poochiyin nanbargal

பூச்சியின் நண்பர்கள்

நண்பர்கள் கிடைப்பது ஒன்றும் அவ்வளவு எளிதான காரியம் இல்லை, அதுவும் முடி அடர்ந்த பயமுறுத்தக்கூடிய பூச்சிக்கு, சொல்லவா வேண்டும்? ஆனால், ஒரு நாள் பூச்சி தன் உறைவிடத்திலிருந்து வெளியேறி, தனக்கென ஒரு நண்பனைத் தேடிச் செல்கிறான். நீங்களும் சேர்ந்து தேட வருகிறீர்களா?

- Gireesh

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பூச்சிக்கு நூறு கால்கள் இருந்தன. உடல் முழுக்க முடி... கொஞ்ச நஞ்சம் இல்லை... நிறைய நிறைய முடி. யாராவது பூச்சியைத் தொட்டுவிட்டால் போதும், அவர்களுக்கு தாங்க முடியாத அளவுக்கு அரிப்பு எடுக்கத் தொடங்கிவிடும்.

அதனால், பெரும்பாலும் எல்லோரும் அவனிடமிருந்து விலகியே இருப்பார்கள். பிறர் தன்னைப் பார்த்து முகம் சுழிப்பதையும், விலகி ஓடுவதையும் பார்க்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று பூச்சி ஆசைப்பட்டான். ஆனால் ஆறு பெரிய கண்களை வைத்துக்கொண்டு மற்றவர்கள் இரக்கமில்லாமல் நடந்துகொள்வதை கவனிக்காமல் இருப்பது சிரமம்தான்.

பூச்சி எப்போதும் இருட்டான இடங்களிலோ, காய்ந்த இலைகளுக்கு அடியிலேயோ, ஈரமான மண்ணிலோ ஒளிந்துகொள்வான். அப்போதுதான் யாரும் அவனைப் பார்க்க முடியாது. அவனை அருவருப்பாகப் பார்த்து கூச்சலிடவும் முடியாது. ஒளிந்திருக்கும்போது சில நாட்களுக்கு பூச்சி பாதுகாப்பாக உணர்ந்தான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல பூச்சி சலிப்படையத் தொடங்கினான்.

பூச்சிக்கு ஒரு நட்பு தேவைப்பட்டது.

ஒருநாள், துணிச்சலாக இருக்கவேண்டுமென பூச்சி முடிவு செய்தான். ஒரு காய்ந்த இலையால் தன்னை சுத்தம் செய்துகொண்டு அருகில் வசிக்கும் எறும்புக் குடும்பத்தை அணுகினான்.

வரிசையாகச் சென்று கொண்டிருந்த சிவப்பு எறும்புகளிடம், தனது முடி அடர்ந்த பற்களைக் காட்டி “ஹலோ” என்றான். (அவன் உடலில் முடி மிகவும் அதிகம். பற்களில் கூட அவனுக்கு முடி இருந்தது.)

“வேலை, வேலை, வேலை” என்று முழக்கமிட்டபடி எறும்புகள் அவனைக் கடந்து சென்றன. நிறைய சர்க்கரையும், அழுக்கும் சுமந்துசென்ற அவற்றின் கொடுக்குகள் பெருமையாக காற்றில் உயர்ந்து நின்றன. எறும்புகளுக்கு நண்பர்களுடன் செலவிட நேரமே இல்லை.

எறும்புகளுக்கு பதிலாக நத்தையிடம் பேசலாம் என பூச்சி முடிவு செய்தான். நத்தை எதற்கும் அலட்டிக் கொள்ளாதவள் என்று பூச்சி நினைத்தான்.

“ஹலோ” என்று இனிமையாக நத்தைக்கு வணக்கம் வைத்தான்.

ஆனால் நத்தைகள் வரலாற்றிலேயே படுவேகமாக, தனது ஓட்டுக்குள் அந்த நத்தை ஊர்ந்து சென்றாள். “நான் ரொம்ப கூச்ச சுபாவி. பேசுவதற்கு பதிலாக ஒரு குறிப்பை விட்டுப் போக முடியுமா?” என ஓட்டுக்குள் இருந்து நத்தை கத்தினாள்.

குறிப்பு எழுத பூச்சியின் கையில் காகிதம் இல்லை. அதுவுமல்லாமல் அவன் பேசவே விரும்பினான். “நன்றாகப் பழகக்கூடிய யாரையாவது நான் சந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பூச்சி தனக்குத் தானே பேசிக்கொண்டான். ஆனால் யார்?

ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று ஒரு சத்தம் காற்றில் நிரம்பியது. தன் தலைக்கு மேலே சிறிய கருமேகத்தை பூச்சி பார்த்தான். “ஆஹா! கொசுக்களின் படை” கொசுக்கள் எப்பொழுதும் ரீங்காரமிட்டபடி கும்பலாக சுற்றிக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட இந்த ரவுடிக் குழுவுடன் நண்பனாக இருப்பது நல்ல வேடிக்கையாக இருக்கும்.

“ஹலோ” என்றான் பூச்சி.

“இரத்தம், இரத்தம், இரத்தம்” என கொசுக்கள் குழறிக் கொண்டிருந்தன. இரத்தத்தைத் தேடி, கும்பலாக தூரப் பறந்த அந்த கொசுக்கள் பூச்சியைக் கண்டுகொள்ளவே இல்லை.

“ஒருவேளை பரபரப்பு இல்லாத, கூச்சப்படாத, ரவுடியாக இல்லாத ஒரு நண்பனை நான் கண்டுபிடிக்க வேண்டுமோ” என பூச்சி யோசித்தான்.

அப்போதுதான் ஒரு இளஞ்சிவப்புநிறப் பூவில் தேனைக் குடித்துக்கொண்டிருந்த குண்டு தங்கக்குளவியை பூச்சி பார்த்தான்.தொண்டையைச் செறுமிக்கொண்டே “ஹ- ஹலோ” என்றான். அவள் தங்க நிறத்தில் அழகாக இருந்தாள். பூச்சிக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. “நாம நண்பர்களாக இருக்கலாமா?” பூச்சியின் வாயிலிருந்து வார்த்தைகள் வேகமாகக் கொட்டின.

குளவி சிரிக்கத் தொடங்கினாள். “நான் எதற்கு உன்னோடு நட்பாக இருக்க வேண்டும்?” என்று குளவித்தனமாகக் கேட்டாள். “எனக்கு ஒரு நண்பர்கள் பட்டாளமே இருக்கிறது” என்று சொல்லியபடி அவள் கூட்டுக்கு பறந்து சென்றாள்.

பூச்சிக்கு அழவேண்டும் போல இருந்தது. ஆனால் அவனது கண்ணீர் எந்த கண்ணில் இருந்து விழவேண்டும் என முடிவு செய்ய முடிந்ததே இல்லை. எனவே அவன் தலையை சோகமாக ஆட்டிவிட்டு இலைக்கு அடியில் ஒளிந்துகொண்டான். அங்கு குளிராகவும், ஈரமாகவும், லேசாக நாற்றமடித்துக் கொண்டும் இருந்தது. ஆனால் அது அப்படியே அவனுக்குப் பிடித்த மாதிரியே இருந்தது. “யாருக்கு வேண்டும் நண்பர்கள்?” என்று பூச்சி யோசித்தான்.

அன்று இரவு வீசிய பெரிய புயல் காற்றில் பூச்சியை மூடி இருந்த இலை காற்றில் பறந்து விட்டது. வீட்டை இழந்து பயத்தோடு இருந்த பூச்சி தன்னை ஒரு பந்துபோல் சுருட்டிக்கொண்டான்.

அடுத்தநாள் காலையில் பூச்சிக்கு கொஞ்சம் நன்றாக இருந்தது. தன் நூறு கால்களையும் ஒன்றன்பின் ஒன்றாக நீட்டினான். மண்ணில் இருந்த அவனது குழியில் இருந்து வெளியே வந்து   காலை உணவுக்காக பச்சைப்புல்லைப் பார்த்து நடந்தான்.

“அய்யேஏஏஏஏஏஏஏஏ”

பூச்சி நிமிர்ந்து பார்த்தபோது ஒரு சிறுமி அவனைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தாள். அவன் அவளது காலின் மேல் ஊர்ந்து சென்றிருந்தான்.. தனது அசிங்கமான தோற்றத்தால் பெரிதும் வெட்கப்பட்ட பூச்சி வட்டமாக இறுக்கி சுருண்டுகொண்டான். பார்க்கவும் மறுத்துவிட்டான். .

“உஷ்ஷ்!” என்று மற்றொரு குரல் கேட்டது. அது அமைதியாகவும் மென்மையாகவும் ஒலித்தது. “இது ஒரு அழகான சின்ன பூச்சி” என்றது அந்த மென்மையான குரல். பூச்சி தனது கண்களில் ஒன்றைத் திறந்து அது யார் எனப் பார்த்தான். என்னுடைய பெயரை யார் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? அட... நான் அழகானவன் என்று வேறு நினைக்கிறார்களே, யார் அது?

