Pon vilanku

பொன் விலங்கு

மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான். ஆள விரும்புகிற அன்பைக் காட்டிலும் ஆட்படுகிற அன்பு மிகவும் பக்குவமானது. ஆள விரும்புகிற அன்பில் சுயநலமும் அகங்காரமும் உண்டு. ஆட்பட விரும்புகிற அன்பிலோ தியாகத்தைத் தவிர வேறெதுவுமே இல்லை.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

ஆசிரியர் முன்னுரை

கல்கி பத்திரிகையில் இந்தப் 'பொன் விலங்கு' நாவல் நிறைவெய்திய போது இந்நாவல் நம் தேசியக் கவி பாரதியின் லட்சியங்களையும், தேசிய ஒருமைப்பாட்டையும், கல்வி நலத்தையும் சித்தரிப்பது பற்றிப் பல ஆயிரக்கணக்கான வாசகர்கள் மனமுருகிப் பாராட்டி எழுதினார்கள். அவர்களில் சிலருடைய அபிப்பிராயங்களையே இங்கு இந்த நாவலுக்கு முன்னுரையாகத் தொகுத்தளித்திருக்கிறேன். இது குடியரசுக் காலம். தரமான வாசகப் பெருமக்களின் அபிப்பிராயமே எதிர்கால முடிவும் நிகழ்காலத் துணிவுமாகும். எனவே ஏதாவதொரு இலக்கியப் பேராசிரியரிடம் முன்னுரை வாங்குவதைவிட அல்லது நானே பெரியதொரு முன்னுரை எழுதுவதைவிட, வாசகப் பெருமக்களிடமிருந்து வந்த கருத்துரைகளில் சிலவற்றையே இங்கு முன்னுரையாகத் தொகுத்து அளிப்பதில் பெருமைப்படுகிறேன்.

வாசகர் முன்னுரை

சமுதாயத்தில் நடைபெறும் அன்றன்றைய நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுவது போல் கதையை அழகுற இணைத்து எழுதி நேயர்களின் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டார் ஆசிரியர்.

மு. அந்நாலன், கள்ளக்குறிச்சி, தெ.ஆ.

பொன் விலங்குக் கதையை ஒரு கற்பனை என்றே என்னால் எண்ண முடியவில்லை. கதைகள் காலப்போக்கில் மறையும் தன்மையன. ஆனால் பொன் விலங்கு காவியங்களைப் போல் நூறு ஆண்டுகள் கழிந்தாலும் காலப் போராட்டத்தை எதிர் நீச்சலிட்டு நிற்கும்.

வெ. சீனிவாசன், கொச்சி-4.

கதையில் அவர் சிருஷ்டித்துள்ள மோகினி, சத்தியமூர்த்தி கதாபாத்திரங்கள் உயிர்த்துடிப்புள்ள ஜீவன்கள்.

S. சீனிச்சாமி, சங்கனாச்சேரி.

இதுவரை நான் படித்த நாவல்களில் முதல் தரமானதும் மிகச் சிறந்ததுமானது 'பொன் விலங்கு'. ஒவ்வொரு நிகழ்ச்சியையும் வர்ணித்திருக்கும் முறையும், உவமைகள் காட்டியிருக்கும் அழகும், "பொன் மொழிகள்" மூலம் அளித்திருக்கும் அருமையும், கவிதைகளும் அவற்றின் நயங்களும் விளக்கப்பட்டிருக்கும் சிறப்பும், வாழ்வில் அன்றாடம் நாம் காணும் நிகழ்ச்சிகளுக்குக் கருவாக விளங்கும் காரணங்களை அலசிக் காட்டும் திறனும், பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய சமூகத்தில் நலிந்திருக்கும் ஊழல்களை உள்ளது உள்ளபடியே எடுத்துக் காட்டியிருக்கும் தைரியமும் வெறும் புரட்சியல்ல. இந்நாவலின் மூலம் ஆசிரியர் தம் லட்சியக் கனவுக்குப் பெருவாழ்வளித்துச் சமுதாயத்திற்குப் பெரும் சேவை செய்துவிட்டார் என்பதில் ஐயமில்லை. திரு. மணிவண்ணன் அவர்களுக்கு, இது ஒரு முழு வெற்றி.

கிருஷ்ணமூர்த்தி, லீட்ஸ் - 6, இங்கிலாந்து.

உண்மை, குறிக்கோள், ஒழுக்கம் இவற்றிலிருந்து வழுவாமல் இறுதி வரை போராடிய சத்தியமூர்த்தியின் பாத்திரம் உள்ளத்தில் அழியா ஓவியம். சமுதாயத்திற்கு இத்தகைய மக்களே தேவை. எழுத்தாணியின் வன்மை உலகறிந்ததொன்று. எனவே சமுதாயத்தினைத் திருத்த இது போன்ற கதைகளே விரும்பப்படுகின்றன. சத்தியமூர்த்தியின் பாத்திரத்தைப் பற்றி நான் எண்ணும் பொழுதெல்லாம் Dr. A.J. Gronin படைத்த 'The Keys of The Kingdom' என்னும் நூலில் வரும் பிரான்ஸிஸ் சிஷோமைத்தான் நினைவு கூர்கிறேன்.

வே.பா. சந்திரன், பி.எஸ்ஸி. ஹைதராபாத்.

இந்த மறுமலர்ச்சி யுகத்தில் காவியங்கள் ஏற்படாவிடினும், பொன் விலங்கைப் போல, சமுதாய வழிகாட்டியான நாவல்களே அழகிய காவியங்களின் இடத்தைப் பெற்றன. 'பொன் விலங்கு' பல யுகங்கள் வாழும், வாழ்விக்கும்.

இரா. நரசிம்மன், பெங்களூர் - 17.

இப்படிப்பட்ட சிறந்த ஒரு காவியத்தைப் படைப்பித்துத் தமிழ் மக்களின் எண்ணங்களில் நீங்காத இடம் பெற்றுவிட்ட மணிவண்ணன் அவர்களை நான் புகழப்போவதில்லை. ஏனென்றால் அவர் ஒரு பூரணியையும் ஒரு அரவிந்தனையும் படைப்பித்து வாசகர்களுக்கு மத்தியில் நடமாட விட்டதின் மூலம் புகழக்கூடிய நிலையிலிருந்து மேலே போய்விட்டார்.

இரா. சேஷன், சென்னை - 2.

அருமையான இரு பெண் படைப்பு. அதில் ஒருத்தி "இன்பம்" என்னவென்று அறியும் முன்னே இறந்துவிட்டாள். மற்றொருத்தியை இன்பத்தை அனுபவிக்க முடியாமலே செய்துவிட்டார் மணிவண்ணன்.

ச. சுபாஸ் சந்திரன், நெல்லை.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகச் சிறந்த முறையில் உருவாக்கியிருக்கிறார் மணிவண்ணன். தூய்மையான காதலைத் தியாகம் செய்த பாரதி, அறிவுத்திறன் படைத்த பூபதி, உயர்ந்த கொள்கையுடைய உண்மை நண்பன் குமரப்பன் ஆகிய ஒவ்வொரு சிருஷ்டியும் ஆசிரியரின் கற்பனை வளத்தைச் சிறப்பாகக் காட்டுகின்றன.

பி.ஆர். கிருஷ்ணன், சென்னை - 12.

தெளிந்த நீரோடை போன்ற சரளமான நடையில், தமிழ் மணம் கமழ நவயுகக் கருத்துக்களை முன் வைத்து நல்லதோர் இலக்கியத்தைப் (பொன் விலங்கை) படைத்துத் தந்த ஆசிரியர் மணிவண்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

ஏரல், எஸ்.ஏ. சலாம், தனுஷ்கோடி

தென்னாட்டிலே மனித குலத்தில் இறுதி முடிவு வரை அரவிந்தன்களும் சத்தியமூர்த்திகளும் ஆசிரியர் மணிவண்ணனின் உருவிலே மூலைக்கு மூலை தமிழ் மொழியின் புகழை மேன்மேலும் பரப்ப உதவுவார்கள் என்பதிலே ஐயமில்லை.

பெரிய பெரிய பண்டிதர்களால் கூடக் கூற முடியாத அரும் பெரும் தத்துவங்களையும், கலையுணர்ச்சிகளையும் மிக மிக எளிதாகப் பாமரரும் அறியும் வண்ணம் அழகுத் தமிழிலே இந்த நாவல் வடிவிலே அளித்து விட்டார் மணிவண்ணன்.

டி.டி. துரைராசன், மேற்கு மாம்பலம்.

அத்தியாயம் - 1

"நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ, அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"

வாழ்க்கையின் எல்லாவிதமான அழகுகளும் இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பமாகின்றன என்பது போல் அந்த மலைச் சிகரங்கள் அத்தனை அழகாக இருந்தன. அழகாயிருக்கிற எல்லாவற்றையும் உங்களால் இரசிக்க முடியுமானால் மல்லிகைப் பந்தல் என்ற பெயரின் அழகைக் கூட நீங்கள் நன்றாக இரசித்து அனுபவிக்க முடியும்தான். சாயங்காலம் ஆறு ஆறரை மணி சுமாருக்குச் சூட்கேஸும் கையுமாக 'மல்லிகைப் பந்தல் ரோடு' இரயில் நிலையத்தில் இறங்கிய முதல் விநாடியிலிருந்து இந்த விநாடி வரை சத்தியமூர்த்தி அந்தப் பெயரின் அழகைத்தான் இரசித்துக் கொண்டிருந்தான்.

மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸையும் கோட்டை விட்டு விட்டு இப்படி அந்தப் பெயரின் அழகையும் அந்த அழகின் தொலைதூரத்துச் சாட்சிகளாய்ச் சாயங்கால வானத்திலே மெல்லிய ஓவியக் கோடுகள் போல ஏறி இறங்கித் தெரியும் மலைகளையும் இரசிப்பதில் தனக்கென்ன இலாபம் என்று அவன் நினைக்கவில்லை. இன்னொன்றின் நலத்தைப் புரிந்து கொள்ள முயலும்போதோ, உணரும் போதோ சுயநலத்தை அளவுகோலாக வைத்து, இலாப நஷ்டம் பார்க்கும் வழக்கம் அவனிடம் என்றுமே இருந்ததில்லை.

இலாபகரமாகவோ செழிப்பாகவோ வாழ்ந்தும் அவனுக்குப் பழக்கமில்லை. தன்னுடைய கஷ்டங்களைச் சகித்துக் கொண்டே பிறருடைய இலாபங்களுக்காக நிறையச் சந்தோஷப்பட்டிருக்கிறான் அவன். முள் படுக்கையின் மேல் கால் நீட்டிப் படுத்துக் கொண்டே முகம் மலரச் சிரிக்கும் சில அபூர்வ யோகிகளைப் போல் வாழ்க்கையின் கவலைகளைச் சுகமாக ஏற்றுக் கொண்டு வளர்வது அவனுக்குப் புதுமையில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து அவன் அப்படித்தான் வளர்ந்திருக்கிறான். இன்னும் நன்றாகச் சொல்லப் புகுந்தால் கல்லூரி நாட்களிலிருந்தே அவன் அப்படித்தான். அவனது படிப்பும் சிந்தனையும் வெறும் புத்தகங்களால் மட்டுமே வளர்ந்ததில்லை. அவற்றின் வளர்ச்சிக்கு வாழ்வில் அவன் அடைந்த கவலைகளும் கஷ்டங்களும் பெரும்பாலும் உதவி செய்திருக்கின்றன.

மலையடிவாரத்து இரயில் நிலையமாகையினால் மெல்ல மெல்லக் குளிர் உறைக்கத் தொடங்கியிருந்தது. புகை படர்வது போல் கண்ணெதிரே தெரியும் தோற்றங்களைப் பனி மூடியிருந்தது. இரயில் சக்கரங்கள் உரசி உரசித் தேய்ந்த இருப்புப் பாதைகள் அந்த இருட்டிலும் வெள்ளிக் கோடுகளாய் நெடுந்தூரத்துக்கு மின்னிக் கொண்டிருந்தன. அந்த இடத்திலிருந்து அறுபது மைல் தொலைவு பயணம் செய்து மல்லிகைப் பந்தலுக்குப் போக வேண்டும். இரயிலிலிருந்து இறங்கியவுடன் சாயங்காலம் மேலே மலைக்குப் போகிற கடைசிப் பஸ்ஸிலேயே அவன் போயிருக்க வேண்டும். தற்செயலாய்ச் சந்திக்க நேர்ந்த நண்பன் ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்ததில் பஸ் தவறி விட்டது. இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிப் படி இறங்கினால் எதிரே பஸ் ஸ்டாண்டு தான். அவ்வளவு அருகில் இருந்தும் மிகச் சில விநாடிகளில் பஸ்ஸைத் தவற விட்டுவிட்டான் அவன். நண்பனைத் தவறவிட்டிருந்தால் பஸ் தவறியிருக்காது. பழகிய நண்பனைத் தவறவிட முடியாத காரணத்தால் பஸ் தவறிவிட்டது.

"சத்யம்! எங்கே இந்தப் பக்கம் இப்படி அபூர்வமாக..." என்று கேட்டுக் கொண்டே முகத்தில் ஆச்சரியமும் மலர்ச்சியும் தோன்ற எதிரே வந்துவிட்ட நண்பனை எப்படிப் பார்க்காதது போல் போய்விட முடியும்? நண்பனோடு பேசி அனுப்பிவிட்டு இரயில் நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்று பார்த்தபோது, பஸ் போயிருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ பல நல்ல சந்தர்ப்பங்கள் இப்படிக் கடைசி விநாடியில் தான் தவறியிருக்கின்றன. இன்றைக்கு இந்தப் பயணமும் அப்படித்தான் தவறிப் போய்விட்டது.

நாளைக்குப் பொழுது விடிந்தால் சரியாகப் பத்து மணிக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரி இண்டர்வியூவுக்குப் போய் நிற்க வேண்டும் அவன். காலையில் முதல் பஸ் ஏழு மணிக்கோ ஏழே கால் மணிக்கோ இருப்பதாகச் சொன்னார்கள். அதில் இடம் கிடைத்துப் புறப்பட்டுப் போனால் பத்து மணிக்கு மேல்தான் மல்லிகைப் பந்தலுக்கே போய்ச் சேர முடியும். இண்டர்வியூவுக்குப் போகுமுன் குளித்து உடைமாற்றிக் கொள்ளக்கூட நேரமிருக்காது.

மலைநாட்டு நகரமான மல்லிகைப் பந்தலைத் தேர்ந்தெடுத்து அங்கு ஓர் இலட்சியக் கலைக் கல்லூரி நடத்திவரும் தொழிலதிபர் பூபதியைப் பற்றிச் சத்தியமூர்த்தி நிறைய கேள்விப்பட்டிருந்தான். கண்டிப்பும் கண்ணியமும் உள்ளவராகச் சொல்லப்படும் அந்தப் பெரிய மனிதர் இண்டர்வியூவுக்குத் தாமதமாக வந்து நிற்கும் ஒரு விரிவுரையாளனைப் பற்றி என்ன நினைப்பார்? இதை நினைத்துப் பார்க்கும் போதே மனம் வேதனைப்பட்டது அவனுக்கு.

நான்கு புறமும் பச்சை வெல்வெட் பதித்த நகைப்பெட்டிக்குள் கிடக்கும் முத்தாரத்தைப் போல் ஏலமும், காப்பியும், தேயிலையும், கொக்கோவும், தேக்கும், ரப்பரும் விளையக்கூடிய வளமான மேற்கு மலைத் தொடரின் சரிவில் பள்ளத்தாக்கினிடையே அமைந்திருக்கும் அந்த அழகிய ஊரில் வேலை செய்யும் வாய்ப்பைப் பெற முடியாமல் இழந்து விட நேருமோ என்று எண்ணியபோது அந்த இழப்பை வெறும் நினைப்பளவில் ஏற்றுக் கொள்ளக்கூடத் தயங்கியது அவன் மனம்.

தன் இலட்சியத்துக்கும் மனப்பான்மைகளுக்கும் ஒத்து வராது என்ற காரணத்தினால் எத்தனையோ பல நல்ல வேலைகளுக்கு அவனே முயற்சி செய்யாமல் விட்டுவிட்டிருக்கிறான். திருமணமாகாத தங்கைகள் இருவரும் மூத்துத் தளர்ந்த பெற்றோரும் தன் கையை எதிர்பார்த்துக் குடும்பத்தின் தேவைகளை முன் வைத்துக் காத்துக் கொண்டிருப்பதும் வயிற்றைப் பணயம் வைத்து வாழ வேண்டிய அவசியமும் ஒருபுறம் இருந்தாலும், மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையை அவனே மனம் விரும்பி அடைய முயன்றான். அவனுக்கே அதில் ஓர் ஆசை இருந்தது.

முக்கியமான ஊர்களில் பெரிய ஓட்டல்கள் இருப்பது போலத்தான் கல்லூரிகளும் இருக்கின்றன. மேற்கு நாடுகளில் இருப்பது போல் அமைதியான நாட்டுப்புறங்களிலும் வனப்பு வாய்ந்த மலை நகரங்களிலும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் ஏற்படுகிறவரை இந்த நாட்டில் சர்வகலாசாலைப் படிப்பு ஒரு புதிய மறுமலர்ச்சியை அடையப் போவதில்லை. ஒழுங்கு, மரியாதை, கட்டுப்பாடுகளோடு மாணவர்களை உருவாக்கி ஆசிரியர்கள் பெருமதிப்பை அடையும் கல்லூரிகள் அத்தி பூத்தாற் போல் இருக்கின்றன. 'தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் தேவை' என்ற கல்லூரிகள் ஆசிரியரைத் தேடி விளம்பரம் செய்கிறாற் போல - "இலட்சியவாதியான சிறந்த ஆசிரியர் ஒருவர் வேலை செய்யத் தகுதி வாய்ந்த கல்லூரி ஒன்று தேவை என்பதற்காக நானே பத்திரிகையில் விளம்பரம் செய்யலாம் என்று பார்க்கிறேன்" என்று விதண்டாவாதம் பேசி நண்பர்களிடம் விவாதம் செய்கிற சத்தியமூர்த்தியே மனம் ஒப்பி ஒரு கல்லூரி வேலையைத் தேடிக் கொண்டு புறப்பட்டதைக் கண்டுஅவனோடு பழகியவர்கள் ஆச்சரியம் தான் அடைந்தார்கள். சத்தியமூர்த்தி அந்தக் கல்லூரியின் விரிவுரையாளனாக விரும்பியதற்கு இரண்டு சரியான காரணங்களிருந்தன. ஒரு காரணம்; அந்த ஊரின் இயற்கை வனப்பு; மற்றொரு காரணம்; அந்தக் கல்லூரியின் வனப்பு.

தமிழ்நாட்டின் செழிப்பான ஆற்றங்கரைகளிலும் சாலைகள் செல்லாத மூலை முடுக்குகளிலும் இப்படி எத்தனையோ அழகான ஊர்கள் இருக்கலாம். ஆனால் மல்லிகைப் பந்தலின் அழகும் இயற்கை எழிலும் அவை எல்லாவற்றிலிருந்தும் தனியாகப் பிரித்துச் சிறப்பாகச் சொல்லத் தகுந்த ஒன்றே தவிர அவற்றோடு சேர்த்து அவற்றில் ஏதோ ஒன்றாக வைத்து எண்ணத்தகுந்தது அல்ல. அப்படிச் சிறப்பித்துச் சொல்லுவதற்குத் தனியாக ஒரே காரணம் மட்டுமில்லை. சிறப்பாகப் பல காரணங்கள் இருந்தன.

கிராமத்தின் அழகுகளும், நகரத்தின் சௌகர்யங்களும் நிறைந்த ஊர்? கவர்ச்சிமிக்கதாக இருப்பதற்குக் கேட்பானேன்? மண்ணின் பெருமை - அதன் மேலே வாழும் மனிதர்களின் குணங்களை வைத்துக் கணிக்கப்படுகிறது என்பது சரியானால் மல்லிகைப் பந்தலில் அப்படிக் குணங்களை உடைய பெருந்தன்மையாளர் சிலர் எப்போதும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்.

"நாடாயிருந்தால் என்ன? காடாயிருந்தால் என்ன? மேடாயிருந்தால் என்ன? பள்ளமாயிருந்தால் என்ன? எங்கு உன்மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் மண்ணே!"

- என்று மண்ணை வாழ்த்திப் பாடியிருக்கிறாளே, தமிழ் மூதாட்டி - அந்த வாழ்த்து மல்லிகைப் பந்தலுக்கு முற்றிலும் பொருந்தும். காடாரம்பமான அந்த மலை நாட்டு நகரம் ஆரவார வேகங்களிலிருந்தும் பரபரப்பான ஆடம்பரங்களிலிருந்தும் விலகி ஒதுங்கியிருந்தாலும் நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் இருப்பிடமாக விளங்கியது!

நாகரிகம் பெரிய பெரிய நகரங்களிலிருந்து பிறந்து வளர்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது இன்றைய நகரங்களின் நெருக்கடியில் இருப்பதற்கு இடமில்லாமல் புறக்கணிக்கப்பட்டு மல்லிகைப் பந்தலைப் போன்ற சிறிய அமைதியான ஊர்களில் ஒதுங்கிப் புகழிடம் பெற்றிருந்தது.

மல்லிகைப் பந்தலில் வாழ்க்கை இயந்திரமாக ஓடிக் கொண்டிருக்காது. நிதானமாக நடந்து கொண்டிருக்கும். தார் ரோடுகளும் சிமெண்டுப் பூச்சுக்களும் தரையை மூடி மண்ணின் ஈர வாசனையைத் தடை செய்யமாட்டா. எல்லா இடங்களிலும் ஈர மண்ணின் மணம் தன் சகலவிதமான வளங்களோடும் எக்காலமும் மணந்து கொண்டிருக்கும். காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் தாகத்தோடு அங்கு மனிதர் தேவைகளுக்கு மீறிய பரபரப்புக் கொண்டு திரிய மாட்டார்கள். காரியங்கள் நியாயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடும், நாணயத்தோடும் நிதானமாக உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்த ஊர் மக்களைப் போலவே எவரையும், எப்போதும் வாட்டவோ, காயவோ விரும்பாதது போல் ஆண்டு முழுவதும் ஒரேவிதமான குளிர்ந்த சூழ்நிலை அங்கு நிலவிக் கொண்டிருக்கும். இத்தகைய அழகிய ஊரை இன்னும் அழகுபடுத்துவது போல் தொழிலதிபர் பூபதி ஒரு சிறந்த கலைக் கல்லூரியை அங்கு நிறுவி வளர்த்திருந்தார். எங்கோ ஒதுக்குப்புறமான மலைகளுக்கு நடுவே உள்ள ஊரில் அமைந்திருந்தாலும் படிப்பின் தரத்தினாலும் கல்வியைப் பரப்பும் உயர்ந்த இலட்சியத்தினாலும் மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிக் கட்டுப்பாடுகளாலும் தமிழ்நாட்டு மக்களிடம் பெரும் புகழ் பெறத் தொடங்கியிருந்தது அந்தக் கலைக் கல்லூரி. மிகப் பெரிய நகரங்களில் உள்ளவர்களும் கூட அந்தச் சிறிய மலை நகரத்தைத் தேடிப் போய்த் தங்கள் பிள்ளைகளையோ, பெண்களையோ சேர்க்கத் தவிப்பதும் சிபாரிசு தேடுவதும் வழக்கமாயிருந்தது. அங்கு சேர்ந்து கல்வி கற்பதையே ஒரு பாக்கியமாகக் கருதினார்கள் பலர்.

சத்தியமூர்த்தி மனம் ஈடுபட்டு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது இலகுவாகத் தேர்ந்தெடுக்கத் துணிந்து விட மாட்டான்.

"நல்ல வேலையாகத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது கிடைக்கிறவரை உண்மையே மேலெழுந்து நிற்பது போல் உயர்ந்து தோன்றும் மதுரையின் இந்தக் கோபுரங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதையே நான் ஒரு வேலையாகச் செய்து கொண்டுதான் இருக்கிறேன்" என்று தத்துவம் பேசிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தியே இண்டர்வியூவுக்குப் புறப்பட்டதைக் கண்டபின் மல்லிகைப் பந்தல் என்ற அந்த ஊரும் அதன் பெருமைக்கு ஒரு காரணமான பூபதி கலைக் கல்லூரியும் ஏதோ ஒரு விதத்தில் நிச்சயமான தகுதி வாய்ந்தவையாயிருக்கும் என்பது மேலும் உறுதியாகி விட்டது.

மாணவனாயிருக்கும் போதே சத்தியமூர்த்திக்கு நெஞ்சு உரம் அதிகம். எவ்வளவு வெம்மையான அனுபவமானாலும் தாங்கிக் கொண்டு அந்த வெம்மையையே உண்டு வலிமை பெறுவது அவன் வழக்கம். கல்லூரி நாட்களில் சகமாணவர்கள் அவனுக்கு நெருப்புக் கோழி என்று கூடச் சூடாக ஒரு பெயர் வைத்திருந்தார்கள். கல்லூரியில் மாணவர்களின் யூனியன் தலைவனாக இருந்து அவன் சாதித்த சாதனைகளும் சமாளித்த எதிர்ப்புக்களும் என்றும் மறக்க முடியாதவை. மாணவனாய் இருந்த காலத்தில் தன்னுடைய ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்திலும் கல்லூரியில் தான் தங்கிப் படித்த விடுதி அறையிலும் கீழ்க்கண்ட வாக்கியத்தைக் கொட்டை எழுத்துக்களில் பெரிதாக எழுதி வைத்துக் கொள்வது அவன் வழக்கம்.

"இது இப்படித்தான் நடக்கும் - இப்படித்தான் நடக்க முடியும் - என்று எந்த முயற்சியும் நீ ஆசைப்படுகிறபடியே முடிய வேண்டும் என்பதாகச் செயலை மறந்து விளைவை மட்டும் எண்ணிக் கற்பனைகளை வளர்க்காதே. அது வேறு விதமாக நடந்தாலும் தாங்கிக் கொள்ளத் தயாராக இரு. கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே" - என்று பலரிடம் பேசியும் பலமுறை பேசியும் திரும்பத் திரும்ப எழுதியும் இந்த வாக்கியங்களின் பொருள் அவன் மனத்தில் பதிந்து ஊறிப் போயிருந்தது. 'கீழே விழுவது மீண்டும் எழுவதற்காகவே' என்ற வாக்கியத்தை விவேகானந்தர் தம்முடைய தலைமுறையில் அடிமைத் தளையில் சிக்கிக் கீழே விழுந்து கிடந்த பாரத நாட்டை நினைத்துக் கூறினாரா, தனி மனிதனை நினைத்துக் கூறினாரா என்று சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை ஆழ்ந்து சிந்தித்திருக்கிறான்.

பஸ்ஸைத் தவறவிட்டுவிட்டு, மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்தின் பிரயாணிகள் தங்கும் அறையில் உட்கார்ந்து நிதானமாக அந்த ஊரின் பெயரழகை இரசித்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வாக்கியத்தைத்தான் நினைத்துக் கொண்டிருந்தான் அவன். அவனுடைய வறுமைமயமான இளமைப் பருவத்தில் இந்த வாக்கியத்தை அடிக்கடி நினைத்தாக வேண்டிய பல சந்தர்ப்பங்கள் அடுக்கடுக்காக அவனுக்கு ஏற்பட்டிருக்கின்றன. கீழே விழுகிற போதெல்லாம் வேகமாக எழ வேண்டும் என்ற முனைப்பையும் தன்னம்பிக்கையையும் அவன் அடைந்திருக்கிறான். ஒவ்வொரு முறை கீழே விழ நேரிடும் போதும் முன்னால் விழுந்த போது எழுந்ததை விட இப்போது இன்னும் வேகமாக எழவேண்டும் என்ற துடிப்பை அவன் உணர்ந்திருக்கிறான். தன்னுடைய பலம், தான் அடைகிற வெற்றிகளால் ஞாபகப்படுத்தப் பெறுவதாக அவன் ஒரு போதும் நினைத்ததுமில்லை; நம்பியதுமில்லை; தன்னுடைய பலமும் வலிமைகளும் தான் அடைகிற ஒவ்வொரு தோல்வியின் போதும் தனக்கு ஞாபகப்படுத்தப் பெறுவதாகத்தான் அவன் உணர்ந்திருக்கிறான் - நம்பியிருக்கிறான் - வாழ்ந்திருக்கிறான்.

கல்லூரிப் புத்தகங்களும், பல்கலைக் கழகத்தார் கொடுத்திருந்த எம்.ஏ. டிகிரியும் செய்ததை விட அதிகமாகக் கவலைகளும், வறுமைகளும், ஏமாற்றங்களும், தோல்விகளுமே அவனைப் பெரிய சிந்தனையாளனாகச் செய்திருந்தன. நியாயமான கவலைகளில் பிறக்கிற சிந்தனையே தத்துவமாக மாறுகின்றதென்று கல்லூரி விவாத மேடையில் பலமுறை பேசியிருக்கிறான் சத்தியமூர்த்தி. ஒரு மனிதனின் நேர்மையான சமுதாயத் தேவைகள் கூட வாழ்க்கையில் அவன் நினைத்தவுடனேயோ, ஆசைப்பட்ட உடனேயோ கிடைத்து விடாதென்று சத்தியமூர்த்தி மிக இளமையிலிருந்தே உணர்ந்திருந்தான். அவனுடைய ஒரே வலிமை இந்த உணர்ச்சிதான். நல்ல மனிதன் வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்த்துப் போராட வேண்டியிருக்கும். சிந்தனையினாலோ, செயலினாலோ போராடித்தான் எதையும் அடையமுடியும். மனத்தினால் போராடப் பொறுமையும் பக்குவமும் இல்லாதவர்கள் தான் அவசரப்பட்டுக் கைகளால் போராடி விடுகிறார்கள்.

வாதாம் பழத்தில் பருப்பு மாதிரி உரித்துத் தட்டித் தேடிச் சுவையைக் கண்டுபிடித்து எடுக்க வேண்டியிருக்கிறது - வாழ்க்கையில். வாழ்க்கையின் மிகப்பெரிய தேவை செலவமும் செழிப்பும் அல்ல; இன்றுள்ள சூழ்நிலையில் நல்ல மனிதர்களும் நல்ல எண்ணங்களும் தான் சமுதாயத்தின் மிகப்பெரிய பற்றாக்குறையாய், மிகப்பெரிய தேவையாய் எதிர்பார்க்கப்பட்டு நிற்கிறது.

மல்லிகைப் பந்தல் ரோடு இரயில் நிலையத்து 'வெயிட்டிங் ரூமி'ல் அமர்ந்து இரவுச் சாப்பாட்டையும் பசியையும் மறந்து இப்படி ஏதேதோ சிந்தித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. குளிர் அதிகமாகவே பெட்டியைத் திறந்து சால்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டான். சாயங்காலம் கிடைக்காமல் தவறிப்போன கடைசி பஸ்ஸையும், நாளைக்குப் பொழுது விடிந்தால் அறுபது மைலுக்கு அப்பால் சரியாகப் பத்து மணிக்குக் காத்திருக்கும் 'இண்டர்வியூ'வையும் நினைத்தபோது மட்டும் சம்பந்தா சம்பந்தமின்றிப் போய்க் கொண்டிருந்த அவனது சிந்தனை ஒரு கணம் தடைப்பட்டு நின்றது. பின்பு மேலே வளர்ந்து தொடர்ந்தது.

இரயில் நிலையத்தில் பிரயாணிகள் தங்கியிருக்கும் அறைக்கு 'வெயிட்டிங் ரூம்' என்று பெயர் வைத்தவர்கள் எத்தனைப் பொருத்தமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள். வெயிட்டிங ரூமில் காத்துக் கொண்டிருக்கும் போதும் அப்படிக் காத்திருப்பவர்கள் இரயிலுக்காக மட்டும் காத்திருக்கவில்லை. சுகமும், துக்கமும், இலாபமும், நஷ்டமும், திருப்தியும், அதிருப்தியும் கலந்த, பல்லாயிரம் காரியங்களை நோக்கிப் புறப்பட்டுச் செல்வதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆசைகளும் நிறைவேற வேண்டியவைகளும் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருப்பதால் மனிதனுடைய மனம் தான் மிகப்பெரிய 'வெயிட்டிங் ரூம்' என்று பாதி வேடிக்கையாகவும் பாதி துயரமாகவும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்த வேளையில் அப்படிச் சிந்திப்பதில் ஒரு சுகம் இருந்தது.

மிகப் பல சமயங்களில் மனிதனுடைய மனம் தான் உடம்பைக் காட்டிலும் அதிகப் பரபரப்போடு காத்துக் கொண்டிருக்கிறது. இரயில் நிலையத்து 'வெயிட்டிங் ரூமி'லும் அப்படித்தான். முகத்தில் புன்னகை மலர அந்த வெயிட்டிங் ரூமில் தன்னைச் சுற்றிலும் இருந்தவர்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு கண் பார்வையைச் சுழலவிட்டான் சத்தியமூர்த்தி. அவனைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் இழுத்துப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் மனத்திலும் ஏதாவதொரு காரியம் காத்திருக்க வேண்டும். ஆனால் அது மற்றவருக்குத் தெரியவும் தெரியாது; புரியவும் புரியாது. ஏனென்றால் அந்த மற்றவர் மனத்திலும் எந்தக் காரியமோ காத்துக் கொண்டிருக்கிறது.

'அதோ அந்தக் கிழவர் மூலையில் சுருண்டு படுத்திருக்கிறாரே, அவருடைய தலைமாட்டில் இருக்கும் சிறு துணிப்பையையும், நெஞ்சுக்கும் சட்டைப் பையிலிருக்கும் பணத்துக்கும் பாதுகாப்பாகத் தூக்கத்திலும் அந்த இடத்தைத் தழுவியிருக்கும் அவர் கையையும் பார்த்தால், ஆறாவது பெண்ணுக்கோ, ஏழாவது பெண்ணுக்கோ வரன் தேடிப் புறப்படுகிற அப்பாவித் தந்தையாகத் தோன்றுகிறது. இதோ கழுத்தில் டையையும், மூக்குக் கண்ணாடியையும் கூடக் கழற்றாமல் உட்கார்ந்தபடியே பாதித் தூக்கம் தூங்கும் இந்த மனிதர் ஏதோ ஒரு கம்பெனியின் ஊர் சுற்றும் பிரதிநிதியாக இருக்க வேண்டும். இதோ இங்கே ரப்பர் தலையணையை ஊதி உப்ப வைத்துக் கொண்டிருக்கிற இந்தப் பையன் ஒரு கல்லூரி மாணவனாக இருக்க வேண்டும்.'

'எல்லாரும் காத்திருக்கிறார்கள். எதற்காக? இரயிலுக்காக மட்டும் அல்ல; வேறு எதற்காகவுமோ சேர்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்று எண்ணியபோது வாழ்க்கையையே ஒரு பெரிய வெயிட்டிங் ரூம் ஆகக் கற்பனை செய்யலாம் போலத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. அடுத்த கணமே அப்படிக் கற்பனை செய்வது தன் வயதுக்கு அதிகப் பிரசங்கித்தனமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது அவனுக்கு. புத்திக் கூர்மையாலும், துறுதுறுவென்று எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கும் சிந்தனை அனுபவத்தாலும் அவன் மனத்துக்கு வயது அதிகமாயிருந்தாலும் உலகம் அவனுடைய தோற்றத்தையும், உடலையும் இளமை மலர்ந்த வசீகரமான முகத்தையும் கொண்டு அவனை இளைஞனாகத்தானே சொல்லும். மூத்துத் தளர்ந்து தலை நரைத்த பின்பே சில உண்மைகளைச் சொல்லும் உரிமையை மனிதன் அடைய முடிகிறது. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக மூத்துத் தளர்ந்து தலை நரைத்த பின்போ உண்மைகளைப் பேசும் சுபாவமே சிலரிடமிருந்து போய்விடுகிறது. சிந்தனைச் சுதந்திரம் உள்ள நாடுகளில் உண்மையைப் பேச வயது ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பது சத்தியமூர்த்தியின் கருத்து.

வெடவெடக்கும் குளிரில் இன்று இரவு இந்த மலையடிவாரத்து இரயில் நிலைய வெயிட்டிங் ரூமில் விழித்துக் கொண்டிருப்பது போலவே வாழ்க்கை முழுவதும் மற்றவர்கள் சோர்ந்து தளர்ந்தாலும் தான் ஒரு சீராக விழித்திருக்க வேண்டுமென்று விநோதமானதொரு விருப்பம் உண்டாயிற்று அவனுக்கு. அந்த நல்ல விருப்பத்தை உடனே வைராக்கியமாக மாற்றிக் கொண்டது அவன் மனம்.

ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழிப்பதற்காக ரயில் நிலையத்துப் பழக்கடையில் நாலு மலைப்பழம் வாங்கிச் சாப்பிட்ட பின் 'வெயிட்டிங் ரூமி'ல் காலியாக இருந்த கட்டில் ஒன்றில் தலைக்கு அணைவாகச் சூட்கேஸை வைத்துக் கொண்டு படுத்தான் சத்தியமூர்த்தி. தூக்கம் வரவில்லை. கட்டிலில் புரண்டுகொண்டே விடியப் போவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். 'பொழுது விடிந்ததும் பஸ் நிலையத்துக்குப் போய் மல்லிகைப் பந்தலுக்குச் செல்கிற முதல் பஸ்ஸைப் பிடித்துப் புறப்பட வேண்டும். அப்படிப் போனாலும் 'இண்டர்வியூ'வுக்காகக் குறிப்பிட்டிருக்கும் நேரத்துக்கு மேலே அரைமணி நேரம் தாமதமாகிவிடும். ஆனால் பரவாயில்லை. எவ்வளவு கண்டிப்பான மனிதர்களாக இருந்தாலும் உண்மைக்கு ஒரு நிமிஷம் நெகிழ்ந்துதான் ஆக வேண்டும். எனக்குப் பஸ் கிடைக்கவில்லை என்பது உண்மை. தாமதமாக இண்டர்வியூவுக்கு வர நேர்ந்ததற்கு அதையே நான் காரணமாகச் சொல்லலாம். தவிரவும் பூபதி அவர்களைப் போல் கண்டிப்பிலும் கட்டுப்பாட்டிலும் அக்கறை உள்ளவர்கள் உண்மையை மதிப்பதிலும் அக்கறை உள்ளவர்களாகத்தான் இருப்பார்கள்' என்று எண்ணிக்கொண்டே படுத்திருந்த சத்தியமூர்த்தி சூட்கேஸின் மேல் வைத்திருந்த தன் தலை பட்டென்று கட்டிலில் மோதும்படி இருட்டில் ஒரு கை சூட்கேஸை உருவிவிட்டு நழுவியதை அவசரமாக உணர்ந்து அப்படியே தாவி எழுந்து அந்தக் கையையும் சூட்கேஸுடன் சேர்த்துப் பிடித்து விட்டான். அவன் படுத்துக் கொண்ட சிறிது நேரத்துக்கெல்லாம் வெளிச்சத்தில் தூக்கம் வராத யாரோ ஒரு பிரயாணி விளக்கை அணைத்திருந்தார். இருட்டில் சத்தியமூர்த்தி விழித்துக் கொண்டிருக்கிறானா, தூங்குகிறானா என்பதைப் புரிந்து கொள்ள முடியாததால் திருட வந்தவன் கையும் களவுமாகப் பிடிபட்டு விட்டான். வேறு யாராகவாவது இருந்தால் விளக்கைப் போட்டு 'வெயிட்டிங் ரூமி'ல் தூங்கியும் தூங்காமலும் இருந்த அத்தனை பேரையும் எழுப்பிப் பெரிய கலவரம் உண்டாக்கியிருப்பார்கள். சத்தியமூர்த்தி ஓசைப்படாமல் பிடிபட்ட கையையும் சூட்கேஸையும் சேர்த்து இழுத்துக் கொண்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்துக்கு வந்தான். சூட்கேஸை உருவிக் கொண்டு ஓட முயன்றவன் பதினைந்து பதினாறு வயது மதிக்கத்தக்க பையனாக இருந்ததைக் கண்டபோது கோபமும் கொதிப்பும் அடைவதற்குப் பதில் சத்தியமூர்த்தியின் மனத்தில் கருணையும் பரிவுமே ஏற்பட்டன. நெருப்புப் போல் செம்பட்டை படர்ந்திருந்த அந்தப் பரட்டைத் தலையும், இளமையின் மலர்ச்சியில்லாமல் பஞ்சடைத்த கண்களும் 'என்னை விட்டுவிடுங்கள்' என்று கெஞ்சுகின்ற முகமுமாக நின்ற அந்தப் பையனைப் பார்த்துச் சிரித்தான் சத்தியமூர்த்தி. பின்பு அந்த சிறுவனை நோக்கி நிதானமாகப் பேசினான்:

"பார்த்தாயா தம்பீ; காரும் பங்களாவும் டெலிபோனும் வைத்துக் கொண்டு உலகறிய நல்லவர்களாகவும் மனமறியப் பொய்யர்களாகவும் வாழ்ந்து மிகவும் கௌரவமாகத் திருடிக் கொண்டிருக்கிற பலர் சமூகத்தில் பிடிபட மாட்டார்கள். உன்னைப் போல் வயிறு பசித்துப் போய்த் திருடுகிற அப்பாவிகள் தான் பிடிபட்டுத் திருட்டுப் பட்டமும் கட்டிக் கொள்வார்கள். இதோ இப்படி என்னோடு வா. நீ திருடிக் கொண்டு போவதற்கிருந்த இந்தச் சூட்கேஸில் என்ன இருக்கிறதென்று நான் உனக்குக் காண்பிக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே மின்சார விளக்குக் கம்பத்தினடியில் பிளாட்பாரத்தில் இருந்த சிமெண்டு பெஞ்சுக்கு அந்தப் பையனை இழுத்துக் கொண்டு போய் வற்புறுத்தி உட்கார வைத்துத் தன்னுடைய சூட்கேஸைத் திறந்தான் சத்தியமூர்த்தி. பிடிபட்டு விட்ட அதிர்ச்சியிலும் கம்பீரமாக ஆறடி உயரத்திற்கு வாட்டசாட்டமாக நிற்கும் அந்தச் சூட்கேஸின் சொந்தக்காரர் தன்னை என்ன செய்யப் போகிறாரோ என்ற பயத்திலும் அந்தச் சிறுவனின் உடம்பு வெடவெடவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய குழிந்த கண்கள் மருண்டு நோக்கின.

"இதோ பார்? இது பல்கலைக்கழகப் பட்டம். இதைப் பெறுவதற்காக உழைத்துப் படித்துப் பெற்றுக் கொண்டவனே சில சமயங்களில் இதை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. அப்படி இருக்கும் போது இதைத் திருடிக் கொண்டு போய் நீ என்ன செய்ய முடியும்? இந்தப் பட்டத்தைத் தவிர வேறு நாலைந்து சர்ட்டிபிகேட்டுகளும் நன்னடத்தைச் சான்றிதழ்களும் இண்டர்வியூகார்டும் ஒருநாள் பயணத்திற்கான துணிமணிகளும் சோப்பும் சீப்பும் தான் இந்தச் சூட்கேஸில் இருக்கின்றன. பிறருடைய பணத்தைத் திருடினால் அதை நீ உன்னுடையதைப் போல் வைத்துக் கொண்டு செலவழிக்க முடியும். பிறருடைய படிப்பையோ பட்டத்தையோ திருடினால் ரூபாய் நோட்டைப் போல் அவற்றைச் செலவழித்து நீ ஒரு பயனும் பெற முடியாது. வயிற்றுக்கு இல்லாமல் ஏழையாகி விடலாம். ஆனால் பண்பினால் ஏழையாகிவிடக் கூடாது" என்று சட்டைப் பைக்குள் கையை விட்டு அங்கு நாணயங்களாகக் கிடந்த அத்தனை காசுகளையும் அரை ரூபாய் கால் ரூபாய்களையும் அந்தப் பையனின் கைகளில் அள்ளித் திணித்தான் சத்தியமூர்த்தி. பையன் ஒன்றும் புரியாமல் மலைத்துப் போய் நின்றான்.

தன்னுடைய சூட்கேஸை மூடிக் கொண்டு சத்தியமூர்த்தி மறுபடியும் 'வெயிட்டிங் ரூமு'க்குத் திரும்பி வந்தபோது அது இருளில் ஆழ்ந்து கிடந்தது. தூங்குகிறவர்களின் குறட்டை ஒலியும் தூங்காதவர்கள் புரண்டு படுக்கும் ஓசையுமாக இரவு பதினோரு மணிக்கு மேல் ஒரு மலையடிவாரத்து இரயில் நிலையத்துச் சூழ்நிலை எப்படி எப்படிச் சோர்ந்து போயிருக்க முடியுமோ, அப்படிச் சோர்ந்து போயிருந்தது அது. அவன் திரும்பி வருவதற்குள் முன்பு அவன் படுத்திருந்த கட்டிலை வேறொருவர் ஆக்கிரமித்துக் கொண்டிருந்ததன் காரணமாகப் படுக்க வழியின்றி அவன் நாற்காலியிலேயே உட்கார வேண்டியதாயிற்று.

'படிக்க வேண்டிய வயதில் படிப்புக்கும் வழியின்றி, பசிக்கும் வழியின்றி, இப்படித் திருட்டுத் தொழிலுக்குத் தயாராகும் சிறுவர்கள் பெருகப் பெருக இந்தத் தேசத்தின் சமுதாய வாழ்வில் எதனாலும் தீர்க்க முடியாத நோய் பெருகுகிறது. பத்தியமில்லாமல் மருந்து சாப்பிடுவதுபோல் இத்தகைய அடிப்படை நோய்களைத் தீர்க்காமல் வேறு வளர்ச்சிகளுக்குத் திட்டமிடுவதில் பயனென்ன?' - என்று எண்ணத் தொடங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. 'இந்தத் தேசம் முன்னேற ஒரே வழிதான் உண்டு. பிறருடைய உணவைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களைப் போல் பிறருடைய பசியைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களும் பெருக வேண்டும். ஆனால் இந்தத் தேசத்தின் துர்பாக்கியமோ என்னவோ, இங்கு மற்றவர்களுடைய உணவைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்களே அதிகமாக இருக்கிறார்கள். மற்றவர்களுடைய பசியைப் பங்கிட்டுக் கொள்ளும் மனிதர்கள் மிகவும் குறைவாக இருக்கிறார்கள்' என்று நினைத்து நினைத்து மனம் தவித்தான் அவன். 'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று பாரதி பாடியிருப்பது ஞாபகம் வந்தது. இப்படியே எத்தனை எத்தனையோ விதமான சிந்தனைகளில் நீந்தியே இரவைக் கழித்துவிட்டான்.

அங்கே அந்த மலையடிவாரத்து இரயில் நிலையத்தில் சூரியோதயம் மிகமிக அழகாயிருந்தது. ஒரு காரியத்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தூங்காமல் விழித்திருந்து தவித்த பின் விடிகிற விடியற்காலைக்குக் கவர்ச்சியும் அழகும் அதிகம். மனித இதயத்தைப் பலவிதமான சிந்தனைகளால் தவிக்கத் தவிக்கப் படுத்தியபின் மெல்ல மலர்கிற காலை விலைமதிப்பற்றதாக இருப்பதைச் சத்தியமூர்த்தி பலமுறை உணர்ந்திருக்கிறான். இரயில் நிலையத்து வெயிட்டிங் ரூமிலேயே அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு அவன் பஸ்ஸுக்குப் புறப்பட்ட போது காலை ஆறரை மணிக்கு மேலாகியிருந்தது. காலைச் சிற்றுண்டியைப் போகிற வழியிலிருந்த ஓர் ஓட்டலில் முடித்துக் கொண்டு அவன் பஸ் நிலையத்தில் நுழைந்த போது மலைமேல் உள்ள மல்லிகைப் பந்தலுக்குப் போகிற முதல் பஸ் தயாராக நின்று கொண்டிருந்தது. பஸ்ஸில் இரண்டு பேருக்கு மட்டுமே இடம் இருந்தது. சத்தியமூர்த்தி இரண்டாவது ஆளாக அந்தப் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். அவனுக்கு முன்பே ஒரு வெள்ளைக்காரர் ஏறிக் கொண்டு விட்டதனால் அந்தப் பஸ்ஸில் இடம் பிடித்த கடைசிப் பிரயாணி சத்தியமூர்த்தியாக இருந்தான். இன்னும் இரண்டு விநாடிகள் தாமதித்து வந்திருந்தால் அதுவும் தவறித்தான் போயிருக்கும். நல்ல வேளையாக அப்படி நேரவில்லை.

பஸ் புறப்பட்டது. அந்த அதிகாலை நேரத்தில் முகத்தில் சில்லென்று வந்து வீசும் குளிர்ந்த காற்றில் சிலிர்த்துக் கொண்டே பயணம் செய்வது சுகமாக இருந்தது. இருபுறமும் அடர்ந்து செழித்த பசுமையினிடையே வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதையில் போகும் போது சத்தியமூர்த்தியின் மனத்தில் அந்தப் பயணமே பெருமிதத்துக்குரியதோர் அனுபவமாகத் தோன்றியது. சாலையின் இருபுறமும் எங்கெங்கிருந்தோ பறவைகளின் இனிய ஒலிகளும் நீர் சலசலத்து ஓடும் ஓசைகளும் தந்தியிலிருந்து பிரிந்த நாதத்தைப் போல் விடுபட்டு அந்த இனிமையாய்ப் பிறந்த இடத்துச் சுவடு இல்லாமல் வந்து பரவிக் கொண்டிருந்தன. சௌந்தரியம் இறைபட்டுக் கிடக்கும் அந்த மலைகளின் வழியே பயணம் செய்து மல்லிகைப் பந்தலை அடைந்த போது பத்தேகால் மணிக்கு மேல் ஆகிவிட்டது. பள்ளத்தாக்கில் இறங்கி ஊருக்குள் புகுந்து நிலையத்தில் பஸ் நின்றவுடன் சத்தியமூர்த்தி அவசரமாகப் புறப்பட்டான். நான்கு புறமும் மலைகளுக்கு நடுவில் இப்படி அமைந்திருப்பதை விட வேறெந்த விதமாக அமைந்திருந்தாலும் அழகாயிராதென்பது போல் அவ்வளவு கச்சிதனமான அழகுடன் அமைந்திருந்தது மல்லிகைப் பந்தல். ஊரிலிருந்து சற்றே விலகி மலைச்சரிவில் கட்டப்பட்டிருந்த பூபதிக் கலைக் கல்லூரிக்குச் ச்த்தியமூர்த்தி போய்ச் சேர்ந்த போது பத்தரை மணிக்கு மேலும் மூன்று நான்கு நிமிடங்கள் ஆகிவிட்டன. அங்கே கல்லூரி அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் சத்தியமூர்த்தியை எதிர்பார்த்துத் தயாராகக் காத்திருந்தார்.

"கல்லூரி அதிபர் பூபதி அவர்களுக்கு உடல் நலக்குறைவாக இருப்பதால் இண்டர்வியூவை அவரது பங்களாவிலேயே நடத்திவிட ஏற்பாடாகியிருக்கிறது. பிரின்ஸிபாலும் அங்கேயே போய்க் காத்துக் கொண்டிருக்கிறார். உங்களை எதிர்பார்த்துத் தான் இங்கே நின்று கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் வந்தவுடன் அங்கே அழைத்துக் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்கள். புறப்படலாமா?" என்று சத்தியமூர்த்தியை எதிர்கொண்டார் அவர்.

அவன் கல்லூரிக் கட்டிடத்துக்குள் நுழைந்ததுமே அவனை இன்னாரென்று விசாரித்துத் தெரிந்து கொண்டவுடனேயே அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார் அவர். தாமதமாக வர நேர்ந்ததற்காகக் கல்லூரி அதிபரிடமும் முதல்வரிடமும் காரணம் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கும் என்று தான் எதிர்பார்த்ததற்கு மாறாகப் பண்புடனும், பெருந்தன்மையுடனும் தன்னை அழைத்துப் போக ஒரு மனிதர் காத்திருப்பதைப் பார்த்தவுடன் சத்தியமூர்த்தி வியப்படைந்தான்.

கல்லூரி காம்பவுண்டுக்கு மிக அருகிலேயே தனியாக மேடு போலிருந்த பகுதியில் அடர்ந்த தோட்டத்தினிடையே தொழிலதிபர் பூபதியின் பங்களா அமைந்திருந்தது. வீட்டுக்கு முன் நீண்ட பாதையில் இருபுறமும் குண்டு குண்டாகப் பூத்திருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நடந்தான் சத்தியமூர்த்தி.

அந்தப் பங்களாவின் முன்புறத்து அறை வாயிலுக்கு வந்ததும் சத்தியமூர்த்தியை உள்ளே செல்லுமாறு அறைப் பக்கம் கையைக் காண்பித்து விட்டு உடன் வந்தவர் வெளியிலேயே நின்று கொண்டார். அறைக்குள் நுழைந்ததுமே இலட்சிய ஆர்வமும், செல்வச் செழிப்பின் பெருந்தன்மையும் தெளிவாகத் தெரியும்படி வீற்றிருந்த அந்த முதியவரைத் தான் சத்தியமூர்த்தியின் கண்கள் முதன் முதலாகச் சந்தித்தன. பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் தான் கல்லூரியின் பிரின்ஸிபாலாக இருக்க வேண்டுமென்றும் அனுமானித்துக் கொள்ள முடிந்தது. சத்தியமூர்த்தி இருவருக்கும் வணக்கம் செலுத்திவிட்டு நின்றான்.

"இப்படி உட்காருங்கள்!" என்று தமக்கு எதிரேயிருந்த நாற்காலியைச் சுட்டிக் காண்பித்தார் பூபதி. சத்தியமூர்த்தி அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்தான். பிரின்ஸிபால் தம் கையிலிருந்த பைல் கட்டை அவிழ்த்து ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் அதிலிருந்து உருவி எடுத்துப் பூபதிக்கு முன்னால் வைத்துவிட்டு, "கே. சத்தியமூர்த்தி ஃபார் டமில் லெக்சரர் போஸ்ட்..." என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போய்ப் பழையபடி தம் நாற்காலியில் அமர்ந்தார். இருக்கிற நிலைமையைக் கூர்ந்து நோக்கி அநுமானம் செய்ததில் முழு இண்டர்வியூவையும் கல்லூரி அதிபரே நடத்திவிடுவார் போலத் தோன்றியது.

அந்த அறையையும், அதை நிரப்பியிருந்த பிரம்மாண்டமான புத்தக அலமாரிகளையும், அறைக்குள்ளிருந்தே வீட்டுக்குள் போவதற்காக உட்பக்கமாய் அமைந்திருந்த வாயிலில் தொங்கிய கிளிகள் எழுதிய துணித் திரைச்சீலையையும் சலவைக் கல் பதித்த தரையையும் ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. அதே நேரத்தில் அநுபவமும் படிப்பும் முதுமையும் நிறைந்த பூபதி அவர்களின் கண்கள் தன்னைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதையும் அவன் கண்டான். யாரோ நெருங்கிய விருந்தாளியை விசாரிப்பது போல் கேள்வி ஆரம்பமாயிற்று.

"ஹவ் டூ யூ ஃபைண்ட் திஸ் பிளேஸ்?" (இந்த ஊர் எப்படி இருக்கிறது?)

"வெரி நைஸ்... ஸோ பியூட்டிஃபுல்" (மிக நேர்த்தியாக இருக்கிறது... நிரம்ப அழகாயிருக்கிறது) என்று சிறிதும் இடைவெளி விடாமல் சுபாவமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. மீண்டும் சில கணங்கள் மௌனமாக அவன் முகத்தைப் பார்த்தார் அவர். அப்படிப் பார்த்தபின் சிரித்துக் கொண்டே மேலும் சொன்னார்:

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் என்னுடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக வேலைப் பார்ப்பதற்கு விண்ணப்பம் போட்டிருக்கிறீர்கள். உங்களிடம் நான் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு 'இண்டர்வியூ' செய்வது முறையில்லை. இனிமேல் எல்லாம் தமிழிலேயே கேட்கப் போகிறேன்..."

"அதனாலென்ன சார்? எந்த மொழியில் பேசினாலும் பேச நினைக்குமுன் உருவாகிய மனத்தின் கருத்து ஒன்றாகத்தான் இருக்கும்" என்று சத்தியமூர்த்தி பதில் சொன்னான். அவர் இந்தப் பதிலைக் கேட்டு அயர்ந்து போயிருக்க வேண்டும். ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலும் அவனைக் கேட்டார் அவர்.

"நீங்கள் இப்போதுதான் பஸ்ஸிலிருந்து இறங்கி நேரே இங்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்..."

"ஆமாம்! நேற்று மாலை கடைசி பஸ் தவறி விட்டது."

"இன்று காலை சரியாகப் பத்து மணிக்கு இங்கே இருக்க வேண்டும் என்று இண்டர்வியூ கார்டில் உங்களுக்கு எழுதியிருந்ததாக ஞாபகம்."

"எழுதியிருந்தபடியே வந்துவிடத்தான் முயன்றேன். ஆனால் பஸ் தவறி விட்டது."

"பஸ் தவறவில்லை. பஸ்ஸை நீங்கள் தவறவிட்டு விட்டீர்கள்..."

"....."

இந்த இடத்தில் அவருக்குப் பதில் சொல்வதற்குப் பொருத்தமான வார்த்தைகள் கிடைக்காமல் எதிரே தொங்கிய பச்சைக் கிளிகள் பறக்கும் திரையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்தத் திரை சற்றே விலகி நிஜமாகவே ஒரு கிளிக்குஞ்சு தெரிந்தது. விலகி மறைந்த திரையில் இருக்கும் பச்சைக்கிளி ஓர் இளம் பெண்ணாகி ஆனந்தம் பூத்துக் கொண்டிருக்கும் தன் அழகிய கண்களால் இங்கே அறைக்குள் நடந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்டிருப்பது புரிந்தது. வெள்ளைச் சலவைக்கல் தரையில் ரோஜா நிறம் பளீரென்று தெரியும்படி முன் நகர்த்தி ஊன்றிக் கொண்டிருந்த தன் சிவப்புப் பாதங்களை அந்தப் பச்சைக்கிளியின் கண்கள் இமையாமல் பார்ப்பது கண்டு கூச்சத்தோடு பின்னுக்கு நகர்த்தி வேஷ்டியின் விளிம்பில் அந்தப் பாதங்கள் மறையும்படி செய்து கொண்டான் சத்தியமூர்த்தி. திரை விழுந்தது. பறக்க முடியாத ஓவியக் கிளிகள் மறுபடி தெரிந்தன. உண்மைக் கிளி திரைக்குப் பின் மறைந்தது. அப்பால் பூபதி அவர்களின் பேச்சு மீண்டும் அவனோடு தொடர்ந்தது.

"மன்னிக்க வேண்டும், மிஸ்டர் சத்தியமூர்த்தி! இண்டர்வ்யூக்கள் கல்லூரி அலுவலகத்தில் வைத்தே நடத்தப் படுவது வழக்கம். இன்று என் உடல்நிலை காரணமாக இங்கே மாற்றினேன். அதனால் தான் நீங்கள் நேரம் தவறி வந்ததற்கும் சேர்த்து மன்னிக்கப்படுகிறீர்கள். இந்த இண்டர்வியூ கல்லூரியிலேயே நடந்து நானும் பத்து மணிக்குச் சரியாக அங்கு வந்திருந்தேனானால் பத்தடித்து ஐந்து நிமிஷம் வரை பார்த்துவிட்டு இண்டர்வியூவைக் கான்சல் செய்திருப்பேன்."

"சார்... வந்து..." என்று ஏதோ சொல்வதற்காக நிமிர்ந்தான் சத்தியமூர்த்தி. இப்போதும் திரைக்கு அப்பாலிருந்து ஆனந்தம் பூத்து மலரும் அந்தக் கண்கள் வெளியே தெரியத் தொடங்கியிருந்த அவனுடைய அழகிய நீண்ட நளினமான ரோஜா நிறப் பாதங்களைப் பார்த்துக் கொண்டிருந்தன. சத்தியமூர்த்தியின் பார்வை சென்ற பக்கமாகவே பூபதி அவர்களுடைய பார்வையும் திரும்பிச் சென்றது. சத்தியமூர்த்தி தலையைக் குனிந்து கொண்டான்.

"பாரதி! இப்படி வா... அம்மா..." என்று அவர் உட்புறமாகத் திரும்பி மெல்ல அழைப்பதைக் கேட்டுத் தலை நிமிர்ந்த சத்தியமூர்த்தி. மீண்டும் ஆனந்தம் பூக்கும் அந்தக் கண்களைச் சந்தித்தபோது இன்னும் அவை அவனது நீண்ட அழகிய சிவப்புப் பாதங்களையே பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அத்தியாயம் - 2

பெண்களோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் சிறிதும் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது.

பரிபூரணமாக இரண்டு கண்களிலும் ஒத்திக் கொண்டு வணங்குவதற்கும் அதிகமான மரியாதை எதையாவது செய்ய முடியுமானால் அதையும் செய்யலாம் போல அத்தனை அழகிய பாதங்கள் தாம் அவை. வெளேரென்று சுத்தமான நகங்களுக்குக் கீழே பவழ மொட்டுப் போல நுனிகளோடு வரிசையாய் முடியும் விரல்கள். அதன் அடிப்புறம் கீழ்ப்பாதத்தில் சிவப்பு நிறம் குன்றிப் பளீரென்று தெரியும் வெண் பளிங்கு நிறம் தொடங்குகிறது. எதிரே அமர்ந்திருந்த சத்தியமூர்த்தியின் பாதங்களைப் பார்த்துக் கொண்டே திரையை நன்றாக விலக்கிவிட்டு வெளியில் வந்த அந்தப் பெண் திரையில் எழுதியிருந்த ஏராளமான கிளிகளுக்கு நடுவேயிருந்து விடுபட்டுத் தனியே பறந்து வந்த ஒற்றைப் பச்சைப் பசுங்கிளியாய்த் தோன்றினாள்.

இன்னும் நன்றாகச் சொல்ல வேண்டுமானால் வைகறையில் ஒலிக்கும் பூபாளத்தைப் போல அந்த நேரத்தின் ஒரே அழகு தானேயாய், அந்த இடத்தின் ஒரே அழகு தானேயாய் அங்கு வந்து நின்றாள் அந்தப் பெண்.

"என் மகள் பாரதி..." என்று சத்தியமூர்த்தியிடம் சொல்லிவிட்டுப் பெண்ணின் பக்கமாய்த் திரும்பி, "இவர் நம்முடைய கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராவதற்காக விண்ணப்பம் போட்டிருக்கிறார். பெயர் சத்தியமூர்த்தி" என்று ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார் பூபதி. முதற் பார்வையின் முதற்கணத்திலேயே தன்னியல்பாக நேர்ந்து முடிந்துவிடுகிற பல அறிமுகங்கள் பெயரும் ஊரும் சொல்லாமலே கவனிக்க வேண்டுமென்ற கவர்ச்சியிலோ, ஆர்வத்திலோ, தற்செயலாக நேர்ந்தாலும் நடுவில் ஒருவர் இருந்து பேசியோ, புனைந்துரைத்தோ, செய்து வைக்காது இயற்கையாக நேரும் அந்த அறிமுகமே முதன்மையானதாயிருக்கிறது. அவளுடைய கண்கள் தாமாகவே முன்சென்று தரையில் பூத்துக் கிடக்கும் செந்தாமரைகளாய்த் தெரிந்த அந்தப் பாதங்களை முதன் முதலில் தனக்கு அறிமுகம் செய்து கொண்டன. அவனுடைய கண்களோ கிளிகள் பறக்கும் திரையின் நடுவே வண்டுகள் பறப்பது போல் துறுதுறுவென்ற கண்களோடு தெரிந்த அந்தக் கவர்ச்சிகரமான முகத்தை அறிமுகம் செய்து கொண்டன. அதற்குப் பிறகு இரண்டாவதாக யார் இன்னாரென்று நடுவில் வேறொருவர் சொல்லி விளக்கிச் செய்து வைத்த அறிமுகம் தான் செயற்கையாயிருந்தது.

பெண்ணிடம் ஏதோ சொல்லி அவளை உள்ளே அனுப்பிய பின் மறுபடியும் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி இண்டர்வ்யூவைத் தொடர்ந்தார் பூபதி. கண்டிப்பாகப் பேசுவது போல் அவருடைய பேச்சு இருந்தாலும், அவர் அவனுடனே உரையாடும் நேரத்தை வளர்த்துக் கொண்டு போக விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! எங்கோ ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த மலைநாட்டு நகரத்தில் ஒரு கல்லூரியை நான் எதற்காக நடத்திக் கொண்டிருக்கிறேன் தெரியுமா? கல்வியை வளர்ப்பதைவிட அதிகமாக ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நான். என்னுடைய கல்லூரியில் 'இண்டர்வ்யூ'வுக்கு வருகிற முதல் நாளிலேயே தாமதமாக வருகிற ஒருவரைப் பற்றி நான் என்ன அபிப்பிராயம் கொள்ள முடியும்?"

"மன்னிக்க வேண்டும்! என் முயற்சியையும் மீறி நடந்த தவறு இது. நான் வேண்டுமென்றே இப்படித் தாமதமாக வரவில்லை."

பூபதி அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிச் சிரித்தார். பின்பு அவருடைய கேள்விகள் வேறு விதமாகத் திரும்பின. சத்தியமூர்த்தியின் கல்வித் திறனையும், தகுதிகளையும் அறிந்து கொள்ள முயலும் கேள்விகள் அவரிடமிருந்து ஒவ்வொன்றாகப் பிறந்தன. அவற்றில் சில கேள்விகள் அவனை ஆழம் பார்ப்பவையாகவும் இருந்தன.

"இதோ, என் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே, எங்கள் கல்லூரியின் பிரின்ஸிபால் - இவருக்குத் தமிழ் ஆசிரியர்களைப் பற்றி எப்போதும் ஒருவிதமான பயமும் சந்தேகமும் உண்டு" என்று சொல்லிவிட்டுத் தம்முடைய அந்தக் கேள்வி சத்தியமூர்த்தியின் முகத்தில் எந்த உணர்ச்சியைப் பரவ விடுகிறதென்று கவனித்தார் பூபதி.

சத்தியமூர்த்தியின் இதழ்களில் புன்னகை மலர்ந்தது. "பயத்துக்கும் சந்தேகத்துக்கும் உரியவர்களாயிருப்பதற்கு அப்படி நாங்கள் என்ன செய்கிறோம்?"

"ஒன்று மாணவர்கள் மனங்களை எல்லாம் முற்றிலும் உங்கள் வசமாக்கிக் கொண்டு நீங்கள் சொல்லியபடி ஆட்டிப் படைக்கிறீர்கள். இரண்டு, பிடிவாதமும் முரட்டுக் குணமும் உள்ளவர்களாயிருக்கிறீர்கள். மூன்று, உங்கள் மொழியைத் தவிர மற்ற மொழிகளை மதிக்க மறுக்கிறீர்கள். உண்டா இல்லையா...?

"மாணவர்களை எங்கள் வசமாக்கிக் கொள்ள முடிவது எங்களது சாமர்த்தியம் தானே தவிரக் குற்றமாகாது. பிடிவாதமும், முரட்டுக்குணமும், மனிதர்களில் பலரிடம் உண்டு. அது எங்களிடம் மட்டுமே இருப்பதாகச் சொல்வதை நான் ஒப்புக் கொள்ள முடியாது. ஓர் ஆசிரியனுக்குத் தான் எந்த மொழியைக் கற்பிக்கிறானோ அந்த மொழியின் மேல் மதிப்பு இருப்பது எப்படிக் குற்றமாகும்? ஒரு குறிப்பிட்ட இனத்தாரைப் பற்றி எப்போதோ, எதற்காகவோ ஏற்பட்ட ஓர் அபிப்பிராயத்தை அந்த இனம் மாறி வளர்ந்துவிட்ட பின்பும் நிரந்தர வழக்கமாக்கிக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாது. நான் என் தாய்மொழியை மதித்து வணங்குகிறேன். மற்ற மொழிகளை மதிக்கிறேன்."

தன் முகத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் ஒளிர இந்த வார்த்தைகளைச் சத்தியமூர்த்தி கூறிய போது கல்லூரி முதல்வரும் அதிபர் பூபதியும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்து மெல்லச் சிரித்துக் கொண்டார்கள். ஒளி படைத்த கண்களில் உணர்ச்சியின் சாயல்கள் நன்கு தெரியும்படி தான் வாதிடுகிற விஷயம் எதுவோ அதில் சிரத்தையும், கவனமும், அழுத்தமும், கொண்டு சத்தியமூர்த்தி விவாதிக்கும் நயத்தை அந்தரங்கமாகத் தமக்குள் இரசித்துக் கொண்டிருந்தார் பூபதி. இப்படித் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தெளிவாக விவாதிக்கவும் முடிந்த இளைஞர் பலர் இந்த நாட்டுக்கு இன்று தேவை என்று நினைக்கிறவர் பூபதி. அதனால் தான் சத்தியமூர்த்தியின் பேச்சு அவரைக் கவர்ந்தது. அப்படிக் கவர்ந்தாலும் அந்தக் கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடுமையாக இருப்பவர் போல் அவனிடம் மேலும் மேலும் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார் அவர்.

பேச்சுக்கு நடுவே அவரது மகள் பாரதி ட்ரேயில் தேநீர் கொணர்ந்து மூவருக்கும் அளித்தாள். வளையாடும் அந்தப் பட்டுக்கை தேநீர்க் கோப்பையைப் பீங்கான் தட்டுடன் எடுத்து நீட்டிய போது ஒரு கணம் தனக்கு மிக அருகில் தெரிந்த அந்தத் தோற்றத்தின் அழகைக் கவனித்தான் சத்தியமூர்த்தி.

மகிழ்ச்சி பூத்து மலரும் குறுகுறுப்பான விழிகள். அந்த விழிகளே இதழ்களின் செயலைச் செய்து சிரிக்கும் நயம். இரசம் தளும்பி நிற்க ஈரச்சாயல் தெரியும் சிவப்புத் திராட்சைக் கனி போல் இதழ்கள். அந்த இதழ்களின் செம்மை மினுமினுப்பில் ஒரு மயக்கும் தன்மை. மொத்தத்தில் இருளை அள்ளிப் பூசிக்கொண்டு எதிரே வந்து நிற்கும் மின்னலைப் போல் இவள் அந்தக் கருநீலப் புடவையை உடுத்திய கோலத்தில் தோற்றமளித்துக் கொண்டிருந்தாள். கண் முடிகிற கோடி நுனியில் காதோரமாக இமைகளின் பூமயிர் மேல் நோக்கி ஏறி இறங்கி ஒரு சுழிப்புச் சுழித்திருந்த அழகையும், 'இந்த இடம் தான் நீங்கள் மயக்கப்படுகிற இடம்' என்று அந்த இடத்தில் கோடு கீறிக் காட்டினாற் போன்ற புருவங்களின் வனப்பையும் பார்த்த சத்தியமூர்த்தி அந்த அழகை எவ்வளவுக் கெவ்வளவு அருகில் நெருங்கிக் கண்டானோ, அவ்வளவுக்கவ்வளவு தனக்கும், அதற்கும் நடுவில் உள்ள தொலைவை அவனால் உணர முடிந்தது.

ட்ரேயைக் கொண்டு போய் வைத்துவிட்டு மறுபடி அந்த அறைக்குள் வந்து புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். மூன்று ஆண்பிள்ளைகள் உட்கார்ந்திருக்கிற இடத்தில் உள்ளே நுழைந்தவுடன் நான்காவது நாற்காலியில் தானும் உட்கார்ந்து விடாமல் சற்றே நாணத்தோடு அவள் ஒதுங்கி நின்றது சத்தியமூர்த்திக்கு மிகவும் பிடித்தது. செழிப்பும் பணவசதியும் உள்ள பல வீடுகளில் பெண்கள் ஆண்களாக நடந்து கொள்வதைச் சத்தியமூர்த்தி கவனித்திருக்கிறான்; வெறுத்திருக்கிறான்.

"பணக்கார வீட்டுப் பெண்களிடம், சிறிதும் இல்லாதது நாணம்; அதிகமாக இருப்பது அகம்பாவம். பெண்ணோடு அகம்பாவத்தையும் சேர்த்துப் பார்ப்பது தண்ணென்று குவித்த மணமிக்க மலர்க் குவியலில் நெருப்புப் பிடிப்பதைப் பார்ப்பது போல் பொருத்தமில்லாத சேர்க்கையாகத் தோன்றுகிறது. பெண் என்றால் அமைதி என்று அர்த்தம். இன்றோ அது பெண்ணைத் தவிர எல்லாரிடமும் இருக்கிறது" என்று நண்பர்களிடம் பல சமயங்களில் பேசியிருக்கிறான் அவன். பூபதியின் மகள் பாரதி அவன் சந்தித்த செல்வக்குடும்பத்துப் பெண்களில் முற்றிலும் புதுமையானவளாக இருந்தாள்.

பாரதியைப் பற்றிய அவன் சிந்தனைகளும் கவனமும் கலைந்து போகும்படி பூபதியின் கேள்விகள் மீண்டும் அவனை நோக்கி ஒலித்தன.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! இந்தக் கேள்வியை உங்களிடம் கேட்பதற்காக நீங்கள் வருத்தப்படக்கூடாது. நீங்கள் படித்துப் பட்டம் பெற்ற கல்லூரி அரசியல் குழப்பங்களுக்கும் மாணவர்களின் அடிதடி வம்புகளுக்கும் கால் நூற்றாண்டு காலமாகத் தமிழ்நாட்டில் பெயர் பெற்ற கல்லூரியாயிற்றே! முதல் வகுப்பில் தேறியிருந்தாலும், நிறைய நற்சான்றிதழ்களும், பதக்கங்களும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் நீங்கள் படித்த கல்லூரியைப் பற்றி நினைக்கும் போது நான் பயப்படுவது நியாயம் தானே?"

"இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட கல்லூரி ஒன்றில் படித்து உருவாகி வளர்ந்ததினால் தான் உங்கள் கல்லூரியைப் போல் ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள இலட்சியக் கல்லூரி ஒன்றில் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே எனக்கு உண்டாகியிருக்கிறது. அந்தக் கல்லூரியில் படிப்பைத்தான் நான் கற்றுக் கொண்டேனே ஒழியக் குழப்பங்களையும் அடிதடியையும் தேடிக் கற்றுக் கொள்ளவில்லை."

என்று சத்தியமூர்த்தி தலைநிமிர்ந்து மறுமொழி கூறிய போது எதிரே ஓர் ஓரமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்த பாரதியின் இதழ்களில் சிரிப்பு இழையோடியது. அவனுடைய மறுமொழியை அவள் இரசித்து மகிழ்கிறாள் என்பதற்கு அந்தச் சிரிப்பு ஓர் அடையாளமாக இருந்தது.

"உங்கள் வார்த்தைகளை நான் அப்படியே நம்புகிறேன் சத்தியமூர்த்தி! ஆனால் நீங்களே உங்களோடு எடுத்துக் கொண்டு வந்திருக்கும் சாட்சியங்கள் என் நம்பிக்கைக்கு நேர்மாறாக இருக்கின்றனவே? கல்லூரி மாணவர் யூனியனின் தலைவராக இரண்டு முறைகள் தொடர்ந்து நீங்களே இருந்திருக்கிறீர்கள். தவிர இதோ இந்தச் 'சர்டிபிகேட்' கல்லூரி நாட்களில் நீங்கள் மேடைப் பேச்சிலும், விவாதம் செய்வதிலும் இணையற்றவர் என்று வேறு சொல்கிறது. இவ்வளவும் உள்ள ஒருவர் அரசியல் குழப்பங்களிலிருந்து எப்படித் தப்பியிருக்க முடியும் என்று தான் சந்தேகப்படுகிறேன்..."

"சந்தேகப்படுவதற்கு எவ்வளவு உரிமை உங்களுக்கு உண்டோ அவ்வளவு உரிமை அதை மறுப்பதற்கு எனக்கும் உண்டு. ஒவ்வொரு சந்தேகத்துக்கும் அதை மறுப்பவனுடைய தெளிவிலிருந்துதான் ஆயுள் கணிக்கப்படுகிறது. மேடைப் பேச்சும், விவாதத் திறமையும் என் சாமர்த்தியங்கள். அவற்றை நான் படித்த கல்லூரியின் குழப்பங்களுக்கு இடையேயும் நான் தேடி அலைந்திருக்கிறேன் என்பதற்காக நீங்கள் என்னைப் பாராட்ட வேண்டும்" - இப்போதும் கூடத் தன்னுடைய பதிலின் நயத்தையும் அழுத்தத்தையும் பாராட்டி மகிழ்வது போல் அந்தப் பெண்ணின் கண்களும் இதழ்களும் சிரித்ததைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.

சத்தியமூர்த்தியின் மறுமொழிகளைக் கேட்கக் கேட்கக் கல்லூரி அதிபர் பூபதிக்கு ஒரு தகுதி வாய்ந்த மனிதனைச் சந்தித்துக் கண்டுபிடித்து விட்டோம் என்று அந்தரங்கமாகப் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதை மறைத்துக் கொண்டே அவர் மேலும் வழக்கமான கேள்விகளைக் கேட்கலானார்.

"எம்.ஏ., பி.ஓ.எல். போன்ற பட்டங்களைப் பெறுகிறவர்களை விடப் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் ஒரே ஆசிரியரிடம் நிகண்டு முதல் தொல்காப்பியம் வரை பாடம் கேட்டுத் தேர்ந்த தமிழ்ச் சங்கப் பண்டிதர்களும், புலவர்களும், வித்துவான்களும் தமிழை ஆழமாகப் படித்தவர்களாயிருக்கிறார்களே? கல்லூரிப் பாடங்களோடு தமிழையும் சேர்த்துப் படிக்கிறவர்கள் தமிழிலும் தேறுவதில்லை; ஆங்கிலத்திலும் சுமாராயிருக்கிறார்கள். பல்கலைக் கழக விதிகள் மட்டும் கண்டிப்பாயிராத பட்சத்தில் நான் என்ன செய்வேன் தெரியுமா? உங்களை 'இண்டர்வியூ'வுக்கு அழைத்திருக்கும் இதே வேலைக்குப் பழைய முறைப்படி ஆழமாகக் கற்ற ஒரு புலவரை அழைத்து நியமனம் செய்து விடுவேன்."

"இப்போது கூட ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. அப்படிச் செய்ய இடமிருந்தால் - அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் கருதினால் எனக்கு இந்த வேலையைத் தர வேண்டாம். ஆனால் நீங்கள் சொல்லியதில் ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியாது. பெரும்பாலோரை வைத்து தீர்மானம் செய்யப்படுகிற முடிவுகளையே நீங்கள் எல்லோரோடும் சார்த்திப் பேச விடமாட்டேன். பெரும்பான்மை முடிவுகள் சிறுபான்மையினரின் தகுதியைப் பாதிக்கும். என்னைப் பொறுத்தவரை கல்லூரிப் பாடங்களுக்கு மேலும் அதிகமான தமிழ் நூல்களையும் ஆங்கில நூல்களையும் தேடிக் கற்று என் படிப்பை நான் ஆழமாக்கிக் கொண்டிருக்கிறேன் என்பதை நன்றாக நிரூபிக்க முடியும்."

சத்தியமூர்த்தி உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசியதைக் கேட்டுப் பூபதி மெல்லச் சிரித்தார். "நீ உணர்ச்சி பொங்கப் பொங்கப் பேசும் அழகைக் கேட்பதற்காகவே இப்படி ஒரு கேள்வியை உன்னிடம் கேட்டேன்" என்று சொல்வது போலிருந்தது அந்தச் சிரிப்பு. சிரித்துக் கொண்டே தன் மகள் பாரதி நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி, "அம்மா! அந்தப் புத்தக அலமாரியின் மேல் தட்டில் மேற்குக் கோடியில் ஹட்ஸனின் 'இண்ட்ரொடக்ஷன் - டு - ஸ்டடி ஆஃப் லிட்ரேச்சரும்', ரிச்சர்ட்ஸின் 'லிட்டரரி கிரிடிஸிஸ'மும் இருக்கும். ஸ்டூலைப் போட்டுக் கொண்டு மேலே ஏறி அவைகளை எடு அம்மா..." என்றார் பூபதி.

பாரதி ஸ்டூலை நகர்த்தி, மேலே ஏறி நின்று அலமாரியிலிருந்து புத்தகங்களைத் தேடி எடுப்பதையே ஓர் அழகிய அபிநயம் போல் செய்யத் தொடங்கினாள். நிலவின் கதிர்களை உருக்கிப் படைத்தாற் போன்ற அந்த நளின விரல்கள் புத்தகத்தைத் தேடி எடுக்கும் காட்சியைச் சத்தியமூர்த்தி இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தான். புத்தகங்களை எடுத்துக் கொண்டு வந்து தந்தையின் முன்பாக மேஜையில் வைத்துவிட்டுப் பழையபடி ஒதுங்கி நின்று கொண்டாள் அந்தப் பெண். புத்தகங்களை வைப்பதற்காக ஒரே ஒரு கணம் தந்தையின் மேஜையருகே வந்த போது மறுபடியும் அவனுடைய அந்தச் சிவந்த பாதங்களைப் பார்க்கும் வாய்ப்பு அவள் கண்களுக்குக் கிடைத்தது. ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும், தோன்றிய இடத்தில் பிரித்து அந்தப் பக்கங்களில் இருந்தவற்றைக் கொண்டு ஏதோ சில கேள்விகளைச் சத்தியமூர்த்தியிடம் கேட்டார் பூபதி. அவருடைய கேள்விகளுக்குத் தெளிவாகவும், அழகாவும், உடனுக்குடன் பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. இந்தக் கேள்விகளைத் தனக்கு நேரும் சோதனைகளாகவோ, சிரமங்களாகவோ அவன் கருதவில்லை. தன் திறமையை நிரூபிக்க நேரும் சந்தர்ப்பங்களாக இவற்றை வரவேற்று மகிழ்ச்சியோடு மறுமொழி கூறினான் அவன்.

