puchku thediya paadal

புச்கு தேடிய பாடல்

புச்கு ஒரு புதிய சாகசத்துக்கு கிளம்புகிறாள். போல்ட்டு, புச்கு, டோட்லா ஆகிய மூவர் அடங்கிய ”அதிபுத்திசாலி திட்டங்கள் துறை” (அ.தி.து)2, பறவைக் குஞ்சு ஒன்றுக்கான பாடலைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் தெரிவு செய்ய நிறைய பாடல்கள் இருக்கின்றன.

- Jeny Dolly

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

புச்குவின் வகுப்பறை ஜன்னலில் இருந்து அந்த நாவல் மரத்தைப் பார்க்க முடியும். அது, கட்டிப்பிடித்துக்கொள்ள கூப்பிடுவது போல கிளைகளைப் பரப்பி நிற்கிறது. வெயில் தகிக்கும் நாட்கள் கூட அதன் நிழலில் சில்லென்றாகிவிடும்.

ஆனால், அது ஒரு சேட்டைக்கார மரம். அது போடும் பழங்கள் புச்குவின் சீருடையில் ஊதாக்கறைகளை ஏற்படுத்திவிடும். அதன் இலைகளுக்கிடையில் ஒளிந்திருக்கும் பறவைகள் சத்தமின்றி எச்சமிடும். அவை பச்!

என்று அவள் தலையில் விழும்.

தினமும், சிற்றுண்டி நேரத்தில், புச்கு நாவல் மரத்தை நோக்கி ஓடுவாள்.சில நேரம் டோட்லா அவளைவிட வேகமாக ஓடி மரத்தை முதலில் அடைவான். போல்ட்டு எப்பவுமே கடைசிதான். ஏதாவது ஒரு வண்ணத்துப்பூச்சியையோ, புழுவையோ, பூவையோ பார்த்துக்கொண்டு பந்தயத்தை மறந்து விடுவான்.

இன்றைக்கு, டோட்லாவை விட மூன்று நொடிகள் முன்னரே மரத்தை அடைந்தாள் புச்கு. ஆனால் அவர்களுக்கு முன்னமே வேறு யாரோ அம்மரத்தின் கீழே இருந்தார்கள்.

யாரது?

அது என்ன! கிளைகள், சுள்ளிகள், இலைகளாலான கிண்ணமா?

பாரு! அந்த கிண்ணத்தில் யாரோ இருக்காங்க. ரெண்டு குட்டி கண்ணு, ஒரு குட்டி அலகு.

“ஹலோ” என்றாள் புச்கு.

“அது குட்டி ப்டெரோடாக்டிலாக இருக்குமா?” என்று டோட்லா புச்குவை கேட்டான். அவனுக்கு அந்த ஆங்கில வார்த்தையை உச்சரிக்கப் பிடிக்கும். அதில் இருக்கும் ‘ப்’ ஓசையற்றது, ஒரு இரகசியத்தைப் போல.

“ஒரு வேளை குட்டி டிராகனா இருக்கும்” என்றாள் புச்கு.

“அது ஒரு பறவைக் குஞ்சு, மக்குகளா!” என்று கடைசியாக மரத்தை அடைந்த போல்ட்டு கூறினான்.

“ஆனால் பறவைகள் சத்தம் போடுமே! புறாக்கள் குனுகும், காகம் கரையும், கிளி பேசும், மயில் அகவும், பருந்துகள் கிறீச்சிடும். இது பறவைன்னா ஏன் அமைதியா இருக்கு?”

போல்ட்டு தலையைச் சொரிந்தான்.

“நாம எப்படிப் பேசுறோம்? வார்த்தைகளால்தானே?” போல்ட்டு கேட்டான்.

புச்குவும், டோல்டாவும் தலையாட்டினார்கள்.

“அந்த மாதிரி, பறவைகள் பாட்டைப் பேச்சு போல பயன்படுத்தும்” என்றான் போல்ட்டு. “அப்படித்தான் அவை பேசிக்கும். ரொம்ப குட்டியா இருக்கறதால இந்தக் குஞ்சுக்கு தன் பாட்டு தெரியாதோ?” டோட்லாவின் முகத்தில் கவலை தெரிந்தது.

