Ponkumaankadal

பொங்குமாங்கடல்

"கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பால கவி அவ்விதம் பரவசமடைந்திருக்க வேண்டும். ஆனால் குற்றாலத்துச் சாரல் காலத்தை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. காரணம் 'சாரல்' 'சாரல்' என்று சார்ந்திருக்கும் ஊர்களிலேயிருந்தெல்லாம் ஜனங்கள் கூடிவிடுவதுதான். இது காரணமாகச் சாரல் காலத்தில் குற்றாலம் பெரிதும் சுகாதாரக் குறைவு அடைந்து விடுகிறது. கோடைக்கானலுக்கும், உதக மண்டலத்துக்கும் வெள்ளைக்கார ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால்...

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

அத்தியாயம் - 1

"கூதல் மாரி நுண் துளி தூங்கும் குற்றாலம்" என்று சம்பந்த சுவாமிகள் வர்ணித்தார். குற்றாலத்தைச் சாரல் காலத்தில் பார்த்துவிட்டுத்தான் அந்தப் பால கவி அவ்விதம் பரவசமடைந்திருக்க வேண்டும். ஆனால் குற்றாலத்துச் சாரல் காலத்தை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. காரணம் 'சாரல்' 'சாரல்' என்று சார்ந்திருக்கும் ஊர்களிலேயிருந்தெல்லாம் ஜனங்கள் கூடிவிடுவதுதான். இது காரணமாகச் சாரல் காலத்தில் குற்றாலம் பெரிதும் சுகாதாரக் குறைவு அடைந்து விடுகிறது. கோடைக்கானலுக்கும், உதக மண்டலத்துக்கும் வெள்ளைக்கார ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால்...

அடடா! கடைசியில் எழுதிய மேற்படி வாக்கியத்தை எங்கே கேட்டேன்? நினைவுக்கு வருகிறது.

சாரல் காலத்தில் குற்றாலத்துக்கு நான் அதிகம் போவதில்லையென்று சொன்னேனல்லவா? அதற்கு மாறாக நல்ல வேனிற்காலத்திலேதான் போவது வழக்கம். வேனிற் காலத்தில் குற்றாலத்தில் ஜனக் கூட்டம் அதிகம் இராது. ஊரெல்லாம் நசநசவென்று ஈரமாயிராது. மலைமேல் தாராளமாய் ஏறிப் போகலாம். பொங்குமாங்கடலுக்குப் போகலாம்; அதற்கு மேலே மரப் பாலத்துக்குப் போகலாம்; இன்னும் மேலே செண்பகாதேவிக்கும், அதற்கும் அப்பால் உள்ள தேனருவிக்கும் கூடப் போகலாம்.

அப்படி மலை மீது ஏறிப் போவதிலுள்ள ஆனந்தம் வேறு எதிலும் கிடையாது.

அதிலும் குளிர்ந்த காலை நேரத்தில் மலைமேல் ஏறிப் போவதில் தனித்ததோர் மகிழ்ச்சி உண்டு. கிழக்கே உதிக்கும் சூரியன் மலையில் அங்கங்கே இடம் கொடுக்கும் சந்துகளின் வழியாகத் தன் பொற்கிரணங்களை அனுப்பி நம்மை உபசரணை செய்யும். ஒரு மலையிலிருந்து இன்னொரு மலை மீது ஏறும் போது பதினாயிரம் விதவிதமான பச்சை நிறப் போர்வையுடன் மரங்கள் வரிசை வரிசையாகக் காட்சி அளிக்கும். அருவி விழும் சலசலத்த ஓசையும் பறவைகளின் கலகலவென்னும் கீதங்களும் சேர்ந்து நம்மை புதியதொரு நாதப் பிரபஞ்சத்துக்குக் கொண்டு போய்விடும்.

ஒருநாள் காலையில் மேலே கூறிய ஆனந்தங் களையெல்லாம் அநுபவித்துக் கொண்டு மலைமேலே ஏறிக் கொண்டிருந்தேன். சிற்றருவிக்குப் போகலாமென்று புறப்பட்டவனைக் குற்றாலக் குன்றின் இயற்கை இன்பம் மேலே மேலே கவர்ந்து இழுத்துச் சென்றது. கடைசியாக, செண்பகாதேவிக்கே போய்ச் சேர்ந்து விட்டேன். செண்பகாதேவி அருவி விழும் இடத்திற்கு கிழக்கே செங்குத்தான பாறையையும், அதன் மேலே உயரமான விருட்சங்களும் ஆகாயத்தைத் தொடுவன போல் ஓங்கி நிற்கின்றன. காலை நேரத்தில் அங்கே வெயில் என்பதே கிடையாது. மனிதர்களும் வர மாட்டார்கள். தனிமையும், தானுமாக இருக்க விரும்புகிறவனுக்குத் தகுதியான ஏகாந்தப் பிரதேசம்.

'இனிது இனிது ஏகாந்தம்
இனிது'

என்று தமிழ் மூதாட்டி பாடியதாகக் கூறுவார்களே, அது அந்த இடத்தின் ஏகாந்தத்துக்குப் பொருந்தும்.

இப்படியாக எண்ணமிட்டுக் கொண்டு செண்பகாதேவி ஆலயத்தைத் தாண்டி அப்பால் சென்றதும், எதிரே வெள்ளை வெளேரென்று பாலருவி விழும் அற்புதத் தோற்றம் காணப்பட்டது. இரு பக்கமும் உயர்ந்து நின்ற பாறைகளும், மரங்களும் இயற்கைத் தேவிக்கு இறைவன் கட்டிய கோயில் எனத் தோன்றியது.

அடடா! என்ன ஆனந்தம்! என்ன ஏகாந்தம்! தனிமையில் இனிமையைக் காண்பது என்றால், இங்கேயல்லவா காண வேண்டும்!"

இப்படி நான் எண்ணிய ஒரு கணத்திற்குள்ளே என் எண்ணம் தவறு என்று தெரிய வந்தது.

"ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ சீதலாம்" என்னும் வந்தேமாதர கீதத்தின் முதல் அடி புருஷக் குரலில் கேட்டது. புருஷக் குரலிலும், கிழக்குரலாய்த் தொனித்தது. குரல் வந்த இடத்தைப் பார்த்தேன். அருவி விழும் இடத்துக்குச் சற்றுத் தூரத்தில் கீழேயிருந்த பள்ளத்தாக்கில் மொட்டைப் பாறை ஒன்றில் ஒரு சாது உட்கார்ந்திருந்தார்.

பெரிய தாடியோடும், சடா மகுடத்தோடும் விளங்கிய போதிலும், உடுத்தியிருந்த துணி மட்டும் வெளுப்பாயிருந்தது. ஆம்; துணி மட்டுந்தான் வெளுப்பாயிருந்தது. தாடியும் சடாமகுடமும் நல்ல கருநிறமாயிருந்தன! குரல் கிழக்குரல்; தாடியும் சடையும் யௌவனப் பருவத்துக்குரியவை. இது என்ன விந்தை?

இப்படி ஒரு நிமிஷம் நான் யோசித்துக் கொண்டிருக்கையில் அந்தப் பரதேசி என்னைப் பார்த்துவிட்டார். சற்று நேரம் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு கையினால் தாம் மேலே வரப் போவதாகச் சமிக்ஞை செய்து விட்டு அவ்விதமே மேலேறி வந்தார். நான் நின்ற இடத்துக்கு எதிரில் தாம் உட்கார்ந்து கொண்டு என்னையும் உட்காரச் சொன்னார். தாடியையும் சடையையும் சாவதானமாக எடுத்துக் கீழே வைத்தார். அவற்றை நீக்கியவுடன் தும்பைப் பூவைப் போல் நரைத்த தலையுடன் எழுபது வயதுக்கு மேலான கிழவர் என் முன் காட்சி அளித்தார். ஆழ்ந்து குழி விழுந்த கண்களினால் என்னை உற்றுப் பார்த்து, "இந்த இடமெல்லாம் எவ்வளவு மோசமாயிருக்கிறது பார்த்தீரா? கோடைக்கானலுக்கும், உதகமண்டலத்துக்கும் வெள்ளைக்காரர் ஆட்சியில் எவ்வளவு பணம் செலவழித்தார்களோ, அதில் நூற்றில் ஒரு பங்கு குற்றாலத்துக்குச் செலவு செய்திருந்தால் இப்படியிருக்குமா?" என்றார் கிழவர்.

"பெரியவரே! தாங்கள் யார்?" என்று கேட்டேன்.

"நான் யாராயிருந்தால் என்ன? நான் கூறிய விஷயம் உண்மையா, இல்லையா?"

"உண்மைதான்!"

"பின்னே விடுங்கள்!"

அப்படியே நான் விட்டுவிட்டு, அதாவது பேச்சை விட்டுவிட்டுச் சும்மாயிருந்தேன். ஆனால் அவர் சும்மா இல்லை. "நீர் கதை எழுதுகிறவர் என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?" என்றார். நான் சொன்ன பதில் என் காதிலேயே விழவில்லை. ஆனால் அவர் மறுபடியும் சொன்னது மட்டும் கணீர் என்று என் காதில் விழுந்தது. "அப்படியானால் என்னுடைய கதையையும் எழுதுவீரா?" என்றார். அவருக்குக் கொடுத்த வாக்குறுதியை இதோ நிறைவேற்றப் போகிறேன்.

அத்தியாயம் - 2

தலையில் தும்பைப் பூவையொத்த, நரைத்த ரோமம் அடர்ந்து, குறுக்குக் கோடுகள் மிகுந்த விசாலமான நெற்றியுடனும், அறிவொளி வீசிய ஆழ்ந்த கண்களுடனும் கூரிய வளைந்த மூக்குடனும் செந்நிற மேனியுடனும் விளங்கிய அக்கிழவர் கூறினார்:

முப்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால் நான் முதன் முதலில் இந்தக் குற்றாலத்துக்கு வந்தேன். அதாவது 1911 ஆம் வருஷம், மே மாதம். அதற்கு முன் மூன்று மாதம் திருநெல்வேலி ஜில்லாவிலும், திருவனந்தபுரம் சமஸ்தானத்திலும் சுற்றி அலைந்தேன். எந்த நோக்கத்துடன் வந்தேனோ, அது ஒன்றும் நிறைவேறவில்லை. வந்தபோது இருந்த உற்சாகம் ரொம்பவும் குறைந்து போயிருந்தது. 'குற்றால நாதரே துணை' என்று கடைசியாக இங்கு வந்து சேர்ந்தேன். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இராமபத்திர சர்மா என்பவர் அப்போது இங்கே ஒரு பங்களாவில் குடியிருந்தார். அவரைச் சந்தித்துச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததில் கொஞ்சம் உபயோகம் ஏற்பட்டதாகத் தோன்றியது.

இந்த செண்பகாதேவி அருவியின் அழகைப் பற்றியும் அந்த இராமபத்திர சர்மாதான் சொன்னார். தெரியாத ஜனங்கள் 'செண்பகாதேவி' என்று சொல்வதாகவும், உண்மையில் இது 'செண்பகாடவி' என்றும் சொன்னார். "இங்கே அம்மன் கோயில் ஒன்று இருப்பது உண்மைதானே?" என்று கேட்டேன். "ஆம்; இருக்கிறது. அதனால் என்ன? செண்பகாடவியைச் செண்பகாதேவி என்று சொல்லிக் கடைசியில் ஒரு கோயிலும் கட்டி விட்டார்கள்" என்றார்.

