raziyavin neechal payircchi

ரசியாவின் நீச்சல் பயிற்சி

ரசியா நீந்தப் பழக வேண்டும். ஆனால் அவளுக்குத் தண்ணீரைக் கண்டாலே பயம். நீங்களும் ரசியாவோடு காயலில் இறங்கி கால்களை உதைக்கவும், சுழலவும், மிதக்கவும் பழகுங்கள்.

- Livingson Remi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ரசியாவும் அவளது உம்மச்சியும் சமுத்திரத்துக்கு நடுவிலிருக்கும் ஒரு தீவில் வசிக்கிறார்கள்.

ரசியா நீச்சல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அவளது அம்மா ஆசைப்பட்டார். ஆனால் ரசியாவுக்கு தண்ணீரில் இறங்க பயம். சமுத்திரம் மிகமிகப் பெரியது, ஆழமானது!

அன்று, கடலில் அலைகள் குறைவாக இருந்தன. அதனால் உம்மச்சி ரசியாவை காயலுக்கு அழைத்துச் சென்றார். “ரசியா, பயப்படாமல் இறங்கு. காயலில் ஆழமில்லை” என்றார் உம்மச்சி. “நான் அடுத்தமுறை நீச்சல் கற்றுக்கொள்கிறேன், உம்மச்சி! இப்போது வேண்டாமே” என்று கெஞ்சினாள் ரசியா.

“பயப்படாதே ரசியா. மற்ற உயிரினங்கள் எல்லாம் எப்படி நீந்துகின்றன, பார். அவற்றைப் போல கைகளையும் கால்களையும் அசைக்க முயற்சி செய்” என்றார் உம்மச்சி.

ரசியா தண்ணீருக்குள் உற்றுப் பார்த்தாள். அவளைச் சுற்றி பல வண்ணமயமான உயிரினங்கள் இருந்தன!

தூ! கடல் நீர் உப்புக் கரிக்கிறது.

ரசியா ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டு தண்ணீருக்குள் முங்கினாள்.

உம்மச்சி சொன்னதைப் போல, உயிரினங்கள் நீந்துவதைக் கவனித்தாள்.

அவளை ஒட்டி ஒரு குட்டி ஆமை சென்றது. அது தன் பின்னங்கால்களை உதைத்து, துடுப்புப் போன்ற முன்னங்கால்களால் நீரை விலத்தியபடி நீந்திச் சென்றது.

ரசியா குட்டி ஆமையைப் போல் நீந்த முயன்றாள். எதிர்பாராமல் கொஞ்சம் நீரை விழுங்கிவிட்டாள்.

“உம்மச்சி, இந்தத் தண்ணீர் எரிச்சலை ஏற்படுத்துகிறது” என்றாள் ரசியா.

“பழகிவிட்டால் தெரியாது” என்றார் உம்மச்சி.

அடுத்த நாள், குட்டி ஆக்டோபஸ் ஒன்று வேகமாகக் கடந்து சென்றது. அது நீரை உள்ளிழுத்து, பின்னர் தன் எட்டு கால்களையும் சேர்த்து முன்னே சென்றது. ரசியா ஆக்டோபஸைப் போல் நீந்த முயன்றாள்.

“நான் கால்களை உதைப்பதைப் பாருங்கள், உம்மச்சி!” என்று கத்தினாள் ரசியா. “நன்றாகச் செய்கிறாய்! தொடர்ந்து முயற்சி செய்.”

அவள் சிறிது நீரை விழுங்கிவிட்டாள். உவ்வே! இருந்தும் விடாமல் முயன்றாள்.

அடுத்த நாள், அவளருகே ஒரு திருக்கை மீன் தன்னுடைய முக்கோண இறக்கைகளை அடித்தபடி நீந்திச் சென்றது. ரசியா திருக்கை மீனைப் போல நீந்த முயன்றாள். அவள் சிறிது நீரை விழுங்கிவிட்டாள். கொஞ்சமாக மூழ்கியும் எழுந்தாள் - ப்ளப் ப்ளப் ப்ளப்.

“உம்மச்சி, இது மிகவும் கஷ்டமாக இருக்கிறது” என்றாள் ரசியா. “விடாமல் முயற்சி செய், ரசியா!” ரசியா மீண்டும் முயன்றாள். மீண்டும், மீண்டும்.

