punnagaikum pattampoochi

புன்னகைக்கும் பட்டாம்பூச்சி!

காவ்யாவின் குடும்பம் கிராமத்திலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்கிறது. அவள் புதிதாக சேர்ந்திருக்கும் பள்ளியில் அவளுக்குத் தோழிகள் யாருமே இல்லை. ஒருநாள், அவள் பட்டாம்பூச்சிப் பூங்காவுக்குச் செல்கிறாள், பட்டாம்பூச்சிகளுடன் தனக்கிருக்கும் சிறப்புப் பிணைப்பைப் புரிந்துகொள்கிறாள், அங்கே அவளுக்கொரு புதிய தோழியும் கிடைக்கிறாள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

"எல்லாரும் வரிசையிலே நில்லுங்கள்! நாம் இப்போது பூங்காவுக்குப் போகிறோம்” என்றார் லைலா மிஸ்.

இதைக்கேட்ட மாணவர்களுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அனைவரும் கலகலவென்று பேசியபடி கை கோர்த்துக்கொண்டு வரிசையில் நின்றார்கள்.

ஆனால், காவ்யா மட்டும் தனியே நின்றாள். அவள் இந்தப் பள்ளிக்குப் புதியவள். இங்கே அவளுக்கு நண்பர்கள் யாருமில்லை.  "கம்பளிப்பூச்சி வளர்ந்ததும் என்ன ஆகும்ன்னு உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார் லைலா மிஸ்.

காவ்யா படபடத்தாள். காரணம், இந்தக் கேள்விக்கு அவளுக்கு விடை தெரியும். ஆனால், அதை சொல்லலாமா, வேண்டாமா?

இந்தப் பள்ளி மட்டுமல்ல, இந்த ஊரே காவ்யாவுக்குப் புதிதுதான். அவளும் அவளுடைய குடும்பத்தினரும் இப்போதுதான் அவர்களுடைய கிராமத்திலிருந்து பெங்களூருக்கு மாறி வந்திருந்தார்கள். காவ்யாவின் பெற்றோர் கட்டட வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் கட்டடத்திலேயே அவர்கள் வசித்தார்கள்.

பாதி கட்டப்பட்ட கட்டடத்தில் வசிப்பது மிகவும் சிரமம். காற்றில் புகைவாசம் அடிக்கும், இரவிலும் கார்களின் ஹார்ன் சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருப்பதால், தூக்கமே வராது. பெங்களூரில் எங்கு பார்த்தாலும் உயரமான கட்டடங்கள், விரைந்தோடும் கார்கள், சுறுசுறுப்பான மனிதர்கள்... இதையெல்லாம் பார்க்கும்போது காவ்யா தனக்குள் சுருங்கிப்போனாள்.

காவ்யா பள்ளியில் சேர்ந்து ஒரு வாரம்தான் ஆகிறது. இன்னும் அவள் யாரிடமும் பேசக்கூட இல்லை.

உண்மையில், மற்றவர்களிடம் பேசுவதற்கு காவ்யா மிகவும் பயந்தாள், "ஒருவேளை, என்னுடைய கிராமத்துப் பேச்சை அவர்கள் கேலி செய்வார்களோ? நான் இதுவரை பள்ளிக்கே சென்றது கிடையாது என்று தெரிந்துகொண்டு என்னைக் கிண்டலடிப்பார்களோ?" ஆனால், பெங்களூரு போன்ற ஒரு இரைச்சல் மிகுந்த நகரத்தில் காவ்யா எவ்வளவு நாள்தான் மௌனமாக இருக்கமுடியும்? அவள் உள்ளே நடுக்கத்தோடு மெல்ல கையைத் தூக்கினாள்.

"கம்பளிப்பூச்சிகள் வளர்ந்தவுடன், பட்டாம்பூச்சிகளாக மாறும்" என்றாள் காவ்யா.

"சரியாகச் சொன்னாய் காவ்யா!" என்றார் லைலா மிஸ்.

"கம்பளிப்பூச்சிகள் சில வாரங்களுக்குதான் கம்பளிப்பூச்சிகளாக இருக்கும். அப்போது அவை நாள் முழுக்க இலைகளைத்தான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்" என்று விளக்கினாள் காவ்யா.

அந்த வகுப்பிலிருந்த மேரி என்ற பெண்ணுக்கு இதில் ஆர்வம் பிறந்தது, ”இப்படி எந்நேரமும் இலைகளைச் சாப்பிட்டால் கம்பளிப்பூச்சிகள் மிகவும் குண்டாகிவிடுமே?” என்று கேட்டாள்.

"ஆமாம்! அவை சில வாரங்களுக்குள் நன்கு வளர்ந்து பெரியவை ஆகிவிடும்" என்றாள் காவ்யா.

"இப்படி நிறைய இலைகளைச் சாப்பிட்டபிறகு, கம்பளிப்பூச்சிகள் செடிகளின் பக்கங்களில் பட்டுக்கூடுகளைக் கட்டுகின்றன, அதற்குள் தங்கிக்கொள்கின்றன. இந்தக் கூட்டுப்புழுக்கள்தான் பிறகு பட்டாம்பூச்சிகளாக மாறுகின்றன" என்று காவ்யா விளக்கிமுடித்தாள்.