திருப்தியோடு அந்தப் புத்தகங்களை மூடி வைத்தார் பூபதி. பின்பு அவன் முகத்தை நன்றாக நிமிர்ந்து பார்த்துக் கொண்டே, "நீங்கள் கல்லூரியில் இலக்கிய வகுப்பு நடத்தும் போது, 'வாட் ஈஸ் லிட்டரேச்சர்?' (இலக்கியம் என்பது என்ன?) என்று ஒரு மாணவன் உங்களைக் கேட்பதாக வைத்துக் கொள்ளலாம். அப்போது நீங்கள் என்ன மறுமொழி சொல்லி அதை அவனுக்கு விளக்குவீர்கள்?" என்று அவனுடைய திறமையை இன்னும் பரிசோதிக்க முயலும் குறும்புச் சிரிப்போடு நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் பூபதி.

"லிட்டரேச்சர் ஈஸ் ஏ ரிகார்ட் ஆஃப் பெஸ்ட் தாட்ஸ்" (இலக்கியம் என்பது சிறந்த எண்ணங்களைப் பதித்து வைத்துக் கொண்டிருப்பது) என்ற எமர்சனின் கருத்தோடு தன் விளக்கத்தைத் தொடங்கிய சத்தியமூர்த்தி அரைமணி நேரம் வெண்கலமணியை அளவாக விட்டுவிட்டு ஒலிப்பது போல் கணீரென்ற குரலில் உணர்ச்சி நெகிழத் தானே அனுபவித்து இரசிக்கும் ஆர்வத்தோடு பேசிய பின்னே ஓய்ந்தான். 'இலக்கியம் இன்னதென்பதை இலக்கியத்தை ஆழ்ந்து கற்பதால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்' என்ற டி.எஸ். எலியட்டின் மேற்கோளுடன் கேட்பவர்களைக் கவர்ந்து மயக்கும் சிறியதொரு சொற்பொழிவாக நிறைந்து முடிந்தது அவன் பேச்சு. பிரின்ஸிபல் ஒன்றும் பேசத் தோன்றாமல் மூக்கில் விரலை வைத்தார். பூபதியின் மனத்தில் அந்தரங்கமான மகிழ்ச்சி அதிகமாயிற்று. சுவரில் சாய்ந்தாற்போல் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாரதியின் கண்களில் ஆனந்தம் இன்னும் அதிகமாகப் பூக்கத் தொடங்கியிருந்தது. சத்தியமூர்த்தி நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு 'இன்னும் ஏதாவது உண்டா?' என்பது போல அவரைப் பார்த்தான்.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! மற்ற இடங்களில் நடக்கும் 'இண்டர்வ்யூ'வுக்கும் இங்கு நடைபெறும் 'இண்டர்வ்யூ'வுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதை இதற்குள் நீங்களே தெரிந்து கொண்டிருப்பீர்கள். ஏதோ முறையைக் கழிப்பதற்கான ஒரு வழக்கமாகவோ, ஃபார்மாலிடியாகவோ 'இண்டர்வ்யூ'வை நாங்கள் இங்கே நடத்துவதில்லை. நாங்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவரைப் பலவிதங்களிலும் சோதனை செய்து தெரிந்து கொண்டாலொழியத் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே இப்போது உங்களிடம் கேட்கப்படும் எந்தக் கேள்வியையும் நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். புத்தகங்களைக் கையில் வைத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளைக் கேள்வி கேட்பது போல் இப்படியெல்லாம் கேட்கிறேனே யென்றும் நினைத்துக் கொள்ளாதீர்கள்..."

"நீங்கள் எப்படி வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம்! எதை வேண்டுமானாலும் கேட்கலாம். கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்குத் தயக்கமோ, பயமோ உள்ளவர்கள் ஆசிரியர் தொழிலுக்கு முன் வருவதற்கே தகுதியற்றவர்கள். என்னிடம் உள்ள திறமைகளை நானாகவே உங்களிடம் எடுத்துச் சொல்லிக் கொள்ள முடியாது. உங்களுடைய கேள்விகள் என் தகுதிகளை நியாயமாகவும் சுயநலமில்லாமலும் நான் உங்களிடம் வெளியிட்டுக் கொள்வதற்கு நீங்களே எனக்குச் செய்து தரும் வசதிகளாயிருக்கும்போது அவற்றை நான் ஏன் இழக்க வேண்டும்? நன்றாகக் கேளுங்கள். கேட்கலாமோ, கேட்கக் கூடாதோ என்ற தயக்கமின்றி எல்லாவற்றையும் கேளுங்கள்..." என்று சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் வந்த போது அவனுடைய துணிவைக் கண்டு பூபதி அவர்களும், கல்லூரி முதல்வரும் வியப்படைந்தார்கள்.

சத்தியமூர்த்தியோ தன்னுடைய உண்மை ஒளிரும் அந்தக் கண்களால் அவர்களையும், அவர்கள் மனத்தில் ஓடும் எண்ணங்களையும் அளந்து கொண்டிருந்தான். எப்போதும் வலது காலை முன் வைத்து 'இதோ வாழ்வில் இன்னும் ஓர் அடி முன்னால் நடந்து செல்லப் போகிறேன் நான்' என்பது போல் வலது பாதம் முன்னால் இருக்கும்படி வழக்கமாக உட்காரும் சத்தியமூர்த்தியின் இலட்சணமான கால்களைத் தன் அழகிய கண்களால் அளந்து கொண்டிருந்தாள் பாரதி.

"ஹட்ஸனையும், ரிச்சர்ட்ஸையும் பற்றி மட்டுமே உங்களிடம் கேட்டுப் பயனில்லை சத்தியமூர்த்தி! நீங்கள் இந்தக் கல்லூரிக்குத் தமிழ் விரிவுரையாளராகத் தானே வரப் போகிறீர்கள்? தமிழில் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டும். சங்க இலக்கியத்திலிருந்து ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லி விளக்குங்களேன் பார்க்கலாம்."

பூபதியின் இந்த வேண்டுகோளைச் சத்தியமூர்த்தி ஆவலோடு வரவேற்று ஒப்புக் கொண்டான். இந்த வேண்டுகோளை அவர் விடுத்திராத பட்சத்தில் தான் அவன் வருந்த நேரிட்டிருக்கும். ஆங்கில நூல்களையும், ஆங்கிலத்தையும் பற்றித் தன்னிடம் கேட்டுவிட்டுத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியோ, தமிழைப் பற்றியோ தன்னிடம் அவர் ஒன்றும் கேட்காமல் விட்டிருந்தால் தான் அவன் மிகவும் ஏமாறியிருப்பான். குறுந்தொகை என்னும் சங்கத்தொகை நூலிலிருந்து அழகிய பாடல் ஒன்றைக் கூறி அதன் பொருளை விளக்கி விவரித்தான் சத்தியமூர்த்தி.

"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே?"

"முன்பின் பழக்கமில்லாத அழகிய இளைஞன் ஒருவனும் எழிலரசியாகிய பெண்ணொருத்தியும் ஒரு மலைச் சாரலில் சந்தித்து மனம் ஒன்றுபடுகிறார்கள். அவன் அப்படியே தனக்கு முன்னால் தன்னுடனே தான் காணும்படி எப்போதும் நின்று கொண்டே இருக்க வேண்டும் போல் அவளுக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் அவனோ 'இதோ இன்னும் சிறிது நேரத்தில் நான் பிரிந்து போய் விடுவேன்' என்ற முகக்குறிப்புடனும் காரிய அவசரத்துடனும் அவள் முன் நின்றுக் கொண்டிருக்கிறான். அவன் பிரியப் போகிறான் என்பதை உணர்ந்ததும் அவள் தன் முகத்தில் மனத்தின் துயரம் தெரிய வாடி நிற்கிறாள். அந்த வாட்டத்தைப் பார்த்து அவன் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்கிறான்.

"எதற்காக இப்படி மனம் கலங்குகிறாய் பெண்ணே? உன்னைப் பெற்றவள் யாரோ? என்னைப் பெற்றவள் யாரோ? அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்திருக்கக் கூட மாட்டார்கள். என் தந்தையும் உன் தந்தையும் எந்த விதத்திலேனும் நண்பர்களுமில்லை. நீயும் நானும் இன்று இப்போது இங்கே சந்தித்துக் கொண்ட விநாடிக்கு முன்பாக என்றும் எப்போதும் எங்கும் நம்முள் ஒருவரை ஒருவர் சந்தித்து அறிந்து கொண்டதுமில்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் அந்த நிலத்தோடு கலந்து அதன் வண்ணமாகி விடுவது போல் நம்முடைய அன்பு நெஞ்சங்கள் இன்று இப்படிச் சந்தித்த கணத்திலேயே ஒன்று கலந்து விட்டனவே! இது எவ்வளவு பெரிய அதிசயம்?"

"உலகத்தில் தற்செயலாய்ச் சந்தித்து மனம் ஒன்றுபட்ட முதல் காதலர்களிலிருந்து பரம்பரை பரம்பரையாய் அதிசயமாயிருந்து வரும் ஓர் அழகிய தத்துவத்தை இந்தப் பாடலில் வரும் காதலன் பேசுகிறான். உள்ளங்கையையும் புறங்கையையும் போலக் காதலையும் வீரத்தையும் ஒரே பொருளின் இரண்டு பக்கங்களாக வைத்துத் தமிழ்ப் புலவர்கள் ஆயிரக்கணக்கான கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். ஆனாலும் காதல் என்ற தத்துவத்தை மிக நுணுக்கமாகச் சொல்கிற பாட்டு இதைப் போல் வேறொன்றும் இருக்க முடியாது. மனத்தோடு மனம் கலந்து சார்ந்ததன் வண்ணமாக மாறுவதற்குச் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரை உவமையாகக் கூறும் அழகு ஒன்றை மட்டும் வைத்துப் பார்த்தாலும் இந்தப் பாட்டு அட்சர லட்சம் பெறும். 'இப்போது இந்தச் சிறிது காலம் சந்தித்துப் பழகியதிலேயே யுகம் யுகமாக இப்படி வாழ்ந்து விட்டுப் பிரிய முடியாமல் தவிப்பதுபோல் நாம் தவிக்கிறோமே? இது என்ன ஆச்சரியம்?' என்று அவன் அவளிடம் கேட்பது போல் ஒரு தொனி நயமும் இந்தப் பாடலில் பொருந்தியிருக்கிறது. தாயும், தந்தையும் முன் நின்று முயலாமல், கொடுப்பாரும் அடுப்பாரும் இல்லாமல், தம்முள் தாமே, எதிர்ப்பட்டு மனம் ஒன்றுபடுகிற தெய்வீகக் காதலில் 'இது எப்படி நாம் இவ்விதம் ஆனோம்?' - என்று இதயம் கலந்த இருவருமே அதிசயப்பட்டு வியந்து கொள்ளும் ஒரு நிலை உண்டு தான். அந்த நிலையை இந்தப் பாடல் சித்திரித்திரிக்கிற விதம் ஈடு இணையற்றது. அந்தப் பாடலில் அவ்வளவு அழகும் நுணுக்கமும் பொருந்திய ஓர் உவமையைச் சொல்லிய திறமையால் இதைப் பாடியவருடைய இயற்பெயர் மறைந்து 'செம்புலப் பெயல் நீரார்' - என்றே அவருக்குப் பெயர் ஏற்பட்டு நிலைத்துவிட்டது."

சத்தியமூர்த்தி இந்தக் குறுந்தொகைப் பாடலை விளக்கி விவரித்த போது பூபதி மனநிறைவோடு புன்முறுவல் பூத்தார். பின்பு பிரின்ஸிபல் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பி அவர் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் அப்போது எந்த விதமான அதிருப்தியும் இல்லை என்பதைப் பூபதி அவர்கள் புரிந்து கொள்ள முடிந்தது. பூபதியும் கல்லூரி முதல்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் குறிப்பினால் பேசிக் கொண்டிருந்த அந்தச் சில கணங்களில் சத்தியமூர்த்தி எதிர்ப்புறம் நின்று கொண்டிருந்த பாரதியைப் பார்த்தான். அவளும் அப்போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து உள்ளே போய் அவுன்ஸ் கிளாஸில் ஏதோ மருந்துடன் தந்தைக்கு அருகில் வந்து, "அப்பா! மருந்து சாப்பிடுகிற நேரமாயிற்று" என்று கையில் கொண்டு வந்திருந்த மருந்தைத் தந்தைக்கு முன் மேஜையில் வைத்தாள் அந்தப் பெண்.

அவுன்ஸ் கிளாஸை எடுத்து மருந்தைக் குடித்து விட்டு அந்த மருந்தின் சுவை விளைவித்த உணர்ச்சிகளினால் முகத்தைச் சிலிர்த்துக் கொண்டு கண்களில் நீரரும்பிடச் சில கணங்கள் மோட்டு வளைவை வெறித்துப் பார்த்தார் பூபதி.

ஒரு கனைப்புக் கனைத்துத் தொண்டையைச் சரிசெய்து கொண்டு மறுபடியும் அவர் சத்தியமூர்த்தியிடம் பேசத் தொடங்கியபோது, சுவர்க் கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடித்தது. அந்த மணியோசையைக் கேட்டுத் தம் மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பூபதியின் முகத்தையும் பார்த்தார் கல்லூரி முதல்வர். பூபதியும் அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டவர் போல், "ஓ! உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா? நீங்கள் புறப்படலாம். இதோ இவருடைய விண்ணப்பம். இதைக் கொண்டு போய் மேலே ஆக வேண்டியதைச் செய்யுங்கள். நான் இவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் அனுப்புகிறேன்" என்று சொல்லிக் கொண்டே அந்த விண்ணப்பத்தின் பின்பக்கமாக ஏதோ குறிப்பு எழுதி அதை முதல்வரிடம் கொடுத்தார் பூபதி. பிரின்ஸிபல் அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவரிடமும் சத்தியமூர்த்தியிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

பிரின்ஸிபல் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்கெல்லாம் பூபதியின் மகள் பாரதியும் வீட்டின் உட்புறமாகச் சென்றுவிட்டாள். முன் பக்கத்து அறையில் சத்தியமூர்த்தியும், பூபதியும் தனியாக இருந்தார்கள். ஏதோ டெலிபோன் வந்தது. பூபதி பத்து நிமிடங்கள் டெலிபோனில் பேசிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தார்.

"மன்னியுங்கள். உடல்நலம் மிகவும் கெட்டுப் போயிருப்பதால் எனக்கு அதிகத் தளர்ச்சியாக இருக்கிறது. இப்படிச் சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே நான் உங்களோடு பேசலாமல்லவா?" என்று ஈஸி சேரில் சாய்ந்து கொண்டார் அவர்.

"நீங்கள் மல்லிகைப் பந்தலில் எங்கே தங்கியிருக்கிறீர்கள் மிஸ்டர் சத்தியமூர்த்தி?"

"எங்கும் தங்கவில்லை சார்! பஸ்ஸிலிருந்து இறங்கியதும் நேரே இங்கே தான் வருகிறேன். 'இண்டர்வியூ' முடிந்ததும் மாலையில் ஊருக்குப் புறப்படுவதாக இருக்கிறேன்."

"இந்த ஊருக்கு வருகிறவர்கள், இதன் இயற்கை அழகையும், சூழ்நிலைகளையும் பார்த்தபின் உடனே திரும்பிச் செல்ல நினைக்கலாமா?"

"நான் தான் இங்கேயே வந்துவிடப் போகிறேனே?"

"நீங்கள் வரவேண்டுமென்று இன்னும் அதிகாரப் பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே?" என்று கேட்டு விட்டுச் சிரித்தார் அவர். சிறிது நேரம் அவர்கள் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. தாம் அடுத்தாற் போல் அவனைக் கேட்க விரும்பிய கேள்வியை அவ்வளவு நேரம் இடைவெளி கொடுத்த பின் கேட்பது தான் நியாயமென்று கருதியவர் போல் நிதானமாகக் கேட்டார் பூபதி.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களுக்கு இன்னும் திருமணமாகவில்லை என்று நினைக்கிறேன். நான் நினைப்பது சரி தானே?"

"இன்னும் இல்லை" என்று சுருக்கமாகப் பதில் சொன்னான் சத்தியமூர்த்தி. கேள்வி விடாமல் தொடர்ந்தது.

"என்ன காரணமோ?"

"காரணம் எத்தனையோ இருக்கலாம். அவசியம் தெரிந்து கொள்ள வேண்டுமானால் முக்கியமான ஒரு காரணத்தை மட்டும் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனக்கு இரண்டு தங்கைகள் திருமணமாக வேண்டிய வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் முதலில் திருமணமாக வேண்டுமென்பது தான் எங்கள் குடும்பத்துக்கு இப்போது பெரிய பிரச்சினை."

"உங்கள் பொறுப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். ஆனால் அதே சமயத்தில் நான் உங்களுக்குக் கூறவேண்டிய அறிவுரை ஒன்றும் உண்டு."

"என்ன?"

"நான் சொல்லுகிறேன். அப்படிச் சொல்வதை உங்கள் மேல் அவநம்பிக்கைப்பட்டுச் சொல்வதாக எண்ணிக் கொள்ளாதீர்கள். பொதுவாக வயதில் மூத்தவன் என்ற உரிமையோடு வயதில் இளைஞராகிய உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன் நான்."

"..."

"இது ஒரு கோ-எஜுகேஷன் கல்லூரி. இங்கு ஆண்களோடு பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். இந்தக் கல்லூரிக்கு இன்று வரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும் நீங்கள் ஒருவர் தான் மிக இளம்பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது."

"..."

"இத்தனை ஆண்டுகளாகப் பல்கலைக்கழகத்தாரிடம் வாங்கியிருக்கும் பெரிய பெரிய கிராண்ட் தொகைகளுக்காகவோ முதல் தரக் கல்லூரி என்ற பெயருக்காகவோ நான் பெருமைப்படவில்லை. 'ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள தரமான கல்லூரி' என்று இந்த மாகாணத்துக்கு அப்பால் வெளி மாகாணங்களில் உள்ளவர்களும் போற்றும்படி ஒரு நல்ல பெயரை இந்தக் கல்லூரி எடுத்திருக்கிறது என்பதற்காகவே நான் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்."

"அந்த நல்ல பெயர் என்னால் ஒரு சிறிதும் கெட்டு விடாது சார்."

"இத்தகைய கல்லூரிகளில் மாணவ மாணவிகளிடம் நெருப்புக் காய்வது போல் அதிகம் விலகிவிடாமலும், அதிகம் நெருங்கிவிடாமலும் பழக வேண்டும்."

"புரிகிறது சார்..."

"மனம் விட்டு உண்மையைச் சொல்கிறேன், மிஸ்டர் சத்தியமூர்த்தி! உங்களைப் பல விதங்களில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிறிது நாழிகைப் பேச்சிலேயே என்னை நீங்கள் அதிகமாகக் கவர்ந்து விட்டீர்கள். உங்களைப் போல் இதை ஓர் இலட்சியமாக நினைத்து இந்தப் பணிக்கு வருகிறவர்கள் தான் நல்ல மாணவ சமுதாயத்தை உருவாக்கிப் பல்கலைக் கழகத்தின் படிகளில் இறங்கிச் செல்லுமாறு அனுப்ப முடியும். ஆனால்?"

- என்று மீண்டும் அவர் எதையோ சொல்லத் தயங்கி நிறுத்திய போது சத்தியமூர்த்தி எவ்வளவோ நிதானமாயிருந்தும் சற்றே பொறுமையிழந்து விட்டான்.

"என் வயதும் இளமையும் எனக்கு ஒரு தகுதிக் குறை என்று நீங்கள் நினைப்பதை என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை சார்! இளைஞர்களாயிருக்கிற அத்தனை பேரும் அயோக்கியர்கள் என்று நினைக்கும் மனப்பான்மையை வயது மூத்தவர்கள் இனியாவது இந்தத் தேசத்தில் விட்டு விட வேண்டும். வயது மூத்தவர்களில் ஒழுக்கம் தவறுகிறவர்களும், வ்ரன் முறையின்றி வாழ்கின்றவர்களும் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ஆரம்பித்தால் இளைஞர்களை விட அவர்கள் தொகைதான் அதிகமாக இருக்கும்" - என்று சத்தியமூர்த்தி அவரிடம் சிறிது உணர்ச்சி வசப்பட்டுப் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டபடியே திரை ஓரமாக வந்த பாரதி, 'வெண்ணெய் திரண்டு வருகிற சமயத்தில், தாழியை உடைக்கிறார் போல் அப்பாவின் மனத்தில் நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக் கொண்டு விட்டபின் இப்படி இவர் நிதானமிழந்து பேசாமலிருக்கக் கூடாதோ?' என்று தனக்குள் எண்ணித் தயங்கி நின்றாள். திரை மறைவில் இருந்தபடியே தலையை நீட்டி அப்பாவின் முகம் இந்தப் பேச்சைக் கேட்ட பின்பு எப்படி இருக்கிறது என்பதைக் கவனித்த போதும் அது நிச்சயமாகச் சரியாயில்லை என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது.

அத்தியாயம் - 3

ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது.

சில விநாடிகள் தன் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்குக் கூசினாற் போல் பூபதி அவர்கள் கீழே குனிந்து சாய்வு நாற்காலியிலிருந்தே கைக்கு எட்டும்படியாக மேஜை மேல் இருந்த காகிதக் கட்டு ஒன்றை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்ததைச் சத்தியமூர்த்தியும் கவனித்தான். 'ஒழுக்கம் குன்றியும், வரன்முறை இன்றியும் தவறு செய்யும் இளைஞர்களின் தொகையைக் காட்டிலும் அதே விதமான தவறுகளைச் செய்யும் வயதானவர்களின் தொகைதான் அதிகமாயிருக்கும் போல் தோன்றுகிறது' என்று சற்று முன்பு தான் துணிவாகக் கூறிய உண்மை எந்த விதத்தில் அவருடைய மனத்தைப் புண்படுத்தியிருக்க முடியும் என்று சிந்திக்கத் தொடங்கினான் அவன்.

போலி நாகரிகத்துக்காகவோ, எதிரே இருந்து கேட்பவர்களின் மனத்தைப் புண்படுத்திவிடுமே என்பதற்காகவோ நாவின் நுனியில் வந்து நிற்கும் எந்த உண்மையையும் இரண்டு உதடுகளுக்குள்ளேயும் அடக்கி வைத்துப் பழக்கமில்லை அவனுக்கு.

பொது வாழ்க்கையில் அதிக நன்மையைத் தரமுடியாத இந்தச் சுபாவத்தினால் பலருடைய நட்பையும் உதவிகளையும் அவன் இழந்திருக்கிறான். குறைவோ, நிறைவோ, தாழ்வோ, ஏற்றமோ, மனிதர்களோடு ஒத்துப் போவதற்கான குணம் அவனிடம் இல்லை என்று மாணவப் பருவத்துச் சக நண்பர்கள் பலர் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவனிடம் நேருக்கு நேர் வருத்தப்பட்டிருக்கிறார்கள். அவனைக் கடிந்து கொண்டுமிருக்கிறார்கள்.

"ஒத்துப் போவதும் மற்றவர்களைத் தேவைக்கு அதிகமாக மன்னிப்பதும், பிறருடைய பலவீனங்களுக்கு அநுசரணையாக நம்முடைய பலங்களையும், திறமைகளையும் ஒடுக்கிக் கொள்வதும், சமூகத்தில் ஒரே விதமான மனிதர்கள் தொடர்ந்து செழிப்பாய் வாழவும், கொழுத்துத் திரியவும் துணை செய்யுமே அல்லாமல் எல்லாருடைய நன்மைகளையும் பாராட்டுவதற்குத் துணை செய்யாது" என்று இந்தச் சுபாவத்துக்காகத் தன்னைக் கடிந்து கொள்ள வரும் நண்பர்களிடமெல்லாம் எடுத்தெறிந்து பதில் சொல்லியிருக்கிறான் சத்தியமூர்த்தி. மாணவ பருவத்திலிருந்தே படிப்படியாய் வளர்ந்திருந்த அஞ்சாமையும் துணிவும் எதிரே இருப்பவரைப் பாதிக்கும் என்பதற்காகவோ, எதிரே இருப்பவருக்குத் தன் மேல் கோபம் வரும் என்பதற்காகவோ எதையும் பேசத் தயங்காத நாவன்மையை அவனுக்களித்திருந்தன. இதன் காரணமாகப் பலவீனங்களும், குறைபாடுகளும் உள்ள பலருக்கு நடுவே தான் இருப்பதே அவர்களுக்கு ஒரு பயமுறுத்தலாய், தன்னைப் பார்ப்பதே அவர்களைக் கட்டுப்படுத்தும் ஒரு சட்டமாய் அவன் தோன்றியிருக்கிறான்.

இப்போதும் ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரே இருக்கிற பூபதி அவர்களைத் தன்னுடைய வார்த்தைகள் பாதித்திருகின்றன என்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. பெருந்தன்மையும் கொடைப் பண்பும் உள்ளவராகப் பலரால் புகழப்படும் இந்தக் கோடீஸ்வரரிடம் இப்படிப் பேசியிருக்க வேண்டாமோ என்று அவனுக்குச் சிறிது தயக்கமும் ஏற்பட்டது. அதே சமயத்தில் யாரையும் குறிப்பிட்டோ எவரோடும் சார்த்தியோ சொல்லாமல் தான் பொதுவாகச் சொல்லிய ஓர் உண்மையைக் கேட்டு அவர் ஏன் அப்படிக் கூசித் தலைகுனிய வேண்டும் என்ற நுணுக்கமான சந்தேகமும் அவனுள் ஏற்பட்டது. அவர் இன்னும் தலை நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்க்கவில்லை. அந்த மௌனம் அவன் மனத்தை ஓரளவிற்கு வருத்தவும் செய்தது. அவசியம் இல்லாததாகவும் விரும்பத்தகாததாகவும் நிலவத் தொடங்கியிருந்த அந்த மௌனம் கலைவதற்குத் துணை செய்தாள் அவருடைய மகள் பாரதி. அந்தச் சூழ்நிலையில் அங்கு நுழைவதற்குத் தயங்கியவாறே நுழைபவள் போல் மெல்ல நுழைந்து தந்தையின் சாய்வு நாற்காலியருகே சென்று, "சாப்பாட்டுக்கு இலை போட்டாயிற்று" என்றாள் அவள். தாம் மூழ்கியிருந்த உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டுத் தலைநிமிர்ந்த பூபதி எதுவும் நடக்காதது போல் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பி, "நீங்களும் இங்கேயே சாப்பிடலாம் அல்லவா?" என்று சுபாவமாகக் கேட்டார். தந்தையே அவரையும் அழைக்க வேண்டும் என்றும், ஆசைப்பட்டு அழைப்பார் என்றும் எதிர்பார்த்துக் கொண்டு வந்திருந்த பாரதி தான் எதிர்பார்த்தபடியே அது நடந்ததைக் கண்டு மகிழும் மனத்தின் ஆவலோடு சத்தியமூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள். அவளுடைய அந்த ஆவல் வீண் போகவில்லை. எதிர்பாராத அந்த அழைப்புக்கு என்ன மறுமொழி கூறுவதென்று ஓரிரு கணங்கள் தயங்கியபின் சம்மதத்துக்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான் சத்தியமூர்த்தி.

அவன் சாப்பிட வருவதற்குச் சம்மதித்த அந்த உற்சாகத்தைத் தனிமையில் கொண்டாட விரும்பியவளைப் போல் அவர்களை முந்திக் கொண்டு உள்ளே சென்றாள் அவள். போகும்போது அவளுடைய இதழ்கள் மனத்துக்குப் பிடித்தமான பாடலின் ஆரம்பம் ஒன்றை இனிய குரலில் முணுமுணுத்துக் கொண்டே செல்வதையும் சத்தியமூர்த்தி கேட்டான். அவளைச் சந்தித்த சில நாழிகை நேரத்திலேயே அவளுடைய இதயத்தின் குரலை அவன் கேட்க முடிந்திருந்தது. இப்போதோ அவளுடைய நாவில் ஒலிக்கும் குரல் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதையும் அவன் கேட்டுத் தெரிந்து கொண்டு விட்டான்.

சாப்பிடுவதற்காக அவனை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு சென்ற போது பூபதி அவனிடம் உள்ளடங்கிய தொனியில் மெல்ல இதைச் சொன்னார்: "உங்களிடம் இளமைக்கே உரிய துடிதுடிப்பும் உணர்ச்சி வசப்படும் இயல்பும் அதிகமாக இருக்கின்றன. விநயமாக நடந்து கொள்ளும் தன்மை குறைவாயிருக்கிறது. உங்களிடம் நான் காணும் படிப்பின் ஆழத்தையும், புத்தியின் கூர்மையையும் எடுத்தெறிந்து பேசிவிடுகிற இந்த இளமைக்குணம் பாழாக்கி விடும். நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும், விநயமாகவும் பேசுவதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்."

"..."

இதற்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. மௌனமாக அவரோடு உள்ளே நடந்து சென்று கொண்டிருந்தான். பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து அவர்,

"கல்வி வெறும் மலரைப் போன்றது. விநயமும் பணிவும்தான் அதை மணக்கச் செய்கின்றன. இதை நீங்கள் ஒரு போதும் மறந்து விடக்கூடாது மிஸ்டர் சத்தியமூர்த்தி."

'தவறான முடிவுகளையும் பொய்யான சித்தாந்தங்களளயும் மறுக்கத் துணியாமல் வாயை மூடிக் கொண்டு ஊமையாக இருந்துவிடுவதுதான் விநயமென்று நீங்கள் நினைப்பதாயிருந்தால் அப்புறம் நான் என்ன சொல்ல முடியும்?' என்று கேட்டுவிடுவதற்குச் சொற்கள் நாவின் நுனியில் துடித்துக் கொண்டிருந்தும், பூபதி அவர்களின் மனம் எதனாலோ பொறுமையிழந்து போயிருப்பதைப் புரிந்து கொண்டு சத்தியமூர்த்தி அவரிடம் ஒன்றும் பேசாமலிருந்து விட்டான். ஏதேதோ பேசியபடியே அவனை உணவுக் கூடத்துக்கு அழைத்துப் போயிருந்தார் பூபதி.

உள்ளே நடந்து செல்லச் செல்ல இடமும் அறைகளும் கூடங்களும் முடிவற்று வளர்ந்து கொண்டேயிருப்பது போல் பிரமை தட்டுமளவுக்குப் பெரிதாயிருந்தது அந்த வீடு. உணவுக் கூடத்துச் சுவர்களில் கொத்துக் கொத்தாகப் பழங்களையும் மலர்களையும் வரைந்த மேலை நாட்டு வண்ண ஓவியங்கள் வரிசை வரிசையாக மாட்டப் பெற்றிருந்தன. மென்மையான இளநீல வண்ணம் பூசப்பெற்றுச் சுவர்கள் கண்ணாடிப் போல் சுத்தமாகவும் பளீரென்றும் இருந்தன. நடுவாக வெளேரென்று தூய விரிப்புடன் நீண்டு கிடந்த சாப்பாட்டு மேஜையில் அலங்காரமான கண்ணாடிக் குடுவைகளில் மலர்க் கொத்துக்கள் சொருகப் பெற்றிருந்தன. ஆனால், மொத்தத்தில் அத்தனை அழகும் அத்தனை ஆடம்பரமும் அவற்றுக்குச் சிறிதும் பொருத்தமில்லாததோர் மாபெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தன.

அவ்வளவு பெரிய உணவுக்கூடத்தில் ஓர் ஓரமாகத் தரையில் மூன்றே மூன்று மனைப் பலகைகளை இட்டு இலை போட்டிருந்ததைக் காண என்னவோ போலிருந்தது. சத்தியமூர்த்தியும் பூபதியும் மனையில் உட்கார்ந்து கொண்டார்கள்.

சமையற்காரரோடு சேர்ந்து அந்தப் பெண்ணும் பரிமாறினாள்!

"நீ எதற்காகச் சிரமப்படுகிறாய், அம்மா? நீயும் உட்கார்ந்து கொள்ளேன்" என்றார் பூபதி. அவள் அதைக் கேட்கவில்லை. உற்சாக மிகுதி சிறிதும் குறையாமல் வண்டு போல் பறந்து பரிமாறினாள் அந்தப் பெண். குளிர் பிரதேசமாகையினால் விழுதாக உறைந்து கிடந்த நெய் வெள்ளி ஸ்பூனிலிருந்து இலையில் விழாமல் போகவே அவள் ஓங்கி உதறியபோது நெய்யோடு ஸ்பூனும் சேர்ந்து சத்தியமூர்த்தியின் இலையில் விழுந்து வைத்தது.

"நன்றாக இருக்கிறதம்மா நீ பரிமாறுகிற அழகு! இவரை நெய்யை மட்டும் சாப்பிடச் சொல்கிறாயா? ஸ்பூனையும் சேர்த்து விழுங்கச் சொல்கிறாயா?" என்று சொல்லிச் சிரித்தார் பூபதி.

"மன்னியுங்கள்! நெய் இளகவில்லை" என்று சொல்லிவிட்டு வேறு ஸ்பூன் எடுத்து வருவதற்காக அவள் உள்ளே சென்ற போது நெய் இளகாததற்காக வருத்தப்படுகிறவளுடைய மனம் தனக்காக இளகியிருப்பதைப் புரிந்து கொண்டு அந்தரங்கமாக மகிழ்ந்தான் சத்தியமூர்த்தி. நெய் விழுது இலையில் விழுவதறகாக ஸ்பூனை ஓங்கியபோது, அப்படி ஓங்கிய கையில் கலீரென்று குலுங்கி ஓய்ந்த வளையல்களின் ஒலி இன்னும் அவன் செவிகளில் இனியதோர் பண்ணாக இசைத்துக் கொண்டிருந்தது. உடல்நலக் குறைவினால் பூபதி சரியாகச் சாப்பிடவேயில்லை. இலையில் உட்கார்ந்ததற்காக ஏதோ சாப்பிட்டோம் என்று பெயர் செய்து முறையைக் கழித்தார். ஆனாலும் சத்தியமூர்த்தி சாப்பிட்டு முடிகிற வரையில் அவனோடு உடன் அமர்ந்திருந்தார் அவர்.

சாப்பாட்டுக்குப் பின்பும் பூபதி அவர்களோடு முன்பக்கத்து அறைக்குள் வந்து சிறிது நேரம் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. மலைப் பிரதேசமாகையால் திடீரென்று அந்த நடுப்பகல் வேளையிலும் மழை தூறத் தொடங்கியிருந்தது. நீலமும் கருமையும் கலந்து கண்களைக் கவர்ந்து மயக்கும் அந்த மலைச் சிகரங்களில் மேகம் குவியல் குவியலாகச் சரிந்து தொங்கும் காட்சியை அறையின் பலகணி வழியாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இனிமேல் தான் அந்த அழகிய ஊருக்கு வந்துவிடப் போகிறோம் என்ற நம்பிக்கையே அப்போது அவனுக்குப் பெருமையளிப்பதாக இருந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி! நீங்கள் கல்லூரிக்குப் போய்ப் பிரின்ஸிபலைப் பார்த்து விடைபெற்றுக் கொண்டபின் ஊருக்குப் புறப்படலாம். பிரின்ஸிபல் உங்களுக்கு எல்லா விவரமும் சொல்வார்" என்று சொல்லிக் கொண்டே வந்த பூபதி சிறிது தயங்கிய பின், "மழையாக இருக்கிறதே, ஐந்து நிமிஷம் பொறுத்துப் போகலாம். நான் உங்களைக் கொண்டு போய்விட ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறியபடி உள் பக்கமாகத் திரும்பினார். அவருடைய மகள் பாரதி தன் சாப்பாட்டை முடித்துக் கொண்டு தந்தையிடம் கொடுப்பதற்காக நீலமும் சிகப்புமாக ஏதோ மாத்திரைகள் அடங்கிய மருந்துப் பாட்டில்களோடு அப்போதுதான் அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தாள்.

"டிரைவர் யாராவது இருக்கிறானா பார் அம்மா" என்று மகளை நோக்கிக் கூறினார் அவர்.

கையோடு கொண்டு வந்திருந்த மருந்துப் பாட்டில்களை மேஜையின் மேல் வைத்துவிட்டு, "இதோ பார்க்கிறேன் அப்பா!" என்று விரைவாக முன் வராந்தாவுக்குச் சென்றாள் அவள்.

சிறிது நேரம் கழித்து, "டிரைவர் யாரையும் காணவில்லை அப்பா!" என்ற பதிலோடு வந்து தயங்கி நின்றாள் அந்தப் பெண். இதற்குள் மழை பேரோசையிட்டு வலுத்திருந்தது. "மழையாயிருக்கிறது. இவரைக் கல்லூரியில் கொண்டு போய் விட்டுவிட்டு வரவேண்டும்" என்று பேச்சைத் தயக்கத்தோடு இழுத்து நிறுத்தினார் பூபதி.

தனக்காக அவர்கள் சிரமப்படுவதை விரும்பாத சத்தியமூர்த்தி, "பரவாயில்லை! ஒரு குடையிருந்தால் போதும், நான் போய்க் கொள்வேன்" என்றான்.

"நானே கொண்டு போய் விட்டுவிட்டு வருகிறேனே..." என்ற வார்த்தைகள் பாரதியின் உதடு வரை வந்து வெளியே ஒலிக்கத் தயங்கிக் கொண்டிருந்தன. அந்தத் தயக்கத்தோடு தந்தையின் முகத்தைப் பார்த்தாள் அவள். தந்தையாக முந்திக் கொண்டு அந்தக் கட்டளையைத் தனக்கு இடமாட்டாரா என்று தவித்தது அவள் மனம். தானே அதைச் சொல்லிவிடலாம் போல பரபரப்பாயிருந்தாலும், அப்படிச் சொல்லிவிடாமல் அந்த வேளையில் வெட்கமும், பயமும் கலந்து வந்து அவளைத் தடுத்தன.

'கையில் சூட்கேஸையும் எடுத்துக் கொண்டு இந்த மழையில் இவரால் எப்படிக் குடையில் போக முடியும்?' என்று அந்தரங்கமாகக் கவலைப்பட்டாள் அவள். நாலைந்து நிமிடம் மகளைத் தவிக்கச் செய்தபின் அந்தக் கேள்வியை மெல்ல அவளிடமே கேட்டார் பூபதி.

"நீயே கொண்டு போய் விட்டு விட்டு வருகிறாயா அம்மா?..."

- இந்த வார்த்தைகளைத் தந்தையிடமிருந்து எதிர்பார்த்தே அந்த விநாடி வரை தவித்துத் தவமிருந்தவளைப் போல, "அவசியம் செய்கிறேன் அப்பா" என்று பதில் சொல்லிக் கொண்டே ஷெட்டிலிருந்து காரை வெளியே எடுத்து வர விரைந்தாள் அவள்.

மிக அதிகமாய் நெகிழும் இந்த அன்பை மறுத்துவிட நினைத்தும் அப்படி மறுக்க முடியாமல் வாளாவிருந்தான் சத்தியமூர்த்தி. பூபதி இருக்கையிலிருந்து எழுந்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்புகிற பாவனையில் அவனோடு முன் பக்கமாகச் சிறிது தொலைவு நடந்து உடன் வந்தார்.

"உங்களைப் போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. பிரின்ஸிபாலிடம் உங்கள் சர்டிபிகேட்டுகளின் ஒரிஜனல்களையெல்லாம் கொடுத்து விட்டுச் செலுங்கள். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்குள் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்" என்று அவர் கூறிய போது அவரிடம் விடைபெற்றுப் புறப்படுவதற்கு அடையாளமாய் நிமிர்ந்து நின்று கை கூப்பினான் சத்தியமூர்த்தி. பதிலுக்கு அவரும் கை கூப்பிப் புன்முறுவல் பூத்தார்.

முன்னாலிருந்து அவனுக்காக இறங்கி வந்து காரின் பின் பக்கத்துக் கதவைத் திறந்து விட்டபின் மறுபடி முன்புறம் போய் ஏறிக் கொண்டாள் பாரதி. நான்கு பக்கமும் மஞ்சு படிந்து மழை மூடியிருந்ததால் சுற்றிலும் ஒன்றுமே தெரியவில்லை. மழை நீர் இறங்காமல் இருப்பதற்காகக் கார் கண்ணாடிகளையெல்லாம் மேலே தூக்கிவிட்டு அடைத்திருந்தது. உள்ளே கம்மென்று மல்லிகைப் பூமணம். அவள் கூந்தலில் சூடிக்கொண்டிருந்த மல்லிகைப் பூக்களின் நறுமணத்தை உணர்ந்து கிறங்கிய போது அந்த ஊருக்கு அப்படிப் பெயர் வைத்த புண்ணியவானை மனமார வாழ்த்தினான் சத்தியமூர்த்தி. கார் போய்க் கொண்டிருக்கும் போதே இடையிடையே, அவள் கைகளில் வளையல்கள் விளையாடிக் குலுங்கி ஒலித்த போது தன் மனம் பேசத் தவிக்கும் வார்த்தைகளை வாய் பேச முடியாமல் போன குறையால் அந்த வளைகள் ஒலிப்பதையே ஒரு பேச்சக்கி அவள் அவனிடம் நளின மொழியில் பேசுவது போல் இருந்தது. எதற்கோ பயப்படுவது போல் இருவரும் அப்படிப் பேசிக் கொள்ளாமலே போவதில் பொறுமை இழந்த சத்தியமூர்த்தி தானாகவே அவளிடம் பேச்சுக் கொடுத்தான்.

"உங்கள் ஊர் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே எனக்குத் தெரியவில்லை. எங்கள் மதுரைக்குப் பக்கத்தில் தெற்கே கப்பலூர் என்று ஒரு செம்மண் பிரதேசம் உண்டு. அந்த ஊர் மல்லிகைப் பூக்கள் தாம் உலகத்திலேயே வாசனை அதிகமான மல்லிகைப் பூக்கள் என்று நான் நேற்று வரை பிடிவாதமாக நினைத்துக் கொண்டிருந்தேன். எந்தவிதமான நீர்வளமும் இல்லாத அந்தச் செம்மண் காட்டை 'ஜாஸ்மின் ஃபீல்ட்ஸ்' (மல்லிகைப் பண்ணை) என்று நான் என் நண்பர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வேன். என்னுடைய பிடிவாதமான அபிப்பிராயத்தை உங்களூர் மல்லிகைப் பூக்கள் இன்று மாற்றிவிட்டன."

"தனக்குத் தெரிந்ததை மட்டும் முதலாக வைத்தே ஓர் அபிப்பிராயத்தை உருவாக்கிக் கொள்வதில் எவ்வளவு முரண்பாடு இருக்கிறது பார்த்தீர்களா" - என்று சொல்லிவிட்டுக் கைகளில் வளைகளும் இதழ்களில் நகைப்பும் ஒலிக்க கலீரெனச் சிரித்தாள் அவள்.

"வீட்டுக்குத் திரும்பிச் சென்றதும் ஞாபகமாக இந்த அழகிய வாக்கியத்தை உங்கள் அப்பாவிடம் சொல்லுங்கள். பல விஷயங்களில் அவருடைய அபிப்பிராயங்கள் அவரால் சிந்திக்க முடிந்த எல்லையை மையமாக வைத்தே உருவாகியிருக்கின்றன. அந்த எல்லைக்கு மேல் உண்மை இருந்தாலும் அதைச் சிந்திக்க மறுக்கிறார் அவர்."

"மல்லிகைப் பந்தலுக்கு இந்தப் பூக்களின் மணத்தினால் இருக்கிற புகழைவிடத் தாம் நிறுவியிருக்கிற கல்லூரியின் பெருமையால் வருகிற புகழ் அதிகமாயிருக்க வேண்டும் என்ற ஆசை."

"இருக்க வேண்டியதுதான்! ஆனால் ஏதாவது ஒன்றில் அளவு மீறி ஆசைப்படுகிற எல்லாரும் அந்த ஒன்றைத் தவிர மற்றவற்றில் உள்ள சாத்திய அசாத்தியங்களைச் சிந்திக்க மறந்துவிடுகிறார்கள். அதற்காகச் சில சமயங்களில் அவர்களை நாம் மன்னிக்கவும் வேண்டியிருக்கிறது."

இதற்கு ஒன்றும் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பு அவன் சொல்வதை அப்படியே 'ஒப்புக் கொள்கிறேன்' என்ற பாவனையில் இருந்ததா, 'மறுக்க விரும்பவில்லை' என்ற பாவனையில் இருந்ததா என்பதைப் புரிந்து கொள்ள முயன்றான் சத்தியமூர்த்தி. இதற்குள் கார் கல்லூரிக் காம்பவுண்டிற்குள் நுழைந்துவிட்டது. வகுப்பு அறைகளும் விரிவுரைக் கூடங்களும் விடுதிக் கட்டிடங்களுமாக மலைச்சரிவில் கல்விக்காக ஏற்பட்ட ஒரு தனி நகரம் போலத் தோன்றுகிறது அந்த இடம். ஒரே வரிசையில் ஒரே விதமான பலகணிகளோடு நெடுந்தூரத்துக்கு நீண்டு தெரியும் அந்த இரண்டு மாடிக் கட்டிடங்களை மழையோடு கூடிய மலைகளின் பின்னணியில் பார்ப்பது மிக அழகாயிருந்தது.

"உங்களுக்கு அநாவசியமான சிரமத்தைக் கொடுத்து விட்டேன். இதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் பிரின்ஸிபலைப் பார்த்து விட்டு ஊருக்குப் போய் வருகிறேன். உங்கள் தந்தையிடம் சொல்லுங்கள்" என்று காரிலிருந்து இறங்கிக் கொண்டு அவளிடம் விடை பெறத் தொடங்கினான் சத்தியமூர்த்தி. அவளோ அவனுக்கு அவ்வளவு விரைவில் விடைகொடுத்து அனுப்பிவிட விரும்பாதவளைப் போல், "பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு வாருங்கள். இந்த மழையில் இங்கிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு எப்படிப் போவீர்கள்? உங்களைப் பஸ் ஸ்டாண்டில் கொண்டு போய்விட்ட பின்பு நான் போய்க் கொள்வேன்" என்றாள்.

"எனக்காக நீங்கள் காத்திருக்க வேண்டுமென்பதில்லை. மழை நிற்கிறவரை நான் காத்திருந்து அப்புறம் போய்க் கொள்கிறேன்" என்று சத்தியமூர்த்தி மறுத்ததை அவள் ஒப்புக் கொள்ளவில்லை. 'பிடிவாதமாக இருந்துதான் தீருவேன்' என்பது போலிருந்து விட்டாள்.

உள்ளே சென்று பிரின்ஸிபலைச் சந்திப்பதற்காகக் கல்லூரி முகப்பின் படிகளில் அவன் ஏறிக் கொண்டிருந்த போது நனைந்து வெளுத்து வெண் தாமரைகளாய்த் தெரிந்த அவனுடைய அந்தப் பாதங்களின் அடிப்புறங்களைக் காரினுள் இருந்தபடியே இரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி. என்ன காரணத்தினாலோ அவனைச் சந்தித்த முதல் விநாடியிலிருந்து அந்தப் பாதங்கள் தாம் அவளைக் கவர்ந்து அவள் மனத்தில் வந்து பதிந்து கொண்டு விட்டன. விரைந்து ஓடிப்போய் அந்தப் பாதங்களைக் கண்களில் ஒத்திக் கொள்ள நினைத்து அப்படிச் செய்ய முடியாதென்ற பயத்தினாலும் வெட்கத்தினாலும் மானசீகமாக அந்தத் திருப்தியை அடைந்தாள் அவள். பார்க்கிறவர்களைப் பைத்தியமாக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி அந்தப் பாதங்களில் எப்படியோ எதனாலோ இருந்ததை அவள் உணர முடிந்தது. பத்தே நிமிஷங்களில் பிரின்ஸிபலிடம் பேசி முடித்துக் கொண்டு திரும்பிவிட்டான் சத்தியமூர்த்தி. அவன் உள்ளேயிருந்து திரும்பவும் படிகளில் இறங்கிக் கீழே வரும்போதும் அவளுடைய கண்கள் அந்தப் பாத கமலங்களை நன்றாகப் பார்க்க முடிந்தது.

"பஸ் ஸ்டாண்டிற்குப் புறப்படுவதற்கு முன்பு ஒரு வேண்டுகோள். மழையாயிருந்தாலும் பரவாயில்லை. காரில் இருந்தபடியே ஒரு 'டிரைவ்' சுற்றி வந்தால் எங்கள் கல்லூரியை நன்றாகப் பார்த்துவிடலாம் நீங்கள்..." என்றாள் அவள். சத்தியமூர்த்தியும் அதற்கு இணங்கினான்.

சுற்றிப் பார்க்கும் போது மிகுந்த அழகுணர்ச்சியோடும் இரசிகத் தன்மையோடும் அந்தக் கட்டிட வேலைகளைப் பூபதி செய்திருக்கிறார் என்பதை அவனால் உணர முடிந்தது. மலைச்சரிவில் மேடும் பள்ளமுமாக மாறி மாறி இருந்த இடங்களில் கட்டடங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கும் மழைநீர் தேங்கிவிடாமல் மழை பெய்த மறுகணமே இயற்கையாகவே நீர் வடிந்து இடங்கள் கண்ணாடியாய்ச் சுத்தமாகி விடுகிறார் போல் எல்லாக் கட்டிடங்களும் அமைக்கப்பட்டிருந்தன.

"இந்தக் கட்டிடங்களை இவ்வளவு அழகாய்க் கட்டுவதற்காக அப்பா எடுத்துக் கொண்ட சிரத்தைக் கொஞ்ச நஞ்சமில்லை. கல்கத்தாவிலிருந்து ஒரு பெரிய இஞ்சினியர் ஐந்து ஆண்டுகள் இங்கேயே வந்து தங்கியிருந்தார். இது முடிகிறவரை அப்பாவுக்கு இராப்பகல் தூக்கமில்லையாம்."

"அதோ தோட்டத்துக்குள் நீண்டு தெரிகிற மாடிக் கட்டிடம் பெண்கள் தங்கியிருக்கும் விடுதி. இதோ இந்தக் கோடியில் அசோக மரங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கிற பாதை ஒன்று போகிறதே; இதன் வழியாகப் போனால் ஆண்கள் தங்கியிருக்கும் விடுதி. ஹாஸ்டல் ஏற்பாடுகள் எல்லாம் இங்கு மிகவும் கண்டிப்பானவை. அதோ நட்ட நடுவில் பிரம்மாண்டமான வாயிலோடு தெரிகிறதே அதுதான் காலேஜ் லைப்ரரி. அதற்கு அடுத்த கட்டிடம் கல்லூரி விழாக்கள் எல்லாம் நடைபெறுகிற ஆடிட்டோரியம். பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் இந்த மாதம் முதல் தேதி வெளியாகிற புதுப்புத்தகம் இந்த மாதக் கடைசி வாரத்துக்குள் இங்கே நூல் நிலையத்தில் படிக்கக் கிடைக்கும். தமிழிலும், பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் வடமொழியிலுமாக ஏறக்குறைய இரண்டு இலட்சம் முக்கியமான நூல்கள் இந்த நூல் நிலையத்தில் உண்டு!"

"கல்லூரி என்று தான் இதைச் சொல்கிறீர்கள்! ஆனால் ஒரு மாபெரும் பல்கலைக்கழகத்திற்குரிய அத்தனை வசதிகளும் இங்கே இருப்பதாகத் தெரிகிறது" - என்று சத்தியமூர்த்தி மிகவும் சுருக்கமாக ஆனால் வலுவுள்ள நல்ல வார்த்தைகளில் அவளிடம் அதைப் பற்றிப் புகழ்ந்தான்.

"பிற்காலத்தில் இது ஒரு பல்கலைக் கழகமாக வளர வேண்டும் என்று அப்பாவுக்கே அந்தரங்கமான ஓர் ஆசை உண்டு."

"இரண்டு கோடியாக இருக்கிற பாங்குக் கணக்கை மூன்று கோடியாக வளர்ப்பதற்கு என்ன வழி என்று மேலும் மேலும் சொத்துக் குவிக்க ஆசைப்படுகிற பணக்காரர்களைத்தான் பொதுவாழ்வில் அதிகமாகப் பார்க்கிறோம். உங்கள் தந்தை பணக்காரர்களில் ஓர் அபூர்வமான மனிதராயிருக்கிறார்."

இதைக் கேட்டுப் பதில் சொல்லாமல் சிரித்தாள் அவள். அந்தக் கல்லூரியின் பலவகைச் சிறப்புக்களையும் ஒவ்வொன்றாகப் பார்த்து முடித்த போது தான் எப்படியும் அங்கு வந்து விடவேண்டுமென்ற எண்ணமே சத்தியமூர்த்தியின் மனத்தில் நிச்சயிக்கப்பட்டது.

பஸ் ஸ்டாண்டில் ஏறுவதற்கு முன் மல்லிகைப் பந்தலைப் பற்றிய எல்லா ஞாபகங்களையும் ஒன்று சேர்த்து எண்ணி அவற்றில் மிக முக்கியமான ஒன்றை மனத்தின் ஆழத்தில் பதித்துக் கொள்ள விரும்பினான் சத்தியமூர்த்தி. தான் உறுதியாய் அங்கே வந்துவிடவேண்டுமென்ற ஞாபகம் தான் முதல் ஞாபகமாக அவனுடைய மனத்தின் ஆழத்தில் பதிந்தது. மகிழ்ச்சி பூத்து மலரும் அந்தப் பெண்ணின் கண்கள் இரண்டாவது ஞாபகமாக வந்து பதிந்தன.

பஸ்ஸில் ஏறிக் கொள்ளுமுன் அந்தப் பெண்ணிடம் நிறையச் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் அவன். அப்போது அவன் வியப்படையும்படியான ஒரு பேச்சை இருந்தாற்போலிருந்து அவள் அவனிடமே தொடங்கினாள். பேச்சு திடீரென்று ஆரம்பமான காரணத்தால் அவள் தன்னிடம் ஞாபகப்படுத்த விரும்புவது என்னவென்பதைப் புரிந்து கொள்ளவே அவனுக்குச் சில விநாடிகள் ஆயின.

"நீங்கள் கூறிய பாடலில் வந்த உவமையின் அழகு இப்போதுதான் நன்றாகப் புரிகிறது சார்! இதோ இந்தச் செம்மண் பூமியில் மழை பெய்து நீரும் நிலமும் ஒரு நிறமாய்க் கலந்து போயிருப்பதைப் பார்த்தவுடன் இண்டர்வ்யூவின் போது அப்பாவிடம் நீங்கள் கூறிய பாட்டு நினைவு வருகிறது எனக்கு" என்று இளமுறுவலும் நாணமும் கனிந்து கீழ்நோக்கித் தாழும் முகத்தோடு தரையைப் பார்த்தபடி அவள் சொல்லிக் கொண்டே வந்தபோது சத்தியமூர்த்தி இன்னதென்று விவரித்துச் சொல்ல முடியாததொரு களிப்பில் திளைத்தான். ஈரத்தில் சொத சொதவென்றாகியிருந்த அந்த இடத்தின் செம்மண் பூமியைப் பார்த்தான் அவன். பின்பு அர்த்தமில்லாமல் ஆனால் எதிர்பார்க்கப்படுகிற ஓர் அர்த்தத்தோடு அவள் முகத்தையும் பார்த்தான். மழைக்கு நெகிழ்ந்து கனிது போயிருந்த அந்தச் செம்மண் நிலத்தைப் போல் அவள் முகத்திலும் கண்களிலும் இதழ்களிலும் கூட ஏதோ ஓர் உணர்வு கலந்து கனிந்திருந்தது. அப்படிக் கனிந்திருந்த உணர்வு நாணம் ஒன்று மட்டுமில்லை. நாணமில்லாத வேறொன்றும் தனியாயில்லை. அப்படியிருப்பதே அதைப் புரிந்து கொள்ளும் ஒரே சாதனமாவதைத் தவிர அதைப் புரிந்து கொள்ள வேறு கருவி காரணங்களில்லாத உணர்ச்சிப் புதுமையாயிருந்தது அந்த இனிய அனுபவம். அதை அப்படியே மனதில் ஏற்றுக் கொண்டு பஸ்ஸை நோக்கி நடந்தான் அவன். மழைக்காகப் பஸ்ஸுக்குள் பிரயாணிகள் ஏறிச்செல்லும் வழியில் திரையிட்டிருந்தது. சூட்கேஸும் கையுமாகப் பஸ்ஸுக்குள் ஏறிவிட்டவனை முழங்கால் வரை திரை மறைத்துவிட்ட காரணத்தால் அதற்குக் கீழே திருமணத்தில் நலுங்கு இட்டாற்போல் செம்மண் பூசிய கால்களோடு பார்த்தாள் பாரதி. அதைப் பார்த்துவிட்டுப் போவதற்காகத்தான் அவ்வளவு நேரம் காரை நிறுத்திக் காத்துக் கொண்டிருந்தாள் அவள்.

பஸ் புறப்பட்டுப் போய்விட்டது. வீட்டுக்குத் திரும்புவதற்காகக் காரை ஸ்டார்ட் செய்து திரும்பினாள் அந்தப் பெண். எதிரே மேடாயிருந்த செம்மண் சாலை கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏதோ மங்கலானதொரு காரியத்துக்காக ஆரத்தி எடுத்துக் கொட்டிய செந்நிறப் பெருக்காய்த் தெரிந்து கொண்டிருந்தது. எதையோ நினைத்துச் சிரிக்கிறவள் போல் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் பாரதி. பின்பு காரில் தலைக்கு நேரேயிருந்த சிறிய கண்ணாடியைத் திருப்பி அதில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள். ஆரம்ப வரிக்கு மேலே என்னவென்று தெரியாததும் ஆரம்பத்தை மட்டுமே திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்தால் கூட மகிழ்ச்சி தரக் கூடியதுமான பாட்டு ஒன்று அவள் இதழ்களில் இழைந்து இசைத்து ஒலித்தது. அந்த ஒலி அவள் நாவில் பிறந்து அவள் இதழ்களில் ஒலித்தாலும் அவளே விரும்பி அநுபவிக்கும் இனிமையை அதிலிருந்து தனியே பிரித்து உணர முடிந்தது. காரணம்...? அந்த ஒலிதான் அவளுக்குச் சொந்தம். அதிலிருந்து பிரிந்த இனிமை என்னவோ, இன்னொருவருடைய ஞாபகத்தால் விளைந்ததுதான். ஓர் ஓரமாகக் காரை நிறுத்திவிட்டு மழையில் இறங்கி நனையலாம் போலக் குறும்புத்தனமான ஆசை ஒன்றும் அப்போது அவள் மனத்தில் ஊறியது. நனைந்த கோலத்தில் போனால் அப்பாவின் கேள்விக்கு என்ன பதில் கூற முடியும் என்ற பயம் தடுத்திராவிட்டால் சிறிது நேரம் நனைந்து விட்டு அப்புறம் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருப்பாள் அவள். தலையில் மல்லிகைப்பூ புதிதாக மணப்பது போலவும் கைகளில் வளைகள் முன்பு ஒலித்த வழக்கமான ஒலியைத் தவிர இன்னும் எதையோ புதிதாகச் சொல்லி ஒலிப்பது போலவும், கண்ணாடி எப்போதும் காண்பிக்கிற முகத்தை மட்டுமே காண்பிக்காமல், அந்த முகத்தோடு இன்னும் எதையோ சேர்த்துக் காண்பிப்பது போலவும் புதியனவும் இனியனவும் ஆகிய பிரமைகள் சிலவற்றை அவள் இன்று அடைந்தாள். வீட்டுக்குள் நுழைந்து காரை ஷெட்டில் விட்டுவிட்டுத் தந்தையின் அறைக்குள் சென்ற போது அவரோடு இன்னொருவர் பேசிக் கொண்டிருக்கிற ஒலி கேட்டுப் பாரதி அறை வாயிலில் வராந்தாவிலேயே தயங்கி நின்றாள். உள்ளேயிருந்து காதில் அரைகுறையாக ஒலித்த உரையாடலைக் கேட்டவள் என்ன காரணத்தாலோ அப்படியே அதிர்ந்து போய் நின்றாள். பத்தே முக்கால் மணிக்கு எந்தப் பதவிக்காகச் சத்தியமூர்த்தி 'இண்டர்வ்யூ' செய்யப்பட்டாரோ அதே வேலைக்காக மூன்று மணிக்கு இன்னொருவரை வரச்சொல்லித் தன் தந்தை இண்டர்வ்யூ செய்வானேன் என்று எண்ணிச் சந்தேகப்பட்டுத் திகைத்தாள் அவள்.

அத்தியாயம் - 4

நாம் தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையின் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய் விடுகிற சமுதாய நஷ்டத்தை என்னென்பது?

தூபகலசத்திலிருந்து சுருள் சுருளாக மேலெழும் இளம் புகை அலைகளைப் போல் மேகங்கள் சரிந்து சேரும் மலைகளினிடையே பஸ்ஸில் பயணம் செய்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. பள்ளத்தாக்கை விட்டு மலைமேல் ஏறிவிட்ட பஸ்ஸிலிருந்து திரையை விலக்கிக் கிழே பின்னால் திரும்பிப் பார்த்தபோது, 'இந்த அரிய பொருளைக் கொண்டு வந்து வைப்பதற்கு ஏற்ற இடம் இதுதான்' என்று அந்த இடத்தைத் தேடிக் கொண்டு வந்து வைத்தாற் போன்று அருமையாய் மல்லிகைப்பந்தல் ஊர் மழையில் மங்கித் தெரிவதைச் சத்தியமூர்த்தி கண்டான். வடிவமாகப் பின் தங்கிவிட்டாலும் எண்ணமாக மனத்தில் நிலைத்து விடுகிற சில அழகிய ஞாபகங்களைப் போல் மல்லிகைப் பந்தல் என்ற அழகு சத்தியமூர்த்தியின் கண்களிலிருந்து மறைந்து கருத்தில் தெரியத் தொடங்கியது. அந்த ஊரிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து செல்லும் போது தான் மறுபடியும் அங்கு வந்துவிட வேண்டுமென்ற ஞாபகம் அவனுடைய மனத்தில் ஆழமாகப் பதிந்தது. வாழ்வின் நிலையான பாசங்கள் எல்லாம் அவற்றை விட்டுப் பிரிந்து செல்லும் போதே அவற்றின் நெருக்கமும் உறவும் புலப்படும்படி இருக்கும். தன் மனத்துக்கு மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் மேல் எவ்வளவு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அங்கிருந்து பிரிந்து செல்லும் போதுதான் சத்தியமூர்த்தியால உணர முடிந்தது. மனத்தில் நிலைக்கும் படியான நிரந்தரமான சந்திப்புகள் எல்லாம் மகிழ்ச்சியில் தொடங்கி ஏக்கத்தில் முடிவதை அநுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறான் அவன். பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்த போது மல்லிகைப் பந்தலில் அந்தச் சில மணி நேரங்களுக்குள் நடந்தவற்றை அவன் ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினான். அப்படித் தொடங்கிய நினைப்பு வளர்ந்து பெருகி மிக நளினமானதொரு பகுதியில் வந்து நிறைந்தது.

மல்லிகைப் பந்தலில் இருந்து புறப்படுவதற்கு முன் பாரதி சுட்டிக் காட்டிய ஈரச் செம்மண் நிலமும் அதைச் சுட்டிக் காண்பித்த போது புதிய உணர்வோடு தெரிந்த முகமும் சத்தியமூர்த்தியின் நினைவில் சுற்றிச் சுற்றி வந்தன. வாய் திறந்து சொற்களால் பேச முடிவதை விட அதிகமான நயமும் பொருளும் தந்து பேசுவதைப்போல் ஒலித்த அவள் கைகளின் வளை ஒலி இன்னும் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. கம்மென்று நறுமணம் பரப்பி நாசியையும் இதயத்தையும் நிறைத்த அந்த மல்லிகைப் பூக்களின் வாசனையை இன்னும் அவனால் மறக்க முடியவில்லை. அவனுக்கு இருபுறமும் பஸ்ஸில் உட்கார்ந்தவர்கள் யாரோ தேயிலைத் தோட்டத்துக் கங்காணிகள் போல் தோன்றினார்கள். 'சதக் சதக்' என்று வெட்டப்படும் கொலைச் செய்திகளும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய பரபரப்பூட்டக் கூடிய விவரங்களும் அடங்கிய தினப்பத்திரிகை ஒன்றைப் படித்து ஒரு கங்காணி இன்னொரு கங்காணிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான். அந்தச் செய்தித்தாளின் பக்கங்களில் நடந்திருந்த கொலைகளை விட அதைப் படித்துக் கொண்டிருந்தவன் செய்கிற கொலைக்காக மிகுந்த வேதனைப்பட்டான் சத்தியமூர்த்தி. திரு.வி.க.வும் திலகரும் பத்திரிகை நடத்திய நாட்டில் மெய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலரும், பொய்யை மெழுகிக் காகிதம் விற்பார் சிலருமாகப் புனிதமானதொரு பணியைச் சர்வசாதாரணமாக வியாபாரமாக நடத்துகிறவர்கள் பெருகியிருப்பதை எண்ணியபோது மிகவும் வருந்தினான் அவன்.

அன்று மாலையில் பஸ்ஸிலிருந்து இறங்கி ஊர் திரும்பும் இரயிலுக்காக அவன் மல்லிகைப் பந்தல் ரோடு ரயில் நிலையத்துக்குள் நுழைந்த போது நன்றாக இருட்டத் தொடங்கிவிட்டது. ஒன்பதரை மணிக்கோ, பத்து மணிக்கோ எல்லா நிலையங்களிலும் நின்று நின்று போகிற பிரயாணிகள் வண்டி ஒன்று உண்டு. அதில் புறப்பட்டால் இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் எப்போதாவது மதுரை போய்ச் சேரலாம். புறப்படுகிற நேரமும் உறுதியில்லாமல், போய்ச் சேருகிற நேரமும் உறுதியில்லாமல், இந்தத் தேசத்துச் சராசரி மனிதர்களின் வாழ்க்கை இலட்சியத்தைப் போல் நிச்சயமில்லாத இரயில் அது. அதை எதிர்பார்த்து அந்தக் குளிரிலும் இருட்டிலும் அங்கே காத்திருந்த பலரோடு இப்போது சத்தியமூர்த்தியும் சேர்ந்து கொண்டான். தனியே எதிர்பார்த்துக் காத்திராமல் பலரோடு சேர்ந்து அந்தப் பலரில் ஒருவனாக ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இரண்டு விதமான சுவாரஸ்யங்கள் உண்டு. தன்னுடைய ஆவல் ஒன்று, தன்னைப் போன்ற பலருடைய மொத்தமான ஆவல் மற்றொன்று. தன்னுடைய ஆவலைத் தானே உணர்ந்து கொண்டு, மற்றவர்களுடைய ஆவலைப் புரிந்து அனுபவிப்பதில் சுவாரஸ்யம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா?

முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டு இன்று அங்கிருந்து திரும்பும் இந்த இரண்டு நாட்களுக்குள்ளேயே நீண்டகாலமாகத் தான் அலைந்து பயணம் செய்தே தன் நாட்களையெல்லாம் கழித்து விட்டது போல ஒரு பிரமை எப்படித் தனக்கு ஏற்பட்டதென்று சத்தியமூர்த்திக்கே புரியவில்லை. பயணம் செய்துவிட்டுத் திரும்பும் ஒவ்வொரு முறையும் இந்த அநுபவத்தை அவன் அடைந்திருக்கிறான். வேலை கிடைத்து மல்லிகைப் பந்தலுக்கே வந்துவிட்டால் போவதும் வருவதுமாக இப்படிப் பலமுறை அந்த இரயில் நிலையத்தில் தான் காத்திருக்க நேரிடும் என்ற நினைப்பும் ஏற்பட்டது அவனுக்கு. அதே சமயத்தில் கல்லூரி அதிபர் பூபதி அந்த வேலையைத் தனக்குத் தருவாரா என்ற சிறிய சந்தேகமும் வந்தது. கடைசியாக அவர் தன்னிடம் பேசிய பேச்சிலிருந்தும், தனக்கு விடை கொடுக்கும் போது மனம்விட்டு எதுவும் பேசாமல் அழுத்தமாக விடை கொடுத்ததிலிருந்தும், தன் பருவத்தின் இளமையை எண்ணி அவர் தயங்குகிறாரா என்று தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

வீட்டை விட்டு ஊரைவிட்டு வெளியேறி வந்ததனால் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றிய பிரச்சினைகளும், வீட்டுக் கவலைகளும் மனத்தின் அடி மூலையில் முறிந்த முள்ளைப் போல் உடனடியாக வலியில்லாமல் தங்கிப் போயிருப்பதை அவன் உணர்ந்தான். 'எந்தவிதமான சௌகரியங்களும் இல்லாத மத்தியதரக் குடும்பத்தில் இரண்டு தங்கைகளுக்கு மூத்தவனாகப் பிறந்துவிடுகிற ஆண்பிள்ளை தன் பொறுப்புகளையும் தான் வாழவேண்டிய வழியையும் வாழ்வில் மிக விரைவில் தீர்மானம் செய்கிறவனாக இருக்க வேண்டும். பின்னால் யாரோ கன வேகமாகத் துரத்திக் கொண்டிருப்பது போல் ஓடி ஓடி முயன்று வாழ வேண்டும் அவன். இப்படிப்பட்ட குடும்பத்தில் மூத்தவனாகப் பிறந்து விடுகிறவனுக்கு ஒவ்வொரு நாளும் அவன் கைகளை எதிர்பார்த்து நிற்கிற பல தேவைகளும், வறுமைகளும் காத்திருக்கும். இதை எண்ணியபோது, தான் படித்திருந்த திருக்குறள் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது சத்தியமூர்த்திக்கு.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு?

வறுமையால் நாள் தவறாமல் துன்புற்றுக் கொண்டிருக்கிற ஒருவன் தன் வாழ்வில் ஒவ்வொரு நாளும் விடிகிற போது, "நேற்று என்னைக் கொன்று வாட்டினாற் போன்ற வறுமை இன்றும் வருமோ?" என்று கவலையோடு விடிவதாகப் பாவித்துக் கேட்பதாய் இந்தக் குறளைப் பாடியிருக்கிறார் வள்ளுவர். நாளைக்குப் பொழுது விடிகிற போது தன்னுடைய இதயத்திலும் இப்படி ஒரு கேள்வி பூதாகரமாக எழும் என்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்துதான் இருந்தது. கால் நூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாக ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட ஒரு தந்தை தன் குடும்பத்துக்குத் தேவைகளையும், வறுமைகளையும் தவிர வேறு எதை அதிகமாகச் சேர்த்து வைத்திருக்க முடியும்? அத்தனை வறுமைக்கும் நடுவே சத்தியமூர்த்தி கல்லூரிப் படிப்புப் படித்து மீண்டதே, அந்தக் குடும்பத்தின் மிகப்பெரிய சாதனைதான். பலருடைய உதவிகளும், கல்லூரியில் கிடைத்த 'ஸ்காலர்ஷிப்' வசதிகளும் தான் அவன் தன்னுடைய கல்லூரிப் படிப்பை நடுவில் நிறுத்த நேரிடாமல் தொடர்ந்து கற்று முடிக்கத் துணையாயிருந்தன. மத்திய தரக் குடும்பத்துப் பெற்றோர் பலர் சாதாரணமாக எதிர்பார்ப்பது போல் அவன் பி.காம். படித்துச் சார்ட்டர்ட் அக்கௌண்ட், காஸ்ட் அக்கௌண்டன்ஸி போன்ற துறைகளில் தேர்ந்து பெரிய ஆடிட்டராகிப் பணம் குவிக்க வேண்டும் என்றுதான் அவன் தந்தையும் எதிர்பார்த்தார். அவன் தமிழில் மோகமுற்றுத் தமிழ் ஆனர்ஸ் தேறி எம்.ஏ. ஆகி இப்படி கல்லூரி விரிவுரையாளனாகப் போக நேரிடும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. அதில் அவருக்கு ஏற்பட்ட வருத்தமும் ஏமாற்றமும் அதிகம் தான். ஆயினும் உடம்பாலும், மனத்தாலும், தன்னை மீறி வளர்ந்துவிட்ட பிள்ளையை என்ன சொல்லி எப்படித் தடுப்பதென்று தோன்றாமல் 'அவன் போக்குப்படியே போகட்டும்' என்று விட்டுவிட்டார். ஆசிரியர் தொழிலில் தான் இருந்து பட்ட துன்பங்களை எண்ணித் தன் பிள்ளையாவது அந்தத் தொழில் பக்கம் தலை வைத்துப் படுக்காமல் இருக்க வேண்டும் என்று அந்த ஏழைத் தந்தை கவலைப்பட்டதெல்லாம் வீணாகப் போயிற்று.

"சத்யம்? நீயாவது 'டானா' உத்தியோகத்துக்கு வந்து சேராமல் நல்ல உத்தியோகமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏணியைப் போல் நீ சாத்திய இடத்திலேயே சார்த்திக் கிடக்க உன்னைக் கற்பிப்பவனாகக் கொண்டு பலர் மேலே ஏறிப் போவதைப் பார்க்கும் வயிறெரிகிற தொழில் இது" என்று தந்தை ஏமாற்றத்தோடு கூறிய பல வேளைகளில் அதைப் பொறுமையோடு கேட்டுக் கொண்டு சிரித்து விட்டுப் பதில் பேசாமல் போயிருக்கிறான் சத்தியமூர்த்தி. அப்படி எல்லாம் அவர் அந்தத் தொழிலை வெறுத்துப் பேசியிருந்தும் கூட நேற்று அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு முன்பு, "சத்யம்! குடும்பத்தை இன்னும் உன்னை எதிர்பாத்துத் தவிக்கவிடாதே அப்பா! உத்தியோகத்தைத் தேர்ந்தெடுப்பதில்தான் பிடிவாதமாக இருந்துவிட்டாய். உத்தியோகத்துக்குப் போவதற்கு இன்னும் நீ தாமதம் செய்தால் தண்ணீரில் ஓட்டைப் படகைப் போல் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பம் நிச்சயமாகத் தாங்காது. இண்டர்வ்யூவை வெற்றிகரமாக முடித்துவிட்டு 'ஆர்டரை'க் கையில் வாங்கிக் கொண்டு வந்து சேர்வதற்கு முயற்சி செய்" என்று பாதி ஆர்வமும் பாதி நப்பாசையுமாக அவனிடம் சொல்லியனுப்பியிருந்தார்.

இரயிலிலிருந்து இறங்கி நேரே வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினால் அந்த அகால நேரத்துக்கும் விழித்திருந்து எழுந்து வந்து கதவைத் திறக்கக்கூடியவர் அப்பாதான். கதவைத் திறந்துவிட்டுத் தன்னை எதிரே பார்த்தவுடன், "ஏண்டா, இண்டர்வ்யூ என்ன ஆயிற்று?" என்று ஆவலோடு கேட்கப் போகிற அவருக்கு நம்பிக்கை அளிக்கும்படியாக அப்போது தான் என்ன பதிலைச் சொல்ல முடியும் என்பதைச் சத்தியமூர்த்தி சிந்தித்தான். உடனடியாக நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தரப் போகிற செய்தியைத் தன்னிடமிருந்து தந்தை எதிர்பார்த்தது தவறில்லை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான். அப்பாவைப் போல் வாழ்வில் ஏமாற்றங்களையும், துயரங்களையும் அதிகமாகச் சந்தித்தவர் இப்படித்தான் எதிர்பார்த்துத் தவிக்க முடியும் என்பதும் அவனுக்குத் தெரியும். வாழ்க்கையில் ஏமாற்றமடைகிறவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அப்பாவைப் போல் வாழ்க்கையையே ஏமாற்றமாக அடைந்தவர்களின் துன்பம் மிகவும் பெரியது. சத்தியமூர்த்திக்கு நினைவு தெரிந்து தந்தை கிழிசல் இல்லாத சட்டையும், வேட்டியும் அணிந்து அவன் பார்த்ததில்லை. ஆசிரியர் தொழிலின் மேலேயே அவர் கசப்பையும் வெறுப்பையும் வளர்த்துவிட்டுக் கொண்டதற்கு அவரே ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்து அடைந்த துன்பங்கள் தான் காரணம் என்பதும் சத்தியமூர்த்திக்குத் தெரியும். தன்னைப் பற்றிய அப்பாவின் கற்பனைகளையும், ஆசைகளையும் அவன் பொறுத்துக் கொண்டான். காரணம் அவருடைய உத்தியோக வாழ்வில் அவர் அதிகமாக அதிருப்தியும் துன்பமும் அடைந்தவர் என்பதுதான்.

ஊருக்குப் போய் இறங்கியவுடன் தன் தந்தை தன்னைக் கேட்கப் போகிற கேள்வியையும், 'இண்டர்வ்யூ' முடிகிற நேரத்தில் திடீரென்று புதிராக மாறிவிட்ட பூபதி தன்னைப் பற்றி என்ன முடிவுக்கு வந்திருப்பார் என்ற கேள்வியையும் மனத்தினுள்ளே எதிரெதிராக நிறுத்திப் பார்த்தான் சத்தியமூர்த்தி. இரண்டு கேள்விகளுமே விரோதிகள் எதிரெதிரே சந்தித்து கொண்டாற் போல் ஒரு விளைவும் இன்றி அப்படி அப்படியே திகைத்து நின்றன. முதல் நாள் அவனுடைய சூட்கேசில் துணிமணிகளை எடுத்து நிரப்பிக் கொண்டே, "என் கைராசி வீணாகிவிடாது அண்ணா! திரும்பி வரும் போது கையில் ஆர்டரோடு வரப்போகிறாய். பார்த்துக் கொண்டே இரு..." என்று உற்சாகத் துள்ளலோடு தன் தங்கை ஆண்டாள் கூறியிருந்ததையும் இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. சிறிய தங்கை கல்யாணியைவிட ஆண்டாள் விவரம் தெரிந்தவள். குடும்பக் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்து கொண்டவள். சிறிய தங்கையின் உலகம் துப்பறியும் நாவல்களை ஒரே மூச்சில் படிப்பதோடு ஆரம்பமாகி 'எம்பிராய்டரி' வேலைகளோடு முடிந்துவிடும். மூத்தவள் ஆண்டாள் மேல்தான் சத்தியமூர்த்திக்குப் பாசம் அதிகம். 'இந்த வீட்டின் வைகறைப் போது என்னிடமிருந்துதான் விடிகிறது' என்பது போல் விடிகாலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலம் போடுவதிலிருந்து இரவு ஒன்பது மணிக்கு மேல் 'அண்ணா உன் பாயையும் தலையணையையும் திண்ணையில் கொண்டு போய் வைத்துவிட்டேன்' என்று சொல்ல வருவது வரை தன் தங்கை ஆண்டாள் அந்த வீட்டில் பம்பரமாகச் சுழன்று உழைப்பது சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரியும். ஓடியாடி உழைக்க முடியாமல் தளர்ந்து போன அம்மாவின் வாயினாலேயே தங்கை ஆண்டாள் புகழப்படுவதைக் கேட்டு சத்தியமூர்த்தி பூரித்துப் போயிருக்கிறான். கல்லூரிப் படிப்பு முடிகிற வரை அவன் ஊரோடு வீட்டில் அதிகம் தங்கியதே இல்லை. விடுமுறைகளுக்கு வருவது போவது தவிர, அவனுக்குத் தொடர்ந்து வீட்டில் தங்க வாய்த்ததில்லை. அவன் விடுமுறைக்காக ஊர் வரும் ஒவ்வொரு முறையும் அம்மா ஆண்டாளைச் சுட்டிக்காட்டி, -

"சத்தியம்! இந்த வீட்டின் ஒரே சுறுசுறுப்பு இவள்தானடா அப்பா...!" என்ற வாக்கியத்தை நாலைந்து தடவையாவது சொல்லத் தவறமாட்டாள். அம்மாவுக்கும் சத்தியமூர்த்திக்கும் ஆண்டாளின் மேல் பிரியமென்றால் கல்யாணி அப்பாவுக்குச் செல்லம். சத்தியமூர்த்தியோ, அம்மாவோ அப்பா காது கேட்கக் கல்யாணியைக் கடிந்து கொள்ளவும், கோபித்துக் கொள்ளவும் கூடத் தயங்குவார்கள். அப்படியே தப்பித் தவறிக் காது கேட்கும்படி அவர்கள் அவளைக் கடிந்து கொள்ள நேரிட்டாலோ, "அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை! அவளைக் கோபித்துக் கொள்ளாதீர்கள்..." என்பார் அப்பா.

"இந்தப் பிறவி மட்டும் கடைத்தேறுவதற்கு நீ குறைந்தபட்சம் ஒரு கோடி துப்பறியும் நாவல்களாவது படிக்க வேண்டும், கல்யாணீ!" என்று சத்தியமூர்த்தி எப்போதாவது கல்யாணியை வம்புக்கு இழுப்பான்.

"நிச்சயமாக நம் கல்யாணிகள் பிறவி கடைத்தேற ஒரு கோடி துப்பறியும் நாவல்கள் போதாது அண்ணா!" என்று அந்த நேரம் பார்த்து ஆண்டாளும் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து கொள்வாள். இதைக் கேட்டுக் கல்யாணிக்குக் கோபம் கோபமாக வரும்.

"பார் அப்பா, இவர்களை! கட்சி கட்டிக்கொண்டு இரண்டு பேருமாக என்னிடம் வம்புக்கு வருகிறார்கள்" என்று அப்பாவிடம் போய்ப் புகார் செய்வாள் கல்யாணி.

"அவளுக்கென்ன தெரியும்? அவள் குழந்தை?" என்று வழக்கமான வாக்கியத்தோடு செல்லப் பெண்ணுக்குப் பரிந்து கொண்டு வருவார் அப்பா. அந்த வீட்டின் வசதிகளற்ற வறுமை வாழ்விலும் இப்படி ஒரு செல்லம், பரிவு எல்லாம் உண்டு.

மதுரையில் தன் வீட்டைப் பற்றியும் அதன் பலங்களையும் பலவீனங்களையும் பற்றியும் ஒவ்வொன்றாகச் சிந்தித்தான் சத்தியமூர்த்தி. அப்பாவிலிருந்து தங்கை ஆண்டாள் வரை தன்னுடைய மல்லிகைப் பந்தல் இண்டர்வ்யூ சாதகமாக முடிந்து தான் ஆர்டருடனோ, அல்லது ஆர்டர் நிச்சயமாகக் கிடைத்துவிடுமென்ற நம்பிக்கையுடனோ திரும்புவதாகத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் நிச்சயமான எந்த விடையுடனும் இப்போது அவன் ஊர் திரும்பவில்லை. கல்லூரி அதிபர் பூபதியும் உறுதி கூறாமல் விடை கொடுத்திருந்தார். கல்லூரி முதல்வரும் உறுதி கூறாமல் தான் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பியிருந்தார்.

"பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டுச் செல்லுங்கள். அவர் எல்லா விவரமும் சொல்லுவார்" என்று கல்லூரி முதல்வரிடம் அவனை அனுப்பியிருந்தார் பூபதி. கல்லூரி முதல்வரோ அவனுடைய சர்டிபிகேட்களின் ஒரிஜனல்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, "நீங்கள் போகலாம். கோடை விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பதற்கு முன் உங்களுக்கு விவரம் தெரிவிக்கிறோம்" என்று மறுமொழி கொடுத்திருந்தார். இரண்டு பேருடைய விடைகளும் ஏறக்குறைய ஒரே விதமானவைதாம். அவற்றுக்கு ஆழமான அர்த்தமான விளைவோ எதுவும் எதிர்பார்ப்பதற்கில்லை. வழக்கமான, எல்லாருக்கும் எல்லா இடத்திலும் சொல்லுகிற விடைதான் அது. தன்னுடைய பேச்சின் இறுதிப் பகுதியில் பூபதியோடு தான் முரண்பட்டதை அவர் விரும்பவில்லை என்ற உண்மை சத்தியமூர்த்திக்குப் புலப்பட்டிருந்தாலும் அவ்வளவு பெருந்தன்மையான மனிதர் அந்தச் சிறிய கருத்து முரண்பாட்டை ஒரு தகுதிக்குறைவாக எடுத்துக் கொண்டு தன்னை வெறுக்க முடியும் என்பதை அவனால் நம்ப முடியவில்லை. ஆனபடி ஆகட்டும் என்று அந்தச் சிந்தனையையே மறக்க முயன்றான் சத்தியமூர்த்தி.

இரயில் வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. கோடை நாட்களில் அந்த நிலையத்துக்கு "ரிட்டன் டிக்கட்" வசதி உண்டாகையால் சத்தியமூர்த்தியிடம் திரும்புவதற்கும் டிக்கட் இருந்தது. அந்த இரயில் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்துக்கு வரவேண்டிய நேரத்தைக் கடந்து இரண்டு - இரண்டரை மணி நேரம் தாமதமாக வந்திருந்ததனால் மதுரைக்குப் போய் இறங்கும் போது ஏறக்குறைய விடிகிற நேரமாகி விடுமென்று தோன்றியது. வண்டியில் கூட்டமே இல்லை. நிலையத்தில் அந்த இரயிலுக்காகக் காத்திருந்தவர்கள் தொகையும் அதிகமில்லை. பிளாட்பாரத்தில் இரயில் வந்து நிற்கும் வேளைகளில் இந்த நிலையத்தில் வழக்கமாகக் கேட்கும் மலைப்பழம் விற்பவர்களின் கூக்குரல் கூட அப்போது ஏறக்குறைய இல்லாமல் ஓய்ந்து ஒடுங்கிப் போயிருந்தது. தான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு நேராக உள்ள ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் ஏறி மேலே சாமான்கள் வைக்கும் பலகையில் துண்டை விரித்துப் படுத்துக் கொண்டு விட்டான் சத்தியமூர்த்தி. முதல்நாள் உறக்கமிழந்து போயிருந்ததால் அதிகச் சோர்வின் காரணமாகப் படுத்தவுடன் தூக்கம் கண்களில் வந்து கெஞ்சிற்று. அந்த நிலையத்தில் அந்த நேரத்துக்குத் தெற்கேயிருந்து வருகிற இரயில் ஒன்று வடக்கேயிருந்து தெற்கே போய்க் கொண்டிருக்கும் இந்த இரயிலை 'கிராஸ்' செய்ய வேண்டியதாயிருந்தது. அதனால் தெற்கே போகிற இரயில் அரைமணி நேரம் கழித்துத்தான் புறப்பட்டது. இரயில் அங்கிருந்து புறப்பட்டது கூடச் சத்தியமூர்த்திக்குத் தெரியாது. அவன் நன்றாக உறங்கிப் போயிருந்தான். நாள் தங்கின விருந்தாளியைப் போல் அந்த இரவு நேரத்துப் பிரயாணிகள் இரயில் சுவாரஸ்யமோ, சுறுசுறுப்போ இல்லாமல் மெல்ல நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. 'மெயில் கௌரவமோ' 'எக்ஸ்பிரஸ் அந்தஸ்தோ' இல்லாத அந்த ஏழை பாசஞ்சர் வண்டி, ஏனோதானோ என்று வாழும் விறுவிறுப்பில்லாத மக்களைச் சுமந்தபடி ஏனோ தானோ என்று இயங்கியது.

அப்போது எந்தவிதமான நினைவோ கனவோ உறுத்தாத மனத்தோடு அடித்துப் போட்டமாதிரி நன்றாக உறங்கியிருந்தான் சத்தியமூர்த்தி. முக்கால்மணி நேரத்துக்கு மேல் அவனுடைய ஆழ்ந்த உறக்கம் இடையூறின்றித் தொடர்ந்தது. அவன் ஏறியிருந்த பெட்டியில் அவனைத் தவிர வேறு மனித சஞ்சாரமேயில்லை.

ஏதோ ஒரு சிறிய நிலையத்தில் இரயில் நின்று புறப்பட்ட போதுதான் அவன் படுத்திருந்த பெட்டியின் கீழே உள்ள இருக்கையிலிருந்து அந்தக் குரல் ஒலிகள் வலுத்து அவனை எழுப்பின. கண் விழித்துப் பார்த்தபோது வண்டிக்குள் புதிதாக யாரோ பிரயாணிகள் ஏறி இருப்பதாய்த் தெரிந்தது. பலகையில் எழுந்து உட்கார்ந்து கீழ்ப்புறமாகக் குனிந்து வார்த்தைகளாலேயே ஒருவருக்கொருவர் சாடிக்கொள்ளும் அந்த விநோதப் பிரயாணிகள் யாரென்று பார்க்க வேண்டும் போல ஆவலாயிருந்தும் அப்படிச் செய்யாமல் படுத்திருந்தபடியே அவர்களுடைய உரையாடலை உற்றுக் கேட்டான் சத்தியமூர்த்தி. நடுநடுவே ஏதோ நாட்டிய மேடையில் கேட்கிறாற் போலச் சலங்கை ஒலிகளும் கண்ணாடி வளைகளின் ஒலிகளும் வேறு கேட்டன. சத்தியமூர்த்தியின் தூக்கம் நிச்சயமாகக் கலைந்தே போய்விட்டது. வாக்குவாதம் வலுத்துச் சண்டை போடுகிற தொனியில் பேசிய குரல்கள் இரண்டும் பெண்களுடையவையாயிருந்தன. அவர்கள் அந்த நிலையத்தில்தான் ஏறியிருக்க வேண்டும் என்று அவன் அநுமானம் செய்ய முடிந்தது. இரண்டு பெண் குரல்களில் சற்றே வயது மூத்து முதிர்ந்ததாக ஒலித்த குரல் கண்டிப்பும் அதிகார மிடுக்கும் பொருந்தியதாக இருந்தது.

"வெட்கங்கெட்ட மூளி! நீ இப்படிச் செய்யலாமா? இதே மாதிரிப் போய்க்கிட்டிருந்தா நீ பிழைச்சு உருப்பட்டாப்போலத்தான் போ..."

இதற்குப் பதிலுரைத்த இளையகுரல் வீணையின் தந்தியை மெதுவாக வருடினாற்போல் இனிமையும் நளினமும் இங்கிதமும் மென்மையும் இழைத்து மெல்லச் சீறியது.

"இப்படி மானங்கெட்டுப் பிழைக்கிறதுக்கு எங்கேயாவது ஆற்றிலே குளத்திலே விழுந்து செத்தா நல்லது. நீயா என்னைக் கொல்லப் போகிறதில்லே; நானாகச் சாகவிடவும் போகிறதில்லே. இப்படியே தான் தொடர்ந்து நீ என்னைச் சித்திரவதை செய்துகிட்டிருக்கப் போறே..."

இப்படி ஒலித்த இந்தச் சொற்களின் தொடர்ச்சியாகவே வளைகளும் சலங்கைகளும் குலுங்கி ஒலித்ததனால் அவைகளை இந்தச் சொற்களுக்குரியவள் தான் அணிந்திருக்க வேண்டும் என்பதையும் அவன் புரிந்து கொள்ள முடிந்தது. இரயில் பெட்டி நிறைய முகப்பௌடரும், சந்தனமும், சாதிப் பூக்களும் கம்மென்று மணக்கத் தொடங்கியிருந்தன. சத்தியமூர்த்தி மேலும் அந்த உரையாடலைத் தொடர்ந்து கவனித்தான்.

"உன் மனசிலே நீ என்ன தான் நினைச்சுக்கிட்டிருக்கியோ? தெரியலை... சின்னஞ் சிறு கிராமத்திலே அம்மன் கோவில் திருவிழாவுக்கு நாலுவிதமான மனுசாளும் தான் வந்திருப்பாங்க. ஒருத்தருக்குப் பாம்பாட்டி நடனம் பிடிச்சிருந்தா இன்னொருத்தருக்கு 'மயில் டான்ஸு' தான் பிடிக்கும். யார் மனசும் குறைப்படாமே தான் நடந்துக்கணும்... கால்லே சலங்கையைக் கட்டிக்கிட்டு இதுக்குன்னு பெறந்து வளர்ந்தப்புறம்... அதெல்லாம் பார்த்தா முடியுமா?"

"அதெல்லாம்னா... எதெல்லாம்?"

"உன் திமிர் பிடிச்ச கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல நான் ஆள் இல்லேடிம்மா."

"அம்மன் கோவில் திருவிழா நடத்தற மனுசங்களா இவங்க...? நிஜமா அம்மனைக் கும்பிட்டுத் திருவிழா எடுக்கிறவங்களா இருந்தால் பெண்களைத் துச்சமா மதிக்கிற சின்ன நினைப்புத் தோணுமா இவங்களுக்கு? ஒருத்தன் உதடு ரெண்டையும் குவிச்சு 'ஹுய்'னு சீட்டியடிக்கிறான். இன்னொருத்தன் கண்ணைச் சாய்க்கிறான். அந்தக் கண்ணிலே கொள்ளியைத் தான் வைக்கணும்."

"இப்படி வாய்த் துடுக்கு இருக்கப்படாதுடீ உனக்கு."

"ஏன்?... இருந்தா என்னவாம்?"

"சீக்கிரமா அழிஞ்சி இருந்த எடம் தெரியாமப் போயிடுவே!"

"அப்படிப் போயிட்டா உனக்கு சந்தோஷம் தானே...?"

"இருந்து இப்படி என் கழுத்தை அறுக்கிறதுக்குப் பதில் அதையாவது செய்யலாம் நீ..."

- எதிர்த்தரப்பிலிருந்து இதற்குப் பதில் இல்லை. வளைகளும் சலங்கைகளும் மெல்லக் குலுங்கிய பின் சிறிது நேரம் கழித்து விசும்பியழுகிற இளங்குரல் எழுந்தது. அந்தக் குரல் விசும்பியழுவது கூட மிகவும் நயமானதோர் இன்னிசையாக உருவாகி ஒலித்தது.

"பேசறதையும் பேசிப்பிட்டு எதுக்குடீ இந்தச் சாகஸம்?"

இந்தக் கேள்விக்கும் எதிர்த்தரப்பிலிருந்து பதில் இல்லை. அழுகைக்குரல் பெரிதாகியது.

"பெரிசா அழுதுட்டாப்பிலே ஆச்சா? நீ பெறந்த பெறப்புக்கு ரோஷம் என்னா வேண்டிக் கெடக்கு? பேசின தொகைக்கு ஒழுங்கா ஆடிப்பிட்டு வரணுமா, இல்லையா?"

"அப்படி ஆடறதுக்கு நா ஒண்ணும் தெருக்கூத்துப் படிச்சுக்கலை. 'இது சரசுவதியோட இலட்சணம்'னு சொல்லியிருக்காரு வாத்தியாரு..." என்று அழுகையோடு குமுறிக் கொண்டு பதில் பேசியது இளங்குரல்.

திடீரென்று முதியவளிடமிருந்து சத்தியமூர்த்தியே இரண்டாவது முறை நினைக்கக் கூசும்படி துச்சமான வார்த்தை ஒன்று வெடித்தது. மேலே ஒருவன் படுத்திருப்பதை மறந்து தாங்கள் மட்டுமே அந்தப் பெட்டியில் இருப்பதாகப் பாவித்துக் கொண்டு வார்த்தைகளைத் தடிக்க விட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். முதியவள் நெருப்பாய் விட்டெறிந்த அந்த ஒரு வார்த்தை இளையவளிடம் விளைவித்த ஆத்திரம் அடக்க முடியாததாக இருந்தது. இப்போது சத்தியமூர்த்தி எழுந்து உட்கார்ந்து கீழே தலையை நீட்டிப் பார்க்க வேண்டியதாயிற்று. பார்த்த கண்களுக்கு விருந்தாகத் தாமரை பூத்தாற் போன்ற அந்த முகம் தான் முதன் முதலாக அவனுக்குத் தோன்றியது. வானவில்லைப் போல் நிறங்களின் அழகிய பக்குவமெல்லாம் இணைந்த அற்புதமாய்த் தெரிந்தாள் அந்தப் பெண். காலில் நாட்டியத்துக்காகக் கட்டிக் கொண்டிருந்த சலங்கைக் கொத்துக்களை அறுத்தெறிந்துவிட்டு, "நான் விழுந்து செத்தால் தான் உனக்கு என்னைப் புரியும்..." என்று இரயில் கதவைத் திறந்து கொண்டு பாயத் தயாராகிவிட்டாள் அந்த இளம்பெண். இனியும் தான் மேலேயிருந்து சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனிதத் தன்மையில்லை என்று படவே சத்தியமூர்த்தி கீழே இறங்கி அவர்களுக்குள் சமரசம் செய்ய முயன்றான். அவனைக் கண்டவுடன் தங்கள் இருவரைத் தவிர மூன்றாவதாக ஆண்பிள்ளை ஒருவன் அந்த வண்டியில் இருக்கிறான் என்பதை அறிந்ததே அவர்களுக்கு அதிர்ச்சியாயிருந்தது. அவனைக் கண்டு அந்த இளம் பெண் தான் அதிகக் கூச்சமடைந்தாள். அவளை அரட்டி மிரட்டிக் கொண்டிருந்த முதியவள் அதிக வெட்கமோ கூச்சமோ கொண்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவளுக்கும் சேர்த்துக் கூச்சப்படுவது போல் அத்தனை அதிகமான வெட்கத்தோடு தலையைக் கவிழ்த்துக் கொண்டு நாணி நின்றாள் அந்த இளம்பெண். நாட்டிய கோலத்தில் அந்த இளம்பெண் மருண்டு நின்றதே ஓர் அழகிய அபிநயமாயிருந்தது. முன்னங்காலைத் தூக்கிக் கொண்டு பாய்வதற்குத் திமிறி நிற்கும் அழகு, அவளிடம் தென்பட்டது. அந்த அழகில் அடக்கமும் இருந்தது. அப்போது அவள் முகத்தில் தெரிந்த மடப்பமும், பயிர்ப்பும், கூச்சமும், நாணமும் மிக உயர்ந்த குடும்பத்துப் பெண்களிடம் கூடக் காண அருமையானவைகளாயிருப்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட்டான். தேடிக் கண்டுபிடிக்க முடியாத அல்லது விரும்பாத பல இடங்களில் வாழ்க்கையில் மிக மென்மையான குணங்கள் அமைந்திருந்து அவை பிறருக்குத் தெரியாமலே போய்விடுகிற சமுதாய நஷ்டத்துக்காகச் சத்தியமூர்த்தி தனக்குள் பலமுறை வருந்தியிருக்கிறான். இன்றும் அப்படி அவன் வருந்த நேரிட்டது.

"அம்மா! நீங்கள் உங்கள் பெண்ணிடம் இன்னும் சிறிது நாகரிகமாகப் பேசலாமே? அப்படிப் பேசினாள் இரயிலில் உடன் வருகிற மற்ற பிரயாணிகளும் உங்களை அநாகரிகமாய் நினைத்துக் கொள்ளக் காரணமாயிராது" என்று சத்தியமூர்த்தி கூறியதைக் கேட்டு முகத்தைச் சுளித்தாள் அந்த முதிய அம்மாள்.

"எங்கள் அம்மாவுக்கு நாகரிகத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. 'நாகரிகத்தை' எவ்வளவு 'அட்வான்ஸ்' வாங்கிக் கொண்டு விற்கலாமென்று அவள் நினைப்பாள்..." என்று கீழே தலையைக் கவிழ்த்துக் கொண்டே, குமுறலோடு அவனிடம் பதில் பேசியது அந்த இனிய குரல்.

'இன்னொருத்தனுக்கு முன் சந்தி சிரித்து விடும்போல் இருக்கிறதே' என்ற பயத்தினாலோ என்னவோ அம்மாக்காரி பதில் பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டாள். சண்டை ஒருவிதமாக ஓய்ந்து அமைதியடைந்த நிலைக்கு வந்தது. சத்தியமூர்த்தி மறுபடியும் மேலே ஏறிப்படுத்துக் கொண்டான். சிறிது நேரத்தில் கீழ்ப்புறமிருந்து அந்தப் பெரிய அம்மாள் குறட்டை விடும் ஓசை கிளம்பிற்று. அந்த அம்மாளின் குறட்டை கூட மிடுக்குடனே மிரட்டுவதுபோல் இருந்தது. சத்தியமூர்த்திக்குத் தூக்கம் மறுபடியும் வரவில்லை. படுத்தபடியே புரண்டு கொண்டிருந்தான். கண்கள் மட்டும் தூங்குவது போல் சும்மா மூடியிருந்தன. கீழே இருந்து பரவும் நறுமணங்கள் அவற்றைச் சுமந்து கொண்டிருப்பவளின் சோகமான வேதனைகளை அவனுடைய ஞாபகத்தில் படரச் செய்தன. அவன் ஏதேதோ தொடர்பு உள்ளனவும், தொடர்பு அற்றவனுமாகிய சிந்தனைகளைத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கினான்.

அதிகாலை மூன்றரை மணி இருக்கும். இரயில் மதுரைப் பாலம் நிலையத்தைக் கடந்து வைகைப் பாலத்தில் 'தடதட'வென்று ஓசையிட்டு ஓடத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தப் பெண் தன்னுடைய உணர்ச்சியின் மானத்தை இரண்டாம் முறையாக அவனுக்கு நிரூபிக்கும் காரியத்தைச் செய்யலானாள். அவளுடைய கைவளைகள் ஓசைப்பட்டுக் கண்ணை மூடிக் கொண்டிருந்த அவனை எழுப்பிவிட்டன. கண்களைத் திறந்து விழித்ததும் இரயில் கதவைத் திறந்து கொண்டு வைகையில் பாய்ந்து விடத் துணிவும் நிலையில் அவளைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. பார்த்ததும் திடுக்கிட்டான். அவள் நினைத்ததைச் செய்துவிட அந்த நிலையில் அவளுக்கு அரைகணமே போதும். மேல் பலகையிலிருந்து கீழே குதித்துத் தாவி அவளைக் காப்பாற்றவோ குறைந்த பட்சம் அவனுக்கு இரண்டு கணமாவது வேண்டுமே?

அத்தியாயம் - 5

உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காண முடியாமல் மறைத்து விடுகிறது.

'அந்த நிலையில் தான் என்ன செய்வது?' என்பதை சத்தியமூர்த்தி இன்னும் ஒரு கணம் சிந்தித்திருந்தானானால் அவள் வைகையாற்றில் பாய்ந்திருப்பாள். சிந்தித்துத் தயங்கிக் கொண்டிருப்பதை விடச் செயல்பட்டுக் காப்பாற்ற வேண்டிய அவசரத்தையும், அவசியத்தையும் உணர்ந்தவனாக கீழே தாவி இறங்கி கைக்கு இசைவாக இருந்த அவள் வலது கையைப் பற்றிப் பின்னுக்கு இழுத்தான் சத்தியமூர்த்தி. அவன் அவசரமாகப் பாய்ந்து பற்றிய வேகத்தில் அந்தப் பூப்போன்ற கையை அழகு செய்து கொண்டிருந்த கண்ணாடி வளையல்களில் சில நொறுங்கின. பூக்களின் மென்மையை விட அதிகமான மென்மையும் சந்தனத்தின் குளிர்ச்சியை விட அதிகமான குளிர்ச்சியும் பொருந்திய அந்தக் கையில் உடைந்த வளைச் சில்லுகள் அழுத்தப்பெற்ற இடங்களில் கோடு கீறினாற் போலக் குருதி கொப்பளித்தது.

வாழ்க்கையின் எல்லாவிதமான தொல்லைகளிலிருந்தும் விடுபட்டுப் போவதற்குத் துணிந்துவிட்ட அந்தப் பெண் கடைசி விநாடியில் தன் துணிவையும் விருப்பத்தையும் பாழாக்கிவிட்ட அவனைத் திரும்பி நிமிர்ந்து பார்த்தாள். பிரத்யட்ச உலகில் ஓர் அபூர்வமாய்க் கவிகளின் கனவுகளிலே மிதக்கும் எல்லாவிதமான எழில்களும் ஒன்று சேர்ந்து இல்லாப் பேரழகைப் போன்ற அவளுடைய அந்தக் கண்களில் நீர் மல்கிற்று. புயல்காற்றில் அறுந்து விழுவதற்கு இருந்த பூக்கொடி தற்செயலாய்ப் பக்கத்துக் கிளையில் படரவிட்டிருந்த ஏதோ ஒரு சிறிய நுனியின் பிணைப்பால் தப்பி இருப்பதைப் போல் அவள் அவன் பிடியில் இருந்தாள். உலகத்திலுள்ள நறுமணங்களில் மனத்தை மயக்கும் சக்திவாய்ந்த மணங்கள் எவை எவை எல்லாம் உண்டோ அவை அவை எல்லாம் ஒன்றாகி மணப்பது போல் மணங்களின் உருவமாகத் தன் பிடியில் சிக்கி நிற்கும் அவள் காதருகே குனிந்து சொன்னான் சத்தியமூர்த்தி.

"நல்ல வேளையாக நீங்கள் காப்பாற்றப்பட்டு விட்டீர்கள்! இனி இப்படி நினைப்பு உங்களுக்கு வரக்கூடாது."

"வாழ விரும்பாத அபலைகளையும் அநாதைகளையும் வலிந்து காப்பாற்றுகிறவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லை" என்று வெறுப்போடு பதில் சொல்லிய போது எந்தவிதமான ஆசைகளின் சாயலும் இல்லாமல் வறட்சியாகச் சிரித்தாள் அவள். அந்தச் சிரிப்பைப் பார்த்த மறுகணமே அதன் உடனிகழ்ச்சியாகத் 'தின்பதற்கு மட்டுமல்லாது தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள்' என்று கவியரசர் பாரதி ஞானரதத்தில் எங்கோ எழுதியிருக்கும் ஓர் அழகிய வாக்கியம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தது. வெறுப்பிலும் நிராசையிலும் தோய்ந்து மரணவாயிலுக்கு அருகே அடியெடுத்து வைத்துவிட்டுத் திரும்புகிற போதே இவள் சிரிப்பு இவ்வளவு அழகாயிருக்குமானால் தானே சிரிக்க விரும்பி இவள் சிரிப்பது இன்னும் எவ்வளவு அழகாயிருக்கும் என்று கற்பனை செய்ய முயன்றான் சத்தியமூர்த்தி.

இதற்குள் இரயில் வைகைப் பாலத்தைக் கடந்து பொன்னகரம் என்ற உழைப்பாளிகளின் சுவர்க்கத்தையும், பிரம்மாண்டமான பஞ்சாலைக் கட்டிடங்களையும் ஊடுருவிக் கொண்டு மதுரை நகருக்குள் செல்லத் தொடங்கியிருந்தது.

"ஊர் வந்துவிட்டது. இரயிலிலிருந்து இறங்கும்போது இனி எப்போதும் இப்படி அசட்டுக் காரியம் செய்யலாகாது என்ற திடமான நம்பிக்கையோடு மதுரை மண்ணில் இறங்கி நடக்க வேண்டும் நீங்கள்" என்றான் சத்தியமூர்த்தி.

"என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் தான் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகழிடம். சாமர்த்தியசாலிகளும் சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களும் வாழவேண்டிய உலகம் இது. பேதைகளும் அப்பாவிகளும் என் போன்ற அபலைகளும் வாழ்வதற்கு இங்கு இடமில்லை."

"நம்பிக்கைகளை அடைய வேண்டிய வயதில் இப்படி விரக்திகளை நினைக்கவோ பேசவோ கூடாது."

"என்ன செய்யலாம்? என் நிலையில் இதைத் தவிர வேறு எதையும் பேச வலிமையற்றவளாயிருக்கிறேன் நான்."

இந்தப் பெண்ணுக்கு ஆறுதலாக இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தான் சத்தியமூர்த்தி. ஆனால் அதற்குள் இரயில் பிளாட்பாரத்தில் புகுந்து நின்றுவிட்டது. அந்தப் பெண்ணின் தாயும் விழித்துக் கொண்டு விட்டாள். கூட்டமோ, பரபரப்போ இல்லாமல் பிளாட்பாரம் அழுது வடிந்தது. அந்த இரண்டுக்கெட்ட நேரத்தில் கவனிப்பாரற்று நுழையும் சாதாரணமான பிரயாணிகள் இரயிலின் பக்கமாய்ப் போர்ட்டர்கள் கூட அதிகமாக வந்து எட்டிப் பார்க்கவில்லை.

"ஊர் வந்து விட்டாற் போல் இருக்கிறதே?..." என்று அந்த அம்மாள் தூக்கம் கலைந்த விழிப்பும், ஊர் வந்த விழிப்பும் போட்டிபோட இரட்டை விழிப்புடனே எழுந்த போது அவளிடம் ஏதாவது சொல்ல வேண்டும் என்று நினைத்து அந்தக் கடுமையான முகத்தைப் பார்த்த பின் ஒன்றுமே சொல்லத் தோன்றாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. அந்த அம்மாள் முகத்தைப் பார்த்தால் அப்போது அவளிடம் தான் ஒன்றும் பேசாமல் விடைபெற்றுக் கொண்டு போய் விடுவதே நல்லது என்று தோன்றியது அவனுக்கு.

"உங்கள் பெண்ணிடம் நீங்கள் இன்னும் அதிகமான பாசத்தோடும், கருணையோடும் நடந்து கொள்ள வேண்டும் அம்மா! இப்படிக் கொடுமையாகவும் பரிவு இல்லாமலும் நடந்து கொள்வீர்களானால் என்றாவது ஒருநாள் உங்கள் பெண்ணை நீங்களே உயிரோடு பார்க்க முடியாமல் போய்விடும்..." என்று தொடங்கிக் கண்டிப்பாகவும் அந்த நேரத்தில் அதற்காகவே எடுத்துக் கொண்டாற் போன்ற ஒரு விதமான உரிமையுடனும் பேச எண்ணியிருந்தும் பேசப்பட வேண்டியவளுடைய முகத்தைப் பார்த்ததும் அவன் அதைச் செய்ய இயலாமல் போயிற்று. கண்ணீர் பெருகும் விழிகளால் சூட்கேஸைக் கையில் எடுத்துக் கொண்டு புறப்படத் தயாராகிவிட்ட அவனையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண். பச்சையும் சிவப்புமாக நிறங்கள் கோடுகோடாகச் சிதறிக் கிடப்பது போல் உடைந்த வளைச் சில்லுகள் காலில் இடறின. போகும் போது இருவரில் யாரிடம் சொல்லி கொள்வதென்று ஒரு கணம் சிந்தித்த பின் இருவருக்கும் பொதுவாக 'வருகிறேன்' என்ற ஒரு வார்த்தையைச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் சத்தியமூர்த்தி. அந்த ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லியிருக்க வேண்டாமோ என்றும் தோன்றியது. ஆனால் 'வருகிறேன்' என்ற அந்த ஒரு வார்த்தைக்குப் பதிலும் சொல்ல முடியாமல், பதில் சொல்லாமலும் இருக்க முடியாமல் கண்ணில் பெருகும் நீரே தன் அந்தரங்கத்துக்குச் சாட்சியாக மெல்லத் தலையை அசைந்து விடை கொடுத்தாளே, அந்த ஒருத்திக்காக அதைச் செய்தது சரிதான் என்ற திருப்தியோடு பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தான் சத்தியமூர்த்தி.

இரயில் சந்திப்புகளுக்கு வரவேற்பு கிடையாது, விடைபெறுதலும் கிடையாது - இருக்கவும் கூடாது. ஆனால் சில சந்திப்புகள் மனத்தில் பதிந்து கொள்கின்றனவே! அப்படிப் பதிவாகிய சந்திப்புக்கள் நம்மையும் அறியாமலே நாம் ஏதோ ஓர் உறவைக் கற்பித்துக் கொள்ளும்படி செய்துவிடுகின்றன. தன்னைப் பொறுத்தவரை தானும் இன்று அப்படி யார் மேலேயோ ஏதோ ஓர் உறவைக் கற்பித்துக் கொண்டு விட்டதைச் சத்தியமூர்த்தி உணர்ந்தான்.

அவன் பிளாட்பாரத்தில் இறங்கிச் சிறிது தொலைவு தான் நடந்திருப்பான். அதற்குள் இவன் முற்றிலும் எதிர்பாராத கேள்வியோடு எதிர்பாராத மனிதர் ஒருவர் அவனைச் சந்தித்தார். அந்தக் கேள்வியைக் கேட்ட விதமும் கேட்டுவிட்டு அவர் அவனைப் பார்த்த பார்வையும் சிரித்த சிரிப்பும் சத்தியமூர்த்தியை என்னவோ செய்தன!

"என்னடா சத்தியம்? இவர்களை உனக்கு எவ்வளவு நாட்களாகத் தெரியும்? ரொம்ப நாட்களாகப் பழக்கம் போலிருக்கிறது...?"

"இவர்களை என்றால் எவர்களை?"

"அதுதான் ரயிலில் உன் கூட வந்தார்களே, அவர்களைத் தான் சொல்கிறேன். இரயில் பிளாட்பாரத்தில் நுழையும்போதே உன்னை நான் பார்த்தேன். நான் நின்று கொண்டிருந்த இடத்துக்கு நேராகச் சொல்லி வைத்தாற் போல் உங்கள் வண்டி வந்தது... அது சரி... பாதி ராத்திரிக்கு மேல் இப்படி எங்கேயிருந்து பயணம் புறப்பட்டு வருகிறாய் இவர்களோடு?"

இதைக் கேட்டு சத்தியமூர்த்திக்குச் சினமும் திகைப்பும் மாறிமாறி ஏற்பட்டன. அந்த மனிதரை எரித்து விடுவது போல் பார்த்தான் அவன். 'மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' என்று சொன்னால் அதன் உரிமையாளர் கண்ணாயிரத்தை எல்லோருமே தயங்காமல் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு நாலாவது வீட்டிலோ ஐந்தாவது வீட்டிலோ குடியிருந்தார் அவர். வெற்றிலை பாக்கை மென்று அசை போடுவதற்கும் அடுத்தபடி வம்புகளையும் வதந்திகளையும் அசை போடுவதில் மன்னன். சத்தியமூர்த்தி சாதாரண நாட்களில் இந்த மனிதரைத் தெருவில் எங்காவது சந்திப்பதற்கு நேர்ந்தால் கூட "பக்கத்தில் வராதே - விலகிப் போய்விடு..." என்ற பாவனையில் நீளமாக ஒரு கும்பிடு போட்டு அனுப்பிய பின்பே நிம்மதியாக மூச்சு விடுவான். திருவாளர் கண்ணாயிரம் 'பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கி' வாழ்கிறவர். நெப்போலியனுடைய அகராதியில் 'முடியாது' என்ற வார்த்தை இல்லாதது போலத் திருவாளர் கண்ணாயிரம் அவர்களுடைய அகராதியில் பல நல்ல வார்த்தைகளுக்கு இடமே இல்லை. நியாயம், தர்மம், ஈவு, இரக்கம்... இப்படி எத்தனையோ வார்த்தைகள் அவருடைய அகராதியில் இருக்க முடியாது. இந்த வகையில் நெப்போலியனை விடப் பெரியவர் அவர். கர்ணன் பிறக்கும் போதே காதில் மகர குண்டலங்களோடு பிறந்த மாதிரி அற்பத்தனத்தையும், வஞ்சத்தையுமே பிறவி அணிகலன்களாகக் கொண்டு பிறந்தவர் கண்ணாயிரம். அவர் இந்த உலகில் பிறக்கும் போதே மேற்படி 'கல்யாண (?) குணங்களும்' அவரோடு உடன் பிறந்து விட்டன. இதெல்லாம் சத்தியமூர்த்திக்கு நன்றாகத் தெரிந்திருந்த காரணத்தினால் தான் திருவாளர் கண்ணாயிரத்தையும் அவருடைய அற்பத்தனத்தையும் அந்த அகாலத்தில் இரயில் நிலையத்துப் பிளாட்பாரத்தில் சந்தித்த போது அவன் மிகவும் வருந்தினான். பாமரர்களும், சராசரி மனிதர்களும் இந்த உலகத்துக்குத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிற பெரிய தியாகம் தங்களைவிடப் பாமரர்களாகவும், சராசரியானவர்களாகவும் இருக்கிறவர்களைப் பிரமுகர்களாக இருக்கும்படி அனுமதித்து அவர்களைத் தொடர்ந்து மன்னித்துக் கொண்டிருப்பதுதான். மீனாட்சிப் பட்டணத்துப் பெருமக்களால் இப்படி நிரந்தரமாக மன்னிக்கப்பட்டுவிட்ட பிரமுகர்தான் திருவாளர் கண்ணாயிரம். 'மூன் லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸீஸ்' என்ற மாபெரும் விளம்பர ஏற்பாட்டுக் கம்பெனி ஒரு சிறிய மூன்றே முக்காலடி அறைக்குள் இரு நாற்காலிகளிலும் ஒரு மேஜையிலும் அடங்கிப் போய்விட்டாலும் அந்தப் பேரை வைத்துக் கண்ணாயிரம் பிரமாதப்படுத்திக் கொண்டிருந்தார். அவருக்காக நல்லவர்கள் பயப்பட்டார்கள்; விட்டுக் கொடுத்தார்கள் - பொல்லாதவர்கள் துணையிருந்தார்கள், ஒத்துழைத்தார்கள். பிரமுகராக வாழ்வதற்கு இந்த இரண்டு வசதிகளை விட வேறு என்ன வேண்டும்? ஆகவே அவர் சகலவிதமான ஆதரவும் உள்ள நகரப் பிரமுகர்களில் ஒருவராக இருந்தார்.

"என்னப்பா, திருட்டு விழி விழிக்கிறாய்? என்னிடம் பதில் சொல்வதற்கு என்ன கூச்சம்? சும்மா... சொல் அப்பனே?" என்று மீண்டும் கண்ணாயிரம் சத்தியமூர்த்தியை மடக்கிக் கேள்வி கேட்கவே அவன் ஆத்திரமடைந்தான்.

"திருவாளர் கண்ணாயிரம் அவர்களே! இரயில்வேக்காரர்கள் இந்த இரயிலை நான் பயணம் செய்வதற்காக மட்டும் விட்டிருந்தால் என்னோடு கூட யாரும் ஏறிக் கொண்டு வரவிடாமல் நானே தடுத்திருப்பேன். அது முடியாமல் போனதற்காகத் தயை கூர்ந்து என்னை மன்னித்துவிடுங்கள்..." என்று சொல்லிவிட்டுக் கண்ணாயிரத்தைக் கடந்து வேகமாக விலகி முன்னால் நடந்தான் சத்தியமூர்த்தி.

"கோபித்துக் கொள்ளாதே, அப்பனே! நாட்டியக்காரி மோகினியை உனக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும் என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. அதனால் தான் கேட்டேன்" என்று சொல்லிச் சிரித்தார் கண்ணாயிரம். இந்த வார்த்தைகளை அவர் சொல்லி முடிப்பதற்குள் சத்தியமூர்த்தி முன்னால் சிறிது தொலைவு நடந்து போயிருந்தாலும் 'நாட்டியக்காரி மோகினி' என்ற சொற்கள் அவனுக்குத் தெளிவாகக் கேட்டிருந்தன. அந்தப் பெயர் அவனால் காப்பாற்றப் பட்டவளுடையதாயிருந்தால் அதைவிடப் பொருத்தமான வேறு பெயரை அவளுக்கு வைத்திருக்க முடியாது என்று தோன்றியது அவனுக்கு. உலகத்துக்கு அழகாகத் தோன்றுகிற பலர் உள்ளத்தால் வெந்து அழிந்து கொண்டிருப்பது வெளியே தெரிவதில்லை. அவர்களுடைய அழகு ஒரு தடையாக இருந்து அந்தரங்கத்தில் அவர்கள் படுகிற கவலைகளைப் பிறர் காணமுடியாமல் மறைத்து விடுகிறது. ஒரு சீராய் முத்துக்கோவைப் போல் மின்னிய அந்தக் கட்டழகுப் பல் வரிசையையும் சிரிப்பையும் ஞாபகத்தில் கொண்டு வர முயன்று தோற்றான் சத்தியமூர்த்தி. தாங்கள் எந்தக் கலைகளை நம்பி வாழமுடியுமோ, அந்தக் கலைகளாலும் முழுமையாகக் காப்பாற்றப்படாமல், மனிதர்களாலும் தூய்மையாகக் காப்பாற்றப்படாமல் இரண்டுங்கெட்ட நிலைக்கு வந்து விட்ட இத்தகைய கலைக் குடும்பங்களைப் பற்றி நினைத்தான் சத்தியமூர்த்தி. அப்படி நினைத்தபோது எந்தக் காலத்திலும் நிச்சயமான தீர்மானத்துடன் பரிகாரம் காண முடியாதபடி சில பிரச்சினைகளை இந்த நாட்டில் நிரந்தரமாகவே அரைகுறையாய் இருந்து வருவதை அவனால் உணர முடிந்தது.

இரயில் நிலையத்துக்கு வெளியே வந்ததும் வலது பக்கம் ஓரமாக நிறுத்தியிருந்த ரிக்ஷாக்காரர்கள் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். விடிவதற்கு இன்னும் சில நாழிகை நேரமே இருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மதுரையின் வீதிகளில் நடப்பதே ஓர் இன்பகரமான அநுபவமாயிருக்கும். ரிக்ஷாக்காரர்களிடமிருந்து விடுபட்டு சூட்கேஸும் கையுமாக நடந்தான் அவன். பயனை எதிர்பாராமல் பழைய காலத்து மனிதர்கள் செய்து வைத்துவிட்டுப் போகும் பல தருமங்களுக்கு ஒரு ஞாபகம் போல் எதிரே மங்கம்மாள் சத்திரம் தெரிந்தது. தருமம், தானம் போன்ற பல பெரிய காரியங்கள் இந்த நூற்றாண்டில் ஒரு நல்ல ஞாபகம் என்ற அளவிலாவது நிலைத்திருக்கின்றன என்று எண்ணியபோது அந்த எண்ணத்தை அடுத்து கண்ணாயிரம் சேர்ந்து ஞாபகத்துக்கு வரவே சத்தியமூர்த்தி தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். வீடு நெருங்க நெருங்கத் தன்னை எதிர்கொள்ளப் போகிற தந்தைக்குத் தான் சொல்லியாக வேண்டிய மறுமொழியைப் பற்றிச் சிந்திக்கலானான் அவன்.

'வெளியூருக்குப் போய்விட்டு திரும்புகிறேன். வீட்டில் இரண்டு தங்கைகளும், வயதான பெற்றோரும் இருக்கிறார்களே; அவர்களுக்காக நான் என்ன வாங்கிக் கொண்டு போகிறேன்?' என்று எண்ணியபோது தான் வெறும் கையோடு ஊர் திரும்புவதை அவன் தானாகவே உணர்ந்து வருந்த வேண்டியிருந்தது. எப்போதுமே அவன் அப்படித்தான்! அநுபவபூர்வமாக உலகத்துக்கேற்ப வாழும் சில பழக்கங்கள் அவனிடம் படியாமலே போய்விட்டது. அப்பாவும் அம்மாவும் பல முறை அவனிடமுள்ள இந்தக் குறையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கல்லூரி நாட்களில் அவன் விடுமுறைக்கு ஊர் திரும்பும்போது, "ஊரிலிருந்து வீடு தேடி வருகிறவனுக்கு ஏதாவது வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தோன்றாதா? உலகத்து வழக்கமே பிடிபடாத பிள்ளையாக இருக்கிறாயே அப்பா!" என்று அம்மா வழக்கமாகக் குறைப்பட்டுக் கொள்வது உண்டு. இன்றும் அப்படிக் குறைபட்டுக் கொள்வதற்கேற்ற சூழ்நிலையில் தான் வீடு திரும்புவது அவனுக்கே புரிந்தது.

'பசையைப் போல் அநுபவத்தில் ஒட்டிக் கொண்டு விடவேண்டிய சிலவிதமான வாழ்க்கை ஆர்வங்கள் என்னிடம் இல்லை. உறவினர்களைக் கண்டால் நான் அதிகமாகக் கலந்து பேசிப் பழகுவதில்லை என்று அப்பா குறைபடுகிறார். தங்கைகளுக்கு அடிக்கடி ஏதாவது வாங்கிக் கொடுத்து வெளிப்படையான பிரியத்தை என்னால் காண்பிக்க முடியவில்லையே என்று அம்மா என்மேல் வருத்தப்படுகிறாள். 'தெருவில் சந்தித்தால் நின்று பேசிக் கலகலப்பாகப் பழகத் தெரிவதில்லை. முரட்டு ஆளாக இருக்கிறான்' என்று கண்ணாயிரத்தைப் போல் உள்ளவர்கள் என்னைப்பற்றிக் குறை சொல்கிறார்கள். மொத்தத்தில் பலர் எதிர்பார்க்கிற சில குணங்கள் என்னிடம் இல்லை. இதில் மாறுதல் விளைய வேண்டியது என்னிடமா, மற்றவர்களிடமா என்பதுதான் முடிவாகத் தீர்மானமாக வேண்டிய காரியம்.'

'நீங்கள் உங்களைக் காட்டிலும் வயது மூத்தவர்களிடம் இன்னும் நிதானமாகவும் விநயமாகவும் பேசுவதற்குப் பழகிக் கொள்ள வேண்டும்' என்று வேறொரு விதமாக அவனிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி. அதையும் இப்போது நினைத்தான் அவன்.

எல்லாவற்றையும் மொத்தமான அபிப்பிராயத் தொகுப்பாக ஒன்று சேர்த்துப் பார்த்தால் எப்படி எப்படியோ மாறவேண்டுமென்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் எதிர்பார்ப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனால் என்ன விளைவை எதிர்பார்த்து அப்படி மாற வேண்டும் என்றுதான் புரியவில்லை. பிறருடைய சௌகரியங்களை உத்தேசித்துத் தானே தன்னை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் கோழையாக வாழப் பழகவில்லை அவன். பிறரை மாற்றுகிற தீரர்களில் ஒருவனாக வாழ ஆசைப்படுகிறவனின் ஆரம்பம் இப்படித்தான் இருக்க முடியும் என்பது போல இருந்தன அவனுடைய அநுபவங்கள். அவன் படித்திருந்த புத்தகங்களும் பழகியிருந்த நல்லவர்களும் ஒவ்வொரு துறையிலும் இங்கு இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்பது போல திடமான அபிப்பிராயங்களை ஆழமாக எண்ணித் தீர்மானம் செய்ய அவனுக்குக் கற்பித்திருந்தாலும் சராசரி உலகில் பல இடங்களில் அவன் தயங்கி நிற்க நேர்ந்தது. பிறர் தன்னை எப்படி எதிர்பார்க்கிறார்களோ, அப்படித் தான் வாழமுடியாமலிருப்பது தனக்கு ஒரு குறையானால் சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்தக் குறை ஏதாவது ஒரு வகையில் இருந்தே தீருமென்று சத்தியமூர்த்தி நினைத்தான்.

'ஏனென்றால் அடுத்தவன் தன்னிடம் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற தன்மை இல்லாத அப்பட்டமான தியாகிகள் உலகில் எந்த மூலையிலும் இல்லை. அன்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். வெறுப்பின் மிகுதியாலும் அப்படி எதிர்பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்படி எதிர்பார்ப்பதுதான் வாழ்க்கை போலிருக்கிறது' என்று இப்படிப் பலவிதமான சிந்தனைகளின் வேகத்தோடு நடந்து சென்றதில் நடையே தெரியவில்லை. எதிரே வருகிற சந்தில் திரும்பி அடுத்த வீதிக்குள் சிறிது தொலைவு நடந்தால் வீடுதான். எங்கோ கோவிலில் திருவனந்தல் வழிபாட்டுக்கு முன்பாக வைகறையில் வாசிக்கப்படும் மேளமும் நாதஸ்வரமும் அதிகாலையின் இனிய ஞாபகமாய் ஒலித்துக் கொண்டிருந்தன. சில வீடுகளில் அப்போதே வாசல் தெளிக்கத் தொடங்கியிருந்தார்கள். கிழக்கு வெளுக்க இன்னும் சிறிது நேரமே இருந்தது.

வாயில் படியேறிக் கதவைத் தட்டினான் சத்தியமூர்த்தி. இருமிக் கொண்டே அப்பா எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

"சாயங்கால இரயிலேயே உன்னை எதிர்பார்த்தேன்" என்றார் அப்பா.

"முடியவில்லை! முதல் நாள் மல்லிகைப் பந்தலுக்குப் போகிற பஸ் தவறிவிட்டது. மறுநாள் இண்டர்வ்யூவுக்குத் தாமதமாகி விட்டது" என்று சொல்லிக் கொண்டே சூட்கேஸுடன் உள்ளே நுழைந்து கூடத்துப் பெஞ்சில் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்து கொண்டார். கிணற்றடியிலிருந்து வந்த அம்மா "இராத்திரி இரயிலில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு எதற்காக வருகிறாய்? சாயங்கால வண்டியிலேயே வந்திருக்கலாமே?" என்று விசாரித்துக் கொண்டே வந்து அவனுக்கு எதிர்ப்புறம் ஆவலோடு நின்று கொண்டாள். கூடத்தை மெழுகுவதற்கு வாளி நிறைய நீரோடு வந்த ஆண்டாள் அண்ணனின் வரவினால் ஏற்பட்ட ஆர்வத்தைக் காட்டும் முகத்தோடும் அப்பாவுக்கு அருகே வந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக் கொண்டு நின்றாள். படுக்கையிலிருந்து அப்போதுதான் கண்ணைக் கசக்கிக் கொண்டே பாதித் தூக்கமும் பாதி விழிப்புமாக எழுந்திருந்து வந்த கல்யாணியும் இன்னொரு பக்கமாக நின்று கொண்டாள். 'இண்டர்வ்யூ'வின் முடிவு என்ன ஆயிற்று என்பதை அவனாகச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களைப் போல் எல்லாரும் ஆவலடங்கிய நிலையில் மௌனமாயிருந்தார்கள். வீட்டுக்குள் நுழைந்ததும் இப்படி ஒரு காட்சியை அல்லது நிகழ்ச்சியைச் சத்தியமூர்த்தியும் எதிர்பார்த்திருந்தான். எல்லாருடைய கண்களின் பார்வையும் தன் முகத்தையே நோக்கியிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஒரு கணம் எல்லா வேதனைகளையும் மறந்தவனாக நன்றாய் வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலவும் தோன்றியது. அடுத்த கணம் அப்படிச் செய்வதால் 'குடும்பப் பொறுப்புத் தெரியாத பிள்ளை' என்று கெட்ட பெயரைத் தாங்க நேரிடுமோ என்ற தயக்கமும் ஏற்பட்டது.

"என்ன ஆண்டாள் உன் வலது கண் வீங்கினாற் போல் தெரிகிறதே? உள்ளே ஏதாவது வெடித்திருக்கிறதா?" என்று அப்போது அந்த நிலையில் அதிகச் சிரத்தை எடுத்துக் கொண்டு விசாரிக்கத் தேவையில்லாத ஒன்றைத் தங்கையிடம் விசாரித்தான் சத்தியமூர்த்தி.

"ஒன்றுமில்லையே அண்ணா!" என்று ஆண்டாள் சிரித்தாள். அப்புறமும் சிறிது நேரம் அவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க அவன் ஒன்றும் சொல்லாமலே நேரம் மௌனத்தில் கழிந்தது. அப்பா பொறுமையிழந்தார்.

"நீ போன காரியம் என்ன ஆயிற்று?"

"இண்டர்வ்யூ ஆயிற்று. முடிவு ஒன்றும் சொல்லவில்லை. விவரம் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்."

"இண்டர்வ்யூவின் போது நீ சரியாக நடந்து கொண்டாயோ இல்லையோ?" - தந்தையின் இந்தக் கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லவில்லை. கடந்த சில மாதங்களில் தொடர்ந்து நாலைந்து இண்டர்வ்யூவுக்குப் போய்விட்டு ஒரு விளைவும் இல்லாமல், திரும்பி வந்ததிலிருந்து அப்பாவுக்கு தன் மேல் இப்படி ஒரு சந்தேகம் ஏற்பட்டிருப்பது அவனுக்குத் தெரியும். போகிற இடங்களில் தான் அகம்பாவத்துடனோ, அலட்சியமாகவோ நடந்து கொள்வதனால் தான் வேலைகள் கிடைக்காமல் தட்டிப் போய்க் கொண்டிருக்கின்றனவோ என்று அவர் சந்தேகப்படுவதைக் கண்டு அவனுக்கு அவர் மேல் கோபமோ, மனத்தாங்கலோ உண்டாகவில்லை. அவரைப் போல் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு நைந்தவர்கள் அப்படித்தான் நினைக்க முடியும் என்பதை உணர்ந்து பொறுமையாயிருந்தான் அவன்.

"நான் அப்போதே படித்துப் படித்துச் சொன்னேன். நீ கேட்டால்தானே? தமிழ் ஆனர்ஸைத் தவிர வேறு எந்தப் பிரிவில் சேர்ந்திருந்தாலும் இதற்குள் நல்ல உத்தியோகத்தைத் தேடிக் கொண்டு போயிருக்கலாம். இந்த வீட்டு நிலைமை நான் சொல்லித்தான் உனக்குத் தெரிய வேண்டுமென்பதில்லை. மாடியிலும் கீழே முன்பக்கத்து அறையிலுமாக ஒண்டுக் குடித்தனம் இருக்கிற இரண்டு பேருமாக நூறு ரூபாய் வாடகை தருகிறார்கள். இந்தத் தள்ளாத வயதிலும் நான் 'டியூஷன்' சொல்லிக் கொடுப்பதற்கு அலைந்து நூறு ரூபாய்க்குத் தேற்றுகிறேன். மாடியில் மழைக்கு ஒழுகுகிறது. இப்போது இருக்கிறவர் காலி செய்துவிட்டால் மறுபடியும் காலியாகிவிடும். மாடியில் கொஞ்சம் இடித்துக் கட்டினாலொழியத் தொடர்ந்து யாரையும் குடியிருப்புக்கு வைக்க முடியாது. எல்லாவற்றுக்கும் பணம் வேணும்டா; பணம். சும்மா வறட்டு இலட்சியம் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. திருமணத்துக்கு நிற்கிற இந்தப் பெண்களையும் வீட்டுக் கவலைகளையும் நினைத்து இராப்பகலாக நான் தூக்கமின்றி மாய்வது உனக்குத் தெரியுமோ? எத்தனை நாட்களுக்கு இப்படி இருக்கப் போகிறாய் நீ?"

அப்பா இப்படி ஆத்திரப்பட்டுப் பேசியதையும் சத்தியமூர்த்தி பொறுமையாகக் கேட்டுக் கொண்டான். நினைப்புக்களாலும், பாவனைகளாலும் ஒரு தலைமுறைக்கு முந்திய மனப்பான்மை கொண்டவர் அவர். அவரிடம் எதிர்த்துப் பேச விரும்பவில்லை அவன். பதில் பேசாமல் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு வருவதற்காகப் பின்பக்கம் எழுந்து சென்றான். அவனுடன் கூடவே பின்புறம் நடந்து வந்த தங்கை ஆண்டாள், "அப்பா பேசியதை ஒன்றும் மனத்தில் வைத்துக் கொள்ளாதே அண்ணா. ஏதோ கவலையில் ஆத்திரமாகச் சொல்லிவிட்டார்..." என்று ஆறுதலாகக் கூறிய வார்த்தைகளுக்கும் அவன் மறுமொழி கூறவில்லை; அப்போது தன் மேலேயே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.

முகம் கழுவிக் கொண்டு வாசல் பக்கம் வந்தால் மாடியில் குடியிருக்கிற பத்திரிகை நிருபர் பரமசிவம் கீழே இறங்கி வருகிறபோது எதிர்ப்பட்டார்.

"என்ன மிஸ்டர் சத்தியமூர்த்தி? மல்லிகைப் பந்தலில் 'இண்டர்வ்யூ' என்ன ஆயிற்று? முதல் வகுப்பில் தேறியிருக்கிறீர்கள். போட்டி ஒன்றும் இருக்காது... தானே கிடைத்து விடும்..." என்று பரமசிவமும் அதே பேச்சை ஆரம்பித்தார். எந்தப் பேச்சை எதிராளி நம்மிடம் பேசாமலிருந்தால் மனம் நிம்மதியாயிருக்குமென்று சில சமயங்களில் நமக்குத் தோன்றுகிறதோ அந்தப் பேச்சைத்தான் அந்தச் சமயங்களில் திரும்பத் திரும்ப நாம் கேட்கும்படி நேரிடுவது வழக்கம். ஒரு மனிதனுடைய பிரச்சினைகளை - சுகமோ துக்கமோ அவனைச் சுற்றியிருக்கிற எல்லாரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிக் கவனித்துக் கொண்டிருப்பதையும் அதன் விளைவுகளையும் அதற்கு ஆளானவனே வெறுப்போடு பார்க்கும் சந்தர்ப்பங்களும் வருகின்றன. அப்போது மற்றவர்கள் அதை மறுப்பதில்லை.

அப்போது மற்றவர்களின் கேள்வியே அழையா விருந்தாக வாய்த்துத் தொல்லைத் தருவதுண்டு. இதை நினைக்கும் போது மனத்துக்குள் சிரிக்கத் தோன்றியது சத்தியமூர்த்திக்கு. நினைப்புக்களில் அந்தரங்கமாக இருப்பவற்றைத் தவிர வேறு எவற்றாலும் மனிதன் இரகசியமாக வாழ முடியாது போலிருக்கிறதே என்று நினைத்த போது பரமசிவத்துக்கும், பரமசிவத்தைத் தவிர இன்னும் தன்னை எதிரே பார்த்து மல்லிககப் பந்தல் இண்டர்வ்யூவைப் பற்றித் தன்னிடம் விசாரிக்கப் போகிற ஒவ்வொருவருக்கும் தான் எதற்காகவோ பயந்து வாழ வேண்டும் போல் பிரமையாயிருந்தது அவனுக்கு.

ஏதோ பதில் பேசிப் பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பினான். அவரை மாடிக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குள்ளே போவதற்காகத் திரும்பியவன், "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று கீழே தெருவிலிருந்து அட்டகாசமாக ஒலித்த குரலைக் கேட்டு ஆச்சரியமடைந்தான். திருவாளர் கண்ணாயிரத்தின் குரல் அல்லவா அது? 'அவர் எதற்காக இப்போது இங்கே தன்னைத் தேடி வந்தார்?' என்று சந்தேகத்தோடு தெருக்கதவைத் திறந்து கொண்டு கீழே இறங்கி வந்த சத்தியமூர்த்திக்குத் தெருவில் இன்னும் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. தெருவில் நின்றிருந்த கண்ணாயிரத்தின் காரிலிருந்து அந்தப் பெண் கீழே இறங்கி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். கண்ணாயிரம் அப்போது அவளைத் தன் வீட்டுக்கு எதற்காக அழைத்து வந்தார் என்று புரியாமல் சத்தியமூர்த்தி திகைத்துக் கொண்டிருந்தபோது அவள் தன் நறுமணங்கள் புடைசூழ அவனுக்கு மிக அருகே வந்து தயங்கி நின்றாள்.

அத்தியாயம் - 6

மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள்.

தங்கக் கூண்டில் வளர்த்த தமனியப் பசுங்கிளியாய் அந்த வீட்டின் தனிமையில் ஏங்கி ஏங்கி வளர்ந்தவள் பாரதி. அவள் மனம் ஒப்பி ஆசைப்பட்டு நிறைவேறாமற் போன விருப்பங்கள் என்று எவையும் அந்த வீட்டில் அன்று வரை இருந்ததில்லை. அவள் நினைத்தது எதுவாயினும் அது அப்போதே நடக்க முடிந்த அளவுக்குச் செல்லமாகவும் சீராகவும் வளர்ந்திருகிறாள் அவள். 'இது நான் நினைப்பது போல் நடக்க முடியாதோ?' என்று எதை நினைத்தும் நேற்று வரை அவள் கவலைப்பட நேர்ந்ததில்லை. அவள் நினைத்ததை நிறைவேற்றப் பணியாட்கள் பலர் காத்திருந்தனர். அவளுடைய விருப்பங்கள் உடனே நிறைவேட்டப்பட்டனவா இல்லையா என்று கவலைப்பட்டு அக்கறை செலுத்தவும், அவை உடனே நிறைவேற்றப் பட்டிருந்தால் நிறைவேற்றியவர்களைப் பாராட்டவும், நிறைவேற்றாமல் தாமதம் செய்யப்பட்டிருந்தால், அப்படித் தாமதம் செய்தவர்களைக் கண்டிக்கவும் கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அங்கே. ஆனாலும் எதற்காக ஏங்குகிறோம் என்று தெரியாத ஏதோ ஒன்றுக்காக அவள் ஏங்கி ஏங்கித்தான் வளர்ந்திருக்கிறாள். படிப்பதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டுக்குள் வராத பத்திரிகைகளும் செய்தித்தாள்களும் இல்லை. தோட்டத்தின் ஒரு பகுதியில் அவளுடைய அறைக்குள்ளேயிருந்து அவளே படியிறங்கிப் போய்ப் பறித்துக் கொள்வதற்கு வசதியாகச் சகலவிதமான மலர்ச் செடிகளும், கொடிகளும் பயிரடப்பட்டிருந்தன. அப்பா அவளை அரசகுமாரியாகத்தான் பேணி வளர்த்தார்.

அவளோ பிச்சைக்காரியைப் போல் எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தாள். சிறு வயதில் தாயை இழந்து விட்ட எந்தப் பெண்ணும் எத்தனை வசதிகளுக்கு இடையேயும் இப்படித்தான் வளர முடியும். தன் அழகில் நிரம்பிக் கிடக்கும் அந்தரங்கங்களும் தன் அந்தரங்கத்தில் நிரம்பிக் கிடக்கும் அழகுகளும் பிறருக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட காட்டுமான் கன்று போல் மல்லிகைப் பந்தலின் தனிமையில் செல்வக் குடும்பம் என்ற உயரத்திலிருந்து வெறும் மண்ணில் கீழ் இறங்கி நடக்காமலே வளர்ந்து விட்டாள் அவள். நேற்றுவரை தன் மனத்தைப் பாதிக்கும் படியான எந்த எண்ணத்தையும் அவள் எண்ணியதில்லை. இன்று அவளைப் பாதித்திருக்கும் இந்த எண்ணமோ மற்றொருவரிடம் சொல்லி ஆதரவு தேட முடியாத ஒன்று. மிக அந்தரங்கமான விருப்பங்களில் பிரியமுற்று அழுந்தி நிற்கும் போதுகளில் அப்படி அழுந்தி நிற்கிற மனமும் அந்த மனத்துக்குச் சொந்தமானவரும் இந்த உலகில் அநாதையாகவும் நிர்க்கதியாகவும் தன்னந்தனியே கைவிடப் பெறுகிறார்கள். அதைப் பங்கிட்டுக் கொள்ளவோ அதற்கு ஆதரவு தேடவோ சரியான துணை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அந்த வேளையில் பாரதியும் அப்படித் துணையற்றவளாகத் தான் இருந்தாள். அப்போது அவளுடைய அந்தரங்கத்தில் என்ன இருந்ததோ அதை அவள் இன்னொருவரிடம் சொல்ல முடியாது.

சத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்த அதே பதவிக்காக விண்ணப்பம் போட்டிருந்த மற்றொருவரையும் 'இண்டர்வ்யூ' செய்து கொண்டிருந்த பூபதி அவர்களோ அப்போது தாம் செய்யும் காரியம் தமக்கு மிக அருகேயுள்ள மென்மையான மனம் ஒன்றைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள நியாயமில்லை. முறையாகவும், ஆர்வம் குன்றாமலும் வழக்கம் போல அந்தப் பதவிக்காக வந்திருந்த இரண்டாவது விண்ணப்பத்தாரரையும் விசாரித்துக் கொண்டிருந்தார் அவர். நிர்வாகத்துறையில் அது ஒரு முக்கியமான அம்சம். ஒரு பதவிக்கு மனுச் செய்திருக்கிறவர்கள் பலராக இருந்தால் அப்படிப் பலர் மனுச் செய்திருக்கிறார்கள் என்பதே தெரியாமல் ஒவ்வொருவரையும் வெவ்வேறு நேரங்களில் வரச்சொல்லி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு பேசி எல்லாரிடமும் ஒரே விதமான ஆர்வத்தோடு விசாரித்து, வந்து செல்கிற ஒவ்வொருவரும் அந்தப் பதவி தங்களுக்கே கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு போகும்படி செய்துவிட்டு இறுதியில் காதும் காதும் வைத்தாற் போல் இரகசியமாக உண்மைத் தகுதியைக் கண்டு பிடித்து நியமனம் செய்வார்கள். தொழிலதிபர் பூபதியே நிர்வாகத் துறையில் நிபுணர். சில வேளைகளில் அவருடைய சாமர்த்தியங்கள் சிலர் அநுமானம் செய்ய முடிந்த எல்லைக்கு அப்பாலும் உயர்ந்திருக்கும். தங்கம் நிறுப்பது போல் எதிராளியை மாற்றுக் குறையாமல் கூடாமல் கச்சிதமாக எடை போட்டு அளந்து நிறுத்துத் தெரிந்து கொண்டு விட்டதை நிறுத்தப்பட்ட எதிராளியைப் புரிந்து கொள்ள விடாமல் பாமரர் போல் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பார் அவர். மல்லிகைப் பந்தல் ரோட்டரி கிளப்பின் தலைவராக இருந்து பின்பு கவர்னராக அவர் கௌரவப் பதவி பெற்ற போது அவருடைய ரோட்டரி கவர்னர் பதவிக் காலத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் கன்வென்ஷன் ஒன்று மல்லிகைப் பந்தலில் நடைபெற்றது. அதற்காக மல்லிகைப் பந்தலுக்கு விருந்தினராய் வந்திருந்த கனடா நாட்டுத் தொழில் அதிபர் ஒருவர் பூபதியோடு நாலைந்து நாட்கள் பழகிவிட்டுப் பிரிந்து செல்லும்போது நிகழ்ந்த விருந்து ஒன்றில் அவரை இந்தியாவின் 'கமர்ஷியல் மாக்னேட்' (தொழில் மன்னர்கள் அல்லது வாணிக வித்தகர்கள்)களில் தலைசிறந்த ஒருவராக வருணித்தார். இந்தப் பெருமையெல்லாம் தந்தைக்கு குறைவின்றி இருப்பது பாரதிக்கும் நன்றாகத் தெரியும்.

ஆனால் அப்போது அவர் சத்தியமூர்த்தி விண்ணப்பம் செய்திருந்த அதே பதவிக்கு மனுச் செய்திருக்கும் இன்னொருவரையும் தனக்கு எதிரே நீண்ட நேரமாக உட்கார வைத்துப் பேசிக் கொண்டிருப்பது அவளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்திருக்கும் மனிதனிடம் தந்தை பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளரக் காரணமில்லாததொரு வெறுப்பையும் கோபத்தையும் அவள் அடைந்து கொண்டிருந்தாள். அதன் காரணமாகவே பொறுமையிழந்து ஒரு நிலை கொள்ளாமல் பரபரப்புக் கொண்டு தவித்தாள் அவள். இன்னும் அப்பாவின் அறைக்கு வெளியில் வராந்தாவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தால் அப்பாவே எழுந்து வந்து தன்னைப் பார்க்க நேரிட்டுவிடுமோ என்ற பயமும் தயக்கமும் அவள் மனத்தில் மெல்ல மெல்ல ஏற்பட்டன. அப்பாவின் அறை வழியே வீட்டுக்குள் செல்லுவது போல் சென்றால் வந்திருப்பவர் யார் என்பதையும் பார்த்து விடலாமே என்று அவள் மனத்துக்குள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும் போது கல்லூரிக் கார் வாயிலில் வந்து நின்றது. அதிலிருந்து பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் இறங்கி வந்தார்கள். அவர்கள் இருவரும் தந்தையின் அறையை நோக்கி வருவதாகத் தென்படவே அந்த வேளையில் தான் அங்கே வராந்தாவில் தயங்கி நிற்பது நன்றாயிராது என்று எண்ணியவளாக உள்ளே செல்வதற்காக விரைந்தாள் பாரதி.

சத்தியமூர்த்திக்கு எதிராக எல்லாருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்வது போல் அவர்கள் மேல் ஒரே வெறுப்பாக இருந்தது அவளுக்கு. காலையில் தன் பட்டுப் பாதங்கள் பதிய அந்தக் காம்பவுண்டுக்குள் நடந்து வந்து தந்தைக்கு முன் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒவ்வொரு கேள்விக்கும் கணீரென்று மறுமொழி சொல்லிவிட்டுப் போன அந்தத் தைரியசாலியின் முகத்தை மீண்டும் நினைவு கூர முயன்றாள் அவள். நினைத்து தவிக்கிறவர்களுக்கு அதிகம் சோதனை செய்யாமல் அருள் செய்து விடுகிற சில நல்ல தெய்வங்களைப் போல் அவள் நினைத்தவுடன் ஞாபகத்துக்கு வந்தது அந்த எழில் முகம். அளவாகவும் அழகாகவும் பேசும் அந்தக் குரல், சத்திய வேட்கை நிறைந்த அந்த முகம் 'சுகதுக்கங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையின் முடிவற்ற பாதையில் இன்னும் ஓர் அடி முன்னால் எடுத்த வைக்க எப்போதும் நான் தயார்' என்பது போல் வலது பாதம் முன் இருக்க நிமிர்ந்து உட்காரும் அவனுடைய வனப்பு எல்லாம் நினைவு வந்தன அவளுக்கு. அவள் நெட்டுயிர்த்தாள். தன் நினைவு இதுவரை அடைந்திருந்த இனிய ஞாபகங்களையும் இனி அடைவதற்கிருந்த இனிய ஞாபகங்களையும் அந்த வீட்டின் முன் அறையில் அப்போது உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் தந்தையும், கல்லூரி முதல்வரும் சேர்ந்து பறித்துக் கொண்டு விடுவார்களோ என்று எண்ணி மனம் நலிந்தாள் அவள். போதாத குறைக்கு இப்போது ஹெட்கிளார்க் வேறு கூட வந்திருக்கிறார். 'எல்லோருமாகச் சேர்ந்து என்ன முடிவுக்கு வரப்போகிறார்களோ? ஒருவேளை இப்போது இரண்டாவதாக வந்திருக்கும் இந்த மனிதரே தமிழ் விரிவுரையாளராவதற்குத் தகுதியானவர் என்று இவர்கள் எல்லோரும் ஒரு மனமாகத் தீர்மானம் செய்துவிட்டால்...?'

இப்படி நினைத்தபோது அவள் சிந்தனை மேலே ஒன்றும் எண்ணத் தோன்றாதபடி இருண்டது. என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கவும் என்னப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்கவும், விருப்பம் கொண்ட அவள் ஒரு காரியமும் இல்லாமலே தந்தையின் அறைக்கு அடிக்கடி போய்விட்டு வந்தாள். கடுவன்பூனை மாதிரி முகம், கொலைக்களத்து வெட்டரிவாளைப் போன்ற பெரிய மீசையும் முரட்டுப் பார்வையுமாக வீற்றிருந்த மனிதர் தான் சத்தியமூர்த்தியின் பதவிக்குப் போட்டியாக வந்தவராக இருக்க வேண்டும் என்று அவளால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. அந்த மனிதருக்கு ஐம்பது வயதுக்கு இரண்டொன்று குறைவாகவோ, கூடவோ இருக்கலாம் என்று தோன்றியது. 'பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறுவதற்குச் சில ஆண்டுகளே இருக்கும்போது ஏற்கனவே வேலை பார்க்கிற இடத்திலேயே தொடராமல் இந்த மனிதர் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக இங்கு ஏன் வரவேண்டும்?' என்று நினைத்து ஒரு பாவமும் அறியாத அந்த மூன்றாம் மனிதர் மேல் கோபப்பட்டாள் அவள். வயதானவராகவும், முன் அநுபவம் உள்ளவராகவும், இருக்கிறார் என்ற காரணங்களால் தன் தந்தையே இந்த மனிதரைத் தேர்ந்தெடுத்து விடுவாரோ என்ற பயமும் அவள் மனத்தில் பற்றியிருந்தது. எது நடக்கும், எது நடக்காது என்று முடிவாகத் தெரிந்து கொள்ள இயலாத அந்த நிலையில் பொறுமையிழந்து போய்த் தவித்தாள் பாரதி. ஞாபகத்தின் எல்லாப் பக்கங்களும் ஒரே நினைவில் ஆரம்பமாகி ஒரே நினைவில் முடிந்தாற் போல் அந்த ஒரே ஒரு நாளில் தான் அவ்வளவு பெரிய பைத்தியமாக ஆனது எப்படி என்று எண்ணித் தன்னைத்தானே வியந்து கொண்டாள் அவள்.

சத்தியமூர்த்தியை 'இண்டர்வ்யூ' செய்தபோது தன் தந்தையும் கல்லூரி முதல்வருமே இருந்தது போல் அல்லாமல் இப்போது 'ஹெட்கிளார்க்' வேறு புதிதாக வந்திருப்பது அவளுடைய சந்தேகத்தை வளர்த்தது. 'ஒரு வேளை ஹெட்கிளார்க்கிடம் சொல்லி இந்த மனிதருக்கு நேரிலேயே கொடுத்து விடுவதற்காக ஆர்டர் டைப் செய்ய ஏற்பாடாகிறதோ?' என்று பயப்படுவதற்குரிய சந்தேகம் ஒன்றைத் தானாகவே நினைவிற் கற்பித்துக் கொண்டது அவள் மனம். எதை எதையோ எண்ணி மனம் குழம்பினாள் அவள். காலையில் தன் தந்தையும் சத்தியமூர்த்தியும் பேசிக் கொண்டிருந்த பேச்சின் முடிவில் 'இந்தக் கல்லூரிக்கு இதுவரை பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும் வந்திருக்கிற அத்தனை பேரிலும், நீங்கள் ஒருவர்தான் மிக இளமை பருவத்தினராக இருப்பீர்கள் என்று தோன்றுகிறது' என்ற வார்த்தைகளைச் சத்தியமூர்த்தியிடம் தன் தந்தை சொல்லிவிட்டுத் தயங்கியதையும் இந்தத் தயக்கத்தை அடுத்து இதன் காரணமாகவே வளர்ந்த உரையாடலில் இருவருக்குமிடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டதையும் இப்போது தன் மனத்தில் ஞாபகப்படுத்திக் கொண்டு பயந்தாள் பாரதி.

அவரும் தான் அப்படித் துடுக்குத்தனமாகப் பேசி அதுவரை தன்னைப் பற்றி அப்பாவின் மனத்தில் வளர்த்துக் கொண்டிருந்த நல்ல அபிப்பிராயத்தை அந்த ஒரு விநாடிப் பேச்சில் கெடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவர் தான் ஏதோ பேசிவிட்டார் என்றால் அப்பாவாவது அந்தச் சிறிய காரியத்தை மறந்து பெருந்தன்மையாக நடந்து கொள்ளக் கூடாதா? வயதில் இளைஞர் என்ற ஒரே காரணத்துக்காகச் சத்தியமூர்த்தியைப் புறக்கணித்துவிட்டு இப்போது வந்திருக்கும் இந்த முதியவருக்கு இந்த வேலையைக் கொடுப்பார்கள் என்று எண்ண முயலும் போதே அந்த எண்ணத்திலுள்ள ஏமாற்றத்தின் மிகுதியைத் தாங்கமுடியாமல் மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது பாரதிக்கு.

அப்பா இருந்தாற் போல் இருந்து திடீரென்று அப்படி ஓர் அநியாயத்தைச் செய்வார் என்பதையும் அவள் மனமார எதிர்பார்த்து நம்பி ஒப்புக் கொண்டு விடத் தயாராக இல்லை. அப்படிச் செய்கிறவராக இருந்தால், 'உங்களைப் பலவிதங்களில் எனக்குப் பிடித்திருக்கிறது' என்றும் 'உங்களைப் போல் ஆர்வம் மிக்க இளைஞர் ஒருவரைச் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி' என்றும் சத்தியமூர்த்தியோடு பேசிக் கொண்டிருந்த போதும் ஊருக்குச் செல்ல விடைபெறும்போதும் அவரிடம் அப்பா சொல்லியிருக்க மாட்டார். சத்தியமூர்த்தியும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தவற்றையும், பேசிக் கொண்டிருந்த போது நடந்தவற்றையும் ஒவ்வொன்றாக நினைவு கூர முயன்றாள் அவள். அவ்வாறு நினைத்துப் பார்த்தபோது, சத்தியமூர்த்தி தன் பேச்சாலும் தான் நடந்து கொண்ட முறையாலும் தன் தந்தையைக் கவர்ந்த இடங்களே அதிகமாகவும் கவரத் தவறிய இடம் குறைவாகவுமே அவளுக்குத் தோன்றியது. அந்த இளைஞருடைய சாமர்த்தியமான உரையாடலைக் கேட்டுத் தந்தையின் முகம் வியந்து மலர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ஞாபகம் கொண்டு மகிழ்ச்சி பெற முயன்றாள் அவள். மகிழ்ச்சிக்குரிய பல சந்தர்ப்பங்களாகத் தேடி ஒன்று சேர்த்து அவள் நினைக்க முயலும் போது சிறிதும் மகிழ்ச்சியைத் தர முடியாத ஏதோ ஒரு சந்தர்ப்பம் மட்டும் நினைவில் முந்திக் கொண்டு பாய்ந்து வந்தது. மனம் அதற்கு உடைமைக்காரர்களோடு ஒத்துழைக்காத நேரங்களில் இதுவும் ஒன்று. நினைக்க விரும்புவது எதுவோ அது நினைவில் வந்து பதியாமல் நினைக்க விரும்பாததும் நினைக்கக் கூடாததும் நினைவு வந்தால் வேதனை தரக்கூடியதுதான். ஏதோ ஒன்று மட்டும் நினைவு வந்து சந்தோஷகரமான மற்றவற்றின் வரவை வழியடைத்துக் கொள்கிற நுணுக்கமான துயரத்தை மீற முடியாது தவித்தாள் அவள்.

அன்று காலையில் இண்டர்வியூ முடிந்த பின் தன் தந்தையும் அவரும் வேறு எதையோ பற்றி உரையாடிக் கொண்டிருக்கையில், 'நான் தான் இனிமேல் இந்த ஊருக்கே வந்துவிடப் போகிறேனே' - என்று அவர் புன்முறுவலோடு கூறிய போது "நீங்கள் இங்கே வரவேண்டுமென்றே இன்னும் அதிகார பூர்வமாக நாங்கள் தெரிவிக்கவில்லையே?" என்று தந்தை சிரித்தபடியே மறுத்த சம்பவம் நினைவில் வந்தது அவளுக்கு. இரண்டு பேருமே வேடிக்கையாகப் பேசிக் கொண்டார்கள் என்று அந்தச் சம்பவத்தைச் சாதாரணமாக ஒதுக்கிவிட முயன்றாலும் அதுவே திரும்பத் திரும்ப அவள் நினைவில் வந்து அதற்கு அப்பால் வரக் காத்திருந்த மற்ற நம்பிக்கைகளின் பாதையை மறிக்கலாயிற்று. மனத்தின் பலவீனமான வேளைகளில் இதுவும் ஒன்று. ஓர் அவ நம்பிக்கை பத்து நம்பிக்கைகளை மறைத்து விட முடிகிறது; அல்லது மறக்கச் செய்ய முடிகிறது. பத்து நம்பிக்கைகள் சேர்ந்து ஓர் அவநம்பிக்கையை மறைத்து விட அல்லது மறக்கச் செய்துவிட முடிவதில்லை. அந்த நேரத்து இதயத்தின் தவிப்பில் அவள் இதை நன்றாக உணர முடிந்தது. சத்தியமூர்த்தியே அந்தப் பதவிக்கு உரியவனாக நியமிக்கப் பெற்று மறுபடி மல்லிகைப் பந்தலின் மண்ணில் அவனைக் கண்டாலொழிய அந்த ஊரே பொலிவில்லாமல் போய் விடும்போல் அவள் உருகித் தவித்தாள். இப்படி எதற்காகவும் அவளுடைய வாழ்க்கையில் அவள் இதுவரை தவிக்க நேர்ந்ததில்லை. இந்த அநுபவம் அவளுக்கு ஏற்படுவது இதுவே முதல் தடவை.

"இவர்களுக்கு எல்லாம் தேநீர் கொண்டுவா அம்மா!" என்று தந்தை குரல் கொடுத்த போது, 'நான் எதற்காக என் கைகளால் இவர்களுக்குத் தேநீர் கொடுக்க வேண்டும்' - என்ற வெறுப்போடு வேலைக்காரர்களைக் கூப்பிட்டுக் கொடுத்தனுப்பினாள் பாரதி.

"முன் அறையில் கொண்டு போய்க் கொடு. காலேஜ் ஆட்கள் யாரோ வந்திருக்காங்களாம்..." என்று வார்த்தைகளையும், ட்ரேயையும் வேண்டா வெறுப்பாக வேலைக்காரனிடம் கொடுத்தவளுக்கு அந்தத் தேநீரைக் குடிக்க இருப்பவர்கள் மேலெல்லாம் எதற்காகவோ கோபப்பட வேண்டும் போல் இருந்தது. வேலைக்காரனை முன் அறைக்கு அனுப்பிவிட்டு ஒரு வேலையும் ஓடாத போது எந்த வேலையை எதற்காகச் செய்து கொண்டிருக்கிறோம் என்ற ஞாபகமே இன்றிச் செய்யப்படும் பரவசமான காரியமாய்த் தோட்டத்தின் பக்கமாக இறங்கிச் சென்றாள் அவள். நல்ல சிவப்புமில்லாமல் நல்ல வெளுப்பு மில்லாமல் எப்படியிருந்தால் கண்களில் உறுத்தாமல் மென்மையாகத் தோன்ற முடியுமோ அப்படி நளினமாகச் சிவப்பு நிறத்தில் ரோஜாப் பூக்கள் ஆடிச் சிரித்துக் கொண்டிருந்தன. ரோஸ் என்ற நிறத்துக்கே இந்தப் பூவைப் பார்த்த பிறகு தான் இலட்சணமும் பெயரும் கிடைத்திருக்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. அதுவரை பெய்து கொண்டிருந்த மழை அப்போதுதான் நின்று போயிருந்ததனால் இலைகளிலும் பூக்களிலும் நீர் சிலிர்த்து நின்றது. பன்னீரில் குளித்துவிட்டு நிற்கும் கந்தர்வலோகத்துக் குழந்தைகளின் முகங்களைப் போல் தோட்டத்துப் பூக்கள் அப்போது பொலிந்து கொண்டிருந்தன. பளீரென்ற வெளுப்புமில்லாமல் கண்ணைக் குத்தும் கருஞ்சிவப்புமில்லாமல் சாயங்கால வானத்தில் ரோஜாக் குவியலாய்க் கொட்டிக் கிடக்கும் சில நிறங்களைப் போல ஒரு நிறத்தையே தனக்குப் பெயராகப் படைத்துக் கொண்டு தன் நிறத்தால் ஒரு பூவுக்கு அழகாகி நிற்கும் அவற்றைப் புதிய கண்களுடன் அன்று தான் அப்படி முதன் முதலாகப் பார்க்கிறவள் போல் பார்த்தாள் பாரதி. அந்தப் பூக்களின் இளஞ்சிவப்பு நிறமும் சாயங்கால வானத்தில் தவழும் ரோஸ் மேகங்களும் நினைவு வந்தபோது அவற்றின் தொடர்ச்சியாகச் சத்தியமூர்த்தியின் அழகிற் சிறந்த பாதங்களையும் நினைத்தாள் அவள். நினைத்தாள் என்று சொல்வதை விடப் பொருத்தமாக வேறு விதத்தில் அதைச் சொல்வதனால் அந்த நிலையில் அவளால் அவற்றை நினைக்காமல் இருக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

'பாதங்கள் மட்டுமென்ன? முகம், உதடுகள், உள்ளங்கைகள், எல்லாமே ரோஜாப் பூக்களாகத்தான் அவருக்கு வாய்த்திருக்கின்றன. அவருக்கென்றே வாய்த்த நிறமா அது?' என்று எண்ணி அந்த எண்ணத்தின் விளைவாகத் தனக்குத்தானே கூச்சமுற்று நாணினாள் அவள்.

