சமீரா தன் உணவு பாத்திரத்தை திறந்து யோசித்தாள், "யார் இந்த பராத்தாவையும் கத்திரிக்காயையும் சாப்பிடுவார்கள். நான் மாட்டேன்".
போன வாரம் அம்மா நூடுல்ஸ் மற்றும் குடைமிளகாயையும் காரட்டும் கொடுத்திருந்தார்கள்."நூடுல்ஸ் பிசு பிசு என்றும் புழுவைப் போல் இருக்கிறது" என்று வீட்டிற்கு போய் சொன்னாள்.
"எனக்கு நூடுல்ஸ் பிடிக்காது". அடுத்த நாள் அம்மா பட்டாணியும் கடலையும் போட்டு உப்புமா செய்திருந்தார்கள். சமீரா கடலையை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். ஏன் சாப்பிடவில்லை என்று அம்மா கேட்டதற்கு "உப்புமா ஈர மணல் போல் இருந்தது" என்றாள் சமீரா.
"உனக்கு இட்லி தரட்டுமா", என்று அம்மா கேட்டார்கள். "தாராளமாக! அவற்றை வைத்து விளையாட அருமையாக இருக்கும். தூக்கிப்போட்டு பிடித்து விளையாடலாம். ஆனால் நான் சாப்பிடமாட்டேன் - இட்லி மண்போல் இருக்கும்" என்றாள் சமீரா. இப்போது பராத்தாவும் கத்திரிக்காய் கறியும். ஐயோ! ஐயோ!
உணவு பாத்திரத்தை டமால் என்று மூடிவிட்டு பள்ளி மைதானத்திற்குச் சென்றாள் சமீரா. அங்கே சுவரின் அருகில் சாரையாக ஊர்ந்து செல்லும் எறும்புகள் சமீராவிடம் "சமீரா நீ ஏன் மற்ற குழந்தைகள் போல் மதிய உணவு சாப்பிடவில்லை" என்று கேட்டன. "எனக்கு பராத்தா பிடிக்காது. காய்கறி பிடிக்காது. எனக்கு மதிய உணவு வேண்டாம்" என்றாள் சமீரா.
"ஆமாம். காய்கறி சாப்பிடமுடியாது" என்று எறும்புகள் சம்மதித்தன. பத்திரமாக எடுத்து வந்த கரப்பின் இறகைக் கொடுத்து "இதை சாப்பிட்டு பார், மிகவும் ருசியாக இருக்கும்" என்றன.
"ஓ முடியாது! எனக்கு மோசமான கரப்பு வேண்டாம்" என்று சொல்லி தோட்டத்திற்கு ஓடினாள்.
வண்ண மயமான பூக்கள் தோட்டத்தில் பூத்திருந்தன. வண்ணத்துப் பூச்சிகள் ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்கு பறந்து கொண்டிருந்தன.
கருப்பு கட்டங்களும் கோடுகளும் கொண்ட ஆரஞ்சு நிற வண்ணத்து பூச்சி சமீராவிடம் சொன்னது "சமீரா! நீ மற்ற குழந்தைகளைப் போல் ஏன் உணவு சாப்பிடவில்லை"?
"எனக்கு பராத்தா பிடிக்காது. காய்கறி பிடிக்காது. எனக்கு மதிய உணவு வேண்டாம்" என்று சமீரா சொன்னாள்.
வண்ணத்து பூச்சி சொன்னது "ஆமாம் காய்கறி சாப்பிடமுடியாது. எங்களைப் போல் பூவிலிருக்கும் தேனைக் குடிக்கலாம் அல்லவா? மிகவும் ருசியாக இருக்கும்".
சமீரா தன் நாக்கைப் பூவின் மத்தியில் வைத்துப் பார்த்தாள். ஆனால் ஒன்றும் வரவில்லை.
"எனக்கு தேனே வேண்டாம். என்னை முட்டாளாக்க பார்க்கிறீர்களா?" என்று கத்தினாள். அவள் புல்வெளியில் இருந்த ஒரு பெரிய அரச மரத்துக்கு ஓடிப் போனாள்.
காவென்று கூவிக் கொண்டிருந்த காகம் ஒன்று,"சமீரா உன் உணவை மற்ற குழந்தைகளைப் போல் சாப்பிடவில்லையா?"என்று
கேட்டது.
