saruvin siriya ragasiyam

சாருவின் சிறிய ரகசியம்

மாயீ ஒழுங்கின்மையை அறவே விரும்பாதவர். சாருவுக்கோ விதிகளைப் பின்பற்றி நடப்பது மிகக் கடினம். இதனால் அடிக்கடி பிரச்சினை உருவாகி மாயீயிடம் மாட்டிக் கொள்வாள். இம்முறை சாரு என்ன செய்தாள்? இதனை மாயீ கண்டுபிடித்தால் என்ன ஆகும்? மேலும் அறிய இந்தக் கதையைப் படியுங்கள்.

- Sheela Preuitt

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காட்டின் எல்லையிலிருக்கும் ஒரு சேறு நிறைந்த குளத்தின் அருகே மரவேலி ஒன்று இருந்தது. வேலிக்குள், சிறு குடில்களும் கொட்டகைகளும் சூழ்ந்துள்ள ஒரு செங்கல் கட்டடம் இருந்தது. அங்கு பலர் தங்கியிருந்து நற்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

செங்கல் கட்டடத்தில், ஒரு மாணவர் விடுதி, ஒரு பள்ளி, மற்றும் ஒரு மருத்துவமனையும் இருந்தன. விடுதியில் சாரு என்று ஒரு சிறிய பெண் வசித்தாள். அவள் எப்போதும் சுறுசுறுப்பாக துள்ளிக் குதிப்பதும், ஓடி ஆடி நொண்டியடிப்பதுமாக இருப்பாள்.

மங்கு என்று ஒரு சிறுவனும் விடுதியில் வசித்து வந்தான். மங்கு, சாருவின் நல்ல நண்பன். ஆனால், சாரு போலில்லாமல், அவன் பயந்த சுபாவத்துடன் அங்கும் இங்கும் ஓடாது அமைதியாக இருப்பான்.

அருகிலுள்ள அறையில் வாழும் ஹரி, மாணிக், கேதகியும் சாருவின் நண்பர்கள்தான். ஹரியின் தந்தை கார் ஓட்டுபவர், மாணிக்கின் பெற்றோர்கள் மருந்தகத்தில் வேலை பார்த்தார்கள், கேதகியின் தாய் பள்ளியில் ஆசிரியையாக

பணிபுரிந்தார். மேலும், சிறுவர்களின் காப்பாளரான மாயீயும் அங்குதான் வசித்தார்.

மாயீயின் புருவங்கள் எப்போதும் சுருங்கி ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு இருக்கும். சாருவைக் கூப்பிடும்போது அவரது குரல் கணீரென்று ஒலிக்கும். நீங்கள் அந்த விடுதியை எப்போது கடந்து சென்றாலும், மாயீ சாருவைக் கூப்பிடுவதைக் கேட்கலாம்.

சாரு, தான் இருக்கவேண்டிய இடத்தில் இருக்கவே மாட்டாள். காட்டுக்கோ, குளத்தருகிலோ சென்றிருப்பாள்.

கதையில் இருக்கும் எல்லோரையும் தெரிந்துகொண்டோம். இப்போது கதையைத் தொடங்கலாம் வாருங்கள். சூரிய ஒளி நிறைந்த ஒரு மே மாதக் காலையில் இந்தக் கதை தொடங்குகிறது.

சமையலறையில் பாத்திரங்களின் சத்தம் கேட்டதும் சாரு முகத்திலிருந்த மஞ்சள் போர்வையை இறக்கினாள். தனது படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள். விரைவில்,  அரிசிக் கஞ்சியை சாப்பிட்டுவிட்டு அன்றைய தினத்தைச் சந்திக்கத் தயாரானாள். அன்று பள்ளி விடுமுறை நாள்.

அன்றைய தினம் மிகவும் நன்றாக இருக்கும் என்று சாருவிற்குத் தெரியும். பள்ளி விடுமுறை நாட்கள் என்றாலே சாருவுக்குக் கொண்டாட்டம்தான்!

