shanthiyin thozhi

சாந்தியின் தோழி

மரங்கள் பேசுமா? சாந்தி அப்படித்தான் நம்புகிறாள். ஒரு வித்தியாசமான நட்பைப் பற்றிய இந்தக் கதையைப் படிக்கலாம், வாருங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சாந்தி தினமும் அதிகாலையிலேயே எழுந்திருக்கவேண்டும். வானம் லேசாக வெளுக்கும் நேரம். பெரும்பாலான மக்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பார்கள். அவள் மட்டுமே அந்த அதிகாலையில் எழுந்து மாமாவுக்கும் மாமிக்கும் டீ தயாரிக்க வேண்டியிருந்தது.

சாந்திக்குப் பதினோரு வயது. அவள் நகரத்தில் தன்னுடைய மாமா, மாமியுடன் வசித்தாள். அவளுடைய கிராமத்தில் இரண்டு வருடங்களாக மழையே பெய்யவில்லையென்பதால் அவள் நகரத்துக்கு வரவேண்டியிருந்தது. அங்கே நிலங்களில் எல்லாப் பயிர்களும் வாடிவிட்டன. போதுமான உணவு இல்லை.

சாந்தியின் தந்தைக்கு உடல்நிலை மோசமானது. அவளுடைய தாய்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. வைத்தியம் பார்ப்பதற்கு கையில் காசு இல்லை. சாந்திக்கும் பாப்புவுக்கும் குட்டிக்கும் சாப்பாடு இல்லை. குழந்தைகள் கிராமப் பள்ளிக்கூடத்துக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்கள். நகரத்தில் வசித்துவந்த சாந்தியின் மாமாவும் மாமியும் மிகவும் அன்பானவர்கள்.

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க” என்றார் மாமா.

“சாந்தி எங்களோட நகரத்துக்கு வந்து தங்கிக்கட்டும். அவ எனக்கு உதவியா வீட்டு வேலைகளைச் செய்யட்டும். பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போகலாம்!” என்றார் மாமி.

“பள்ளிக்கூடத்துக்குப் போகலாமா? நீங்க எங்கமேல ரொம்பக் கருணை காட்டறீங்க. ரொம்ப நன்றி! புதுசா சாலை போடற இடத்தில வேலைக்கு முயற்சி பண்றேன். அதில கிடைக்கிற பணம் எங்க மீத பேரோட செலவுக்குப் போதுமானதா இருக்கும்” என்றார் சாந்தியின் அம்மா.

தன்னுடைய மாமா, மாமியுடன் பேருந்தில் புறப்பட்டு நகரத்துக்கு வந்தாள் சாந்தி. நகரம் மிகப் பெரியதாகவும் அழுக்காகவும் இருந்தது. ஏகப்பட்ட வீடுகள், கொஞ்சமாக மரங்கள்.

சாந்தி தன்னுடைய கிராமத்திலிருக்கும் பெரிய ஆலமரத்தையும் அவள் குளித்துக் களித்த குளத்தையும் எண்ணி ஏங்கினாள்.

இங்கே அவள் தெருக்குழாயிலிருந்து தண்ணீரை வாளியில் பிடித்துவர வேண்டியிருந்தது. அந்தத் தண்ணீருக்காக அங்கே ஏகப்பட்ட மக்கள் வரிசையில் நிற்பார்கள், சண்டை போடுவார்கள். சிலசமயம் யாராவது சாந்தியின் பக்கெட்டை ஓரமாகத் தள்ளிவிடுவார்கள். அதனால் அவளுக்கு தாமதமாகிவிடும்.

அதுபோன்ற நாட்களில், குளித்து முடித்து வேலைக்குப் போக நேரமாவதால், மாமா அவளைக் கண்டபடி திட்டுவார்.