காரில் தன்னுடன் வரும்போது, 'உங்கள் ஊரில் மல்லிகைப் பூக்களின் வாசனையை எப்படிப் புகழ்வதென்றே தெரியவில்லை' என்று சத்தியமூர்த்தி கூறியிருந்த சொற்கள் இப்போது ஞாபகம் வந்தன. அதைக் கருத்தில் கொண்டு அப்போது தான் நின்றுக் கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் உள்ள குடை மல்லிகைச் செடியிலிருந்து இரண்டு பூக்களைப் பறித்துக் கூந்தலில் சொருகிக் கொண்டாள் பாரதி. அந்தப் பூக்கள் இரண்டும் அவற்றைச் சார்ந்த நினைவுமாக இணைந்து அதிகமாய் மணப்பது போல் இருந்தது. இலைகளே இல்லாமல் செடி முழுவதுமே பூக்களே நிறைந்த ஒரு ரோஜாச் செடியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் சத்தியமூர்த்தியின் பொன்மேனியையும் கற்பனை செய்யத் தோன்றியது அவளுக்கு. மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின் செம்மண் நிலம் மழை பெய்ததன் காரணமாக அன்று எப்படி நெகிழ்ந்து போயிருந்ததோ அப்படியே சத்தியமூர்த்தியைப் பற்றிய நினைவுகளால் அவள் மனமும் நெகிழ்ந்து போயிருந்தது. சுருக்கமாகச் சொன்னால் அவள் பைத்தியமாகியிருந்தாள். தோட்டத்திலிருந்து வீட்டுக்குள்ளே போய் மறுபடியும் அவள் தன் தந்தையின் அறையருகே சென்றபோது இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த மீசைக்காரர் விடைபெற்றுக் கொண்டிருந்தார். அவரை அனுப்பிவிட்டுத் தந்தையும், முதல்வரும், ஹெட்கிளார்க்குமாக ஏதோ பேசி விவாதிக்கத் தொடங்கவே அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் கேட்பதற்காகப் பாரதி திரை ஓரமாக நாற்கலியை எடுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தாள். நிச்சயமாக அவர்கள் அப்போது ஆலோசனை செய்து விவாதிக்கிற விஷயம் 'தமிழ் விரிவுரையாளராக யாரை நியமிப்பது?' என்பதைப் பற்றியதாகவே இருக்கும் என்று தோன்றியது அவளுக்கு. முதலில் கல்லூரி முதல்வர் தான் பேச்சை ஆரம்பித்தார்.

"ஐந்தாறு ஆண்டுகளாவது, 'செர்வீஸ்' உள்ளவராக இருந்தால் தான் ஒருவர் நமக்குப் பயன்படுகிற நல்ல விரிவுரையாளராக அமைய முடியும். இப்போது வந்துவிட்டுப் போகிற இந்த முதியவர் நிறைய ஆண்டுகள் முன் அநுபவம் உள்ளவராக இருக்கிறார். இன்னொரு தகுதி - வயதானவராகவும் இருக்கிறார்..."

"அப்படியெல்லாம் தகுதிகளிலிருந்தும் இப்போது தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டுவிட்டு அவர் இங்கே எதற்காக வரவேண்டும்!"

- சிரித்தபடியே இப்படி வினாவிய குரல் தன் தந்தையினுடையதாக இருக்கவே பாரதிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் தந்தை இப்படி வினாவியதைப் பாராட்டி இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து 'அப்ளாஸ்' கொடுப்பது போல் தட்டிவிட இருந்தவள் தான் உட்கார்ந்திருந்த இடம், சூழ்நிலை ஆகியவற்றால் எச்சரிக்கை பெற்று இரண்டு கைகளையும் சேர்த்து ஓசைப்படாமல் பிரித்தாள். பிரின்ஸிபலும் தந்தையுமே விவாதித்தார்கள். ஹெட்கிளார்க் பயபக்தியோடு அடக்கமாக ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். பிரின்ஸிபலின் வலுவற்ற மறுமொழிகளையும் தந்தையின் வலுவான வினாக்களையும் பாரதி மிக அருகிலிருந்து மறைவாகக் கேட்க முடிந்தது.

"ஒரு வேளை நம் கல்லூரியில் விரிவுரையாளர்களுக்குச் 'சம்பள ஸ்கேல்' அதிகம் என்று வருகிறார் போலிருக்கிறது...?" என்று வார்த்தைகளை இழுத்து இழுத்து நிறுத்தித் தயங்கியபடியே மெல்லச் சொன்னார் கல்லூரி முதல்வர்.

"இப்போது அவர் இருக்கிற இடத்தை விட்டு இங்கே சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் வருகிறவராயிருந்தால் நாளைக்கு இதைவிட அதிகமாகச் சம்பளம் கிடைக்கிற ஓர் இடம் தெரிந்தால் இங்கே விட்டுவிட்டு அங்கே போகமாட்டார் என்பது என்ன நிச்சயம்?"

- கல்லூரி முதல்வரால் இந்தக் கேள்விக்கு ஒரு மறுமொழியும் கூற முடியவில்லை. மௌனம் நிலவியது. பின்பு அவள் தந்தை தான் முதலில் பேசினார். "பிர்ன்ஸிபல் சார்! காலையில் வந்திருந்த பையனை எனக்கு எல்லா விதங்களிலும் பிடித்திருக்கிறது. எதையெடுத்தாலும் விவாதம் செய்து எதிர்த்துப் பேசுகிறான் என்ற துடுக்குத்தனம் ஒன்றைத் தவிர அவனுடைய தோற்றம் படிப்பு எல்லாம் திருப்திகரமாயிருந்தன... வயது கொஞ்சம் குறைவு... மற்றபடி..."

"எனக்கென்னவோ அவனைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. எடுத்தெறிந்து பேசுகிறான். அவனுடைய மொழி வெறியைப் பார்த்தால் ஏதாவது அரசியல் கட்சியில் பங்கு கொண்டிருப்பானோ என்று கூடச் சந்தேகப்படுகிறேன். அவன் படித்த கல்லூரியும் அப்படிப்பட்டது. இப்படிப்பட்ட குறும்புத்தனமான திறமைசாலி ஒருவன் நம் கல்லூரியில் புகுந்து கொண்டு மாணவர்களை யெல்லாம் தனக்குத் தலையாட்டுகிறவர்களாக மாற்றிக் கவர்ந்து விட்டால் பிறகு கல்லூரி நிர்வாகத்தைத் தொடர்ந்து நடத்துவது எனக்கு ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினையாயிருக்கும். இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கி விடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இத்தகைய இளைஞனால் மாணவர்கள் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்."

"மொத்தத்தில் நீங்கள் பயப்படுகிறீர்கள்! இல்லையா?" என்று பிரின்ஸிபலைப் பார்த்துக் கேட்டு விட்டு நகைத்தார் பூபதி. எந்த அர்த்தத்தில் நகைத்தார் என்று புரிந்து கொள்ள முடியாத நகைப்பாயிருந்தது அது. சாமர்த்தியசாலிகளை எதிரே சந்திக்கப் பயப்படுகிற அந்த 'அப்பாவி பிரின்ஸிபலை' எண்ணி நகைக்கிறாரா, சத்தியமூர்த்தியின் துடுக்குத்தனத்தை இகழ்கிற பாவனையில் நகைக்கிறாரா... என்று எதிராளி விளங்கிக் கொள்ள முடியாமலிருந்தது அந்தச் சாதுரியமான சிரிப்பு.

அவர்களுடைய உரையாடலின் கடைசிப் பகுதியைக் கேட்டுக் கொண்டிருந்த பாரதிக்கு நெஞ்சு 'திக் திக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. பிரின்ஸிபல் பேசிய அநியாயத்தை நினைத்து ஆத்திரத்தோடு கைகளைச் சொடுக்கினாள் அவள். நல்ல வேளையாக அவளுடைய நம்பிக்கை முற்றிலும் வாடிக் கருகிவிடாமல் அவள் தந்தையின் பேச்சு சிறிது ஆறுதல் அளிப்பதாக இருந்தது. சத்தியமூர்த்தி துடுக்குத்தனமாக எதிர்த்துப் பேசியது தன் தந்தையின் மனத்தைப் பாதித்திருந்தாலும் அவருடைய திறமைகளைத் தந்தை ஓரளவு புரிந்து கொண்டு மதிப்பதை அவள் இப்போது தெரிந்து கொண்டு விட்டாள். 'பிரின்ஸிபல் பிடிவாதமாக இருந்து காரியத்தைக் கெடுத்து விட்டால்?' என்ற கேள்வி எழுந்த போது அவளுக்கு ஒரே மலைப்பாயிருந்தது. இந்த நிலையில் சத்தியமூர்த்திக்காக ஏங்கும் அவள் மனம் சுறுசுறுப்பாகச் சிந்தனை செய்தது. தந்தையின் மனத்தில் இப்போதே சத்தியமூர்த்தியின் தகுதியைப் பற்றி முக்கால்வாசி நல்ல அபிப்பிராயம் நிறைந்திருக்கிறது. நிறையாமல் இருக்கிற மீதிக் கால் பகுதியையும் எப்படியாவது நிறையும்படி செய்துவிட்டால் கவலை இல்லை. யாருக்கு ஆர்டர் கொடுப்பது என்பதைப் பற்றி அவர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. 'அவர்கள் இனி என்ன முடிவு செய்யப் போகிறார்களோ?' என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் இந்த வினாடி வரை அவர்கள் ஒரு முடிவும் செய்யவில்லை என்பதே ஒரு திருப்தியாயிருந்தது அவளுக்கு.

அந்தக் கல்லூரியிலும் அதன் இலட்சியங்களிலும் பரிபூரணமான ஆர்வமுள்ளவர்களும், நம்பிக்கை உள்ளவர்களுமே அங்கு வேலைக்கு வரவேண்டுமென்று தாம் எதிர்பார்ப்பதாகக் கல்லூரி விழாக்களில் தலைமையுரையாற்றும் சந்தர்ப்பங்களில் பலமுறை தன் தந்தை பேசியிருப்பதை அவளே கேட்டிருக்கிறாள். தனக்கு அங்கு வரவேண்டுமென்ற ஆர்வம் மெய்யாகவே இருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்த்துவிட்டு விடைபெறும்போது சத்தியமூர்த்தி தன்னிடம் கூறியதை நினைத்துக் கொண்டாள் பாரதி. தானே அவருக்கு ஒரு கடிதம் எழுதி 'நீங்கள் மெய்யான ஆர்வமும் இலட்சியமும் கொண்டுதான் இந்தக் கல்லூரிக்குப் பணியாற்ற வர விரும்புவதாகவும், என் தந்தையின் கல்விப்பணியில் உள்ள புனித இலட்சியங்களைப் பாராட்டுவதாகவும் அவருக்கு நேரடியாக ஒரு கடிதம் எழுதுங்கள்! நான் இங்கிருந்து தூண்டி எழுதச் சொல்லியதாகத் தெரிய வேண்டாம். நீங்களாகவே ஊர் திரும்பியதும் அவருக்கு எழுதுவது போல் உடனே எழுதுங்கள். இது மிகவும் அவசியம்' என்பதைத் தெரிவிக்கலாமா என்று எண்ணினாள். முன்பின் தெரியாது ஒரே ஒரு நாள் பழகிய ஆண்மகன் ஒருவனுக்கு அப்படித் திடீரென்று தான் கடிதம் எழுதலாமா என்ற தயக்கமும் பயமும் சூழ்ந்து கொண்டு அவளைத் தடுத்தன. சத்தியமூர்த்தியே அந்தக் கடித்தத்தைப் படித்துத் தன்னைத் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வதென்றும் அவளுக்குப் பயமாக இருந்தது. தந்தையின் மனத்தை முற்றிலும் மாற்றுவதற்கு இதைத் தவிர வேறு வழி இருப்பதாக அவளுக்குத் தெரியவில்லை. தான் இதைச் செய்யலாமா கூடாதா என்று சிந்தித்துத் தவித்தபோது அவள் உடலில் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. அவளுடைய மனமும் எண்ணங்களும் போராடின. அவள் மனம் யார் மேல் எந்த விநாடியில் சத்தியத்தின் ஆழம் நிறைந்த அன்பை செலுத்தத் தொடங்கியதோ அந்த அன்புதான் வென்றது. அவள் பைத்தியமானாள். ஏதோ நான்கு வாக்கியங்கள் எழுத வேண்டுமென்று ஆரம்பித்த கடிதம் முழுமையாக இரண்டு தாள்களில், நான்கு பக்கங்களுக்கு வளர்ந்துவிட்டது. ஒவ்வொரு வாக்கியத்தின் வார்த்தைகளையும் எழுதிக் கொண்டிருக்கிற போதே 'தான் எவ்வாறு இப்படித் துணிந்தோம்? இப்படி ஓர் இளைஞனுக்குக் கடிதம் எழுதும் துணிவு தனக்கு எப்படி வந்தது?' என்ற வியப்பு அவளுள்ளே விசுவரூபம் எடுத்து அவளுள்ளேயே ஒடுங்கிக் கொண்டிருந்தது. அன்பின் ஆழத்திலிருந்து துணிவு பிறந்ததா, துணிவு பிறந்ததனால் அந்த அன்பு ஆழமாகிறதா என்று காரண காரியங்களைப் புரிந்து கொள்ள முடியாமலே விநோதமானதொரு தைரியத்தை அவள் அப்போது ஆண்டு கொண்டிருந்தாள். வெறி பிடித்தவள் போல் முனைந்து அந்தக் கடிதத்தை எழுதி முடித்த பின் ஏதோ மனத்தில் தோன்றவே நாணமும் புன்னகையும் சாயலிடும் முகபாவத்தோடு சற்று முன்பு தான் தனது கூந்தலின் உள் முடியில் சொருகிக் கொண்டிருந்த அந்த இரண்டு குடை மல்லிகைப் பூக்களையும் அவசரமாகவும் பரபரப்புடனும் எடுத்துக் கடிதத்தாள்களின் மடிப்புக்குள் வைத்து உறையிலிட்டு ஒட்டினாள். 'எந்த முகவரிக்கு இதை அனுப்புவது' என்ற முக்கியமான பிரச்சினை - எல்லா முக்கியமான பிரச்சினைகளும் - வழக்கமாக ஞாபகம் வருவதைப் போல் கடைசியில் ஞாபகம் வந்து அவளைத் திணறச் செய்தது. அப்பாவின் அறைக்குள் அவரது மேஜை மேல் அந்த ஆண்டு கல்லூரியின் எல்லாப் பதவிகளுக்கும் விண்ணப்பம் அனுப்பியவர்களின் முகவரி டைப் செய்யப்பட்டு இருக்கும் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், 'அதை எப்படி எடுப்பது?' என்ற தயக்கத்தோடு அவள் திரையை விலக்கி முன்பக்கத்து அறைக்குள் எட்டிப் பார்க்கவும் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக்கொண்டே அப்பா வெளிப்புற வராந்தாவுக்குச் செல்லவும் சரியாயிருந்தது. பதறும் கால்களால் பூனை போல் அடியெடுத்து வைத்து அப்பாவின் மேஜையருகே சென்று டைப் செய்த காகிதங்களை மெதுவாகப் புரட்டினாள் அவள். அந்த முகவரிகள் மேலாகவே இருந்தன. மூன்றே மூன்று வரிகளில் பெயர் ஊர் என்ற வரிசைப்படி இருந்த சத்தியமூர்த்தியின் முகவரியை நன்றாக ஞாபகத்தில் பதித்துக் கொண்டு உள்ளே ஓடிப்போய் உறையில் அதை அவசர அவசரமாக எழுதினாள். அப்படி எழுதும்போதே அந்த முகவரி அவள் மனத்தில் நிரந்தர ஞாபகமாகப் பதிந்து கொண்டது. பங்களா வாசலில் எதிர்ப்புறம் மரத்தடியில் தபால்பெட்டி உண்டு. வேறு யாரிடமும் கொடுப்பதற்கில்லை என்பதால் அப்பாவுக்குத் தெரியாதபடி தானே நேரில் போய்த் தபாலில் சேர்த்துவிட்டு வர எண்ணி அப்பா எங்கே இருக்கிறார் என்று பார்த்தாள் பாரதி. வராந்தாவின் மேலக்கோடியில் பிரின்ஸிபலோடும் ஹெட்கிளார்க்கோடும் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. செடிகளின் மறைவில் பதுங்கிப் பதுங்கி வெளியேறித் தெருவுக்கு வந்தாள் அவள். அப்போதுதான் தபால் பெட்டியைத் திறந்து மஞ்சள் பையில் கடிதங்களை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான் தபால் இலாகா ஊழியன். விரைந்து ஓடிப்போய் அவள் அந்த உறையைப் பெட்டியில் போட்டாள். தபால் ஊழியன் அதையும் சேர்த்துத் தபால் பையில் போடுவதைத் தன் கண்களாலேயே அவள் பார்த்துத் திருப்தியும் கொண்டுவிட்டாள். அப்போது தற்செயலாகத் தனக்குப் பின்னால் யாரோ வந்து நிற்பது போலவும் தன்னையே கவனிப்பது போலவும் தோன்றவே அவள் திரும்பினாள், திகைத்தாள்.

அத்தியாயம் - 7

வாழ்க்கையாகிய பந்தயத்தில் இந்த விநாடி வரை பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள் தான் மிக வேகமாக முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

சத்தியமூர்த்தியின் உள்ளே வருத்திக் கொண்டிருந்த அந்த நேரத்து மனத்தின் கவலைகளும் வேதனைகளும் அப்போது ஏற்பட்ட இந்தத் திகைப்பினால் சற்றே விலகின. எதிர்பாராத வேளையில் எதிர்பாராத சூழ்நிலையில் எதிர்பாராத மனிதரோடு வந்து நிற்கும் அந்தப் பெண்ணின் மேல் அவனுக்கு முதலில் அடக்க முடியாத கோபம் தான் ஏற்பட்டது. அவளை ஏறிட்டுப் பார்த்தாலோ கோபப்படுவதற்கும் கடிந்து கொள்ளுவதற்கும் அவள் பாத்திரமில்லை என்று தோன்றியது.

அழுது அழுது சிவந்து போன கண்களும், சோர்ந்து வாடிய முகமுமாக, அந்தச் சோர்விலும், வாட்டத்திலும் கூடத் தான் இருப்பதைப் புலப்படுத்திக் கொண்டிருக்கிற அழகும் கவர்ச்சியும் மறையாதபடி காட்சியளித்தாள் அவள். பிரபஞ்சமாகிய பெரிய மலர் தன் உயிர் இதழ்களை ஒவ்வொன்றாக விரித்து மலர்கின்ற அந்த வைகறை வேளையில் நட்சத்திரங்களோடு கூடிய நீல வானத்தின் நெடும் பெரும்பரப்பில் அழகானதொரு பகுதியை அப்படியே கிழித்தெடுத்துச் சுற்றிக் கொண்டு கீழிறங்கி வந்த மின்னலைப் போல் கண்ணில் பதிந்து கொண்டு போக மறுக்கும் கட்டழகாய் எதிரே வந்து நின்றாள் மோகினி. குலை குலையாகத் தொங்கும் கருப்புத் திராட்சைக் கொத்துக்களின் தொகுதியைப் போல் சுருண்டு நெளியும் கருங்கூந்தல். அதில் சிற்றலையோடி மின்னும் கருமையில் ஓர் அழகு. செவிகளின் ஓரங்களில் குணடலங்களாய்ச் சுருண்டு சுழன்று கொண்டிருக்கும் கேசச் சுழற்சியில் ஓர் அழகு. சவுக்குத் தோப்பில் நீளும் ஒற்றையடிப் பாதையினைப் போல் நடுவே வெள்ளிக் கோடாய் மினுக்கும் நேர்வகிட்டில் ஓர் அழகு - என்று இப்படி ஒவ்வொன்றாய் விரல் விட்டு எண்ணுகிற பல அழகுகளுக்கும் இடமாயிருக்கும் ஒரே ஓர் அழகாக அவள் நிற்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அவனுடைய மனத்தின் கோபம் முழுமையாக அடங்கவில்லை. "இப்போது என்ன காரியமாக என்னைத் தேடி வந்தீர்கள் இங்கே?" என்று சத்தியமூர்த்தி அவளைக் கேட்ட கேள்வியில் இப்படி இந்த நிலையில் இங்கே என்னைத் தேடி வந்திருக்க வேண்டாம் என்றோ வந்திருக்கக் கூடாது என்றோ தான் அபிப்பிராயப்படுகிற கடுமை கேட்கப் படுகிறவர்களுக்குத் தெளிவாகப் புரியும்படி தொனித்தது. "ஒன்றுமில்லை! இதை உங்களிடம் கொடுத்து விட்டுப் போக வந்தேன், இரயிலில் தவற விட்டுவிட்டு வந்திருக்கிறீர்கள்" என்று அவனுடைய பேனாவை எடுத்து நீட்டினாள் அவள். அப்போது அவள் எதற்காக அங்கே வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு பேனாவை அவள் கையிலிருந்து வாங்கிக் கொண்ட போது சற்று முன்பு தான் அவளைக் கேட்டிருந்த கேள்வியின் கடுமைக்காக நாணினான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரம் காரின் அருகிலேயே நின்று கொண்டு விட்டார். அந்த முதிய அம்மாள் காருக்குள்ளேயிருந்து கீழே இறங்கவேயில்லை. வீட்டு வாசலில் சத்தியமூர்த்தியும் அந்தப் பெண்ணும் தான் தனியே நின்று கொண்டிருந்தார்கள். அவன் அவளுடைய உதவிக்காக நன்றி கூறினான். "பேனாவை இரயிலில் தவற விட்டு விட்டு எப்படி ஞாபகக் குறைவாக வீடு வந்து சேர்ந்தேனென்று எனக்கே தெரியவில்லை. நல்ல வேளையாகக் காப்பாற்றிக் கொண்டு வந்து கொடுத்து விட்டீர்கள்... நிரம்ப நன்றி..."

"வெறும் பேனாவைக் காப்பாற்றிக் கொடுத்ததற்கே இவ்வளவு நன்றியானால் உயிரைக் காப்பாற்றிக் கொடுத்தவர்களுக்கு எவ்வளவு நன்றி சொல்ல வேண்டும்" என்று சொல்லிச் சிரித்தாள் அவள். இப்படி இந்த வாக்கியத்தைச் சொல்லுவதற்குரிய சாமர்த்தியம் அவளிடம் இருந்ததை இரசித்தான் சத்தியமூர்த்தி. அழகிய இதயத்திலிருந்து தான் அழகிய வாக்கியங்கள் பிறக்க இயலுமென்று சில சமயங்களில் அநுமானம் செய்ய முடியும். முகம் அழகாயிருப்பவர்களுக்குச் சித்தமும் அழகாயிருப்பதைப் புரிந்து கொண்டால் எத்தனை பூரிப்பு அடைய முடியுமோ அத்தனை பூரிப்பைச் சத்தியமூர்த்தியும் அப்போது அடைந்தான். 'சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை' என்ற மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஞாபகத்தின் மெல்லிய சாயலாக மனத்தில் தோன்றியது அவனுக்கு. உடம்பு மட்டுமில்லாமல் மனமும் அழகாக இருந்தாலொழிய இவ்வளவு அழகான வாக்கியத்துக்குச் சொற்கள் அவளுக்குக் கிடைத்திருக்க முடியாதென்று சத்தியமூர்த்தி நினைத்தான். 'சித்தம் அழகியார்' என்ற அர்த்த நிறைவுள்ள கவிச்சொற்றொடர் மீண்டும் மீண்டும் அவன் இதயத்தில் புரண்டு எதிரொலிக்கலாயிற்று.

தெருவில் காருக்குள் உட்கார்ந்த அந்த அம்மாளும் கண்ணாயிரமும் வெறுப்போடு தன் பக்கமாகப் பார்ப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி அந்தச் சந்திப்பை விரைவில் முடித்துக் கொள்ள எண்ணினான். அவர்கள் பார்வை அவனை வேதனைப்படுத்துவதாக இருந்தது.

"அவர்கள் உங்களை அவசரமாக எதிர்பார்க்கிறார்கள் போலிருக்கிறது. நீங்களானால் என்னோடு பேசிக் கொண்டு நின்றே நேரத்தைக் கழிக்கிறீர்கள்" என்று அவர்களைச் சுட்டிக் காட்டி அவளிடம் சொன்னான் சத்தியமூர்த்தி.

"இருக்கட்டும்! பரவாயில்லை. அம்மாவுக்குத் தலைகால் பிடிபடாது. வாயெல்லாம் பல்லாகிவிடும். ஏதோ கூந்தல் தைலம் தயாரிக்கும் கம்பெனியாம். அதன் விளம்பரத்துக்காக நான் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு போட்டோவுக்கு உட்காரணுமாம்! எல்லாம் நான் பண்ணின பாவம், என் தலையெழுத்து..."

"போட்டோவை எடுத்த பின் அதற்குக் கீழே 'எங்கள் கூந்தல் தைலத்தை உபயோகித்ததனால் நாட்டிய நட்சத்திரம் மோகினியின் கூந்தல் செழித்திருப்பதைப் பாருங்கள்' என்று விளம்பரம் வேறு செய்வார்கள். இப்போதே நீங்கள் இப்படி நொந்து கொண்டால் என்ன செய்வது?"

"அப்படிச் செய்தால் அவர்கள் மூஞ்சியில் காரித் துப்பிவிட்டு வருவேன். அம்மா கையால் வெறும் தேங்காயெண்ணையைக் குழப்பித் தடவி வாரிவிட்டு வளர்ந்த தலை இது. 'மயில் தோகை மார்க் கூந்தல் தைலக்காரன்' இதைக் காட்டிப் பெருமை கொண்டாடுவதற்கு ஒன்றுமே இல்லை."

"இப்படி ஒன்றைக் காட்டி மற்றொன்றுக்குப் பெருமை சேர்ப்பதுதான் விளம்பரம்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே வீட்டுக்குள் படியேறிப் போவதற்காகத் திரும்பினான் சத்தியமூர்த்தி. கண்ணாயிரமும் அவர் காரில் கொலு வீற்றிருக்கும் முதிய அம்மாளும் கணத்துக்குக் கணம் பொறுமை இழந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டே அவன் தன் உரையாடலை அவ்வளவு அவசரமாக முடித்துக் கொண்டு உள்ளே போக முந்தினான். அந்தப் பெண்ணோ போய்க் காரில் ஏறிக் கொள்ளவே மனமில்லாதவளாய்த் தயங்கித் தயங்கி ஏதோ இன்னும் சொல்ல வேண்டும் என்றோ, சொல்ல மீதமிருப்பதாகவோ நினைத்து நிற்பது போல நின்றாள். 'நீங்கள் புறப்படுங்கள் நேரமாகிறது' என்று நேருக்கு நேர் அவளிடம் சொல்லக் கூசியவனாக அதைச் சொல்வதற்குப் பதில் புலப்படுத்தும் நோக்குடனேயே வீட்டுக்குள் போவதற்குத் திரும்புகிறவனைப் போல் திரும்பியிருந்தான் சத்தியமூர்த்தி.

"என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். வருகிறேன்" என்று சித்திரம் போல் அடக்கமாக நின்று தெருவில் அவள் கைகூப்பிய காட்சி மிகவும் அழகாயிருந்தது. தான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை எதுவோ அது தன் நினைப்பில் இல்லாமல், தன் நினைப்பிலிருக்கும் வாழ்க்கை எதுவோ அதைத் தான் வாழ முடியாமல் வேதனைப்படுகிற அந்த அபலைப் பெண் விடைபெறுகிற போது இன்னதென்று உறுதியிட்டுச் சொல்ல முடியாததோர் அவல உணர்வு சத்தியமூர்த்தியின் நெஞ்சைப் பிசைந்தது. நெஞ்சுக்கு நேரே சட்டையில் சொருகிக் கொள்வதற்காகப் பேனாவைக் கை மேலே உயர்த்திய போது அதிலிருந்து ஒரு நறுமணம் அலையாகப் பரவி அவன் நாசியை நிறைத்தது. அந்தப் பெண் மோகினியைப் பற்றிய அநுதாப நினைவை நெஞ்சின் உள்ளேயும், அவள் காப்பாற்றிக் கொடுத்த பேனாவை நெஞ்சின் வெளியேயும் வைத்துக் கொண்டு வீட்டுப் படிகளில் ஏறி உள்ளே சென்றான் சத்தியமூர்த்தி. அப்பா ஊஞ்சலில் உட்கார்ந்தது உட்கார்ந்தபடி மலைத்துப் போயிருந்தார். ஆண்டாள் கூடத்தை மெழுகிக் கொண்டிருந்தாள். கல்யாணியும் அம்மாவும் கிணற்றடியில் இருந்தார்கள். அப்போது தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்ப்பதற்கே தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது அவனுக்கு. வெளியில் எங்கேயும் போகப் பிடிக்காமல் வீட்டுக்குள் இருப்பதும் வேதனையாக, மறுபடியும் தன் மேலேயே வெறுப்புப் பிறந்தது அவனுக்கு. எப்படியெப்படியோ உயர்ந்த இலட்சியங்களோடு வாழ வேண்டும் என்ற ஆசையும் அப்படியெல்லாம் வாழ முடியாத வறுமையையும் சேர்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத நிலையில் இந்த நாட்டு மத்தியத் தரக் குடும்பத்து இளைஞர்கள் பலர் இயல்பாக அடையும் மனவாட்டத்தை அப்போது அவனும் அடைந்தான். வாழ்க்கையும் அதன் நீதி நியாயங்களும் ஏதோ ஒரு காரணத்தால் வெறுப்புக்குரியனவாக அமைந்து விட்டாற் போல் எண்ணி எண்ணிப் புழுங்கினான் சத்தியமூர்த்தி.

அப்பாவைப் போல் கால் நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாகப் பள்ளி ஆசிரியராக இருந்து வறுமையால் மனமும் உடலும் தேய்ந்தவர்களைப் பற்றி ஒரு புறமும், கண்ணாயிரத்தைப் போல் குறுக்கு வழியில் தாவி ஓடி முன்னுக்கு வந்து பிரமுகராகி விட்டவர்களைப் பற்றி ஒரு புறமுமாகச் சத்தியமூர்த்தியின் மனத்தில் எண்ணங்கள் மோதின. வாழ்க்கையாகிய பந்தயத்தில் பொய்யையும் வஞ்சகத்தையும் முதலாக வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறவர்கள் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் இதயம் கொதித்தது அவனுக்கு. இப்படி மனம் தவிக்கும் வேளைகளில் சக்தி வாய்ந்த கருத்துக்களைச் சொல்லும் நூல்கள் எவற்றையாவது எடுத்துப் படிக்க வேண்டுமென்று தோன்றுவது சத்தியமூர்த்தியின் வழக்கம். இன்றும் அவனுக்கு அப்படியே தோன்றியது. அப்பாவுக்கும் அவனுக்கும் காப்பியை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள் கல்யாணி. காப்பியைக் குடித்துவிட்டுப் புத்தக அலமாரியிலிருந்து சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவுகளும் உபதேச மொழிகளும் அடங்கிய தொகுதி ஒன்றை எடுத்தான் சத்தியமூர்த்தி. எடுத்த எடுப்பில் அவன் கைகள் அந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கத்தைப் பிரித்தனவோ அந்தப் பக்கத்திலேயே சற்று முன் அவன் மனம் தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருந்த ஒரு பிரச்சினை விளக்கப்பட்டிருந்தது.

"உனது வறுமையைப் பற்றிய நினைவுகளை நீ ஒரு பக்கம் விட்டுவிடுக. எந்த எந்த வகையில் நீ ஏழை? இரண்டு குதிரைகளும் ஒரு வண்டியும் இல்லையென்றா, அழைத்ததும் ஓடிவந்து முன் நிற்கும் ஏவலாட்களும், பரிவாரமும் உனக்கு இல்லை என்றோ நீ வருந்துகின்றாய். அதனால் என்ன? உனது நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்டப் பிறர்க்காக அல்லும் பகலும் உழைப்பாயாயின் நீ செய்ய முடியாமல் போவது எதுவுமில்லை என்பதை நீயே உணர்வாய்."

எவ்வளவு சக்தி வாய்ந்த கருத்துள்ள வாக்கியங்கள் இவை! சத்தியமூர்த்தி நினைக்கலானான்: 'நானும் தான் இந்த வீட்டின் துன்பங்கள் விடிவதற்காக நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட உழைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! ஆனால் எங்கு உழைப்பது? எங்காவது எப்படியாவது உழைத்துத்தான் ஆகவேண்டுமென்கிறார் அப்பா. இந்த விதமான இடத்தில் இப்படித்தான் உழைக்க வேண்டும் என்று நானாகவே மனத்தில் ஏதேதோ நினைத்துக் கொண்டிருக்கிறேன். அப்படி நினைப்பதும் எதிர்பார்ப்பதும் தான் என்னுடைய அகம்பாவம் என்று அப்பா அபிப்பிராயப்படுகிறார். இனிமேலும் தொடர்ந்து இந்த வீட்டில் அப்பாவோ மற்றவர்களோ என்னைப் பற்றி இப்படி நினைக்க இடமளித்துக் கொண்டு நான் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையாவது எனக்குக் கிடைத்து நான் அங்கே போய்ச் சேர்ந்து விட வேண்டும். அந்த ஊரை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தக் கல்லூரியையும் அதன் அமைப்பு முறைகளையும் நான் விரும்புகிறேன். ஆனால் அந்தக் கல்லூரி அதிபருக்கும் முதல்வருக்கும் என்னைப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பதைத்தான் நான் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை' - என்று சத்தியமூர்த்தி தனக்குத் தானே மூழ்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த போது, "சத்யம்! இப்படி வந்து விட்டுப் போயேன்" என்று உள்புறமிருந்து அம்மா குரல் கொடுத்தாள். புத்தகத்தை மூடி வைத்து விட்டு, "இதோ வந்துவிட்டேன் அம்மா..." என்று உள்ளே எழுந்து சென்றான் சத்தியமூர்த்தி.

அவன் போய்விட்டு வந்த மல்லிகைப் பந்தல் ஊரைப் பற்றியும் அந்த ஊர்க் கல்லூரி வேலையைப் பற்றியும் பெண்களுக்கு இயல்பாகக் கேட்கத் தோன்றும் சில கேள்விகளால் அம்மாவும், அவனை விசாரித்தாள். "மல்லிகைப் பந்தல் கல்லூரியில் எவ்வளவு சம்பளம் கொடுப்பார்கள்? எவ்வெப்போதெல்லாம் விடுமுறைக்கு மதுரைக்கு வரலாம்? அந்த வேலையில் மேற்கொண்டு முன்னேற்றத்துக்கு ஏதாவது வழி உண்டா?" என்பனவற்றைப் போல் சாரமில்லாதனவும், அந்த வேலை நிச்சயமாகக் கிடைத்து விடும்போல் பாவித்துக் கொண்டு கேட்கப்பட்டனவுமாகிய பேதைத் தன்மை நிறைந்த அம்மாவின் கேள்விகளுக்கு ஆத்திரப்படாமல் நிதானமாக மறுமொழிகளைச் சொன்னான் சத்தியமூர்த்தி.

"என்ன பதில் பேசாமல் இருக்கிறாய்?" என்று இரண்டாம் தடவையாகவும் அம்மா அழுத்திக் கேட்ட போது, "கிடைத்து விடும் என்று தான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் அம்மா!" என்று பதில் வந்தது சத்தியமூர்த்தியிடமிருந்து. அதற்குப் பின்பு அம்மா அடுப்புக் காரியங்களைக் கவனிக்கப் போய்விட்டாள். மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி எல்லாரும் விசாரிக்கிற அக்கறையைப் பார்த்தால் அது தனக்குக் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதும் நம்புவதும் அவனுக்குத் தெரிந்தது. ஏமாற்றத்தை ஏற்கவும் தாங்கிக் கொள்ளவும் அதற்கு ஆளாகிறவன் தயாராக இருந்தாலும் அவனைச் சுற்றியிருக்கிறவர்கள் தயாராயிருக்க விரும்பாத சில சந்தர்ப்பங்கள் உண்டு. தான் இப்போது இருக்கிற சூழ்நிலை அப்படிப்பட்டதென்று சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்திருந்தான். அப்போது இன்னோர் எண்ணமும் அவனுக்குத் தோன்றியது. 'தான் நலமாக ஊர் திரும்பி வந்து சேர்ந்ததைப் பற்றியும், 'இண்டர்வ்யூ'வின் போது அன்பாகவும், பரிவுடனும் நடந்து கொண்டதற்கு நன்றி சொல்லியும் பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன?' என்று நினைத்தான். அடுத்த கணமே 'அப்படி எதற்காக எழுதவேண்டும்?' என்ற தயக்கமும் ஏற்பட்டது. நன்றி சொல்வதைச் சிலர் வேறு அர்த்தத்தில் எடுத்துக் கொள்வார்கள். இந்த நன்றியைச் சொல்வதனால் இன்னும் வேறு எந்த உதவியை எதிர்பார்க்கிறார்களோ என்று பயந்து நன்றியை ஏற்றுக் கொள்ளவே தயங்குகிறவர்களும் இருப்பது சத்தியமூர்த்திக்குத் தெரியும். நன்றி என்ற குணத்தின் மானத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் இப்படிப்பட்டவர்களுக்கு நன்றி சொல்வதை நிறுத்திவிட வேண்டும். இதில் பூபதி அவர்களை எந்த வகையில் சேர்ப்பது என்று அந்த ஒரு நாள் பழக்கத்தில் அவனால் தீர்மானம் செய்ய முடியவில்லை.

காலை பத்து மணிக்குக் கிணற்றடியில் குளிக்கப் போனவன் - அப்போதும் பூபதிக்குக் கடிதம் எழுதுவதா வேண்டாமா என்ற இதே சிந்தனையில் தான் இருந்தான். அப்பா டியூஷன் வீடுகளுக்குச் சென்று வர வெளியே போயிருந்தார். அவர் திரும்பி வந்து மறுபடியும் இதைப் பற்றிப் பேச்சைத் தொடங்கினால் என்ன செய்வதென்று திகைப்பாகவும் இருந்தது அவனுக்கு. அந்த நிலையில் நண்பர்கள் யாராவது தேடி வர நேர்ந்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசினால் கூட நல்லதென்று நினைத்தான் அவன். ஆனால் அவன் எதிர்பார்த்தபடி நண்பர்கள் எவரும் அப்போது அவனைத் தேடி வரவில்லை. வெளியூரிலிருந்த நண்பர்கள் இருவரிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. அவன் குளித்துக் கொண்டிருந்த போதே முதல் தபாலில் அந்தக் கடிதங்கள் வந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. தங்கை ஆண்டாள் தபால்காரனிடமிருந்து அவற்றை வாங்கிக் கொண்டு வந்து வைத்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டு ஈர உடையைக் களையாமலே கடிதங்களை ஆவலோடு பிரித்தான் சத்தியமூர்த்தி. அவனைப் பொறுத்தவரை அப்போதிருந்த மனநிலையில் இரண்டு கடிதங்களிலுமே சுவையில்லாத செய்திகள் தான் நிரம்பியிருந்தன. 'ஏதாவதொரு கல்லூரியின் விரிவுரையாளராயிருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குப் படித்து எழுதினால் உனக்கு இருக்கிற பொது அறிவுக்கும் புத்திக் கூர்மைக்கும் நிச்சயமாகத் தேறிவிடுவாய்' என்று சத்தியமூர்த்திக்குப் பிழைக்கும் வழியை உபதேசம் செய்திருந்தான் ஒரு நண்பன். பணக்கார வீட்டில் ஒற்றைக்கொரு பிள்ளையாகப் பிறந்து, அந்த வீட்டின் முடிசூடா இளவரசனாக இருந்து வரும் இன்னொரு நண்பனோ காஷ்மீருக்கு உல்லாசப் பிரயாணம் புறப்பட இருப்பதாகவும் சத்தியமூர்த்தியும் உடன் வந்தால் தன் செலவில் அழைத்துப் போகத் தயாராயிருப்பதாகவும் எழுதியிருந்தான். படித்துக் கடிதங்களை வைக்கும் போது சத்தியமூர்த்திக்குச் சிரிப்புதான் வந்தது.

'ஒரு நண்பன் வாழ வ்ழி சொல்லிக் கொடுத்திருக்கிறான். இன்னொரு நண்பனோ வாழ்க்கையை அனுபவிக்க ஆயிரம் மைல் பயணம் செய்து போய் வரலாம் என்று அழைக்கிறான்! எனக்கென்ன குறை?' என்று பாதி வேதனையாகவும் பாதி வேடிக்கையாகவும் முணுமுணுத்தபடி உடைமாற்றிக் கொண்டு வர உள்ளே சென்றான் அவன்.

திரும்பி வந்து பன்னிரண்டு பன்னிரண்டரை மணி வரை புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். புத்தகத்தை மூடி வைத்து விட்டுப் படித்ததை அசை போட்டுச் சிந்திப்பதில் சிறிது நேரம் கழிந்தது. அதற்குள் அப்பா வெளியிலிருந்து திரும்பி வந்தார். பகல் உணவுக்கு இரண்டு பேரும் சேர்ந்து தான் உட்கார்ந்தார்கள். சாப்பிடும் போது தந்தை தன்னிடம் ஏதாவது பேசத் தொடங்குவார் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. சாப்பிட்டு முடித்துக் கை கழுவுகின்ற வரை இருவரும் எதைப் பற்றியும் பேசிக் கொள்ளவே நேரவில்லை. வாயிலில் இரண்டாவது மெயில் தபால்காரன் சத்தியமூர்த்தியின் பெயரைச் சொல்லி ஓர் உறையை உள்ளே எறிந்து விட்டுப் போனான். இப்போதும் ஆண்டாள் தான் போய் எடுத்து வந்தாள்.

"இதென்ன அண்ணா? மல்லிகைப் பந்தல் ஊரிலிருந்து வருகிற கடிதம் கூட மல்லிகைப் பூமணம் மணக்கும் போலிருக்கிறதே?" என்று தங்கை அந்தக் கடித உறையைக் கொடுத்த போது சத்தியமூர்த்தி அதைக் கையில் வாங்கியதுமே அந்த வாசனையை உணர்ந்தான். 'ஒருவேளை ஆர்டராக இருக்குமோ?...' என்ற பாவனையில் அப்பா அவன் முகத்தை ஆவலோடு நிமிர்ந்து பார்த்துத் தயங்கினார். உறையும் கிழியாமல் உள்ளே இருப்பதும் கிழியாமல் இரண்டு நூலிழை அளவுக்கு ஓர் ஓரமாக உறையைக் கிழித்து உள்ளே இருந்ததை எடுத்தான் சத்தியமூர்த்தி. கடித மடிப்பினிடையே மலர்ந்த புதுமையோடும் இல்லாமல் நன்றாக வாடியும் இல்லாமல் நசுங்கி வதங்கி மணக்கும் குடைமல்லிகைப் பூக்கள் இரண்டு இருந்தன. சத்தியமூர்த்தி ஆச்சரியமடைந்தான். உறையில் குண்டு குண்டாக எழுதியிருந்த முகவரி எழுத்துக்களைப் பார்த்த போதே அது கல்லூரி ஆர்டராக இருக்க முடியும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. இப்போது அது ஆர்டர் இல்லை என்பதும் நிச்சயமாகிவிட்டது. 'ஆச்சரியம்' என்ற வார்த்தையோடுதான் அந்தக் கடிதமும் ஆரம்பமாகி இருந்தது. எழுத்துக்கள் குண்டு குண்டாக வரி பிறழாமல் தேர்ந்து பழகின கை பூத்தொடுத்த மாதிரி இருந்தன.

"...உங்களுக்கு இந்தக் கடிதத்தை நான் துணிந்து எழுதுவதே ஆச்சரியமாயிருக்கலாம். இதை எப்படித் தொடங்குவதென்று எனக்குத் தெரியவில்லை. அப்படியே எப்படி முடிப்பதென்றும், எந்த இடத்தில் முடிப்பதென்றும் கூடத் தெரியாமல் போகலாம். உங்களை எப்படி அழைத்து இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று சிந்தித்துத் தயங்குவதிலேயே அதிக நேரம் வீணாகக் கழிந்துவிட்டது. அன்பின் பரிபூரணமான தன்மை கனிந்து நிற்கிறாற் போல் ஓர் அழகிய அழைப்பைத் தேடினேன். அப்படிப் பல அழைப்புக்கள் அடுக்கடுக்காகத் தேடினேன். எந்தச் சொல் அதிக அழகாயிருக்கும், எதை எழுதினால் உங்கள் மனம் கவரப்படும் என்றெல்லாம் நினைத்து நினைத்துத் தயங்கிய பின் எதையும் எழுதாமல் அழைக்கப்பட வேண்டிய அந்த இடத்தை புள்ளிகளால் மட்டும் நிரப்பினேன். பிரியமுள்ள மனிதரை மனப்பூர்வமாகக் கூவி அழைப்பதில் மிகவும் ஆற்றல் வாய்ந்த பதச்சேர்க்கை எதுவோ அது அந்த இடத்தில் உங்களுக்குத் தோன்றட்டும். செய்யலாமா, கூடாதா என்று தயங்கிவிட்டு முடிவில் செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் தான் இதை எழுதுகிறேன். இதை எழுத எண்ணிய போதும், எழுதிக் கொண்டு இருக்கும் போதும், நான் அடைந்து கொண்டிருக்கிற உற்சாகத்தை இதற்கு முன்பு எப்போதும் அடைந்ததில்லை. வாழ்க்கையில் இப்படி முன்பின் சொல்லிக் கொள்ளாமல் வருகிற மகிழ்ச்சியை என்னென்பது? இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதத் துணிந்ததைப் பற்றியோ, எழுதியதைப் பற்றியோ நீங்கள் என்ன நினைப்பீர்கள் என்று எண்ணும்போது எனக்கு பயமாகவும் தயக்கமாகவும் தான் இருக்கிறது. ஆனாலும் இதை நான் உங்களுக்கு எழுதித்தான் ஆகவேண்டும். நீங்கள் ஒரு பாடல்... அப்பாவிடம் இண்டர்வியூவின் போது சொல்லிக் கொண்டிருந்தீர்களே... அந்தப் பாடல் தான் எனக்கு இப்போது என் மனநிலையை உங்களிடம் சொல்வதற்குத் துணையாயிருந்தது. நான் உங்களிடம் எதைச் சொல்ல வேண்டுமோ அதைச் சொல்லுவதற்குச் சரியான வார்த்தைகள் அந்தப் பாடலிலிருந்துதான் எனக்குக் கிடைக்கின்றன. செம்மண் நிலத்தில் மழை பெய்தாற் போல் தான் நானும் இப்போது உங்கள் ஞாபகத்தில் இணைந்து உங்களைச் சார்ந்ததன் வண்ணமாக இருக்கிறேன். உங்கள் செந்தாமரைப் பாதங்களைத் தான் நான் முதல் முதலாக என் கண்களால் பார்த்தேன். அந்தப் பாதங்களைப் பார்த்தபின் முகத்தைப் பார்க்கும் துணிவு எனக்கு வரவில்லை என்பதா, அல்லது அந்தப் பாதங்களிலேயே மேலே எதையும் பார்த்துத் தவிக்கும் அதிக நோக்கமில்லாமல் என் உணர்வுகள் யாவும் ஐக்கியமாகிவிட்டன என்பதா... எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் என் மனநிலையில் இருந்தால் இதை இன்னும் அழகாகச் சொல்லுவீர்கள்; எனக்கும் சொல்லிக் கொடுப்பீர்கள். வேடிக்கையாகவோ, பிரமையாகவோ உங்கள் பாதங்களைப் பார்த்தவுடன் எனக்கு ஒரு கற்பனை தோன்றியது. அற்புதக் காட்சியாக என் கண்களுக்கு மட்டுமே தோன்றிய அந்தக் கற்பனை பைத்தியக்காரத்தனமாகவும் இருக்கலாம். ஆனாலும் பொய்யோ புனைவோ வெறும் பிரமையோ எதுவாயிருந்தாலும் என் மனத்தில் தோன்றிய அழகை நான் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு. உங்கள் கால்கள் மிதித்துக் கொண்டு போகிற இடமெல்லாம் அப்படி நடந்து முடித்து மறுகணமே ரோஜாப்பூ பூத்துக் கொட்டுவது போல் பிரமையாயிருந்தது. இன்று மாலை தோட்டத்தில் போய் நின்று ரோஜாப் பூக்களைப் பார்த்த போதும் இதையே நினைத்தேன். இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத நினைத்ததற்குக் காரணம் வேறு. பெண்களால் சுற்றி வளைக்காமல் நேரடியாக எதையும் சொல்லிவிட முடியாது. எதையோ அவசரமாகவும் அவசியமாகவும் உங்களுக்குச் சொல்லிவிட நினைத்து வேறு எதை எதையோ வீணுக்கு வளர்த்து எழுதிக் கொண்டு போகிறேன். அதற்காகவும் என்னை மன்னித்து விடுங்கள்.
'இண்டர்வ்யூ' முடிந்ததும் சாப்பிட்டு நீங்கள் விடை பெற்றுப் புறப்படுகிற நேரத்துக்கு மழை வந்து என்னைப் பாக்கியசாலியாக்கியது. மழை வந்திராவிட்டால் உங்களைக் கல்லூரிக்கும் பஸ் நிலையத்துக்கும் கொண்டு போய் விடுகிற வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்காது. மழை வந்திராவிட்டால் 'செம்புலப் பெயல் நீர்போல' என்ற உங்கள் உவமையை உங்களுக்கு முன்னாலேயே பிரத்யட்சமாக நான் புரிந்து கொண்டிருக்க முடியாது. உங்களைப் பஸ்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் நான் திகைப்பு அடையும்படியான காட்சி ஒன்றை இங்கே கண்டேன். அதனால் தான் இந்தக் கடிதத்தை நான் உங்களுக்கு எழுத நேரிட்டது. நீங்கள் விண்ணப்பம் அனுப்பியிருந்த அதே தமிழ் விரிவுரையாளர் பதவிக்கு இரண்டாவதாக விண்ணப்பம் செய்திருந்த முதியவர் ஒருவரையும் வரவழைத்துப் பேசிக் கொண்டிருந்தார் அப்பா. இதைப் பார்த்ததும் அப்பாவின் மேல் கோபம் கோபமாக வந்தது எனக்கு. நீங்கள் பேசிய சில வார்த்தைகளால் அப்பாவுக்கு உங்கள் மேல் கோபம் இருந்தாலும் உங்கள் தகுதிகளையும் திறமைகளையும் ஆர்வத்தையும் அவர் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். ஆனால், எங்கள் கல்லூரி முதல்வருக்கு என்ன காரணத்தாலோ உங்கள் மேல் ஒரு விதமான வெறுப்புப் பதிந்து போயிருக்கிறது. இந்த வேலைக்கு உங்களை நியமிக்கக் கூடாதென்பதை அவர் அப்பாவிடம் பிடிவாதமாக வற்புறுத்திக் கொண்டிருக்கிறார். இரண்டாவதாக மனுச் செய்துவிட்டு வந்திருக்கும் முதியவருக்கு முன் அனுபவமும் வயதும் இருப்பதனால் அவரையே தமிழ் விரிவுரையாளராக நியமித்து விடலாமென்று முதல்வரின் அபிப்பிராயமாக இருக்கிறது. அந்தரங்கமாக அப்பாவுக்கு அந்த முதியவரைப் பிடிக்கவில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இலட்சியங்களைப் புரிந்து கொள்ளாமல், 'சம்பளம் அதிகம்' என்ற ஒரே காரணத்துக்காக மட்டும் ஏற்கனவே தாம் வேலை பார்த்துக் கொண்டிருக்கிற கல்லூரியை விட்டு விட்டு அவர் மல்லிகைப் பந்தலுக்கு வருகிறாரோ என்று அப்பா சந்தேகப்பட்டுத் தயங்குகிறார். இந்த நிலையில் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். இந்தக் கணமே அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். அதில் உங்கள் இலட்சிய ஆர்வங்களைப் பற்றியும் அப்பாவின் கல்விப் பணியைப் பற்றியும் குறிப்பிடுங்கள். இப்படி உங்களை வற்புறுத்துவதற்கோ, தூண்டுவதர்கோ எனக்கு உரிமை இல்லல. ஆனால் உங்களுடைய பட்டுப் பாதங்கள் மறுபடியும் மல்லிகைப் பந்தலில் செம்மண் நிலத்தில் நடக்கவில்லையானால் எனக்குப் பைத்தியம் பிடித்தாற் போல் ஆகிவிடும். இப்போதே பைத்தியக்காரியாக மாறித்தான் இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்திருக்கிறேன். என்னால் உங்களை மறக்க முடியாது. கேட்பவர் மனத்தை வசீகரிக்கும் உங்கள் உரையாடல், தொழுவதற்கு ஆசைப்பட்டு ஏங்கச் செய்யும் உங்கள் பாதங்கள், இவையெல்லாம் என் ஞாபகத்தில் பதிந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் மறுபடி மல்லிகைப் பந்தலுக்கு வந்து கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டு இங்கேயே தங்கிவிட வேண்டும். என்னுடைய நினைவுகளால் இதற்காகத் தவம் செய்து கொண்டிருக்கிறேன் நான். நீங்கள் வருவது எங்கள் கல்லூரியின் அதிர்ஷ்டம். கல்லூரி முதல்வர் கூட உங்களுடைய தோற்றத்தினாலும் பேச்சுத் திறத்தினாலும் நீங்கள் மாணவர்களை அதிகம் கவர்ந்து விடுவீர்களோ என்று நினைத்துத்தான் பயப்படுகிறார். பிறருடைய சாமர்த்தியங்களை நினைத்து அவர்களை அருகில் நெருங்க விடாமல் பயந்து ஒதுக்குகிறவர்களில் மல்லிகைப் பந்தல் கல்லூரி முதல்வரும் ஒருவர். இதையெல்லாம் எண்ணி நீங்கள் அச்சமோ, தயக்கமோ அடைய வேண்டியதில்லை. எனக்காகத் தயவு செய்து அப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதுங்கள். முக்கால்வாசி உங்களைப் பற்றி அவருக்கே நல்ல எண்ணம் இருக்கிறது. உங்கள் கடிதம் கிடைத்தால் அவர் முடிவு உங்களுக்குச் சாதகமாக மாறும். பரபரப்போடு எழுதிய இந்தக் கடிதத்தை யாருக்கும் தெரியாமல் நானே இரகசியமாக எடுத்துக் கொண்டு சென்று தபால் பெட்டியில் போடப் போகிறேன். நான் இப்படி ஒரு கடிதம் உங்களுக்கு எழுதியது தவறானால் என்னை மன்னிக்கவும் நீங்கள் தயாராக இருக்க வேண்டும். என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. உங்களைத் தவிர வேறொருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் என்ற எண்ணத்தைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மல்லிகைப் பந்தல் ஊரையும் கல்லூரியையும் உங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்கும் போது நீங்கள் என்னிடம் கூறினீர்கள். அவ்வாறு உங்கள் மனத்தைக் கவர்ந்த ஓர் ஊருக்கு வருவதை நீங்கள் விரும்பத்தானே செய்வீர்கள்? ஆகவே அவசியம் நீங்கள் இங்கே தான் விரிவுரையாளராக வரவேண்டும். என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்!... உங்களை அவசியம் இங்கே எதிர்பார்க்கிறேன்."

உங்கள்,
"பாரதி"

- என்று கடிதம் முடிந்திருந்தது. "என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்" - என்ற வாக்கியம் ஒன்று மட்டும் அந்தப் பெண் அப்படியே எதிரே வந்து நின்றுகொண்டு அழகிய விழிகள் இரண்டையும் சுழற்றி வாய் திறந்து நேருக்கு நேர் பேசுவது போலவே இருந்தது. கம்மென்று நான்கு தாள்களிலும் குடை மல்லிகை மணம் கமழ்ந்தது. மெல்லிய ரோஸ் நிறக் கடிதத்தாள்களை மடித்து மீண்டும் உறையிலிட்டான் சத்தியமூர்த்தி. எதிரே நின்று கொண்டிருந்த அப்பா நம்பிக்கையோடு அவனைக் கேட்டார்: "யார் எழுதியிருக்கிறார்கள் இதை? பிரின்ஸிபலா? கல்லூரி நிர்வாகியா? கடிதத்துக்குள்ளே பூக்கள் வேறு வைத்திருக்கிறார்களே...?"

ஒரு கணம் சத்தியமூர்த்தி ஒன்றும் சொல்லத் தோன்றாது தன் தந்தையின் முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூச்சப்பட்டுத் தயங்கி நின்றான்.

அத்தியாயம் - 8

ஒரு பெண்ணுக்குத் தான் அழகாயிருக்க வேண்டுமென்ற ஞாபகமே, தன் இதயம் அழகனாக ஒப்புக் கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்பு தான், நிச்சயமாகவும் தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது.

மல்லிகைப் பந்தலின் அழகும் அமைதியும் இணைந்த வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு பரிபூரணமான முழுநாள் ஓடி மறைந்து விட்டது. குளிர்ச்சி நிறைந்த அந்த மலைநாட்டு நகரத்தில் ஒவ்வொரு நாளும் பொழுது புலர்வதே ஒரு சுவையான அநுபவம். பாலாவி போல் பனிமூடிய மலைத் தொடர்களிடையே ஒவ்வொரு நாள் காலை நேரமும் விடிவதற்குச் சோம்பல்பட்டுக் கொண்டே மெல்ல விடிவது போலிருக்கும். காற்றில், ஆடி அலைக்கழிக்கப்பட்டு மெல்ல உதிரும் பூவைப் போல அப்படி மந்தமாக விடிவதிலும் ஓர் அழகு இருக்கும். படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பறப்பதற்குச் சிலிர்த்துக் கொள்ளும் கருவண்டுகளாய்க் கண்களைத் திறந்து பார்த்தாள் பாரதி. பச்சை மரகதப் பரப்பாக வளர்ந்து கிடந்த தோட்டத்துப் புல்வெளியில் வைரம் சிதறினாற் போல் பனித்துளிகள் மின்னின. ஓரிரு கணங்கள் தான் அந்தப் பனித்துளிகளும் பசும்புல் வெளியும் தம்முடைய அந்த நேரத்து அழகால் அவளைக் கவர முடிந்தது. ஏதோ ஒரு நினைவால் சிறப்பாகவும் நிரந்தரமாகவும் கவரப்பட்டுவிட்ட ஒரு மனம் அவ்வப்போது சாதாரணமாய்க் கவரப்படும் பல நினைவுகளாலும் கூடத்தான் ஆண்டு அநுபவிக்க விரும்புகிற அந்த ஒரு நினைவே ஞாபகப்படுத்தப் பெறும். முதல் நாள் மாலை அவசரம் அவசரமாக அந்தக் கடிதத்தை எழுதி எடுத்துக் கொண்டு போய்த் தானே தபாலில் சேர்த்ததையும், அந்தக் கடிதத்தைப் பதறும் கையினால் தபால் பெட்டியில் போட்டு விட்டுப் பின்னால் யாரோ வந்து நின்று தன்னைக் கவனிப்பது போல் தோன்றவே திரும்பிப் பார்த்தபோது, "என்னைக் கூப்பிட்டுக் கொடுத்திருந்தால் நானே தபாலில் சேர்த்திருப்பேனே? நீங்கள் எதற்காகச் சிரமப்படுகிறீர்கள்?" என்ற கேள்வியோடும் தபாலில் சேர்ப்பதற்காக வைத்திருந்த வேறு கடிதங்களோடும் கல்லூரி ஹெட்கிளார்க் நின்று கொண்டிருந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள் பாரதி. முகவரி எழுதியிருந்த பக்கம் வெளியே தெரியும்படி தான் கடிதத்தை தபால் பெட்டிக்குள் போட்டதையும், திறந்திருந்த பெட்டியின் கீழ்ப்பக்கமாக அது வந்து விழுந்ததையும், ஹெட்கிளார்க் பின்புறம் நின்றபடியே படித்துப் பார்த்திருப்பாரோ என்ற பயமும் திகைப்பும் நேற்று இரவே வெகுநேரம் வரை அவள் மனத்தைக் குழப்பிக் கொண்டிருந்தன. இன்று காலை இப்போது இரண்டாவது முறையாக அந்த நினைவு வந்த போதும் "ஹெட்கிளார்க்" தபாலில் சேர்ப்பதற்காகக் கொண்டு வந்திருந்த கடிதங்களில் சத்தியமூர்த்திக்குப் போட்டியாக வந்த அந்த முதியவருக்கு அனுப்பப்படும் ஆர்டரும் இருக்குமோ என்ற அநாவசியமான பீதி வேறு அவளுக்கு ஏற்பட்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரி ஹெட்கிளார்க் சிதம்பரம் ஏறக்குறைய கல்லூரி முதல்வரின் வார்த்தைக்குத் தலையாட்டுகிறவர் என்பதும் அவளுக்குத் தெரியும். தான் தபால் பெட்டியில் போட்ட கடிதத்தில் சத்தியமூர்த்தியின் முகவரி எழுதப்பட்டிருந்ததை ஹெட்கிளார்க் படித்திருந்தால் அதை நிச்சயமாகக் கல்லூரி முதல்வரிடம் சொல்லுவார் என்பதையும் அவளால் அனுமானம் செய்ய முடிந்தது.

"நிரம்ப வேண்டிய சிநேகிதி ஒருத்திக்குத் தபாலில் எழுத வேண்டியிருந்தது. எப்படியும் இன்றைக்கு அவசரமாகச் சேர்த்துவிட வேண்டும் என்பதற்காக நானே எழுதி எடுத்துக் கொண்டு ஓடி வந்தேன்" என்று நேற்று மாலை ஹெட்கிளார்க்கினிடம் பதில் சொல்லியிருந்தாள் அவள்.

அதற்கு அப்புறமும், "ஏதோ கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்காக நீயே இந்த மழை ஈரத்தில் நடந்து வெளியே போயிருந்தாயாமே அம்மா? இந்த மழை ஈரத்தில் நீயே எதற்காக வெளியே போகிறாய்? உடம்புக்கு இழுத்து விட்டுக் கொண்டால் என்ன ஆவது? யாரிடமாவது கொடுத்து அனுப்பியிருக்கக் கூடாதோ?" என்று இரவு சாப்பிடும்போது அப்பாவும் அவளைக் கேட்டிருந்தார். 'ஹெட்கிளார்க்தான் அப்பாவிடம் அதைச் சொல்லியிருக்க வேண்டும்' என்று அவள் தெரிந்து கொண்டாள். இந்தக் கேள்வியை நேற்றிரவு தந்தை தன்னிடம் கேட்டபோது தன்னுடைய சௌகரியங்களை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விநாடியும் கவனித்துக் கொண்டிருப்பதையும், விசாரிப்பதையுமே துன்பமாக உணர்ந்தாள் அவள். காலையில் உறக்கம் விழித்துப் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டு முதல் நாள் நினைவுகளில் மூழ்கியிருந்தவள், கண்கள் சென்ற திசையில் தெரிந்த தோட்டத்துப் புல்வெளியையும் அதில் வைரக் கற்களாக மினுக்கும் பனித்துளிகளையும் அதற்கப்பால் இயற்கையின் ஏதோ ஒரு விதமான சந்தோஷத்தை வெளியிடும் சின்னங்களாகப் பூத்துக் குலுங்குகிற பலவகைச் செடிகொடிகளையும் இரண்டாவது தடவையாகப் பார்த்தாள். தோட்டமும் வீடுமாக பன்னிரண்டு ஏக்கர் பரப்புள்ள அந்தப் பங்களாவின் காம்பவுண்டு அமைப்புப் பெரிதாக இருந்த காரணத்தினாலும், மலைப்பகுதியாக இருந்ததனாலும் உள்ளே பெரும்பகுதிகள் வெள்ளைக்காரர்களின் வீடுகளைப் போல் கண்ணாடிகளால் தடுக்கப்பட்டிருந்தன. பெரிய கண்ணாடி பலகணிக்கு மறுபுறம் மங்கித் தெரிந்த தோட்டம் யாரோ தயாராக எடுத்து நிறுத்திக் கண்ணாடிப் போட்ட புகைப்படம் போல் வனப்பின் நிறைவாகத் தெரிந்து கொண்டிருந்தது.

பல் விளக்குவதற்காக வாஷ்பேஸினுக்கு முன்னால் போய் நின்றபோது மேலேயிருந்து கண்ணாடியில் தான் தினசரி பார்த்துப் பார்த்துப் பழக்கமான தன்னுடைய முகத்தையே புதுமையாகப் பார்த்தாள் பாரதி. சத்தியமூர்த்தியிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்த போதும் இந்த முகம் இப்படித்தானே அழகாயிருந்திருக்கும் என்ற மகிழ்ச்சிகரமான சந்தேகம் அவள் மனதில் இப்போது ஏற்பட்டது. 'சத்தியமூர்த்தியின் கண்களுக்குத் தான் எவ்வெப்போது எந்தெந்த விதங்களில் அழகாகத் தோன்றியிருக்க முடியும்?' என்ற எண்ணத்தோடு சிறிது நேரம் தன் கண்களை மறந்து அவனுடைய கண்களாகவே தன்னுடையவற்றைப் பாவித்துக் கொண்டு கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்து மகிழ முயன்றாள் அவள். 'நேற்று அவருக்கு முன் மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய் நாணி நின்ற போதும் என்னுடைய இந்தக் கண்கள் இப்படித்தானே அழகாயிருந்திருக்கும்? ஊதுவத்தியிலிருந்து எழுந்து சுழலும் புகைச் சுருள்களைப் போல் இந்தக் கூந்தலும் இப்படித்தானே சுருண்டு சுழன்று கருமை மின்னியிருக்கும்?' என்று ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினாள் அவள். தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஞாபகம் ஒரு பெண்ணுக்குத் தன் இதயம் அழகனாக ஒப்புக்கொண்டு அங்கீகரிக்கிற ஒருவனுக்கு முன்புதான் நிச்சயமாகவும், தவிர்க்க முடியாமலும் ஏற்படுகிறது. வார்த்தைகளால் அப்படி அப்படியே சொல்லி விளக்கிவிட முடியாததொரு நுணுக்கமான அனுபவம் இது. ஒவ்வொரு பெண்ணும் இத்தகைய அநுபவங்களின் போதுதான் தன்னுடைய நினைப்பும் பாவனைகளும் மலர்ந்து மணக்கிறாள். தன்னை விட அழகான பொருளை எதிரே சந்திக்கும் போதிலேயே தான் அழகாயிருக்க வேண்டும் என்ற ஞாபகமும் தவிப்பும் ஏற்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் உணர்ச்சிகளாலும், பாவனைகளாலும் தவிக்கிற தவிப்பே ஓர் அழகாகிவிடுகிறது. அந்தத் தவிப்பில் நேரம் போவதே தெரிவதில்லை. அப்படித் தவிப்பதே ஓர் இன்பமாக - ஓர் அழகாகத் தோன்றுகிறது.

குளியல் அறையில் பல் விளக்கி முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்து நேரத்தைப் பார்த்த போது தான் குளிப்பதற்குச் செலவிட வேண்டிய அவ்வளவு அதிகமான நேரத்தைத் தான் பல் விளக்குவதற்குச் செலவழித்திருப்பது பாரதிக்கே தெரிந்தது. மனம் இலயித்து ஈடுபடுகிற ஒன்றில் நேரமே தெரியாது என்பதைப் புரிந்து கொண்டவளாகக் கூடத்துக்குப் போனாள் அவள். கூடத்தின் நடுவேயிருந்த தேநீர் மேஜையில் எல்லாம் தயாராயிருந்தன. அப்பா காலையில் வெளிவந்த செய்தித் தாள்களில் மூழ்கியிருந்தார். செய்தித்தாள் முழுமையும் ஒரே எண்கள் மயமாக அச்சாகியிருந்தது. ஏதோ பரீட்சை ரிஸல்ட் வந்திருந்தது போலும். அருகே போய் உட்கார்ந்து தந்தையின் உடல்நிலையை விசாரித்துக் கொண்டே இருவருக்குமாகத் தேநீரைக் கலக்கத் தொடங்கினாள் பாரதி. அன்று விடிந்ததிலிருந்து தந்தை மிகவும் உற்சாகமாக இருப்பதை அவருடைய பேச்சிலிருந்து அவள் தெரிந்து கொள்ள முடிந்தது.

"இப்போதெல்லாம் நீ மிகவும் நேரம் கழித்து எழுந்திருக்கிறாய் போல் இருக்கிறதம்மா! நானும் ஆறேகால் மணியிலிருந்து இந்த நாற்காலியில் பழியாய்க் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு செய்தித்தாளையும் இரண்டு தடவை எடுத்துப் படித்தாயிற்று. பழகிவிட்ட காரணத்தால் நீ கலந்து கொடுக்காமல் தேநீர் குடிக்கவும் மனம் வரவில்லை. இன்று என் உடல் நிலையும் ஓரளவு தேறியிருக்கிறது. 'மயிலாடும் பாறை எஸ்டேட்' வரை போய்வரலாம் என்று நினைத்தேன். உன் அபிப்பிராயம் எப்படி? எஸ்டேட் வேலை கொஞ்சம் இருக்கிறது. அதோடு உன்னையும் அழைத்துப் போய்ப் புதிதாக வாங்கிய பகுதிகளைச் சுற்றிக் காண்பிக்க ஆசை. ஒரு நாளோ, இரண்டு நாளோ, அங்கே தங்கியிருந்து வரலாம். கல்லூரி இன்டர்வ்யூக்களும் ஏறக்குறைய முடிந்து விட்டன. சர்வகலாசாலை செனட் மீட்டிங் ஏதோ இருக்கிறதாம். பிரின்ஸிபல் இன்று மாலை சென்னைக்குப் போகிறார். திரும்பி வர ஒரு வாரமாகும். அதுவரை கல்லூரி நிர்வாக வேலைகளைப் பொறுத்த மட்டும் எனக்கு ஓய்வுதான்."

"இந்த வருடம் புதிதாக நியமனம் செய்து அனுப்ப வேண்டிய ஆர்டர்கள் எல்லாம் பிரின்ஸிபல் ஊர் திரும்பிய பின்புதானே அப்பா?" என்று தேநீர்க் கோப்பையை அவரிடம் நீட்டிக் கொண்டே மெல்லக் கேட்டாள் பாரதி.

"ஏன்? ஆர்டரைப் பற்றி உனக்கென்ன வந்தது. எல்லாரும் என்னைக் கழுத்தறுக்கிற மாதிரி நீயும் யாருக்காவது சிபாரிசு செய்யப் போகிறாயா? இந்தச் சிபாரிசு உபத்திரவத்துக்குப் பயந்து தான் நானே இரண்டு மூன்று நாட்கள் எங்காவது தலைமறைவாக எஸ்டேட் பக்கம் போய் இருந்துவிட்டு வரவேண்டும் என்று நினைக்கிறேனம்மா. தரக்குறைவான ஆட்களுக்குச் சிபாரிசு சொல்லிக்கொண்டு மிகவும் வேண்டிய மனிதர்கள் நேரில் வந்து சேர்கிறார்கள். இந்தக் கல்லூரி நீண்ட நாட்கள் நல்ல பெயரோடு நடப்பதற்குப் பணம் சேர்த்து வைத்து விட்டுப் போவதை விட முக்கியமானது நல்ல ஆசிரியர்களைச் சேர்த்து வைப்பதுதான். மூன்றாவது வகுப்பில் மூன்றாந்தரமாகப் பாஸ் செய்திருக்கிற கழிசடைகளுக்குச் சிபாரிசு சொல்லிக் கொண்டு 'முதல் தர'மான வேண்டியவர்கள் வந்தால் தட்டிக் கழிக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் திணற வேண்டியிருக்கிறது" என்று சிரித்தபடியே மறுமொழி கூறினார் பூபதி. 'அப்பாவிடமிருந்து தான் தெரிந்து கொள்ள விரும்புகிற எந்தச் செய்தியையும் இப்போது தெரிந்து கொள்ள முடியாது. அவர் அதிக விழிப்புடன் இருக்கிறார்' என்பது புரிந்தவுடன் பேச்சை நகைச்சுவையாக வேறு வழியில் மாற்றிவிட்டுத் தப்பித்துக் கொண்டாள் பாரதி.

"நானும் ஒரு சிபாரிசு செய்யப் போகிறேன் அப்பா! ஆனால் அது நீங்கள் நினைக்கிறார் போல் உங்களுக்குத் தொல்லை தருகிற சிபாரிசு இல்லை. என்றைக்கும் இதே போலத் தகுதியையும், திறமையையும், தெரிந்து கொண்டு நல்லவர்களையே தேர்ந்தெடுக்கும் என் அருமைத் தந்தைகு நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளைத் தரவேண்டும் என்று கடவுளிடம் சிபாரிசு செய்கிறேனப்பா! கடவுள் என்னுடைய சிபாரிசுக்குச் செவி சாய்த்துத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் எல்லாத் தகுதிகளும் உள்ள முதல் தரமான மனிதருக்காக இந்தச் சிபாரிசைச் செய்கிறேன் நான்" என்று மழலை மாறாத குழந்தைக் குரலில் சொல்லிவிட்டு அவள் கைகொட்டிச் சிரித்த போது அந்தப் பேச்சைக் கேட்டு அப்பாவே அயர்ந்து போனார். தமிழ் விரிவுரையாளர் பதவிக்காக அனுப்பப்படுவதற்கு இருக்கும் ஆர்டர் சத்தியமூர்த்திக்கா, அல்லது வேறு ஒருவருக்கா என்பதை மிகவும் நாசூக்காக அப்பாவிடத்திலிருந்து தெரிந்து கொண்டு விடுவதற்காகத்தான் அவள் அப்போது அந்தப் பேச்சையே தொடங்கினாள். தந்தையின் பதில் சிறிதும் நெகிழ்ச்சியின்றி வெளிப்பட்டதைக் கண்டபின்பே அவள் தன் பேச்சை மாற்றிக் கொண்டாள். அவரோ எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றியே அவளிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார்.

"என்னம்மா இது? நான் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் வேறு ஏதோ சொல்கிறாயே? எஸ்டேட் பக்கம் போய் வரலாமா என்று கேட்டேனே?" என்று மீண்டும் மகளைக் கேட்டார் பூபதி. வீடு வாசலை மறந்து மாதக் கணக்கில் எஸ்டேட்டில் இருக்கலாம் என்றாலும் உற்சாகமாக ஒப்புக் கொள்கிற பெண் இன்று மௌனமாயிருந்ததைக் கண்டு தந்தையும் வியப்படைந்தார். மல்லிகைப் பந்தலிலிருந்து நாற்பது - நாற்பத்தைந்து மைல் தொலைவில் இன்னும் உயரமான இடத்தில் இன்னும் அழகான மலைப் பகுதியில் பூபதிக்குச் சொந்தமான மயிலாடும் பாறை எஸ்டேட் அமைந்திருந்தது. நானூறு ஏக்கரோ நானூற்றைம்பது ஏக்கரோ ஒரு தனி மலையே அந்த இடத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்தது. எஸ்டேட்டின் நடுவே தேயிலையைப் பதனிட்டுத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் இருந்தது. மயிலாடும் பாறை மலையின் இயற்கையழகு மிகுந்த பகுதி ஒன்றில் சிறியதோர் அருவியை ஒட்டி ஓய்வு கொள்வதற்கு ஏற்ற வசதி நிறைந்த விடுதி ஒன்றையும் அமைத்திருந்தார் பூபதி. பதினைந்து இருபது நாட்களுக்கு ஒருமுறை அல்லது சில சமயங்களில் இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறை தந்தையும் மகளுமாக இந்த விடுதிக்கு மகிழ்ச்சி உலாப் புறப்பட்டு வருவதுண்டு. அப்படி வந்தால் ஒரு வாரமோ, பத்து நாளோ ஓய்வாகத் தங்காமல் திரும்புவது வழக்கமில்லை. மல்லிகைப் பந்தலுக்கும் மயிலாடும் பாறை எஸ்டேட்டுக்கும் நடுவிலுள்ள நாற்பது மைல் மலைச் சாலையிலேயே பூபதிக்கு உடைமையான வேறு சில பெரிய தொழில் நிறுவனங்களும் இருந்தன.

அவருடைய எஸ்டேட்டில் விளையும் கோகோ காய்களைப் பயன்படுத்திச் சாக்லேட் முதல் பல பண்டங்கள் செய்யும் இனிப்பு மிட்டாய்த் தொழிற்சாலையான 'கன்பெக்ஷனரி' ஒன்றும், தேக்கு கருங்காலி மரங்களை அறுத்து மிக அழகிய தரமான நாற்காலி மேஜைகள் நிலை கண்ணாடி பதித்த பீரோக்கள் ஆகியவற்றைச் செய்யும் மரத்தொழிற்சாலை ஒன்றும், ரப்பர்த் தோட்டம், ஏலக்காய்த் தோட்டம் ஆகியவற்றை ஒட்டி அவற்றுக்காக அமைந்த சில தொழிற்சாலைகளுமாக இருந்தன. பூபதி தம்முடைய சிந்தனையாலும், வியாபாரத் திறமையாலும் அந்த மலைகளில் அற்புதமான பல சாதனைகளைச் சாதித்திருந்தார். ஆனால் இந்தத் தொழில் நிறுவனங்களையெல்லாம் ஆக்கிப் படைத்து ஆளுவதைவிட மல்லிகைப் பந்தல் கலைக் கல்லூரியை நிறுவியவரகவும், நிர்வாகியாகவும், இருப்பதற்காகவே அவர் அதிகமாகப் பெருமைப்பட்டார். நாளடைவில் அந்தக் கல்லூரியை ஒரு மலைநாட்டுப் பல்கலைக் கழகமாக்கி விட வேண்டும் என்பதையே தன் வாழ்வில் இனிமேல் சாதிக்க வேண்டிய பெரிய சாதனையாக நினைத்துக் கொண்டிருந்தார் அவர். மல்லிகைப் பந்தலுக்கு மிக அருகேயுள்ள அமைதியான இடமாகிய மயிலாடும் பாறைக்குப் போனாலும் சரி, பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ள வேறோர் இடத்துக்குப் போனாலும் சரி, அப்பாவின் நினைவும் திட்டங்களும் கல்லூரியைச் சுற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் என்பது பாரதிக்குத் தெரியும். உடல் நலம் குன்றியிருந்த போது கல்லூரிக்கான இண்டர்வ்யூக்களைத் தேதி மாற்றவோ, தள்ளிப்போடவோ விரும்பாமல் குறித்த தேதியில் குறித்தபடியே நடத்தி முடித்த தந்தையின் பிடிவாதத்தை அவளும் பார்த்துக் கொண்டு தானே இருந்தாள்! நோயுற்றுத் தளர்ந்து போயிருக்கிற பல வேளைகளில் காரியங்களைத் தள்ளிப் போடாமல் குறித்த வேளையில் செய்து முடிக்கும் திருப்தியே அவருடைய நோய்க்கு மருந்தாகியிருப்பதை அவள் அறிவாள். காரியங்களைத் திட்டமிட்டபடி திட்டமிட்ட வேளையில் செய்து முடித்து விட்டோம் என்ற மனநிறைவையே ஓர் ஆரோக்கியமாக ஏற்றுக் கொண்டு அதனாலேயே எல்லாத் தளர்ச்சிகளும், எல்லாச் சோர்வுகளும் நீங்கி எழுந்து நடமாடத் தொடங்கியிருக்கிறார் அவள் தந்தை. கடந்த நாலைந்து நாட்களாக உடல்நலக் குறையோடு குறைவாக எழுந்து உட்கார்ந்து இண்டர்வ்யூக்களை நடத்தி முடித்த திருப்தியினால் தான் இன்று விடிந்ததும் விடியாததுமாய் எஸ்டேட்டுக்குப் புறப்பட்டுப் போகிற தைரியத்தை அப்பா அடைந்திருக்கிறார் என்பதை எண்ணித் தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் பாரதி.

"என்னம்மா? நீயாகவே சிரித்துக் கொள்கிறாயே?" என்று அவள் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த தந்தை அவளைக் கேட்டார். பெண் தன்னோடு பலமுறை மயிலாடும் பாறை எஸ்டேட்டுக்கு வந்திருந்தாலும் சென்ற மாதம் அந்த எஸ்டேட் இருக்கும் மலையில் மேற்குச் சரிவில் இன்னொருவரிடமிருந்து புதிதாக விலைக்கு வாங்கிச் சேர்த்த பகுதியை அவளுக்கு இந்தப் பயணத்தின் போது சுற்றிக் காட்டிவிட வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர்.

தந்தைக்கு ஏதோ மறுமொழி கூறும் பாவனையில் அவள் அவர் முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் பேசுவதற்கு இருந்த போது வாசல்பக்கமிருந்து யாரோ 'காலிங் பெல்'லை அழுத்தி அமுக்கினார்கள். அந்த மணி ஓசையைக் கேட்டு அப்பாவின் பேச்சு அளவற்ற உற்சாகத்தோடும் நகைச்சுவையோடும் வெளிப்பட்டது.

"மனுநீதிச் சோழனுடைய அரண்மனை வாசல் கெட்டது போ! நியாயம் தேடி வருகிறவர்கள் தன்னைக் கூப்பிட்டு அழைப்பதற்காக இப்படி ஒரு 'காலிங் பெல்' அந்த சோழனுடைய அரண்மனை வாசலில் இருந்ததாமே?... அதெல்லாம் கதையிலே படித்திருப்பாயே அம்மா. இந்த மல்லிகைப் பந்தல் அரண்மனை வாசலில் வந்து யாராவது நமது 'காலிங் பெல்'லை அமுக்கினால் ஒன்று சிபாரிசு தேடி வருகிறவர்களாக இருக்கிறார்கள். அல்லது ஏதாவதொரு நிதிக்கு நன்கொடை கேட்டு வருகிறவர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டே வாசல் பக்கமாகப் போவதற்காக எழுந்து நடந்தார் பூபதி. பாரதி தந்தையின் நகைச்சுவையைச் சிரித்து அநுபவித்துக் கொண்டே அவரோடு பின் தொடர்ந்து சென்றாள். உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதோ, கூடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போதோ, முன்புறத்து வாசலிலிருந்து இந்த மணி ஒலித்து விட்டால் இதை மனுநீதிச் சோழனுடைய அரண்மனை வாசல் மணிக்கு ஒப்பிட்டு வாய்நிறையச் சிரிக்காவிட்டால் அப்பாவுக்குப் போது போகாது.

பலதொல்லைகளை இப்படி நுணுக்கமான நகைச்சுவையினாலேயே சமாளித்து விட்டுத் தயங்காமல் மேலே நடந்து போய்க் கொண்டிருப்பார் பூபதி. அப்பாவின் குணங்களில் இந்த நகைச்சுவை குணத்தைப் பாரதி மிகவும் ஈடுபட்டு இரசிப்பாள். ஆனால் முன்புறத்து வாயில் வராந்தாவில் போய்ப் பார்த்தபோது தந்தையின் முகத்திலும் சிரிப்பு மறைந்தது; அவள் முகத்திலும் சிரிப்பு மறைந்துவிட்டது. முற்றிலும் வேறான காட்சி ஒன்று அவர்களுக்காக அங்கே காத்திருந்தது. ஓரிரு வினாடிகள் ஒன்றுமே புரியாமல் அவர்கள் இருவரும் அஞ்சி மருண்டு போயினர். விடிந்ததும் விடியாததுமாக இப்படி ஒரு காட்சியா?

