கேப்டன் ராஜு, ஈஃபில் டவருக்கு அருகே சென்று, அதில் இடித்துவிடாமல் அவருடைய போர் விமானத்தை சட்டென்று இடது பக்கம் வளைத்துத் திருப்பினார். இதயம் வேகமாக அடித்துக்கொள்ள "அய்யோ! பாரிஸ், பறப்பதற்கு குழப்பமான இடம்தான்," என்று நினைத்துக்கொண்டார்.
திடீரென்று, விமான ஓட்டுநர் அறையில்(Cockpit) இருந்து ஏதோ சத்தம் கேட்டது - *பீப் பீப் பீப்*.
என்ன அது? அவர் எதிரிப் பகுதியில் இருக்கிறாரா? ’என்ஜினில்’ எதுவும் பிரச்சனையா?
*பீப் பீப் பீப்*
அலார கடிகாரத்தின் சத்தத்தில் ராஜு பதறி எழுந்தான். "எல்லாம் வெறும் கனவுதானா," என்று பெருமூச்சு விட்டான். ஆனால், இப்போது ஏமாற்றத்துக்கு எல்லாம் நேரமில்லை!
இன்று முக்கியமான நாள்.
"நான் முதல்முறையாக விமானத்தில் பறக்கப் போகிறேன்!"
"அம்மா, நான் எழுந்துவிட்டேன்!"
அவன் அம்மா பெட்டியை மூடிக்கொண்டு இருந்தார். "காலை வணக்கம், ராஜு! நான் ஆர்யாவைப் பார்க்கப் போவதில் ரொம்ப உற்சாகமாக இருக்கிறேன். அவளைப் பார்த்து பல மாதங்களாகிறது! வேகமாகத் தயாராகு" என்று சொன்னார்.
ராஜு அன்றுதான் முதல்முறையாக விமான நிலையத்தின் உள்ளே சென்றான். ஒரு நகர்ந்துகொண்டிருக்கும் பட்டையில் தங்களுடைய பெட்டியைத் தூக்கி வைக்க அம்மாவுக்கு உதவி செய்தான். அந்தப் பட்டை ஒரு பெரிய இயந்திரத்திற்குள் பெட்டிகளைக் கொண்டுசென்றது.
சீருடை அணிந்திருந்த கண்டிப்பான பெண் ஒருவர் அந்த இயந்திரத்துக்குப் பின் உட்கார்ந்திருந்தார். அவர் ஒரு சிறிய திரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தத் திரையைப் பார்த்து ராஜு அதிர்ச்சியடைந்தான். அது அவனுடைய பையை மட்டும் காண்பிக்கவில்லை, அதற்கு உள்ளே இருந்த எல்லாவற்றையும் காண்பித்தது - அவனுடைய புதிய விளையாட்டு ஷூ, அவன் தொலைநோக்கி, எல்லாவற்றையும்!
"எக்ஸ் ரே பார்வை! கேப்டன் ராஜுவுக்கு இருப்பதுபோலவே..." என்று ராஜு வாயைப் பிளந்தான்.
ராஜு அந்தப் பெண்ணிடம் என்னவோ கேட்பதற்காக வாயைத் திறந்தான், ஆனால் அம்மா அவனைத் தடுத்தார்.
"அவரோடு பேசக்கூடாது ராஜு. அவர் பாதுகாப்புப் பணியில் இருக்கிறார். வெடிகுண்டு, ஆயுதங்கள் போன்ற ஆபத்தான பொருட்கள் எதையும் பயணிகள் கொண்டு போகாமல் அவர் பார்த்துக்கொள்ள வேண்டும். அவரை தொந்தரவு செய்யாமல் இருப்பதுதான் நல்லது."
கடைசியாக ராஜு ஒரு பெரிய மண்டபத்திற்குள் நுழைந்தான். அதன் சுவர்கள் கண்ணாடியால் செய்யப்பட்டிருந்தது, வெளியில் நிறைய விமானங்கள் இருப்பதை அவனால் பார்க்க முடிந்தது. ஒரு விமானம் பறப்பதற்குத் தயாராக இருந்தது.
"விமான ஓட்டுநர்களின் வேலை ரொம்ப முக்கியமானது, இல்லையா அம்மா?"
"நிச்சயமாக, பேருந்து ஓட்டுநர்கள், கப்பல் கேப்டன்கள் போலவே நிறைய பயணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு உள்ளவர்கள் அவர்கள்."
"சேச்சிக்கு ரொம்ப அதிர்ஷ்டம்தான். அவள் பலமுறை விமானத்தில் போயிருக்கிறாள்! நானும் சீக்கிரம் வளரவேண்டும்."
அம்மா சிரித்தார், "ஆமாம். ஆர்யா நிச்சயம் பல முறை விமானத்தில் பறந்திருக்கிறாள். ஆனால் உனக்கு இப்போ ஒன்பது வயசுதான் ஆகுது. உனக்கு அதுக்கெல்லாம் இன்னும் நிறைய வருடங்கள் இருக்கிறது ராஜு."
எட்டாம் எண் நுழைவாயிலில் ஆட்கள் வரிசையில் நிற்கத் தொடங்குவதை ராஜு பார்த்தான், "அதுதான் அம்மா நாம் செல்லவேண்டிய நுழைவாயில். நாம் விமானம் ஏறும் நேரம் வந்துவிட்டது!"
பத்து நிமிடங்கள் கழித்து, அவர்கள் தங்கள் இருக்கைகளில் இருந்தார்கள். இருக்கைப் பட்டியை(Seat Belt) அணிந்திருந்தார்கள்.
விமானம் மெதுவாக நகரத் தொடங்கியதும் ராஜு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். ஆனால் சில நொடிகளிலேயே விமானம் மிக வேகமாக செல்லத் தொடங்க, ராஜுவால் தன் இருக்கை அதிர்வதை உணரமுடிந்தது.
திடீரென்று அதிர்வது நின்றுவிட்டது. அந்தப் பெரிய விமானம் வானத்தில் இருந்தது!
"அம்மா, நாம் பறக்கிறோம்!"
"ஆமாம் ராஜு, கேள். ஏதோ அறிவிக்கிறார்கள். ஷ்ஷ்ஷ்!"
ஒலிபெருக்கியில் இருந்து யாருடைய குரலோ கேட்டது. அடிக்கடி கேட்டுப் பழக்கமான குரல்.
"லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இது உங்களுடைய கேப்டன், ஆர்யா. உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்."
"சேச்சி!"
"அது என்னுடைய மகள்."
ஆர்யாவின் கதையைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்