priya yenna saappittaal

பிரியா என்ன சாப்பிட்டாள்?

பிரியா என்ற பசுவுக்கு உடம்பு சரியில்லை. அவளுக்கு வயிறு வலிக்கிறது. அவளுக்கு ஏன் உடம்பு சரியில்லாமல் போனது? அவளுடைய நண்பர்கள் அவளுக்கு எவ்வாறு உதவி செய்தனர் என்பதைத் தெரிந்துகொள்ள இப்புத்தகத்தைப் படியுங்கள்!

- Priya Muthukumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பிரியா ஒரு அழகான, வாளிப்பான, மினுமினுப்பான பழுப்பு நிறப் பசு. குழந்தைகள் அனைவரும் அவளை மிகவும் நேசித்தனர்.

அவள் நிறைய பால் கொடுப்பாள். குழந்தைகள் தினமும் அவள் தரும் பாலை அருந்துவார்கள்.

ஒருநாள் காலையில், பிரியா எழுந்திருக்கவில்லை.

“எழுந்திரு பிரியா! எங்களுக்கு பால் வேண்டும்!” என்றனர் குழந்தைகள்.

“என்னால் முடியவில்லை. வயிறு வலிக்கிறது!” என்று முனகினாள் பிரியா.

“கவலைப்படாதே பிரியா! நாங்கள் கால்நடை மருத்துவரை அழைக்கிறோம்” என்றனர் அவர்கள்.

மருத்துவர் பிரியாவை சோதித்தார். அவர், நடமாடும் எக்ஸ்-ரே இயந்திரம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார். அதைவைத்து பிரியாவின் வயிற்றை எக்ஸ்-ரே எடுத்தார்.

அந்த எக்ஸ்-ரேவைப் பார்த்தவாறே தலையை ஆட்டினார்.

“பிரியா, நீ நிறைய பிளாஸ்டிக் பொருள்களை சாப்பிட்டுள்ளாய்! உன் வயிற்று வலியைப் போக்க நான் ஒரு ஊசி போடுகிறேன். ஒருநாள் முழுவதும் நீ ஓய்வெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்” என்றார் அவர்.

மருத்துவர் சென்ற பின்னர், குழந்தைகள் அனைவரும் பிரியாவைச் சுற்றி அமர்ந்தனர்.

“பிளாஸ்டிக்கா? நீ ஏன் பிளாஸ்டிக்கைத் தின்கிறாய்? மாடுகள் பச்சைப் புல்லைத்தானே தின்னும்?” என்றனர்.

“பச்சைப் புல்லா? பூங்காக்களைத் தவிர வேறெங்கும் பச்சைப் புல் இல்லை. ஆனால் பூங்காக்களுக்கு வெளியே ‘மாடுகளுக்கு அனுமதியில்லை’ என்ற பலகை அல்லவா தொங்குகிறது.”

“குப்பைக் கிடங்கிலிருந்துதான் எங்களுக்கு உணவு கிடைக்கிறது. குப்பைக் கிடங்கில் என்ன எல்லாம் இருக்கிறது தெரியுமா? மிட்டாய்த் தாள், பிஸ்கெட் தாள், வறுவல் பாக்கெட்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள்! மேலும் அங்கு சுவையான காய்கறி மற்றும் பழங்களின் தோல்களும் இருக்கின்றன. அதனால் எங்களுடைய உணவு, பிளாஸ்டிக் மற்றும் வேறு கழிவுகள் கலந்ததாகவே உள்ளது” என்றாள் பிரியா.

“உங்களைப் போல் எங்களுக்கு விரல்கள் இல்லாததால் பிளாஸ்டிக் கழிவுகளை உணவிலிருந்து எங்களால் பிரித்தெடுக்க முடியாது. அதனால் நாங்கள் பிளாஸ்டிக்கை, காய்கறித் தோல்களுடனும் மற்றும் பல சுவையான உணவு வகைகளான கேரட் துண்டுகளுடனும் மக்காச்சோளக் கதிரின் கெட்டிக் காம்புகளுடனும் சாப்பிட வேண்டியுள்ளது. இப்படித்தான் பிளாஸ்டிக் எங்கள் வயிற்றுக்குள் செல்கிறது” என்றாள் பிரியா.

குழந்தைகள் வருத்தப்பட்டனர். “நாம் ஏதாவது செய்ய வேண்டும்” என்றான் வயதில் மூத்தவனான ரவி.

“நம்மால் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டாள் டீனா.

சிட்டுவுக்கு நிறைய விஷயங்கள் தெரியும். அவள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இயற்கை சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்ப்பாள்.

“சில நகரங்களில், மக்கள் தங்களுடைய குப்பைகளை வெவ்வேறு நிற குப்பைத் தொட்டிகளில் போடுகின்றனர். உணவுக் கழிவுகளைப் பச்சை நிறக் குப்பைத் தொட்டிகளிலும், பிளாஸ்டிக் கழிவுகளை சிவப்பு நிறத் தொட்டிகளிலும், மற்ற கழிவுகளை நீல நிறத் தொட்டிகளிலும் போடுகின்றனர்” என்றாள் சிட்டு.

நித்தேஷுக்கு செயலில் இறங்குவது மிகவும் பிடிக்கும்.

“நம் தெருவில் வசிப்பவர்களையும் அப்படியே செய்யச் சொல்லலாம். அப்போது பிரியாவும் அவளது நண்பர்களும் பிளாஸ்டிக்கை சாப்பிட வேண்டியிருக்காது” என்றான்.

“அருமையான யோசனை! இன்றே தொடங்கலாம்!” என்று குழந்தைகள் ஒருசேரக் கூவினர்.

விரைவில் குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும் கழிவுகளைப் பிரிப்பது பற்றி சொல்லிக் கொடுத்தனர். எல்லா வீடுகளிலும் மூன்று வெவ்வேறு குப்பைத் தொட்டிகளை வைத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

கழிவுகளைப் பிரிக்கும் விதத்தை நினைவில் வைத்துக் கொள்ள வசதியாக சுவரொட்டிகளை தயார் செய்தனர்: பிளாஸ்டிக் கழிவுகளுக்கு சிவப்பு நிறத் தொட்டி. பேப்பர் கழிவுகளுக்கு நீல நிறத் தொட்டி. உணவுக் கழிவுகளுக்கு பச்சை நிறத் தொட்டி.

இப்போது குப்பைக் கிடங்கு சுத்தமாக இருக்கிறது. இனிமேல் பிரியாவுக்கு வயிற்று வலியே வராது! அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். முக்கியமாக, நம்முடைய அருமையான பூமி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது!

குறைத்தல், மறு சுழற்சி, மறு பயன்பாடு

இங்கே பாருங்கள்! மருத்துவர் பிளாஸ்டிக் பையை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் போடுகிறார். இது சரியா? தவறா?

ஆசிரியர் காகிதக் கழிவுகளை பச்சை நிறக் குப்பைத் தொட்டியில் போடுகிறார். காகிதங்களை எந்தக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்?

பிரியாவுக்கு உதவ, இந்த மூன்றையும் கடைப்பிடியுங்கள். குறைத்தல், மறு சுழற்சி, மறு பயன்பாடு