பை ஓரமாக நெஞ்சின் மேல் ஓர் அரசிலை அளவுக்கு மாறிய நிறத்தில் பூ வேலை செய்த 'ஸ்லாக்' சட்டையும் பைஜாமாவும் அணிந்த இளைஞன் ஒருவன் வாராமல் கலைந்த தலையுடனும் வெறியுமிழும் சிவந்த கண்களுடன் வலது கையில் பிச்சுவாக் கத்தியை ஓங்கிக் கொண்டு பாயத் திமிறியபடி கூர்க்கா - காவற்காரர்களால் பிடித்துக் கொள்ளப்பட்டு நின்றான். பக்கத்தில் கல்லூரி 'ஹெட்கிளார்க்' பதறி நடுங்கிக் கொண்டு நின்றார். அவர் முகம் பேயறைபட்டது போல் இருந்தது.

"சார்! இன்றைக்கு மாலையில் தாம் சென்னைக்குப் புறப்படவேண்டும் என்பதற்காகப் பிரின்ஸிபல் கல்லூரியில் சில முக்கியமான கடிதங்களை டைப் செய்வதற்காகவும் வேறு காரியங்களுக்காகவும் இன்று அதிகாலையிலேயே என்னை வரச் சொல்லியிருந்தார். அவரும் வந்திருந்தார். இருவரும் பிரின்ஸிபல் ரூமில் உட்கார்ந்து இன்று காலை செய்தித்தாள்களில் வெளியாகியிருக்கும் பி.எஸ்ஸி. ரிசல்டைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். திடுதிப்பென்று இந்தப் பையன் கத்தியும் கையுமாகப் பிரின்ஸிபல் அறைக் கதவைத் தள்ளிக் கொண்டு பாய்ந்து ஓடி வந்தான். இவன் பரீட்சையில் தேறவில்லையாம். அதற்குப் பிரின்ஸிபல் தான் காரணம் என்று இவனாக நினைத்துக் கொண்டு..."

"கதை சொல்லாதீர்... மேலே என்ன நடந்தது?..." - பூபதியின் குரல் ஹெட்கிளார்க்கிடம் இதைக் கேட்கும் போது இடிமுழக்கமாயிருந்தது.

கத்தியோடு வந்து மிரட்டிய பையனுக்காக நடுங்கிய நடுக்கத்தைத் தவிர பூபதி அவர்களின் அதிகார மிடுக்குடன் கூடிய கம்பீரமான சிங்கநாதக் குரலுக்காகவும் வேறு நடுங்கினார் ஹெட்கிளார்க்.

"நானும் என்னால் ஆன மட்டும்... குறுக்கே பாய்ந்து தடுத்துப் பார்த்தேன் சார்... இந்தப் படுபாவி, பிரின்ஸிபல் மேலே பாய்ந்து விட்டான். வலது தோளிலே ஒரு விரற்கட்டை ஆழத்துக்குக் கத்திகுத்து அவருக்கு. ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்து அவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பியாச்சு... எல்லாம் போதாத வேளை... கூர்க்காக்கள் ஓடிவந்து பிடித்திருக்காவிட்டால்... இந்தப் பையன் என்னையும் என்ன செய்திருப்பானோ...?"

உணர்வு வசப்பட்டுப் பேசும் போதே பயத்தினால் ஹெட்கிளார்க் வாய் குழறினார். அப்போது அப்பாவின் முகம் சிவந்து கண்கள் ஒளி மின்னுவதைப் பார்த்துப் பாரதிக்கே பயமாக இருந்தது. அவளோடு மேலே வராந்தா மேடையின் மீது நின்று எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தவர் ஒவ்வொரு படியாக இறங்கி, அழுத்திக் கால்களை ஊன்றிக் கொண்டிருந்த அந்தப் பையனுக்கு முன் மிக அருகே போய் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு நிமிர்ந்து நின்றார். அந்த நிலையில் அப்பாவைப் பார்ப்பதற்கே பயமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது பாரதிக்கு. 'நீங்கள் இருவரும் இந்தப் பையனைப் பிடித்திருக்க வேண்டாம்! விட்டுவிடுங்கள்...' என்ற பாவனையில் கூர்க்காக்களிருவருக்கும் ஜாடை காட்டினார் பூபதி. அவர்கள் அப்படிச் செய்யத் தயங்கினார்கள். அவனை விட்டு விட்டால் அவன் பூபதி அவர்கள் மேலோ ஹெட்கிளார்க் மேலோ கத்தியை ஓங்கிக் கொண்டு பாயக்கூடும் என்ற சந்தேகம் அவர்களுக்கு இருந்தது. ஹெட்கிளார்க்கும் அப்படியே பயந்தார். அந்தப் பையன் வெறியோடு நின்ற நிலையைப் பார்த்துப் பாரதியும் பயந்தாள். 'ஐயோ! அப்பா இப்படிப் பயப்படாமல் இந்தக் கொலைபாதகனுக்கு அருகில் போய் நிற்கிறாரே?' என்று உள்ளூர நடுங்கிக் கொண்டே தான் பாரதி நின்றாள். பூபதியோ ஒருவிதமான சலனமும் இல்லாமல் மிகவும் திடமாக அந்தப் பையனுக்கு அருகே நிமிர்ந்து நின்று கொண்டு கேள்விகளைத் தொடுத்தார்.

"உன் பெயர்...?"

"ராஜாராமன்..."

"நீ எழுதிய பரீட்சை...?"

"பி.எஸ்ஸி..."

"நீ அதில் தேறாமல் போனதற்குக் காரணம்?"

"பிரின்ஸிபல். காலேஜ் நாளிலிருந்து நான் வீழ்ச்சியடைய வேண்டுமென்று சதி செய்தார் அவர்..."

இதைச் செவியுற்றதும் கேள்வி கேட்பதை நிறுத்தி விட்டு அந்தப் பையனின் முகத்தையே துளைத்தெடுக்கும் பார்வையால் இமையாது பார்த்துக் கொண்டே நின்றார் பூபதி. அமைதியாகவும் உள்ளடங்கிய குரலுடனும் அந்த விநாடி வரை தமிழில் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த பூபதியின் குரல் திடீரென்று சிறிது நேர அமைதிக்குப் பின் கோப வெறியோடு ஆங்கிலத்தில் சிங்க முழக்கம் செய்யலாயிற்று. "ஆர் யூ நாட் அஷேம்டு டு பி ஏ ஸ்டூடெண்ட்?" (நீ ஒரு மாணவனாக இருப்பதற்கு வெட்கமாக இல்லை உனக்கு?) என்று கேட்டுவிட்டு அந்தப் பையனே வெலவெலத்துப் போய் அவன் கையிலிருந்த கத்தி நழுவி விழுமாறு ஓங்கி ஓர் அறைவிட்டார். பையன் கல்லூரி முதல்வரிடம் முரண்பட்டுத் திமிறினாற் போல் பூபதியை எதிர்த்துக் கொண்டு பாயவில்லை. அப்படியே மருண்டு நின்று விட்டான். அவருடைய கம்பீரமான தோற்றமும் எதிராளியைக் கட்டுப்படுத்தி நிறுத்தும் வார்த்தைகளும் அவனை நலிந்து நிற்கச் செய்திருந்தன.

"உன்னைப் போன்றவர்கள் பேனாவும் புத்தகமும் எடுத்துக் கொண்டு படிப்பதற்கு வரக்கூடாது அப்பனே! அரிவாளை எடுத்துக் கொண்டு கசாப்புக் கடைக்கு ஆடு வெட்டப் போயிருக்க வேண்டும்! இதோ கீழே விழுந்து கிடக்கிறதே, இந்தக் கத்தியைக் கையில் மறுபடியும் எடுத்துக் கொள். உன் போன்றவர்கள் படிப்பதற்குப் பணம் செலவழித்துக் காலேஜ் கட்டி வைத்திருக்கிற என்னைக் குத்து. அப்புறம் உன் போன்றவர்கள் படிப்பதற்குப் புத்தகமெழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்களே, அந்த மேதைகளை எல்லாம் அவர்கள் உயிரோடு இருந்தால் கொலை செய்துவிட்டு வா... கடைசியாக உன்னை நீயே குத்திக் கொள்ளலாம்..." என்று கூறிக்கொண்டே இரண்டாம் முறையாக அவனை அறைவதற்காக உணர்ச்சி வெறியோடு கையை ஓங்கினவர், அவன் தன் கண்களில் நீர் நெகிழ்ந்து அழத் தொடங்கியிருப்பதைப் பார்த்துக் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு பேச்சை நிறுத்தினார். அவன் முகத்தைப் பார்த்தார். 'கோ' வென்று பெரிதாகக் கதறி அழத் தொடங்கிய அந்தப் பையன் நெடுஞ்சாண்கிடையாக அவர் கால்களில் விழுந்துவிட்டான். எப்படி வெறி கொண்டு நின்றவனை அப்பா எப்படி அழச் செய்துவிட்டார் என்பதைக் கண்ணெதிரே பார்த்த பாரதிக்கு வியப்புத் தாங்கவில்லை. கம்பெனிகளையும் தொழில் நிறுவனங்களையும் நிர்வாகம் பண்ணுகிற சாமர்த்தியத்தை விட மனித உணர்ச்சிகளை ஏற்ற இடத்தில் ஏற்ற விதமாக நிர்வாகம் பண்ணுகிற சாமர்த்தியம் அப்பாவிடம் அதிகமாக இருப்பதைக் கண்டு பெருமையாக இருந்தது அவளுக்கு. கேம்பிரிட்ஜ் மாணவராயிருந்து வெளிநாட்டுப் பல்கலைக்கழகமொன்றில் டாக்டர் ஆப் லிட்ரேசர் பட்டமும் பெற்று ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேல், கல்லூரி முதல்வராயிருக்கிற ஒருவரால் சமாளிக்க முடியாத முரடனை அப்பா நான்கே நிமிடப் பேச்சில் அழச் செய்து காலில் விழ வைத்த சாமர்த்தியத்தைக் கண்டு அவள் பிரமித்தாள். கல்லூரி முதல்வர் இந்த முரடனிடம் கத்திக் குத்துப்பட்டு ஆஸ்பத்திரியில் விழுந்து கிடக்கிறார். அப்பாவோ உணர்ச்சிமிக்க வார்த்தைகளாலேயே இந்த முரடனின் இதயத்தை மிக ஆழமான பகுதியில் குத்தி வீழ்த்தி விட்டார். பிரின்ஸிபலாயிருந்து தலைகனத்துத் திரிந்து அசட்டுக் கௌரவமும், பதவித் திமிரும் கொண்டாடிப் பயனில்லை. மனித உணர்ச்சிகளை எதிர்கொண்டு நிர்வாகம் செய்து ஆளவும் அடக்கவும் தெரிய வேண்டும். அது தெரிந்தவன் தான் தலை சிறந்த பேராசிரியன். அப்பாவுக்கு அது தெரிந்திருந்ததற்காக அவள் அவருடைய மகளென்ற முறையில் பெருமைப்பட்டாள்.

"போலீசில் 'கம்ப்ளெயிண்ட்' செய்ய வேண்டாமா?" என்று ஏதோ ஆரம்பித்தார் ஹெட்கிளார்க்.

"வேண்டியதில்லை! நல்ல பெயர் பெற்றிருக்கும் என் கல்லூரியைப் பற்றிப் பத்திரிகைகளில் தாறுமாறான செய்தி வரக்கூடாது. நான் பிரின்ஸிபலை உடனே பார்க்கப் போக வேண்டும். ஆஸ்பத்திரியைத் தேடிக் கொண்டு யாராவது போலீஸ்காரர்கள் போக நேர்ந்து, இவர் அவர்களிடம் ஏதாவது ஸ்டேட்மெண்ட் கொடுக்காமல் தடுக்க வேண்டும். இதெல்லாம் சகஜம். சிறுபிள்ளைகளை அதிகம் மன்னித்துத்தான் திருத்த முடியும்" என்று ஹெட்கிளார்க்கிடம் சொல்லியபடியே மகள் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பி "பாரதி! காரை எடு அம்மா! ஆஸ்பத்திரி வரை போய்ப் பிரின்ஸிபலைப் பார்த்துவிட்டு வருவோம். இன்றைக்கு எஸ்டேட்டுக்குப் போக வேண்டாம். இப்படி எல்லாம் ஆகிவிட்டதே? என்ன செய்வது! ஒரு வாரம் கழித்துப் போகலாம்..." என்றார் பூபதி. பாரதி காரை எடுப்பதற்காக நடந்தாள். அப்போது அவளுக்கென்னவோ தோன்றியது. சத்தியமூர்த்தியைப் போல் அழகிய முகமும், அழகிய மனமும் அழகிய பேச்சும் உள்ள ஓர் ஆசிரியர் தங்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்துவிட்டால் இப்படிப் பட்ட முரட்டு இளைஞர்களைக் கூடச் சதா தன்னைச் சுற்றிக் கை கூப்பிக் கொண்டு திரிகிற பைத்தியங்களாகச் செய்துவிட அவரால் முடியும் என்று நினைத்தாள் பாரதி. அப்படிப்பட்ட அழகும் தகுதியும் உள்ளவரைப் பற்றி வெறும் இளைஞர் என்று அப்பாவிடம் குறை சொல்லித் தள்ளிவிடப் பார்த்த இந்தப் பிரின்ஸிபலுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்' என்று சிறு குழந்தை கோபப்படுவது போல் கோபித்துக் கொண்டே காரை எடுத்தாள் பாரதி.

அத்தியாயம் - 9

தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் அப்புறம் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய் விடாதா?

அங்கையற்கண் அம்மை தன்னோடு ஆலவாய் நகரமாகிய மதுரை மாநகரத்தில் கோயில் கொண்டருளியிருக்கும் மதிப்பிற்குரிய சொக்கநாதப் பெருமாள் பல தலைமுறைகளுக்கும் முன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் புரிந்து புகழ்பெற்றார் என்பார்கள். இன்றைய மதுரையில் 'மூன்லைட் அட்வர்டைஸிங்' ஏஜன்ஸியோடும் அதன் விளம்பரப் பிரதாபங்களோடும் கோவில் கொண்டருளியிருக்கும் திருவாளர் கண்ணாயிரம் அவர்களோ தம்முடைய ஒவ்வொரு நாளிலும் எண்ணத் தொலையாத பல திருவிளையாடல்களைப் புரிந்து புகழ் பெற்றுக் கொண்டிருந்தார். கண்ணாயிரம் அவர்களுடைய ஒவ்வொரு விநாடியும் ஒரு திருவிளையாடலே. சொக்கநாதப் பெருமானுக்கு இந்த நூற்றாண்டில் அவதாரம் செய்து திருவிளையாடல் புரியும் உத்தேசம் ஏதாவது இருக்குமானால் அவர் அநாவசியமாக நம்முடைய கண்ணாயிரம் அவர்களிடம் தோற்றுப் போய்விட நேரிடும். தெரிந்துதான் முன்பே பெற்றோர்கள் அவருக்கு இப்படிப் பெயர் வைத்தார்களோ என்னவோ, கண்ணாயிரத்துக்கு ஆயிரம் கண்கள், ஆயிரம் மனம், ஆயிரம் திட்டங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத வியாபார மனம் அவருடையது. இந்த விநாடியில் பார்த்த பார்வை அடுத்த விநாடி வரை அப்படியே இருக்காது. இந்த விநாடியில் நினைத்த மனம் அடுத்த விநாடி வரை அப்படியே நினைக்காது. அவருடைய ஒரு திட்டத்தில் நூறு திட்டங்கள் அடங்கியிருக்கும். "கண்ணாயிரம் நீங்கள் பெரிய காரியவாதி" என்றோ, "நீர் பெரிய காரியவாதி ஐயா" - என்றோ நண்பர்கள் தங்கள் தங்கள் பழக்கத்தின் தரத்துக்கேற்றபடி எப்போதாவது கண்ணாயிரத்தைக் குத்திக் காட்டினால் அதற்குக் கண்ணாயிரம் சொல்கிற மறுமொழி மிகவும் பிரமாதமாயிருக்கும்.

"நீங்கள் என்னைக் காரியவாதி என்று ஒப்புக் கொள்வதற்காக நான் பெருமைப்படுகிறேன். நாம் நம்முடைய அவசியத்துக்காகத்தான் வாழ வேண்டுமேயொழிய அநாவசியமாக ஒரு விநாடி கூட வாழக்கூடாது. நமக்கு நாமும் நம்முடைய தேவைகளும் தான் அவசியம். அதற்கு அப்பால் மற்றவையெல்லாம் அநாவசியம்" என்று அழுத்தம் திருத்தமாகப் பதில் சொல்வார் கண்ணாயிரம். "தன்னையும் தன்னுடைய தேவைகளையும் தவிர மற்றவர்களும், மற்றவர்களுடைய தேவைகளையும் உலகத்துக்கு அநாவசியம் என்று ஒவ்வொருவருமே தங்களைத் தனித் தனியாகப் பிரித்துக் கொண்டு திருப்தியடைந்து விட்டால் வாழ்க்கையே காட்டுமிராண்டித்தனமாகப் போய்விடாதா?" என்று யாராவது விவரம் தெரிந்தவர்களோ, விவகாரம் தெரிந்தவர்களோ எதிர்த்துக் கேட்டுவிட்டால் கண்ணாயிரத்துக்குக் கோபம் வந்துவிடும். வாணக் குழாய் போன்ற பெரிய மூக்குக்குக் கீழே பக்கத்துக்கு ஒன்றாக இரண்டு வண்டுகள் ஒட்டிக் கொண்டிருப்பது போல் ஒட்டிக் கொண்டு தெரியும் இட்லர் மீசையும் அந்த மீசையோடு சேர்ந்து கோபமுமாகத் தெரியும் போது கண்ணாயிரம் கண்ணாயிரம்தான். தான் எதையும் எதற்காகவும் கண்டிக்கலாம், கோபிக்கலாம்; ஆனால் தன்னை எதற்காகவும், யாரும் கண்டிக்கக் கூடாது, கோபிக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறவர் கண்ணாயிரம். ஆத்திசூடி இளம்பிறை அணிந்து மோனத்திருக்கும் முழு வெண்மேனியோடு சொக்கநாதப் பெருமான் எதிரே வந்து நின்றால் கூட, "உம்முடைய திருவிளையாடல் பிரதாபங்களைப் பற்றி ஆறுக்கு - நாலு - இரண்டு பத்தி மூன்று கலர் விளம்பரம் ஒன்று கொடுக்கிறீரா?" என்று கேட்பதற்குக் கண்ணாயிரம் தயார். ஒவ்வொரு விநாடியையும் பணமாக்கி விடவேண்டும் என்று தவித்துக் கொண்டு துறுதுறுவெனத் திரிபவர் கண்ணாயிரம். மூன்லைட் அட்வர்ட்டைஸிங் ஏஜன்ஸி காரியாலயத்தின் நிலைப்படிக்கு மேலே, "உங்கள் வரவு நல்வரவாகுக" என்று எழுதியிருக்கும் வரவேற்பு வாசகத்தில் வரவு என்ற பதம் உபயோகப்படுத்தப் பட்டிருக்கும் இரண்டு இடங்களிலும் அதற்கு 'வருமானம்' என்று தான் பொருள்படும். 'மூன்லைட் அட்வர்டைஸிங் ஏஜன்ஸி' காரியாலயத்தில் நல்வரவு அதிகமாயிருக்கலாம். ஆனால் செலவு என்னவோ வெறும் வார்த்தைகள் தான். கண்ணாயிரம் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் செய்கிற அதிகபட்ச மரியாதை ஒரு கப் காபி அல்லது வெற்றிலை + சீவல் + சுண்ணாம்பு (தேவையானால்) + பன்னீர்ப் புகையிலை. மிகவும் அதிகபட்சமாகச் செய்கிற மரியாதை போர்ன்விடா அல்லது ஓவல் என்று இப்படி ஏதாவது இருக்கும். வருகிறவர்களுக்குச் செய்கிற அதிக பட்ச அவமரியாதை என்னவென்று வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். மரியாதை, அவமரியாதைகளுக்கு அங்கே தனித்தனி இலட்சணங்கள் கிடையாது. அங்கே செய்யப்படுகிற மரியாதைகளிலும் அவமரியாதை இருக்கலாம். அதேபோல் அவமரியாதைகளிலும் மரியாதை இருக்கலாம். வருகிறவன் புத்திசாலியாயிருந்தால் அவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். புத்திசாலிகள் வகையாக வந்து சிக்கிக் கொண்டாலோ கண்ணாயிரம் அவர்களைச் சீக்கிரமே முட்டாள்களாக மாற்றிவிடுவதில் சமர்த்தர். கண்ணாயிரத்தினிடம் முட்டாள்களைப் புத்திசாலிகளாக மாற்றும் உலகத்துக்குத் தேவையான திறமை இல்லாவிட்டாலும் புத்திசாலிகளை முட்டாள்களாக மாற்றும் உலகத்துக்குத் தேவையில்லாத திறமை ஏராளமாக இருந்து தொலைத்தது.

கண்ணாயிரத்தின் வாழ்க்கையில் வேகம் அதிகம். அவரிடம் அநியாயமான சுறுசுறுப்பு இருந்தது. மதுரைச் சீமையில் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளைச் சேர்ந்த ஜமீந்தாரோ, மிட்டாதாரோ, மிராசுதாரோ, சமஸ்தானாதிபதியோ மதுரைக்கு வருகிறார் என்றால் அவர் தங்குவதற்கு இடம் முதல், அவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் வரை எல்லாம் கண்ணாயிரத்தின் கையில், கண்ணாயிரத்தின் பொறூப்பில் தயாராயிருக்கும். இப்படிப் பல பிரமுகர்களைக் கட்டிக் காக்கிற ஒரு பெரும் பிரமுகராயிருந்தார் கண்ணாயிரம். பிரமுகர்களை வரவேற்பதற்கும், வழியனுப்புவதற்குமாக முக்கால்வாசி நேரம் ரயில்வே பிளாட்பாரத்திலேயே நாட்களைக் கழிக்கிறவர் அவர். ஒரு காரியம் முடிகிற இடத்தில் இன்னொரு காரியம் ஆரம்பமாகிறாற் போல அவ்வளவு விரைந்த சுறுசுறுப்பான வாழ்க்கையை உடையவர் அவர். முடிந்த காரியத்துக்குப் பக்கத்தில், முடிய வேண்டிய காரியம் வந்து காத்துக் கொண்டிருப்பது அவருடைய வழக்கம். அன்று அதிகாலையில் யாரையோ இரயிலேற்றி விட வந்தவர் அதே இரயிலில் மோகினியும் அவள் தாயும் அவர்களோடு அவர் முற்றிலும் எதிர்பாராத ஆளாகச் சத்தியமூர்த்தியும் வந்து இறங்கக் கண்டார். கூந்தல் தைல விளம்பரப் படத்துக்காக மோகினியின் தாயிடம் முன்பணம் கொடுத்துத் தேதி குறித்திருப்பது ஞாபகம் வந்தது அவருக்கு. உடனே 'இன்று காலையிலேயே அந்தப் புகைப்படத்தை எடுத்து முடித்து விட்டால் என்ன?' என்று கண்ணாயிரத்தின் வியாபார மூளை சுறுசுறுப்பாக வேலை செய்தது. 'இந்தப் பையன் சத்தியமூர்த்தி எப்படி மோகினியோடும் அவள் தாயோடும் இரயிலில் சேர்ந்து வர நேரிட்டது?' என்ற சந்தேகம் அவருடைய மனத்தில் வந்து அலைமோதவே சத்தியமூர்த்தியிடமே நேரில் அதைக் கேட்டுவிட்டு அவன் ஆத்திரப்பட நேர்ந்ததால், இரயில் பிளாட்பாரத்தில் அவனிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.

அப்புறம் அவர் இரயிலிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த மோகினியை அவள் தாயோடு சந்தித்ததும், அவளிடம் கூந்தல் தைல விளம்பரத்தை ஞாபகப்படுத்தியதும், தன் காரிலேயே அவர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டதும் மிகவும் வேகமாக நிகழ்ந்தேறிய நிகழ்ச்சிகள். புற்ப்படுவதற்கு முன், "இரயிலில் எங்களோடு இதே வண்டியில் வந்தவர் பேனாவைத் தவறவிட்டுப் போயிருக்கிறார். அதை அவரிடம் கொடுத்துவிட வேண்டும். அவர் பிளாட்பாரத்திலேயே எங்காவது இருக்கிறாரா என்று பார்க்கிறேன்" - என்று மோகினி பிளாட்பாரத்தின் மறுகோடிக்குப் போக முந்திய போது, "யார்? அந்தப் பயல் சத்தியமூர்த்தியைக் கேட்கிறாயா? அவனை நானும் வழியில் எதிரே பார்த்தேன். அவன் இதற்குள் போயிருப்பானே? பையன் அவசரக் குடுக்கை. உங்கள் வண்டியில் அவனும் கூட வந்ததை நானே பார்த்தேன். எங்கள் தெருவில் இருக்கிற பையன் தான். உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இந்தப் பேனாவை நானே அவனிடம் கொடுத்து விடுகிறேன் மோகினி. நீ எதற்கு வீணாகச் சிரமப்பட வேண்டும்?" என்று அவளைத் தடுத்தார் கண்ணாயிரம். தன்னிடம் அவர் பதில் சொல்லிய விதமே மோகினிக்குப் பிடிக்கவில்லை. ஆள் இல்லாதபோது மற்றவர்களைப் பற்றிப் பயல், பரட்டை என்றெல்லாம் பேசுவது கண்ணாயிரத்துக்கு வழக்கம். அப்படிப் பேசிப் பேசியே பெரிய மனிதரானவர் அவர்.

"நானே நேரில் சந்தித்து இந்தப் பேனாவை அவரிடம் கொடுக்க வேண்டும்" என்று மோகினி உறுதியாகக் கூறியபோது, அவளுடைய தாய் அவளை உறுத்துப் பார்த்தாள்.

"பைத்தியம் பிடித்துப் போய் அலையாதே..." என்று கடுமையான குரலில் மிரட்டினாள். காரியவாதியான கண்ணாயிரம் இந்த நிலையில் தமக்குச் சாதகமாக எல்லாம் முடிவதற்கு அப்போது தாம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி நடந்து கொண்டார். தாய்க்கும் மகளுக்கும் சண்டை வந்து ஒருவருக்கொருவர் முகத்தைத் தூக்கிக் கொண்டு நின்றால், "மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்து'க்காக எடுக்க வேண்டிய புகைப்படம் பாழாகி விடுமோ என்ற பயத்தில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு சமாளித்தார் அவர். கௌரவத்தை விடக் காரியம் முக்கியமாயிற்றே அவருக்கு.

"புகைப்படம் எடுக்கிற இடத்துக்குப் போவதற்கு முன் அந்தப் பையனுடைய வீட்டு வாயிலில் காரை நிறுத்தி அவனை வெளியே கூப்பிடுகிறேன். நீயே பேனாவை அவனிடம் கொடுத்துவிடலாம். பாவம்! உன் ஆசையைத் தான் நாங்கள் கொடுப்பானேன்?" என்று மோகினியைப் பார்த்து அசட்டுச் சிரிப்பைப் சிரித்தார் கண்ணாயிரம். நாகரிகமில்லாத அந்தச் சிரிப்பை எரித்து விடுவது போன்ற பார்வையால் எதிர் கொண்டாள் மோகினி. கண்ணாயிரத்தின் காரில் அவர் உடன் இருந்து ஓட்டிக் கொண்டு வர அமர்ந்து செல்வதை நினைத்த போது ஏதோ நரகத்தில் உட்கார்ந்திருப்பதைப் போல் அருவருப்பாகவும் வேதனையாகவும் உணர்ந்தாள் மோகினி. 'அம்மாவுக்கு இப்படியெல்லாம் இது நரகமாகத் தோன்றாது'. ஏனென்றால் இந்த விதமான நரகங்களில் உழன்று உழன்று பணம் சேர்த்துக் கொண்டு வாழ ஆசைப்படுவதுதான் அம்மாவின் வாழ்க்கை இலட்சியம். எனக்காகவே இந்த மாதிரி நரகங்களைப் படைத்துக் கொடுக்கத் தயாராக இருக்கிறாளே அம்மா? நான் கண்ணாயிரத்திடம் சிரிக்கச் சிரிக்கப் பேசினால் அம்மாவுக்குத் திருப்தியாயிருக்கும். கண்ணாயிரம் அறிமுகப் படுத்துகிற மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு என் கைகளால் சிற்றுண்டி கொடுத்தால் 'பெண் பிழைக்கத் தெரிந்தவளாக இருக்கிறாளே' என்று அம்மா மகிழ்ச்சி அடைவாள்.

'பணமும் பகட்டும் உள்ளவர்களுக்கு முன் எல்லாம் நீ தாராளமாகச் சிரித்து முகம் மலரப் பேச வேண்டும்டீ பெண்ணே! உன்னுடைய சிரிப்புக்கு முன்னால் எந்தக் கொம்பனாக இருந்தாலும் மயங்கியே ஆகவேண்டும்' என்று பச்சையாகவே வாய் கூசாமல் என்னிடம் சொல்கிற அம்மா முன் நான் நியாயம் பேசி என்ன பயன்? நானாக 'இப்படித்தான் வாழ வேண்டும்' என்று எந்த விதமாகவும் வாழ்க்கையைப் பற்றி நினைக்கக் கூடாதாம். நான் எப்படி வாழவேண்டும் என்று அம்மா நினைக்கிறாளோ அப்படித்தான் நான் வாழ வேண்டுமாம். 'இன்னொருவர் நினைக்கிறபடி - சொல்கிறபடி - கட்டளையிடுகிறபடி அடிமைகள் தான் வாழ்வதாகச் சொல்வார்கள்.' அம்மா என்னைப் பெண்ணாகப் பெறவில்லை. பெண்ணாக வளர்க்கவும் இல்லை. அடிமையாகப் பெற்றாள். அடிமையாகத் தான் வளர்க்கவும் ஆசைப்படுகிறாள்.

தனக்கு மட்டுமல்ல; தனக்கும், தான் கையைச் சுட்டிக் காண்பிக்கிறவர்களுக்கும், அவர்களுடைய கீழ்த்தரமான விருப்பங்களுக்கும், எல்லாமாகச் சேர்ந்து ஏதோ ஒரு விதத்தில் ஏதோ ஒரு காரணத்துக்காக நான் அடிமையாக இருக்க வேண்டுமென்று அம்மா ஆசைப்படுகிறாள். கைகளிலும் கால்களிலும் கனமான இரும்பு விலங்குகளைப் பூட்டிக் கொண்டு முரட்டி அடிமையாக இருப்பதையும் விடக் கேவலமானது இப்படிப் பூவும், பொன்னும், பட்டும், பணமும், பகட்டுமாக அலங்கரித்துக் கொண்டு யார் யாருடைய விருப்பங்களுக்கோ, எப்படி எப்படியோ மிகவும் மென்மையான அடிமையாக இருப்பதுதான். இதை எப்படி நான் என் அம்மாவுக்குப் புரியவைப்பேன்? அவளுக்குப் புரிய வைப்பதை விடப் பட்டப்பகலில் எல்லோரும் காணும்படி மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்திலே எறிக் கீழே குதித்து என் உயிரை மாய்த்துக் கொள்வது என்னால் சுலபமாக முடிகிற காரியம். என்னுடைய இந்த அழகே எனக்குப் பெரிய பகை. நான் ஏன் இப்படி அழகாகப் பிறந்து தொலைத்தேன்? பார்த்தவர்கள் அருவருப்பு அடையும் படியான அவலட்சணமாகப் பிறந்திருந்தோமானால் எவ்வளவு நன்றாயிருந்திருக்கும்? அப்போது நான் யார் கண்ணிலும் படமாட்டேன். என்னைப் பார்க்கிறவர்கள் மனமும் கலங்கித் தவிக்காது. 'பார்க்கிற கண்ணில் இலட்சணமாகத் தெரிய வேணும்டீ, பெண்ணே' என்று கூச்சமில்லாமல் உபதேசம் செய்கிறாள் அம்மா. அழகை முதலாக வைத்தும் ஒரு வியாபாரமா? சீ! சீ! என்ன வாழ்க்கையோ? என்ன பிழைப்போ? போன மார்கழியிலே டான்ஸுக்காக மனப்பாடம் பண்ணின ஆண்டாள் பாசுரத்திலே, 'மானிடவர்க்கென்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று ஒரு வரி வந்ததே, - அந்த வரியை நெட்டுருப் போடுகிற ஒவ்வொரு தடவையும் எனக்கு அழுகையே வந்திருக்கு. அம்மாவோ 'மானிடருக்காகவே பேச்சுப்பட்டு, ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொருவருக்குப் பேச்சுப்பட்டு வாழவேண்டும்' என்கிறாள்.

இப்படி மனத்தை அரித்தெடுக்கும் பல நினைவுகளோடு கண்ணாயிரத்தின் காரில் போய்க் கொண்டிருந்தாள் மோகினி.

போன மார்கழியில் இந்த ஆண்டாள் பாசுரத்துக்குத் தானே ஆண்டாள் வேடமிட்டுக் கொண்டு பக்தி சிரத்தையோடு அபிநயம் பிடித்த ஞாபகம் வந்தது அவளுக்கு. அதற்கும் முந்திய மற்றொரு ஞாபகமாக ஸ்ரீவில்லிப்புத்தூர்க் கோவில் திருவாடிப் பூரத் திருவிழாவில் தேர் அன்றைக்கு இரவு இதே பாசுரத்தைப் பாடி ஆண்டாளின் கால்கள் மிதித்து நடந்த புண்ணிய பூமியிலே ஆண்டாளுக்கு முன்பாகவே ஆண்டாள் வேடமிட்டு ஆடிய நினைவும் அவளுக்கு இப்போது உண்டாயிற்று. 'மனிதனுக்குப் பயன்படுவதற்காக என் வாழ்வைப் பேரம் பேசினால் நான் வாழவே மாட்டேன்' என்று பொருள்படும் அந்த அழகிய பாசுரைத்தை இரைந்து பாடிக் கொண்டே உயிரை விட்டுவிட வேண்டும் போல் மோகினி தன் வாழ்க்கையை ஒரு சுமையாகவும், கனமாகவும் தனக்குத்தானே பலமுறை உணர்ந்திருக்கிறாள். 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்ற பாசுரத்துக்கு அபிநயம் பிடித்துக் கொண்டே மானிடர்களைக் கவர்ந்து காசு சேர்க்க வேண்டும் என்ற அம்மாவின் ஆசைக்கும், தன் அந்தரங்கத்துக்கும் எட்டு ஏணி வைத்தாலும் எட்டாது என்று அவள் உணர்ந்துதான் இருந்தாள். வாழ்வதற்கு ஏதோ ஓர் உயர்ந்த நோக்கமும் அர்த்தமும் இருக்க வேண்டுமென்று அவள் எண்ணி எண்ணிப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். வாழ்வதற்கு ஒரே நோக்கமும் ஒரே அர்த்தமும் பொருள் சேர்ப்பதுதான் என்று அவளுடைய பேராசை பிடித்த அம்மா அவளிடம் வற்புறுத்துகிறாள். 'என்னுடைய இதயத்தின் இருட்டு - என்றைக்கு விடியப் போகிறதோ' என்று அவள் ஈரம் கசிந்திருந்த தன் கண்களைத் துடைத்துக் கொண்டு பெருமூச்சு விடவும், "இதுதான் அந்தப் பையன் சத்தியமூர்த்தியின் வீடு! இறங்கி வா... அவனைக் கூப்பிட்டுப் பேனாவைக் கொடுத்துவிட்டுப் போகலாம்" என்று கண்ணாயிரம் காரை நிறுத்திக் கீழே இறங்கி மோகினி இறங்குவதற்காகப் பின்புறம் வந்து கதவைத் திறந்து விடவும் சரியாக இருந்தது. பயல், அவன், இவன் என்று ஆளில்லாத போது பேசிவிட்டாலும் சத்தியமூர்த்தியிடம் கண்ணாயிரத்துக்கு ஏதோ ஒரு பயம் இருக்கிறது என்பதை "மிஸ்டர் சத்தியமூர்த்தி இருக்கிறாரா?" என்று அவர் மரியாதையாக விசாரித்ததிலிருந்து தெரிந்து கொண்டாள் மோகினி. சத்தியமூர்த்தியிடம் பேனாவைக் கொடுத்து விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின், "என்னை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி விடைபெற்ற போது சத்திய வேட்கை நிறைந்த அந்த அழகிய கண்களின் பார்வையிலிருந்து விடுபட்டு பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் தான் அவளிடம் மீதமிருந்தது.

உலகத்தில் சாதரணமாக எல்லாருடைய கண்களும் தன்னைப் பார்க்கிறாற் போல் பார்க்காமல் சத்தியமூர்த்தியின் கண்கள் தன்னைப் பார்க்கும் போது அவற்றில் ஓர் ஆழ்ந்த அநுதாபம் இருப்பதை அவள் உணர்ந்தாள். இப்படி ஓர் அநுதாபத்துக்காகத்தான் அவள் பிறந்ததிலிருந்து தவித்துக் கொண்டிருந்தாள். பேனாவைக் கொடுத்த பின் சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலிலிருந்து கார் புறப்பட்ட போது, "பையன் தமிழ் எம்.ஏ. தேறிவிட்டு வீட்டோட வறட்டு வேதாந்தம் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறான். திமிருக்கு ஒன்றும் குறைவில்லை. இந்தத் திமிர் பிடித்தவனுக்கு வேலை பார்த்துக் கொடுக்கச் சொல்லி இவனுடைய தந்தை என்னிடம் சிபாரிசுக்கு வேறு வருகிறார்" என்று அலட்சியமாகச் சொல்லத் தொடங்கினார் கண்ணாயிரம். மோகினி முகத்தைச் சுளித்தாள். அவளுடைய அருமை அம்மாவோ கண்ணாயிரத்துக்குத் தலையாட்டிக் கொண்டு அதை உற்சாகமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். கண்ணாயிரத்திடமிருந்து அற்பத்தனமான புறம் பேசும் குணத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மோகினி மனம் நொந்தாள்.

அதே வீதியில் நாலைந்து வீடு தள்ளிச் சென்ற பின் கார் மறுபடியும் நின்றது. அதுதான் கண்ணாயிரத்தின் வீடு என்று அம்மா காதருகே முணுமுணுத்தாள். மோகினி பதிலே சொல்லவில்லை. கேட்டுக் கொள்ளாதது போல் இருந்து விட்டாள்.

"முத்தழகு அம்மா! நம் வீட்டுக் காப்பி இந்த ஊரிலேயே தரமான காப்பி என்று பெயர் பெற்றதாகும். குடித்த பின் மோகினியே 'சர்டிபிகேட்' கொடுக்கப் போகிறாள், பாருங்கள்! இறங்கி வந்து பல் விளக்கிக் காப்பி குடியுங்கள். அதற்குள் நான் ஸ்டூடியோவுக்குப் ஃபோன் செய்து நாம் படம் பிடிக்க வரப்போவதை அவர்களுக்குச் சொல்லி விடுகிறேன்" என்று கண்ணாயிரம் உற்சாகமாக அரட்டைச் சொற்களில் அவர்களை அழைத்த போது, "ஆகா! அதற்கென்ன? உங்கள் வீட்டுக் காப்பியைப் பற்றிச் சொல்லியா தெரிய வேணும்! மனுஷாளைப் போலத் தானே பண்டமும் இருக்கும்!" என்று ஒத்துப் பாடிப் புகழ்ந்து கொண்டே காரிலிருந்து கண்ணாயிரத்தோடு சேர்ந்து இறங்கிவிட்டாள் அம்மா; கிழே இறங்கி நின்று கொண்டு அம்மா, மோகினியையும் இறங்கும்படி கையசைத்துக் கூப்பிட்டாள். மோகினி காரிலிருந்து இறங்கவே இல்லை. "நீ போய்விட்டு வா, அம்மா! எனக்குக் காப்பியும் வேண்டாம்; டீயும் வேண்டாம்; சீக்கிரமாகப் படத்தைப் பிடித்துக் கொள்ளச் சொல். காலா காலத்தில் வீட்டுக்குப் போய்க் குளித்துவிட்டுக் கோயிலுக்குப் போகணும்..." என்று கடுமையாகவும் கண்டிப்பாகவும் அம்மாவுக்குப் பதில் கூறினாள் மோகினி.

"இப்போ நீ இறங்கி வரப் போகிறாயா இல்லையா? என்னடீது மரியாதை தெரியாமே...!" என்று அம்மா மிரட்டினாள். பெண் அசைந்து கொடுக்கவே இல்லை. "பரவாயில்லை! சிரமப்படுத்த வேண்டாம். பாவம்! அவளுக்கு நம் வீட்டுக் காப்பி கொடுத்து வைக்கவில்லை போல் இருக்கிறது. மஞ்சள்பட்டி ஜமீந்தார் ரயில்லேருந்து இறங்கறப்பவே, "கண்ணாயிரம்! பிளாஸ்க்கிலே உங்க வீட்டுக் காப்பி கொண்டாந்திருக்கியா இல்லியா? அதை முதல்லே சொல்லு. நீ காப்பி கொண்டாரலையின்னா இப்படியே ஊருக்குத் திரும்பிடறேன். நாளைக்கு மறுபடி ரயிலேறி வந்து காப்பியோட உன்னை எதிர்பார்க்கிறேன்பாரு" என்று பேச்சுக்குப் பேச்சு 'முத்தழகம்மா' என்ற பேரைக் குழைவோடு சொல்லி விளித்து நாசூக்காகக் குழைந்தார் கண்ணாயிரம். இப்படி நாலுதரம் யாராவது பேரைச் சொல்லிப் போலியாகக் கூப்பிட்டால் கூட அம்மாவுக்கு உச்சி குளிர்ந்து போய்விடும் என்று மோகினிக்கு நன்றாகத் தெரியும். இப்போது கண்ணாயிரம் அம்மாவிடம் குழைந்த குழைவினால் அம்மா தன்னைக் கோபத்தோடு பார்த்துக் கொண்டிருப்பதையும் அவள் புரிந்து கொண்டாள்.

"சொன்னால் கேள்! எனக்குக் காப்பி வேண்டாம். நீ மட்டும் போய்விட்டு வாம்மா..." என்று இரண்டாம் தடவையாகவும் அழுத்திச் சொன்னாள் மோகினி. அவள் பிடித்தால் பிடித்த முரண்டுதான் என்று அம்மாவுக்குத் தெரியும்.

"நீ ஒரு நாளைக்கும் உருப்படவே போறதில்லை..." என்று வயிற்றெரிச்சலோடு மகளைப் பார்த்துக் கைகளைச் சேர்த்துச் சொடுக்கி முறித்துவிட்டுக் கண்ணாயிரத்தோடு படியேறி உள்ளே போனாள் அம்மா.

"காரியத்தைக் கெடுத்துவிடுவிங்க போல் இருக்கே. அது போக்குப்படியே விட்டுப் பிடியுங்க முத்தழகம்மா! முதலில் போட்டோவுக்கு உட்கார்ந்து காரியம் முடியட்டும். அது முக்கியம். அப்புறம் மத்ததைப் பார்த்துக்கலாம்" என்று அம்மாவை உள்ளே அழைத்துப் போகும் போது கண்ணாயிரம் சொல்லிக் கொண்டு சென்றதைக் காரில் உட்கார்ந்தபடியே மோகினியும் கேட்க முடிந்தது. 'என்ன நரக வாழ்க்கை இது? போட்டோ முடிந்து வீட்டுக்குப் போனதும் முதல் வேலையாக அம்மாவிடம் கண்டித்துச் சொல்லிவிட வேண்டும். எண்ணெய் விளம்பரம், சீயக்காய்ப் பொடி விளம்பரமென்று இனிமேல் என் உயிரை வாங்கப்படாது அம்மா! மானமாக ஏதாவது செய்து சம்பாதித்துப் போடுகிறேன். கோவில் திருவிழா, நல்லவர்கள் நடத்துகிற சபை ஆண்டு விழா என்று கௌரவமாக நாலு இடங்களில் நான் படித்திருக்கிற நடனத்தைக் கலையாக ஆடுகிறேன். அதில் கிடைக்கிற சம்பாத்தியம் நமக்குப் போதும். இந்த அல்ப ஆசைகளையெல்லாம் விட்டுவிடு. இனிமேலாவது என்னைப் புரிந்து கொள். மஞ்சள்பட்டி ஜமீந்தாரும், மயில்தோகை மார்க் கூந்தல் தைலக்காரனும் அவர்களைக் கட்டிக் கொண்டு அழுகிற கண்ணாயிரமும் எக்கேடு கெட்டு வேண்டுமானால் போகட்டும். நீ என்னை அநியாயமாகக் கொல்லாதே. நான் இதற்கெல்லாம் ஆளில்லை...' என்று அம்மாவிடம் எப்படி எப்படிச் சீற்றத்தோடு பேச வேண்டும் என்பதை நினைத்த போது அந்த நினைப்பே துணிவாகவும் சுறுசுறுப்பாகவும் ஓடியது அவள் மனத்தில். இரண்டு மாதங்களுக்கு முன் முதன்முதலாக இந்த மஞ்சள்பட்டி ஜமீந்தார் என்ற பெருங்குடி மகனைக் (நிறையக் குடிப்பவரை) கண்ணாயிரம் தன் வீட்டுக்கு அழைத்து வந்து அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியதையும், அம்மா தனக்கு அவரை அறிமுகப்படுத்திய போது தான் கனன்று சீறி விழுந்ததையும் இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தாள் மோகின். 'அன்றைக்கு எங்கிருந்துதான் தனக்கு அவ்வளவு கோபம் வந்ததோ?' என்பதை இப்போது எண்ணுகிற வேளையில் அவளுக்கே வியப்பாயிருந்தது. அம்மாவும் சுற்றியிருந்தவர்களும் கீழ்த்தரமாக நடந்து கொள்ள முயன்ற பல வேளைகளில் தான் முரண்டு பிடித்து நெருப்பாக இருந்து அவர்களைச் சுட்டிருந்த சம்பவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்தன அவளுக்கு. இப்ப்டி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விநாடியும் மிகச் சிரமப்பட்டுத் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருந்த காரணத்தால் தான் நடுநடுவே வாழ்க்கையை முடித்துக் கொண்டு ஒரேயடியாகப் போய்ச் சேர்ந்துவிடலாமா என்ற அலுப்பும், சோர்வும், விரக்தியும் அவளுக்கு ஏற்பட்டன. சில நாட்களில் உயிர் வாழ்வதற்கே அலுப்பாகவும் சோர்வாகவும் இருந்திருக்கிறது அவளுக்கு.

"மோகினி!... உனக்கு நானே காப்பிக் கொண்டு வந்து விட்டேன்."

-கையில் டவரா டம்ளருடனும் வாய் நிறைய விஷமச் சிரிப்புடனும் கண்ணாயிரம் காரருகே நின்று கொண்டிருந்தார். ஏதேதோ யோசனைகளில் மூழ்கியிருந்த மோகினி அவர் வந்து நின்றதைக் கவனித்துப் புரிந்து கொள்வதற்கே சில விநாடிகள் ஆயின.

"எனக்குக் காப்பி வேண்டாம் சார்! சீக்கிரமாக வந்து ஸ்டூடியோவுக்கு அழைத்துப் போய்ப் படத்தைப் பிடித்துக் கொண்டு அனுப்புங்கள். வீட்டுக்குப் போய்த் தலை முழுக வேண்டும்" என்று அவள் சுடச்சுடப் பதில் கூறிய விதமும் பதிலின் முடிவில் இரட்டுற மொழிதலாக இரட்டைப் பொருளில் 'தலை முழுக வேண்டும்' என்று கூறிய வாசகமும் கண்ணாயிரத்தைப் பொசுக்கின. அவர் முகத்தில் ஈயாடவில்லை. காப்பியோடும் ஏமாற்றத்தோடும் வீட்டுக்குள் திரும்பிப் போனார் அவர். கால்மணி நேரத்தில் அவரும் முத்தழகம்மாளும் மறுபடியும் வெளியே வந்தார்கள்.

கண்ணாயிரம் அமைதியாக ஆனால் உள்ளே நீறு பூத்து அடங்கிய கோபத்தோடு காரை ஓட்டினார். அம்மா மோகினையை எரித்து விடுவது போல் பார்த்தாள். "தள்ளி உட்கார்ந்து தொலை. இப்படி இடிச்சிட்டு உட்கார்ந்தால் தான் நீ என் வயிற்றிலே பொறந்த அருமை தெரியுமாக்கும்?" என்று திரும்பி வந்து காரில் அமர்ந்ததும் காரணமின்றி அம்மா தன்னிடம் கொதித்துப் பேசியதிலிருந்தே அவள் மனநிலையை மோகினி புரிந்து கொள்ள முடிந்தது. தான் சொல்லியபடி பிறர் கேட்காத போது வருகிற இந்த ஆற்றாமைக் கோபம் அம்மாவிடம் அதிகமாக உண்டு என்பது மோகினிக்குத் தெரியும். 'தான் கண்ணாயிரத்தின் வீட்டுக்குள் வரவில்லை' என்பதுதான், அம்மாவின் இந்தக் கோபத்துக்குக் காரணம் என்றும் மோகினி புரிந்து கொண்டாள்.

சிறிது நேரத்தில் கார் வெளி வீதியிலிருந்து பிரபலமான பெரிய ஸ்டூடியோ ஒன்றின் வாயிலில் போய் நின்றது. கண்ணாயிரம் தன்னோடு அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ஸ்டூடியோவுக்கு உள்ளே சென்றார். சுற்றிலும் மலைப் பின்னணியோடு மயில் ஒன்று தோகை விரித்தாடுகிற ஸீன் கட்டி விட்டு எதிரே காமிராவை நிறுத்தி மோகினியைப் புகைப்படம் எடுக்க ஏற்பாடு ஆகியிருந்தது. பெரிய அழகிய தோகையை விரித்துக் கொண்டு நிற்கும் மயில் போல் கட்டுக் கடங்காத கருங்குழல் அலை அலையாக அவிழ்ந்து தொங்கி, கூந்தலும் முகமும் சேர்த்துப் படத்தில் விழுகிறாற் போல் காமிராவுக்கெதிரே அமர்ந்தாள் மோகினி. கண்ணாயிரம் ஏதோ சொல்ல அவள் அருகில் வந்தார். பதுங்கிப் பதுங்கி அவர் அருகில் வந்த விதத்திலேயே வியாபாரத் தந்திரம் தெரிந்தது. ஆனாலும் பயந்து கொண்டே தான் வந்தார்.

"இதோ ஒரு நிமிஷம்! படம் பிடிக்கிறதுக்கு முன்னாடி இந்தச் சேலையைக் கட்டிக்கிடணும். அப்பத்தான் எடுப்பாக இருக்கும்" என்று கரைகளில் பளபளவென்று தங்கச் சரிகையிட்டு மஸ்லினை விட மிக இலேசாக இருக்கும் புடவை ஒன்றைப் பிரித்து மோகினியிடம் நீட்டினார் கண்ணாயிரம்.

"கண்ணாயிரம் சார்! எனக்கு ஒரு சந்தேகம்! உங்கள் மயில் தோகை மார்க் கூந்தல் தைலத்தைப் பெண்கள் தலைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? அல்லது புடவைக்குத் தடவிக் கொள்வதற்காக விற்கப் போகிறீர்களா? முதலில் அதைச் சொல்லி விடுங்கள். அப்புறம் நீங்கள் என்னைப் போட்டோ பிடிக்கலாம்!" என்று ஆணியடித்தாற் போல் அழுத்தமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அந்த வெங்காயச் சருகுச் சேலையை அவர் கையிலிருந்து வலிந்து பறிந்து ஒரு மூலையில் ஆத்திரத்தோடு வீசி எறிந்தாள் மோகினி.

அத்தியாயம் - 10

நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் நம்மை எங்கே எப்படி வாழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்.

தனக்கு வந்திருக்கிற கடிதம் கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ தான் வந்திருக்க வேண்டுமென்று தன் தந்தை ஆவலோடு எதிர்பார்த்துத் தவிப்பது சத்தியமூர்த்திக்குத் தெரிந்தது. அப்பா மட்டுமல்ல. அம்மாவும் இப்படி எதிர்பார்த்துத்தான் தவிக்கிறாள். பிறரை எதிர்பார்த்துத் தவிக்க வைத்துவிட்டு வாழ்வதிலுள்ள வேதனையை அந்த விநாடியில் சத்தியமூர்த்தி மிக நன்றாக உணர்ந்தான். இதைக் காட்டிலும் அதிகமாக அவன் மனத்தை வேதனைப்படுத்தக் கூடிய வேறு செய்தி ஒன்றைத் தந்தை அப்போது அவனிடம் கூறினார்.

"முடிந்தால் இன்றைக்குச் சாயங்காலமாவது நாளைக்குக் காலையிலாவது கண்ணாயிரத்தைப் போய்ப் பார். நான் அவரிடம் நேற்றுப் பேசிக் கொண்டிருந்த போது உன்னைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். இந்தச் சுற்று வட்டாரத்தில் கண்ணாயிரம் மனம் வைத்தால் சாதிக்க முடியாத காரியமில்லை. மல்லிகைப் பந்தல் கல்லூரி வேலையைப் பற்றி உனக்கே நம்பிக்கையில்லை என்று தோன்றுகிறது. கண்ணாயிரம் யாரிடமாவது வேண்டியவர்கள் மூலம் சொல்லி உனக்கு ஒரு வேலை பார்த்துத் தர முடியும். ஞாபகத்தில் வைத்துக் கொள். கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு நமக்கு என்றைக்கும் வேண்டும்."

யாருடைய சமூக வாழ்க்கையைப் பற்றி மிகவும் போலியானதென்றும் பொய்யானதென்றும் எண்ணியெண்ணி அவன் வருத்தப்பட்டிருக்கிறானோ அவரிடமே அவனைப் போய் நிற்கச் சொல்கிறார் தந்தை. பொய்யாகவும் வஞ்சகமாகவும் வாழ்ந்தாலும், பணமும், காரியங்களைச் சாதிக்கிற திறமையும் உள்ளவர்கள் சமூகத்தை எவ்வளவிற்கு மயக்கி விடுகிறார்கள் என்று எண்ணி வியந்தான் சத்தியமூர்த்தி. தன் தந்தையே கண்ணாயிரத்தைப் பெரிய மனிதராக மதிக்கும் அளவிற்குக் கண்ணாயிரம் மயக்கும் தன்மை உள்ளவராக இருக்கிறார் என்பதை அறிந்த போது வேதனையும் ஏமாற்றமும் அவனுக்கு ஒருங்கே ஏற்பட்டன. மீண்டும் அந்த வாக்கியங்களைத் தான் நினைத்தான் அவன். "நல்ல மனித வாழ்க்கையில் தன்னுடைய ஒவ்வொரு தேவைக்காகவும் மட்டுமே போராட முடியாது. தன்னுடைய தேவைக்காகவும் நியாயத்துக்காகவும் சேர்ந்தே போராட வேண்டியிருக்கிறது."

நேர்மையான உணர்ச்சிகளில் ஆழ்ந்து வாழத் தெரியாமல் ஏனோ தானோ என்று மிதந்து கொண்டு வாழும் கண்ணாயிரத்தைப் போன்றவர்களைச் சத்தியமூர்த்தி வெறுத்தான். அவனுடைய தந்தையோ கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் தயவு என்றைக்கும் வேண்டும் என்கிறார்.

"என்ன? நான் சொல்லியது ஞாபகத்தில் இருக்கட்டும்! சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வா..." என்று மறுபடியும் அவன் தந்தை அவனை வற்புறுத்தினார். தன் கையிலிருந்த அந்தக் கடிதத்தை - அதைச் சூழ்ந்து கொண்டு மணக்கும் மல்லிகைப்பு மணத்தோடு சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான் சத்தியமூர்த்தி. "கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும் நான் கண்ணாயிரத்துக்கு முன்னால் போய்க் கையைக் கட்டிக் கொண்டு நிற்க மாட்டேன் அப்பா!" என்று சொல்லிவிடுவதற்கு நாக்குத் துடித்தது. தான் அப்படி எதிர்த்துப் பேசினால் வாழ்க்கையில் பல காரணங்களால் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற தந்தையின் மனம் இன்னும் வேதனை கொள்ளும் என்று தன்னை அடக்கிக் கட்டுப்படுத்திக் கொண்டான் சத்தியமூர்த்தி.

கண்ணாயிரம் என்னும் பொய்ம்மைக்கு முன்னால் போய் நிற்கிற துர்ப்பாக்கியம் தனக்கு நேராமலிருப்பதற்காகவாவது உடனே பூபதி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி விடவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் அவன். 'அன்பின் பரிபூரணமான தன்மையைக் கனிந்து நிற்கிறாற் போல ஓர் அழகிய சொல்லால் உங்களை அழைக்க விரும்பினேன்' - என்று பூபதியின் மகள் தனக்கு எழுதியிருந்ததை அப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. இன்னொருவரால் விரும்பப்படுகிறோம் என்றோ அன்பு செலுத்தப்படுகிறோம் என்றோ தெரியவரும் போது இயல்பாக உண்டாகிற உற்சாகம் அப்போது அவன் மனத்திலும் ஓரளவு ஏற்பட்டிருந்தது. சர்க்கஸில் ஓர் ஆளை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு முகத்தையும் உடலையும் தவிரச் சுற்றிலும் போய்ப் பதிந்து கொள்கிறாற் போல் நெருப்புடன் கூடிய கத்திகளை வீசி எறிவார்களோ, அப்படிச் சிந்தனைகளாலும் சூழ்நிலைகளாலும், துன்பங்களே தன்னைக் குறி வைத்து வீசப்பெறுவதாக உணர்ந்து தவிக்கும் வேளையில் நடுவே ஒரு பூச்செண்டும் வந்து விழுந்ததென இந்தக் கடிதம் மல்லிகைப் பந்தலிலிருந்து வந்திருப்பதாக அவன் எண்ணினான். நண்பகல் நேரத்தின் ஒடுங்கி ஓய்ந்த அமைதி வீட்டில் சூழ்ந்திருந்தது. அப்பா ஊஞ்சல் பலகையில் படுத்துத் தூங்கத் தொடங்கியிருந்தார். 'கல்யாணீ! கல்யாணீ!' என்று கிணற்றடியிலிருந்து ஏழெட்டு முறை இளைய பெண்ணைப் பெயர் சொல்லி அழைத்து அலுத்துப் போன அம்மா மூத்த பெண் ஆண்டாளைக் கூப்பிட்டு, "இந்தக் கல்யாணி எங்கே தான் இருக்கிறாள் என்று பார்த்துத் தொலையேன்" என்று கேட்டதையும் அதற்கு மறுமொழியாக அம்மாவிடம் ஆண்டாள். "கல்யாணியைக் கேட்கிறாயா அம்மா! அவள் இருக்கிற இடம் எனக்குத் தெரியும். வடுவூர் பரமசிவம் எழுதிய 'பரிமள விலாஸ் படுகொலை'யில் ஏழாவது அத்தியாயத்தில் இருக்கிறாளம்மா அவள். இருபது தடவை என்ன? எழுநூறு தடவை நீ தொண்டை கிழியக் கத்தினாலும் இப்போது அவள் காதில் விழாது..." என்று பதில் சொல்லியதையும் அத்தனை துயரமான மனநிலையிலும் இரசித்தான் சத்தியமூர்த்தி. 'இவ்வளவு வறுமையினிடையிலும் இந்த வீட்டில் சிரிப்பும் நகைச்சுவையும் கூட மீதம் இருக்கின்றனவே" என்று எண்ணி வியந்து கொண்டான். அவன் குடும்பத்தை எதிர்நோக்கியிருக்கிற துன்பங்களும் பொருளாதாரத் தொல்லைகளும் தெரிந்தால் கல்யாணியால் நிம்மதியாகத் துப்பறியும் நாவல் படிக்க முடியாது. ஆண்டாளால் சிறிது வேடிக்கையாகப் பேச முடியாது. பிள்ளையின் மலர்ச்சியான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வெள்ளிக்கிழமை சாயங்காலங்களில் தான் பேச்சியம்மன் கோவிலில் போடுகிற நெய் விளக்கும் திங்கள்கிழமை மாலை வேலைகளில் பழைய சொக்கநாதர் கோவிலைச் சுற்றுகிற சுற்றுகளுமே போதுமென்று நினைக்க மாட்டாள் அம்மா. அப்பா, அம்மா, தங்கைகள் எல்லாருமே தான் சம்பாதித்துப் போடத் தொடங்கிய பின்புதான் குடும்பத்துக்கு விடியப் போகிறதென்று காத்திருப்பது அவனுக்குத் தெரியும். நெஞ்சின் இரத்தம் சொட்டச் சொட்ட அந்த வீட்டுக்கு உழைக்க வேண்டுமென்று தான் ஒரு தீர்மானமான முடிவு செய்து கொண்ட மனநிலையோடு பூபதி அவர்களுக்குக் கடிதம் எழுத உட்கார்ந்தான் அவன்.

பகல் மூன்றரை மணிக்கு அந்தக் கடிதத்தை எழுதத் தொடங்கியவன், நாலரை மணி வரை - சரியாக ஒரு மணி நேரம் எழுதியிருக்கிறான். கடிதம் வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் யாருக்கு எழுதப்பட்டதோ அவருடைய மனத்தைக் கவ்வுகிறாற் போல் வாய்த்திருந்தது. பூபதி அவர்களின் மனத்தில் அந்தக் கடிதம் தன்னைப் பற்றி நிச்சயமாக ஒரு நல்ல முடிவுக்கு வரத் துணை செய்யும் என்ற முழு நம்பிக்கையோடுதான் சத்தியமூர்த்தி அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்ப்பதற்குப் புறப்பட்டான். அதை எழுதி முடித்த போது அவன் மனம் குழப்பமின்றி நிம்மதியாயிருந்தது. ஆனாலும் ஒன்றை நினைக்கும் போது அவன் மனம் திரும்பத் திரும்பக் குமுறத்தான் செய்தது. 'பதவியையும் செல்வத்தையும் செல்வாக்கையும் தேடுவதற்குத் தகுதியும் நேர்மையான திறமையும் மட்டுமே இன்றைய வாழ்க்கையில் போதுமானவையாக இருப்பதில்லை. சிந்திப்பதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. வாழ்வதற்குத் தேவையான திறமை வேறாக இருக்கிறது. என்னைப் போல் எம்.ஏ. முதல் வகுப்புத் தேர்ச்சியும் வாழ்க்கையைப் பற்றிய நல்ல இலட்சியங்களும் உள்ளவர்கள் ஓர் உத்தியோகத்துக்காக, வயிற்றை நிரப்பிக் கொள்ள வழி செய்யும் ஒரு வெறும் உத்தியோகத்துக்காக இப்படி நாயாக அலைகிறோம். கண்ணாயிரத்தைப் போல் அறிவையும் முதலீடு செய்யாமல், பணத்தையும் முதலீடு செய்யாமல், வெறும் சாமர்த்தியத்தையும், சூழ்ச்சியையுமே முதலீடு செய்து வாழ்க்கையில் மேலும் மேலும் வென்று கொண்டு போகிறவர்களும் இதே உலகில் தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சாமர்த்தியம் அப்பாவைப் போன்ற நல்லவர்களைக் கூட மயக்கிக் கவர்ந்து விடுகிறதே!' என்று மனம் புழுங்கியபடி தபாலாபீஸின் கல் கட்டிடத்திற்குள் நுழைந்து கடிதத்தை தபாலில் சேர்த்துவிட்டு அவன் வெளியேறிய போது, "இந்த ஊரில் தான் இருக்கிறாயா சத்தியம்? பார்த்து வெகு நாட்களாயிற்றே?" என்று குமரப்பன் எதிர் கொண்டான்.

தனக்கு மிகவும் நெருங்கிய தோழனாகக் கல்லூரி நாட்களிலிருந்தே பழகியிருக்கும் அந்த நண்பனை மனத்தின் தவிப்பு நிறைந்த இந்த வேளையில் சந்தித்தது சத்தியமூர்த்திக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது. குமரப்பனுடைய கைத்திறன் விந்தையானது. எந்தச் சித்திரக் கலாசாலையிலும் கற்காமலே அவன் கைகள் இழுக்கும் கோடுகளிலே சிரிப்பும் அழுகையும், சீற்றமும் வேட்கையும் தெரியும்படி விதம் விதமான மனித உருவங்கள் பிறந்தன. பொழுது போக்காகவும் விளையாட்டாகவும் தொடங்கிய இந்தக் கலை, கல்லூரி நாட்களிலேயே அவனைச் சிறந்த வல்லுநனாக்கியிருந்தது. நகைச்சுவைச் சித்திரங்களையும் கேலிச் சித்திரங்களையும் அவனுடைய சுறுசுறுப்பான கைகள் நொடிப்பொழுதில் பக்குவமாக வரைந்து முடித்தன. அவன் கரங்கள் காகிதத்தில் வேகமாகவும், சாமர்த்தியமாகவும் விளையாடின. சத்தியமூர்த்தியோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு ஏதோ ஒரு பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆகப் போய் விட்டான் குமரப்பன். அந்த வேலையும் அவனாகத் தேடிப் போய் அடைந்ததல்ல. தானாகவே அவனைத் தேடிக் கொண்டு வந்து சேர்ந்தது அந்த வேலை. கல்லூரி பொருட்காட்சியில் அவன் வரைந்து வைத்திருந்த சுவையான கேலிச் சித்திரங்கள் சிலவற்றைக் கண்டு வியந்த அந்தப் பத்திரிகையாசிரியர் அவனிடம் அமைந்திருந்த இந்த நுணுக்கமான திறமையைக் கண்டுபிடித்து அவனைத் தேர்ந்தெடுத்தார். குமரப்பன் வெறும் தொழில் நோக்குடனோ பணத்துக்கு ஆசைப்பட்டுத் தவிக்கும் மனநிலையுடனோ கார்ட்டூனிஸ்ட் ஆகவில்லை. இயற்கையாகவே அவனுடைய கண்களும், மனமும் இந்த உலகத்தையும் இதன் நிகழ்ச்சிகளையும் குறும்புத்தனமான சுறுசுறுப்போடு பார்க்கும் தன்மை வாய்ந்தவை. புத்திக் கூர்மையும் அவனுக்கு அதிகம். "பூகோள நூலின்படி உருண்டை வடிவமான இந்த உலகம் சுற்றிக் கொண்டிருப்பதாக ஒரு காட்சியை வரைந்துவிட்டு அதைப் பார்த்துக் கொண்டு நிற்கும் போதே அதைப் பார்த்த படைப்புக் கடவுளின் தலை சுற்றுவதாகவும் ஒரு கார்ட்டூன் எழுதித் தேவர்கள் எல்லாம் படிக்கிற பத்திரிகை ஏதாவது ஒன்று இருந்தால் அதற்கு அனுப்பிப் பிரசுரம் செய்யச் சொல்ல வேண்டும்டா சத்தியம்?" என்று அடிக்கடி சொல்வான் குமரப்பன். இப்படி ஏதாவது குறும்புத்தனமாகச் சொல்லாமல் சும்மா இருக்க முடியாது அவனால்.

"மனிதருடைய நெஞ்சம் சதாகாலமும் பணம் காசு பற்றித்தான் எண்ணித் தவித்துக் கொண்டிருக்கும் என்று நெஞ்சின் மேல் பணப்பைக்கு இடம் விட்டுச் சட்டை தைக்கத் தொடங்கிய முதல் தையல்காரன் தெரிந்து கொண்டிருக்கிறான் பார்த்தாயா?" என்று இப்படி ஏதாவது ஆழமான குறும்புத்தனமுள்ள வாக்கியத்தை முன்னும் பின்னும் தொடர்பில்லாமல் இருந்தாற் போலிருந்து திடீரென்று சொல்வான் அவன். குமரப்பனோடு பழகுவதே ஒரு சுவாரஸ்யமான அனுபவம். அவனைச் சந்தித்துப் பேசத் தொடங்கினால் அந்தச் சந்திப்பையும் பேச்சையும் முடிக்க வேண்டுமென்று தோன்றாது. இந்த உலகமே தன்னுடைய கேலிக்கும் அலட்சியத்துக்கும் குறும்புப் பேச்சுக்குமாக - மிகவும் சுதந்திரமாய் விமரிசனம் செய்வதற்கென்றே படைக்கப்பட்டிருப்பது போலப் பாவித்துக் கொண்டு பேசும் கலைத்திமிர் குமரப்பனிடம் உண்டு. இந்தக் கலைத்திமிரும் கூட விரும்பத்தக்க விதத்தில் இருக்குமே ஒழிய வெறுக்கத்தக்க விதத்தில் இருக்காது. எப்போதும் போலக் குமரப்பனைப் பார்த்ததும் அவனுடைய விசித்திரமான குணங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு ஞாபகம் வந்தன.

"என்னடா இது? ஏதோ சந்திக்கக்கூடாத ஆளை எதிரே சந்தித்து விட்டாற் போல் அப்படியே மலைத்துப் போய் நின்றுவிட்டாய்? தபாலாபீசுக்கே நேரில் தேடி வந்து சிரத்தையாகப் பெட்டியில் போட வேண்டிய ஏதோ ஒரு கடிதத்தை எடுத்துக் கொண்டு இந்த வெய்யிலில் நீயே வந்திருக்கிறாய்...!" என்று சிரிப்பும் குத்தலுமாகப் பேச்சை ஆரம்பித்தான் குமரப்பன்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை குமரப்பன்! திடீரென்று உன்னை எதிரே பார்த்ததும் ஒரு பெரிய சர்வகலாசாலையையே நேருக்கு நேர் சந்தித்தாற் போலாகிவிட்டது. கடிதத்தைத் தபாலில் சேர்த்து விட்டு அப்படியே இரயில்வே மேற்பாலம் வழியாக எங்காவது உலாவப் போகலாமென்று வந்தேன். நல்ல நேரத்தில்தான் நீயும் வந்து சேர்ந்திருக்கிறாய்" என்று சத்தியமூர்த்தி பதில் சொல்லிக் கொண்டு வந்த போது பாதியிலேயே அவன் பேச்சைத் தடுத்து நிறுத்திவிட்டு, "அதுசரி நீ என்னை ஒரு சர்வகலாசாலையோடு ஒப்பிடுவதை ஒரே ஒரு காரணத்துக்காக நான் மறுக்கிறேன். நான் தெரிந்து கொண்டிருக்கிற பல விஷயங்களை உலகத்தின் எந்தச் சர்வகலாசாலையிலும் சொல்லிக் கொடுப்பதற்குத் தயாராயிருக்க மாட்டார்கள்" எனச் சொல்லிச் சிரித்தான் குமரப்பன். அவனுடைய அந்தக் கர்வத்தைப் பார்த்துச் சத்தியமூர்த்தியாலும் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே எதிரில் சந்திக்கிற ஒவ்வொருவரது பார்வையையும், முகத்தையும், நடையையும் கூட விமர்சனம் செய்து சிரித்துப் பேசிக் கொண்டே நடப்பான் குமரப்பன். எதையாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற குறும்புத்தனமான ஆர்வத்தோடு அவன் கண்கள் சதா அலைந்து கொண்டிருக்கும். அப்போது அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த பாதையில் எதிர்ப்பக்கமிருந்து 'ஆன் டெஸ்ட்' என்று போர்டு மாட்டியபடி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

"லாரி - கார்களுக்குப் போடுகிற மாதிரி சில ஆட்களுக்கும் இந்த 'போர்டு' மாட்ட வேண்டுமடா சத்தியம்! சரியாக வாழ்வதற்குப் பழகாமல் தாறுமாறாக வாழ்கிற சிலருடைய வாழ்க்கையும் 'ஆன் டெஸ்ட்' ஆகத்தான் இருக்கும். முழுப்பக்குவமும் பெறாமல் வாழ்வதற்கும், பிறரிடம் பழகுவதற்கும் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிற சில மனிதர்கள் கூட மார்பில் 'எல்' போர்டு மாட்டிக் கொள்ள வேண்டும். 'போர்டாக' மாட்டிக்கொள்ள முடியாவிட்டால் சட்டைப் பித்தானிலாவது எனாமலில் 'எல்' பதித்துக் கொள்ளலாம்" என்று அரட்டையைத் தொடங்கினான் குமரப்பன்.

"குத்துவிளக்கு எப்படி இருக்கிறது குமரப்பன்?" என்று அவன் வேலை பார்க்கிற பத்திரிகையைப் பற்றி விசாரிக்கலானான் சத்தியமூர்த்தி.

"ஆஹா! கேட்க வேண்டுமா? சுடர்விட்டுப் பிரகாசமாக எரிந்து கொண்டிருக்கிறது. அச்சு இயந்திரங்களும் மனிதர்களும் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆசிரியர் போன வாரம் தான் பெர்லினிலிருந்து திரும்பினார். இந்த வாரம் ஜப்பானுக்குப் போவார் போலிருக்கிறது. இதுவரை வாரம் ஒன்றிற்கு மொத்தம் - நாலு பக்கம் எட்டுக் கார்ட்டூன்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கார்ட்டூன்கள் மிகவும் நன்றாக இருப்பதால் அடுத்த வாரத்திலிருந்து ஆறு பக்கத்துக்கு பன்னிரண்டு கார்ட்டூன்கள் போட வேண்டும் என்று ஏற்பாடாகியிருக்கிறது. எங்கள் பத்திரிகைக்கு என்னடா குறை? போதும் போதும் என்று சொன்னாலும் கேட்காதபடி கண்ணாயிரம் விளம்பரங்களைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கிறர். விளம்பரங்கள் பணத்தைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கின்றன. பணம் சௌகரியங்களைத் தேடிக் கொண்டு வந்து குவிக்கிறது."

"இவ்வளவு தானா? இன்னும் ஏதாவது உண்டா?"

"உண்டு! தாராளமாக உண்டு. விற்பனையைப் பெருக்குவதற்காக ராசி பலன் போடலாமென்று ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. சினிமா நட்சத்திரங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக வந்தால் நல்லதென்று ஏஜண்டுகள் ஆசைப்படுகிறார்கள். துவையல் அரைப்பதைப் பற்றி வாரம் ஒரு பக்கம் வந்தால் பெண்களுக்குத் திருப்தியாயிருக்குமாம்."

"போதும்! போதும்... நான் ஏதோ ஒரு வார்த்தைக்குக் கேட்டால் நீ என்னென்னவோ வம்பு வளர்த்துக் கொண்டு போகிறாயே? உன் குறும்புப் பேச்செல்லாம் என்றைக்குத் தான் ஒடுங்கப் போகிறதோ?"

இதைக் கேட்டுக் குமரப்பன் சத்தியமூர்த்தியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு சிரித்தான். சிரித்துக் கொண்டே சொன்னான்.

"இந்தக் குறும்புத்தனம் தான் என்னுடைய தொழிலுக்கு மூலதனம் அப்பனே! இதை விட்டுவிட்டு அப்புறம் நான் எங்கே போவது?"

"பால் டபோரி என்று ஓர் மேற்கு நாட்டு ஆசிரியன் முட்டாள்தனத்தையே ஒரு கலையாக (தி ஆர்ட் ஆஃப் ஃபாலி) வருணித்துப் புத்தகம் எழுதியிருக்கிறான், தெரியுமா குமரப்பன்?"

"ஒரு தடவை மட்டுமல்ல; இரண்டு மூன்று தடவை அந்தப் புத்தகத்தை நான் படித்திருக்கிறேனடா சத்தியம். 'பைத்தியக்காரத்தனம், நவநாகரிகம், முட்டாள்தனம், இந்த மூன்று அம்சங்களுக்குள்ளேயே மனித வர்க்கத்தின் முழுச் சரித்திரத்தையும் நான் சொல்லி முடித்து விடுவேன்' - என்று அந்தப் புத்தகத்தைப் 'பால் டபோரி' ஆரம்பித்திருப்பான்."

"எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால் 'பால் டபோரி' அந்தப் புத்தகத்தில் மனித வாழ்க்கையை எந்தக் கோணத்திலிருந்து பார்த்திருக்கிறானோ அதே கோணத்திலிருந்து மட்டும்தான் நீயும் நம்மைச் சுற்றி உள்ளவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறாய் குமரப்பன்?"

"மகிழ்ச்சியோடு ஒப்புக் கொள்கிறேனடா, சத்தியம். எனக்கு வாழ்க்கையை அந்தக் கோணத்திலிருந்து தான் பார்க்கத் தெரியும். கண்ணாயிரத்தைப் போல் மற்றவர்களை முட்டாள்களாக்கிக் கொண்டு வாழ்கிற போலிப் புத்திசாலிகள் உள்ள உலகத்தில் வாழ்க்கையை நீயும் நானும் வேறு விதமான கோணத்திலிருந்து பார்த்துப் பயனில்லை அப்பனே, பயனில்லை."

"எனக்கு உத்தியோகம் தேடிக் கொள்வதற்காக நான் இன்று மாலைக்குள் கண்ணாயிரத்தைப் போய்ச் சந்திக்க வேண்டுமென்று என் தந்தையே சொல்லியிருக்கிறார் குமரப்பன்! நான் என்னடாவென்றால் என் தந்தையின் கட்டளையையும், கண்ணாயிரத்தையும், உத்தியோகத்தையும், அறவே மறந்து விட்டு உன்னோடு உலாவப் புறப்பட்டிருக்கிறேன். இந்தக் கண்ணாயிரம் மாதிரி மனிதர்களைத் தேடிக் கொண்டு போய் எதிரே நிற்க வேண்டுமென்று நினைக்கும் போதே எனக்கென்னவோ மிகவும் அருவருப்பாக இருக்கிறது, குமரப்பன்..."

"நீ இவர்களைப் போன்றவர்களைப் பார்த்து அருவருப்புத் தான் அடைகிறாய்! நானும் 'பால் டபோரி'யும் இவர்களைப் போன்றவர்களையும் பார்த்து இரசிக்கிறோம். உனக்கும் எனக்குமுள்ள வேறுபாடு இதுதான் சத்தியம்!"

அப்பால் இரயில் நிலையத்துக்கும் - இப்பால் பஸ் நிலையத்துக்கும் நடுவே அமைந்திருந்த அந்த மேற்பாலத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். வழக்கமாக மாலை வேளைகளில் அந்த இடத்தில் பாய்ந்து வீசும் காற்று இன்றும் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. அந்த இடத்திலிருந்து பார்த்தால் வழக்கமாகத் தெரிகிற நகரின் பெரிய கட்டிடங்களும் கோபுரங்களும் இன்று ஏதோ ஒரு விதமான புதுமாறுதலோடு அழகாகத் தெரிவன போலிருந்தன. சென்னைக்குச் செல்வதற்காக ஒவ்வொன்றாகத் தெற்கேயிருந்து வரப்போகும் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான கூட்டமும், கலகலப்பும் அப்போதே மதுரை நிலையத்தைத் திருவிழாக் கோலம் கொள்ளச் செய்திருந்தன. இரயில் நிலையத்தின் பல நிற விளக்கு ஒளிகளும், என்ஜின்கள் அங்குமிங்குமாகப் போய் வரும் ஓசைகளும், மற்றொரு பக்கம் தெற்கே தென்னை மரங்களும் வயல்களும், குடிசைகளும் அவற்றினூடே யாரோ வகுத்த கடினமான நியதிகளைப் போல் ஆரம்பமாகித் தெற்கே போகப் போக வேறு வேறு திசைகளில் விலகும் இரயில் தண்டவாளங்களுமாக அந்த இடம் அந்த வேளையில் தனிப்பட்டதோர் அழகுடனே காட்சியளித்துக் கொண்டிருந்தது.

பாலத்தின் மேற்குப் புறத்து இறக்கத்தின் கனமான இரும்பு வேலியில் சாய்ந்தபடி இரயில் நிலையத்துக்கு எதிர்ப்பக்கம் பார்த்தவாறே சத்தியமூர்த்தியும் குமரப்பனும் பேசிக் கொண்டிருந்தார்கள். விரிவுரையாளர் பதவிக்காக மல்லிகைப் பந்தலுக்குத் தான் போய்விட்டு வந்ததையும், மல்லிகைப் பந்தல் கல்லூரி அதிபர் பூபதி அவர்களைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததையும் நெருங்கிய நண்பன் என்ற முறையில் குமரப்பனிடம் கூறினான் சத்தியமூர்த்தி. மல்லிகைப் பந்தல் ஊரையும், கல்லூரியையும் தனக்குப் பிடித்திருக்கிறது என்பதையும் சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் கூறினான்.

"கல்லூரி விரிவுரையாளராகத்தான் வேலை பார்க்க வேண்டும் என்று நீ நினைக்கிற பட்சத்தில் அதை உள்ளூரிலுள்ள கல்லூரிகளில் ஏதாவதொன்றில் தேடிக் கொள்வேன். செலவு சிக்கனமாக இருக்க முடியும் என்பதற்காகவே இந்த யோசனையை உனக்கு நான் சொல்கிறேன். மல்லிகைப் பந்தலைப் போல் வாழ்க்கைச் செலவுகளும், வாழ்க்கைத் தரமும் உயர்ந்த மலைநாட்டு நகரமொன்றில் வேலை பார்க்கச் சென்றால் அங்கே நீ தங்கிக் கொள்வதற்கும், சாப்பிடுவதற்குமே உன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதி செலவாகி விடும். ஊரில் இங்கு உன்னை நம்பிக் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு நீ அதிகமாக ஒன்றும் அனுப்ப முடியாமல் போனாலும் போகலாம். உன் வீட்டு நிலைமை எனக்கு தெரியுமாதலால் இதை நான் உன்னிடம் சொல்ல வேண்டியதாயிற்று. மற்றக் கல்லூரிகளை விட மல்லிகைப் பந்தல் கல்லூரியில் சம்பள விகிதங்கள் நிச்சயமாக அதிகமாக இருக்கும் என்று எல்லாரும் சொல்கிறார்கள். இருந்தாலும் நீ வெளியூரிலும், உன் வீட்டில் மற்றவர்கள் இங்குமாக வசிப்பதனால் இரட்டைச் செலவுதான் ஆகும்! செலவையோ, வருமானத்தையோ, காரணமாக முன் நிறுத்திச் சொல்லுகிற யோசனைகளை நீ விரும்ப மாட்டாய் என்று நான் அறிவேன். ஆனாலும் இதைச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு உண்டு சத்தியம்!" என்றான் குமரப்பன்.