குளத்திற்குச் செல்ல மங்குவை அழைத்தாள் சாரு. ஆனால், மங்கு அவளுடன் குளத்துக்குச் செல்ல ஆர்வத்துடன் இல்லை. மங்குவுக்கு பள்ளிதான் பிடிக்கும், சாருவுடன் சுற்றுவதைவிட பள்ளியில் இருப்பதையே அவன் விரும்பினான்.

சாரு மற்ற நண்பர்களைக் கூப்பிடச் சென்றாள். ஆனால், அவர்கள் அனைவரும் வெவ்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், சாரு தனியாகச் செல்ல நேர்ந்தது.

ஆனால், சாரு அதைப்பற்றிக் கவலைப்படாமல், ஓடிச் சென்று வேலியில் மரப்பலகைகளுக்கு நடுவிலிருந்த இடைவெளி வழியாக வெளியே போனாள். அவ்வாறு செய்வது தவறென்று அவளுக்குத் தெரியும். இருந்தாலும், உற்சாகத்தில் இருந்த அவள் அதையெல்லாம் யோசிக்கவில்லை.

மலைச்சரிவில் இறங்கி, சேறு, குட்டைகள் மேலிருந்த கூழாங்கற்களின் மீது மெல்ல நுனிக்காலில் நடந்து, மேலும் வெகுதூரம் இறங்கி ஒரு பெரிய அரச மரத்தருகிலிருந்த குளத்தைச் சென்றடைந்தாள்.

நல்லவேளை அன்று காலை யாரையும் காணவில்லை. சில சமயம் வழிப்போக்கர்கள் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருப்பார்கள். அல்லது படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்கள். யாரும் இல்லாதது நல்லதுதான். விடுதியைச் சேர்ந்த யாரும் இருந்திருந்தால் பல கேள்விகள் கேட்டிருப்பார்கள். பிறகு விடுதியில் நிறைய திட்டு கிடைக்கும்.

குளத்தருகில் தும்பிகளைப் பிடிப்பதுதான் சாருவின் விருப்பமான பொழுதுபோக்கு. அவள்  படங்களில் பார்த்திருந்த ஹெலிகாப்டர் போல நீளமான சிறகுகளுடன் இருந்த பறக்கும் தும்பியை அதனது மெலிதான இறக்கையால் பிடிப்பது அவளுக்கு மிகவும் பிடித்த செயல்.

”ஒண்ணு பிடிச்சாச்சு, ரெண்டு பிடிச்சாச்சு, இன்னும் நிறைய பிடிக்கப் போறேன்!” தும்பி பறக்கும்போது தனது விரல்களை அதனருகில் அசையாது வைத்துக்கொண்டு காத்திருப்பாள். பின்னர் சடாரென்று விரல்களைச் சேர்த்து அதைப் பிடித்து விடுவாள்.

பின்னர், அவள் தும்பிகளை அருகிலுள்ள புதர்களில் இருக்கும் பிசுபிசுப்பான இலைகள் மீது அமர வைப்பாள். அவை கொஞ்ச நேரம் அந்த இலைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். பிறகு பறந்துவிடும்.

சாரு தும்பிகளைப் பின்தொடர்ந்து சென்றபோது, அந்தப் புதர்களில் இருந்து ஒரு பிராண்டும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் சிறிது சிறிதாக அதிகமானது. புதர்கள் அசைவதையும் அவளால் பார்க்க முடிந்தது.

இயல்பிலேயே ஆர்வம் மிகுந்தவளான சாரு, அந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று புதர்களில் எட்டிப்பார்த்தாள்.

அவள் கிளைகளை நகர்த்திவிட்டு உற்றுப்பார்க்கையில், மிகப்பெரிய கண்களுடன் வேடிக்கையான வடிவம் கொண்ட ஒரு சிறிய உயிரினம் அங்கே பதுங்கியிருந்த்தைப் பார்த்தாள். அது ஒரு பெரிய சுண்டெலியின் உடல் கொண்ட மான்குட்டி போல இருந்தது. சாருவைப் பார்த்துத் திடுக்கிட்ட அந்த விலங்கு துள்ளி ஓடப் பார்த்தது. ஆனால், அதனால் முடியவில்லை. அதன் கால் எதிலோ சிக்கிக் கொண்டது போலிருந்தது.

