ரோஜா இதழ்கள்
ராஜம் கிருஷ்ணன்
புதிய கதை எழுதவேண்டும் என்று, நான் ஓர் குறிப்பிட்ட பொருளைச் சார்ந்த செய்திகளை அறிவதற்காக வெவ்வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்திருக்கிறேன். வெவ்வேறு நிலைகளில் அதற்காகப் பல மனிதர்களைப் பரிச்சயம் செய்து கொண்டு செய்திகள் திரட்டி இருக்கிறேன். ஆதார பூர்வமான தகவல்களைப் பெற அந்தந்தப் பிராந்திய நூல் நிலையங்களுக்குச் சென்று கெஜட்டியர்களையும் பதிவேடுகளையும் மணிக்கணக்காகப் புரட்டிப் பார்த்திருக்கிறேன். இந்தப் புத்தகத்துக்காக நான் அத்தகைய முயற்சி எதையுமே மேற்கொள்ளத் தேவையிருக்கவில்லை. ஏனெனில் தமிழ்நாட்டின் அரசியல் சமுதாய வரலாற்றில் குறிப்பிடத்தக்கதோர் மாற்றம் நிகழ்ந்து வந்த ஏழெட்டு ஆண்டுக் காலப் பின்னணியில் இந்த நவீனம் உருவாயிருக்கிறது. புதிய அரசியல் சுதந்தரமும் மக்களாட்சி உரிமையும் பெற்ற நாட்டில் சுதந்தரத்துக்கு முன்பு நிலவிய ஒன்றுபட்ட சமுதாய ஒற்றுமையின் கண் இழைகளாகக் கருதப்பட்ட வேற்றுமைகளும் பூசல்களும் ஆழமான பிளவுகளாக வலுப்பெற்றதை யாரும் மறுக்க இயலாது.