"உள்ளூரிலுள்ள கல்லூரிகளையெல்லாம் பற்றி என்னுடைய அபிப்பிராயம் என்னவென்று உனக்குத்தான் தெரியுமே குமரப்பன்? வாழ்க்கையிலுள்ள பெரிய வேதனை இந்த இடம் தான். நாம் எப்படி எங்கே வாழ விரும்புகிறோம் என்பதும் உலகம் எங்கே எப்படி வாழ வேண்டுமென்று நம்மை எதிர்பார்க்கிறது என்பதும் தான் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் இரண்டு எல்லைகள்."

"இப்படிச் சொல்வதால் என்னைப் பற்றித் தவறாகப் புரிந்து கொள்ளாதே சத்தியம்! உன்னுடைய குடும்பத்தின் வசதிக் குறைவுகளை நினைத்தே நான் இந்த யோசனையைச் சொன்னேன். நீ மல்லிகைப் பந்தல் கல்லூரிக்குப் போவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான ம்றுப்புமில்லை. நானும் அப்படி ஒரு நல்ல கல்லூரியில் நீ பணிபுரிவதைத் தான் எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன். அதே சமயத்தில் நடைமுறை உலகிலுள்ள துன்பங்களையும் நீ மறந்து போய்விடக்கூடாது. மனிதனுடைய உயர்ந்த இலட்சியம் என்பது சில மலைகளின் பசுமையைப் போலத் தொலைவிலிருந்து பார்ப்பதற்குக் கவர்ச்சியாய்த் தோன்றி அருகில் நெருங்கியதும் ஒன்றுமில்லாததாய்ப் போய்விடுகிறது. உன்னைப் போன்ற சிந்தனை வளமோ, படிப்பின் ஆழமோ எனக்கு இல்லை. ஆனாலும் உலக அனுபவத்தை முன் வைத்து நான் சில யோசனைகளை உனக்குச் சொல்லுகிறேன். அவற்றை நீ அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில்லை" என்று குமரப்பன் சொல்லியபோது அவனுடைய குரலில் எந்த விதமான செயற்கை குறும்பும் இல்லை. உண்மையான அனுதாபமும் இரக்கமுமே அந்தக் குரலில் ஒலித்தன. இதன் பின்பும் அதே இடத்தில் நின்று நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கல்லூரி நாட்களில் நடந்த முக்கியமான நிகழ்ச்சிகளைப் பற்றி, உள்ளூர் அரசியல் நிலவரம் பற்றி, நிகழ்காலத் தமிழ் இலக்கியத்தின் நிலைபற்றி, விவாதமும் பேச்சுமாக நேரம் போவது தெரியாமல் வளர்ந்தது உரையாடல். இரயில் நிலையத்து மேற்பாலத்திலிருந்து புறப்பட்டுக் குமரப்பனும், சத்தியமூர்த்தியும் டவுன் ஹால் ரோடு வழியாகத் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரே கண்ணாயிரத்தின் கார் எங்கோ வேகமாகப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருந்தது. கண்ணாயிரமும், கண்ணாயிரத்தின் காரும், அந்தக் கார் நிறைய வேறு யாராவது மனிதர்களும் போய்க் கொண்டிருந்தால் சத்தியமூர்த்தியோ குமரப்பனோ அப்போது கவலைப்பட்டிருக்கப் போவதில்லை. கண்ணாயிரத்தின் கார் மதுரை மாநகரத்தில் உள்ள மிகமிகப் புராதனமான பொருள்களில் ஒன்று. நான்கு டயர்களின் நடுவிலும் குச்சி குச்சியாகக் கம்பிகள் சிலிர்த்துக் கொண்டு பார்ப்பதற்குக் காச நோயாளி போல் காட்சியளிக்கும். அந்தக் காரை இலட்சம் கார்களுக்கு நடுவிலும் தனியாகக் கண்டுபிடித்துவிடலாம். வேறு சௌகரியமான கார் வைத்துக் கொள்ள வசதியோ, வளமோ இல்லாததால் கண்ணாயிரம் இதை வைத்துக் கொண்டிருந்தார் என்று சொல்லிவிடுவதற்கு இல்லை. அவருக்கு ஒரு பிரமை உண்டு. இந்தக் காருக்கும் தமக்கும் ஏதோ ஓர் இராசி இருப்பதாகவும் இதில் புறப்பட்டுப் போனால்தான் தம்முடைய காரியங்கள் வெற்றிகரமாக முடியும் என்று நம்பி இந்தப் பழைய காரிலேயே பணத்தைக் கொட்டிச் செலவு செய்து புதுப்புது வசதிகளைச் செய்து கொண்டிருந்தார் அவர். இந்த விதமான திருக்கோலத்தோடு கண்ணாயிரத்தின் கார் டவுன் ஹால் சாலையில் அவர்களுக்கு எதிரே வந்த போது அதைப் பார்க்க வேண்டும் என்ற முயற்சியில்லாமல் தானாகவே அவர்கள் கண்களில் தனக்கேயுரிய முக்கியத்துவத்தோடு அது தென்பட்டு வைத்தது. கண்ணாயிரம் தான் காரை ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கருகே முன்ஸீட்டில் தன் தந்தை அமர்ந்திருந்ததைக் கண்டுதான் சத்தியமூர்த்தி அப்போது வியப்படைந்தான்.

"கண்ணாயிரத்தோடு முன்னால் உட்கார்ந்து போகிறவர் உன் தந்தை மாதிரி இல்லை? நீ அந்தக் காரைக் கவனித்தாயா, சத்தியம்?" என்று குமரப்பன் வேறு அவனைக் கேட்டு விட்டான்.

"பார்த்தேன், அப்பா மாதிரித்தான் இருக்கிறது" என்று அந்த உண்மையை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாத வேதனையோடு ஏற்றுக் கொண்டு நலிந்த குரலில் குமரப்பனுக்கு மறுமொழி கூறினான் சத்தியமூர்த்தி. 'என்ன காரியத்துக்காக அப்போது கண்ணாயிரத்தோடு அப்பா புறப்பட்டுப் போகிறார்?' என்று சிந்தித்தது அவன் மனம். 'தன்னைக் கலந்து கொள்ளாமல் கண்ணாயிரத்தின் மூலம் தன்னுடைய வேலைக்குத் தந்தை தாறுமாறாக ஏதேனும் ஏற்பாடு செய்துவிடப் போகிறாரா' என்று எண்ணியபோது அவன் மிகவும் மனம் கலங்கினான். மேலமாசி வீதியில் குமரப்பனுக்கு விடை கொடுத்தனுப்பி விட்டுத் தனியே தன் வீட்டை நோக்கி நடந்த போதும் இதே கலக்கம் தான் அவனுள் வளர்ந்து கொண்டிருந்தது.

அத்தியாயம் - 11

ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை.

'கண்ணாயிரத்தைப் போல் கெட்டவர்கள் நன்றாக வாழ்வதற்கும் அப்பாவைப் போல் நல்லவர்கள் - எப்போதுமே மாறாத நல்லவர்கள் - இப்படி வாழமுடியாமற் போவதற்கும் சமூகக் காரணம் ஏதாவது இருக்க முடியுமா?' என்று சிந்தித்தபடியே வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. திருவள்ளுவரைப் போன்ற பேரறிஞர்களுக்கே இந்தச் சிந்தனை விடை காணமுடியாத புதிராகத்தான் இருக்குமென்று அவனுக்குத் தோன்றியது. இல்லையென்றால்,

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.

என்ற திருக்குறளை அவர் பாடியிருக்க முடியாது. கண்ணாயிரத்தைப் போன்றவர்களின் வாழ்க்கையை இரசித்து மகிழ்வதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டதாகக் குமரப்பன் சொல்கிறான். சற்றுமுன் தெருத் திருப்பத்தில் விடைபெற்றுக் கொண்டு செல்லும் போது கூடக் குமரப்பன் இதே வார்த்தைகளைத்தான் சொல்லிவிட்டுப் போகிறான். என்னால் கண்ணாயிரத்தைப் போல் தீய சக்திகளை இரசிக்க முடியவில்லை. இந்த விதமான தீய சக்திகள் என் இதயத்தையும் எண்ணங்களையும் குமுறச் செய்து விடுகின்றன; தீமைகளையும், பொய்களையும் எதிரே காணும் போது கைகள் துடித்து மனம் கொதிக்கிறேன் நான். இப்படி உணர்ச்சி வசப்படுவது குமரப்பனுக்குப் பிடிக்கவில்லை.

ஆனால் இன்றையச் சமூக வாழ்வுக்குச் 'சிறுமை கண்டு பொங்குகிற' இந்த நியாய மனப்பான்மை அவசியம் வேண்டும் என்று தான் எனக்குத் தோன்றுகிறது. எத்தனையோ நல்ல குணங்களை உடையவராகிய பூபதி அவர்கள், 'இளமை அதை உடையவனுக்கு ஒரு தகுதிக் குறைவு' என்று பொருள் படுகிறாற் போல் கூறியதைக் கூட என்னால் பொறுத்துக் கொண்டு பதில் பேசாமல் சும்மா இருக்க முடியவில்லை. வயிற்றைக் கழுவி வாழவும், பிழைக்கவும் வேண்டுமானால் குமுறவும் கொதிக்கவும் வேண்டிய பல இடங்களிலும் கூட உணர்ச்சியே இல்லாமல் மரத்துப் போய் இருந்துவிட வேண்டியது தான் போலும். பலர் அப்படித்தான் வாழ்கிறார்கள். 'துடிப்புடனும், கொதிப்புடனும் வாழ்கிற சிலரும் கூட நாளடைவில் மெல்ல மெல்ல மரத்துப் போய் விடுகிறார்களே' என்று எண்ணிய போது வாழ்க்கையே பெரிய ஏமாற்றமாகத் தோன்றியது அவனுக்கு. இவ்வாறு கலக்கமும் குழப்பமும் நிறைந்த மனத்தோடு மேலமாசிவீதியும் வடக்கு மாசிவீதியும் சந்திக்கிற திருப்பத்தில் அவன் சென்று கொண்டிருந்த போது கலவரமும் கூப்பாடுமாக அங்கே கூடியிருந்த ஒரு கூட்டத்தினால் கவரப்பட்டான். கீழே மரத்தடியைத் தேடி வந்து கோயில் கொண்டுவிட்ட ஒரு பிள்ளையாருக்கும் அந்த இடத்தில் நிறுத்தப்படுகிற பல ஜட்கா வண்டிகளுக்கும், ஆதரவாக அங்கே பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. மனிதர்கள் நெருங்கி வாழ்கிற பெரிய நகரங்களில் திடீர் என்று ஓரிடத்தில் கூட்டம் கூடுவதும் கலைவதும் சர்வ சாதாரணம். ஆனால் அன்று அங்கே அந்த முன்னிரவில் சத்தியமூர்த்தி சந்தித்த கூட்டம் அப்படிக் கூடிய கூட்டமில்லை. சிரிப்பையும், வேதனையையும் ஒருங்கே உண்டாக்கக் கூடியதொரு சம்பவத்தை முன்னிட்டுக் கூடிய கூட்டமாயிருந்தது அது. கூடியிருந்தவர்கள் அந்தச் சம்பவத்தைச் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். 'இப்படிக் கூட நடக்குமா?' என்று நினைத்து நினைத்து வியப்படையக் கூடியதாயிருந்தது அந்தச் சம்பவம்.

கூடியிருந்த கூட்டத்தின் நடுவே கிழிந்த சேலையும் பயந்து கலவரமடைந்த முகத் தோற்றமுமாக இளம் வயதுப் பிச்சைக்காரப் பெண் ஒருத்தி கூசிப் போய்க் கூனிக் குறுகி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு மிக அருகே தரையில் ஒரு புது மண் பானை சில்லுச் சில்லாக உடைந்து கிடந்தது. அந்த ஆலமரத்தடியைக் கடந்து நாலைந்து முறை நடந்து போகிற எவருடைய பார்வையிலிருந்தும் அந்தப் பிச்சைக்காரப் பெண் தப்பியிருக்க மாட்டாள். சத்தியமூர்த்தியே அவளை அந்த இடத்தில் பலமுறை பார்த்திருக்கிறான். "ஐயா பிள்ளைத்தாச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா... உங்க தலைமுறைக்கு நீங்க நல்லா இருப்பீங்க" என்று கனத்து முன்னால் துருத்திக் கொண்டிருக்கும் தாய்மை கனிந்த வயிற்றோடு அவள் அந்தத் திருப்பத்தில் வெயிலென்றும், மழையென்றும் பாராமல் பிச்சைக்கு நிற்பதைப் பார்த்துச் சத்தியமூர்த்தி பரிதாபப்பட்டிருக்கிறான். 'வயிறும் பிள்ளையுமாகக் கர்ப்பிணியாயிருக்கிற இவளைப் போன்ற அநாதைகளுக்கு வயிறு காயும் இந்த வேளையில் இதே தெருவில் பாயசமும் வடையும் சமைத்துச் சாப்பிடுகிறவர்களும் இருப்பார்களே? சமுதாய வாழ்க்கையில் உள்ள சுகதுக்கங்களில் எத்தனை முரண்பாடுகள்? இந்த நாட்டில் இப்படி அநாதைகள் நம்மிடையில் இருக்கிறவரையில் பாயசம் வைத்துப் பண்டிகைகள் கொண்டாடுவதற்குக் கூச வேண்டும். இவர்களுக்குத் தலைசாய்க்க இடமில்லாதவரை மற்றவர்கள் கட்டிலும் மெத்தையும் இட்டுப் படுப்பது பாவம்' என்று இத்தகைய பிச்சைக்காரர்களைப் பார்க்கும் போதெல்லாம் மனம் வேதனைப்பட்டிருக்கிறான் அவன். ஆனால் இன்று அவனே இந்த ஆலமரத்தடியில் கேள்விப்பட்ட உண்மை - பார்த்த உண்மை முற்றிலும் புதியதாயிருந்தது. கண்களில் ஏழ்மையின் ஏக்கம் தெரிய வழிமேல் நின்று கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம், "பிள்ளைத் தாய்ச்சிக்கு உபகாரம் பண்ணிக் காப்பாத்துங்க ஐயா..." என்று கதறிக் கொண்டிருந்த அந்தப் பெண், வயிற்றில் மண்பானையை வைத்துக் கட்டிக் கொண்டு பிறரை மனம் இரங்கச் செய்வதற்காக நடித்திருக்கிறாள். அவளுடைய போதாத காலமோ அல்லது உண்மை வெளிப்பட்டுத் தெரிய வேண்டிய காலமோ கிழிந்து நைந்து இற்றுப் போன பழைய சேலை தாங்காமல் பானை கீழே விழுந்து உடைந்து அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. இப்படி ஒரு காட்சியைச் சினிமாவிலோ, நாடகத்திலோ பார்த்திருந்தால் அந்த நடிப்புத் திறமையை மக்கள் புகழ்ந்திருப்பார்கள். வாழ்க்கையில் கண்ணெதிரே வயிற்றுக் கொடுமை தாங்காமல் ஓர் ஏழைப் பெண் இப்படி நடித்ததையும் மன்னிக்கலாம் தான். ஆனால் மன்னிப்பதற்கு அங்கு யாரும் தயாராயில்லை.

"வயித்திலே பானையைக் கட்டிக்கிட்டு இத்தினி நாளா இந்த மரத்தடியிலே டிராமாவா ஆடிக்கிட்டிருந்தே. மானங்கெட்ட கழுதை..." என்று திட்டிக் கொண்டே காறித் துப்பினான் ஒருவன். தெரு ஒரமாகச் சாலை போடுவதற்காகக் குவித்திருந்த சரளைக் கற்குவியலிலிருந்து கல்லை எடுத்து வீசினான் ஒரு சிறுவன். அது அவள் முன் நெற்றியில் பட்டு இரத்தம் கசிந்தது. தன் வீட்டுக் கவலைகளும், தனக்காக தான் பட வேண்டிய வேதனைகளும் ஆயிரம் இருந்தாலும் சத்தியமூர்த்தி இப்போது அந்த ஆலமரத்தடியில் கூடியிருந்த கூட்டத்தோடு தயங்கி நின்றான். சும்மா நின்று கொண்டு, பிச்சைப்போடும் படி கைகளை முன்னால் நீட்டினால் இவளுக்கு யாரும் இரங்க மாட்டார்கள். வயிற்றின் கொடுமை இவளை இவ்வளவு தந்திரமாக யோசிக்கச் செய்து பானையைக் கொண்டு கர்ப்பிணியாக நடிக்கச் செய்திருக்கிறது. குமரப்பன் இப்போது அருகிலிருந்தால் இந்தத் தந்திரத்தைக் கண்டு செயலாக்கியதற்காக இவளைப் பாராட்ட வேண்டும் என்பான். இங்கோ சொல்லால் அடிக்கிறவர்களும், கல்லால் அடிக்கிறவர்களுமாக இவள் மேல் ஆத்திரப் படுகிறவர்களே கூடியிருக்கிறார்கள். இவள் இப்படிச் செய்ததற்காக இவள் மேல் மட்டும் கோபப்பட்டு என்ன பயன்? இவளைப் பசிக் கொடுமையால் இப்படிச் செய்ய விட்ட சமூகத்துக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு என்றுதான் சத்தியமூர்த்தியால் நினைக்க முடிந்தது. பக்கத்தில் நின்ற ஒருவர் அவனிடம் சொல்லலானார்.

"என்ன அநியாயம் சார்! கலிகாலம் என்கிறது சரியாயிருக்குப் பாருங்க. வயிற்றிலே வெறும் பானையக் கட்டிக் கொண்டு இத்தனை நாட்களாக இந்தப் பாதையில் வந்து போய்க் கொண்டிருக்கிற அத்தனை பேரையும் முட்டாள்களாக்கியிருக்கிறாளே சார். அப்படியே அசல் வயிற்றுப் பிள்ளைக்காரி மாதிரி எல்லாரையும் நம்ப வைச்சிப் பிழைப்பை நடத்தியிருக்கா..."

"அவளைக் குற்றம் சொல்லிக் கலிகாலத்தின் தலையில் பழியைப் போட்டுவிட்டால் மட்டும் போதாது சார்! உலகம் அவளை அநாதையாய்ப் பிழைக்க வழியில்லாமல் முட்டாளாக்கியிருக்கிறது. அவள் வேறு வழியில்லாத காரணத்தால் பதிலுக்கு உலகத்தை முட்டாளாக்கத் தொடங்கியிருக்கிறாள்" என்று அவருக்குப் பதில் கூறினான் சத்தியமூர்த்தி. இந்தப் பதிலை அவனிடமிருந்து எதிர்பாராத அந்த மனிதர் அவனை முறைத்துப் பார்த்தார். உலகத்தைப் பார்த்து அதைப் படைத்த கடவுளுக்கே தலைசுற்றுவதாக ஒரு கார்ட்டூன் வரைய வேண்டுமென்று குமரப்பன் அடிக்கடி சொல்லுகிற வாக்கியத்தை இப்போது நினைத்துக் கொண்டான் சத்தியமூர்த்தி. தன்னுடைய துன்பங்கள் பலவாக இருந்தும் இப்படித் தெருவில் சந்திக்கிற சுகதுக்கப் பிரச்சினைகளும் தன் இதயத்தைப் பாதிப்பதையோ, உள்ளே புகுந்து எண்ணங்களாக உருவெடுப்பதையோ, தவிர்க்க முடியாமல் தவித்தான் அவன். அந்த அப்பாவிப் பிச்சைக்காரப் பெண்ணைக் கூட்டம் கல்லாலடித்தே கொன்று விடாமல் மிகவும் சிரமப்பட்டுப் பேசித் தடுக்க வேண்டியிருந்தது.

"இவரு பெரிசா நியாயத்தைக் கண்டுட்டாரு... இந்தக் காலத்திலே பெண் பிள்ளையின்னா... இப்படிப் பரிஞ்சுக்கிட்டு வர்ரவங்க அதிகமாத்தான் இருப்பாங்க" என்று சத்தியமூர்த்தியை வம்புக்கு இழுத்தான் ஒரு காலி. நிதானமாகப் பதில் சொல்ல வேண்டியவர்களுக்கு நிதானமாகப் பதில் சொல்லியும் கொதிப்போடு பதில் சொல்லியும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி அந்தப் பிச்சைக்காரியை அங்கிருந்து தப்பிச் செல்ல வைப்பதற்குச் சத்தியமூர்த்தி மிகவும் பாடுபட்டான். 'நமக்கு ஏன் வம்பு? இப்படித் தெருவில் ஆயிரம் நடக்கும். ஒன்றையும் கண்டு கொள்ளாதது போல் போவது தான் நாகரிகம்' என்று எல்லாரும் சாதாரணமாக நினைப்பது போல் நினைத்துக் கொண்டு அவனும் வீட்டுக்குப் போயிருந்தானானால் அந்தப் பிச்சைக்காரி குற்றுயிரும் குலையுயிருமாக அங்கேயே அடிபட்டு விழுந்து கிடக்கும்படி நேரிட்டிருக்கும். அப்படி நேரிடும்படி விடுவதற்கு நிச்சயமாக அவன் தயாராக இல்லை. அந்த ஊர் வம்பைத் தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்து விட்டு அவன் வீட்டுக்குத் திரும்பிய போது இரவு ஒன்பது மணிக்கு மேலாகியிருந்தது. அவன் வீட்டுக்குள் நுழைந்து சட்டையைக் கழற்றிவிட்டுக் கிணற்றடிக்குப் போய்க் கைகால் கழுவிச் சுத்தம் செய்து கொண்டு திரும்பிய போது வாயிலில் கார் வந்து நிற்கிற ஓசையும் அதையடுத்து மிதியடி ஓசை சரசரக்க அப்பா நடையேறி வருகிற ஓசையும் கேட்டது.

"பையனை நாளைக்கு என்னை அவசியம் வந்து பார்க்கச் சொல்லுங்கள்..." என்று கார் வாசலிலிருந்து கிளம்புவதற்கு முன் காருக்குள் இருந்தபடியே கண்ணாயிரம் தன் தந்தையிடம் கூறிவிட்டுச் சென்ற சொற்களும் வீட்டுக்குள்ளேயிருந்து வந்து கொண்டிருந்த சத்தியமூர்த்திக்குக் கேட்டன.

"ஏண்டா! நீ சாயங்காலம் கண்ணாயிரத்தைப் போய்ப் பார்க்கவில்லையா?" என்ற கேள்வியோடும் கோபத்தோடும் அவனை எதிர்கொண்டார் தந்தை. சிறிது நேரம் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தயங்கினான் சத்தியமூர்த்தி. மிகவும் நிதானமாகவும் பொறுமையிழந்து விடாமலும் அவருக்குப் பதில் சொல்ல விரும்பினான் அவன். அந்தக் கேள்விக்கு மறுமொழி சொல்ல அவன் அவ்வளவு நேரம் தயங்குவதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத தந்தை இரண்டாவது தடவையாகவும் கடுமையான குரலில் அதே கேள்வியை அவனிடம் கேட்டார்.

"இன்றைக்குப் பார்க்க முடியவில்லை அப்பா! முடிந்தால் நாளைக்குப் பார்க்கிறேன்!"

"அந்த வெட்டிப்பயல் வாயரட்டைக் குமரப்பனோடு ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் நாளைக்கு நீ கண்ணாயிரத்தைப் பார்க்க முடியாமல் போகும். நான் உன்னை டவுன் ஹால் ரோடில் போகும் போது பார்த்தேன். நீ மட்டும் தனியாயிருந்தால் அங்கேயே காரை நிறுத்தச் சொல்லியாவது பார்த்திருக்கலாம். தவிரவும் நமக்குக் காரியம் ஆகவேண்டுமானால் நாம் தான் தேடிக் கொண்டு போய்ப் பார்க்கணும். இப்படி மனிதர்களை மதிக்காமல் விலகிப் போனால் ஒரு காரியமும் ஆகாது."

சத்தியமூர்த்தி மௌனமாக நின்று கொண்டிருந்தான். "தயவு செய்து கண்ணாயிரத்தை மதிக்கச் சொல்லி என்னை வற்புறுத்தாதீர்கள், அப்பா" என்று தந்தைக்குப் பதில் சொல்லி விட அவன் நாக்குத் துடித்தது. மிகவும் சிரமப்பட்டுத் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான் அவன். தந்தை அவன் மேல் கோபத்தோடு ஏதோ முணுமுணுத்துக் கொண்டே வீட்டுக்குள் சென்றார். உள்ளே அம்மா சாப்பிடுவதற்கு இலை போட்டுக் கொண்டிருந்தாள்.

ஏதோ சொல்லித் தீர்க்க முடியாத ஊமை வேதனை மனத்தை அரிப்பது போலிருந்தது. அப்படியே சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு மறுபடியும் தெருவில் இறங்கி நடந்து விட்டான் அவன். யாரிடமும் சொல்லிக் கொள்ளவும் இல்லை. அம்மா சாப்பிடுவதற்குத் தேடுவாளே என்றும் கவலைப்படவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டுக்குள் தங்கினால் தந்தையோடு பேச்சு வளரும் என்று நினைத்தே அவன் புறப்பட்டிருந்தான். வடக்கு மாசி வீதியில் கிருஷ்ணன் கோயிலுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்த பேச்சியம்மன் படித்துறைக்குப் போகிற சாலையில் அவனுடைய வீடு அமைந்திருந்தது. அங்கிருந்து புறப்பட்டு கிருஷ்ணன் கோயில் சந்து வழியாக நடந்தான் அவன். மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போய் விட்டுத் திரும்புவதே அப்போது அவன் நோக்கமாக இருந்தது. கோயில் அந்த நேரத்தில் மிகவும் அமைதியாக இருக்கும். அத்தகைய அமைதி நிறைந்த சூழ்நிலையில் நான்கு ஆடி வீதிகளையும் ஒரு முறை சுற்றிவிட்டு வந்தாலே மனம் நிம்மதியடைந்துவிடும். சத்தியமூர்த்தி இந்த அனுபவத்தைப் பலமுறை உணர்ந்திருக்கிறான். கம்பீரமான அந்த கோபுரங்களைக் கால் நாழிகைப் போது இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தாலே ஓர் உற்சாகம் உண்டாகும். மதுரையின் அந்தக் கோபுரங்களுக்கும் அவற்றையுடைய ஆலயத்துக்கும் அப்படி ஒரு சக்தி உண்டு. கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த போது வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை தெருத்திருப்பத்தில் அவனுக்கு எப்போதோ அறிமுகமாகியிருந்த பாட்டு வாத்தியார் ஒருவர் சந்தித்துப் பேசப் பிடித்துக் கொண்டுவிட்டார். தெரு முனையில் வெற்றிலைப் பாக்குக் கடையில் நின்று கொண்டிருந்தவர் சத்தியமூர்த்தியைப் பார்த்ததுமே கூடவே நடந்து பேசிக்கொண்டு புறப்பட்டு விட்டார். ஒருவிதமான குறைவுமில்லாமல் பெயரில் மட்டும் குறைவுபட்டு மொட்டைக் கோபுரம் என்ற பெயரோடு மொட்டையில்லாமல் பூரணமாய் நிமிர்ந்து நிற்கும் வடக்குக் கோபுரம் எதிரே தெரிந்தது. கோபுர வாசல்வரை பேசிக் கொண்டே வந்த பாட்டு வாத்தியார் விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார். மொட்டைக் கோபுரத்து முனியாண்டிக்குச் சிதறு தேங்காய் போடுவதைப் பொறுக்குவதற்கு அடித்துப் பிடித்துக் கொண்டிருக்கும் விடலைக் கும்பலின் கூப்பாடு கூட அப்போது அங்கே அடங்கிப் போயிருந்தது. கோவிலுக்குள்ளேயும் கூட்டம் இல்லை. அவ்வளவு அமைதியை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை என்று சொல்லும்படி கோவிலின் எல்லாப் பகுதிகளும் இயல்பை மீறின அமைதியோடு இலங்கின. அம்மன் சந்நிதிக்கு முன்புறம் கிளிக்கூட்டு மண்டபத்தினருகே எதிர்பாராத விதமாக மோகினியைச் சந்தித்தான் அவன். கையில் தேங்காய்ப் பழக்கூடையோடு சந்நிதிக்குள் போவதற்காக அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். அவளுக்காக அவளோடு வந்திருந்த சிறுபையன் அர்ச்சனைச் சீட்டு வாங்கிக் கொண்டிருந்தான். அப்போதிருந்த மனநிலையில் அந்த எதிர்பாராத சந்திப்புக்காக ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கவோ, அவளோடு நின்று பேசவோ தோன்றாமல் நேரே சந்நிதிக்குள் நடந்து போய் விட்டான் சத்தியமூர்த்தி. மோகினியும் அவனைப் பின் தொடர்ந்து தான் சந்நிதிக்குள்ளே சென்றாள். யாரையும் எதிரே சந்திக்கவோ, பேசவோ விருப்பமில்லாமல் நைந்து போயிருந்த அந்த மனநிலையிலும் கூடச் சத்தியமூர்த்தியின் கண்களில் அவள் அழகு தனித்தன்மையோடு தெரிந்து கவர்ந்தது. அம்மன் சந்நிதி முகப்பில் பாதரஸம் உருகுவது போல் ஒளி ஒழுகிக் கொண்டிருந்த நீலக் குழல் விளக்குகளின் கீழே நிறங்களே தமக்குள் ஒன்றுபட்டு முயன்று படைத்த அபூர்வ ஓவியமாய்த் தோன்றினாள் மோகினி. அவளுடைய இதழ்கள் தன்னோடு பேசிவிடத் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் ஒன்றும் பேசாமல் அவளைப் பார்க்காதது போலவே முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தான் அவன். கருநாகமாய் நீண்டு பின்னிக் கொண்டு தொங்கும் சடைக் குஞ்சலங்கள் ஆட, ஓசைப்படும் வளைகளும், ஓசைப்படாமல் மணக்கும் பூக்களின் மணமுமாக அவள் தன் பின்னால் தனக்கு மிக அருகே நடந்து வந்து கொண்டிருப்பது புரிந்தும் புரியாதது போல் முன்னால் சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. சந்நிதி முகப்பில் பித்தளைக் கிராதியின் இருபுறமும் நின்று எதிரெதிரே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள நேர்ந்த போதும் ஒன்றும் பேசாமல் மெல்லப் புன்னகை மட்டும் செய்தான் அவன். கவனித்ததில் அப்போது அவளுடைய உதடுகள் தன்னோடு பேசத் துடித்துக் கொண்டிருப்பது அவனுக்குத் தெரிந்தது. உடன் வந்திருந்த சிறுவன் அவளோடு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். அவன் கேள்விகளுக்குச் சுவாரசியமில்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். அர்ச்சனை முடிந்து அவள் புறப்படுவதற்குள் அம்மன் சந்நிதிக்குப் போய்விட நினைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி நடைபெறவில்லை. அவளை முந்திக்கொண்டு போய் விட நினைத்த அவன் நினைப்பு வீணாயிற்று. அம்மன் சந்நிதியின் இரண்டாவது திருச்சுற்றில் கொலுமண்டபத்தை நெருங்கிக் கொண்டிருந்த போதே அவனைப் பின் தொடர்ந்தாற் போல அவள் மிக அருகே வந்து சேர்ந்தாள்.

"இவ்வளவு நாழிகைக்கு அப்புறம் கோவிலுக்கு வந்திருக்கிறீர்களே?" - வேறு எதையோ பேச நினைத்து அதைப் பேசுவதற்குச் சொற்களும், துணிவும் கிடைக்காத பதற்றத்தினால் அன்பின் மிகுதியால் பிறந்த ஒருவிதமான பயத்தோடு அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டாள் அவள்.

"இதே கேள்வியை உங்களிடம் திருப்பிக் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவீர்கள்?" என்று சத்தியமூர்த்தி அவளைத் திரும்பிப் பார்த்து வினாவிய போது அவள் சிரித்தாள். முகமும் இதழ்களும் கனிந்து சிவந்தன. இந்த நாணத்தின் சுவடு முகத்திலிருந்து மறைவதற்கு முன்பாகவே, அவள் தன்னை நேருக்கு நேர் பார்க்கக் கூசியபடி வேறு எங்கோ பார்த்துக் கொண்டே சொல்லிய மற்றொரு வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தைத் தொட்டு உணர்வு நெகிழும்படி செய்தது. "உயிரைக் கொடுத்த தெய்வத்தைத் தரிசிக்க வந்தேன். அப்படி வந்த இடத்தில் உயிரைக் காப்பாற்றிய தெய்வத்தின் தரிசனமும் கிடைத்திருக்கிறது...!" என்று சொல்லிவிட்டு மேலே நடக்கத் தோன்றாமல் நின்றாள் அவள்.

சத்தியமூர்த்தி தன்னைத்தானே வெறுத்துக் கொள்கிற குரலில் அவளுக்கு மறுமொழி கூறினான்:

"என்னையா தெய்வமென்று சொல்கிறீர்கள்? நான் துயரங்களும் தேவைகளும் நிறைந்த வெறும் மனிதன். பலவீனங்களும் தோல்விகளும் நிறைந்த ஏழை. ஏமாற்றங்களுக்கும் வேதனைகளுக்கும் ஆட்பட்டுத் தவிக்கிற பாமரன். சாண் ஏறினால் முழம் சறுக்கித் தொல்லைப் படுகிறவன். கண்ணாயிரத்தைப் போல் எல்லாவிதமான வசதிகளும் உள்ளவர்கள் தாம் இன்றைய சமூகத்துக்குத் தெய்வமாகிய தகுதி உடையவர்கள். நானும் என்னைப் போன்றவர்களும் கூட அவர்களிடம் வேலைக்குச் சிபாரிசு தேடிக் கொண்டு போய் நிற்க வேண்டிய அளவு வசதியற்றவர்கள்..."

"அந்தப் பாவியின் பெயரை இப்போது எதற்கு எடுக்கிறீர்கள்? காலையில் கூந்தல் தைல விளம்பரத்துக்காகப் புகைப்படம் எடுக்கிறபோதே அந்தப் பாவிக்கும் எனக்கும் தகராறு வந்தது. அவன் ஏதோ ஒரு சேலையைக் கொண்டு வந்து கொடுத்து, 'இதைக் கட்டிக் கொண்டால்தான் படம் எடுக்க நன்றாயிருக்கும்' என்றான். நான் பிடிவாதமாக மறுத்து விட்டேன். கடைசியில் நான் சொல்லியபடிதான் அவன் படம் பிடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. இதனால் அம்மாவுக்கு என் மேல் ஒரே ஆத்திரம். நான் அந்தப் பாவி சொல்கிறபடி தான் கேட்க வேண்டுமென்கிறாள் அம்மா..."

"வயிறு நிரம்ப வேண்டுமானால் யார் சொல்கிற படியாவது கேட்டுத்தான் ஆகவேண்டும்... ஏற்றுக் கொள்வதற்குக் கடுமையாகவும் வேதனையளிப்பதாகவும் இருந்தாலும் கூட இதுதான் வாழ்க்கையைப் பற்றிய உண்மை..."

"அப்படிச் சொல்லாதீர்கள். என் வாழ்க்கையில் நான் பார்த்த - பார்த்துக் கொண்டிருக்கிற ஒரே உண்மை நீங்கள் தான்..."

"இருக்கலாம்! ஆனால் 'இந்த உண்மை' மிகவும் ஏழையாயிருக்கிறதே!"

"ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே சுற்றுமுற்றும் யாராவது வருகிறார்களா என்று பார்த்துவிட்டுச் சத்தியமூர்த்தியே எதிர்பார்த்திருக்க முடியாதபடி கீழே குனிந்து தேங்காய் பழத்தட்டை வைத்துவிட்டு அவசரம் அவசரமாக அவன் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்துக் கொண்டு எழுந்தாள் மோகினி. சத்தியமூர்த்திக்கு மெய் சிலிர்த்தது. பிரகாரத் திருப்பத்தில் இது நிகழ்ந்தது. மோகினியோடு வந்திருந்த சிறுவன் முன்னால் நடந்து போயிருந்தான். அவர்களும் அவன் பின்னால் மெல்ல நடந்து சென்றார்கள்.

"இரயிலில் நீங்கள் வந்த பெட்டியில் நானும் சேர்ந்து வந்ததைப் பார்த்துவிட்டே பொறுமையிழந்து போய் என்னிடம் கேள்விகளைக் கேட்டார் கண்ணாயிரம். இப்போது இந்தக் கோயில் பிரகாரத்தில் நாமிருவரும் சேர்ந்து நடப்பதை அவர் பார்த்தால் என்னைக் கொலையே பண்ணிவிடுவார்."

"திரும்பத் திரும்ப அந்தப் பாவியைப் பற்றியே பேசிக் கோவிலைக் களங்கப்படுத்தாதீர்கள். அந்தக் கொடியவனைப் பற்றிப் பேசுவதற்குக் கோவிலைப் போல புனிதமான இடம் தகுதியானதில்லை."

இப்படிக் கண்ணாயிரத்தைப் பற்றிப் பேசும் போதெல்லாம் அவள் குரலும் முகமும் சீற்றமடைவதையும் கண்கள் சினம் கனலுவதையும் பார்த்துச் சத்தியமூர்த்தியே மருண்டான். வாழ்க்கையின் தீய சக்திகளை எதிரே சந்திக்கவும் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் குமுறுகிற இவளையும், தீய சக்திகளையும் பொறுத்துக் கொண்டாவது காரியங்களைச் சாதித்துக் கொள்ள வேண்டுமென்று நினைக்கு இவள் தாயையும் தன் மனத்துக்குள் சத்தியமூர்த்தி ஒப்பிட்டுச் சிந்தித்தான். எப்போது பேசினாலும் அவள் பேசுகிற வாக்கியங்களில் தனி முத்திரையும் பேசப்படுகிறவரை மயக்கி விடுந்தன்மையும் வாய்ப்பதையும் கூட அவன் தொடர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான்.

'என்ன மயக்கம் வேண்டிக் கிடக்கிறது?' அழகில்லாமல் முகத்தில் அரிதாரமும் பூசிக் கொள்ளாமல் மாசி வீதி ஆலமரத்தில் சந்தித்த பிச்சைக்காரியைப் போல் பசிக் கொடுமைக்காக வயிற்றில் பானையைக் கட்டிக் கொண்டு கர்ப்பிணியாகத் தோன்றிப் பிறரை மயக்க முயல்கிறவர்கள் அகப்பட்டுக் கொண்டால் கல்லெறிப்படுகிறார்கள்.

'இந்த உலகமும் வசதி உள்ளவர்கள் பொய்யாக மயக்குவதைத்தான் மன்னிக்கத் தயாராக இருக்கிறது. வசதி அற்றவர்கள் அதே காரியத்தைச் செய்யும் போது அகப்பட்டுக் கொள்கிறார்களே...' என்று வெறுப்பான வழியிலும் அவன் சிந்தனை சிதறி ஓடியது. ஒன்றும் பேசிக் கொள்ளாமல் பிரகாரத்தில் போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள். மோகினியோடு சேர்ந்து இணையாக நடக்காமல் அவளுக்குப் பத்தடி முன்பாகவோ, பின்பாகவோ விலகி நடந்து போக வேண்டுமென்று தன்னால் ஆனமட்டும் சத்தியமூர்த்தி முயன்று பார்த்தான். அவன் வேகமாக நடந்தால் அவள் நடையும் வேகமாகியது. அவன் மெதுவாக நடந்தால் அவள் நடையும் மெதுவாகியது. இலட்சணமான தேர் அலங்கரிக்கப்பட்டு வீதியில் வருவது போல் அவள் நடப்பது மிக நன்றாயிருந்தது.

அம்மன் சந்நிதியிலிருந்து சுவாமி சந்நிதிக்குள் போகிற வழியில் நகர முடியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கும் பிரம்மாண்டமான முக்குறுணியரிசிப் பிள்ளையாரைக் கடந்து வலது பக்கத்தில் தொடங்கும் பெரிய பிரகாரத்தில் இப்போது போய்க் கொண்டிருந்தார்கள் அவர்கள்.

"நீங்கள் ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வரவேண்டும். அப்போது உங்கள் முன்னிலையில் நீங்கள் மட்டுமே காணும்படி ஆண்டாள் பாசுரத்துக்கு அபிநயம் பிடித்து ஆடிக் காட்டுவேன் நான்."

கெஞ்சுவது போன்ற குரலில் அவள் அவனிடம் இந்த வேண்டுகோளைச் சொல்லும்போது அவர்கள் சங்கத்தார் கோவிலைக் கடந்து வடக்குப் பிரகாரத்தில் புகுந்திருந்தார்கள். பிரகாரம் அதன் அடுத்த நுனி வரையில் வேற மனித சஞ்சாரமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. சத்தியமூர்த்தி அவளைக் கேட்டான்:

"உங்கள் வீடு எங்கே இருக்கிறது?"

"சங்கீத விநாயகர் கோவில் தெரு என்று வடக்கு மாசி வீதியிலிருந்து இந்தக் கோவிலுக்கு வருகிற வழியில் ஒரு சிறிய சந்து இருக்கிறதே! தெரியுமா?" இந்த வினாவுக்கு சத்தியமூர்த்தியிடமிருந்து பதில் இல்லாமற் போகவே அவளே மீண்டும் பேசினாள்.

"வித்துவான் பொன்னுசாமிப் பிள்ளை சந்துக்கு மேற்குப் பக்கமாக மறுபுறம், தானப்ப முதலித் தெருவில் போய் முடிகிற மாதிரி ஒரு தெரு இருக்கிறதே, ஞாபகமில்லையா உங்களுக்கு?..."

"ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதுதான் நீங்கள் சொல்கிற தெருவா என்பதுதான் நினைவில்லை! நான் உங்கள் வீட்டையோ, தெருவையோ விசாரித்து வைத்துக் கொண்டும் பயனில்லை. காரணம், இன்று வரை நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற நளின கலைகளைச் சிறிதும் இரசிக்கத் தெரியாமல் வாழ்க்கையின் கஷ்டங்களையே இரசித்து வளர்ந்துவிட்ட ஒருவனிடம் வந்து நீங்கள் உங்களுடைய ஆண்டாள் நாட்டியத்தைப் பார்க்க வரும்படி கூப்பிடுகிறீர்கள்."

"கூப்பிடவில்லை, கட்டாயமாக அழைக்கிறேன். அதை நீங்கள் தான் பார்க்க வேண்டுமென்று என் அந்தரங்கம் ஆசைப்படுகிறது."

"உலகத்திலேயே மிகவும் ஏழையான ஒருவனை நீங்கள் சிரமப்பட்டு அழைக்கிறீர்கள்."

"அதுதான் சொன்னேனே; ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை. நீங்களே ஏழையானால் உங்களால் காப்பாற்றப்பட்ட நான் உங்களைவிட பெரிய ஏழை."

அவள் இவ்வாறு கூறிக்கொண்டே கண்களில் நீர் நெகிழச் சத்தியமூர்த்தியை ஏறிட்டுப் பார்த்தாள். சத்தியமூர்த்திக்கு அந்தப் பேதையின் இதயம் ஒருவாறு புரிந்தது. அன்று இரவு அவன் கோவிலிலிருந்து வீடு திரும்பிய போது இரவு நெடு நேரமாயிருந்தது. பிள்ளை சாப்பிடாமலும் சொல்லிக் கொள்ளாமலும் போய் விட்டதனால் அம்மா வீட்டு வாசலிலேயே அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சொல்லிக் கொள்ளாமலும் சாப்பிடாமலும் வெளியே போனதற்காக அம்மா அவனிடம் ஏதேதோ சொல்லி வருத்தப்பட்டாள். ஒன்றும் பதில் பேசாமல் ஏதோ பேருக்குச் சாப்பிட்டுவிட்டுத் திண்ணையில் வந்து பாயை விரித்துப் படுத்தான் அவன்.

அத்தியாயம் - 12

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றியவுடன் தான் தெய்வத்துக்கு நன்றி செலுத்துவதென்று வைத்துக் கொண்டு தெய்வமும் அப்படிப்பட்ட நன்றியிலேயே திருப்தியடைந்து விடுமானால், அப்புறம் சர்க்கார் அதிகாரிகளுக்கும் தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்.

நாட்கள் சுவாரசியம் இல்லாமல் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து ஒரு விவரமும் தெரியவில்லை. கோடை வெயிலின் கொடுமை காலை எட்டு மணிக்கு மேல் மாலை ஆறு மணி வரை நகரத்தை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. நாள் தவறாமல் சத்தியமூர்த்தியின் தங்கை ஆண்டாள் தபால்காரனை எதிர்பார்ப்பதும், வாசலுக்கு வந்து காத்து நிற்பதும், ஏமாற்றத்தோடு திரும்பி வந்து, "அண்ணா! தபால் ஒண்ணும் இல்லையாம்?" என்று தமையனிடம் சொல்லிவிட்டுப் போவதுமாக எதிர்பார்த்தது எதுவோ அது நிகழாத நாட்கள் ஒவ்வொன்றாக நீண்டு கொண்டிருந்தன. மதுரை நகரமும் சுற்றுவட்டாரத்துப் பட்டி தொட்டிகளும் ஒன்று சேர்ந்து மொத்தமாக எதிர்பார்க்கும் நிகழ்ச்சியாகச் சித்திரைத் திருவிழா வந்து கொண்டிருந்தது. எந்தப் பக்கம் திரும்பினாலும், "சாமி என்னைக்கு ஆத்திலே எறங்குது?" என்று அழகர் ஆற்றில் இறங்குவதைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார்கள். தெருக்களில் கோடைக்கான கீற்றுப் பந்தல்களும், தண்ணீர்ப் பானைகளும் அதிகமாயின. கல்லூரிகளிலும், பள்ளிக்கூடங்களிலும் தங்கள் மக்களைச் சேர்க்க இடம் தேடி அலையும் பெற்றோர்களும் பெண் குழந்தைகளுக்கு வரன் தேடி அலையும் பெற்றோர்களுமாக எங்கும் ஒருவிதமான பரபரப்போடு வாழ்க்கை ஓடத் தொடங்கியிருந்தது. பகல்நேரம் முழுவதும் சத்தியமூர்த்தி வீட்டிலேயே அடைந்து கிடந்தான். அப்பா கண்ணாயிரத்தைச் சந்திக்கச் சொல்லி அவனை நச்சரித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லிக் கண்ணாயிரத்தைப் பார்க்காமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தான் அவன். மல்லிகைப் பந்தலில் இருந்து ஒரு விதமான தகவலும் வராமற் போகவே தந்தை சத்தியமூர்த்தியை அதிகமாக வற்புறுத்தத் தொடங்கியிருந்தார். தந்தை அவனிடம் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அம்மாவின் மூலம் இன்னொரு தகவலும் அவனுக்குத் தெரிந்தது. வீட்டு மாடியை இடித்துக் கட்டுவதற்காகவும், தங்கை ஆண்டாளின் திருமணச் செலவுக்காகவும் அப்பா கண்ணாயிரத்திடம் ஐயாயிரம் ரூபாய்க்கு மேல் கடன் கேட்டு அலைந்து கொண்டிருக்கிறாராம். முதலை வாய்க்குள் காலை விடுவதைப் போல் அப்பா கண்ணாயிரத்தின் பிடியில் தானாகப் போய் வலுவில் சிக்கிக் கொள்கிறாரே என்பதை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இந்தச் செய்தியை அறிந்த பின்பே கண்ணாயிரத்தோடு தன் தந்தை அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பதற்கும், உடனே கண்ணாயிரத்தைப் பார்க்கும்படித் தன்னைத் தூண்டுவதற்கும் சரியான காரணம் அவனுக்குப் புரிந்தது. காலையும் மாலையும் எப்போது வந்து கண்ணாயிரம் கூப்பிட்டாலும் அப்பா மறுக்காமல் அவரோடு காரேறிப் போய்க் கொண்டிருந்ததற்கு வெளிப்படையாக வேறு என்னவோ காரணம் சொல்லிக் கொண்டிருந்தார். "மஞ்சள்பட்டி ஜமீந்தார் மக்கள் சபைத் தேர்தலுக்கு நிற்கப் போகிறானாம். ஆங்கிலமும் தெரியாமல் இந்தியும் தெரியாமல் தில்லிக்குப் போனால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்காதா? அதனால் ஜமீந்தாருக்கு மிக இரகசியமாக ஆங்கிலமும் இந்தியும் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய இடத்து விவகாரம் அல்லவா? அதனால் வெளியே சொல்லப்படாது. இது வெளியில் தெரியக்கூடாது என்று ஜமீந்தாரே கூச்சப்படுகிறார். 'இத்தனை வயதுக்கு மேல் ஜமீந்தாருக்குப் படிப்பில் மோகமா?' என்று மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கிவிடுவார்களோ என்பதற்காக அவர் பயப்படுகிறார்" என்று அப்பா ஒருநாள் பேச்சு வாக்கில் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தார். அப்பா கண்ணாயிரத்திடம் கடன் வாங்க முயல்வதும், மஞ்சள்பட்டி ஜமீந்தாருக்கு ஆங்கிலமும் இந்தியும் கற்பிப்பதாக அலைந்து கொண்டிருப்பதும் சத்தியமூர்த்திக்குச் சிறிது கூடப் பிடிக்கவில்லை. 'நான் சம்பாதித்துப் போடுவதற்குத் தயாராகாத வரையில் இதையெல்லாம் தடுப்பதற்கு எனக்கு உரிமை ஏது?' என்று அடங்கியிருந்தான் அவன். ஆங்கிலச் செய்தித்தாளில் விடுமுறைக்குப் பின் மல்லிகைப் பந்தல் கல்லூரி திறக்கப் போகிற நாளைக் குறிப்பிட்டு விளம்பரம் கூட அன்று காலையில் வெளிவந்து விட்டது. ஏமாற்றமும், குழப்பமும் அவனை ஒடுங்கிப் போகச் செய்திருந்தன. பெட்டியில் இருந்த பாரதியின் கடிதத்தை அவன் இரண்டாவது முறையாக எடுத்துப் படித்தான். அந்தக் கடிதத்தைப் படிப்பதில் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. 'என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்! உங்களை அவசியம் இங்கே எதிர்பார்க்கிறேன்' என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள் பூபதியின் மகள். அதைப் படிக்கும் போது அவன் தன் ஞாபகத்தில் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தான்.

"நான் உன் விருப்பப்படியே மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் உன் தந்தை என்னை ஏமாற்றி விடுவார் போல் இருக்கிறதே பெண்ணே!" என்று எண்ணிக் கொண்டே மனத்துயரத்தோடு அந்தக் கடிதத்தைப் பெட்டியில் வைத்துப் பூட்டினான் சத்தியமூர்த்தி. இனிமேல் மல்லிககப் பந்தலிலிருந்து கடிதமோ, ஆர்டரோ வரும் என்ற நம்பிக்கைக் கூட அவனுக்கு இல்லை. தன்னுடைய உருக்கமான கடிதம் கூடப் பூபதியின் மனத்தை மாற்றவில்லை என்று எண்ணியபோது அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாமல் இருந்தது. வெளியில் எங்கும் புறப்பட்டுப் போகவே பிடிக்காமல் வீட்டின் தனிமையில் புத்தகங்களை நாடி மன அமைதி பெற முயன்றான் அவன். அவன் கண்ணாயிரத்தைப் பார்க்காமலே தட்டிக் கழித்தது பிடிக்காததனால் தந்தை அவனோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். அம்மா தான் அவன் மனமறிந்து ஆறுதலாக அவ்வப்போது இரண்டொரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருந்தாள்.

"வருத்தப்படாதே சத்தியம்! உனக்கென்று எப்படியும் ஒரு வேலை காத்துக் கொண்டு தான் இருக்கும். இல்லாததையெல்லாம் நினைத்து நீயாக மனத்தைக் கெடுத்துக் கொள்ளாதே, நிம்மதியாயிரு" என்று அவன் முகமும் மனமும் வாடுவதைப் பொறுக்க முடியாமல் அம்மா ஆறுதல் கூறும் வேளையில் அவனுக்குச் சிறிது மன அமைதி கிடைக்கும்.

சித்திரா பௌர்ணமிக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. 'பூபதிக்கு இன்னொரு கடிதம் எழுதலாமா அல்லது ஒரேயடியாக மல்லிகைப் பந்தலை மறந்துவிட்டு வேறு கல்லூரிகளுக்கு முயற்சி செய்யலாமா?' என்று அவன் தயங்கிக் கொண்டிருந்த போது அந்த நல்ல செய்தி வந்து சேர்ந்தது. அவ்வளவு நாட்கள் அவனைக் காக்க வைத்ததற்கு வட்டியும் முதலுமாகச் சேர்ந்து வருவது போல் அன்று பகல் ஒரு மணித் தபாலில் மூன்று தனித் தனிக் கடிதங்கள் மல்லிகைப் பந்தலிலிருந்து அவனுக்கு வந்தன. அந்தக் கடிதங்கள் கைக்கு கிடைத்த போது அவன் அடைந்த மகிழ்ச்சியும் ஆர்வமும் எல்லையற்றவையாக இருந்தன. பூபதி தன் கடிதத்தைக் கண்டு அதில் தான் வேண்டிக் கொண்டிருந்தபடி தனக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை கொடுப்பார் அல்லது விரும்பாவிட்டால் கொடுக்க மாட்டார் என்று மட்டும் தான் சத்தியமூர்த்தி எதிர்பார்த்திருந்தான். அவரோ அவனுக்கு ஆர்டரும் அனுப்பி விட்டுத் தனியாக ஒரு கடிதமும் எழுதியிருந்தார். ஆர்டர் கல்லூரி அலுவலகம் மூலம் தனியாக வேறோர் உறையில் வந்திருந்தது. மூன்றாவது கடிதம் பாரதியிடமிருந்து வந்திருந்தது. படிப்பதற்கு மனம் முந்துகிற அந்தக் கடிதத்தை இறுதியில் படித்துக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டுப் பூபதியின் கடிதத்தை முதலில் பிரித்துப் படிக்கலானான் அவன்.

"அன்புக்குரிய இளைஞர் சத்தியமூர்த்திக்கு அநேக ஆசிகள். உங்கள் கடிதம் கிடைத்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை பார்க்க வேண்டும் என்று நீங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். எடுத்த எடுப்பில் உங்களைப் பார்த்தவுடன் தமிழ் விரிவுரையாளர் பதவியை உங்களுக்குத்தான் தரவேண்டும் என்று எனக்கே தோன்றியது. ஆனால் நமது சந்திப்பின் முடிவில் நீங்கள் பேசிய சில வார்த்தைகள் என் மனத்தை மிகவும் ஆழமாகப் புண்படுத்தி விட்டன. உங்களைத் தவிர வயதும் அநுபவமும் அதிகமாக உள்ள வேறு சிலரும் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் இப்போது உங்களையே இந்தப் பதவிக்கு நியமித்திருக்கிறேன். ஆர்டர் கல்லூரி அலுவலகத்திலிருந்து தனித் தபாலில் உங்களுக்குக் கிடைக்கும். நல்ல ஆசிரியர்கள் தான் என்னுடைய கல்லூரியின் செல்வம். நீங்கள் என்னுடைய கல்லூரிக்கு ஆசிரியராக வந்து பாடங்கள் கற்பிப்பது தவிர, மல்லிகைப் பந்தல் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து. நான் எதிர்பார்க்கிற பணிவும் விநயமும் நாளடைவில் தானாகவே உங்களிடம் ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறேன்."

என்று மிகவும் சுருக்கமாகக் கடிதத்தை முடித்திருந்தார் பூபதி. இந்தக் கடிதத்தில் ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பப் படித்தான் சத்தியமூர்த்தி. 'மல்லிககப் பந்தல் கல்லூரியின் அநுபவங்கள் உங்களுக்கே சில நல்ல பாடங்களைக் கற்பிக்கும் என்பது என் கருத்து' என்று எழுதியிருக்கும் வாக்கியத்தை எந்த அர்த்தத்தில் எப்படிப் புரிந்து கொள்வது என்று தயங்கினான் அவன்!

தனக்கு ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அந்த வாக்கியம் எழுதப்பட்டுள்ளதா அல்லது குத்திக் காட்டும் முறையில் எழுதப்பட்டுள்ளதா என்று சத்தியமூர்த்தியால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கல்லூரிக் கடிதத்தாளில் சம்பள விகிதம் - வந்து வேலையை ஒப்புக் கொள்ள வேண்டிய தேதி - எல்லாம் குறிப்பிட்டு ஆர்டர் டைப் செய்து அனுப்பியிருந்தார்கள். நிர்வாகி என்ற முறையில் அந்த ஆர்டரின் கீழேயும் பூபதிதான் கையொப்பமிட்டிருந்தார். கல்லூரி கோடை விடுமுறைக்குப் பின் திறக்கப்படும் முதல் நாளிலேயே அவன் மல்லிகைப் பந்தலுக்கு வந்து வேலையை ஒப்புக் கொண்டு விடவேண்டும் என்று ஆர்டரில் கண்டிருந்தது. பூபதியின் கடிதத்தையும் கல்லூரி ஆர்டரையும், மடித்து வைத்துவிட்டுப் பாரதியின் கடிதத்தை எடுத்து ஆவலோடு பிரித்துப் பார்த்தான் அவன். சென்ற கடிதத்தில் வைத்திருந்ததைப் போலவே இந்தக் கடிதத்திலும் இரண்டு மூன்று குடைமல்லிகைப் பூக்களை மறக்காமல் சொருகியிருந்தாள் அவள்.

"....."

"என் இதயமாகிய பீடத்தில் யாருடைய ரோஜாப்பூப் பாதங்கள் பதிந்து கொண்டிருக்கின்றனவோ அவருக்கு அநேக கோடி வணக்கங்களுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னுடைய முன் கடிதத்தில் நான் உங்களை வேண்டிக் கொண்டிருந்தபடி அப்பாவுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை அவர் வெளியே போயிருந்த போது அவருக்குத் தெரியாமல் நானும் எடுத்துப் படித்தேன். அவ்வளவு அருமையான இலக்கிய நயம் நிறைந்த கடிதத்தைப் படித்த பின்பும் அப்பாவால் எப்படி மனம் நெகிழாமல் இருக்க முடியும்? வேறு ஒரு சமயமாயிருந்தால் அப்பாவை உங்களுக்குச் சாதகமாக நினைக்க விடாமல் கல்லூரி முதல்வர் பிடிவாதமாக ஏதாவது சொல்லிக் கெடுத்துக் கொண்டேயிருப்பார். ஆனால் இப்போது சூழ்நிலை எந்த விதத்திலும் கல்லூரி முதல்வருக்குச் சாதகமாக இல்லை. சில நாட்களுக்கு முன் இங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதைப் பற்றி உங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.

இராஜாராமன் என்று ஒரு மாணவன் பி.எஸ்.ஸி. பரீட்சை முடிவுகள் செய்தித்தாளில் வெளியான தினத்தன்று தான் பரீட்சையில் தேறவில்லை என்பதற்காகக் கல்லூரி முதல்வரைக் குத்திக் கொலை செய்ய முயன்றான். 'பல்கலைக் கழகத்தார் நடத்துகிற பொதுப் பரீட்சையில் நீ தேறாமல் போனால் அதற்குக் கல்லூரி முதல்வர் எப்படி அப்பா காரணமாக முடியும்?' என்று அப்பா அந்தப் பையனை விசாரிக்கும் போது கேட்டார். அந்தப் பையனோ 'கல்லூரி நாட்களிலிருந்தே நான் உருப்படாமல் போக வேண்டும் என்று பிரின்ஸிபல் திட்டமிட்டுக் கொண்டு சதி செய்தார் சார்' என்று ஒரே முரண்டு பிடித்தான். பல்கலைக்கழகப் பரீட்சையில் அந்தப் பையன் தேறாமல் போனதற்குக் கல்லூரியின் முதல்வர் காரணமாக இருக்க முடியாதென்று அப்பாவுக்குத் தெரிந்திருந்தாலும், இந்த நிகழ்ச்சியால் முதல்வரிடம் அவர் வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்திருக்கிறது. மாணவர்களைக் கொலை செய்யவும் துணிந்துவிடத் தூண்டுமளவுக்கு முதல்வரிடம் என்ன கெட்ட குணம் இருக்க முடியும் என்று அப்பா சிந்திக்கத் தொடங்கியிருக்கிறார். முதல்வருக்குச் சம்பந்தமில்லாத பொதுப் பரீட்சையில் தான் தேறாமல் போனதற்கு முதல்வர் காரணம் என்று அந்தப் பையன் கூறுவது உணர்ச்சி வெறியால் இருக்கலாம் என்று தெரிந்திருந்தும், இப்படி ஒரு சம்பவம் நேர்ந்ததால் அப்பா மிகவும் மனம் குழம்பிப் போயிருக்கிறார். இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியானால் மல்லிகைப் பந்தல் கல்லூரியின் பெயர் கெட்டு விடுமே என்று அஞ்சி மிகவும் சிரமப்பட்டுத் தடுத்திருக்கிறார். கல்லூரி முதல்வர் தோள்பட்டையில் கத்திக்குத்துக் காயத்தோடு நாலைந்து நாள் ஆஸ்பத்திரியில் இருந்தார். முதல் நாள் சம்பவம் நடந்த தினத்தன்று நானும் அப்பாவும் கல்லூரி முதல்வரைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தோம். அப்பா ஆஸ்பத்திரியிலேயே முதல்வரைக் கண்டித்தார்.
"இளம் பிள்ளைகளை நிறைய மன்னித்த பின்னே திருத்த முடியும். ஒரு பையன், நீங்கள் காரணமில்லாத ஒரு காரியத்துக்காக உங்களைக் கொலை செய்துவிடக் கத்தியைத் தூக்கிக் கொண்டு வரும் அளவு என்ன கெடுதலை நீங்கள் அவனுக்குச் செய்திருக்க முடியும் என்று எனக்குப் புரியவே இல்லை! இந்த விதமான அசம்பாவிதங்களில் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்" என்று கடுமையான குரலில் அப்பா முதல்வரைக் கண்டித்த போது நானும் அருகில் தான் இருந்தேன். கேம்பிரிட்ஜில் படித்து ஆக்ஸ்போர்டில் டாக்டர் பட்டம் வாங்கி விட்டால் மட்டும் போதுமா? பையன்களிடம் அன்பும் நெகிழ்ச்சியும் கொண்டு பழகி அவர்களை வசப்படுத்தத் தெரியாவிட்டால் என்ன பயன்? நீங்கள் உங்களுடைய பட்டுப் பாதங்களால் இந்தக் கல்லூரிக் காம்பவுண்டுக்குள் நடக்கப் போகிற முதல் தினத்திலிருந்து இந்த விதமான வம்புகள் எல்லாம் தொலைந்து போகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நீங்கள் இங்கு விரிவுரையாளராக வந்தபின் எப்படிப்பட்ட முரட்டு இளைஞர்களும் உங்களைச் சுற்றிக் கைகூப்பிக் கொண்டு திரியப் போகிறார்கள் பாருங்களேன். நீங்கள் இங்கே மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட்டுத் திரும்பிய தினத்தன்று மாலை வேறொரு முதியவருக்கு 'இண்டர்வ்யூ' நடத்தி முடித்து அவரை அனுப்பிய பின் அப்பாவும் கல்லூரி முதல்வரும் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததை நானே என் செவிகளால் கேட்டேன். அப்போது கல்லூரி முதல்வர் உங்களைப் பற்றி அப்பாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?

'சத்தியமூர்த்தியைப் போல் இளம் பருவமும் தோற்றப் பொலிவும் கேட்பவர்களை மயக்கிவிடுகிற பேச்சுக் கவர்ச்சியும் உள்ள இளைஞனால் மாணவர் மனங்களை விரைவில் கெடுக்க முடியும்' என்று நாவு கூசாமல் அப்பாவிடம் குறை சொன்னவர் தானே இவர்? அப்படிச் சொன்னவருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும். அப்பப்பா! இந்த மனிதர் இருக்கிற இடத்தில் நெருப்புப் பிடித்து வெந்து போகும். நல்லவேளையாக இவர் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லை. உங்கள் கடிதம் கிடைப்பதற்கு முன்பே அப்பா தமிழ் விரிவுரையாளராக உங்களைத்தான் நியமிக்க எண்ணியிருந்தார். உங்கள் கடிதம் கிடைத்த பின் அந்த எண்ணம் நிச்சயமாகிவிட்டது. ஆனாலும் ஏனோ இத்தனை நாள் தாமதமாகிய பின் நேற்றுத்தான் உங்களுக்கு ஆர்டர் டைப் செய்யச் சொல்லி ஹெட்கிளார்க்கினிடம் கூறினார். அப்பாவும் உங்களுக்குத் தனியாக ஒரு கடிதம் எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். தெய்வம் நம்மைக் கைவிட்டு விடவில்லை. நீங்கள் இங்கு வந்து எங்கள் கல்லூரியில் பணிபுரியப் போகிறீர்கள் என்ற ஞாபகத்தையே கொண்டாடும் மனத்தோடு நான் உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். நான் கூடத் 'தமிழ் குரூப்' எடுத்துக் கொள்ள தீர்மானம் செய்து விட்டேன். அப்பாவிடம் அவர் சம்மதிக்கிற சமயம் பார்த்து ஒரு வார்த்தை சொல்லிச் சம்மதம் பெற்ற பின் நிச்சயமாகத் தமிழ்ப் பிரிவில் நானும் சேர்ந்து விடுவேன். உங்களிடம் மாணவியாக இருந்து படிப்பது ஒரு பாக்கியம். இனி அது எனக்குக் கிடைக்கப் போகிறது. 'ஆர்டர்' கிடைத்ததற்கு நன்றி தெரிவித்து அப்பாவுக்கு ஒரு வரி எழுதி விடுங்கள். கல்லூரி திறக்கும் நாளன்று உங்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு மிகவும் விருப்பமான மல்லிகைப் பந்தலின் மணம் மிகுந்த பூக்கள் இரண்டையும் இந்தக் கடிதத்தில் சொருகியிருக்கிறேன்.

உங்கள் பாரதி."

இந்தக் கடிதத்தைப் படித்ததும் இப்படிக் கூட ஓர் அன்பு உலகத்தில் உண்டா என்று ஆச்சரியம் அடைந்தான் சத்தியமூர்த்தி. உடனே பூபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதமும் எழுதினான். அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு அவன் வீடு திரும்பிய போது அன்றொரு நாள் மோகினியோடு கோவிலில் பார்த்த அந்தச் சிறுவன் உள்ளே செல்வதா திரும்பிப் போய் விடுவதா என்ற தயக்கத்தோடு தன் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"என்ன தம்பீ?"

"சார்! அக்கா உங்களைப் பார்த்து ஒரு சங்கதி சொல்லிவிட்டு வரச்சொன்னாங்க..."

"சொல்லேன்! என்ன சங்கதி அது?"

"சித்திரா பௌர்ணமியன்று மாலை ஏழு மணிக்கு தமுக்கம் பொருட்காட்சியில் மோகினி அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு நீங்க அவசியம் வரணுமின்னு அக்கா ஆசைப்படறாங்க! 'வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப் போய் அவரிடம் சொல்லிவிட்டு வான்னாங்க'. இந்த வீட்டைக் கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்."

"சரி வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று உன் மோகினி அக்காவிடம் போய்ச் சொல்."

"அப்படிச் சொல்லாதீங்க சார். கண்டிப்பா வரேன்னு சொல்லுங்க. நீங்க வரேன்னு சொன்னாதான் அக்காவுக்கு நிம்மதி."

சத்தியமூர்த்தியிடமிருந்து சரியான பதில் கிடைக்கிற வரை போவதில்லை என்பது போல் விடாப்பிடியாக நின்று கொண்டிருந்தான் அந்தப் பையன். ஏற்கெனவே பலவிதமாகப் புண்பட்டுப் போயிருக்கும் அந்த அபலையின் மனத்தைத் தானும் புண்படுத்துவானேன் என்ற எண்ணத்தோடு, "நான் அவசியம் உன் அக்காவின் நாட்டியத்தைப் பார்க்க வருகிறேன் தம்பி?" என்று மேலும் நம்பிக்கையளிக்கிற விதத்தில் சொல்லி அந்தப் பையனை அனுப்பினான் சத்தியமூர்த்தி. வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்பா அம்மா எல்லோரும் கூடத்தில் தான் இருந்தார்கள். ஆர்டரை எடுத்து அப்பாவின் கையில் கொடுத்தான் அவன். அதைக் கையில் வாங்கிக் கொண்டதும், பிரித்துப் பார்க்காமலே, "என்னது?" என்று அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார் அப்பா. சத்தியமூர்த்தி நிதானமாக மறுமொழி கூறினான்:

"மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து ஆர்டர் வந்திருக்கிறது."

தன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அம்மா, அப்பா, தங்கைகள் எல்லாரும் முகம் மலர்வதைக் கவனித்தான். ஆர்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார் அப்பா.

அம்மா அவனை நோக்கிக் கேட்டாள், "சம்பளம் என்ன போட்டிருக்கிறார்கள்?"

அம்மாவின் இந்தக் கேள்வியைப் பொறுத்துக் கொள்ளவும் முடியாமல் கோபித்துக் கொள்ளவும் முடியாமல், "சம்பளத்தைப் பற்றி என்ன வந்தது இப்போது? இருநூறு ரூபாய்க்கு மேல் வருகிறார் போல் ஏதோ போட்டிருக்கிறார்கள்" என்று பதில் கூறினான் அவன்.

"இன்று சாயங்காலம் பேச்சியம்மன் கோவிலில் நெய்விளக்குப் போட்டுவிடு கல்யாணி! நான் சத்தியத்தின் நட்சத்திரத்துக்குப் பழைய சொக்கநாதர் கோவிலில் ஓர் அர்ச்சனையும் செய்து விடுகிறேன்" என்று அம்மா கூறிய போது அந்த பக்தியும் பேதமை நிறைந்ததாகவே தோன்றியது சத்தியமூர்த்திக்கு.

ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றியவுடன் தான் தெய்வத்துக்கு நன்றி செலுத்துவது என்று வைத்துக் கொண்டால் என்ன ஆவது? அப்படிப்பட்ட நன்றியிலேயே தெய்வமும் திருப்தியடைந்து விடுமானால் அப்புறம் சாதாரணமான சர்க்கார் அதிகாரிகளுக்கும் தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? 'ஆர்டர் அனுப்பியவுடன் நன்றி செலுத்திப் பூபதிக்கு நான் எழுதிய கடிதத்துக்கும் அம்மாவின் அர்ச்சனைக்கும் தான் என்ன வேறுபாடு?' என்று நினைத்து வியந்தான் சத்தியமூர்த்தி.

"அண்ணா! இந்த வேலை எப்படியும் உனக்குக் கிடைத்து விடும் என்று எனக்குத் தெரியும். நீ இண்டர்வ்யூவுக்குப் புறப்பட்டுப் போன அன்று இரவே நான் கோவிலில் பூக்கட்டி வைத்துப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்" என்று தனியாக அவன் அருகே வந்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டாள் தங்கை ஆண்டாள். நாலைந்து முறை கண்ணாயிரத்தைப் பார்க்கச் சொல்லித் தன்னைத் துன்புறுத்தி விட்ட காரணத்தினால் இன்று எதிர்பாராத நிலையில் இந்த ஆர்டர் கிடைத்ததைக் கண்டதும் தந்தை தன்னிடம் மனத்தை விட்டுப் பேசவோ மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளவோ முடியாமல் தயங்கி வெட்கப்படுகிறார் என்பதையும் அப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அன்று மாலையில் அவன் குமரப்பனைச் சந்திக்கப் போயிருந்தான். மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து தனக்கு ஆர்டர் கிடைத்துவிட்ட செய்தியை சத்தியமூர்த்தி மகிழ்ச்சியோடு தன் நண்பனிடம் தெரிவித்தான். அந்த நல்ல செய்தி குமரப்பனுக்கும் மகிழ்ச்சியை உண்டாக்கிற்று. இருவரும் வழக்கம் போல் உலாவப் போனார்கள். திரும்பி வரும்போது குமரப்பனே தற்செயலாய்ச் சித்திரைப் பொருட்காட்சியைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்தான்.

"சத்தியம்! சித்திரைப் பொருட்காட்சிக்கு ஒரு நாள் போகவேண்டும். எங்கள் பத்திரிகைக்குப் பாஸ் வந்திருக்கிறது. உனக்கு என்றைக்கு வசதிப்படும் என்று சொன்னால் அன்றைக்கு நாம் இருவரும் போய் வரலாம்."

"பௌர்ணமியன்று போகலாம் குமரப்பன்! நான் ஏற்கெனவே பௌர்ணமியன்று அந்தப் பொருட்காட்சிக்குப் போகலாமென்று நினைத்திருந்தேன்."

"ஐயையோ! அழகர் ஆற்றில் இறங்குகிற நாளில் பார்த்தா போக வேண்டும் என்கிறாய்? கூட்டம் தாங்க முடியாதே? போதாத குறைக்குச் சித்திரா பௌர்ணமியன்று நாட்டியக் கலைமணி குமாரி மோகினியின் ஆண்டாள் நடனம் வேறு ஏற்பாடாகியிருக்கிறது."

"அதையும் தான் பார்ப்போமே?" என்று சிரித்துக் கொண்டே சொன்னான் சத்தியமூர்த்தி. குமரப்பனும் ஒருவாறு அதற்குச் சம்மதித்தான். சித்திரா பௌர்ணமியன்று மாலை ஐந்து மணிக்கே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட வேண்டும் என்று பேசிக் கொண்டு பிரிந்தார்கள் நண்பர்கள். நடுவில் ஒருநாள் தான் இருந்தது. அதுவும் வேகமாக கழிந்து விட்டது. பௌர்ணமியன்று காலையில் மோகினியக்கா ஞாபகப்படுத்துமாறு சொல்லி அனுப்பியதாக மறுபடியும் அந்தச் சிறுவன் சத்தியமூர்த்தியிடம் வந்துவிட்டுப் போனான்.

குமரப்பன் அன்று மாலை நாலரை மணிக்கே சத்தியமூர்த்தியின் வீட்டுக்கு வந்துவிட்டான். இருவருமாகப் புறப்பட்டுத் தமுக்கம் பொருட்காட்சி மைதானத்துக்கு யானைக்கல், கல்பாலம் வழியாக நடந்தே சென்றார்கள். பொருட்காட்சியின் பகுதிகள் எல்லாவற்றையும் நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு மோகினியின் நாட்டியம் நடைபெற இருக்கும் திறந்தவெளி அரங்குக்குள் அவர்கள் நுழையும் பொழுது ஆறே கால் மணி. கூட்டத்தில் எள் போட்டால் விழ இடமில்லை போலக் கூடியிருந்தது. அரங்குக்கு மிக அருகில் இரண்டாவது வரிசையில் வசதியான இடத்தில் நடுவாக உட்கார்ந்து கொண்டிருந்தார்கள் சத்தியமூர்த்தியும் குமரப்பனும்.

அப்போதும் அந்தச் சிறுவன் வந்து கூட்டத்தை நன்றாக உற்றுப் பார்த்து இரண்டாவது வரிசையில் சத்தியமூர்த்தி அமர்ந்திருப்பதைக் கண்டதும் முகமலர்ச்சியோடு திரும்பிச் சென்றான். முன் வரிசையில் வேறு சில பிரமுகர்களோடு கண்ணாயிரமும் தென்பட்டார். சிறிதும் தாமதமில்லாமல் சரியாக ஏழு மணிக்கு நாட்டியம் ஆரம்பமாகிவிட்டது. அரங்கை மறைத்துக் கொண்டிருந்த திரை விலகியதும் பாட்டும் தாளமும் சலங்கை ஒலியுமாகத் தெரிந்த முதல் காட்சியே சத்தியமூர்த்தியை மெய் சிலிர்க்கச் செய்தது.

'தன்னுடைய வாழ்வையும் உடல் பொருள் ஆவி முதலிய சகலத்தையும் கண்ணபிரானோடு சேர்க்குமாறு காதற் கடவுளாகிய மன்மதனை ஆண்டாள் வேண்டிக் கொள்வதாக ஆரம்பமாகும் நாச்சியார் திருமொழிப் பாசுரங்களோடு மோகினியின் நாட்டியம் தொடங்கியது. மோகினி ஆண்டாளாக நிற்க அவள் எதிரே கரும்பு வில்லில் மலர்க்கணை தொடுக்கும் கோலத்தில் இன்னொரு பெண் மன்மதனாகப் புனைந்து அலங்கரித்துக் கொண்டு ஆண் வேடத்தில் நின்றாள்.

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கு என்று
உன்னித்து எழுந்த என் தடநகில்கள்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படின்
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே!

என்ற விருத்தத்தை ஸாவேரி ராகத்தில் கெஞ்சி வேண்டிக் கொள்கிற குழைவோடு பாடியவாறே மன்மதனை நோக்கிக் கைகூப்பினாள் மோகினி. மன்மதனை வணங்கிக் கெஞ்சும் கண்களும் தாமரை மொட்டுப் போல் அழகாகக் கூப்பிய கையுமாக அவளுடைய அந்தத் தோற்றம் மிக வனப்பாயிருந்தது. ஆண்டாளையும் மன்மதனையுமே நேரில் கண்டு கட்டுண்டிருப்பது போல் கூட்டம் பேரமைதியில் ஒடுங்கிப் போயிருந்தது. 'கமல வண்ணத் திருவுடை முகத்தில் திருக்கண்களால் திருந்த நோக்கு எனக்கு அருளு கண்டாய்' என்று அடுத்த பாசுரத்தில் கடைசி வரிக்கு அவள் அபிநயம் பிடித்த போது தன் முகத்தையே உற்றுப் பார்ப்பதைக் கண்டு சத்தியமூர்த்தி கூச்சத்துடனே தரையைப் பார்த்தான். 'கேசவநம்பியைக் கால்பிடிப்பாளென்னுமிப் பேறு எனக்கு அருளு கண்டாய்' என்று மற்றொரு பாசுரத்தின் கடைசி வரிக்கு அபிநயம் பிடித்த போதும் அவள் சத்தியமூர்த்தியையே பார்த்தாள். மீனாட்சி கோவில் பிரகாரத்தில் அவள் தன் பாதங்களளத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டதை இப்போது அவன் நினைத்துக் கொண்டான். அந்த நினைப்பால் அவன் உணர்ச்சி வசப்பட்டுக் கண்கலங்கினான். அப்போது யாரோ பின் வரிசையிலிருந்து தோள் பட்டையைத் தட்டிக் கூப்பிடுவதாகத் தோன்றவே திகைப்போடு திரும்பிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. வந்து நின்றது அந்தச் சிறுவன் தான்.

அந்தச் சிறுவன் தன்னிடம் வந்து ஏதோ சொல்வதற்காகச் சிரமப்பட்டு வழி உண்டாக்கிக் கொண்டு அப்போது அங்கே வந்திருப்பது அவனுக்குப் புரிந்தது.

அத்தியாயம் - 13

பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரதநாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்த பின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து கொடுத்து விட்டார் பரத முனிவர்.

