பாபுவுக்கு விலங்குகளோடு நேரம் கழிக்க ரொம்பப் பிடிக்கும். அவர் குடும்பத்தில் நான்கு நாய்கள், ஐந்து பூனைகள் மற்றும் காவி என்றொரு குதிரை இருந்தன. காவியின் மேல் பாபுவுக்கு ரொம்பப் பிரியம்.
தினம் காலை, காவியின் பிடறியையும் உடலையும் சீவிவிடுவார் பாபு. பின் காவிக்கு சேணம் பூட்டி, அதில் ஏறி பாலைவனத்துக்குப் போவார். ராஜஸ்தானிலிருந்த அவரது கிராமத்திலிருந்து ரொம்ப தூரம் செல்வார்.
பாபுவுக்கு கேளம் என்றொரு ஒன்றுவிட்ட சகோதரி இருந்தாள். அவளுக்கும் விலங்குகளைப் பிடிக்கும். ஒருநாள் “பாபு என் பிறந்தநாளுக்கு ஒரு ஒட்டகம் வேண்டும்” என்றாள் அவள்.
”கேளத்துக்கு எங்கே போய் ஒட்டகம் கொண்டுவருவேன்” என்று பாபு யோசித்தார்.“ராஜஸ்தானில் ஒட்டகங்கள் கிடையாதே!”
ஒட்டகங்கள் இலங்கையிலிருந்து வருவதாக எல்லாரும் சொன்னார்கள். இலங்கை பெரிய நீலக் கடலைத் தாண்டி ரொம்ப ரொம்ப தூரத்தில் இருந்தது. அதை ஆளும் முரட்டு மன்னனுக்கு ஒட்டகங்களைப் பகிர்ந்துகொள்வதில் விருப்பம் கிடையாது.
பாபுவுக்கு பயணம் என்றால் பிடிக்கும்.கேளத்தின் முகத்தில் புன்னகையை வரவழைக்கவும் விருப்பம். எனவே அவர் ஒரு திட்டம் போட்டார்.
பாபு காவிக்கு சேணம் பூட்டினார். பாலைவனத்தில் பயணித்தார். ஒரு ராத்திரி, ஒரு பகல், இன்னொரு ராத்திரி முழுக்க பயணித்தார். முதல்முறையாக பெரிய நீலக் கடலைப் பார்த்தார்.
கடலுக்கு முடிவே இருப்பதாகத் தெரியவில்லை. இலங்கையோ ரொம்ப தூரம்! அங்கே போய்த்தான் ஆகணுமா என்று பாபுவுக்கு சந்தேகம். இருந்தாலும் பாபுவும் காவியும் அடுத்துவந்த படகில் ஏறிக்கொண்டனர்.
அன்றிரவு புயல் வந்தது. மிக மோசமான புயல்! பயங்கரமாக காற்று வீசியது, அலைகள் மோதின. படகு உடைந்தது.
பாபுவும் காவியும் ஒரு வினோதமான இடத்தில் கரைசேர்ந்தனர். அங்கே மரங்கள், தேனீக்கள், மலர்கள், மழை எதுவுமில்லை. எங்கும் வெறும் மணல்தான்.
பாபுவும் காவியும் கடலைவிட்டு நடந்தனர். இலங்கையும் பசுமரங்கள் எங்கே? முரட்டு மன்னன் எங்கே? ஒட்டகங்கள் எங்கே?
தூரத்தில் ஒரு கொட்டாயைக் கண்டார் பாபு. பின் ஒட்டகங்களையும் - நிறைய, நிறைய ஒட்டகங்கள்!“ஆகா, நான் இலங்கை வந்துவிட்டேன்!” என்று கத்தினார்.
திடீரென பாபுவை சில ஆட்கள் ஒட்டகத்தில் வந்து சூழ்ந்தனர். “வருக வருக!” என்றார் ஒட்டகக்காரர்களின் தலைவர். அவர் ஒரு மன்னனைப் போலிருந்தார், மகிழ்ச்சியான மன்னன்!
பாபு இலங்கையிலில்லை. அவர் பெர்சியாவில் இருந்தார். மகிழ்ச்சியான மன்னனோடு அவரது பிரம்மாண்ட கொட்டாயில் பல நாட்களைக் கழித்தார்.
ஒட்டகம் வளர்க்கக் கற்றுக்கொண்டார். இலங்கையின் முரட்டு மன்னன், மகிழ்ச்சியான மன்னனில் பல ஒட்டகங்களைத் திருடிப் போயிருப்பதைத் தெரிந்துகொண்டார்.
சில வாரங்கள் கழித்து, பாபுவுக்கு வீட்டு ஞாபகம் வாட்டியது. கேளத்துக்கு ஒரு ஒட்டகத்தைக் கூட்டிக்கொண்டு வீட்டுக்குப் போக விரும்பினார்.
மகிழ்ச்சியான மன்னன் பாபுவுக்கு ஒரு குட்டி ஒட்டகத்தைக் கொடுத்தார். பாபுவை சூரியன் எழும் திசையை நோக்கி மணலில் பயணிக்கச் சொன்னார். பாபு, காவி, குட்டி ஒட்டகம் மூவரும் வீட்டை நோக்கி பயணிக்கத் தொடங்கினர்.
சரியாக கேளத்தின் பிறந்தநாளுக்கு பாபு தன் கிராமத்தை அடைந்தார். கிராமத்தார் பாபுவை வரவேற்றனர். கேளம் குட்டி ஒட்டகத்தை வரவேற்றாள்.
இப்படித்தான் ராஜஸ்தானுக்கு முதல் ஒட்டகம் வந்துசேர்ந்தது.
பாத் என்பது ராஜஸ்தானின் போப்பா சமூகத்தினர் பயன்படுத்தும் ஒரு நாட்டுப்புற கலைவடிவம். அக்கலைஞர்கள் பாத் எனப்படும் ஒரு துணி உருளையில் வரைவார்கள். பாத் கலையில் நாட்டுப்புற நாயகர்களின் கதைகள் இடம்பெறும், பாபு அப்படி ஒரு கதாநாயகர்.