற நம்பிக்கையோடு அவனைப் பட்டினத்தில் அக்கினிக் குஞ்சாகப் பொதிந்து வைத்துப் பார்க்கலாமே! சுதர்சனன் என்ற அந்த இளம் அக்கினிக் குஞ்சின் வெம்மையில் பல பொய்ம் முகங்களும், முகத்துவாரங்களும் எரிந்து அழியட்டுமே!

அவை அழிகிற வரை அவனுக்கும் அவனுடைய கதைக்கும் பட்டினத்தில் இடமிருக்கிறது. அவை முடிய வழி இல்லை. காரணமும் இல்லை.

தீமையை அழிக்கப் புறப்படுகிறவனின் வாழ்க்கை வசதியானதாக அமைய முடியாது. அது வசதியானதாக அமைந்து விட்டால் தீமைகளை அவன் அழிக்க முடியாது.

இந்த ஒரே காரணத்துக்காகச் சுதர்சனனை இப்போது அவன் எப்படி இருக்கிறானோ அப்படியே அந்த முனை மழுங்காத போர்க்குணத்தின் கூர்மையுடனேயே சென்னையில் விட்டுவிட்டு நாம் இதோடு விடைபெறுவோம்.

சிரமசாத்தியமான அவனுடைய போர்களில் அவன் வெற்றிபெறட்டும்! அவன் பெறும் வெற்றிகள் அவுனுடைய சொந்த வெற்றியாக மட்டும் அமையாது. சமூகத்தின் பொது வெற்றிகளாகவே அவை வாய்க்கும். அந்த வெற்றிகளுக்காக அவனையும் அவன் எதிர்கொண்டு அழிக்க வேண்டிய பொய்ம் முகங்களையும் தனியே விடுத்து நாம் ஒதுங்கிக் கொள்ளலாம். மறுபடி அவசியம் நேரும்போது அவசியம் நேர்கிற காலங்களில் இடங்களில் அவனை அந்தக் கூர் மழுங்காத தீரனை நீங்களும் நானும் அவசியம் சந்திக்கலாம். அதுவரை...?