“ஆனா பாட்டு இல்லாம, இந்தக் குட்டியால யார்கிட்டயும் பேச முடியாது. இது ரொம்ப தனியா இருக்கும்.”

ஹலோ, எப்டியிருக்க?

ஹாய்!

டொக்டொக்!

யாரது?

ஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா

புச்கு அதையே, (அ.தி.து)2 போல்ட்டு, புச்கு, டோட்லா ஆகிய மூவர் அடங்கிய “அதிபுத்திசாலி திட்டங்கள் துறை”க்கான திட்டமாக மாற்றுகிறாள். “போல்ட்டு, டோட்லா! நாம இந்த பறவைக்கான பாட்டை தேடிப் போறோம்.”

போல்ட்டு கொஞ்சம் பஞ்சை சேகரித்தான். டோட்லா ஒரு அட்டைப் பெட்டியைக் கொண்டு வந்தான்.

புச்கு எங்கெல்லாம் பாட்டைத் தேடிப் போகலாம் என்ற வரைபடத்தை வரைந்தாள்.

உதவிக்கு உடனே கூப்பிடுங்கள்!

அதிபுத்திசாலி. திட்டங்கள். துறை.

அ. தி. து.

போல்ட்டு

புச்கு

டோட்லா

அட்டைப்பெட்டி

பறவைக் குஞ்சு

வரைபடம்

பஞ்சு

முதலில், குட்டிப் பறவையும், (அ.தி.து)2 குழுவினரும், மெலடி ஆண்ட்டியின் இசை வகுப்புக்குச் சென்றனர். புச்கு அதிகவனமாக குட்டிப் பறவையை வெளியே எடுத்தாள்.

“ஃபூ ஃபூ ஃபூபூபூ!” இம்ரான் புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருந்தான்.

“இது உன் பாட்டா?” என்று புச்கு பறவையிடம் கேட்டாள். அந்தக் குட்டிப் பறவை அமைதியாக இருந்தது.

அவர்கள் குட்டிப் பறவையை வெவ்வேறு அறைகளுக்கு கொண்டு சென்றனர்.

க்வீவீவீவீவீ க்வீவீவீவீவீ!

ப்ளிங்க் ட்வாங்க் ப்ளிங்க்

ம்ம்ம்ப்ப்ர்ர்ரூரூம்ம்ம்ம்

டப டப டப

டபம்

வாய்ய்ய்ய்ய்ன்ன்ன்ன்

படிங்க் படிங்க்க்க்க்

டர ரம் பம் ரம் பம்

“இது உன் பாட்டா?” புச்கு கேட்டாள். ஆனால்…

…குட்டிப் பறவை அமைதியாக இருந்தது. அது புச்குவை பார்த்தது.

போல்ட்டு தலையைச் சொரிந்து கொண்டான். டோட்லா சோகமாக இருந்தான்.

“கவலைப்படாத. உன் பாட்டைக் கண்டுபிடிப்போம்” என்று புச்கு குட்டிப் பறவையிடம் கூறினாள்.

க்வொயிங்க் க்வொயிங்க்!

டோட்லா தன்னுடைய ரப்பர் பாண்ட் கிட்டாரில் ஒரு புது இசையை வாசித்தான்.

ஹிக்

ஹிக்

போல்ட்டுவுக்கு விக்கல் எடுத்தது.

“இது உன் பாட்டா?” என்று புச்கு கேட்டாள்.

குட்டிப் பறவை அமைதியாகவே இருந்தது.

போலீஸ் அங்கிளோட

ஊய்ய்ய்ய்-டூய்ய்ய்ய் சத்தமிடும் விசிலா இருக்குமோ?

கடக்

கடக்

கடக்

கடக் கடகடகடன்னு

சத்தம் போடுற தையல் மிஷின் சத்தமா இருக்குமோ?

கீச்சு கீச்சென

சத்தமிடும் ஷூவில் இருக்குமோ?

வீஈஈல்ல்ல்ல்ல்

என்று கத்தி ஊர கூட்டுறகுக்கருக்குள் இருக்குமோ?

இல்லை விதவிதமான குரல்கள்ல பாடும்ரேடியோவில் இருக்குமோ?