இராமபத்திராசர்மா ஒரு மிதவாதி. அப்படியென்றால் தெரியுமா? கோபாலகிருஷ்ண கோகலே, ராஷ் விஹாரி கோஷ் கும்பலைச் சேர்ந்தவர். வெள்ளைக்காரர்களை அண்டிக் காலில் விழுந்து கெஞ்சி சுயராஜ்ஜியம் வாங்கி விடலாம் என்று நம்பியவர். இந்தப் பிரதேசத்தில் இப்போதெல்லாம் இரத்தக் கொதிப்புள்ள சில வாலிபர்கள் இருந்தார்கள். அவர்கள் "பாலகங்காதரதிலகருக்காகப் பழி வாங்குவோம்", "வ.உ.சிதம்பரம் பிள்ளைக்காகப் பழிவாங்குவோம்" "வெள்ளைக்காரர்களைப் பூண்டோ டு அழித்துக் கூண்டோ டு யமலோகம் அனுப்புவோம்" என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அவர்களுக்கெல்லாம் மிதவாத இதோபதேசம் செய்வது இந்த ராமபத்திர சர்மாவின் வேலை. எனக்கோ அந்த மானமுள்ள வீர இளைஞர்கள் யாரையாவது சந்திக்க வேண்டுமென்று ஒரே துடிப்பாயிருந்தது. நான் இந்தப் பிரதேசத்துக்கு வந்த காரணமே அதுதான். அந்த இளைஞர்களைப் பற்றி சர்மா அடிக்கடி பேசுவதுண்டு. ஆனால் அவர்களில் யாரையாவது பற்றிச் சர்மாவிடம் தகவல் தெரிந்து கொள்ளலாமென்றால் அது ஒன்றும் தனக்குத் தெரியாது என்று அவர் கையை விரித்துவிட்டார். திடீரென்று ஒரு நாள் புறப்பட்டு ஊருக்குப் போய்விட்டார்.

ஏதோ குற்றாலத்துக்கு வந்தது தான் வந்தோம், செண்பகாதேவி அருவியிலாவது ஒரு தடவை தலையைக் கொடுத்து விட்டுப் போவோம் என்று ஒரு நாள் காலை சுமார் ஒன்பது மணிக்கு மலை மேல் ஏற ஆரம்பித்தேன்.

கொஞ்ச தூரம் விரைவாகவே நடந்து போனேன். நீர்தான் பார்த்திருப்பீரே? மலைப் பாதைகளே எப்போதும் திரும்பித் திரும்பி வளைந்து வளைந்து போகும். முன்னால் போகிறவர்கள் பின்னால் வருகிறவர்களின் தலைக்கு மேலே சில இடங்களில் நடந்து போகும்படி நேரிடும். ஆசாமிகள், கண்ணுக்குத் தெரியமாட்டார்கள். ஆனால் மேலே போகிறவர்களின் பேச்சு கீழே வருகிறவர்களுக்கும் கீழே வருகிறவர்களின் பேச்சு மேலே நடப்பவர்களுக்கும் நன்றாய்க் காது கேட்கும்.

ஓரிடத்தில் என் தலைக்கு மேலே போகிறவர்களின் பேச்சு என் காதில் விழுந்தது. அவர்களில் ஒருத்தி இளம் வயதுப் பெண்ணாயிருக்க வேண்டும். அவளுடைய குரல் சொல்லிற்று: "நான் உலகமறியாப் பெண்ணாயிருந்த போதும் என்னை எங்க சின்னாயியும் சித்தப்பனும் இவருக்குக் கட்டிக் கொடுத்தாக! இவகளும் அப்போவெல்லாம் என்னிடம் எத்தனையோ அன்பும் ஆசையுமாய்த்தானிருந்தாக! ஒரு காணி நிலம் எங்களுக்குப் பூர்வீகச் சொத்து. அதிலே வருசாந்தரத்துக்கு வேண்டிய நெல்லு கிடைத்து விடும். சாரற் காலத்திலே பெரிய பிரபுக்கள் குற்றாலத்து அருவியிலே குளிக்க வருவாக. நாங்க இருவருமாய் யாராவது ஒரு வீட்டிலே வேலை செய்வோம். நல்ல மனுஷாள் என்று தெரிந்து கொண்டு தான் போவோம். நல்லாச் சாப்பிடுவோம். இருபது முப்பது பணமும் மிச்சம் பிடிப்போம். வேனிற் காலத்திலே எங்களுக்கு வேலையிராது. தேர் திருவிழா, திருச்செந்தூர் உற்சவம் எல்லாம் பார்க்கப் போவோம். இப்படி எவ்வளவோ கண்யமாகத்தான் இருந்து வந்தோம்..."

'ஆகா! இந்தத் திருநெல்வேலி ஜில்லாவில் குடியானவர்களும் குடியானவப் பெண்களும் கூட எவ்வளவு அழகான செந்தமிழ் பேசுகிறார்கள்' என்று எண்ணி நான் ஆச்சரியமடைந்தேன். ஆனால் அடுத்தபடியாக அந்தப் பெண் சொன்னது என்னைத் தூக்கிவாரிப் போட்டு, அவளுடைய செந்தமிழ் நடையை மறக்கும்படி செய்துவிட்டது.

"இந்தச் சுதேசிக்கார ஆளுக வந்தாலும் வந்தாக, குடும்பம் பாழாய்ப் போச்சு. இவக வேலை வெட்டி ஒன்றும் பார்க்கறதில்லை. தூத்துக்குடி எங்கே, திருநெல்வேலி எங்கே, எட்டயபுரம் எங்கே, ஆலப்புழை எங்கே என்று அலைகிறதே இவர்களுக்குத் தொழிலாய்ப் போச்சு! அதுவும் போனாப் போகிறதென்று ஏதோ என் சாமர்த்தியத்தினாலே குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தேன். ஆனால் இந்த ஆறுமாதமா இவக நடத்தை எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. யார் யாரோ திருடங்க மாதிரி இராத்திரிக்கி இராத்திரி வந்து கூட்டிக்கிட்டுப் போறாக, பொழுது விடிஞ்ச பிறகு கொண்டு விடுறாக, நெத்தியிலே பெரிய குங்குமப் பொட்டைப் போட்டுகறாக, கண்ணைப் பார்த்தாக் கோவைப்பழம் மாதிரி செவந்து கெடக்கு. பேச்சைக் கேட்டா, ஒரு மாதிரியாயிருக்கு. பலி என்கிறாக; இரத்தம் என்கிறாக! மலையாள மாந்திரிகம் என்று சொல்றாகளே, அதிலே ஏதாவது இவக அகப்பட்டுக்கிட்டாகளோ என்று எனக்குப் பயமாயிருக்கு. ஐயா! செண்பகாதேவி அம்மனைத்தான் நான் நம்பியிருக்கேன்; வெள்ளிக்கு வெள்ளி பூசை போடறேன். செண்பகாதேவி அம்மாதான் என் புருஷனை எனக்கு காப்பாத்திக் கொடுக்க வேணும்."

அத்தியாயம் - 3

இந்தப் பேச்சு எனக்கு எவ்வளவு பரபரப்பை உண்டாக்கியது என்று உமக்குச் சொன்னால் கூடத் தெரியாது. அந்தப் பெண்பிள்ளை யார், அவள் யாரிடம் இதையெல்லாம் சொல்லிக் கொண்டு போகிறாள் என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆவல் ஏற்பட்டது. ஆகவே விரைவாக நடையைக் கட்டினேன். முன்னால் சென்றவர்களை நெருங்கினேன். சுமார் இருபத்தைந்து வயதுள்ள பெண்ணும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட ஒரு பெரியவரும் போய்க் கொண்டிருந்தார்கள். பெரியவர் செண்பகாதேவி கோயிலின் பூசாரி என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர்கள் மெதுவாக நடந்தாலும், நான் வெகு விரைவாக நடந்ததாலும் மலைப்பாதையில் அவர்களைத் தாண்டிச் சென்றேன். தாண்டி ஐந்தாறு அடி தூரம் சென்றதும் அந்தப் பெண் எப்படிப்பட்டவள் என்று தெரிந்து கொள்ளுவதற்காகத் திரும்பிப் பார்த்தேன். பாண்டிய நாட்டுக் குடியானப் பெண்களைப் போல ஒல்லியாகவும், உயரமாயும் இருந்தாள். முகத்தில் நல்ல களை இருந்தது. கூந்தலை அழகாக எடுத்துக் கட்டிச் செருகியிருந்தாள். இதையெல்லாம் கவனிக்க எனக்கு ஒரு கண நேரந்தான் பிடித்தது. உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டு விடுவிடுவென்று மேலே நடந்தேன்.

இப்போது நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேனே, இதே இடத்தில், முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்பு சடாமகுடதாரியான ஒரு சாமியார், ஒரு வெள்ளிக்கிழமை நடுப்பகலில் உட்கார்ந்திருந்தார். செண்பகாதேவி அம்மனுக்கு அபிஷேகம் செய்யத் தண்ணீர் கொண்டு போவதற்காக ஓர் இளம் பெண் இங்கே வந்தாள். அவள் முதலில் சாமியாரைக் கவனிக்க வில்லை. அவள் குனிந்து குடத்திலே தண்ணீர் மொண்ட போது, சாமியார் கனைத்தார். அதைக் கேட்டு அப்பெண் சாமியாரைப் பார்த்தாள். அருகில் வந்து கும்பிட்டாள். "பெண்ணே! உன் மனதில் ஏதோ கவலை இருக்கிறது!" என்றார் சாமியார். "ஆமாஞ்சாமி! தங்களைப் போன்ற பெரியவர்தான் தீர்த்து வைக்க வேணும்!" என்றாள் அந்தப் பெண். "அப்படியே தீர்த்துவைப்போம்! என்ன கவலை, சொல்!" என்று சாமியார் கேட்டார்.

"தங்களுக்குத் தெரியாதா சாமி, இந்தப் பொன்னியம்மா சொல்லித்தானா தெரிஞ்சுக்க வேணும்!"

நம்பிக்கையும் சந்தேகமும் பொன்னியம்மாள் மனதை குழப்புவதாகச் சாமியார் ஊகித்துக் கொண்டார்.

"ஆகட்டும்; நாமே சொல்கிறோம்; உன் புருஷன் விஷயமாகக் கவலைப்படுகிறாய். அவனுடைய நடத்தை ஓர் ஆறு மாத காலமாகச் சரியாக இல்லை. வேளா வேளையில், காலாகாலத்தில் வீட்டுக்கு வருவதில்லை. இரவு நேரங்களில் வெளியே போகிறான். ஊர் விட்டு ஊர் போகிறான். காரணம் சொல்ல மாட்டேனென்கிறான். சில சமயம் நெற்றியிலே பெரிய குங்குமப் பொட்டு வைச்சுக்கிறான். இதெல்லாம் உண்மையா, இல்லையா?" என்றார் சாமியார்.

"ஆமாஞ்சாமி! தங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கே, சாமிதான் என் புருஷனை காப்பாத்த வேணும். என்னைக் குடியும் குடித்தனமுமாய் வைக்க வேணும்" என்று பொன்னியம்மாள் கண்ணீருடன் கூறினாள்.

