repair mela

ரிப்பேர் மேளா

முதலில் சட்டை கிழிந்தது, அடுத்தது இஸ்திரிப் பெட்டி வேலை செய்யவில்லை. காலை விடிந்ததில் இருந்தே ஷ்யாமுக்கு ஒன்றன்பின் ஒன்றாக சிக்கல்கள்! அவனுடைய தோழி ஸ்ரீஷா அவனை ரிப்பேர் மேளாவுக்கு அழைத்துச் சென்று பலவற்றையும் நாமே எப்படி சரிசெய்வது எனக் காண்பிக்கிறாள்!

- Sneha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டர்ர்ர்ர்ர்...

“அய்யோ” என்று கத்தினான் ஷ்யாம். அவனுக்கு மிகவும் பிடித்த சட்டையில் தையல் பிரிந்துவிட்டது.  “இதை என்னால் இனிமேல் போட்டுக்கொள்ள முடியாது, தாத்தா!”

“அதெல்லாம் போட்டுக்கலாம்டா, மடையா!” என்றார் தாத்தா. “நாம் இதை சரிசெய்துவிடலாம்.”

தாத்தா ஒரு ஊசியையும் நீல நூல்கண்டையும் எடுத்தார். பிரிந்திருக்கும் தையலை எப்படி சரி செய்வது என ஷ்யாமுக்கு சொல்லிக்கொடுத்தார்.

ஷ்யாமின் தோழி ஸ்ரீஷா அவன் வீட்டுக்கு வந்தாள். “சைக்கிள் ஓட்டப் போகலாம் வா” என்றாள். “ஒரு நிமிடம். நான் என்னுடைய சட்டையை இஸ்திரி செய்துகொள்கிறேன்.”

அவன் இஸ்திரிப் பெட்டியை ஆன் செய்தான். ஆனால், இஸ்திரிப் பெட்டியில் இருக்கும் விளக்கு எரியவில்லை, அது சூடாகாமலேயே இருந்தது.

“ப்ச்ச்! நான் இந்த கசங்கிய சட்டையையே போட்டுக் கொள்கிறேன்” என சலித்துக் கொண்டான் ஷ்யாம். “நான் போன வாரம் ரிப்பேர் மேளாவுக்குப் போனேன். என்னுடைய அண்ணன் படிக்கும் கல்லூரியில் வேதியியல் கற்பிக்கும் ஜார்ஜ் மாமா, ஒரு இஸ்திரிப் பெட்டியை சரி செய்து கொண்டிருந்தார். நான் அவர் பக்கத்திலேயே நின்று அவர் செய்வதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். நாமே இதை சரி செய்யலாம், வா! உன்னிடம் ஸ்க்ரூ ட்ரைவர் இருக்கிறதா?”

ஷ்யாம் அலமாரியில் தேடி ஒரு ஸ்க்ரூ ட்ரைவரை எடுத்தான். ஸ்ரீஷா இஸ்திரி பெட்டியின் பின்புறம் இருக்கும் ஸ்க்ரூவை கழட்டினாள்.

“இந்த வயர் தெரிகிறதில்லையா? இஸ்திரிப் பெட்டியை ப்ளக்கில் பொருத்தி ஆன் செய்யும்போது, இதன் வழியே மின்சாரம் பாய்ந்து, இஸ்திரியின் இரும்புத் தகடைச் சூடாக்கும். அப்படி நடப்பதற்குப் பெயர் கடத்தல்” என்றாள் ஸ்ரீஷா.

“இதோ, சிறியதாக இருக்கும் இதுதான் தெர்மோஸ்டாட். இது இஸ்திரிப் பெட்டி அதிக சூடாகிவிடாமல் பார்த்துக்கொள்ளும். சூடு அதிகமானால் இது மின்சாரத்தை நிறுத்திவிடும். சிவப்பு விளக்கு அணைந்து விடும். இஸ்திரியின் சூடு தணியும்போது, மீண்டும் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரியும்.”

“வெந்நீர் போடும் கருவிகள், ஓவன்கள், கெட்டில்கள் போன்ற மற்ற சூடாக்கும் கருவிகள் எல்லாமும் இது போலத்தானே வேலை செய்யும்?” ஸ்ரீஷா எதையும் கவனிக்காமல், இஸ்திரிப் பெட்டியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னாச்சு?” என்றான் ஷ்யாம். “என்னால் இதை சரி செய்ய முடியாது என்று நினைக்கிறேன்.” “அய்யோ! இஸ்திரிப் பெட்டியை நாம் இப்படி பிரித்துப் போட்டிருப்பதை பார்த்தால் அம்மாவும் அப்பாவும் திட்டுவார்களே!”“நாம் இதை ரிப்பேர் மேளாவிற்கு கொண்டு செல்வோம். அவர்கள் உதவுவார்கள்.”