ஆனால் சாந்திக்கு, தான் ஒரு பெரிய அதிர்ஷ்டசாலி என்பது தெரிந்திருந்தது. இங்கே சாப்பிடுவதற்குப் போதுமான உணவு இருக்கிறது. குழந்தை மம்தாவையும் அவளுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆகவே, அவள் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தாள். தான் எப்போது பள்ளிக்கூடத்தில் சேரமுடியும் என்று யோசித்தாள். இதுபற்றி அவள் மாமியிடம் கேட்டபோது, “பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கெல்லாம் இப்ப நேரம் இல்லை. அடுத்த வருஷம் பார்க்கலாம், மம்தா கொஞ்சம் பெரியவளாகட்டும்” என்று சொல்லிவிட்டார். சாந்திக்கு ஏமாற்றம்தான் என்றாலும் அவள் தன்னுடைய வேலைகளை ஒழுங்காக முடிப்பதற்கு முயன்றாள். சில சமயங்களில், அவள் தவறிழைக்கும்போது மாமாவும் மாமியும் மிகவும் கோபப்படுவார்கள்.

அப்போதெல்லாம், சாந்தி ரொம்ப பயந்துபோனாள். மாமாவின் குரல் இடி முழக்கம்போலச் சத்தமாக ஒலிக்கும். மாமியின் முகம் கத்தியைப்போல் முறைக்கும், “உருப்படாத பொண்ணே!” என்று அவர்கள் கத்துவார்கள். “நீ சரியான முட்டாள், சோம்பேறி! உன்னால யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை!”

ஒருநாள், மாமி அவளை மிகவும் திட்டிவிட்டார். பயந்துபோன சாந்தி வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ‘நான் கிராமத்துக்கே திரும்பிப் போயிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டாள். ஆனால், அவளிடம் பஸ் டிக்கெட்டுக்கு பணம் இல்லை. இப்போது என்ன செய்வது? ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாள். அது ஒரு நல்ல மரம். கிராமத்தில் இருந்த ஆலமரத்தைப்போல் பெரியது அல்ல. ஆனால் பெரிதாக, நிழல் தரக்கூடியதாக இருந்தது.

சாந்தி அதன்மீது சாய்ந்து, கண்களை மூடினாள். திடீரென்று யாரோ கிசுகிசுக்கும் குரல் அவளுக்குக் கேட்டது, “சாந்தி! அழாதே! நீ ஒரு நல்ல பொண்ணு. வேகமாச் சிந்திக்கற புத்திசாலிப் பொண்ணு.”

சாந்தி சுற்றிலும் பார்த்தாள். யாரையும் காணோம். அப்படியானால் இந்த மரமா பேசுகிறது? மரங்களால் பேசமுடியாதே?

மறுபடியும் யாரோ பேசினார்கள், “சாந்தி, நீ இல்லைன்னா மாமி என்ன செய்வாங்க? யார் அவங்களுக்கு உதவி பண்ணுவாங்க? நீ மாமிக்கு உதவி செய்யலைன்னா, உங்க அம்மா எப்படி பாப்புவையும் குட்டியையும் கவனிச்சுக்க முடியும்?” சாந்தி மெல்லச் சிரித்தாள். ஏனெனில், அது உண்மை என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இதை யாரும் அவளிடம் சொன்னது கிடையாது. அவள் மீண்டும் சுற்றிப் பார்த்தாள், ‘ஒருவேளை, சில மரங்களால் பேசமுடியும்’ என்று நினைத்துக்கொண்டாள்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள் சாந்தி.  அதன்பிறகு, தினமும் தன்னுடைய வேலைகளை முடித்தபிறகு அந்த மரத்தடியில் போய் உட்கார்வாள். சில சமயங்களில் ஒரு பழைய பள்ளிப் புத்தகத்தைக் கொண்டுசெல்வாள். அதன் பக்கங்களை மெல்லப் புரட்டுவாள். அதில் இருக்கும் வரிகளை அந்த மரத்துக்குப் படித்துக் காண்பிக்க முயற்சி செய்வாள். அந்த மரம் எப்போதும் அவளுக்கு நல்ல விஷயங்களை மட்டுமே சொன்னது.

அதன்மூலம், சாந்தி தனிமையை மறந்தாள். இந்தப் பெரிய நகரத்திலும் அவளுக்கு ஒரு தோழி இருக்கிறாள். அதன்பிறகு அவள் எதற்காகவும் அவ்வளவு பயப்படவில்லை.

