rocket lila

ராக்கெட் லீலா

ராக்கெட் லீலா விண்வெளிக்குப் போவதை ஏவுதளம் மிஹிர் விரும்பவில்லை. லீலாவை வானமோ அல்லது கடலோ விழுங்கி விட்டால்? ஆனால், ராக்கெட் லீலாவிற்கு அதைப் பற்றிய கவலையே இல்லை!

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

‘‘என்னை விட்டுப் போக வேண்டாம்!’’ என்று ஏவுதளம் மிஹிர் கெஞ்சியது.

ராக்கெட் லீலா வானில் பாய ஆயத்தமாக இருந்தது. விடைபெறும் நேரம் நெருங்கி கொண்டிருந்தது.

‘‘நான் போய்த்தான் ஆக வேண்டும்’’ என்றது லீலா.

ஒலிவாங்கி கரகரவென்று ஒலித்தது.

பத்து... ஒன்பது... எட்டு...

‘‘நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும்’’ என்றது ஏவுதளம் மிஹிர்.

‘‘ராக்கெட் காகோல் உன்னோடு இருக்கும்’’ என்றது லீலா.

ஏழு... ஆறு...

‘‘வேண்டாம். என்னை விட்டுப் போகாதே.’’

‘‘திரும்பி வந்து விடுவேன்’’ என்றது லீலா.

‘‘எப்பொழுது?’’

‘‘என் வேலை முடிந்த உடனே வந்து விடுவேன்.’’

ஐந்து...

‘‘நீ விண்வெளியில் தொலைந்து போய்விட்டால்?’’

‘‘நட்சத்திரம் ஒன்றை எனக்கு வழிகாட்டச் சொல்வேன்.

வால்நட்சத்திரத்தின் வாலைப் பிடித்துக்கொண்டு வருவேன்.

அல்லது ஒரு எரிகல்லின் மேல் பயணித்து பூமியில் விழுவேன்.’’

நான்கு...

“வானம் உன்னை விழுங்கி விட்டால்?’’

“நான் மெதுவாய் நகர்ந்து ஒரு மேகத்தினுள் சென்று, அதன் கண்ணில் நீர் வரும் வரை கிச்சுக்கிச்சு மூட்டுவேன். பின்னர் அதன் கண்ணீரோடு வழுக்கிக் கொண்டு உன் பக்கத்தில் வந்து விழுவேன்.’’

மூன்று...

“நீ கடலில் காணாமல் போய்விட்டால்?’’

‘‘திமிங்கிலத்தின் முதுகில் ஏறி உன்னிடம் வந்து சேருவேன்.’’

இரண்டு...

லீலா மிஹிரைக் கட்டிக் கொண்டது. “உன்னை விட்டுச் செல்ல வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் எனக்கு வேலை இருக்கிறதே!’’

ஒன்று... ராக்கெட் சீறிப் பாய்ந்தது!

லீலா மேலே வானத்துக்குள் சென்றது. மேலே, மேலே இன்னும் மேலே சென்றது.

அண்டவெளியில் பிற கிரகங்கள், நட்சத்திரங்கள், வால்நட்சத்திரங்கள், நிலாக்கள் அனைத்தையும் தாண்டிச் சென்றது லீலா. லீலாவுக்காக ஏராளமான சாகசங்கள் காத்திருந்தன.

மிஹிர் காத்துக் கொண்டிருந்தது. மிஹிரிடம் நிறையக் கேள்விகள் இருந்தன. ‘‘லீலா எங்கே? லீலா என்ன செய்கிறது? எப்பொழுது திரும்பி வரும்?’’ ராக்கெட் காகோல், மிஹிரை நன்றாக கவனித்துக் கொண்டது. லீலாவின் பயணம் குறித்த ஒரு செய்தி அறிக்கை விண்வெளித் துறையை வந்தடைந்தது. அதன் பின் ஒருநாள்...

லீலா விசிப்பொலியோடு தரையிறங்கியது!

லீலா கொண்டு வந்த விண்கற்களும், நிலாத் தூசும் மிஹிருக்கு மிகவும் பிடித்திருந்தன. லீலா விவரித்த விண்வெளிக் கதைகளை மிஹிர் மிக்க ஆர்வத்தோடு கேட்டு ரசித்தது. எல்லாவற்றையும் விட மிஹிர், லீலாவின் அணைப்பை மிகவும் விரும்பியது!

*பொதுவாக ராக்கெட்டுகள் ஏவுகளத்திற்கு திரும்பி வருவதில்லை. ஆனால் நம் லீலாவோ திரும்பவும் பயன்படுத்தக்கூடிய ஒரு ராக்கெட்!