பர்மாவிலிருந்து பத்திரமாய் திரும்பி வந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவேற்பதற்காக என்னுடைய நண்பர் ஒருவர் விருந்து நடத்தினார். விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, "ஏன் ஸார்! இன்னும் உங்கள் பெண் - மாப்பிள்ளை யாராவது ஜோஹோரிலோ, ஸுரபயாவிலோ, கொச்சின் சைனாவிலோ, போனியாவிலோ இருந்து திரும்பி வரப் போகிறார்களா?" என்று கேட்டேன். சாப்பாடு அவ்வளவு ருசியாயிருந்தது. ஆனால், அதைக் காட்டிலும் விருந்துக்கு வந்திருந்தவர்களின் பேச்சு ஸ்வாரஸ்யமாயிருந்தது.
சாப்பாட்டுக்கு முன்னால் மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, அவரை நாங்கள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தோம். எங்கேயாவது குண்டு பட்டுச் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தோம். ஒரு சேதத்தையும் காணவில்லை. காது, மூக்கு, கைகால், விரல்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தோம். பல்லெல்லாம் கூட அப்படியே இருந்தது.
"மாப்பிள்ளை! கொஞ்சங்கூடச் சுகமில்லை. இப்படித்தானா எங்களை ஏமாற்றுகிறது? இத்தனைக்கும் மோல்மீனிலிருந்து வந்ததாகச் சொல்கிறீர்! ஒரு வேளை அந்த ஊரில் ஜப்பான் குண்டு போடுவதற்கு முன்னால் கிளம்பி விட்டீரோ?" என்று கேட்டேன்.
மாப்பிள்ளை வரதராஜன், ரோசத்துடன் "இல்லை; இல்லை! ஐந்து நாள் குண்டு விழுந்த பின் தான் கிளம்பினேன்" என்றார்.
அவரை விட மாமனாருக்கு அதிக ரோஸம் வந்து விட்டது. "நீங்கள் என்னமோ சொல்கிறீர்கள்? முந்தா நாள் பாதி நிசிக்கு இங்கே என்ன நடந்தது தெரியுமோ, இல்லையோ? திடீரென்று 'ஏ பழனி ஆண்டவனே! என்னைக் காப்பாற்று! சுவாமி! என் குழந்தையைக் காப்பாற்று! ஐயையோ! நான் என்ன செய்வேன்?' என்று கூச்சல் கிளம்பவே, நாங்கள் எல்லாரும் பயந்து போய் விட்டோம்."
"என்ன மாப்பிளை! இப்படியா பயமுறுத்தி விட்டீர்?" என்றேன்.
"இல்லை, இல்லை! அவர் பெண்ணின் பெருமையைச் சொல்கிறார்! அங்கே இருந்த வரையில் எப்படியோ தைரியமாய் இருந்து விட்டாள். இங்கே வந்த பிறகு இப்படி திடீர் திடீரென்று கூச்சல் போட்டு மூர்ச்சையாகி விடுகிறாள்" என்று வரதராஜன் சொன்னதும், எங்களுக்கெல்லாம் என்னமோ மாதிரி ஆகிவிட்டது. அப்புறம் கொஞ்ச நேரம் தமாஷாகப் பேச யாருக்கும் மனம் வரவில்லை.
"நீங்கள் சென்னையில் தான் இருக்கப் போகிறீர்களா? ஊருக்குக் கிளம்பும் உத்தேசம் உண்டா?" என்று ஒருவர் கேட்டார்.
"நன்றாயிருக்கிறது. இந்தச் சமயத்தில் யாராவது சென்னையை விட்டுக் கிளம்புவார்களோ? ராஜாஜி சொன்னது போலக் குண்டு விழுகிற வேடிக்கையைப் பார்ப்பதற்காகக் கிராமாந்திரங்களிலிருந்து பட்டணத்திற்கு வர வேண்டிய சமயமல்லவா இது. இந்தச் சமயத்தில் பட்டணத்தை விட்டுப் போகலாமா?" என்றார் ஒருவர்.
"ஆமாம்! ரங்கூனில் இப்படித்தான் அநேகர் குண்டு விழுகிற வேடிக்கையைப் பார்ப்பதற்காக வீதியில் நின்றார்களாம்! அவர்கள் பார்த்த கடைசி வேடிக்கை அதுதானாம்! ஏன் மாப்பிள்ளை! அப்படித்தானே?"
