மீராவின் பேருந்து நிறுத்தத்தில் இன்று ஒரு புதுப்பெண் வந்திருக்கிறாள். எல்லோரும் அவளை உற்றுப் பார்க்கிறார்கள். யாரும் அவளுடன் பேசவில்லை.
பள்ளிப் பேருந்தில் அனைவரும் தங்கள் நண்பர்களுக்கருகில் உட்காருகிறார்கள். புதுப்பெண் தனியாக உட்காருகிறாள்.
பள்ளியில், மீராவின் ஆசிரியையான சல்மா மிஸ் ஒரு வியப்பான செய்தியை அறிவிக்கிறார். "இதோ பாருங்கள், நம் வகுப்பறைக்கு ஒரு புதிய நண்பர் வந்துள்ளார்!" அந்தப் புதுப்பெண் தான்!
அனைவரும் அந்தப் புதுப்பெண்ணை உற்றுப் பார்க்கிறார்கள். "அவள் வித்தியாசமாக இருக்கிறாள்!" என்று அவர்கள் கூறுகிறார்கள். “நீங்கள் எல்லோரும் ஜென்னியிடம் அன்பாகவும் உதவியாகவும் இருக்க வேண்டும்,” என்று சல்மா மிஸ் கூறுகிறார். ஜென்னி… ஓ, அது தான் அந்தப் புதுப்பெண்ணின் பெயர்!
மீராவிற்கு தானும் ஒரு முறை புதுப்பெண்ணாக இருந்தது நினைவுக்கு வருகிறது. யாரும் அவளிடம் பேசவில்லை. யாரும் அவளுடன் விளையாடவில்லை! மீரா ஜென்னியைப் பார்த்துப் புன்னகைக்கிறாள்.
அவளும் புன்னகைக்கிறாள். ஓவிய நேரத்தில், மீரா தன் வண்ணக்கட்டிகளை அவளுடன் பகிர்ந்து கொள்கிறாள். இடைவேளையின் போது, இருவரும் தங்களது மதிய உணவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பேருந்தில் ஒன்றாக அமர்ந்து வீடு செல்கிறார்கள். மாலையில் ஒன்றாக விளையாடுகிறார்கள். அவர்கள் இருவரும் சிறந்த நண்பர்கள்!
பள்ளியில் சில குழந்தைகள் ஜென்னியைக் கேலி செய்கிறார்கள். 'வெளிநாட்டுப் பெண்' என்பது போல ஏளனமான பெயர்களைச் சொல்லி அழைக்கிறார்கள். "அவள் இந்தியப்பெண் தான்!" என்று மீரா கோபமாகச் சொல்கிறாள்.
ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் சிரிக்கிறார்கள். ஜென்னி வருத்தமடைகிறாள்.
"மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு இருப்பது நல்லதுதான்!" என்று மீரா அவளிடம் சொல்கிறாள். தன் அம்மா அடிக்கடி அவளது சகோதரருக்குச் சொல்லக் கேட்டிருக்கிறாள் மீரா. அவளது அண்ணன் கண்ணாடி போட்டிருப்பார். அவரைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்யும் போது அவர்களது அம்மா இப்படித்தான் ஆறுதல் அளிப்பார்.
ஒரு நாள், சல்மா மிஸ் அவர்களுக்கு ஒரு புதிய திட்டப்பணியைக் கொடுக்கிறார். அனைவரும் அவர்களது பகுதியைப் பற்றி பேச வேண்டும். அதைக் கேட்டு எல்லாரும் உற்சாகப் படுகிறார்கள். ஜென்னியைத் தவிர. "நான் என்ன செய்ய வேண்டும், மீரா?" என்று அவள் கேட்கிறாள். "கவலைப்படாதே ஜென்னி! உன் குடும்பம், திருவிழாக்கள், அல்லது வீட்டைப் பற்றிப் பேசு! " என்று அவளிடம் மீரா சொல்கிறாள்.
"ஆனால் அவர்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்களே, மீரா!" என்று வருத்தமாகக் கூறுகிறாள். "நீ பேசும் போது, உன்னுடன் அன்பாக இருப்பவர்களைப் பார்த்துப் பேசு!" என்று மீரா ஆதரவாகக் கூறுகிறாள்.
தன் தாயின் வார்த்தைகளை நினைவில் கொண்டு நம்பிக்கை தரும் விதத்தில் ஜென்னியிடம் அவள் பேசுகிறாள்.