ஒருநாள் காலை, சாந்தி வழக்கம்போல் சீக்கிரமாக எழுந்தாள். அடுப்பைப் பற்றவைத்து டீ தயாரித்தாள். அதை இரண்டு தம்ளர்களில் ஊற்றி மாமா, மாமிக்குக் கொண்டுசென்றாள். அவள் முடிந்தவரை சத்தம் இல்லாமல்தான் அந்த அறைக்குள் நுழைய முயன்றாள். ஆனால் கதவு லேசாக ஒலி எழுப்பிவிட்டது. குழந்தை மம்தா விழித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“நீ என்ன செஞ்சுட்டே பாரு!” என்றார் மாமி, “போய் அவளுக்கு ஒரு பிஸ்கெட் கொண்டு வா! சீக்கிரம்!” சாந்தி டீயைக் கீழே வைத்துவிட்டு ஓடினாள். ஒரே நிமிடத்துக்குள் பிஸ்கெட்டுடன் திரும்பிவந்தாள். மாமி கொட்டாவி விட்டார். அவள் பிஸ்கெட்டை எடுத்து மம்தாவின் கைகளில் வைத்தாள். மம்தா பிஸ்கெட்டைத் தன் வாயில் போட்டுக்கொண்டாள், சாந்தியைப் பார்த்துச் சிரித்தாள்.

“அக்-கா-கா” என்றபடி, கைகளை அசைத்தாள். சாந்தியும் சிரித்தாள். அந்தச் சத்தத்துக்கு என்ன அர்த்தம் என்பது அவளுக்குத் தெரியும், “வா, என்னோட வந்து விளையாடு!”

ஆனால், இப்போது விளையாட நேரம் இல்லை. தண்ணீர் கொண்டுவரவேண்டும். பாத்திரம் கழுவவேண்டும். காலை உணவு சமைக்கவேண்டும். காய்கறிகளை வெட்டவேண்டும். பருப்பை அடுப்பில் வைத்துச் சமைக்கவேண்டும்.

“அப்புறமா வர்றேன்” என்றாள் சாந்தி, “கொஞ்சம் பொறுத்துக்கோ! இதோ, சீக்கிரமா வந்துடறேன்!” சாந்தி மிக வேகமாக ஓடினாள். அவளுடைய பாதங்களே யார் கண்ணிலும் படவில்லை. அவளது விரல்கள் பறந்தன. அதிவேகமாக எல்லா வேலைகளையும் முடித்தாள்.

மாமி வருவது கேட்டது, “சீக்கிரம்! சீக்கிரம்!” என்று மாமி கத்தினார். “மாமா காலை உணவு சாப்பிடணும். அவரோட மத்தியானச் சாப்பாட்டைக் கட்டணும். அவருக்கு வேலைக்கு நேரமாகுது சாந்தி, நீ ஏன் இவ்ளோ மெதுவா வேலை பார்க்கறே? சோம்பேறிப் பொண்ணே!”

சாந்தியின் கைகள் இன்னும் வேகமாகப் பறந்தன. மளமளவென்று பராத்தாக்களைத் தேய்த்து, அடுப்பில் இட்டாள். மாமாவுக்கு எப்போதும் சூடான, மொறுமொறுப்பான பராத்தாக்கள்தான் பிடிக்கும். அவர் மூன்றரை பராத்தாக்கள் சாப்பிட்டார். மாமி இரண்டு சாப்பிட்டார். சாந்தி அரை பராத்தாவை மட்டும் தன்னுடைய வாயில் திணித்துக்கொண்டு வேகமாக மென்றாள்!

சீக்கிரம்! சீக்கிரம்! வீட்டைப் பெருக்கி முடித்தபிறகுதான் மம்தாவுடன் விளையாட முடியும். தேய்க்கவேண்டிய பாத்திரங்கள் வேறு குவிந்து கிடக்கின்றன. தேய், தேய்! ஊறப்போடு, ஊறப்போடு! சாந்தியின் கைகள் மீண்டும் பறந்தன.

சீக்கிரம்! சீக்கிரம்! அடடா, அவள் கைகளில் இருந்து நழுவி ஒரு தட்டு கீழே விழுந்தது!

டமால்! சாந்தி அந்தத் தட்டு விழுகிற சத்தத்தைக் கேட்டாள். அவளுக்குள் பயம் பொங்கியது. அவள் மிக வேகமாக ஓடினாள். வாசல் கதவைத் தாண்டி, தெருவில் ஓடினாள். பின்னால் மாமி கத்துவது அவளுக்குக் கேட்டது, “சாந்தி, முட்டாள் பொண்ணே! இந்தத் தட்டோட விலை என்ன தெரியுமா?” மாமி மிகவும் கோபமாக இருந்தார். அவர் சாந்தியை அடித்தாலும் அடித்துவிடுவார் என்று தோன்றியது. ஆனால், அவள் எங்கே போகமுடியும்? எங்கே போய் ஒளிந்துகொள்ள முடியும்?