அடுத்த நாள், அவளருகே சில மிதவை நுண்ணுயிரிகள் மிதந்து சென்றன. அவற்றுக்கு இறக்கைகளோ துடுப்புகளோ இல்லை. அவை அலையோடு மிதந்து சென்றன. ரசியா கைகளையும் கால்களையும் விரித்தாள். மிதவை நுண்ணுயிரிகளைப் போல மிதந்தாள்.

“உம்மச்சி! நான் மிதப்பதைப் பாருங்கள்!” என்று கத்தினாள் ரசியா.

“அற்புதம், ரசியா!”

அடுத்த நாள், விலாங்கு மீன் ஒன்று சுழன்றபடி கடந்து சென்றது. அது இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பாம்பைப் போல் அசைந்து, அசைந்து சென்றது. ரசியா விலாங்கு மீனைப் போல நீந்த முயன்றாள். “ரசியா, நீ நீந்துகிறாய்!” என்றார் உம்மச்சி.

அடுத்த நாள், பறக்கும் மீன் ஒன்று பாய்ந்து சென்றது. அது காற்றைக் கிழித்துக் கொண்டு பறந்தது. ரசியா பறக்கும் மீனைப் போல நீந்த முயன்றாள். அவள் வேகமாக கைகளை அடித்துக்கொண்டு எழும்பி, தண்ணீரில் விழுந்தாள். “கை கால்கள் எல்லாம் வலிக்கின்றன, உம்மச்சி!” என்றாள் ரசியா.

“நீந்தும் பொழுது சரியாக மூச்சுவிட ஞாபகம் வைத்துக்கொண்டால், உன்னுடைய கை கால்கள் நிதானமாக அசையும். அப்போது அவ்வளவாக வலிக்காது.”

அடுத்த நாள், அவளருகே ஒரு டால்ஃபின் நீரைக் கிழித்துக்கொண்டு சென்றது. அது நீரின் மேல் மட்டத்திற்கு வந்து, ஆழமாக மூச்சை இழுத்துக்கொண்டு மீண்டும் நீருக்குள் மூழ்கியது.

ரசியா டால்ஃபினைப் போல நீந்த முயன்றாள். அவள் தலையை உயர்த்தி காற்றை இழுத்துக்கொண்டு நீருக்குள் சென்றாள்.

நாட்கள் செல்லச் செல்ல, ரசியா மேலும் பல உயிரினங்கள் நீந்துவதைக் கவனித்து வந்தாள். அவள் புதிதாக நிறைய அசைவுகளைத் தெரிந்து கொண்டாள்.

இப்போது ரசியாவால் உதைக்க முடியும். மிதக்க முடியும். சுழல முடியும். மூழ்கிச் செல்ல முடியும். அவளால் நீண்ட நேரத்துக்கு மூச்சுப் பிடிக்கவும் முடியும். அவள் இன்னும் இன்னும் வேகமாக நீந்துகிறாள்.

“ரசியா, நேரமாகிவிட்டது போகலாம், வா!” என்று கத்தினார் உம்மச்சி.

“இன்னும் கொஞ்ச நேரம் நீந்திவிட்டு வருகிறேன். தயவு செய்து விடுங்களேன், உம்மச்சி!”

நீச்சலடிக்கத் தெரியுமா?

வெவ்வேறு வகையான உயிரினங்கள் வெவ்வேறு முறைகளில் நீரில் செல்கின்றன.

சூரை மற்றும் டால்ஃபின் மீன்கள், நீரைக் கிழித்துக்கொண்டு வேகமாக செல்லும் உடல்வாகு கொண்டவை.

மிதவை நுண்ணுயிரிகள் மிதந்தபடியே நீரடித்துச் செல்கின்ற இடங்களுக்கு செல்லும்.

கணவாய்கள் மற்றும் ஆக்டோபஸ்கள் நீரை உள்ளே இழுத்து வேகமாக வெளியே செலுத்தும்.

இதில் சில அசைவுகளை, அடுத்த முறை நீரில் இறங்கும் போது முயன்று பாருங்கள்.

திருக்கை மீன் தன்னுடைய இறக்கைகளை அடித்துக்கொண்டு செல்லும்.

நண்டுகளும் சிங்கி இறால்களும் கடல்தரையின் மேல் நடந்து செல்லும்.

பறக்கும் மீன் தன்னைச் சாப்பிடக் காத்திருக்கும் உயிரினங்களிடமிருந்து தப்பிப்பதற்காக நீரின் மேல் தாவிச் செல்லும்.