அவ்வளவு பெரிய அவையில் சிறிதும் இடைவெளியின்றிக் கூடியிருந்த கூட்டத்தினர் மோகினியின் நாட்டியத்தில் முழுமையாக ஈடுபட்டு இலயித்திருந்த வேளையில் இடையே புகுந்து வழி உண்டாக்கிக் கொண்டு வருவதால் எத்தனை கோபதாபங்களைச் சந்திக்க நேருமோ அத்தனை கோபதாபங்களுக்கும் ஆளாகிய பின்பே அந்தச் சிறுவன் சத்தியமூர்த்திக்கு அருகே வந்திருந்தான். "முடிந்ததும் பேசாமல் எழுந்து போயிடாதீங்க. அக்கா உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க" என்று அந்தச் சிறுவன் தன் காதருகே முணுமுணுத்த போது, முதலில் அவன் மேல் அடக்க முடியாத கோபமும் பின்பு அவன் வந்திருக்கிற சூழ்நிலையை உணர்ந்து அவன் மேல் அநுதாபமும் உண்டாயின சத்தியமூர்த்திக்கு. அமைதியான அவையில் மிகவும் அமைதியாயிருந்த முன் வரிசையில் தன்னிடம் அந்தச் சிறுவன் வந்து பேசிய பேச்சுக் குரலே சுற்றிலுமிருந்த சிலர் தன் பக்கம் பார்த்து முகத்தைச் சுளிக்கக் காரணமாயிருப்பதைச் சத்தியமூர்த்தி புரிந்து கொண்டான். "நாட்டியம் முடிந்ததும் உன் அக்காவை அவசியம் பார்த்துவிட்டுப் போகிறேன். கூட்டத்தில் இப்படி அடிக்கடி நடுவே வந்து பேசாதே தம்பி..." என்று சொல்லி அந்தச் சிறுவனை அனுப்பி வைத்தான் அவன். அந்தச் சிறுவனோடு பேசிக் கொண்டிருந்த போது கூட அரங்கிலிருந்து ஒலிக்கும் இனிய குரலும் மாறி மாறி ஒலிக்கும் சலங்கை ஒலியும் வந்து செவிகளை நிறைத்துக் கொண்டு தான் இருந்தன. வளைகளும், சலங்கைகளும் ஓசையிட அவள் கொடிபோல் துவண்டு நயமாக ஆடிய நாட்டியம் அவன் இதயத்தைக் கவர்ந்தது. அந்த நாட்டிய நிகழ்ச்சியின் முதற்பகுதியாகவும் முக்கியமான பகுதியாகவும் இருந்தது ஆண்டாள் நடனம் தான். அதன் பின் பாம்பாட்டி நடனம், மார்வாரி நடனம் என்று வேறு சில நிகழ்ச்சிகளும் தொடர்ந்தன. அவையெல்லாம் அவளுடைய ஆண்டாள் நடனத்தைப் போல் சத்தியமூர்த்தியின் மனத்தைத் தொட்டு உருகச் செய்யவில்லையாயினும், கலைத்திறனையும் அவள் அழகின் பல நிலைகளையும் அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தான். இயற்கையாகவே அவளுடைய கலைத்திறன் அவ்வளவு சிறப்புடையதா அல்லது தன்னைப் போல் அவளுடைய அந்தரங்கத்தில் இடம் பெற்றிருக்கும் ஓர் இரசிகன் எதிரே வந்து உட்கார்ந்திருந்ததனால் தனக்காகவே அவ்வளவு சிறப்பாக அது அமைந்ததா என்று நுணுக்கமாகவே எண்ணிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவளைப் பற்றிய கவர்ச்சியையும் மயக்கத்தையும் அவன் மனத்தில் அதிகமாக்கின. அவளுடைய கைகள் சேர்ந்தும், பிரிந்தும் முத்திரை பயின்றபோதெல்லாம் நிலவின் கதிர்களிலிருந்து கொய்த தளிர்களைப் போல் இலங்கிய விரல்களின் எழிலை நினைப்பதா? எதை நடித்துக் கொண்டிருந்தாளோ அதனுடைய பாவனைகளை அப்படியே மாற்றமின்றிப் பேசும் அவள் கண்களை நினைப்பதா? பாதரசங்களின் காட்சியழகும் சலங்கைகளின் ஓசை அழகுமாக அவளுடைய கால்கள் மான் துள்ளியது போல் துள்ளிய வேளைகளில் கூடியிருந்தவர்களின் மனங்களையெல்லாம் அவள் துள்ள வைத்த விந்தையை நினைப்பதா? எதை நினைப்பது? எதை நினைக்காமல் விடுவது? பரத நாட்டியம் பார்ப்பதற்காக ஓரிடத்தில் இரண்டு மணி நேரம் சேர்ந்து உட்கார்ந்தது என்பது சத்தியமூர்த்தியின் வாழ்க்கையிலும் இதுவே முதல் தடவை. இன்று இந்தக் கலை அவனை வசியம் செய்து கட்டுப்படுத்தி விட்டது. குமரப்பனுக்கு நாட்டியத்தைப் பற்றி நிறையத் தெரியும். வர்ணம், தில்லானா, ஜவானி, ஜதிஸ்வரம், சப்தம், அலாரிப்பு என்று அவன் ஏதாவது நாட்டியம் பார்க்கப் போய்விட்டு வந்த மறுநாள் வாய் ஓயாமல் அரற்றிக் கொண்டிருப்பான். அப்போதெல்லாம் அந்த அரற்றலைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர சத்தியமூர்த்தி அதற்கு தன் மனத்தில் எந்த விதமான முக்கியத்துவத்தையும் அளித்ததில்லை. இன்றோ 'வார்த்தைகளால் இவ்வளவு நேரத்தில் இப்படி பேசி முடித்து விடலாம்' என்று பேசி முடிக்க இயலாத அத்தனை அழகுகளும் இரகசியங்களும், வெளிப்படையாகவும் அந்தரங்கமாகவும் அந்தக் கலையில் நிரம்பியிருப்பதை மோகினி அவனுக்குப் புரிய வைத்து விட்டாள். இரண்டு மணி நேரத்துக்கு மேல் அந்த நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்து முடித்து விட்டு எழுந்திருந்த போது மோகினியின் மேல் இனம் புரியாததொரு மதிப்பு உருவாகிய மனத்துடன் எழுந்திருந்தான் சத்தியமூர்த்தி. இவ்வளவு அருமையான கலைத்திறனும், தொழில் நுணுக்கமும் தெரிந்த பெண் தான் அன்று இரயிலிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள் என்பதையும், அப்படி முயன்றபோது 'என்னைப் போன்றவர்கள் வாழ்வதும் வாழ நினைப்பதும் அசட்டுக் காரியம். சாவுதான் எனக்குப் புகலிடம்' என்று தன்னைத்தானே வெறுத்துக் கொள்ளும் விரக்தியோடு கூறினாள் என்பதையும் நினைத்துப் பார்க்கவே முடியாமல் இருந்தது. நாட்டியம் முடிந்து எழுந்த போது குமரப்பன் ஏதோ சொல்லத் தொடங்கினான்.

"பரதசாஸ்திரத்தை எழுதிய பரத முனிவர் மேலும், அபிநயதர்ப்பணத்தை எழுதிய நந்திகேசுவரர் மேலும் எனக்கு இப்போது சொல்ல முடியாத கோபம் வருகிறதடா சத்தியம்! பெண்கள் இயல்பாகவே அழகும் கவர்ச்சியும் மிகுந்தவர்கள். பரத நாட்டியம் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு இலக்கணமும் வகுத்து வைத்தபின் பெண்களின் அழகை அவர்களே நிச்சயமாக நிரூபித்துக் கொள்ள வழி செய்து கொடுத்து விட்டார் பரத முனிவர். இந்தப் பரத முனிவர் இருக்கிறாரே, இவர் கண்டுபிடித்த கலை ஒரு பெண் தன்னிடம் நிரம்பியிருக்கும் அழகுகளை எவ்வளவு நாகரிகமாகப் புரிய வைக்கும் கருவியாயிருக்கிறது பார்த்தாயா?" என்று அவன் கூறிய சொற்களிலிருந்து மோகினியின் நாட்டியம் அவனையும் வியப்பில் ஆழ்த்தியிருப்பது சத்தியமூர்த்திக்குப் புரிந்தது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது. மறுபடியும் அரங்கின் உட்புறத்திலிருந்து பக்கத்துப் படிகளின் வழியே அந்தச் சிறுவன் தன்னைத் தேடி வந்து கொண்டிருப்பதைச் சத்தியமூர்த்தி கவனித்தான்.

"இந்தப் பையன் யார்? நாட்டியம் நிகழ்ந்து கொண்டிருந்த போதும் இவன் உன்னைத் தேடிக் கொண்டு வந்தானே? இப்போதும் உன்னைத்தான் தேடி வருகிறான் போலிருக்கிறது" என்று குமரப்பன் கேட்ட போது சத்தியமூர்த்தி "எனக்குத் தெரிந்த பையன்! நான் போய்ப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன். நான் திரும்பி வந்ததும் நாம் புறப்படலாம். அதுவரை இங்கேயே இரு!" என்று குமரப்பனிடம் கூறிவிட்டுத் தானே எதிர்கொண்டு புறப்பட்டு விட்டான். மேடையிலிருந்து பின் பக்கத்தில் கிரீன் ரூமிலிருந்தவாறே வெளியே புறப்பட்டுப் போய்விடுவதற்கு வசதியாக வேறோரு சாலையும் வாயிலும் இருந்தன. மேடையின் பின் பகுதிக்கும் அங்கிருந்தே மைதானத்தை விட்டு வெளியேறுவதற்கான வாயிலுக்கும் நடுவேயுள்ள பிரதேசத்தில் ஒரு பூங்கா இருந்தது. அந்தப் பூங்காவுக்குள் சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போனான் சிறுவன். கிரீன் ரூமில் மோகினியின் தாய் நாட்டிய உடைகளையும் அலங்கார நாட்டிய உடைகளையும் அலங்காரப் பொருள்களையும் சரிபார்த்து மடித்து அடுக்கிக் கொண்டிருந்ததைப் போகும் போது சத்தியமூர்த்தி கவனித்தான். கிரீன் ரூமுக்கும் மேடை அரங்கத்துக்கும் நடுவில் இருந்த சிறிய கூடத்தில் நட்டுவனார் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். பின்புறத்துப் படிகளில் இறங்கியவுடனே எதிரே ஆகாயம் முழுவதையும் நிறைத்துக் கொண்டாற் போல் முழு நிலா எழுந்து வந்திருப்பது தெரிந்தது. படிகளின் அருகே பூமியில் விளைந்த பச்சை விசிறியாக இருபுறமும் பக்கவாட்டில் இலைகளைச் சிலிர்த்துக் கொண்டு ஒரு விசிறி வாழை இருந்தது. அந்த விசிறி வாழையின் அருகே மோகினியும் அவனை எதிர்பார்த்துக் கொண்டு நின்றாள். மிக அருகே எங்கோ மாம்பூப் பூத்து அந்த வாசனையைக் காற்று அள்ளிக் கொணர்ந்து பரப்பிக் கொண்டிருந்தது. அந்த நிலா அதைத் தொங்கவிட்டுத் தாங்கிக் கவிந்து கொண்டிருப்பது போன்ற நீலவானம் - அதன் கீழே விசிறி வாழையருகே தனியாய் நின்று தன்னை வரவேற்றுப் புன்னகை பூக்கும் மோகினி, மாம்பூ மணக்கும் சித்திரை மாதத்து இளங்காற்று. எல்லாமாகச் சேர்ந்து அப்போது சத்தியமூர்த்தியைப் பரவசப்படுத்தியிருந்தன. அவன் மனம் மிக மிக உற்சாகம் உற்றிருந்தது.

"வாருங்கள்! உங்களை எதிர்பார்த்துத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்" என்று கைகூப்பினாள் மோகினி. அவளை எப்படியெப்படி யெல்லாமோ புகழ்ந்து தன் பாராட்டுதல்களைத் தெரிவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த சத்தியமூர்த்தி, "உங்களுக்கு என் பாராட்டுதல்கள். மிகவும் நன்றாக ஆடினீர்கள். 'கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கு அருளு கண்டாய்' என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பக் கதறுகிறார் போல் பாடிக் கொண்டே நீங்கள் ஆடியபோது எனக்குக் கண் கலங்கிவிட்டது" என்று சுருக்கமாக ஏதோ சொன்னான். அவனுடைய பாராட்டுதலைக் கேட்டு அவள் முறுவல் செய்தாள். நாட்டியக் கோலத்தில் இருந்த ஆடையலங்காரங்களைக் களைந்து விட்டு ரோஸ் பவுடர் பற்றியிருந்த நிறம் போயும் போகாமலும் சோப்பினால் அவசரம் அவசரமாக முகம் கழுவிய பின்பு அதிகக் கவர்ச்சியில்லாத ஏதோ ஒரு துணிப் புடவையைக் கட்டிக் கொண்டு வந்து நின்ற தோற்றத்திலும் அவள் அழகாகத்தான் இருந்தாள்.

"நான் நன்றாக ஆடியதற்குக் காரணமே நீங்கள் என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள் என்ற பலத்தினால் தான். எதிரே அவையில் உட்கார்ந்து கொண்டிருந்த அத்தனை ஆயிரம் பேருக்காகவும் நான் ஆடவில்லை. உங்களுக்காகத்தான் ஆடினேன். நீங்கள் என்னைக் காப்பாற்றிய தெய்வம். இன்றைக்கு நீங்கள் வராமல் என்னை ஏமாற்றி விடுவீர்களோ என்ற பயம் மேடைக்கு வந்து நிற்கிற வரை எனக்கு இருந்தது. நீங்கள் வந்திருக்கிறீர்களா என்று அறிவதற்காக அந்தப் பையனை இரண்டு மூன்று முறை கீழே போய்ப் பார்த்து வரச் சொல்லித் துரத்தினேன். நீங்கள் வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று அறிந்த பின்பு தான் எனக்கு நம்பிக்கையே வந்தது."

"நான் ஒன்றும் அவ்வளவு பெரிய கலா இரசிகன் இல்லை. நான் பார்க்கிற முதல் நாட்டியமே இதுதான்."

"நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். நான் உங்களை நினைத்து உங்களைப் பார்த்துப் பெற்ற உற்சாகத்தினால் தான் அப்படி ஆட முடிந்தது. நீங்கள் நன்றாயிருக்கிறது என்று சொல்வதை விட வேறு எந்த பாக்கியத்தை நான் எதிர்பார்க்க முடியும்?" இப்படிப் பேசும்போதே அவள் கண்களில் நீர் மல்கிற்று.

சத்தியமூர்த்தி பதில் ஒன்றும் சொல்லத் தோன்றாமல் பார்வையால் பேசும் அந்தக் கண்களையும் பதங்களால் பேசும் அந்த மயக்கும் இதழ்களையும் பார்த்துக் கொண்டே நின்றான். கிரீன் ரூமிலிருந்த அவளுடைய தாய் அவளைக் கூப்பிடும் குரல் கேட்டது. கண்ணாயிரம் வேறு நட்டுவனாரோடு பேசிக் கொண்டே பின்பக்கமாகப் படியிறங்கிப் பூங்காவுக்குள் வந்து கொண்டிருந்தார். தான் அங்கிருந்து புறப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டதென்பது அவனுக்குப் புரிந்தது.

"நான் வருகிறேன். வெளியே நண்பன் ஒருவன் எனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான். நீங்களும் ஆடிக் களைத்திருக்கிறீர்கள். வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கிறது. உங்கள் அம்மாவின் குரல் வேறு உள்ளேயிருந்து மிரட்டுகிறது. கண்ணாயிரம் வேறு வந்து கொண்டிருக்கிறார். நாம் மறுபடி சந்திக்கலாம்..." என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு அவன் கிளம்ப முயன்ற போது பதில் சொல்ல நா எழாமல் கலங்கிய கண்களுடனேயே கைகூப்பி விடை கொடுத்தாள் அவள். அந்தச் சந்திப்பை அப்படி அரை குறையாக முடித்துக் கொண்டு விடை பெறுவது அவனுக்கும் என்னவோ போல் இருந்தது. ஆயினும் குமரப்பன் வெளியே காத்திருப்பான் என்ற ஞாபகம், கண்ணாயிரத்தின் திடீர் வரவும் அவனை அங்கிருந்து புறப்படச் செய்தன. படியேறும் போது கண்ணாயிரமும் அவனும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ள நேர்ந்தது.

"என்னப்பா இது? உனக்கு ஒரு வேலை பார்த்துத் தரச் சொல்லி உன் தந்தை என்னை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். நீயானால் நாட்டியக் கச்சேரி மேடையைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாய்?" என்று கண்ணாயிரம் தம்முடைய கீழ்த்தரமான வம்பை ஆரம்பித்தார்.

"எனக்காக நீங்கள் வேலை எதுவும் தேடித் தர வேண்டாம் சார்! நாம் அப்புறம் பார்க்கலாம்..." என்று கூறிவிட்டு அவரைச் சந்திக்க நேர்ந்ததை வெறுப்பவன் போல் விறுவிறுவென்று மேலே நடந்து வெளியே வந்தான் சத்தியமூர்த்தி. வருகிற வழியில் கிரீன் ரூமுக்கு அருகே நின்று கொண்டிருந்த மோகினியின் தாய் வேறு அவனைப் பார்த்து முகத்தைச் சுளித்தாள்.

"என்னப்பா இது? ஐந்து நிமிடத்தில் வருகிறேன் என்று போனவன் அரை மணி நேரத்துக்கு மேல் ஆக்கி விட்டாய்?" என்று கேட்டுவிட்டுச் சிறிது மௌனத்திற்குப் பின் தணிந்த குரலில், "மோகினியைத் தெரியுமா உனக்கு?" என்று மேலும் சத்தியமூர்த்தியை வினவினான் குமரப்பன்.

"தெரியும்! அவளை நான் சந்தித்தது ஒரு விநோதமான சம்பவம்!"

"எனக்குத் தெரியக்கூடாத சம்பவமானால் சொல்ல வேண்டாம். நான் உன்னைக் கேட்டதற்காக மன்னித்து விடு சத்யம்...?"

"அப்படி ஒன்றும் இல்லை. நானே சொல்கிறேன்." நேரம் அதிகமாகி விட்டதனால் அவர்கள் இருவரும் பொருட்காட்சி மைதானத்திலிருந்த ஓர் உணவு விடுதியில் நுழைந்து இரவுச் சாப்பாட்டை முடித்தார்கள். மைதானத்திலிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தால் சாலையின் கிழக்குக் கோடியில் சித்திரை மாதத்து முழு நிலாவின் கீழ் காந்தி மண்டபம் இருபுறமும் அணிவகுத்து நிற்கும் நெட்டுலிங்க மரங்களிடையே தாஜ்மகாலைப் போல் அற்புதமாகத் தோன்றிக் கோண்டிருந்தது. தெற்கே மரக் கூட்டங்களுக்குள்ளே அமெரிக்கன் கல்லூரிக் கட்டிடங்கள் உறங்கின. சாலைகளில் எல்லாம் சித்திரைத் திருவிழாக் கூட்டம் நிறைந்திருந்தது. திரும்பிப் போகும் போது கல் பாலத்தில் போகாமல் இன்னும் மேற்கே தள்ளிப் போய் வையையில் குறுக்கே இறங்கி நடந்தார்கள் குமரப்பனும் சத்தியமூர்த்தியும். சித்திரைத் திருவிழாவின் பரபரப்பும், கலகலப்பும் பாலத்துக்குக் கிழக்கேதான் அதிகமாயிருந்தன. பாலத்தின் மேற்குப் பக்கம் வையை மணற் பரப்பு அமைதியாயிருந்தது. ஓர் ஓடுகாலின் கரையில் குவிந்திருந்த மணல் மேட்டில் நண்பர்கள் இருவரும் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசத் தொடங்கினர். ஓடுகால் நீர்ப்பரப்பில் நிலவு பிரதிபலித்து மிதந்து கொண்டிருந்தது. மல்லிகைப் பந்தல் கல்லூரியின் இண்டர்வ்யூக்குப் போய்விட்டுத் திரும்பும் போது இரயிலில் மோகினியைச் சந்திக்க நேர்ந்ததையும் அதன் பின் நிகழ்ந்தவற்றையும் நண்பனிடம் மனம்விட்டுக் கூறினான் சத்தியமூர்த்தி. எல்லாவற்றையும் கேட்டுவிட்டுக் குமரப்பன் பெருமூச்சு விட்டான். பிறகு கூறலானான்:

"இந்த உலகத்தில் கருவேலத்து முள்ளைப் போல் ரோஜா முள் பெரியதாகத் தெரிவதில்லை சத்யம்! அதனால் ரோஜாவில் முள்ளே இல்லை என்று சொல்லிவிட முடியுமா? ரோஜா முள்ளுக்குத்தான் வளைவும் கூர்மையும் அதிகம். ரோஜாப்பூவின் அழகு பார்க்கிறவர்களுக்கு அதனடியில் இருக்கும் முள்ளை மறந்து போகச் செய்து விடுகிறது. மோகினியைப் போன்ற கலைஞர்களின் கலைத் திறமையும் அழகும் பூத்துப் பொலியும் போது அவர்களுடைய அடிமனத்தில் உள்ள வேதனைகளும் ஏமாற்றங்களும் உலகத்துக்குத் தெரியாமல் போய் விடுகின்றன. வாழ்வை வெறுத்துத் தற்கொலை செய்து கொள்ளவும் துணிந்து விடுகிற அளவுக்கு அந்தப் பெண் அந்தரங்கமாகத் துயரப்படுகிறாள் என்பதை அறியும் போது எனக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. ஆனாலும், துயரங்களை வெல்ல அவளால் முடியுமென்று தான் எனக்குத் தோன்றுகிறது."

"நீயும் நானும் ஆச்சரியப்பட்டு என்ன ஆகப் போகிறது? அநுதாபப்பட்டுத்தான் என்ன ஆகப் போகிறது? தனி மனிதனுடைய அநுதாபங்கள் வெறும் எண்ணமாக எழுந்து நிற்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும் குமரப்பன்? ஒரு பிரச்சினைக்கு முடிவு ஏற்பட வேண்டுமானால் சமூகத்தின் சக்தி வாய்ந்ததும் ஒன்றுபட்டதுமாகிய முழு அநுதாபமும் அந்தப் பிரச்சினையின் பக்கமாகத் திரும்ப வேண்டும். ஆனால் நீயும் நானும் இங்கே நம்மைச் சுற்றிப் பார்க்கிற சமூகமே பரிசுத்தமில்லாததாக இருக்கிறதே? நூறு சாதிகள், நூறாயிரம் வேற்றுமைகள், போதா குறைக்கு நவீன சாதிகளாக வளரும் அரசியல் கட்சிகள், இவ்வளவும் நிறைந்த சமூகத்தில் அல்லவா நீயும் நானும் வாழ்கிறோம்? பேசுவதைத் தவிர வேறு என்ன செய்கிறோம் நாம்?"

"ஒன்றும் செய்யாமலே இருக்கலாம்? ஆனால், அதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் உண்டு சத்யம்! அறியாமையும், வறுமையும் தான் இன்று இந்த நாட்டில் மனிதர்களைப் பிரிக்கவும், தரப்படுத்தவும் காரணமாக இருக்கின்றன. பழைய காலத்தில் பெண்களின் பரிசுத்தம் சோதிக்கப்படுவதற்கு அக்கினிப் பிரவேசம் இருந்ததைப் போல் வறுமை வேதனைகளாலும் அறியாமை இருளினாலும் துன்பப்படுகிற நாடு தன் பரிசுத்தத்தை நிரூபித்துக் கொள்ள உழைப்பையும் நம்பிக்கையையும் வேள்வித் தீயாய்ப் பெருக்கி அவற்றின் ஒளி வெள்ளத்தே மூழ்கி எழ வேண்டும்! நேர்மையான இலட்சியத்தை முன் நிறுத்திச் செயல்படுகிற ஒவ்வோர் இயக்கமும் சமூகத்துக்கு ஓர் அக்கினிப் பிரவேசம் தான்."

"ஒப்புக் கொள்கிறேன், குமரப்பன்! ஆனால் மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்த மாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியது தான்; சமூகத்தில் எல்லாருமே நாசூக்காகப் புறக்கணித்து விடுகிற பகுதி அது."

"நிச்சயமாக இல்லை! நீ சொல்லிய விவரங்களிலிருந்து அவளைப் போல் பிடிவாதக்காரப் பெண் தன்னைக் காத்துக் கொள்வதில் தனக்குத்தானே ஓர் இயக்கமாக இருப்பாள். 'சாது முரண்பட்டால் காடு கொள்ளாது' என்று ஒரு பழமொழி உண்டு. மோகினி எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு உறுதியாகவும் இருப்பாள். கண்ணாயிரங்களும், மஞ்சள்பட்டி ஜமீன்தார்களும் அவளுக்கு முன்னால் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு தான் போகப் போகிறார்கள். நீ கவலைப் படுவதை விட்டுவிடு! நிம்மதியாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் போய் வேலையை ஒப்புக் கொள். கல்லூரி நேரம் போக எஞ்சிய நேரத்தில் நிறையப்படி. நிறையச் சிந்தனை செய். டாக்டர் ஆப் லிட்ரேசர், மாஸ்டர் ஆப் லிட்ரேசர், என்று எத்தனை பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் உண்டோ அத்தனையையும் வாங்கித் தீர்ப்பதற்கு இப்போதிருந்தே திட்டம் போடு. மல்லிகைப் பந்தலைப் போல் அழகிய ஊரிலிருந்து கொண்டே நாட்களை வீணாகக் கழித்து விடாதே. வாழ்க்கைத்தரம் உயர்ந்த ஊர் அது. விலைவாசிகள் அதிகமாயிருக்கும். சிக்கனமாயிருக்கப் பழகிக் கொள்!... இன்னொரு செய்தி. வருகிற ஞாயிற்றுக்கிழமை மாலை நானும் கல்லூரி நாளில் பழகிய நெருக்கமான நண்பர்களும் ஓட்டலில் உனக்கொரு விருந்து வைத்திருக்கிறோம். அதையும் இப்போதே நினைவு வைத்துக் கொள்..." என்று சொல்லிக் கொண்டே புறப்படுவதற்காக மணலைத் தட்டி விட்டு எழுந்தான் குமரப்பன்.

"எனக்கு வேலை கிடைத்தால் நீங்கள் எல்லோரும் விருந்து விடை கொடுக்க வேண்டும் என்பது என்ன முறையோ?"

"முறைதானடா சத்யம்! நம் நண்பர்களில் இன்னும் வேலை கிடைக்காதவர்கள் பலர் இருக்கிறார்களே...? அவர்களுக்கெல்லாம் உனக்கு வேலை கிடைத்துவிட்டது என்பதை ஞாபகப்படுத்துவதற்கும் உனக்கு விடை கொடுப்பதற்கும் சேர்த்துதான் இந்த விருந்து."

"நான் மதுரையை விட்டுப் புறப்பட்டுப் போகிறேன் என்பதை நம் நண்பர்களே நம்ப மாட்டார்கள் குமரப்பன்! என்னைப் போல் இந்த ஊரின் மேல் மோகம் கொண்டவன் இருக்க முடியாது!"

"இருந்தும் இப்போது நீ மல்லிகைப் பந்தலின் மேல் கொண்டிருக்கிற மோகம் அதிகமாகி விட்டது... இல்லையா?"

"மோகம் என்று சொல்லாதே. அது மதுரையின் மேல் மட்டும் தான் உண்டு. மல்லிகைப் பந்தலைப் போன்ற மலை நாட்டு நகரத்தின் சரியான நிர்வாகத்தோடு நடைபெறுகிற ஒரு கல்லூரியில் வேலை பார்க்க நினைக்கிறேன் தான். அதை மோகம் என்று நீ சொன்னால் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்."

"சரி சரி! எப்படிச் சொன்னால் ஒப்புக் கொள்வாயோ அப்படியே வைத்துக் கொள். இப்போது புறப்படு. மணி பதினொன்றாகப் போகிறது..." - குமரப்பன் துரிதப்படுத்தவே மணல் மேட்டிலிருந்த சத்தியமூர்த்தியும் எழுந்திருந்து புறப்பட்டான். போகும் போதும் பேசிக் கொண்டே போனார்கள் நண்பர்கள்.

"மல்லிகைப் பந்தல் முதல்வரைப் பற்றி நினைத்தால் தான் தயக்கமாக இருக்கிறதடா குமரப்பன். பார்த்த சில மணி நேரத்திலேயே என் மேல் பொறாமை ஏற்பட்டு விட்டது அந்த மனிதருக்கு. நான் மாணவர்களைக் கவர்ந்து என் வசப்படுத்திக் கொண்டு விடுவேனோ என்று அவருக்குப் பயமாயிருக்கிறது. பிறருடைய தகுதிக் குறைவைக் குறித்து வருந்துகிறவர்களோடு சேர்ந்து நாமும் வருந்தலாம். பிறருடைய தகுதியைக் கண்டே வருந்தினால் அவர்களைப் பார்த்து நாம் என்ன செய்ய முடியும்?"

"என்ன செய்ய முடியுமாவது; நன்றாக வாய் விட்டுச் சிரிக்க முடியும்! அப்படிப்பட்டவர்களைப் பார்த்து நீ ஏன் கவலைப்படுகிறாய் சத்யம்? பிறருடைய பொறாமையை இப்படி மதிப்பிடத் தெரிந்து கொள்ளேன். உன்னிடம் ஏதோ ஒரு சாமர்த்தியம் - அவர்கள் பொறாமைப்படத் தக்கச் சாமர்த்தியம் இருப்பதால் தானே பொறாமைப்படுகிறார்கள்? உன் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறவர்கள் உன்னை ஒப்புக் கொண்டு விடுகிறார்கள். பாராட்ட முடியாதவர்கள் பொறாமைப் படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? நான் சொல்வதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள். 'பிறர் வழி உண்டாக்கிய பின் நடப்பதா அல்லது நாம் நடப்பதாலேயே ஒரு புது வழியை உண்டாக்குவதா?' என்பது தான் பிரச்சினை. உன்னையும் என்னையும் போலத் துணிந்த கட்டைகள் பிறர் உண்டாக்கிய வழியில் நடப்பதை விட நாமே நடந்து வழி உண்டாக்குவதைத்தான் விரும்புவோம். அப்படி வழி உண்டாக்க விரும்புகிறவர்களுக்கு மற்றவர்கள் தொல்லையளிப்பது இயல்புதான். மோகினியின் நிலைமையும் அதுதான்! அவளைப் போன்றவர்கள் எந்த வழியில் போக வேண்டும் என்று அவளுடைய தாயும், கண்ணாயிரம், மஞ்சள் பட்டியோ - மரகதப் பட்டியோ - அந்த ஜமீன்தாரும் எதிர்பார்க்கிறார்களோ அந்த வழியை வெறுத்து அவள் புதுவழியில் வர ஆசைப்படுவதால்தான் துன்பப்படுகிறாள். ஆனால் இத்தகைய துன்பங்கள் தான் மனிதனைப் புடம் போட்டு எடுக்கும் புனித அநுபவங்கள். இவற்றைத் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நேருக்கு நேர் நின்று சமாளிக்கத் தெரிய வேண்டும் நமக்கு."

"எதிர்கொள்வதற்குப் பயந்தோ, தயங்கியோ, இவற்றை உன்னிடம் சொல்லவில்லை, குமரப்பன். நீ சொல்வாயே, மனிதர்களில் சிலரும் 'எல்' போர்டாவது 'ஆன் டெஸ்ட்' போர்டாவது மாட்டிக் கொள்ள வேண்டும் என்பதாக - அந்த 'போர்டு' மாட்டிக் கொள்ள வேண்டிய மனிதர் ஒருவர் நான் பணிபுரியப் போகிற மல்லிகைப் பந்தல் கல்லூரியில் இருக்கிறார் என்பதற்காகச் சொல்ல வந்தேன்."

"அப்படி மனிதர்கள் இல்லாத இடம் உலகத்தில் எங்கே தான் இருக்கிறது? விட்டுத்தள்ளு... போய் நன்றாகத் தூங்கு" என்று சத்தியமூர்த்தியின் வீட்டு வாசலில் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டுப் புறப்பட்டான் குமரப்பன்.

'இவ்வளவு அருமையான நண்பனைப் பிரிந்து வெளியூர் செல்லப் போகிறோமே' என்று எண்ணிய போது சத்தியமூர்த்தியின் இதயம் அழுதது. கல்லூரி நாட்களின் இனிய அனுபவங்களையும், 'இலட்சியம்' என்ற பெயரில் நண்பர்களாகச் சேர்ந்து கையெழுத்துப் பத்திரிகை நடத்தியதையும், அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் குமரப்பன் வழக்கமாக வரையும் கேலிச் சித்திரங்களையும் நினைத்தான் சத்தியமூர்த்தி. அந்தக் கையெழுத்துப் பத்திரிகையின் கடைசிப் பக்கத்தில் 'ஏமாற்றம்' என்ற தலைப்பில் வழக்கமாகக் கேலிச் சித்திரங்களை வரைவான் குமரப்பன். ஏமாற்றம் - 1, ஏமாற்றம் - 2, என்று இப்படி வரிசையாக அதே தலைப்பில் அந்தக் கேலிச்சித்திரங்கள் வரும். ஒரு நாள் சத்தியமூர்த்தியும் மற்ற நண்பர்களும், "இந்தா குமரப்பன்! ஏமாற்றம் என்ற தலைப்பில் தான் படம் போடுவாய் என்றால் இனிமேல் நீ நம் கையெழுத்துப் பத்திரிகையில் ஒரு படமும் போட வேண்டாம் அப்பா..." என்று அவனைக் கண்டித்துப் பார்த்தார்கள்.

"என்னடா இது? இதற்கா இப்படிக் கோபித்துக் கொள்கிறீர்கள்? முதல் பக்கத்தில் இலட்சியம் என்று பத்திரிகையின் பெயரை எழுதியிருக்கிறீர்கள்? நான் கடைசிப் பக்கத்தில் ஏமாற்றம் என்று அது முடிகிற இடத்தை விளக்குகிறேன்..." என்று குத்தலாகப் பதில் சொல்லிக் கூடியிருந்தவர்களிடையே சிரிப்பலைகளைக் கிளப்பினான் அவன். பிறவியிலேயே அவன் கேலிச் சித்திரக்காரன் தான். கண்ணாயிரத்தைப் பற்றி ஒரு நாள் அவன் கூறிய கருத்தை இப்போது சிந்தித்தான் சத்தியமூர்த்தி. நினைக்க நினைக்கச் சிரிப்பு மூட்டுவதாக இருந்தன குமரப்பனின் அந்த வாக்கியங்கள். மறுபடியும் அவற்றை நினைத்தான் சத்தியமூர்த்தி. "இந்தக் கண்ணாயிரம் இருக்கிறாரே, அவர் விலாங்கு மீனைப் போன்றவர். பிடித்தால் நழுவி விடுவார். நழுவிய பின்னும் பலர் அவரைப் பிடிக்க முயன்று பின்னால் ஓடித் துரத்திக் கொண்டிருப்பார்கள். பிடித்தால் நழுவி ஓடிவிடுவதும், நழுவி ஓடிய பின்பும் பலரைக் காக்க வைத்தும் தம்மைப் பிடித்தால் காரியம் ஆகும் என்று வீண் பிரமை கொள்ளச் செய்வதும் தான் அவருடைய சாமர்த்தியங்கள். விலாங்கு மீனையாவது வலையைப் போட்டுப் பிடித்துத் தொலைக்கலாம். கண்ணாயிரம் யாருக்கும் பிடி கொடுக்க மாட்டார். ஆனால் அவரிடம் பலர் பிடி கொடுத்தும், பிடிபட்டும் தவித்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் அந்த ஆளைப் பற்றிய வாழ்க்கைச் சித்திரம்" என்று அளவெடுத்துச் சொன்னாற் போல் பலமுறை சொல்லியிருக்கிறான். மனிதர்களைப் படித்து முடிப்பதில் அவனுக்கு நிகரான நிபுணன் அவன் தான். குமரப்பனும் தானும் சந்தித்து மனம் திறந்து பேசியிருக்கும் பல சந்தர்ப்பங்கள் எல்லாம் சத்தியமூர்த்திக்கு நினைவு வந்தன. அன்றிரவு அவன் கண்கள் சோர்ந்து உறங்கத் தொடங்கிய போது மூன்று மணிக்கு மேல் இருக்கும். மறுநாள் காலையில் சில வெளியூர் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினான். மதுரையை விட்டு அவன் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இன்னும் இரண்டு மூன்று வாரங்களே இருந்தன. ஞாயிற்றுக்கிழமை மாலை நகரத்தின் பெரிய உணவு விடுதி ஒன்றில் குமரப்பனும் சத்தியமூர்த்தியின் நண்பர்களும் அவனுக்கு வழியனுப்பு உபசாரமாக ஒரு விருந்து கொடுத்தார்கள். நண்பர்கள் சிரிப்பும், கேலியுமாகப் பேசிக் கொண்டிருந்தாலும் அவன் மனம் அவர்களையெல்லாம் பிரிந்து புதிய ஊருக்குப் போகப் போவதை உணர்ந்து தவித்தது. தன்னுடைய இன்ப ஞாபகங்களும் துன்ப ஞாபகங்களும் வெற்றிகளும் தோல்விகளும் சகலமும் அத்தனை ஆண்டுகளாக அந்த நகரத்தோடு பிணைந்திருந்ததை நினைத்தான் அவன். இதைத் தான் தேசிய உணர்ச்சி என்று வேறு பெயரிட்டு அழைக்கிறார்களோ என்றும் அப்பொழுது அவன் எண்ணினான். நண்பர்கள் அதை ஒரு சிறு கூட்டமாகவே நடத்தி விட்டார்கள். "சத்தியமூர்த்தியைப் போன்ற ஓர் உயிர் நண்பனை வெளியூருக்கு அனுப்பும் போது பேசுவதற்கு வார்த்தைகள் கிடைக்காத துயரத்தினால் பேசாமலே உட்காருகிறேன் நான்" என்று நீர் குழம்பும் கண்களோடு பேச்சை முடித்துவிட்டான் ஒரு நெருங்கிய நண்பன். குமரப்பன் சிரிக்கச் சிரிக்க நிறையப் பேசினான். வேறு சில நண்பர்களும் பேசினார்கள். மதுரையைப் பிரிந்து வெளியூர் போகவிருப்பதை நிச்சயமாக ஞாபகப் படுத்துவதைப் போல் அந்த விருந்தும் நடந்து முடிந்து விட்டது. அது மகிழ்ச்சியா வேதனையா என்று புரிய முடியாத நிலை. உணவு விடுதியில் விருந்து முடிந்து வீடு திரும்பும் போது அவன் தவிக்கும் மனத்தோடுதான் திரும்பினான். தந்தை வீட்டுத் திண்ணையில் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தார். "வா, சத்தியம்! இதில் நீ கையெழுத்துப் போட வேண்டியதில்லை என்று நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. கண்ணாயிரம் கேட்கிற வழியாயில்லை. 'எதற்கும் பையனிடமும் ஒரு கையெழுத்து வாங்கி விடுங்கள்' என்கிறார். நீயும் போட்டு விடேன்" என்று பத்திரக் காகிதத்தை நீட்டினார் தந்தை. வீட்டை அடமானமாக வைத்துக் கண்ணாயிரத்தினிடம் கடன் வாங்குவதற்காக எழுதப்பட்ட பத்திரக் காகிதம் அது.

"கொஞ்சம் பொறுத்துக் கொண்டு செய்யலாமே அப்பா! கண்ணாயிரம் பின்னால் எப்படியெப்படி நடந்து கொள்வாரோ?" என்று அவன் கூறிய சொற்களைத் தந்தை கேட்கவில்லை. விரும்பவும் இல்லை.

"கையெழுத்துப் போடு சொல்கிறேன்" என்று வற்புறுத்தினார். அந்த நிலையில் தந்தையைப் பகைத்துக் கொள்ள முடியாத காரணத்தால் அவர் என்ன சொன்னாரோ அதைச் சொன்னபடியே செய்தான் சத்தியமூர்த்தி.

அத்தியாயம் - 14

நினைப்பையும் செயலையும், சொல்லையும் சத்தியமாக அளவிட்டுக் கணித்து - அந்தக் கணிப்பினால் மட்டுமே மனிதர்களின் சாதியைப் பிரிப்பதாக இருந்தால் தூய்மை உள்ளவர்கள், தூய்மை அற்றவர்கள் என்று இரண்டே இரண்டு சாதிகள் மட்டும் தான் பிரியும்.

மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட வேண்டிய நாள் நெருங்க நெருங்கப் பிறந்து வளர்ந்த ஊரையும் பழகிய மனிதர்களையும் பிரிந்து வெளியூருக்குச் செல்லப் போகிறோம் என்ற உணர்ச்சி சத்தியமூர்த்தியின் மனதில் உறைக்கத் தொடங்கியிருந்தது. தன் ஊர், தன் மனிதர்கள், தான் பழகிய சூழ்நிலை - இவற்றை நீங்கிப் புதிய ஊரில் புதிய மனிதர்களுக்கிடையே - புதிய சூழ்நிலையில் பழகப் போகிறோம் என்ற தவிப்பை எவ்வளவோ திடமாக மறந்துவிட முயன்றும் அவனால் முடியவில்லை. எண்ணி இன்னும் நான்கே நான்கு நாட்கள் தான் இருந்தன. நான்காவது நாள் இரவு இரயிலில் மதுரையிலிருந்து புறப்பட்டால் மறுநாள் காலையில் போய்ச் சேர்ந்து விடலாம். கண்காணாத தேசம் எதற்கும் போகப் போவதில்லை. அரைநாள் பயணத்தில் போய்ச் சேர்ந்து விடுகிறாற் போல் பக்கத்தில் இருக்கும் ஊர் தான்.

ஆனால், மனம் என்னவோ கண்காணாத தேசத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பது போலத்தான் பரிதவித்தது. எந்த ஊருக்கு இவன் புறப்பட்டுக் கொண்டிருந்தானோ அந்த ஊரை அவனுக்குப் பிடித்திருந்தது. அந்த ஊரின் இயற்கையழகை அவன் விரும்பினான் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், மனத்தின் பரிதவிப்பை அவனால் சிறிதும் தவிர்க்க முடியவில்லை. போகிற இடத்தைப் பற்றிய மகிழ்ச்சியும் பிரிகிற இடத்தைப் பற்றிய கனமான துயரமுமாக அவன் மனம் குழம்பியிருந்தது. ஒரு வேலையும் செய்வதற்கு ஓடவில்லை. அதே சமயத்தில் செய்ய வேண்டிய வேலைகள் ஏராளமாக இருப்பது போல் மலைப்பாகவும் இருந்தது. மூன்று அலமாரிகள் நிறைய ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் தேவையான புத்தகங்களை மட்டும் தனியே பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். புத்தகங்களை மட்டும் வைப்பதற்கே தனியாக ஒரு பெட்டி தேவைப்படும். கொஞ்சம் புதிய துணிமணிகள் வாங்கித் தைக்கக் கொடுக்க வேண்டும். மீதமிருக்கிற நாட்களில் பயணத்துக்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ளவே சரியாக இருக்கும் போல் இருந்தது. துடிதுடிப்பும், சுறுசுறுப்பும் நிறைந்த இளைஞர்கள் பலரோடு அவர்களுடைய அன்புக்குரிய இளம் விரிவுரையாளனாக - இலட்சிய ஆசிரியனாகப் பழகப் போகிறோம் என்ற நம்பிக்கை ஒன்று மட்டும் தொலை தூரத்து மகிழ்ச்சியாய் ஞாபகத்தில் தோன்றிக் கொண்டிருந்தது. அருகில் வர மறுக்கும் மகிழ்ச்சியும், தொலைவில் விலகிப் போக மறுக்கும் துயரமுமாக உணர்வில் எல்லை கட்டிச் சொல்ல வகையில்லாததோர் மன நிலையோடு இருந்தான் அவன். ஊசியில் உள்ள சிறிய துளையில் நூல் நுழையாமல் தவறிக் கொண்டே இருப்பது போல் மனத்தின் பிடியில் சிக்க வேண்டிய நிம்மதி ஒன்று - சிக்காமலே விலகி விலகிப் போய்க் கொண்டிருப்பதை எண்ணித் தவித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க இந்தத் தவிப்பு அவன் மனத்தில் அதிகமாகியது.

அன்று பகலில் வெயில் மிகவும் கடுமையாக இருந்தது. வெயில் தணிந்த பின் மாலையில் குமரப்பனை அவனுடைய அறைக்குச் சென்று அழைத்துக் கொண்டு கடைக்குப் போய்ப் பயணத்துக்கான சில பொருள்களை வாங்க எண்ணியிருந்தான் சத்தியமூர்த்தி. காலையில் தந்தை அவனுடைய செலவுக்காகவும், துணிமணிகள் வாங்கிக் கொள்வதற்காகவும் இருநூறு ரூபாய் பணம் கொடுத்திருந்தார். மல்லிகைப் பந்தல் கல்லூரியில் அவன் முதல் மாதச் சம்பளம் வாங்குகிற வரை எல்லாம் இந்தத் தொகையில் இருந்து தான் செலவழித்துக் கொள்ள வேண்டும். மலைப் பிரதேசமாக இருப்பதால் இரவில் குளிர் வாட்டிவிடும். கம்பளிப் போர்வை ஒன்றும், ஸ்வெட்டரும் வாங்கிக் கொள்ள வேண்டும். மல்லிகைப் பந்தலுக்குப் போய்ச் சேர்ந்த பின் வசிப்பதற்கு ஒரு சிறிய அறை பார்த்துக் கொண்டு அதற்கும் வாடகை முன் பணமாகக் கொடுக்க வேண்டியிருக்கும்.

"தனி அறையாகப் பார்த்துக் கொண்டால் வாடகை அதிகமாகும். உன்னைப் போல் அந்த ஊரில் வேலை பார்க்கும் வேறு ஒருவரோ, இருவரோ வசிக்கும் அறையில் மற்றோர் ஆளாக நீயும் சேர்ந்து கொண்டு வாடகையைப் பங்கிட்டுக் கொள்" என்று அப்பா யோசனை சொல்லியிருந்தார்.

"சனி, புதன் எண்ணெய்க் குளி தவறாதே! மலைக்காட்டு ஊராயிருப்பதனால் எப்போது குளித்தாலும் வெந்நீரில் குளி. இரவில் ஒரு மணி இரண்டு மணி என்று கால வரம்பில்லாமல் தூக்கம் விழித்துப் புத்தகம் படிக்காதே. நேரத்தோடு படுத்துக் கொண்டு விடு. உடம்புக்கு வந்தால் செய்வதற்கு மனிதர்கள் யாரும் அங்கு கிடையாது என்பதை ஞாபகம் வைத்துக் கொள்" என்பதாக அம்மா திரும்பத் திரும்ப அவனுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தாள். கண்ணாயிரத்தினிடம் கடன் வாங்கிய தொகையை வைத்து மாடியை இடித்துக் கட்டுவதற்காகக் கொத்தனார்களையும் காண்ட்ராக்டர்களையும் தேடி அலைந்து கொண்டிருந்தார் அப்பா. பகல் நேரத்திலேயே புத்தக அலமாரிகளிலிருந்து தன்னோடு ஊருக்குக் கொண்டு போவதற்குத் தேவையான புத்தகங்களைப் பிரித்து எடுத்துக் கொண்டு விட நினைத்த சத்தியமூர்த்தி இப்போது அந்த வேலையில் ஈடுபடலானான். மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகள், திருக்குறள் பரிமேலழகர் உரை, தொல்காப்பியப் பகுதிகள், சங்க இலக்கியங்கள், கம்பராமாயணன், அடிஸன், கோல்ட்ஸ்மித், பிராட்லி முதலியவர்களின் நூல்கள் ஆகியவற்றைத் தனியே பிரித்து அடுக்கினான். அந்தப் பெரிய டிரங்குப் பெட்டியின் முக்கால் பகுதி இடத்தைப் புத்தகங்களே நிரப்பிக் கொண்டு விட்டன. தேடி கண்டுபிடித்து அதில் வைப்பதற்கு இன்னும் புத்தகங்கள் இருந்தன.

"நீ பெட்டி நிறையப் புத்தகங்களை அடுக்குவதைப் பார்த்தால் படிப்புச் சொல்லிக் கொடுக்கப் போகிறாயா? அல்லது படிக்கப் போகிறாயா என்று சந்தேகமாயிருக்கிறது அண்ணா!" என்றாள் தங்கை ஆண்டாள்.

படிக்கிறவனைக் காட்டிலும் படிப்பு சொல்லிக் கொடுக்கிறவன் தான் அதிகமாகப் படிக்கவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கும் என்பதைத் தங்கை புரிந்து கொள்ளாமலிருப்பதை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக் கோண்டான் அவன். பெட்டியில் புத்தகங்களுக்குக் கீழே அடி மூலையில் பாரதி தனக்கு அந்தரங்கமாக எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் போட்டு வைத்தான். அபர்க் ராம்பி, வின்சென்டர், செயிண்ட்ஸ்பரி ஆகிய தலைசிறந்த ஆசிரியர்களின் இலக்கியத் திறனாய்வு நூல்கள் சிலவற்றை ஒரு நண்பன் இரவல் வாங்கிக் கொண்டு போயிருந்தான். ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு அந்த நண்பனைத் தேடிப் புத்தகங்களைத் திரும்பப் பெற வேண்டும். ஒவ்வொருவராகப் பார்த்துச் சொல்லி விடைபெற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை. 'இன்றிலிருந்து அங்கங்கே நண்பர்களைச் சந்திக்க நேரும் போது அவர்களிடம் சொல்லிக் கொண்டு விடவேண்டியதுதான்' என்று பயணத்துக்கு முன் செய்ய வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றாக அவனுக்கு நினைவு வந்தன. கொண்டு செல்ல வேண்டிய புத்தகங்களைப் பிரித்து வைத்து முடித்த போது மாலை ஐந்து மணிக்கு மேலாகிவிட்டது. முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு அவன் வெளியே புறப்பட்டான். தெருத் திருப்பத்தில் மாடியில் ஒண்டுக்குடித்தனம் இருக்கிற நிருபர் பரமசிவம் எதிர்ப்பட்டு வேலை கிடைத்ததைப் பற்றி விசாரித்துத் தம் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார். குமரப்பனுடைய அறைக்குப் போவதற்காக வடக்கு மாசி வீதியிலிருந்து கிருஷ்ணன் கோயில் சந்தைக் கடந்து வந்து கொண்டிருந்த போது மோகினியின் வீடு உள்ள தெரு அங்கிருந்து மிகவும் பக்கத்தில் இருப்பது அவனுக்கு ஞாபகம் வந்தது. தான் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றி மோகினியிடம் சொல்லிக் கொள்வதா வேண்டாமா என்று அவன் மனத்தில் ஒரு கேள்வி எழுந்தது. இந்தக் கேள்வியின் தொடர்பாக இதையடுத்து அவன் மனத்தில் மோகினியைப் பற்றி ஒரு வாதப் பிரதிவாதமும் எழுந்தது.

'ஊருக்குப் புறப்படுவதற்கு முன்பு வீடு தேடிக் கொண்டு போய்ச் சொல்லிக் கொள்வதற்கும், விடைபெறுவதற்கும் மோகினி யார்? நான் என் வேலை நிமித்தமாக மல்லிகைப் பந்தலுக்குப் போவதைப் பற்றி அவளிடம் எதற்காகச் சொல்ல வேண்டும்! ஏதோ ஒரு விதத்தில் எங்கோ இரயில் பயணத்தின் போது சந்திக்க நேர்ந்தவர்களை நான் எதற்காக என் வாழ்க்கையில் இவ்வளவு அவசியம் நிறைந்தவர்களாகக் கருத வேண்டும். அவளுடைய போதாத காலம் அவள் இரயிலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றாள். அதே இரயிலில் நானும் பயணம் செய்ய நேர்ந்ததனால் நல்ல சமயத்தில் அவளுடைய மனவேதனையை மாற்றி அவளைக் காப்பாற்ற முடிந்தது. அதற்காக அவள் என்னை மதிக்கிறாள், வணங்குகிறாள் என்பதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நான் என்னுடைய ஞாபகத்தில் அவளுக்கு எவ்வளவு இடம் அளிக்க முடியும்? எதற்காக அளிக்க முடியும்?' என்று கடுமையாகக் கருதித் தடுத்தது ஓர் எண்ணம்.

'நிச்சயமாக அப்படி இல்லை? மோகினி சேற்றில் பூத்த செந்தாமரை. குப்பையில் விளைந்த குருக்கத்தி. காசு பணத்துக்கு ஆசைப்படும் அவளுடைய தாயின் அருகே அவள் கண்ணியமான வாழ்வுக்கு மட்டுமே ஆசைப்படும் பரிசுத்தமான இதயத்தோடு நிற்கிறாள். அவள் எந்த வீட்டில் எப்படிப்பட்ட சூழ்நிலையில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வாழ்ந்திருந்தாலும், இன்று அவளுடைய எண்ணத்திலும், செயலிலும், சொல்லிலும் தூய்மை இருக்கிறது. நினைப்பையும், செயலையும், சொல்லையும் சத்தியமாக அளவிட்டுக் கணித்து - அந்தக் கணிப்பினால் மட்டுமே மனிதர்களின் சாதியைப் பிரிப்பதாக இருந்தால் - தூய்மை உள்ளவர்கள், தூய்மை அற்றவர்கள் என்று இரண்டு சாதிகள் தான் பிரியும். அப்படிக் கணிக்கிற கணிப்பில் மோகினியின் சாதி நிச்சயம் உயர்ந்ததாகத்தான் இருக்க முடியும். மனிதனுடைய முன்னிலையில் வேண்டுமானால் செல்வத்தையும், செல்வமின்மையையும் வைத்து வளமும், வறுமையும் தீர்மானிக்கப்படலாம். ஆனால் கடவுளுடைய சந்நிதியில் வறுமையும், வளமையும் வேறுவிதமாகத் தீர்மானிக்கப்படுகின்றன. மனம், மொழி, மெய்களால் மனிதர்கள் எவ்வளவுக்குச் சத்தியமாக வாழ்ந்தார்கள், அல்லது வாழவில்லை என்பதை வைத்துத்தான் கடவுளுடைய சந்நிதானத்தில் செல்வமும், ஏழைமையும் நிறுத்துத் தீர்மானிக்கப்படுகின்றன. பணத்தைச் சம்பாதித்துப் பெரிய மனிதனாக முயலும் கண்ணாயிரமும், பணத்தைத் தாராளமாகச் செலவழித்து அதன் மூலமாகப் பெரிய மனிதனாக முயல்கிற மஞ்சள்பட்டியாரும் கடவுளின் சந்நிதியில் நிச்சயம் ஏழைகளாகத்தான் நின்று கொண்டிருப்பார்கள். இவர்கள் ஏழைகளாக நிற்கிற அதே இடத்தில் மோகினியைப் போன்ற அபலைகள் செல்வச் செழிப்போடு நின்று கொண்டிருப்பார்கள்' என்று மோகினியை ஆதரித்துப் பலமாக எதிர்வாதம் செய்தது அவனது மற்றோர் எண்ணம். இந்தச் சமயத்தில் கோவில் பிரகாரத்தில் தன்னிடம் அவள் கூறியிருந்த அந்த அழகிய வாக்கியத்தை மீண்டும் நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி.

"ஆதரவற்றதெல்லாம் ஏழைதான். அந்த விதத்தில் உண்மையும் ஏழையாயிருப்பதில் தவறில்லை."

கருத்தாழமும் கருத்தழகும் உள்ள இந்த வாக்கியத்தை நினைவு கூர்ந்த போது இதைச் சொல்லிவிட்டு அவள் சிரித்த சிரிப்பும் உடனிகழ்ச்சியாக அவன் நினைவில் தோன்றியது. 'தின்பதற்கு மட்டுமல்லாமல் தின்னப்படுவதற்கென்றே அமைந்தாற் போன்ற பற்கள்' என்ற கவியின் வருணனைக்கு நிதரிசனம் போன்ற அவளுடைய முல்லையரும்புப் பற்களை அவனால் மறக்க முடியவில்லை. அவள் பேசுவதும் இதழ்களைத் திறந்து சொற்களை ஒலிப்பதும் அழகாயிருந்தது என்றால், சிரிப்பது இந்த அழகுக்கு வேறு இணையில்லை என்று நிச்சயமாக உறுதிப்படுத்துவதாய் இருந்தது. சித்திரைப் பொருட்காட்சியில் அவள் ஆடிய நடனமும் அந்த நடனத்துக்குத் தான் அவசியம் வரவேண்டும் என்று அவளே சொல்லியனுப்பியதும், 'மானிடவர்க்கு என்று பேச்சுப்படின் வாழ்கில்லேன்' என்று உள்ளம் உருகப் பாடி ஆடியதும், ஆட்ட முடிவில் தன்னைச் சந்தித்துப் பேசியதும் ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனைத் தயங்கி நிற்கச் செய்தன.

'நான் கல்லூரியில் விரிவுரையாளனாக வேலை ஏற்றுக் கொண்டு மதுரையை விட்டு வெளியூர் போகிறேன்' என்று சித்திரை பொருட்காட்சியில் நாட்டியம் முடிந்த பின்பு அவளைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போதே அவளிடம் சொல்லியிருக்கலாம். என்ன காரணத்தாலோ அன்று அவளிடம் இதைப் பற்றிப் பேச வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவே இல்லை.

'அங்கே அவளுடைய வீடு இருக்கும் அந்தச் சிறிய தெருவில் நுழைந்து வெளியேறினாலே தெரிந்த மனிதர்கள் யாராவது பார்த்து ஒரு மாதிரி சிரித்துக் கொண்டு போவார்களோ' என்ற கூச்சமும், தயக்கமும் ஒரு புறம் இருந்தாலும் இறுதியில் அவையும் தோற்றன. கடைசியில் இனம் புரியாத அந்தப் பாசம் வென்றது. அவனுடைய கால்கள் அவனை அறியாமலே அந்தத் தெருவுக்குள் அவனை இழுத்துக் கொண்டு போயின. அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்து அவளிடம் எண்ணி இரண்டே இரண்டு நிமிஷங்களில் நாலு வார்த்தை சொல்லிக் கொண்டு புறப்பட்டு விடுவதென்று தீர்மானித்திருந்தான் அவன். பாதித் தொலைவு நடந்ததும் வந்த வழியே திரும்பிச் சென்று விடலாமா என்று கூடத் தோன்றியது அவனுக்கு. ஆனால் கால்கள் அவனோடு ஒத்துழைக்க மறுப்பவை போல் மேலே நடந்து அந்தச் சந்துக்குள் போய்க் கொண்டிருந்தன. அவள் அடையாளம் சொல்லியிருந்த அந்த வீடும் வந்துவிட்டது. படியேறி உள்ளே போக நினைப்பதிலும் ஒரு சிறிது தயக்கம் ஏற்பட்டது. யாரோ கதவைத் திறந்தார்கள். உள்ளே போவதற்காகப் படியேறத் தொடங்கியிருந்த சத்தியமூர்த்தி வருகிறவர்களுக்கு வழிவிடுவதற்காகச் சற்றே விலகினான். வந்தது வேறு யாருமில்லை. அன்று தேடி வந்த அந்தச் சிறுவன் தான் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வந்தவன் சத்தியமூர்த்தியைப் பார்த்தானோ, இல்லையோ, "வாங்க சார்" என்று மலர்ச்சியோடும், உற்சாகத் துள்ளலோடும் கூறிவிட்டு, வீட்டின் உள்ளே ஓடினான். வாசற்படியைக் கடந்து உள்ளே நுழைந்ததும் 'கம்'மென்று சாம்பிராணிப் புகையின் நறுமணம் கமழ்ந்து கோயிலுக்குள் நுழைவதைப் போன்ற சூழ்நிலையை உண்டாக்கிற்று. மேற்கொண்டு உள்ளே போவதற்குத் தயங்கியபடி நடையிலே நின்றான் அவன். வீடு அமைதியாக இருந்தது.

"வாருங்கள்! இப்போதாவது வர வழி தெரிந்ததா! இன்று இந்த வீடு பாக்கியம் செய்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்" என்று அழைப்போடு எதிரே வந்து சிரித்துக் கொண்டு நின்றவளைப் பார்த்து மலைத்துப் போனான் அவன். முதுகில் காடாய்ப் புரளும் கருங் கூந்தலை நடுவாக ரிப்பனில் முடிந்து ஒரு கொத்து மல்லிகைப் பூவை அந்த இடத்தில் சொருகியிருந்தால் மோகினி. அவசரமாகவும், கைபோன போக்கிலும் அள்ளிச் சொருகிக் கொள்ளப் பெற்றிருந்த அந்தப் பூவானது பார்ப்பதற்குக் கூந்தலிலேயே பூத்துத் தொங்கி - இடம் கொள்ளாமல் சாய்ந்து சரிந்த மாதிரி அழகாக இருந்தது. சந்திர பிம்பமாக மின்னும் முகத்தில் நெற்றியின் நடுவே தீபச்சுடரைப் போல் ஒரு கீற்றுக் குங்குமத்தை எடுத்துத் தீற்றிக் கொண்டு வந்திருந்தாள்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? இன்னும் சிறிது நேரத்தில் கோவிலுக்குப் புறப்பட வேண்டும் என்பதற்காகத் திரும்பவும் நீராடிவிட்டு வந்தேன். ஈரத் தலைக்குப் புகை போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாக இந்தப் பையன் ஓடிவந்து நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னான். முதலில் என்னால் நம்பவே முடியவில்லை. பரக்கப் பரக்கத் தலையை ரிப்பனால் கட்டிப் பூவை அள்ளிச் சொருகிக் கொண்டு இங்கே வந்து பார்த்தால் நிஜமாகவே நீங்கள் தான் வந்திருக்கிறீர்கள். இந்த ஆச்சரியத்தை எப்படிக் கொண்டாடுவதென்றே தெரியவில்லை எனக்கு. உள்ளே வாருங்கள். உட்காருங்கள்" என்று ஆவலோடும் அன்போடும் அவனை உள்ளே அழைத்தாள் மோகினி. ஊருக்குப் புறப்பட்டுப் போவதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லிவிட்டுப் போகலாமென்று வந்திருந்த சத்தியமூர்த்தி அங்கே நீண்ட நேரம் உட்கார்ந்து பேசுவதற்குத் தயங்கினான்.

"ஒன்றுமில்லை! நான் அன்றைக்குச் சித்திரைப் பொருட்காட்சியிலே உங்களைச் சந்தித்தபோது சொல்ல மறந்துவிட்டேன். எனக்கு மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை கிடைத்திருக்கிறது. நான் இன்னும் இரண்டு மூன்று நாட்களில் புறப்பட்டு விடுவேன். உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போக வேண்டுமென்று தோன்றியது. வந்தேன்."

இதைக் கேட்டு ஒன்றும் பேசத் தோன்றாமல் சிறிது நேரம் அப்படியே திகைத்துப் போய் நின்றாள் அவள். அந்தக் கவர்ச்சி நிறைந்த முகம், கண்கள், இதழ்கள் எல்லாம் திடீரென்று இருந்தாற் போலிருந்து அப்படியே சித்திரமாக மாறிவிட்டாற் போல் அமைதியுற்றன. அந்தக் கண்களில் சிரிப்பும், குறுகுறுப்பும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து அவைகளில் எதையோ இழந்துவிடப் போவதைப் போன்ற சோகம் தெரிந்தது. அந்த வேதனையைக் கண்டு சத்தியமூர்த்தியே மனம் பொறுக்காமல் மேலும் கூறிலானான்.

"மனம் தளராதீர்கள்! நான் ஊருக்குப் போவதை உங்களிடம் சொல்லிவிட்டுப் போக வந்தேனென்பதை விட உங்களுக்குத் தைரியம் சொல்லிவிட்டுப் போகவே இங்கு வந்ததாக நினைக்கிறேன். நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அன்று எப்படிப்பட்ட பரிதாபகரமான சூழ்நிலையில் உங்களை நான் காப்பாற்றினேனோ அப்படிப்பட்ட சூழ்நிலை இனி ஒரு நாளும் உங்களுக்கு வரக்கூடாது. உங்களுடைய அழகும், நீங்கள் பயின்றிருக்கும் கலையின் அழகும் உலகத்துக்கு நெடுங்காலம் நல்லபடியாகப் பயன்பட வேண்டும். நான் செய்த உதவி மிகவும் சிறியது. அதற்காக நீங்கள் என்மேல் செலுத்துகிற மதிப்பும், மரியாதையும் அதிகமானவை. மனிதர்கள் ஒருவருக்கொருவர் இயற்கையாகச் செய்து கொள்ள முடியாத எந்த அபூர்வமான உதவிகளையும் உங்களுக்கு நான் செய்துவிடவில்லை. எனக்கு விடை கொடுத்து அனுப்புங்கள். மறுபடி எப்போது சந்திக்க நேர்கிறதோ அப்போது சந்திக்கலாம். நீங்கள் இப்படி அநாவசியமாகக் கண்கலங்கித் தவித்தால் நான் வருத்தத்தோடு விடைபெற்றுத் திரும்ப வேண்டியிருக்கும். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியோடு விடை கொடுக்க வேண்டும். முதல் முதலாக உங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறேன்..."

"அதனால் தான் இப்படி நடையிலேயே நின்று பேசிவிட்டுப் போகப் பார்க்கிறீர்கள் போல் இருக்கிறது."

"எனக்கு நேரமாகிறது. நான் அவசரமாகப் போக வேண்டும். நண்பன் ஒருவனைச் சந்தித்து அழைத்துக் கொண்டு அவனோடு கடைகளுக்குப் போகவேண்டும்" என்றான் சத்தியமூர்த்தி.

"உண்மைதான்! என்னைப் போல் ஒவ்வொரு நாளும் நரக வேதனைப்பட்டுக் கொண்டு தவித்தும் ஏங்கியும் வாழ்கிறவர்களுக்குச் சில சமயங்களில் மற்றவர்களுடைய அவசரம் புரியாமல் தான் போய் விடுகிறது. இந்தப் பையனைக் காப்பி, சிற்றுண்டி வாங்கி வர அனுப்பியிருக்கிறேன். இன்னும் சிறிது நேரத்தில் அம்மா வெளியிலிருந்து வந்ததும் பையனைத் துணைக்கு அழைத்துக் கொண்டு கோயிலுக்குப் போக வேண்டும். அம்மா வந்து விட்டாலோ நீங்களும் நானும் இப்படி நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாலே காளி சொரூபம் எடுத்து விடுவாள். அவள் யார் யாரிடம் எவ்வளவு நேரம் நின்று சிரித்துப் பேசச் சொல்கிறாளோ அவர்களிடம் மட்டும் தான் நான் பேச வேண்டும். உங்களோடு பேச வேண்டுமென்று எனக்கே ஆசையாக இருக்கிறது. நீங்களோ வாசலில் ஒரு காலும் உள்ளே ஒரு காலுமாகப் பறந்து கொண்டு நிற்கிறீர்கள்..."

இவ்வளவு சொல்லி வேண்டிக் கொண்ட பின்பும் அவள் மனத்தைப் புண்படுத்துவது அழகில்லை என்று கருதியவனாக உள் கூடத்தில் போய் உட்கார்ந்தான் சத்தியமூர்த்தி. கூடம் முழுவதும் சிமெண்டுத் தரையில் பளீரென்று தெரிகிறாற் போல் மாக்கோலம் போட்டிருந்தது. மோகினியின் பெரிய பெரிய புகைப்படங்கள் இரண்டு மூன்று அவள் பலவித நிலைகளில் நாட்டியமாடும் கோலத்தில் எடுக்கப்பெற்றுக் கூடத்துச் சுவரில் மாட்டப்பெற்றிருந்தன. கிழக்கு முகமாகப் பிரம்மாண்டமான சரஸ்வதி படமொன்று வைக்கப்பெற்றிருந்தது. அந்தப் படத்தின் இரு பக்கங்களிலும் வீணை, தம்பூரா, மிருதங்கம் என்று விதம் விதமான வாத்தியங்கள் ஏழெட்டு உறையிடப் பெற்றும் உறையிடப் பெறாமலும் வைக்கப்பட்டிருந்தன. சாம்பிராணிப் புகையின் நறுமணமும் பூக்களின் வாசனையுமாக அங்கே உட்காருவதே மெய் மறந்து பரவசப்படும் அனுபவமாக இருந்தது. கூடத்தில் தனக்கு எதிர்ப்பக்கம் ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்த மோகினியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே கேட்டான் சத்தியமூர்த்தி.

"இத்தனை வாத்தியங்களும் தூசி படிந்து மங்கிப் போய் கிடக்கின்றனவே? இவற்றை இங்கு யாரும் எடுத்து வாசிப்பவர்களே இல்லையா?"

"வாத்தியங்கள் மட்டும் இல்லை. இந்த வீட்டில் மனிதர்களும் இப்படித்தான் இருக்கிறோம். உங்களைப் போல் சத்தியமும் நேர்மையும் நிறைந்த சுந்தர இளைஞர் ஒருவர் மனம் வைத்தால் வாழ்நாள் முழுவதும் வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று இந்த வீட்டில் உங்களுக்காகக் காத்துக் கிடக்கிறது."

"எந்த வாத்தியத்தைச் சொல்லுகிறீர்கள்?"

அவனுடைய இந்தக் கேள்விக்கு மறுமொழி கூற மோகினி தயங்கினாள். அவளுடைய முகம் வெட்கத்தால் சிவந்தது. அவளுடைய இதழ்களிலும், கண்களிலும் சத்தியமூர்த்தியே அதுவரை பார்த்திராத விதமானதொரு குறும்புக் குறுநகை விளையாடியது.

"நிஜமாகவே நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கடைக்கண்களால் அவனைச் சூறையாடி விடுவது போல் பார்த்துக் கொண்டே கேட்டாள் அவள். அவன் இமையாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்த மதிமுகமும் மலர்விழிகளும் அப்போது ஆயிரமாயிரம் நயங்கள் நிறைந்த காவியமாகி இலங்கின. மிக மென்மையான குரலில் வெட்கம் அதிகமா, அல்லது இனிமை அதிகமா என்று கண்டுபிடிக்க முடியாத நளினமான தொனியோடு அந்த வாக்கியத்தைச் சத்தியமூர்த்தியிடம் கூறினாள் அவள்.

"இந்த வீட்டில் நீங்கள் எடுத்து வாசிப்பதற்காகவே உங்கள் காலடியில் காத்துக் கொண்டிருக்கும் வாத்தியம் இதோ இருக்கிறது" என்று தன் நெஞ்சைத் தொட்டுக் காண்பித்துவிட்டு அவனைக் கைக்கூப்பினாள் அவள். அப்போது அவளுடைய கண்களில் தெரிந்த தாபமும், தாகமும் எத்தனை எத்தனையோ யுகங்களாக இந்தச் சந்திப்புக்குக் காத்திருப்பது போல், தன்னுடைய பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்ட போது எந்த எதிர்பாராத உணர்ச்சி சத்தியமூர்த்திக்கு ஏற்பட்டதோ, அதே உணர்ச்சி தான் இப்போதும் ஏற்பட்டது.

"பிரிந்து வெளியூர் போகப் போவதைச் சொல்லிக் கொண்டு போகவந்தால் என்றும் பிரிய முடியாத பந்தத்தைச் சொல்லி நீங்கள் என்னைத் தடைப்படுத்துவது நியாயமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் சத்தியமூர்த்தி.

"மன்னிக்க வேண்டும்! உங்கள் முன்னிலையில் நான் எதற்காக இப்படி மனமும் உணர்ச்சிகளும் நெகிழ்ந்து போய்த் தவிக்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. இது ஏதோ பழம் பிறவித் தொடர்பாயிருக்க வேண்டும். இரயில் கதவைத் திறந்து கொண்டு கீழே குதித்து ஒரேயடியாகச் செத்துத் தொலைந்து போய்விட இருந்தவளைப் பின்னாலிருந்து கையைப் பிடித்து இழுத்துக் காப்பாற்றினீர்களே? எதற்காகக் காப்பாற்றினீர்கள்? 'இருந்து என் கழுத்தை அறுக்கிறதுக்குப் பதில் நீ ஒரேயடியாகச் செத்துத் தொலையறதே மேல்' என்று சொல்லிப் பெற்ற தாயே கைவிட்டு விட்டவளை நீங்கள் எதற்காகக் குறுக்கிட்டுக் காப்பாற்றினீர்கள்? மேளம் கொட்டாமல், நாதஸ்வரம் வாசிக்காமல், அந்த அதிகாலை நேரத்தில் ஓடும் இரயிலில் பாணிக்கிரகணம் செய்து கொண்டது போல் என் வலது கையைப் பிடித்து இழுத்தீர்களே - அப்போது எனக்கு எந்த ஞாபகம் வந்தது தெரியுமா? ஆண்டாள் கண்ணனைத் திருமணம் புரிந்து கொள்வதாகக் கனவு கண்டு பாடிய 'வாரணமாயிரம்' பாடல்கள் நினைவு வந்தன. 'கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்' என்று அப்போது என் இதயம் எனக்கு மட்டுமே கேட்கிற குரலில் பாடிக் கொண்டிருந்தது. பிடித்த கையைப் பாதியில் இழத்து முறித்துக் கொண்டு போகலாமா நீங்கள்? நீங்கள் மல்லிகைப் பந்தலுக்குப் போனாலும் சரி, வேறு ஏதாவது ஓர் ஊருக்குப் போனாலும் சரி, உங்களுடையவள் ஒருத்தி இங்கிருக்கிறேன் என்ற பவித்திரமான நினைவு உங்களுக்கு இருக்க வேண்டும்."

மிக மென்மையான தன் நெஞ்சின் உணர்ச்சிகள் தவிக்கத் தவிக்க அவள் இவ்வாறு கூறிக் கை கூப்பிய போது சத்தியமூர்த்தியும் கண்கலங்கிப் போய் இருந்தான். அந்த நிலையில் காப்பி சிற்றுண்டியை எடுத்து வழங்கினாள். அவன் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சிறிதும் எதிர்பாராத கேள்வி ஒன்று அவளிடமிருந்து பிறந்தது.

"நீங்கள் புறப்படுவதற்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன?"

"ஏன்? இன்னும் நான்கு நாட்களில் நான் புறப்பட வேண்டும்! ஆனால் இப்போதே பிரயாணச் சுறுசுறுப்பு வந்துவிட்டது."

"புறப்பட்டுப் போவதற்கு முன் உங்களை நான் இன்னொரு முறை சந்திக்க வேண்டும்" என்றாள் அவள்.

அத்தியாயம் - 15

இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டு பிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்கள்.

'இந்த வீட்டில் நீங்கள் மட்டுமே எடுத்து வாசிப்பதற்குரிய பரிசுத்தமான வாத்தியம் ஒன்று உங்களுக்காகவே காத்துக் கிடக்கிறது' என்ற மோகினியின் வாக்கியம் சத்தியமூர்த்தியின் இதயத்தில் ஆழமாகப் பதிந்து கிடந்தது. அவளுடைய நீர் பெருகும் விழிகளைக் காணும் போதெல்லாம் 'ஒரு தூரத்து நண்பருக்கு' என்ற தலைப்பில் தொகுக்கப் பெற்றிருக்கும் கவி பைரனின் ஆங்கிலக் கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தான் அவன்.

'நாம் இருவரும் சந்தித்துப் பிரிந்தபோது கண்ணீரும் அமைதியுமே இருந்தன' என்று ஆரம்பமாகிற அந்தப் பாடல் 'கண்ணீராலும் அமைதியாலுமின்றி இதை நான் எப்படி வரவேற்க முடியும்?' என்ற கேள்வியோடு முடியும். 'வென் வி டூ பார்ட்டெட் - இன் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ்' என்ற ஆரம்ப வரிகளும் 'ஹௌ ஷுட் ஐ கிரீட் - த்தீ வித் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ்' என்ற இறுதி வரிகளும் அதே கவி வடிவத்தோடு அவன் இதயத்தில் மீண்டும் மீண்டும் பதிந்து உறைகிற ஞாபகமாகச் சுழன்றன. பொன்னுக்கும் பொருளுக்கும் கடன்படுவதை விடத் தூய்மையான அன்புக்கு அதிகமாகக் கடன்பட வேண்டியதன் அவசியம் இப்போது அவனுக்குப் புரிந்தது. ஊருக்குப் போவதைப் பற்றி இரண்டு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாம் என்று வந்த இடத்தில் அன்புக்குக் கட்டுப்பட்டு அதிக நேரம் உட்கார்ந்து விட்டதை உணர்ந்தான் அவன். எந்த இடத்தில் பிறரை வெற்றி கொள்ள முடிந்த தூய்மையான அன்பு பிறந்து பொலிந்து நிற்கிறதோ அந்த இடத்தில் மனிதனுடைய பிடிவாதம் தோற்றுப் போய்விடுகிறது என்பது உண்மைதான். மோகினியின் அன்பு சங்கீத விநாயகர் கோவில் தெருவிலிருந்த அந்தச் சிறிய வீட்டில் பிடிவாதமாக அவனைப் பிடித்து உட்காரவைத்து விட்டது. முதலில் அந்தத் தெருவிற்குள் நுழைவதற்கே அவன் கால்கள் கூசின. அப்புறம் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு அவன் கால்கள் தயங்கின. இறுதியில் அத்தனை தயக்கத்தையும் அவள் வென்றாள்.

இருள் தூங்கும் கூந்தல் அவிழ்ந்து பெருக - அப்படிப் பெருகும் எல்லையிலாப் பேரழகுக்கு ஒரு தடையிட்டுக் கட்டினாற் போல் பட்டு ரிப்பனால் கட்டி, அந்தக் கருமை வெள்ளத்தின் அலைகளுக்குள்ளிருந்து தானே பூத்துச் சரிந்தது போன்ற ஒரு கொத்துப் பூவோடும் புன்னகை பூத்த முகத்தோடும் அவள் வந்து நின்ற போது அவனும் தன்னை மறந்து நின்று விட்டான். மோகினி என்று அவளுக்கு இசைவாகப் பெயர் வைத்தவர்களை மறுமுறையும் இதயபூர்வமாக வாழ்த்தினான் அவன். வாசலில் நின்றது, இருந்தது, தயங்கியது, உள்ளே போய் உட்கார்ந்தது, சிற்றுண்டி காப்பி அருந்தியது, பேசியது எல்லாம் 'நானா இப்படிச் செய்தேன்?' 'நானா இப்படிச் செய்தேன்?' என்று அவன் தன்னைத்தானே நம்பி ஒப்புக் கொள்ள முடியாத காரியங்களாக இருந்தன. 'நான் எப்படி இவ்வாறு நெகிழ்ந்தேன்?' என்று அவன் தன் இதயத்தைத் தானே கேட்டுச் சோதித்துக் கொள்ளவும் முடியாதபடி மனமே அந்த நெகிழ்ச்சியை விரும்பி அதன் பக்கமாகச் சாய்ந்திருந்தது. அப்போது அவர்கள் இருவருக்கும் நடுவே கண்ணீரும் மௌனமுமே நிரம்பியிருந்தன. 'கண்ணீராலும் மௌனத்தாலும் அல்லாமல் இதை நான் வேறு எந்தவிதமாக ஏற்றுக் கொள்வேன்?' என்ற கவி பைரனின் கவிதை வரிகளைத் தான் அவனால் மீண்டும் சிந்திக்க முடிந்தது. அவளோ அவனுடைய இதயத்தின் நெகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும்படியான வேறொரு வேண்டுகோளுடன் நின்றாள்.

"நீங்கள் ஊருக்குப் போவதற்கு முன் நான் உங்களை இன்னொருமுறை சந்தித்து மனம்விட்டுப் பேச வேண்டும்." சொற்களால் பேசுவதைவிட நீர் பெருகும் கண்களாலும், மௌனத்தாலுமே அதிகமாகத் தன் அந்தரங்கத்தைப் பேசினாள் அவள். மௌனத்தினாலும் வெறும் பார்வையினாலுமே சாமர்த்தியமாகப் பேசத் தெரிந்தவர்களுக்குச் சொற்களால் பேசுவதா பெரிய காரியம்? ஆனால் சொற்களால் பேசுவதற்கு ஒன்றுமே மீதமில்லாததைப் போல் அப்போது அவர்கள் இருவருமே மௌனத்தால் மட்டும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு நல்ல பூவுக்கு அதன் நிறமும் மணமும் சேர்ந்தே அழகாயிருப்பதைப் போல் துயரமும் மகிழ்ச்சியும் பாதி பாதியாகக் கலந்த மௌனமாயிருந்தது அது. ஒருவருக்கொருவர் முகத்துக்கு முகம் இமையாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பார்வையில் தனியான மகிழ்சியும் இல்லை; தனியான துயரமும் இல்லை. இரண்டுமே கலந்திருந்தது. எந்த விதமாகக் கலந்தால் அழகோ அப்படியே கலந்திருந்தது.

அந்த அழகிய மௌனத்தைச் சத்தியமூர்த்திதான் முதலில் கலைத்தான்.

"நீங்கள் அன்று சித்திரைப் பொருட்காட்சியில் ஆண்டாள் நடனத்துக்குப் பின்னால் சில சில்லறை நடனங்கள் ஆடினீர்களே; அவற்றை எனக்குப் பிடிக்கவில்லை. பரநாட்டியத்துக்கு தொடர்ச்சியாக இவற்றை ஆடும்போது பரத நாட்டியத்தின் கௌரவத்தையே இவை கெடுத்து விடுகின்றன. நல்ல மரம் வளர்ந்த பின் அதைச் சில புல்லுருவிகளும் பற்றிப் படர்வது போல் ஒவ்வொரு கலையும், தான் வளரும் போது தன்னைச் சுற்றித் தன் கீழே இப்படிச் சில கலைகளையும் வளரவிட்டு விடுகிறது. கலைகளின் தரத்தைக் காக்க விரும்புகிறவர்கள் இந்தக் கலைகளைக் களைய வேண்டும்."

"உண்மைதான்! எனக்கும் அப்படிப்பட்ட சில்லறை நடனங்களைப் பிடிக்கவில்லை. எனக்கு இதைக் கற்றுக் கொடுத்த வாத்தியார் அடிக்கடி, 'இந்தக் கலை வெறும் தெருக்கூத்து இல்லையம்மா! இது சரசுவதியோட இலட்சணம்' என்று சொல்வார். 'நீ கால்களில் சலங்கையைக் கட்டிக்கொண்டு மேடையேறி ஆடும்போது உன்னால் ஆளப்படுகிற கலை எதுவோ அந்தக் கலையின் அழகு தான் மக்களைக் கவர வேண்டுமேயொழிய உன் உடலின் அழகு மட்டுமே மக்களைக் கவர்ந்து நீ ஆள்கிற கலையின் அழகு மக்களைக் கவர்வதற்குத் தவறிவிடக் கூடாது. அப்படித் தவறினால் அது பூப்பொட்டலத்தைச் சுற்றி வைத்திருந்த இலையைக் கூந்தலில் வைத்துக் கொண்டு பூவைத் தூர எறிவது போல் நோக்கம் பிறழ்ந்த கலையாகி விடும்' என்றும் வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். உயர்ந்த தரத்துக் கலையைத் தெருக்கூத்தாக மாற்றிக் கேவலப்படுத்தக் கூடாது என்பதுதான் என் அபிப்பிராயம். ஆனால் நான் எந்தக் கலையை ஆள்கிறேனோ அந்தக் கலையை என் விருப்பப்படி ஆளமுடியாமல் அம்மாவும் கண்ணாயிரமும் ஏதேதோ வியாபாரத் திட்டம் போடுகிறார்கள். அதுதான் சொன்னேனே, பல வகையான காரணங்களால் நான் நினைக்கிற உயரத்துக்கு மேலே ஏறிப் போய் என்னால் வாழ முடியாமலிருக்கிறது. மனத்தினால் மட்டும்தான் நான் வாழ்கிறேன்."

அவள் முகத்தையே பார்த்திருந்த சத்தியமூர்த்திக்கு அப்போது அவள் கூறியவற்றையெல்லாம் நம்பாமல் இருக்க முடியவில்லை. இரயிலில் முதன் முதலாக அவளைச் சந்தித்த தினத்தன்று, அந்த இரவில் அவளுக்கும் அவள் தாய்க்கும் நிகழ்ந்த உரையாடலைச் சத்தியமூர்த்தி இப்போது நினைவு கூர்ந்தான். அவளுடைய மனநிலையும், அவளைச் சுற்றியிருக்கும் சூழ்நிலையும் அவனுக்கு விளங்கின. "அக்கா! படங்களுக்குப் போடறதுக்கு மல்லிகைப் பூமாலை வந்திருக்கு..." என்று பூக்காரன் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போன கூடையோடு சிறுவன் உள்ளே வந்தான். மோகினி அந்தக் கூடையை வாங்கி மாலைகளைப் பிரித்தாள். திடீரென்று அந்த வீட்டுக் கூடமே மிகப் பெரிய மல்லிகைத் தோட்டமாகிப் பூத்துக் குலுங்குவது போல் நறுமணம் கமழ்ந்தது. அங்கிருந்த சிறிய ஸ்டூல் ஒன்றைச் சுவர் ஓரமாக நகர்த்திப் போட்டுக் கொண்டு அவளுடைய கைகளால் அந்தச் சிறுவனிடமிருந்து மாலையை வாங்கிச் சூட்டும் நளினத்தைச் சத்தியமூர்த்தி கவனித்துக் கொண்டிருந்தான். அவன் உட்கார்ந்திருந்த இடத்துக்கு மேலே பின்புறத்துச் சுவரில் ஒரு முருகன் படம் மாட்டியிருந்தது. அந்தப் படத்துக்கு அவள் மாலையைச் சூட்ட வந்த போது மட்டும் வசதியாக நின்று கொண்டு அவள் மாலையைச் சூட்டுவதற்குத் தான் இடையூறாக இருக்கலாகாது என்ற எண்ணத்தினால் சத்தியமூர்த்தி எழுந்து விலகி நின்றான். படத்துக்கு மாலையைச் சூட்டிவிட்டுத் தான் கீழே இறங்கிய பின்பும் அவன் விலகி நின்று கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, "நீங்கள் உட்காரலாம். ஏன் நிற்கிறீர்கள்?" என்று அவள் நாற்காலியைச் சுட்டிக் காட்டினாள். பழையபடி உட்கார்ந்தான் அவன். அப்படி உட்கார்ந்த மறுகணமே அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. மேலேயிருந்த படத்தின் ஆணிகளில் சரியாகப் பதியாததனாலோ என்னவோ, முருகன் படத்திலிருந்த மாலை அப்படியே கழன்று 'இந்த இடத்தில் இப்படித்தான் விழவேண்டும்' என்று சொல்லி வைத்து விழுந்தாற் போல சத்தியமூர்த்தியின் கழுத்தில் வந்து விழுந்தது.