அவள் தன்னுடைய தோழியான மரத்தின் முன்னே போய் நின்றாள். “உதவி! உதவி!” என்று கதறினாள்.

அப்பொழுது, அம்மரத்தின் அகலமான நடுப்பகுதி திறந்துகொண்டது, “உள்ளே வா!” என்றது. அங்கே ஒரு பெரிய காலி இடம் இருந்தது. சாந்தி அதனுள் நுழைந்து ஒளிந்துகொண்டாள்!

“சாந்தி, ஏய் சாந்தி! பொறுக்கிப் பொண்ணே! நீ எங்கயும் தப்பிச்சுப் போகமுடியாது, பார்த்துகிட்டே இரு, நான் உன்னைப் பிடிச்சுடுவேன்!”

சாந்தி சிரித்துக்கொண்டாள், “மாமி, உங்களால என்னைக் கண்டுபிடிக்கமுடியாது, நான் ரொம்பப் பாதுகாப்பா இருக்கேன்!”

“சாந்தி! சாந்தி! நீ எங்கே இருக்கே? சாந்தி?” மாமியின் குரல் மேலும் மேலும் மென்மையாகிக்கொண்டே போனது. சாந்தி பெரிதாக நிம்மதிப் பெருமூச்சுவிட்டாள். மாமியால் அவளை இங்கே கண்டுபிடிக்கவே முடியாது. அந்த மரத்துக்குள் நன்கு இருட்டாகவும் கதகதப்பாகவும் இருந்தது. அவள் சுருண்டு அப்படியே தூங்கிப்போனாள்.

அவள் தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருந்தாள்.

திடீரென்று, ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது.

அது மம்தா. “ஏய், சும்மாயிரு! அழாதே” மாமி கத்தும் சத்தம் அவளுக்குக் கேட்டது. ஆனால் மம்தாவின் அழுகை அடங்கவில்லை. “சும்மாயிரு! சும்மாயிரு!” மாமாவும் கத்தினார். மம்தா இன்னும் பலமாக அழுதாள். மாமா வீட்டுக்கு வந்துவிட்டார். அதற்குள் மாலையாகிவிட்டதா? சாந்தி இப்போது என்ன செய்வாள்? அவள் இங்கேயே மரத்துக்குள் இருந்துவிடுவாள்.

அவளைத் திட்டும் எல்லோரிடமிருந்தும் தப்பித்துப் பாதுகாப்பாக இங்கேயே இருப்பாள்.

மம்தா இப்போது இன்னும் பலமாக அழுதுகொண்டிருந்தாள். மாமி சொன்னார், “இவ இப்போதைக்கு அடங்கமாட்டா. இப்பமட்டும் அந்தப் பொண்ணு சாந்தி இங்கே இருந்தா நல்லாயிருக்கும். இவ அழுகைய நிப்பாட்ட அவளுக்குத்தான் தெரியும். அவ எங்கே போனாளோ?”

“நீ அவளை ரொம்பத் திட்டறே” என்றார் மாமா, “நாம இப்ப அவளோட அப்பா, அம்மாவுக்கு என்ன பதில் சொல்றது? இது பெரிய பிரச்னையாகிடும் போலிருக்கு.”

“சத்தியமா சொல்றேன். இனிமே நான் அவளைத் திட்டவே மாட்டேன்!” என்று கதறினார் மாமி. “அவ மட்டும் இப்ப திரும்பி வந்தாப் போதும். நான் அவளை இனிமே எப்பவும் திட்டமாட்டேன்!”

சாந்தி சிரித்தாள். இப்போது அவள் திரும்பப் போகவேண்டுமா? இந்த மரத்துக்குள் நன்கு இதமாக, வசதியாகத்தான் இருக்கிறது.

ஆனால், மம்தா பாவம், இன்னும் அழுதுகொண்டிருக்கிறாள். அவள், சாந்தி திரும்பி வந்து தன்னுடன் விளையாடவேண்டும் என்பதற்காகக் காத்திருக்கிறாள். சாந்தி போகத்தான் வேண்டுமா?