"ஆகட்டும், காப்பாத்துகிறேன். ஆனால் நீ என்னிடம் நம்பிக்கை வைக்க வேணும். ஒரு விஷயத்தில் நிஜத்தைச் சொல் பார்க்கலாம். இந்த இரண்டு மூன்று நாளிலே உன் வீட்டைத் தேடி யாராவது அசலூர்காரர்கள் வந்ததுண்டா? உன் புருஷனுக்கு ஏதாவது செய்தி சொன்னதுண்டா?"

"உண்டு, சாமி! முந்தாநாள் செங்கோட்டை ஆள் ஒருத்தர் வந்தாரு. நாளை ஞாயிற்றுக்கிழமை எல்லாரும் தூத்துக்குடி கடற்கரையிலே கூட வேணும் என்றும், கையிலே அடையாளத்துக்கு ஒரு கிளிஞ்சல் வச்சிருக்க வேணும் என்றும் சொன்னாரு. எதுக்கு, என்னத்துக்கு என்று எனக்கு ஒண்ணும் தெரியாது! அசலூர்க்காரங்க வந்தாலே எனக்குச் சந்தேகம். சாமி! ஒளிஞ்சிருந்து கேட்டதை உங்களிடம் சொன்னேன்."

"நல்ல காரியம் செய்தாய். நீ கொஞ்சமும் கவலைப்படாதே. உன் புருஷன் ஒரு மலையாளத்து மந்திரவாதியிடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறான். அவனை நான் காப்பாத்திக் கொடுக்கிறேன். அடுத்த வெள்ளிக்கிழமை இந்த இடத்திலேயே என்னை வந்து பாரு! இன்னும் சில செய்தி சொல்லுகிறேன்!" என்றார் சாமியார்.

இதற்குள் கோயிலுக்குள்ளேயிருந்து "பொன்னியம்மா!" என்று பூசாரி கூப்பிடும் சத்தம் கேட்டது.

"இதோ வந்துவிட்டேன்" என்று பொன்னியம்மாவும் உரத்த குரலில் கூறினாள்.

சாமியார் அவளை உற்றுப் பார்த்து, "ஜாக்கிரதை! என்னிடம் பேசிய விஷயம் யாருக்கும் சொல்லப்படாது. பூசாரிகிட்டக் கூடச் சொல்லக்கூடாது. சொன்னால் காரியம் கெட்டுப் போய்விடும். உன் புருஷன் உனக்குக் கிட்ட மாட்டான்!" என்று எச்சரித்தார்.

அத்தியாயம் - 4

அடுத்த ஞாயிற்றுக்கிழமையன்று பிற்பகலில் தூத்துக்குடி கடற்கரை மணலில் நான் அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தேன். குறுக்கு நெடுக்கே போகிறவர்களைப் பார்க்காதது போல, பார்த்துக் கொண்டு அலைந்தேன். படகுகள், கட்டு மரங்கள், செம்படவர்களின் வலைகள் இவற்றில் தடுக்கி விழாமலும், மோதிக் கொள்ளாமலும் ஜாக்கிரதையாக நடக்க வேண்டியிருந்தது. ஒரு சமயம் ஒரு மனிதன் குனிந்து ஒரு கிளிஞ்சலைப் பொறுக்கியதைப் பார்த்தேன். அப்போது மணலில் தோண்டியிருந்த பள்ளத்தில் நான் விழுந்து விட்டேன். நல்ல வேளையாக யாரும் பார்க்கவில்லையென்பதைத் தெரிந்து கொண்டு நானும் ஒரு கிளிஞ்சலைக் கையில் எடுத்துக் கொண்டு உலாவினேன். இன்னொரு கிளிஞ்சல் பேர்வழியைக் கண்டதும் என் கையில் உள்ள கிளிஞ்சல் தெரியும் படியாகப் பிடித்துக் கொண்டேன். அந்த மனிதர் 'வந்தேமாதரம்' என்று சொன்னார். நானும் திரும்பி 'வந்தேமாதரம்' என்றேன். அவர் என்னை ஒரு மாதிரி பார்த்துக் கொண்டு அப்பாற் போய்விட்டார்.

மறுபடியும் சுற்றி அலைந்தேன். இரண்டு கிளிஞ்சல் பேர்வழிகள் ஒருவரையொருவர் சந்தித்தார்கள். அவர்களில் ஒருவர் 'வந்தேமாதரம்' என்றார். இன்னொருவர் 'வ.உ.சி.வாழ்க!' என்றார். 'ஓஹோ! இப்படியா மாற்றுக் கோஷம்' என்று மனதில் எண்ணிக் கொண்டு அவர்கள் அண்டை சென்று 'வந்தேமாதரம்' என்றேன். அவர்களில் ஒருவர் 'வ.உ.சி. வாழ்க!' என்றார். இன்னொருவர் "வெள்ளைக்காரன் வீழ்க" என்றார். 'சரியாப் போச்சு! மூன்று பேர் சேர்ந்தால் இப்படிச் சொல்ல வேண்டுமாக்கும்' என்று நினைத்துக் கொண்டேன். "மற்றவர்கள் எல்லாரும் எங்கே?" என்று கேட்டேன். "இருக்கிற இடத்தில் இருப்பார்கள்" என்று ஒருவர் பதில் சொல்லிக் கொண்டே மேலே நடந்தார். நானும் அவர்களைத் தொடர்ந்து போனேன். கடைசியாக, கடல் மணலில் கொஞ்சம் பள்ளத்தாக்கான ஓரிடத்திற்குப் போய்ச் சேர்ந்தோம். ஏற்கனவே ஏழெட்டுப் பேர் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நாங்கள் வந்த அதே சமயத்தில் இன்னும் இருவர் வேறு பக்கத்திலிருந்து வந்தார்கள். ஆக மொத்தம் பதினைந்து பேர் இருக்கும்.

என்னை முதலில் சந்தித்துச் சந்தேகப்பட்ட மனிதரும் அவர்களில் இருந்தார். என்னைப் பார்த்தவுடனே அவர் பதினைந்து பேரில் நடுநாயகமாக வீற்றிருந்த மனிதரைப் பார்த்து, "சுவாமி! இதோ இந்த மனிதர் புதியவர். இவருக்குப் பதில் கோஷம் தெரியவில்லை. யார் என்று விசாரிக்க வேண்டும்" என்றார். அவரால் "சுவாமி!" என்று அழைக்கப்பட்டவர் என் பக்கம் தம் திருஷ்டியைத் திருப்பினார். யௌவன பிராயம்; இயற்கையில் எழில் வாய்ந்த முகம்; அதோடு யோக சாதனத்தினால் ஏற்பட்ட தேஜஸும் சேர்ந்திருந்தது. அவர் என்னை ஏறிட்டுப் பார்த்தபோது என் கண்கள் கூசின. "அப்பனே நீ யார்?" என்று கேட்டார். அவரை விட நான் வயதானவனாயிருந்தும் என்னை ஏகவசனத்தில் அவர் அழைத்தது சிறிது கோபம் அளித்தது. கோபத்தை அடக்கிக் கொண்டு, "நான் கோயம்புத்தூரிலிருந்து வருகிறேன். இந்த ஊர்க்காரர் அங்கே இருக்கிறார் அல்லவா. அவர் செய்தி சொல்லி அனுப்பினார்!" என்றேன். உடனே அந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட பரபரப்பைப் பார்க்க வேண்டுமே! தலைக்குத் தலை "அப்படியா? என்ன சொன்னார்? எப்பொழுது சொன்னார்?" என்று பல கேள்விகளை ஏக காலத்தில் போட்டார்கள். தலைவர் அவர்களைக் கையமர்த்தி அடக்கி விட்டு "ஐயா! விவரமாகச் சொல்ல வேணும், இந்த ஊர்க்காரர் எத்தனையோ பேர் கோயம்புத்தூரில் இருக்கலாம். நீர் யாரைச் சொல்கிறீர்? அவர் சொல்லி அனுப்பியது என்ன?" என்று அதிகாரப் பூர்வமான குரலில் கேட்டார். இவர்தான் புதுச்சேரியிலிருந்து வந்திருக்கும் யோகி நீலகண்ட பிரம்மச்சாரியாயிருக்க வேண்டும் என்று ஊகித்துக் கொண்டேன்.

இதற்குள் கூட்டத்தில் ஒருவர் "வெறும் வாய்ப் பேச்சுச் செய்தியா? அத்தாட்சி ஏதேனும் உண்டா என்று கேட்டுவிடுங்கள்" என்று படபடத்தகுரலில் கூறினார். அவர் பக்கத்திலிருந்தவர், "வாஞ்சி! நீ சும்மா இரு!" என்றார். இதிலிருந்து படபடத்த ஆசாமி செங்கோட்டை வாஞ்சி ஐயர் என்று தெரிந்து கொண்டு, அவரிடம் கொஞ்ச ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தேன்.

"நான் கேட்ட கேள்விக்குப் பதில் வேணும்!" என்று தலைவர் மறுபடியும் கூறினார்.

நான் உடனே அக்கூட்டத்திலிருந்த அனைவரையும் ஒரு தடவைகண்களைச் சுழற்றி நன்றாகப் பார்த்துவிட்டு உறுதியான குரலில் கூறினேன்:

"வெள்ளைக்காரனுக்குப் போட்டியாகக் கப்பல் ஓட்டிய வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையைத்தான் சொல்கிறேன். வேறு யாரைச் சொல்வேன்? ஒரு வருஷ காலம் அந்த மகானுக்குப் பணிவிடை செய்யும்படியான பாக்கியம் இந்த ஏழைக்குக் கிடைத்தது. பொய்யாக 'போர்ஜரி' குற்றம் சாட்டி எனக்குத் தண்டனை விதித்திருக்கிறார்கள். அப்படிப் பொய்க் குற்றம் சாட்டிய புண்ணியவான்களை நான் என்றென்றைக்கும் வாழ்த்தி அவர்கள் நன்றாயிருக்க வேணுமென்று கடவுளைப் பிரார்த்தித்து வருவேன். ஏனெனில் அம்மாதிரிப் பொய்க் குற்றம் சாட்டி, என்னைச் சிறைக்கு அனுப்பியதால்தானே பாரதமாதாவின் தவப் புதல்வரை நான் சந்திக்க நேர்ந்தது? அவருக்கு அவசியமாயிருந்தபோது பணிவிடைகள் செய்ய முடிந்தது? ஆகா! நானும் என் அற்ப வாணாளில் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். இவரைப் போல் ஒரு வீரரை, ஒரு தீரரை, ஒரு தியாகியை, ஒரு குணவானை, ஓர் உத்தமனைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை, ஐயா! மாடு இழுக்க வேண்டிய செக்கை அந்த மகாபுருஷர் தம் திருக்கரங்களினால் இழுத்தார். அதை இந்தப் பாவியின் கண்கள் பார்த்தன...!" என்று சொல்லி வந்து போது எனக்கு அழுகை வந்து விட்டது. சற்று நேரம் விம்மி அழுதேன். அங்கே கூடியிருந்தவர்களில் மற்றும் சிலரும் அழுதார்கள். வாஞ்சி ஐயர் 'ஓ' வென்று அழுது தீர்த்து விட்டார். மடத்துக்கடைச் சிதம்பரம் பிள்ளை முகத்தில் துணியைப் போட்டுக் கொண்டு தேம்பினார். வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர் குப்புறப் படுத்துக் கொண்டு விம்மினார்.