ஷ்யாமின் பெற்றோர் வந்து விசாரிக்கும் முன்னர், இஸ்திரிப் பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் சைக்கிளில் கிளம்பிவிட்டார்கள். ரிப்பேர் மேளாவை சென்றடைந்தனர்.

“ஆன்ட்டி, இந்த இஸ்திரிப்பெட்டியை சரி செய்ய உதவ முடியுமா?” என ஸ்ரீஷா, அனுபமா ஆன்ட்டியிடம் கேட்டாள்.

“இதில் என்ன கோளாறு?”

“இது ஆன் ஆகவில்லை!” என்றாள் ஸ்ரீஷா.

அனுபமா ஆன்ட்டி வயர்களும் குமிழ்களுமாக இருக்கும் ஒரு பெட்டியை எடுத்தார்.

“இது மல்ட்டிமீட்டர். இஸ்திரிப் பெட்டியில் எல்லா பாகங்களும் மின்சாரம் பாய அனுமதிக்கிறதா என்பதை இது பரிசோதிக்கும். நாம் ப்ளக்கில் இருந்து தொடங்குவோம்.”

அனுபமா ஆன்ட்டி ஒவ்வொரு பாகமாக பரிசோதித்த பிறகு, ஒரு சின்ன வயரை சுட்டிக் காண்பித்தார்.

“ப்ளக் பக்கத்தில் இருக்கும் இந்த வயர் தெரிகிறதா? இது சேதமாகியிருக்கிறது. பார்ப்பதற்கு அப்படித் தெரியாவிட்டாலும், இதுதான் உங்களுடைய பிரச்சினை!”

பழைய வயரையும் ப்ளக்கையும் எடுத்துவிட்டு, புதிய வயரையும் ப்ளக்கையும் இஸ்திரிப் பெட்டியில் இணைத்தார். அது மின்சுற்றை முழுமையாக்கியது.

“சோதித்துப் பார்ப்போம்!”

அவர் சுவிட்சை ஆன் செய்தவுடன் விளக்கு எரிந்தது!

கொஞ்ச நேரம் மேளாவில் உதவிகள் செய்து கொண்டே, பொருட்கள் சரி செய்யப்படுவதைக் கவனித்துவிட்டு அவர்கள் வீட்டுக்குப் போக முடிவு செய்தார்கள்.

“அய்யோ... பின்பக்க டயர் பஞ்சராகிவிட்டதே. மணிகண்டன் அண்ணாவின் கடைக்கு கொண்டு போவோம்!” என்றாள் ஸ்ரீஷா.

உள்ளூரில் மிதிவண்டி பழுதுபார்க்கும் கடை வைத்திருக்கும் அவர், “பஞ்சரா? அது ஒண்ணும் பிரச்சினை இல்லை” என்றார். மணிகண்டன் அண்ணாவும் ரிப்பேர் மேளாவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மணிகண்டன் அண்ணா மிதிவண்டியைத் தலைகீழாகத் திருப்பினார். இரண்டு நெம்புகோல்களை வைத்து டயரை சக்கரத்தில் இருந்து கழட்டினார். உடனே, டயருக்குள் இருந்த டியூபும் வெளியே வந்துவிட்டது. “எங்காவது ஓட்டை இருப்பது தெரிகிறதா?” என்று குழந்தைகளைப் பார்த்து அவர் கேட்டார். அவர்களால் ஓட்டையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. “எந்த இடத்தில் ஓட்டை இருக்கிறது என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?” எனக் கேட்டார்.குழந்தைகள் பதில் தெரியாமல் முழித்தார்கள்.

பாதி தண்ணீர் நிறைந்திருந்த தொட்டி ஒன்றில், டியூபை பகுதி பகுதியாக அமிழ்த்தினார். அப்போது ஒரு இடத்தில் சின்ன நீர்க்குமிழிகள் வருவது தெரிந்தது. “தெரிகிறதா? அங்கேதான் ஓட்டை இருக்கிறது”

ஒரு பழைய டியூபில் இருந்து ஒரு சின்ன ரப்பர் துண்டை வெட்டி எடுத்தார். உப்புத்தாளை வைத்து டியூபில் ஓட்டையைச் சுற்றி அழுத்தித் தேய்த்தார். ரப்பர் பசையை அதன் மீதும் ரப்பர் துண்டின் மீதும் தடவினார்.