"ஆமாம்" என்றார் மாப்பிள்ளை சுருக்கமாக. அவருக்கு அந்தப் பயங்கரத்தைப் பற்றிப் பேசவே இஷ்டமில்லையென்று தோன்றியது.
"வேடிக்கைப் பார்க்கிறதென்றால், வெளியில் போய் நிற்க வேண்டுமா என்ன? வீட்டிற்குள்ளேயே இருந்து பார்த்தால் போதாதா?" என்று இன்னொருவர் கேட்டார்.
"வீட்டுக்குள் இருந்தால் என்ன வேடிக்கை தெரியும்! வெளியில் இருந்தாலும் அண்ணாந்து பார்க்கலாம்."
"வீட்டுக்குள் இருந்தால் வேடிக்கை ஒரு வேளைப் பார்க்க முடியாது. ஆனால் வேடிக்கையைக் கேட்கலாம்! குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுச் சிலருக்குக் காது செவிடாகவே போய்விட்டதாம். சில குழந்தைகள் திறந்த வாய் திறந்தபடியே இருக்கின்றனவாம்!" என்றார் ஒருவர்.
"ஆனால் மாப்பிள்ளை மட்டும் வாயையே திறக்க மாட்டேனென்கிறாரே? ஒரு வேளை குண்டு சத்தத்தில் மாப்பிள்ளையின் வாய் மூடிவிட்டதோ?" என்றேன் நான்.
"சாப்பாட்டுக்கு மட்டும் வாய் திறக்கும் போலிருக்கிறது!" என்றார் ஒருவர்.
மாப்பிள்ளை கொஞ்சம் பல் தெரியும்படி சிரித்துவிட்டு, "ஆமாம்; குண்டு விழும்போது வாயைக் கெட்டியாக மூடிக் கொள்ளத்தான் வேண்டும். பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டும். வெறுமனே கடித்துக் கொண்டால் போதாது; வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். காதிலும் பஞ்சை அடைத்துக் கொள்ள வேண்டும். குண்டு விழும் சப்தம் அவ்வளவு பயங்கரம்!" என்றார்.
"ஒரு குண்டு விழுந்தால் அதைச் சுற்றிலும் எவ்வளவு தூரத்துக்கு அபாயம் உண்டாகும்?" என்று கேட்டேன்.
"குண்டு வெடித்ததும் கிளம்பும் இரும்புத்துண்டுகள் மூன்று நாலு பர்லாங்கு தூரம் வரையில் பரவும்" என்று வரதராஜன் சொன்னார்.
"குண்டு விழும்போது வீட்டுக்குள் இருந்தால் நல்லதா? குழியில் பதுங்கிக் கொண்டிருந்தால் நல்லதா?" என்று விவாதம் நடந்தது.
"வீடாவது? குழியாவது? இதனாலெல்லாம் ஒரு வேளை ஜப்பான் குண்டிலிருந்து தப்பிக்கலாம், யமனிடமிருந்து தப்பிக்க முடியுமா?" என்று வேதாந்தி கேட்டார்.
அப்போது மாப்பிள்ளை, "ஆமாம், விதியும் முக்கியமானதுதான், ரங்கூனில் என்பந்துக்கள் இருக்கும் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்து ஒரு தெருப் பூராவும் நாசமாகி விட்டது. என் பந்துக்கள் வீட்டில் ஒரு ஓடு செங்கல் பெயரவில்லை" என்றார்.
"ஆமாம், எல்லாம் விதிதான்" என்று சிலர் ஆமோதித்தார்கள்.
"நாளை, பொழுது விடிந்தால் யாருடைய விதி எப்படி இருக்குமோ? எல்லோருக்கும் இன்னும் ஒரு தொன்னை பாதாம் கீர் போட்டுவிடு!" என்றார் விருந்து கொடுத்த சிநேகிதர்.
சாப்பிட்டு எழுந்திருந்ததும், எல்லோரும் தாம்பூலதாரணத்துக்கு உட்கார்ந்தார்கள்.
"இனிமேலாவது ஏதாவது சந்தோஷமான விஷயத்தைப் பற்றிப் பேசலாம்" என்றார் சந்தோஷப் பிரியர்.
"ராயபுரம் கடற்கரையில் 'ஓடிப் போங்கள்' என்று துண்டுப் பிரசுரங்கள் கிடந்ததாமே!" என்று ஒரு சந்தோஷமான பேச்சை ஆரம்பித்தார்.
