புலியே, புலியே,எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். ஏரிக்கரையிலே என்னுடைய ஈரத் தடத்தைப் பார்க்கவில்லையா? அந்த குளுகுளு தண்ணீரில் குட்டித்தூக்கம் போட்டுக் கொண்டிருந்தேன்.
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். சேற்றில் பதிந்திருக்கும் என்னுடைய காலடித் தடங்களைப் பார்க்கவில்லையா? நன்றாக உற்றுப் பார். வந்திருக்கிறேனா போய்விட்டேனா என்று தெரிந்துகொள்வாய்!
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். மரத்தில் இருக்கும் என் நகக்கீறல்களைப் பார்க்கவில்லையா? என் நகங்களைத் தீட்டி கூராக்கிக் கொண்டிருந்தேன்.
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். பாறையின் மேல் என் சிறுநீரின் வாசனை வரவில்லையா? பெண்புலிகள் என்னைக் கண்டுபிடிக்க இந்த வாசனை உதவும்!
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். என் நேற்றைய சாப்பாட்டைப் பார்க்கவில்லையா? அந்த முடியையும் நகங்களையும் பார்த்தால் சொல்லமுடியும்!
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். அந்த வாயாடி மந்தியின் எச்சரிக்கையைக் கேட்கவில்லையா? நான் உலவுவதை காடு முழுவதற்கும் அறிவித்துவிட்டானே அவன்!
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். என்னுடைய உறுமலைக் கேட்கவில்லையா? காட்டின் இந்தப் பகுதி என்னுடையது என்பதை மற்ற புலிகள் தெரிந்து கொள்ளட்டும்.
புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கேதான் இருந்தேன். என்னுடைய போலிக் கண்களைப் பார்க்கவில்லையா நீ? உன்னை நன்றாக ஏமாற்றிவிட்டேன்.
புலியே, புலியே,
எங்கே இருக்கிறாய்?
இதோ இங்கே! என்னைக் கண்டுபிடித்துவிட்டாய்.
முஜாஹித் மற்றும் அவரது குழுவினரைச் சந்தியுங்கள்
அடிப்படை ஆராய்ச்சிகளுக்கான டாட்டா இன்ஸ்டிடியூட்டின் அங்கமான தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் பணிபுரியும் ஆய்வாளர்கள், உயிரினங்களின் வாழ்வியல் குறித்து ஆய்வு செய்வார்கள். முஜாஹித், ரந்தம்போர் புலி ஆய்வுத் திட்டத்தில் அங்கம் வகிக்கிறார். அத்திட்டத்தில் உமா ராமகிருஷ்ணன் (முதுநிலை ஆராய்ச்சியாளர், டி.பி.டி. வெல்கம் இந்தியா அலையன்ஸ், தே.உ.அ.மையம்) மற்றும் அவரது குழுவினர் (அனுபப் கான் மற்றும் கௌஷல் பட்டேல்), அருகிவரும் உயிரினங்கள் தனிமைப்படுவதாலும் உள்ளினச் சேர்க்கையாலும் உண்டாகும் மரபணுத் தாக்கங்களைப் புரிந்துகொள்ள முயல்கிறார்கள். அதனால்தான் முஜாஹித் புலிகளின் கால்தடங்கள், நகத்தடங்கள், எச்சங்களை வைத்து அவற்றைக் கண்காணிப்பதில் அதிக நேரம் செலவிடுகிறார்.