கல் நெஞ்சர் என்று அனைவரும் எண்ணியிருந்த நீலகண்ட பிரம்மசாரியின் கண்களும் கலங்கிவிட்டன.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா விவரங்களையும் கூறி முடித்தேன். வ.உ.சிதம்பரம் பிள்ளை சொல்லி அனுப்பிய செய்தியையும் கடைசியாகச் சொன்னேன்.

"என்னுடைய கஷ்டங்களை ஒருவரும் பொருட்படுத்த வேண்டாம். இம்மாதிரி இன்னும் நூறு மடங்கு கஷ்டங்களை வேணுமானாலும் பாரதத் தாயின் விடுதலைக்காக நான் அனுபவிக்கத் தயார். ஆனால் 'சிதம்பரம் பிள்ளையை உள்ளே தள்ளினோம்; எல்லாம் அடங்கிப் போய் விட்டது' என்று வெள்ளைக்காரன் கொட்டமடிப்பானே என்று நினைத்தால்தான் என் உள்ளம் கொதிக்கிறது. திருநெல்வேலி ஜில்லாவில் தூத்துக்குடி சிதம்பரம் பிள்ளை தவிர வேறு ஆண் மகனே இல்லை என்று சரித்திரம் சொல்ல இடம் கொடாதீர்கள்! 'சிதம்பரம் பிள்ளையையும் சுப்பிரமணிய சிவத்தையும் பிடித்துப் போட்டதும் சுதேசி இயக்கம் செத்து விட்டது' என்று சரித்திரம் எழுத இடம் கொடாதீர்கள்."

இவ்வாறு சிறைக்குள்ளிருந்து ஸ்ரீ வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுப்பிய செய்தியை அந்தக் கூட்டத்தாருக்குத் தெரிவித்து விட்டு, மடியிலிருந்து ஒரு கசங்கிய கடுதாசியை எடுத்தேன். "இங்கே யாருக்காவது வ.உ.சிதம்பரம் பிள்ளையின் கையெழுத்துத் தெரியுமா?" என்று கேட்டேன். இரண்டு பேர் ஏக காலத்தில் "தெரியும்" என்று கையை நீட்டினார்கள். அவர்களில் ஒருவர் தூத்துக்குடி முத்துக்குமாரசாமிப் பிள்ளை; இன்னொருவர் கடையநல்லூர் சங்கரகிருஷ்ணய்யர். இருவரும் கடிதத்தைப் படித்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்கள். மற்றவர்களும் ஒவ்வொருவராய் பார்த்துக் கண்களில் ஒற்றிக் கொண்டு அடுத்தவர்களிடம் கொடுத்தார்கள்.

நீலகண்ட பிரம்மச்சாரி ஒரு சிம்ம கர்ஜனை செய்ததும் எல்லோருடைய கண்களும் அவர்பால் சென்றன.

"தோழர்களே! நம்மையெல்லாம் ஆண் பிள்ளைகள் என்றும், வீர சிம்மங்கள் என்றும் எண்ணிக் கொண்டு தேச பக்தர் சிதம்பரம் பிள்ளை செய்தி அனுப்பியிருக்கிறார். நாமோ சற்று முன்பு நெஞ்சி திடமில்லாத கோழைகளைப் போலவும் பெண் பிள்ளைகளைப் போலவும் நடந்து கொண்டோ ம். எல்லாரும் கண்ணீர் விட்டுத்தேம்பி அழுதோம். ஒப்பாரி வைப்பது ஒன்றுதான் மிச்சம். அதையும் வேணுமானாலும் இப்போது எல்லோரும் சேர்ந்து செய்து விடுவோம்!" என்று நீலகண்ட பிரம்மச்சாரி கூறிய மொழிகள் எல்லாரையும் வெட்கமடையும்படி செய்தன.

"தலைவராகிய தாங்களுங் கூடத்தான்..." என்று கூட்டத்தில் ஒருவர் சொல்லுவதற்குள்ளே பிரம்மச்சாரி, "என்னையும் சேர்த்துத்தான். உங்களை மட்டும் நான் சொல்லவில்லை. எல்லோருமே சற்று முன்பு கோழைகளாகி விட்டோ ம். உண்மையில் நாம் புரட்சி வீரர்களாயிருக்கும் பட்சத்தில், சிதம்பரம் பிள்ளை சிறையில் பட்ட கஷ்டங்களைக் கேட்டு நாம் களிப்படைய வேண்டும். நமது நெஞ்சுகள் இரும்பாக மாற வேண்டும். ஈவிரக்கம், பச்சாத்தாபம், எல்லாவற்றையும் மனத்திலிருந்து துடைத்துவிட வேண்டும். எதிரிகள் விஷயம் ஒரு புறம் இருக்கட்டும். நம்மிலே யாராவது ஒருவன் துரோகியாகி விட்டதாகத் தெரிந்தால், அவனைக் கண்டதுண்டம் செய்யவும் தயாராயிருக்க வேண்டும். அப்போதுதான் நாம் பாரதத் தாயின் உண்மையான புதல்வர்களாவோம்!"

தலைவர் இப்படிச் சொன்னபோது, அந்தக் கூட்டத்தில் பூரண நிசப்தம் நிலவியது. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பாராமல் எல்லாரும் தலைகுனிந்தவண்ணம் இருந்தார்கள். நானும் அப்படித்தான் இருந்தேன். நிமிர்ந்து பார்த்தாலும் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமாகும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனத்திலும் இருந்தது. உள்ளக் கொதிப்பைப் பிரதிபலிப்பது போலச் சற்றுத் தூரத்தில் கடல் அலைகள் கரையில் மோதும் சத்தம் கேட்டது. அத்தனை நேரமும் கேட்காத அலைச் சத்தம் அப்போது ஏற்பட்ட நிசப்தத்தினால் காதிலே வந்து தாக்கிற்று.

"தோழர்களே! ஒரு சில நிமிஷம் உணர்ச்சிக்கு இடங் கொடுத்து விட்டதற்காக நிரந்தரமான சோகக் கடலில் நாம் மூழ்கி விடக் கூடாது. இந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்ததும் நன்மைக்குத்தான்! இனிமேல் தவறு செய்யாமலிருக்க உதவியாயிருக்கும். இந்தக் கடற்கரையிலே ஒரு காலத்தில் இரண்டு தேச பக்தச் சிம்மங்கள் கர்ஜனை புரிந்தன. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமண்ய சிவம் இந்த இரண்டு வீரர்கள் இங்கே வேலை செய்து ஒரு பெரும் புரட்சியை உண்டு பண்ணினார்கள். திருநெல்வேலி ஜில்லா முழுவதும் புரட்சித் தீ எரிந்தது. இந்தத் தூத்துக்குடி நகரத்தில் சுதேசி இயக்கத்துக்கு விரோதமாயிருந்தவர்களுக்கு நாவிதன் க்ஷவரம் செய்ய மறுத்தான்; வண்ணான் துணி வெளுக்க மறுத்தான். சிதம்பரம் பிள்ளை சொன்னாரென்றால், கடைக்காரர்கள் கடையைத் திறக்க மறுத்தார்கள். தொழிலாளிகள் ஆலைக்குப் போக மறுத்தார்கள். கலெக்டர் விஞ்சு ஓடி வந்து ஆன மட்டும் கெஞ்சிப் பார்த்தான்; முக்கிப் பார்த்தான்; தோப்புக்கரணம் போட்டுப் பார்த்தான்; பயன்படவில்லை. சிதம்பரம் பிள்ளையின் வாக்கு சர்க்கார் உத்தரவை விடச் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதைக் கண்ட விஞ்சு துரை மனங் கொதித்தான்; துள்ளிக் குதித்தான். "சிதம்பரம் பிள்ளையைக் கொண்டு வா" என்றான். யமகிங்கரர்கள் போன்ற போலீஸ் ஜவான்கள் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அப்போது நடந்த சம்பாஷணையை இன்று புதுச்சேரியில் வீற்றிருக்கும் நமது தேச மகாகவி அற்புதமாய்ப் பாடியிருக்கிறார், கேளுங்கள்!

"கூட்டங்கூடி வந்தே மாதர
மென்று
கோஷித்தாய் - எமைத் - தூஷித்தாய்
ஓட்டம் நாங்கள் எடுக்க வென்றே கப்பல்
ஓட்டினாய் - பொருள் ஈட்டினாய்!"

என்று கலெக்டர் விஞ்சு துரை குற்றம் சாட்டினானாம். அதற்கு நம் வீரர் சிதம்பரம் பிள்ளை,

"வந்தேமாதரம் என்றுயிர்
போம்வரை
வாழ்த்துவோம் - முடி - தாழ்த்துவோம்
எந்தமாருயிர் அன்னையைப் போற்றுதல்
ஈனமோ - அவமானமோ!"

என்று பதில் சொன்னாராம். உடனே கலெக்டர் விஞ்சு துரை கோபத்தால் துடி துடித்தானாம்.

"சுட்டு வீழ்த்தியே புத்தி
வருத்திடச்
சொல்லுவேன் - குத்திக் - கொல்லுவேன்
தட்டிப் பேசுவாருண்டோ - சிறைக்குள்ளே
தள்ளுவேன் - பழி - கொள்ளுவேன்!"

என்று பயமுறுத்தினானாம். அதற்கு நம் தேச பக்த வீரர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?

"சதையைத் துண்டு துண்டாக்கினாலும்
உன் எண்ணம்
சாயுமோ - ஜீவன் - ஓயுமோ
இதயத்துள்ளே இலங்கு மகாபக்தி
ஏகுமோ - நெஞ்சம் - வேகுமோ?"

என்று சிறிதும் அஞ்சாமலும், நெஞ்சம் கலங்காமலும் பதில் கூறினார். அத்தகைய வீர புருஷர் வாழ்ந்த இந்தத் தூத்துக்குடி நகரமும், இந்தத் திருநெல்வேலி ஜில்லாவும் இப்போது ஒரே தூக்கமாகத் தூங்குகின்றன...!"

"ஒன்றும் தூங்கவில்லை! யாராவது தப்பித் தவறித் தூங்கினால் அவன் ஜேபியிலிருப்பதைச் சுரண்டுவதற்கு இந்த ஜில்லாவில் எல்லாரும் தயாராயிருக்கிறார்கள்!" என்று கூட்டத்தில் ஒருவர் இலேசாகச் சொன்னார். அவர் பெயர் சாவடி அருணாசலம் பிள்ளை என்றும் தெரிந்து கொண்டேன்.

"இப்போது யார் என்ன சொன்னார்கள்?" என்று நீலகண்ட பிரம்மச்சாரி அதட்டிக் கேட்ட போது, சாவடிப் பிள்ளை, "தூங்குகிறவர்களையாவது எழுப்பலாம்! தூங்குகிறதாகப் பாசாங்கு செய்கிறபடியால் எழுப்பவும் முடியாது என்று சொன்னேன்!" என்றார்.

"இல்லை; அப்படி நினையாதீர்கள், கட்டாயம் எழுப்பலாம்! ஒரு வேட்டுச் சத்தம் கேட்க வேண்டியதுதான்; எல்லாரும் எழுந்து விடுவார்கள். தோழர்களே! வெறுமனே பேசிக் கொண்டிருக்கிற காலம் போய் விட்டது. காரியத்தில் இறங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. உங்களில் எவ்வளவு பேர் காரியத்தில் இறங்கத் தயாராயிருக்கிறீர்கள்? தயாராய் இருப்பவர்கள் கையைத் தூக்குங்கள்!" என்றதும் அவ்வளவு பேரும் கையைத் தூக்கினார்கள். நானும் தூக்கினேன். வாஞ்சி ஐயர் இரண்டு கையையும் தூக்கினார்.