"அது நிஜந்தானா? யாராவது அந்தப் பிரசுரத்தைப் பார்த்தீர்களா?" ஒவ்வொருவரும் கேட்டார்கள்.
ஒருவரும் நேரில் பார்க்கவில்லையென்று தெரிந்தது. பத்திரிகைகளில் வெளியான சர்க்கார் அறிக்கையைப் பார்த்துத்தான் எல்லாரும் தெரிந்து கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை, "பிரசுரத்தில் என்ன எழுதியிருந்தது" என்று கேட்டார்.
"'ஓடிப்போங்கள்' என்று எழுதியிருந்தது?"
"நிச்சயந்தானே? 'ஜப்பானே! ஓடிப்போ?' என்று எழுத வில்லையே!"
"இல்லவே இல்லை."
"அப்படியானால் இது யு.பி. ராகவாச்சாரியின் வேலை அல்ல" என்றார் மாப்பிள்ளை.
"அது என்ன சமாசாரம்? யு.பி. ராகவாச்சாரி என்பது யார்?" என்று கேட்டோம். ரொம்பவும் தூண்டிக் கேட்ட பிறகு மாப்பிள்ளை சொன்னதாவது:-
யு.பி. ராகவாச்சாரிக்கு ரங்கூன் போஸ்டு ஆபீஸில் வேலை. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். எனக்கு அவன் அத்தான் முறை ஆக வேணும். நான் மோல்மீனுக்குப் போவதற்கு முன் இரண்டு பேரும் ரங்கூனில் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.
யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ராகவாச்சாரியின் போக்கு ஒரு மாதிரி ஆகிக் கொண்டு வந்தது. ஆபீஸ் வேலையைக் கூட நன்றாய்க் கவனியாமல் யுத்தச் செய்திகளைப் படிப்பதில் ஈடுபட்டான். தினசரிப் பத்திரிகைகள் வந்ததும் முதலில் யுத்த 'மாப்பை' வெட்டி எடுத்து, அவனுடைய பெரிய நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி விடுவான்; பத்திரிகை எத்தனை பிரதி கிடைக்கிறதோ அவ்வளவு 'மாப்பு'களையும் வெட்டி எடுத்துக் கொள்வான். ஒரே படத்தை குறுக்கு நெடுக்காகவும், மேல் கீழாகவும் பல விதமாக ஒட்டியிருப்பான். அவைகளை நீலப் பென்ஸிலாலும், சிகப்புப் பென்ஸிலாலும் கோடுகள் இழுப்பான். எப்போது யாரைக் கண்டாலும் யுத்தச் செய்திகளைப் பற்றியே பேசுவான். இதனாலெல்லாம் யு.பி. ராகவாச்சாரியை 'யுத்தப் பித்து ராகவாச்சாரி' என்று எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.
"ஆமாம்; நான் பித்துக்கொளிதான்! பைத்தியந்தான். நாளைக்கு ஜப்பான்காரன் வந்து படார், படார் என்று குண்டு போடுகிற போது யார் பைத்தியம் என்று தெரியும்" என்று ராகவாச்சாரி அடிக்கடி சொல்வான்.
இந்தோ-சைனா, ஸயாம், மலாய், பர்மா, டச்சு இந்தீஸ் ஆகிய தேசங்களின் 'மாப்பு'களை எடுத்து வைத்துக் கொண்டு அம்புக் குறிகள் போட்ட வண்ணம் இருப்பான். "ஐயோ! பார் மோஸாவுக்கு வந்து விட்டானே? இந்தோசைனாவுக்கு வந்து விட்டானே? ஸயாமை எட்டிப் பார்க்கிறானே? இன்னும் இங்கிலீஷ்காரன் தூங்குகிறானே?" என்று பொலபொல என்று அடித்துக் கொள்வான்.
