seeri paayattum 3 2 1

சீறிப் பாயட்டும்! 3...2...1!

இறங்கு வரிசையில் எண்ணுவதற்கு உதவும் இப்புத்தகம், படிப்பவர்களுக்கு மனங்கவரும் வான்வெளிப் பொருள்கள், விண்வெளிக் கருத்துகள் மற்றும் வானியலின் பல தரப்பு பணியாளர்கள் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. இப்புத்தகம், படிப்பவர்களை வானியல் துறையில் பணிபுரிய ஆர்வமூட்டும். வாருங்கள், ஒரு விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ளலாம்!

- Elavasa Kothanar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மயக்கும் 12 விண்மீன் கூட்டங்கள் மிதக்கின்றன பார் விண்வெளியிலே!

விண்மீன் கூட்டம் என்பது, வானத்தில் ஏதேனும் ஒரு வடிவம் போலத் தோன்றும் விண்மீன்களின் தொகுப்பு ஆகும்.

உன் கற்பனையைச் சிறிது சேர்த்துக் கொண்டால் இவை ஒரு புராண கதாபாபாத்திரமாகவோ அல்லது ஒரு விலங்கு போலவோ தோன்றும்.

பக்கம் 2–ல் உள்ள படத்தில் அன்னம், முக்கோண அடுப்பு, சிறு கரடி, பல்லி, யயாதி, காட்டுப் பூனை, யாளி, ஏழு முனிவர், நடராஜர், கேடயம் மற்றும் மாவீரன் ஆகிய விண்மீன் கூட்டங்களைப் பார்க்கலாம்.

பளபளக்கும் 11 துணைக்கோள்கள் பறக்கின்றன பார் வானிலே!

ஒரு விண்மீனையோ, ஒரு கிரகத்தையோ சுற்றி வருவது துணைக்கோள் ஆகும்.

பூமிக்கு இயற்கையான துணைக்கோள் ஒன்று உண்டு. அது நிலா. தகவல் தொடர்புக்காகவும், வானியல் மற்றும் பருவ நிலை ஆய்வுகளுக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன.

சுறுசுறுப்பான 10 பொறியாளர்கள் வேலை செய்கிறார்கள் பார் ஏவுகணையிலே!

இயந்திரப் பொறியாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் மின்னணுப் பொறியாளர்கள் இணைந்து ஒரு ஏவுகணையை உருவாக்குகிறார்கள்.

வல்லுனர்களான 9 விஞ்ஞானிகள் கோள்களின் சுற்றுப்பாதையைக் கணிக்கின்றனர் பார் அங்கே!

ஒரு செயற்கைக்கோள் விண்வெளியில் ஏவப்பட்ட பிறகு, அது எந்தப் பாதையில் சுற்ற வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் முடிவு செய்கின்றனர். அந்தப் பாதைக்கு சுற்றுப்பாதை என்று பெயர்.

நிலையான 8 கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன பார் இங்கே!

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறையாலான உட்கோள்களும், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய வாயுவாலான வெளிக்கோள்களும் நம் சூரியமண்டலத்தில் இருக்கும் எட்டு பெரும் கோள்கள். ப்ளூட்டோ ஒன்பதாவது கோளாகக் கருதப்பட்டு வந்தது.

ஆனால் 2006–ம் ஆண்டு பன்னாட்டு வானவியல் சங்கம் ப்ளூட்டோவை ஒரு குறுங்கோளாக அறிவித்தது.

பனிக்கட்டியாலான 7 வால் விண்மீன்கள் கடந்து செல்கின்றன பார் அங்கே!

வால் விண்மீன்கள் பனிக்கட்டி, பாறை மற்றும் வாயுவாலான பெருந்துண்டுகள்.

அவை சூரியனைச் சுற்றி வந்தாலும் பூமியில் இருந்து மிகத் தொலைவிலேயே இருக்கும்.

கடந்து செல்லும் பொழுது வால் போன்ற சுவடு தெரிவதால் இவற்றுக்கு வால் விண்மீன்கள் என்று பெயர்.

