raza rajavai sandikkiran

ரசா ராஜாவைச் சந்திக்கிறான்

ரசாவின் தந்தை ரஹ்மத் கான் முகலாய பேரரசர் அக்பரின் ஆஸ்தான தையற்காரர். ஆடைகளின் விஷயத்தில் கருத்தாக இருக்கும் பேரரசர் அக்பர் ரஹ்மத்திடம் கோடைகாலத்திற்கான உடுப்புகளைக் கேட்டிருந்தார். ரசா புது ஆடைகளைக் கொடுப்பதற்காகத் தன் தந்தையுடன் அரண்மனைக்குச் சென்றான். அரண்மனையில் பேரரசருக்குத் தயாரித்திருந்த ஆடைகளில் அவ்வளவு திருப்தி இல்லை என்று உணர்ந்து, துரிதமாக ஒரு கெட்டிக்காரத்தனமான தீர்வை அளிக்கிறான். ரசா எப்படி சமாளிக்கிறான் என்று அறிய, முகலாய இந்தியாவைப் பின்னணியாகக் கொண்ட இந்த அருமையான கதையைப் படியுங்கள்.

- Mahalakshmi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அன்று ஒரு விசேடமான நாளாக இருந்ததால் ரசா அவனுடைய ஆடைகளிலேயே மிகச் சிறந்த ஒன்றை அணிந்திருந்தான். அன்று அவன் வெகு முக்கியமான ஒருவரைச் சந்திக்கவிருந்தான். அவர்தான் முகலாயப் பேரரசர் ஜலாலுதீன் அக்பர்.

ரசாவின் தந்தை ரஹ்மத் கானும் ஒரு முக்கியமான நபர்தான். பேரரசர் தனது ‘சுரிதார்’ எனும் உடலுக்கு நெருக்கமான கால் சராயின் மேல் அணிந்துகொள்ளும் ‘அங்கராகா’ எனப்படும் தொள தொள ஜிப்பாவைத் தைத்துக்கொடுப்பவர். அவர்தான் அரச குடும்பத்தினரின் ஆஸ்தான தையற்காரர்.

அன்று காலை ரசாவும் அவன் தந்தையும் பத்தேபூர் சிக்ரியில் உள்ள ராஜ அரண்மனைக்குச் செல்லவிருந்தார்கள். கோடைக்காலத்தை முன்னிட்டு பேரரசர் அக்பர் தைக்கச் சொல்லியிருந்த அங்கராகாக்களை எடுத்துச் செல்லவிருந்தனர். பேரரசர் அக்பர் தான் அணியும் ஆடை விஷயத்தில் மிகவும் கருத்தானவர் என்பதால், அவரைத் திருப்திப்படுத்துவது கடினம்.

ரஹ்மத் கான் கடுமையாக உழைத்து நள்ளிரவு வரை துணியை அளவெடுத்து, வெட்டி, தைத்து அங்கராகாக்களைத் தயார் செய்திருந்தார். ரசாவும் அவன் பங்கிற்கு மிகச் சிறந்த பட்டு நூல் வைத்து மிக மெலிதான ஊசி கொண்டு ஆடைகளில் சிறு சிறு தையல்கள் போட்டு இருந்தான்.

வசந்தகால சூரியன் ஜொலித்துக் கொண்டிருந்தது, பூக்கள் மலர்ந்து இருந்தன. புறாக்களும் மகிழ்ச்சியாக ஆனந்த கீதம் பாடிக்கொண்டிருந்தன. ரசாவும் அவன் தந்தையும் பத்தேபூர் சிக்ரியில் உள்ள கோட்டைக்கு நடந்து சென்றனர். கோட்டையின் நுழைவாயிலில் இரண்டு வீரர்கள் ஈட்டி தாங்கி காவல் காத்திருந்தனர்.

“நான்தான் ரஹ்மத் கான்” என்று அறிவித்தார் ரசாவின் தந்தை, “நான் மதிப்புக்குரிய பேரரசரின் தையற்காரன். பேரரசருக்கு புது அங்கராகாக்கள் தைத்து எடுத்துக்கொண்டு வந்துள்ளேன்.”