"ஆறு மாதமாக நாங்கள் காரியத்துக்குத் தயாராகத்தான் இருக்கிறோம். நீங்கள்தான் 'இன்னும் காலம் வரவில்லை', 'காலம் வரவில்லை' என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். ஊர் கூடிச் செக்குத் தள்ளுதல் நடக்கிற காரியமா?" என்று வாஞ்சி ஐயர் மீண்டும் படப்படப்பாய்ப் பேசினார்.

"வாஞ்சி! நீ சற்று சும்மா இரு. பேச்சிலே வீரனாயிருப்பவன் காரியத்திலே கோழையாயிருப்பான். 'ஊர் கூடிச் செக்குத் தள்ள முடியாது' என்றா சொல்கிறாய்? முடியும் என்று நான் சொல்லுகிறேன். தமிழ் நாட்டில் நூறு இடத்தில் ஒரே தேதியில் சேர்ந்தாற்போல் புரட்சி நடக்கப் போகிறது. அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் நடந்திருக்கின்றன. ஆயுதங்கள், ஆட்கள் எல்லாம் தயார். தேதி குறிப்பிட வேண்டியது ஒன்றுதான் பாக்கி. குறிப்பிட்ட தேதியில் இந்த மாகாணத்திலுள்ள அவ்வளவு வெள்ளைக்காரர்களும் சுட்டுத் தள்ளப்படுவார்கள். ஜார்ஜ் பெஞ்சமனுடைய ஆட்சி முடிவடையும். மறுநாள் நமது சிதம்பரம் பிள்ளைதான் தமிழ்நாட்டுக்கு மகாராஜா. இப்படியே ஒவ்வொரு மாகாணத்திலும் நடக்கப் போகிறது."

இதைக் கேட்டதும் எல்லோருக்கும் ரோமம் சிலிர்த்தது. என்னுடைய நெஞ்சு பட், பட் என்று அடித்துக் கொண்டது. அவ்வளவு சீக்கிரமாகக் காரியங்கள் நடக்கப் போகின்றன என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆகா! தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை இட்ட தீ பெரிய தீதான்.

கூட்டத்தில் சிலர் "தேதி எப்போது சொல்லப் போகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "அன்றைக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன மாதிரி செய்ய வேண்டும்?" என்று இன்னும் சிலர் கேட்டார்கள்.

நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார்: "இன்ன தேதி என்பதையும் அன்றைக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் அடுத்தக் கூட்டத்தில் சொல்வேன். இதுவரையில் வெறுமனே பேசிக் கொண்டிருந்தோம். ஆகையால் எங்கே வேணுமானாலும் கூட்டம் போட்டோ ம். காரியத்தில் இறங்க வேண்டிய காலம் இப்போது வந்துவிட்டதால், இடம் பொருள் ஏவல் அதற்குத் தக்கபடி இருக்க வேண்டும். தோழர்களே! நம்முடைய அடுத்த கூட்டத்தைக் குற்றாலத்தில் கூட்டப் போகிறேன். அடுத்த பௌர்ணமியன்று கூட்டம். குற்றாலத்தில் கூட்டம் எங்கே கூடும், எந்த நேரத்தில் கூடும் என்பதைக் காசி மேஜர்புரத்திலுள்ள நமது முருகையனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்... என்ன, முருகையா? சரிதானே?"

முருகையன் - பொன்னியம்மாவின் கணவன் - யார் என்பதை அப்போது ஐயமறத் தெரிந்து கொண்டேன்.

"சுவாமி! நான் இப்போது காசிமேஜர் புரத்தில் இல்லை. குற்றாலத்தில் சர்மா பங்களாவில் இருக்கிறேன்! என்றான் முருகையன்.

"அப்படியானால் விசாரிக்க வருகிறவர்களுக்கு இன்னும் சௌகரியமாய்ப் போச்சு. ஆனால் பங்களாவில் சர்மா இருக்காகளா?"

"இல்லை ஐயா! நல்ல வேளையாகத் திருவிதாங்கூருக்குப் போனாக, திரும்பி வருவதற்கு இரண்டு மாதம் பிடிக்குமாம்!"

"பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் ஆச்சு! இராமபத்ர சர்மா நல்ல மனுஷர்தான். ஆனால் பழுத்த மிதவாதி. அவரோடு விவாதம் செய்வதைக் காட்டிலும் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளலாம். ஆனாலும் அவரோடு நான் செய்த விவாதத்தைக் கேட்டுத்தானே நீ நம்ம கோஷ்டியில் சேர்ந்தாய், முருகையா! சர்மா நன்றாயிருக்க வேணும்!" என்றார் பிரம்மச்சாரி. பிறகு இரண்டு இரண்டு பேராயும், மூன்று மூன்று பேராயும் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றார்கள் வாஞ்சி ஐயரையும் தர்மராஜா ஐயரையும் பிடித்துக் கொண்டு நான் சென்றேன். அந்த இரண்டு மனிதர்களையும் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.

அத்தியாயம் - 5

இரண்டு வார காலம் ரொம்பச் சாவகாசமாகவே சென்றது. பௌர்ணமிக்கு மூன்று நாளைக்கு முன்பு நீலகண்ட பிரம்மச்சாரி வந்து இராமபத்திர சர்மாவின் பங்களாவில் உட்கார்ந்து கொண்டார். பலர் அவரை வந்து பார்ப்பதும் போவதுமாயிருந்தார்கள். நானும் இரண்டொரு தடவை சென்று பார்த்தேன். பேசினேன். அபாரமான படிப்பும் கூரிய அறிவும் உள்ளவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் இவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கப் போகிறதா, ஒரே நாளில் பிரிட்டிஷ் ராஜ்யம் கவிழ்ந்து விடப் போகிறதா என்று நினைத்துப் பார்த்த போது கொஞ்சம் வியப்பாகத்தானிருந்தது. அது எப்படியானால் என்ன? நம்முடைய கடமையை நாம் செய்து விட வேண்டியது என்று உறுதி கொண்டேன். நீலகண்ட பிரம்மச்சாரியைப் பார்க்கப் போன சமயத்தில் அந்தப் பங்களாவின் தோட்ட வீட்டிலே குடியிருந்த முருகையனும் பொன்னியம்மாவும் எவ்வளவு அன்புமயமான வாழ்க்கை நடத்தினார்கள் என்பதையும் கவனித்தேன். பாவம்! அவர்களுடைய வாழ்க்கையின் இன்பத்தைக் கெடுப்பதற்கு இந்தப் பிரம்மச்சாரி வந்து சேர்ந்தார். பொன்னியம்மாவின் முகத்தில் கவலைக்குறி முன்னைவிட அதிகமாயிருந்ததை நான் கவனியாமல் இல்லை.

பௌர்ணமியன்று மாலை, செண்பகாதேவியில் பொன்னியம்மாவுக்குத் தைரியம் கூறிய சாமியார், சர்மாவின் பங்களாவுக்கு வந்து சேர்ந்தார். தோட்டக் கதவைத் திறந்து கொண்டே உள்ளே பிரவேசித்தார். பங்களாவில் ஒருவரும் இல்லை. தோட்டத்திலும் ஒருவருமில்லை. விசாரிக்க வேண்டியவர்கள் எல்லாரும் வந்து விசாரித்துக் கொண்டு மலைமேல் ஏறிவிட்டார்கள். தோட்டக் குடிசையில் பொன்னியம்மா மட்டும் தன்னுடைய ஐந்து வயதுப் பெண் குழந்தையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

சாமியாரைப் பார்த்ததும் அவள் குடிசைக்குள்ளேயிருந்து விரைந்து வந்தாள்.

"சாமி! இது என்ன இந்த நேரத்தில் வந்தீர்கள்? இங்கே ஆண் பிள்ளைகள் ஒருவரும் இல்லையே!" என்றாள்.

"பொன்னியம்மா! இராத்திரி இங்கே தங்குவதற்காக நான் வரவில்லை. மலைமேல் இராத்திரி எனக்கு வேலையிருக்கிறது. இதோ திரும்பிப் போகிறேன். ஆனால் உனக்கு வாக்கு கொடுத்தேனே, அதை நிறைவேற்றி விட்டுப் போகத்தான் அவசரமாக வந்தேன்!"

"என்ன வாக்கு, சாமி?"

"உன்னுடைய புருஷனைப் பற்றித்தான்! மறந்து விட்டாயா, என்ன? அல்லது அபாயம் நீங்கி விட்டது என்று நினைத்தாயா?"

"அவருக்கு ஓர் அபாயமும் இல்லை சாமி, நான் தான் பெண் புத்தியினால் வீணாகப் பயப்பட்டேன்."

"பொன்னியம்மா! நீ சுத்த அசடு! உன்னை யாரோ ஏமாற்றி விட்டிருக்கிறார்கள். உண்மையில் உன் புருஷனுக்கு இன்று இரவு பெரிய அபாயம் வரப் போகிறது. இங்கே மூன்று நாளாயிருந்தேனே, ஒரு பிரம்மச்சாரித் தடியன், அவனும் உன் புருஷனும் இப்போது எங்கே போயிருக்கிறார்கள் தெரியுமா? மலைமேலே செண்பகாதேவியம்மன் கோயிலுக்குத்தான் போயிருக்கிறார்கள். மொத்தம் இருபது பேருக்கு மேல் இன்று இரவு அங்கே வரப் போகிறார்கள். எல்லாருமாகச் சேர்ந்து உன் புருஷனை அம்மனுக்கு பலி கொடுக்கப் போகிறார்கள்!"

"ஐயோ!" என்று அலறினாள் பொன்னி.

"மலையாள மந்திரவாதிகள் என்றால், பின்னே என்னவென்று நினைத்துக் கொண்டாய்? நான் சொல்கிறபடி கேட்டால் உன்புருஷனைக் காப்பாற்றிக் கொள்ளலாம், கேட்பாயா?"

"கேட்கிறேன், ஸ்வாமி!"

"இதோ இந்தக் கடிதத்தில் எல்லாம் விவரமாக எழுதியிருக்கிறேன். உடனே இதை எடுத்துச் சென்று தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் கொடுக்க வேணும். கொடுத்தால் போலீஸார் வந்து பலியைத் தடுத்து, உன் புருஷனைக் காப்பாற்றுவார்கள்."

"போலீஸ் என்னத்துக்கு சாமி! நானே போய் என் புருஷனைக் காப்பாற்றிக் கொண்டு வருகிறேன்."

"அசட்டுப் பெண்ணே! அவர்கள் இருபது பேர், நீ ஒருத்தி என்ன செய்வாய்? உன்னையும் சேர்த்துப் பலிகொடுத்து விடுவார்கள்."

பொன்னியம்மாள் யோசித்தாள்.

"என்ன சொல்கிறாய்? நீ போகிறாயா, அல்லது நான் போகட்டுமா? மலைமேலே நான் இப்போதே போனால் போலீஸார் வரும் வரையில் எப்படியாவது உன் புருஷனை காப்பாற்றி வைப்பேன்!"

"நான் போகிறேன், சாமி!" என்று சொல்லிப் பொன்னியம்மா கடிதத்தை வாங்கிக் கொண்டாள்.

"போகாவிட்டால் உன் புருஷன் உயிர் உன் தலைமேலே!" என்று சொல்லி விட்டுச் சாமியார் விடுவிடு என்று நடையைக் கட்டினார்.