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ஒரு வயதான பெண்மணி, ஒரு சிறு குச்சியால் பூச்சியை எடுத்து இலையின் மேல் வைத்தார். “பூச்சிகள்தான் தோட்டக்காரர்களின் மிகச்சிறந்த நண்பன்” என்று அந்த வயதான பெண்மணி சிறுமியிடம் கூறினார். “இவர்கள் தான் மண்ணை உரமாக மாற்றி, தோட்டத்தில் இருப்பவற்றை நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருப்பவர்கள்” என்று சொன்ன வயதான பெண்மணி பூச்சி இருந்த இலையை எடுத்தார். பூச்சி இலைக்குள் இதமாக உணர்ந்தான். வயதான தோட்டகாரப் பெண்மணியை கனிவுடன் பார்த்தான்.

அந்தப் பெண்ணும் பூச்சியைப் பார்த்து புன்னகைத்தார். பின்னர்….

அவர் அவனைத் தூக்கி வீசினார்!

“ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ” என்று கத்திக்கொண்டே இருட்டான, சூரிய வெளிச்சமே இல்லாத குழியின் ஆழத்துக்குச் சென்றான் பூச்சி.

பொசக். ஈரமான, குளிர்ந்த, துர்நாற்றம் மிகுந்த ஒரு இடத்தில் அவன் மெத்தென விழுந்தான்.

அங்கிருந்த நாற்றம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது!காற்றை அவன் மறுபடியும் மோப்பம் பிடித்தான். ம்ம்ம்ம்ம்!ஆரஞ்சு தோல்கள், அழுகிய வாழைப்பழத் தோல்கள்

மென்மையாக நொறுங்கிய       முட்டை ஓடுகள்          மக்கிக் கொண்டிருந்த,            பூஞ்சை பிடித்த ரொட்டிகள்               கெட்டுப்போன சப்பாத்திகள்

பழைய, நாள்பட்ட கேக்குகள்கெட்டுப்போன, நுரை பிடித்த கூட்டுகள்

சாம்பல் நிறமாய் பூஞ்சை பிடித்த தயிர்

குப்பையாகிப்போன அழுகும்              முட்டைகோஸ்...

இதுவரை பூச்சி இருந்ததிலேயே அருமையான இடம் இதுதான்... பெரிய, ஈரமான, நாற்றமடிக்கும் எருக்குழி! பூச்சி அந்த அழகான, மக்கும் இருட்டுக்குள் ஊர்ந்து, அவனுடைய புது வீட்டில் இருந்த ஒவ்வொன்றையும் உணரத் தொடங்கினான். அவன் இங்கே நிச்சயம் மகிழ்ச்சியுடன் இருப்பான்! ஒரு விசயம்தான் அவனுக்கு யோசனையாக இருந்தது. இங்கேயும் இந்த இருட்டுக்குள் பேச யாரும் இல்லாமல் தனியாக இருக்க வேண்டியதுதானா? அப்போது...

“ஹலோ?”

இருட்டுக்குள் இருந்து ஒரு குரல் வந்தது.

“நாம்நண்பர்களாகஇருக்கலாமா?” என்றது இன்னொரு குரல். “யார் அங்கே? உங்கள் பெயர்கள் என்ன?” என்று பூச்சி கேட்டான்.

“பூஊஊஊஊச்சி!” என்றது ஒரு குரல்.

“புச்சி!” என்றது மற்றொரு குரல்.

“பியூச்சி!” இன்னுமொரு குரல் சொன்னது.

“பூஹ்ச்சி!” இன்னுமொரு குரல் சொன்னது.

“டாக்டர். பி.யூ.சி – எம்.ஏ, எம்பிபிஎஸ்” என்று இன்னொரு குரலும் வந்தது.

“பூக்குச்சி! பூக்கு என்று கூப்பிடலாம்” என்றது வேறொரு குரல்.

“லெ பூச்சி” என்றது இன்னுமொரு குரல்.

பூச்சியின் கண்கள் இருட்டுக்கு பழகியதும், வெவ்வேறு வண்ணங்களும் வடிவங்களும் கொண்ட பல நூறு பூச்சிகள் மண்ணை சேர்த்து, மிதித்து, உருட்டிக்கொண்டிருந்ததைளைப் பார்க்க முடிந்தது. பூச்சிக்கு மகிழ்ச்சியாக இருந்தது! அன்றிலிருந்து பூச்சி தன் நாட்களை நிறைய பூச்சி நண்பர்களுடன் கழித்து மகிழ்ந்திருந்தான்

பூச்சிக்கு இப்போது வயதாகி விட்டது. அவன் தற்போது தோட்டக்காரப் பெண்மணியின் வீட்டில், ஜன்னலுக்கு பக்கத்தில் உள்ள எலுமிச்சை மணம் வீசுகின்ற மண்ணிருக்கும் தொட்டியில் வசிக்கிறான்.

இப்போதும் அவர் அவனுக்கு ஒரு சிறந்த நண்பர்தான்.