ஃபாத்திமாவும் சாவியோவும் கோவாவில் கடற்கரைக்கு அருகில் வசித்தனர்.“ஃபாத்திமா! இன்று ஞாயிற்றுக் கிழமைதானே. வெளியே விளையாடப் போவோம், வா” என்று கூப்பிட்டான் சாவியோ. “சாவியோ, எனக்கு செங்கோணம் பற்றிய வீட்டுப்பாடம் இருக்கிறது. அதை முடிக்காமல் என்னால் எங்கயும் வரமுடியாது.” “செங்கோணமா? அப்டின்னா என்ன? செம்மையற்ற கோணம்னு எதாவது இருக்கா என்ன?”
“செம்மையற்ற கோணம் என்று ஒன்றும் இல்லை. ஆனால் செங்கோணம் என்பது... இப்படி இருக்கும்!”
“ம்ம்ம்… இது அப்பாவின் ‘L’ போர்டு மாதிரியா?” என்று கேட்டான் சாவியோ.
“சரியாகச் சொன்னாய்!” என்றாள் ஃபாத்திமா. தான் எப்படி இதைப்பற்றி யோசிக்கவே இல்லை என்று எண்ணி ஆச்சரியப்பட்டாள். “ஒரே புள்ளியில் இதுபோலத் தொடங்கும் இரு கோடுகள், இங்கே பார்.”
“பெத்தேல் மாதா கோவிலுள்ள சிலுவையில் செங்கோணம் இருக்கிறது!” என்று கத்தினான் சாவியோ. ”சூப்பர், சாவியோ! வா, வெளியே போய் வேறு எங்கெல்லாம் செங்கோணங்கள் இருக்கிறதென கண்டுபிடிக்கலாம்” என்றாள் ஃபாத்திமா.
“செங்கோண விளக்குக் கம்பங்கள்!” என்று கத்தினான் சாவியோ. “சரி, சரி! இன்னும் செங்கோணங்களைக் கண்டுபிடித்துக் கொண்டே வா” என்றாள் ஃபாத்திமா.
“கடற்கரை நாற்காலிகள்!” என்று கத்தினான் சாவியோ. “உஷ்ஷ்!” “அந்த நாற்காலிகள் செங்கோணமாக இல்லை. அந்த அத்தையும் மாமாவும்தான் செங்கோணங்களை உருவாக்கியுள்ளார்கள்” என்று கிசுகிசுத்தாள் ஃபாத்திமா. சாவியோ வெடித்துச்சிரித்தான்.
கடற்கரையில், வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களிடம் ஓடினாள் ஃபாத்திமா. சாவியோவும் அவள் பின்னாலேயே ஓடினான். “பாரு ஃபாத்திமா! இந்த வலையில் எவ்வளவு செங்கோணங்கள் இருக்கின்றன!” ஃபாத்திமா விளையாடத் துவங்கிவிட்டாள். சாவியோவுக்கு போரடித்தது.
“ஃபாத்திமா, போகலாம் வா!” அவள் திரும்பிக்கூட பார்க்கவில்லை. “ஃபாத்திமா, கடிகாரத்தில் செங்கோணம் இருக்கிறது.” “அதற்குள் ஆறேகால் ஆகிவிட்டதா?” என்றாள் ஃபாத்திமா. இருவரும் நண்பர்களிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
அவர்களது அம்மா, மேசையின் மீது பெரிய தட்டில் சூடு ஆறுவதற்காக டுடால் பலகாரத்தை வைத்திருந்தார்கள். “எத்தனை எத்தனை செங்கோணங்கள்!” என்றான் சாவியோ. “போதும் போதும், சாவியோ! என்னை விடு. நான் வீட்டுப்பாடம் முடிக்கவேண்டும்” என்றாள் ஃபாத்திமா.
இந்தப் படத்தில் உங்களால் எத்தனை செங்கோணங்களைக் கண்டுபிடிக்க முடிகிறது?