அன்று சாயங்காலம் அந்தி மயங்கி அஸ்தமன இருள் சூழ்ந்து வந்த நேரத்தில் நான் குற்றாலத்துமலை மீது ஏறிக் கொண்டிருந்தேன். இன்னும் சிறிது நேரத்தில் பூரண சந்திரன் உதயமாகி விடுவான். ஆயினும் மலைப்பாதை வழியில் மலைகளும் மரங்களும் நிலாவைத் தடுத்து இருளை நிலை நாட்டிக் கொண்டுதானிருக்கும். அதைப் பற்றி அன்றைக்கு என்ன கவலை? மலைமேல் இருபது பேருக்கு மேல் போயிருக்கிறார்கள். செண்பகாதேவிக்கு அருகில் காய்ந்த மரக்கட்டைகளைப் பிடுங்கிப் போட்டு பெரிய தீ வளர்ப்பார்கள். கூட்டம், பிரசங்கம், விவாதம், சபதம் - எல்லாம் இரவு வெகு நேரம் வரையில் நடக்கும். அப்புறம்... ஆகா! அப்புறம் என்ன நடக்குமோ யாருக்குத் தெரியும்? எனக்கே பிறகு நடக்கப் போவதைப் பற்றி நினைக்க மனமில்லை. ஏதோ செய்ய வேண்டிய கடமையை நாம் செய்தாகிவிட்டது. இனிமேல் நடக்கிறது நடக்கட்டும் என்று மன நிம்மதியோடு இருப்பதுதான் சரி.

இம்மாதிரி எண்ணத்துடன் மேலே ஏறிக் கொண்டிருந்த போது பின்னால் இன்னும் யாரோ ஒருவர் வருகிற மாதிரி தோன்றியது. ஒருவர் அல்ல; இருவர் வருகிறார்கள் என்று பேச்சிலிருந்து தெரிந்தது. ஆகா! வாஞ்சியும் தர்மராஜனும் போல் அல்லவா தோன்றுகிறது? நமக்கும் பின்னால் இவர்கள் வருகிறார்களே?

அவர்களைச் சந்திப்பதற்கு முன்னால் நான் அவசியம் செய்ய வேண்டிய காரியம் ஒன்று இருந்தது. நன்றாய் இருட்டட்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அதை முடிப்பதற்குள் இவர்கள் விரைந்து நடந்து நம்மைப் பிடித்துவிட்டால் ஆபத்தாய்ப் போய்விடும்.

எனவே, சட்டென்று மலைப் பாதையில் ஒரு முடுக்குத் திரும்பியதும் காட்டுக்குள் புகுந்து சிறிது தூரம் சென்று ஒரு பாறைக்குப் பின்னால் மறைந்து கொண்டேன். வேஷத்தைக் களைந்தேன், தாடியையும் சடையையும் ஒரு கைக்குட்டைக்குள் வைத்துச் சுற்றிக் கைக்குட்டையை முடிச்சுப் போட்டேன். அடையாளமாக ஒரு மரப் பொந்துக்குள் வைத்தேன். இதற்குள், பின்னால் வந்தவர்கள் முன்னால் போயிருக்க வேண்டும் என்று எண்ணிப் பாதைக்கு வந்தேன். முன்னால் கண்ணுக்கு எட்டிய தூரத்துக்கு ஆட்களைக் காணவில்லை. பின்னாலும் யாரும் வருவதாகத் தெரியவில்லை. சரி; முன்னால் ரொம்ப விரைந்து போய் இன்னொரு வளைவில், அவர்கள் திரும்பியிருக்க வேண்டும் இவ்வாறு எண்ணிக் கொண்டு நானும் விரைந்து நடந்தேன்.

மரப்பாலத்துக்கு அருகில் சென்றபோது பின்னால் ஆள் வரும் சத்தம் மறுபடி கேட்டது. நின்று அவர்கள் வரட்டும் என்று காத்திருந்தேன். அதே வாஞ்சி ஐயரும் தர்மராஜனுந்தான். "அடே! இவர்கள் வழியில் எப்படி மாயமாய் மறைந்தார்கள்?" என்று மனதில் ஏற்பட்ட, அதிசயத்தை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. வாஞ்சி வழக்கம் போல் கையில் ஒரு சிறு தோல் பெட்டி வைத்திருந்தார். அதோடு இப்போது ஒரு சின்னத் துணி மூட்டையும் காணப்பட்டது. தோல் பெட்டி நடக்கும் போது 'கிலுக்' 'கிலுக்' என்ற சத்தம் கேட்டது. துணி மூட்டை சத்தம் போடவில்லை. இரண்டுக்குள்ளும் என்ன இருக்கும்?

"என்ன வாஞ்சி! என்ன தர்மராஜா! இப்பத்தான் வருகிறீர்களா?" என்று கேட்டேன்.

"என்ன ராகவாச்சாரி! நீங்களும் இப்போதுதான் போகிறீர்களா, என்ன?"

மூன்று பேரும் கலகலவென்று குதூகலமாகப் பேசிக் கொண்டு மேலே ஏறினோம்.

அத்தியாயம் - 6

இரவு சுமார் பத்துமணி ஆயிற்று. செண்பகாதேவி அருவிக்குப் பக்கத்தில் உள்ள ஒரு தட்டையான பாறையில் இருபத்தைந்து ஆட்கள் வட்டமாய் உட்கார்ந்திருந்தார்கள். நடுவில் மரக்கட்டைகள் சடசடவென்று சத்தத்துடன் எரிந்து வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஜுன் மாதத்துக் கடுங் கோடையானாலும் அருவிக்குப் பக்கமான படியால் கொஞ்சம் குளிர் இருந்தது. நெருப்பு அதற்கு இதமாயிருந்தது.

முன் போலவே நீலகண்ட பிரம்மச்சாரி அக்கிரஸ்தானத்தை வகித்து ஆவேசமான பிரசங்கம் செய்தார்:

"தோழர்களே! ஸ்ரீ வேதவியாச முனிவர் பிரம்மவைவர்த்த புராணத்தில் சொல்லியிருக்கும் காலம் நெருங்கி விட்டது. நந்தன வருஷத்துக்கும் ஆனந்த வருஷத்துக்கும் மத்தியில் வெள்ளைக்காரனுடைய சாம்ராஜ்யம் அழிந்துபோகும் என்று வியாச பகவான் எழுதி வைத்திருக்கிறார். ஐயாயிரம் வருஷங்களுக்கு முன்பே ஞான திருஷ்டியால் உணர்ந்து சொல்லியிருக்கிறார். அந்த மகானுடைய வாக்குப் பொய்யாகுமா? ஒருநாளும் பொய்யாகாது. ஆகையால் இன்னும் மூன்று வருஷத்துக்குள் வெள்ளைக்காரன் பூண்டோ டு அழிந்து கூண்டோ டு யமலோகம் போகப் போகிறான்."

இவ்வாறு பிரம்மச்சாரி வெறி கொண்டவர் போல் பேசிக் கொண்டே போனார். வெள்ளைக்காரனுடைய ராஜ்யம் பாரத புண்ணிய பூமியில் ஏற்பட்டதிலிருந்து தேசம் அடைந்து வரும் கஷ்ட நஷ்டங்களையெல்லாம் சரமாரியாக எடுத்துச் சொன்னார்.

"நமது தர்மத்தை அழித்தார்கள்; நமது தொழில்களை அழித்தார்கள்; நமது தங்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு போனார்கள்; செல்வம் கொழித்த நாட்டில் பஞ்சத்தை உண்டு பண்ணினார்கள். தோழர்களே! இந்தமாதிரி அக்கிரமங்களைத் துஷ்ட நிக்ரஹசிஷ்ட பரிபாலனம் செய்யும் விஷ்ணு பகவான் பொறுப்பாரா? ஒரு நாளும் பொறுக்க மாட்டார். அக்கிரமத்தை அழித்துத் தர்மத்தை நிலை நாட்ட பாலகங்காதர திலகர் என்ன, அரவிந்தகோஷ் என்ன, லாலா லஜபதிராய் என்ன, விபின் சந்திரபாலர் என்ன, அசுவினி குமார தத்தர் என்ன இப்பேர்ப்பட்டவர்களை அனுப்பி வைத்தார். நமது செந்தமிழ் நாட்டுக்கும் வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவம், சுப்பிரமணிய பாரதி முதலிய வீரர்களை அனுப்பி வைத்தார். இந்த வீரர்களில் பலர் இப்போது சிறையில் இருக்கிறார்கள்; சிலர் தேசப் பிரஷ்டர்களாகயிருக்கிறார்கள். அதனால் என்ன? கிருஷ்ண பகவான் சிறைச் சாலையில் இல்லையா? இராமபிரான் வனவாசம் செய்யவில்லையா? ஒரு காலம் வரும். அப்போது சிறைக் கதவுகள் உடைத்துத் திறக்கப்படும், என்று சொல்லிக் கொண்டிருந்தேன், தோழர்களே! அந்தக் காலம் இப்போது வந்து விட்டது. நீங்கள் தயாரா?"

"தயார்! தயார்!" என்று எல்லோரும் கூறினார்கள். என் எதிரே இருந்த வாஞ்சி ஐயர் மட்டும், "இந்த மாதிரி நூறு தரம் கேட்டு நூறு தடவை பதில் சொல்லியாகி விட்டது!" என்று முணுமுணுத்தார்.

அருகிலிருந்த தர்மராஜய்யர் வாஞ்சி ஐயரை அடக்கிப் 'பேசாமலிரு' என்றார்.

"வாஞ்சி ஐயர் என்ன முணுமுணுக்கிறார்?" என்று சுப்பையாப் பிள்ளை கேட்டார்.

"பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே என்று பாரதியார் பாடியாகி விட்டது. இன்னமும் ஐயர் பட்டம் என்ன? 'வாஞ்சி' என்று சொன்னால் போதும்" என்றார் வந்தேமாதரம் சுப்பிரமணிய ஐயர்.

நீலகண்ட பிரம்மச்சாரி குறுக்கிட்டு, "வாஞ்சி காரியத்தில் இறங்க வேண்டும், பேசியது போதும் என்று துடியாயிருக்கிறார். அது நியாயந்தான். ஏற்கனவே சபதம் செய்தவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் உடனே சபதம் எடுத்துக் கொள்ளட்டும்!" என்றார்.

அன்றைக்கு அங்கே வந்திருந்த இருபத்தைந்து பேரில் இருபது பேர் ஏற்கனவே பிரதிக்ஞை எடுத்துக் கொண்டவர்கள் என்றும், ஐந்து பேர் புதிதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் ஏற்பட்டது. அந்த ஐவரில் நான் ஒருவன்.

மடத்துக் கடைச் சிதம்பரம்பிள்ளை பிரதிக்ஞா பத்திரத்தை எடுத்துப் படித்தார். அதன் வாசகம் கேட்கவே பயங்கரமாயிருந்தது. "பாரதத் தாயின் விடுதலைக்காக உயிரையும் கொடுப்பேன்; தலைவர் கட்டளையை நிறைவேற்றுவேன்; துரோகம் செய்ததாக ஏற்பட்டால் காளிக்கும் பலியாவேன்" என்பவை அதன் முக்கியமான அம்சங்கள். கை விரலைக் கத்தியால் வெட்டி அந்த இரத்தத்தில் பெரு விரலை நனைத்துப் பத்திரத்தின் அடியில் கைநாட்டுச் செய்ய வேணும். காளியின் படத்துக்கு முன்னால் குங்குமம் கலந்த செந்நீரைக் குடிக்க வேணும். இதுதான் பிரதிக்ஞை முறை என்று தெரிந்தது.