சாரு திகைப்புடன் கண்கொட்டாமல் பார்க்கையில், அந்த சிறிய விலங்கு தப்பிச்செல்ல கடினமாக முயற்சி செய்தது. மேலும் மேலும் முயற்சி செய்ய, அது மேலும் பலமாகச் சிக்கிக் கொண்டது. கடைசியில், அது தளர்ந்து போய் புதர்களின் கீழே அமர்ந்துவிட்டது. சாரு புதர்களைத் தள்ளிவிட்டுச் சுற்றித் தேடியபோது, மேலே மரத்தில் இருந்து தொங்கிய ஒரு கொடியின் பிடியில் அதன் பின் கால்கள் சிக்கி இருப்பதைப் பார்த்தாள்.

சாரு மெதுவாகக் கொடியின் பிடியிலிருந்து அதனது பின்னங்கால்களை விடுவித்தாள். ஆனால், அடி பட்டதால் அசைய முடியாமல் கிடந்தது அந்த விலங்கு. பரிதாபப்பட்ட சாரு அதனை வீட்டுக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்தாள். கவனத்துடன் மெதுவாக அந்த விலங்கைத் தூக்கிக் கொண்டு வந்த சாரு, வீட்டை நெருங்கியவுடன் மாயீ தாழ்வாரத்தில் நின்றபடி தன்னைத் தேடுவதைப் பார்த்தாள்.

பிரச்சினையை உடனே புரிந்து கொண்ட சாரு, அருகிலிருந்த டிராக்டர் கொட்டகைக்கு வேகமாக ஓடினாள். சாருவின் கையிலிருந்த விலங்கை மாயீ பார்த்துவிட்டால், உடனே அதை காட்டில் விட்டுவிடச் சொல்வார் என்று சாருவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. மாயீக்கு குட்டியான எதுவும் பிடிக்காது - மனிதர்களானாலும் சரி விலங்குகளானாலும் சரி.மாயீ அவளைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சளைத்துப் போன பின்னர் வீட்டினுள் சென்று விட்டார். உடனே, சாரு எச்சரிக்கையுடன் வீட்டைச் சுற்றி வந்து வீட்டை ஒட்டி இருந்த கொட்டகையின் உள்ளே அந்த சிறிய, பயந்து போயிருந்த விலங்கைக் கொண்டு சென்றாள்.அந்தக் கொட்டகையில் திருவிழாக்களின் போது சமையல் செய்ய உதவும்  பெரிய பானைகள், சட்டிகள், பாத்திரங்கள், கரண்டிகள்  வைக்கப்பட்டிருந்தன. அந்த இருண்ட அறையைச் சுற்றிப் பார்த்த சாரு, தான் கண்டுபிடித்த அந்தச் சிறிய விலங்கை அங்கேயே வைத்திருக்க முடிவு செய்தாள்.

சாரு மிகவும் சிறியவளானாலும்,  அந்த விலங்கு இந்த பலவீனமான, ஏறக்குறைய கால் உடைந்த நிலையில் வெளியில், வனத்தில் பிழைக்க முடியாது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. அறையைச் சுற்றி ஒரு அவசரப் பார்வை பார்த்த பிறகு, அங்கிருந்த ஒரு பெரிய பித்தளைப் பாத்திரத்தில் அந்த விலங்கை பத்திரமாக வைக்க முடிவு செய்தாள். அந்தப் பாத்திரத்தினுள் ஒரு சணல் பையை விரித்து மிகக் கவனமாக அந்த விலங்கைப் படுக்க வைத்தாள்.

