பாறைகள் நிறைந்த மும்பைக் கடற்கரையில் வெதுவெதுப்பான, அழகான ஒரு காலை நேரம். கடல் வற்றத்தில், பாறைகளின் இடையில் நீர் தேங்கி நிற்கும் கடல் மடு ஒன்று அமைதியாகத் தோன்றியது.
ஒரு இளஞ்சிவப்புநிற பீங்கான் நண்டு உணவு தேடிக்கொண்டு இருந்தது.
ஒரு ஆரஞ்சுநிற நட்சத்திர மீன் மெ-தூஊஊ-வா-க தன்னுடைய குழல் வடிவக் கால்களால் நகர்ந்து கொண்டு இருந்தது.
இருங்கள்! உண்மையில் எல்லாம் அமைதியாகத்தான் இருக்கிறதா? அய்யோ! ஒரு குட்டி பேத்தை மீன் அந்தக் கடல் மடுவில் மாட்டிக்கொண்டிருந்தது.
அந்த பேத்தை மீன் இடது பக்கம் நீந்தி பாறையின் மேல் மோதிக்கொண்டது. வலது பக்கம் நீந்தி மீண்டும் பாறை மேல் மோதிக்கொண்டது. இங்கும் அங்கும், எல்லாப் பக்கமும் நீந்தியது. ஆனால், எங்குமே வெளியே செல்லும் வழி இருப்பதாகத் தெரியவில்லை.
“நான் மாட்டிக்கொண்டேன்! காப்பாற்றுங்கள்!” என்று குட்டி பேத்தை மீன் கூச்சலிட்டது.
புஃப்! அது ஆபத்தில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள உடலை உப்பிப் பெருக்கிக்கொண்டது. சுற்றிச் சுற்றி வட்டமிட்டது.
“பயப்படாதே, குட்டி மீனே!” என்றது பீங்கான் நண்டு.
“அலைகள் மீண்டும் உள்ளே வரும்” என்றது நட்சத்திர மீன்.
ஆனால், பேத்தை மீன் பயத்தினால் எதையும் கேட்கவில்லை. சுற்றிச் சுற்றி நீந்திக்கொண்டு இருந்தது.
“யார் அங்கே சத்தம் போடுவது?”
ஒரு கம்பீரமான ஆக்டோபஸ், பாறை அடியிலிருந்து நீந்தி கடல் மடுவுக்குள் வந்தது. பேத்தை மீன் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்து பார்த்தது.
“கடல் வற்றத்தில் இருப்பதால், நீ சிக்கிக் கொண்டதை போல் உணர்கிறாய்” என்றது ஆக்டோபஸ். ”கடல் ஏற்றத்தில், பாறையைத் தாண்டி நீர் மட்டம் உயரும். அதன்பின் உன்னால் கடலுக்கு நீந்திச் செல்ல முடியும்”
பேத்தை மீனுக்கு ஆறுதலாக இருந்தது. அது காத்திருந்தது. சரியான நேரத்தில், பீங்கான் நண்டின் பாறைக்கடியில் நீர் பாய்ந்தது. நட்சத்திர மீனின் மேலும் பாய்ந்தது. கடல் மடுவுக்குள்ளும் பாய்ந்தது.
நீர் மட்டம் உயர்ந்தது. நீரோடு பேத்தை மீனும் உயர்ந்தது.
இப்பொழுது, குட்டி பேத்தை மீனால் பாறைகளைத் தாண்டி நீந்திச் செல்ல முடியும். அது மகிழ்ச்சியில் திளைத்தது. “அனைவருக்கும் நன்றி” என்று சொல்லிவிட்டு கடலுக்குள் நீந்திச் சென்றது. “சென்று வா, குட்டி மீனே! கவனமாக நீந்திச் செல்!”
கடல் மடு என்றால் என்ன? இவை, பாறைகள் நிறைந்த கடற்கரைகளில் ஆழமற்ற நீர் தேங்கியிருக்கும் குட்டைகள். இவற்றை நீங்கள் கடல் வற்றத்தின்போது, மீதமுள்ள நீர் கடலுக்குள் சென்றுவிட்ட பிறகுதான் பார்க்க இயலும். கடற்கரையில், கடல் வற்றத்தின்போது மட்டுமே தென்படும் அலையிடைப் பகுதிகளில்தான் கடல் மடுக்கள் இருக்கும்.
கடல் வற்றத்தில் கடல் நீர் கடலுக்குள் உள்ளிழுக்கப்பட்டுவிடும்.
கடல் ஏற்றத்தில் கடற்கரை முழுவதையும் கடல் நீர் சூழ்ந்து கொள்ளும். கடல் அலைகள், பூமியின் மீதான நிலவின் புவியீர்ப்பு விசையின் தாக்கத்தால் உண்டாகின்றன.
கடல் வற்றம், கடல் ஏற்றம்