“ராஜ கம்பீர அக்பர் பேரரசர் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாரா?” என்று பெரிய மீசை அணிந்த காவல்காரர் கேட்டார்.

“ஆம், உசூர், பேரரசர் தாமே ஆடைகளின் அமைப்பைத் தேர்ந்தெடுத்தார்.”

“இங்கேயே நில்லுங்கள்! நான் ராஜசேவகரைக் கூப்பிடுகிறேன்” என்று சொல்லி உள்ளே செல்லத் திரும்பினார் காவலர்.

சிறிது நேரம் கழித்து, உட்சென்ற காவலர் வேறொரு நபருடன் திரும்பினார். ரஹ்மத் கான் வந்தவரைக் குனிந்து வணங்கினார். “நான் கோடைக்காலத்திற்கான ஆடைகள் எடுத்துவந்துள்ளேன், தனிஜி.”

“நல்லது! என்னோடு வாருங்கள். பேரரசர் இன்னமும் அவரது படுக்கையறையிலேதான் இருக்கிறார். ராஜசபைக்குச் செல்லும் முன்னே உங்களைச் சந்திப்பார்.”

தனி சிங்கை அவர்கள் பின்தொடர்ந்து நடக்க, ரசா மெல்லியதாக கேட்டான் “அப்பு, யார் இவர்?”

“தனி சிங். இவர் க்வாப்கர்ரில் வேலை செய்பவர்.”

“க்வாப்கர்ரா?”

“ஆம், பேரரசின் தனிப்பட்ட அரண்மனை. அங்கே அவரது படுக்கையறை மற்றும் உட்கார்வதற்கான அறைகள் உள்ளன.”

அவர்கள் நீண்ட தூரம் நடந்தனர். ரசா நடந்தபடி தன்னைச் சுற்றிப் பார்த்தான். அவன் கண்கள் அதிசயத்தால் விரிந்தன. முகலாய அரண்மனைகள்தான் எவ்வளவு அழகு! எல்லா மாளிகைகளும் சிவப்புநிற மணற்கல் கொண்டு செய்யப்பட்டிருந்தன, செதுக்கப்பட்ட மெல்லிய தூண்களோடும் தாழ்வான வளைவுகளோடும் இருந்தன.

இவற்றின் நடுவே பூநிறைந்த தோட்டங்களும் அல்லிக்குளங்களும் பளிச்சிடும் நீரருவிகளும் அழகூட்டின.

ரசாவின் மனதில் அவன் சொர்க்கத்தில் இருப்பதைப் போல் தோன்றியது. அவர்கள் பேரரசரின் படுக்கையறையின் கதவருகில் காத்திருக்கும்போது ரசா தனி சிங்கைக் கூர்ந்து பார்த்தான்.

தையற்காரரின் மகனாக இருப்பதால் அவன் முதலில் ஆடைகளைக் கவனித்தான். தனி சிங் பருத்தியில் நெய்யப்பட்ட, வெள்ளையும் சிவப்புமான பூக்கள் பதிக்கப்பட்ட துணியில் அங்கராகா ஒன்றை அணிந்திருந்தார். கீழாடையாய் வெள்ளை நிறச் சுரிதார் அணிந்திருந்தார்.

அவரது ‘நகரா’ காலணிகளின் நுனிகள் கூர்மையாகவும் உள்நோக்கி வளைந்தும் இருந்தன. இடுப்பில் ‘பட்கா’ என்ற சிறிய துணிப்பட்டையைக் கட்டியிருந்தார்.

ஆனால் ரசாவிற்கு அவரின் தலைப்பாகைதான் மிகவும் பிடித்திருந்தது - பளிச்சென்ற சிவப்பு நிறம்கொண்ட துணியில் வெள்ளை, மஞ்சள் நிறங்களில் சதுரங்களும் புள்ளிகளும் கொண்டிருந்தது.

“உங்கள் தலைப்பாகை மிகவும் நன்றாக இருக்கிறது, தனிஜி” என்றான் ரசா. “அதன் வடிவமைப்பு மிகவும் அழகாக இருக்கிறது.”