திடீரென்று அந்த மரம் மீண்டும் பேசியது, “நீ விரும்பினால், திரும்பிப் போகலாம் சாந்தி” என்று கிசுகிசுத்தது.

“அதுக்கப்புறம் எப்ப வேண்டுமானாலும் வரலாம்.”

“நிஜமாவா?“

“ ஆமா!” என்றது மரம்.

“இந்த இடம் எப்பவும் இங்கயேதான் இருக்கும், உனக்காகவே.

”சாந்தி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டாள். அவள் திரும்பிப் போகத்தான் வேண்டுமா?

மம்தா இன்னும் பலமாக அழுதுகொண்டிருந்தாள். “சரி! நான் இப்ப போறேன்” என்றாள் சாந்தி. “ஆனா நான் நினைச்சா மறுபடி திரும்பி வருவேன்.”

“நீ எப்ப வேண்டுமானாலும் இங்கே வரலாம் சாந்தி” என்றது மரம். அது இரண்டாகப் பிளந்து அவளுக்கு வழிவிட்டது. சாந்தி வெளியே வந்தாள்.

அவள் மெல்ல வீட்டுக்கு நடந்துசென்று, அழைப்பு மணியை அழுத்தினாள். மாமா கதவைத் திறந்தார், “சாந்தி, நீயா? எங்கே போயிருந்தே?”

“ஒரு தோழியைப் பார்க்கப் போயிருந்தேன்” என்றாள் அவள், “ரொம்பக் களைப்பா இருந்தது. அப்புறம்... தெரியாம நான் ஒரு தட்டை உடைச்சுட்டேன். மாமி என்னைத் திட்டுவாங்களோன்னு எனக்கு பயமா இருந்தது.”

“சாந்தி!” மாமி கதறினார். “நீ எங்க போன?”

“அவ ஒரு தோழியைப் பார்த்துட்டு வர்றா” என்றார் மாமா, “பாவம் இந்தப் பொண்ணு, எப்பப் பார்த்தாலும் வேலை செஞ்சு களைச்சுப்போறா. அவ சின்னப் பொண்ணுதானே? ஒரு தட்டை உடைச்சா என்ன? அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்தானே?”

“ஆமா” என்று மெல்ல சொன்னார் மாமி, “அவ இன்னும் குழந்தைதான். அவ ஒரு தட்டை உடைச்சா என்ன தப்பு? சாந்தி, நீ கொஞ்சம் மம்தாவைப் பார்த்துக்கறியா? நான் உனக்கு டீ போடறேன். அப்புறம் நீ மம்தாவோட விளையாடும்போது நான் ராத்திரிச் சாப்பாட்டைச் சமைக்கிறேன்.”

மம்தா அழுவதை நிறுத்திவிட்டாள். “அக்-கா-கா” என்று சாந்தியை நோக்கிக் கைகளை நீட்டினாள். சாந்தி அவளுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டி சிரிக்கவைத்தாள். மாமாவும் சிரித்தார், “நீ இல்லாம குழந்தை ரொம்ப ஏங்கிப்போயிடுச்சு. அவ அழறதை நிறுத்தவே இல்லை.”

“மம்தாவுக்கு என்னை ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றாள் சாந்தி. “சாந்தி! நீ இனிமே எங்கேயும் ஓடிப்போயிடாதே!” என்றார் மாமி. “நீ போயிட்டா மம்தா அழுவா... அப்புறம், எங்களுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு!”

அதன்பிறகு மாமா சொன்னார், “அப்புறம் இன்னொண்ணு சாந்தி, நாளைக்கே நான் உன்னோட பள்ளிக்கூடத்தைப் பத்தி விசாரிக்கிறேன்.”

சாந்தி ஜன்னல்வழியே தன்னுடைய தோழியாகிய அந்த மரத்தைப் பார்த்தாள். மெல்லச் சிரித்துக்கொண்டாள். அவள் எதுவும் சொல்லவில்லை. இனிமேல் ஒருபோதும் பயப்படமாட்டாள். அவள் ஒரு நல்ல, பாதுகாப்பான இடத்தைக் கண்டுபிடித்துவிட்டாள். இனி அந்த இடம் அவளுக்காக எப்போதும் இருக்கும்.