"உண்மைதான் காவ்யா. இந்தப் புழுக்கள் சுமார் இரண்டு வாரங்களுக்குக் கூட்டுக்குள் இருக்கும், அதன்பிறகு, அவை பட்டாம்பூச்சிகளாக மாறி வெளியே வரும்!" என்றார் லைலா மிஸ்.

"ஆஹா, நாம் பூங்காவுக்கு வந்துவிட்டோம்!" என்றாள் மேரி.

பூங்காவைப் பார்த்த காவ்யா ஆனந்தத்தில் திக்குமுக்காடினாள்.

காரணம், அங்கே எங்குபார்த்தாலும் பட்டாம்பூச்சிகள்!

நதியின் நிறத்தில் நீலப் பட்டாம்பூச்சிகள், சூரியனின் நிறத்தில் மஞ்சள் பட்டாம்பூச்சிகள், பழுத்த பப்பாளிப்பழம் போல ஆரஞ்சுப் பட்டாம்பூச்சிகள், வானத்தையும் நட்சத்திரங்களையும் நினைவுபடுத்தும் கருப்பு-வெள்ளைப் பட்டாம்பூச்சிகள்!

இந்த நிறங்களையெல்லாம் காவ்யா அவளுடைய கிராமத்தில்தான் பார்த்திருக்கிறாள். இப்போது அவற்றை மீண்டும் கண்டதால் அவளுடைய உள்ளம் படபடத்தது.

"உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பட்டாம்பூச்சிகளெல்லாம் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிலிருந்து இங்கே வந்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் இவை இவ்வளவு தூரம் பயணம் செய்து இங்கே வருவது ஏன் தெரியுமா? அவற்றுக்கு அதிக உணவு தேவை, நல்லவிதமான காலநிலை தேவை, முட்டையிடுவதற்கு ஏற்ற பாதுகாப்பான இடங்கள் தேவை. அதற்காகத்தான் இவை இப்படி இடம் மாறி வருகின்றன, இதை நாம் இடப்பெயர்வு என்று அழைக்கிறோம்" என்றார் லைலா மிஸ்.

"இவ்வளவு தூரம் பறந்து வந்தால் இந்தப் பட்டாம்பூச்சிகள் களைத்துவிடாதா? பாவம், சிறகடித்து சிறகடித்து அவற்றுக்கு வலிக்குமே!" என்று யாரோ கேட்டார்கள்.

"காற்று பலமாக வீசும்போது, பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பதில்லை. அவை தங்களுடைய சிறகுகளை விரித்துக்கொண்டு அப்படியே காற்றில் மிதந்து வரும்!" என்று காவ்யா விளக்கினாள்.

"மிகவும் சிரமமான பயணம்தான்" என்று காவ்யாவின் காதில் கிசுகிசுத்தாள் மேரி.

இதைக் கேட்டதும், தான் பேருந்தில் பெங்களூருக்கு வந்ததை நினைத்துக்கொண்டாள் காவ்யா.

அவர்கள் வந்த பேருந்தில் உட்கார இடமே இல்லை. பெட்டிகளுக்கு நடுவே சிரமப்பட்டு அமர்ந்தபடி மணிக்கணக்காகப் பயணம் செய்யவேண்டியிருந்தது. போதாக்குறைக்கு, பேருந்து வந்த சாலையும் சரியில்லை, தூக்கித்தூக்கிப் போட்டது!ஒருவேளை, காற்று பலமாக வீசும்போது, இந்தப் பட்டாம்பூச்சிகளும் அப்படித்தான் உணருமோ?

"பட்டாம்பூச்சிகள் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லும்போது, நதிகள்தான் அவற்றுக்கு வழிகாட்டுகின்றன" என்றார் லைலா மிஸ்.

"பறந்துவருகிற வழியில் அவை அவ்வப்போது நதிக்கரைகளில் இறங்கி ஓய்வெடுக்கும், அங்குள்ள கனிமங்களைத் தங்கள் காலில் தோய்த்துக்கொள்ளும். நாங்கள் இதனைச் சேற்றில் ஆடுதல் என்போம்."

"ஆஹா, பட்டாம்பூச்சிகள் இஷ்டம்போல் சேற்றில் ஆடலாமா, அவை கொடுத்துவைத்த பிராணிகள்தான்" என்றாள் மேரி.

"சேற்றில் ஆடுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்" என்று சிரித்தாள் காவ்யா, "ஆனால், இப்போதெல்லாம் சேற்றுக்குட்டைகளையே காணமுடிவதில்லையே!"

காவ்யாவின் கிராமத்தில் ஒரு நதி உண்டு. ஆனால், அந்த நதியின் கரையிலிருந்த மண்ணையெல்லாம் வண்டிகள் வந்து வாரிச்சென்றுவிட்டன. இதனால், வெப்பம் அதிகரித்தது, மழை குறைந்தது, நதி வறண்டுபோனது.