“நன்றி! நான் ராஜபுத்திரர்கள் நாட்டைச் சேர்ந்தவன். இந்த தலைப்பாகையின் வடிவமைப்பை பாந்தனி என்று எங்கள் நாட்டவர்கள் சொல்வார்கள்.”

அறைக்குள் நுழைகையிலே ரசாவின் இதயம் தப்-தப் என்று அடித்துக்கொண்டது. அறையிலிருந்த வளைவு நுழைவாயில்களிலிருந்து சூரிய ஒளி பரந்து, தரையில் விரித்திருந்த பாரசீக நாட்டின் தடியான, மெத்தென்ற தரைவிரிப்பு பல வண்ணங்களுடன் மிளிர்ந்தது. அறையில் இருந்த சாமான்களில் நுணுக்கமாக செதுக்கிய கட்டிலும், அற்புதமான நாற்காலிகளும் இருந்தன. தாழ்மட்டமான கட்டிலின் மீது பட்டு, தங்க சரிகைகளாலான தலைகாணிகள் இருந்தன. அவ்வறையின் திரைச்சீலைகள் கூட பட்டால் நெய்யப்பட்டவை!

ரசா தலை வணங்கி, பின்னர் பேரரசரைப் பார்த்தான். சேவகன் ஒருவன் கையில் ஏந்திய நகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தார் பேரரசர் அக்பர்.

தோற்றத்தில் பேரரசர் அக்பர் பெரிதாக உயரமானவர் இல்லை. ஆனால் அவர் வாட்சண்டை வீரர்களுக்குரிய திரண்ட தோள் கொண்டிருந்தார். அவரது கண்கள் பெரிதாகவும் சற்றே சரிந்தும் இருந்தன. மீசை கீழ்நோக்கித் தொங்கியிருந்தது. உதட்டின் மேல் சிறு மச்சம் ஒன்று இருந்தது.

இவர்கள் உள்ளே வரும் சத்தம் கேட்டு, அக்பர் திரும்பினார்; பார்த்துச் சிரித்தார், “ஆ! ரஹ்மத்! என்னுடைய அங்கராகாக்களை எடுத்து வந்திருக்கிறாயா! உன் கூட வந்திருக்கும் பையன் யார்?”

“என் மகன் ரசா, உசூர்”

“உனக்கு தைக்கத் தெரியுமா, ரசா?”

“கற்றுக்கொண்டிருக்கிறேன், உசூர்” என்றான் ரசா நடுக்கத்துடன், “ஆனால் இன்னம் கூட துணி வெட்டுவதில் தவறு செய்கிறேன்.”

“கற்றுக்கொள்வாய். உனது தந்தை உனக்கு கற்பிப்பார்” என்று மென்மையாகச் சொன்னார் அக்பர்.

எடுத்து வந்திருந்த மூட்டையை ரஹ்மத் பிரித்து அங்கராகாக்களை படுக்கையின் மீது பரப்பிக் காட்டினார்.

எல்லா ஆடைகளும் உயர்தரமான, மென்மையான மஸ்லின் துணியால் செய்யப்பட்டு நூலால் அலங்காரத் தையல்கள் போடப் பட்டிருந்தன. அனைத்தும் கோடை காலத்திற்கு ஏற்ப குளிர்ச்சியான நிறங்களில் இருந்தன-பழுப்பு நிறம், எலுமிச்சைப் பழ நிறம், வெளிர் நீலம், பச்சை மற்றும் ஜொலித்திடும் வெள்ளை. பேரரசருக்கு வெள்ளையே பிடித்தமான நிறம் என்று ரசாவிற்குத் தெரியும்.

ரஹ்மத் வெள்ளைநிற அங்கராகாவை அக்பர் பேரரசருக்கு அணிவித்தார். தனி சிங் மாமன்னர் தம்மை பார்த்துக் கொள்வதற்காக பெரிய கண்ணாடி ஒன்றை எடுத்து வந்தார்.

“இதன் நூல் வேலைப்பாடு எனக்குப் பிடித்திருக்கிறது... அளவும் சரியாக உள்ளது” என்றார் மாமன்னர் பூரிப்புடன், ”இப்பொழுது பட்கா ஒன்றைக் கட்டிவிடு. எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.”