சமையல் அறையிலிருந்து பால் எடுத்து வர ஓடிய சாரு, அப்படியே அவளது நண்பர்களுக்கும் இந்த இன்பகரமான செய்தியைச் சொன்னாள். சில நிமிடங்களில் அவளது நண்பர்கள் அங்கு வந்தனர். அனைவரும் அந்தச் சிறிய விலங்கை எட்டிப் பார்த்தனர். அவர்களுள் மூத்தவனான ஹரி அந்த விலங்கைப் பார்த்தவுடன் அது மான்குட்டி தான் எனக் கூறினான். வாசிப்பதில் விருப்பமுடைய் கவித்துவம் மிக்கவளான கேதகி அதற்கு, 'பில்லு' எனப் பெயர் வைத்தாள். அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்.

அவர்களின் குழுவில் மங்கு தான் மிகவும் மென்மையானவன். அதனால் அவன்தான் பில்லுவுக்கு பால் கொடுக்க சரியானவன் என்று தேர்ந்தெடுத்தனர். பில்லு முதலில் தயங்கினாலும், மிகவும் பசி எடுத்ததால் மங்கு கொடுத்த பாலைக் குடித்தது.

அந்த கொட்டகைக்கு யாரும் அதிகம் வரமாட்டார்கள். அதனால் பில்லுவை அங்கேயே வைத்திருக்க முடிவு செய்தனர். மங்கு அதற்குப் பால் ஊட்ட ஒப்புக் கொண்டான். எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போது பில்லுவுக்கு கொஞ்சம் உணவு கொண்டு வர மற்றவர்கள் உறுதி அளித்தனர்.

மாலையில் பில்லு கொஞ்சம் தெம்பாக இருந்தது. மாணிக் கொண்டு வந்த ரொட்டியைக் கொறித்த பின் இன்னும் கொஞ்சம் பாலைக் குடித்தது. இரவு வந்ததும் நண்பர்கள் பில்லுவை சணல் பை மடிப்புகளில் பாதுகாப்பாக படுக்க வைத்து விட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர்.

பில்லு அதன் புதிய வீட்டில் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த போது, குழந்தைகள் தங்கள் படுக்கைகளில் அமைதியற்ற இரவைக் கழித்தனர். குழந்தைகள் அனைவரும் பொழுது விடிந்ததும் நேராக கொட்டகைக்கு உற்சாகமாக ஓடினர். பில்லு உட்கார்ந்து, தன் தலையை அந்தப் பானையின் விளிம்புக்கு மேலாக நீட்டி மெல்ல ஆட்டிக் கொண்டிருந்தது. எல்லோரும் முக்கியமான கலந்துரையாடலுக்காக ஒன்று கூடி உட்கார்ந்தனர். ஒருவருக்கொருவர் கிசுகிசுத்துக் கொண்டனர். வாக்குவாதம் செய்தனர். அந்த வழியாகச் சென்ற மாயீ அவர்களைப் பார்த்துவிட்டு என்னதான் செய்கிறார்களோ என்று நினைத்துக்கொண்டே சென்றார். நல்ல வேளை நிற்காமல் தொடர்ந்து சென்று விட்டார் மாயீ!

குழந்தைகள் பில்லுவின் மிருதுவான முடியைத் தடவி கட்டிக் கொள்ளும்போது, அதனது சிறிய உடல் வெதுவெதுப்பாகவும் நடுக்கமற்றும் இருந்தது. அவர்கள் பில்லுவை தங்களிடமே வைத்திருக்க விரும்பினர்.  ஆனால், பில்லு வளர்ந்து பெரிய மானான பின், அவர்கள் அதை அந்தச் சிறிய அறையில் மறைத்து வைக்க முடியாது என்றும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

அருகில் காலடிச் சத்தம் கேட்கும் போதெல்லாம் அவர்கள் பில்லுவை உடனே தொட்டியில் மறைத்து விடுவார்கள்.  அவர்கள் யாரும் பில்லுவை விட்டுப் பிரிய விரும்பவில்லை. பில்லு அவர்களின் சிறிய ரகசியம்.  அடுத்த நாளும் அதே போல ஓடியது. காலையில் அவர்கள் பள்ளி செல்வதற்கு முன் கொட்டகைக்கு விரைந்தனர்.