ஒரு சிறிதும் எதிர்பாராதபடி நேர்ந்த இந்த நிகழ்ச்சியால் ஏன் அடையவேண்டும் என்று புரியாத ஒருவிதமான அதிர்ச்சியும் அதே ரீதியில் அடைந்த ஒருவிதமான மகிழ்ச்சியுமாகப் பதறிக் கொண்டே அந்த மாலையை அவன் கழற்ற முற்பட்டபோது இரண்டு பூக்கரங்கள் அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு அந்த மாலையை அவன் கழற்ற விடாமல் தடுத்தன. "கழற்றாதீர்கள். இப்படியே இந்தக் கோலத்தில் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் ஆசையாயிருக்கிறது" என்று உணர்வு நெகிழ்ந்த குரலில் அவள் அவனை வேண்டிக் கொண்டாள். ஆயினும் அவள் கைகளைத் திமிறிக் கொண்டு அந்த மாலையை அவசர அவசரமாகக் கழற்றி வைத்துவிட்டான் அவன். அப்படிக் கழற்றி வைத்துவிட்டாலும், அந்த இடத்தில் இன்னும் அந்த மாலையோடு சேர்ந்து அவன் எப்படித் தோன்றுவானோ அப்படியே தோன்றுவதாகப் பாவித்துக் கொண்டு பார்ப்பதைப் போல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றாள் மோகினி.

"நான் புறப்படுகிறேன். நேரம் அதிகமாகிவிட்டது" என்று மெல்ல எழுந்தான் சத்தியமூர்த்தி.

"நீங்கள் புறப்படுவது இருக்கட்டும். என்னுடைய வேண்டுகோள் என்ன ஆயிற்று? ஊருக்குப் போவதற்கு முன் உங்களை நான் இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்றேனே...?"

"அவசியம் பார்த்தாக வேண்டுமோ?"

"அதில் சந்தேகமென்ன? நீங்கள் இங்கிருந்து புறப்படுமுன் கண்டிப்பாக உங்களை இன்னொரு முறை சந்தித்தாக வேண்டும்."

எதற்காக அந்தச் சந்திப்பை அவள் வேண்டுகிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறவனைப் போலச் சத்தியமூர்த்தி அவளுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவள் அந்தப் பார்வைக்கு நாணி ஒசிந்து போய்ப் புன்னகை புரிந்தாள்.

"நீங்கள் இவ்வளவு வற்புறுத்திச் சொல்கிற போது நான் எவ்வாறு மறுக்க முடியும்? ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னால் மறுபடியும் உங்களைப் பார்த்துவிட்டுப் போக முயல்கிறேன்" என்று கூறி அவளிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டான் அவன். மோகினியும் அந்தச் சிறுவனும் வாசற்படி வரை வந்து அவனை வழியனுப்பினார்கள். மிகுந்த நேரம் அதிக சிரத்தையோடு உட்கார்ந்து பேசிப் பழகி ஆறுதலும் அநுதாபமும் கூற வேண்டிய ஓர் உறவை வேகமாக முறித்துக் கொண்டு புறப்பட்டு விட்டாற் போன்ற உணர்ச்சி தான் அப்போது அவனுக்கு இருந்தது.

படத்திலிருந்து தவறி விழுந்த மாலையைக் கழுத்திலிருந்து கழற்றவிடாமல் தடுத்த அவளுடைய பட்டுக் கைகள் இன்னும் தன் தோள்களிலேயே பதிந்து இருப்பது போல் உணர்ந்தான் அவன். குமரப்பனுடைய அறை இருக்கிற இடத்துக்குப் போகிற வரை அவன் மதுரையின் வீதிகளில் நடந்து போனான் என்பதை விட, நிகழ்ந்தவை என்ற இனிய ஞாபகங்களின் மேல் மிதந்து, நிகழ இருப்பனவற்றுக்கு ஓர் அவசரத்தைப் படைத்துக் கொண்டு போனான் என்பதுதான் பொருந்தும். மனத்தில் குழப்பமோ சிக்கலோ இல்லாமல் தெளிவான எண்ணங்கள் ஓடும்போது நடையும் ஓட்டமாக இருப்பது சத்தியமூர்த்தியின் வழக்கம். எண்ணங்களில் சூடேறிச் சிந்தனையோடு நடந்து போகிற பல சமயங்களில் நடப்பதே ஞாபகமில்லாமல் பறந்திருக்கிறான் அவன். இன்றும் அப்படிப் பறந்து போய்த்தான் அவன் குமரப்பனுடைய அறையை அடைந்திருந்தான். அவன் போகும் போது குமரப்பன் ஏதோ ஒரு கார்ட்டூன் படத்துக்காகப் பென்சில் வரைபடம் (ஸ்கெட்ச்) போட்டுக் கொண்டிருந்தான். கால்மணி நேரம் அப்படியும் இப்படியுமாகக் கோடுகள் இழுத்து அழித்த பின், "இந்தப் பாழாய்ப் போன பிரமுகர்... வாழ்க்கையில் தான் சரியான வழிக்கு வராமல் திமிறித் திமிறிப் போய்க் கொண்டிருந்தார் என்றால் படத்திலுமா அப்படி இருந்து தொலைக்க வேண்டும்? நானும் தான் அரை நாழிகையாகக் கோடிழுத்துப் பார்க்கிறேனடா சத்யம்; ஒரு கோட்டிலுமே பிடிபடாமல் நழுவிக் கொண்டிருக்கிறார் இவர்" என்று கூறிச் சரியாக வராத அந்தக் கார்ட்டூனைத் தூக்கி எறிந்தான் குமரப்பன்.

"சரி! நாம் புறப்படலாம் வா... இந்தப் பிரமுகரைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம். திரும்ப வந்த பிறகாவது இவர் வழிக்கு வருகிறாரா என்று பார்க்கிறேன்" என்று கையில் இருந்த பென்ஸிலையும் அந்தக் காகிதத்தின் மேல் வெறுப்போடு வீசிவிட்டுச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டான் குமரப்பன். நண்பர்கள் இருவரும் கீழவாசலுக்குப் போய் அம்மன் சந்நிதி முன்புறம் உள்ள சில துணிக்கடைகளில் படியேறி இறங்கினார்கள். துணிமணிகளை வாங்கிக் கொண்டு அவர்கள் சந்நிதி முகப்பில் நடந்த போது கோயிலுக்குள் போவதற்காகக் கண்ணாயிரம் காரில் வந்து இறங்கிக் கொண்டிருந்தார். நெற்றி நிறையத் திருநீறு துலங்க மார்பில் சட்டையோ, பனியனோ இல்லாமல் பளபளவென்று மின்னும் ஒரு பட்டு அங்கவஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு பரம பக்தராகக் கோவிலுக்குள் நுழைந்து கொண்டிருந்தார் கண்ணாயிரம்.

"பார்த்தாய் அல்லவா?" என்று சிரித்துக் கொண்டே குமரப்பனைக் கேட்டான் சத்தியமூர்த்தி.

"ஆகா! பார்க்காமல் விடுவேனா? தாராளமாகப் பார்த்தேன். நாயன்மார்களும், ஆழ்வார்களும் பக்திக்குக் கவசமாயிருந்து அந்த நல்லுணர்வைக் காத்தார்கள். இந்தக் காலத்திலோ ஒழுக்கமும் நேர்மையுமின்றி வாழும் சிலருக்குக் கூடத் தங்களைக் காத்துக் கொள்ளும் ஒரு கவசமாகப் பக்தி பயன்படுகிறது. அவர்கள் பக்திக்குக் கவசமாக இருந்து அதைக் காத்தார்கள் என்றால் இவர்கள் பக்தியை ஒரு கவசமாக அணிந்து தங்களைக் காத்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்."

"சரியாகச் சொல்லிவிட்டாய், குமரப்பன்! நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்கள் எல்லோரிடமும் கடுமையாகவும் முறையின்றியும் நடந்து கொண்டே தெய்வத்தினிடம் மட்டும் எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொள்வதாகப் பாவிக்கிறவர்களைத் தெய்வம் எப்படி மன்னிக்க முடியும்?"

"மன்னிப்பதால் பெருமைப்படலாம். ஆனால் மாற்றியமைப்பதால் மட்டுமே திருப்திப்பட முடியும். கண்ணாயிரத்தைப் போல் பொய்யாக வாழ்கிறவர்களும் பக்திக்கோலம் பூண்டு பரமபக்தராகக் கோவிலுக்கு வருகிறார்கள். இதயபூர்வமான பக்தியைத் தவிர வேறு எந்தக் காணிக்கையையும் சுமந்து கொண்டு வரமுடியாத பல்லாயிரம் ஏழைகளும் கோவிலுக்கு வருகிறார்கள். கோவிலுக்கு வருவதைக் காரணமாக வைத்தும் சமூகத்தில் நல்லவர் - கெட்டவர்களைப் பிரித்துக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கிறது பார்த்தாயா? இந்த நூற்றாண்டின் சமூக வாழ்க்கையில் யார் பெரிய ஆராய்ச்சியாளன் தெரியுமா? நல்லவர் கெட்டவர் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவன் தான் பெரிய ஆராய்ச்சியாளன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படிப் பிரித்துக் கண்டுபிடிக்கத் தெரிந்தவர்கள் நம்மிடையே மிகவும் குறைவாயிருக்கிறார்களடா சத்தியம்!"

"இந்த நூற்றாண்டில் சமுதாயத்தின் பொதுவான சொத்து எதுவாயிருக்கிறது என்று பார்த்தால் பெரிய ஊர்களில் பரவலான கோழைத்தனமும் சிறிய ஊர்களில் பரவலான முரட்டுத்தனமும் தான் நிரம்பிக் கிடக்கின்றன. அப்படியிருக்கும் போது நல்லது கெட்டது தெரிந்தவர்கள் குறைவாயிருப்பதில் ஆச்சரியம் என்ன?" என்று குமரப்பனை எதிர்த்து விவாதம் செய்தான் சத்தியமூர்த்தி. இருவரும் பேசிக் கொண்டே அந்திக் கடைப் பொட்டலுக்கருகே மீனாட்சி பூங்காவுக்குள் போய் உட்கார்ந்தார்கள். சத்தியமூர்த்தி தன் நண்பனிடம் மனம் உருகிக் கூறலானான்:

"இனிமேல் இப்படி நாம் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புக்கள் இல்லாமற் போய்விடுமே? எப்போதாவது கல்லூரி விடுமுறைகளின் போது நான் மதுரைக்கு வந்தால் தான் உண்டு. ஊரைப் பிரிந்து போவதை விட உன்னைப் பிரிந்து போவதுதான் எனக்குப் பெரிய வேதனை குமரப்பன்! முயன்றால் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் எல்லா இடத்திலும் கிடைத்துவிடும். ஆனால் மனம் விட்டுப் பழகுவதற்குச் சாத்தியமான நண்பர்கள் எல்லா இடத்திலும் கிடைக்க மாட்டார்கள்."

"கவலைப்படாதே, சத்யம்! கடிதங்களால் சந்தித்துப் பேச முடியும் நாம். நான் அன்று ஒரு நாள் சித்திரைப் பொருட்காட்சி முடிந்து திரும்பிய போது கூறியது உனக்கு நினைவு இருக்குமென்று எண்ணுகிறேன். வழி உண்டாக்கிக் கொண்டு நடக்கிறவனுக்கு எங்கே போனாலும் நல்ல நண்பர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள்" என்றான் குமரப்பன்.

"ஆயிரம் சொல், குமரப்பன்! நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். உன்னைப் போல் இன்னொரு நண்பன் எனக்குக் கிடைப்பான் என்று இனி நான் எதிர்பார்க்க முடியுமா? நீ மிகவும் அதிசயமானவன்..."

"அதெல்லாம் பெரிதாகச் சொல்லிப் புகழாதே. இப்படி இன்னும் எத்தனை அதிசயமானவர்களைச் சந்திக்கப் போகிறாயோ? வாழ்க்கையில் ஒவ்வொரு பெரிய அநுபவமும் அதற்கு முந்திய அநுபவங்களை ஞாபகத்தில் மங்கச் செய்து விடுவது வழக்கம். என்னுடைய நினைவையும் மங்கச் செய்து விடும்படியான பெரிய அநுபவங்கள் உன் வாழ்க்கையில் போகப்போக வரும். அநுபவங்கள் முடிச்சுப் போடுவது போலத்தான், இருக்கும் போதே முந்திய முடிச்சைத் தளர்த்திவிட்டு இறுகும். என் அநுபவத்தில் பலமுறை இதை நான் உணர்ந்திருக்கிறேன். அத்தகைய பெரிய அநுபவங்களை நீ அடைய அடையக் 'குமரப்பன்' என்ற கார்ட்டூனிஸ்ட்டை மறந்தாலும் மறந்து விடுவாய்... யார் கண்டார்கள்?"

"அப்படிச் சொல்லாதே, குமரப்பன்! உன்னை மறக்கக் கூடாதென்பது என் தவம். அது ஒரு போதும் வீணாகாது" என்று சத்தியமூர்த்தி உறுதிதொனிக்கும் குரலில் நண்பனிடம் கூறினான். மறுநாளும் மாலையில் நண்பர்கள் இருவரும் சந்தித்து நெடுநேரம் பேசினார்கள். அதற்கு அடுத்த நாளும் பேசினார்கள். சத்தியமூர்த்தி, ஊருக்குப் புறப்படும் நாள் நெருங்க நெருங்க அவர்கள் சந்தித்துப் பேசும் நேரமும் வளர்ந்தது. ஊருக்குப் புறப்படும் நாளுக்கு முதல் நாள் மாலை குமரப்பனைத் தேடிச் செல்லும் போதே மோகினியிடம் சந்திக்க வருவதாக ஒப்புக் கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தான் சத்தியமூர்த்தி. ஊருக்குப் போவதைச் சொல்லிக் கொள்ள மோகினியிடம் சென்றதையும் அப்படிச் சென்றபோது அங்கு நிகழ்ந்தவற்றையும் குமரப்பனிடம் சொல்வதற்கு வாய்க்கவில்லை. ஆனால் குமரப்பனாகவே நடுவே ஒரு நாள் அவளைப் பற்றி சத்தியமூர்த்தியிடம் சில வார்த்தைகள் பேசியிருந்தான்.

"அந்தப் பெண்ணுக்கு அவள் மேற்கொண்டிருக்கும் கலைத்துறையில் நல்ல எதிர்காலமும் புகழும் இருக்கின்றன. அந்தக் கலையை உயர்ந்த தரமாகவும் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்தக் கண்ணாயிரம் குறுக்கே புகுந்து பாழாக்கிவிடாமல் இருக்க வேண்டும். இவன் ஏதோ மஞ்சள்பட்டியார் தலையைத் தடவி இரண்டு மூன்று லட்ச ரூபாய் முதல் போடச் சொல்லி 'மூன்லைட் பிக்சர்ஸ்' என்றோ 'அமாவாசை பிக்சர்ஸ்' என்றோ படத் தயாரிப்புக் கம்பெனி ஆரம்பிக்கப் போகிறானாம். மோகினியும் பார்க்க இலட்சணமாக இருக்கிறாள். அவளுடைய அம்மாக்காரி கண்ணாயிரம் சொல்கிறபடி தலையாட்டுகிறாளாம். தங்க விக்கிரகம் போலப் பார்க்கிற எவனுக்கும் விரசமாக எந்த எண்ணமும் தோன்ற இடம் இல்லாதபடி ஏதோ நல்ல நாட்டியம் ஆடிக் கொண்டிருக்கிறது அந்தப் பெண். சினிமாவில் நடிக்கப் பண்ணுகிறேன் என்று கண்ணாயிரம் பாழாக்கி விடப்போகிறான். கண்ணாயிரம் எமகாதகன். யார் பணத்தையோ முதலாகப் போட்டு, யார் அழகையோ விளம்பரமாகக் காண்பித்துத் தான் பெரிய மனிதனாகிக் கடைசியில் மற்ற இருவரையும் நடுத்தெருவில் நிற்கும்படி செய்து விடுவான். இந்த விவரத்தையெல்லாம் அந்தப் பெண்ணுக்கோ, அவள் தாய்க்கோ யார் எடுத்துச் சொல்லப் போகிறார்கள்? பாவம்! வழிகாட்டுகிறவர்கள் இல்லாத அநாதைத் திறமைகள் எல்லாம் இந்த நாட்டில் யார் யாருக்கோ பயன்பட்டு வீணாகி அழிய வேண்டும் என்பதுதான் நியதி போல் இருக்கிறது. கண்ணாயிரம் இந்த முயற்சியில் இறங்கியிருப்பதாக என் காதில் செய்திகள் விழுகின்றன. இப்படிச் செயல்கள் கண்ணாயிரத்துக்குப் புதுமையில்லை. இப்படிச் செயல்களாலேயே வளர்ந்து வாழ்கிறவர் அவர். இந்தக் கொடுமையைப் புரிந்து கொள்ளாமல் மாட்டிக் கொண்டு வாழ்கிறவர்கள் பாடுதான் பரிதாபம். மஞ்சள்பட்டியாரைப் பற்றி நான் கவலையோ, அநுதாபமோ படமாட்டேன். அவரைப் பொறுத்தவரை அவருக்கும் இதெல்லாம் வேண்டியதுதான். தேவைக்கதிகமான வெள்ளைப் பணத்தையும், கறுப்புப் பணத்தையும் வைத்துக் கொண்டு 'என்ன செய்யலாம், என்ன செய்யலாம்' என்று துறுதுறுத்துத் திரிகிறவர்கள் கண்ணாயிரத்தினிடம் சிக்கிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் மோகினியைப் போன்ற அபலைகள் சிக்கிக் கொள்ளக் கூடாது" என்று குமரப்பன் கூறியிருந்தான். சத்தியமூர்த்தியாவது ஒரு நாகரிகத்துக்குக் கட்டுப்பட்டுக் கண்ணாயிரத்தை அவர் இவர் என்று மரியாதைப் பன்மை கொடுத்துப் பேசுவான். குமரப்பன் அந்த மரியாதையும் கொடுக்கமாட்டான். கண்ணாயிரத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தாலே ஏக வசனத்தில்தான் வாக்கியங்கள் வரும் அவனுக்கு.

சத்தியமூர்த்தி மறுநாள் மாலை இரயிலில் மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுவதற்கு இருந்ததால் மோகினியிடம் ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்தபடி ஊருக்குச் செல்வதற்கு முந்திய தினமாகிய அன்று அவளைக் காணச் சென்றான். குமரப்பன் கண்ணாயிரத்தைப் பற்றிச் சொல்லி எச்சரித்த செய்திகளையெல்லாம் அவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துக் கொண்டே போனான் அவன். கண்ணாயிரத்தைப் பற்றி அவளுக்கே நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும். இவற்றையெல்லாம் அவளிடம் சொல்வதற்கும் அவளை எச்சரிப்பதற்கும் தான் யார்? தனக்கென்ன உரிமை? என்று நடுநடுவே மனம் தயங்கியது; கருணையும் பரந்த நோக்கமும் உள்ளவனுக்கு உரிமையும், உறவும் பார்த்துத்தான் மனிதர்கள் மேல் இரக்கப்படத் தெரிய வேண்டும் என்பதில்லை. யாருக்குத் துன்பம் வந்தாலும் இரக்கப்படத்தான் வேண்டும். இந்த விதமான எண்ணங்களோடு அவன் மோகினியின் வீட்டுக்குள் படியேறிச் சென்ற போது அவள் அவனை எதிர்பார்த்துத் தனியாகக் காத்திருந்தாள். தன்னைப் பார்த்ததும் அவள் அடைந்த உற்சாகத்தைக் கண்டு சத்தியமூர்த்தியே அயர்ந்து போனான். வழக்கம் போல் காப்பி சிற்றுண்டி உபசாரத்துக்குப் பின் கேட்கலாமா, கேட்கக் கூடாதா என்று தயங்கிக் கொண்டே அவளிடம் ஒரு கேள்வியைக் கேட்டான் சத்தியமூர்த்தி.

"கண்ணாயிரத்துக்கும் உங்கள் வீட்டுக்கும் என்ன தொடர்பு என்று நான் தெரிந்து கொள்ளலாமோ? தயவு செய்து இந்தக் கேள்வியை எந்த விதத்திலும் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள அநுதாபத்தின் மிகுதியால் தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன்."

"தொடர்பாவது ஒன்றாவது? ஏதோ வருகிறார் போகிறார். அவரால் தான் இந்த உலகமே நின்றுவிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று அம்மாவுக்கு ஒரு பிரமை. சபைகளிலும், பொருட்காட்சிகளிலும் நாட்டியத்துக்கு கூப்பிடுகிறவர்கள் கண்ணாயிரம் சொல்லித் தூண்டுவதால் தான் கூப்பிட வருவதாக அம்மாவை அவரே நம்ப வைக்கிறார். என்னை அப்படியே சினிமா வானில் இலட்ச இலட்சமாகப் பணம் சம்பாதிக்கும் நட்சத்திரமாக மாற்றிவிடப் போவதாக அம்மாவிடம் அவர் வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டு திரிகிறார். "கூந்தல் தைல விளம்பரம், வாசனைச் சோப்பு விளம்பரம், பட்டுப்புடவை விளம்பரம் என்று எதன் பெயரைச் சொல்லியாவது கண்ணாயிரம் அம்மாவுக்குப் பணம் சம்பாதித்துக் கொடுக்கிறார். இவை எல்லாம் பிடிக்காமல் இருந்தும் பிடித்திருப்பது போல் அங்கீகரித்துக் கொண்டு சாகமாட்டாமல் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்" என்று மோகினி அவனுக்கு மறுமொழி கூறியபோது கண்ணாயிரத்தின் மேலிருந்த வயிற்றெரிச்சல் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டது. பொறுமையிழந்து தான் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.

"உங்களுடைய இதயத்தில் மண்டிக் கிடக்கும் வேதனைகளைக் கிளறி விடுவதாக என்னுடைய கேள்வி அமைந்திருந்தால் அதற்காக நான் வருத்தப்படுகிறேன். கண்ணாயிரத்தை நீங்களே சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அதிகமாக நம்பி ஏமாந்து போகக் கூடாது" என்று அவளுக்கு எச்சரிக்கை செய்தபோது, சத்தியமூர்த்தியின் மனம் தன்னைத்தானே குத்திக் காட்டியது. 'கண்ணாயிரத்தை நம்பி ஏமாந்து விடக்கூடாது என்று மோகினிக்கு அறிவுரை கூறிக் கொண்டு நிற்கிற நானே என் தந்தையிடம் இதை வற்புறுத்திக் கூற முடியாமல் போய் விட்டதே' என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான் அவன். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவளே அவனிடம் பேச ஆரம்பித்தாள். "உங்களை நான் இன்று சந்திக்க விரும்பிய காரியம்..." என்று சொல்லிக் கொண்டு தயங்கித் தயங்கி நடந்து போய்க் கூடத்தில் இருந்த அந்த முருகன் படத்துக்குக் கீழே நின்றாள் அவள். நாற்காலியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த அவனும் அவளோடு எழுந்து போய் நின்றான். அப்போது அவள் அவனே எதிர்பார்த்திருக்க முடியாத புதுமையான காரியம் ஒன்றைச் செய்தாள்.

"இந்தக் கையால் தான் என்னைக் காப்பாற்றி எனக்கு அபயமளித்தீர்கள் நீங்கள்! என்னுடைய ஞாபகமாக இது இந்தக் கையில் இருக்கட்டும்" என்று தன் வலது உள்ளங்கையில் அதுவரை மூடி வைத்திருந்த நீலக்கல் மோதிரம் ஒன்றை அவனுடைய வலக்கரத்து விரலில் தானே கைப்பற்றி அணிவித்தாள் மோகினி. இன்பகரமான அந்த அதிர்ச்சியில் ஓரிரு கணங்கள் தயங்கியபின், "ஞாபகம் ஒரு பக்கத்தில் மட்டும் இருந்து பயனில்லை! இரண்டு பக்கத்திலும் அந்த ஞாபகம் நிரம்பியிருக்க வேண்டும்" என்று கூறியவாறே தன் வலக்கரத்தில் மற்றொரு விரலில் ஏற்கெனவே இருந்த வேறோர் மோதிரத்தைக் கழற்றி நிலாக் கொழுந்து போல் வனப்பு மிக்கதாயிருந்த அவளுடைய மோதிர விரலில் பூட்டினான் சத்தியமூர்த்தி. வெட்கமும் முறுவலுமாக அவள் முகம் அவனை நோக்கி நிமிர்ந்த வேளையில் அவன் முகமும் அவளை நோக்கி ஏறிட்டுப் பார்த்தது. ஒருவர் அறியாமல் மற்றொருவர் பார்க்க முயன்று இருவருமே பார்த்துக் கொண்ட அந்த நிலையில் கள்ளத்தனமானதொரு மகிழ்ச்சி பிறந்தது.

"அதோ அந்தக் கண்ணாடியில் நாம் நிற்பதைப் பாருங்கள்" என்று எதிரேயிருந்த மிகப்பெரிய நிலைக் கண்ணாடியைச் சுட்டிக் காண்பித்தாள் அவள். சத்தியமூர்த்தி நிமிர்ந்து எதிரே பார்த்தான்.

"இப்போது நாம் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று நான் சொல்லட்டுமா?..." அவள் குரல் அவனைக் கெஞ்சியது. "சொல்லேன்" என்று அவன் பதில் கூறியதும் அவள் எதைச் சொன்னாளோ, அதைக் கேட்ட அவன் பேரின்பச் சிலிர்ப்படைந்தான்.

அத்தியாயம் - 16

ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல் தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

"இப்போது நாமிருவரும் நிற்கிற கோலம் எப்படி இருக்கிறதென்று சொல்லட்டுமா?" என்று கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தியே அன்பின் நெகிழ்ச்சி மிகுதியினாலோ அல்லது வாய் குழறியோ 'சொல்லேன்' என்று ஏக வசனமாக ஒருமையில் பதில் சொல்லியது மோகினிக்குப் பிடித்திருந்தது. அவன் அப்படித் தன்னை அழைக்க வேண்டுமென்றுதான் அவள் விரும்பினாள். உரிமையை இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்வதற்கு ஒருமைக்கும் கீழானதொரு சொல் இருக்குமானால் அந்தச் சொல்லாலும் சத்தியமூர்த்தி தன்னை அழைக்க வேண்டும் என்று தான் அவள் ஆசைப்பட்டாள்; ஏங்கினாள். அன்பைக் குறைத்துத் தன்னைத் தனியாகப் பிரித்து நிறுத்திக் கொள்ளும் அதிகப்படியான மரியாதையைவிட மரியாதையைக் குறைத்து அன்பால் பெருகி நெருங்கும் உரிமையையும், உறவையும் அவள் பெரிதும் விரும்பினாள். ஆனால் அதே சமயத்தில் சத்தியமூர்த்தி அவசரத்தினாலும் பதற்றத்தினாலும் அவளை அப்படி அழைத்ததற்காகத் தனக்குள் மனம் குழம்பிக் கொண்டிருந்தான். 'எல்லாவிதமான கட்டுப்பாட்டையும் மீறி, என் வாய் எப்படிக் குழறியது? நான் எப்படித் தடுமாறினேன்?' என்று எண்ணியபடி அவன் மனம் வருந்திக் கொண்டிருந்த போது தன்னுடைய வார்த்தைகளால் மோகினி அவனுடைய வருத்தத்தைத் தவிர்த்தாள். அவளுடைய அந்தப் பணிவும் விநயமும் அவனுடைய பரவசத்தை மிகுதியாக்கின.

"நீங்கள் இப்படி வா, போ என்று உரிமையோடு ஒருமையில் அழைக்காமல், உயரத் தூக்கி வைத்து அநாவசியமாக மரியாதை கொடுத்து நேற்றுவரை என்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தீர்கள். இன்றுதான் நான் சௌபாக்கியவதியானேன். 'சொல்லட்டுமா?' என்று நான் உங்களைக் கேட்டவுடன் 'சொல்லேன்' என்று ஒருமையில் பதில் வந்ததே உங்களிடமிருந்து - அந்த வார்த்தையை என் செவிகள் கேட்க நேர்ந்த நல்ல வேளையை நான் வாழ்த்துகிறேன். இனிமேல் இப்படியே அழையுங்கள். இப்படி அழைக்கப்படுவதில்தான் நான் மகிழ்ச்சியை உணர்கிறேன். அதோ எதிரில் உள்ள நிலைக்கண்ணாடி உங்களையும் என்னையும் சிறிதும் வஞ்சகமில்லாமல் மணமக்களைப் போல் பிரதிபலிக்கிறது பார்த்தீர்களா? இந்த மோதிரத்தை முதன் முதலாக இந்த வீட்டுக்குள் நீங்கள் நுழைந்த தினத்தன்றே உங்கள் விரலில் அணிவிக்க எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது இதில் இந்த நீலக்கல் உதிர்ந்திருந்தது. கல்லையும் பதித்து மோதிரத்துக்கு மெருகு கொடுத்து வாங்குவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதற்காகத்தான் நீங்கள் ஊருக்குப் போவதற்குள் உங்களை மறுமுறையும் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன். நீங்களோ உங்கள் கையில் உள்ள மோதிரத்தைக் கழற்றிப் பதிலுக்கு என் கையில் அணிவித்து விட்டீர்கள். என்னுடைய அம்மாவின் பெரியம்மா ஒருத்தி எனக்குப் பெரிய பாட்டி முறையாக வேண்டும், மதுரவல்லி என்று பெயர். அவள் தன்னுடைய பதினேழாவது வயதில் பக்கத்துச் சமஸ்தானத்துக்கு நவராத்திரியின் போது சதிராடப் போனவள் அங்கே கவிஞர் ஒருவரைச் சந்தித்துக் காதல் கொண்டாள். ஆனால் அடுத்த நவராத்திரிக்கு அவள் அங்கு போய் விசாரித்த போது பேரழகராகிய அந்தக் கவி அகால மரணமடைந்து விட்டதை அறிந்து, 'இனி இந்தக் கால்கள் சலங்கை கட்டி ஆடப் போவதில்லை' என்று விரதமெடுத்துக் கொண்டு திரும்பினவள் சாகின்றவரை தன் கைகளால் வெறும் வாத்தியங்களைத் தீண்டியது தவிர மனிதர்களைத் தன் அருகிலும் வரவிடாமல் வாழ்ந்து செத்துப் போனாளாம். சாகின்றவரை அந்தப் பெரிய பாட்டியின் ஞாபகத்தில் அவள் முதல் முதலாகச் சந்தித்த கவிஞரைத் தவிர வேறு எவரும் மதிப்புப் பெறவோ வணங்கப் பெறவோ இல்லையாம். அந்தப் பாட்டியை நான் பார்த்ததில்லை. ஆனால் அவளுடைய பரிசுத்தத்தையும் தூய்மையையும் பற்றி இந்த வீட்டில் எனக்கு நினைவு தெரிந்தபின் கதை கதையாகச் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். 'நீயும் அந்தச் சனியன் பிடித்தவள் போனதைப் போலத்தான் உனக்கும் பயன் இல்லாமல் இந்த வீட்டுக்கும் பயனில்லாமல் போகப் போகிறாய். ஒருவேளை அவளே வந்து பிறந்து தொலைத்திருக்கிறாளோ என்னவோ?' என்று கோபத்தில் அம்மா என்னை எத்தனையோ முறை திட்டியிருக்கிறாள். அம்மா அப்படித் திட்டுவதைக் கேட்கும் போதெல்லாம் நான் பெருமைப்பட்டிருக்கிறேனே தவிர ஒரு சிறிதும் வருத்தப்பட்டதில்லை. சௌகரியங்களோடு வாழ்கிறவர்கள் அதற்காகக் கர்வப்படலாம். ஆனால் தூய்மையோடு வாழ்கிறவர்கள்தான் 'நாம் வாழ்கிறோம்' என்று பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். நான் சௌகரியங்களுக்கு ஆசைப்படவில்லை. தூய்மையைக் காத்துக் கொள்ள மட்டும் ஆசைப்படுகிறேன். பலவிதமான சூழ்நிலைகளை உத்தேசித்து நான் வாழவே கூடாது. ஆனால் நீங்கள் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்ற நல்ல ஞாபகத்தைப் போற்றுவதற்காவது இன்னும் சிறிது காலம் வாழவும் வேண்டும்."

"நிச்சயமாக வாழவேண்டும்! நீங்கள்... இல்லை... இல்லை... நீ... வாழ வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வீட்டுக்குள் வாயிற்படியேறி வந்தேன் நான். இந்தப் படிகளில் ஏறிக் கொண்டிருக்கும் போது நான் மேலே ஏறிக் கொண்டிருக்கிறேனா அல்லது மேலே ஏறிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டே கீழே இறங்கிக் கொண்டிருக்கிறேனா என்று எனக்குள் பலமுறை தயங்கியிருக்கிறேன் நான். அப்படித் தயங்குவதும் நியாயம் தானே? உலகத்தில் இரண்டு விதமான அன்பு உண்டு. மழையைப் போல் எப்போதாவது பெய்து நின்று விடுகிற அன்பு. சூரியனைப் போல் நாள் தவறாமல் தோன்றுகிற அன்பு. மழையைப் போல் பெய்து பெய்து நின்றுவிடுகிற அன்பைத்தான் உன் தாய் உனக்கு உபதேசம் செய்திருக்கிறாள். உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டிருக்கிற அன்பும் அப்படிப்பட்டதுதான்..."

"நான் புரிந்து கொண்டிருக்கிற அன்பு அப்படிப்பட்டது இல்லை. சத்தியமானது. என்னையே நான் அர்ப்பணித்திருப்பது."

"இருக்கலாம், மோகினீ! ஆனால் ஓர் ஆணும் பெண்ணும் மனப்பூர்வமாகச் செலுத்துகிற அன்பு வெற்றி பெறுகிறதா அல்லது தோற்றுப் போகிறதா என்பதைப் பொறுத்து உலகத்தில் பல காவியங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் அந்தக் காவியங்களில் பெரும்பாலானவற்றிலிருந்து இருவரில் யாரோ ஒருவருடைய அழுகுரல்தான் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருப்பதை நீயும் நானும் இன்றும் நாளையும் என்றும் கேட்கலாம்."

"..."

மோகினியிடமிருந்து அவனுக்கு மறுமொழியில்லை. பதில் சொல்லாமல் மெல்ல விசும்பி அழத் தொடங்கியிருந்தாள் அவள். சுவரில் சிரித்துக் கொண்டிருக்கும் அற்புதமான முருகன் படம். ஒரு மூலையில் மௌனமாய் வைத்தது வைத்தபடியே கிடக்கும் வாத்தியங்கள் - இவற்றையெல்லாம் மாறி மாறிப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த அழுகையைத் தாங்காமல் அருகில் நெருங்கித் தயங்கி நடுங்கும் கையால் அவள் தோளைத் தொட்டுக் கூறினான் அவன்.

"இதோ! என்னை நிமிர்ந்து பார், மோகினீ! உன்னை அழ வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வாக்கியங்களை நான் கூறவில்லை. உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் தான் இன்று இரண்டாவது முறையாகவும் இந்த வீட்டுக்கு நான் வந்தேன். உன்னுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் தான் இந்த மோதிரத்தை அணிந்து கொண்டேன். உன்னுடைய அன்புக்கு மரியாதை செய்ய வேண்டுமென்றுதான் பதிலுக்கு என் கை மோதிரத்தை உனக்கு அணிவித்தேன். நீ எனக்குச் சிரித்த முகத்தோடு விடை கொடுக்க வேண்டும்."

அவள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். மறுபடியும் அவள் திரும்பி வந்த போது கையில் ஒரு சிறிய குங்குமச் சிமிழோடு வந்தாள். தன் கையினாலேயே அவன் நெற்றியில் திலகமிட்டாள்.

"போய் வாருங்கள், என்னை மறந்து விடாதீர்கள். உங்கள் ஞாபகத்தில் தங்கி வாழ்வதைக் காட்டிலும் பெரிய பாக்கியம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை" என்று நாத்தழுதழுக்கக் கூறிக் கண் கலங்கக் கைகூப்பினாள் மோகினி. பிரிய மனமில்லாமல் அவளைப் பிரிந்தான் அவன். மேலே நடந்து போக முடியாமல் தயங்கி நிற்கும்படி செய்து விடுகிற அன்பு யாருடையதாக இருந்தாலும் அந்த அன்புக்கு நெகிழ்ந்தும் நெகிழாமலும் அதிலிருந்து விலகி நடக்கத்தான் வேண்டியிருக்கிறது. தான் அந்தச் சந்திலிருந்து திரும்பி மறைகிற வரை அவள் வீட்டு வாயிற்படியிலேயே நின்று பார்த்துக் கொண்டிருப்பதை இரண்டொரு முறை பின் பக்கமாகத் திரும்பிப் பார்த்தபோது அவன் கண்டான். வேகமாகக் கைவீசி நடந்தபோது புது மெருகும் நீலக் கல்லுமாக மின்னியது அந்த மோதிரம். "இதென்னடா புது மோதிரம்?" என்று குமரப்பன் கேட்டால் என்ன மறுமொழி கூறுவது? வீட்டுக்குப் போய் நின்றால் அம்மாவோ தங்கையோ கூட அந்தக் கேள்வியை அவனிடம் கேட்கமுடியும். யார் யாரிடம் எப்படிப் பதில் சொல்வது என்று அவன் இப்போதே சிந்திக்கத் தொடங்கினான். ஏற்கெனவே கையிலிருந்த பழைய பொன் மோதிரத்தைக் கடையில் கொடுத்துவிட்டுத் தானே மேலும் கொஞ்சம் ரூபாய் கொடுத்து இதை மாற்றிக் கொண்டு விட்டதாகச் சொல்லிக் கொள்ளலாமென்று அவனுக்குத் தோன்றியது. யாருக்கும் கெடுதல் செய்யாத இந்தப் பொய்யை எண்ணுவதற்கும் பேசுவதற்கும் கூட அவன் கூசினான். 'தான் இப்படிப் பொய் சொல்லவேண்டிய நிலையை உண்டாக்கியவள் அவள் தானே' என்ற முறையில் மோகினியின் மேல் கோபமும் வந்தது அவனுக்கு.

வீதியோரமாக நடந்து போய்க் கொண்டிருந்தவன் ஏதோ ஒரு பெரிய கடையில் முன்புறமாக இருந்த கண்ணாடியில் திரும்பும்போது தற்செயலாகத் தெரிந்து பிரதிபலித்த தன் உருவத்தைப் பார்த்துக் கொண்டான். கையில் நீலக்கல் மோதிரம் நெற்றியில் குங்குமத் திலகமுமாக ஆளே திடீரென்று புது மாப்பிள்ளையாக மாறிவிட்டாற்போலத் தோன்றியது. ஒரு கணம் அந்தத் திலகத்தை அழித்து விடுவதற்காக அவன் கை மேலே உயர்ந்தது. ஆனால் அப்படி அழிப்பதற்கும் மனம் துணியவில்லை. அதை அழிப்பதால் மனப்பூர்வமாகவும் அந்தரங்க சுத்தியோடும் செய்யப்பட்ட ஒரு மரியாதையை அவமதிப்பதாக உணர்ந்து மேலே எழுந்த கை தானாகவே தாழ்ந்தது. பெண்ணின் அன்பு என்பது மனிதனுடைய இதயத்தை மிக மென்மையாகத் துளைப்படுத்தும் உறுத்தாத விலங்குகளில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். சுழற்றவும் முடியாமல் கட்டிக் கொள்ளவும் முடியாமல் தவிக்க விடுகிற அந்த விலங்கு தன்னையும் இப்போது பிணித்திருப்பதைச் சத்தியமூர்த்தி நன்றாக உணர்ந்தான். 'நானும் கட்டுண்டேன்' 'நானும் கட்டுண்டேன்' என்பதை நிரந்தரமாக ஞாபகப்படுத்துவதைப் போல் அந்த மோதிரம் அவன் கையில் மின்னிக் கொண்டிருந்தது. 'இப்படி ஒரு சந்திப்பும் உறவும் என் வாழ்வில் தானா ஏற்பட்டிருக்கிறது?' என்பதை நினைத்து ஒரு கணம் தயங்கிப் பெருமூச்சு விட்ட பின், 'என் வாழ்வில்தான் ஏற்பட்டிருக்கிறது' என்பதை அவன் அந்தரங்கமாக ஒப்புக் கொண்டே ஆகவேண்டியிருந்தது. அன்று மாலை அவனும் குமரப்பனும் திருப்பரங்குன்றம் கோவிலுக்குப் போய்விட்டு வந்தார்கள். மறுநாள் மாலை மல்லிகைப் பந்தலுக்குப் புறப்படுமுன் சத்தியமூர்த்தியை இரயில் நிலையத்தில் சந்திப்பதாகச் சொல்லி விடைபெற்றான் குமரப்பன். ஊருக்குப் புறப்படுகிற நாள் மிகவும் தொலைவில் இருப்பது போல் தோன்றிவிட்டுக் கடைசியில் அருகில் வந்து 'நான் மிகவும் அருகில் தான் இருக்கிறேன்' என்று நெருங்கி நின்றாயிற்று. அன்று இரவு நெடுநேரம் வரை அப்பாவும், அம்மவும் அவனோடு பேசிக் கொண்டிருந்தார்கள். வேலையைத் தேடி வெளியூர் போகிற பிள்ளையைப் பெற்றோர் வழியனுப்புகிற போது வழக்கமாய்த் திரும்பத் திரும்பப் பேசுகிறவற்றையெல்லாம் அவர்களும் அவனிடம் பேசினார்கள்.

பயணத்துக்கான பரபரப்பில் மறுநாள் பொழுது விடிந்ததும் தெரியவில்லை; பொழுது சாய்ந்ததும் தெரியவில்லை. 'நல்ல சகுனம் ஆகிறதா என்று பார்த்துக் கொண்டு படியிறங்கு' என்று கூறிய அம்மாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே தயாராக தெருவில் கொணர்ந்து நிறுத்தியிருந்த குதிரை வண்டியை நோக்கி நடந்தான் சத்தியமூர்த்தி. வண்டியில் பயணத்துக்கான சாமான்களையெல்லாம் ஏற்றி வைத்தாயிற்று. அப்பாவும் ஏறி உட்கார்ந்து கொண்டு விட்டார். அம்மாவும், தங்கைகளும் வாயிற்படியில் வந்து நின்று கொண்டு அவனுக்கு விடை கொடுத்தார்கள். குதிரை வண்டி தெருத் திரும்புகிறவரை மனம் ஏதோ பெரிய சுமையைத் தாங்க முடியாமல் கனப்பது போலிருந்தது. அதற்குள் தந்தை ஏதோ சொல்லத் தொடங்கினார். இரயில் நிலையம் வருகிறவரை சத்தியமூர்த்தி அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு வந்தான். குமரப்பனும் வேறு சில நண்பர்களும் இரயில் நிலையத்துக்கு வழியனுப்ப் வந்திருந்தார்கள். இரயில் புறப்படுகிறவரை நண்பர்கள் ஒவ்வொருவரோடும் பேசுவதற்குத்தான் சரியாயிருந்தது. சத்தியமூர்த்தியின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டதனால் தந்தை இரயில் நிலையத்திற்குள் வந்தபின் அவனோடு அதிகம் பேசவில்லை. இரயில் நகர்ந்ததும், 'போய்ச் சேர்ந்த விவரத்துக்குக் கடிதம் எழுது' என்று அவர் கூறியதற்கு 'ஆகட்டும்' என்று தலையசைத்தான் அவன். பிளாட்பாரத்தை விட்டு இரயில் விரைந்து செல்லத் தொடங்கியபோது தந்தை தளர்ந்த நடையோடு திரும்பிச் சென்று கொண்டிருப்பதை அவன் ஓடும் இரயிலிலிருந்தே பார்த்தான்.

நல்ல வேளையாக அன்று இரவு அவன் மல்லிகைப் பந்தல் ரோடு நிலையத்தில் தங்க வேண்டிய அவசியம் நேரவில்லை. மேலே மலைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த கடைசி பஸ்ஸில் அவனுக்கு இடம் கிடைத்துவிட்டது. மறுநாள் கல்லூரி திறக்கப் போகிற நாளாகையால் பஸ்ஸில் மாணவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவனைப் போல் புதிதாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் வேலை ஒப்புக் கொள்வதற்குச் செல்லும் இரண்டொரு விரிவுரையாளர்களும் ஏற்கெனவே அங்கு வேலை பார்க்கிற விரிவுரையாளர்களில் லீவுக்கு ஊர் போய்விட்டு மீண்டும் திரும்புகிற சிலரும் பஸ்ஸில் உடன் பயணம் செய்தார்கள்.

விடுமுறைக்காலம் என்ற சுதந்திரம் முடிந்து மீண்டும் கல்லூரிக்குத் திரும்புகிற மாணவ இளைஞர்களின் பேச்சும் சிரிப்புமாகப் பஸ்ஸில் ஓர் ஆரவாரம் இடையறாமல் இருந்தது. அதே கல்லூரியில் தாவர இயல் (பாடனி) விரிவுரையாளராக வேலை ஏற்றுக் கொள்ள வரும் இளைஞர் ஒருவரும் பொருளாதார விரிவுரையாளராக வேலை ஏற்றுக் கொண்டு இரண்டு மூன்றாண்டுகளாக வேலை பார்த்து வரும் நடுத்த வயதினர் ஒருவரும் பஸ்ஸில் சத்தியமூர்த்திக்கு அருகே உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். தற்செயலாக பயணத்தின் போது ஒருவரையொருவர் விசாரித்ததில் அது தெரிந்தது.

"இந்த உத்தியோகத்தில் ஒரு சுகமும் இல்லை. ஏதோ வேறு வழி இல்லாத காரணத்தால் கல்லூரி ஆசிரியராக வந்து மாட்டிக் கொண்டு விட்டேன். ஏதாவது ஒரு கம்பெனியில் சின்ன உத்தியோகம் பார்த்துக் கொண்டு போயிருந்தால் கூட இதற்குள் கையில் கொஞ்சம் பணம் சேர்ந்திருக்கும்" என்று பொருளாதார விரிவுரையாளர் சத்தியமூர்த்தியிடம் அலுத்துக் கொண்டார். வாழ்க்கையே பணத்தைக் கொள்ளையடித்துக் குவிப்பதற்காக அளிக்கப்படுகிற ஒரு சந்தர்ப்பம் என்று அவர் நினைப்பதாகப் பட்டது சத்தியமூர்த்திக்கு. ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறையின் இலட்சியத்தில் மனப்பிடிப்பு இல்லாதவர்கள் ஒட்டிக் கொண்டு வேதனைப் படுவதைப் போல் நாட்டுக்கு மொத்தமான துன்பம் வேறு இருக்க முடியாது என்று நினைத்தான் அவன். சொந்தக் கசப்பை வெளியிடுவதற்கு மட்டும் தான் வாய் திறந்து பேச வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு அதற்காகவே பிறரோடு உரையாடுகிறவர்களைச் சத்தியமூர்த்தியால் ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அந்தப் பொருளாதார விரிவுரையாளரோடு பேசுவதைத் தவிர்ப்பதற்காகக் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடியே தூங்குவது போல பாவனை செய்யலானான் அவன். பின் பக்கத்திலிருந்து மாணவர்களின் உற்சாகமான பேச்சுக்குரல் கேட்டது. 'வற்றல் குழம்பு' என்று கௌரவப் பெயர் சூட்டப்பெற்ற ஒரு பேராசிரியரைப் பற்றி அதே பெயரை உபயோகித்து அந்த மாணவர்கள் பரம உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

சத்தியமூர்த்திக்கு மாணவர்களின் அந்த அரட்டையைக் கேட்கக் கேட்கச் சிரிப்பு ஒரு பக்கமும் வேதனை ஒரு பக்கமுமாக இருந்தது. போராட்டங்களும், சாதனைகளும் நிறைந்த தன்னுடைய கல்லூரி நாட்களை நினைத்துக் கொண்டான் அவன். 'துடிதுடிப்பு நிறைந்தவர்களாக இருப்பதும் இப்படி வம்பு பேசுவதும் இல்லாத மாணவர்களை உலகம் முழுவதும் தேடினாலும் காணமுடியாது. ஆனால் ஆசிரியர்கள் அறிவின் கம்பீரமும், தோற்றத்தின் கம்பீரமும் உள்ளவர்களாக இருந்தால் மாணவர்களை ஓரளவு கட்டுப்பாட்டோடு ஆளலாம்' என்று அவன் மனம் சிந்தித்தது. மல்லிகைப் பந்தல் பஸ் நிலையத்தில் போய்ப் பஸ் நிற்கிறவரை 'வற்றல் குழம்பை'யும் 'கீரை வடை'யையும் பற்றியே வெகு உற்சாகமாகப் பேசிக் கொண்டு வந்தார்கள் அந்த மாணவர்கள். அந்தப் பெயர்களெல்லாம் அப்பாவி ஆசிரியர்களுக்குச் சூட்டப்பட்டிருக்கும் பெயர்கள் என்று சிறிது நேரம் தொடர்ந்து அவர்களுடைய பேச்சைச் செவி மடுத்ததிலிருந்து சத்தியமூர்த்தி அனுமானம் செய்து கொண்டு அறிந்தான். அந்த மாணவர்களின் வம்பையும் வாயரட்டையையும் கேட்டுப் பக்கத்திலிருந்த தாவர இயல் விரிவுரையாளர் மருள்வதையும் அவன் கவனித்தான்.

மஞ்சு படிந்து மங்கிய கட்டிடங்களையும் மலைச் சூழ்நிலையில் கண்ணுக்குக் குளுமையாக அடங்கித் திரியும் மின் விளக்குகளுமாக இரவில் அந்த நகரம் மிக அழகாக இருந்தது. ஊரின் நடுமையாக இருந்த ஏரியில் மின் விளக்குகள் ஆடி அசைந்து பிரதிபலித்துக் கொண்டிருந்தன. வட்ட வடிவமாக இருந்த அந்த ஏரியைச் சுற்றிலும் சாலையில் வரிசையாக அமைந்திருந்த மின் விளக்குகள் அந்தரத்திலிருந்து நழுவி விழும் ஒரு மாபெரும் ஒளியாபரணத்தைப் போல் தோன்றியது. சில்லென்று மலைக்குளிர் உடம்பில் உறைத்தது. பஸ் நிலையத்தில் பஸ் வந்து நின்ற போது ஊரே உறங்கிப் போயிருப்பது போல அத்தனை அமைதியாக இருந்தது. உடன் பயணம் செய்த தாவர இயல் விரிவுரையாளருக்கு யாரோ தெரிந்தவர்கள் வீடு இருந்ததால் அங்கே தங்குவதற்குப் போய்விட்டார் அவர். பொருளாதார விரிவுரையாளரும் அவசரமாக இறங்கிப் போய்விட்டார். பஸ் கண்டக்டர் இறக்கி வைத்த சத்தியமூர்த்தியின் பெட்டிகளும் சாமான்களும் தரையில் இருந்தன. எங்கே போய்த் தங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி.

பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வருவதாக நச்சரித்துக் கொண்டு இரண்டு மூன்று கூலிக்காரச் சிறுவர்கள் அவனைச் சூழ்ந்து நின்றார்கள். நிற்கவே முடியாமல் குளிர்ந்த மலைக் காற்றுச் சுழித்துச் சுழித்து வீசிக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பூபதியின் வீட்டை தேடிக் கொண்டு தங்கப் போவது அநாகரிகமாக இருக்குமென்று தயங்கினான் அவன். கல்லூரிக்குப் போகலாமென்றால் 'இந்த வேளையில் அங்கு யார் இருக்கப் போகிறார்கள்?' என்று நினைத்து அந்த எண்ணத்தையும் கைவிட்டான். ஏரிக்கரையில் 'லேக் வியூ லாட்ஜ்' என்று ஒரு பெரிய விடுதி இருப்பதாகச் சொல்லி அங்கே போய்த் தங்கிக் கொள்ளலாமென்று கூலிக்காரப் பையன் வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன செய்வதென்று அவன் தயங்கிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாகப் பூபதியின் மகள் பாரதியே காரில் வந்து இறங்கினாள். அவளுடைய வரவும் வணக்கமும் ஒரே உற்சாகமாக இருந்தன.

"நாளைக் காலையில் கல்லூரி திறக்க இருப்பதால் நீங்கள் இன்றிரவு கடைசி பஸ்ஸுக்கு எப்படியும் வந்துவிடுவீர்கள் என்று நானாக நினைத்துக் கொண்டு தேடி வந்தேன் சார். நான் நினைத்தது சரியாகப் போயிற்று. அப்பா ஊரில் இல்லை. எஸ்டேட்டுக்குப் போயிருக்கிறார். புதிதாக வருகிற ஆசிரியர்களை வரவேற்றுத் தங்குவதற்கு இடம் கூட ஏற்பாடு செய்யாமல் பிரின்ஸ்பலும் ஹெட்கிளார்க்கும் என்னதான் வெட்டி முறிக்கிறார்களோ பாவம்! நீங்களானால் பஸ்ஸிலிருந்து இறங்கி இந்தக் குளிரில் திண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள். வாருங்கள், உங்களைக் கல்லூரியில் கொண்டு போய் விடுகிறேன். கல்லூரி வாட்ச்மேனை எழுப்பி ஆசிரியர்கள் ஓய்வு கொள்ளும் அறையில் இன்றிரவு தங்கிக் கொள்ள ஏற்பாடு செய்யலாம்" என்று அவள் கூறியபோது சத்தியமூர்த்தியின் நிலை தர்மசங்கடமாக இருந்தது. ஆர்வமும் அன்பும் நெகிழ்கிற குரலில் அவள் வேண்டிக் கொள்வதை அவனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் தயக்கமும் இருந்தது. அமைதியான அந்த இரவு நேரத்தில் அவள் வந்தது, நின்றது, அவசரப்படுத்தியது எல்லாம் வியப்புக்குரியனவாயிருந்தன. குளிருக்கு அடக்கமாக கிளிப்பச்சை நிறத்துக்கு ஓர் அழகிய கம்பளிச் சட்டை (ஸ்வெட்டர்) அணிந்திருந்தாள் அவள். இடையிலிருந்த வாடா மல்லிகை நிற வாயில் புடவைக்கும், அந்தப் பச்சைச் சட்டைக்கும் இயைபாக அவள் தோன்றிய தோற்றத்தில் ஏதோ ஓர் அழகு பிறந்து அவனைக் கவர்ந்தது.

"ஏன் இப்படித் தயங்குகிறீர்கள்? நீங்கள் இந்தப் பஸ்ஸில் தான் வருவீர்கள். உங்களை அவசியம் சந்திக்க வேண்டும் என்று தவித்துக் கொண்டு பரபரப்போடு ஓடி வந்திருக்கிறேன் நான். நீங்களோ பாராமுகமாகத் தயங்கி நிற்கிறீர்கள்?" என்று அவள் செல்லமாகக் கோபித்துக் கொள்கிற குரலில் அவனைக் கேட்டபோது தனது மௌனமும் தயக்கமும் அந்தப் பேதைப் பெண்ணின் மனத்தைப் புண்படுத்துகின்றன என்பது அவனுக்குப் புரிந்தது.

"தயக்கம் ஒன்றும் இல்லை! சட்டப்படி நாளைக் காலையிலிருந்து தான் நான் மல்லிகைப்பந்தல் கல்லூரியின் விரிவுரையாளன். இன்றே நான் தங்குவதற்கு இடமும் வசதிகளும் தேடித்தர வேண்டும் என்று கல்லூரி முதல்வரிடமிருந்தோ நிர்வாகியிடமிருந்தோ நான் உதவியை எதிர்பார்ப்பது எப்படி நியாயமாகும்? என் சொந்த ஏற்பட்டில் நானே தங்கிக் கொள்வதுதான் முறை! இல்லையா?" என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்ட போது அவள் முகம் வாடிவிட்டது.

"நான் ஏதோ தெருவில் போகிறவள் உங்களை அழைத்து உபசாரம் செய்ய வரவில்லை. நீங்கள் எந்தக் கல்லூரியில் வேலை பார்க்க வருகிறீர்களோ அந்தக் கல்லூரி நிர்வாகியின் மகள் என்ற முறையில் வந்து உங்களைக் கூப்பிட்டால் வருவீர்களோ இல்லையோ...?" என்று அவள் கேட்டபோது அவனால் மறுமொழி கூற முடியவில்லை. அவளுடைய பிடிவாதத்துக்கு முன் அவன் தோற்றான். கூலிக்காரச் சிறுவன் ஒருவனை ஏவி அவனுடைய பெட்டி முதலியவற்றைக் காரில் எடுத்து வைக்கச் செய்தாள் அவள். அவனைக் கல்லூரியில் கொண்டு போய்விட்டு வாட்ச்மேனை எழுப்பித் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்த பின்புதான் அவள் வீடு திரும்பினாள்.

அரைமணி நேரம் கழித்து வாட்ச்மேன் பிளாஸ்க்குடனும் ஒரு சீப்பு மலைப் பழத்துடனும் சத்தியமூர்த்தியைத் தேடி வந்து சேர்ந்தான்.

"பிளாஸ்கிலே பால் இருக்கு! எடுத்துக்குவீங்களாம்..." என்று அவற்றைச் சத்தியமூர்த்திக்கு அருகே கொண்டு வந்து வைத்த போதும் அந்த அன்பு தன்னைத் துன்பப்படுத்துவதாகவே அவன் உணர்ந்தான். நான்கு மலைப் பழத்தையும் பாலையும் அவன் எடுத்துக் கொள்வதைத் தானே எதிரேயிருந்து பார்த்த பின்புதான் 'வாட்ச்மேன்' அங்கிருந்து போனான்.

மறுநாள் காலையில் விடிந்தும் விடியாததுமாகக் கல்லூரியைச் சுற்றிப் பார்க்க வந்திருந்த ஹெட்கிளார்க்கையும் பிரின்ஸிபாலையும் சத்தியமூர்த்தி சந்திக்க நேர்ந்தது. அவர்களோடு பேசிக் கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே தான் அங்கு தங்கியிருப்பதோ தொடர்ந்து தங்குவதோ அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவனால் புரிந்து கொண்டு விட முடிந்தது. பூபதியின் மகள் தன்னை அங்கே அழைத்து வந்து தங்கச் செய்ததை வாட்ச்மேன் அவர்களிடம் சொல்லியிருக்க வேண்டுமென்றும் அவனுக்குத் தோன்றியது. இண்டர்வ்யூவுக்கு வந்திருந்த போது பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையே கல்லூரி முதல்வரிடம் ஒரே ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. மேவாய்க்குக் கீழே சின்னஞ்சிறு தேன்கூடு கட்ட ஆரம்பித்திருப்பதுபோல் புல்கானின் தாடி வளர்க்கத் தொடங்கியிருந்தார் கல்லூரி முதல்வர். அவருடைய முகத்தை முன்னிலும் விகாரமாகக் காண்பிப்பதில் இந்தப் புதிய தாடி மிக மிக ஒத்துழைத்துக் கொண்டிருந்தது.

"மிஸ்டர் சத்தியமூர்த்தி... லேக் அவென்யூவில் நிறைய மாடி ரூம்கள் கிடைக்கும். நான் வேண்டுமானால் நம் ஹெட்கிளார்க்கிடம் சொல்லி உங்களுக்கு ஒரு ரூம் பார்க்கச் சொல்லட்டுமா?" என்று அவன் அங்கிருப்பது தமக்குப் பிடிக்காததை மிகவும் நாசூக்காகக் கூறியிருந்தார் கல்லூரி முதல்வர்.

"உங்களுக்கு அந்த சிரமம் வேண்டாம் சார். இன்றைக்குச் சாயங்காலத்துக்குள் நானே ஒரு ரூம் பார்த்துக் கொண்டு போய்விடுவேன்" என்று அவர் கேட்காத கேள்விக்கும் சேர்த்து அவருக்குப் பதில் சொன்னான் அவன்.

அந்தப் பதிலைக் கூறிவிட்டுத் தனக்குள் சிந்திக்கத் தொடங்கிய சத்தியமூர்த்தி, 'இனி ஒவ்வொரு நாளும் இந்தத் திமிங்கலத்தோடு நாம் போராடி வெல்ல வேண்டியிருக்கும்' என்ற எதிர்கால நிகழ்ச்சியை இன்றே நினைவு கூர்ந்தான்.

அத்தியாயம் - 17

மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும் எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன் கூட்டியே தெரியாமலிருப்பதுதான்.

அந்த அதிகாலை நேரத்தில் மல்லிகைப் பந்தலின் வீதிகளில் நடந்து செல்வதே உற்சாகமாக இருந்தது. ஏறி இறங்கி மேடும் பள்ளமுமாக உயர்ந்தும் தாழ்ந்தும் செல்லும் சாலைகளின் இருபுறமும் ஒரே வரிசையாக நேர்கோடு பிடித்து நிறுத்தினாற் போல் நிற்கும் மரங்களும், குளிர்ந்த காற்றும் 'இந்த வீதியில் நாம் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் தாராளமாகக் கால்களை வீசி நடக்கலாம்' என்று நடக்கிறவனையே கர்வப்படச் செய்கிற வீதிகளாயிருந்தன அவை. 'லேக் அவென்யூ' என்று சொல்லப்பட்ட பகுதி அழகாக அமைந்திருந்தது. நகரின் நடு மையத்தில் வட்ட வடிவமான ஏரியைச் சுற்றி ஒரே அளவான மாடி வீடுகள் அந்த இடத்தின் வனப்பையே அதிகப்படுத்துவன போல் ஒத்த அமைப்போடு சீராக இலங்கின. நகரின் அழகுக்காக ஏரியைச் சுற்றியுள்ள 'லேக் சர்க்கிளில்' வீடு கட்டுகிறவர்கள் யாராக இருந்தாலும் ஒரே பிளானில் ஒரே திட்டத்தோடு தான் வீடுகளைக் கட்ட வேண்டும் என்று மல்லிகைப் பந்தல் நகரவையில் சட்டம் இருப்பதாகச் சத்தியமூர்த்தி கேள்விப்பட்டிருந்தான். எந்த இடத்தில் ஆரம்பித்தாலும் மறுபடியும் அந்த இடத்திற்கே வந்து முடிகிறார் போல் வட்ட வடிவமான ஏரியின் கரையில் ஏரிக்கும் வீடுகளுக்கும் நடுவே அகன்ற சாலையோடு அந்த வீதி அமைந்திருந்தது. முழுவட்டமான அந்த வீதியின் மொத்தச் சுற்றளவு பத்து மைல். ஆதலால் அதற்கு 'டென் மைல்ஸ் ரவுண்டு' என்றும் அந்த ஊரில் ஒரு பெயர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இந்த அமைப்பின் படி வீதியின் ஒரு சிறகில் மட்டுமே வீடுகள் இருந்தன. எதிர்ச் சிறகில் ஒரே அளவாய் நெடிதுயர்ந்த மரங்களுக்கு அப்பால் பளிங்கு நீர் சலசலக்க ஏரி அகன்று விரிந்திருந்தது. ஒரே சீராக வாய்த்திருந்த ஒவ்வொரு வீட்டு வாயிலிலிருந்தும் மாடி பால்கனியிலிருந்தும் எதிரே பார்த்தால் வெள்ளை அல்லிப் பூக்களும், செவ்வல்லிப் பூக்களுமாக ஏரி நீர்ப் பரப்பும் அதில் அங்கும் இங்குமாக விரைந்து கொண்டிருக்கும் படகுகளும் மனிதர்களும் தெரிவார்கள். மேலை நாட்டுப் பாணியில் நடத்தப்படுகிற பெரிய பெரிய ஓட்டல்களும், திரைப்பட அரங்குகளும், கடைகளும், கம்பெனிகளும், எல்லாம் ஏரியைச் சுற்றியிருக்கும் இந்தப் பத்து மைல் வட்டத்துக்குள்ளேயே இருந்தன.

மல்லிகைப் பந்தல் நகரத்தின் உயிர்நாடியான பகுதி 'லேக் சர்க்கிள்' எனப்படும் இந்த 'டென் மைல்ஸ் ரவுண்டு' தான். ஒரே வரிசையான அளவொத்த மரம் செடி கொடிகளும் ஏரிக்குக் கரையிட்டாற் போல் பத்துமைல் சுற்றளவும் விளிம்பில் வகுக்கப்பட்டிருந்த சிறு பூங்காவும் எவர் கண்டாலும் மயங்கி விடும்படியான பெருமையை அந்த ஊருக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. நான்கு பக்கமும் ஆகாயத்தின் நீல விளிம்போடு போய்க் கலக்கும் மலைகளின் நீலச் சிகரங்களுக்குக் கீழே சுற்றிலும் முத்துப் பதித்துக் குழிந்த கண்ணாடியை நடுவே வைத்தாற் போல் அந்த ஏரியும் வீடுகளும் மேலே மலையிலிருந்து பார்க்கிறவர்களுக்குத் தெரியும். பூபதி அவர்களின் கலைக் கல்லூரியும், மாணவர்களின் விடுதிகளும் இந்த மேட்டிலிருந்து கீழே லேக் சர்க்கிளில் போய்க் கலக்கும் சிறிய சாலை ஒன்றில் அப்போது நடந்து சென்று கொண்டிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரியிலிருந்து புறப்படுமுன் தனக்கும், முதல்வருக்கும் இடையே நிகழ்ந்திருந்த உரையாடலை மீண்டும் நினைத்த போது கல்லூரி எல்லைக்குள் தான் மேலும் ஒரு வினாடி கூடத் தங்கியிருப்பது புத்திசாலித்தனமில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருந்தான் அவன்.

"சாயங்காலத்துக்குள் நான் வேறு ரூம் பார்த்துக் கொண்டு போய் விடுகிறேன் சார்!" என்று அவன் கல்லூரி முதல்வரிடம் கூறியபோது, "நோ... நோ... நீங்கள் நம் கல்லூரி எல்லைக்குள் தங்கியிருப்பது எங்களுக்கு வசதிக் குறைவாக இருக்கும் என்பதாக நான் நினைக்கிறேனோ என்று என்னைத் தப்பாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் இங்கே தங்கியிருக்கலாம். என் தலையில் கட்டிக் கொண்டு போவது ஒன்றுமில்லை. உங்கள் சௌகரியத்துக்காகத்தான் சொல்ல வந்தேன்..." என்று மேவாய்க்குக் கீழே நரையும் கருமையுமாகக் கலந்து வளரத் தொடங்கியிருந்த புல்கானின் தாடியைத் தடவிக் கொண்டே உபசாரமாக அவனுக்குப் பதில் சொல்லியிருந்தார் அவர்.

"ஆமாம்! ஆமாம்! நீங்கள் என் சௌகரியத்துக்காகத் தான் சொல்லுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன?" என்று அவருடைய பேச்சின் போக்கிலேயே அப்போது அவரை மடக்கிப் பேசி அனுப்பியிருந்தான் சத்தியமூர்த்தி. கல்லூரி முதல்வரும் ஹெட்கிளார்க்கும் சரியான ஆஷாட பூதிகள் என்பது காலையில் அவர்களைச் சந்தித்த முதற் பார்வையிலேயே அவனுக்குத் தெளிவாகப் புரிந்து விட்டது. அதைப் புரிந்து கொண்ட மறுகணமே அவன் அங்கிருந்து உலாவப் புறப்படுவது போல் வெளியேறித் தங்கி வசிக்க அறை தேடுவதற்காக 'லேக் அவென்யூ'வுக்குப் புறப்பட்டு விட்டான். அவசரத்துக்குத் தனி அறையாகக் கிடைப்பதைப் பார்த்துத் தேடித் தங்கிக் கொண்டாலும் வாடகையைப் பகிர்ந்து கொள்வதற்குப் பின்னால் இரண்டொருவரைச் சேர்த்துக் கொள்ளலாம் என்று எண்ணினான் அவன். காலை நேரமாகையால் வெய்யில் வருவதற்கு முன்பாகப் படகில் ஏறிச் சுற்றுகிறவர்களும், சுற்றுவதற்குப் படகு காலியாவதை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுமாக ஏரியும் ஏரிக்கரையும் பரபரப்பாக இருந்தது. கரை ஓரமாக நீலப் பட்டுக்குப் பல வண்ணச் சரிகைக் கரையிட்டதைப் போல் ஊதாவும், சிவப்பும், மஞ்சளும், வெள்ளையுமாகப் பூக்கள் கொள்ளை கொள்ளையாகப் பூத்திருந்தன. வேறு வேறு நிறங்களில் ஸ்வெட்டரும், மப்ளரும், கம்பளிப் போர்வையுமாக அணிந்து கொண்டு சாலையில் மக்கள் நடமாடத் தொடங்கியிருந்தனர்.

"மாடியில் றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று கண்ணில் தெரிந்த முதல் விளம்பரப் பலகையே தப்பும் தவறுமாகத் தெரிந்தது. 'றாயல் பேக்கரி' என்று பெயர்ப் பலகை மாட்டிய ஒரு ரொட்டிக் கிடங்கின் கதவுகளில் தான் அந்த விளம்பரம் தொங்கிக் கொண்டிருந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபடியும் நன்றாகப் பார்த்தான் சத்தியமூர்த்தி. 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' என்று தான் இருந்தது. ரொட்டிக் கடைக்காரரோ இல்லையோ, மாவை அழுத்திப் பிசைகிற ஞாபகத்தில் போர்டையும் அழுத்தமாக எழுதியிருக்கிறார். ரூம்கள் அழுத்தமாக இருக்கின்றன என்பதைக் காட்டுவதற்காகவோ என்னவோ "றூம்கள்' என்று போட்டிருக்கிறார் என வேடிக்கையாக எண்ணிக் கொண்டே விசாரிப்பதற்குப் படியேறினான் சத்தியமூர்த்தி. பாதி மலையாளமும், பாதி தமிழுமாக வந்து பதில் சொல்லியவர் தெளிவில்லாமல் ஏதோ பேசினார். கால் மணி நேரம் தொண்டைத் தண்ணீர் வற்றிய பின்பே அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மாடியில் போய் அறையைப் பார்த்தான் சத்தியமூர்த்தி. அந்த மாடியில் மொத்தம் மூன்று அறைகள் இருந்தன. குளியலறை முதலிய வசதிகள் எல்லாம் மூன்று அறைகளுக்கும் பொதுவாகவே இருந்தன. மாடியின் பின்புறமாகக் கீழே ஏராளமான சண்பக மரங்கள் காடு மண்டிக் கிடந்ததனால் அவற்றின் கிளைகள் பின் பக்கத்து வராந்தாவில் குளியலறைக்கு அருகே வந்து கொஞ்சிக் கொண்டிருந்தன. சண்பக மணமும் ரொட்டிக்கடை நறுமணமும் சேர்ந்து மாடியில் வந்து தவிர்க்க முடியாமல் பரவிக் கொண்டிருந்தன. மாடியின் பின் பக்கத்து வராந்தாவிலிருந்து பார்த்தால் எங்கிருந்தோ வேகமாக இறங்கி வந்து கொண்டிருப்பது போல் மிக அருகே நீல மலைகள் தெரிந்தன. ஆளைப் பிடித்துக் கீழே தள்ளி விடுகிறார் போல் குளிர்ந்த காற்று பாய்ந்து பாய்ந்து வீசியது.

அறைக்குள் போவதற்கு முன் அவசரமாக ஒரு விநாடி திரும்பிப் பார்த்தாலும் வராந்தாவுக்கு அப்பால் ஏதோ அழகாக நிறைந்து கிடப்பதை மீண்டும் ஒருமுறை நோக்கவோ புரிந்து கொள்ளவோ முடியும். அவசரமாயினும் ஞாபகத்திலும் பார்வையிலும் தாமாகவே வந்து பதிந்து கொள்கிற நுணுக்கமான அழகுகள் அவை. வாடகை முதலிய விவரங்களைக் கூறுவதற்கு முன், 'சத்தியமூர்த்தி எதற்காக எந்த வேலையை ஏற்றுக் கொண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறான்?' என்பது போன்ற சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக அவனிடம் விசாரித்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர். பூபதி கலைக் கல்லூரியின் பெயரைச் சொல்லிய மறுகணமே அந்த மனிதர் விசாரிப்பதை நிறுத்திக் கொண்டு அடங்கி விட்டதைக் கண்டு சத்தியமூர்த்தியே வியப்படைந்தான். தொழிலதிபர் பூபதியும், அவருடைய கல்லூரியும் அந்த ஊரில் எவ்வளவு கௌரவத்துக்கும், பெருமைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவன் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒருவாறு விளங்கிக் கொள்ள முடிந்தது.

"அறை ஒன்றுக்கு மாதம் நாற்பத்தெட்டு ரூபாய் வாடகை. ஒருவரே அந்த வாடகையைக் கொடுத்துக் கொண்டு தனி ஆளாக இருப்பதானாலும் ஆட்சேபனையில்லை. வாடகையைப் பகிர்ந்து கொள்ள இன்னும் யாராவது வைத்துக் கொள்ள உத்தேசம் இருந்தால் அறை எவர் பெயருக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அவரைத் தவிர இன்னும் இரண்டு பேரை மட்டும் உடன் தங்கச் செய்து கொள்ளலாம். அப்படி உடன் தங்குகிற இருவரிடமும் தலைக்குப் பதினாறு பதினாறு ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசுகூட வசூலிக்கக் கூடாது. அதை வசூலிக்கும் பொறுப்பும் முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரைச் சேர்ந்ததுதான். வீட்டுக்காரர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முடியாது. முதலில் அறை எடுத்துக் கொள்கிறவர் மாதம் பிறந்ததும் வீட்டுக்காரரிடம் ரூபாய் நாற்பத்தெட்டை எண்ணி வைத்து விட வேண்டும். குளியலறையில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். இரவு பத்து மணிக்கு மேல் மின்சார விளக்கை உபயோகிப்பது நல்லதில்லை. அறைச்சுவரில் அநாவசியமாக ஆணிகளை அடித்துப் பாழாக்கக் கூடாது. வீட்டுக்காரர், வசிப்பவர் இருவரில் யார் தரப்பிலிருந்து காலி செய்ய விரும்பினாலும் மூன்று மாதம் முன் தகவல் கொடுத்துவிட்டுக் காலி செய்ய வேண்டும். முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரோடு உடன் தங்குகிற மற்ற இருவரையும் வெளியேற்றும் உரிமை அவருக்கே உண்டு. இந்த இருவரைப் பற்றி எந்தக் கவலையும் வீட்டுக்காரர் பட முடியாது" என்று 'றூம்கள் வாறகைக்கு வீழப்படுவதற்கு' உரிய நிபந்தனைகள் சத்தியமூர்த்தியிடம் வரிசைக் கிரமமாக ஒப்புவிக்கப்பட்டன. அந்தச் சிறிய அறையை வாடகைக்குப் பேசி முடிப்பதை ஏதோ பெரிய 'நேச தேச உடன்படிக்கை' செய்வது போலச் செய்ய வேண்டியிருந்தது. நிபந்தனைகளைக் கையெழுத்துப் போடுவதற்கு இடம் மட்டும் மீதம் விட்டு முன்னேற்பாடாக ஆங்கிலத்தில் 'டைப்' செய்து வைத்திருந்தார் வீட்டுக்காரர். 'றூம்கள் வாறகைக்கு வீழப்படும்' நிபந்தனைகளின் கீழே கையெழுத்துப் போட்டு வீட்டுக்காரரிடம் முன் பணம் கொடுத்தான் சத்தியமூர்த்தி.

அவன் அந்த வீட்டுக்காரரின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு முன் பணம் கொடுத்துச் சாவியைக் கையில் வாங்கிக் கொண்டு கல்லூரிக்குத் திரும்பிய போது, காலை எட்டேகால் மணி. மலைப்பகுதியாதலால் இன்னும் வெய்யிலே வரவில்லை. கல்லூரி அறையிலிருந்து பெட்டி சாமான்களை எடுத்துக் கொண்டு போவதற்குத் தயாராக லேக் அவென்யூவிலிருந்து திரும்பும்போதே ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பியிருந்தான் அவன். அங்கே கல்லூரி வாட்ச்மேன் பிளாஸ்கில் காப்பியோடு அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

"சார், நீங்க பாட்டுக்குச் சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போயிட்டீங்களே? அந்தம்மா காப்பி கொடுத்தனுப்பியிருக்காங்க. நீங்க குளிச்சுத் தயாரானது தெரிஞ்சப்புறம் என்னைச் சைக்கிளில் புறப்பட்டு வரச் சொல்லியிருக்காங்க. நான் போய் உங்களுக்கு டிபன் கொண்டு வரணும்" என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்த 'வாட்ச்மேனிடம்' பெட்டியைக் கொடுத்து வாசலில் நிற்கும் ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. "ஏன் சார் வேறே எங்கேயாவது போய்த் தங்கப் போறீங்களா?" என்று கேட்டுவிட்டுக் கேள்வியோடும் பெட்டியோடும் தயங்கி நின்றான் வாட்ச்மேன்.

"ஆமாம்! லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கு மாடியில் நல்ல அறையாகக் கிடைத்துவிட்டது. பேசி முன் பணமும் கொடுத்துவிட்டேன். 'அந்தம்மா வந்தாலும் இதைத் தெரிவித்துவிடு' என்று சொல்லிவிட்டுப் பெட்டியை விரைவாக ரிக்ஷாவில் கொண்டு போய் வைக்குமாறு அவனைத் துரிதப்படுத்தினான் சத்தியமூர்த்தி.

ஒன்பது மணிக்குள் அவன் மறுபடி லேக் அவென்யூவுக்கு வந்து அந்த ரொட்டிக் கிடங்கின் மாடியறையில் அவசர அவசரமாகக் குடியேறிவிட்டான். அங்கே வந்து தங்கிவிட்டதை உறுதிப்படுத்தும் நிச்சயமான சாட்சியைப் போல் மாடி வராந்தாவில் நிறைந்திருந்த சண்பகப்பூ வாசனை கமகமத்துக் கொண்டிருந்தது. எதிர்ப்புறம் நீலப்பெரும் பரப்பாய் ஏரி தன் அழகிய சிறிய அலைகளை மடித்துக் கொண்டு கிடந்தது. கீழே ரொட்டிக் கிடங்கிலிருந்து சர்க்கரைப் பாகு முறுகுவது போன்ற ஒரு வித வாசனையும் வந்து பரவிக் கொண்டிருந்தது. அதைத் தனி அறையாகத் தன் உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொண்டு நாற்பத்தெட்டு ரூபாய் நிச்சயமாக அவனால் கொடுக்க முடியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள் வெளியூரிலிருந்து தனிக்கட்டையாக அங்கு தன்னைப் போலவே வந்திருக்கும் ஆசிரியர்களையோ அல்லது வேறு மனிதர்களையோ - இரண்டு பேரை உடன் வசிப்பவர்களாகச் சேர்த்துக் கொண்டுவிட வேண்டும் என்று அவன் தனக்குள் சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.

அன்று முதல் நாளாக இருந்ததனால் பதினோரு மணிக்குக் கல்லூரி திறப்பதாக அறிவித்திருந்தார்கள். லேக் அவென்யூவிலிருந்து கல்லூரிக் காம்பவுண்டை அடைவதற்கு அரைமணி நேரமோ, அல்லது அதற்கும் சிறிது குறைவான நேரமோ நடந்து போக வேண்டியிருக்கும் என்று தோன்றியது. ஆழ்ந்து சிந்தித்துக் கொண்டே நடந்து போவதற்கு ஏற்ற சுகமான சாலை அது. எனவே ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று முறை அந்தச் சாலை வழியே நடந்து போய்த் திரும்ப வேண்டியிருக்குமே என்பதை எண்ணிச் சத்தியமூர்த்தி மகிழ்ச்சி அடைந்தானே தவிரக் கவலைப்படவில்லை. அறைக்குள் மொத்தம் நான்கு அலமாரிகள் இருந்தன. ஒன்றில் தன் புத்தகங்களைப் பிரித்து அடுக்கினான் அவன். தன்னுடைய பொருள்களை எல்லாம் அந்த அறைக்குள் ஒழுங்குபடுத்தி வைத்த பின் நீராடச் சென்றான். மல்லிகைப் பந்தலின் குளிர்ந்த நீர் பட்டுப் போல் மென்மையாயிருந்தது. குழாயைத் திறந்ததும் குளிர்ந்த நீர் சில்லென்று சிலிர்த்துக் கொண்டு கொட்டியது. அவ்வளவு அருமையாகத் தண்ணீர் ஏற்பாடு செய்திருக்கும் மல்லிகைப் பந்தல் நகரசபையை வாழ்த்தியது அவன் உள்ளம். நீராடிவிட்டுத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தவன் கையில் பிளாஸ்க்குடன் அறை வாசலில் சாய்ந்தாற் போல் நின்று கொண்டிருந்த பாரதியைச் சந்தித்தான். கூச்சமும் பயமுமாக அந்தக் கோலத்தில் அவளைக் கடந்து அறைக்குள் போவதற்கே திகைத்துத் தயங்கினான் அவன். சாதாரணமாக ஆண் பிள்ளைகளுக்கு முன்னிலையிலே திறந்த மார்போடு நிற்பதையோ, நடப்பதையோ கூட விரும்பாதவன் இப்போது அந்தப் பெண்ணுக்கு முன்பாக இன்னும் கூசி நின்றான். பார