கைநிறைய பட்காக்களை எடுத்து, வெளிர்நீல நிறத்தில் ஒன்றை அக்பரின் இடுப்பில் கட்டி, நுனிகளை முன்னே தொங்கும்படி செய்தார் ரஹ்மத்.

“ஹீம், இல்லை...” என்றார் அக்பர் உற்சாகமின்றி “இதன் நிறம் மிகவும் வெளுப்பு... எனக்கு ஏதாவது பளிச்சென்று வேண்டும்.”

ரசாவும் அவன் தந்தையும் ஒன்றை மாற்றி ஒன்று இருந்தவை அனைத்தையும் அணிவித்தனர்- பச்சையும், மஞ்சளும், காவிநிறமும், ஊதாவும்.

ஆனால் பேரரசருக்கு ஒன்றுகூட பிடிக்கவில்லை. “எனக்கு எந்த நிறமும் பிடிக்கவில்லை, ரஹ்மத்!” என்றார். பொறுமையிழந்த மாமன்னர் முகம் சுளித்தார். தந்தை கவலையுற்றுத் தோன்றுவதை கவனித்தான் ரசா. அடடா! மன்னருக்கு பட்காக்கள் பிடிக்கவில்லையென்றால் எல்லா ஆடைகளையும் திரும்பக் கொடுத்துவிடுவாரோ? என்று எண்ணினான். சீக்கிரம் ஏதாவது செய்யவேண்டுமே.

சுற்றிப் பார்த்துவிட்டு சட்டென்று கூறினான்,

“உசூர், பளிச்சென்ற சிவப்பு நிறத்தில் வெள்ளையும் மஞ்சளுமான சதுரங்களும் புள்ளிகளும் போட்ட பட்கா ஒன்றை அணிந்து பார்க்க தங்களுக்கு விருப்பமா?”

“எம்மாதிரியான சிவப்பு?” என்று அக்பர் கேட்டார்.

“காண்பி.” ரசா தனிசிங்கின் தலைப்பாகையைச் சுட்டிக் காட்டினான், “அந்தச் சிவப்பு.”

“ஹம்ம்…” என்றார் அக்பர் யோசித்தபடி, தனியின் மீசைக்கூடிய முகத்தை பார்த்து. “அணிந்துதான் பார்க்கலாமே!”

ஒரு நொடியில் ரசா தனி சிங்கின் தலைப்பாகையை உருவி அதன் மடிப்பைப் பிரித்து, அக்பரின் இடுப்பில் கட்டினான். பேரரசர் தனது உருவத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது ரசா மூச்சைப் பிடித்துகொண்டு காத்திருந்தான். அவன் தனி சிங் பெரிதாகச் சிரிப்பதைக் கவனித்தான்-மாமன்னர் தம்முடைய தலைப்பாகையை பட்காவாக அணிந்தது அவருக்கு வேடிக்கையாக இருந்திருக்கும்.

“எனக்கு இந்த நிறம் பிடித்திருக்கிறது.. வடிவமைப்பும் கூடப் புதிதாக இருக்கிறது!” என்றார் அக்பர் முடிவில்.

“பாந்தனி, உசூர்... ராஜபுத்திரர்கள் நாட்டிலிருந்து” என்றான் ரசா உடனடியாக.

“ஆஹா! என்னுடைய ராணி ஜோதா பாயைப்போல் இதுவும் ராஜபுத்திர நாட்டைச் சேர்ந்ததா!” என்று மாமன்னர் உதடு விரித்து புன்னகை புரிந்தார். “தனி, அங்கராகாக்களுக்கும் பட்காக்களுக்கும் ஆன தொகையை ரஹ்மத்திடம் கொடுத்துவிடு. நான் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறேன்!”

“உசூர்” என்று மெதுவாக ஆரம்பித்தான் ரசா, ”தனிஜியின் தலைப்பாகையை நாம் எடுத்துக்கொண்டு விட்டோம். அவருக்கு ஒரு தலைப்பாகை வேண்டியிருக்கிறது.”