அவர்கள் ஒவ்வொருவரும் எப்படியோ பில்லுவுக்கு கொஞ்சம் உணவு கொண்டு வந்தனர். கவனத்துடன் பில்லுவுக்கு ஊட்டிவிட்டுப் பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்தவுடன் பில்லுவுடன் இருப்பதற்காக கொட்டகைக்கு அவசரமாக ஓடோடி வந்தனர்.

பில்லு தனது பித்தளைத் தொட்டியில் உட்கார்ந்து கொண்டு பிரச்சினையில்லாமல் நாட்களைக் கழித்தது. பில்லு இப்போது எழுந்து நிற்கும் அளவு வலுவாக ஆனது. நண்பர்கள் அதனுடன் விளையாடி மாலை வேளையைக் கழித்தனர். பில்லுவின் கால் நன்றாக குணமாகி வந்தது.

நாட்கள் நகர்ந்தன. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பில்லு குண்டாகவும் ஆரோக்கியமாகவும் வளர்ந்தது. விரைவில் மிகவும் சுறுசுறுப்பாகவும் விளையாடத் தொடங்கியது. அது பானையின் வெளியே இருக்கவே விரும்பியதைக் கண்ட நண்பர்கள் பீதி அடையத் தொடங்கினர். யாராவது பில்லுவைப் பார்த்துவிட்டால் அவர்களின் ரகசியம் வெளியாகிவிடும் என்று நிச்சயமாக அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பில்லுவின் அதிசய வளர்ச்சியும் அவர்களுக்குக் கவலை அளித்தது. ஏன் பில்லு இன்னும் ஒரு பெரிய எலி போலவே இருக்கிறது?  மான் போல ஏன் வளரவில்லை? தொட்டியில் நீண்ட நாட்கள் அதை வைத்து விட்டதால் இப்படி ஆகியிருக்குமோ என்று அவர்கள் வருத்தமும் பயமும் அடைந்தனர்.

சில நாட்கள் கழித்து, நள்ளிரவில், எல்லாரும் உறங்கும் போது, திடீரென பெரிய ‘டங்’கென்ற ஒரு சத்தம் கேட்டது. அது பில்லுவின் கொட்டகையிலிருந்து வந்தது. எல்லோரையும் எழுப்பியது. எல்லோரும் கொட்டகையை நோக்கி ஓடினார்கள்.

அது அங்கு தான் இருந்தது! குட்டி பில்லு கொட்டகையின் நடுவில் நின்று, அதன் பெரிய கண்களால் சுற்றிச் சுற்றி பார்த்தது. அநேகமாக, பானையிலிருந்து வெளியே வர முயற்சி செய்யும்போது, பில்லு மற்ற பல சட்டி பானைகளை உருட்டித் தள்ளிவிட்டது போலும்! அந்த அறை அலங்கோலமாகக் காட்சியளித்தது.

பில்லுவைப் பார்த்ததில் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. எல்லோரும் ஒரே சமயத்தில் கசமுசவென்று பேசினர். அத்தனை குளறுபடிக்கு இடையிலும், குட்டி பில்லு இனிய முகத்துடன் எப்போதும் போல அழகாய்  நின்று கொண்டிருந்தது. மென்மையான குரலுடைய ஒருவர் கூட்டத்திலிருந்து முன்னே வந்தார். அவர் அந்த விலங்கு ஆபத்தில்லாதது என்றும் வனத்திலிருத்து வந்திருக்கலாம், அதனால் பயப்பட வேண்டாம் என்றும் கூறி மக்களை அமைதிப்படுத்தினார்.