புச்கு தன் அம்மாவின் கைபேசியை வாங்கி அதில் உள்ள அழைப்பு ஓசைகளை ஒவ்வொன்றாக போட்டுக் காட்டினாள்.

“இது உன் பாட்டா?” புச்கு குட்டிப் பறவையைக் கேட்டாள்.

டோட்லாவின் வயிறு சத்தம் போட்டது. (அவர்கள் சிற்றுண்டி சாப்பிட மறந்துவிட்டனர்!)

“இது உன் பாட்டா?” புச்கு கேட்டாள்.

ஆனால் குட்டிப் பறவை அமைதியாக இருந்தது.

கர்ர்ர்ர்முர்ர்ர்ர்ர்

ஒருவேளை புச்குவின் தெருவில் இருக்கும் வீடுகளின் அழைப்பு மணிகளில் ஒன்றாக இருக்குமோ! புச்கு, போல்ட்டு, டோட்லா ஆளுக்கொரு வீட்டின் மணியை அழுத்தினார்கள்.

ஆனால்...

பட்-டா-டாங்க்!

டிங்-டாங்!

ட்ர்ர்ர்ர்ர்ர்!

...குட்டிப் பறவை அமைதியாகவே இருந்தது. (புச்குவின் அண்டை வீட்டார் சிலர் கூச்சல் போட்ட போதும்.)

சிற்றுண்டி இடைவேளையின் முடிவில், (அ.தி.து)2 குழுவினரிடம் வேறு எந்த புத்திசாலித்தனமான யோசனைகளும் இல்லை.

“இப்ப என்ன செய்ய?” போல்ட்டு கேட்டான்.

“நாம இத வனஉயிர் அக்கா கிட்ட கூட்டிட்டு போவோம்” என்றாள் புச்கு. மூவரும் சோகமாக ஆசிரியர்களின் அறை நோக்கி சென்றபோது, உயிரியல் ஆசிரியர் வழக்கமாக அமரும் இடத்தில் இருந்தார்.

“புச்கு, டோட்லா, போல்ட்டு, என்ன ஆச்சு? ஏன் சோகமா இருக்கீங்க?” என்று வனஉயிர் அக்கா கேட்டார்.

“நாங்க ஒரு பறவைக் குஞ்சைக் கண்டுபிடித்தோம். ஆனா அந்த பறவைக் குஞ்சோட பாட்டைக் கண்டுபிடிக்க முடியல” என்று புச்கு சோகமாக சொன்னாள்.

“எல்லா இடத்துலயும் தேடிட்டோம்!” டோட்லா இன்னும் சோகமான குரலில் கூறினான்.

போல்ட்டு அதைவிட சோகமாக விசும்பினான்.

“பரவாயில்லை. எல்லா நேரமும் சரியான பதில் கிடைக்காது.” வனஉயிர் அக்கா போல்ட்டுவுக்கு கைக்குட்டை ஒன்றைக் கொடுத்தார்.

“ஆனா குட்டிப் பறவைக்கு இன்னும் ஒரு பாட்டு இல்லை” என்று அழுதாள் புச்கு.

“ஆனா அதுக்கு நீங்க எல்லாரும் இருக்கீங்களே? மத்த பறவைங்க மாதிரி பாட்டு இல்லைன்றதால நீங்க அதை விட்டுட்டுப் போய்ட மாட்டீங்களே?” வனஉயிர் அக்கா கேட்டார்.

புச்கு, போல்ட்டு, டோல்டா மூவரும் இல்லை என்று தலையாட்டினர்.

“நீங்க பொறுமையா இருக்கணும்” வனஉயிர் அக்கா புச்குவிடம் புன்னகையோடு கூறினார்.

புச்கு குட்டிப் பறவையை கவனமாக தூக்கியபடி, “குட்டிப் பறவையே! காதை நல்லா திறந்து வெச்சுக்கோ. உனக்கு எந்த சத்தம் பிடிக்குதோ, அத உன் பாட்டா ஆக்கிக்கோ. நானும் உன்னோட சேர்ந்து அத பாடுறேன். சரியா?” என்றாள்.

குட்டிப் பறவை தன் தலையை ஆட்டியபடி சொன்னது,

“ச்ச்ச்ச்சீப்!”