ஸர் ராபர்ட் புரூக் போப்ஹாம், "மலாய் நாடு யுத்தத்துக்குத் தயார்" என்று சொன்ன போதெல்லாம், யு.பி. ராகவாச்சாரி தலையில் போட்டுக் கொள்வான். "இந்தப் பொறுக்கி எடுத்த அசட்டைச் சேனாதிபதியாக அனுப்பியிருக்கிறார்களே!" என்பான். "ஏன்?" என்று கேட்டால், "யுத்தத்துக்குத் தயாராமே தயார்! ஆகாச விமானம் எத்தனை இவர்களிடம் இருக்கிறது? ஆயிரம் பதினாயிரம் ஐம்பதினாயிரம் என்று ஆகாச விமானங்கள் வந்து ஆகாசத்தை மறைக்கும் போதல்லவா யுத்தத்துக்கு நாம் தயார் என்று சொல்லலாம்" என்பான்.
"ஜப்பான் தான் சைனாவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறதே!" என்று சொல்லிவிட்டால் போதும், உடனே ராகவாச்சாரிக்கு பிரமாத கோபம் வந்துவிடும். "அட பைத்தியக்காரப் பிள்ளை! யார் சொன்னது? சைனாவிலே ஜப்பான்காரன் யுத்தமா செய்கிறான்? பிரிட்டனுடனும் அமெரிக்காவுடனும் சண்டை போடுவதற்காகச் சீனாவை ராணுவப் பயிற்சிக் கூடமாகவல்லவா உபயோகிக்கிறான்?"
இன்னும் அவனுடைய நோட்டுப் புத்தகத்தில், யுத்த 'மாப்பு'களுடன் சண்டை விமானம் பாம்பர் விமானம் முதலிய படங்களை ஒட்டி அவற்றின் கீழ் 'ஜப்பானை முறியடிக்க இம்மாதிரி 20,000 விமானம் வேண்டும்" என்று ஏதாவது எழுதி வைத்திருந்தான்.
கடைசியில் ஜப்பானுக்கும் பிரிட்டனுக்கும் உண்மையாகவே யுத்தம் ஆரம்பமானபோது யு.பி. ராகவாச்சாரியின் பைத்தியம் தலைக்கேறி விட்டது. யுத்தம் ஆரம்பித்தவுடன் நான் தமையன்மார்களுடன் ஆலோசனை செய்வதற்காக, மோல்மீனிலிருந்து ரங்கூனுக்குப் போயிருந்தேன். அப்போது யு.பி. ராகவாச்சாரி என்னை பிடித்துக் கொண்டான்.
"இதைக் கேள் வரதா! இனிமேல் பிறத்தியாரை நம்பியிருப்பதில்லையென்று தீர்மானித்து விட்டேன். ஆகாச விமானப் படை தயாரிக்க நானே ஆரம்பித்து விட்டேன்!" என்றான்.
நான் இதை அலட்சியம் செய்தது ராகவாச்சாரிக்குப் பொறுக்கவில்லை. என் கையைப் பிடித்து, அவனுடைய வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போனான். வீட்டில் ஜன்னல் எல்லாம் அடைத்து இருட்டாக வைத்திருந்த ஒரு அறையைத் திறந்து காட்டினான்.
"இதென்ன ஆகாசத் தாக்குதலுக்கு ஒளிந்து கொள்ளும் இடமா?" என்று கேட்டேன்.
"சீச்சீ நன்றாய்ப் பார்! அதோ என் ஆகாசப்படை!" என்றான் ராகவாச்சாரி. எவ்வளவோ உற்றுப் பார்த்தும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. மேல் கூரையில் நாலைந்து வௌவால் தொங்கிக் கொண்டிருந்தது மட்டும் தெரிந்தது.
"அதோ பார்த்தாயா?" என்று ராகவாச்சாரி வௌவாலைச் சுட்டிக் காட்டினான்.
"ஆஹா! டைவ் பாம்பிங் (Dive Bombing) பார்த்தாயா!" என்று ராகவாச்சாரி கதறினான்.
இன்னொரு வௌவால் சிறகை அடித்துக் கொண்டு பறந்து, அறையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுப் போய் மறுபடியும் கூரையில் தொத்திக் கொண்டது.
அது பறந்த போது "பார்த்தாயா, ரோந்து விமானத்தை! Reconnaissance Flight செய்துவிட்டுப் போகிறது! ஜப்பானை ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்!" என்றான்.
"பார்த்துக் கொண்டே இரு; அந்த ஜப்பான் குள்ளன் ரங்கூனுக்கு வருவதற்குள், இந்த மாதிரி இருபதினாயிரம் சண்டை விமானம் தயார் செய்து விடுகிறேன். அப்புறம் எதிரி விமானங்கள் எல்லாம் தவிடு பொடிதான்!" என்றான்.