ஐந்து பேரும் இந்த முறைப்படியே பிரதிக்ஞை செய்தோம். பிறகு நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார், "தோழர்களே! இனிமேல் நான் தேதியைச் சொல்லலாம். அடுத்த அமாவாசை தினம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சபதம் செய்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வெள்ளைக்காரனைக் குறிப்பிட்டு வைத்துக் கொண்டு அவனைப் பின் தொடர்ந்து வரவேண்டும். அமாவாசையன்று ஆளைத் தீர்த்துவிட வேண்டும். முடிந்தால் ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தன்னையும் திருப்பிச் சுட்டுக் கொண்டு வீர சொர்க்கம் அடைய வேண்டும். இதுதான் திட்டம். புதுச்சேரியில் வேண்டிய ஆயுதங்கள் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆயுதம் இல்லாதவர்கள் புதுச்சேரிக்குப் போய் வாங்கிக் கொள்ளலாம். தோழர்களே, அதற்கு முன்னால் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது! அதையும் சொல்லி விடுகிறேன். எந்தக் காரியத்தையும் சரிவரச் செய்து முடிப்பதற்கு இடம் பொருள் ஏவல் மூன்றும் வேண்டும். நமக்கு இடம் ஏவல் இரண்டும் இருக்கிறது! பொருள்தான் இல்லை. 1857 ஆம் வருஷத்தில் நடந்த இந்திய சுதந்திர யுத்தம் ஏன் தோல்வி அடைந்தது தெரியுமா? பணம் இல்லாதபடியால்தான். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் அடுத்த அமாவாசைக்குள் தலைக்கு ஆயிரம் ரூபாயாவது சேர்த்துக் கொண்டு வந்து என்னிடம் கொடுக்க வேண்டும்."

இந்தச் சமயத்தில் வாஞ்சி எழுந்து நின்றார். தலைவரைப் பார்த்து, "ஐயா! பத்திரிகைகளிலே ஒரு செய்தி வந்திருக்கிறதே, அதைப் பற்றிய உண்மை என்ன?" என்று கேட்டார்.

"எந்தச் செய்தியை, எந்த உண்மையைக் கேட்கிறாய்?" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.

"அரவிந்த கோஷ் ஆசிரமத்தார் விடுத்திருக்கும் அறிக்கையைப் பற்றித்தான் கேட்கிறேன். அதில் உங்களுடைய பெயரைக் குறிப்பிட்டு, ஆசிரமத்துக்கும் உங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதாகச் சொல்லியிருக்கிறதே? அதன் உண்மை என்னவென்று தான் கேட்கிறேன்."

பிரம்மச்சாரி ஒரு பயங்கரச் சிரிப்புச் சிரித்தார். "வாஞ்சி! என்ன கேள்வி கேட்டாய்! உன் தலைவனையே சந்தேகிக்கலாமா? அரவிந்த கோஷ் ஆசிரமத்தார் அப்படி அறிக்கை விடாமல் வேறு என்ன செய்வார்கள்? என்னுடைய காரியங்களுக்கு அவர்கள் பொறுப்பாளிகள் என்று ஒப்புக் கொள்வார்களா? அப்படியானால் அவர்கள் புதுச்சேரியில் இருக்க முடியுமா? மேலும் வேலை செய்ய முடியுமா? மூடாத்மா! இதுகூட உன் புத்திக்கு எட்டவில்லையா? நாளைக்கு உன்னைப் போலீஸார் கைது செய்து விசாரித்தால், எங்கள் பெயர்களையெல்லாம் எழுதிக் கொடுத்து விடுவாயா?" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.

அதற்கு வாஞ்சி சாவதானமாக, "ஐயா! உங்கள் பெயர்களையெல்லாம் நான் எழுதிக் கொடுக்க வேண்டியதில்லை. ஏற்கனவே நம் எல்லோருடைய பெயர்களும் இரண்டொரு பெயரைத் தவிர தென்காசி போலீஸ் ஸ்டேஷனில் இருக்கின்றன. இன்று சாயங்காலம் தென்காசியில் என் மருமகன் சொன்னான். அவன் போலீஸ் ஸ்டேஷனில் குமாஸ்தா. நம் எல்லாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு ஒரு மொட்டை கடிதம் ஸ்டேஷனுக்கு வந்திருக்கிறதாம்! என்னை ஜாக்கிரதையாயிருக்கும்படி சொன்னான்!" என்றார்.

"அப்படியானால் இந்தக் கூட்டத்திலேதான் யாரோ ஒரு துரோகி இருக்க வேண்டும். அவன் யார்? காளி மாதாவின் மேல் ஆணை! உண்மையை ஒப்புக் கொண்டு விடுங்கள்!" என்று பிரம்மச்சாரி கர்ஜித்தார்.

"அதோ காளி மாதா!" என்று அச்சமயம் ஒரு கூச்சல் எழுந்தது. கூச்சல் போட்டவர் சுப்பையா பிள்ளை. அவர் நோக்கிய திக்கை எல்லாரும் நோக்கினோம். சற்று தூரத்தில் ஒரு பாறை முனையில் விரித்த கூந்தலுடன் பயங்கரத்தினால் அகன்ற விழிகளுடன் பெருமூச்சு விட்டுக் கொண்டு ஒரு பெண் உருவம் நின்றது. காளிமாதா என்று நினைக்கக் கூடியதாகத் தான் இருந்தது. ஆனாலும் அவள் காளி இல்லை. பொன்னியம்மா என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

முருகையனும் அதைத் தெரிந்து கொண்டு தலைவரைநோக்கி, "ஐயா, அந்தப் பெண் காளிமாதா அல்ல; என்னுடைய மனைவி பொன்னி. எதற்கு இங்கே வந்தாள் என்று இதோ போய் விசாரித்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டுப் போனான்.

அவன் போன உடனே வாஞ்சி, "நான் சொன்னதின் உண்மை இப்போது தெரிந்து விட்டதல்லவா? யார் யாருக்கோ இந்தக் கூட்டத்தின் விஷயம் தெரிந்து போயிருக்கிறது. அந்தப் பெண் இன்று மாலை ஒரு கடிதம் வைத்திருந்தாள். அது தென்காசி போலீஸுக்கு எழுதப்பட்ட கடிதம். இன்று இரவு இங்கே நடக்கும் கூட்டத்தைப் பற்றி அதில் எழுதியிருந்தது!" என்றார்.

"இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" என்று சங்கர கிருஷ்ணயர் கோபக் குரலில் முழங்கினார்.

"சாயங்காலம் இங்கே நான் வந்து கொண்டிருந்த போது அந்தப் பெண் வழிமறித்துக் கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்க்கச் சொன்னாள். கடிதத்தில் ஏதோ மர்மமான விஷயம் எழுதியிருக்கிறதென்றும், போலீஸுக்குக் கொண்டு போக வேண்டாமென்றும் அவளுடைய புருஷனிடம் கொடுக்கும்படியும் நான் சொல்லி விட்டு வந்தேன். அந்த கடிதத்தில் ரொம்ப அதிசயமான விஷயம் என்னவென்றால்..."

இதற்குள்ளே முருகையனும் பொன்னியம்மாளும் அங்கே வந்து விட்டார்கள். முருகையன் பொன்னியம்மாளிடம் இருந்த கடிதத்தை வாங்கித் தலைவரிடம் கொடுத்தான்.

தலைவர் படித்து விட்டு "ஆஹா! கடிதம் ரொம்ப விசித்திரமானதுதான்! இதை யார் அம்மா உன்னிடம் கொடுத்தது?" என்று கேட்டார். "தாடிச் சாமியார் ஒருவர் கொடுத்தார். ஐயா! இந்தச் செண்பகாதேவியில் அவரை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன்" என்றாள் பொன்னியம்மா.

"அப்படியா சேதி! துரோகி யாராயிருப்பான் என்று உங்களில் யாராவது ஊகித்துச் சொல்ல முடியுமா?" என்று தலைவர் கேட்டார்.

உடனே நான் எழுந்து நின்று, "நான் சொல்ல முடியும்!" என்றேன்.

"யார்? தெரிந்தால் பயப்படாமல் சொல்லு!"

"அதோ, அந்தப் படபடத்த மனுஷர்தான்! அவர் கையிலுள்ள மூட்டையை அவிழ்க்கச் சொல்லுங்கள்"

"சுப்பையாப்பிள்ளை! வாஞ்சியின் மூட்டையை எடுத்து அவிழ்த்துப் பார்!" என்றார் பிரம்மச்சாரி.

சுப்பையாப்பிள்ளை அப்படியே பாய்ந்து வாஞ்சியின் துணி மூட்டையை எடுத்து அவிழ்த்தார். அதற்குள்ளேயிருந்து தாடியும் சடையும் விழுந்தன.

"தோழர்களே! சந்தேகமில்லை; வாஞ்சிநாதன் துரோகி. இந்தக் கடிதத்தின் கையெழுத்தும் அவனுடைய கையெழுத்துத்தான்!" என்று நீலகண்ட பிரம்மச்சாரி கூறினார்.

எல்லாரும் வியப்போடும் பயங்கரத்தோடும் வாஞ்சி ஐயரைப் பார்த்தார்கள்.

இதெல்லாம் நடந்து கொண்டிருந்தபோது வாஞ்சி சும்மா இல்லை; ஒரு காரியம் செய்து கொண்டிருந்தார். அதாவது கையிலிருந்த தோல் பெட்டியைத் திறந்து கொண்டிருந்தார். எதற்கு என்று யாரும் ஊகிக்க முடியவில்லை. கையில் பளபளவென்று மின்னிய ரிவால்வருடன் அவர் குதித்து எழுந்து நின்றபோதுதான் தெரிந்தது.

ரிவால்வரை ஒருமுறை எங்கள் எல்லாரையும் பார்த்துச் சுழற்றி விட்டு வாஞ்சி கூறினார்: "தோழர்களே! இந்த ரிவால்வரில் ஆறு குண்டுகள் இருக்கின்றன. வேறு முக்கிய காரியத்துக்காக இதை வைத்திருக்கிறேன். சிதம்பரம் பிள்ளையைச் செக்கு இழுக்கச் செய்ததற்குப் பழி வாங்குவதற்காக வைத்திருக்கிறேன். கலெக்டர் ஆஷ் துரைக்குப் பரிசு அளிப்பதற்காக வைத்திருக்கிறேன். ஆனால் யாராவது அருகில் நெருங்கினீர்களோ, அப்புறம் என் பெயரில் பழி சொல்ல வேண்டாம். மறுபடியும் எச்சரிக்கை செய்கிறேன். துரோகி நான் அல்ல! யார் என்று ஒருவாறு ஊகித்திருக்கிறேன். ஆனாலும் காட்டிக் கொடுக்க விருப்பமில்லை. எல்லாரும் ஓடித் தப்பிப் பிழையுங்கள். கடவுள் அருளால் தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் மொட்டைக் கடிதத்தை நம்பவில்லை. யாரோ பைத்தியக்காரன் எழுதியது என்று சொல்லி சும்மா இருந்து விட்டார். ஆனால் இரண்டு நாளில் அப்படிச் சும்மா இருக்க மாட்டார்கள். உங்கள் எல்லோரையும் தேடிப் பிடிக்க முயலுவார்கள். ஆகையால் ஓடிப் போய் பிழையுங்கள். உயிரை இப்போது காப்பாற்றிக் கொண்டால் பிற்பாடு உங்கள் சபதத்தை நிறைவேற்றலாம். ஓ! வாய்ப் பேச்சில் வீர தலைவரே! எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியே ஊருக்குப் போய்க் கல்யாணம் செய்துகொண்டு சுகமாயிரும். புரட்சி இயக்கத்தை நடத்த உம்மால் முடியாது. உம்மால் பேச்சுப் புரட்சிதான் செய்ய முடியும். முருகையா! உன் சம்சாரத்தைக் கேள், சொல்வாள்!" இவ்விதம் எரிமலை நெருப்பைக் கக்குவது போல் கக்கி விட்டு வாஞ்சி ஐயர் அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடித்தார். அவருடன் தொடர்ந்து தர்மராஜய்யரும் ஓடினார்.

