என் பெயர் மேரி.
நான் இங்குதான் வசிக்கிறேன்.
இன்று ஒரு புத்தம் புதிய நாள். அப்படி என்றால், இது துணி துவைக்கும் நேரம்.
அனைவரது கைகளையும் சோப்பு நுரை உறை போல் மூடிக்கொண்டது.
தெருவெங்கும் சோப்புநீர்க் குட்டைகள். அவற்றில் தெரியும் சின்னச்சின்ன வானவில்கள்.
கிரேஸ் அத்தை அவரது சீருடையைத் துவைக்கிறார். அதை அவர், நாளை மருத்துவமனைக்கு உடுத்திச் செல்வார்.
ஜானா அத்தை கிராமத்திலிருக்கும் அவர் பாட்டி நெய்த கம்பளியை உலர்த்துகிறார். அதன் இழைகளில், ஜானா அத்தையின் வீட்டு நிறங்கள் அனைத்தையும் காணலாம்.
பாத்திமா அத்தையின் கொடி முழுவதும்
கழுத்துக் குட்டைகளால் நிரம்பியிருக்கிறது.
அதை அவர் தன் தலையைச் சுற்றி
அணியும்போது அது இனிமையாக மணக்கும்.
ஆட்டோ ஓட்டும் ஜாகிர் மாமாவின் சீருடை, அவர் வீட்டு வாசலில் காய்ந்துகொண்டிருக்கிறது. அவர் ஒரு சுத்தமான சட்டையில், பிய்ந்து போன பொத்தானைத் தைக்கிறார்.
கீதா அத்தையின் வீட்டில், பருத்திச் சேலைகள் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருக்கின்றன. அவை பறவைகள் சிறகடிப்பதைப் போல ஒலி எழுப்புகின்றன.
பாதுகாவலராகப் பணிபுரியும் ஜோசப் மாமாவின் கொடி முழுவதும் காலுறைகள். அவை, அவர் வேலை செய்யும் நேரத்தில் அவரது கால்களை வெதுவெதுப்பாக வைத்திருக்கும்.
நானும், என் சகோதரன் டேவிட்டும் எங்களது பள்ளிச்சீருடைகளைத் துவைக்க ஆரம்பித்தோம். சட்டைப்பையிலிருந்த பேனா மைக்கறைகளையும், சட்டையின் கைகளில் இருந்த சுண்ணக்கட்டித் துகள்களையும் நன்றாகத் தேய்த்துக் கழுவினோம்.
நாளை எங்கள் உடைகள் மறுபடியும் அழுக்காகும். ஆனால் இப்போதைக்கு, எல்லாம் படுசுத்தம்.