“ஒரு பட்காவை எடுத்துக்கொடு” என்று சிரித்தார் அக்பர். “வெளிர் நீல நிறத்தில் ஒன்று இருந்ததே சுவாரசியமற்று, அதைக் கொடு. அவன் தலைப்பாகைத் துணியை நானே வைத்துக்கொள்ளப்போகிறேன்.”

விநோதமான வரலாற்றுக் குறிப்புக்கள்

1. ரசா வாழ்ந்தது 400 வருடங்கள் முன்பு, பேரரசர் அக்பரின் ஆட்சிக் காலத்தில். அக்பர் முகலாய மன்னர்கள் வரிசையிலேயே மகத்தானவர். அவர் சிறந்த போர்வீரர் கூட அவருக்கு புதுப் புது அமைப்புகளில் ஆடைகள் அணியப் பிடிக்கும். பட்டம் விடுவதும், மாம்பழங்கள் சாப்பிடுவதும் கூட அவருக்குப் பிடித்தமானவை.

2. பாபர், முகலாய வம்சத்தைத் தொடங்கியவர், காபுல் நாட்டின் அரசனாக இருந்தார். அவர் பானிபத் போரில், 1526ம் ஆண்டு தில்லியில் அரசராக இருந்த இப்ராஹிம் லோதியைத் தோற்கடித்து, இந்திய நாட்டைக் கைப்பற்றினார். பாபரின் பேரன்தான் அக்பர். அவரும் சிறந்த போர்வீரராக இருந்தார். அவரது 49 ஆண்டுகால ஆட்சியில் ஒருமுறைகூட தோல்வியுற்றது இல்லை.

3. இரண்டு முகலாய மன்னர்கள் புதிய மாநகரங்கள் கட்டினார்கள். பத்தேபூர்சிக்ரி என்ற நகரத்தை அக்பர் ஆக்ராவிற்கு அருகே கட்டினார். பின்னர் ஷாஜஹான் ஷாஜஹானா பாத் என்ற நகரை தில்லி அருகே கட்டினார். பத்தேபூர்சிக்ரியில் இன்று ஒருவரும் வசிப்பதில்லை. ஷாஜஹானாபாத் என்ற இன்றைய பழைய தில்லியிலோ. மக்கள் திரள் திரளாக வலம் வருகின்றனர்.

4. ஷாஜஹானின் மயில் அரியாசனம் சதுரவடிவமும் தட்டையான அமருமிடமும் கொண்டது. அதன் ஒவ்வொரு கோணங்களிலும் மெல்லிய தூண்கள் உண்டு. விலை மதிப்புபெற்ற ரத்தினங்கள் பதிக்கப்பட்ட தூண்கள் அவை. அமருமிடத்தின் மேல் இருந்த சப்பரத்தில் மயில் வடிவம் ரத்தினங்களால் இழைக்கபட்டிருக்கும். பேரரசர் சப்பரத்தின் அடியில், பட்டு திண்டுகளில் சாய்ந்தவாறு அமர்வார்.

5. முகலாய ராஜகுமாரிகளில் பலர் படித்தவர்களாக இருந்தனர். குல்பதன் பேகம் அவரது தந்தையான பாபரின் வரலாற்றை எழுதினார். ஷாஜஹானின் மகள் ஜஹனாரா ஒரு தேர்ந்த கவியாக இருந்தார்.

6. முகலாயக் கோட்டைகளில் நிறைய அடுப்பறைகள் இருப்பதுண்டு. ஒவ்வொரு அடுப்பறையிலிருந்தும் உணவு பேரரசருக்கு பரிமாறப் படும். எனவே, உணவு அருந்த உட்கார்ந்த மன்னருக்கு குறைந்தது முப்பது வகையான தயாரிப்புகள் காத்துக்கொண்டிருக்கும். நாக்கில் நீர் ஊறும் முகலாயச் சமையல் வகைகளான பிரியாணி, புலாவ், கலியா மற்றும் குருமா ஆகியவை இந்த அடுப்பறைகளின் கண்டுபிடிப்புகள்தான்.