“வா, வந்து இதை ஒட்டு” என்று அவர் சொன்னதும் ஷ்யாம் அந்த ஓட்டையின் மீது ரப்பர் துண்டை வைத்து ஒட்டி, அழுத்திப் பிடித்துக் கொண்டான்.

“மிதிவண்டிகளையும் குடைகளையும் காலணிகளையும் சரி செய்யும் நிபுணர்கள் மட்டும் இல்லை என்றால், குப்பைகள் மலைபோலக் குமிந்துவிடும்” என்றான் ஷ்யாம்.

மிதிவண்டியின் டயரைப் பழுதுபார்த்தாகி விட்டது, இஸ்திரிப் பெட்டியையும் சரி செய்தாகிவிட்டது. ஸ்ரீஷாவும் ஷ்யாமும் வீட்டுக்குத் திரும்பினர். அப்படியாக அந்த நாள் நல்ல முறையில் கழிந்தது.

தூக்கி எறியாதீர்கள், சரி செய்யுங்கள்!

மனிதர்கள் உருவாக்கும் மக்காத குப்பைகளின் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. எடு, உற்பத்தி செய், வீணாக்கு என்னும் நவீன முறைக்கு பதிலாக உற்பத்தி, பாதுகாப்பு, மறுஉபயோகம் என்னும் நம்முடைய பாரம்பரிய முறையை பழுதுபார்த்தல் ஊக்குவிக்கிறது.

இது வளங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்களைத் தோண்டி எடுக்கவும் பதப்படுத்தவும் நிறைய ஆற்றல் செலவாகும். எனவே, ஒரு தயாரிப்பை நாம் பழுது பார்ப்பதன் வாயிலாக இந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு, பொருட்களின் வாழ்நாளும் அதிகரிக்கும். ஒரு பொருளை நாம் பழுது பார்க்க முடியாது எனும்போதுதான் அதை மறுசுழற்சி செய்வதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

மறுசுழற்சியின் பாரம்பரியம் கரிமக் கழிவுகளான உணவுப் பொருட்களாக இருந்தாலும் சரி, கனிமக் கழிவுகளான ஆடை அணிகலன்களாக இருந்தாலும் சரி, இந்தியாவுக்கென ஒரு வலிமையான மறுசுழற்சிப் பாரம்பரியம் இருக்கிறது. இந்த வழக்கம் குறைந்து வருகிறது என்றாலும், பழைய செய்தித்தாள்களையும் மறுசுழற்சி செய்யக் கூடிய வீட்டுப் பொருட்களையும் ப்ளாஸ்டிக் கழிவுகளையும் பழைய துணிகளையும் வாங்கிக் கொண்டு புது ஸ்டீல் பாத்திரங்களை கொடுக்கும் வணிகர்களும் இந்தியாவில் இன்னமும் இருக்கிறார்கள்.

ரிப்பேர் கஃபே

இந்தக் கதை, பெங்களூர் ரிப்பேர் கஃபேவின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. பெங்களூர் ரிப்பேர் கஃபே, பொருட்களை பழுது பார்க்கும் கலாச்சாரத்தை உயிர்ப்போடு வைத்திருக்க பழுது பார்க்கும் பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது. இதில் பல்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். ரிப்பேர் கஃபேயில் உங்களுடைய பொருட்களை சரிசெய்யத் தேவையான கருவிகளும் பொருட்களும் கிடைக்கும். இங்கே, பழுது பார்க்கும் ஆர்வலர்களும் காலணி உற்பத்தியாளர்களும் குடை சரி செய்பவர்களும் தையல்காரர்களும் கைக்கடிகாரம் சரி செய்பவர்களும் பார்வையாளர்களோடு இணைந்து வேலை செய்கிறார்கள்.

இயற்கை சீற்றங்களுக்குப் பிறகு பழுது பார்க்கும் நிபுணர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். அதைப் போன்ற நேரங்களில், கூட்டு ரிப்பேர் பட்டறைகள் பயனுள்ளவை. பெங்களூர் ரிப்பேர் கஃபேவின் செயல்பாடுகளினால் மூன்று வருட காலத்திற்குள்ளேயே ஏறத்தாழ 2000 கிலோ பொருட்கள் குப்பைக்கு செல்வது தடுக்கப்பட்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுதும் இருக்கும் ரிப்பேர் கஃபேக்கள் 3,00,000 பொருட்களை குப்பைக் குவியலுக்குப் போகாமல் தடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இல்லையெனில், யாரிடமாவது கற்றுக் கொள்ளுங்கள். அந்தத் திறமை உங்களுக்கு மிகவும் உதவும்!