இதன் விளைவாக, அங்கே இப்போது சேற்றுக்குட்டைகளும் இல்லை, பட்டாம்பூச்சிகள் காலைத் தோய்க்க இடமும் இல்லை. காவ்யாவின் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டுவந்தது. ஆனால், தண்ணீர் இல்லாததால் அவர்கள் தொடர்ந்து பயிர்செய்ய இயலவில்லை.

அதனால்தான் அவர்கள் பெங்களூருக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள்.

"காவ்யா, உனக்குப் பட்டாம்பூச்சிகளைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறதே" என்றார் லைலா மிஸ்.

"உண்மைதான் மிஸ், எனக்குப் பட்டாம்பூச்சிகளை மிகவும் பிடிக்கும்" என்றாள் காவ்யா.

"உனக்கு ஏன் பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கும்?" ஆவலுடன் கேட்டாள் மேரி.

இதற்கு ஒரு வரியில் எப்படிப் பதில் சொல்வது என்று யோசித்தாள் காவ்யா.

இந்தச் சின்னஞ்சிறிய பட்டாம்பூச்சிகளில்தான் எத்தனை சிறப்புகள்! புள்ளிவைத்த தோற்றம், வரிவரியான தோற்றம், நீளமான மூக்கால் பூவில் தேன் குடிக்கும் அழகு, மகரந்தத்தைப் பரப்பி மலர்களை வளரச்செய்வது... எல்லாமே சிறப்புதான்.

"பட்டாம்பூச்சிகள் தொலைதூரத்திலிருந்து வந்தாலும், அப்படி வந்த இடத்தில் புதிய நண்பர்களை உருவாக்கிக்கொள்கின்றன" என்றபடி மேரியின் கையைப் பற்றினாள் காவ்யா, "அவை சிறிய பூச்சிகள்தான், ஆனால், மிகவும் தைரியமானவை."

"உன்னைப்போலதான் காவ்யா" என்றார் லைலா மிஸ்.

காவ்யா புன்னகைத்தாள். அந்தப் புன்னகை, ஒரு பட்டாம்பூச்சியின் சிறகுகளைப்போலப் பரந்து விரிந்திருந்தது.

பட்டாம்பூச்சிகளுக்கான ஓய்விடம் ஒன்றைக் கட்டுங்கள்

இந்தியப் பட்டாம்பூச்சிகள் வருடத்துக்கு இருமுறை இடம்பெயர்கின்றன. ஆனால், அவற்றின் பயணம் நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டிருக்கிறது. காரணம், நம்முடைய காடுகளும் நதிகளும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. இதனால், பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுக்கப் போதுமான இடங்கள் இல்லை. பல பட்டாம்பூச்சிகள் இந்தப் பயணத்தின்போது களைத்துவிடுகின்றன.

ஆகவே, பட்டாம்பூச்சிகள் ஓய்வெடுப்பதற்கும் நன்றாகச் சாப்பிடுவதற்கும் ஏற்ற பாதுகாப்பான இடங்களை நாம் அமைக்கலாம், அவற்றுக்கு உதவலாம்.

பட்டாம்பூச்சிகளுக்கான ஓய்விடம் அமைப்பது எப்படி?

உயரமான விளிம்புகளைக் கொண்ட ஒரு தட்டையான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ஒரு தட்டு அல்லது தாம்பாளம்.

பட்டாம்பூச்சிகளுக்குப் பிரகாசமான நிறங்கள் பிடிக்கும். அந்தப் பாத்திரத்துக்குச் சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறம் பூசுங்கள்.

அந்தப் பாத்திரத்தில் பட்டாம்பூச்சிகளுக்கான உணவை நிரப்புங்கள். அந்த உணவைத் தயாரிப்பது மிக எளிது: நான்கு  தம்ளர் தண்ணீரில் ஒரு தம்ளர் சர்க்கரையைக் கலந்தால் போதும்.

நன்கு கனிந்த பழத் துண்டுகளை இதில் சேருங்கள், குறிப்பாக, வாழைப்பழம், கொய்யாப்பழம், மாம்பழம், பப்பாளிப்பழம் மற்றும் ஆரஞ்சுப்பழம் ஆகியவை பட்டாம்பூச்சிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

இந்தப் பாத்திரத்தை உங்கள் வீட்டின் வராண்டாவில் அல்லது, ஜன்னல் அருகே, அல்லது வெளியே வேறு எங்கேனும் வையுங்கள்.

இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி மீண்டும் நிரப்புங்கள்.

உங்கள் வீட்டுக்கு இன்னும் அதிகப் பட்டாம்பூச்சிகள் வரவேண்டுமானால், பட்டாம்பூச்சிகளுக்குப் பிடித்த பூக்களை வளர்க்கலாம். உதாரணமாக, வெர்பெனா, ஜெரானியம், டாலியா அல்லது சூரியகாந்திப்பூ. இதற்கு உங்களுக்கு நிறைய இடம் தேவையில்லை: பூச்செடிகளைத் தொட்டியில் வளர்க்கலாம், அல்லது தரையில் வளர்க்கலாம், அல்லது ஜன்னலோரங்களில் வளர்க்கலாம்.