sernthu vilaiyaduvom

சேர்ந்து விளையாடுவோம்

ராஜூவிற்கு ஆட்டிசக் குறைபாடு உள்ளது. அவனைப்போல சிறப்புத் தேவை உடைய குழந்தைகளை புறம் தள்ளாமல் இணைத்துக் கொண்டு விளையாட வேண்டும் என்பதைச் சொல்லும் கதை.

- S. balabharathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவன் தான் ராஜு. இவனுக்கு ஆறு வயது ஆகிறது.

ராஜுவிற்கு ஆட்டிசம்* உள்ளது. அவனால் சரிவர பேச முடியாது. எல்லோருடனும் கலந்து பழகுவதிலும் தயக்கம் இருக்கும். அதனால் அதிகம் தனித்து இருக்கவே விரும்புவான்.

*ஆட்டிசம் என்பது ஒருவகை நரம்பியல் குறைபாடு.

ராஜுவைப்போல குறைபாடுகளுடைய குழந்தைகளை யாரும் விளையாட்டில் சேர்த்துக் கொள்வதில்லை.

பாவம் அந்தச் சிறப்புக்குழந்தைகள்; அவர்கள் எப்போதும் தனித்தே விளையாடுவார்கள். அவர்களைப் போலவே ராஜூவும் தனித்தே விளையாடிக் கொள்வான்.

தன்னை மற்றவர்கள் ஒதுக்குவது பற்றி ராஜூவிற்குக் கவலை இருந்தாலும் அதை வெளியில் சொல்லவும் தெரியாது; காட்டிக் கொள்ளவும் தெரியாது.

அவன் தன் கற்பனை உலகில் விளையாடி, மகிழ்ச்சி அடைவான்.

தனித்து இருப்பதால்,  பல நேரங்களில் தொலைக்காட்சியைப் பார்த்துப் பொழுது போக்குவான்.

மற்றவர்களுடன் சேர்ந்து, அவனை விளையாடும்படி சொல்லிக்கொண்டே இருப்பார் அம்மா.

ராஜுவிற்கு பிடித்த விஷயம் என்ன தெரியுமா? சைக்கிள் ஓட்டுவது. ஆனாலும் அவன் இன்னும் சைக்கிளை தனித்து ஓட்டப் பழகவில்லை.

தாத்தா, அவனுக்கு தினமும் சைக்கிள் கற்றுக் கொடுப்பார். அந்த நேரங்களில் மிகுந்த உற்சாகமாக இருப்பான்.

ராஜூவின் அடுத்த வீட்டில் இருந்தாள் கீர்த்தனா. அவளுக்கு வயது 10. படிப்பிலும் விளையாட்டிலும் சுறுசுறுப்பானவள். மிகுந்த அன்பானவளும்கூட! அவளுக்கு ராஜூவை மிகவும் பிடிக்கும்.

ஒருநாள் கீர்த்தனாவிடம்,  அவள் விளையாடச் செல்லும்போது ராஜூவையும் அழைத்துச் செல்லும்படி கேட்கிறார் ராஜூவின் பாட்டி.

அவளும் சரி என, ராஜூ இருக்கும் அறைக்குச் சென்றாள்.

அங்கே ராஜூ, வழக்கம்போல தனித்து அமர்ந்திருந்தான்.

அவனை விளையாட அழைக்கிறாள் கீர்த்தனா. அவள் கூப்பிட்டதைக் காதில் வாங்காமல், தன் கற்பனை உலகில் மூழ்கி இருந்தான் ராஜூ.

சோகமாக அறையைவிட்டு வெளியில் வந்த கீர்த்தனா, எதிரில் தாத்தாவைப் பார்க்கிறாள்.

அவரிடம் சென்று, “ராஜூவை விளையாட அழைத்தால் வருவதில்லையே ஏன்?” என்று கேட்டாள் கீர்த்தனா.

அதற்கு அவர், ”அவனுக்குச் சமூகத்தில் கலந்து பழக வேண்டும் என்பது தெரியாது. நாம் தான் அதைச்சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்கிறார்.

”அப்படீன்னா என்ன தாத்தா?” என்று கேட்கிறாள் கீர்த்தனா.

”ஊருக்குள் நாம் பார்க்கும் யானைகள் எல்லாம் பழக்கப்படுத்தப்பட்டவை. அவை காட்டு யானைகளாக இருக்கும்போது, அவற்றை பழக்க, கும்கி* யானையால் பயிற்சி கொடுப்பாங்க. அதுமாதிரி, ராஜூவுக்கு பிடித்த விஷயத்தைக் காட்டி,  மற்ற குழந்தைகளை வைத்துப் பயிற்சி கொடுக்க வேண்டும்” என்றும் தாத்தா சொன்னார்.

*காட்டு யானைகளுக்குப் பயிற்சி கொடுக்கும் இன்னொரு யானை

தாத்தா சொன்னதைக் கேட்ட கீர்த்தனாவிற்கு ஒரு யோசனை தோன்றியது.

“நீங்கள் கவலைப்படாதீங்க தாத்தா, ராஜூவை எல்லோருடனும் சேர்ந்து விளையாட வைப்பேன்” என்றாள் கீர்த்தனா.

தன்னிடமிருந்த ஒரு பம்பரத்தை எடுத்து, ராஜூவின் முன் நீட்டினாள் கீர்த்தனா. அவனுக்குச் சுழலும் பொருட்களின் மீது ஆர்வம் அதிகம்.

அவன் கவனம் பம்பரத்தின் பக்கம் திரும்பியது.

அதைக் காட்டியே, ”வா, விளையாடலாம்” என்று அவனைத் தெருவுக்கு அழைத்து வந்தாள்.

தெருவில் பம்பரத்தைச் சுழலவிட்டாள் கீர்த்தனா. அதைப் பார்த்த எல்லா சிறுவர்களும் ஆர்வமுடன் ஒன்று கூடினர்.

எல்லோரும் ராஜூவைக் கண்டு ஒதுங்குகினர். ஆனால் கீர்த்தனா, ராஜுவையும்  விளையாட்டில் சேர்த்துக் கொண்டால்தான், தனது பம்பரத்தை விளையாடத் தருவேன் என்றாள்.

பம்பரத்தின் மீதான ஆசையில் சிறுவர்களும் தங்கள் விளையாட்டில் ராஜூவை சேர்த்துக் கொள்ளச் சம்மதித்தனர்.

எல்லோரும் சேர்ந்து பம்பரம் விட்டு விளையாடினர்.

எல்லோரும் ராஜூவை விளையாட்டில் இணைத்துக்கொண்டது, கீர்த்தனாவிற்கு ரொம்பவும் மகிழ்ச்சியைத் தந்தது.

அடுத்தடுத்த நாட்களில் எல்லோருடனும் மகிழ்ச்சியாக விளையாடினான் ராஜூ.

கீர்த்தனா, சொல்லிக் கொடுத்த, விளையாட்டு விதிகளை மீறாமல் விளையாடி, எல்லாச் சிறுவர்களுக்கும் நண்பனாகிப் போனான் ராஜூ.

இப்போதெல்லாம் ராஜூ, தனியாக இருப்பதில்லை. கீர்த்தனாவால் அவனுக்கு நட்பு வட்டம் உருவாகிவிட்டது. எப்போதும் மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக  விளையாடிக் கொண்டிருக்கிறான்.

~~~~

உங்கள் நட்புவட்டத்தில் ராஜூ போலச் சிறுவர்களை நீங்களும் சேர்த்துக் கொள்வீர்கள் தானே?