திட்டப்பணியைப் பகிர்ந்து கொள்ளும் நாள் வந்தது. வகுப்பறையில் உற்சாகம் பொங்குகிறது. சல்மா மிஸ் அவர்களது வண்ணமயமான உடைகளைப் புகைப்படம் எடுக்கிறார். ஆனால், ஜென்னியைக் காணவில்லை.
அவள் பள்ளிப் பேருந்திலும் வரவில்லை. இந்த முக்கியமான நாளன்று பள்ளிக்கு வராமல் இருக்கமாட்டாள் என்று மீரா நம்புகிறாள். விரைவில் தொடக்க நேரம் வந்துவிட்டது.
குஜராத்தின் பாரம்பரிய ஆடையான அன்காரகோ-சோர்னோவை அணிந்திருக்கிறான் பார்த். அவனது இரட்டைச் சகோதரி, பூஜா, சனியா-சோளி அணிந்திருக்கிறாள். அவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து கர்பா நடனம் ஆடுகிறார்கள்.
வீணா தனது தாய்மொழியான தமிழில் ஓர் அழகான தேசபக்திப் பாடலைப் பாடுகிறாள்.
இது போல மற்ற குழந்தைகளும் ஒவ்வொருவராக வந்து இந்தியாவின் மரபுகள், வழக்கங்கள், கொண்டாட்டங்கள், உணவுகள் மற்றும் பிரபல மக்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.
மீராவின் முறை வரும் போது மிகப் பெருமையுடன் அவள் பிறந்த மாநிலமான ராஜஸ்தானைப் பற்றி ஒரு படக்காட்சியைக் (‘ஸ்லைடு ஷோ’) காட்டுகிறாள். அப்போது, ஓர் உயரமான தலைக்கவசத்தை அணிந்து கொண்டு யாரோ நடந்து வந்தார்கள்.
அவள் தான்… ஜென்னி! அந்த உடையிலும் அலங்காரத்திலும் அவளை அடையாளமே தெரியவில்லை! ஆனால், அவள் பதட்டமாக இருக்கிறாள் என்று மீராவிற்குத் தெரிகிறது.
"நான் இந்தியாவின் இருபத்தி ஒன்பது மாநிலங்களில் ஒன்றான மிசோரம்மிலிருந்து வந்திருக்கிறேன்," என்று ஜென்னி பேசத் தொடங்குகிறாள்.
அனைவரும் உன்னிப்பாகக் கவனித்துக் கேட்கிறார்கள். அதுவரை ஜென்னியின் பேச்சை யாரும் அதிகம் கேட்டதில்லை.
"நான் அணிந்திருக்கும் ஆடையின் பெயர் பூவாஞ்சை. இப்போது நான் உங்களுக்கு செய்ஹ்லம் என்ற ஒரு மிசோ நடனத்தைக் காண்பிக்கிறேன்."
சல்மா மிஸ் இசையைத் தொடக்குகிறார். மறுகணம் ஜென்னி நளினமாக நடனமாடுகிறாள். சிலர் கேலியாகச் சிரிப்பதை அவள் புறக்கணிக்கிறாள். அவள் சந்தோஷமாக இருப்பதால் யாரும், எதுவும் அவளைத் தடுக்க முடியாது.
விரைவில் சல்மா மிஸ் ஜென்னியுடன் சேர்ந்து நடனமாடுகிறார். ஒரு சில குழந்தைகளும் சேர்ந்து கொள்கிறார்கள். மீராவைப் போல சிலர், இசைக்கு ஏற்றபடி கைத்தட்டுகிறார்கள்.
அனைவரும் குதூகலமாக இருக்கிறார்கள்!
இசை நிறுத்தப்பட்ட போது, ஜென்னியும் ஆடுவதை நிறுத்துகிறாள்.
வகுப்பறையில் ஒரு திடீர் அமைதி நிலவுகிறது. சல்மா மிஸ் ஜென்னியைக் கைத் தட்டிப் பாராட்டுகிறார்.
வகுப்பறையிலுள்ள அனைவரும் அவரோடு சேர்ந்து கைத் தட்டுகிறார்கள்! பேருந்தில் வீட்டுக்குச் செல்லும் போது ஜென்னி மிகவும் சந்தோஷமாக இருக்கிறாள். "நீ சொல்வது சரிதான், மீரா! மற்றவர்களிடமிருந்து சற்று மாறுபட்டு இருப்பது நல்லதுதான்! "
இப்போதெல்லாம் யாரும் ஜென்னியைக் கேலி செய்வதில்லை. இப்போது அவள் ‘அவர்களுள் ஒருவள்'!