ஆனால், மாயீதான் இப்போது எல்லா பதில்களையும் வைத்திருந்தார்.  அவர் வெறியுடனும் ஆத்திரத்துடனும், இது எப்போதும் தொல்லை கொடுக்கும் சாரு மற்றும் அவளது நண்பர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்றார். மென்மையான குரல் கொண்ட நபர் முன்னோக்கி நகர்ந்து குட்டி பில்லுவை கையில் எடுத்தார். அவர் புன்சிரிப்புடன், சாரு மற்றும் அவரது நண்பர்களை சைகையில் அருகில் அழைத்து,  அவர்கள்தான்  பில்லுவைக் கவனித்துக் கொண்டார்களா  என்று விசாரித்தார்.

அவரது கனிவான வார்த்தைகளால் ஆறுதலடைந்த குழந்தைகள் அவரிடம் பில்லுவைக் கண்டெடுத்ததையும் கவனித்துக் கொண்டதையும் பற்றி பகிர்ந்துகொண்டனர். மேலும், அந்த குட்டி மான் சிறியதாகவே இருப்பதைப் பற்றிய தங்கள் கவலையைத் தெரிவித்தனர். அது அப்படி இருப்பது, அவர்கள் அதைத் தொட்டியிலேயே வைத்திருந்ததாலா? என்று கேட்டனர்.

அதைக் கேட்டு அவர் மெலிதாகச் சிரித்தார்.

கனிவான அவர், உண்மையில் அவர்கள் கவனித்துக் கொண்ட அந்தக் குட்டி விலங்கு மான் அல்ல- அது ஒரு சுட்டி மான் என்றார். பில்லு ஒரு மான்குட்டி அல்ல என்றும் அது எப்போதும் இப்போது உள்ளது போலவே தான் தோற்றமளிக்கும் - கொஞ்சம் எலி, கொஞ்சம் பன்றி மற்றும் கொஞ்சம் மான் கலந்த கலவையாக இருக்கும் என்றும் அறிந்த குழந்தைகள் ஆச்சரியப்பட்டார்கள்!

குழந்தைகள், பில்லுவை அங்கேயே வைத்துக் கொள்ளட்டும் என்று பெரியவர்கள் முடிவு செய்தார்கள். மேலும், அந்த அன்பான மனிதர், விரைவில் அங்கு விலங்குகளுக்கான காப்பகம் ஒன்று கட்டப்படும் என்றார். குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆரவாரமிட்டனர். ஒரு மாதம் கழித்து, நோயுடைய மற்றும் உதவி தேவைப்படும் காட்டு விலங்குகளுக்காக ஒரு காப்பகம் கட்டப்பட்டது. குட்டி பில்லு அங்கேயே எப்போதும் வசிக்கத் தொடங்கியது!

என்றாவது ஒரு நாள், நீங்கள் அந்த விடுதிக்கு சென்றால், அங்கே பில்லு, சாருவுடனும் அவளது நண்பர்களுடனும் விளையாடுவதைக் காண்பீர்கள்!

இந்தக் கதை மறைந்த சமூகப் பணியாளர் பாபா ஆம்தேவின் மகன் டாக்டர் ப்ரகாஷ் ஆம்தேவின் பணிகளில் ஊக்கம்பெற்று உருவாக்கப்பட்டது. பாபா ஆம்தேவால் தொடங்கப்பட்ட லோக் பிராதாரி ப்ரகல்ப், மத்திய இந்தியாவில் வெளித்தொடர்பு குறைந்த பகுதிகளில் இருக்கும் மாடியா கோண்டு பழங்குடியினரின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பணியாற்றுகிறது. இவ்வமைப்பு, ஒரு இலவச மருத்துவமனை, பள்ளி, ஆம்தே’ஸ் அனிமல் ஆர்க் என்ற விலங்குப் பாதுகாப்பு மையம், ஒரு அனாதையில்லம் மற்றும் மீட்பு மையம் ஆகியவற்றை ஹேமல்காசாவில் நடத்துகிறது. இந்த மையத்துக்கு யார் வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். லோக் பிராதாரி ப்ரகல்ப் பற்றி மேலும் அறிந்துகொள்ள இந்த இணையதளத்தைப் பார்க்கவும்: http://lokbiradariprakalp.org/