sidumoonji kkuruvi

சிடுமூஞ்சிக் குருவி

குட்டி சிடுசிடுப்பானுக்கு மகிழ்ச்சியை வெளிக்காட்டத் தெரியவில்லை என்று அவனது அம்மா வாலாட்டிக் குருவிக்கு கவலை. பறவைகளும், விலங்குகளும் தங்களது மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? ஒரு சுவாரசியமான கதையை இங்கே பார்ப்போம்.

- Ramki J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மா வாலாட்டிக் குருவி கவலையோடு இருக்கிறார். அவரது மகன் குட்டி சிடுசிடுப்பானுக்கு தான் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்டிக் கொள்ளத் தெரியவில்லை.

“சிடுசிடுப்பான்! வாயைத் திறந்து கொஞ்சம் சிரிக்கலாமே?” என்பார் அம்மா வாலாட்டிக் குருவி.

ஆனால், குட்டி சிடுசிடுப்பானோ முகத்தை மேலும் சிடுசிடுப்பாய் வைத்துக்கொள்வான்.

“என்னால் முடியவில்லை!” என்றான் தன் இறகுகளைக் கோதியபடி.

“என் வாய் மேலே வளைவதற்கு பதிலாக கீழேதான் வளைகிறது.”

அம்மா வாலாட்டிக் குருவிக்கு சட்டென்று ஒரு எண்ணம் தோன்றியது. சிடுசிடுப்பானை அழைத்துக் கொண்டு நாயிடம் பறந்து சென்றார்.

“நாயே, நீ மகிழ்ச்சியாக இருப்பதை எப்படிக் காட்டுவாய்?” என்று நாயிடம் கேட்டார்.

“பௌவ்” என்று குரைத்தது நாய். ”நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாலை வேக வேகமாக ஆட்டுவேன்.” டப்! டப்!

அம்மா வாலாட்டிக்குருவி பூனையிடம் சென்றார்.

“பூனையே, நீ மகிழ்ச்சியாக இருப்பதை எப்படிக் காட்டுவாய்?” என்று கேட்டார்.

“மியாவ்!” என்றது பூனை. “நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது மெலிதாக உறுமுவேன்.”ப்ர்ர்ர்… ப்ர்ர்ர்

அம்மா வாலாட்டிக்குருவி தத்தித்தத்தி பன்றியிடம் சென்றார்.

“பன்றியே, நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது என்ன செய்வாய்என்பதை சிடுசிடுப்பானுக்கு செய்துகாட்ட முடியுமா?” என்று கேட்டார்.

“கிர்ர்... கிர்…” என்று உறுமிய பன்றி சட்டென்று பக்கத்திலிருந்த ஒரு பெரிய சேற்றுக் குழியில் குதித்தது. “நான் மகிழ்ச்சியோடு இருக்கும்போதெல்லாம் சேற்றில் இறங்கி உருளுவேன்.” தளக்! பொளக்!

அதற்குள் அப்பா வாலாட்டிக் குருவி வந்துவிட்டார்.

“குட்டிப் பையன் எப்படி இருக்கிறான்?” என்று விசிலடித்தார்.

சிடுசிடுப்பானைப் பார்த்ததும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி.

விசிலடித்தபடி, இறக்கைகளை உயர்த்திவாறே அவனைச் சுற்றிப் பறந்தார்.

அவர் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார்.

“நான் மகிழ்ச்சியாக இருப்பதைக் காட்ட என்னாலும் அப்படிச் செய்யமுடியுமென நினைக்கிறேன்” என்று கூவினான் சிடுசிடுப்பான். பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக விசிலடித்துக் கொண்டு, இறக்கைகளை உயர்த்தியபடி சுற்றிச் சுற்றிப் பறந்தார்கள்.