ஒவ்வொரு வௌவாலின் கழுத்திலும் ஒரு சீட்டுக் கட்டித் தொங்குவதை அப்போதுதான் பார்த்தேன். "அது என்ன சீட்டு?" என்று கேட்டேன். ராகவாச்சாரி சட்டைப் பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்தான். அதில் 'ஜப்பானே! ஓடிப்போ!' என்று எழுதியிருந்தது.
பைத்தியம் தலைக்கேறி விட்டது என்று நினைத்துக் கொண்டு நான் மோல்மீனுக்குப் போய்விட்டேன்.
அப்புறம் இரண்டு நாளைக்கொரு தடவை யு.பி. ராகவாச்சாரியிடமிருந்து எனக்குக் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் "ஐம்பது விமானம் தயார்; நூறு தயாராகி விட்டது" என்று எழுதிக் கொண்டிருந்தான்.
ஒரு நாள் தபாலாபீஸில் எனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்கிறார்களென்று தெரிய வந்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கெல்லாம் யு.பி. ராகவாச்சாரியை ஐந்தாம் படைக்காரன் என்று சந்தேகித்துக் கைது செய்து விட்டார்களென்று பத்திரிகைகளில் வெளியாயிற்று.
மோல்மீனில் ஜப்பான் தாக்குதல் ஆரம்பித்ததும் நான் என் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். வரும் வழியில் ரங்கூனில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது. அங்கே யு.பி. ராகவாச்சாரியைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். விசாரித்ததில் அவனை அதிகாரிகள் 'அபாயமற்ற பைத்தியம்' என்று தீர்மானித்து, விடுதலை செய்துவிட்டதாகத் தெரிந்தது. "வரதா! இன்று இராத்திரி நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!" என்று சொல்லி விட்டு ராகவாச்சாரி போய் விட்டான். அவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேனென்று பிடிவாதமாக இருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்றெண்ணி நான் ஒருவாறு ஆறுதல் அடைந்தேன்.
அன்று இரவு ரங்கூனில் ஆகாச விமானத் தாக்குதல் நடந்தது. அதனால் நாசமான வீடுகளில் ஒன்று என் நண்பன் ராகவாச்சாரி இருந்த வீடு என்று மறுநாள் காலையில் அறிந்து மிகவும் துக்கப்பட்டேன். "பாவம்! அவன் என்ன கதியானானோ? அவனுடைய இருட்டறையில் இருந்த ஆகாசப் படைதான் என்ன கதியடைந்ததோ?" என்று வருந்தினேன்.
இந்த விமானத் தாக்குதலில் ஒரு ஜப்பான் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாகக் கேள்விப்பட்டேன். அங்கு விழுந்த ஜப்பான் விமானத்தைப் பார்ப்பதற்காகப் போன தமையன்மார்களுடன் நானும் போனேன்.
விமானத்தைச் சுற்றி வந்த போது, அதன் என்ஜினில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு பொருளின் மீது தற்செயலாக என் பார்வை விழுந்தது. உற்றுப் பார்த்தபோது அது வௌவாலைப் போல் தோன்றியது. சொல்ல முடியாத ஆவலுடன் அதன் அருகில் சென்று பார்த்தேன். என்ன ஆச்சரியம்! என்ன அற்புதம்! அது வௌவால்தான். அதன் கழுத்தில் ஒரு சீட்டும் இருந்தது! அதில் "ஜப்பானே ஓடிப்போ!" என்று எழுதி இருந்தது.
மேற்படி ஜப்பான் விமானம் என்ன காரணத்தினால் கீழே விழுந்தது என்பது சரியாகத் தெரியவில்லையென்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், எனக்கு அது தெரிந்துவிட்டது. யு.பி. ராகவாச்சாரியின் வீடு இடிந்த போது அதன் இருட்டறையில் அடைந்து கிடந்த வௌவால்கள் வெளிக் கிளம்பியிருக்க வேண்டும்! அவற்றில் ஒன்று இசைகேடாக விமானத்தின் இன்ஜின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே அந்த ஜப்பான் விமானம் விழுந்திருக்க வேண்டும்.
இப்போது நீங்களே சொல்லுங்கள்! யு.பி. ராகவாச்சாரி பைத்தியமா? அவனைப் பைத்தியமென்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பைத்தியமா?