"எனக்கு பராத்தா பிடிக்காது. காய்கறி பிடிக்காது. எனக்கு மதிய உணவு வேண்டாம்" என்று சமீரா சொன்னாள்.
"ஆமாம். காய்கறி சாப்பிட முடியாது" என்று காகம் சம்மதித்தது. "இதோ நல்லது ஒன்று கொடுக்கிறேன்" என்று சொல்லி பாதி சாப்பிட்ட எலியை சமீராவிற்காக கீழே போட்டது.
"ஓ இல்லை! என்ன ஒரு மோசமான சாப்பாடு! உன் சாப்பாட்டை நீயே வைத்துக்கொள்" என்று சமீரா கத்திக்கொண்டே ஓடிப்போய் ஒரு சுவரின் அருகே நின்று கொண்டாள்.
சுவரின் அருகே கீச் கீச் என்று கூவிக்கொண்டிருந்த குருவிகள் சமீராவை அழைத்து, "சமீரா உன் உணவை மற்ற குழந்தைகளைப் போல் சாப்பிடவில்லையா?" என்று கேட்டது.
உடனே சமீரா ,"எனக்கு பராத்தா பிடிக்காது. காய்கறி பிடிக்காது. எனக்கு மதிய உணவு வேண்டாம்" என்றாள்.
"ஆமாம், காய்கறி சாப்பிட முடியாது" என்று குருவி சம்மதித்தது. "இதோ இங்கே கறு முறு என்று இருக்கும் பார்லி தானியம் உள்ளது - சாப்பிட சுவையாக இருக்கும், உடலுக்கும் நல்லது" என்றது குருவி.
சமீரா சுவைத்துப் பார்த்து முகம் சுளித்தாள். "இது கூழான்கல்லை சாப்பிடுவது போல் உள்ளது. இதைவிட உப்புமாவே நன்றாக இருக்கும்".
இரக்கமுள்ள ஒரு குருவி சமீராவிடம் கேட்டது ,"உனக்கு மிருதுவான ஜூஸ் போன்ற புழுக்கள் பிடிக்குமா, ஒரு நிமிடம்..". குருவி புழுவைக் கொண்டு வருவதற்குள் சமீரா சொன்னாள், "புழுக்களா! இல்லை மிக்க நன்றி! அதற்கு பதில் நான் நூடுல்ஸ் சாப்பிடுவேன்" என்று சொல்லிக் கொண்டே பள்ளிக்கூட வாசல் அருகே ஓடினாள்.
ஒரு பசு தான் சாப்பிட்ட உணவை அசை போட்டுக்கொண்டே சமீராவிடம் மூ என்று கத்தி, "நீ ஏன் உன் உணவை மற்ற குழந்தைகளைப் போல் சாப்பிடவில்லையா?" என்று கேட்டது.
அதற்கு சமீரா,"எனக்கு பராத்தா பிடிக்காது. காய்கறி பிடிக்காது. எனக்கு மதிய உணவு வேண்டாம்" என்றாள்.
"ஆமாம் சமைத்த கத்திரிக்காய் நன்றாகவே இருக்காது", என்று பசு சம்மதித்தது. "நான் கொஞ்சம் புல்லைக் கடித்து கொடுக்கிறேன். மழைக்குப்பின் மிகவும் இனிப்பாக இருக்கிறது. இதை உனக்கு அருகில் உள்ள செம்பருத்தி இலையுடன் சாப்பிடு. எனக்கு இந்த வாசல் வழியாக உள்ளே வர வேண்டும் என்று ஆசைதான். நீ மிகவும் அதிரிஷ்டசாலி".
சமீரா சலித்துக்கொண்டாள்.
"எனக்குப் புல்லும் வேண்டாம், செடியும் வேண்டாம். இட்லி கூட புல்லைவிட ருசியாக இருக்கும். நல்ல வேளை வாசல் கதவு மூடி இருக்கிறது. ஏனென்றால் செம்பருத்தி செடியில் அழகான பூக்கள் உள்ளன. நீ அதை சாப்பிடுவதை நான் விரும்பவில்லை" என்றாள்.
சமீரா தன் பள்ளிக்கூட அறைக்கு ஓடிச் சென்று தன் உணவு பாத்திரத்தைத் திறந்தாள்.
"என் பராட்டவும் கத்திரிக்காய் கறியும் எவ்வளவு நன்றாக உள்ளன" என்று எண்ணி மளமள என்று சாப்பிட்டாள்.