ஆர்வலர்கள் 6 பேர் தொலைநோக்கி மூலம் பார்க்கிறார்கள் இங்கே!

தொலைநோக்கிகள் நமக்கு மிகத்தொலைவில் இருக்கும் வால் விண்மீன்கள், விண்மீன்கள், கோள்கள், நிலவுகள் போன்றவற்றைப் பார்க்கப் பயன்படுபவையாகும்.

குறுங்கோள்கள் 5 சுற்றி வருகின்றன பார் அருகிலே!

குறுங்கோள்கள் இதர கோள்களைப் போன்றவையே என்றாலும் அளவில் மிகச்சிறியவை.

அவற்றுக்கு சூரியனைச் சுற்றிவர இன்னும் நிலையான பாதைகள் அமையவில்லை. அவற்றின் பாதைகளில் எரிகற்களும் வால் விண்மீன்களும் நிறைந்து கிடக்கின்றன.

ப்ளூட்டோ, செரீஸ், எரிஸ், மாக்கேமாக்கே, ஹௌமேயா ஆகியவை நம் சூரியமண்டலத்தில் இருக்கும்ஐந்து குறுங்கோள்கள் ஆகும்.

தொழிலாளிகள் 4 பேர் ஏவுகணையில் கவனமாக எரிபொருளை நிரப்புவதைப் பார் இங்கே!

எப்படி மகிழ்வுந்துகள் ஓட பெட்ரோல் வேண்டுமோ, அதே போல ஏவுகணைகள் சீறிப்பாய அவற்றுக்கான எரிபொருள் தேவை. ஏவுகணைகள் திரவ எரிபொருள் மற்றும் திட எரிபொருள் ஆகிய இரண்டையும் பயன்படுத்தலாம்.

திறமையான 3 விண்வெளி வீரர்கள் தமது விண்வெளி உடையில் இருப்பதைப் பார் இங்கே!

விண்வெளி உடைகள், விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்களைப் பாதுகாக்கும்.

இவ்வுடைகளில் விண்வெளி வீரர்கள் சுவாசிக்க உயிர்வளி(oxygen), குடி நீர் போன்றவைகள் இருக்கும்.

விண்வெளி வீரர்கள் அதிக வெப்பத்தாலோ அதிகக் குளிராலோ அவதிப்படாமல் இருக்கவும், விண்வெளித் தூசுகளில் இருந்து பாதுகாக்கப்படவும் இவ்வுடைகள் பயன்படும்.

ஆர்வமிக்க 2 குழந்தைகள், கட்டுப்பாட்டு அறையை கவனிப்பதைப் பார் அங்கே!

திட்ட நிறைவேற்றக் கட்டுப்பாட்டு அறையில், ஏவும் பணியில் ஈடுபட்டுள்ள பல குழுக்களின் தலைவர்கள் கூடியிருந்து, ஏவுகணை இடையூறின்றிப் போகின்றதா மற்றும் ஏவுதல் குறித்த அனைத்தும் திட்டமிட்டபடி நிறைவேறுகின்றனவா என்று கண்காணிப்பார்கள்.

ஏவுகணை 1 வானில் ஏறத் தயாராக இருப்பதைப் பார் இங்கே!

தானாகவே உந்தப்பட்டு விண்வெளியில் சீறிப்பாயும் வாகனத்தை நாம் ஏவுகணை என்கிறோம். ஏவுகணைகள், மனிதனால் ஆயத்தம் செய்யப்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளியில் ஏவுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

சீறிப் பாய்ந்ததே!

பி.எஸ்.எல்.வி - சி37 என்ற ஒரு ஏவுகணை வாயிலாக

104 செயற்கைக் கோள்களை ஒரே நேரத்தில் விண்வெளியில் செலுத்தி 2017-ஆம் ஆண்டில் உலகசாதனை ஒன்றைப் படைத்தது இந்தியா.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) விஞ்ஞானிகள், ஆந்திர  பிரதேசத்திலுள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ‘சதீஷ் தவான் விண்வெளி நிலைய’த்தில் இருந்துஇந்த ஏவுகணையை விண்ணில் செலுத்தினர்.