மற்றவர்கள் எல்லோரும் சிறிது நேரம் திகைத்து நின்று விட்டுப் பிறகு அவர்களும் நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். நானும் முருகையனும் பொன்னியம்மாவும் மட்டும் மீதமிருந்தோம். "ஐயா! பைத்தியங்கள் எல்லாரும் ஓடிப் போய் விட்டன. நீங்கள் வரப் போகிறீர்களா, அல்லது செண்பகாதேவியிலேயே இருந்து நிஷ்டை செய்யப் போகிறீர்களா?" என்று முருகையன் கேட்டான். "இல்லை; நானும் உங்களுடன் வருகிறேன்!" என்றான். மூன்று பேருமாகப் புறப்பட்டுச் சாவதானமாய்ப் பேசிக் கொண்டு சென்றோம். "பொன்னியம்மா! துரோகி யாராயிருக்கும்? ஏதோ உன்னைக் கேட்டால் தெரியும் என்று அந்த வாஞ்சி ஐயர் உளறி விட்டுப் போனாரே?" என்றான் முருகையன்.

"அதுதான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் பிடிபடவில்லை. ஏங்கறேன், அந்தத் தாடியும் சடையும் என்ன ஆச்சு?" என்று பொன்னி கேட்டபோது எனக்குக் கொஞ்சம் திடுக்கிட்டது.

"எது? என்னத்துக்கு அந்தச் சனியன்! எங்கே யானும் போவட்டும்" என்றான் முருகையன்.

குறுக்கு வழியாக அருவியைப் பிடித்துக் கொண்டு நாங்கள் இறங்கிச் சென்றோம். பெரிய அருவி விழும் மலை உச்சியை அடைந்தோம். "அப்பா! இங்கேயிருந்து உருண்டு கீழே விழுந்தால் எப்படியிருக்கும்!" என்றான் முருகையன். "இது என்ன கேள்வி?" என்றாள் பொன்னியம்மா.

மெதுவாகப் பாதி வழி இறங்கினோம், பொங்குமாங்கடலுக்கு அருகில் வந்து சேர்ந்தோம்.

வெண்ணிலாவில் பொங்குமாங்கடல் அலை மோதிக் கொண்டு அழகாகக் காட்சி அளித்தது. அருவியில் தண்ணீர் கொஞ்சம் என்றாலும் பொங்குமாங்கடல் பொங்கி வழிந்து கொண்டுதானிருந்தது.

ஐயோ! இது என்ன? ஒரு நொடியில் அலைமோதிய அந்தப் பொங்குமாங்கடலில் நான் விழுந்துவிட்டேன்! எப்படி விழுந்தேன் என்று தெரியவில்லை. கடலுக்கு அருகில் வந்து நின்ற போது முதுகில் யாரோ கை வைத்தது போலிருந்தது. ஒருவேளை, முருகையன் - சே! அவன் ஏன் நம்மைத் தள்ளப் போகிறான்! இதோ அவனும் அவன் சம்சாரமும் கரையிலே உட்கார்ந்து எவ்வளவு கவலையுடன் நம்மைக் கரை சேர்ப்பதற்காகக் காத்திருக்கிறார்கள்?

கரை அருகில் நான் வந்ததும் முருகையன் கை கொடுத்தான் - ஆனால் இதென்ன? பிடித்து இழுப்பதற்குப் பதிலாக நம்மை ஏன் திருப்பித் தள்ளுகிறான்?

புருஷனும் பெண்சாதியும் ஏன் சிரிக்கிறார்கள்? பௌர்ணமி நிலவினால் அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா, என்ன?

கடவுளே! அன்று இரவு அனுபவத்தை இன்றைக்கு நினைத்தாலும் எனக்குக் குடல் நடுங்குகிறது. வேண்டாம் ஆண்டவனே, வேண்டாம்! ஈரேழு பதினாலு ஜன்மங்களுக்கும் வேண்டாம்!

என் கைகளும் கால்களும் களைத்துத் தண்ணீரில் மூழ்கி இரண்டு வாய்த் தண்ணீரும் குடித்து இனிச் செத்தாற் போலத்தான் என்று எண்ணிய பிறகு என்னைக் கரையில் இழுத்துக் குற்றுயிரும் குலை உயிருமாகப் போட்டு விட்டு அந்தப் புண்ணியசாலிகள் போய்ச் சேர்ந்தார்கள். இந்த மட்டும் உயிர் கொடுத்தார்களே, அவர்கள் பிள்ளை குட்டிகள் தலைமுறை தலைமுறையாக நன்றாயிருக்க வேணும்.

அத்தியாயம் - 7

தும்பைப் பூப் போல் நரைத்த தலைமயிரையுடைய கிழவர் மேற்கண்டவாறு கதையைச் சொல்லி நிறுத்தினார். ஆனால் கதை பூர்த்தியாகி விட்டதாக எனக்குத் தோன்றவில்லை.

"அப்புறம் என்ன்?"

"அப்புறம் என்ன? எல்லாருக்கும் தெரிந்த விஷயந்தானே? மறுநாள் மணியாச்சி ஜங்ஷனில் கலெக்டர் ஆஷ் துரையை வாஞ்சி ஐயர் சுட்டுக் கொன்று விட்டுத் தானும் சுட்டுக் கொண்டு செத்தார். நீலகண்ட பிரம்மச்சாரி முதலிய பதினாலு ஆட்கள் மீது சதியாலோசனைக் குற்றம் சாட்டி வழக்கு நடத்தினார்கள் - தண்டனையும் கொடுத்தார்கள்!"

"அவர்களில் முருகையன் மட்டும் இல்லை போலிருக்கிறது."

"இல்லை; ஏனென்றால் அவன் பெயர் போலீஸுக்கு முதலில் போன ஜாபிதாவில் இல்லை. அவன் அதிர்ஷ்டக்காரன்; பொன்னியும் அதிர்ஷ்டக்காரி."

"ஆமாம்; முருகையனும் அவன் மனைவியும் உங்களை ஏன் அப்படிப் பொங்குமாங்கடலில் தள்ளி வதைத்தார்கள்! என்ன காரணம்?" என்று கேட்டேன்.

"அந்த முட்டாள்கள் நான் துரோகி என்றும், போலீஸுக்கு எழுதியது நான் தான் என்றும் எண்ணினார்கள். அதற்காக என்னை அப்படி தண்டித்தார்கள்."

"எப்பேர்ப்பட்ட முட்டாள்கள்? அதற்குத்தான் படிப்பு அவசியம் வேண்டும் என்று சொல்கிறது."

"ஆம்; ஆம்; இதற்குத்தான் படிப்பு வேண்டும் என்கிறது. இதில் ரொம்ப ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், படிப்பில்லாத அந்த முட்டாள்களுக்கு எப்படியோ உண்மை தெரிந்துவிட்டது."

"என்ன? அப்படியானால் தாங்கள்தான்..."

"இல்லாவிட்டால் ஏன் இத்தனை வருஷமாக இப்படி அமைதியின்றி அலைகிறேன்."

"கடிதங்கள் - வாஞ்சி ஐயரின் கையெழுத்து?"

"ஓ! கதை ஆசிரியரே! இன்னும் உமக்குப் புரியவில்லையா? நீர் என்ன கதை எழுதப் போகிறீர்? 'போர்ஜரி' கேஸில் ஏழு வருஷம் சிட்சைப் பெற்றவனாயிற்றே நான்! சிதம்பரம் பிள்ளை கையெழுத்தினையும் போர்ஜரி செய்தேன். வாஞ்சி ஐயர் கையெழுத்தையும் போர்ஜரி செய்தேன். எதற்காக என்று கேட்கிறீரா? நீர் எதற்காக கதை எழுதுகிறீர்! யாருக்கு எந்தக் கலை மேல் பிரியமோ அந்தக் கலையில் ஈடுபடுவது இயல்புதானே? அதோடு சர்க்காரிடமிருந்து ஒரு பெரிய சன்மானம் பெறலாம் என்ற ஆசையும் கொஞ்சம் இருந்தது..."

இப்படி அந்த மனிதர் சொல்லிக் கொண்டிருந்த போது, கலகலவென்று குழந்தைகள் சிரிக்கும் சத்தம் கேட்டது. செண்பகாதேவி கோயில் முடுக்கைத் தாண்டி ஐந்தாறு குழந்தைகள், ஒரு யௌவன புருஷன், ஓர் இளம் பெண், ஒரு கிழவன், கிழவி இவ்வளவு பேரும் வந்து கொண்டிருந்தார்கள்.

உடனே திரும்பிப் பார்த்தேன். எதிரேயிருந்த கிழவனைக் காணோம்; மாயமாய் மறைந்துவிட்டார். அவர் வைத்திருந்த தாடியும், சடையும் தண்ணீரில் கீழே போய்க் கொண்டிருந்தன.

வந்தவர்களில் கிழவி என்னிடம் வந்து, "ஏன், இங்கே இப்போது இன்னோர் ஆள் உட்கார்ந்திருந்தார் அல்லவா?" என்றாள்.

"இல்லையே, அம்மா! நான் மட்டுந்தான் உட்கார்ந்திருந்தேன்" என்று ஒரு கற்பனையைச் சொல்லி, "உன்பெயர் என்ன பாட்டியம்மா?" என்று கேட்டேன்.

"என் பெயர் பொன்னியம்மா!" என்றேன்.

"கிழவனாரின் பெயர்?"

"நான் சொல்லலாமா? சுப்பிரமணிய சுவாமியின் இன்னொரு பெயர்."

"முருகையனா?"

"ஆமாம்."

"குழந்தைகள் உங்கள் பேரன் பேத்திகளா?"

"ஆம் ஐயா! குழந்தைகள் நல்லாயிருக்க வேணுமென்று அம்மனை வேண்டிக்குங்க..."

"அப்படியே, தாயே!" என்றேன்.

அருவியில் அரைமணி நேரம் நின்று குளித்து விட்டுக் கீழே இறங்கத் தொடங்கினேன்.

பலாத்கார பயங்கரங்கள் எல்லாம் இல்லாமல் அஹிம்சா முறையில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மாவை வாழ்த்திக் கொண்டே இறங்கினேன். அதனால்தானே தமிழ்நாட்டுக் குழந்தைகள் இவ்வளவு சந்தோஷமாகச் சிரித்து விளையாடிக் கொம்மாளம் அடிக்க முடிகிறது.