மிலி விழித்தெழுந்ததும் நேராக மணலில் விழுந்தாள்.
மிலி ஆகாயத்தைப் பார்த்தாள். வழக்கம்போல் கதிரவன் ஒளி வீசியது. ஆனால் இன்று மிலிக்கு சூடு அதிகமாகவும், தன் உடல் இலேசாகவும் தோன்றியது. என்னவாக இருக்குமென்று யோசித்தாள்.
அய்யோ! மிலி தன்னுடைய மிகப் பொருத்தமான ஆரஞ்சுநிற ஓட்டைத் தொலைத்துவிட்டாள்.
மிலிக்கு மிகக்குறைவான நேரமே இருக்கிறது. வெயில் அதிகரிப்பதற்குள் அல்லது ஏதாவது ஒரு பறவை அவளை விழுங்கிவிடுவதற்குள் ஒரு புதிய ஓட்டினை அவள் உடனே கண்டுபிடித்தாக வேண்டும்!
மிலி ஒரு கருப்பு ஓட்டைக் கண்டுபிடித்து அதனுள் நுழைய முயன்றாள்.“போ வெளியே! உள்ளே ஆளிருக்கிறது. நான் தூங்கவேண்டும்!” என்று ஒரு குரல் கோபமாக சொன்னது.அந்த நத்தையைத் தொந்தரவு செய்யாமல் மிலி கடற்கரையில் நடக்கத் தொடங்கினாள்.
மிலி ஒரு நீல நிற ஓட்டைக் கண்டு அந்தப் பக்கம் ஓடினாள். ஆனால் ஓடில்லையே அது. மணலுக்குள்ளே புதையுண்டு கிடந்த ஒரு பிளாஸ்டிக் பாட்டிலின் மூடி அது.
“இது எனக்குப் பொருந்தாதே!” என்று புலம்பினாள் மிலி.
மிலி ஒரு மஞ்சள் நிற ஓட்டைக் கண்டு இந்தப் பக்கம் ஓடிவந்தாள். ஆனால் ஓடில்லையே அது. சாறு பிழியப்பட்ட எலுமிச்சைப்பழத் தோல் அது.
“ஓர் எலுமிச்சையில் எப்படி வசிப்பேன்?” என்று முனகினாள் மிலி.
மிலி ஒரு வெள்ளை நிற ஓட்டைக் கண்டு திரும்பி ஓடினாள். ஆனால் ஓடில்லையே அது. உள்ளிருந்த கருவெல்லாம் தின்னப்பட்ட முட்டை ஓடு அது.
“இந்த ஓடு நொறுங்கி விடுமே!” என்று குறைபட்டுக் கொண்டாள் மிலி.
மிலி ஒரு ஊதா நிற ஓட்டைக் கண்டு முன்னே சென்றாள். ஆனால் ஓடில்லையே அது. யாரோ தின்றுவிட்டு வீசி எறிந்த ஒரு மிட்டாயின் உறை அது.
“இதனைப் போய் ஒரு பளபளப்பான ஓடு என்று எண்ணினேன்!” என்று பெருமூச்சு விட்டாள் மிலி.
மிலி ஒரு இளஞ்சிவப்பு நிற ஓட்டைக் கண்டு நின்றாள். ஆனால் ஓடில்லையே அது. ஒரு பெருவிரல் அதற்குப் பின்னே ஒரு பாதம். கடற்கரையில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு மனிதரின் பெரிய கால்தான் அது! “அவருக்கு கிச்சுகிச்சு மூட்டிவிட்டேன் என்று நினைக்கிறேன்” எனச் சிரித்தாள் மிலி.
மிலி ஒரு பழுப்பு நிற ஓட்டைக் கண்டாள், முன்னே ஓடினாள். ஆனால் ஓடில்லையே அது. யாரோ நிலக்கடலையைத் தின்றுவிட்டுப் போட்டதில் இறைந்துகிடந்த கடலைத்தோல்கள் அவை.
“இவை காற்றடித்தால் பறந்துவிடுமே!” என்று முனகினாள் மிலி.
அதன்பிறகு, ஓர் உடைந்த விளக்கு, ஒரு தின்பண்ட உறை, துருப்பிடித்த ஒரு பொத்தான் என்று மிலி பலவற்றையும் கடற்கரையில் கண்டாள். ஆனால், அவை எதுவும் ஓடு இல்லை.
“ஏன் இந்தக் கடற்கரையில் ஓடுகளே இல்லை?” என்று அழுதாள் மிலி.
அப்போது, தன் தோழி டோயா ஒரு புதிய ஓட்டிற்குள் புகுந்துகொண்டிருந்ததைப் பார்த்தாள் மிலி. “எனக்கு இந்தப் புதிய ஓடு மிகவும் பொருத்தமாக இருக்கிறது” என்று சொல்லிவிட்டு டோயா, தன்னுடைய பழைய ஓட்டினை அங்கேயே விட்டுச்சென்றாள்.
டோயா கழற்றிப்போட்ட அந்தப் பழைய பச்சை நிற ஓட்டை அணிந்து பார்த்தாள் மிலி. அது அவளுக்குக் கச்சிதமாகப் பொருந்தியது. அவளுடைய புதிய ஓட்டை இறுகப் பற்றியவாறு மிலி மகிழ்ச்சியாக நடந்து சென்றாள்.
மிலி ஒரு துறவி நண்டு. மற்ற நண்டுகளைப்போலத் துறவி நண்டுகளுக்கு கடினமான ஓடு கிடையாது. அதனால், அவை நத்தைகள் விட்டுச்செல்லும் ஓடுகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றைத் தங்கள் வீடாக ஆக்கிக்கொள்ளும். அவை வளர வளர, அந்த ஓடுகள் இறுக்கமாகும்போது, பொருத்தமான புதிய ஓடுகளைத் தேடி அவை அலைய வேண்டியிருக்கும்! கடற்கரை முழுவதும் நிறைந்திருக்கும் குப்பைக்கூளங்களால், பாவம் மிலிக்குப் புதிய ஓடு கிடைக்கவில்லை. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் மற்றும் உலோகக் குப்பைகள்: ஸ்ட்ராக்கள், பாட்டில்கள், பைகள், மீன்பிடி வலைகள், தகர டின்கள். இவை போன்ற பலவும் நம் ஆறுகளுக்கும் கடல்களுக்குமே சென்று சேர்கின்றன. இவை கடல்வாழ் உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பவை. ஆகவே, நாம் நம்முடைய கடல்களைச் சுத்தமாக வைத்துக்கொண்டு மிலிக்கும் அவள் நண்பர்களுக்கும் உதவலாம்.